"ஜிலேபிகள்தான் சிறந்தவை!" என்றார் தாத்தா. கோபத்தில் அவருடைய மீசை முறுக்கேறியது.
"இல்லவே இல்லை!" முயல்குட்டியைப்போல மூக்கைச் சுருக்கியவாறு சொன்னார் பாட்டி, "என்னுடைய அல்வாக்களுக்கு ஜிலேபிகள் இணையாகாது."
தாத்தா குரலை உயர்த்திச் சொன்னார், "அதெல்லாம் உன் நினைப்புதான்."
"நினைப்பு அல்ல, எனக்கு உறுதியாகத் தெரியும்" சற்றே சண்டை போடுவதுபோன்ற தோரணையில் சொன்னார் பாட்டி. "அப்படியென்றால், அல்வாக்களுக்கும் ஜிலேபிகளுக்கும் ஒரு போட்டி வைத்துக்கொள்ளலாமா?" என்றார் தாத்தா.
"நான் தயார், போட்டிக்கு ஒரு நாளைத் தீர்மானியுங்கள்."
"பிரமாதம். வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு மணிக்கு இந்தப் போட்டியை வைத்துக்கொள்ளலாம்."
"சரி, அன்றைக்கு அல்வாக்கள் ஜெயிக்கும், ஜிலேபிகள் தோற்கும்!" என்று சொல்லிவிட்டு, அறையை விட்டு வெளியேறினார் பாட்டி.
தாத்தாவுக்கு அறுபத்தைந்து வயது. உயரமானவர், ஆஜானுபாகுவானவர். ஒரு முன்னணி வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
பாட்டிக்கு ஒல்லியான தேகம், சுமாரான உயரம், ஆனால் தேனீபோல் சுறுசுறுப்பு. பள்ளித் தலைமையாசிரியையாகப் பணியாற்றியவர், ஆகவே, தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் தவறு செய்யும் மாணவர்களைப்போலவே அவர் கருதினார். இவர்கள் இருவரும் தங்களுடைய பேரப்பிள்ளைகள் சாக்ஷி, சாகேத்துடன் வசித்துவந்தார்கள்.
அந்தப் பகுதியிலிருந்த சிறுவர்கள் தினமும் ஹாக்கி விளையாடினார்கள். யாரும் உபயோகப்படுத்தாத பூங்காவொன்றை அவர்கள் இரு விளையாட்டு மைதானங்களாகப் பிரித்திருந்தனர்: ஒன்று சிறுவர்களுக்கு, இன்னொன்று சிறுமிகளுக்கு.
சிறுவர்களின் அணியின் பெயர் 'அல்வாக்கள்', சிறுமியர் அணியின் பெயர், 'ஜிலேபிகள்'. 'அல்வாக்கள்' அணி பாட்டிக்குப் பிரியமானது, 'ஜிலேபிகள்' அணி தாத்தாவுக்குப் பிரியமானது.
இந்தப் பெயர்களைச் சூட்டியவர், தாத்தா. அவர் ஒரு சர்க்கரை நோயாளி. தான் சாப்பிடக்கூடாத இனிப்புகளைப்பற்றியே அவர் எப்போதும் கற்பனை செய்துகொண்டிருந்தார். ஆகவே, இந்த அணிகளுக்கும் இனிப்பு வகைகளின் பெயர்களைச் சூட்டிவிட்டார். அது அனைவருக்கும் பிடித்திருந்தது.
ஒவ்வொரு மாலையும், தாத்தா, பாட்டி தங்களுடைய அணிகள் விளையாடுவதைப் பார்த்து வந்தனர். அவர்கள் அவ்விரு அணிகளுக்கும் வழிகாட்டிகளாகவும் உற்சாகமூட்டுபவர்களாகவும் திகழ்ந்தனர்.
"என்னது? ஜிலேபிகளுடன் போட்டியா?" ஆச்சரியத்துடன் கேட்டான், அல்வாக்கள் அணியின் தலைவன் நரேந்தர்.
"பாட்டி, சிறுமிகளுடனெல்லாம் எங்களால் விளையாடமுடியாது. அப்புறம், எல்லாரும் எங்களைக் கோழைகள் என்று கிண்டல் செய்வார்கள்" என்றான் கோல் கீப்பர் ராஜேஷ்.
"ஆமாம் பாட்டி, நாங்கள் எப்படிச் சிறுமிகளுடன் விளையாடமுடியும்? அவர்கள் எல்லாரும் சரியான சிடுமூஞ்சிகள்" என்றான் அணியின் லெஃப்ட் பாக்கான ஜோ.
"டேய், நானும் அவர்களைப்போல் ஒரு பெண்தானே? என்னையும் சிடுமூஞ்சி என்கிறாயா?" ஜோவின் காதைத் திருகினார் பாட்டி.
"பாட்டி, நீங்கள் பெண் அல்ல, எங்களுடைய செல்லப்பாட்டி!" என்றபடி பாட்டிக்கு ஒரு குட்டி முத்தம் கொடுத்தான் சாகேத்.
பாட்டி பெரிதாகச் சிரித்துவிட்டு "அதெல்லாம் இருக்கட்டும், நீங்கள் ஏன் சிறுமிகளைக்கண்டு பயப்படுகிறீர்கள்?" என்றார், "அவர்கள் உங்களை நிஜமாகவே அல்வா ஆக்கிவிடுவார்கள் என நினைக்கிறீர்களா?"
"இல்லவே இல்லை" என்று சிறுவர்கள் ஒன்றாகக் கூறினர். "எந்த இடத்திலும் எந்த நேரத்திலும் அவர்களுடன் மோத நாங்கள் தயார்."
"என்னது? நாங்கள் அல்வாக்களுடன் மோதவேண்டுமா?" இடுப்பில் கைவைத்துக்கொண்டு கேட்டாள் கீதிகா, அவள்தான் ஜிலேபிகள் அணியின் துணைத்தலைவி.
"ஆமாம் கீதிகா!" என்றார் தாத்தா.
"ச்சே, கொஞ்சமும் மரியாதை தெரியாத அந்தப் பயல்களோடு நாங்கள் விளையாடுவோமா? சாத்தியமே இல்லை!" என்றாள் ரெஹானா. அவளுடைய இரட்டைச் சகோதரன் ரோஷன் அல்வாக்கள் அணியில் விளையாடிக்கொண்டிருந்தான்.
"எங்களுடைய உயர்ந்த திறமையைப் பரிசோதிக்க அந்த நோஞ்சான்கள்தான் கிடைத்தார்களா?" என்றாள் சாக்ஷி.
தாத்தா அவர்களைக் கூர்ந்து கவனித்தார், "ஆக, என்னுடைய தைரியமான ஜிலேபிகள் எல்லாரும், அல்வாக்களிடம் தோற்றுவிடுவோமோ என்று பயப்படுகிறீர்கள்போலத் தெரிகிறது" என்றார்.
"ஹா! என்ன சொல்கிறீர்கள் தாத்தா? நாங்கள் அந்தச் சிறுவர்களைக்கண்டு பயப்படமாட்டோம், சுலபமாக அவர்களை நசுக்கிவிடுவோம்" என்றாள் அணியின் தலைவி சாரா, "அப்படித்தானே தோழிகளே?"
சில நிமிடங்களில், அந்தச் சிறுமிகள் எல்லாரும் மோதலுக்கு சம்மதித்தார்கள். தாத்தா புன்னகையோடு அவர்களைப் பார்த்தார்.
போட்டி மைதானம் தயாரானது, அல்வாக்களும் ஜிலேபிகளும் பிரம்மாண்டமான போருக்குத் தயாரானார்கள்.
பாட்டி கல்லூரியில் ஹாக்கி விளையாடியவர். ஆகவே, அல்வாக்கள் அணியினருக்கு அவர் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்தார்.
தாத்தா மேலாண்மை படித்தவர். அந்த நுட்பங்களை அவர் ஜிலேபிகளுக்குச் சொல்லிக்கொடுத்தார்.
தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பல நண்பர்கள் இருந்தார்கள்: தாத்தாவுடன் பூங்காவில் நடப்பவர்கள், பாட்டியுடன் நடனம் கற்பவர்கள்... இவர்களெல்லாம் போட்டியைப் பார்க்க வந்திருந்தார்கள், இரு அணியினருக்கும் ஆதரவு பெருகியது.
இத்துடன், பெற்றோரும் சில ஆசிரிய, ஆசிரியைகளும்கூட இந்தப் பெரும்போட்டியைக் காண வந்திருந்தனர். வேர்க்கடலை, ஐஸ்க்ரீம் வியாபாரிகள் போட்டி நடக்கும் இடத்தில் கடை போட்டிருந்தார்கள்.
விசில் ஒலித்தது, போட்டி ஆரம்பமானது.
அல்வா அணியினரும் அவர்களைத் திறமையுடன் தடுத்தனர். பின்னர் இவர்கள் தாக்க, அவர்கள் தடுத்தனர். இரு அணிகளும் சம பலத்துடன் மோதின, ஆட்டத்தின் முதல் பாதியிலும் இரண்டாவது பாதியிலும் ஒரு கோல்கூட விழவில்லை. ஆகவே, கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.
இரு பக்க ஆதரவாளர்களும் தங்கள் அணியை அழைத்துக் கூவினார்கள், எதிர் அணியைக் கேலி செய்தார்கள். நேர்த்தியான இளஞ்சிவப்பு நிற சல்வார் அணிந்திருந்த பாட்டி சத்தம் போட்டுக் கத்தியதில் அவருடைய தொண்டை கட்டிவிட்டது. தாத்தாவோ பதற்றத்தினால் தன் மீசையில் இருந்த முடிகளைப் பிய்த்துக்கொண்டிருந்தார். பார்வையாளர்கள் போட்டியையும் அவர்களையும் மாறி மாறிப் பார்த்தார்கள்.
கூடுதல் நேரம் முடியும் தருவாயில், ஜிலேபிகள் அணியின் சிறந்த வீராங்கனையான சாரா, ஜோதி அனுப்பிய பந்தைத் தடுத்துத் தட்டிச்சென்று மூன்று சிறுவர்களைக் கடந்து கோல் அடித்தாள்.
தாத்தா மகிழ்ச்சியில் எம்பிக் குதித்தார். அவசரமாகப் பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டார். பாட்டியோ தன் அணியின் நிலைமையையும் மறந்து வெட்கத்தில் கன்னம் சிவந்தார்.
அல்வா அணியினர் பழிவாங்கும் எண்ணத்தோடு ஆட்டத்தில் குதித்தனர். ஜோவிடமிருந்து பந்தைப் பெற்ற சாகேத் இடப்பக்கம் ஓடி, நரேந்தரிடம் பந்தை அனுப்பினான், அவன் கோல் கீப்பர் ஷைலஜாவைத் தாண்டிப் பந்தைத் தட்டி கோல் அடித்தான்.
உடனே பாட்டி சாம்பா, டிஸ்கோ, ப்ரேக் டான்ஸ் என அனைத்தும் கலந்த ஒரு நடனத்தை ஆடினார். அரங்கில் எங்கும் பரபரப்பு.
ஆட்டத்தில் இன்னும் ஒரு நிமிடமே மீதமிருந்தது. இரு அணிகளும் கோல் அடிக்கத் தயாராயின.
இப்போது பந்து ரெஹானாவிடமிருந்தது. அவள் அதைக் கீதிகாவிடம் அனுப்பியபோது, திடீரென்று ஓர் இருண்ட உருவம் மைதானத்துக்குள் நுழைந்தது.
அது, தூஃபான்... சாக்ஷி, சாகேத்தின் செல்ல நாய்.
தூஃபான் குள்ளம்தான். ஆனால், அதற்குப் பலம் அதிகம், அது ஓட ஆரம்பித்தால் யாராலும் பிடிக்க இயலாது.
பந்து விளையாடுவது என்றால் தூஃபானுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், ஒரு வாரமாக அதற்கு விளையாடப் பந்தே கிடைக்கவில்லை. ஆகவே, அது பொறுமையாகவும் ஏக்கத்துடனும் காத்திருந்தது.
இப்போது, பந்து தூஃபானுக்கு அருகே வந்தது. சட்டென்று ஓடிச்சென்று அதை வாயில் கவ்விக்கொண்டது, மைதானத்தைச் சுற்றியிருந்த செடிகளுக்கிடையே ஓடி, தாத்தா தினமும் காலையில் நடக்கும் பூங்காவைத் தாண்டி, பாட்டி நடனமாடும் இடத்தைத் தாண்டி ஓடியது.
அல்வாக்களும் ஜிலேபிகளும் தங்களுடைய ஹாக்கி மட்டைகளைக் கீழே போட்டுவிட்டு தூஃபானின் பின்னால் ஓடினர்.
ஆனால், தூஃபானை எங்கேயும் காணவில்லை. செடிகளுக்கிடையே, மரங்களுக்குப்பின்னால்,
பெஞ்சுகளுக்குக்கீழே, குப்பைத்தொட்டிகளுக்குள் என்று எங்கெங்கோ தேடிக் களைத்துப்போனார்கள்.
ரெஹானாவும் ரோஷனும் ஜோதியும் நரேந்திராவும் ஷைலஜாவும் ஜோவும் சாக்ஷியும் சாகேத்தும் இப்படி எல்லாருமே தூஃபானை மூலை, முடுக்கிலெல்லாம் தேடினார்கள், அதை அழைத்துக் கெஞ்சினார்கள், பலன் இல்லை.
இறுதியில், அவர்கள் தங்கள் முயற்சியைக் கைவிட்டனர்.
"யாரிடமாவது வேறொரு பந்து இருக்கிறதா?" என்று கேட்டார் தாத்தா.
அனைவரும் "இல்லை" என்று தலையசைத்தனர். இப்போது ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது: இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றது?
"இந்தப் போட்டியில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை" என்று அறிவித்தார் பாட்டி.
"ஆமாம், அல்வாக்களும் ஜிலேபிகளும் மிகவும் சிறப்பாக விளையாடினீர்கள். ஆகவே, உங்கள் இரு அணிகளுமே போட்டியில் வெற்றிபெறத் தகுதியானவர்கள்" என்றார் தாத்தா, "இங்கே விளையாடிய அனைத்துப் போட்டியாளர்களுக்கும் நான் ஒரு டி-ஷர்ட் பரிசு தரப்போகிறேன்!"
"நானும் உங்களுக்கு ஒரு பரிசு தரவுள்ளேன்" என்றார் பாட்டி, நாளை இதே மைதானத்தில் உங்கள் எல்லாருக்கும் ஒரு விருந்து!"
இரு அணிகளும் இந்த அறிவிப்புகளை மகிழ்ச்சியுடன் வரவேற்றன. அல்வாக்களும் ஜிலேபிகளும் தங்களுடைய விரோதத்தையும் போட்டியையும் மறந்து ஒன்றாகக் கூவினார்கள்.
"தாத்தா, இந்தப் போட்டியின் ஆட்டநாயகன் யார்?"
"வேறு யார்? நம்முடைய புத்திசாலி நாய் தூஃபான்தான்" என்றார் தாத்தா, "இந்தச் சரியான போட்டிக்கு ஒரு சரியான முடிவைத் தந்தது தூஃபான்தானே?" என்று அவர் சொன்னதும், அனைவரும் சிரித்தனர்.