seyarkai ilai

செயற்கை இலை

நகரத்தின் காற்று சாம்பல் நிறத்தில் மாசடைந்துள்ளது. நயன்தாராவும் அலீஸாவும் மூச்சுவிடத் திணறுகிறார்கள். இரவும் பகலும் ஆக்சிஜனையும் சுத்தமான ஆற்றலையும் உருவாக்கும் இலைகளைக் குறித்து கனவு காண்கிறார்கள். அப்படியொரு இலையை அவர்களால் கண்டுபிடிக்கமுடியுமா?

- Ramki J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நயன்தாரா, பள்ளிப் பேருந்திலிருந்து கீழே இறங்கியதுமே ஏதோ சரியில்லையென உணர்கிறாள். அடர்த்தியான சாம்பல் நிற காற்று, அவளது கண், மூக்கு, வாய், காதுகளின் வழியாக ஊடுருவுகிறது.

“அம்மா, நான் வந்துட்டேன். வெளியே எப்படி இருக்குன்னு பார்த்தியா?” என்று மூச்சை இழுத்தபடி கேட்டாள் நயன்தாரா.

“இதுதான் சுற்றுச்சூழல் மாசுபாடு. காற்றின் தரக் குறியீட்டு அளவு 50இலிருந்து 100க்குள் இருக்கவேண்டும். இன்று 463ஆக இருக்கிறது. அடுத்த சில நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அரசு அறிவித்துள்ளது” என்றார் அம்மா.

நயன்தாராவுக்கும் அவளது தோழி அலீஸாவுக்கும் வருத்தம். இருவரும், பூங்காவில் கால்பந்து விளையாடத் திட்டமிட்டிருந்தனர்.

ஜன்னலுக்கு வெளியே நீண்டிருந்த பழுப்பு-சாம்பல் நிற வானத்தைப் பார்த்தபடி, சுத்தமான காற்றே இப்போதெல்லாம் இல்லையென நயன்தாரா, அலீஸாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

“எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நேற்றிரவு, மர உச்சியிலிருக்கும் ஒரு வீட்டில் வசிப்பதாக கனவுகண்டேன். என்னைச் சுற்றி இருந்த ஆக்சிஜன் சுத்தமாக, புத்தம்புதிதாக இருந்தது“ என்றாள் அலீஸா.

“பகல் நேரத்தில் மட்டும்தான் மரங்கள் ஆக்சிஜனை வெளியிடும். இரவு நேரத்தில் அவை கார்பன் டை ஆக்ஸைடைத்தான் வெளியிடும். அப்போது என்ன செய்வது?” என்று அம்மா சிரித்தபடி வினவினார்.

“என் கனவில் அதைப் பற்றியெல்லாம் விவரங்கள் ஒன்றும் வரவில்லையே” என்று சிரித்தாள் அலீஸா.

“அலீஸா!” என்று உற்சாகமாகக் குரல் எழுப்பிய நயன்தாரா, “ஆக்சிஜனை மட்டும் வெளியேற்றும் ஒரு செயற்கை இலையை நாமே கண்டுபிடிப்போம். அதன் மூலம் சுத்தமான காற்று நமக்கு எப்போதும் கிடைத்துக்கொண்டே இருக்கும்” என்றாள்.

உலகத்தில் வசிப்பவர்களெல்லாம் சுவாசிப்பதற்காக இரவு பகலாக தொடர்ந்து ஆக்சிஜனை வெளியேற்றும் செயற்கை இலைகளைக் கொண்ட ஒரு பெரிய காடு ஒன்றைக் கற்பனை செய்தாள் அலீஸா.

“என்ன, நாமே ஒரு இலையை உருவாக்குவதா?” என்று சந்தேகத்துடன் கேட்டாள் அலீஸா.

“ஆமாம்! ஓர் ஒளிச்சேர்க்கை இயந்திரம். சூரிய ஒளி மற்றும் கார்பன் டை ஆக்ஸைடை பெற்று, ஆக்ஸிஜனை வெளியேற்றி, ஆற்றலையும் உருவாக்கும் ஓர் இயந்திரம் சாத்தியம்தான். நீ என்ன நினைக்கிறாய், அம்மா?” என்றாள் நயன்தாரா.

ஒரு நிமிடம் யோசித்தபின் அம்மா தலையாட்டினார். சிக்கலான விசயம்தான். ஆனால், செய்ய முடியும்.

சிறுமிகள் இருவரும் குறிப்புகளை எழுத ஆரம்பித்தார்கள். சூரிய ஒளியில் கார்பன் டை ஆக்ஸைடுடன் நீர் சேரும்போது, ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் உருவாகின்றன.

▸ செடி, நீரின் மூலக்கூறுகளைப் பிளந்து ஹைட்ரஜனையும் ஆக்சிஜனையும் உருவாக்குகிறது.

▸ ஆக்சிஜன் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது. ஹைட்ரஜன், செடிக்குள் கார்பன் டை ஆக்ஸைடுடன் இணைகிறது.

▸ குளுக்கோஸ் உருவாக்கப்பட்டு, செடிக்கு உணவாகப் பயன்படுகிறது.

அம்மாவின் உதவியுடன், இரவும் பகலும் ஆக்சிஜனை உமிழும் இலைகளை உருவாக்குவது எப்படியென ஆராயத் தொடங்கினர்.

“சூரிய ஒளியிலிருந்து பெறப்படும் ஆற்றலைக் கொண்டு நீரைப் பிளந்து ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனைத் தனியாகப் பிரிக்க, செயற்கை இலைக்கு ஒரு வினையூக்கி தேவை. இரண்டையும் பிரித்த பிறகு, அவற்றைத் தனித்தனியாக வைத்தாக வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு வாயுக்களும் சேர்ந்து வெடித்துவிடும்” என்றார் அம்மா.

“ஆக, ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் பிரித்து வைக்க ஒரு சவ்வு தேவை” என்றாள் நயன்தாரா. “செயற்கை இலையை உருவாக்குவது எளிதாக இருக்காதுபோலவே!”

“ஆமாம், கஷ்டம்தான். ஆனால், செயற்கை இலை நமக்குத் தேவையான ஆக்ஸிஜனைத் தரும். கூடவே வரும் குளுக்கோஸ் நமக்கு வேதி ஆற்றலையும் அளிக்கும். அத்தனை குளுக்கோஸையும் எரிபொருளாய் உபயோகித்து மின்சாரம் உருவாக்குவதைக் கற்பனை செய்து பார்” என்றாள் அலீஸா.

“இது மட்டும் நடந்துவிட்டால் என்னாகும் என்று நினைத்துப்பார். குக்கிராமங்களுக்கும் எப்போதும் மின்சாரம் கிடைக்கும். சரியான வெளிச்சமில்லாமல் ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு சிரமப்படமாட்டார்கள். மின்சாரத்தைப் பற்றி கவலையின்றி ஏராளமான சிறு தொழிற்சாலைகளை உருவாக்க முடியும்” என்றாள் நயன்தாரா.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓர் அறிஞர், செயற்கை இலைகளை உருவாக்கி அதன் மூலம் சூரிய ஒளியை பெற்று, அதை மின்சார ஆற்றலாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இம்முயற்சி நிறைவேற இன்னும் ஏராளமான பணிகளைச் செய்தாக வேண்டும் என்று கூறினார் நயன்தாராவின் அம்மா.

“அவரோட செயற்கை இலை பார்க்க எப்படி இருக்கும்?” என்று கேட்டாள் அலீஸா.

“கிட்டத்தட்ட ஒரு சாண்ட்விச் போலவே இருக்கும். சிலிக்கான், கோபால்ட் மற்றும் நிக்கலைக் கொண்டிருக்கும். அதில் ஆற்றலைத் தயாரிக்க நீர் மட்டுமே தேவை.

அந்த ஆற்றலைச் சேமித்து வைக்கும் முறைகளைக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயன்று வருகிறார்கள்” என்றார் அம்மா.

தொலைதூரத்திலிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் அப்படியொரு செயற்கை இலையை உருவாக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்த அலீஸாவும் நயன்தாராவும் உற்சாகமடைந்தனர். இயந்திரங்கள் கரும்புகையைக் கக்காத அந்தத் தொழில்நுட்பம் நிறைந்த உலகைக் கற்பனை செய்து பார்த்தனர். காற்று அடர்த்தியாக, கனமாக இருக்காது. வானம் சாம்பல் நிறத்தில் இருக்காது.

“பெட்ரோல் பம்புகள் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்?” என்றாள் அலீஸா. “மேலே செயற்கை இலைகளால் மூடப்பட்ட கார்கள் விமானங்களைக் கற்பனை செய்து பார். ஒருநாள் நமக்கு சூரிய ஒளியும் தண்ணீரும் மட்டுமே தேவைப்படும். அதிலிருந்து ஆக்ஸிஜன், எரிபொருள் போன்றவற்றை செயற்கை இலைகளால் உருவாக்கிக்கொள்ள முடியும்” என்றாள்.

இருவரும் ஜன்னல் வழியாகப் பார்த்தபடி பெரிய செயற்கை இலைக் கூரைகொண்ட வீட்டைக் கற்பனை செய்தனர்.

▸ செயற்கை இலைகள் தயாரிக்கும் தொழில்நுட்பம் சாத்தியமாகி வருகிறது. அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேனியல் நோஸேராயும், கால்டெக்கைச் சேர்ந்த நாதன் லூயிசும் முதல் செயற்கை இலையை உருவாக்கும் ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

▸சூரிய ஒளியிலிருந்து ஹைட்ரஜனைப் பிரித்தெடுப்பது குறித்த ஆய்வுகள் ஒரு பக்கம் நடைபெறும்போது, இன்னொரு பக்கம் பெட்ரோலுக்கு மாற்றாக சூரிய ஒளியிலிருந்து கார்பன் உள்ள எரிபொருளை உருவாக்கும் ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

▸இவையெல்லாம் கொள்கலன்களில் சேகரிக்கப்பட்டு. மின்சாரத் தேவைக்கேற்ப எரிபொருள் கலன்களில் நிரப்பப்படும்.

▸மிகவும் ஆற்றலுடைய தாவரங்கள்கூட ஏறக்குறைய ஒரு சதவீத சூரிய ஒளியைத்தான் சேமிக்கக்கூடிய ஆற்றலாய் மாற்றுகின்றன. ஆனால், செயற்கை இலைகளால் இந்நிலையை மாற்றமுடியும்.

▸செயற்கை இலைகள் உற்பத்தி செய்யும் வாயுக்களைச் சேகரித்து, சேமித்துப் பயன்படுத்துவதற்கேற்ற உபகரணங்களை உருவாக்குவதுதான் சவாலான விசயம்.