முன்னொரு காலத்தில், ஒரு பயணி வானத்திலிருந்து விழுந்தது.
அது ஒரு தக்காளித் தோட்டத்தில் இறங்கியது. கமலாவும் அவள் தாத்தாவும் வெளியே ஓடிப்போய்ப் பார்த்தார்கள். அது அவர்களது தக்காளிகளை எல்லாம் நசுக்கிவிட்டு ஒரே ஒரு ஷூவை மட்டும் விட்டுச் சென்றிருந்தது.
கமலா அந்த ஷூவைக் கையில் எடுத்தாள். அது நகத்தை நீட்டி அவளைப் பிறாண்டியது. ஹிஸ்ஸ்ஸ்ஸ்.
“பூனை, ஷூ!” என்று கமலா கத்தினாள். ஷூ-பூனை கொட்டாவிவிட்டது.
கமலா ஷூ-பூனையை ஆட்டுப்பட்டிக்குத் தூக்கிச் சென்றாள். அதற்கு ஒரு கிண்ணம் பால் கொடுத்தாள். ஷூ-பூனை அதை முகர்ந்து பார்த்துவிட்டு முகத்தைச் சுளித்தபடி ‘தூ!’ என்று துப்பியது.பின் அது ஆடுகளுக்கு வைத்திருந்த புல்லை எல்லாம் தின்றுவிட்டது.
அன்றிலிருந்து, ஷூ-பூனை கமலா செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே சென்றது.
பள்ளிக்கூடத்தில் அது ஷமீம் மிஸ்ஸைப் பிறாண்டிவிட்டது. “ஷூ! பூனையே!” என்று அவர் விரட்டினார். ஷூ-பூனை அவர் மேல் துப்பியது.
அது கமலாவின் வகுப்பினர் எல்லோரையும் பிறாண்டி வைத்தது. ஷூ-பூனை பிறாண்டிய இடங்களில் எல்லாம் காயங்கள் பச்சை நிறத்தில் மின்னின.
ஷூ-பூனை செய்தித்தாள் போடுபவரைப் பிறாண்டியது. பதினேழு ஆடுகள், பதிமூன்று கோழிகள், மூன்று நாய்கள் மற்றும் ஒரு தாத்தாவையும் அது பிறாண்டிவிட்டது. கமலாவைத் தவிர எல்லோரையும் பிறாண்டியது. ஏனென்றால் அவளைத்தான் அது ஏற்கனவே பிறாண்டிவிட்டதே!
“அய்யோ! ஷூஊ, பூனையே!” என எல்லோரும் கன்னடத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் உருதிலும் தெலுங்கிலும் ஆட்டுமொழியிலும் நாய்ப்பாஷையிலும் கோழியத்திலும் கத்தினார்கள். எல்லோருக்கும் பூனை இப்படி பதில் சொன்னது: “தூ!”
பள்ளியில் ஒரு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது: பூனைகள் உள்ளே வரக்கூடாது
கடையிலும் ஒரு அறிவிப்புப் பலகை: பூனைகளுக்கு அனுமதியில்லை.
விளையாட்டு மைதானத்தில்கூட ஒரு அறிவிப்புப் பலகை: பூனைகள் உள்ளேவர அனுமதியில்லை!
கமலாவும் ஷூ-பூனையும் சோகமாக வீட்டுக்குத் திரும்பினர்.
தாத்தாவும் ஒரு அறிவிப்புப் பலகையை மாட்டிக்கொண்டிருந்தார்: பூனையே திரும்பிப் போ!
அன்றிரவு வானத்தைப் பார்க்க கமலாவும் ஷூ-பூனையும் கூரைமேல் ஏறினர். நிலா பச்சைநிறத்தில் வெதுவெதுப்பாக ஒளிர்ந்தது.
ஷூ-பூனை வானத்தைப் பார்த்து வேதனையோடு ஊளையிட்டது, “ஊவூஊஊ!”
ஆட்டுப்பட்டியில் பதினேழு ஆடுகள் தலையை உயர்த்தி ஊளையிட்டன: ஊவூஊஊ!
தாத்தாவின் படுக்கையறையில் அவர் எழுந்து உட்கார்ந்து தன் கண்ணாடியை அணிந்துகொண்டார். தூக்கக்கலக்கத்தோடு, அவரும் சொன்னார், “ஊவூஊ?”
கிராமம் முழுக்க, கமலாவின் ஆசிரியர், அவள் வகுப்புத் தோழர்கள், செய்தித்தாள் போடுபவர், பதிமூன்று கோழிகள் மற்றும் மூன்று நாய்கள் தலையை உயர்த்தி பச்சை நிலாவைப் பார்த்து ஊளையிட்டனர்: “ஊவூஊஊ!”
கூரைமேல், கமலாவும் முழங்கினாள்: ஊவூஊஊ!
மின்னலடித்து, மழைபெய்யத் தொடங்கியது. பூனைகளுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புகள் கரைந்துபோய் அழியத் தொடங்கின.
பின் இடி இடிக்க ஆரம்பித்தது, படா-டம் டம்-டம்! கிராமத்திலிருந்த எல்லாக் கண்ணாடிகளும் உடைந்தன. மின்விளக்குகள் ‘பட்’டெனத் தெறித்தன. ‘டொப் டொப்’ என ஊறுகாய் ஜாடிகள் வெடித்தன. கண்ணாடிகள் விரிசல்விட்டு நொறுங்கின.
சாளரக் கதவுகள் சுவரில் அடித்துக்கொண்டன. எங்கும் கண்ணாடித் துண்டுகள் பறந்தன. கூரைமேல் கூட!
கமலா படுக்கைக்கு அடியில் ஒளிந்துகொண்டாள்.
மறுநாள் காலை, கமலா படுக்கைக்கடியிலிருந்து தவழ்ந்து வெளியே வந்தாள். தாத்தா படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். அவர் ரோமங்கள் அடர்ந்த ஒரு பச்சைத் தக்காளியைத் தின்றுகொண்டிருந்தார்.
“அற்புதம்! நன்றி நன்றி தூ-பூனையே, நீ ரொம்ப நல்ல ஷூ-பூனையே!” என்றார் தாத்தா.
தோட்டத்தில் நிறைய உயரமான தக்காளிச் செடிகளும் நடுத்தர உயரத்தில் சில ஆடுகளும் குள்ளமாக ஒரு ஷூ-பூனையும் இருந்தன.
“தூ!” என்று ஷூ-பூனை நட்புடன் சொல்லியது.
“தூ!” என்று கமலாவும் ஒரு பச்சைத் தக்காளியைக் கடித்தபடியே ஆமோதித்தாள்.