சிலந்தியைத் தேடிச் செல்கிறோம் நாங்கள், தட்டுப்போல
பெரிதாய் ஒரு சில,
பொட்டுப் போல
சிறிதாய் ஒரு சில
பலவகை சிலந்திகளை கண்டு களித்து வியப்போம்!
சுற்றிச்சுற்றிப் பார்க்க எங்கள் தலை சுற்றும்!
“இது என்ன எறும்பா, சிலந்தியா?” என்று கேட்டாள் காவேரி. அதைப் பார்க்க எறும்பைப் போல் இருந்தாலும் கால்கள் எட்டு இருந்தன.
“ஓய்! எறும்புகள் பூச்சி வகையைச் சேர்ந்தவை. எல்லா பூச்சியினங்களுக்கும் ஆறு கால்கள் தான் இருக்கும். எட்டு கால்கள் இருக்காது. ஆனால், நீ சொல்வதும் சரி தான். இது பார்ப்பதற்கு எறும்பைப் போலத்தான் இருக்கிறது” என்றான் ஷிவி.
“முழு மதிப்பெண்கள்” என்றாள் ஷாமா. இது ஒரு எறும்பையொத்த சிலந்தி.
காவேரிக்கும் ஷிவிக்கும், ஷாமாவுடன் நேரம் கழிக்க மிகவும் பிடிக்கும். வன உயிரியல் நிபுணராவதற்காகப் படிக்கும் ஷாமா, விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றிய சுவாரசியமான உண்மைகளும், கதைகளும் தெரிந்தவள்.
அப்போது தான் காவேரி மூட்டை சிலந்தி ஒன்றைக் கண்டாள். ஒரு செடியின் இலைக்குள் அழகாக சுருண்டு கொண்டு இருந்தது. “இதை எப்படிக் கண்டுபிடித்தாய்?” என்றான் ஷிவி.
“ஓ! சிலந்திகள் ஏற்படுத்தும் வெவ்வேறு அறிகுறிகளைப் பற்றித் தெரிந்து கொண்டாலே போதும், அவைகளை எந்த இடத்திலும் கண்டுபிடித்துவிடலாம்”
என்றாள் ஷாமா கண்ணடித்தபடியே.
சிலந்தியைத் தேடிச் செல்கிறோம் நாங்கள்,
குண்டாய் சில, தகடாய் சில, முடியாய் சில
எட்டு கண்கள், எட்டு கால்கள் கொண்டவை
ஆனால் அவை பயங்கரமில்லை!
அதனால் பயம் தேவையில்லை!
ஒரு மஞ்சள் நிறப்பூவை
ஓரக்கண்ணால் பார்த்தபடியே, “உம்...!,
இது பார்ப்பதற்கு நண்டு போல் இருக்கிறது” என்றான் ஷிவி.
“ஆம்! இது நண்டு சிலந்தி. இங்கே பார்! அது தேன் குடிப்பதற்கு வந்த தேனீயை பிடித்துக் கொண்டது. பாவம் தேனீ!” என்றாள் ஷாமா.
“ஓ! இந்தத் தேனீக்கு,
பூவில் சிலந்தி இருப்பது தெரியாததில் ஒரு ஆச்சரியமுமில்லை! அது ஏறக்குறைய அந்தப் பூவின் நிறமாகவே இருக்கிறது” என்றாள் காவேரி.
“அங்கே பார்! அங்கே பார்!” என்று ஈரத்தரையில் இருந்த இலைகளை சுட்டிக்
காட்டியவாறு கூச்சலிட்டான் ஷிவி. அங்கே ஒரு பெண் ஓநாய் சிலந்தி அதன்
முதுகில் முட்டைப் பையைச் சுமந்து சென்று கொண்டிருந்தது.
“அங்கே பார் இன்னொன்று. ஓ! அதன் முதுகில் நூற்றுக்கணக்கான குட்டி
சிலந்திகள் இருக்கின்றன” பிரமிப்புடன் கிசுகிசுத்தாள் ஷாமா.
சிலந்தியைத் தேடிச் செல்கிறோம் நாங்கள்,
ஓ எங்கே, ஓ எங்கே, ஓ எங்கே?
இதோ அந்தப் புல்லில், இந்த இலையில், அந்தப் பூவில்...
அங்கும், இங்கும், எங்கும்!
அடிமரத்தின் மேல் சாய்ந்திருந்த ஷிவி, திடீரென்று, பயந்து போய்க் குதித்தான்.
அவனருகே ஏதோ ஒன்று மின்னல் வேகத்தில் ஓடியது.
“உம்! தெரியும், நீ இங்கே தான் இருப்பாய் என்று!” என்றபடியே ஷாமா மரத்தை
நெருங்கினாள். “இந்த இரட்டை வால் சிலந்தி எப்படி இந்த மரத்தின்
புறப்பட்டையோடு ஒன்றியிருக்கிறது, பார்!” என்றாள்.
“இதோ! இந்தச் சிலந்திக்கு நான்கே கால்கள் இருப்பது போலத் தெரிகிறதே” என்று ஒரு செடிப் புதரை சுட்டிக் காட்டியபடி உற்சாகமாகச் சொன்னாள் காவேரி.
அங்கே ஒரு சிலந்தி இரண்டு செடிகளுக்கு நடுவே சக்கரம் போன்ற வலையைப் பின்னியிருந்தது.
“குறுக்கும் நெடுக்குமாக வளைந்த எத்தனை அழகானதொரு அமைப்பு! இது கண்டிப்பாக
குறுக்கு சிலந்தி தான்,” என்றாள் ஷாமா.
சிலந்தியைத் தேடிச் செல்கிறோம் நாங்கள்,
இதுவரை வகைகள் பல கண்டோம்!
ஓ! அதோ அந்தப் புல்வெளியில்
அவை பின்னும் அழகிய வலைகள்!
தற்செயலாக காவேரி, ஷிவி மற்றும் ஷாமா,
புனல் சிலந்தியைக் கண்டனர்.
காவேரி, “இதன் நூலாம்படை மெல்லிய தாள்
போல் இருக்கிறது!” என வியந்தாள்.
“அதில் ஒட்டிக் கொண்டுள்ள இந்த வெட்டுக்கிளி
விரைவில் சிலந்திக்கு உணவாகப் போகிறது,
ஸ்ரூப்!” என்று உறிஞ்சிக் காட்டினான் ஷிவி.
தன் கைக்கடியாரத்தைப். பார்த்தபடி. “சரி! வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது,”
என்றாள் ஷாமா. “நாளைய வகுப்பிற்கான பாடங்களைப் படிக்க வேண்டும்.”
காவேரி மற்றும் ஷிவியின் முகம் வாடிவிட்டது.
“அடடா! கவலைப்படாதீர்கள். வீட்டிலும் பார்ப்பதற்கு நிறைய
சிலந்திகள் இருக்கின்றன” என்றாள் ஷாமா.
வீட்டிற்கு சென்ற பின்னர், ஷாமா
பொதுவான வீட்டு சிலந்தி ஒன்றைக் கவனித்தாள்.
“ஓ! அங்கே பார்! நெட்டைக் கால் சிலந்தி இருக்கிறது.”
“இவை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கின்றன,”
என்றாள் காவேரி. இவற்றிற்கு மிக நீளமான கால்கள்.
மேலும் இவை தலைகீழாகத் தொங்குகின்றன.
அற்புத சிலந்திகள் பலவகைகள் பார்த்தோம்,
புல்வெளியிலே, மரத்தின் மேலே, பூக்களில் கூட.
தவழ்ந்து சென்று இன்னும் பல காண்போமோ?
தேடிப்பார்த்தால் நம் கட்டிலடியில் கிடைக்குமா?
சிலந்திக் கையேடு
காவேரி, ஷிவி மற்றும் ஷாமா நடந்து செல்லும் போது பார்த்த சிலந்திகளை நீங்களும் சந்தியுங்கள்.
இரட்டை வால் சிலந்திகள்
இவை, வாலைப் போல மிக நீளமான நூற்பு உறுப்பு கொண்டதால் இந்த சிலந்திகளுக்கு இப்பெயர் வந்தது. தட்டையான உடல் அமைப்பு கொண்ட இவை அடிமரம் மற்றும் சுவற்றோடு ஒன்றியிருக்கும்.
எறும்பையொத்த சிலந்திகள்
இந்த வகை சிலந்திகள் நடத்தையில் மட்டுமல்ல பார்ப்பதற்கும் எறும்பைப் போலவே தோன்றுபவை. சிலந்திகளை உண்ண விரும்பும் மிருகங்களையும், பறவைகளையும் இவை தம் உருவத்தோற்றத்தால் ஏமாற்றித் தப்பிவிடுகின்றன.
நண்டு சிலந்திகள்
இவை தன் உணவை பிடிக்கக் காத்திருக்கும் வேளையில், மிக்க பலமும் நீளமும் கொண்ட தனது கால்களை அவ்வப்போது நீட்டும் பழக்கம் கொண்டவை. இவ்வாறு செய்வது இவற்றை நண்டு போல தோன்றச் செய்யும்!
ஓநாய் சிலந்திகள்
இலைகளும், புதர்ச்செடிகளும் இருக்கும் இடங்களில் இவை அதிவிரைவாக ஓடுவதை அடிக்கடி பார்க்கலாம். பெண் ஓநாய் சிலந்தி, தனது நூற்பு உறுப்புடன் இணைந்திருக்கும் முட்டைப்பைகளை சுமந்து செல்லும். இந்த முட்டைப்பை திறக்கும் போது, நூற்றுக்கணக்கான குட்டிச்சிலந்திகள் அதிலிருந்து வெளிவரும். பின்னர் அவை அம்மா சிலந்தியின் முதுகில் ஏறிக்கொண்டு, பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்கும்.
மூட்டை சிலந்திகள்
இந்த வகை சிலந்திகள், சுருட்டிய இலைகள் மற்றும் புல்லின் இதழ்களில் பட்டுப்போன்ற ஒரு பையை உருவாக்கி அதன் உள்ளே ஓய்வு எடுக்கின்றன. உணவு தேடும் நேரம் மட்டும் தன் ஓய்விடத்தை விட்டு வெளியே வருகின்றன.
புனல் சிலந்திகள்
இவை மிக அழகிய, மெல்லிய தாள் போன்ற நூலம்படைகளை அமைக்கின்றன. அந்த தாளின் குழல் போன்ற இறுதிப் பகுதி இவை ஒளிந்து கொள்வதற்கு மிகவும் வசதியாக இருக்கும். ஏதாவது ஒரு பூச்சி மாட்டிக்கொண்டால், உடனே அம்பு போலப் பாய்ந்து வெளியே வரும்.
நெட்டைக்கால் சிலந்திகள்
பொதுவாக வீடுகளில் இருக்கும்
சிலந்திகள் இவை. உட்கூரைகளிலும் வீடுகள் மற்றும் கொட்டகைகளின் மூலைமுடுக்குகளிலும் இவற்றைக்
காணலாம். இவை பின்னியிருக்கும் ஒட்டடைகள் சுத்தமில்லாமல் காணப்பட்டாலும்,
தொல்லை கொடுக்கும் பல பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க உதவுகின்றன.
குறுக்கு சிலந்திகள்
இவை தன்னுடைய சக்கரம் போன்ற நூலாம்படையில் இருக்கும் பொழுது, பெரிய X போலத் தோன்றும். இவை குறுக்கும் நெடுக்குமாக நூலாம்படை பின்னுவதால் கையொப்ப சிலந்தி என்றும் அழைக்கப்படுகின்றன.
இக்கதையில் வரும் சிலந்திகளின் ஆங்கிலப் பெயர்கள்
இரட்டை வால் சிலந்தி – Two Tailed Spider
எறும்பையொத்த சிலந்தி – Ant Mimic Spider
நண்டு சிலந்தி – Crab Spider
ஓநாய் சிலந்தி – Wolf Spider
மூட்டை சிலந்தி – Sac Spider
புனல் சிலந்தி – Sheet and Funnel Web Spider
நெட்டைக்கால் சிலந்தி – Daddy Long Legs Spider
குறுக்கு சிலந்தி – Cross Spider