singam pal theikkuma

சிங்கம் பல் தேய்க்குமா?

லயாவிற்கு பல் தேய்க்கப் பிடிக்காது. விலங்குகள் தேய்க்குமா என்ற சந்தேகம் வருகிறது. அவற்றைத்தேடிப் போகும் பயணமே இக்கதை!

- S. balabharathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவள் தான் சுட்டிப்பெண் லயா.  ஜாலியான பெண் என்றாலும் இவளிடம் ஒரு குறை உண்டு.

இவளுக்கு பல் தேய்க்கப் பிடிக்காது. தினமும் பல் துலக்கச்சொல்லும் அம்மாவிடம் மறுத்து அடம்பிடிப்பாள்.

காலையிலும் இரவிலும் இரண்டு வேளை பல் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி, அம்மா அவளுக்கு தினமும் சொல்லுவார்.

பற்களின் பாதுகாப்பிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் பல் தேய்ப்பது அவசியம் என்று எல்லாம் அம்மா சொல்லுவார்.

அம்மா, என்ன சொன்னாலும் சரி என கேட்டுக்கொண்டு, விளையாட ஓடிவிடுவாள் லயா.

அம்மா என்ன சொல்லியும் அவளுக்கு பல் தேய்ப்பதில் ஆர்வமே வரவில்லை.

ஒருநாள்  லயாவிற்கு ஒரு சந்தேகம் வந்தது.

ஆடு, மாடு, சிங்கம், புலி எல்லாம் பல் தேய்க்குமா?  தேய்க்காதா?

உண்மைய அறிய கிளம்பினாள் லயா.

தன் வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டியிடம் சென்று, “நீ பல் தேய்ப்பாயா?” என்று கேட்டாள்.

”நான் தேய்ப்பதில்லை. நீ கோழியிடம் கேட்டுப் பார்” என்றது ஆடு.

அதே கேள்வியை கோழியிடம் கேட்டாள்.

’எங்களுக்குத்தான் பற்களே இல்லையே.. நீ நாய்கிட்ட கேளு” என்றது கோழி.

லயாவும்,  டாமி நாய்குட்டியிடம் சென்று கேட்டாள்.

அதுவும் தான் பல் தேய்ப்பதில்லை. பூனையிடம் சென்று கேள் என்றது டாமி.

பூனையிடம் சென்று கேட்டாள்.

”நான் பல் தேய்ப்பது இல்லை. நீ கன்றுகுட்டிடம் சென்று கேள்” என்றது பூனை.

வீட்டின் பின்னால் கட்டப்பட்டிருந்த  கன்றுக்குட்டியிடமும் பசுவிடமும் சென்று கேட்டாள்.

அவையும் இல்லை என்று சொல்லின.

”ஒருவேளை காட்டு விலங்குகள் தேய்க்குமோ என்னவோ..” என்றது பசு.

பசு சொன்னதைக் கேட்டதும் லயா, நடந்து நடந்து அப்படியே காட்டுப்பக்கம் வந்துசேர்ந்தாள்.

துறு துறு பற்களுடன் முதலில் எதிர்பட்ட முயல்குட்டியிடம் அதே கேள்வியைக் கேட்டாள்.

அதுவும், ”தான் பல் தேய்பதில்லை. பின்னால் வரும் சிறுத்தையிடம் கேளு” என்று சொல்லிவிட்டு துள்ளிக்குதித்து ஓடிற்று.

கொஞ்ச தூரம் போனதும் அந்த  சிறுத்தை வந்தது. அதனிடமும், “நீங்கள் பல் தேய்ப்பீர்களா?” என்று கேட்டாள்.

அது இல்லை. பின்னால் வரும் கரடியிடம் கேட்டுப்பார் என்றது.

கரடியிடம் கேட்டாள்.

கரடியும் இல்லை என்றது.

அது பொய் சொல்வதாக நினைத்த லயா, அதன் மீது தாவி ஏறி, கரடியின் காதைப் பிடித்து இழுத்தாள்.

அது வலியால் கத்த, சிறுத்தை பயந்து ஓடியது.

கரடியின் சத்தம் கேட்டு, காட்டுராஜா சிங்கம் வந்து சேர்ந்தது.

” என்ன சத்தம்?” என்று வந்த சிங்கத்திடம் “நீங்க பல் தேய்ப்பீங்களா?” என்று கேட்டாள் லயா.

”அதெல்லாம் மனிதர்களின் வேலை. எந்த விலங்கும் பல் தேய்ப்பதில்லை” என்றது.

வியந்து போன லயா, “ நீங்கள் எல்லாம் தேய்பதில்லை. அப்புறம் என்னை மட்டும் ஏன் தினமும் பல் தேய்க்கச் சொல்கிறார்கள்?” என்று சலித்துக்கொண்டாள்.

சிரித்துக்கொண்டே சிங்கம் சொன்னது, “நாங்கள் மாவு சத்துள்ள பொருட்களை உண்பதில்லை.

மனிதர்கள் அதிகம் உண்பது மாவு சத்துள்ள உணவுகள். அவை பற்களின் இடையில் போய் மாட்டிக்கொண்டு தங்கிவிடும்.”

”ஆமாம்” என்றபடியே பூனை ஒன்று அங்கே வந்தது.

சிங்கம் தொடர்ந்து சொன்னது, “ பற்களிடையே தங்கிவிட்ட, உணவினால் பற்கள் பாதிக்கப்படும். அதை சுத்தப்படுத்தவே பல் துலக்கச் சொல்லுகிறார்கள்.”

பல் தேய்ப்பதன் அவசியத்தை உணர்ந்த லயா, சிங்கத்திற்கு நன்றி சொல்லிவிட்டு, மகிழ்ச்சியோடு துள்ளிக்குதித்து வீட்டை நோக்கி நடந்தாள்.

இனி அவள் தினமும் பல் துலக்குவாள்.