singam saapitta pakoda

சிங்கம் சாப்பிட்ட பக்கோடா

மழை நாட்கள் இவ்வுலகில் சாத்தியங்களுக்கு குறைவில்லை என்பதை உங்களுக்கு உணர வைக்கிறதா? இக்கதையில் வரும் சிங்கம் நிச்சயமாக அப்படித் தான் நம்புகிறது. ஒரு மழை நாளில் மிருகக்காட்சி சாலையிலிருந்து விடுமுறை எடுத்துக் கொண்ட சிங்கத்தை சந்திக்க இக்கதையைப் படியுங்கள்! இக்கதையில் வரும் குழந்தைகளைப் போல் நீங்களும் மகிழுங்கள்! கதாசிரியர் இது ‘கிட்டத்தட்ட நிஜக்கதையே’ என மெய்ப்பிக்கிறார்.

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மழை! மழை! அடை மழை! விடாது பெய்து கொண்டு இருந்தது. வானம் பெரிதாய் அழுவது போல் முடிவின்றி ஒரே சரமாய் பெய்து கொண்டு இருந்தது. மேகங்கள் எல்லோர் இதயங்களிலும் நுழைந்து, வெளியே இருந்த மப்பையும், ஈரத்தையும் நிரப்பியது போல் ஆன பின்பும் மழை தொடர்ந்தது!

அனைவரும் அலுப்பும்,சோர்வும் மேலிட வீட்டினுள்ளே அடைந்து கிடந்தனர். "ஏதாவது செய்தால் நன்றாயிருக்கும்" என முனகினாள் கீத்தி. "சே! நமக்கு சுவாரசியமாக ஏதும் நடப்பதில்லை" சலித்துக் கொண்டான் விக்கி.

வெளியே செல்ல விடாவிட்டாலும், அம்மா, சுடச்சுட கர முர பக்கோடாக்கள் செய்து குழந்தைகளை குஷிப்படுத்தப் பார்த்தாள். கீத்தியும், விக்கியும் வெங்காயம், உருளைக்கிழங்கு, காலிபிளவர் மற்றும் கீரையை உற்சாகமாய் நறுக்கிக் கொடுத்து உதவினர்.

ருசியாக இருந்தன பக்கோடாக்கள்! கார சாரமான புதினா சட்னியில் முக்கி சூடான பக்கோடாக்களை வயிறு முட்ட ரசித்து ருசித்து சாப்பிட்டனர். மறுநாள் சாம்பார், ரச சாதத்தோடு குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் என மிச்சமிருந்தவற்றை ஒரு தட்டில் வைத்து மூடினாள் அம்மா.

குழந்தைகளிருவரும் ஜன்னலருகில் வேடிக்கை பார்த்தபடி நின்றனர். "பாவம்! இந்த மழையில் விலங்குகளும், பறவைகளும் என்னதான் செய்வார்களோ?" யோசனையோடு கேட்டாள் கீத்தி.

"வேறென்ன! தத்தம் கூண்டுகளுக்குள் அடைந்து கிடப்பார்கள்."

"ஏ! மக்கு! நான் கேட்டது காட்டில் திரியும் விலங்குகளையும், மரத்தில் வசிக்கும் பறவைகளையும்!"

"ஏய்! அவர்களாவது சுதந்திரமானவர்கள். மிருகக்காட்சி சாலைகளில் இருப்பவர்களை நினைத்துப்பார்! எவ்வளவு கஷ்டம் அவர்களுக்கு?"

உண்மையும் அது தான். மிருகக்காட்சி சாலைகளில் இருந்த மிருகங்கள் எல்லாம் கவலையோடும், எரிச்சலோடும் இருந்தன. சிறிய, பெரிய விலங்குகள் அனைத்திற்கும் இந்த ஈரம் அவஸ்தையாக இருந்தது. மழை பெய்யப்பெய்ய எல்லா இடங்களும் நீரால் நிரம்பி வழிந்தன.

சிங்கம் இருந்த வாடி(வேலியிட்ட இடம்)யைச் சுற்றியிருந்த அகழியும் நீரால் நிரம்பி வழிந்தது. சிங்கம் கவனித்து கொண்டேயிருந்தது.

இது ஒரு வயதான சிங்கம். இங்கு வந்ததிலிருந்து ஒரு நாளும் இவ்விடத்திலிருந்து வெளியே சென்றதில்லை.

இது போன்ற மழை வெள்ளத்தை எப்போதும் கண்டதேயில்லை. சுற்றுச்சுவர் மீது நீர் தளும்ப ஆரம்பித்தது.

கிழட்டு சிங்கம், நீர் அதனை மூழ்கடிக்கும் முன், தானே நீரில் குதிக்க எண்ணியது. அங்கும், இங்கும் முகர்ந்து கொண்டு அலைந்தது.

பின், தன் ஒரு பாதத்தை மிக கவனமாக, நாசுக்காக நீரில் வைத்தது.

அப்புறமென்ன?

‘தபக்’கென்று விரைவாக பெருகி வரும் வெள்ளத்தில் குதித்தது. உடனே, மூழ்கி விட்டது."ஐயோ!செத்தோம்!" என பீதியடைந்தது.

ஒரே நொடியில் சுதாரித்து, தலையை சிலுப்பிக் கொண்டு, நீந்தியது சிங்க ராஜா! அதன் முகவாய் சுற்றுச்சுவரில் பட்டதும்,

தன் முன்னங்கால்களை சுவரில் வைத்து. "சிங்கம்னா, சும்மாவா!" என ஒரே உந்தில் ஏறி வெளியே வந்தே விட்டது!

ஆஹா! விடுதலை! உலகமுழுதும் சுதந்திரமாய் சுற்றும் மனிதர்களைப் போல் தானும் இருப்பதை உணர்ந்து சந்தோஷித்தது. வாழ்வில் இதுவரையில் இல்லாத ஒரு புது சாகசத்தை அனுபவிக்க போகிறார் சிங்க ராஜா இன்று!

இரவாகி விட்டதால் யாரும் பார்க்கவில்லை. காவலாளிகள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தனர். ராஜாவாக வெளியில் வந்து அனைத்தையும் பார்த்தது. மெத்தென்ற பாதங்களால் மெது மெதுவாய் நகர்ந்து, பக்கத்திலிருந்த இடத்திற்கு வந்தது.

அங்கிருந்த கறுப்பு கரடியைப் பார்த்து ‘ஈ’யென இளித்தது.  சட்டென்று விழித்துப் பார்த்தது கரடி. பின் கண் சிமிட்டி புன்னகை செய்தது.

எல்லாக் கூண்டுகளுக்கு உள்ளேயும் பார்த்துக் கொண்டே வந்த சிங்கம், "ஆஹா! இந்த விடுதலை எத்தனை அற்புதமானது!" என நினைத்தது. உடனே ஒரு திட்டம் தீட்டியது.

உள்ளபடி, உண்மையாக சுதந்திரமாக திரியப்போகிறது! இப்படி தடை தகர்த்த பின்னும் இந்த மிருகக்காட்சி சாலையின் நான்கு சுவர்களுக்குள்ளேயே இருப்பதில் என்ன பயன்?

ஆகவே, ஒவ்வொரு கூண்டிலும் இருந்தவரிடம் வழி கேட்டுக் கொண்டு,

பிரதான வாயிலை அடைந்தது. மனித வாடை வீசியது. நுழைவுச்சீட்டு சாவடிக்குள் புகுந்தது. சிங்கம் கிழடானாலும் புத்திசாலி.

காவலாளி லேசில் விட்டு விடுவானா? அதனால், எச்சரிக்கையாகக் காத்திருந்தது. காவலாளி அசையவில்லை. மெதுவாக குறட்டை விட்டான்.

அவன் நன்கு உறங்கிவிட்டதை உறுதி செய்த பின், ஒத்தினாற்போல் நடந்து அவனை கடந்து சென்றது.

"ம்ஹூம்... ம்ம்..." என்றான் காவலாளி தூக்கத்தில். அலறப் பார்த்தது சிங்கம்! ஆனால் செய்யவில்லை. பொறுமையாக, சத்தமின்றி காத்திருந்து, எல்லாம் பாதுகாப்பாய் உணர்ந்த பின், எப்படியோ வாயிலுக்கு வெளியே வந்து விட்டது. விடுதலை! நிஜமான விடுதலை, வாழ்க்கையில் முதன்முதலாய் அனுபவித்தது சிங்கம்!

கால் போன போக்கில் நடந்தது சிங்கம். பெரிய, கரிய, நீண்ட, ஈரமான சாலைகளையும், உயரமான மாடிக் கட்டடங்களையும் வியப்போடு பார்த்துக் கொண்டு நடந்தது. கிடைத்த வறண்ட மூலைகளில் ஒழுங்கற்று முடங்கி, உறக்கத்தில் இருந்தவர்களை முகர்ந்து பார்த்த வண்ணம் நகர்ந்தது.

ஒரு சிறுவன் மட்டும் தன் லேசான போர்வைக்குள்ளிருந்து எட்டிப் பார்த்து, "அப்பா! இங்கே பார், சிங்கம் வந்திருக்கு!" என கிசுகிசுத்தான்.

"ஆமாம்! ஆமாம்! அது போய்விடும்! நீ தூங்கு!" என்றார் அவன் அப்பா தூக்க கலக்கத்தோடு.

நடந்து போய்க் கொண்டே இருந்தது சிங்கம். தன் வாழ்வின் மிக நீண்ட நடைப்பயணம் இதுவாகத் தான் இருக்கும்.

இப்பொழுது, கடைத்தெருவுக்கு வந்து சேர்ந்திருந்தது. ஆம், எல்லோரும் தூங்கிக் கொண்டு இருந்தனர்.

பளபளப்பாக மின்னியவாறு கடைகளில் கண்ணாடிக்குள் பார்வைக்கு வைத்திருந்தவற்றை ஆசையோடு பார்த்துக் கொண்டு நடந்தது.

நடந்தது, நடந்தது. நடந்து போய்க் கொண்டே இருந்தது சிங்கம். நன்கு நனைந்து, களைப்பும், பசியும் வாட்டும் வரை நடந்தது. திடீரென்று, சுவை மிக்க பக்கோடாக்களின் வாசனை மூக்கைத் துளைத்தது.

இப்படி, "வா!வா! என்னை சாப்பிட!" என அழைக்கும் வண்ணம் இது வரை எதையும் முகர்ந்ததில்லை. வாசனையை பிடித்துக் கொண்டே நடந்தது. கீத்தி, விக்கியின் அறை ஜன்னல் திறந்து இருந்ததைக் கண்டது. உடனே, ஓசையின்றி உள்ளே குதித்தது. வெதுவெதுப்பான, மெத்தென்ற படுக்கைகளில் குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருந்தனர்.

அவர்களுடன் தானும் போர்வைக்குள் புகுந்து கொள்ளலாம் போல் இருந்தது. ஆனாலும், முதலில் வாசனை எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும் என முகர்ந்து கொண்டு சென்றது.

கூர்மையாக சுவை உணரும் மூக்கினால் பக்கோடாக்களை கண்டு பிடித்து விட்டது சிங்கம். தன் கூரான பற்களால், கரமுரவென மென்று வெகுவாக ரசித்து ருசித்து சாப்பிட்டது.

ஆஹா! என்ன அருமையான சுவை இவை! இத்தனை நாள் கிடைத்த நாற்றமெடுத்த பச்சை இறைச்சி போலல்ல! சிங்கத்திற்கு பக்கோடாக்கள் மிகவும் பிடித்திருந்தது. தட்டை சுத்தமாக நக்கி வைத்தது.

இப்போது தூங்கலாம் என குழந்தைகளின் அறைக்குள் வந்தது. விக்கியின் மெத்தையில் படுக்கலாம் என்றால் அது சிங்கத்திற்கு சின்னதாக இருந்தது. பின் கீத்தியின் படுக்கையில் இடம் தேடியது. அதுவும் சிறியதாக இருந்தது. கட்டிலுக்கடியில் ஊர்ந்து சென்றது. "ஆஹா! அருமையான இடம்! எனக்கு சரியாக உள்ளதே!"

என நினைத்து முடிக்கும் முன் தூக்கத்தில் ஆழ்ந்தது.

மறுநாள் காலையில் அம்மா எழுந்து வந்து பார்த்த போது பக்கோடாக்களைக் காணவில்லை!

"விக்கி! கீத்தி! இரவு நீங்கள் எல்லா பக்கோடாக்களையும் சாப்பிட்டீர்களா, என்ன?" "இல்லையே அம்மா!" என்றனர் பிள்ளைகள் இருவரும் ஒருசேர.

"நீங்களாகத் தான் இருக்கும். பொய் சொல்லாதீர்கள்! வேறு யார் சாப்பிட்டிருக்க முடியும்?" என்றாள் அம்மா. "ஓ! சிங்கம் தான் சாப்பிட்டிருக்க வேண்டும் அம்மா!"

"என்ன சிங்கம்! ஏது சிங்கம்! உளறாதே!"

"அவள் உளறவில்லை அம்மா" என்றான் விக்கி.

"சிங்கம் எங்கள் கட்டிலுக்கு அடியில் உள்ளது."

"என்ன!?" என்றாள் சப்தமாக அம்மா.

உடனே ஓடிப்போய் குழந்தைகளின் கட்டிலுக்கடியில் பார்த்தாள். சுற்றும் பார்த்தாள். சிங்கம் அங்கே இல்லை.

"ஏ! குட்டிகளா! என்னை எப்படி பயமுறுத்தி விட்டீர்கள்! சிங்கம் ஏதும் இல்லை இங்கே!" என்றாள் புருவங்களை நெறித்த படி.

"ஆனால் அங்கே இருந்தது அம்மா" பிடிவாதமாக

சொன்னார்கள் பிள்ளைகள்.

"இங்கே பார் அம்மா! தரை விரிப்பின் மேல்

சிங்கத்தின் கால் தடங்கள்!"

"என் படுக்கையில் பெரிய இடம் ஈரமாக

உள்ளது, பாருங்கள்!"

"இங்கே பாருங்கள்! சிங்கத்தின் முடி

என் போர்வையில்!"

வேறு வழியின்றி அம்மா குழந்தைகள் சொல்வதை நம்பித்தான் ஆக வேண்டியிருந்தது. ஆனால், எவ்வளவு தேடியும் சிங்கத்தைக் காணவில்லை. ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? சற்று நேரம் கண்ணயர்ந்த சிங்கம், குழப்பம் ஏற்படும் முன் தன்னிடம் சேரலாம் என சென்று விட்டது.

விடியற்காலையில், யார் கண்ணிலும் படாமல் வந்துவிட்டது. ஆனால், வழியில் முன்னர் பார்த்த அதே சிறுவன் சிங்கத்தைப் பார்த்தான்.

எழுந்து உட்கார்ந்தான். "நீ இரவு உலா போய் வந்ததை, நான் யார் கிட்டேயும் சொல்ல மாட்டேன்! பெரியவர்கள் குழந்தைகள் சொல்வதை நம்புவதேயில்லை!" என, அதன் மூக்கை தன் பிஞ்சு விரல்களால் தட்டிக் கொடுத்தான்.

கிழ சிங்கம், உறக்கத்திலிருந்த காவலாளியைக் கடந்து, நீந்தி ‘வாடி’க்குள் வந்தது. அடேயப்பா! என்ன ஒரு சாகசம்! ஆனாலும், தன் இடம் வந்து சேர்ந்ததில் மகிழ்வடைந்தது.

மழை ஓய்ந்ததும், கீத்தியும், விக்கியும் மிருகக்காட்சி சாலைக்கு சென்றனர்.  ‘சிங்க வாடி’க்கு வந்ததும் இருவரும் கிசுகிசுத்துக் கொண்டனர்.

சிங்கமோ மிகப் பெரிதாக ஆர்ப்பரித்து கர்ஜனை செய்தது. தன் குட்டி நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டது போலும்!

இக்கதை ஓரளவு நிஜக்கதை தான். ஒருமுறை இராஜஸ்தானிலுள்ள ஜெய்பூரில் பெருமழை பெய்தது. மிருகக்காட்சி சாலையில் இருந்த சிங்கத்தின் அகழி நிரம்பி வழிந்ததில் சிங்கம் நீந்தி வெளியே வந்து விட்டிருந்தது.

மிருகக்காட்சி சாலை முழுவதும் நனைந்த படியே சுற்றித் திரிந்து விட்டு, நுழைவுச்சீட்டு சாவடிக்குள் போய் உட்கார்ந்து கொண்டது. பிறகு பிடித்துக் கொண்டு போய் அதன் வாடியில் அடைத்தனர். அதனால் தான் நான், இக்கதையில் வரும் சிங்கத்தை ஒரு சிறந்த சாகசத்தை செய்ய விட்டேன்!

(உண்மையில், சில குட்டி தலைகளும் நீந்தி வேலிக்கு வெளியே வந்து விட்டிருந்தன.

ஆனால் அது இன்னொரு கதை, வேறு ஒரு நாளைக்கு!)