sirattai suppamma

சிரட்டை சுப்பம்மா

சுப்பம்மா, வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் வீணாக்காதே என்று அம்மா திட்டுகிறார். வீணாகும் பொருட்களை பயனுள்ளவையாக ஆக்கலாம் என்று பள்ளிக்கு வந்த பயிற்சியாளர் சொல்கிறார்! சுட்டிப்பெண் சுப்பம்மா, சிரட்டை சுப்பம்மாவாக ஆன கதையைப் படிக்கலாம் வாருங்கள்.

- Saalai Selvam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுப்பம்மா ஒரு சுட்டிப்பெண்.

எதையாவது கழட்டி மாட்டுவாள். தெருக்களில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடப்பாள். கீழே கிடக்கும் பொருட்களை எடுத்துப் பார்த்து யோசிப்பாள். ஆணியோ திருப்புளியோ வைத்து காய்கறியில் எதையாவது செய்வாள்.

செடிகொடிகள், மரங்களைச் சுற்றித் திரிவாள். “காம்பில் பூ எப்படி உட்கார்ந்துள்ளது?” என்பதையெல்லாம் ஆராய்ச்சியாளர் போல் பார்ப்பாள்.

படிக்காததற்காக, எதையாவது உடைத்ததற்காக திட்டு வாங்குவாள்.

அப்பொழுது சுப்பம்மா, மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். எல்லோரும் ஒரு வீடு செய்து எடுத்து வரவேண்டுமென ஆசிரியர் கூறினார்.

அதற்காக மரத்தடிகளில் கிடக்கும் காய்ந்த குச்சிகள், காம்புகள் மற்றும் மரப்பிசினை சேகரித்தாள். அட்டையைத் தேடி எடுத்துவந்தாள். வீட்டைத் தரையில் வரைந்து பார்த்தாள். நடுநடுவே ஓடிப்போய் வீட்டுக் கூரையையும் படல் வேலியையும் பார்த்தாள்.வீட்டை செய்து, கலைத்து, மறுபடியும் செய்தாள்.

கடைசியில் வீட்டை உருவாக்கிவிட்டாள். குச்சிகளை அடுக்கி செய்யப்பட்ட அந்த வீட்டில் ஜன்னல் இருந்தது. சில இடங்களில் மண்ணால் பூசப்பட்டிருந்தது. முகத்தில் மகிழ்ச்சி பொங்க, பத்திரமாக அதைத் தெருவில் தூக்கிச் சென்றாள்.

வீடு செய்து கொண்டுவந்த மாணவர்கள் ஆசிரியரிடம் காட்டுவதற்காக, சார் சார் என்று முந்தியடித்துச் சென்றனர். சுப்பம்மா தனது வீடு உடையாமல் இருப்பதற்காக பின்னால் நின்று கொண்டிருந்தாள்.

“சார், சுப்பம்மா வீட்டில் சன்னல் இருக்கு. வேப்ப ஈக்கு, பனை ஓலை வச்சி செய்திருக்கு. பாருங்களேன்” என்றான் மணி.

ஆசிரியர் அதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். “யார் செஞ்சது, சுப்பம்மா?” என்று கேட்டார்.

“நானேதான் சார் செஞ்சேன்” என்றாள் சுப்பம்மா.

“எப்படிச் செய்தாய்?” என்று கேட்டார் சார்.

சுப்பம்மா கையைக் கட்டிக்கொண்டாள்.

“அது சார், வேப்ப மரத்துக்குப் போனனா? ஈக்கு, சுள்ளி பொறுக்கினேன். அப்புறம் ஆல இலை பொறுக்கினேன்.”

“இதில் ஆல இலை இல்லையே!” என்றார் சார்.

“அதான் சார்! பறிச்சேன், ஆனா வைக்கலை...”

“ரொம்ப நல்லாருக்கு. இது மாதிரி இன்னும் நிறைய செய்” என்று பாராட்டி அனுப்பிவிட்டார்.

ஆசிரியரின் பாராட்டு சுப்பம்மாவுக்குப் பெருமையாக இருந்தது. பிள்ளைகள் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

ஒரு நாள் வழக்கம்போல் எதையோ நோண்டிக்கொண்டிருந்தாள் சுப்பம்மா.

கேரட்டை வட்டமாக வெட்டி சக்கரமாக்கி, அதை குச்சியில் கோர்த்து ஓடவிட்டாள். அதைப் பார்த்த சுப்பம்மாவின் அம்மா, அவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டு திட்டினார். அப்படி அம்மா திட்டும்பொழுது அழுகையும் கோவமுமாக வரும்.

ஆனால் கோவத்தோடு போய் மீண்டும் எதையாவது செய்வாள்.

சுப்பம்மா எட்டாம் வகுப்பு வந்துவிட்டாள்.

ஒருநாள், வீணாகும் பொருட்களைக் கொண்டு புதிய பொருட்கள் செய்யும் பயிற்சி பள்ளியில் நடந்தது.

பயன்படுத்திய ஸ்ட்ரா, பேப்பர் கப், துணி, சிரட்டை போன்றவற்றை ஆசிரியர் எடுத்துவரச் சொல்லியிருந்தார். அவற்றைக் கொண்டு பயிற்சியாளர் தாத்தா புதிய பொருட்கள் செய்யக் கற்றுக் கொடுத்தார்.

சுப்பம்மா அவர் பக்கத்தில் நின்று, அவருக்கு உதவினாள். எல்லா பொருட்களையும் தொட்டுப்பார்த்தாள். உற்றுப் பார்த்தாள். திருப்புளி, கோணி ஊசி... என்று சொல்லிப் பார்த்தாள்.

வீட்டிற்குச் சென்ற சுப்பம்மா குட்டிக் குருவி பொம்மை, வீட்டிற்குப் பயன்படும் அகப்பை... எல்லாம் செய்தாள். பயிற்சியாளர் தாத்தா செய்தது போல பக்குவமாக வரும்வரை செய்து பார்த்தாள். ஆனால் அம்மாவின் திட்டு மட்டும் குறையவில்லை. “படி படி” என்று அடிக்கடி சொல்வார்.

சுப்பம்மா தைரியமாக “இது பள்ளி வேலை” என்று சொல்லிவிட்டுச் செய்வாள்.

தான் செய்யும் பொருட்களைப் பள்ளிக்கு எடுத்துச் செல்வாள். பள்ளியில் சொல்லிக் கொடுத்ததால் அதுவும் பாடம்தானே! இப்பொழுதெல்லாம் அடிக்கடி எதையாவது செய்யத் தொடங்கினாள்.

ஒருநாள், பக்கத்து வீட்டு அக்காவிடம் “அக்கா சிரட்டை வேணும்” என்றாள். “வீண்வேலை செய்யாமல், படி சுப்பம்மா” என்றார் அக்கா. “எந்தப் பொருளையும் தூக்கி எறியாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்தணும் என்றுதான் சொல்லிக் கொடுத்துள்ளார்கள்” என்றாள்.

வாங்கிக்கொண்டு போன வேகத்தில் கொட்டாங்கச்சியைத் தேய்த்து வழவழப்பாக்கினாள். அதைக் கப் போன்று ஆக்கினாள். “நீதான் இனிமேல் என் கப்” என்று அதனிடம் பேசினாள். அன்று மாலை அதில்தான் காப்பி குடித்தாள்.

அன்று அவளுக்கு மூன்று கொட்டாங்கச்சிகள் கிடைத்தன. குடுமியோடு இருந்த மூடியைக் கொண்டு குடுமி வைத்த தாத்தா செய்தாள். உடைந்த தேங்காய் ஓட்டை சில்லாக்கி நொண்டி விளையாடப் பயன்படுத்தினாள். ஆனால் அது சரிவரவில்லை. இன்னொரு சிரட்டையில் உள்ள மூன்று கண்களைத் திறந்து ஒவ்வொன்றின் வழியாகவும் பார்த்தாள்.

தச்சர் தாத்தாவின் வீட்டிற்குப் போனாள். தாத்தாவுடன் பேசினாள். குர்ர்ர்ர்ர் என்ற சத்தத்துடன் அவர் ஓட்டை போடுவதை கவனித்தாள். அவர் வைத்திருக்கும் பொருட்களை எல்லாம் கவனித்துக்கொண்டே, அவருக்கு உதவினாள். சிரட்டையை அறுக்கவும், வெட்டவும் முடிந்தது. அறுத்ததை ஒட்ட முடிந்தது.

சுப்பம்மா கொட்டாங்கச்சியில் குருவியும் இறக்கைகளும் வரைந்தாள். அவற்றை வெட்டி எடுத்து ஒன்றாக ஒட்டினாள்.

அவள் முகம் மலர்ந்தது.

சுப்பம்மா பத்தாம் வகுப்பு பெயில். அம்மாவும் ஆசிரியரும் திட்டினார்கள். அவள், இனி எப்பொழுதும் பொருட்கள் செய்யலாம் என மகிழ்ந்தாள். ஆனால், வெளிக்காட்டிக் கொள்ளாமல் சோகமாக இருப்பதுபோல் அமைதியாக இருந்தாள்.

தூக்கி எறியப்படும் தேங்காய் ஓடுகளை சேகரித்தாள். அவற்றை வைத்து எதையாவது செய்யலாம் என்று முடிவெடுத்தாள். அதற்கு காசு தேவையில்லையே!

சிரட்டையில் உள்ள முடிகளை அகற்ற சொர சொர பேப்பர் கிடைத்தது. அவள் செய்த குட்டி வீட்டுக்கு, சிரட்டை ஓடுபோல் ஆனது. வண்ணம் பூச ப்ரஷ்ஷும், ஓட்டை போட ஊசியும் கிடைத்தன. அந்த வீட்டை ரசிக்க பிள்ளைகள் வந்தனர்.

சிரட்டையில் இன்னும் என்ன செய்யலாம்? வளையல் செய்து மாட்டிக்கொண்டாள்.

குட்டி சிரட்டையில் யானையும் மீனும் செய்து காட்டினாள். தேங்காய் போன்ற நகை டப்பா பரிசுப்பொருள் ஆனது.

அகப்பைக் கரண்டி போல் துறட்டி ரெடி. சிரட்டை ஓடு பொம்மையின் தலை ஆனது.

பிள்ளைகள் ஓட்டுக்கப்பில் காப்பி குடித்தனர்.

சிரட்டைக் கிண்ணத்தில் முறுக்கு வைத்து சாப்பிடுவது, பெருமையானது.

சிரட்டை, சட்டையின் பொத்தானாய் ஆனது. இவையெல்லாம் வீண் வேலையா என்ன?

கொட்டாங்கச்சிப் பொருட்கள் செய்யக் கற்றுக்கொள்ள குழந்தைகள் வந்தனர். “பள்ளிக்கூடமா இது?” என்று வியந்தனர் பலர்.

“வரும்பொழுது சிரட்டை கொண்டு வர வேண்டும்” என்றாள் சுப்பம்மா.

சிரட்டையை உற்றுப்பார்.

சிரட்டையை இப்படிப் பிடி!

தேய்! வழவழப்பாக்கு!

சிரட்டையின் மேல் மீன் வரை!

நாளை வரும்போது குதிரை வரைந்து கொண்டு வா!

பள்ளிகளில் கைவினை வகுப்புகள் நடத்த சுப்பம்மாவை அழைத்தார்கள். சிரட்டையில் தோடு, டாலர், வளையல், மாலை, கப், சாமி சிலை... என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் செய்தாள். இல்லை உருவாக்கினாள். இல்லை இல்லை, கண்டுபிடித்தாள். எல்லாவற்றுக்கும் சிரட்டைதான் மூலதனம்.

ஒருநாள் தான் செய்யும் பொம்மைகளை விற்றால் என்ன என்று யோசித்த சுப்பம்மா, பாண்டிச்சேரி கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் பங்கேற்கலாம் என்று முடிவெடுத்தாள்.

“அந்த புறாத்தோடு எவ்வளவு?”

“75 ரூபாய்” என்றார் சுப்பம்மாவின் அம்மா. ஆமாம், அம்மாவேதான்!

“புத்தர் சிலையா அது?”

“ஆமாம். தொட்டுப்பாருங்கள்”

சுப்பம்மாவின் வீடே கடை ஆனது.

சுப்பம்மா, சிரட்டை சுப்பம்மாவானாள்!