sirippai adakkave mudiyaatha sirumi

சிரிப்பை அடக்கவே முடியாத சிறுமி

டி. சுந்தரி தினமும் ஏதாவ‍து பிரச்சினையில் மாட்டிக்கொள்வாள். ஏனென்றால், பல விஷயங்கள் அவளுக்கு சிரிப்பு மூட்டின. அவளால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது. தன்னிடம் ஏதாவது குறை இருக்கிறதா, இல்லை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாமா? தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாள் டி. சுந்தரி.

- Priya Muthukumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்வ்வ்வ்வ்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ஹாஹாஹாஹா

ஒரு வெடிச் சிரிப்பினால் 4-பி வகுப்பே அதிர்ந்தது.

கணித ஆசிரியரான குண்டப்பன் வாத்தியாருக்கு எங்கு வெடி வெடித்தது என்று நன்றாகத் தெரிந்திருந்தது.

“டி. சுந்தரி! வகுப்பை விட்டு வெளியே செல்” என்றார்.

வகுப்பறையே அமைதியானது. அனைவரும் ஐந்தாம் வரிசையில் அமர்ந்திருந்த டி. சுந்தரியைத் திரும்பிப் பார்த்தனர்.

“ஐயா! என்னால் முடிந்தவரை சிரிப்பை அடக்கப் பார்த்தேன். ஆனால், குபுக்கென்று வந்துவிட்டது!”

4-பி வகுப்பில் இருந்த அனைவரும் குபுக்கென்று சிரித்தனர்.

டி. சுந்தரி நிறைய சிரித்தாள்.

அவள் எதற்கெடுத்தாலும் சிரித்து விடுவாள்.

உதாரணத்துக்கு, போன வாரம் டி. சுந்தரியிடம் சக மாணவன் ஒருவன் இந்த ஜோக்கை சொன்னான்:குண்டப்பன் வாத்தியார் தன் மாணவனைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்டார்: ஏன் தரையில் உட்கார்ந்து கணக்குப் போட்டுக்கொண்டு இருக்கிறாய்? நீங்கள்தானே சொன்னீர்கள் ஐயா, டேபிள் உபயோகிக்காமல் கணக்குப் போடு என்று! டி. சுந்தரி கண்களைச் சுருக்கி இளிக்க ஆரம்பித்துவிட்டாள். அதிலிருந்து அனைவரும் குண்டப்பன் வாத்தியார் கணக்கு போடச் சொன்னாலே சிரிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

ஒவ்வொரு வேடிக்கையான ஜோக்கும் டி. சுந்தரியிடமிருந்து வெவ்வேறு எதிர்விளைவுகளைக் கொண்டு வந்தன.

சில நேரங்களில் மெலிதாக சிரித்தாள் ட்ர லா லா ஹா ஹா

சில நேரங்களில் இளித்தாள் ப்ப்ஹிஹிஹிஹி

சில நேரங்களில் சத்தமாக சிரித்தாள் ஆஹாஹாஹாஹா

சில நேரங்களில் கடோத்கஜனைப்* போல சிரித்தாள் ம்ம்முஹாஹாஹாஹாஹா

*மகாபாரதம் எனும் இதிகாசக் கதையில் வரும் கடோத்கஜன், சத்தமாக நடுங்கவைக்கும்படி சிரிக்கும் ஒரு சக்திவாய்ந்த அசுரன்.

சில நேரங்களில், டி. சுந்தரி தன்னுடைய சிரிப்பை அடக்க முயலும்போது டமால் என்று வெடிகுண்டு வெடிப்பதுபோல சிரித்துவிடுவாள்!

ம்ம்ம்ம் ப்ப்ப்ர்ர்ரட்ட்ர்ர்ர்ர் ஆஹாஹா ஹஹ்ஹஹ்ஹ ஹாஹாஹாஹா

டி. சுந்தரி கவலைப்பட்டாள்! தன்னிடம் ஏதாவது குறை இருக்கிறதா? தன்னால் ஏன் சிரிப்பை நிறுத்த முடிவதில்லை? ஏதாவது செய்தே ஆகவேண்டும்.

வாயில் கைக்குட்டையை அடைத்துக்கொள்வதினால் எந்தப் பயனுமில்லை. சிரிக்கும்போது அது வெளியே வந்து விழுந்துவிடுகிறது!

டி. சுந்தரி தனக்கு சிரிப்பு மூட்டும் சில விஷயங்களைப் பட்டியலிட்டாள்.

5. கிச்சுக்கிச்சு

3. போண்டா என்கிற வார்த்தை

4. வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுபவர்கள்

2. கழிப்பறை ஜோக்குகள்

1. குசு

“கண்டிப்பாக நான் இவற்றால் இனிமேல் சிரிக்கவே மாட்டேன்” என முடிவெடுத்தாள் டி. சுந்தரி.

அடுத்த நாள் நூலகத்தில் பி. மணிகண்டன், டி. சுந்தரிக்கு அருகிலிருந்த புத்தக அலமாரிக்குப் பின்னால் சென்று மெதுவாக குசு விட்டான்.

அது என்ன சத்தம் என்று டி. சுந்தரிக்கு உடனே தெரிந்துவிட்டது. தன்னுடைய பட்டியலை மறந்துவிட்டு குபுக்கென்று சிரித்துவிட்டாள்!

இது சரிப்படாது. தன்னுடைய இரண்டாவது திட்டத்திற்குத் தயாரானாள், டி. சுந்தரி.

புபுட் புபுட் புபுட்ர்ர்ர்ர்ர்ர்

இரண்டாவது திட்டம், அவளுடைய அண்ணனும் விஞ்ஞானியுமான ஸ்கந்து அண்ணாதான்.

தன்னுடைய சிரிப்பை நிறுத்தக்கூடிய இயந்திரத்தை அவரால் கண்டுபிடிக்கமுடியுமா?

அமைதியான சுபாவம் கொண்ட ஸ்கந்து அண்ணா, டி. சுந்தரி தன்னுடைய கவலையைச் சொன்னதும் குபீரென்று சத்தமாகச் சிரித்தார்.

இது தன் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் உள்ள குறையோ? எல்லோருக்கும் இந்த சிரிப்பு வியாதி இருக்கிறதோ? என யோசித்தாள் டி. சுந்தரி.

அப்படி இல்லை என்று விளக்கினார், ஸ்கந்து அண்ணா.

“சுந்தரி, வேடிக்கையானவற்றுக்கு சிரிப்பது மனித இயல்பு. சிலர் மற்றவர்களைவிட அதிகமாக சிரிப்பார்கள். அதில் தவறு ஏதும் இல்லை.”

“உண்மையாகவா?” என்று கேட்டாள் டி. சுந்தரி. அவள்தான் நிறைய சிரிக்கிறாள் என்றே எல்லோரும் சொல்லியிருக்கின்றனர்.

“சிரிப்பது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மகிழ்ச்சி அளித்திடும் வேதிப்பொருட்களை வெளியிட உதவுகிறது” என்று ஆறுதலாகச் சொன்னார் ஸ்கந்து அண்ணா.

‘’பழங்கால மனிதர்கள்கூட சிரித்திருக்கிறார்கள், தெரியுமா?” என்று கேட்டார் அண்ணா.

டி. சுந்தரி அதிர்ச்சியடைந்தாள். பெரிய தாடியும் தடியும் கொண்ட ஒரு மனிதன், ஓவிய வகுப்பில் தான் இளிப்பதைப் போல இளிப்பதாகக் கற்பனை செய்து பார்த்தாள்.

“ஆமாம்” என்றார் அண்ணா. “நம்முடைய முன்னோர்கள் மொழிகள் தோன்றுவதற்கு முன்னரே சிரிக்க ஆரம்பித்து விட்டனர். சிரிப்பதன் மூலம், எல்லாம் நன்றாக இருக்கிறதென ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொண்டனர்.”

“இன்று நாம் சிரிப்பதன் மூலம் மற்றவர்களைப் பிடித்திருக்கிறது எனத் தெரிவிக்கிறோம், நம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம். விலங்குகளாலும் சிரிக்க முடியும், சுந்தரி.

“சிம்பன்சிகள், பொனோபோக்கள், எலிகள், டால்பின்கள்… நாய்களால்கூட சிரிக்க முடியும்” என்றார் அண்ணா.

தன்னுடைய செல்ல நாய் முத்து சிரிப்பதைக் கற்பனை செய்து மீண்டும் சிரிக்கத் தொடங்கினாள், டி. சுந்தரி.

டி. சுந்தரியின் சிரிப்பு அடங்கியபின் அண்ணா சொன்னார், “சுந்தரி! தெரியுமா உனக்கு, நீ இப்போது உடற்பயிற்சி செய்திருக்கிறாய்!”

“அதெப்படி அண்ணா? நாம் பேசிக்கொண்டுதானே இருந்தோம்!”

“நீ கொஞ்சமாக புன்னகைக்கும்போதுகூட, உன் முகத்திலுள்ள தசைகள் வேலை செய்கின்றன. அதனால், நீ சத்தமாகவோ குலுங்கிக் குலுங்கியோ சிரிக்கும் ஒவ்வொரு முறையும் அது உன் முகத்திற்கு உடற்பயிற்சியாக அமைந்துவிடுகிறது” என்று சொன்னார் அண்ணா.

“ஓ... அப்படியானால் என் கன்னங்களிலும் தசைக்கட்டுகள் வந்துவிடுமோ?” என்று கேட்டாள் டி. சுந்தரி.

“இல்லை...இல்லை! தசைக்கட்டுகள் எல்லாம் கைகளில்தான் வரும். ஆனால் நீ சிரிக்கும் போதெல்லாம் சைகோமாட்டிக்கஸ் மேஜர்(Zygomaticus Major) மற்றும் மைனர்(Minor) எனப்படும் தசைகள் உன்னுடைய முகத்தை முன்னும் பின்னுமாக இழுத்து, சிரிக்கும் முகபாவத்தை உண்டாக்குகின்றன” என்று புன்னகையுடன் விளக்கினார் அண்ணா.

“ஆனால், சத்தம் எப்படி வருகிறது? அது மற்றவர்களையும் சிரிக்கத் துாண்டுகிறது!” என்று கூறினாள் டி. சுந்தரி.

“நீ சுவாசிக்கும்போது நுரையீரலுக்கு குரல்நாண்கள் வழியாகக் காற்று செல்கிறது. ஆனால் சிரிக்கும்போது, காற்று சற்றே நிறுத்தப்படுகிறது. அதனால்தான் நிறுத்துவதற்குக் கடினமான, சீரான ‘ஹ-ஹ-ஹ’ சத்தம் எழுகிறது!” என்று விவரித்தார் அண்ணா.

“அதனால், சிரிப்பது மிகவும் இயல்பானதென்று இப்போது புரிகிறதா, சுந்தரி? யாருடைய மனதையும் புண்படுத்தாத வரையில், நன்றாக சிரிப்பதில் தவறேதுமில்லை!”

டி. சுந்தரிக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.

அடுத்து என்ன நடக்கும் என்பதை நன்றாகத் தெரிந்தே ஸ்கந்து அண்ணா கேட்டார், “தேநீர் நேரம் ஆகிவிட்டது, ஒரு போண்டா சாப்பிடலாமா?”

டி. சுந்தரியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிற்றுக்குள் போண்டா சென்ற பிறகும் சிரித்துக் கொண்டிருந்தாள்.

உங்களால் இப்படியெல்லாம் சிரிக்க முடியுமா?

கொப்பளித்தல்- கலுக்கலுக்கலுக்லாஹாஹாஹா

வெடிச் சிரிப்பு- ம்ம்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்ஹ்ட்ட்டாஆஆஆஹாஹாஹாஹா

மேற்கு மதனப்பள்ளி மந்திரக்காரி- ஈஈ ஹீ ஹீ ஹீஹீ ஹீஹீ

கடோத்கஜன்- ம்ம்முமு ஹா ஹா ஹா ஹா

இளிப்பு- கீஹீஹீஹீஹீ

போலிச் சிரிப்பு - டீஹீஹீஹீஹீ