siriya vidhai wangari maathayin kadhai

சிறிய விதை: வங்காரி மாத்தாயின் கதை

கென்ய மலை அடிவாரத்தில் இருந்த ஒரு சிறிய கிராமத்தில், ஒரு சிறுமி அவள் அம்மாவுடன் வேலை செய்து வந்தாள். காடுகள் அழிவதை நினைத்து வருந்தினாள். ஆனாலும் ஒரு சிறிய விதையின் சக்தியை அவள் உணர்ந்து இருந்தாள்.

- Rajarajan Radhakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

கிழக்கு ஆப்ரிக்காவின் கென்யா மலையின் அருகே ஒரு கிராமத்தில், ஒரு சிறுமி அவளுடைய அம்மாவுடன் வயல் வெளியில் வேலை செய்து கொண்டு இருந்தாள்.

அவள் பெயர் வங்காரி.

வங்காரி வெளியே இருப்பதை நேசித்தாள். அவள் தோட்டத்தில் தன்னுடைய மண்வெட்டியை கொண்டு மண்ணை நன்றாக வெட்டி எடுத்தாள்.

பிறகு சிறிய விதைகளை மண்ணில் புதைத்தாள்.

மாலை நேரமே அவளுக்கு மிகவும் பிடித்த நேரம். தாவரங்களை பார்க்க வெளிச்சம் போதாதபோது, தான் வீடு செல்லும் நேரம் ஆகிவிட்டது என்று வங்காரிக்கு தெரியும்.

வயல்கள் நடுவே குறுகலான பாதைகள் வழியே, சில ஆறுகளைக் கடந்து அவள் செல்வாள்.

வங்காரி ஒரு புத்திசாலியான  சிறுமி. பள்ளிக்குப் போய் படிக்க ஆர்வமாக இருந்தாள். ஆனால் அவளுடைய பெற்றோர்கள், அவள் வீட்டில் இருந்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று சொன்னார்கள்.

அவளுக்கு ஏழு வயது ஆனவுடன், வங்காரியின் அண்ணன் அவள் பள்ளிக்கு சென்று படிக்க பெற்றோரிடம் கெஞ்சி அனுமதி வாங்கி விட்டான்.

வங்காரிக்கு படிக்கப் பிடித்தது. ஒவ்வொரு புத்தகத்திலும் புதிதாக நிறைய கற்றுக் கொண்டாள்.

அவள் அருமையாக படித்ததால் அவளுக்கு அமெரிக்கா சென்று படிக்க வாய்ப்பு கிடைத்தது.

வங்காரிக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. உலகத்தைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தாள்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் வங்காரி புதிதாக நிறைய கற்றுக் கொண்டாள். செடிகளைப் பற்றியும் அவை எப்படி வளர்கின்றன என்றும் தெரிந்து கொண்டாள்.

அவை எப்படி வளரும் என்பதும் அவளுக்கு ஞாபகம் இருந்தது. அவள் அண்ணன்களுடன் அழகான கென்யா காடுகளின் மரநிழல்களில் விளையாண்டது.

அவள் அதிகமாக படிக்கப் படிக்க, அவள் கென்யா மக்களை எவ்வளவு நேசிக்கிறாள் என்பதை உணர ஆரம்பித்தாள். அவர்கள் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க ஆசைப்பட்டாள்.

எவ்வளவு கற்றுக் கொண்டாளோ, அவ்வளவு அவளுடைய ஆப்ரிக்க வீட்டை ஞாபகப்படுத்தியது.

அவளுடைய படிப்பு முடிந்தவுடன் வங்காரி கென்யா திரும்பினாள். ஆனால் அவளுடைய நாடு மாறி இருந்தது.

நிலம் எங்கும் நீண்ட வயல்கள் உருவாகி இருந்தன.

தீ மூட்டி சமைப்பதற்கு தேவையான காய்ந்த மரக்கட்டைகள் பெண்களுக்கு கிடைக்கவில்லை.

மக்கள் ஏழ்மையுடனும், குழந்தைகள் பசியுடனும்  வாடினர்.

வங்காரிக்கு என்ன செய்ய வேண்டும் என்று புரிந்தது. பெண்களுக்கு விதையில் இருந்து மரங்கள் வளர்ப்பது எப்படி என்று சொல்லி கொடுக்க ஆரம்பித்தார்.

அந்த மரத்தின் விறகுகளை விற்று பெண்கள் பணம் சம்பாதித்து தங்கள் குடும்பங்களைப் பார்த்துக் கொண்டனர்.

பெண்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தனர். வங்காரி அவர்களை வலிமையாகவும், சுயமாக சம்பாதிக்கும் பெண்களாகவும் மாற்றி இருந்தார்.

நாட்கள் நகர நகர, புதிய மரங்கள் பெரிய காடுகளாக உருமாறின. ஆறுகள் மீண்டும் காட்டினுள் ஓட ஆரம்பித்தன.

வங்காரி பற்றிய செய்தி ஆப்ரிக்கா முழுதும் பரவியது.

இன்று லட்சக்கணக்கான் மரங்கள் வங்காரி விதைத்த விதைகளில் இருந்து முளைத்துள்ளன.

வங்காரி மக்களுக்காக கடினமாக உழைத்தவர். உலகம் இதை உற்று நோக்கியது.

அமைதிக்கான உயரிய விருதான நோபல் விருதை அவருக்கு அளித்தது. அவர் இந்த விருதைப் பெற்ற முதல் ஆப்ரிக்கப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.

வங்காரி 2011ல்  மரணம் அடைந்தார். ஆனால் ஒவ்வொரு அழகான மரமும் அவரை நமக்கு நினைவுபடுத்தும்.