Sivagamiyin Sapatham (Muthal Paagam - Paranjothiyin Yathirai)

சிவகாமியின் சபதம் (முதல் பாகம் - பரஞ்சோதி யாத்திரை)

இப்புதினத்தின் கதையானது காஞ்சியில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாகச் சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கியதாகும். இக்கதையின் தலைவன் யாரென்பதைச் சுட்டிக் காட்டுவது இயலாத காரியமாகும். முதல் பகுதியில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மனே நாயகனைப் போன்று தோன்றினும் பிற்பகுதியில் அவரது மகன் நரசிம்ம பல்லவர் கதையை ஆதிக்கம் செலுத்துகிறார். கதையில் பல்லவ மற்றும் சாளுக்கிய நாட்டின் வரலாறு அழகாக எடுத்தியம்பப்பட்டுள்ளது. இப்புதினம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது

- அமரர் கல்கி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

பிரயாணிகள்

இளவேனிற் காலத்தில் ஒருநாள் மாலை மகேந்திர தடாகத்தின் கரை வழியாகச் சென்ற இராஜபாட்டையில் பிரயாணிகள் இருவர் காஞ்சி மாநகரை நோக்கி நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் ஆறடி உயரத்துக்குமேல் வளர்ந்திருந்த ஆஜானுபாகு; காவி வஸ்திரம் தரித்த பௌத்த சந்நியாசி. கடுமையான தவ விரத அனுஷ்டானங்களினாலோ, வேறு கடினமான காரியங்களில் ஈடுபட்டதனாலோ, அந்தப் புத்த பிக்ஷுவின் தேகமானது வறண்டு கெட்டிப்பட்டுக் கடினமாகியிருந்தது. அவருடைய முகத் தோற்றமானது அன்பையோ, பக்தியையோ உண்டாக்குவதாயில்லை; ஒருவித அச்சத்தை ஊட்டுவதாயிருந்தது.

இன்னொரு பிரயாணி கட்டமைந்த தேகமும், களை பொருந்திய முகமும் உடைய பதினெட்டுப் பிராயத்து இளம் பிள்ளை.

பிரயாணிகள் இருவரும் வெகுதூரம் வழிநடந்து களைப்புற்றவர்களாகக் காணப்பட்டார்கள்.

"தலைநகரம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது?" என்று வாலிபன் கேட்டான்.

"அதோ!" என்று சந்நியாசி சுட்டிக் காட்டிய திக்கில், அடர்ந்த மரங்களுக்கு இடை இடையே மாட மாளிகைகளின் விமானங்கள் காணப்பட்டன. இளம் பிரயாணி சற்று நேரம் அந்தக் காட்சியை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர், புத்த பிக்ஷுவைப் பார்த்து, "இங்கிருந்து ஒரு நாழிகை தூரம் இருக்குமா?" என்று கேட்டான்.

"அவ்வளவுதான் இருக்கும்."

"அப்படியானால், நான் சற்று உட்கார்ந்து விட்டு வருகிறேன். அவசரமானால் தாங்கள் முன்னால் போகலாம்!" என்று சொல்லி, வாலிபன் கையிலிருந்த மூட்டையையும் தடியையும் பாதை ஓரமாகக் கீழே வைத்துவிட்டு, ஏரியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்தான்.

சந்நியாசியும் அவன் அருகில் மேற்குத் திசையைப் பார்த்து கொண்டு அமர்ந்தார்.

மேல் வானத்தின் அடிப்புறத்தில் தங்க நிறமான ஞாயிறு திருமாலின் சக்ராயுதத்தைப்போல் 'தகதக'வென்று சுழன்று கொண்டிருந்தது. அதன் செங்கிரணங்களினால் மேல் வானமெல்லாம் செக்கர் படர்ந்து, பயங்கரமான போரில் இரத்த வெள்ளம் ஓடிய யுத்தகளத்தைப்போல் காட்சியளித்தது. ஆங்காங்கே காணப்பட்ட சிறு மேகக் கூட்டங்கள் தீப்பிடித்து எரிவது போல் தோன்றின.

சூரியன் அஸ்தமித்துக்கொண்டிருந்த திசையில், மகேந்திர தடாகத்தின் பளிங்கு போலத் தெளிந்த நீர், உருக்கிய பொன்னைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

ஆனால், மேற்குத் திசையிலிருந்து சற்றுத் திரும்பி, அந்த விசாலமான ஏரியின் வடகரையை நோக்கினால் முற்றும் மாறான வேறொரு காட்சி காணப்பட்டது. அந்தக் கரையில் ஏரிக்குக் காவலாக நின்ற சிறு குன்றுகளின் மாலை நேரத்து நெடிய நிழல் ஏரியின் மேல் விஸ்தாரமாகப் படர்ந்திருந்தபடியால் ஏரி நீர் அங்கே கருநீலம் பெற்று விளங்கிற்று.

நிழல் படர்ந்த ஏரிக்கரை ஓரமாகச் சில இடங்களில் கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிறம் திட்டுத் திட்டாகத் திகழ்ந்தது. சிறிது கூர்ந்து கவனித்தால் அந்த இடங்களில் வெண் நாரைகள் ஒற்றைக் காலில் நின்று தவம் புரிகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். சில சமயம் திடீரென்று ஒரு வெண் நாரைக் கூட்டமானது ஜலக்கரையிலிருந்து கிளம்பி ஆகாசத்தில் மிதக்கத் தொடங்கும். ஆகா! அந்தக் காட்சியின் அழகை என்னவென்று சொல்வது? கீழே கருநிறத் தண்ணீர் பரப்பு; மேலே கரு நீல வானம்; பின்னால் கரும் பசுமை நிறக்குன்றுகள். இவற்றின் மத்தியில் அந்தத் தாவள்யமான நாரைக் கூட்டம் வானவெளியில் மிதந்து செல்வதுபோல் நெருக்கமாய்ப் பறந்து செல்லும் காட்சி யாருக்குமே மனக் கிளர்ச்சியை உண்டாக்கும். இறைவனுடைய லீலா வினோதங்களில் சிந்தை செலுத்தியவர்களோ மெய்ம்மறந்து பரவசமாகி விடுவார்கள்.

இவற்றையெல்லாம் சற்று நேரம் மௌனமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த வாலிபன், தனக்குத் தானே பேசிக் கொள்வது போல், "இந்தப் பிரம்மாண்டமான ஏரியை மகேந்திர தடாகம் என்று சொல்வது பொருத்தமில்லை; மகேந்திர சமுத்திரம் என்று தான் இதைச் சொல்ல வேண்டும்!" என்றான்.

சந்நியாசி ஏரியை நோக்கியவண்ணம், "இந்த மகேந்திர தடாகத்தில் இப்போது தண்ணீர் குறைந்து போயிருக்கிறது. ஐப்பசிக் கார்த்திகையில் மழை பெய்து ஏரி நிரம்பியிருக்கும் போது பார்த்தாயானால், பிரமித்துப் போவாய்! அப்போது நிஜ சமுத்திரம் போலவே இருக்கும்!" என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.

"புறப்பட்டு விட்டீர்களா, சுவாமி?" என்றான் வாலிபன்.

"ஆமாம், பரஞ்சோதி! என்னோடு வருவதற்குத் தான் உனக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறதே!" என்று சந்நியாசி கூறிவிட்டு நடக்கத் தொடங்கினார்.

பரஞ்சோதி என்ற அவ்வாலிபனும் மூட்டையையும் தடியையும் எடுத்துக்கொண்டு அவரைத் தொடர்ந்து நடக்கலானான்.

சாலையில் போவோர் வருவோர் கூட்டம் அதிகமாயிருந்தது. பிரயாணிகள் ஏறிய வண்டிகளும், நெல்லும் வைக்கோலும் ஏற்றிய வண்டிகளும் சாரி சாரியாய்ப் போய்க் கொண்டிருந்தன.

சாலைக்கு அப்புறத்தில் முதிர்ந்த கதிர்களையுடைய செந்நெல் வயல்கள் பரந்திருந்தன. கதிர்களின் பாரத்தினால் பயிர்கள் தலை சாய்ந்து விழுந்து கிடந்தன. ஆங்காங்கே சில வயல்களில் குடியானவர்கள் அறுவடையான கற்றைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். வயல்களிலிருந்து புது நெல், புது வைக்கோலின் நறுமணம், 'கம்'மென்று வந்து கொண்டிருந்தது.

சற்றுத் தூரம் போனதும் ஓர் அழகிய கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமத்தைத் தாண்டியதும் புதுநெல் மணத்துக்குப் பதிலாக மல்லிகை முல்லை மலர்களின் நறுமணம் சூழ்ந்தது. அந்த மணத்தை மூக்கினால் நுகர்வது மட்டுமின்றித் தேகம் முழுவதனாலும் ஸ்பரிசித்து அனுபவிக்கலாம் என்று தோன்றியது.

"ஆகா!" என்றான் வாலிபன்.

அவனுக்கெதிரே கண்ணுக்கெட்டிய தூரம் நந்தவனங்கள், மல்லிகை முல்லைப் புதர்களின்மீது வானத்து நட்சத்திரங்கள் வந்து படிந்ததுபோல் குண்டுமல்லிகைகளும் முத்து முல்லைகளும் 'கலீ'ரென்று பூத்துச் சிரித்துக்கொண்டிருந்தன.

இந்த வெண்மலர்ப் பரப்புக்கு இடை இடையே தங்க நிறச் செவ்வந்திப் பூக்களின் காடும் காணப்பட்டது.

"இவ்வளவு பூவையும் என்னதான் செய்வார்கள்?" என்று வாலிபன் கேட்டான்.

"இவற்றில் பாதி கோயில் தெய்வங்களுக்கு அர்ப்பணமாகும். மற்றப் பாதி காஞ்சி நகரத்துப் பெண் தெய்வங்களின் கூந்தலை அலங்கரிக்கும்...அதோ!" என்று சட்டென நின்றார் சந்நியாசி.

சர சரவென்று சாலையின் குறுக்கே ஒரு பாம்பு ஊர்ந்து சென்று நந்தவனத்துக்குள் புகுந்து மறைந்தது.

"இந்த மல்லிகை மணத்துக்குப் பாம்புகள் எங்கே என்று காத்திருக்கும்!" என்றார் சந்நியாசி.

பாம்பு மறைந்ததும் இருவரும் மேலே சென்றார்கள். சற்று நேரம் மௌனம் குடிகொண்டிருந்தது.

பரஞ்சோதி 'களுக்'கென்று சிரித்தான்.

"எதை நினைத்துச் சிரிக்கிறாய்?" என்றார் சந்நியாசி.

பரஞ்சோதி சற்று நேரம் பேசாமல் இருந்துவிட்டு, "இல்லை, அடிகளே! மத்தியானம் அந்தச் சர்ப்பத்தைக் கொன்று என்னைக் காப்பாற்றினீர்களே? நீங்கள் புத்த பிக்ஷுவாயிற்றே? ஜீவஹத்தி செய்யலாமா என்று நினைத்துச் சிரித்தேன்!" என்றான்.

"தன்னை கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம் அல்லவா?" என்றார் புத்த பிக்ஷு.

"ஆனால் பாம்பு தங்களைக் கொல்ல வரவில்லையே? என்னைத் தானே கொல்ல வந்தது?" என்றான் பரஞ்சோதி ஏளனமான குரலில்.

"என் சிஷ்யனை நான் காப்பாற்ற வேண்டாமா?" என்றார் பிக்ஷு.

"சிஷ்யனா? யாரைச் சொன்னீர்கள்?"

"ஆமாம், நீ என் உயிரை ஒரு சமயம் காப்பாற்றினாய், அதற்குப் பிரதியாக..."

"தங்கள் உயிரை நான் காப்பாற்றினேனா! எப்போது?"

"முந்நூறு வருஷங்களுக்கு முன்னால்..."

"என்ன!"

"முன்னொரு ஜன்மத்தில்."

"ஓஹோ! தாங்கள் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பது தெரியாமல் கேட்டுவிட்டேன்; க்ஷமிக்க வேண்டும்."

சந்நியாசி மௌனமாக நடந்தார்.

மறுபடி பரஞ்சோதி, "சுவாமி! இனிமேல் வரப்போகிறது கூடத் தங்கள் ஞான திருஷ்டியில் தெரியுமல்லவா?" என்று கேட்டான்.

"வரப்போகிறது ஒன்றைச் சொல்லட்டுமா?"

"சொல்லுங்கள்."

"இந்த நாட்டுக்குப் பெரிய யுத்தம் வரப்போகிறது!"

"பெரிய யுத்தமா?"

"ஆமாம்; மகா பயங்கரமான யுத்தம் பாலாறு இரத்த ஆறாக ஓடப் போகிறது. மகேந்திர தடாகம் இரத்தத் தடாகம் ஆகப் போகிறது."

"ஐயோ! பயமாயிருக்கிறதே! போதும் அடிகளே!"

சற்றுப் பொறுத்து மறுபடியும் பரஞ்சோதி, "நாட்டின் சமாசாரம் எனக்கெதற்கு, சுவாமி? என் விஷயமாக ஏதாவது தெரிந்தால் சொல்லுங்கள்!" என்றான்.

"இன்று ராத்திரி உனக்கு ஒரு கஷ்டம் ஏற்படப் போகிறது."

"சிவ சிவா! நல்ல வாக்காக ஏதாவது சொல்லக் கூடாதா?"

"புத்தபகவானுடைய அருளால் அந்தக் கஷ்டம் நீங்கும்."

"நான் சைவன் ஆயிற்றே! புத்தர் எனக்கு அருள் செய்வாரா?"

"புத்தருடைய கருணை எல்லையற்றது."

"அதோ வருவது யார்?" என்று கேட்டான் பரஞ்சோதி.

மங்கிய மாலை வெளிச்சத்தில், ஓர் அபூர்வ உருவம் அவர்களுக்கெதிரே வந்துகொண்டிருந்தது தெரிந்தது.

"பார்த்தாலே தெரியவில்லையா? திகம்பர சமண முனிவர் வருகிறார்!" என்றார் புத்த பிக்ஷு.

"சமண முனிவர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்களா?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"முக்கால்வாசிப்பேர் பாண்டிய நாட்டுக்குப் போய்விட்டார்கள் மற்றவர்களும் சீக்கிரம் போய்விடுவார்கள்."

சமண முனிவர் அருகில் வந்தார். அவர் புத்த பிக்ஷுவைப் போல் உயர்ந்து வளர்ந்தவர் அல்ல. கட்டையாயும் குட்டையாயும் இருந்தார். கௌபீனம் ஒன்றுதான் அவருடைய ஆடை, ஒரு கையில் உறி கட்டித் தூக்கிய கமண்டலம் வைத்திருந்தார். இன்னொரு கையில் மயில் தோகை விசிறி; கக்கத்தில் சுருட்டிய சிறுபாய்.

அவர் அருகில் வந்ததும் புத்த பிக்ஷு, "புத்தம் சரணம் கச்சாமி!" என்றார்.

சமண முனிவர், "அருகர் தாள் போற்றி!" என்றார்.

"இருட்டுகிற சமயத்தில் அடிகள் எங்கே பிரயாணமோ?" என்று புத்த சந்நியாசி கேட்டார்.

அதற்குச் சமணர், "ஆகா! இந்த ருத்ர பூமியில் எனக்கு என்ன வேலை? தொண்டை மண்டலந்தான் சடையன் கூத்தாடும் சுடுகாடாகி விட்டதே, தெரியாதா? நான் பாண்டிய நாட்டுக்குப் போகிறேன்" என்றார்.

"இன்றைக்கு முக்கியமாக ஏதாவது விசேஷம் உண்டோ ?" என்று புத்த பிக்ஷு கேட்க, சமண முனிவர், "உண்டு, விசேஷம் உண்டு. கோட்டைக் கதவுகளை அடைக்கப் போகிறார்களாம்!" என்று சொல்லிக்கொண்டே மேலே விரைந்து சென்றார்.

"ஒரு காலத்தில் இந்தப் பல்லவ ராஜ்யத்தில் சமணர்கள் வைத்ததே சட்டமாயிருந்தது. அவர்கள் கிழித்தகோடு தாண்டாமல், மகேந்திர சக்கரவர்த்தி நடந்து வந்தார். இப்போது.." என்று கூறிப் புத்த பிக்ஷு நிறுத்தினார்.

"இப்போது என்ன?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இப்போது சைவ வைஷ்ணவர்களின் பாடு இந்த நாட்டில் கொண்டாட்டமாயிருக்கிறது."

"ஓஹோ!" என்றான் பரஞ்சோதி. பிறகு, "ஏதோ கோட்டைக் கதவு சாத்துவதைப் பற்றிச் சமண முனிவர் சொன்னாரே, அது என்ன?" என்று கேட்டான்.

"அதோ பார்!" என்றார் சந்நியாசி. சாலையில் அந்தச் சமயத்தில் ஒரு முடுக்குத் திரும்பினார்கள். எதிரே காஞ்சி மாநகரின் தெற்குக் கோட்டை வாசல் தெரிந்தது. கோட்டை வாசலின் பிரம்மாண்டமான கதவுகள் மூடியிருந்தன.

தலைநகரம்

கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது.

நமது பிரயாணிகள் வந்த இராஜ பாதையானது அகழியின் அருகில் வந்ததும் இரண்டாகப் பிரிந்து ஒன்று வலப்புறமாகவும் ஒன்று இடப்புறமாகவும் கோட்டை மதிலைச் சுற்றி அகழிக் கரையோடு சென்றது. சாலையோடு வந்த வண்டிகளும், மனிதர்களும் இடப்புறமாகவோ வலப்புறமாகவோ மதிலைச் சுற்றிக் கொண்டு போனார்கள்.

அகழியின் மேல் ஒரு குறுகலான மரப்பாலம் காணப்பட்டது. அது கோட்டை வாசல்வரை சென்றது. புத்த பிக்ஷு பரஞ்சோதிக்குச் சைகை காட்டிவிட்டு அந்தப் பாலத்தின்மேல் நடந்து சென்றார். பரஞ்சோதியும் அவரைப் பின் தொடர்ந்தான்.

"இதென்ன, இவ்வளவு சின்னப் பாலமாயிருக்கிறதே? கோட்டைக்குள் வண்டிகளும் வாகனங்களும் எப்படிப் போகும்?" என்று கேட்டான் பரஞ்சோதி.

"இந்த வாசல் வழியாகப் போக முடியாது. வடக்கு வாசலிலும் கிழக்கு வாசலிலும் பெரிய பாலங்கள் இருக்கின்றன. அவற்றில் யானைகள் கூடப் போகலாம்!" என்றார் சந்நியாசி.

பாலத்தைத் தாண்டிக் கோட்டை வாசலருகில் அவர்கள் வந்தார்கள். அங்கே ஒரு சேமக்கலம் கட்டித் தொங்கிற்று. பக்கத்தில் ஒரு கட்டையும் கிடந்தது. கட்டையை எடுத்துச் சேமக்கலத்தில் ஒரு தட்டுத் தட்டினார் சந்நியாசி.

மேலேயிருந்து, "யார் அங்கே?" என்று குரல் கேட்டது. கோட்டை வாசலின் மேல் மாடத்திலிருந்து ஒருவன் எட்டிப் பார்த்தான். இருட்டிவிட்டபடியால் அவன் முகம் தெரியவில்லை.

"மருதப்பா! நான்தான்!" என்று சாமியார் சொல்லவும், மேலேயிருந்து எட்டிப் பார்த்தவன், "தாங்களா! இதோ வந்து விட்டேன்; அடிகளே" என்று கூறிவிட்டு மறைந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் கோட்டைக் கதவின் தாள் திறக்கும் சத்தம் கேட்டது. கதவில் ஒரு மனிதர் உள்ளே புகக் கூடிய அளவு துவாரம் தோன்றியது. புத்த சந்நியாசி அந்தத் துவாரத்திற்குள் புகுந்து சென்று பரஞ்சோதியையும் கையைப்பிடித்து உள்ளே அழைத்துக் கொண்டார். மறுபடி கதவின் துவாரம் அடைக்கப்பட்டது.

பரஞ்சோதி உள்ளே போனதும் நகரின் பக்கம் பார்வையைச் செலுத்தினான். எங்கே பார்த்தாலும் பிரகாசமான தீபங்களால் நகரம் ஒளி மயமாகக் காணப்பட்டது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் பேசுவதிலிருந்து உண்டாகும் 'கல்' என்ற ஓசை எழுந்தது. பரஞ்சோதி இதுவரையில் அவ்வளவு பெரிய நகரத்தைப் பார்த்ததே கிடையாது. எனவே, பார்த்தது பார்த்தபடி பிரமித்து நின்றான்.

புத்த சந்நியாசி கதவைத் திறந்த காவலனைப் பார்த்து, "மருதப்பா! நகரில் ஏன் கலகலப்புக் குறைவாயிருக்கிறது? கோட்டைக் கதவு இதற்குள் ஏன் சாத்தப்பட்டது? ஏதாவது விசேஷம் உண்டா?" என்று கேட்டார்.

"நன்றாகத் தெரியவில்லை சுவாமி! இன்று காலையிலிருந்து நகரம் ஒரே கோலாகலமாய்த்தானிருந்தது..." என்பதற்குள் பிக்ஷு குறுக்கிட்டார்.

"கோலாகலத்துக்குக் காரணம்?" என்று கேட்டார்.

"தங்களுக்குத் தெரியாதா? சிவகாமி அம்மையின் நடனம் இன்றைக்குச் சக்கரவர்த்தியின் சபையில் அரங்கேறுவதாக இருந்தது. அதனால்தான் ஜனங்களுக்கு அவ்வளவு கொண்டாட்டம்!"

"எந்த சிவகாமி அம்மை?" என்று சந்நியாசி கேட்டார்.

"வேறு யார்? ஆயனரின் மகள் சிவகாமிதான்..!"

இதுவரை பேச்சைக் கவனியாதிருந்த பரஞ்சோதி சட்டென்று திரும்பி, "யார், ஆயனச் சிற்பியாரா?" என்று கேட்டான்.

"ஆமாம்!" என்று காவலன் கூறிப் பரஞ்சோதியை உற்று நோக்கிவிட்டு, "அடிகளே! இந்தப் பிள்ளை யார்?" என்று பிக்ஷுவைப் பார்த்துக் கேட்டான்.

"இவன் என் சிஷ்யன் நீ மேலே சொல்லு. சிவகாமி அம்மையின் நடனம் அரங்கேறுவதாக இருந்தது, பிறகு?"

"சபை கூடி அரங்கேற்றம் நடந்து கொண்டிருந்ததாம். பாதி நடந்து கொண்டிருந்தபோது, யாரோ தூதுவர்கள், வெகு அவசரச் செய்தியுடன் வந்திருப்பதாகத் தெரிந்ததாம். சக்கரவர்த்தி சபையிலிருந்து சட்டென்று எழுந்து போனாராம். அப்புறம் திரும்பிச் சபைக்கு வரவேயில்லையாம். குமார சக்கரவர்த்தியும், மந்திரி மண்டலத்தாருங்கூட எழுந்து போய்விட்டார்களாம். நாட்டியம் நடுவில் நின்று போய்விட்டதாம். அஸ்தமித்ததும் கோட்டைக் கதவுகளை அடைக்கும்படி எனக்குக் கட்டளை வந்தது. அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்னவாயிருக்கலாம் சுவாமி? யுத்தம் ஏதாவது வரக்கூடுமா? ஆனால் காஞ்சி சக்கரவர்த்தியுடன் யுத்தம் செய்யக்கூடிய அரசன் இந்தப் பூமண்டலத்திலேயே இப்போது கிடையாதே?" என்றான் மருதப்பன்.

"அப்படிச் சொல்லக் கூடாது, மருதப்பா! இன்றைக்கு மணி மகுடம் தரித்து மன்னாதி மன்னர்களாயிருப்பவர்கள் நாளைக்கு... ஆனால் அதைப் பற்றியெல்லாம் நாம் ஏன் பேச வேண்டும்? உன் மகன் சௌக்கியமா?" என்று சந்நியாசி கேட்டார்.

"தங்கள் கிருபை சுவாமி. சௌக்கியமா இருக்கிறான்!" என்றான் மருதப்பன்.

மருதப்பனுடைய மகனை ஒரு சமயம் பாம்பு தீண்டி அவன் உயிர் பிழைப்பதே துர்லபம் என்று தோன்றியது. அச்சமயம் இந்த புத்த பிக்ஷு மணிமந்திர ஔஷதங்களினால் அந்தப் பிள்ளையைக் குணப்படுத்தினார். அவரிடம் மருதப்பன் பக்தி கொண்டதற்கு இதுதான் காரணம்.

"என்னால் ஒன்றுமில்லை, மருதப்பா! எல்லாம் புத்த பகவானின் கருணை நான் வருகிறேன்" என்று சொல்லிவிட்டு மேலே பிக்ஷு நடந்தார். பரஞ்சோதியும் அவருடன் சென்றான்.

"அடிகளே! கோட்டைக் கதவைச் சாத்தும்படி கட்டளை பிறந்திருக்கும்போது உங்களை மட்டும் காவலன் எப்படி விட்டான்?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"எல்லாம் இந்தக் காவித் துணியின் மகிமைதான்!" என்றார் புத்த பிக்ஷு.

"ஓஹோ! பல்லவ சக்கரவர்த்தியின் இராஜ்யத்தில் காவித் துணிக்கு அவ்வளவு கௌரவமா? ஆனால் சமணர்கள் மட்டும் ஏன்...?"

"சமணர்கள் ராஜரீக விஷயங்களில் தலையிட்டார்கள். நாங்கள் அந்த வழிக்கே போவதில்லை. இராஜ வம்சத்தினரின் முகத்தைக் கூடப் பார்ப்பதில்லையென்று வைத்துக் கொண்டிருக்கிறோம்...போகட்டும்! உன்னுடைய உத்தேசம் என்ன? என்னுடன் பௌத்த விஹாரத்துக்கு வரப்போகிறாயா?"

"இல்லை, சுவாமி! நாவுக்கரசர் மடத்துக்கே போய்விடுகிறேன். வேறு எங்கேயும் தங்க வேண்டாமென்று என் தாயாரின் கட்டளை."

"அப்படியானால் இந்த இடத்தில் நாம் பிரிய வேண்டியதுதான் போய் வருகிறாயா, தம்பி?"

"சுவாமி, நாவுக்கரசர் மடம் எங்கே இருக்கிறது? எப்படிப் போகவேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குப் பக்கத்தில் இருக்கிறது அதோ பார் கோயில் விமானத்தை!"

பரஞ்சோதி பார்த்தான். வெகு தூரத்துக்கு வெகுதூரம் பரவியிருந்த அந்த விசாலமான நகரில் எங்கே பார்த்தாலும் விமானங்கள் தெரிந்தன.

இந்த வரலாறு நிகழ்ந்த காலத்தில் அதாவது ஏறக்குறைய (சிவகாமியின் சபதம் எழுதப்பட்ட ஆண்டு 1946) ஆயிரத்து முந்நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்னர் - தமிழகத்துக் கோயில்களின் முன்வாசல் கோபுரங்கள் இப்போது இருப்பது போல் உயரமாக அமைந்திருக்கவில்லை. கோயில் கர்ப்பக் கிருஹத்துக்கு மேலேதான் விமானங்கள் அமைப்பது வழக்கம். இவையும் அவ்வளவு உயரமாக இருப்பதில்லை. மேலும் சிவன் கோயில் விமானங்கள், சமணப் பள்ளிகளின் விமானங்கள், அரண்மனை விமானங்கள் எல்லாம் ஏறக்குறைய ஒரே மாதிரியாயிருக்கும்.

"எங்கே பார்த்தாலும் விமான மயமாகக் காணப்படுகிறதே! நீங்கள் எதைச் சொல்கிறீர்கள்?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இங்கிருந்து அடையாளம் சொல்லுவது கஷ்டம். இந்த வீதியோடு நேரே போ! ஏகம்பர் கோயிலுக்கு வழி அங்கங்கே விசாரித்துத் தெரிந்து கொள்ளலாம். கோயில் சந்நிதியில் வாகீசர் மடம் இருக்கிறது. ஜாக்கிரதை, தம்பி! காலம் விபரீதமாகிக் கொண்டு வருகிறது!" என்று சொல்லிக்கொண்டே புத்த பிக்ஷு அங்கிருந்து பிரிந்த வேறொரு வீதி வழியாகச் சென்றார்.

வாலிபப் பிரயாணி நேரே பிக்ஷு காட்டிய திக்கை நோக்கிச் சென்றான். அக்காலத்தில் தென் தேசத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்று விளங்கியது காஞ்சி மாநகரம். அந்நகரின் வீதி ஒவ்வொன்றுமே தேரோடும் வீதியைப்போல் விசாலமாக அமைந்திருந்தது. வீடுகள் எல்லாம் மாளிகைகளாகவே இருந்தன. ஆங்காங்கே கல்லாலான தூண்களின் மேல் விசாலமான அகல்களில் தூங்காவிளக்குகள் சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. வீதிகளில் 'ஜே ஜே' என்று போவோரும் வருவோருமாய் ஏகக் கூட்டமாயிருந்தது. கடைத் தெருக்களின் காட்சியையோ சொல்லவேண்டாம். காசி முதல் கன்னியாகுமரி வரையில் பரதகண்டத்தில் விளையும் பொருள்களெல்லாம் அந்தக் கடை வீதிகளில் கிடைக்கும். புஷ்பக் கடைகளாக ஒரு பக்கம், பழக் கடைகளாக ஒரு பக்கம்; பட்சணக் கடைகளாக ஒரு பக்கம்; தானியக் கடைகள் ஒரு பக்கம். முத்து இரத்தின வியாபாரிகளின் கடைகள் இன்னொரு பக்கம்.... இப்படிக் கடை வீதியானது எல்லையில்லாமல் வளர்ந்து கொண்டே போயிற்று.

பரஞ்சோதி அளவில்லா வியப்புடன் மேற்கூறிய வீதிக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டு போனான். ஆங்காங்கே ஜனங்கள் கூட்டமாய் நின்ற இடங்களில் எல்லாம் சிவகாமி அம்மையின் நடன அரங்கேற்றம் நடுவில் நின்று போனதைப் பற்றியும், கோட்டைக் கதவுகளைச் சாத்தும்படி கட்டளை பிறந்திருப்பதைப் பற்றியுமே பேசிக் கொண்டிருந்ததை அவன் கேட்டுக்கொண்டு நடந்தான். சற்று நேரத்துக்கொரு தடவை அவன் எதிரே வந்தவர்களிடம், "ஏகாம்பரேசுவரர் கோயில் எது?" என்று கேட்டான். "அதோ!" என்று அவர்களும் சுட்டிக் காட்டிவிட்டுப் போனார்கள். ஆனாலும் ஏகாம்பரேசுவரர் கோயிலை அவன் அடைந்தபாடில்லை. புதிது புதிதாக ஒரு பெரிய நகரத்தைப் பார்க்கும் அதிசயத்தில் மூழ்கியிருந்தபடியால் பரஞ்சோதியும் கோயிலைச் சீக்கிரமாகக் கண்டுபிடிப்பதில் அவ்வளவு கவலையுள்ளவனாயில்லை.

இப்படி அவன் வீதி வலம் வந்துகொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் ஏகக் கூச்சலும் குழப்பமும் உண்டாவதைப் பார்த்தான். ஜனங்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். "கோயில் யானைக்கு மதம் பிடித்து விட்டது! ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்ற கூக்குரலோடு சேர்ந்து, குழந்தைகள் வீறிடும் சத்தம், ஸ்திரீகள் அலறும் சத்தம், குதிரைகள் கனைக்கும் சத்தம், வீட்டுக் கதவுகளைத் 'தடால்' 'தடால்' என்று சாத்தும் சத்தம், மாடுகள் 'அம்மா' என்று கத்தும் சத்தம், கட்டை வண்டிகள் 'கட கட' என்று உருண்டோ டும் சத்தம் இவ்வளவும் சேர்ந்து சொல்ல முடியாத அல்லோலகல்லோலமாகி விட்டது.

பரஞ்சோதி ஒரு கணம் திகைத்து நின்றான். தானும் ஓட வேண்டுமா, எந்தப் பக்கம் ஓடுவது என்று அவன் மனம் சிந்தித்துக் கொண்டிருந்தபோதே, அவனுக்கெதிரே நடந்த சம்பவங்களை அவனுடைய கண்கள் கவனித்தன. தெருவில் அவனுக்கு முன்னால் சற்றுத் தூரத்தில் ஒரு பல்லக்கு சென்று கொண்டிருந்தது. அதில் சௌந்தர்ய தேவதை என்று சொல்லக் கூடிய ஓர் இளம் பெண்ணும் அவளுடைய தந்தையெனத் தோன்றிய பெரியவர் ஒருவரும் இருந்தார்கள். பல்லக்கைத் தூக்கிச் சென்றவர்கள் அவர்களுக்குப் பின்னால் எழுந்த கூச்சலையும் கோலாகலத்தையும் கேட்டுவிட்டு பல்லக்கைக் கீழே வைத்துவிட்டு நாலாபக்கமும் சிதறி ஓடினார்கள். அதே சமயத்தில் அவனுக்குப் பின்னால் வெகு சமீபத்தில் மதங்கொண்ட யானை ஒன்று பூமி அதிர ஓடி வந்தது.

இதையெல்லாம் கவனித்த பரஞ்சோதி ஒரு கணம் தயங்கி நின்றான். அடுத்த கணத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாய்ச் சட்டென்று கையிலிருந்த மூட்டையைக் கீழே வைத்து அவசரமாக அவிழ்த்தான். அதற்குள்ளிருந்த வேல் முனையை எடுத்துத் தன் கையில் வைத்திருந்த தடியின் முனையில் செருகிப் பொருத்தினான். பொருந்திய வேலை அவன் வலது கையில் தூக்கிப் பிடித்ததற்கும் மதம்கொண்ட யானை அவன் நின்ற இடத்திற்கு அருகே வருவதற்கும் சரியாயிருந்தது. அவ்வளவுதான்! பரஞ்சோதி தன் முழுபலத்தையும் கொண்டு வேலை வீசினான். அது யானையின் இடது கண்ணுக்கருகில் பாய்ந்தது. யானையின் தடித்த தோலைப் பொத்துக்கொண்டு உள்ளேயை சென்று விட்டது. யானை பயங்கரமாக ஒரு முறை பிளிறிற்று. துதிக்கையால் வேலைப் பிடுங்கிக் காலின் கீழை போட்டு மிதித்தது. பிறகு வேலை எறிந்த வாலிபன் நின்ற பக்கம் திரும்பிற்று.

மதங்கொண்ட யானையின் மீது வேலை எறிந்தால் அதனுடைய விளைவு என்னவாகும் என்பதை அந்த இளம் பிரயாணி நன்கு உணர்ந்திருந்தான். எனவே, யானை தன் பக்கம் திரும்பக் கண்டதும், பல்லக்கு இருந்த திசைக்கு எதிர்த் திசையில் வேகமாக ஓடத் தொடங்கினான். யானை தன்னுடைய பிரம்மாண்டமான தேகத்தை முழுவதும் திருப்புவதற்குள்ளே அவன் வெகுதூரம் ஓடிவிட்டான். ஓடிய வண்ணமே திரும்பிப் பார்த்தபோது, யானை வீறிட்டுக் கொண்டு தன்னை நோக்கி விரைந்து வருவதைக் கண்டான். உடனே அங்கே காணப்பட்ட ஒரு சந்தில் திரும்பி ஓடத் தொடங்கினான். சற்று நேரம் திரும்பிப் பார்க்காமல் ஓடிய பிறகு மறுபடியும் ஒரு விசாலமான பெரிய வீதியில் தான் வந்திருப்பதைக் கண்டான். தனக்கு எதிரே ஐந்தாறு யானைகள் மாவுத்தர்களால் ஏவப்பட்டு விரைவாக வந்து கொண்டிருப்பதைப் பார்த்துத் தெருவின் ஓரத்தில் ஒதுங்கினான். மதயானையைக் கட்டுக்கு உட்படுத்தி அழைத்துச் செல்வதற்காகவே இந்த யானைகள் போகின்றன என்பதை ஊகித்துணர்ந்ததும் ஓடுவதை நிறுத்தி மெதுவாக நடக்கலானான்.

பரஞ்சோதிக்கு அப்போதுதான் தன் தேகநிலை பற்றிய நினைவு வந்தது. அவனுடைய நெஞ்சு 'படபட' என்று அடித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் வியர்வையினால் சொட்ட நனைந்து போயிருந்தது. ஏற்கனவே, நாளெல்லாம் வழி நடந்ததனால் பரஞ்சோதி களைத்துப் போயிருந்தான். இப்போது அதி வேகமாக ஓடி வந்ததனால் அவனுடைய களைப்பு மிகுதியாகியிருந்தது. கால்கள் தளர்ந்து தடுமாறின. உள்ளத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினாலும் பரபரப்பினாலும், தேகம் நடுங்கிற்று. சற்று உட்கார்ந்து இளைப்பாறாமல் மேலே நடக்க முடியாது என்று தோன்றியது. வீதி ஓரத்தில் காணப்பட்ட சுமைதாங்கி அருகில் சென்று அதன் மேல் உட்கார்ந்தான்.

வானத்தில் பூரண சந்திரன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. இளந்தென்றல் மெல்ல மெல்ல வந்து களைத்துப் போயிருந்த அவனுடைய தேகத்தின்மீது வீசி இளைப்பாற்றியது. உடம்பின் களைப்பு நீங்க நீங்க உள்ளம் சிந்தனை செய்யத் தொடங்கியது. "நாம் வந்த காரியம் என்ன? செய்த காரியம் என்ன?" என்று எண்ணியபோது, பரஞ்சோதிக்கே வியப்பாயிருந்தது. அந்த மதயானையின் மேல் வேலை எறியும்படியாக அந்தச் சமயம் தனக்குத் தோன்றிய காரணம் என்ன? அதனிடம் சிக்கிக் கொண்டிருந்தால், தன்னுடைய கதி என்னவாகியிருக்கும்? தன்னிடம் உயிரையே வைத்திருக்கும் தன் அருமை அன்னையை மறுபடியும் பார்க்க முடியாமலே போயிருக்கும் அல்லவா?

சிவிகையில் வீற்றிருந்த இளம்பெண்ணின் முகமும் பெரியவரின் முகமும் பரஞ்சோதியின் மனக்கண் முன்பு தோன்றின. ஆம்; மதயானையினால் அவர்களுக்கு ஆபத்து வராமலிருக்கும் பொருட்டே அந்தச் சமயம் அவன் வேலை எடுத்து வீசினான். அவர் யாராயிருக்கலாம்? ஒருவேளை அரங்கேற்றம் தடைப்பட்டது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார்களே, அந்தச் சிவகாமி அம்மைதானோ அந்த இளம்பெண்! பெரியவர் அவளுடைய தந்தை ஆயனராயிருக்குமோ?

இவ்விதம் சிந்தித்த வண்ணமாய்ப் பரஞ்சோதி சுமைதாங்கியின் மேடைமீது சாய்ந்தான். அவனை அறியாமல் அவனுடைய கண்ணிமைகள் மூடிக்கொண்டன. நித்திராதேவி தன் மிருதுவான மந்திரக் கரங்களினால் அவனைத் தழுவலானாள்.

கடவுள் காப்பாற்றினார்

மின்னல் மின்னுகிற நேரத்தில் மதயானையின் மீது ஓர் இளம்பிள்ளை வேலை எறிந்ததையும் யானை திரும்பி அவனைத் துரத்திச் சென்றதையும், சிவிகையிலிருந்த பெரியவரும் இளம் பெண்ணும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாலிபனின் தீரமும் துணிச்சலும் அவர்களுக்குப் பெரும் வியப்பை உண்டு பண்ணின. அந்தப் பிள்ளைக்கு அபாயம் நேராமல் இருக்க வேண்டுமேயென்று அவர்களுடைய உள்ளங்கள் துடித்தன. அவனுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்துகொள்ளும் ஆவலினால் சிவிகைக்குள்ளிருந்து பரபரப்புடன் வெளியே வந்தார்கள். அந்தச் சமயம் அவ்விசாலமான வீதி, ஜன சூனியமாகக் காணப்பட்டது ஓர் ஈ காக்கை அங்கே கிடையாது.

பல்லக்கிலிருந்து இறங்கிய மனிதர் அந்த இளம் பெண்ணின் முதுகில் கையை வைத்து அணைத்துக்கொண்டு அன்பு கனிந்த குரலில், "பயமாயிருக்கிறதா, சிவகாமி?" என்று கேட்டார்.

"இல்லவே இல்லை, அப்பா! பயமில்லை!" என்றாள் சிவகாமி. பிறகு அவள், "நல்ல சமயத்தில் அந்த வாலிபன் மட்டும் வந்து யானையைத் திருப்பியிராவிட்டால் நம்முடைய கதி என்னவாகியிருக்கும்?" என்றாள்.

"பல்லக்கு சுக்கு நூறாகியிருக்கும்!" என்றார் தந்தை.

"ஐயோ!" என்றாள் அந்த இளம் பெண்.

"அதற்காகத்தான் சிவிகையை கீழே வைத்துவிட்டுச் சிவிகை தூக்கிகளை ஓட்டமெடுக்கச் சொன்னேன். நாமும் பக்கத்து வீட்டுக்குள் ஓடித் தப்பியிருக்கலாம். ஆனாலும் வந்த அபாயம் பெரிதுதான்!" என்றார் பெரியவர்.

நாலாபுறமும் சிதறி ஓடிய ஜனங்கள் கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருவராகத் திரும்பி வர ஆரம்பித்தார்கள். வந்தவர்கள் எல்லாரும் அங்கு நிகழ்ந்தவைகளைப் பற்றி ஏக காலத்தில் பேச ஆரம்பிக்கவே, சற்றுமுன் நிசப்தம் குடிகொண்டிருந்த இடத்தில் 'கல கல' என்று பேச்சொலி எழுந்தது.

"ஆகா! ஆயனரும் அவர் மகளும் அல்லவா! நல்ல வேளையாகப் போயிற்று! கடவுள்தான் காப்பாற்றினார்!" என்று ஜனங்கள் பலவாறாகப் பேசிக்கொண்டு நின்றார்கள்.

கடவுள் காப்பாற்றினார் என்றாலும், அவர் அந்த வீர வாலிபனுடைய உருவத்தில் வந்தல்லவா காப்பாற்றினார்! அந்தப் பிள்ளை யாராயிருக்கும்? அவனுடைய கதி என்னவாயிற்று? இதைப் பற்றித்தான் ஆயனரும் அவருடைய மகளும் எண்ணமிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த இளம்பிள்ளையைப் பற்றி அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கக் கூடியவர்கள் யாருமில்லை.

ஆயனர், யானை கடைசியாக நின்ற இடத்தின் அருகே சென்றார். அங்கே யானையின் காலில் மிதிபட்டு முறிந்து கிடந்த வேலைக் கையில் எடுத்துக்கொண்டார். இன்னும் சற்றுத் தூரத்தில் அவிழ்ந்து கிடந்த மூட்டையை அவர் கட்டி எடுத்துக்கொண்டு திரும்பிச் சிவிகையண்டை வந்தார். சிவகாமி அந்த முறிந்த வேலை வாங்கி வியப்புடன் நோக்கினாள்.

ஆயனர், "சிவகாமி! இங்கே வீணாக நின்று கொண்டிருப்பதில் பயனில்லை. நாம் போகலாம். எல்லா விவரங்களும் தானே நாளைக்குத் தெரிந்து விடுகிறது" என்றார்.

தந்தையும் மகளும் சிவிகைக்குள் ஏற உத்தேசித்த சமயத்தில் சற்றுத் தூரத்தில் குதிரைகள் அதிவேகமாக வரும் சப்தம் கேட்டுத் தயங்கி நின்றார்கள்.

நிலா வெளிச்சத்தில், முன்னால் இரண்டு வெண்புரவிகள் பாய்ந்து வருவதும், பின்னால் ஐந்தாறு குதிரைகள் தொடர்ந்து வருவதும் தெரிந்தன. முன்னால் வந்த குதிரைகளில் இரண்டு கம்பீர புருஷர்கள் ஏறி வந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து குதிரைகளின் மீது வேல் பிடித்த வீரர்கள் காணப்பட்டனர். குதிரைகள் சிவிகைக்குப் பக்கத்தில் வந்து நின்றதும் ஜனங்கள் பயபக்தியுடன் சிறிது விலகிக் கொண்டார்கள்.

"மகேந்திர மகா பல்லவர் வாழ்க!" "திரிபுவன சக்கரவர்த்தி வாழ்க!" "குணபுர மகாராஜா வாழ்க!" "குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க!" என்ற கோஷங்கள் நாற்புறமும் எழுந்தன.

வெண்புரவிகளில் முன்னால் வந்தவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய ஏக புதல்வர் நரசிம்ம பல்லவருந்தான் என்பதை ஆயனரும், சிவகாமியும் உணர்ந்ததும் அவர்களுக்குப் பெரிதும் வியப்பு உண்டாயிற்று.

சிவகாமி ஆயனருக்குப் பின்னால் ஒதுங்கி நாணத்துடன் நின்றாள். அவளுடைய விசாலமான கரிய கண்கள் மகேந்திர சக்கரவர்த்திக்குப் பின்னால் குதிரைமீது வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியை நோக்கின.

மகேந்திர சக்கரவர்த்தி, "ஆயனரே! இது என்ன? நான் கேள்விப்பட்டது விபரீதமாக அல்லவா இருக்கிறது?" என்று சொல்லிக்கொண்டே குதிரை மீதிருந்து இறங்கினார்.

"ஏகாம்பரர் அருளால் அபாயம் ஒன்றும் நேரவில்லை, பிரபு!" என்றார் ஆயனர்.

"சிவகாமி ரொம்பவும் பயந்து போய்விட்டாளா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

"சிவகாமி பயப்படவில்லை இதையெல்லாம் அவள் ஏதோ வேடிக்கையென்று எண்ணிக்கொண்டிருக்கிறாள்!" என்று ஆயனர் கூறி, அன்பு நிறைந்த கண்களால் தமக்குப் பின்னால் அடக்கத்துடன் நின்ற சிவகாமியைப் பார்த்தார்.

அப்போது சக்கரவர்த்தியும் அவளைப் பரிவுடன் நோக்கி, "சிவகாமி! ஏன் தலைகுனிந்துகொண்டிருக்கிறாய்? அரங்கேற்றத்தின்போது நடுவில் போய்விட்டேனே என்று என் பேரில் மனஸ்தாபமா?" என்றார்.

சிவகாமியின் முகத்தில் நாணத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது அவள் மௌனமாயிருந்தாள்.

அப்போது ஆயனர், "பல்லவேந்திரா! சிவகாமிக்கு அவ்வளவு தெரியாதா? ஏதோ மிகவும் முக்கியமான காரியமாதலால்தான் தாங்கள் நடுவில் எழுந்து போயிருக்க வேண்டும்..." என்றார்.

"ஆமாம், ஆயனரே! ரொம்பவும் முக்கியமான காரியந்தான். எல்லாம் பிறகு விவரமாகச் சொல்லுகிறேன். மந்திராலோசனை முடிந்து வெளியில் வந்ததும் உங்களைப் பற்றி விசாரித்தேன். நீங்கள் புறப்பட்டு விட்டதாகத் தெரிந்தது. ஏன் இவ்வளவு அவசரமாகக் கிளம்பினீர்கள்?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

"இராத்திரி வீடு போய்ச் சேர்ந்தால்தானே காலையில் என் வேலையைத் தொடங்கலாம்? ஒருநாள் என்றால், ஒருநாள் வீணாகப் போக வேண்டாமென்றுதான் இன்றே புறப்பட்டேன், பிரபு!"

"ஆமாம்; உமது தெய்வீகச் சிற்பக் கலையை விட்டுவிட்டு உம்மால் ஒருநாள் கூட இருக்கமுடியாதுதான். இப்போதும் இராத்திரியே போவதாகத்தான் உத்தேசமா?"

"ஆம், பல்லவேந்திரா! பட்டப் பகலைப்போல் நிலா எரிகிறது இரவு போய்விடுவதே சௌகரியம்."

"இந்த வெண்ணிலாவைப் பார்த்தால் எனக்குக்கூட உம்முடன் வரவேண்டுமென்று தோன்றுகிறது. ஆனால், அது முடியாத காரியம். நாளை அல்லது மறுநாள் வருகிறேன்" என்று கூறிச் சக்கரவர்த்தி திரும்பிப் பார்த்தார்.

அப்போது சக்கரவர்த்திக்குப் பின்னால் இன்னொரு வெண்புரவியின் மேலிருந்த நரசிம்மவர்மர் வெகு லாகவத்துடன் குதிரை மேலிருந்து கீழே குதித்துச் சக்கரவர்த்தியின் பக்கத்தில் வந்து, "அப்பா! யானையின் மீது வேல் எறிந்த வாலிபனைப்பற்றி விசாரிக்கவில்லையே?" என்று கூறிவிட்டு ஆயனரைப் பார்த்து, "அந்த வாலிபன் யார்? அவன் எங்கே சென்றான்? உங்களுக்கு ஏதாவது தெரியுமா?" என்று கேட்டார்.

"அதுதான் தெரியவில்லை வேலை எறிந்ததும் அவன் மின்னலைப் போல் மறைந்துவிட்டான். ஆனால், அப்படி மறைந்ததனாலேயே உயிர்தப்பிப் பிழைத்தான். தேசாந்தரம் வந்த பிள்ளையாகத் தோன்றியது" என்றார் ஆயனர்.

குமார சக்கரவர்த்தி, ஆயனருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவருடைய கண்கள் மட்டும் ஆயனருக்குப் பின்னால் இருந்த சிவகாமியின் மீது நின்றன.

நரசிம்மவர்மர் சற்றுத் தூரத்தில் குதிரைமீதிருந்தபோது அவரை ஏறிட்டுத் தீவிர நோக்குடன் பார்த்த சிவகாமியோ இப்போது அவர் பக்கமே பார்க்காமல் பூமியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தரையில் அவள் அருகில், சற்று முன்னால் அவள் கையிலிருந்து நழுவிய முறிந்த வேல் கிடந்தது.

அதைப் பார்த்த நரசிம்மவர்மர், "சிவகாமி! இது என்ன?" என்று கேட்டுக்கொண்டே அவள் அருகில் சென்றார். சிவகாமி சிறிது பின்வாங்கி, முறிந்த வேலைத் தரையிலிருந்து எடுத்து அவர் பக்கம் நீட்டினாள். அதை நரசிம்மவர்மர் வாங்கிக் கொண்ட போது, அவருடைய கைவிரல்கள் சிவகாமியின் விரல்களைத் தீண்டியிருக்கவேண்டும். தேள் கொட்டியவர்களைப் போல் அவர்கள் அவசரமாக விலகிக் கொண்டதிலிருந்து இதை ஊகிக்கக்கூடியதாயிருந்தது.

நரசிம்மவர்மர் தம் தேகத்தில் ஏற்பட்ட படபடப்பை ஒருவாறு சமாளித்து அடக்கிக்கொண்டு, ஆயனரைப் பார்த்து, "உங்களை மத யானையின் கோபத்திலிருந்து காப்பாற்றியது இந்த வேல்தானா, ஆயனரே?" என்று கேட்டார்.

"ஆமாம், பல்லவ குமாரா!" என்று ஆயனர் மேலும் ஏதோ சொல்லுவதற்குள் மாமல்லர் தந்தையைப் பார்த்து, "அப்பா! இந்த வேலுக்கு உடையவனைக் கட்டாயம் கண்டுபிடிக்க வேண்டும். அவன் நல்ல சமயத்தில் இத்தகைய வீரச் செயலைப் புரிந்திராவிட்டால், பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பியை அல்லவா இந்நேரம் இழந்திருப்போம்?" என்றார்.

அதற்குச் சக்கரவர்த்தி, "மகா சிற்பியை மட்டும்தானா? பல்லவ சாம்ராஜ்யத்தின் தலைசிறந்த கலைவாணியையும் இழந்திருப்போம்! அந்த வீரனைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியந்தான். இவர்கள் இப்போது புறப்பட்டுச் செல்லட்டும். ஏற்கனவே நேரம் அதிகமாகி விட்டது!" என்று சொல்லிவிட்டுச் சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! உன்னுடைய ஆட்டம் இன்று அற்புதமாயிருந்தது. முழுமையும் பார்க்கத் தான் முடியாமல் போயிற்று" என்றார்.

பின்னர் அவள் தந்தையை நோக்கி, "ஆயனரே! உம்முடன் பேசவேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. சீக்கிரத்தில் மாமல்லபுரம் வருகிறேன். இப்போது ஜாக்கிரதையாய்ப் போய்ச் சேருங்கள்" என்று சொன்னார்.

அங்கே தாம் நிற்கும் வரையில் ஆயனரும் அவர் மகளும் பல்லக்கில் ஏறமாட்டார்கள் என்பதை அறிந்த சக்கரவர்த்தி விரைந்து சென்று குதிரையின் மேல் ஏறினார். நரசிம்மவர்மரும் தம் குதிரைமீது ஏறிக்கொண்டார்.

குதிரைகள் புறப்படுமுன் மகேந்திர பல்லவர் தமக்குப் பின்னால் நின்ற வீரர்களில் ஒருவனைச் சைகையினால் கூப்பிட்டு, "அயலூரிலிருந்து புதிதாக வந்த இளைஞன் யாராயிருந்தாலும் இன்றிரவு அவனைப் பிடித்து வைத்திருந்து நாளைக்கு அரண்மனைக்கு அழைத்து வரவேண்டும். நகர்க்காப்புத் தலைவனுக்கு இந்தக் கட்டளையை உடனே தெரியப்படுத்து!" என்று ஆக்ஞாபித்தார்.

சக்கரவர்த்தியும் குமாரரும் அங்கிருந்து போனதும், ஆயனரும் சிவகாமியும் தங்கள் சிவிகையில் அமர்ந்தார்கள். காவலர் புடைசூழ, சிவிகை காஞ்சிக் கோட்டையின் கீழ் வாசலை நோக்கிச் சென்றது.

துர்ச்சகுனம்

வீதி ஓரத்திலிருந்த சுமைதாங்கியின் மீது பரஞ்சோதி சாய்ந்து கண்ணை மூடிக் கால்நாழிகைகூட இராது. ஏதோ பேச்சுக் குரலைக் கேட்டுத் தூக்கி வாரிப்போட்டுக்கொண்டு கண் விழித்தான். தெருவில் யாரோ இவ்விதம் பேசிக்கொண்டு போனார்கள்.

"கோயில் யானைக்கு மதம் பிடித்தால் துர்ச்சகுனம் என்று சொல்லுகிறார்களே!"

"ஆமாம்; நாட்டுக்கு ஏதோ பெரிய விபரீதம் வரப்போகிறது!"

"யானைக்கு எப்படி மதம் பிடித்ததாம்?"

"யாருக்குத் தெரியும்? யாரோ அசலூரான் ஒருவன் யானையின் மேல் வேலை வீசி எறிந்தானாம். அதனால் யானைக்கு வெறிபிடித்து விட்டது என்று சொல்லுகிறார்கள்."

"ஆயனச் சிற்பியும் அவருடைய மகளும் பிழைத்தது புனர் ஜன்மம் என்கிறார்களே?"

"அப்படித்தான். அரங்கேற்றம் நடுவில் நின்றது போதாதென்று இந்த ஆபத்து வேறே அவர்களுக்கு நேர்ந்தது."

அதற்குமேல் பரஞ்சோதிக்கு அவர்கள் பேசியது கேட்கவில்லை. "வேலை எறிந்ததனால் யானைக்கு வெறிபிடித்து விட்டதாம்!" என்னும் பேச்சுக் காதில் விழுந்ததும், பரஞ்சோதியின் உள்ளம் திடுக்கிட்டது. அப்போது அவனுக்கு இன்னொரு விஷயமும் ஞாபகம் வந்தது. அவன் கொண்டு வந்திருந்த மூட்டையை நடுத் தெருவிலேயே போட்டுவிட்டு அவன் ஓடி வந்துவிட்டான். நாவுக்கரசருக்கும் ஆயனச் சிற்பிக்கும் அவன் கொண்டு வந்திருந்த ஓலைகள் அந்த மூட்டையில் இருந்தன. இன்னும் அவனுடைய துணி மணிகளும், அவன் கொண்டு வந்திருந்த சொற்பப் பணமும் மூட்டைக்குள்ளேதான் இருந்தன. அதை அவசியம் கண்டுபிடித்தாக வேண்டும். போட்ட இடத்திலேயே மூட்டை கிடைக்குமா? திக்குத் திசை புரியாத இந்தப் பெரிய நகரத்தில் அந்த இடத்தை மறுபடியும் கண்டுபிடிப்பது எப்படி?

பரஞ்சோதி சுமைதாங்கியிலிருந்து இறங்கி, தான் ஓடி வந்த வழி எதுவாயிருக்குமென்று ஒருவாறு ஊகித்துக்கொண்டு அந்தத் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். இதற்குள் வீதிகளில் ஜன நடமாட்டம் வெகுவாகக் குறைந்து போயிருந்தது. வீட்டுக் கதவுகளையெல்லாம் சாத்தியாகி விட்டது. வீதி விளக்குகளை அணைத்துவிட்டார்கள். நல்ல வேளையாகப் பூரண சந்திரன் பால் போன்ற வெண்ணிலாவைப் பொழிந்துகொண்டிருந்தான். நிலா வெளிச்சத்தில் நாற்புறமும் கூர்மையாகப் பார்த்துக் கொண்டு பரஞ்சோதி வெகுநேரம் நடந்தான். எவ்வளவு நடந்தும், யானையைச் சந்தித்த இடத்தை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. மூட்டையையும் அவன் எங்கும் காணவில்லை.

நேரமாக ஆக, வீதிகளில் நிசப்தம் குடிகொண்டது. உச்சி வானத்தில் சந்திரனைப் பார்த்து அர்த்தராத்திரியாகிவிட்டது என்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான். கால்கள் இனி நடக்க முடியாதபடி சோர்ந்துபோயின. உடம்பை எங்கேயாவது கீழே போட்டால் போதும் என்று அவனுக்கு ஆகிவிட்டது. இனிமேல் மூட்டையைத் தேடுவதில் பயனில்லை. நாவுக்கரசர் மடத்துக்கு எப்படியாவது போய்ச் சேர்ந்தால் போதும்.

ஆனால், எப்படிப் போவது? வழி கேட்பதற்குக்கூட வீதிகளில் யாரையும் காணோம். லட்சக்கணக்கான ஜனங்கள் வாழ்ந்த அந்தப் பெரிய நகரத்தில் தான் மட்டும் தன்னந்தனியாக அலைவதை நினைத்தபோது பரஞ்சோதிக்கு எப்படியோ இருந்தது. ராத்திரியெல்லாம் இப்படியே அலைந்து கொண்டிருக்க வேண்டியதுதானா? ஆயிரக்கணக்கான மாளிகைகளும், மண்டபங்களும், வீடுகளும் நிறைந்துள்ள இந்த நகரில் தனக்கு இரவில் தங்குவதற்கு இடம் கிடையாதா? நல்ல வேளையாக இதோ யாரோ வருகிறார்கள் போலிருக்கிறது. பேச்சுக் குரல் கேட்கிறது அவர்களை விசாரித்துப் பார்க்கலாம்.

ஒரு வீதியின் முடுக்கில் இரண்டுபேர் பேசிக்கொண்டு வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் நகர்க் காவலர்கள் என்று தோன்றியது. பரஞ்சோதியைப் பார்த்ததும் அவர்களே நின்றார்கள்.

"யாரப்பா நீ? நடு ராத்திரியில் எங்கே கிளம்பினாய்?" என்று அவர்களில் ஒருவன் கேட்டான்.

"நான் அயலூர், ஐயா!..." என்று பரஞ்சோதி சொல்ல ஆரம்பிப்பதற்குள், முதலில் பேசியவன், "அயலூர் என்றால், எந்த ஊர்?" என்றான்.

"சோழ தேசம்.."

"ஓகோ உறையூரா?"

"இல்லை, ஐயா! கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி கிராமம். இன்று மாலைதான் காஞ்சிக்கு வந்து சேர்ந்தேன்."

"அப்படியா? இங்கு எதற்கு வந்தாய்?"

"நாவுக்கரசர் மடத்தில் தமிழ்ப் பயில்வதற்காக வந்தேன்."

"அப்படியானால், நள்ளிரவில் தெருவீதியில் ஏன் அலைகிறாய்?"

"மடம் இருக்குமிடம் தெரியவில்லை சாயங்காலத்திலிருந்து தேடிக்கொண்டிருக்கிறேன்."

அந்தக் காவலர்கள் இருவரும் இலேசாகச் சிரித்த சிரிப்பில் பரிகாசம் தொனித்தது. அவர்களில் ஒருவன், "நாவுக்கரசர் மடத்துக்கு நீ கட்டாயம் போகவேண்டுமா?" என்று கேட்டான்.

"ஆம், ஐயா!"

"நாங்கள் அந்தப் பக்கந்தான் போகிறோம். நீ வந்தால் அழைத்துக்கொண்டு போய்விடுகிறோம்."

பரஞ்சோதி காவலர்களுக்கு வந்தனம் சொல்லிவிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான். சற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள் உயரமான மதில் சுவர்களையுடைய ஒரு கட்டிடத்தின் வாசலில் வந்து நின்றார்கள்.

"இதுதான் மடமா?" என்று கேட்டான் பரஞ்சோதி.

"ஆமாம், பார்த்தால் இது மடமாகத் தோன்றவில்லையா?"

உண்மையில் பரஞ்சோதிக்கு அது மடமாகத் தோன்றவில்லை. அருகில் கோயில் எதையும் காணவில்லை. கட்டிடத்தின் உயரமான சுவர்களும், வாசற் கதவில் பூட்டியிருந்த பெரிய பூட்டும் அவனுக்கு இன்னதென்று தெரியாத சந்தேகத்தை உண்டாக்கின.

அவனை அழைத்துப் போனவர்களில் ஒருவன் வாசற் கதவண்டை சென்று அங்கேயிருந்த காவலாளியிடம் ஏதோ சொன்னான். உடனே பூட்டுத் திறக்கப்பட்டது. கதவும் திறந்தது.

"வா, தம்பி!" நெஞ்சு திக்திக் என்று அடித்துக்கொள்ள, பரஞ்சோதி வாசற்படியைத் தாண்டி உள்ளே சென்றான்.

இரு புறமும் உயரமான சுவர் எழுப்பிய குறுகிய சந்தின் வழியாக அவனை அழைத்துப் போனார்கள். ஓரிடத்தில் நின்றார்கள் அங்கிருந்த அறையின் கதவு திறக்கப்பட்டது.

"இங்கே படுத்திரு, மடத்தில் எல்லோரும் தூங்குகிறார்கள் பொழுது விடிந்து பார்த்துக் கொள்ளலாம்" என்றான் ஒருவன்.

பரஞ்சோதி அந்த இருட்டறைக்குள் எட்டிப் பார்த்தான். கொஞ்சம் வைக்கோலும் ஒரு கோரைப் பாயும் கிடந்தன. ஒரு மூலையில் சட்டியில் தண்ணீர் வைத்திருந்தது.

திரும்பித் தன்னுடன் வந்த காவலர்களைப் பார்த்து, "இது மடந்தானா?" என்று கேட்டான்.

"ஆமாம், தம்பி! உனக்கு என்ன சந்தேகம்?" என்றான் காவலர்களில் ஒருவன்.

"இங்கிருக்க விருப்பம் இல்லாவிட்டால் வெளியே போய்விடு!" என்றான் இன்னொருவன்.

பரஞ்சோதிக்கு இருந்த களைப்பில் எப்படியாவது இராத்திரி படுத்துத் தூங்க இடம் கிடைத்தால் போதும் என்று இருந்தது. "இல்லை இங்கேயே நான் படுத்திருக்கிறேன்" என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தான்.

அப்போது அவனை அழைத்து வந்தவர்களில் ஒருவன், "தம்பி! இது மடந்தான் ஆனால், நாவுக்கரசர் மடமல்ல. மன்னர் மன்னரான மகேந்திர சக்கரவர்த்தியின் மடம்!" என்று சொல்லிக் கொண்டே கதவைச் சாத்தினான். அடுத்த கணம் அறைக் கதவைப் பூட்டும் சத்தம் கேட்டது!

செல்லப்பிள்ளை

பொன்னி நதி தன் பல்லாயிரம் கைகளாலும் வளப்படுத்திப் பொன் கொழிக்கச் செய்யும் கீழைச் சோழ நாட்டில் செங்காட்டங்குடி என்ற கிராமம் செழித்து விளங்கிற்று. இந்தக் கிராமத்தில் மாமாத்திரர் என்று பட்டம் பெற்ற பழங்குடியில் பிறந்த பிள்ளை பரஞ்சோதி. சோழநாடு முழுதும் உறையூர்ச் சோழ மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்த பழைய காலத்தில் பரஞ்சோதியின் மூதாதைகள் இராஜ சேவையில் ஈடுபட்டுப் படைத் தலைவர்களாயிருந்தார்கள். சோழ வம்சம் பழம்பெருமை இழந்து, பல்லவர் ஆட்சி ஓங்கியபோது மாமாத்திரர் குலமும் அதன் சிறப்பை இழந்தது. சென்ற சில தலைமுறைகளாக மாமாத்திரர் போர்த் தொழிலையும் எல்லைக் காவல் தொழிலையும் கைவிட்டு விவசாயத் தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.

இத்தகைய குலத்திலே பிறந்த பரஞ்சோதி குழந்தைப் பிராயத்திலேயே, தந்தையை இழந்து, தாயாரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்தான். 'முரடன்', 'பொல்லாதவன்' என்று அக்கம் பக்கங்களில் பெயர் வாங்கினான். சண்டை என்பது அவனுக்குச் சர்க்கரையும் பாலுமாக இருந்தது. போர்த் தொழிலுக்குரிய சாதனங்களில் இயற்கையாக அவன் புத்தி சென்றது. வீராதி வீரர்களென்று புகழ் பெற்ற அவனுடைய மூதாதைகளின் வீர இரத்தம் பரஞ்சோதியின் தேகத்தில் அலை மோதிக்கொண்டு ஓடியது. கழி விளையாட்டு, கத்தி விளையாட்டு, மல்யுத்தம், வேல் எறிதல் ஆகியவற்றில் அவன் அதிவிரைவாகத் தேர்ச்சிபெற்றான்.

பரஞ்சோதியின் தாயார் வடிவழகி அம்மை தன் ஏக புத்திரனிடம் உயிரையே வைத்திருந்தாள். ஆனாலும், பரஞ்சோதியின் முரட்டுக் காரியங்கள் அவளுக்குப் பெரிதும் கவலையை அளித்தன. அந்த மூதாட்டி சிவபக்திச் செலுத்துவதிலும் கலைச் செல்வத்திலும் சிறந்த குடும்பத்திலே பிறந்தவள். அவளுடைய தமையனார் திருவெண்காட்டுப்பதியில் புகழுடன் வசித்த மருத்துவர்; சிவநேசச் செல்வர். தெய்வத் தமிழ் மொழியை நன்கு பயின்றிருந்ததோடு வடமொழியிலும் அவர் புலமை பெற்று விளங்கினார். வைத்தியக் கலையில் தேர்ச்சிபெற்று நோய் தீர்ப்பதில் வல்லவராய் இருந்தார்.

அந்தச் சிவபக்தரின் மூத்த பெண்ணுக்கு உமையாள் என்று பெயர். அழகிலும் குணத்திலும் அவள் இணையற்று விளங்கியது போலக் கல்வியிலும் சிவபக்தியிலும் சிறந்து விளங்கினாள். இந்தத் திருவெண்காட்டுப் பெண்ணைத் தன் மகனுக்கு மணம் முடித்து வைக்கவேண்டுமென்று பரஞ்சோதியின் அன்னை அந்தரங்கத்தில் ஆசைகொண்டிருந்தாள். ஆனால், நிறைவேறுமா என்ற சந்தேகமும் கவலையும் அவளுடைய மனத்தில் குடிகொண்டிருந்தன. பல துறைகளிலும் புலமை மிகுந்த அவளுடைய தமையனார் இந்த முரட்டுப் பிள்ளைக்குத் தம் அருமைப் பெண்ணைக் கொடுப்பாரா?

பரஞ்சோதியைக் கல்வி கேள்விகளில் வல்லவனாக்க அவனுடைய தாயார் எவ்வளவோ பிரயத்தனம் செய்தாள். ஆனால், பரஞ்சோதிக்குக் கல்வி கற்பிக்க முயன்ற அண்ணாவிகள் எல்லாரும் தோல்வியே அடைந்தனர். அவர்களில் ஒருவராவது அதிக காலம் நீடித்து அந்த முயற்சியைச் செய்யவில்லை. ஒவ்வொருவரும் சிலகாலம் முயன்று பார்த்தபிறகு, அந்த மூதாட்டியிடம் வந்து, "அம்மா! உங்கள் புதல்வன் வெகு புத்திசாலி; ஏகசந்தக்கிராஹி என்றே சொல்லலாம். எந்த விஷயத்தையும் கவனம் செலுத்தி ஒரு தடவை கேட்டால் போதும் உடனே தெரிந்து கொள்கிறான். ஆனால் அந்த ஒரு தடவை அவனைக் கவனித்துக் கேட்கும்படி செய்வதற்குள்ளே எங்கள் பிராணன் போய்விடுகிறது. அவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் சக்தி எங்களுக்கு இல்லை" என்று சொல்லிவிட்டு போனார்கள்.

இரண்டொரு அண்ணாவிமார் பரஞ்சோதி விஷயத்தில் தண்ட உபாயத்தைக் கையாளப் பார்த்தார்கள். அதன் பயனாக அவர்கள் அவனுடைய தாயாரிடம் சொல்லிக் கொள்ளமலே ஊரைவிட்டுப் போகும்படி நேர்ந்துவிட்டது!

இதனாலெல்லாம் பரஞ்சோதியின் தாய் மிகவும் கவலை கொண்டிருந்தாள். ஒரு வருஷம் பொங்கல் பண்டிகைக்காகப் பரஞ்சோதியும் வடிவழகி அம்மையும் திருவெண்காட்டுக்குப் போயிருந்தார்கள். அங்கே பரஞ்சோதி உமையாளைப் பார்த்தான். உமையாளின் கல்யாணத்தைப் பற்றிப் பேச்சு நடப்பதைக் கேட்டான். தன் மாமனும் தாயாரும் தன்னைப் பற்றி வருத்தத்துடனும் கவலையுடனும் பேசிக் கொண்டிருந்ததும் அவன் காதில் விழுந்தது. எல்லாவற்றையும் சேர்த்து, நிலைமையை ஒருவாறு தெரிந்து கொண்டான்.

அவர்கள் திருவெண்காட்டிலிருந்து திரும்பித் திருச்செங்காட்டங்குடிக்கு வந்தபிறகு, ஒருநாள் பரஞ்சோதியின் தாயார் தரையில் படுத்த வண்ணம் கண்ணீர் உகுத்துக் கொண்டிருந்தாள். எங்கேயோ வெளியே போய்விட்டு வந்த பரஞ்சோதி இதைப் பார்த்து, தாயாரின் அருகில் வந்து உட்கார்ந்து கொண்டான். அன்னை எதற்காக அழுகிறாள் என்று அவன் கேட்கவில்லை. அவளுக்குச் சமாதானமும் சொல்லவில்லை.

"அம்மா! நான் ஒன்று சொல்கிறேன்; நீ அதற்குத் தடை சொல்லக்கூடாது" என்றான்.

அன்னை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "என்னடா, என் கண்ணே!" என்றாள்.

"நான் காஞ்சி மாநகருக்குப் போகப் போகிறேன்" என்று பரஞ்சோதி சொன்னதும், திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

"எதற்காக?" என்று கேட்டாள்.

"கல்வி கற்பதற்காகத்தான், அம்மா! இத்தனை நாளும் நான் கல்வி கற்காமல் வாணாளை வீணாய்க் கழித்து விட்டதை நினைத்தால் வருத்தமாயிருக்கிறது!" என்றான் பரஞ்சோதி.

தாயாருக்கு ஆனந்தக் கண்ணீரும் துக்கக் கண்ணீரும் சேர்ந்தாற்போல் கண்களில் துளித்தன.

"கல்வி கற்பதற்குக் காஞ்சிக்குப் போவானேன். இங்கேயே படிக்கக் கூடாதா, குழந்தாய்?" என்றாள்.

"இந்த ஊரில் இருக்கும் வரையில் எனக்குப் படிப்பு வராது. நல்ல கல்விப் பயிற்சி பெறவேண்டுமென்றால், காஞ்சி மாநகருக்குத் தான் போகவேண்டுமென்று எல்லோரும் சொல்கிறார்கள். இந்தப் பரத கண்டத்திலேயே காஞ்சியில் உள்ளவை போன்ற கல்லூரிகளும் கலைக்கூடங்களும் வேறெங்கும் இல்லையாம். நான் எல்லாம் விசாரித்துத் தெரிந்து கொண்டேன் அம்மா!" என்றான் பரஞ்சோதி.

பரஞ்சோதி கூறியது உண்மைதான் அந்த நாளில் காஞ்சி மாநகரமானது கலைமகளுக்கு உறைவிடமாயிருந்தது. வடமொழிக் கல்வி அளித்த வேத கடிகைகளும், தமிழ்க் கல்வி பயில்வித்த திருமடங்களும், பௌத்தர்களின் மதபோதனைக் கல்லூரிகளும், சமண சமயப் பள்ளிகளும் காஞ்சியில் நிறைந்திருந்தன. இன்னும் சித்திரம், சிற்பம், சங்கீதம் ஆகிய அருங்கலைகளைப் பயில்வதற்குச் சிறந்த கலைக் கழகங்களும் இருந்தன.

இவற்றையெல்லாம்விட காஞ்சி மாநகருக்குப் பெருஞ்சிறப்பு அளித்து தமிழகமெங்கும் பெருங்கிளர்ச்சி உண்டாக்கிய சம்பவம் ஒன்று சில காலத்துக்கு முன்பு நிகழ்ந்திருந்தது. அந்தச் சம்பவம் மகா வீரரும் மகா புத்திமானும் சகலகலா வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி, திருநாவுக்கரசரின் மகிமையினால் சமண மதத்தைத் துறந்து சிவநேசச் செல்வரானதுதான்.

மருள் நீக்கியார் என்னும் இயற்பெயர் கொண்ட நாவுக்கரசர் சிலகாலம் தர்மசேனர் என்ற பெயருடன் சமண சமயப் போதகர்களில் புகழ்பெற்றவராய் விளங்கினார். பின்னர், அவருடைய சகோதரி திலகவதியாரின் சிவபக்தி காரணமாக அவர் சமண மதத்தைத் துறந்து சிவனடியாரானார். அதுமுதல், தேனினும் இனிய தமிழ்மொழியில் சிவபக்தி ததும்பும் பண்களையும் தாண்டகங்களையும் அமுத வெள்ளமாகப் பொழிந்து வந்தார். அந்தத் தெய்வீகப் பாடல்களின் மகிமையில் ஈடுபட்ட மகேந்திர சக்கரவர்த்தியானவர், 'நான் நாட்டுக்கரசன், தாங்கள் நாவுக்கரசர்' என்று மருள்நீக்கியாரைப் போற்றியதோடு, சமண மதத்தையே துறந்து சிவநேசராகிவிட்டார். இந்த வரலாறு தமிழகமெங்கும் பரவியிருந்தது. மேற்கூறிய, அதிசயங்களைப் பற்றியே இந்தக் காலத்தில் எங்கெங்கும் வியப்புடன் ஜனங்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மகேந்திர சக்கரவர்த்தியினது வேண்டுகோளின்பேரில் நாவுக்கரசர் காஞ்சியில் திருமடம் ஸ்தாபித்திருக்கிறார் என்றும், அந்த மடத்தில் தெய்வத் தமிழ்மொழியும், தெய்வீக இசைப்பாடல்களும் கற்பிக்கப்படுகின்றன என்றும் நாடெங்கும் பிரசித்தமாகியிருந்தன. இந்தச் செய்திகள் எல்லாம் பரஞ்சோதியின் காதிலும் விழுந்திருந்தபடியால்தான், 'கல்வி கற்கக் காஞ்சிக்குப் போகிறேன்' என்று அவன் தாயாரிடம் கூறினான்.

ஏக புதல்வனைப் பிரிந்திருக்க வேண்டுமென்பதை நினைத்து வடிவழகி அம்மை பெரும் வேதனையை அடைந்த போதிலும், 'கல்வி கற்கப் போகிறேன்' என்று பரஞ்சோதி கூறியது அவளுக்கு ஒரு பக்கத்தில் அளவில்லாத மகிழ்ச்சியையும் அளித்தது. தாயாரின் சம்மதத்தைத் தெரிந்து கொண்டதும் பரஞ்சோதி, "அம்மா! நீ மாமாவிடம் சொல்லி நான் கல்வி கற்றுத் திரும்பி வரும்வரையில் உமையாளுக்குக் கலியாணம் செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று கூறிய போது, மகனுடைய மன நிலையை அறிந்து கொண்டு அன்னை மீண்டும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்.

பரஞ்சோதியின் தீர்மானத்தை அறிந்து அவனுடைய மாமனும் அளவற்ற மகிழ்ச்சியடைந்தார். அந்தச் சிவபக்தர் திருநாவுக்கரசரைத் தரிசித்து அவருடன் நட்புரிமை பூண்டவராதலால் நாவுக்கரசருக்கு ஓலை எழுதித் தருவதாகச் சொன்னார். தமிழ்க் கல்வியோடு ஏதேனும் ஒரு கலையும் அவன் கற்று வரவேண்டுமென்றும் இதன் பொருட்டுத் தம்முடைய பழைய சிநேகிதரான ஆயனருக்கு ஓலை தருவதாகவும் கூறினார். பரஞ்சோதியின் மன நிலையை அறிந்துகொண்டு அவன் கல்வி பயின்று திரும்பியதும் உமையாளை அவனுக்கே மணம் செய்து தருவதாகவும் உறுதி கூறினார்.

நல்லநாள், நல்ல வேளையில் பரஞ்சோதி அன்னையிடமும் மாமனிடமும் ஆசிபெற்று, மற்ற எல்லோரிடமும் விடைபெற்றுக் கொண்டு காஞ்சி மாநகருக்குப் புறப்பட்டான்.

புறப்படும்போது, கடைசியாக அவனுடைய மாமன் கூறிய புத்திமதி என்னவென்றால், "அப்பா, பரஞ்சோதி! தூரவழி போகும்போது கையில் வேலுடன் நீ புறப்படுவது நியாயந்தான். ஆனால் வழிப்பிரயாணத்துக்கு மட்டும் வேலைத் துணையாக வைத்துக் கொள், காஞ்சி மாநகரை அடைந்ததும், வேலைத் தலையைச் சுற்றி வீசி எறிந்துவிடு. அப்புறம் கல்வி கற்பதிலேயே முழுக் கவனத்தையும் செலுத்து" என்பதுதான்.

மர்மக் கயிறு

சிறைக்கூடத்தின் இருள் சூழ்ந்த அறைக்குள்ளே கோரைப் பாயில் தன்னந்தனியாகப் படுத்திருந்த பரஞ்சோதிக்கு மேற்கூறிய மாமனுடைய புத்திமதி நினைவுக்கு வந்தது. காஞ்சி மாநகரை அடைந்ததும் மாமனுடைய புத்திமதியின் பிரகாரம் அவன் வேலை வீசி எறியத்தான் செய்தான்! ஆனால், அந்தப் பொல்லாத வேல் மதங்கொண்ட யானையின் மீது விழுந்து தொலைத்தது! அதனுடைய பலன்தான் தன்னைச் சிறையிலே கொண்டுவந்து சேர்த்தது என்பதை எண்ணியபோது பரஞ்சோதிக்குச் சிரிப்பு வந்தது.

காஞ்சி மாநகர் சேர்ந்த முதல்நாள் இரவைத் தான் சிறைச்சாலையில் கழிக்க வேண்டியிருந்தது என்பதை அவனுடைய தாயும் மாமனும் அறிந்தால் என்ன நினைப்பார்கள்? தான் காஞ்சிக்குப் புறப்பட்ட சமயத்தில், வீட்டுச் சுவருக்கு அப்பால் தனியாக நின்று கனிவும், கண்ணீரும் ததும்பிய கண்களினால் விடை கொடுத்த உமையாளுக்குத் தான் என்னமாயிருக்கும்?

காஞ்சியில் தமிழ்க் கல்வியும், சிற்பக் கலையும் கற்றுக் கொண்டு திரும்பி ஊருக்குப் போனதும், இந்த முதல்நாள் சம்பவத்தைச் சொன்னால், அவர்கள் ஒருவேளை நம்ப மறுத்தாலும், மறுக்கலாம். இன்று மத்தியானம் தன்னிடம் யாராவது, இப்படியெல்லாம் நடக்கும் என்று சொல்லியிருந்தால் நம்பியிருக்க முடியுமா?

சட்டென்று பரஞ்சோதிக்கு ஒரு விஷயம் நினைவு வந்தது. அந்த புத்த சந்நியாசி என்ன சொன்னார்? இன்று இரவு உனக்கு ஒரு கஷ்டம் வரும் என்று சொன்னாரல்லவா? அது உண்மையாகி விட்டதே! உண்மையிலேயே அவர் முக்காலமும் உணர்ந்த முனிவரா?

அன்று நண்பகலில் அந்தப் புத்த சந்நியாசியை அவன் சந்தித்த சம்பவத்தை நினைத்துக்கொண்டு பரஞ்சோதி தனக்குத் தானே நகைத்துக்கொண்டான். அந்தச் சம்பவம் பின்வருமாறு.

காலையெல்லாம் வழி நடந்த பிறகு, காஞ்சி நகர் இன்னும் ஒரு காத தூரத்தில்தான் இருக்கிறது என்று பரஞ்சோதி தெரிந்து கொண்டு சற்று இளைப்பாறிச் செல்லலாமென்று சாலை ஓரத்தில் ஒரு மரத்தடியில் படுத்துக் கொண்டான். அவனுடைய தலை மாட்டில் மூட்டையும் அவன் பக்கத்தில் வேலாயுதமும் கிடந்தன.

சிறிது நேரத்துக்கெல்லாம் சாலையோடு ஒரு புத்த சந்நியாசி வருவதை அவன் பார்த்தான். புத்தர்கள் அல்லது சமணர்களுடைய கூட்டுறவு கூடாதென்றும், அவர்களைக் கண்டால் தூர விலகிப்போய்விட வேண்டுமென்றும் அவனுடைய மாமனும் அன்னையும் மிகவும் வற்புறுத்திக் கூறியிருந்தார்கள். எனவே, தூரத்தில் புத்த சந்நியாசியைக் கண்டதும் பரஞ்சோதி கண்களை மூடிக் கொண்டான். அவர் தன்னைத் தாண்டிச் சாலையோடு தொலை தூரம் போகும் வரையில் தூங்குவது போல் பாசாங்கு செய்ய அவன் தீர்மானித்திருந்தான்.

சிறிது நேரத்துக்கெல்லாம் தனக்கு அருகில் வந்து யாரோ நிற்பது போலவும் தன்னை உற்றுப் பார்ப்பது போலவும் அவனுக்குத் தோன்றியது மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான். பரஞ்சோதி அஞ்சா நெஞ்சம் படைத்த வாலிபன்தான் ஆனாலும் கண்ணைத் திறந்ததும் எதிரில் கண்ட காட்சி அவனைத் துணுக்குறச் செய்தது.

புத்த சந்நியாசி அவனுக்கு அருகில் வந்து நின்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தோற்றம் அவனுக்கு அச்சத்தை அளித்தது. அதைக் காட்டிலும் அவர் கையில் வாலைப் பிடித்துத் தலைகீழாகத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த பாம்பு அதிக அருவருப்பையும் பயங்கரத்தையும் அளித்தது.

ஐந்து அடி நீளமுள்ள நாகசர்ப்பம் அது. ஆனால், உயிர் இல்லாதது! அதனுடைய உடலில் இரத்தம் கசிந்தது.

பரஞ்சோதி பரபரப்புடன் எழுந்து, "அடிகளே! இது என்ன வேடிக்கை? எதற்காகச் செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? தூர எறியுங்கள்!" என்றான்.

"பிள்ளாய்! இவ்வாறு காட்டுப் பிரதேசத்தில் தனியாகப் படுத்து உறங்கலாமா? இத்தனை நேரம் இந்த நாக சர்ப்பம் உன்னைத் தீண்டியிருக்குமே. நல்ல சமயத்தில் நான் வந்து இதை அடித்தேனோ, நீ பிழைத்தாயோ?" என்று சொல்லி விட்டு, புத்த சந்நியாசி அந்தச் செத்த பாம்பை தூர எறிந்தார்.

பரஞ்சோதி தன் முகத்தில் தோன்றிய புன்சிரிப்பை மறைத்துக்கொண்டு, "அப்படியா அடிகளே! நான் ஒரு தாய்க்கு ஒரே பிள்ளை. என்னை நீங்கள் காப்பாற்றியதற்காக என் தாயார் தங்களுக்கு ரொம்பவும் நன்றி செலுத்துவாள்" என்றான்.

பிறகு அவன் மூட்டையையும் வேலையும் எடுத்துக் கொண்டு எழுந்து நின்று, "தங்கள் திருநாமம் என்னவோ? என் தாயாரிடம் எப்போதாவது தங்களைப்பற்றிச் சொல்ல நேர்ந்தால்?..." என்பதற்குள் பிக்ஷு குறுக்கிட்டு, "நாகநந்தி என்பார்கள்; நீ எவ்விடத்துக்குச் செல்கிறாய் தம்பி?" என்று கேட்டார்.

"காஞ்சிக்குப் போகிறேன்" என்று பரஞ்சோதி கூறியதும் "நானும் அங்கேதான் போகிறேன்! வழித்துணை ஆயிற்று, வா, போகலாம்!" என்றார் நாகநந்தி அடிகள்.

இருண்ட சிறையில் கோரைப்பாயில் படுத்திருந்த பரஞ்சோதி, 'அந்தப் புத்த பிக்ஷுவுக்கு நாகநந்தி, என்பது எவ்வளவு பொருத்தமான பெயர்! அவர் முகத்தைப் பார்த்தாலே நாகப் பாம்பின் ஞாபகம் வருகிறது!' என்று எண்ணமிட்டான்.

நாகநந்தி அடிகள் வருங்காலத்தை ஞான திருஷ்டியினால் அறிந்துதான் சொன்னாரோ, அல்லது குருட்டம் போக்காய்ச் சொன்னாரோ, அவருடைய ஜோசியத்தில் முற்பகுதி நிறைவேறிவிட்டது. தான் இப்போது ஒரு கஷ்டத்தில் அகப்பட்டுக் கொண்டிருப்பது உண்மைதான். அவருடைய ஜோசியத்தின் இன்னொரு பகுதியும் நிறைவேறுமா? 'புத்த பகவான் அருளால் அந்தக் கஷ்டம் நீங்கும்!" என்று சொன்னது பலிக்குமா? ஆம்; பலிக்கத்தான் வேண்டும்.

உண்மையில் பரஞ்சோதி தன்னுடைய நிலைமையைக் குறித்து அதிகக் கவலைப்படவில்லை. ஏதோ தவறுதலினால் தன்னைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றும் உண்மை தெரியும்போது தன்னை நிச்சயம் விடுதலை செய்து விடுவார்கள் என்றும் உறுதியாக நம்பினான்.

எனவே, இன்றிரவு நிம்மதியாகத் தூங்குவதுதான் சரி. ஆனால், ஏன் தூக்கம் வரமாட்டேன் என்கிறது? ஓகோ! எல்லாம் இந்த ஒரு சாண் வயிறு செய்யும் காரியந்தான். இராத்திரி ஒன்றும் சாப்பிடவில்லையல்லவா? பசி வயிற்றைக் கிள்ளுகிறது! அதனால்தான் தூக்கம் பிடிக்கவில்லை. நல்ல காஞ்சி நகரம்! நெடுந்தூரம் யாத்திரை செய்து வந்த அதிதிகளை இராப்பட்டினி போட்டுக் கொல்லுகிற இந்த நகரத்தைப்பற்றி என்னத்தைச் சொல்வது! காஞ்சி நகரை அணுகியபோது அந்தத் திகம்பர ஜைன முனிவர் எதிர்பட்டார் அல்லவா? அந்த இராப்பட்டினிக்காரனின் முகதரிசனத்தின் பலன்தான் இன்றிரவு தனக்கு அன்னம் அபாவமாய்ப் போய்விட்டது போலும்...!

மேற்சொன்னவாறு பரஞ்சோதி சிந்தனை செய்து கொண்டிருக்கையில், அந்த அறையில் உண்டான ஒரு மாறுதல் அவனுடைய கவனத்தைச் சட்டென்று கவர்ந்தது. சற்று முன் வரையில் இருள் சூழ்ந்திருந்த அந்த அறையில் இப்போது கொஞ்சம் வெளிச்சம் காணப்பட்டது. இந்த மாறுதலுக்குக் காரணம் என்னவென்று அதிசயித்துப் பரஞ்சோதி மேலே பார்த்தான். கூரையில் இருந்த சிறு துவாரத்தின் வழியாகச் சந்திர கிரணம் உள்ளே புகுந்து வந்ததுதான் என்று தெரிந்தது. இத்தனை நேரம் இல்லாமல் இப்போது திடீரென்று மேற்படி துவாரம் எப்படி ஏற்பட்டது என்று ஒரு கணம் பரஞ்சோதிக்கு வியப்பாயிருந்தது. "இல்லை, இல்லை! துவாரம் எப்போதும் இருந்திருக்க வேண்டும். ஆனால் துவாரத்துக்கு நேராக இப்போதுதான் சந்திரன் வந்திருக்கிறது!" என்று தனக்குத்தானே சந்தேக நிவர்த்தி செய்து கொண்டான். ஆம்; பூரணச் சந்திரனுடைய மோகன நிலவானது வெளி உலகத்தையெல்லாம் அப்போது சொப்பன சௌந்தரிய லோகமாகச் செய்து கொண்டிருக்கிறது! அந்த விஷயத்தைத் தனக்கு எடுத்துச் சொல்லித் தன்னுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வதற்காகவே மேற்கூரைத் துவாரத்தின் வழியாக அந்தச் சந்திர கிரணம் உள்ளே புகுந்து வருகிறது போலும்...!

ஆகா! இது என்ன? உள்ளே வரும் நிலவு வெளிச்சம் இவ்வளவு அதிகமாகி விட்டதே! துவாரம் பெரிதாகியிருப்பது போல் தோன்றுகிறதே! அடடே! முதலில் பார்த்தபோது ஒரு கைகூட நுழையமுடியாத சிறு துவாரமாயிருந்தது இப்போது ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாகிவிட்டதே! இது என்ன இந்திர ஜாலமா? அல்லது மகேந்திர ஜாலமா? மகேந்திர சக்கரவர்த்தியின் காஞ்சி மாநகரம் மாய ஜால நகரமாயிருக்கிறதே!

ஐயையோ! இது என்ன பயங்கரம்?.. பரஞ்சோதியின் மூச்சு ஒரு நிமிஷம் நின்று போய்விட்டது! மேற்கூரைத் துவாரத்தின் வழியாக நெளிந்து நெளிந்து கீழே வந்தது ஒரு நீளமான பாம்பு!.. இல்லை, இல்லை! பாம்பு இல்லை!... அது வெறும் கயிறுதான்! சீ! இன்று மத்தியானம் அந்த புத்த பிக்ஷு செத்த பாம்புடன் வந்து தன்னைத் திடுக்கிடச் செய்தாலும் செய்தார்! கயிற்றைப் பார்த்தால்கூடப் பாம்பு மாதிரி தோன்றுகிறது.

மேற்கூரைத் துவாரத்தின் மர்மம் இப்போது புலப்பட்டது. யாரோ வேண்டுமென்றுதான் கூரையில் துவாரம் செய்திருக்கிறார்கள். அதன் வழியாக கயிற்றை உள்ளே விடுகிறார்கள்!..எதற்காக? வேறு எதற்காக இருக்கும்? தன்னைத் தப்புவிப்பதற்காகத்தான்! ஆனால், முன்பின் தெரியாத இந்தப் பெரிய நகரில் தன்னிடம் அவ்வளவு சிரத்தை கொண்டிருப்பவர்கள் யார்? தான் அந்தச் சிறைச்சாலை அறையில் இருப்பது அவர்களுக்கு எப்படித் தெரிந்தது?

இதற்குள்ளாகக் கயிற்றின் முனை கீழே அவன் கைக்கு எட்டும் தூரத்துக்கு வந்துவிட்டது. இன்னும் கீழே வந்து தரையையும் தொட்டுவிட்டது, பிறகு, அந்தக் கயிறு இப்படியும் அப்படியும் அசையத் தொடங்கியது. மேலேயிருந்து கயிற்றை விட்டவர்கள் அதைக் குலுக்குகிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. எதற்காக? தன்னை அந்தக் கயிற்றின் வழியாக மேலே வரும்படி சமிக்ஞை செய்கிறார்களா? அப்படித்தான் இருக்க வேண்டும்.

அதிசயமான முறையில் வந்த அந்த உதவியைப் பெற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று பரஞ்சோதி ஒரு நிமிஷம் யோசனை செய்தான். அதனால் வேறு என்ன தொல்லைகள் விளையுமோ என்பதாக ஒரு பக்கம் அவனுக்கு யோசனையாயிருந்தது. இவ்வளவு சிரத்தை எடுத்துத் தன்னைக் காப்பாற்ற விரும்புகிறவர்கள் யார் என்று தெரிந்துகொள்ள ஒரு பக்கம் அவனுக்குப் பேராவல் உண்டாயிற்று. அதோடு, இன்னொரு முக்கிய காரணமும் சேர்ந்தது! அது அவனுடைய வயிற்றைக் கிள்ளிக் கொண்டிருந்த பசிதான்!

பரஞ்சோதி கயிற்றை அழுத்தமாய்ப் பிடித்து இழுத்தான். மேலே அது இறுகக் கட்டியிருக்கிறதென்று தெரிந்தது. தன்னுடைய பாரத்தை அது நன்றாய்த் தாங்கும் என்று நிச்சயமாயிற்று. உடனே கயிற்றின் வழியாக அவன் மேலே ஏறத் தொடங்கினான்.

நிலா முற்றம்

ஆயனரிடமும் சிவகாமியிடமும் விடை பெற்றுக் கொண்ட பிறகு மகேந்திர சக்கரவர்த்தியும் மாமல்லரும், குதிரைகளைத் திருப்பி அதிவேகமாய் விட்டுக்கொண்டு போய், அரண்மனையை அடைந்தார்கள். அவர்களைக் கண்டதும் அரண்மனை வாசலில் காவல்புரிந்து கொண்டிருந்த வீரர்கள், "வாழ்க! வாழ்க சக்கரவர்த்திப் பெருமான்! வாழ்க! மாமல்ல மகா வீரர் வாழ்க!" என்று கோஷித்துக் கொண்டு அவர்களுக்கு வணங்கி வழிவிட்டு நின்றார்கள். காவலர்களுடைய வாழ்த்து ஒலியுடன் அங்கே வரிசை வரிசையாக நின்ற குதிரைகளின் கனைப்பு ஒலியும் சேர்ந்தது. அரண்மனை முன் வாசலைத் தாண்டி அவர்கள் உள்ளே நுழைந்ததும் அங்கேயிருந்த விசாலமான நிலா முற்றத்தில் வீரர்கள் பலர் அணி வகுத்து நிற்பது தெரிந்தது. சக்கரவர்த்தியையும் குமார பல்லவரையும் கண்டதும் அந்த வீரர்களும் ஜயகோஷம் செய்தார்கள்.

எல்லோருக்கும் முன்னால் நின்ற ஒருவர் மட்டும் தனியே பிரிந்து முன்னால் வந்து பணிவுடன் நிற்க, சக்கரவர்த்தி அவரைப் பார்த்து, "சேனாதிபதி! தூதர்களுக்கு எல்லா விஷயமும் சொல்லியாகி விட்டதா! புறப்படுவதற்கு ஆயத்தமாயிருக்கிறார்களா?" என்று கேட்டார்.

"ஆம், பிரபு! எல்லோருக்கும் சொல்லியாகிவிட்டது. அவரவர்களும் இன்னின்ன திக்குக்குச் செல்ல வேண்டுமென்று தெரிவித்து விட்டேன். எல்லோரும் கிளம்ப ஆயத்தமாய்த் தங்களுடைய கட்டளைக்காகக் காத்திருக்கிறார்கள்" என்று சேனாதிபதி கூறினார்.

சக்கரவர்த்தி நரசிம்மவர்மரைப் பார்த்து, "குழந்தாய்! உன் தாயார் கவலையுடன் இருப்பாள். அவளிடம் சென்று விஷயம் இன்னதென்று தெரியப்படுத்து. இருவரும் போஜனத்தை முடித்துக்கொண்டு, மேல் மாடத்துக்குச் செல்லுங்கள். இந்தத் தூதர்களை அனுப்பிவிட்டு நானும் அங்கு வந்து சேருகிறேன்" என்றார்.

வெகுகாலம் சமணராயிருந்த காரணத்தினால் சக்கரவர்த்தி இரவில் போஜனம் செய்வதில்லை. சைவரான பிறகும் அவர் இரவில் உணவு அருந்தும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை.

"ஆகட்டும் அப்பா! இதோ போகிறேன், ஆனால் எல்லாப் படைகளும் வந்து சேரும் வரையில் காத்திருக்க வேண்டுமா? ஆயத்தமாயிருக்கும் படைகள் உடனே போருக்குப் புறப்படலாமல்லவா?"

சக்கரவர்த்தி புன்னகையுடன், "அதைப்பற்றி யோசிக்கலாம், குழந்தாய்! நீ இப்போது தாயாரைப் போய்ப் பார்!" என்றார்.

மாமல்லர் போன பிறகு மகேந்திரர் சேனாதிபதியைப் பார்த்து, "கலிப்பகையாரே! தூதுவர்களிடம் சொல்லி அனுப்ப வேண்டிய செய்தி இது. தொண்டை மண்டலத்திலும் சோழ மண்டலத்திலும் உள்ள ஒவ்வொரு கோட்டத்திலும் ஆயிரம் வீரர் அடங்கிய படைகளைத் திரட்டி ஆயத்தமாய் வைத்திருக்க வேண்டியது. மறுபடியும் செய்தி அனுப்பியவுடனே படை புறப்படச் சித்தமாயிருக்க வேண்டும் நான் சொல்வது தெரிகிறதா?" என்றார்.

"தெரிகிறது, பிரபு!"

"கோட்டையைப் பத்திரப்படுத்துவதற்கு வேண்டிய ஏற்பாடு எல்லாம் செய்தாகிவிட்டதல்லவா?"

"துறவறத்தாரைத் தவிர வேறு யாரையும் விசாரியாமல் கோட்டைக்குள் விடக்கூடாதென்று கட்டளையிட்டிருக்கிறேன். வெளியே போகிறவர்களையும் கவனிக்கச் சொல்லியிருக்கிறேன். நகருக்குள்ளேயும் யார் பேரிலாவது சந்தேகத்துக்கு இடமிருந்தால் சிறைப்படுத்திக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறேன்."

"கோட்டைச் சுவரெல்லாம் பழுது பார்த்திருக்கிறதா? சேனாதிபதி! பல்லவ சாம்ராஜ்யம் நிலைத்து நிற்பது இந்தக் காஞ்சிக் கோட்டையின் பாதுகாப்பையே பொறுத்திருக்கலாம்."

"பல்லவ சாம்ராஜ்யத்தைப் பாதுகாப்பதற்குக் காவேரி முதல் கிருஷ்ணா நதி வரையில் லட்சோப லட்சம் வீரர்கள் காத்திருக்கிறார்கள், பிரபு!"

"உண்மைதான், ஆனால், அவர்கள் வெறும் கையினால் சண்டை போட முடியாதல்லவா? அந்த லட்சோப லட்சம் வீரர்களுக்கும் வேண்டிய வேல்களும் வாள்களும் எங்கே?" என்றார் சக்கரவர்த்தி.

சேனாபதி கலிப்பகையார் மௌனம் சாதித்தார்.

"கீழைச் சோழநாட்டில் வாளும் வேலும் நன்றாய்ச் செய்வார்கள் போலிருக்கிறது. யானைமேல் எறியப்பட்ட வேலை நீர் பார்த்தீரா?"

"இல்லை, பிரபு!"

"மாமல்லனிடம் அது இருக்கிறது 'மாமாத்திரர்' என்று எழுதியிருக்கிறது. 'மாமாத்திரர்' என்ற பட்டம் கீழைச் சோழ நாட்டிற்கு உரியதல்லவா?"

"ஆம், பல்லவேந்திரா!"

"அந்த வேலை எறிந்தவன் கீழைச் சோழநாட்டானாய்த்தானிருக்கவேண்டும். அம்மாதிரி வேல் எறியக்கூடிய வீரர்கள் ஆயிரம் பேர் இருந்தால் இந்தக் கோட்டைக் காவலைப்பற்றிக் கவலையில்லை!"

"பல்லவ சைனியத்தில் எத்தனையோ ஆயிரம் வேல் வீரர்கள் இருக்கிறார்கள், பிரபு!"

"அந்த வேலை எறிந்தவன் பதினாயிரத்தில் ஒரு வீரன். அவனை அவசியம் கண்டுபிடிக்க வேண்டும்"

சேனாபதி மௌனமாயிருந்தார்.

"இன்னும் ஒரு விஷயம், காவித்துணி அணிந்தவர்களைப் பற்றிய கட்டளையை மாற்ற வேண்டும். ஆயனரையும் அவர் மகளையும் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பியபோது ஒரு சந்தின் முனையில் ஒரு புத்த பிக்ஷு நிற்பதைப் பார்த்தேன். சட்டென்று அவர் நிழலில் மறைந்துகொண்டார்."

"கட்டளை என்ன பிரபு?"

"இராஜ விஹாரத்தின் மேல் கவனம் வைத்து, புதிதாக வந்திருக்கும் புத்த பிக்ஷு யார் என்று பார்க்கவேண்டும்."

"உடனே ஏற்பாடு செய்கிறேன்."

பிறகு, சேனாபதி கலிப்பகையார் ஒவ்வொரு தூதராக அழைத்து இவரிவர் இன்னின்ன கோட்டத்துக்குப் போகிறார் என்று சக்கரவர்த்தியிடம் தெரியப்படுத்தினார். தூதர்கள் தனித் தனியே சக்கரவர்த்திக்கு வணங்கி விடைபெற்றுக் கொண்டு தத்தம் குதிரை மீதேறி விரைந்து சென்றார்கள்.

புவன மகாதேவி

மாமல்லர் தந்தையின் சொற்படி அரண்மனை நிலாமுற்றத்தைக் கடந்து சென்று, உள் வாசலை நெருங்கியதும், குதிரை மீதிருந்து இறங்கினார். அங்கே சித்தமாய்க் காத்திருந்த பணியாட்கள் குதிரையைப் பிடித்து அப்பாலே கொண்டு சென்றார்கள். பிறகு, மாமல்லர் விசாலமான அந்த அழகிய அரண்மனைக்குள் பிரவேசித்து, தீபம் ஏந்துவோர் தம்மைப் பின் தொடர்ந்து வருவதற்குத் திணறும்படியாக, அவ்வளவு விரைவாக நடந்து சென்றார்.

புதிதாக அந்த அரண்மனைக்குள் பிரவேசிக்கிறவர்கள் அங்கே குறுக்கு நெடுக்குமாகச் சென்ற நடைபாதைகளில் வழி கண்டுபிடித்துச் செல்வது அசாத்தியமாயிருக்கும். நரசிம்மர் அந்தப் பாதைகளின் வழியாக வளைந்து வளைந்து சென்று அரண்மனை அந்தப்புரத்தை அடைந்தார். அங்கே சிற்ப வேலைகளினால் சிறப்படைந்த ஒரு வாசலை அவர் அணுகியதும், "குழந்தாய்! வந்தாயா?" என்று உள்ளே இருந்து ஒரு குரல் கேட்டது.

பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்தரசியான புவன மகாதேவி அந்தப்புர வாசற்படியில் வந்து நின்றார். அவருடைய கம்பீரமான தோற்றமும் முதிர்ந்த சௌந்தர்யவதனமும், "திரிபுவன சக்கரவர்த்தினி" என்று பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரஜைகள் அவரைக் கொண்டாடுவது முற்றும் பொருந்தும் என்று தெரியப்படுத்தின.

"அம்மா!" என்ற குரலுடன் அருகில் வந்த குமாரனைச் சக்கரவர்த்தினி இரு கைகளாலும் அணைத்துக்கொண்டு, "குழந்தாய்! இன்றைக்கு..." என்று ஏதோ சொல்லத் தொடங்குவதற்குள், மாமல்லர், "அம்மா! உங்களை ரொம்பவும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், ஒரு வரம் தர வேண்டும்!" என்றார்.

புவனமகாதேவியின் முகத்தில் புன்னகை அரும்பியது. "வரமா! நல்லது, கேள்! தருகிறேன். அதற்குப் பிரதியாக நானும் ஒரு வரம் கேட்பேன் அதை நீ தரவேண்டும்!" என்று அன்பு கனிந்த குரலில் கூறினார்.

மாமல்லர், "பிள்ளை அன்னையிடம் வரம் கேட்பது நியாயம். பிள்ளையிடம் தாய் வரம் கேட்பது எங்கேயாவது உண்டா? முடியவே முடியாது?" என்றதும், புவன மகாதேவியின் முகத்தில் புன்னகை மறைந்தது. இருவரும் உள்ளே சென்றார்கள்.

நரசிம்மர் தமது தலை அணியையும் ஆபரணங்களையும் எடுத்து வைத்துவிட்டுக் கால் கை சுத்தம் செய்துகொண்டு வந்தார். பிறகு இருவரும் அந்தப்புர பூஜா மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள். அங்கே, மத்தியில் நடராஜ மூர்த்தியின் திருவுருவம் திவ்ய அலங்காரங்களுடன் விளங்கியது. பின்புறச் சுவர்களில் சிவபெருமானுடைய பல வடிவங்களும், பாலகோபாலனுடைய லீலைகளும் வர்ணங்களில் அழகாகச் சித்தரிக்கப்பட்டிருந்தன.

பூஜையெல்லாம் முன்னமே முடிந்தபடியால், தாயும் மகனும் அந்தத் திருவுருவத்தை வழிபட்டுவிட்டு வெளியே வந்து போஜன மண்டபத்துக்குள் பிரவேசித்தார்கள்.

உணவருந்த உட்கார்ந்ததும் புவனமகாதேவி, "குழந்தாய்! ஏதோ முக்கியமான செய்தி வந்திருக்கிறதாம்! கோட்டை வாசல் எல்லாம் சாத்தியாகிவிட்டதாம். அரண்மனையெல்லாம் அல்லோலகல்லோலப்படுகிறது. எனக்கு மட்டும் ஒன்றுமே தெரியவில்லை. நீயாவது சொல்லக்கூடாதா? பெண்கள் என்றால் மட்டமானவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவேண்டியதில்லை என்பதாக நீ கூடவா எண்ணம் வைத்திருக்கிறாய்?" என்றார்.

மாமல்லர் உணவு பரிமாறிக் கொண்டிருந்த பணியாட்களைப் பார்த்து விட்டு, "அம்மா! சாப்பிட்டானதும் மேல் மாடத்துக்குப் போய் எல்லா விவரங்களும் சொல்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் இப்போதே கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தினந்தோறும் நான் வந்த பிறகுதான் தாங்கள் இராப் போஜனம் செய்வது என்று வைத்துக் கொள்ளக் கூடாது அந்த வழக்கத்தை இன்றோடு நிறுத்திவிட வேண்டும்" என்றார்.

சக்கரவர்த்தினி குமாரனை அன்பு ததும்பிய கண்களால் பார்த்துப் புன்னகை புரிந்தார். ஆனால், மறுமொழி ஒன்றும் சொல்லவில்லை.

காஞ்சி அரண்மனையில் பகல் போஜனம் ராஜரீக சம்பிரதாயங்களுடன் ஆடம்பரமாய் நடப்பது வழக்கம். பெரிய சாம்ராஜ்ய உத்தியோகஸ்தர்கள், அந்நிய நாடுகளிலிருந்து வந்த பிரமுகர்கள், சிவனடியார்கள், வைஷ்ணவப் பெரியார்கள், பிரசித்தி பெற்ற கலைஞர்கள், தமிழ்க் கவிஞர்கள், வடமொழிப் பண்டிதர்கள் முதலியோர் விருந்தாளியாக அழைக்கப்படுவது உண்டு. எனவே பகல் போஜன நேரத்தில் அரண்மனைவாசிகள் ஒருவரோடொருவர் அளவளாவுதல் இயலாத காரியம். மற்றும் பகல் நேரமெல்லாம் சக்கரவர்த்தியும் குமாரரும் ராஜரீக காரியங்களில் ஈடுபட்டிருப்பார்கள். எனவே, தாயும் பிள்ளையும் சந்திப்பதற்கு இராப் போஜன நேரத்தைச் சக்கரவர்த்தி திட்டம் செய்திருந்தார். அதற்குப் பிறகு அரண்மனைமேல் உப்பரிகையின் நிலாமாடத்தில் அவர்கள் மூன்று பேரும் சந்தித்துப் பேசுவது வழக்கமாயிருந்தது.

இன்றைக்குச் சாப்பாடு ஆனதும் தாயும் புதல்வனும் மேல் உப்பரிகைக்குச் சென்று நிலா மாடத்தில் அமைந்திருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்தார்கள்.

பால் நிலவில் மூழ்கியிருந்த காஞ்சி நகரமானது அன்றிரவு என்றுமில்லாத அமைதி பெற்று விளங்கிற்று.

நரசிம்மவர்மருடைய மனம் அந்நகரின் கீழ்க் கோட்டை வாசலுக்குச் சென்றது. இப்போது அந்தக் கோட்டை வாசலைக் கடந்து ஒரு சிவிகை போய்க் கொண்டிருக்கும். அந்தச் சிவிகையில் ஆயனரும் அவர் மகளும் அமர்ந்திருப்பார்கள். ஆகா! அவர்களுக்குத்தான் இன்றைக்கு எப்பேர்ப்பட்ட ஆபத்து வந்தது! மதயானையின் மீது வேல் எறிந்து அவர்களைக் காப்பாற்றிய வீரன் யாராக இருப்பான்?...

புதல்வன், தானே பேசுவான் என்று புவனமகாதேவி சிறிது நேரம் காத்திருந்தார். அவன் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டான் என்பதைத் தெரிந்துகொண்டு, "குழந்தாய்!" என்றார்.

உடனே மாமல்லர் திடீரென்று கனவு கலைந்தவர் போல் திடுக்கிட்டுத் தாயாரைப் பார்த்தார்.

"அம்மா! அம்மா! நான் உங்களிடம் விரும்பிய வரத்தைக் கேட்டே விடுகிறேன். உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகட்டும் என்னைக் 'குழந்தாய்' என்று கூப்பிடாதீர்கள். நான் இன்னும் பச்சைக் குழந்தையா? பல்லவ ராஜ்யத்திலுள்ள புகழ் வாய்ந்த மல்லர்களையெல்லாம் ஜயித்து 'மாமல்லன்' என்று பட்டம் பெற்ற பிறகும், என்னைக் குழந்தை!' 'குழந்தை' என்றால் நான் என்ன செய்கிறது? அப்பாவோ இன்னும் என்னைத் தொட்டிலில் கிடக்கும் குழந்தையாகவே எண்ணி நடத்துகிறார்! உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் நான் அகப்பட்டுக் கொண்டு..."

"அதற்கு என்ன செய்யலாம்? பெற்றோர்களுக்கு மகன் எப்போதும் குழந்தைதான்" என்ற குரலைக் கேட்டுத் தாயும் மகனும் திரும்பிப் பார்த்தார்கள். அவர்களுக்குத் தெரியாமல் மகேந்திர சக்கரவர்த்தி பின்னால் வந்து நிற்பதைத் தெரிந்து கொண்டு இருவரும் பயபக்தியுடன் எழுந்து நின்றார்கள்.

மகேந்திரர் பளிங்கு மேடையில் அமர்ந்ததும் புவன மகாதேவியும் மாமல்லரும் உட்கார்ந்தார்கள். "தேவி! குழந்தை ஏதாவது சொன்னானா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

"இன்னும் ஒன்றும் சொல்லவில்லை. என்பேரிலும் உங்கள் பேரிலும் குறைதான் சொல்லிக்கொண்டிருந்தான்!"

"குறை சொல்லாமல் வேறு என்ன சொல்லட்டும், அப்பா! பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்த செய்தி கிடைத்த பிறகும் நாம் வெறுமனே கையைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதா? சேனாபதி கலிப்பகையார் சேனை திரட்டுவதற்குள் கலியுகமே முடிந்துவிடும் போலிருக்கிறதே! இத்தனை நேரம் நமது சைனியம் போருக்குக் கிளம்பியிருக்க வேண்டாமா?" என்று கொதித்தார் மாமல்லர்.

"பல்லவ ராஜ்யத்தில் அந்நியர் பிரவேசித்தார்களா? இது என்ன?" என்று புவனமாதேவி வியப்பும் அவநம்பிக்கையும் தொனித்த குரலில் கேட்டார்.

"ஆம், தேவி! அற்ப சொற்பமாகப் பிரவேசிக்கவில்லை. பெரும் படைகளுடனே திடீரென்று பிரவேசித்திருக்கிறார்கள்.."

"பல்லவேந்திரா! மந்திராலோசனை சபையில் நான் மட்டும் வாயைத் திறக்காமல் இருக்கவேண்டும் என்று ஏன் கட்டளையிட்டிருக்கிறீர்கள்? எல்லாரும் ஏதோ பேசியபோது என் மனம் கொதித்த கொதிப்பை மிகவும் முயன்று அடக்கிக் கொண்டிருந்தேன்..."

மாமல்லரின் பேச்சை மறுத்துச் சக்கரவர்த்தி தமது பட்ட மகிஷியைப் பார்த்துச் சொன்னார்: "தேவி! நரசிம்மன் இன்னும் குழந்தையாகத்தான் இருக்கிறான். வந்திருக்கும் யுத்தம் எப்பேர்ப்பட்டதென்பதை அவன் அறியவில்லை. இரண்டு பேரும் கேளுங்கள். வாதாபி மன்னன் புலிகேசி பெரும் படைகளுடன் துங்கபத்திரை நதியைக் கடந்து நமது ராஜ்யத்துக்குள் பிரவேசித்திருக்கிறான். அவனுடைய சைனியத்தில் லட்சக்கணக்கான வீரர்கள் இருக்கிறார்களாம். ஆயிரக்கணக்கில் யானைகள் இருக்கின்றனவாம்.

பெரிய காளைகள் பூட்டிய நூற்றுக்கணக்கான வண்டிகள் தொடர்ந்து வருகின்றனவாம். பதினாயிரக்கணக்கான குதிரை வீரர்கள் வருகிறார்களாம். வெகு காலமாகவே புலிகேசி இந்த யுத்த ஏற்பாடுகளைச் செய்து வந்திருக்கிறான். நமது ஒற்றர்கள் எப்படியோ ஏமாந்து போயிருக்கிறார்கள். நமது எல்லைக் காவல் படைகளைப் புலிகேசியின் ராட்சத சைனியம் வெகு சீக்கிரத்தில் முறியடித்து விட்டு அதிவேகமாக முன்னேறி வருகிறதாம். அந்தச் சைனியத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு வேண்டிய படை பலம் தற்போது நம்மிடம் இல்லை. ஆங்காங்குள்ள நம் படைகள் பின்வாங்கி வந்துகொண்டிருக்கின்றன. பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் அபாயம் மிகப் பெரியது. ஆனாலும் நெற்றிக் கண்ணைத் திறந்து திரிபுரத்தை எரித்த பினாகபாணியின் அருளினால் முடிவில் நமக்குத்தான் வெற்றி கிடைக்கப் போகிறது அதைப் பற்றி சந்தேகம் வேண்டியதில்லை!"

தந்தை பேசி முடிக்கும் வரையில் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த நரசிம்மர், "அப்பா! பல்லவ சைனியம் பின் வாங்கி வருகிறதா? இது என்ன அவமானம்? இப்போது எனக்கு அனுமதி கொடுங்கள். அப்பா! நம்மிடம் தற்சமயம் ஆயத்தமாயிருக்கும் படைகளை அழைத்துக் கொண்டு புறப்படுகிறேன்!" என்றார்.

"பொறு நரசிம்மா, பொறு! பல்லவ சைனியத்தை நீ நடத்திச் செல்லும்படியான காலம் வரும். அது வரையில் பொறுமையுடன் நான் சொல்வதைக் கேட்டு நட. இன்றிரவு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது என்னுடன் வருகிறாயா?"

"கேட்க வேண்டுமா? வருகிறேன், அப்பா."

"தேவி! நரசிம்மனை இன்று முதல் நான் 'குழந்தை'யாக நடத்தப் போவதில்லை. சகாவாகவே நடத்தப்போகிறேன். மந்திராலோசனைகளில் கலந்துகொள்ளும் உரிமையையும் இன்று முதல் அவனுக்கு அளிக்கிறேன். நீயும் இனிமேல் அவனைக் 'குழந்தை' என்று அழைக்க வேண்டாம்!" என்றார் சக்கரவர்த்தி.

புவனமகாதேவியைப் படுப்பதற்குப் போகச் சொல்லி விட்டுத் தந்தையும் மகனும் அரண்மனையிலிருந்து வெளியேறிச் சென்றார்கள்.

விடுதலை

கயிற்றின் வழியாக மேலே ஏறிய பரஞ்சோதி கூரையை அணுகியபோது, இரண்டு இரும்புக் கரங்கள் தன் புயங்களைப் பிடித்து மேலே தூக்கிவிடுவதை உணர்ந்தான். மறுகணமே தான் மேற்கூரையில் நிற்பதையும், தனக்கு எதிரில், "பேச வேண்டாம்" என்பதற்கு அறிகுறியாக உதட்டில் ஒற்றை விரலை வைத்துக் கொண்டு புத்த பிக்ஷு நிற்பதையும் பார்த்தான். அவருக்குப் பின்னால் இன்னொரு இளம் புத்த சந்நியாசி நிற்பதும் தெரிந்தது. பெரிய பிக்ஷு ஜாடை காட்டியவுடன் இளம் புத்தன் கயிற்றை மேலே இழுத்துச் சுருட்டி ஒரு காவித் துணிக்குள் அதை வைத்துக் கட்டினான். பரஞ்சோதி கூரைமேல் நின்ற வண்ணம் சுற்றும் முற்றும் பார்த்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் காஞ்சி நகரத்து மாட மாளிகைகளின் உப்பரிகைகள் வெண்ணிலாவில் தாவள்யமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.

இதற்குள் பெரிய பிக்ஷுவானவர் சிறைச்சாலை கூரையின் துவாரத்தை ஓடுகளைப் பரப்பி அடைத்துவிட்டு, பரஞ்சோதியை ஒரு விரலால் தொட்டுத் தம் பின்னால் வரும்படி சமிக்ஞை செய்தார். அவரைப் பின்தொடர்ந்து பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் ஓட்டுக் கூரைகளின் மேலேயும், நிலா மாடங்கள் மண்டபங்களின் மேலேயும் ஓசைப்படாமல் மெதுவாக நடந்து சென்றார்கள். வீதியில் ஏதாவது சந்தடி கேட்டால் புத்த புக்ஷு உடனே தம் பின்னால் வருவோருக்கு ஜாடை காட்டி விட்டு உட்கார்ந்து கொள்வார். சந்தடி நீங்கிய பிறகு எழுந்து நடப்பார்.

இவ்விதம், ஏழெட்டு கட்டிடங்களை மேற்கூரை வழியாகக் கடந்த பிறகு, ஒரு வீட்டின் முகப்பில் வீதி ஓரத்தில் பன்னீர் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருந்த இடத்துக்கு வந்தார்கள்.

பன்னீர் மரங்களின் அடர்ந்த பசிய இலைகளுக்கு இடை இடையே கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த பன்னீர் மலர்கள் வெண்ணிலாவில் வெள்ளி மலர்களாகப் பிரகாசித்தன. அம்மலர்களின் சுகந்த பரிமளத்தை இளந்தென்றல் நாலாபக்கமும் பரப்பிக் கொண்டிருந்தது.

புத்த பிக்ஷு வீதியை இரு புறமும் நன்றாகப் பார்த்து விட்டு, அந்தப் பன்னீர் மரங்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு கீழே இறங்கினார். பரஞ்சோதியும் இளம் பிக்ஷுவும் அவ்விதமே இறங்கினார்கள். சிறிது தூரம் நடந்து கோயிலைப் போல் அமைந்த ஓர் அழகிய கட்டிடத்தின் வாசலை அடைந்தார்கள்.

அந்தக் கட்டிடந்தான் காஞ்சி நகருக்குள்ளிருந்த புத்த விஹாரங்களுக்குள் மிகப் பெரியது. 'இராஜ விஹாரம்' என்று பெயர் பெற்றது. கருணாமூர்த்தியான புத்த பகவானின் திருப் பற்களில் ஒன்று அந்தக் கோயிலின் கர்ப்பக் கிருஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.

பல்லவ மன்னர்கள் அவ்வப்போது ஒவ்வொரு மதத்தில் பற்றுடையவர்களாயிருந்தாலும், எல்லா மதங்களையும் சம நோக்குடன் பார்த்து அந்தந்த மத ஸ்தாபனங்களுக்கு மானியம் விடுவது வழக்கம். அவ்விதம் இராஜாங்கமானியத்தைப் பெற்றது இராஜ விஹாரம். அன்றியும், காஞ்சியில் சில பெரும் செல்வர்கள் பௌத்த சமயிகளாயிருந்தார்கள். அவர்களில் ஒருவனான தனதாஸன் என்னும் வியாபாரி தன்னுடைய ஏகபுத்திரன் வியாதியாய்க் கிடந்தபோது, "பிள்ளை பிழைத்தால் இராஜ விஹாரத்தைப் புதுபித்துத் தருவேனாக" என்று வேண்டுதல் செய்து கொண்டான். பிள்ளை பிழைக்கவே, ஏராளாமான பொருட்செலவு செய்து விஹாரத்தைப் புதுப்பித்தான்.

தாவள்யமான முத்துச் சுண்ணாம்பு பூசப்பட்டிருந்த இராஜ விஹாரம் வெண்ணிலாவில் அழகின் வடிவமாக விளங்கிற்று. அதைப் பார்த்ததும் பரஞ்சோதி, "ஆஹா! என்ன அழகான கோயில்!" என்று கூவினான். புத்த பிக்ஷு சட்டென்று நின்று அவனுடைய வாயைப் பொத்தினார். அச்சமயம் அவர்கள் பன்னீர் மரங்களின் நிழலைத் தாண்டி இராஜ விஹாரத்துக்கு எதிரில் திறந்த வெளிக்கு வந்திருந்தார்கள்.

அதே சமயத்தில் இராஜ விஹாரத்துக்கு எதிர் வரிசையிலிருந்த கட்டிடங்களின் இருண்ட நிழலிலிருந்து இரண்டு வெண் புரவிகள் வெளிப்பட்டு வந்தன. அவற்றின் மீது இரண்டு வீரர்கள் காணப்பட்டார்கள். ஒருவர் நடுப்பிராயத்தினர், இன்னொருவர் வாலிபர். இருவரும் பெரிய முண்டாசு கட்டியிருந்தார்கள்.

இரண்டு குதிரைகளும் இராஜ விஹாரத்தை நெருங்கி வந்தன. வீரர்களில் பெரியவன், "புத்தம் சரணம் கச்சாமி!" என்றான். இளம் பிக்ஷு, "தர்மம் சரணம் கச்சாமி!" என்றார்.

"அடிகளே! இரவு இரண்டாம் ஜாமத்துக்கு மேல் யாரும் வெளியில் கிளம்பக் கூடாது என்று தெரியுமோ?" என்றான் முதிய வீரன்.

"தெரியும்; ஆனால் சந்நியாசிக்கும் அந்தக் கட்டளை உண்டு என்பது தெரியாது" என்றார் பிக்ஷு.

"இந்த அர்த்தராத்திரியில் எங்கே கிளம்பினீர்களோ?"

"இந்தப் பிள்ளை என்னுடைய சிஷ்யன், காஞ்சிக்குப் புதியவன். காணாமல் போய்விட்டான் அவனைத் தேடிப் பிடித்து அழைத்து வந்தேன்."

"இந்த வாலிபனுக்கு எந்த ஊரோ?"

"சோழ நாட்டில் செங்காட்டங்குடி."

"இன்றைக்குத்தான் இருவரும் வந்தீர்களாக்கும்!"

"ஆம், ஐயா!"

"தங்கள் திருநாமம் என்னவோ!"

"நாகநந்தி என்பார்கள்."

"இனிமேல் நள்ளிரவில் கிளம்ப வேண்டாம், சுவாமி! சிஷ்யப் பிள்ளையிடமும் சொல்லி வையுங்கள்."

வீரர்கள் குதிரைகளைத் தட்டி விட்டுக் கொண்டு போனபிறகு மூவரும் இராஜ விஹாரத்துக்குள் பிரவேசித்தார்கள். அவர்கள் உள்ளே நுழைந்ததும் இராஜ விஹாரத்தின் வெளிக் கதவு சாத்தப்பட்டது.

உள்ளே வெகு தூரத்தில் கர்ப்பக்கிருஹம் தீப வரிசைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததைப் பரஞ்சோதி பிரமிப்புடன் பார்த்துக் கொண்டு நின்றான். உள்ளேயிருந்து வந்துகொண்டிருந்த அகிற் புகையின் வாசனை அவனுடைய தலையைக் கிறுகிறுக்கச் செய்தது.

புத்த பிக்ஷு அவனுடைய தலையைத் தொட்டு, "பிள்ளாய்! எப்பேர்ப்பட்ட ஆபத்து உனக்கு வந்தது! புத்த பகவானுடைய கருணையினால் தப்பினாய்!" என்றார்.

பரஞ்சோதி அவரை ஏறிட்டுப் பார்த்து, "அடிகளே! எந்த ஆபத்தைச் சொல்லுகிறீர்கள்?" என்று கேட்டான்.

"பெரிய ஆபத்து! இந்த விஹாரத்தின் வாசலிலேயே வந்தது. குதிரை மேல் வந்தவர்கள் யார் தெரியுமா?"

"எனக்கு எப்படித் தெரியும், சுவாமி? காஞ்சிக்கு நான் புதிதாயிற்றே!"

பிக்ஷு பரஞ்சோதியின் காதோடு, "மகேந்திர சக்கரவர்த்தியும், அவருடைய மகன் மாமல்ல நரசிம்மனுந்தான்!" என்றார்.

பரஞ்சோதிக்கு உண்மையிலேயே தூக்கி வாரிப்போட்டது. "நிஜமாகவா?" என்று வியப்புடன் கேட்டான்.

"ஆம்! இருவரும் மாறுவேடம் பூண்டு நகர் சுற்றக் கிளம்பியிருக்கிறார்கள். வேஷம் தரிப்பதில் மகேந்திர பல்லவருக்கு இணையானவர் இந்தப் பரத கண்டத்திலேயே இல்லை."

பரஞ்சோதி சிறிது நேரம் ஆச்சரியக் கடலில் மூழ்கியிருந்து விட்டு, "அவர்களால் எனக்கு என்ன ஆபத்து?" என்று கேட்டான்.

புத்த பிக்ஷு ஒரு கேலிச் சிரிப்புச் சிரித்தார். "என்ன ஆபத்து என்றா கேட்கிறாய்? யானை மீது வேல் எறிந்த பிள்ளை நீதான் என்று அவர்களுக்குத் தெரிந்தால் நீ பிழைப்பது துர்லபம். அந்தச் சக்கரவர்த்திக்கு குமாரன் இருக்கிறானே, அவன் எப்பேர்ப்பட்டவன் தெரியுமா? இந்தப் பூமண்டலத்தில் தன்னைவிடப் பலசாலியோ, வீரனோ ஒருவனும் இருக்கக் கூடாது என்பது அவனுடைய எண்ணம். அப்படி யாராவது இருந்தால் அவனுடன் மல்யுத்தம் செய்து தோல்வியடைய வேண்டும். இல்லாவிடில், யமனுலகம் போகவேண்டியதுதான்!"

"சண்டை என்று வந்தால் நான் பின்வாங்க மாட்டேன் அடிகளே! சக்கரவர்த்தி குமாரனாகவே இருக்கட்டும்! யாராய்த்தான் இருக்கட்டும்!" என்றான் பரஞ்சோதி.

"தெரியும் தம்பி! நீ இப்படிப்பட்ட வீரனாயிருப்பதனாலேதான் உனக்கு ஆபத்து அதிகம். நீ வேலை எறிந்ததனாலேதான் கோயில் யானைக்கு மதம் பிடித்தது என்று பொய்க் குற்றம் சாட்டி உன்னைத் தண்டித்து விடுவார்கள்."

பரஞ்சோதிக்கு நெஞ்சில் 'சுருக்'கென்றது சுமைதாங்கியில் படுத்திருந்தபோது யாரோ பேசிக்கொண்டு போனது ஞாபகம் வந்தது. நாகநந்தியின் வார்த்தைகளில் இதுவரை நம்பிக்கையில்லாதவனுக்கு இப்போது கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று.

"அப்படிப்பட்ட அநியாயமும் உண்டா?" என்றான்.

"பரஞ்சோதி! இந்தக் காஞ்சி பல்லவர்களின் குலத்தொழிலே அதுதான். இன்றைக்கு நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் உன்னைப் போலவே கல்வி பயில்வதற்காக, மயூரசன்மன் என்னும் இளைஞன் இந்த நகருக்கு வந்தான். அவனுடைய வீரத்தைக் கண்டு அசூயை கொண்ட பல்லவ இராஜகுமாரன் அவன்மேல் பொய்க் குற்றம் சாட்டிச் சிறையில் அடைத்துவிட்டான்..."

"அப்புறம்?"

"மயூரசன்மன் சிறையிலிருந்து தப்பிக் கொண்டு போய்க் கிருஷ்ணா நதிக்கரையில் தனி ராஜ்யம் ஸ்தாபித்துக் கொண்டு, பல்லவர்களைப் பழிக்குப் பழி வாங்கினான். புத்த பகவான் அருளால் மயூரசன்மனைப் போலவே நீயும் பெரும் ஆபத்திலிருந்து தப்பினாய்!..."

பரஞ்சோதி அப்போது குறுக்கிட்டு, "அடிகளே! மற்ற ஆபத்துக்கள் ஒருபுறமிருக்கட்டும். இப்போது எனக்குப் பசி என்கிற ஆபத்துத்தான் பெரிய ஆபத்தாயிருக்கிறது! பசியினாலேயே பிராணன் போய்விடும் போலிருக்கிறது!" என்றான்.

நாகநந்தி அவனை மடப்பள்ளிக்கு அழைத்துச் சென்று உணவு அருந்துவித்தார். பிறகு ஒரு மண்டபத்தின் தாழ்வாரத்துக்கு அவனை அழைத்து வந்து, "பரஞ்சோதி இங்கே படுத்துக்கொள். தூங்குவதற்கு ஒரு முகூர்த்த காலம் கொடுக்கிறேன். நிம்மதியாகத் தூங்கு உனக்கு வந்த ஆபத்து இன்னும் முழுவதும் நீங்கிவிடவில்லை. பொழுது விடிவதற்குள்ளே நாம் கோட்டையை விட்டுப் போய்விடவேண்டும்" என்றார்.

பரஞ்சோதி அப்படியே அந்த மண்டபத்தின் தளத்தில் சாய்ந்தான். அடுத்த நிமிஷமே நித்திராதேவி அவனை ஆட்கொண்டாள்.

கண்கட்டு மாயம்

பரஞ்சோதி தரையில் படுத்தவுடனே கண்ணயர்ந்தான். ஆயினும், அவன் நல்ல தூக்கம் தூங்கினான் என்று சொல்வதற்கில்லை. ஏதேதோ பயங்கர துர்க்கனவுகள் தோன்றித் தூக்கத்தைக் கெடுத்தன.

ஒரு சமயம் ஐந்தாறு புத்த பிக்ஷுக்கள் வந்து அவனைச் சூழ்ந்து நின்றார்கள். அவர்களில் ஒருவர் தம் கையிலிருந்த தீபத்தைத் தூக்கிப் பரஞ்சோதியின் முகத்தில் வெளிச்சம் விழும்படி பிடித்தார்.

"ஆமாம்! நாகநந்தி சொல்வது சரிதான் இவன் முகத்தில் அபூர்வமான களையிருக்கிறது. இவன் மகாவீரன் ஆவான்! அல்லது மகாத்மா ஆவான்!" என்று யாரோ ஒருவர் சொன்னது போலிருந்தது.

இன்னொரு சமயம் அவனை ஒரு மதயானை துரத்திக் கொண்டு வருகிறது. பரஞ்சோதி சட்டென்று ஒரு பன்னீர் மரத்தின் மேல் ஏறிக்கொள்கிறான். புஷ்பக் கொத்துடன் கூடிய ஒரு பன்னீர்க் கிளையை ஒடித்து யானையின் மேல் போடுகிறான். அச்சமயம் திடீரென்று இரு குதிரை வீரர்கள் தோன்றி, "அடப்பாவி! கோயில் யானையைக் கொன்று விட்டாயா?" என்று கூவிக் கொண்டே தங்கள் கையிலிருந்த வேல்களை அவன்மீது எறிகிறார்கள்!

மற்றும் ஒரு பயங்கரக் கனவு! நாகநந்தியடிகள் வந்து அவன் பக்கத்தில் நின்று அவனுடைய முகத்தை உற்றுப் பார்க்கிறார். அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவருடைய முகமானது படமெடுத்தாடும் பாம்பின் முகமாக மாறுகிறது! அந்தப் பாம்பு அதனுடைய மெல்லிய பிளவுபட்ட நாவை நீட்டி அவனுடைய முகத்தைத் தீண்ட வருகிறது!

பரஞ்சோதி அலறிப் புடைத்துக்கொண்டு எழுந்திருந்தான். பார்த்தால், நாகநந்தி அடிகள் உண்மையாகவே அவன் அருகில் நின்று அவனைக் குனிந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

"பிள்ளாய்! ஏன் இப்படிப் பயப்படுகிறாய்? ஏதாவது துர்க்கனவு கண்டாயா?" என்று பிக்ஷு கேட்டார்.

பரஞ்சோதி, "இல்லை, இல்லை, ஒன்றுமில்லை நீங்கள் திடீரென்று தொடவே கொஞ்சம் திடுக்கிட்டேன்" என்றான்.

"பொழுது விடிய இன்னும் ஒரு முகூர்த்தந்தான் இருக்கிறது. புறப்படு, போகலாம்! பொழுது விடிவதற்குள் இந்தக் கோட்டையைக் கடந்துபோய்விட வேண்டும்."

"ஏன் சுவாமி?"

"புத்த தேவருடைய ஆக்ஞை!"

"யாருக்கு?"

"எனக்குத்தான் உன்னை அபாயத்திலிருந்து தப்புவிக்கும்படி ஆக்ஞை. என்னிடம் உனக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையா?" என்று நாகநந்தி பரிவு ததும்பிய குரலில் கேட்டார். பரஞ்சோதி மௌனமாயிருந்தான்.

"போகட்டும். இன்னும் ஒரே ஒரு முகூர்த்த காலம் இரவு கழிந்து பொழுது விடியும்வரையில் நான் சொல்கிறதைக் கேள். புத்த தேவருடைய கட்டளையை நான் நிறைவேற்றி விடுகிறேன். கோட்டைக்கு வெளியே உன்னைக் கொண்டு போய் விட்டுவிடுகிறேன் அப்புறம் உன் இஷ்டம்போல் செய்."

கனிந்த குரலில் கூறிய இந்த வேண்டுகோளைப் பரஞ்சோதியினால் மறுக்க முடியவில்லை.

"ஆகட்டும், அடிகளே!" என்றான்.

"அப்படியானால் இன்னும் ஒரு முகூர்த்த காலம் என்னிடம் நம்பிக்கை வைத்து நான் சொன்னபடி கேட்பாயல்லவா!"

"கேட்கிறேன்."

"உன்னுடைய கண்களைக் கட்டி இவ்விடமிருந்து அழைத்துப் போகவேண்டியதாயிருந்தால்?"

பரஞ்சோதி ஒரு நிமிஷம் திகைத்து நின்றுவிட்டு, "எப்படியானாலும் சரி" என்றான்.

உடனே, நாகநந்தி அடிகள் ஒரு சிறு துண்டை எடுத்துப் பரஞ்சோதியின் கண்களைச் சுற்றிக் கட்டினார்.

"பிள்ளாய்! என் கையைப் பிடித்துக் கொண்டே வர வேண்டும். நான் சொல்கிற வரையில் கண்ணின் கட்டை அவிழ்க்கக் கூடாது. இப்போது நீ என்னிடம் காட்டும் நம்பிக்கையின் பலனை ஒருநாள் அவசியம் தெரிந்து கொள்வாய்!"

இவ்விதம் கூறிப் பரஞ்சோதியின் கரத்தைப் பிடித்துக் கொண்டு, நாகநந்தி நடக்கத் தொடங்கினார். பரஞ்சோதியின் நெஞ்சு 'படக் படக்' என்று அடித்துக்கொண்டது. ஆயினும், அவன் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு பிக்ஷுவைப் பின்பற்றி நடந்தான்.

முதலில், புத்த விஹாரத்தின் வாசல் வழியாக வெளியேறுவது போலப் பரஞ்சோதிக்குத் தோன்றிற்று. பின்னர், வீதியோடு நடந்து போவதாகத் தோன்றிற்று. பன்னீர் புஷ்பங்களின் வாசனையிலிருந்து அன்று முன்னிரவில் மேல் மாடத்திலிருந்து வீதியில் இறங்கிய இடமாக இருக்கலாமென்று ஊகித்துக் கொண்டான்.

இன்னும் சிறிது தூரம் நடந்த பிறகு, போகும் திசை மாறியது. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் பன்னீர்ப் பூவின் நறுமணம். "வந்த வழியே திரும்பிப் போகிறோமா, என்ன? ஆ! இந்தப் பொல்லாத பிக்ஷு எனக்கு வழி அடையாளம் தெரியாமலிருப்பதற்காக இப்படி இழுத்தடிக்கிறார் போலும்!" என்று பரஞ்சோதி எண்ணிக் கொண்டான்.

மறுபடியும் ஒரு கட்டிடத்துக்குள் பிரவேசிப்பது போலிருந்தது. அகிற் புகையின் மணத்திலிருந்து, "இது இராஜ விஹாரந்தான்' என்று பரஞ்சோதி தீர்மானித்தான். பிறகு சிறிது நேரம் இருளடைந்த குகைகளின் வழியாகச் சுற்றிச் சுற்றி வருவது போல் தோன்றியது. கண்ணைக் கட்டியிருந்தபடியால் வெகு நேரம் முடிவேயில்லாமல் நடந்து கொண்டிருப்பதாகப்பட்டது.

"அடிகளே! இன்னும் எத்தனை நேரம் இவ்விதம் கண் கட்டு வித்தை செய்ய வேண்டும்?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"பிள்ளாய்! கிட்டத்தட்ட வந்துவிட்டோ ம் இன்னும் கொஞ்சம் பொறு!" என்றார் பிக்ஷு.

திடீரென்று இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு வந்துவிட்டதாகப் பரஞ்சோதி உணர்ந்தான்.

"பரஞ்சோதி! நாம் வரவேண்டிய இடத்துக்கு வந்து விட்டோ ம். கண்கட்டுச் சோதனை முடிந்தது" என்று சொல்லிக் கொண்டே அடிகள் கட்டை அவிழ்த்தார்.

புத்த பகவான் அருளால் சொர்க்கலோகத்துக்கே வந்து விட்டோ மோ என்று பரஞ்சோதிக்குத் தோன்றியது. அவன் கண் முன்னால் அத்தகைய சௌந்தர்யக் காட்சி தென்பட்டது. அகழி நீரில் அஸ்தமன சந்திரனின் வெள்ளிக்கிரணங்கள் படிந்து, உருக்கிய வெள்ளி ஓடையாகச் செய்து கொண்டிருந்தன. அகழிக்கப்பால் மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசம் காணப்பட்டது. மரங்களின் உச்சியில் சந்திர கிரணங்கள் இலைகளின் மீது தவழ்ந்து விளையாடின. அகழியில் ஒரு படகு மிதந்தது, பரஞ்சோதியைச் சிறை மீட்க உதவி செய்த இளம் பிக்ஷு கையில் துடுப்புடன் படகில் நின்றார்.

பெரிய பிக்ஷுவும் பரஞ்சோதியும் அகழியண்டை போய் படகில் ஏறினார்கள் படகு நகர்ந்தது.

"இந்த அகழியைத் தாண்டப் படகு என்னத்திற்கு? எளிதில் நீந்திக் கடந்து விடலாமே?" என்றான் பரஞ்சோதி.

"ஆம்; நீந்தத் தெரிந்தவர்கள் நீந்தலாம்."

"இந்த அகழியினால் கோட்டைப் பாதுகாப்புக்குத்தான் என்ன பிரயோஜனம்? எதிரிகள் வந்தால் சுலபமாய் நீந்திவிடமாட்டார்களா?"

"அதோ பார்!" என்றார் பிக்ஷு, சற்றுத் தூரத்தில் ஒரு முதலை பயங்கரமாக வாயைத் திறந்தது.

"ஐயோ!" என்றான் பரஞ்சோதி.

"இம்மாதிரி நூற்றுக்கணக்கான முதலைகள் இந்த அகழியில் இருக்கின்றன. சாதாரண காலங்களில் அங்கங்கே இரும்புக் கூண்டுகளில் அடைத்து வைத்திருப்பார்கள். யுத்த காலங்களில் திறந்து விட்டுவிடுவார்கள். நேற்று இரவு திறந்து விட்டிருக்கிறார்கள்."

"அப்படியானால், யுத்தம் வருவது நிஜந்தானா? சுவாமி!"

"பின் எதற்காக இவ்வளவு அமர்க்களமெல்லாம் என்று நினைத்தாய்!" என்றார் பிக்ஷு.

பரஞ்சோதி மௌனமாயிருந்தான். படகு அகழியின் அக்கரையை அடைந்தது.

ஆயனச் சிற்பி

வானளாவி வளர்ந்திருந்த மரங்களின் கிளைகள் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பரவிப் பின்னிக்கொண்டிருந்த வனப் பிரதேசத்தின் மத்தியில் அழகான சிற்ப வீடு ஒன்று காணப்பட்டது.

மனோகரமான காலை நேரம், சூரியோதயமாகி ஒரு ஜாமம் இருக்கும். ஓங்கி வளர்ந்திருந்த மரங்களின் உச்சியில் வஸந்த காலத்தில் இளந்தென்றல் உலாவியபோது 'சலசல'வென்று இலைகள் அசையும் இனிய ஓசை எழுந்தது. பட்சி ஜாலங்களின் கண்டங்களிலிருந்து விதவிதமான சுருதி பேதங்களுடன் மதுர மதுரமான அமுத கீதங்கள் பெருகிக் கொண்டிருந்தன.

வீட்டைச் சுற்றியிருந்த மரங்களின் அடியில் ஆங்காங்கே பெரிய பெரிய கருங்கற்கள் கிடந்தன. அந்தக் கருங்கற்களில், தனித்தனியாகவும் இருவர் மூவராகவும் இளம் சிற்பிகள் அமர்ந்து கையில் கல்லுளியுடன் வேலை செய்து கொண்டிருந்தார்கள். இளம் சிற்பிகள் கருங்கற்களில் கல்லுளியினால் வேலை செய்த போது உண்டான 'கல்கல்' என்ற ஓசை, இலைகள் அசையும் ஓசையுடனும் பட்சிகளின் மதுரகானத்துடனும் கலந்து, செவி கொடுத்துக் கேட்பவர்களுக்கெல்லாம் நாத போதையை உண்டாக்கிற்று. இத்தகைய கீதப் பிரவாகத்துக்கிடையே, திடீரென்று வீட்டிற்குள்ளிருந்து 'ஜல்ஜல்' என்ற சத்தம் வந்தது.

இளம் சிற்பிகள் அவ்வளவு பேரும் சொல்லி வைத்தாற்போல வேலையை நிறுத்திவிட்டுக் காது கொடுத்துக் கேட்டார்கள். அவர்களுடைய முகங்கள் எல்லாம் ஏக காலத்தில் மலர்ந்தன. ஏனெனில் அந்த 'ஜல்ஜல்' ஒலியானது, அவர்களுடைய ஆச்சாரிய சிற்பியின் மகள் சிவகாமி தேவியின் பாதச் சலங்கை ஒலியென்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். மூன்று நாளாக ஏதோ ஒரு காரணத்தினால் சோகத்தில் ஆழ்ந்திருந்த சிவகாமி இன்றைக்குச் சோகம் நீங்கி மீண்டும் நடனம் செய்ய ஆரம்பித்திருக்கிறாள் என்பதை அந்த 'ஜல்ஜல்' ஒலி பறையறைந்து தெரிவித்தது.

சற்று நேரம் அந்த இனிய ஒலியைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, ஒருவரோடொருவர் முக பாவத்தினாலேயே சம்பாஷித்து விட்டு, இளம் சிற்பிகள் மறுபடியும் தங்கள் வேலையை ஆரம்பித்தார்கள்.

ஆயனரின் சிற்பக் கோயிலுக்குள்ளே நாம் பிரவேசிப்பதற்கு முன்னால், அவர் அந்த நடுக்காட்டில் வந்து வீடு கட்டிக்கொண்டு வசிக்க நேர்ந்ததேன் என்பதைச் சிறிது கவனிப்போம்.

தெற்கே பாண்டிய நாட்டின் எல்லையிலிருந்து வடக்கே கிருஷ்ணா நதி வரையில் பரந்திருந்த பல்லவ ராஜ்யத்தில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு மகேந்திரவர்ம சக்கரவர்த்தி சிறப்புடன் ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில், தமிழகமெங்கும் ஓர் அதிசயமான 'கலை மறுமலர்ச்சி' ஏற்பட்டிருந்தது. செந்தமிழ் நாடெங்கும் மகா சிற்பிகளும் சித்திரக் கலைஞர்களும் தோன்றிச் சிற்ப, சித்திரக் கலைகளை அற்புதமாக வளர்த்து வந்தார்கள். குன்றுகளைக் குடைந்து கோயில்களாக்கும் கலையும், கற்பாறைகளிலே சிற்பங்களைச் செதுக்கும் கலையும் எங்கெங்கும் பரவி வந்தன.

அதே சமயத்தில் தெய்வத் தமிழகத்தில் சைவ, வைஷ்ணவ சமயங்கள் புத்துயிர் பெற்றுத் தழைக்கத் தொடங்கின. சிவனடியார்களும், வைஷ்ணவப் பெரியார்களும் ஸ்தல யாத்திரை என்ற வியாஜத்தில் தேசமெங்கும் பிரயாணம் செய்து, சைவ வைஷ்ணவ சமயங்களைப் பரப்பி வந்தார்கள். இது காரணமாகத் தமிழகத்தில் சென்ற சில நூற்றாண்டுகாலமாய் வேரூன்றியிருந்த புத்த, சமண சமயங்களுக்கும், சைவ, வைஷ்ணவ சமயங்களுக்கும், தீவிரப் போட்டி ஏற்பட்டது. அந்தந்தச் சமயத் தத்துவங்களைப் பற்றிய விவாதங்கள் எங்கே பார்த்தாலும் காரசாரமாக நடந்து கொண்டிருந்தன.

மேற்படி சமயப் போட்டியானது கலைத் துறையில் மிகுதியாகக் காணப்பட்டது. ஒவ்வொரு சமயத்தினரும் தங்கள் தங்கள் சமயத்தையொட்டிக் கலைகளை வளர்க்க முயன்றார்கள். சைவ வைஷ்ணவர்கள் சிவன் கோயில்களையும், பெருமாள் கோயில்களையும் நாடெங்கும் நிர்மாணிக்க விரும்பினார்கள். புத்தர்களும் சமணர்களும் எங்கெங்கும் புத்த விஹாரங்களையும் சமணப் பள்ளிகளையும் நிறுவத் தொடங்கினார்கள்.

பாறைகளுக்கும் குன்றுகளுக்கும்கூடப் பெரிய போட்டி ஏற்பட்டது! ஒவ்வொரு மதத்தினரும், "இது எங்கள் குன்று; எங்கள் பாறை!" என்று பாத்தியதை கொண்டாடினார்கள். அந்தப் பாறைகளையும் குன்றுகளையும் குடைந்து கோயில்களையும் விஹாரங்களையும் நிர்மாணிக்கும் ஆசையினால் தான் அத்தகைய போட்டி உண்டாயிற்று.

அதே மாதிரி சிற்பிகள், சித்திரக் கலைஞர்களின் விஷயத்திலும் பலமான போட்டி ஏற்பட்டிருந்தது. பெயர் பெற்ற சிற்பிகளிடமும் சித்திரக் கலைஞர்களிடமும் நாலு மதத்தினரும் வந்து மன்றாடி அழைத்தார்கள். அத்தகைய பலமான போட்டிக்கு ஆளாகியிருந்தவர்களில் ஆயனச் சிற்பியும் ஒருவர்.

காஞ்சி மாநகரில் பிறந்து வளர்ந்து கலை பயின்ற ஆயனர், இளம் பிராயத்திலேயே 'மகா சிற்பி' என்று பெயர் பெற்றுவிட்டார். ஆயனருடைய புகழ் வளர வளர, அவருடைய வேலைக்குக் குந்தகம் அதிகமாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மகேந்திர சக்கரவர்த்தி முதல் சாதாரண ஜனங்கள் வரையில் அடிக்கடி அவருடைய விடுதிக்கு வருவதும் அவருடைய சிற்ப வேலைகளைப் பாராட்டுவதுமாக இருந்தார்கள். வந்தவர்களை வரவேற்று உபசரிப்பதிலேயே அவருடைய காலம் அதிகமாகச் செலவழிந்து வந்தது.

சைவ குலத்தில் பிறந்த ஆயனர் இயற்கையாகச் சைவ மதப்பற்றுக் கொண்டிருந்தார். அதோடு, பழந்தமிழ்நாட்டுச் சிற்ப வடிவங்களில் சிறந்த ஸ்ரீநடராஜ வடிவம் அவருடைய உள்ளத்தைப் பூரணமாய்க் கவர்ந்திருந்தது. எனவே, அவருடைய சிற்ப வேலைகள் பெரும்பாலும் சைவ மதத்தைத் தழுவியனவாக இருந்தன. இது காரணமாக, புத்த பிக்ஷுக்களும் சமண முனிவர்களும் ஆயனரைத் தங்கள் சமயத்தில் சேர்த்துக்கொள்ள இடைவிடாத முயற்சி செய்த வண்ணமிருந்தார்கள்.

இந்தத் தொல்லையிலிருந்து விடுபடுவதற்காக, ஆயனச் சிற்பியார் ஒரு தீர்மானத்துக்கு வந்தார். அதாவது காஞ்சி நகரை விட்டுச் சென்று எங்கேயாவது நடுக்காட்டில் ஏகாந்தமான பிரதேசத்தில் வீடு அமைத்துக்கொண்டு வசிக்க வேண்டும் என்பதுதான்.

அவ்விதம் ஆயனர் தீர்மானித்ததற்கு இன்னொரு முக்கியமான காரணமும் இருந்தது. அந்த மகா சிற்பி, சிற்ப சித்திரக் கலைகளை நன்கு பயின்றதோடு, பரத சாஸ்திரம் என்னும் மகா சமுத்திரத்தையும் கரை கண்டவராக இருந்தார். அவருடைய ஏக புதல்வி சிவகாமி குழந்தையாயிருந்த போதே நடனக் கலையில் அவள் சிறந்த தேர்ச்சியடைவாள் என்பதற்கு அறிகுறிகள் காணப்பட்டன.

ஆயனருடைய உள்ளத்தில் ஒரு பெரிய ஆசை உதயமாயிற்று. 'குழந்தை சிவகாமிக்குப் பரத நாட்டியக் கலையில் பயிற்சி அளிக்கவேண்டும்; அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்து அவற்றைப் போல் ஜீவகளையுள்ள நவநவமான நடன வடிவங்களைச் சிலைகளிலே அமைக்க வேண்டும்' என்னும் மனோரதம் அவருக்கு உண்டாகி, நாளுக்கு நாள் வலுப்பெற்று வந்தது. நகரத்தை விட்டு எங்கேயாவது ஏகாந்தமான பிரதேசத்துக்குப் போனாலொழிய மேற்படி மனோரதம் நிறைவேறுவது சாத்தியமாகாது என்பதையும் அவர் நன்கு உணர்ந்தார்.

ஆயனர் தமது விருப்பத்தை மகேந்திர சக்கரவர்த்தியிடம் விண்ணப்பித்துக் கொண்டபோது, கலைஞர்களுடைய விசித்திர குணாதிசயங்களை நன்கு அறிந்தவரான மகேந்திர பல்லவர் உடனே அவருடைய யோசனைக்குச் சம்மதம் அளித்தார். அதற்கு வேண்டிய சௌகரியங்களையும் செய்து கொடுக்க முன்வந்தார்.

காஞ்சியிலிருந்து ஒரு காத தூரத்தில், ராஜபாட்டையிலிருந்து விலகியிருந்த அடர்ந்த வனப் பிரதேசம் ஒன்றை ஆயனர் தேர்ந்தெடுத்து, அங்கே வீடுகட்டிக் கொண்டு, குழந்தை சிவகாமியுடனும், பதியை இழந்திருந்த தம் தமக்கையுடனும் வசிக்கலானார்.

எந்த நோக்கத்துடன் ஆயனர் அந்த ஏகாந்தமான பிரதேசத்தைத் தேடி வந்தாரோ அந்த நோக்கம் சில அம்சங்களில் நன்கு நிறைவேறிவந்தது. சிவகாமி நாட்டியக் கலையில் நாளுக்கு நாள் தேர்ச்சி அடைந்து வந்தாள். அவளுடைய நடனத் தோற்றங்களைப் பார்த்து ஆயனர் முதலில் அவை போன்ற சித்திரங்கள் வரைந்துகொண்டார். பிறகு அந்தச் சித்திரங்களைப் போலவே அதிசயமான ஜீவகளை பொருந்திய நடன உருவங்களைக் கல்லிலே அமைக்கலானார்.

ஆயனர் ஏகாந்தமான பிரதேசத்துக்குப் போன போதிலும், வெளி உலகம் அவரை அடியோடு தனியாக விட்டு விடவில்லை. கலைஞர்களும், கலைகளில் பற்றுடையவர்களும் காட்டு வழிகளிலே புகுந்து ஆயனர் வீட்டை அடிக்கடி தேடிச் சென்றார்கள். அவ்வாறு சென்றவர்களில் முக்கியமானவர்கள் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய குமாரர் மாமல்லருந்தான். இவர்கள் ஆயனர் வீடு செல்லுவதற்கு ஒரு முக்கியமான முகாந்திரமும் இருந்தது.

சக்கரவர்த்தியும் மாமல்லரும் ஒருநாள் கடல்மல்லைத் துறைமுகத்துக்குச் சென்றிருந்தபோது, கடற்கரையோரமாகப் பரந்து கிடந்த குன்றுகளும் பாறைகளும் அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்தன. அந்தக் குன்றுகளிலும் பாறைகளிலும் விதவிதமான சிற்ப வேலைகளைச் செய்து கடல்மல்லைத் தலத்தை ஒரு சொப்பன லோகமாகச் செய்துவிட வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்தார்கள். தமிழகமெங்குமிருந்து ஆயிரக்கணக்கான சிற்பிகள் அங்கு வந்து வேலை செய்யத் தொடங்கினார்கள்.

இந்த வேலைகள் சம்பந்தமாக ஆயனரிடம் கலந்து ஆலோசிப்பதற்கும், அவ்வப்போது அவரை அழைத்துச் சென்று நடந்திருக்கும் வேலைகளைக் காட்டுவதற்குமாகச் சக்கரவர்த்தியும் மாமல்லரும் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி வரவேண்டியிருந்தது. அப்படி வரும்போதெல்லாம் ஆயனரின் நடனச் சிற்பங்களைப் பார்த்து அவர்கள் பாராட்டியதுடன் சிவகாமியை நடனமாடச் சொல்லியும் பார்த்து மகிழ்ந்தார்கள்.

சிவகாமி மங்கைப் பருவத்தை அடைந்து நடனக் கலையில் ஒப்பற்ற தேர்ச்சியும் அடைந்த பிறகு, காஞ்சி ராஜ சபையில் அவளுடைய நடன அரங்கேற்றத்தை நடத்த வேண்டுமென்று சக்கரவர்த்தி ஆக்ஞாபித்தார்.

அந்த அரங்கேற்றம் எப்படி இடையில் தடைப்பட்டுப் போயிற்று என்பதை இந்த வரலாற்றில் ஆரம்ப அத்தியாயங்களில் பார்த்தோம்.

தெய்வமாக் கலை

அரண்ய மத்தியில் அமைந்த ஆயனர் வீட்டின் உட்புறம் கண்கொள்ளாக் காட்சியளித்தது. வெளித் தாழ்வாரத்தையும் முன் வாசற்படியையும் தாண்டி உள்ளே சென்றதும், நாலுபுறமும் அகன்ற கூடங்களும், நடுவில் விசாலமான முற்றமாக அமைந்த பெரிய மண்டபமும் காணப்பட்டன. முற்றத்துக்கு மேலே மண்டபம் எடுப்பாகத் தூக்கிக் கட்டப்பட்டிருந்தது. கூடங்களில் ஓரங்களில் சிற்ப வேலைப்பாடு அமைந்த தூண்கள் நின்றன. அவை மேல் மண்டபத்தைத் தாங்குவதற்காக நின்றனவோ, அல்லது அலங்காரத்துக்காக நின்றனவோ என்று சொல்ல முடியாமல் இருந்தது.

நாலு புறத்துச் சுவர்களிலும் விதவிதமான வர்ணங்களில் அழகழகான சித்திரங்கள் காணப்பட்டன. அந்தச் சித்திரங்களில் ஸ்ரீநடராஜ மூர்த்தியின் நாதாந்த நடனம், தாண்டவ நடனம், குஞ்சித நடனம், ஊர்த்வ நடனம் ஆகிய தோற்றங்கள் அதிகமாக இருந்தன. அம்மாதிரியே ஓர் அழகிய இளம் பெண்ணின் பலவகை அபிநய நடனத் தோற்றங்களும் அதிகமாகக் காட்சியளித்தன.

முற்றத்தில் பெரிய கருங்கற்களும், உடைந்த கருங்கற்களும், பாதி வேலை செய்யப் பெற்ற கருங்கற்களும் கிடந்தன. ஒரு பக்கத்துக் கூடத்தில் வேலை பூரணமாகி ஜீவ களையுடன் விளங்கிய சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சித்திரங்களில் தோன்றிய அதே இளம் பெண்ணின் மோகன வடிவந்தான் அந்தச் சிலைகளிலும் விளங்கின. ஒவ்வொரு சிலையும் பரத சாஸ்திரத்தில் சொல்லியிருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் ஒன்றைக் குறிப்பிடுவதாயிருந்தது.

ஆனால், நாம் குறிப்பிடும் சமயத்தில் அந்தச் சிற்ப மண்டபத்துக்குள் பிரவேசிப்பவர்கள் மேற்கூறிய சிற்ப அதிசயங்களையெல்லாம் கவனம் செலுத்திப் பார்த்திருக்க முடியாது. அவர்களுடைய கருத்தையும் கண்களையும் அம்மண்டபத்தின் ஒரு பக்கத்துக் கூடத்தில் தோன்றிய காட்சி பூரணமாகக் கவர்ந்திருக்கும்.

சித்திரங்களிலும் சிலைகளிலும் தோற்றமளித்த இளம் பெண்ணானவள் அங்கே சுயமாகவே தோன்றி, கால் சதங்கை 'கலீர் கலீர்' என்று சப்திக்க நடனமாடிக் கொண்டிருந்தாள், அவளுக்கெதிரே சற்றுத் தூரத்தில் ஆயனச் சிற்பியார் உட்கார்ந்து கண்கொட்டாத ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார்.

பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென்று, "நில்!" என்றார், அந்த க்ஷணமே சிவகாமியும் ஆட்டத்தை நிறுத்தி, அப்போது நின்ற நிலையிலேயே அசையாமல் நின்றாள்.

ஆயனர் கையில் கல்லுளியை எடுத்தார். அவர் அருகில் ஏறக்குறைய வேலை பரிபூரணமான ஒரு சிலை கிடந்தது. அதன் கண் புருவத்தின் அருகே ஆயனர் கல்லுளியை வைத்து, இலேசாகத் தட்டினார். மறுபடியும் சிவகாமியை நிமிர்ந்து பார்த்து, "சற்று இரு! அம்மா!" என்று கூறி, மேலும் அச்சிலையின் புருவங்களில் சிறிது வேலை செய்தார். பிறகு, "போதும்! குழந்தாய்! இங்கே வந்து உட்கார்!" என்றார்.

சிவகாமி ஆயனர் அருகில் சென்று உட்கார்ந்தாள். அவள் முகத்தில் முத்து முத்தாகத் துளித்திருந்த வியர்வையை ஆயனர் தம் அங்கவஸ்திரத்தினால் துடைத்துவிட்டு, "அம்மா! சிவகாமி! பரத சாஸ்திரத்தை எழுதினாரே, அந்த மகா முனிவர் இப்போது இருந்தால் உன்னிடம் வந்து அபிநயக் கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கும். கண் பார்வையிலும், புருவத்தின் நெறிப்பிலும் என்ன அற்புதமாய் நீ மனோபாவங்களைக் கொண்டு வந்து விடுகிறாய்? நடன கலைக்காகவே நீ பிறந்தவள்!" என்றார்.

"போதும் அப்பா, போதும் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை!" என்ற அலுப்பான குரலில் கூறினாள் சிவகாமி.

"பிடிக்கவில்லையா? என்ன பிடிக்கவில்லை?" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.

"நான் பெண்ணாகப் பிறந்ததே பிடிக்கவில்லை!" என்றாள் சிவகாமி.

"சிவகாமி! இது என்ன இது? மூன்று நாளாகத்தான் உடம்பு நன்றாக இல்லை என்று சொன்னாய். இன்றைக்கு ஏன் இத்தனை வெறுப்பாய்ப் பேசுகிறாய்? என் பேரில் ஏதாவது கோபமா?" என்று ஆயனர் பரிவுடன் கேட்டார்.

"உங்கள் பேரில் எனக்கு என்ன கோபம், அப்பா! பரத சாஸ்திரம் என்று ஒன்றை எழுதினாரே, அந்த முனிவரின் பேரில்தான் கோபம். எதற்காக இந்தக் கலையை கற்றுக் கொண்டோ ம் என்றிருக்கிறது" என்று கூறிப் பெருமூச்சு விட்டாள் சிவகாமி.

"ஆகா! என்ன வார்த்தை சொன்னாய்? பரத முனிவரின் பேரில் கோபமா? சிவகாமி! நிருத்யக் கலையில் நீ அபூர்வமான தேர்ச்சியடைந்திருக்கிறாய். ஆனால், அந்தக் கலையின் பெருமையை நீ உணரவில்லை. நிருத்யக் கலைதான் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அடிப்படை. சிவகாமி! அதனாலேதான் இதைத் தெய்வமாக் கலையென்றும், பிரம்ம தேவர் பரத முனிவருக்கு அருளிய 'நாட்டிய வேதம்' என்றும் சொல்கிறார்கள். நிருத்யக் கலையிலிருந்துதான் சித்திரக்கலை உண்டாயிற்று. அதிலிருந்து தான் சிற்பக்கலை வளர்ந்தது. இசைக் கலைக்கும் நிருத்யக் கலைதான் ஆதாரம். பரத சாஸ்திரம் அறியாதவர்கள் சங்கீதத்தின் ஜீவதத்துவத்தை அறிய முடியாது. அம்மா! அன்றைக்கு ருத்ராச்சாரியாரே இதை ஒப்புக் கொண்டுவிட்டார்..."

"யார் ருத்ராச்சாரியார்? சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் பெரிய வெள்ளைத் தாடியோடு உட்கார்ந்திருந்தாரே, அவரா?"

"ஆம்; அவர்தான் நமது மகேந்திர சக்கரவர்த்தியின் சங்கீத ஆசிரியர். சங்கீதத்தைப் பற்றிச் சாஸ்திரம் எழுதியிருக்கிறார். இப்போது கிழவருக்கு வயது அதிகமாகிவிட்டது. இருந்தாலும் தடியை ஊன்றிக்கொண்டு உன்னுடைய அரங்கேற்றத்துக்கு வந்திருந்தார். உன்னுடைய ஆட்டத்தைப் பார்த்துப் பிரமித்துப் போய்விட்டார். சபை கலைந்தவுடனே அவர் என்னைக் கூப்பிட்டு, 'உன் மகள் நன்றாயிருக்கவேண்டும். அவள்தான் இன்று என் குருட்டுக் கண்களைத் திறந்து, ஒரு முக்கியமான உண்மையை உணரச் செய்தாள். நான் சங்கீத சாஸ்திரம் எழுதியிருக்கிறேனே, அதெல்லாம் சுத்தத் தவறு. பரத சாஸ்திரம் பயிலாமல் நான் சங்கீதத்தைப் பற்றி எழுதியதே பெரும் பிசகு!' என்று சொன்னார். சங்கீத மகாசாகரமாகிய ருத்ராச்சாரியாரே இவ்வாறு சொல்லுகிறதென்றால்..."

"அப்பா! யார் என்ன சொன்னால் என்ன? எனக்கு என்னமோ ஒன்றும் பிடிக்கவில்லை. பரத, சங்கீதம், சிற்பம், சித்திரம் இவற்றினால் எல்லாம் உண்மையில் என்ன பிரயோஜனம்?"

"சிவகாமி! நீதானா கேட்கிறாய் கலைகளினால் என்ன பிரயோஜனம் என்று? மகளே! நான் கேட்கிறதற்கு விடை சொல். வஸந்த காலத்தில் மரங்களும் செடிகளும் பூத்துக் குலுங்குவதனால் என்ன பிரயோஜனம்? பௌர்ணமி இரவில் பூர்ண சந்திரன் பால் நிலவைப் பொழிகிறதே, அதனால் என்ன உபயோகம்? மயில் ஆடுவதனாலும், குயில் பாடுவதனாலும் யாது பயன்? கலைகளின் பயனும் அவை போன்றதுதான். கலைகளைப் பயில்வதிலேயே ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தத்தை நீ அனுபவித்ததில்லையா? இன்றைக்கு ஏன் இப்படிப் பேசுகிறாய், அம்மா?"

சிவகாமி மறுமொழி சொல்லாமல் எங்கேயோ பார்த்தவண்ணம் இருந்தாள். காதளவு நீண்ட அவளுடைய கரிய கண்களில் முத்துப்போல் இரு கண்ணீர்த் துளிகள் துளித்து நின்றன. இதைப் பார்த்த ஆயனர் திடுக்கிட்டவராய்ச் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு, சிவகாமியின் கூந்தலை அருமையுடன் தடவிக் கொடுத்த வண்ணம் கூறினார்.

"அம்மா! எனக்குத் தெரிந்தது. உன்னை அறியாப் பிராயத்துச் சிறு குழந்தையாகவே நான் இன்னமும் எண்ணிக் கொண்டிருக்கிறேன். அது தவறுதான். உனக்குப் பிராயம் வந்து உலகம் தெரிந்து விட்டது. உன்னை ஒத்த பெண்கள் கல்யாணம் செய்துகொண்டு குடியும் குடித்தனமுமாய் வாழ்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறாய். உன் அன்னை உயிரோடு இருந்திருந்தால், இத்தனை நாளும் உனக்குக் கல்யாணம் செய்து வைக்கும்படி என் பிராணனை வாங்கியிருப்பாள். ஆனால், நானும் அந்தக் கடமையை மறந்து விடவில்லை. சிவகாமி! பரத சாஸ்திரத்தில் சொல்லி இருக்கும் நூற்றெட்டு அபிநயத் தோற்றங்களில் நாற்பத்தெட்டு தோற்றங்களைச் சிலைகளில் அமைத்துவிட்டேன். இன்னும் அறுபது சிலைகள் அமைந்தவுடனே, உனக்குத் தக்க மணாளனைத் தேடிக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு மறுகாரியம் பார்ப்பேன்!"

இவ்விதம் ஆயனர் சொன்னபோது சிவகாமி கண்களைத் துடைத்துக் கொண்டு அவரை நிமிர்ந்து பார்த்து, "கல்யாணப் பேச்சை எடுக்க வேண்டாம் என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன். அப்பா! எனக்குக் கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். உங்களைத் தனியாக விட்டு விட்டு நான் போவேனா? அத்தகைய கிராதகி அல்ல நான்!" என்றாள்.

உண்மை என்னவென்றால், சிவகாமியைக் கல்யாணம் பண்ணிக் கொடுப்பதில் ஆயனருக்கு அந்தரங்கத்தில் விருப்பம் கிடையாது. குழந்தைப் பிராயத்திலிருந்து அவளைக் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தவர் அவர். கல்வியும் கலையும் பயில்வித்தவர் அவர். பெண்ணை விட்டுப் பிரிந்து ஒரு நிமிஷங்கூடத் தாம் உயிர் வாழ முடியாது என்று ஆயனர் எண்ணினார். ஆனாலும், என்றைக்காவது ஒரு நாள் அவளைக் கல்யாணம் செய்து கொடுத்துத்தானே ஆக வேண்டும் என்னும் நினைவு அடிக்கடி அவர் மனத்தில் உறுத்திக் கொண்டிருந்தது.

எனவே, சிவகாமியின் கல்யாணத்தைப் பற்றி அவர் சில சமயம் பிரஸ்தாபிப்பது உண்டு. அப்போதெல்லாம் சிவகாமி, "எனக்குக் கல்யாணம் வேண்டாம்" என்று மறுமொழி கூறுவதைக் கேட்பதில் அவருக்கும் மிகவும் ஆனந்தம்.

இன்றைக்கும் சிவகாமியின் மறுமொழி ஆயனருக்கு ஆறுதலை அளித்தது. எனினும், அவர் மேலும் தொடர்ந்து, "அதெப்படி, சிவகாமி! மணம் செய்து கொடுக்காமலே நான் உன்னை என் வீட்டிலேயே வைத்துக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமா? உலகம் ஒப்புக்கொள்ளுமா? ஒரு தகுந்த பிள்ளையாகப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க வேண்டியதுதான். ஆனால் இந்த யுத்தம் ஒன்று வந்து தொலைந்திருக்கிறது. இதனால் நமது குமார சக்கரவர்த்தியின் திருமணம்கூடத் தடைப்படும் போலிருக்கிறது."

சிவகாமியின் முகத்தில் அப்போது ஒரு அதிசயமான மாறுதல் காணப்பட்டது. ஆங்காரத்தினால் ஏற்பட்ட கிளர்ச்சி அந்த அழகிய முகத்தை இன்னும் அழகுபடுத்தியது.

"என்ன அப்பா சொல்கிறீர்கள்? யாருக்குத் திருமணம்? குமார சக்கரவர்த்திக்கா?" என்றாள்.

"ஆமாம்! மாமல்லருக்கு இந்த ஆண்டில் திருமணம் நடத்த வேண்டுமென்று மகாராணிக்கு மிகவும் ஆசையாம். யுத்தம் முடிந்த பிறகுதான் கல்யாணம் என்று சக்கரவர்த்தி சொல்லிவிட்டாராம். இதனால் புவன மாதேவிக்கு மிகுந்த வருத்தம் என்று கேள்வி."

சிவகாமி குரோதம் ததும்பிய குரலில், "அப்பா! யார் வேணுமானாலும் கல்யாணம் செய்துகொள்ளட்டும்! அல்லது செய்து கொள்ளாமல் இருக்கட்டும். நான் என்னவோ கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை" என்றாள்.

ஆயனர் மீண்டும், "அதெப்படி முடியும், சிவகாமி! சைவ குலத்துப் பெண்ணை மணம் செய்து கொடுக்காமல் எப்படி வைத்திருக்கலாம்? நாலு பேர் கேட்டால், நான் என்ன சொல்லுவது?" என்றார்.

"அப்பா! நீங்கள் கவலைப்படவேண்டாம். நான் புத்த மதத்தைச் சேர்ந்த பிக்ஷுணியாகி விடுகிறேன். அப்போது உங்களை ஒருவரும் ஒன்றும் கேட்கமாட்டார்கள்" என்றாள் சிவகாமி.

அவள் இவ்விதம் சொல்லி வாய்மூடிய அதே சமயத்தில், வாசற்புறத்தில் "புத்தம் சரணம் கச்சாமி" என்று குரல் கேட்டது.

இருவரும் திரும்பிப் பார்த்தார்கள் வாசற்படிக்கு அருகில் நாகநந்தி அடிகளும், அவருக்குப் பின்னால் வியப்புடன் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டு பரஞ்சோதியும் நின்று கொண்டிருந்தார்கள்.

அமர சிருஷ்டி

புத்த பிக்ஷுவின் குரலைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த ஆயனர், விரைந்தெழுந்து, "வாருங்கள்! அடிகளே வாருங்கள்!" என்று கூறிக்கொண்டே வாசற்படியண்டை சென்றார்.

சிவகாமி அவசரமாக எழுந்து அருகிலிருந்த தூணைப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

உள்ளே பிரவேசித்த பிக்ஷு நாலாபுறமும் சுற்றிப் பார்த்து விட்டு "ஆயனரே! நான் சென்ற தடவை வந்துபோன பின்னர், புதிய சிலைகள் செய்திருக்கிறீர்களோ?" என்றார்.

"ஆம், சுவாமி! அப்புறம் பன்னிரண்டு ஹஸ்த வகைகளை அமைத்திருக்கிறேன். இதோ பாருங்கள்! இந்தச் சிலைகளெல்லாம் புதியவை!" என்றார் ஆயனர்.

பிக்ஷு ஆயனர் காட்டிய சிலைகளைக் கண்ணோட்டமாய்ப் பார்த்துவிட்டு, தூணைப் பிடித்துக் கொண்டு நின்ற சிவகாமியை நோக்கியபடி, "அதோ அந்தத் தூணின் அருகில் நிற்பதும், சிலைதானோ?" என்று வினவினார். அப்போது புத்த பிக்ஷுவின் கடூர முகத்தில் தோன்றிய புன்னகை அந்த முகத்தின் விகாரத்தை அதிகமாக்கிற்று.

ஆயனர் சிரித்துக்கொண்டே, "இல்லை சுவாமி! அவள் என் பெண் சிவகாமி!... குழந்தாய்! இதோ, நாகநந்தி அடிகள் வந்திருக்கிறார், பார்! பிக்ஷுவுக்கு வந்தனம் செய்!" என்றார்.

சிவகாமி அச்சமயம், நாகநந்திக்குப் பின்னால் வந்த இளைஞனைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆயனர் கூறியதைக் கேட்டதும் பிக்ஷுவின் பக்கம் திரும்பி நமஸ்கரித்தாள்.

பிக்ஷுவுடன் உள்ளே பிரவேசித்த பரஞ்சோதி அந்தச் சிற்ப மண்டபத்தில் நாலாபுறமும் காணப்பட்ட அதிசயங்களைப் பார்த்த வண்ணம் வாசற்படிக்கு அருகிலேயே பிரமித்துப்போய் நின்றான். அம்மாதிரியான அபூர்வ வேலைப்பாடமைந்த சிற்பங்களையும் சித்திரங்களையும் அவன் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை.

இடையிடையே அவன் ஆயனர், சிவகாமி இவர்களையும் கவனித்தான். அன்று பல்லக்கில் அமர்ந்திருந்தவர்கள் - மதயானையின் கோபத்திலிருந்து தன்னால் காப்பாற்றப்பட்டவர்கள் அவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்டான்.

புத்த பிக்ஷுவை ஆர்வத்துடன் வரவேற்று அவருடன் பேசிக் கொண்டே சென்ற ஆயனர் பரஞ்சோதியைக் கவனிக்கவே இல்லை; அவனைத் திரும்பிப் பார்க்கக்கூட இல்லை.

ஆனால், தூணருகில் நின்ற அவருடைய மகள் அவ்வப்போது தன்னைக் கடைக் கண்ணால் கவனிப்பதைப் பரஞ்சோதி தெரிந்துகொண்டான். நடனத்துக்குரிய ஆடை ஆபரணங்களை அணிந்து நின்ற சிவகாமியின் நவ யௌவன சௌந்தர்யத்தின் ஒளி பரஞ்சோதியின் கண்களைக் கூசச் செய்தது.

கிராமாந்திரத்தில் பிறந்து வளர்ந்தவனும், இயற்கையில் சங்கோசமுடையவனும், தாயைத் தவிர வேறு பெண்களுடன் பழகி அறியாதவனுமான பரஞ்சோதியினால் சிவகாமியின் முகத்தை ஏறிட்டுப் பார்க்க முடியவில்லை. அதிலும், சிவகாமி தன்னைக் கவனிக்கிறாள் என்பதை அவன் அறிந்த பின்னர். அவர்கள் இருந்த பக்கமே திரும்பாமல் எதிர்ப்புறக் கூடத்தில் காணப்பட்ட சிலைகளைப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருந்தான். அந்தச் சிலைகளின் தோற்றத்திலும், முக பாவத்திலும் ஏதோ ஓர் அதிசயம் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. அந்த அதிசயம் இன்னதென்பது மின்வெட்டைப் போல் அவன் உள்ளத்தில் உதித்தது. ஆ! இந்தச் சிலைகள் எல்லாம் தூணருகில் நின்று தன்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்ணின் பல்வேறு தோற்றங்கள் தாம்! இந்த உண்மையை அவன் உள்ளம் கண்டதும், சிவகாமியினிடம் அவனுக்குத் தெய்வங்களிடம் உண்டாவது போன்ற பயபக்தி உண்டாயிற்று.

சிவகாமி புத்த பிக்ஷுவை நமஸ்கரித்தபோது அவர் ஆர்வம் ததும்பிய விழிகளால் அவளை விழுங்குபவர்போல் பார்த்துவிட்டு "புத்த தேவர் அருளால் உன் கோரிக்கை நிறைவேறட்டும், அம்மா! புத்த பிக்ஷுணி ஆக விரும்புவதாகச் சற்று முன்னால் நீதானே சொல்லிக்கொண்டிருந்தாய்?" என்றார்.

இந்த ஆசி மொழியானது சிவகாமிக்கு அருவருப்பை உண்டாக்கியது என்று அவள் முகபாவத்தில் தெரிந்தது. ஆயனருக்கும் அது பிடிக்கவில்லையென்பது அவருடைய வார்த்தைகளில் வெளியாயிற்று.

"அடிகளே! குழந்தை ஏதோ வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். நாலு நாளைக்கு முன்னால் காஞ்சியில், சிவகாமியின் அரங்கேற்றம் நடந்தது. ஆகா! தாங்கள் அதற்கு இல்லாமல் போய்விட்டீர்களே!" என்றார் ஆயனர்.

"எல்லாம் கேள்விப்பட்டேன் அரங்கேற்றம், அதற்குப் பின்னால் நடந்தவை எல்லாம் அறிந்து கொண்டேன். உங்களுக்குப் பெரிய ஆபத்து வந்ததாமே? மதயானையின் கோபத்துக்குத் தப்பினீர்களாமே!" என்றார் பிக்ஷு.

"ஆம், சுவாமி! ஏதோ தெய்வத்தின் அருள் இருந்தபடியால் தப்பிப் பிழைத்தோம்... தங்களுக்குச் சாவகாசம் தானே? இன்று பிக்ஷை இங்கேயே வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறி, ஆயனர், பிக்ஷுவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

"ஆகா! எனக்குச் சாவகாசந்தான். இன்றைக்குத் தங்கள் கிருஹத்திலே பிக்ஷை என்று எண்ணிக் கொண்டுதான் வந்தேன். தங்களுக்கு அதிகச் சிரமம் இல்லாவிட்டால்...?" என்று பிக்ஷு கூறுவதற்குள் "சிரமமா? என்னுடைய பாக்கியம்!" என்றார் ஆயனர்.

முற்றத்தில் கிடந்த இரண்டு பெரிய கற்களில் இருவரும் எதிர் எதிராக அமர்ந்தார்கள். "அம்மா, சிவகாமி! நீயும் உட்காரலாமே? அடிகளுக்குக் கலைகளில் அபார பிரேமை, தெரியுமோ, இல்லையோ?" என்று ஆயனர் கூறிவிட்டு, பிக்ஷுவைப் பார்த்துச் சற்று மெதுவான குரலில், "அடிகளே! அஜந்தா சித்திரங்களைப் பற்றி ஏதாவது தகவல் வந்ததா?" என்று கேட்டார். அப்போது அவருடைய முகத்தில் அளவிடக்கூடாத ஆர்வம் தோன்றியது.

ஆயனர் உட்காரச் சொல்லியும் சிவகாமி உட்காரவில்லை. தூணைப் பிடித்துக்கொண்டே நின்றாள். அவளுடைய கவனம் இவர்களுடைய பேச்சில் இருந்தபோதிலும், இடையிடையே கண்கள் பரஞ்சோதியையும் கவனித்தன.

புத்த பிக்ஷு ஆயனரின் கேள்விகளுக்கு மறுமொழி சொல்லாமல், "ஆயனரே! தெய்வத்தின் சிருஷ்டியைக் காட்டிலும் தங்களுடைய சிருஷ்டியே மேல் என்று எனக்குத் தோன்றுகிறது!" என்றார்.

"சுவாமி.." என்று ஆயனர் மறுமொழி சொல்ல ஆரம்பித்தபோது, பிக்ஷு அதற்கு இடங்கொடாமல் தொடர்ந்து சொன்னார்: "நான் முகஸ்துதி செய்யவில்லை, ஆயனரே! உண்மையைச் சொல்லுகிறேன். தெய்வத்தின் சிருஷ்டி அழிந்து போகக் கூடியது. இந்த மனித உடம்புக்கு நூறு வயதுக்கு மேல் கிடையாது. நரை, திரை, மூப்புத் துன்பங்கள் மனித தேகத்துக்கு உண்டு. ஆனால், நீர் அமைத்திருக்கிறீரே, இந்த அற்புதச் சிலைகள், இவற்றுக்கு அழிவே இல்லையல்லவா? நரை, திரை, மூப்புத் துன்பம் இந்தச் சிலைகளை அணுகாவல்லவா? கல்லால் அமைந்த இந்தச் சிலைகளில் விளங்கும் ஜீவகளை ஆயிரம் ஆயிரம் வருஷங்கள் ஆனபோதிலும் மங்காமல் பிரகாசிக்குமல்லவா? உம்முடைய சிருஷ்டி தெய்வ சிருஷ்டியைக் காட்டிலும் மேல் என்பதில் சந்தேகம் என்ன?"

இதையெல்லாம் கேட்ட ஆயன சிற்பியின் முகத்தில் கலை ஞானத்தின் கர்வம் தாண்டவமாடியது. "அடிகளே! தாங்கள் சொல்லும் பெருமை எல்லாம் சிவகாமிக்கே சேரும். நடனக் கலையில் அவள் இவ்வளவு அற்புதத் தேர்ச்சி அடைந்திராவிட்டால், இந்தச் சிலை வடிவங்களை நான் எப்படி அமைத்திருக்க முடியும்?.. ஆஹா! குழந்தையின் அரங்கேற்றத்துக்கு நீங்கள் இல்லாமல் போய்விட்டீர்களே! ருத்ராச்சாரியார் பிரமித்து ஸ்தம்பித்து நின்றுவிட்டார். அன்றைக்கு இரண்டுபேர் இல்லாமல் போனதாலே தான் எனக்கு வருத்தம். தாங்களும் இல்லை; நாவுக்கரசர் பெருமானும் இல்லை..."

"ஆமாம், ஆமாம்! ஆயனரே! நாவுக்கரசர் சிவகாமியின் அரங்கேற்றத்தின்போது இருந்திருந்தால் ரொம்பவும் குதூகலமடைந்திருப்பார். முக்கியமாக, சக்கரவர்த்தியின் 'மத்தவிலாச'த்திலிருந்து எடுத்து அபிநயம் செய்த கட்டத்தை ரொம்பவும் ரசித்திருப்பார் நாவுக்கரசர். மதுபானம் செய்த புத்த பிக்ஷுவும் காபாலிகனும் சண்டையிட்ட இடம் வெகு ரசமாக இருந்திருக்குமே?"

ஆயனரின் முகம் சிறிது சுருங்கிற்று. "சுவாமி! ஹாஸ்ய ரஸத்தைக் காட்டுவதற்காக அந்த விஷயத்தைச் சிவகாமி எடுத்துக் கொண்டாள். மற்றபடி அவளுக்கு மகான்களாகிய புத்த பிக்ஷுக்களைப் பரிகசிக்கும் எண்ணம் கொஞ்சமும் இல்லை!" என்றார்.

மகா ரசிகரும் சகல கலைகளிலும் வல்லவருமான மகேந்திரவர்ம சக்கரவர்த்தி ஜைனராயிருந்தபோது, 'மத்த விலாஸம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை இயற்றியிருந்தார். அதில் காபாலிகர்களும் புத்த பிக்ஷுக்களும் பெருங்கேலிக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அந்த நாடகத்தில் ஒரு பகுதியைச் சிவகாமி அபிநயத்துக்கு விஷயமாக எடுத்துக் கொண்டிருந்தாள். அதைக் குறித்துத்தான் மேற்கண்ட பேச்சு நடந்தது.

பின்னர் பிக்ஷு சொன்னார்: "வாஸ்தவந்தான்; ஹாஸ்ய ரசத்தை அபிநயித்துக் காட்ட மிகவும் பொருத்தமான சம்பவம். காபாலிகன் புத்த பிக்ஷுவின் தலைக் குடுமியைப் பிடிக்கப் பார்த்து, மொட்டைத் தலையைத் தடவி விட்டுக் கீழே விழும் கட்டத்தில் ஹாஸ்ய ரசம் ததும்பியிருக்கும்! ஆனால், சபையோர் சிரித்து முடிவதற்குள்ளே ஏதோ யுத்தத்தைப் பற்றிய செய்தி வந்து, சக்கரவர்த்தி எழுந்து போய் விட்டாராமே? சபையும் கலைந்துவிட்டதாமே?.."

"ஆமாம், ஆமாம்! அதுதான் சற்று மனக் கிலேசத்தை அளித்தது. அதனாலேயே சிவகாமிகூட நாலு நாளாக உற்சாகமில்லாமல் இருந்தாள். அரங்கேற்றத்துக்குப் பிறகு இன்றைக்குத்தான் மறுபடியும் காலில் சதங்கை கட்டிக் கொண்டாள். அடிகளே, யுத்தம் எதற்காக வருகிறது? எதற்காக ஜனங்கள் ஒருவரையொருவர் கொன்று கொண்டு சாகவேண்டும்?" என்றார் ஆயனர்.

"ஆயனரே! அந்தக் கேள்வியை ஏழை பிக்ஷுவாகிய என்னிடம் கேட்டு என்ன பிரயோஜனம்? உலகத்திலுள்ள திரிபுவன சக்கரவர்த்திகளையும், குமார சக்கரவர்த்திகளையும், மகாராஜாக்களையும் யுவ ராஜாக்களையும், சிற்றரசர்களையும் படைத் தலைவர்களையும் கேட்கவேண்டும். கொலையும் கொடூரமும் நிறைந்த இந்த உலகத்தில் புத்த பகவான் அவதரித்து அன்பு மதத்தைப் பரப்பினார். அதற்காகப் பிக்ஷுக்களின் சங்கத்தையும் ஸ்தாபித்தார். அந்தப் புத்த பிக்ஷுக்களை ராஜ சபைகளில் பரிகசித்துச் சிரிக்கும் காலம் இது! யுத்தம் ஏன் வருகிறது என்று என்னைக் கேட்டு என்ன பயன்?"

அந்தப் பொல்லாத புத்த பிக்ஷுவிடம், பேச்சு யுத்தத்தில் அகப்பட்டுக்கொண்டு தன் தந்தை திணறுவதைச் சிவகாமி அறிந்தாள். அவளுடைய கண்களில் கோபக் கனல் வீசிற்று. அவள், "அப்பா! புத்த பகவான் அன்பு மதத்தையும் அஹிம்சா தர்மத்தையும் உபதேசித்தது உண்மைதான். ஆனால் இந்தக் காலத்தில் அந்தப் புத்த பகவானுடைய பெயரைச் சொல்லிக் கொண்டு போலி பிக்ஷுக்கள் தோன்றி, மக்களை வஞ்சித்து ஏமாற்றி வருகிறார்கள். அதனால்தான் யுத்தம் முதலிய விபரீதங்கள் வருகின்றன!" என்றாள்.

ஆயனருக்கு, 'இதேதடா வம்பு?' என்று தோன்றியது. அங்கிருந்து சிவகாமியை எப்படியாவது அனுப்பிவிட எண்ணி அவளை இரக்கம் தோன்றப் பார்த்து, "குழந்தாய், சிவகாமி! நீ வேணுமானால் உள்ளே அத்தையிடம் போய்.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார்.

அதற்குள் நாகநந்தி, "ஆயனரே! நான் தோற்றேன். சிவகாமி மிகவும் புத்திசாலி! அவள் சொல்லியதில் ரொம்பவும் உண்மை இருக்கிறது!" என்றார். அவருடைய கடூர முகத்தில் மறுபடியும் ஒரு கண நேரம் விசித்திரமான புன்னகை காணப்பட்டது.

பேச்சை வேறு வழியில் திருப்பியாக வேண்டுமென்று ஆயனர் கருதிச் சுற்று முற்றும் பார்த்தார். அப்போது அவருடைய பார்வை அம்மண்டபத்தின் இன்னொரு பக்கத்தில் சிலைகளையும் சித்திரங்களையும் பார்த்துக் கொண்டு நின்ற பரஞ்சோதியின் மேல் விழுந்தது.

"சுவாமி! அந்தப் பிள்ளை யார்? உங்களுடைய சீடனா?" என்று கேட்டார் ஆயனர்.

தாமரைக் குளம்

தன்னைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது காதில் விழுந்ததும் பரஞ்சோதி அவர்கள் இருந்த பக்கம் திரும்பிப் பார்த்தான்.

அதே சமயத்தில் புத்த பிக்ஷு, "என்னுடைய சீடன் இல்லை, ஆயனரே! தங்களுடைய சீடனாகப் போகிறவன். பரஞ்சோதி! இங்கே வா!" என்றார்.

பரஞ்சோதி அவர்களருகில் நெருங்கி வந்தான். அப்போதுதான் அவனை நன்றாகக் கவனித்த ஆயனர் வியப்புடன், "யார் இந்தப் பிள்ளை? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது?" என்றார்.

"அப்பா! உங்களுக்குத் தெரியவில்லையா? அன்றைய தினம் மத யானையின்மேல் வேலை எறிந்தாரே, அவர்தான்!" என்று உற்சாகத்துடன் கூறினாள் சிவகாமி.

பரஞ்சோதி நன்றியறிதலுடன் சிவகாமியை ஒரு கணம் ஏறிட்டுப் பார்த்தான்.

ஆயனரின் முகத்தில் ஆச்சரியமும் ஆர்வமும் பொங்கின. "என்ன? என்ன? அந்த வீர வாலிபனா இவன்? என்ன லாகவமாய் வேலை எறிந்தான். மாமல்லர்கூட அதிசயிக்கும்படி! இவனுக்கு எந்த ஊர்? இத்தனை நாளும் எங்கே இருந்தான்? தங்களை எப்போது சந்தித்தான்...?" என்று சரமாரியாக ஆயனர் கேள்விகளை அடுக்கினார்.

சாதாரணமாக, ஆயனர் தாம் ஈடுபட்டுள்ள கலைகளின் விஷயத்திலே தவிர, வேறெதிலும் இவ்வளவு ஆர்வம் காட்டிப் பேசுவதில்லை.

"சித்தர்வாச மலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இந்தப் பிள்ளையை வழியில் பார்த்தேன்.." என்று பிக்ஷு ஆரம்பிப்பதற்குள்ளே ஆயனர் பரஞ்சோதியை மறந்து விட்டார்.

"ஆஹா, அடிகள் சித்தர் மலைக்கா போயிருந்தீர்கள்? அங்கேயுள்ள சித்திர அதிசயங்களைப் பார்த்தீர்களா?" என்றார்.

"பார்த்தேன், ஆயனரே! அதைப்பற்றி அப்புறம் சொல்லுகிறேன். நான் வரும் வழியில் சாலை ஓரத்தில் இந்தப் பிள்ளை படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தான். இவனை ஒரு பெரிய நாக சர்ப்பம் கடிக்க இருந்தது. என்னுடைய கொல்லா விரதத்தைக் கூடக் கைவிட்டு அந்த நாகத்தைக் கொன்று இவனைக் காப்பாற்றினேன்..."

"இது நல்ல வேடிக்கை! தங்கள் திருநாமம் நாகநந்தி! இவனை நாகம் தீண்டாமல் தாங்கள் காப்பாற்றினீர்கள்! இவன் எங்களை நாகம் கொல்லாமல் காப்பாற்றினான்! ஆஹா! ஹா!" என்று ஆயனர் சிரித்தார்.

நாகம் என்பது சர்ப்பத்துக்கும் யானைக்கும் பெயரானபடியால் ஆயனருக்கு மேற்படி சிலேடைப் பொருத்தம் மிக்க விநோதத்தை அளித்தது.

புத்த பிக்ஷு, "இவனை நான் காப்பாற்றியதனால் பல காரியங்களுக்குச் சாதகமாயிற்று. தங்களுக்கு இவன் ஓலை கொண்டு வந்திருக்கிறான்!" என்றார்.

"ஓலையா? யாரிடமிருந்து?"

"திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து, அவருடைய மருமகன் இவன்!"

ஆயனர் ஆர்வத்துடன் எழுந்து, "என் அருமைச் சிநேகிதரின் மருமகனா நீ? உன் பெயர் என்ன, தம்பி!" என்று கேட்டுக் கொண்டே பரஞ்சோதியைத் தழுவிக்கொண்டார்.

பிறகு, "ஓலை எங்கே?" என்று கேட்டார்.

பரஞ்சோதி நாகநந்தியை நோக்கினான் அவர், "ஆயனரே ஓலை காணாமல் போய்விட்டபடியால் வாலிபன் இங்கு வருவதற்கே தயங்கினான். அதற்காகவே இவனை நான் அழைத்துக்கொண்டு வந்தேன். இவனுடைய மாமன் தங்களுக்கும் நாவுக்கரசருக்கும் ஓலைகள் கொடுத்திருந்தாராம். அந்த ஓலைகளை மூட்டைக்குள் கட்டி வைத்திருந்தான். அன்றிரவு யானைமேல் வேல் எறிந்த இடத்தில் மூட்டை காணாமல் போய் விட்டது..." என்று நிறுத்தினார்.

அப்போது ஆயனர், "ஆமாம், ஆமாம்! யானை நின்ற இடத்தில் ஒரு மூட்டை கிடந்தது. அதை நான் எடுத்து வந்தேன். ஆனால், மறுநாள் கோட்டைக் காவல் தலைவர் ஆள் அனுப்பி அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார். போனால் போகட்டும், என் அருமை நண்பரின் மருமகன் என்று சொன்னால் போதாதா! ஓலை வேறு வேணுமா?.. சிவகாமி, நம்மைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றிய வீரப்பிள்ளை இவன்தான் இவனுக்கு உன்னுடைய நன்றியைத் தெரியப்படுத்து!" என்றார்.

சிவகாமி பரஞ்சோதியைப் பார்த்தவண்ணம், "இவருக்கு நான் நன்றி செலுத்தப் போவதில்லை. இவரை யார் விதிக்குக் குறுக்கே வந்து வேலை எறியச் சொன்னது? இவர் பாட்டுக்கு இவர் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போவதுதானே?" என்றாள்.

சிவகாமியின் இந்தக் கடுஞ்சொல், கேட்டுக்கொண்டிருந்த மூன்று பேரையும் சிறிது திடுக்கிடச் செய்தது.

நாகநந்தி ஆயனரைப் பார்த்து, "உங்கள் குமாரிக்கு என்ன ஏதாவது உடம்பு குணமில்லையா?" என்று கேட்டார்.

"அதெல்லாம் ஒன்றுமில்லை, சுவாமி! அன்று அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்டதிலிருந்து அவளுக்கு உற்சாகக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அது ஏதோ அபசகுனம் என்று நினைக்கிறாள்... சிவகாமி! நீ உன் அத்தையிடம்போய், 'அதிதிகள் வந்திருக்கிறார்கள்' என்று சொல்லு, அம்மா!" என்றார்.

"ஆகட்டும், அப்பா!" என்று சொல்லிவிட்டுச் சிவகாமி அந்த வீட்டின் பின்கட்டை நோக்கிச் சென்றாள். மண்டபத்தின் பின்வாசற்படியை அவள் தாண்டிக் கொண்டிருந்த போது, புத்த பிக்ஷு பின்வருமாறு பரிகாசக் குரலில் சொன்னது அவள் காதில் இலேசாக விழுந்தது. "உம்முடைய குமாரியைத் தாங்கள் நன்றாகக் கவனிக்கவேண்டும், ஆயனரே! சாதாரணமாக, இளம் பெண்கள் உயிரின்மேல் வெறுப்புக் கொண்டார்கள் என்றால், அதற்குக் காரணம் காம தேவனுடைய புஷ்ப பாணங்களாகத்தான் இருக்கும் என்பது உமக்குத் தெரியாதா?"

சிவகாமி தனக்குள், "இந்த புத்த பிக்ஷு பொல்லாதவர்; நெஞ்சிலும் நாவிலும் நஞ்சு உடையவர்; இவருடன் அப்பாவுக்கு என்ன சிநேகம் வேண்டிக் கிடக்கிறது?" என்று சொல்லிக் கொண்டாள்.

இரண்டாங் கட்டுக்குள் சிவகாமி நுழைந்ததும் அங்கே 'கலகல' என்றும் 'சடசட' என்றும், பலவிதமான சப்தங்கள் ஏக காலத்தில் உண்டாயின. பச்சைக் கிளிகளும் பஞ்சவர்ணக் கிளிகளும், 'அக்கா! அக்கா! என்று கூவின. நாகணவாய்ப் புட்கள் 'கிக்கி!' என்றன. புறாக்கள் 'சடசட' என்றும், சிறகுகளை அடித்துக் கொண்டன. முற்றத்துக் கூரைமேல் உட்கார்ந்திருந்த மயில் 'ஜிவ்'வென்று பறந்து தரைக்கு வந்தது. அங்கிருந்த மான்குட்டி மட்டும் சப்தம் ஒன்றும் செய்யாமல், சிவகாமியின் முகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டு அவள் அருகில் வந்து நின்றது.

இந்தப் பட்சிகள், மிருகங்கள் எல்லாம் சிவகாமி விளையாடிப் பொழுதுபோக்குவதற்காகவும், ஆயனரின் சிற்ப சித்திரவேலைகளுக்காகவும் இரண்டாவது கட்டில் வளர்க்கப்பட்டு வந்தன.

சிவகாமி பிரவேசித்ததும் அவை போட்ட சத்தத்தைக் கேட்டு, "சீ! பேசாமலிருங்கள்! தலைவேதனை!" என்று அதட்டினாள். உடனே அங்கு அதிசயமான நிசப்தம் உண்டாயிற்று.

சிவகாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "இன்றைக்கு ரதியைத்தான் அழைத்துப் போக வேண்டும். ரதிதான் சத்தம் போடாமல் வருவாள்! ரதி வா!" என்று கூறிவிட்டு மேலே சென்றபோது, மான்குட்டி மட்டும் அவளைத் தொடர்ந்து சென்றது. மற்ற பட்சிகள் மௌனமாயிருந்த போதிலும், தலையைச் சாய்த்துக்கொண்டும் மற்றும் பலவிதக் கோணங்கள் செய்து கொண்டும் ரதியைப் பொறாமை ததும்பிய கண்களால் நோக்கின.

இரண்டாவது கட்டைத் தாண்டியதும், மூன்றாவது கட்டு ஒன்று இருந்தது. அது சமையல் கட்டு என்பது, அங்கு வந்த புகையினாலும், அடுப்பிலிருந்து வந்த பலவகை உணவுப் பதார்த்தங்களின் நறுமணங்களினாலும் தெரியவந்தது.

தாழ்வாரத்தில் நின்றபடி, "அத்தை!" என்று கூப்பிட்டாள் சிவகாமி.

"ஏன், குழந்தாய்?" என்று கேட்டுக்கொண்டு ஒரு மூதாட்டி சமையல் அறை வாசலில் தோன்றினாள்.

"அதிதிகள் இரண்டுபேர் வந்திருக்கிறார்கள். முன்னொரு தடவை வந்தாரே கடுவன் பூனை போன்ற முகத்துடனே ஒரு புத்த பிக்ஷு அவர் வந்திருக்கிறார்" என்றாள் சிவகாமி.

"பெரியவர்களைப்பற்றி இப்படியெல்லாம் சொல்லாதே, கண்ணே நீ எங்கே கிளம்புகிறாய், ரதியையும் அழைத்துக் கொண்டு?" என்று மூதாட்டி கேட்டாள்.

"அப்பாவும் அந்தப் புத்த பிக்ஷுவும் ஏதோ தர்க்கம் செய்து கொண்டிருக்கிறார்கள். அது முடிகிறவரையில் நான் தாமரைக் குளத்துக்குப் போய்வருகிறேன்!" என்று சொல்லி விட்டுச் சிவகாமி சமையற்கட்டைத் தாண்டிச்சென்று வீட்டின் கொல்லைப்புறத்தை அடைந்தாள்.

கொல்லைப்புறத்தில் வீட்டைச் சேர்ந்தாற்போல் மல்லிகை, முல்லை, அலரி, பாரிஜாதம், சம்பங்கி முதலிய பூஞ்செடிகளும் கொடிகளும் காணப்பட்டன. அவற்றையெல்லாம் தாண்டி மரங்களடர்ந்த வனப் பிரதேசத்துக்குள்ளே சிவகாமி பிரவேசித்தாள். அந்தக் காட்டில் நடக்கும் போது அவள் ரதியிடம் பின்வருமாறு சொல்லிக்கொண்டு போனாள்.

"என்ன ரதி! அப்பாவுக்கு என் அரங்கேற்றத்தின்போது இரண்டே இரண்டுபேர் வரவில்லை என்றுதான் வருத்தமாம்! இந்தப் புத்த பிக்ஷு வந்து என் அரங்கேற்றத்தைப் பார்க்கவில்லையென்று வருத்தம் என்ன வந்தது?.. யாருடைய பாராட்டுதலைப் பெறுவதற்காக நான் இரவு பகலாய்ப் படாதபாடுபட்டு இந்த நிருத்தியக் கலையைப் பயின்றேனோ, அவர் அன்றைக்கு வரவில்லை. இந்தப் பெரிய பல்லவ ராஜ்யத்துக்குள்ளே யார் மகா ரசிகரோ, அப்பேர்ப்பட்டவர் வரவில்லை. ஏழு வருடங்களுக்கு முந்தி, நான் உன்னைப் போல் சிறு குழந்தையாய் இருந்த காலத்தில், எவர் என்னுடன் கைகோத்து நின்று தாமும் நடனம் ஆடுவேன் என்று பிடிவாதம் பிடித்தாரோ - தமக்கும் நடனக் கலை சொல்லிக் கொடுக்கும்படி எவர் என் மோவாய்க்கட்டையைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாரோ - அவர் வரவில்லை, ரதி நீயே சொல்லு! ஆண் பிள்ளைகளைப்போல் பொல்லாதவர்கள் இந்த உலகத்தில் உண்டா...?"

ரதி பாவம், சிவகாமி தன்னிடம் சொல்லிக்கொண்டுவந்த விஷயங்களின் முக்கியத்துவத்தைக் கொஞ்சமும் அறிந்து கொள்ளாமல் ஆங்காங்குத் தரையில் காணப்பட்ட அறுகம்புல்லின் நுனியைக் கடித்து மென்றுகொண்டு வந்தது.

அரை நாழிகை நேரம் அவர்கள் காட்டுக்குள் நடந்து வந்த பிறகு, கொஞ்சம் இடைவெளி காணப்பட்டது. அந்த இடைவெளியில், ஓர் அழகிய தடாகம் இருந்தது. அதில் தாமரை, செங்கழுநீர், நீலோத்பலம் முதலிய மலர்கள் செழித்து வளர்ந்திருந்தன. சிவகாமி அந்தக் குளத்தில் இறங்கி நீர்க்கரை ஓரமாய் நின்று தண்ணீரில் தன்னுடைய நிழலைப் பார்த்தவண்ணம் பேசினாள்.

"ரதி! இதைப் பார்! அவர்மட்டும் இனிமேல் எப்போதாவது வரட்டும், நான் முகங்கொடுத்துப் பேசப் போவதே இல்லை! 'போதும், உம்முடைய சிநேகிதம்! போய் விட்டு வாரும்!' என்று கண்டிப்பாய்ச் சொல்லுகிறேனா, இல்லையா, பார்!" என்று சொல்லிய வண்ணம், அதற்கேற்ப அபிநயம் பிடித்தாள்.

சிவகாமி குளக்கரையில் வந்து நின்ற சிறிது நேரத்துக்கெல்லாம் காட்டில் சற்றுத் தூரத்தில் ஓர் உயர்ந்த ஜாதிக் குதிரை வந்து நின்றது. அதன்மேல் வீற்றிருந்த வீரன் சத்தம் செய்யாமல் குதிரை மேலிருந்து இறங்கித் தடாகத்தை நோக்கி வந்தான்.

ரதியின் தூது

குதிரை வந்த சப்தம் சிவகாமியின் செவியில் விழுந்தது. குதிரை நின்றதையும் அதன்மேல் வந்த வீரன் இறங்கித் தன்னை நோக்கி நடந்து வருவதையும் அவள் உணர்ந்தாள். வருகிறது இன்னார்தாம் என்பதை அவளுடைய நெஞ்சு அவளுக்கு உணர்த்தியது. இருந்தாலும், திரும்பிப் பார்த்துச் சந்தேகம் தீரவேண்டுமென்ற ஆவல் அளவில்லாமல் எழுந்தது. அந்த ஆவலைப் பலவந்தமாக அடக்கிக்கொண்டு, சிவகாமி சிலையைப்போல் அசையாமல் நின்றுகொண்டிருந்தாள்.

குமார சக்கரவர்த்தி, மாமல்ல நரசிம்மர் கையில் பிடித்த வேலுடன் வந்து சிவகாமியின் அருகில் குளக்கரைப்படியில் நின்றார். குளத்தின் தெளிந்த நீரில் சிவகாமியின் உருவத்துக்குப் பக்கத்தில் நரசிம்மவர்மரின் உருவமும் புலப்பட்டது. அப்போதும் சிவகாமி அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை.

வீர சௌந்தரியம் குடிகொண்டு தேஜஸுடன் விளங்கிய நரசிம்மரின் நவ யௌவன முகத்தில் இலேசாகப் புன்னகை அரும்பியது. அவரும் சிவகாமியை நேராகப் பார்க்காமல், தண்ணீரில் பிரதிபலித்த அவளுடைய முழுமதி முகத்தை உற்று நோக்கினார்.

சிவகாமி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு அவளுக்கு இன்னொரு பக்கத்தில் நின்ற மான்குட்டியைப் பார்த்து, "ரதி! இவர் யார்? எதற்காக இங்கு வந்தார் என்று கேள்?" என்றாள்.

இதைக் கேட்ட நரசிம்மரின் முகத்தில் புன்னகை மறைந்தது, புருவங்கள் நெறிந்தன. அவரும் ரதியைப் பார்த்து, "ரதி! உன் எஜமானி பரத கண்டத்திலேயே இணையற்ற பரத கலாராணியாகிவிட்டாள் அல்லவா? பழைய சிநேகத்தை நினைவு வைத்திருக்க முடியுமா? 'இவர் யார்?' என்று கேட்கத்தான் தோன்றும். இது ஒன்றும் எனக்கு ஆச்சரியமில்லை, ரதி!" என்றார்.

சிவகாமி ஆத்திரம் நிறைந்த குரலில் கூறினாள்: "ரதி! ஆச்சரியத்தையே அறியாதவரான சக்கரவர்த்தியின் திருக்குமாரருக்கு என்னுடைய ஆயிரங்கோடி நமஸ்காரத்தைச் சொல்லிவிட்டு இதையும் சொல்லு. அவரோ பூமண்டலாதிபதியின் புதல்வர்! தேசதேசங்களின் ராஜராஜாக்கள் எல்லாம் தம் திருப்பாதங்களில் விழுந்து வணங்கப்பெற்ற பிரபு; அப்பேர்ப்பட்டவர்க்கும் இந்த ஏழைச் சிற்பியின் மகளுக்கும் சிநேகம் எப்படிச் சாத்தியம்? அந்த எட்டாத பழத்துக்கு ஆசைப்பட்டது என்னுடைய அறிவீனந்தான் என்பதை உணர்ந்து கொண்டேன், ரதி!"

மாமல்லர் பரிகாசம் தொனித்த குரலில் சொன்னார்: "ரதி! உன் எஜமானிக்கு ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்து. பரத சாஸ்திர பண்டிதையான சிவகாமி தேவி இப்போது ஆடரங்கத்தில் நிற்கவில்லை; அபிநயம் பிடிக்கவில்லை. நிருத்தம், நிருத்தியம், ஹஸ்தம் அபிநயம் ஆகியவைகளைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து விட்டு என்னுடன் சுபாவிகமாகப் பேசச் சொல்லு!"

இயற்கையில் செவ்வரியோடிய சிவகாமியின் கண்கள் இப்போது கோபத்தினால் கோவைப்பழம்போல் சிவந்தன.

"ஆமாம் ரதி, ஆமாம்! நான் நடன அரங்கத்தில் நடிக்கும் நாடகக்காரிதான். காஞ்சிச் சக்கரவர்த்தியின் திருக்குமாரர் எங்கே? ஆயனச் சிற்பியின் மகள் எங்கே? மாமல்லரின் அருளைப் பெறுவதற்கு அரண்மனைகளிலும் அந்தப்புரங்களிலும் வளரும் எத்தனையோ இராஜகுமாரிகள் தவங்கிடக்கிறார்கள்! அரங்க மேடையில் ஏறி ஆடும் இந்த ஏழைப் பெண்ணின் ஞாபகம் அவருக்கு எப்படி இருக்கும்?" என்று சிவகாமி சொன்னபோது, அவளுடைய குரல் தழுதழுத்தது. அவளுடைய கண்களில் நீர் துளித்தது.

நரசிம்மவர்மர் மனங்கனிந்தவராய் அன்பு ததும்பிய குரலில் "சிவகாமி! ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய்? இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு நான் உண்மையில் தலைவனாகும்போது, அரங்க மேடையில் சதங்கை ஒலிக்க ஆடும் உன் அழகிய பாதங்களுக்கு அந்தப் பதவியை அர்ப்பணம் செய்வேன். என் உள்ளம் உனக்குத் தெரியாதா?" என்றார்.

இதனாலும் சிவகாமியின் மனம் மாறவில்லை. மீண்டும் அவள் மான் குட்டியையே பார்த்தவளாய், "ரதி! கதைகளிலும் காவியங்களிலும் புருஷர்களுடைய நயவஞ்சகத்தைப் பற்றி எவ்வளவோ கேட்டறிந்திருக்கிறேன். ஆனால் அவர்களில் யாரும் காஞ்சி குமார சக்கரவர்த்திக்கு இணையாக மாட்டார்கள்" என்றாள்.

நரசிம்மவர்மருக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்ததென்று அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. "சிவகாமி! ஏன் இன்றைக்கு இவ்விதம் மாறிப்போயிருக்கிறாய்? எவ்வளவோ ஆசையுடன் நான் உன்னைத் தேடி வந்தேன். எவ்வளவோ விஷயங்கள் பேச எண்ணியிருந்தேன். நான் வந்ததே உனக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது இதோ போகிறேன்" என்று ஓர் அடி எடுத்து வைத்தார்.

அப்போது சிவகாமி விம்மிய குரலில், "ரதி! அவர் போகிறதாயிருந்தால் போகட்டும் ஆனால், குற்றத்தை என் பேரில் சுமத்தி விட்டுப் போகவேண்டாமென்று சொல்லு!" என்றாள்.

நரசிம்மர் மேலே அடி எடுத்து வைக்காமல் நின்று, "நான் தான் என்ன குற்றம் செய்துவிட்டேன்? அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொண்டால் மிகவும் நன்றாயிருக்கும்!" என்றார்.

சிவகாமி பெண் சிங்கத்தைப்போல் கம்பீரமாக அவரைத் திரும்பிப் பார்த்து, "என்னுடைய நடனக் கலையைப் பற்றி எப்படி எப்படியெல்லாம் பாராட்டிப் பேசினீர்கள்! எவ்வளவெல்லாம் முகஸ்துதி செய்தீர்கள்! அப்படியெல்லாம் பேசிவிட்டு, என் அரங்கேற்றத்துக்கு ஏன் வராமல் இருந்தீர்கள்?" என்று கண்களில் கனல் பறக்கக் கேட்டாள்.

நரசிம்மர் 'கலகல'வென்று சிரித்து, "இதை முன்னமேயே கேட்டிருக்கக் கூடாதா? நான் அரங்கேற்றத்துக்கு வரவில்லையென்று உனக்கு யார் சொன்னது? மேல் உப்பரிகையில் என் தாய்மார்களோடு உட்கார்ந்து 'பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். அவர்களுக்குப் பரத சாஸ்திர நுட்பங்களைப்பற்றி அவ்வப்போது எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் சபையில் நேரில் வந்து உட்கார்ந்தால், ஒருவேளை உன் ஆட்டத்துக்குப் பங்கம் விளையுமோ என்று பயந்தேன். அதற்காக இவ்வளவு ஆர்ப்பாட்டமா?" என்று கேட்டபோது, சிவகாமியின் முகத்தில் அதுவரை காணப்படாத மகிழ்ச்சியும் மலர்ச்சியும் தோன்றின.

நரசிம்மரை ஆர்வத்துடன் நோக்கி, "இதை ஏன் முன்னமே நீங்கள் சொல்லவில்லை?" என்று கேட்டாள்.

"சொல்வதற்கு நீ இடம் கொடுத்தால்தானே? இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டியிருக்கிறது. உன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து பேசலாம், வா!" என்று கூறி, நரசிம்மர் குளக்கரையில் மரத்தடியில் அமைந்திருந்த பலகையைப் பார்த்தவாறு சிவகாமியின் கரத்தைப் பிடித்து அழைத்துப் போக யத்தனித்தார். சிவகாமியோ, அவர் பிடித்த கையைச் சட்டென்று இழுத்துக்கொண்டு, மானைப்போல் துள்ளிக் கரைமீது ஏறினாள்.

அவர்கள் இருவரும் போய் மரத்தடியில் போட்டிருந்த பலகையில் உட்கார்ந்ததை ரதி தலை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. இனி நம்முடைய தூது இவர்களுக்குத் தேவையில்லை என்பதைத் தெரிந்துகொண்டதுபோல், அது குளத்தோரமாகக் 'கருகரு'வென்று வளர்ந்திருந்த பசும் புல்லை மேயச் சென்றது.

தடைப்பட்ட திருமணம்

பலகையில் உட்கார்ந்த பிறகும் சிவகாமி வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்த நரசிம்மர், "இன்னும் என்ன கோபம், சிவகாமி? இப்படி நீ பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில் என்னிடம் உனக்குப் பிரியம் இல்லை என்றுதான் எண்ணிக்கொள்வேன்" என்றார்.

சிவகாமி உடனே திரும்பி, நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்து, "உங்களுக்கு மட்டும் என்னிடம் பிரியம் இருக்கிறதா? இருந்தால் இந்த மூன்று நாளாக என்னுடைய ஞாபகம் இல்லாமல் போனதேன்?" என்று கேட்டாள்.

"இந்த மூன்று தினங்களாக நானும் உன்னைப் பார்க்க வரவேணுமென்று துடித்துக்கொண்டுதான் இருந்தேன். ஆனால் முக்கியமான இராஜாங்க வேலைகள் குறுக்கிட்டன. அன்றைக்கு உன்னுடைய அரங்கேற்றத்தை நடுவில் முடிக்கும்படி நேர்ந்தது ஏன் என்று உனக்குத் தெரியாதா? பல்லவ சாம்ராஜ்யத்தில் பல வருஷங்களாக இல்லாத பெரிய யுத்தம் வந்திருக்கிறது..."

இவ்விதம் நரசிம்மர் சொல்லி வந்தபோது சிவகாமி குறுக்கிட்டு, "நானும் கேள்விப்பட்டேன். யுத்தம் வந்து விட்டதே என்று நினைத்து நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தீர்களாக்கும்!" என்றாள்.

"கவலையா? ஒருநாளும் இல்லை, சிவகாமி! பல்லவ குலத்தில் பிறந்தவர்கள் யுத்தம் வந்துவிட்டதே என்று கவலைப்பட மாட்டார்கள், குதூகலப்படுவார்கள். என் பாட்டனார் சிம்ம விஷ்ணு மகாராஜாவின் காலத்திலிருந்து பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்தம் நேரவில்லை. பல்லவ சேனா வீரர்களின் கையில் வேல்களும் வாள்களும் துருப்பிடித்து வந்தன. இப்போது அவற்றுக்கெல்லாம் வேலை வந்திருக்கிறது. போர்க்களத்தில் ஆயிரக்கணக்கில் மின்னிப் பாயும் வேல்களையும், வாள்களையும் கண்டு பயப்படுகிறவன் நான் அல்ல. ஆனால், உன்னுடைய கரிய விழிகளிலிருந்து கிளம்பிப் பாயும் வாள்களையும் வேல்களையும் கண்டுதான் அஞ்சுகிறேன்!"

சிவகாமி தன்னை மீறி வந்த புன்முறுவலை அடக்கிக் கொள்ள முடியாதவளாய், "புருஷர்களே இப்படித்தான் போலிருக்கிறது. சாதுர்யமாயும் சக்கரவட்டமாயும் பேசி உண்மையை மறைக்கப் பார்ப்பார்கள்" என்று முணுமுணுத்தாள்.

ஆனாலும், அந்த வார்த்தைகள் நரசிம்மரின் காதில் விழாமல் போகவில்லை. "பழிமேல் பழியாகச் சுமத்திக் கொண்டிருக்கிறாயே? எந்த உண்மையை நான் மறைக்கப் பார்த்தேன்!" என்று மாமல்லர் கேட்டார்.

"பின்னே, நீங்கள் யுத்தத்துக்குப் பயப்படுகிறவர் என்று நான் சொன்னேனா? நீங்கள் வீராதி வீரர், சிம்ம விஷ்ணு மகாராஜாவின் பேரர், மகேந்திர சக்கரவர்த்தியின் குமாரர் என்பதெல்லாம் எனக்குத் தெரியாதா? இந்த யுத்தம் வந்ததனால் திருமணம் தடைப்பட்டுவிட்டதே? அதைப்பற்றிக் கவலைப்படுகிறீர்களாக்கும் என்று தானே சொன்னேன்?"

இவ்விதம் சிவகாமி கூறியபோது, அவளுடைய முகத்தில் நாணத்துடன் கோபம் போராடியது. நரசிம்மர் வியப்புடன், "சிவகாமி! என்ன சொல்லுகிறாய்? திருமணம் தடைப்பட்டு விட்டதா? யாருடைய திருமணம்?" என்று கேட்டார்.

"ஓகோ! உங்களுக்குத் தெரியவே தெரியாதுபோல் இருக்கிறது. நான் சொல்லட்டுமா! காஞ்சி மாநகரத்தில் மகாராஜாதிராஜதிரிபுவன சக்கரவர்த்தி மகேந்திரவர்ம பல்லவர் இருக்கிறாரோ, இல்லையோ, அந்தச் சக்கரவர்த்திக்குத் தேசமெல்லாம் புகழ்பெற்ற மாமல்லர் என்னும் திருக்குமாரர் ஒருவர் உண்டு. அந்தக் குமார சக்கரவர்த்திக்குத் திருமணம் பேசி வருவதற்காக மதுரைக்கும், வஞ்சிக்கும், இன்னும் வட தேசத்துக்கும் தூதர்களை அனுப்ப ஏற்பாடாகி இருந்ததாம். அப்பேர்ப்பட்ட சமயத்தில் யாரோ ஒரு பொல்லாத அரசன் பல்லவ ராஜ்யத்துக்குள் படையெடுத்து வரவே கல்யாணத்தைத் தள்ளிப் போடவேண்டியதாகி விட்டது. இதெல்லாம் தங்களுக்குத் தெரியாதல்லவா?" என்றாள் சிவகாமி.

நரசிம்மர் 'கலகல' வென்று சிரித்துவிட்டு, "இதற்குத்தானா இவ்வளவு பாடுபடுத்தினாய்? நான் பயந்து போய் விட்டேன். உனக்குத்தான் ஒருவேளை ஆயனர் திருமணம் நிச்சயம் செய்துவிட்டாரோ என்று! அப்படி ஒன்றும் இல்லையே?" என்றார்.

சிவகாமி கண்களில் கபடக் குறும்பு தோன்ற அவரைப் பார்த்து, "ஏன் இல்லை? என் தந்தைகூட அடிக்கடி என் கல்யாணத்தைப் பற்றிப் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் சிற்ப வேலை கற்றுக்கொள்ளும் கெட்டிக்கார சீடப்பிள்ளை ஒருவனைப் பார்த்து என்னை மணம் செய்து கொடுக்கப் போகிறாராம்" என்றாள்.

"ரொம்ப சந்தோஷம் உன் தந்தை நிஜமாக அப்படிச் சொன்னாரா? அவரை உடனே பார்த்து என்னுடைய நன்றியை அவருக்குத் தெரிவித்துக்கொள்ள வேண்டும்" என்று நரசிம்மர் கூறிய மறுமொழி சிவகாமியைத் திடுக்கிடச் செய்தது. அவள் தொடர்ந்து கலக்கமுற்ற குரலில், "ஆனால், நான் அதற்குச் சம்மதிக்கவில்லை. 'எனக்குக் கல்யாணமே வேண்டாம்! நான் புத்த பிக்ஷுணி ஆகப் போகிறேன்' என்று அப்பாவிடம் சொல்லி விட்டேன்" என்றாள்.

"என்ன? நீயா புத்த பிக்ஷுணி ஆகப் போகிறாய்? ஆயனர் மகளா இப்படிப் பேசுகிறது? சிவபெருமானும் திருமாலும் உனக்கு என்ன தீங்கைச் செய்தார்கள்? சிவகாமி! நம் திருநாவுக்கரசர் பெருமானின் தேனினும் இனிய சைவத் திருப் பாடல்களை நீ கேட்டிருக்கிறாயே?

'குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும்'

என்ற தெய்வீகப் பாடலுக்கு அபிநயங்கூடப் பிடித்தாயே? அப்படியிருந்தும், புத்த பிக்ஷுணி ஆக வேண்டுமென்ற எண்ணம் உன் மனத்தில் எப்படி உதித்தது?" என்று நரசிம்மர் சரமாரியாய்ப் பொழிந்தார்.

"எனக்குச் சிவன்பேரிலும் திருமாலின் பேரிலும் வெறுப்பு ஒன்றுமில்லை. கல்யாணத்தின் பேரிலேதான் வெறுப்பு. புத்த பிக்ஷுணியாகி, நான் தேச யாத்திரை செய்யப்போகிறேன்" என்று சிவகாமி தலை குனிந்தவண்ணம் கூறினாள்.

"சிவகாமி! அந்தமாதிரி எண்ணமே உனக்குத் தோன்றி இருக்கக்கூடாது. மகா மேதாவியான உன் தந்தையின் பேச்சை நீ தட்டலாமா? அவருடைய விருப்பத்தின்படி அவருடைய சீடர்களில் மிகவும் கெட்டிக்காரன் எவனோ, அவனை, நீ மணம் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்" என்று நரசிம்மர் கடுமையான குரலில் சொன்னார்.

"என்னை எந்த அசட்டுப் பிள்ளையின் கழுத்திலாவது கட்டி விடுவதில் உங்களுக்கு என்ன அவ்வளவு சிரத்தை? அரண்மனையில் பிறந்து வளர்ந்த அரசிளங்குமரியை நீங்கள் மணந்து கொள்வதை நான் குறுக்கே நின்று தடுக்கவில்லையே?" என்றாள் சிவகாமி. அவளுடைய கண்களில் நீர் ததும்பி நின்றது.

"ஜாக்கிரதை, சிவகாமி! அசட்டுப் பிள்ளை என்று யாரைச் சொன்னாய்? உன் தந்தையின் சீடர்களுள் ரொம்பக் கெட்டிக்காரன் யார் என்பது உனக்குத் தெரியாதா? ஆயனர் எத்தனையோ தடவை, 'குமார சக்கரவர்த்திக்குச் சிற்பக் கலை வருவதுபோல் வேறு யாருக்கும் வராது' என்று சொல்லியதில்லையா? ஆயனரின் சீடர்களில் மிகவும் கெட்டிக்காரனுக்கு உன்னை மணம் செய்து கொடுப்பதாயிருந்தால் எனக்குத்தானே கொடுக்க வேண்டும்! அதற்காக உன் தந்தைக்கு நான் நன்றி செலுத்தவேண்டாமா?" என்று நரசிம்மர் கூறியபோது, அவருடைய முகத்தில் குறும்பும் குதூகலமும் தாண்டவமாடின.

சிவகாமியோ சட்டென்று பலகையிலிருந்து எழுந்து நின்றாள். "பிரபு! இந்த ஏழைப் பெண்ணுக்கு ஏன் வீண் ஆசை காட்டுகிறீர்கள்...?" என்று கூறி, மேலே பேசமுடியாமல் விம்மி அழத் தொடங்கினாள்.

நரசிம்மவர்மர் அவளுடைய கரங்களைப்பிடித்து மறுபடியும் பலகையில் தம் அருகில் உட்காரவைத்துக் கொண்டு, "சிவகாமி! என்னை நீ இன்னும் தெரிந்துகொள்ளவில்லையா? இப்படி நீ கண்ணீர் விடுவதைப் பார்க்கும் போது.." என்று கூறுவதற்குள், சிவகாமி விம்மிக்கொண்டே, "பிரபு! இது ஆனந்தக் கண்ணீர்! துயரக் கண்ணீர் அல்ல!" என்றாள்.

வேலின் மேல் ஆணை!

நரசிம்மர் தமது அங்கவஸ்திரத்தின் தலைப்பினால் சிவகாமியின் கண்ணீரைத் துடைத்த வண்ணம், "நினைக்க நினைக்க ஒரு விஷயம் எனக்கு வியப்பையளிக்கிறது!" என்று கூறினார்.

சற்றுமுன் சிவகாமியின் முகத்தை ரதி ஏறிட்டுப் பார்த்தது போல் இப்போது சிவகாமி நரசிம்மரை ஏறிட்டுப் பார்த்தாள். "அது என்ன வியப்பான விஷயம்?" என்னும் கேள்வியை அவளுடைய கண்களின் நோக்கும், புருவங்களின் நெறிப்பும் கேட்பன போலத் தோன்றின.

நரசிம்மர் சிவகாமியின் முகத்தைக் கண்களால் விழுங்கி விடுபவர்போல் பார்த்துக்கொண்டு கூறினார்: "மூன்று வருஷ காலத்திற்குள் உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதலைத்தான் சொல்லுகிறேன். உனக்கு ஞாபகம் இருக்கிறதா, சிவகாமி? சக்கரவர்த்தியும் நானும் அந்த நாளில் உங்கள் வீட்டுக்கு வருவோம். என்னைக் கண்டதும் நீ கொஞ்சமும் கூச்சமோ, தயக்கமோ இல்லாமல் ஓடி வருவாய். என் கைகளைப் பிடித்துக் 'கரகர'வென்று இழுத்துக் கொண்டு போவாய். நம் இருவருடைய தந்தையரும் ஒரு பக்கம் பேசிக்கொண்டிருக்கும் போது நாம் இன்னொரு பக்கத்தில் கொட்டம் அடிப்போம்! சில சமயம் நான் உன்னை எனக்குப் பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும்படி கேட்பேன். நீ சொல்லிக் கொடுக்க முயல்வாய். எனக்கு நன்றாய் வராது. அதைக்கண்டு நீ கலகலவென்று சிரிப்பாய். உன்னுடைய முல்லைப்பல் வரிசையைப் பார்த்து நான் மதிமயங்கி நிற்பேன். இன்னும் சிலசமயம் நாம் இருவரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம். சில சமயம் ஆயனர் அமைத்த கற்சிலைகளுக்கு மத்தியில் நீயும் ஒரு சிலையைப்போல் அசையாமல் நிற்பாய். நானும் வேண்டுமென்றே உன்னைச் சிலையாகப் பாவித்துக்கொண்டு மேலே போவேன். உன்னுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டபிறகு திரும்பிப் பார்த்து உன்னைப் பிடித்துக் கொள்வேன். 'அகப்பட்டுக் கொண்டாயா, சிவகாமி தேவி?' என்று பாடுவேன். இப்படியெல்லாம் நாம் விளையாடுவதைப் பார்த்து நம்முடைய தந்தைமார்களும் சந்தோஷப்படுவார்கள். அதெல்லாம் ஒரு குதூகலமான கனவு மாதிரி இப்போது தோன்றுகிறது."

"பிரபு! நான் ஏதோ மாறிப்போனதாகச் சொன்னீர்கள். எந்தவிதத்தில் மாறியிருக்கிறேன்?" என்று சிவகாமி கேட்டாள்.

"நல்லவேளை, ஞாபகப்படுத்தினாய் எனக்குப் பதினாறு பிராயம் பூர்த்தியானபோது, சக்கரவர்த்தி என்னைத் தேச யாத்திரைக்கு அழைத்துச் சென்றார். தெற்கே சித்தர் மலையிலிருந்து வடக்கே நாகார்ஜுன மலை வரையில் நாங்கள் யாத்திரை செய்தோம். மேற்கே, காவிரி நதியின் ஜனன ஸ்தானம் வரையில் போயிருந்தோம். யாத்திரையை முடித்துக் கொண்டு நாங்கள் திரும்பி வருவதற்கு மூன்று வருஷம் ஆயிற்று..."

"அந்த மூன்று வருஷமும் எனக்கு மூன்று யுகமாக இருந்தது" என்றாள் சிவகாமி.

"மூன்று வருஷம் கழித்து நான் திரும்பி வந்து மறுபடியும் உன்னைப் பார்த்தபோது, நீ பழைய சிவகாமியாகவே இல்லை. தேவ சபையிலிருந்து அரம்பையோ, ஊர்வசியோ வந்து ஆயனர் வீட்டில் வளர்வதாகவே தோன்றியது. உருவ மாறுதலைக் காட்டிலும் உன்னுடைய குணத்திலும் நடவடிக்கையிலும் காணப்பட்ட மாறுதல்தான் எனக்கு அதிக வியப்பை அளித்தது. என்னைக் கண்டதும் நீ முன்போல் ஆர்வத்துடன் ஓடிவந்து வரவேற்கவில்லை; கலகலப்பாகப் பேசவில்லை; தூண் மறைவில் மறைந்து கொண்டு நின்றாய்; நான் உன்னைப் பார்க்கும்போது நீ வேறு பக்கம் திரும்பிக் கொண்டாய்; நான் உன்னைப் பார்க்காத சமயங்களில் கடைக்கண்ணால் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாய். தப்பித் தவறி நம் கண்கள் சந்திக்கும் சமயம் உடனே தலையைக் குனிந்துகொண்டாய். உன்னுடைய கலீரென்ற சிரிப்பு மறைந்துவிட்டது! சில சமயம் உன் கண்களில் நீர் ததும்பி நிற்பதைக் கண்டேன். ஒரு காரணமுமில்லாமல் நீ பெருமூச்சு விடுவதைக் கேட்டேன். எல்லாவற்றையும் விட அதிக வியப்பை எனக்கு அளித்தது என்னவென்றால், என்னை அறியாமல் நானே சில சமயம் பெருமூச்சு விடத் தொடங்கினேன்!.." என்று நரசிம்மர் சொன்னபோது, சிவகாமி கலீர் என்று சிரித்து விட்டாள்.

நரசிம்மர் மீண்டும் தொடர்ந்து கூறினார்: "என் உள்ளத்திலும் ஒரு மாறுதலைக் கண்டேன். இரவும் பகலும் சதா சர்வ காலமும் உன்னுடைய நினைவு என் இருதயத்தில் குடிகொண்டது. அந்த நினைவு, இன்பத்தையும் வேதனையையும் ஏககாலத்தில் அளித்தது. எப்பேர்ப்பட்ட முக்கியமான காரியத்தில் ஈடுபட்டபோதிலும் உன்னை என்னால் மறக்க முடியவில்லை. இந்த நிலைமையில் இந்தத் தாமரைக் குளக்கரையில் ஒருநாள் நாம் தனியாகச் சந்தித்தோம். மூன்று வருஷம் உன்னை வந்து பார்க்காமல் இருந்ததற்காக நீ என்னைச் சண்டை பிடித்தாய். கடைசியில் உன்னை மறப்பதில்லை என்று கையடித்துச் சத்தியம் செய்து கொடுக்கச் சொன்னாய். எனக்குச் சிரிப்பு வந்தது உன்னை ஒருகணமும் மறக்க முடியாமல் நான் திண்டாடிய திண்டாட்டம் எனக்கல்லவா தெரியும்? ஆனாலும், உன்னுடைய மனத்திருப்திக்காகச் சத்தியம் செய்து கொடுத்தேன். அதன் பிறகு, இன்றுதான் நாம் இந்தக் குளக்கரையில் சந்திக்கிறோம். ஒருவேளை நீ இங்கு இருக்கமாட்டாயா என்ற ஆசையினால் வந்தேன். வந்து பார்த்தால், நீ இங்கே இருக்கிறாய்! நம்முடைய உள்ளங்கள்தாம் எப்படி ஒத்திருக்கின்றன!" என்று சொல்லி நரசிம்மர் நிறுத்தினர்.

இவ்வளவெல்லாம் சொன்னீர்கள் நான் முதலில் கேட்ட கேள்விக்கு மட்டும் மறுமொழி சொல்லவில்லை!" என்றாள் சிவகாமி.

"என்ன கேள்வி அது? தயவு செய்து ஞாபகப்படுத்தினால் நல்லது" என்றார் மாமல்லர்.

"மதுரைக்கும் வஞ்சிக்கும் திருமணத் தூதர்களை அனுப்புவதாக இருந்த விஷயந்தான்!"

நரசிம்மர் இலேசாகச் சிரித்துவிட்டு, "அது உண்மைதான் மகனுக்குக் கல்யாணம் செய்யவேண்டுமென்று எந்தத் தாயாருக்குத்தான் எண்ணமில்லாமலிருக்கும்? என் தாயாருடைய ஏற்பாடு அது! ஆனால், நான் சக்கரவர்த்தியிடம் என் மனநிலையைத் தெரியப்படுத்தச் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள் இந்த யுத்தம் வந்து அதற்கு அவசியமே இல்லாமல் செய்து விட்டது" என்று கூறினார்.

"பிரபு எனக்கு என்னவோ நிம்மதி இல்லை. மூன்றரை வருஷத்துக்கு முன்பு இருந்ததுபோல் நாம் இருவரும் குழந்தைகளாகிவிடக் கூடாதா என்று தோன்றுகிறது."

"இல்லை, சிவகாமி! மறுபடியும் குழந்தைகள் ஆவதற்கு ஒரு நாளும் சம்மதிக்கமாட்டேன். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, தேவி சிவகாமியைப் பார்த்தபிறகு குழந்தை சிவகாமியை நான் விரும்ப முடியாது. இரண்டாவது காரணம், சக்கரவர்த்தி இப்போதே நான் போர்க்களம் போவதற்கு ஆட்சேபிக்கிறார். நான் குழந்தையாயிருந்தால் சம்மதிப்பாரா?"

"பிரபு! தாங்கள்கூட உண்மையாகவே போர்க்களம் போவீர்களா?" என்று சிவகாமி கவலையுடன் கேட்டாள்.

"அவசியம் போவேன் என் தந்தையுடன் அதைப்பற்றித் தான் மூன்று நாளாக வாதம் செய்துகொண்டிருக்கிறேன். நூறு வருஷ காலமாக அந்நியர்கள் காலடி வைக்காத பல்லவ சாம்ராஜ்யத்தில் இன்று சளுக்கர்கள் படையெடுத்திருக்கிறார்கள். அவர்களைத் துவம்ஸம் செய்து புத்தி புகட்ட வேண்டாமா?"

"பிரபு! அதற்குப் பல்லவ சைனியங்கள் இல்லையா? படைத் தலைவர்கள் இல்லையா? தாங்கள் ஏன் போக வேண்டும்?"

"பல்லவ சைனியங்கள் அன்னியர்களை எதிர்த்து வீரப் போர் புரியும்போது, நான் என்ன செய்வதாம்? அரண்மனையில் உட்கார்ந்து அறுசுவை உண்டி அருந்தி அந்தப்புர மாதர்களுடன் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருக்கட்டுமா? அப்படி நான் இருந்தால், ஆயனர் மகளின் காதலுக்குப் பாத்திரம் ஆவேனா?"

சிவகாமி கூறினாள்: "பிரபு! தாங்கள் போர்க்களம் போவதைத் தடுப்பவள் நானல்ல. தாராளமாய்ச் சென்று பகைவர்களை வென்று வாகைமாலை சூடி வாருங்கள், ஆனால்.."

"ஆனால், என்ன?"

"என்னுடைய கோரிக்கையைப் பரிகாசம் செய்யக் கூடாது."

"இல்லை, சிவகாமி, சொல்லு!"

"வள்ளியம்மைக்கு சுப்பிரமணியர் சத்தியம் செய்து கொடுத்ததுபோல், உங்கள் கையிலுள்ள வேலின் மேல் ஆணை வைத்துச் சொல்லுங்கள், போர்க்களத்திலும் என்னை மறப்பதில்லையென்று!"

நரசிம்மர் புன்முறுவல் செய்து, "இவ்வளவுதானே? 'என்னை மறந்துவிடுங்கள்' என்று நீ ஆணையிடச் சொன்னால்தான் என்னால் முடியாது! மறக்காமலிருப்பதற்கு எத்தனை தடவை வேணுமானாலும் செய்கிறேன். இதோ...!" என்று வேலைத் தூக்கிப் பிடித்தவர், சட்டென்று தயங்கி நின்றார்.

"பிரபு! ஏன் தயங்குகிறீர்கள்? அதற்குள்ளே மனம் மாறி விட்டதா?" என்றாள் சிவகாமி.

"இல்லை, சிவகாமி இல்லை! இந்த வேல் என்னுடையதில்லையே! இன்னொருவருடைய வேலின்மேல் ஆணையிடலாமா என்றுதான் நான் யோசிக்கிறேன்."

"உங்களுடைய வேல் இல்லையா? பின் யாருடையது?"

"அரங்கேற்றத்தன்று மதயானையின்மேல் வேல் எறிந்து ஆயனரையும் உன்னையும் தப்புவித்தானே, அந்த வீர வாலிபனுடையது. அந்த மகாவீரனை நேரில் கண்டு அவனிடம் கொடுக்க வேண்டுமென்று வைத்திருக்கிறேன்."

"அப்புறம் அந்த வாலிபனை நீங்கள் பார்க்கவே இல்லையா?" என்று சிவகாமி கேட்டாள்.

"மூன்று நாளாக நாடு நகரமெல்லாம் தேடுகிறோம். அவன் மட்டும் அகப்படவில்லை."

"பிரபு! அவன் இருக்குமிடம் சொன்னால், எனக்கு என்ன தருவீர்கள்?" என்று கேட்டாள் சிவகாமி.

"அவன் இருக்குமிடம் உனக்குத் தெரியுமா? சீக்கிரம் சொல், சிவகாமி! உனக்கு என்னையேதான் கொடுத்திருக்கிறேனே! வேறு என்ன தரப்போகிறேன்?"

"அந்த வாலிபன் இப்போது எங்கள் வீட்டில் இருக்கிறான்."

நரசிம்மர் துள்ளி எழுந்து, "என்ன சொல்லுகிறாய் சிவகாமி! உங்கள் வீட்டுக்கு அவன் எப்படி வந்தான்?" என்று கேட்டார்.

"முன்னே உங்களிடம் சொன்னேனல்லவா, ஒரு புத்த பிக்ஷு அடிக்கடி வந்து அப்பாவையும் என்னையும் வடநாட்டுக்கு வரும்படி அழைத்துக்கொண்டிருக்கிறார் என்று, அந்த நாகநந்தி அடிகள் தான் அழைத்துக்கொண்டு வந்தார்."

"ஆகா! சக்கரவர்த்தி கூறியது உண்மையாயிற்று..சிவகாமி! அதோ கேள்!" என்றார் நரசிம்மர்.

தூரத்தில் பேரிகை முழக்கம், சங்கநாதம், குதிரைகளின் காலடிச் சத்தம் கலந்து கேட்டன. "யார், சக்கரவர்த்தியா?" என்றாள் சிவகாமி.

"ஆம்; சக்கரவர்த்திதான் வருகிறார் இதோ! நான் போய்ச் சக்கரவர்த்தியுடன் சேர்ந்துகொள்கிறேன். நீயும் சீக்கிரம் வீடு வந்து விடுவாயல்லவா?"

"குறுக்கு வழியாக வந்துவிடுவேன்; பிரபு! தாங்கள் போர்க்களம் போவதற்கு முன்னால் இங்கே மறுபடியும் வருவீர்களா?"

"அவசியம் வருகிறேன்! உன் கருவிழிகளில் மின்னும் வேல்களின்மீது ஆணை!" என்று சொல்லிவிட்டு நரசிம்மர் திரும்பிப் பார்த்துக்கொண்டே விரைந்து சென்று குதிரை மீதேறினார்.

அவர் போவதை மலர்ந்த முகத்துடன் பார்த்துக் கொண்டு நின்ற சிவகாமி, குதிரை காட்டுக்குள் மறைந்ததும் வீட்டை நோக்கி விரைந்து நடந்தாள். வீட்டிலிருந்து வந்தபோது அவளுடைய நடையில் காணப்படாத மிடுக்கும் குதூகலமும் இப்போது காணப்பட்டன. ரதியை அவள் மறந்து சென்றாலும், அவள் போவதைப் பார்த்துவிட்டு ரதி பின் தொடர்ந்து துள்ளி ஓடிற்று.

முத்துமாலை

பழந்தமிழ் நாட்டு மன்னர்களுக்குள்ளே ஒப்புயர்வு அற்றவரும், தமது இணையில்லாத புகழை என்றும் அழியாத வண்ணம் கல்லிலே செதுக்கி வைத்தவருமான மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை அன்றொரு நாள் இரவில், யுத்தச் செய்தி வந்த அவசரத்தில் மதயானையின் வெறியினால் நிகழ்ந்த தடபுடலுக்கு மத்தியில் நேயர்களுக்கு அறிமுகப்படுத்தினோம்.

எத்தகைய சாமான்யக் குறுநில மன்னர்களையும்கூட அந்தந்த இராஜாங்கக் கவிகள் புத்தியிலே பிருகஸ்பதி என்றும், வித்தையிலே சரஸ்வதி என்றும், அழகிலே மன்மதன் என்றும் வீரத்திலே அர்ஜுனன் என்றும், கொடையிலே கர்ணன் என்றும் வர்ணிப்பதுண்டு. இந்த வர்ணனையெல்லாம் மகேந்திர சக்கரவர்த்தியின் விஷயத்தில் உண்மையிலேயே பொருந்துவதாயிருந்தது.

மகேந்திரவர்மர் ஆஜானுபாஹுவான தோற்றமுடையவர். அவருடைய கம்பீரமான முகத்தில் பல நூறு வருஷங்களாக வாழையடி வாழையாக வந்த இராஜ குலத்தின் வீரக் களையோடு சிறந்த கல்வி ஆராய்ச்சியினாலும் கலைப் பயிற்சியினாலும் ஏற்படும் வித்யாதேஜஸும் பிரகாசித்தது. காஞ்சி நகரின் பிரசித்தி பெற்ற பொற்கொல்லர்கள் சித்திர விசித்திர வேலைப்பாடுகளுடன் செய்த கிரீடம், குண்டலம், வாகுவலயம், வீரக்கழல் முதலிய ஆபரணங்கள் அவர் தரித்திருந்தார். அவருடைய விசாலமான வீர லக்ஷ்மி குடிகொண்ட மார்பை விதவிதமான வர்ணங்களுடன் பிரகாசித்த நவரத்தின மாலைகள் அலங்கரித்தன. அபூர்வ அழகும் நயமும் மென்மையும் வாய்ந்த பட்டுப் பீதாம்பரங்களை உற்பத்தி செய்வதில் அந்த நாளிலேயே காஞ்சி நகரம் பெயர் பெற்றிருந்தது. அத்தகைய பீதாம்பரங்களை மகேந்திர சக்கரவர்த்தி அழகு பொருந்த அணிந்தபோது, அவை அதிக சோபை பெற்று விளங்கியதாக நெசவுக் கலைஞர்கள் பெருமிதத்துடன் கூறினார்கள்.

மகேந்திரர் தமிழ்மொழி, வடமொழி, பிராகிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த தேர்ச்சிபெற்ற பண்டிதராக விளங்கினார். வடக்கே தக்ஷசீலம் முதல், தெற்கே கன்னியாகுமரி வரையில் உள்ள பண்டிதர்கள், மகா ரசிகரான மகேந்திர சக்கரவர்த்தியிடம் தங்களுடைய புலமையைக் காட்டிப் பரிசுபெறும் பொருட்டுக் காஞ்சி நகரில் வந்து மொய்த்த வண்ணம் இருந்தார்கள். அன்றைக்கு ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னால் வடநாட்டில் உஜ்ஜயினி நகரத்தில், அரசு செலுத்திக் காளிதாஸன் முதலிய மகா கவிகளை ஆதரித்த சந்திரகுப்த விக்கிரமாதித்யருக்குப் பிறகு, பண்டிதர்களுக்கும் கவிஞர்களுக்கும் கற்பகவிருக்ஷமாக விளங்கியவர் காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி தான் என்பது வெகுஜன வாக்காயிருந்தது. சித்திரம், சிற்பம் ஆகிய கலைகளில் சக்கரவர்த்தி ஆர்வங்கொண்டிருந்ததோடல்லாமல் அவற்றை நன்றாகப் பயின்று அந்தந்தக் கலையில் வல்லவர்களாயிருந்த கலைவாணர் எல்லாரும் பார்த்து வியக்கும்படியான தேர்ச்சியும் பெற்றிருந்தார்.

சிற்பத் துறையில் மகேந்திரனின் அதிசயமான கற்பனைத் திறனைக்கண்டு வியந்து, சிற்பசாஸ்திர பண்டிதர்கள் அவருக்கு 'விசித்திர சித்தர்' என்ற பட்டத்தை வழங்கியிருந்தார்கள். அவ்விதமே சித்திரக்கலை வல்லவர்களிடம் 'சித்திரக்காரப் புலி' என்னும் பட்டத்தைச் சக்கரவர்த்தி பெற்றிருந்தார். 'மத்தவிலாஸப் பிரகசனம்' என்னும் ஹாஸ்ய நாடகத்தை வடமொழியில் இயற்றி 'மத்தவிலாஸர்' என்னும் பட்டத்தை அடைந்தார். சங்கீத சாஸ்திரத்தைக் கரை கண்டிருந்த ருத்ராசாரியாரிடம் அவர் சங்கீதக் கலை பயின்று, ஏழு நரம்புகள் உடைய 'பரிவாதினி' என்னும் வீணையை அபூர்வமாய்க் கையாளும் திறமை பெற்றிருந்தார். தாள வகைகளிலே 'ஸங்கீர்ண ஜாதி' தாளத்தை அதிசயமாகக் கையாளும் வல்லமை காரணமாக 'ஸங்கீர்ண ஜாதிப் பிரகரணர்' என்ற பட்டம் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

மகேந்திரர் இளம் பிராயத்தில் சமண மதத்தில் ஈடுபட்டிருந்து பிற்காலத்தில் சிவபக்திச் செல்வரான பிறகு, எந்த மதத்தையும் துவேஷிக்காதவராய், தமது சாம்ராஜ்யத்தில் இருந்த சைவர், வைஷ்ணவர், பௌத்தர், சமணர், சாக்தர் ஆகிய சகல மதத்தினரையும் தர்மம் தவறாமல் பரிபாலித்து வந்தபடியால், 'குணபரர்' என்ற சிறப்புப் பெயரும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. 'திருவதிகை' ஸ்தலத்தில் அவருடைய கொடையினால் கட்டப் பெற்ற சிவாலயத்துக்குக் 'குணபரேச்வரம்' என்ற பெயர் வழங்கிற்று.

மகேந்திர சக்கரவர்த்திக்கு முற்பட்ட சுமார் முந்நூறு வருஷ காலத்தில் வடநாட்டிலிருந்து பண்டிதர்களும், கவிகளும், சமண முனிவர்களும், புத்த பிக்ஷுக்களும் இடைவிடாமல் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்து காஞ்சி நகரில் வித்யா பீடங்களை ஏற்படுத்தி வந்தார்கள். இக்காரணத்தினால் நமது வரலாறு நிகழ்ந்த காலத்தில் தமிழகத்தில் சமஸ்கிருதமும் பிராகிருதமும் மிக்க பிரபலமடைந்து, செந்தமிழ் மொழியின் சிறப்பை ஓரளவு மங்கச் செய்திருந்தன என்பதையும் நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். திருநாவுக்கரசர் முதலிய சைவ நாயன்மார்களும், பொய்கையார் முதலிய வைஷ்ணவ ஆழ்வார்களும் பக்திச் சுவை சொட்டும் பாடல்களைப் பொழிந்து தெய்வத் தமிழ் மொழியை மீண்டும் சிம்மாசனம் ஏறச் செய்த மகோன்னத காலம் தமிழகத்தில் அப்போதுதான் ஆரம்பமாகியிருந்தது. எனவே, மகேந்திர சக்கரவர்த்தியின் பட்டங்கள் பெரும்பாலும் வடமொழியில் இருப்பதன் காரணத்தை நேயர்கள் ஊகித்து அறியலாம்.

மகாராஜாதிராஜா - பூமண்டலாதிபதி - திரிபுவன சக்கரவர்த்தி - மத்தவிலாஸ - விசித்திர சித்த - ஸங்கீர்ண ஜாதிப் பிரகரண சித்திரக்காரப் புலி - குணபரரான மகேந்திர பல்லவ சக்கரவர்த்தியை இத்தனை நேரம் ஆயனர் வீட்டு வாசலிலேயே நிறுத்தி வைத்து விட்டதற்காக வாசகர்களின் மன்னிப்பைக் கோருகிறோம். அவ்விதம் நாம் அந்த மன்னர் பெருமானை நிறுத்தி வைத்துவிட்ட போதிலும், ஆயனச் சிற்பியார் அவரை வரவேற்று உபசரிப்பதில் சிறிதும் காலம் தாழ்த்தி விடவில்லை. சக்கரவர்த்தியின் வருகையை அறிவித்த பேரிகை ஒலி வெகுதூரத்தில் கேட்ட போதே ஆயனர் பரபரப்புடன் வீட்டு வாசலுக்கு வந்து அவரை வரவேற்க ஆயத்தமாக நின்றார்.

குதிரையிலிருந்து இறங்கும்போதே சக்கரவர்த்திப் பெருமான் "ஆயனரே! அன்றிரவு சுகமாக வந்து சேர்ந்தீர்களா? சிவகாமி சௌக்கியமா?" என்று கேட்டுக்கொண்டே இறங்கினார்.

ஆயனர், முன்னால் ஓர் அடி சென்று கும்பிட்டு, "ஆகா! சுகமாக வந்து சேர்ந்தோம்! குழந்தைதான் மூன்று நாளாக அவ்வளவு சௌக்கியம் இல்லாமலிருந்தாள்..." என்பதற்குள் மகேந்திர பல்லவர், "அப்படியா? இப்போது எப்படி இருக்கிறாள்?" என்று கவலைக் குரலில் கேட்டார்.

"இன்று சற்றுப் பாதகமில்லை" என்றார் ஆயனர்.

எல்லோரும் வீட்டுக்குள் சென்றார்கள் சக்கரவர்த்தி வரும் சமயங்களில் அமர்வதற்காகவே ஆயனர் ஓர் அழகிய கல்சிம்மாசனத்தை அமைத்திருந்தார். அந்தச் சிம்மாசனத்தில் மகேந்திரர் அமர்ந்ததும், ஆயனர் சிவகாமிக்குச் சமிக்ஞை செய்ய அவள் அருகில் நெருங்கி வந்து சக்கரவர்த்திக்கு நமஸ்கரித்தாள்.

அப்போது ஆயனர், "பெருமானே! அரங்கேற்றம் நடுவில் தடைப்பட்ட காரணத்தினால் குழந்தை உற்சாகம் இழந்திருக்கிறாள். அவளுடைய சௌக்கியக் குறைவுக்கு அதுதான் காரணம். ரசிக சிரோமணியான தாங்கள்தான் அவளுக்கு ஆசிகூறி உற்சாகப்படுத்த வேண்டும்" என்றார்.

"ஆயனரே! உமது குமாரி அன்றைக்கு நடனமாடியதாகவே எனக்குத் தோன்றவில்லை. நடனக் கலையே ஓர் உருவம் எடுத்து வந்து ஆடியதாகவே தோன்றியது" என்றார் மகேந்திரர்.

"ஸங்கீர்ண ஜாதி தாளத்தை உபயோகப்படுத்தி ஓர் ஆட்டம் கற்பித்திருந்தேன்; அதை ஆடமுடியாமல் போய் விட்டது" என்று ஆயனர் ஏமாற்றமான குரலில் கூறினார்.

"ஆம்; ஆம்! இன்னும் என்னவெல்லாமோ விந்தைகள் வரப் போகின்றன என்று எனக்குத் தெரிந்துதான் இருந்தது. நடுவில் எழுந்து போக நேர்ந்ததில் எனக்கு ஏற்பட்ட வருத்தத்தைச் சொல்லி முடியாது. அவ்வளவு முக்கியமான செய்தியாயிராவிட்டால் போயிருக்க மாட்டேன்!" என்றார் சக்கரவர்த்தி.

"நானும் கேள்விப்பட்டேன், பிரபு! நமது ராஜ்யத்துக்குள்ளே அந்நியர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்களாமே? என்ன தைரியம்! என்ன துணிச்சல் அவர்களுக்கு!" என்று ஆயனர் உண்மையான ஆத்திரத்துடன் கூறினார்.

"அந்தத் துணிச்சலுக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள். ஆயனரே! பல வருஷ காலமாகப் பல்லவ ராஜ்யத்துக்குள் பகைவர் படைகள் நுழைந்ததில்லை. நான் போர்க்களத்தைக் கண்ணால் காண வேண்டும் என்பதற்காக என் தந்தை என்னை இலங்கையில் நடந்த போருக்கு அனுப்பி வைத்தார். ஆனால், நரசிம்மனுக்கோ இங்கேயே போர்க்களத்தைப் பார்க்கும்படியான பாக்கியம் நேரிட்டிருக்கிறது. வாதாபி அரசன் புலிகேசி பெரும் படைகளைத் திரட்டிக் கொண்டு படையெடுத்து வருகிறான். நாமும் பெரும் பலம் திரட்டிக் கடும்போர் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், ஒரு விஷயம் சொல்லுகிறேன். நமது ராஜ்யத்தில் சளுக்கர் படையெடுத்ததனால் எனக்கு உண்டாகும் கோபத்தைக் காட்டிலும் அதனால் சிவகாமியின் அரங்கேற்றம் தடைப்பட்டதுதான் அதிகக் கோபத்தை உண்டாக்குகிறது. இந்தக் குற்றத்துக்குத் தகுந்த தண்டனையை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டும்!" என்றார்.

இதைக் கேட்ட ஆயனர் பெருமையினால் பூரித்தவராய், அருகில் தலை குனிந்தவண்ணம் நின்ற சிவகாமியை அருமையுடன் நோக்கினார்.

சக்கரவர்த்தி மேலும் கூறினார்: "அரங்கேற்றத்தன்று நான் என்னவெல்லாமோ திட்டம் போட்டிருந்தேன். அதெல்லாம் ஒன்றும் முடியாமல் போயிற்று. சபையிலே செய்திருக்க வேண்டிய சம்மானத்தை இங்கேயாவது செய்யலாமென்று உத்தேசித்திருக்கிறேன். அதற்கு ஆட்சேபணை ஒன்றுமில்லையே?" இவ்விதம் சொல்லிக்கொண்டு சக்கரவர்த்தி தம் கையிலிருந்த இரத்தினப் பையிலிருந்து அழகான இரட்டை வட முத்துமாலையை எடுத்தார்.

அப்போது ஆயனர், "பெருமானே! தங்கள் திருக்கரத்தினால் கொடுக்கும்போது எங்கே கொடுத்தால் என்ன? சிவகாமி! உன் பாக்கியமே பாக்கியம்! இந்தப் பரத கண்டத்திற்குள்ளே சகல கலைகளின் நுட்பங்களையும் நன்குணர்ந்தவரான விசித்திர சித்த மகாப் பிரபு உன்னுடைய கலைத் திறமையை மெச்சி உனக்குச் சம்மானம் அளிக்கப்போகிறார்!" என்று கூறிச் சமிக்ஞை செய்யவும், சிவகாமி முன்னால் வந்து சக்கரவர்த்தியைப் பணிவுடன் வணங்கிக் கரங்களை நீட்டினாள்.

மகேந்திரர் முத்துமாலையை எடுத்துச் சிவகாமியின் நீட்டிய கரங்களில் வைத்தபோது...அடடா! இதென்ன மீண்டும் அபசகுனம்! மாலை அவள் கையிலிருந்து நழுவிக் கீழே தரையில் விழுந்துவிட்டதே! ஆயனரின் முகம் சட்டென்று சுருங்கியது. மகேந்திர பல்லவருடைய திடசித்தங்கூடச் சிறிது கலங்கிவிட்டதாக அவருடைய புருவங்களின் நெறிப்பிலிருந்து தெரிந்தது. சிவகாமியின் மனத்திலும் ஏதேனும் துணுக்கம் ஏற்பட்டிருக்குமோ என்னவோ, நமக்குத் தெரியாது. ஆனால் அடுத்த கணத்தில் அவளுடைய முகம் மலர்ந்ததைப் பார்த்தால் அவளுடைய உள்ளமும் மலர்ந்திருக்க வேண்டுமென்று நிச்சயமாகத் தெரிந்தது.

கீழே விழுந்த முத்துமாலையை அந்தக் கணத்திலேயே குமார சக்கரவர்த்தி சட்டென்று குனிந்து எடுத்தார். எடுத்த மாலையைச் சிவகாமியின் நீட்டிய கரங்களில் அவர் வைக்க, சிவகாமி அதை ஆர்வத்துடன் வாங்கிக் கண்களில் ஒத்திக் கொண்டு கழுத்திலும் அணிந்துகொண்டாள். அந்த முத்துமாலைப் பரிசைக் குமார சக்கரவர்த்தியின் கையினால் பெற்றுக் கொள்ள நேர்ந்தது பற்றிச் சிவகாமியின் உள்ளத்தில் பொங்கிய உவகை முகத்திலும் பிரதிபலித்தது இயல்பே அல்லவா!

புத்தர் சிலை

நழுவித் தரையில் விழுந்த முத்துமாலையைக் குமார சக்கரவர்த்தி குனிந்து எடுத்துக் கொடுத்ததையும், அதைச் சிவகாமி முகமலர்ச்சியுடன் வாங்கி அணிந்து கொண்டதையும் பார்த்த ஆயனரின் முகம் மீண்டும் பிரகாசம் அடைந்தது.

சக்கரவர்த்தி இதையெல்லாம் கவனியாததுபோல் கவனித்தவராய், ஆயனரைப் பார்த்து, "மகா சிற்பியாரே! இந்த முத்துமாலையைப் போல் எவ்வளவோ உயர்ந்த பரிசுகளையெல்லாம் உமது புதல்வி வருங்காலத்தில் அடையப் போகிறாள்! இந்தப் பல்லவ ராஜ்யத்துக்கே அவளால் புகழும் மகிமையும் ஏற்படப் போகின்றன. வருங்காலத்தில் எது எப்படியானாலும், சிவகாமியின் நடனக் கலைப் பயிற்சி மட்டும் தடைப்படக்கூடாது. அவளுக்கு எவ்விதத்திலும் உற்சாகக் குறைவு நேரிடாமல் நீர் பார்த்துக் கொள்ள வேண்டும்!" என்று சொன்னார்.

ஆயனர், "பல்லவேந்திரா! தாங்களும் குமார சக்கரவர்த்தியும் உற்சாகப்படுத்துவதற்கு இருக்கும்போது சிவகாமிக்கு உற்சாகக் குறைவு ஏன் ஏற்படப்போகிறது? எனக்குத்தான் என்ன கவலை?" என்று சொல்ல, மகேந்திர பல்லவர் கூறினார்: "அப்படியில்லை, ஆயனரே! இந்த யுத்தம் காரணமாக நானும் குமார சக்கரவர்த்தியும் சில காலம் இவ்விடம் வரமுடியாமலும், உங்களைப் பார்க்க முடியாமலும் போகலாம். அதனாலே உங்கள் இருவருடைய கலைப் பணிக்கும் எந்தவிதமான குந்தகமும் ஏற்படக்கூடாது. சிவகாமி புத்த பிக்ஷுணியாக விரும்புவதாகச் சற்று முன்னால் சொன்னீரல்லவா? ஒருவிதத்தில் அது பொருத்தமானதுதான். சிவகாமி சாதாரணமான பெண் அல்ல. மற்றப் பெண்களைப் போல் உரிய பருவத்தில் இல்வாழ்க்கையை மேற்கொண்டு அற்ப சுகங்களில் காலம் கழிக்கப் பிறந்தவள் அல்ல. பெண்ணாய்ப் பிறந்தவர்களில் லட்சத்திலே ஒருவருக்குத்தான் இப்பேர்ப்பட்ட கலை உணர்ச்சி ஏற்படும். அதைப் போற்றி வளர்க்கவேண்டும். சம்சார வாழ்க்கையைப் பொருத்தவரையில் சிவகாமி தன்னைப் பிக்ஷுணியாகவே நினைத்துக் கொள்ளலாம். தெய்வீகமான நடனக்கலைக்கே அவள் தன்னை அர்ப்பணம் செய்து கொள்ளவேண்டும்!"

இந்த மொழிகளைக் கூறியபோது மகேந்திரபல்லவரின் மனத்திலே என்ன இருந்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவருடைய மொழிகள் அங்கிருந்த மூன்று பேருடைய உள்ளங்களிலும் வெவ்வேறு விதமான உணர்ச்சிகளை உண்டாக்கியிருக்கவேண்டுமென்பது அவர்களுடைய முகபாவ மாறுதல்களிலிருந்து நன்கு தெரிந்தது.

ஆயனர் தமது உள்ளக் கிளர்ச்சியை வார்த்தைகளினாலே வெளியிட்டார்: "பிரபு, என்னுடைய மனத்தில் உள்ளதை அப்படியே தாங்கள் கூறிவிட்டீர்கள். இல்வாழ்க்கையை மேற்கொண்டு குழந்தைகுட்டிகளைப் பெற்று வளர்ப்பதற்கு எத்தனையோ லட்சம்பேர் இருக்கிறார்கள். இந்த அபூர்வமான தெய்வக்கலையைப் பயின்று வளர்ப்பதற்கு அதிகம் பேர் இல்லை தானே?" -இவ்விதம் ஆயனர் சொல்லிக்கொண்டே சிவகாமியைத் திரும்பிப் பார்த்து, "சக்கரவர்த்தியின் பொன்மொழிகளைக் கேட்டாயா, குழந்தாய்?" என்றார்.

சிவகாமியின் முகமானது அச்சமயம் கீழ்த்தரச் சிற்பி அமைத்த உணர்ச்சியற்ற கற்சிலையின் முகம்போல் இருந்தது. எத்தனையோ விதவிதமான உள்ளப்பாடுகளையெல்லாம் முகபாவத்திலே கண்ணிமையிலே, இதழ்களின் மடிப்பிலே அற்புதமாக வெளியிடும் ஆற்றல் பெற்றிருந்த சிவகாமி, அச்சமயம் தன் சொந்த மனோநிலையை முகம் வெளியிடாதபடி செய்வதில் அபூர்வத் திறமையைக் காட்டினாள் என்றே சொல்லவேண்டும்.

ஆனால், நரசிம்மவர்மர் அபிநயக் கலையில் தேர்ச்சி பெறாதவரானபடியால், சக்கரவர்த்தியின் வார்த்தைகளைக் கேட்டதும் அவருடைய முகம் சிவந்தது, இதழ்கள் துடித்தன. மற்றவர்கள் கவனியாதவண்ணம் உடனே அவர் திரும்பி பக்கத்தில் இருந்த சிலைகளையும் சித்திரங்களையும் பார்ப்பவர் போல் இவரிடமிருந்து பெயர்ந்து அப்பால் சென்றார்.

சக்கரவர்த்தியும் தாம் இத்தனை நேரம் வீற்றிருந்த சிற்ப சிம்மாசனத்திலிருந்து எழுந்து, "சிற்பியாரே! எவ்வளவோ முக்கியமான அவசர வேலைகள் எனக்கு இருக்கின்றன. இருந்தாலும் இங்கு வந்துவிட்டால் எல்லாம் மறந்து விடுகிறது. உமது புதிய சிலைகளைப் பார்த்துவிட்டுச் சீக்கிரம் கிளம்பவேண்டும்" என்று சொல்லிக்கொண்டே நடந்தார். ஆயனரும் சிவகாமியும் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

மகேந்திர பல்லவர், புதிதாகச் செய்திருந்த நடனத்தோற்றச் சிலைகளைப் பார்த்துக்கொண்டே, 'இது கஜஹஸ்தம்' 'இது அர்த்த சந்திர ஹஸ்தம்' என்று சொல்லிய வண்ணமாக நடந்து, ஆயனர் கடைசியாகச் செய்து முடித்திருந்த சிலையண்டைப் போனதும் "ஆஹா! என்று கூறிவிட்டு நின்றார். சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, "ஆயனரே! தொண்டை மண்டலத்திலுள்ள மகா சிற்பிகளுக்குள்ளே உமக்கு நிகரானவர் எவருமில்லை. ஆனால், நீர் கூட இத்தனை காலமும் இந்தச் சிலையைப்போல் ஜீவ களை பொருந்திய சிலையைச் செய்தது கிடையாது. அன்பிற்குரியவர் நெடுங்காலம் வராதபடியினால் ஏற்பட்ட இருதய தாபத்தை இந்தச் சிலையின் முகபாவமும் மற்ற அங்கங்களின் நெளிந்த தோற்றமும் எவ்வளவு நன்றாய் வெளியிடுகின்றன! கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும்கூட அல்லவா நம்மோடு வார்த்தையாடுகின்றன? ஆயனரே! சிவகாமியின் அரங்கேற்றத்துக்குப் பிற்பாடு இந்தச் சிலையைப் பூர்த்தி செய்திருக்கிறீர், இல்லையா?" என்று கேட்டார்.

"ஆம், பெருமானே! இன்று காலையில்தான் பூர்த்தி செய்தேன். சிவகாமி பெரிய மனது செய்து இன்றைக்கு எனக்காக மறுபடியும் ஆடி அபிநயம் பிடித்தாள்!"

மகேந்திரர் மந்தஹாஸத்துடன் சிவகாமியைப் பார்த்துவிட்டு, "சிற்பியாரே! பரத சாஸ்திரத்தைத் தொகுத்து எழுதிய முனிவர் 'ஏழு வகைப் புருவ அபிநயம்' என்றுதானே சொல்லியிருக்கிறார்? அவர் நமது சிவகாமியின் நடனத்தைப் பார்த்திருந்தால், புருவ அபிநயம் ஏழு வகை அல்ல, எழுநூறு வகை என்று உணர்ந்து அவ்விதமே சாஸ்திரத்திலும் எழுதியிருப்பார்!" என்றார்.

இவ்விதம் உல்லாசமாகப் பேசிக்கொண்டு சென்ற சக்கரவர்த்தியின் பார்வை சிறிது தூரத்தில் இருந்த ஒரு பிரம்மாண்டமான புத்தர் சிலையின்மீது விழுந்தது. அவ்விடத்திலேயே சற்று நின்று புத்த விக்ரகத்தைப் பார்த்தவண்ணம், "ஆஹா! கருணாமூர்த்தியான புத்த பகவான் பூவுலகத்திலிருந்து ஹிம்சையையும் யுத்தத்தையும் அடியோடு ஒழிக்க முயன்றார். அவருடைய உபதேசத்தை இந்த உலகிலுள்ள எல்லா மன்னர்களும் கேட்டு நடந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும்? அவ்விதம் நடந்த புண்ணிய புருஷர் மௌரிய வம்சத்து அசோக சக்கரவர்த்தி ஒருவர்தான். அப்புறம் அத்தகைய அஹிம்சாமூர்த்தியான அரசர் இந்த நாட்டில் தோன்றவில்லை!" என்றார் மகேந்திரவர்மர்.

ஆயனர் மௌனமாய் நிற்கவே, சக்கரவர்த்தி, "நல்லது, சிற்பியாரே! உம்மை இராஜாங்க விரோதியாகப் பாவித்து நியாயமாகத் தண்டிக்கவேண்டும்..." என்று சொன்னபோது, ஆயனரின் முகத்தில் பெரும் கலவரம் காணப்பட்டது. சக்கரவர்த்தி அடுத்தாற்போல் கூறிய மொழிகள் அந்தக் கலவரத்தை ஒருவாறு நீக்கின.

"ஆமாம்; இங்கு வந்துவிட்டு உடனே திரும்பவேண்டும் என்று எண்ணியிருந்த என்னை இத்தனை நேரம் இங்கே தங்கும்படி வைத்து விட்டீர் அல்லவா? அதனால் எவ்வளவு காரியங்கள் தடைப்பட்டு விட்டன? போகட்டும் இந்தத் தடவை உம்மை மன்னித்து விடுகிறேன்!" என்று கூறி ஹாஸ்ய நகைப்புடன் மகேந்திரர் வாசலை நோக்கி நடந்தார். மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து சென்றார்கள்.

வீட்டு வாசற்படியைத் தாண்டியதும் சக்கரவர்த்தி ஆயனரைத் திரும்பிப் பார்த்துக் கூறினார்: "ஆயனரே உம்முடைய சிற்பத் திருக்கோயிலுக்கு மீண்டும் நான் எப்போது வருவேனோ, தெரியாது. ஆனால், ஒன்று சொல்லுகிறேன், பூர்வீகமான இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்தில் அழிவு நேர்ந்தாலும் நேரலாம்.."

"பெருமானே! ஒரு நாளும் இல்லை, அப்படிச் சொல்ல வேண்டாம்!" என்று ஆயனர் அலறினார்.

"கேளும், சிற்பியாரே! உலகத்தில் இதற்குமுன் எத்தனையோ சாம்ராஜ்யங்கள் இருந்திருக்கின்றன; மறைந்திருக்கின்றன. ஹஸ்தினாபுரம் என்ன, பாடலிபுத்திரம் என்ன, உஜ்ஜயினி என்ன இவையெல்லாம் இப்போது இருந்த இடம் தெரியவில்லை. அதுபோல் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்துக்கும் ஒருநாள் முடிவு ஏற்படலாம். ஆனால், உம்முடைய கலாசாம்ராஜ்யத்துக்கு ஒரு காலத்திலும் அழிவு கிடையாது. தெய்வத் தமிழ்மொழியும், தமிழகமும் உள்ள வரையில் உம்முடைய சிற்ப சம்ராஜ்யமும் நிலைபெற்றிருக்கும்!"

அப்போது ஆயனர் உணர்ச்சி ததும்பிய குரலில், "பிரபு! என்னைப்போல் ஆயிரம் சிற்பிகள் தோன்றுவார்கள்; மறைவார்கள்! எங்களுடைய பெயர்களும் மறைந்தொழிந்து போகும். ஆனால், இந்த நாட்டில் சிற்ப சித்திரக் கலைகள் உள்ளவரைக்கும், தங்களுடைய திருப்பெயரும் குமார சக்கரவர்த்தியின் பெயரும் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்கும்" என்றார்.

அந்த மகாசிற்பியின் வாக்கு எவ்வளவு உண்மையான வாக்கு! மாமல்லபுரத்தை ஒரு சொப்பன உலகமாகச் செய்த தமிழ்நாட்டு மகாசிற்பிகளின் பெயர்கள் உண்மையில் மறைந்து போய்விட்டன! ஆனால், மகேந்திர பல்லவர், நரசிம்ம பல்லவரின் பெயர்கள் சரித்திரத்தில் இடம் பெற்று இன்றைக்கும் சிரஞ்சீவிப் பெயர்களாய் விளங்குகின்றன அல்லவா?

சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் தத்தம் குதிரை மீது ஏறிக்கொண்டார்கள். மகேந்திரர் குதிரைமேல் இருந்தபடியே, ஆயனரை மறுபடியும் நோக்கி, "பார்த்தீரா? வெகு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டேன்; 'நான் வடக்கே கிளம்புவதற்கு முன்னால் மாமல்லபுரத்தில் நடக்கவேண்டிய வேலைகளைப் பற்றி ஆலோசித்து முடிவு செய்யவேண்டும். நாளை பிற்பகல் நீர் துறைமுகத்துக்கு வரவேண்டும்" என்றார்.

"ஆக்ஞை, பிரபு! வந்து சேருகிறேன்!" என்றார் ஆயனர். போகும் குதிரைகளைப் பார்த்துக்கொண்டு ஆயனரும் சிவகாமியும் வீட்டு வாசலில் நின்றார்கள்.

மகேந்திர பல்லவர் ஆயனர் வீட்டு வாசலுக்கு வந்ததிலிருந்து அவர் திரும்பிக் குதிரைமீதேறிய வரையில் அவரும் ஆயனரும் சம்பாஷணை நடத்தினார்களே தவிர, குமார நரசிம்மராவது, சிவகாமியாவது வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஆனால், அவர்கள் தங்களுக்குள்ளே கண்களின் மூலமாகச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் பேசிக்கொள்ளவில்லையென்று நாம் சத்தியம் செய்து சொல்ல முடியாது.

கடைசியாகச் சிவகாமியிடம் விடை பெற்றுக் கொள்வதற்கும் குமார சக்கரவர்த்தி அந்தக் கண்களின் பாஷையையே கையாண்டார்.

நரசிம்மரின் குதிரை சிறிது தூரம் சென்றதும், அவர் தமது தலையைமட்டும் திரும்பிச் சிவகாமி ஆவல் ததும்பப் பார்த்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தார். உடனே தம் கையிலிருந்த வேலினை உயரத் தூக்கிப் பிடித்துப் புன்னகை புரிந்தார். மறுகணத்தில் முகத்தைத் திருப்பிக்கொண்டு குதிரையைத் தட்டி விட்டார்.

குமார சக்கரவர்த்தியின் சமிக்ஞையைச் சிவகாமி அறிந்து கொண்டாள். அவளுடைய கண்களும், கண்ணிமைகளும், புருவங்களும் கலீரென்று சிரித்தன. குதிரைகள் காட்டுக்குள் மறையும் வரைக்கும் சிவகாமி இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். குதிரைகள் மறைந்து சிறிது நேரத்துக்குப் பிறகுதான் அவள் திரும்பி வீட்டுக்குள் செல்ல யத்தனித்தாள்.

நரசிம்மர் வேலைத் தூக்கிப் பிடித்துச் சமிக்ஞை செய்ததை நினைத்து உவகை கொண்ட சிவகாமிக்கு இன்னொரு விஷயம் ஞாபகம் வந்தது. அந்த வேலுக்கு உடையவனான இளைஞன் எங்கே? நரசிம்மர் பலமுறை இந்தக் கேள்வியைக் கண்களின் மூலமாகவே கேட்டதையும், தான் மறுமொழி சொல்லமுடியாமல் விழித்ததையும் நினைத்தபோது சிவகாமிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது. தனக்கு முன்னால் வீட்டுக்குள் போய்விட்ட ஆயனரிடம் அந்த வாலிபனைபற்றிக் கேட்கவேண்டுமென்னும் எண்ணத்துடன் அவள் உள்ளே புகுந்தபோது புத்தர் சிலைக்கு அருகாமையில் ஆயனர் செல்வதையும் அந்தச் சிலைக்குப் பின்னாலிருந்து புத்தபிக்ஷுவும் அவருடன் வந்த இளைஞனும் திடீரென்று எழுந்து நிற்பதையும் கண்டாள். அப்போது சிவகாமிக்கு ஏற்பட்ட வியப்பையும் திகைப்பையும் சொல்ல இயலாது.

அஜந்தாவின் இரகசியம்

சற்று நாம் பின்னால் சென்று சிவகாமி மனச் சோர்வுடன் மான்குட்டியை அழைத்துக்கொண்டு தாமரைக் குளத்தை நோக்கிப் போனபிறகு, ஆயனர் வீட்டில் என்ன நடந்தது என்பதைக் கொஞ்சம் கவனிக்கவேண்டும்.

தம் அருமை மகளைப்பற்றி, புத்த பிக்ஷு சிறிது விரஸமாகப் பேசியது ஆயனருக்குப் பிடிக்கவில்லை. எனவே, பிக்ஷுவிடம் அவர் பேசுவதை நிறுத்திவிட்டு, பரஞ்சோதியைப் பார்த்து, "தம்பி! உனக்கு என்னால் ஆகவேண்டிய உதவி ஏதாவது இருந்தால் சொல்லு!" என்றார்.

"நாவுக்கரசர் மடத்தில் சேர்ந்து கல்வி பயிலும் நோக்கத்துடன் காஞ்சிக்கு வந்தேன், ஐயா! சிற்பக்கலைக் கற்றுக் கொள்ளும் விருப்பமும் இருக்கிறது. தங்களைக் கண்டு தங்கள் கட்டளைப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று மாமா எனக்குச் சொல்லி அனுப்பினார். ஓலையில் எல்லாம் விவரமாக எழுதியிருந்தார்" என்றான் பரஞ்சோதி.

"ஓலை என்னத்துக்கு, தம்பி? என் அருமைச் சிநேகிதருக்காக நான் எதுவும் செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். நாவுக்கரசர் பெருமான் தற்சமயம் காஞ்சியில் இல்லை. ஸ்தல யாத்திரை சென்றிருக்கிறார். அதனால் என்ன! நானே நேரில் உன்னை அழைத்துப்போய் அந்தச் சிவநேசரின் மடத்தில் சேர்த்துவிட்டு வருகிறேன். உன்னைச் சக்கரவர்த்தியிடமும் அழைத்துப்போக வேண்டும், வீரச் செயல் புரிந்து எங்களைக் காத்த உன்னைப் பார்த்தால், சக்கரவர்த்தி பெரிதும் சந்தோஷப்படுவார்..."

"அதுமட்டும் வேண்டாம், ஆயனரே இந்த இளைஞனிடம் உமக்கு அபிமானம் இருந்தால்..." என்று புத்த பிக்ஷு குறுக்கிட்டார்.

"ஏன் அடிகளை?" என்று ஆயனர் வியப்புடன் கேட்டார்.

"காஞ்சி சக்கரவர்த்தியின் காராகிருகத்திலிருந்து தப்பி வந்தவர்களுக்கு என்ன தண்டனை என்று உங்களுக்குத் தெரியாதா?"

"ஏன் தெரியாது? மரண தண்டனைதான்! இந்தக் கேள்வி எதற்காகக் கேட்கிறீர்கள் என்றுதான் தெரியவில்லை."

"இவன் சக்கரவர்த்தியிடம் சென்றால் அந்தத் தண்டனைக்கு உள்ளாகும்படி நேரிடும்!"

"சிவ சிவா! இதென்ன சொல்கிறீர்கள்? இவன் காராகிருகத்தில் இருந்தானா? எப்போது? எதற்காக?"

"உங்களை இவன் தப்புவித்த அன்று இரவு நகரில் திக்குத் திசை தெரியாமல் அலைந்து கொண்டிருந்தான். இவனை ஒற்றன் என்பதாகச் சந்தேகித்து நகர்க் காவலர்கள் சிறையில் அடைத்து விட்டார்கள்...."

"அடடா! அப்புறம்?"

"அன்றிரவு இவன் சிறையிலிருந்து தப்பிவிட்டான்!"

"என்ன? என்ன? எப்படித் தப்பினான்?"

"கூரை வழியாக வெளியே வந்துவிட்டான்..."

ஆயனர் அதிசயத்துடன் பரஞ்சோதியைப் பார்த்த வண்ணம், "ஆகா! என் சிநேகிதருடைய மருமகன் இலேசுப்பட்டவன் இல்லை போலிருக்கிறது! பெரிய கைக்காரனாயிருக்கிறானே! அதனால் பாதகமில்லை, அடிகளே! இவனை நானே சக்கரவர்த்தியிடம் அழைத்துச் சென்று இவனை மன்னிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவன் எங்களைப் பெரும் விபத்திலிருந்து காப்பாற்றியவன் என்று அறிந்தால் சக்கரவர்த்தி கட்டாயம் மன்னிப்பார்!" என்றார்.

"உங்களுக்காக மன்னித்துவிடுவார், உண்மைதான்! ஆனால் இவன் உடனே போர்க்களம் போகும்படி நேரிடும். பல்லவ ராஜ்யத்தில் எங்கே பார்த்தாலும் படை திரட்டுகிறார்கள் என்று தெரியுமோ, இல்லையோ?"

இதைக் கேட்ட ஆயனர் மௌனமாக யோசிக்கலானார் அதைப் பார்த்த பிக்ஷு மேலும் கூறினார். "ஒரு தாய்க்கு ஒரு பிள்ளையான இவனுக்குப் போர்க்களத்தில் ஏதாவது நேர்ந்துவிட்டால், பாவம், இவன் தாயார் உம்மைச் சபிப்பாள். அதுமட்டுமல்ல, தர்மசேனரின் தமக்கையைப்போல் இன்னொரு பெண் கன்னிகையாகக் காலம் கழிக்க நேரிடும்!"

ஆயனருக்குச் சுருக்கென்றது புத்த பிக்ஷு, தம் மகளைத் தான் அவ்விதம் குறிப்பிடுகிறார் என்று அவர் எண்ணினார். ஒருவேளை அவருடைய கூற்றில் ஏதேனும் உண்மை இருக்குமோ? சிவகாமி மூன்று நாளாய் ஒருவிதமாக இருப்பதற்குக் காரணம் இந்த வாலிபன்மேல் அவளுடைய மனம் சென்றதாக இருக்கலாமோ? அப்படியிருந்தால் ஒரு விதத்தில் நல்லதுதானே! சிவகாமியை எப்படியும் மணம் செய்து கொடுக்கத்தான் வேண்டுமென்றால், தம் அருமைச் சிநேகிதரின் மருமகனுக்குக் கொடுத்து, அவனைத் தம் சீடனாக்கிக்கொள்ளுதல் நல்லதல்லவா? இவ்வாறெல்லாம் சில வினாடி நேரத்துக்குள் எண்ணியவராய் ஆயனர் பரஞ்சோதியைச் சற்றுக் கவனமாக உற்றுப் பார்த்தார்.

அவருடைய எண்ணப்போக்கை அப்படியே தெரிந்து கொண்ட புத்தபிக்ஷு, "இல்லை, ஆயனரே! நீங்கள் நினைப்பதுபோல் நடப்பதற்கில்லை. அவனுடைய மாமன் மகள் இவனுக்கென்று பிறந்து வளர்ந்து திருவெண்காட்டில் காத்துக்கொண்டிருக்கிறாள்!" என்றார்.

இதைக்கேட்ட ஆயனர் புத்த பிக்ஷுவை, "உமக்கு என் எண்ணம் எப்படித் தெரிந்தது?" என்று மீண்டும் கேட்கும் பாவனையில் ஒரு தடவை பார்த்துவிட்டு, மீண்டும் பரஞ்சோதியை நோக்கி, "அப்படியா, தம்பி! என் சிநேகிதரின் பெண்ணைக் கட்டிக் கொள்ளப் போகிறாயா?" என்று கேட்டார். பரஞ்சோதி சிறிது நாணத்துடன், "ஆம், ஐயா" என்றான்.

புத்த சந்நியாசி மேலும் சொன்னார்: "நாவுக்கரசர் மடத்தில் தற்போது இவனைச் சேர்ப்பதும் நல்லதில்லை. காஞ்சிக் கோட்டையை முற்றுகைக்கு ஆயத்தம் செய்து வருகிறார்கள். நாவுக்கரசர் இப்போதைக்கு மடத்துக்குத் திரும்பி வரமாட்டார். அவரைச் சோழநாட்டுக்கு ஸ்தல யாத்திரை போகும்படியாகச் சக்கரவர்த்தியே சொல்லி அனுப்பிவிட்டாராம்."

"அடிகளே! தங்களுக்கு எத்தனையோ விஷயங்கள் தெரிந்திருக்கின்றன; எனக்கு ஒன்றுமே தெரியவில்லையே!" என்று ஆயனர் அடங்காத ஆச்சரியத்துடன் கூறினார்.

"நீங்கள் இந்தக் காட்டுக்குள்ளே வந்து உட்கார்ந்திருக்கிறீர்கள், அதனால் தெரியவில்லை. நான் நாடெல்லாம் சுற்றுகிறேன் அதனால் தெரிகிறது" என்றார் பிக்ஷு.

ஆயனர் சிறிது யோசனை செய்து, "தம்பி, இங்கேதான் இப்படியெல்லாம் குழப்பமாயிருக்கிறதே? உன் விருப்பம் என்ன?" என்று கேட்டார்.

"ஐயா! கல்வி கற்றுக்கொண்டு திரும்பி வருகிறேன் என்று என் ஊரில் சொல்லிவிட்டு வந்தேன். ஏதாவது ஒரு கலை பயிலாமல் திரும்பிப் போக எனக்கு விருப்பமில்லை. தங்களிடம் கல்வியும் சிற்பமும் பயில விரும்புகிறேன். கருணை கூர்ந்து என்னைத் தங்களுடைய சீடனாக அங்கீகரிக்க வேண்டும்" என்றான்.

பரஞ்சோதியின் பணிவான பேச்சைக்கேட்டு ஆயனர் பூரித்தவராய், "அப்படியே ஆகட்டும்! நீ இங்கேயே இருந்து என்னிடம் சிற்பக்கலை கற்றுக்கொள்!" என்றார்.

"ஆசாரிய தட்சிணை விஷயம் என்ன? அதை முன்னாலேயே வாங்கிக்கொள்ள வேண்டும், ஆயனரே!" என்று பிக்ஷு கூறியதும் அவர் பரிகாசமாகச் சொல்வதாய் எண்ணி ஆயனர் நகைத்தார்.

"நான் வேடிக்கை பேசவில்லை உண்மையாகத்தான் சொல்லுகிறேன். பரஞ்சோதி உங்களுக்கு அளிக்கவேண்டிய குரு தட்சிணை அஜந்தா சித்திர இரகசியந்தான்!" என்று பிக்ஷு கூறினாரோ இல்லையோ, ஆயனரின் முகத்தில் ஏற்பட்ட ஆவலையும் பரபரப்பையும் பார்க்க வேண்டுமே! அந்த க்ஷணத்தில் அவர் புதிய மனிதராக மாறிவிட்டதாகத் தோன்றியது.

"அடிகளே! முன்னமே அதைப்பற்றிக் கேட்டேன், தாங்கள் சொல்லவில்லை. ஆனால், இந்தப் பிள்ளைக்கும் அஜந்தா சித்திர இரகசியத்துக்கும் என்ன சம்பந்தம்? இவனால் என்ன செய்ய முடியும்?" என்று ஆயனர் கேட்டார்.

"நாகார்ஜுன மலையிலுள்ள புத்த ஸங்கிராமத்துக்கு அந்த இரகசியம் வந்திருக்கிறது. அவ்விடத்துக்கு யாரையாவது அனுப்பி வாங்கி வரச்சொல்ல வேண்டும். உம்முடைய புதிய சீடனைப் போல் அந்தக் காரியத்துக்குத் தகுதியான ஆளைக் காண முடியாது."

"நாகார்ஜுன மலையா? கிருஷ்ணா நதிக்கரையில் அல்லவா இருக்கிறது? வழியில் எவ்வளவோ அபாயங்கள் ஏற்படுமே?"

"அபாயங்களையெல்லாம் கடந்து போய் வரக்கூடிய வீரனாகையால்தான் பரஞ்சோதியைச் சொன்னேன். இந்தப் பிள்ளை யானை மேல் வேலை எறிந்த விதத்தைத்தான் கண்ணால் பார்த்தீரே?"

"ஆனாலும், வெகுதூரம் இருக்கிறதே? இவனால் கால்நடையாகப் போய்விட்டு வர முடியுமா?"

"முடியாது நல்ல குதிரை ஒன்று இவனுக்கு வாங்கித் தர வேண்டும். குதிரை மட்டும் இருந்தால் ஒரு மாத காலத்தில் காரியத்தைச் சாதித்துக்கொண்டு திரும்பிவிடலாம்."

ஆயனர் மிக்க ஆவலுடன் பரஞ்சோதியைப் பார்த்து, "தம்பி! உன்னால் முடியுமா? போய் வருகிறாயா?" என்று கேட்டார்.

பரஞ்சோதி பரக்க விழித்த வண்ணமாய், "ஆகட்டும் ஐயா தங்கள் கட்டளை எதுவானாலும் நிறைவேற்றக் காத்திருக்கிறேன். ஆனால் எங்கே போகவேண்டும் எதற்காக என்பது ஒன்றும் எனக்குத் தெரியவில்லையே!" என்றான்.

"உண்மைதான்! இவனுக்கு விவரம் தெரியாதல்லவா? தாங்களே சொல்லுங்கள், சுவாமி!"

இவ்விதம் ஆயனர் கூற, சந்நியாசி பரஞ்சோதியைப் பார்த்துச் சொன்னார்: "கேள், அப்பனே! வடக்கே வெகு தூரத்தில், கோதாவரி நதிக்கும் அப்பால் அஜந்தா என்ற மலை இருக்கிறது. வெகு காலத்துக்கு முன்னால் அந்த மலையைக் குடைந்து புத்த சைத்தியங்களை அமைத்திருக்கிறார்கள். அந்தச் சைத்தியங்களில் புத்த பகவானுடைய வாழ்க்கையையும், அவருடைய பூர்வ அவதாரங்களின் மகிமையையும் விளக்கும் அற்புதமான சித்திரங்கள் வரையப்பட்டிருக்கின்றன. ஐந்நூறு வருஷத்துக்கு முன்னால் வரைந்த அந்த ஓவியங்கள் இன்றைக்கும் வர்ணம் அழியாமல் புதிதாய் எழுதினதை போலவே இருக்கின்றன. அந்த அற்புதச் சித்திரங்களை எழுதிய சித்திரக் கலை மேதாவிகளின் சந்ததிகள் இன்னமும் அங்கே இருக்கிறார்கள். அவர்கள் அஜந்தா குகையில் பழைய சித்திரங்களுக்குப் பக்கத்தில் புதிய சித்திரங்களை வரைந்து வருகிறார்கள். ஆயிரம் வருஷம் ஆனாலும் அழியாமலிருக்கக் கூடிய வர்ணச் சேர்க்கையின் இரகசியம் அவர்களுக்குத் தெரியும். அந்த இரகசியத்தை அறிந்து தமக்குச் சொல்லவேண்டுமென்று ஆயனர் என்னை வெகு நாளாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார். நானும் முயற்சி செய்து வந்தேன். அந்த இரகசிய முறையை அறிந்த அஜந்தா சித்திரக்காரர் ஒருவரை எனக்குத் தெரியும். நாகார்ஜுன மலையிலுள்ள புத்த ஸங்கிராமத்தில் இப்போது அவர் இருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. நீ போனாயானால் அந்த இரகசியத்தை அவரிடம் அறிந்துகொண்டு வரலாம்."

பிக்ஷு இவ்விதம் சொல்லி நிறுத்தியதும், ஆயனர், "தம்பி! நீ போய் வருகிறாயா? போய் அந்த இரகசியத்தைக் கொண்டு வந்தாயானால் என் வாழ்க்கை மனோரதங்களில் ஒன்றை நிறை வேற்றியவனாவாய். ஆனால், உன்னை நான் வற்புறுத்தவில்லை!" என்றார்.

பிக்ஷுவும் ஆயனரும் பேசி வந்தபோது பரஞ்சோதியின் உள்ளத்தில் விதவிதமான கிளர்ச்சிகள் உண்டாகி மறைந்து வந்தன. அவை பெரும்பாலும் குதூகலக் கிளர்ச்சிகளாகத்தான் இருந்திருக்குமென்று நாம் சொல்லவேண்டியதில்லை. நல்ல ஜாதிக் குதிரைமேல் ஏறி நெடுந்தூரம் பிரயாணம் செய்வது என்ற எண்ணமே அவனுக்கு உற்சாகத்தை உண்டாக்கிற்று. அதோடு இவ்வளவு முக்கியமான ஒரு காரியத்துக்காக ஆயன மகாசிற்பியினால் ஏவப்பட்டு யாத்திரை போகிறதென்பது அவனுக்கு மிக்க பெருமை உணர்ச்சியையும் அளித்தது. எழுத்தாணியால் ஏட்டில் எழுதிக்கொண்டு உட்கார்ந்திருப்பதைக் காட்டிலும் இம்மாதிரி காரியந்தான் அவனுடைய இயல்புக்கு ஒத்தது என்பதை நாம் அறிவோமல்லவா?

"ஐயா! தங்களுடைய விருப்பம் எதுவோ, அதன்படி நடந்து கொள்ளுமாறு என் மாமா சொல்லியிருக்கிறார். தாங்கள் போகச் சொல்லிக் கட்டளையிட்டால் அப்படியே போய் வருகிறேன்" என்றான்.

அப்போது நாகநந்தி அடிகள், "தாமதிக்க நேரமில்லை, ஆயனரே! வாதாபி படைகள் காஞ்சிக்கு வருவதற்குள் இவன் போய் வந்தால் நல்லது. குதிரைக்கு என்ன ஏற்பாடு?" என்று கேட்டார்.

"அது ஒன்றும் கஷ்டமில்லை சக்கரவர்த்தியிடம் விண்ணப்பித்துக் குதிரை வாங்குகிறேன். அஜந்தா வர்ணச் சேர்க்கை இரகசியத்தை அறிந்துகொள்வதில் எனக்கு எவ்வளவு ஆசையோ அவ்வளவு ஆசை மகேந்திர சக்கரவர்த்திக்கும் உண்டு."

"அப்படியானால், சக்கரவர்த்தியிடம் பிரயாண அனுமதி இலச்சினையும் வாங்கிவிடுங்கள். யுத்த சமயமானதால், பரஞ்சோதி போகும் வழியில் ஏதாவது இடையூறு ஏற்படலாம்."

"உண்மைதான், இலச்சினையும் வாங்கிவிடுகிறேன்."

"இதில் என்னைப்பற்றிப் பிரஸ்தாபிக்கவே வேண்டாம். பௌத்த சமயிகள் விஷயத்தில் சக்கரவர்த்தியின் மனோபாவம் தான் உங்களுக்குத் தெரியுமே!"

புத்த பிக்ஷு இவ்விதம் சொல்லிக் கொண்டிருக்கும்போது தூரத்தில் பேரிகை முழக்கமும் சங்கநாதமும் கேட்டன. "அடிகளே! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வருகிறது! இதோ மகேந்திர சக்கரவர்த்தியே வருகிறார்!" என்று குதூகலத்துடன் கூறினார் ஆயனர்.

நாகநந்தி அடிகளின் கடுகடுப்பான முகத்தில் புன்னகை தோன்றியது. அவர் சிறிது யோசித்த வண்ணமாய் அங்குமிங்கும் பார்த்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவரைப்போல், "ஆயனரே, நல்ல சகுனந்தான் இந்தச் சமயத்தில் இவ்விடம் சக்கரவர்த்தியே விஜயம் செய்வதானது நமது காரியம் ஜயமாகப் போகிறதென்பதற்கு அறிகுறி. ஆனால், நானும் பரஞ்சோதியுந்தான் இச்சமயம் பூஜை வேளையில் கரடிகளாக இருக்கிறோம். எங்களைச் சக்கரவர்த்தி பார்த்துவிட்டால் எல்லாக் காரியமும் கெட்டுவிடும். சக்கரவர்த்தி வந்துவிட்டுப் போகும் வரையில் நாங்கள் புத்த பகவானைச் சரணடைகிறோம். புத்த பகவானுடைய சிலையை எப்போதும் பெரிதாகச் செய்யவேண்டுமென்று ஏற்படுத்திய மகா புருஷர் நாகார்ஜுன பிக்ஷுவின் தீர்க்க திருஷ்டியை என்னவென்று புகழ்வது?" என்றார்.

ஆயனர் தயங்கி, "ஒருவேளை தெரிந்துவிட்டால்...?" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது பிக்ஷு பரஞ்சோதியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று புத்தர் சிலையின் பின்னால் மறைந்து கொண்டார்.

இதற்குள் குதிரைகளின் காலடிச் சத்தம் நெருங்கிவிடவே, ஆயனருக்கு யோசிப்பதற்கே நேரமில்லாமல் போயிற்று. "ஜாக்கிரதை அடிகளே!" என்று சொல்லிவிட்டுச் சக்கரவர்த்தியை வரவேற்பதற்காக விரைந்து வாசற்பக்கம் சென்றார்.

சக்கரவர்த்தியும் குமாரரும் விடைபெற்றுச் சென்ற பிறகு வீட்டுக்குள் நுழைந்த சிவகாமிக்கு, புத்தர் சிலைக்குப் பின்னாலிருந்து நாகநந்தியும் பரஞ்சோதியும் கிளம்பியது மிக்க வியப்பை அளித்தது என்று சொன்னோம் அல்லவா? ஆனால் அதே காட்சியானது ஆயனருக்கு சிறிதும் வியப்பையளித்திராது என்பதை மேலே கூறிய விவரங்களிலிருந்து வாசகர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்.

எனினும், சிவகாமியைக் காட்டிலும் ஆயனரிடத்திலே தான் பரபரப்பு அதிகமாகக் காணப்பட்டது. "அடிகளே! நல்ல வேளையாய்ப் போயிற்று. எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து தப்பினோம்?" என்றார் ஆயனர்.

"புத்த பகவானைச் சரணமாக அடைந்தவர்களுக்கு அபாயமே கிடையாது. இருக்கட்டும் அசுவமேத யாகத்தில் குதிரையை மறந்துபோன கதையாக, நீரும் சக்கரவர்த்தியிடம் குதிரை கேட்க மறந்துவிட்டீரல்லவா?" என்றார் புத்த பிக்ஷு.

"மறக்கவில்லை, அடிகளே! இந்த இடத்துக்கு வந்ததும் சக்கரவர்த்தி கூறிய வார்த்தை என்னைக் கதிகலங்கச் செய்து விட்டது. அப்புறம் குதிரையைப் பற்றிக் கேட்க எனக்கு நா எழவில்லை!"

"ஆமாம்; சக்கரவர்த்தி இராஜாங்கத் துரோகத்துக்காக உம்மைத் தண்டிக்கப் போவதாகச் சொன்னபோது என்னைக் கூட ஒருகண நேரம் தூக்கிவாரிப் போட்டுவிட்டது!"

பிக்ஷுவும் பரஞ்சோதியும் புத்தர் சிலைக்குப் பின்னாலிருந்து வெளியே வந்தவுடன், மூன்று பேரும் ஏற்கெனவே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். அப்போது சிவகாமியும் அந்த இடத்துக்கு வந்து சேரவே, புத்த பிக்ஷு அவளை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "சிவகாமியிடம் நீங்கள் எல்லா விவரங்களையும் சொல்ல வேண்டும். எங்களை ஏதோ பேயோ பிசாசோ என்று அவள் சந்தேகிக்கிறாள் போலிருக்கிறது!" என்றார்.

சித்தர் மலைச் சித்திரம்

பதினைந்து விதமான அபிநயப் பார்வைகளிலே சந்தேகமும் அருவருப்பும் தோன்றும் பார்வையைச் சிவகாமி புத்த பிக்ஷுவின் மேல் ஒருகணம் செலுத்திவிட்டு, ஆயனரைப் பார்த்து, "இவர்கள் இத்தனை நேரமும் இங்கே தான் இருந்தார்களா?" என்று கேட்டாள்.

"ஆம், குழந்தாய்!"

"புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்களா?"

"ஆமாம்! ஆனால், இதைக் குறித்து நீ என்னவோ ஏதோ என்று சந்தேகப்பட வேண்டாம்.."

ஆயனர் மேலே சொல்லுவதற்குள் சிவகாமி, "புத்த பகவானுடைய சிலைகளைப் பிரம்மாண்டமாய்ச் செய்வதில் எவ்வளவு உபயோகம் இருக்கிறது!" என்றாள்.

"அதனாலேதான் மகாயான சித்தாந்தத்தை ஏற்படுத்திய நாகார்ஜுன பிக்ஷுவை நான் போற்றுகிறேன்" என்றார் நாகநந்தி.

புத்தமதம் ஸ்தாபிக்கப்பட்டுச் சிலகாலம் வரையில் புத்த பகவானுடைய சிலைகள் அமைப்பிலும் சித்திரங்கள் எழுதுவதும் தடுக்கப்பட்டிருந்தன. இந்த வரலாறு நடந்த காலத்துக்கு இருநூறு வருஷத்துக்கு முன்னால், நாகார்ஜுன பிக்ஷு என்னும் மகான் தோன்றி மகாயான புத்த சித்தாந்தத்தை ஸ்தாபித்தார். பாரத நாட்டின் வடகோடியில் நாலந்தா என்னும் நகரில் பிரசித்தி பெற்று விளங்கிய பௌத்த மடத்தின் தலைவரான நாகார்ஜுனர் தேசமெங்கும் யாத்திரை செய்து, வாதப்போர் நடத்தி மகாயான சித்தாந்தத்தைப் பிரசாரம் செய்தார். ஆங்காங்கே ஸங்கிராமம் என்ற பெயரால் வழங்கிய பௌத்த மடங்களையும் நிறுவிக் கொண்டு போனார். அத்தகைய ஸங்கிராமம் ஒன்றை அவர் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள ஸ்ரீ பர்வதத்திலும் ஸ்தாபித்தார். அதுமுதல் ஸ்ரீ பர்வதத்துக்கு நாகார்ஜுன மலை என்ற பெயரும் வழங்கலாயிற்று.

நாகார்ஜுனர் ஸ்தாபித்த மகாயான பௌத்த மதம், புத்த பகவானுடைய சிலைகளை அமைப்பதற்கும் கோயில்கள் கட்டுவதற்கும் அநுமதித்தது. "நாகார்ஜுன பிக்ஷுவைப் போற்றுகிறேன்" என்று நாகநந்தி இரண்டுமுறை கூறியதன் கருத்து என்ன என்பது இப்போது நன்கு விளங்குகிறதல்லவா?

நாகநந்தி கூறியதைப் பொருட்படுத்தாமல் சிவகாமி, "அப்பா! இவர்கள் எதற்காக ஒளிந்துகொண்டிருந்தார்கள்?" என்று கேட்டாள்.

"அம்மா! நம் நாகநந்தி அடிகள் இராஜ குலத்தினரைப் பார்ப்பதில்லை என்று விரதம் வைத்துக்கொண்டிருக்கிறார். உனக்குத் தெரியாதா? இந்த வாலிபன் அவருடன் வந்திருந்தபடியால்..."

"அப்பா! சக்கரவர்த்தியும் மாமல்லரும் இவரைப் பார்த்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்? ஒன்று கவனித்தீர்களா? மாமல்லர் கையில் ஒரு வேல் வைத்திருந்தாரே? அது இந்த வீரருடைய வேல்தான்..."

நாகநந்தி மீண்டும் குறுக்கிட்டு, "அதில் என்ன வியப்பு, சிவகாமி! இப்போதுதான் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஆயுதம் தேவையாயிருக்கிறதே? ஊரிலுள்ள உடைந்த வேல், வாள், ஈட்டி எல்லாவற்றையும் தேடிச் சேகரிக்கிறார்களே?" என்றார்.

சிவகாமி அவரை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு, "அப்பா! குமார சக்கரவர்த்தி இந்த வீரரிடம் திருப்பிக் கொடுப்பதற்காகவே அந்த வேலைத் தம் கையிலே வைத்திருக்கலாம். சுத்த வீரத்தைப் பாராட்டுவதில் மாமல்லரைப்போல் யார் உண்டு? இவரை நீங்கள் சக்கரவர்த்தியின் சமூகத்துக்கு உடனே அழைத்துப் போக வேண்டும்" என்று கூறினாள்.

ஆயனர் தட்டுத் தடுமாறி, ஆகட்டும் "அம்மா! என் உத்தேசமும் அதுதான். பரஞ்சோதி வடக்கே போய்த் திரும்பி வந்ததும் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போகிறேன்" என்றார்.

சக்கரவர்த்தி வந்திருந்த சமயத்தில் சிலையின் பின்னால் ஒளிந்திருக்க நேர்ந்த அவமானத்தினாலும், சிவகாமியின் விஷயத்தில் ஏற்பட்ட இயற்கையான சங்கோசத்தினாலும் இத்தனை நேரம் பரஞ்சோதி உள்ளமும் உடலும் குன்றி மௌனமாயிருந்தான். ஆனால், சிவகாமி பரிந்து கூறிய வார்த்தை அவனுடைய ஆன்மாவையும் நாவையும் கட்டியிருந்த தளையை அறுத்த மாதிரி இருந்தது.

அவன் சிவகாமியை நன்றியுடன் நோக்கி விட்டு, ஆயனரைப் பார்த்து, "ஐயா! தங்கள் குமாரி சொல்வது உண்மைதான். குமார சக்கரவர்த்தியின் கையிலிருந்த வேல் என்னுடைய வேல் தான் என்று எனக்குக்கூடத் தோன்றியது. அதை வாங்கிக் கொடுத்தீர்களானால் நல்லது. நெடுந்தூரம் பிரயாணம் செய்வதற்குக் கையில் ஏதேனும் ஆயுதம் அவசியமல்லவா?" என்றான்.

அப்போது புத்த பிக்ஷு, "ஆயுதத்துக்குத்தானா இப்போது அவசரம்? வேலும் ஈட்டியும் எத்தனை வேணுமானாலும் நான் சம்பாதித்துத் தருகிறேன். முக்கியமான காரியம் ஆகவில்லையே! குதிரையும் இலச்சினையும் கேட்கத் தவறி விட்டீர்களே, ஆயனரே!" என்றார்.

"அது என் பொறுப்பு நாளை மாமல்லபுரத்துக்கு வரும்படி சக்கரவர்த்தி கட்டளையிட்டிருக்கிறார். அங்கே கேட்டு வாங்கிக்கொண்டு வருகிறேன். பிரயாணத்திற்கு மற்ற ஏற்பாடுகளைக் கவனியுங்கள்" என்றார் ஆயனர்.

"அப்பா! இந்த அண்ணன் நெடுந்தூரம் பிரயாணம் செய்யப் போகிறாரா? எந்த ஊருக்கு? எதற்காக? என்று சிவகாமி கேட்டாள்.

"நான்தான் அனுப்புகிறேன், குழந்தாய்! மிகவும் முக்கியமான காரியத்துக்காக. சென்ற ஒன்பது வருஷகாலமாக இரவும் பகலும் நான் கண்டுகொண்டிருந்த கனவு நிறைவேறப்போகிறது. சிவகாமி! இந்த உத்தம புத்த பிக்ஷுவின் உதவியினால் நிறைவேறப் போகிறது" என்று ஆயனர் கூறியபோது அவருடைய மொழிகளில் முன் போலவே ஆர்வமும் பரபரப்பும் பொங்கித் ததும்பின.

"நீங்கள் என்ன கனவு கண்டீர்கள்? அது எப்படி நிறைவேறப்போகிறது? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே?" என்றாள் சிவகாமி.

"அஜந்தா மலைக் குகையிலுள்ள அதிசய வர்ண சித்திரங்களைப் பற்றி உனக்குப் பல தடவை சொல்லியிருக்கிறேனல்லவா? ஐந்நூறு வருஷம் ஆகியும் அழியாத அந்த வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தை அறிந்து வருவதற்காகத் தான் இந்தப் பிள்ளையை என் அருமை நண்பரின் மருமகனை, வடக்கே அனுப்பப் போகிறேன்..."

"ஐந்நூறு வருஷத்து வர்ணமாவது, அழியாதிருக்கவாவது? எனக்கு நம்பிக்கைப்படவில்லை, அப்பா!" என்று சிவகாமி கூறி, சந்தேகமும் அவநம்பிக்கையும் வெளிப்படையாகத் தோன்றிய பார்வையுடன் பிக்ஷுவை நோக்கினாள்.

"அதை நம்புவது கஷ்டந்தான் முதன் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கும் நம்பிக்கை உண்டாகவில்லை. ஐந்நூறு வருஷம் அழியாத வர்ணம் எப்படி இருக்கமுடியும் என்றுதான் எண்ணினேன். நானே கண்ணால் பார்த்த பிறகு தான் நம்பிக்கை உண்டாயிற்று!" என்றார்.

ஆயனர் இவ்விதம் கூறியதும், புத்த பிக்ஷுவும் சிவகாமியும் தங்களுடைய வியப்பை ஏககாலத்தில் தெரிவித்துக் கொண்டார்கள்.

"கண்ணால் பார்த்தீர்களா? எப்போது?" என்றாள் சிவகாமி.

"என்னிடம் இத்தனை காலமும் சொல்லவில்லையே? தாங்கள் அஜந்தாவுக்குப் போனதுண்டா?" என்று பிக்ஷு கேட்டார்.

"இல்லை; அஜந்தாவுக்குப் போனதில்லை. ஆனால், சித்தர் மலையிலே பார்த்தேன். அடிகளே! தாங்களும் சித்தர் மலைக்குப் போய்வந்ததாகச் சொன்னீர்களே? அங்கே என்ன என்ன அதிசயங்களைக் கண்டீர்கள்?" என்று ஆயனர் வினவியதும், பிக்ஷுவின் முகத்தில் பிரகாசம் உண்டாயிற்று.

"ஆ! தெரிகிறது...சித்தர் மலைக்குகையில் ஜீன தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அழியா வர்ணங்கொண்டு எழுதியிருப்பதைக் கண்டேன். குகையின் வாசற்புறத்தில் இரண்டு அப்ஸர ஸ்திரீகளின் திவ்ய வடிவங்களைப் பரத சாஸ்திரத்தில் சொல்லிய இரண்டு அபூர்வ அபிநயத் தோற்றங்களில் பார்த்தேன். அவற்றை எழுதிய மகா சித்திரக்காரர் யாரோ என்று அதிசயித்தேன்..."

"யார் என்று தெரிந்ததா, சுவாமி?"

"இப்போது தெரிகிறது அப்பேர்ப்பட்ட தத்ரூபமான ஜீவ வடிவங்களை எழுதக்கூடிய மகா சித்திரக்காரர் தென்னாட்டிலே ஆயனச் சிற்பியைத் தவிர வேறு யார்?"

"ஆம், அடிகளே! அந்த உருவங்களை எழுதியவன் அடியேன்தான். இன்னும் ஏதாவது விசித்திரத்தைக் கவனித்தீர்களா?"

"அந்த அப்ஸர மாதரின் நடன உருவங்கள் இடைக்கு மேலே பிரகாசமாய் நேற்று எழுதியவைபோல் விளங்குகின்றன. இடைக்குக் கீழே வர்ணம் மங்கி விளக்கமின்றி இருக்கின்றன."

"ஆ! ஒன்பது வருஷ காலத்தில் அதிகமாக மங்கித்தான் இருக்கும்!" என்றார் ஆயனர்.

பின்னர், மேற்சொன்ன சித்தர் மலைச் சித்திரங்களைக் குறித்து ஆயனர் முன்னும் பின்னுமாகத் தட்டுத்தடுமாறிக் கூறிய வரலாறு வருமாறு.

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தி சமண சமயத்தினராயிருந்த காலத்தில் சோழ மண்டலத்துக்கு அவர் பிரயாணம் சென்றபோது ஆயனரையுங்கூட அழைத்துப் போயிருந்தார். உறையூரில் சோழ மன்னனுடைய உபசாரங்களைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சித்தர்வாச மலையில் சமண முனிவர்கள் ஏற்படுத்தியிருந்த பிரசித்திபெற்ற சமணப் பள்ளியைப் பார்க்கச் சென்றார். அந்தக் குகைப் பள்ளியில் தீட்டியிருந்த வர்ணச் சித்திரங்களைக் கண்டு சக்கரவர்த்தியும் ஆயனரும் அதிசயித்தனர்.

சித்தர் மலைப் பள்ளியில் மேற்படி ஓவியங்களைத் தீட்டிய முனிவர் அச்சமயம் அங்கே வாசம் செய்து கொண்டிருந்தார். அந்தச் சித்திரங்கள் ஆயிரம் வருஷம் ஆனாலும் அழியாதவை என்று அம்முனிவர் கூறியதைச் சக்கரவர்த்தியும் ஆயனரும் நம்பவில்லை. அஜந்தா சித்திரங்களைப்பற்றி அந்த முனிவர் கூறியதையும் இவர்கள் நம்பவில்லை. அதன்பேரில் அந்தச் சமண முனிவர் ஒரு பந்தயம் போட்டார். அந்தக் கோயிலின் வாசலில் ஆயனர் இரண்டு அப்ஸர மாதரின் நடனத் தோற்றங்களை எழுதவேண்டுமென்றும், மேற்பாதி உருவங்களைத் தாம் குழைத்துக் கொடுக்கும் வர்ணங்களைக்கொண்டும், இடைக்குக் கீழே ஆயனரின் சொந்த வர்ணங்களைக்கொண்டும் எழுத வேண்டுமென்றும், மூன்று வருஷம் கழித்து மீண்டும் வந்து பார்த்து, தாம் கூறுவது உண்மை என்று நிச்சயிக்கப்பட்டால், ஆயனர் சமண சமயத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமென்றும் முனிவர் பந்தயத்துக்கு நிபந்தனை விதித்தார். அப்படி ஒப்புக் கொண்டால் மேற்படி வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தைச் சொல்லிக் கொடுப்பதாகவும் கூறினார்.

நிபந்தனையை ஒப்புக்கொண்ட ஆயனர் மேற்சொன்ன இரு வகை வர்ணங்களை உபயோகித்து அப்ஸர மாதர் சித்திரங்களை எழுதினார். மூன்று வருஷத்துக்குப் பிற்பாடு சித்தர் மலைக்கு மறுபடியும் போய்ப் பார்த்தபோது, ஆயனர் தீட்டிய நடன உருவங்களின் மேற்பகுதிகள் அன்று எழுதியவைபோல் வர்ணம் மங்காமல் விளங்கின. கீழ்ப் பகுதிகள் பெரிதும் மங்கிப்போயிருந்தன. இதனால் பெரிதும் அதிசயமடைந்த ஆயனர், நிபந்தனைப்படி சமண மதத்தைத் தழுவி, அந்த இரகசியத்தை அறிந்துகொள்ளச் சித்தமாயிருந்தார். ஆனால், நிபந்தனை விதித்த சமண ஓவியர் அப்போது அங்கு இல்லை! சக்கரவர்த்தி சைவரானது பற்றிக் கோபங்கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்திலிருந்து போய்விட்ட அநேக சமண முனிவர்களைப்போல் அவரும் போய் விட்டார்! ஆனால், அந்த அழியாத வர்ணச் சேர்க்கையின் இரகசியத்தை அறிந்து கொள்வதில் ஆயனருக்கு அன்று ஏற்பட்ட ஆவல் இன்று வரையில் வளர்ந்துகொண்டே இருந்தது.

மேற்படி வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த புத்த பிக்ஷு முடிவில், "ஆயனரே! கவலை வேண்டாம்! உங்களுடைய ஆவல் நிறைவேறும் காலம் நெருங்கிவிட்டது. பரஞ்சோதிக்கு நீங்கள் குதிரையும் பிரயாண அனுமதியும் வாங்கிக் கொடுப்பதுதான் தாமதம், வெகு சீக்கிரத்தில் உங்கள் மனோரதம் நிறைவேறும்!" என்றார்.

பரஞ்சோதியும் மிக்க உற்சாகத்துடன், "ஆம், ஐயா! தங்களுடைய மனோரதம் என்னால் நிறைவேறுவதாயிருந்தால் அது என்னுடைய பாக்கியம் தான். என்ன அபாயம் வந்தாலும் பின் வாங்காமல் காரியத்தை முடித்துக்கொண்டு வருகிறேன்" என்றான்.

சிவகாமியின் உள்ளத்திலோ முரண்பட்ட எண்ணங்கள் தோன்றிப் போட்டியிட்டன. ஆயனருடைய ஆவலையும், அந்த ஆவல் நிறைவேறினால் அவர் அடையக்கூடிய மகத்தான ஆனந்தத்தையும் அவள் அறிந்துதான் இருந்தாள். ஆனாலும், புத்த பிக்ஷுவின் தூண்டுதலால் நடக்கும் இந்தக் காரியத்தில் ஏதாவது சூதும் சூழ்ச்சியும் இருக்குமோ என்று அவள் மனம் ஐயுற்றது. ஆகவே, பரஞ்சோதியைத் தனியாகப் பார்த்து எச்சரிக்கை செய்ய வேண்டுமென்று அவள் தனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டாள்.

சத்ருக்னன்

ஆயனர் வீட்டிலிருந்து புறப்பட்ட மகேந்திர பல்லவர் குதிரையை விரைவாகச் செலுத்திக்கொண்டு சென்று சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த தம் பரிவாரங்களை அடைந்தார். அங்கே குதிரையைச் சற்று நிறுத்தி, கூட்டத்தில் ஒருவன் மீது பார்வையைச் செலுத்தினார். அந்த மனிதன் சக்கரவர்த்தியின் பார்வையில் இருந்த சமிக்ஞையைத் தெரிந்து கொண்டவனாய், அவரை நெருங்கி வந்து பணிவாக நின்றான்.

"சத்ருக்னா! உனக்குச் சிற்பக்கலையில் பயிற்சி உண்டா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

சத்ருக்னன் முகத்தில் எவ்வித உணர்ச்சியும் காட்டாமல், "இல்லை பிரபு!" என்றான்.

"இவ்வளவுதானா? சிற்பக்கலையில் கொஞ்சமாவது உனக்குப் பயிற்சி இருக்கவேண்டும். அதற்கு இந்த இடத்தைக் காட்டிலும் நல்ல இடம் கிடையாது. ஆயனருடைய சீடப் பிள்ளைகள் செய்யும் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாலே போதும்."

"ஆக்ஞை, பிரபு! இப்போதே தொடங்குகிறேன்."

"சிற்பம் கற்றுக்கொள்ளப் புதிதாக வேறு யாராவது இங்கே வந்தால் அவர்களையும் நீ கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால், அவர்கள் உன்னைக் கவனிக்க வேண்டியதில்லை."

"அப்படியே" என்று சத்ருக்னன் கூறியபோது அவனுடைய புருவங்கள் சிறிது மேலே சென்றன.

"நல்லது; சிற்பக்கலையைப்பற்றிப் புதிதாக ஏதேனும் தெரிந்துகொண்டால் உடனே வந்து எனக்குத் தெரிவிக்க வேண்டும்."

இவ்விதம் கூறிவிட்டுச் சக்கரவர்த்தி மீண்டும் குதிரையை வேகமாக விட்டார். அவரைத் தொடர்ந்து குமார சக்கரவர்த்தியும் குதிரையை வேகமாகச் செலுத்த, மற்ற பரிவாரங்கள் அவர்களைப் பின்தொடர முடியாமல் பின் தங்கும்படி நேர்ந்தது.

சக்கரவர்த்திக்கும் சத்ருக்னனுக்கும் நடந்த சம்பாஷணை அரைகுறையாக நரசிம்மரின் செவியில் விழுந்தது. அது அவருடைய மனத்தில் பெருங்குழப்பத்தை உண்டாக்கிற்று. சிவகாமி கூறியபடி ஆயனரின் வீட்டில் வேலெறிந்த வாலிபனைக் காணாதது மாமல்லருக்கு ஏற்கனவே வியப்பை உண்டாக்கியிருந்தது. இப்போது சக்கரவர்த்தி, ஆயனர் வீட்டைக் காவல் புரியும்படி பல்லவ ராஜ்யத்தின் மகா சமர்த்தனான ஒற்றனை ஏவியது மாமல்லரின் வியப்பைப் பன் மடங்கு அதிகமாக்கியதுடன், அவருடைய மனத்தில் என்னவெல்லாமோ சந்தேகங்களைக் கிளம்புவதற்கு ஏதுவாயிற்று. அதைப்பற்றித் தந்தையைக் கேட்க வேண்டுமென்று அவர் எண்ணினார். ஆனால், மகேந்திரரோ அந்தக் காட்டு வழியில் குதிரையைப் பாய்ச்சலில் விட்டுக்கொண்டு போனார். சக்கரவர்த்தி குதிரையை விரைவாகச் செலுத்தினால் அவர் ஏதோ முக்கியமான விஷயத்தைப்பற்றிச் சிந்தனை செய்வதற்கு அறிகுறி என்பதை மாமல்லர் அறிந்தவரானபடியால், விஷயத்தைத் தெரிந்துகொள்ள அவருடைய ஆவல் இன்னும் அதிகமாயிற்று. அவருடைய குதிரையும் நாலுகால் பாய்ச்சலில் சென்றது.

காட்டைத் தாண்டியதும் காஞ்சியிலிருந்து மாமல்லபுரத்துக்குப் போகும் இராஜபாட்டை தென்பட்டது. அந்தச் சாலை ஓரமாக ஒரு பெரிய கால்வாய் ஓடிற்று. அந்தக் கால்வாயில் ஒன்றன்பின் ஒன்றாகப் படகுகள் காஞ்சியை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன. படகுகளில் பெரும்பாலும் நெல் மூட்டைகள் ஏற்றியிருந்தன. ஒவ்வொரு படகையும் இரண்டு ஆட்கள் தள்ளிக் கொண்டு வந்தார்கள்.

இருபுறத்திலும் மரமடர்ந்த விசாலமான சாலையும், தெளிந்த நீரையுடைய கால்வாயும், கால்வாயில் மிதந்துவந்த படகுகளும், கால்வாய்க்கு அப்பால் மரங்களின் வழியாக வெகு தூரத்துக்குத் தெரிந்த பசுமையான சமவெளியும் மனோகரமாய்க் காட்சியளித்தன. கால்வாய் நீரில் ஆங்காங்கு மரங்களின் கருநிழல் படிந்திருந்த இடங்கள் கண்களைக் குளிரச் செய்தன. சற்றுத் தூரத்திலே சென்ற படகுகளில் ஒன்றிலிருந்து படகோட்டி ஒருவன்,

செங்கனி வாயில் ஒரு  
    வேய்ங்குழல் கொண்டிசைத்து  
தேனிசைதான் பொழிவோன்  
    யார் யார் யார்? கிளியே!  
செந்தாமரை முகத்தில்  
    மந்தகாசம் புரிந்து  
சிந்தை திரையாய்க் கொள்வோன்  
    யார் யார் யார்? கிளியே!

என்று இனிய குரலில் உணர்ச்சி ததும்பப் பாடிய இன்னிசைக் கீதம் இளங்காற்றிலே மிதந்து வந்தது.

இத்தகைய சாந்தமும் இன்பமும் அமைதியும் அழகும் குடி கொண்ட காட்சியைக் குலைத்துக்கொண்டும், "இது பொய்யான அமைதி. சீக்கிரத்திலே இடியும் மழையும் புயலும் பூகம்பமும் வரப்போகின்றன!" என்று மௌனப் பறையறைந்து தெரிவித்துக் கொண்டும் அக்கால்வாயில் நெல்லேற்றிய படகுகளுக்கு நடுவிலே ஆயுதங்கள் ஏற்றிய படகு ஒன்றும் வந்துகொண்டிருந்தது. அதில் வேல், வாள், ஈட்டி, கத்தி, கேடயம் முதலிய விதவிதமான போர்க் கருவிகள் நிறைந்திருந்தன.

அதுவரையில் மௌனமாக நின்று அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த சக்கரவர்த்தி ஆயுதப் படகைக் கண்டதும், "ஆக, பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்த ஆயத்தங்கள் பலமாகத்தான் நடக்கின்றன!" என்று பரிகாசமும் மனக்கசப்பும் தொனித்த குரலில் கூறிவிட்டு, பக்கத்திலே குதிரை மேலிருந்த தம் குமாரரைப் பார்த்தார். அவருடைய முகத்தோற்றத்தைக் கவனித்ததும், "நரசிம்மா! ஏதோ கேட்க விரும்புகிறாய் போலிருக்கிறதே!" என்றார்.

"எப்படித் தெரிந்தது, அப்பா!" என்றார் குமார சக்கரவர்த்தி.

"உன் முகம் தெரிவிக்கிறது. அபிநயக்கலை முகபாவம் ஆகியவைகளைப்பற்றி இப்போதுதானே பேசிவிட்டு வந்தோம்? கேட்க விரும்பியதைக் கேள்!" என்றார் தந்தை.

"சத்ருக்னனை எங்கே அனுப்பினீர்கள்!"

"ஆயனர் வீட்டுக்கு"

"எதற்காக?"

"ஒற்றனை வேறு எதற்காக அனுப்புவார்கள்? வேவு பார்ப்பதற்குத்தான்!"

"என்ன சொல்கிறீர்கள், அப்பா! ஆயனச் சிற்பியின் வீட்டை வேவு பார்க்கும்படியான அவசியம் என்ன ஏற்பட்டது?"

"யுத்த காலத்தில் சர்வ ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், மாமல்லா! இம்மாதிரி சமயங்களில் சந்நியாசியின் காவித் துணிக்குள்ளே எதிரியின் ஒற்றன் ஒளிந்திருக்கலாம். சிற்பக் கலைக்குள்ளே சதியாலோசனை இருக்கலாம்..."

நரசிம்மர் தம்மை மீறிய பதைபதைப்புடன், "ஆகா! இது என்ன? ஆயனச் சிற்பியா தமக்கு எதிராகச் சதி செய்கிறார்? என்னால் நம்ப முடியவில்லையே!" என்றார்.

"ஆயனச் சிற்பி சதி செய்வதாக நான் சொல்லவில்லையே? அந்தப் பரமசாது நமக்காக உயிரையே விடக் கூடியவராயிற்றே!"

மாமல்லர் சிறிது சாந்தம் அடைந்து, "அப்படியானால் ஆயனர் வீட்டுக்கு ஒற்றனுடைய காவல் எதற்காக?" என்று கேட்டார்.

"கள்ளங்கபடமற்ற அந்தச் சாது சிற்பிக்குத் தெரியாமல் அவர் வீட்டில் பகைவர்களின் ஒற்றர்கள் இருக்கலாம் அல்லவா?"

"ஆயனர் வீட்டில் ஒற்றர்களா? தங்களுக்கு எப்படித் தெரிந்தது? நான் ஒருவரையும் பார்க்கவில்லையே?"

"மாமல்லவா! இராஜ்ய நிர்வாகத்தில் ஈடுபட்டவர்களுக்கு எப்போதும் கண்ணும் காதும் திறந்திருக்க வேண்டும். யுத்த காலத்தில் இது மிகவும் அவசியம். ஆயனர் வீட்டில் நாம் இருந்த போது உன் கண்கள் என்ன செய்துகொண்டிருந்தன?" என்று கேட்ட வண்ணம் சக்கரவர்த்தி நரசிம்மரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.

அங்கே தம் கண்கள் சிவகாமியின் கண்களுடன் அந்தரங்கம் பேசுவதிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தன என்பது ஞாபகம் வரவே நரசிம்மருடைய பால் வடியும் இளம் வதனம் வெட்கத்தினால் சிவந்தது.

அதே சமயத்தில் முன்னைவிட அதிக தூரத்திலிருந்து படகோட்டியின் இனிய கீதம் மெல்லிய குரலில் பின்வருமாறு கேட்டது.

கண்ணன் என்றங்கேயொரு  
    கள்வன் உளன் என்று  
கன்னியர் சொன்னதெல்லாம்  
    மெய்தானோ? கிளியே!  
வெண்ணெய் திருடும்பிள்ளை  
    என்னுள்ளம் கவர்ந்ததென்ன?  
கண்ணால் மொழிந்ததென்ன?  
    சொல்வாய்! பைங்கிளியே!

இராஜ ஹம்சம்

நரசிம்மர் வெட்கமுற்றதைக் கண்டு அவருக்குத் தைரியம் சொல்பவர்போல் மகேந்திரர் கூறினார்: "நரசிம்மா! ஆயனர் வீட்டுக்குள் போனால் அங்குள்ள சிற்பச் சித்திர அதிசயங்களில் எவருமே கண்ணையும் கருத்தையும் பறிகொடுப்பது இயற்கைதான். நானே அப்படித்தான் மெய்ம்மறந்து விடுவது வழக்கம். இன்றைக்கு ஆயனர் வீட்டுக்குச் செல்லும்போதே சிறிது சந்தேகத்துடன் நான் சென்றபடியால் கூர்மையாகக் கவனித்தேன்..."

நரசிம்மர் தம் மனக் குழப்பத்தைச் சமாளித்துக்கொண்டு "கவனித்ததில் என்ன கண்டீர்கள், அப்பா? சிற்பங்களையும் சித்திரங்களையும் தவிர, ஆயனர் வீட்டில் வேறொன்றையும் நான் காணவில்லையே?" என்றார்.

"ஆயனரின் நடவடிக்கையில் உனக்கு எவ்விதமான சந்தேகமும் உண்டாகவில்லையா, நரசிம்மா!"

மாமல்லர் மௌனமாயிருந்தார்.

"அடிக்கடி அவர் கவலையுடன் புத்தர் சிலையின் பக்கம் திரும்பினாரே, அதைக் கவனிக்கவில்லையா?"

மாமல்லரின் கண்கள் அகன்று விரிந்தன. "புத்தர் சிலைக்கு அருகில் நாம் சென்றதும், ஆயனர் தயங்கித் தடுமாறியதையும் நீ கவனிக்கவில்லையா?"

நரசிம்மர் திடுக்கிட்டவராய், "அப்பா! அந்தப் பெரிய புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் ஒருவேளை யாராவது மறைந்திருந்தார்களா, என்ன?" என்றார்.

"ஆம், நரசிம்மா! இரண்டு பேர் இருந்தார்கள்! அன்றிரவு இராஜ விஹாரத்துக்கு அருகில் ஒரு புத்த பிக்ஷுவையும் ஒரு வாலிபனையும் நாம் பார்க்கவில்லையா, அந்த இருவரும் தான்!"

"என்ன! அவர்களா ஆயனச் சிற்பியார் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தார்கள்?"

"ஆம்; ஆனால், ஒளிந்துகொள்ளும் கலையை அவர்கள் அவ்வளவு நன்றாகக் கற்கவில்லை..."

"தங்களுக்கு மூன்றாவது கண் உண்டு என்பது அவர்களுக்கு எப்படித் தெரியும் அப்பா? ஆயனரின் வீட்டில் தாங்கள் அவ்வளவு நேரம் தங்கியது எனக்குச் சிறிது வியப்பை அளித்தது. இப்போது காரணம் தெரிகிறது!" என்று நரசிம்மர் பெருமிதத்துடன் கூறினார்.

மகேந்திரர் இதற்கு விடையொன்றும் கூறாமல் கால்வாயின் மேற்குத் திசையை நோக்கினார்.

திடீரென்று, "அப்பா! ஆயனர் வீட்டுக்கு நான் மறுபடியும் போய்வர விரும்புகிறேன்" என்றார் மாமல்லர்.

"எதற்காக, நரசிம்மா?"

"அந்த வாலிபனைப் பார்த்து இந்த வேலை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும். புத்த பிக்ஷுவுடன் அன்றிரவு நாம் பார்த்த வாலிபன்தான் இந்த வேலுக்குரியவன் என்று தாங்கள் சொன்னீர்கள் அல்லவா?"

"அன்று ஊகித்துச் சொன்னேன். இன்றைக்கு நிச்சயமாயிற்று. ஆனால், அந்த வாலிபனுக்கு இந்த வேல் இனிமேல் தேவையில்லை, நரசிம்மா! அதோ போகிறதே, ஆயுதப் படகு அதிலுள்ள பழைய வேல்களுடன் இதையும் நீ சேர்த்து விடலாம்!"

"ஏன், அப்பா?"

"பரஞ்சோதி ஆயனரிடம் சிற்பக் கலை கற்கப் போகிறான். அவனுக்கு வேல் வேண்டியதில்லை."

"பரஞ்சோதி, பரஞ்சோதி! திவ்யமான பெயர்! அந்த வீர வாலிபனைப்பற்றி என்னவெல்லாமோ ஆசை கொண்டிருந்தேன் அவனை என் ஆருயிர்த் தோழனாகக் கொள்ள விரும்பினேன்!"

"அது நிறைவேறாதென்று நான் சொல்லவில்லையே!"

"எப்படி நிறைவேறும்? நம் பகைவர்களின் ஒற்றர்களுடன் நாம் தோழமை கொள்வது சாத்தியமா?"

"அந்த வாலிபனை ஒற்றன் என்று நான் சொல்லவில்லையே!"

"பின் எதற்காக அவன் ஒளிந்துகொண்டான்?"

"அந்த வாலிபன் குற்றமற்றவன் அவனைக்கொண்டு அந்தக் கள்ள பிக்ஷு ஏதோ சூழ்வினை செய்யப் பார்க்கிறான் என்று தோன்றுகிறது. வாதாபி சாம்ராஜ்யத்தின் மகா சதுரனான ஒற்றன் அந்தப் பிக்ஷு என்று நான் ஊகிக்கிறேன்!"

"அப்பா! சில சமயம் தங்களுடைய நிதானப் போக்கு எனக்கு மிகுந்த வியப்பை அளிக்கிறது."

"எதைப்பற்றிச் சொல்லுகிறாய், நரசிம்மா?"

"அன்றிரவே அந்தப் புத்த பிக்ஷுவைப்பற்றித் தாங்கள் சந்தேகம் கொண்டீர்கள். உடனே அவனை ஏன் சிறைப்படுத்தவில்லை? வெளியிலே விட்டு ஏன் வேடிக்கை பார்க்கிறீர்கள்?"

"அன்றிரவு சிறைப்படுத்தியிருந்தால், பல்லவ ராஜ்யத்துக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பெரிய அபாயம் எனக்குத் தெரியாமல் போயிருக்கும்."

"பெரிய அபாயமா?" என்று கூறி நரசிம்மர் ஆவலுடனும் பரபரப்புடனும் மகேந்திரரை நோக்கினார்.

"ஆம்; அன்றிரவு நாம் புத்த பிக்ஷுவையும் வாலிபனையும் பார்த்தோம். மறுநாள் காலையில் அவர்களை இராஜ விஹாரத்தில் காணவில்லை. ஆனால், அவர்கள் எந்தக் கோட்டை வாசலின் வழியாகவும் வெளியே போனதாகத் தெரியவில்லையல்லவா?"

"ஆமாம்!"

"அவர்கள் எப்படி மாயமாய் மறைந்திருக்கக் கூடுமென்று வியப்பாயிருந்ததல்லவா?"

"ஆம், அப்பா!"

"கோட்டைக்கு வெளியே போக ஏதோ கள்ள வழி இருக்க வேண்டும் என்று சந்தேகித்தேன். அந்தக் கள்ள வழி எங்கே இருக்கிறதென்று சற்று முன்னால்தான் தெரிந்தது."

"அதைப்பற்றி யோசித்ததனால்தான் குதிரையை அவ்வளவு வேகமாய் விட்டுக்கொண்டு வந்தீர்களா?"

சக்கரவர்த்தி மௌனமாயிருந்தார்.

"கள்ள வழி எங்கே இருக்கிறது, அப்பா?"

"இராஜ விஹாரத்தில் புத்த பகவானுடைய விக்கிரஹத்துக்குப் பின்னால் பார்க்கவேண்டும், நரசிம்மா!"

சக்கரவர்த்தியின் அறிவுக் கூர்மையைப்பற்றி நரசிம்மர் அளவற்ற வியப்புக் கொண்டவராய்த் திகைத்து நிற்கையில், "அதோ இராஜஹம்சம்!" என்று மகேந்திரர் கூறியதைக் கேட்டு மேற்கே நோக்கினார்.

காஞ்சி நகர்ப் பக்கத்திலிருந்து மூன்று படகுகள் கால்வாயில் வந்துகொண்டிருந்தன. அவற்றில் நடுவில் வந்த படகு சங்கையொத்த வெண்ணிறமுடைய 'இராஜ ஹம்ச'த்தின் உருவமாக அமைக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பக்கத்தில் அமைந்திருந்த தங்கச் சிங்காதனம் 'பளபள'வென்று மின்னிற்று. அதன் மேல் விசாலமான வெண்கொற்றக்குடை விரித்திருந்தது. எல்லாவற்றுக்கும் மேலே பல்லவ சாம்ராஜ்யத்தின் ரிஷபக்கொடி கம்பீரமாய்ப் பறந்து கொண்டிருந்தது.

முதலில் வந்த படகும், 'இராஜ ஹம்ச'மும் படகோட்டிகளைத் தவிர மற்றப்படி வெறுமையாயிருந்தன. கடைசியாக வந்த படகில் பலர் அமர்ந்திருந்தார்கள்.

"ஆ! மந்திரி மண்டலத்தாரும் வருகிறார்களே! தாங்கள் வரச் சொல்லியிருந்தீர்களா?" என்றார் நரசிம்மர்.

"ஆம்; இன்றைக்குத் துறைமுகத்தில் மந்திரி மண்டலம் கூடப் போகிறது. அதற்கு முன்னால் உன்னிடம் நான் சில விஷயங்கள் சொல்லவேண்டும். அதோடு, உன்னிடம் ஒரு வாக்குறுதி கோரப்போகிறேன்" என்றார் மகேந்திரர்.

நரசிம்மருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவருடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டவளான சிவகாமி தாமரைக் குளக்கரையில் அவரிடம் வாக்குறுதி கேட்டு வாங்கிக்கொண்டு ஒரு முகூர்த்த நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அவருடைய அன்புக்கும் பக்திக்கும் உரியவரான தந்தை வேறு வாக்குறுதி கேட்கிறார்.

இவ்விதம் மாமல்லர் யோசித்துக் கொண்டிருக்கும்போதே படகுகள் மூன்றும் அவர்கள் இருந்த இடத்தை நெருங்கின.

வாக்குறுதி

சக்கரவர்த்திக்குப் பின்னால் கால்நடையாக வந்த இராஜ பரிவாரங்களும் இதற்குள்ளே கால்வாயின் கரைக்கு வந்து விட்டன.

"மகா ராஜாதிராஜ திரிபுவன சக்கரவர்த்தி குணபர மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க!" என்ற கோஷம் மந்திரி மண்டலத்தார் வீற்றிருந்த படகிலேயிருந்து கம்பீரமாக எழுந்தது.

"மகா ராஜாதிராஜ அவனிசிம்மலளிதாங்குர சத்துருமல்ல விசித்திரசித்த மத்தவிலாச சித்தரக்காரப்புலி குணபர மகேந்திர பல்லவேந்திரர் வாழ்க!" என்ற கோஷம் கரையிலிருந்து எழுந்தது.

"குமார சக்கரவர்த்தி மாமல்லர் வாழ்க!" என்ற கோஷம் இரு பக்கங்களிலிருந்தும் எழுந்து வானளாவியது.

சங்கங்களும், எக்காளங்களும் காது செவிடுபடும்படி முழங்கின. முரசங்களும் பேரிகைகளும் எட்டுத் திசையும் அதிரும்படி ஆர்த்தன. மகேந்திர பல்லவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் முன்னால் வந்த படகிலே ஏறி அமர்ந்தார்கள். சக்கரவர்த்தியும் குமாரரும் குதிரைகளை ஏவலாளரிடம் ஒப்புவித்துவிட்டு, 'இராஜ ஹம்ச'த்தில் ஏறி வெண்கொற்றக் குடையின் கீழ்த் தங்கச் சிங்காதனத்தில் அமர்ந்தார்கள். படகுகள் மூன்றும் துறைமுகத்தை நோக்கிப் புறப்பட்டன.

வாத்திய முழக்கங்கள் நின்றதும், சக்கரவர்த்தி தம் குமாரரைப் பார்த்து, "நரசிம்மா! நான் உன்னிடம் வாக்குறுதி கேட்பதே உனக்கு விந்தையாயிருக்கும். அதற்கு நீ உடனே மறுமொழி கூறாததும் நியாயந்தான். விஷயம் இன்னதென்று தெரிந்து கொள்ளாமல் எந்த வாக்குறுதியும் கொடுக்க கூடாது. இராஜ்யம் ஆளும் பொறுப்பு உடையவர்கள் இதில் சர்வஜாக்கிரதையாயிருக்க வேண்டும்!" என்றார்.

"அதற்காக நான் தயங்கவில்லை, அப்பா! தாங்கள் என்னிடம் வாக்குறுதி கேட்க வேண்டுமா என்றுதான் யோசனை செய்து கொண்டிருந்தேன். எனக்குத் தாங்கள் கட்டளையிடுவது தானே முறை? தங்கள் விருப்பத்திற்கு மாறாக எப்போதாவது நான் நடந்ததுண்டா?"

இந்த வார்த்தைகள் குமார சக்கரவர்த்தி இருதய பூர்வமாகக் கூறியவையானபடியால் அவருடைய நாத் தழுதழுத்தது.

மகேந்திரரும் உணர்ச்சி மிகுதியினால் சற்றுச் சும்மா இருந்துவிட்டு, பிறகு கூறினார்: "பல்லவ சிம்மா! நான் எவ்வளவு கசப்பான கட்டளையிட்டாலும் நீ நிறைவேற்றுவாய் என்று எனக்குத் தெரியும். ஆனாலும், காரியத்தின் முக்கியத்தைக் கருதி உன்னிடம் வாக்குறுதி பெறவேண்டியிருக்கிறது. அதற்கு முன்னால் நான் உனக்குச் சில முக்கியமான விஷயங்களைச் சொல்லியாக வேண்டும். நாளை மறுநாள் நான் வடக்கே போர் முனைக்குக் கிளம்புகிறேன். எப்போது திரும்பி வருவேன் என்று சொல்வதற்கில்லை..."

"அப்பா! என்ன சொல்கிறீர்கள்? போர்முனைக்குத் தாங்கள் கிளம்புகிறீர்களா? என்னை இங்கே விட்டுவிட்டா?" என்று மாமல்லர் ஆத்திரத்துடன் கேட்டார்.

"நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லி விடுகிறேன். நரசிம்மா! பிறகு, நீ கேட்கவேண்டியதைக் கேட்கலாம்" என்று சக்கரவர்த்தி கூறியதும், நரசிம்மர் மௌனமாயிருந்தார்.

மகேந்திரர் பிறகு கூறினார்: "இந்தப் புராதனமான பல்லவ சாம்ராஜ்யத்தில் யுத்தம் என்று நடந்து வெகுகாலம் ஆகிவிட்டது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நான் இந்த ராஜ்யத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். பிறகு இதுவரை யுத்தம் என்பதே நடக்கவில்லை. என் தந்தை சிம்மவிஷ்ணு மகாராஜாவின் காலத்திலும் பெரிய யுத்தம் நடந்தது கிடையாது. அவருடைய ஆட்சியின் ஆரம்பத்தில், சோழ நாட்டுக்கும் பாண்டிய நாட்டுக்கும் நடுவில் புல்லுருவியைப் போலக் கிளம்பியிருந்த களப்பாள வம்சத்தை நிர்மூலம் செய்து உறையூர்ச் சிம்மாசனத்தில் சோழ வம்சத்தை நிலை நாட்டினார். அதன் பிறகு பல்லவ சைனியங்களுக்கு வேலையே இருக்கவில்லை! இப்போது தான் முதன் முதலாக என் காலத்தில் யுத்தம் வந்திருக்கிறது. இதை என் இஷ்டப்படி நடத்துவதற்கு மந்திரி மண்டலத்தாரின் அனுமதி கோரப் போகிறேன். அதற்கு நீயும் அனுமதி கொடுக்க வேண்டும். இந்த யுத்தத்தில் வெற்றியோ தோல்வியோ, எது நேர்ந்தாலும் என் தலையோடு போகட்டும் உனக்கு அதில் பங்கு வேண்டியதில்லை...."

இத்தனை நேரம் பொறுமையுடன் இருந்த நரசிம்மர் இப்போது குறுக்கிட்டு, "அப்பா! தோல்வி என்ற வார்த்தையை ஏன் சொல்லுகிறீர்கள்? யுத்தத்தில் நாம் அடையக்கூடியது வெற்றி அல்லது வீரமரணந்தானே? அதில் எனக்குப் பங்கு எப்படி இல்லாமற் போகும்?" என்று கேட்டார்.

"வீர பல்லவ குலத்துக்கு உகந்த வார்த்தை கூறினாய், நரசிம்மா! வெற்றி அல்லது வீர மரணந்தான் நமது குலதர்மம். ஆனால், வீர மரணத்தை நாம் இரண்டுபேரும் சேர்ந்தார் போல் தேடி அடைய வேண்டியதில்லை! ஒருவர் செய்த தவறுகளைத் திருத்த இன்னொருவர் உயிர் வாழ வேண்டுமல்லவா? ஒருவருக்காகப் பழி வாங்குவதற்கு இன்னொருவர் இருக்க வேண்டுமல்லவா?"

"அப்பா! போர் முனையிலிருந்து ஏதோ ரொம்பவும் கெடுதலான செய்தி வந்திருகிறது; அதனால்தான் இப்படியெல்லாம் தாங்கள் பேசுகிறீர்கள்!"

"ஆம், குழந்தாய்! கெடுதலான செய்திதான் வந்திருக்கிறது! கங்கபாடிப் படை புலிகேசிக்குப் பணிந்து விட்டது. நரசிம்மா! வாதாபிச் சைனியம் வடபெண்ணையை நோக்கி விரைந்து முன்னேறி வந்துகொண்டிருக்கிறது."

"இவ்வளவுதானே, அப்பா? துடைநடுங்கி துர்விநீதனிடம் அது நாம் எதிர்பார்க்கக் கூடியதுதான். அதனால் என்ன? வடபெண்ணைக் கரையில் நமது வடக்கு மண்டலத்துச் சைனியம் அணிவகுத்து நிற்கிறதல்லவா? வேங்கியிலிருந்து என் மாமன் பெரும்படையுடன் கிளம்பி வருகிறாரல்லவா?"

"நரசிம்மா! வேங்கி சைனியம் நமது உதவிக்கு வராது. புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனன் இன்னொரு பெரும்படையுடன் வேங்கியை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறானாம்."

"ஆஹா! வாதாபி சைனியம் அவ்வளவு பெரிதா? நாம் மட்டும் ஏன்...?" என்று மாமல்லர் ஆரம்பித்து இடையில் நிறுத்தியபோது, அவருடைய குரலில் ஏமாற்றம் தொனித்தது.

"அது என் தவறுதான், நரசிம்மா! என் வாழ்நாளில் இப்படிப்பட்ட ஒரு யுத்தம் வருமென்று நான் எதிர்பார்க்கவில்லை. போர்க்கலையில் கவனம் செலுத்த வேண்டிய காலத்தை எல்லாம் ஆடலிலும் பாடலிலும் சிற்பத்திலும் சித்திரத்திலும் கழித்து விட்டேன்..."

"அதனால் என்ன, அப்பா! சற்று முன்னால் ஆயனர் சொன்னாரே? உலகத்தில் எத்தனையோ சக்கரவர்த்திகள் இருந்தார்கள், மறைந்தார்கள். அவர்களுடைய பெயர்களைக் கூட உலகம் மறந்து போய்விட்டது. ஆனால் தங்களுடைய பெயரை என்றென்றைக்கும் உலகம் மறக்க முடியாது."

"ஆயினும், இந்த யுத்தத்தில் நாம் ஜயிக்காமல் போனால், மாமல்லபுரத்து மகத்தான சிற்பங்கள் எல்லாம் என்றைக்கும் நமது அவமானத்துக்கே சின்னங்களாக விளங்கும்!"

"ஒருநாளும் இல்லை, யுத்தத்தில் தோல்வியடைந்து உயிரையும் வைத்துக் கொண்டிருந்தாலல்லவா தாங்கள் சொல்கிறபடி ஏற்படும்? போர்க்களத்தில் புறங்காட்டி ஓடி ஒளிந்து கொள்கிறவர்களையல்லவா உலகம் பழித்து நிந்திக்கும்? வீர மரணத்துக்கு ஆயத்தமாகயிருக்கும்போது, அவமானத்துக்கும் பழிக்கும் நாம் ஏன் பயப்படவேண்டும்?" என்று மாமல்லர் ஆத்திரத்துடன் கூறினார்.

"முடிவில் போர்க்களத்தில் வீர மரணம் இருக்கவே இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னால் நம் பகைவர்களை வேரொடு அழித்து வெற்றியடையவே பார்க்கவேண்டுமல்லவா? அது அப்படி அசாத்தியமான காரியம் இல்லை. அவகாசம் மட்டுந்தான் வேண்டும். வாதாபி மன்னன் யுத்த தந்திரத்தை நன்கு அறிந்திருக்கிறான், நரசிம்மா! ஆனாலும், முடிவில் அவனை முறியடித்து நாம் வெற்றி மாலை சூடுவோம் சந்தேகமில்லை. இதற்கு உன்னுடைய பூரண உதவி எனக்கு வேண்டும். நான் சொல்லுவது உனக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் அதன்படி நடக்க வேண்டும்..."

நரசிம்மர் மிக்க உணர்ச்சியோடும் உருக்கத்தோடும் தழுதழுத்த குரலில், "அப்பா! என்னிடம் தாங்கள் உதவி கோர வேண்டுமா? தாங்கள் என் அன்புக்குரிய அருமைத் தந்தை மட்டுமல்ல, என் உடல் பொருள் ஆவிக்கு உரிமையுடைய அரசர். எனக்கு எப்பேர்ப்பட்ட கட்டளையையும் இடுவதற்கு அதிகாரமுள்ள பல்லவ சாம்ராஜ்யத்தின் பிரதம சேனாதிபதி. எவ்வளவு கசப்பான கட்டளை வேண்டுமானால் இடுங்கள். நிறைவேற்றக் காத்திருக்கிறேன்" என்றார்.

மகேந்திரர் சற்று மௌனமாயிருந்தார் அப்போது கீழ்த் திசையில் சிறிது தூரத்தில் கடற்கரைத் துறைமுகத்தின் காட்சி தென்பட்டது. கப்பல்களின்மேல் கம்பீரமாகப் பறந்த ரிஷபக் கொடிகள் வானத்தை மறைத்தன. சற்று தென்புறத்தில் நெடுந்தூரம் பரவி நின்ற மாமல்லபுரத்துக் குன்றுகள் காட்சி அளித்தன. சிறிது நேரம் அந்தக் காட்சியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்த மகேந்திரர், சட்டென்று நரசிம்மரின் பக்கம் திரும்பி "மாமல்லா! நாளை மறுநாள் நான் போர்க்களத்துக்குக் கிளம்புகிறேன் என்று சொன்னேனல்லவா? போர்க்களத்திலிருந்து திரும்பி வந்து இந்த மாமல்லபுரத்தில் நாம் ஆரம்பித்த சிற்ப வேலை பூர்த்தியாவதைக் காண்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்றார்.

நரசிம்மர் மௌனமாய் இருக்கவே, மகேந்திரர் மேலும் கூறினார்: "அப்படி ஒருவேளை நான் திரும்பி வராவிட்டால் இந்தச் சிற்பப் பணியை நீதான் தொடர்ந்து நடத்திப் பூர்த்தி செய்ய வேண்டும்."

"இந்த வாக்குறுதியைத்தானா என்னிடம் கோரினீர்கள்?" என்று மாமல்லர் வெடுக்கென்று கேட்டபோது அவருடைய குரலில் ஆத்திரமும் வெறுப்பும் தொனித்தன.

"இல்லை; அதைக் கேட்கவில்லை நான் ஒருவேளை போர்க்களத்திலிருந்து திரும்பி வராவிட்டால் எனக்காக நீ பழிக்கு பழி வாங்கவேண்டும். புலிகேசியின் படையெடுப்பினால் பல்லவ சாம்ராஜ்யத்துக்கு ஏற்பட்ட அவமானத்தையும் பழியையும் துடைக்க வேண்டும்."

"அது என் கடமையாயிற்றே? கடமையை நிறைவேற்றுவதற்கு வாக்குறுதி வேண்டுமா?"

"குமாரா! அவ்விதம் பழிக்குப் பழி வாங்குவதற்காக நீ உன் உயிரைப் பத்திரமாய்க் காப்பாற்றிக்கொள்ளவேண்டும்."

நரசிம்மர் மௌனமாயிருந்தார் இன்னும் ஏதோ வர போகிறதென்று அவர் கவலையுடன் எதிர்பார்த்ததாகத் தோன்றியது.

"குழந்தாய்! சென்ற ஐந்நூறு ஆண்டு காலமாக வாழையடி வாழையாக வந்திருக்கும் இந்தப் பல்லவ குலம், இனியும் நீடிப்பது உன் ஒருவனையே பொறுத்திருக்கிறது. உன்னிடம் நான் கேட்கும் வாக்குறுதி இதுதான். நான் திரும்பி வரும்வரையில் அல்லது நான் திரும்பி வரமாட்டேன் என்று நிச்சயமாய்த் தெரியும்வரையில் நீ காஞ்சிக் கோட்டையிலேயே இருக்கவேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் கோட்டைக்கு வெளியே வரக்கூடாது! இதோ என் கையைத் தொட்டுச் சத்தியம் செய்து கொடு" என்று கூறி மகேந்திரர் தம் வலது கரத்தை நீட்டினார்.

நரசிம்மர் அவருடைய நீட்டிய கையைத் தொட்டு, "அப்படியே ஆகட்டும், அப்பா! தாங்கள் திரும்பி வரும் வரையில் காஞ்சிக் கோட்டையிலேயே இருப்பேன்!" என்றார்.

திடீரென்று தூரத்தில் சமுத்திரம் 'ஹோ' என்று ஆங்காரத்துடன் இரையும் பேரொலி கேட்டது. மாமல்லரின் உள்ளத்திலும் ஆர்கலியின் அலைகளைப் போல் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றி மறைந்தன.

கடல் தந்த குழந்தை

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் காஞ்சி ராஜ்யத்தின் புராதன ராஜவம்சம் சந்ததியில்லாமல் முடிவடைந்தது.

"மன்னன் இல்லாத மண்டலம் பாழாய்ப் போய்விடுமே! அரசன் இல்லாத நாட்டில் குடிகள் எல்லையற்ற துன்பங்களுக்கு உள்ளாவார்களே!" என்று தேசத்தின் பெரியோர்கள் ஏங்கினார்கள்.

அப்போது அருளாளரான ஒரு மகான் மக்களைப் பார்த்து, "கவலை வேண்டாம்; காஞ்சி ராஜ்யத்துக்கு ஒரு மன்னனைக் கடல் கொடுக்கும்! இதை நான் கனவிலே கண்டேன்!" என்றார். அதுமுதல் அந்நாட்டில் கடற்கரையோரத்தில் காவல் போட்டு வைத்திருந்தார்கள்.

ஒருநாள் கடற்கரையோரமாகக் கப்பல் ஒன்று வந்தது. அது எந்த நாட்டுக் கப்பலோ, எங்கிருந்து வந்ததோ தெரியாது. கரையில் இருந்தவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலே திடீரென்று கொடிய புயற்காற்று வீசுகிறது. ஊழிக்காலம் வந்து விட்டதோ என்று தோன்றும்படி கடல் கொந்தளிக்கிறது. கரையோரமாக வந்த கப்பல் அப்படியும் இப்படியுமாக ஆடுகிறது! கப்பலின் கொடி மரங்கள் சின்னாபின்னமாகின்றன! ஆ! என்ன பயங்கரம்! தயிரைக் கடையும் மத்தைப் போலக் கப்பல் சுழலுகிறதே! சுழன்று சுழன்று, அடடா, அதோ கவிழ்ந்து விட்டதே! புயற்காற்றின் கோரமான ஊளைச் சத்தத்துடன், கப்பலிலுள்ளோர் அழுகுரலும் கலக்கின்றதே!

கப்பல் கவிழ்ந்து கடலுக்குள் முழுகிற்றோ, இல்லையோ, சொல்லி வைத்தாற்போல், காற்றும் நிற்கிறது. அதுவரை கரையிலே நின்று செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இப்போது பரபரப்பு அடைகிறார்கள். படகுகளும் கட்டு மரங்களும் கடலில் விரைவாகத் தள்ளப்படுகின்றன. கப்பலில் இருந்தவர் யாராவது தெய்வாதீனமாக உயிருடன் கடலில் மிதந்தால், அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பதற்காகப் படகுகளும் கட்டுமரங்களும் விரைந்து செல்லுகின்றன; படகோட்டிகளும் மீன்பிடிக்கும் வலைஞர்களும் பாய்ந்து செல்லுகிறார்கள்.

அத்தனை படகோட்டிகளிலும், வலைஞர்களிலும் அதிர்ஷ்டசாலி ஒருவன் இருக்கிறான். அதிர்ஷ்டம் அவனைத் தேடிக்கொண்டு வருகிறது. ஆனால், அவனுக்கு மட்டும் வந்த அதிர்ஷ்டமல்ல. நாட்டுக்கே வந்த அதிர்ஷ்டம்! நாட்டு மக்கள் செய்த நல்வினையினால் வந்த அதிர்ஷ்டம்! நீலக் கடலின் அலைமேல் சூரியன் மிதக்கிறானா என்ன? இல்லை, சூரியன் இல்லை. சின்னஞ்சிறு குழந்தை அது! பலகையிலே சேர்த்துப் பீதாம்பரத்தினால் கட்டப்பட்டிருக்கிறது. அக்குழந்தையின் முகத்திலே அவ்வளவு பிரகாசம்! அத்தனை தேஜஸ்! ஆனால், குழந்தைக்கு உயிர் இருக்கிறதா? ஒருவேளை...? ஆகா! இருக்கிறது. உயிர் இருக்கிறது! புயலுக்குப் பின் அமைதியடைந்த கடலில் இலேசாகக் கிளம்பி விழும் இளம் அலைகளின் நீர்த்துளிகள் குழந்தையின் முகத்தில் விழும் போது, அது 'களுக்' என்று சிரிக்கிறது!

படகோட்டி அடங்காத ஆர்வத்துடன் அந்தப் பலகையின் அருகில் படகைச் செலுத்துகிறான். குழந்தையைத் தாவி எடுத்துக் கட்டை அவிழ்த்து மார்போடு அணைத்து மகிழ்கிறான். அவனுடைய மார்பின் ரோமங்கள் குத்திய காரணத்தினால் குழந்தை அழுகிறது. படகோட்டி, படகுக்குள்ளே பார்க்கிறான். அங்கே கப்பலிலிருந்து இறக்கும் பண்டங்களைக் கட்டுவதற்காக அவன் அன்று காலையில் கொண்டு வந்து போட்ட தொண்டைக் கொடிகள் கிடக்கின்றன. அக்கொடிகளை இலைகளோடு ஒன்றுசேர்த்துக் குவித்துப் படுக்கையாக அமைக்கிறான். கொடிகளின் நுனியிலிருந்த இளந்தளிர்களைப் பிய்த்து எடுத்து மேலே தூவிப் பரப்புகிறான். அந்த இளந்தளிர்ப் படுக்கையின்மீது குழந்தையைக் கிடத்துகிறான். குழந்தை படகோட்டியைப் பார்த்துக் குறுநகை புரிகிறது! படகு கரையை நோக்கி விரைந்து செல்லுகிறது.

கரையை நெருங்கும்போதே படகோட்டி கூச்சலிட்டுக் குதூகலிப்பதைக் கண்டு, அந்தப் படகில் ஏதோ விசேஷம் இருக்கிறது என்று கரையிலே நின்றவர்கள் அறிந்துகொள்ளுகிறார்கள். படகு கரையோரத்தை அடைகிறது. கரையில் நின்ற ஜனங்கள் திரண்டு வந்து படகைச் சூழ்கிறார்கள்.

தீர்க்க தரிசனம் கூறிய மகானும் வருகிறார். வந்து, குழந்தையைப் பார்க்கிறார்! பார்த்துவிட்டு, "நான் கனவிலே கண்ட புதிய காஞ்சி மன்னன் இவன்தான்! இவனுடைய சந்ததியார் காஞ்சி சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஆயிரம் ஆண்டு அரசாளப் போகின்றனர்" என்று கூறுகிறார். ஜனங்கள் ஆரவாரிக்கிறார்கள்.

திரைகடல் அளித்த தெய்வக் குழந்தைக்கு அப்பெரியவர், 'இளந்திரையன்' என்று பெயர் இடுகிறார். "தொண்டைக்கொடியின்மீது கண் வளர்ந்தபடியால், தொண்டைமான் என்ற பெயரும் இவனுக்குப் பொருந்தும். இவனால் இனிக் காஞ்சி ராஜ்யத்துக்குத் தொண்டை மண்டலம் என்ற பெயர் வழங்கும்" என்னும் தீர்க்க தரிசனமும் அவர் அருள்வாக்கிலிருந்து வெளிவருகிறது.

வடமொழிப் புலவர் ஒருவர், இளந் தளிர்களின்மீது கிடக்கும் குழந்தையைப் பார்த்துவிட்டு, அதற்குப் 'பல்லவராயன்' என்று நாமகரணம் செய்கிறார்.

அதைத் தமிழ்ப் புலவர் ஒருவர் 'போத்தரையன்' என்று பெயர்த்துக் கூறுகிறார்.

கவிஞர்கள் வருகிறார்கள் கடல் தந்த குழந்தையைப்பற்றி அழகான கற்பனைகளுடன் கவிதைகள் புனைகிறார்கள். "இந்தத் திரைகடல் ஏன் இப்படி ஆர்ப்பரிக்கிறது, தெரியுமா? 'திரையனை நான் பயந்தேன்' என்ற பெருமிதத்தினாலேதான்!" என்று ஒரு கவிராயர் கூறியபோது, ஆர்கலியானது தன் அலைக்கைகள் ஆயிரத்தையும் கொட்டி ஆரவாரத்துடன் ஆமோதிக்கிறது.

பிற்காலத்தில் வந்த தமிழ்ப் புலவர்களுக்குப் பல்லவ குலத்தைக் கடல் தந்ததாகக் கூறி விட்டுவிட மனம் வரவில்லை. "கடல் தந்த குழந்தை உண்மையில் தமிழகத்தின் அநாதியான சோழ வம்சத்துக் குழந்தைதான்! சோழ குலத்து ராஜகுமாரன் ஒருவன், கடற் பிரயாணம் செய்வதற்காகச் சென்று மணி பல்லவம் என்னும் தீவையடைந்து, அந்நாட்டு அரசன் மகள் பீலிவளையைக் காதலித்து மணந்து கொண்டான். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அந்த அரசிளங்குமரன் தன் மனைவியோடும் குழந்தையோடும் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது கப்பலுக்கு விபத்து நேர்ந்தது. விபத்தில் தப்பிப் பிழைத்து வந்த குழந்தைதான் பல்லவ குலத்தைத் தோற்றுவித்த தொண்டைமான் இளந்திரையன்!" என்று கற்பனை செய்து கூறுகிறார்கள்.

வடமொழி புலவர்களோ, "பாண்டவர்களின் குருவாகிய துரோணருடைய புதல்வர் அசுவத்தாமாவின் வழிவந்தவர்கள் பல்லவர்கள்!" என்று கூறி, அதற்கு ஒரு கதை சிருஷ்டிக்கிறார்கள். (கடைசியாக, சமீப காலத்தில் இந்திய சரித்திர ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஐரோப்பியப் புலவர்கள், பல்லவர்களைத் தந்த பெருமையைத் தென்னிந்தியாவுக்கோ வட இந்தியாவுக்கோ தருவதற்கு விருப்பமில்லாதவர்களாய், இந்தியாவுக்கு வடமேற்கிலிருந்து வந்த அந்நியர்களாகிய சகர்தான் காஞ்சிபுரத்தைத் தேடி வந்து பல்லவர்கள் ஆனார்கள் என்று எழுதி, அதைப் புத்தகங்களிலும் அச்சுப் போட்டார்கள். நம் பழம் புலவர்களின் கதைகளையெல்லாம் கற்பனையென்று தள்ளிய நம்மவர்களோ, மேற்படி நவீன ஐரோப்பியப் புலவர்களின் வாக்கை வேதவாக்காக ஒப்புக்கொண்டு, 'பல்லவர்கள் அந்நியர்களே' என்று சத்தியம் செய்தார்கள். தமிழகத்துக்குப் பலவகையிலும் பெருமை தந்த காஞ்சிப் பல்லவர்களை அந்நியர்கள் என்று சொல்லுவதைப் போன்ற கட்டுக்கதை உலக சரித்திரத்தில் வேறு கிடையாது என்றே சொல்லலாம்.) பல்லவ குலத்தின் உற்பத்தியைப்பற்றிய மேற்கூறிய வரலாறுகளில் எவ்வளவு வரையில் உண்மை, எவ்வளவு தூரம் கற்பனை என்பதை இந்நாளில் நாம் நிச்சயித்துச் சொல்வதற்கில்லை. அந்த நாளில் அந்தக் குலத்தில் பிறந்தவர்களுக்குக் கூட அதன் உண்மை நன்றாகத் தெரிந்திருக்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயமாய்த் தெரிந்திருந்தது. அதாவது, பல்லவ குலத்தில் தோன்றியவர்களுக்கெல்லாம் கடற்பிரயாணத்தில் ஆசை அபரிமிதமாயிருந்தது. அந்த ஆசை அவர்களுடைய இரத்தத்தோடு ஒன்றிப் போயிருந்தது. கீழ்த்திசையில் கடல்களுக்கப்பால் இருந்த எத்தனையோ தீப தீபாந்தரங்களில், பல்லவர்களின் ஆதி பூர்வீக ரிஷபக் கொடியும் பிற்காலத்துச் சிங்கக் கொடியும் கம்பீரமாகப் பறந்தன.

பல்லவர் ஆட்சி நடந்த காலத்தில் தமிழகத்துக்கும் வெளிநாடுகளுக்கும் கடல் வாணிகம் அபரிமிதமாக நடந்து வந்தது. கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை இறக்கி ஏற்றிக் கொள்வதற்கும் கீழ்க் கடற்கரையோரமாகப் பல துறைமுகங்கள் ஏற்பட்டிருந்தன. அவற்றுள் முதன்மையானது மாமல்லபுரத்துத் துறைமுகமாகும். மாமல்லபுரத்துக்கு வடபுறத்தில் கடலானது பூமிக்குள் புகுந்து தென்திசையை நோக்கி வளைந்து சென்று மாமல்லபுரத்தை ஏறக்குறைய ஒரு தீவாகச் செய்திருந்தது. இவ்விதம் காஞ்சி நகருக்கு அருகில் ஏற்பட்டிருந்த இயற்கைத் துறைமுகமானது ஏககாலத்தில் நூற்றுக்கணக்கான கப்பல்கள் வந்து நிற்பதற்கும், பண்டங்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் வெகு வசதியாக அமைந்திருந்தது.

மகேந்திரர் காலத்துக்கு முன்னால் அத்துறைமுகத் தீவில் பெரும்பாலும் வர்த்தகர்களின் பண்டக சாலைகளும், சுங்கமண்டபங்களும் மட்டுமே இருந்தன. படகோட்டிகளும் மீன் வலைஞருந்தான் அங்கே அதிகமாக வாசம் செய்து வந்தார்கள். மகேந்திர பல்லவர் அங்கே பல அரசாங்க அதிகாரிகளையும் சிற்பிகளையும் குடியேற்றினார். அரச குடும்பத்தினர் தங்குவதற்கு அழகிய கடற்கரை அரண்மனையைக் கட்டி வைத்தார். அத்துறைமுகத்தில் சிற்ப வேலை தொடங்குவதற்குக் காரணமாயிருந்த தமது செல்வப் புதல்வரின் பட்டப் பெயரையும் அப்புதிய பட்டினத்துக்கு அளித்தார். முதன்முதலில் அத்துறைமுகத்தில் சிற்ப வேலைகள் தொடங்கவேண்டும் என்று தந்தையும் குமாரரும் சேர்ந்து எந்த இடத்தில் தீர்மானித்தார்களோ அதே இடத்தில், சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்த தினத்துக்கு மறுநாள் பிற்பகலில் சக்கரவர்த்தியும் மாமல்லரும் நின்று கொண்டிருந்தார்கள்.

கற்கோயில்கள்

கடல்மல்லைத் தீவின் தென்பகுதியில் விஸ்தாரமான வெட்ட வெளிப் பிரதேசத்தில் வரிசையாக ஐந்து சிறு குன்றுகள் நின்றன. அவற்றில் மூன்று குன்றுகளில் நூற்றுக்கணக்கான சிற்பிகள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குன்றையும் குடைந்து கோயில் வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோயிலில் முன் மண்டபத்தைத் தூண்கள் வேலையாகிக் கொண்டிருந்தன. இன்னொரு கோயிலில் மேல் விமான வேலை நடந்து கொண்டிருந்தது. மூன்றாவது குன்றை அப்போதுதான் குடைய ஆரம்பித்திருந்தார்கள். சிற்பிகளும் பணியாட்களும் தங்குவதற்கான சிறு கொட்டகைகள் நெடுகிலும் காணப்பட்டன.

ஆயனரின் அரணிய வீட்டைச் சுற்றி நாம் பார்த்தது போன்ற நெடிதுயர்ந்த மரங்களோ, அடர்ந்த செடி கொடிகளோ அந்தப் பிரதேசத்தில் காணப்படவில்லை. வடக்கே வெகுதூரம் மணற்பாங்காயிருந்தது. அதற்கப்பால் கடல் அலைகள் வெண்ணுரையுடன் அவ்வப்போது மேலெழும் காட்சி தோன்றியது. தெற்கிலும் மேற்கிலும் சிறுசிறு பாறைகளும் அவற்றை விடக் குட்டையான புதர்களும் வெகு தூரத்துக்குக் காணப்பட்டன. ஆனால், வடக்கேயும் வடமேற்கேயும் பார்த்தால் முற்றும் மாறான காட்சி தென்பட்டது. வானளாவிய பெரிய கட்டிடங்களும் அவற்றின் இடையிடையே நெடிய தென்னை மரங்களும் காட்சியளித்தன. இன்னும் அப்பால் நூற்றுக்கணக்கான கப்பல்களின் பாய்மரத்து உச்சிகளிலே வரிசை வரிசையாக ரிஷபக் கொடிகள் காற்றிலே அசைந்தாடிக் கொண்டிருந்தன.

சிற்ப வேலை நடந்து கொண்டிருந்த குன்றுகளுக்கு மத்தியில் ஒரு கல்யானை கம்பீரமாக நின்றது. அதன் பின்னால் இன்னும் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட பல்லவ சாம்ராஜ்யத்தின் பட்டத்து யானை நின்றது. யானை மீது வந்த சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் கீழே இறங்கிக் கல்யானையின் அருகில் நின்றார்கள். அவர்கள் மீது வெயில்படாமல் ஒரு விசாலமான வெண்குடையைப் பணியாட்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதே இடத்தில் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் மகேந்திர சக்கரவர்த்தியும் அவருடைய குமாரரும் வந்து இதே விதமாக நின்றதுண்டு. ஆனால், அங்கு நின்ற குன்றுகளும் பாறைகளும் அப்போது மொட்டைக் குன்றுகளாகவும், மொட்டைப் பாறைகளாகவும் இருந்தன.

"அப்பா! அந்தப் பாறையின் நிழலைப் பாருங்கள்! அது யானையைப் போல் இல்லையா?" என்றான் பல்லவ குலந்தழைக்க வந்த நரசிம்மவர்மன்.

அவன் சுட்டிக் காட்டிய நிழலைச் சக்கரவர்த்தி பார்த்தார். "ஆஹா!" என்று அவர் வாயிலிருந்து புறப்பட்ட வியப்பொலியில் விவரிக்க முடியாத பல உணர்ச்சிகள் தொனித்தன.

சற்றுநேரம் மகேந்திரர் சிந்தனையில் ஆழ்ந்து வெளி உலகப் பிரக்ஞையே இல்லாதவராய் நின்றார்.

பிறகு நரசிம்மனைத் தழுவிக் கொண்டு, "குழந்தாய்! எப்பேர்ப்பட்ட அதிசயமான உண்மையை நீ கண்டுபிடித்துக் கூறினாய்! நீ கூறிய வார்த்தையின் மகிமை முழுவதும் உனக்கே தெரிந்திராது!" என்றார்.

பன்னிரண்டு பிராயத்துச் சிறுவனான நரசிம்மன் மேலும் உற்சாகத்துடன், "அப்பா! அதோ, அந்தக் குன்றின் நிழலைப் பாருங்கள்! கோயில் மாதிரி இல்லையா?" என்றான்.

"ஆமாம், நரசிம்மா! ஆமாம்! அந்தக் குன்றின் நிழல் கோயில் மாதிரிதான் இருக்கிறது. அதை கோயிலாகவே செய்து விடுவோம். இந்த ஐந்து குன்றுகளையும் ஐந்து கோயில்களாக்குவோம். இன்னும் இங்குள்ள சிறு பாறைகளை யானையாகவும் சிங்கமாகவும் நந்தியாகவும் ஆக்குவோம். இந்தத் துறைமுகத்தைச் சொப்பன லோகமாக்குவோம். ஆயிரம் ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகு இந்தத் துறைமுகத்துக்கு வருகிறவர்கள் எல்லாரும் பார்த்துப் பிரமிக்கும்படியாகச் செய்வோம்!" என்றார்.

சீக்கிரத்திலேயே அந்தப் பிரதேசத்துக்குச் சிற்பிகள் பலர் சிற்றுளிகளுடன் வந்து சேர்ந்தார்கள். குன்றுகளிலும் பாறைகளிலும் வேலை செய்யத் தொடங்கினார்கள். நேற்று வரை அமைதி குடிகொண்டிருந்த இடத்தில் நூற்றுக்கணக்கான சிற்றுளிகளின் சப்தம் 'கல்கல்' என்று கேட்க ஆரம்பித்தது.

புதர்களில் வாழ்ந்திருந்த சிறு முயல்கள் திடீரென்று எழுந்த 'கல்கல்' சப்தத்தைக் கேட்டு வெளியே வந்தன. காதுகளைத் தூக்கிக் கொண்டு ஒரு நிமிஷம் வியப்புடன் கவனித்தன. பின்னர் அந்த இடத்திலிருந்து ஓட்டம் பிடித்தன.

அன்று தொடங்கிய சிற்பப்பணி இன்றைக்கும் அங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. சக்கரவர்த்தியும் மாமல்லரும் அன்றைக்கு நின்ற அதே இடத்தில் இப்போது யானையாகவும் சிங்கமாகவும் ரிஷபமாகவும் உருவெடுத்த பாறைகளுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார்கள். "நரசிம்மா! இந்த யுத்தம் இப்போது வந்ததில் எனக்குப் பலவகையில் சந்தோஷந்தான். ஆனால், இந்தக் கற்கோயில்களின் வேலை ஒருவேளை தடைப்பட்டுவிடுமோ, என் காலத்தில் இந்தத் திருப்பணி பூர்த்தியாகாமற் போகுமோ என்று மட்டும் கவலையாக இருக்கிறது. வடக்கே கன்யாகுப்ஜத்தில் ஹர்ஷவர்த்தனர் வருஷந்தோறும் நடத்தும் உற்சவத்தைப் பற்றித் தெரியுமல்லவா நரசிம்மா?"

"தெரியும் அப்பா! சிவபெருமானுக்கும், சூரியநாராயண மூர்த்திக்கும், புத்தர் பெருமானுக்கும், அவர் மூன்று கோயில்கள் எடுத்திருக்கிறார். அந்த மூன்று கோயில்களிலும் வருஷந்தோறும் உற்சவம் நடத்துகிறார். மூன்று மதத்தைச் சேர்ந்த பிரஜைகளும் வந்து ஒரே சமயத்தில் உற்சவம் கொண்டாடுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்."

"மாமல்லா! ஹர்ஷவர்த்தனர் இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தைக் காட்டிலும் எவ்வளவோ பெரிய சாம்ராஜ்யத்தை ஆளுகிறார். அவருடைய செல்வமோ நம்முடையதைவிட பன்மடங்கு அதிகமானது. அவருடைய புகழ் இன்றைக்கு உலகமெல்லாம் பரவியிருக்கிறது. ஆனால், என்னுடைய உத்தேசம் மட்டும் நிறைவேறுமானால், ஹர்ஷர் மட்டுமல்ல, இந்தப் பாரதவர்ஷத்தில் இதுவரையில் எந்த அரசரும் சக்கரவர்த்தியும் அடையாத கீர்த்தியைப் பல்லவ குலம் அடையும். ஹர்ஷர் நிர்மாணித்திருக்கும் கோயில்கள் செங்கல்லினாலும் மரத்தினாலும் ஆனவை. நூறு வருஷத்தில் அவை சிதைந்து மறைந்துபோய்விடும். ஆனால் இந்தக் கற்கோயில்களுக்கு அழிவென்பதே கிடையாதல்லவா...?"

"இக்கோயில்களில் எந்த தெய்வங்களை எழுந்தருளச் செய்யப்போகிறீர்கள் அப்பா? சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்குத்தான் இந்த ஐந்து கோயில்களும் அல்லவா?"

"இல்லை நரசிம்மா! ஹர்ஷவர்த்தனரைக் காட்டிலும் அதிகமாக ஒரு காரியம் செய்யப்போகிறேன். இந்தத் தமிழகத்தில் பரவியுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் நாலு கோயில்களை அர்ப்பணம் செய்யப்போகிறேன். ஒரு கோயிலில் சிவபெருமானும் பார்வதி தேவியும் வீற்றிருப்பார்கள். இரண்டாவது கோயிலில் திருமாலும் திருமகளும் குடிகொள்ளுவார்கள். மூன்றாவது கோயிலைப் புத்தர் பெருமானின் பெரிய விக்கிரகம் அலங்கரிக்கும். நாலாவது கோயிலில் சமண சமயத்தை ஸ்தாபித்த வர்த்தமான மகாவீரர் எழுந்தருளுவார்...!"

"ஹா!" என்று பெருவியப்புடனும் பெருமிதத்துடனும் மாமல்லர் கூறினார்.

"ஆம்; நரசிம்மா! உண்மையில் நான் சமண சமயத்திலிருந்து விலகிச் சைவத்தைத் தழுவியதே நமது ராஜ்யத்தில் இத்தகைய சமய சமரசத்தை, நிலைநாட்டுவதற்காகத்தான். சைவ சமயமானது மற்றச் சமயங்களையும் சம உணர்வுடன் கருதிப் போற்ற இடந்தருகிறது. மற்றச் சமயங்களோ அவ்விதம் இடம் கொடுப்பதில்லை. இதை முன்னிட்டே சைவத்தை மேற்கொண்டேன். நமது சாம்ராஜ்யத்திலுள்ள நாலு பெரிய சமயங்களுக்கும் சமமான கௌரவம் கொடுத்துப் போற்ற எண்ணினேன். இதையெல்லாம், வெளியிடுவதற்கு என்மேல் புத்தர்களும் சமணர்களும் கொண்டுள்ள கோபம் தணியும் காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன். அதற்குள்ளே சமண முனிவர்கள் அவசரப்பட்டு எல்லாக் காரியத்தையும் கெடுத்து விட்டார்கள்.."

"சமண முனிவர்கள் கெடுத்துவிட்டார்களா!"

"ஆமாம் அவர்களால் வந்ததுதான் இந்த யுத்தம். சமண காஞ்சியிலிருந்து நாற்புறங்களுக்கும் புறப்பட்டுச் சென்ற சமண முனிவர்கள் சும்மா இருந்து விடவில்லை. நம் நெடுநாளைய சிநேகிதர்களைக்கூட நம் விரோதிகளாக்கி விட்டார்கள். இந்தக் கங்கை பாடித் துர்விநீதனுடைய தந்தைக்கு முடிசூட்டியது யார் தெரியுமா? உன் பாட்டனார் சிம்மவிஷ்ணு மகாராஜாதான். அந்தத் துர்விநீதன் இப்போது தமது பரம்பரை விரோதியான சளுக்க மன்னனுடன் சேர்ந்து கொண்டிருக்கிறான். புலிகேசியின் படைவீட்டில் ஜைன மகாகவி ரவிகீர்த்தியும், துர்விநீதனுடைய குரு பூஜ்யபாதரும் இருக்கிறார்களாம். சைனியத்துடன் சேர்ந்து அவர்களும் வந்து கொண்டிருக்கிறார்களாம். உலகப் பற்றற்ற முனிவர்கள் அதிலும் கொல்லாமை விரதங்கொண்ட சமண குருக்கள், போர்க்களத்துக்கு வருவது என்றால், ஆகா! அவர்களுக்கு என்மேல் எவ்வளவு துவேஷம் ஏற்பட்டிருக்க வேண்டும்?"

"அதைப்பற்றி என்ன கவலை! அப்பா? சமண முனிவர்கள், புத்த பிக்ஷுக்கள் எல்லோரும் நம் விரோதிகளுடன் சேரட்டும். திரிநேத்திரதாரியான சிவபெருமான் அருளாலும், சக்கராயுதத்தை ஏந்திய திருமாலின் கிருபையினாலும் நம் வெற்றி கொள்ளுவோம்."

"வெற்றி தோல்வியைப்பற்றி நான் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. என்னுடைய நோக்கத்துக்கு இடையூறு நேர்ந்துவிட்டதே என்றுதான் வருத்தப்படுகிறேன்" என்று சக்கரவர்த்தி கூறியபோது, அவருடைய குரலில் துயரம் தொனித்தது.

மாமல்லர் சற்று மௌனமாயிருந்துவிட்டு, "ஐந்தாவது கோயில் எந்தத் தெய்வத்துக்கு அர்ப்பணம் செய்ய எண்ணியிருந்தீர்கள், அப்பா?" என்று கேட்டார்.

"மேலை நாடுகளில் சிலகாலமாகப் புதிதாக ஒரு மதம் ஸ்தாபனமாகியிருக்கிறதாம். அதை ஸ்தாபித்த அவதார புருஷரின் பெயர் ஏசுகிறிஸ்து என்று சொல்கிறார்கள். அந்தப் புதிய மதத்தைப்பற்றிய விவரங்கள் இன்னும் எனக்குத் தெரியவில்லை. தெரிந்தவுடனே அந்தப் புதிய மதத்தின் தெய்வம் எதுவோ அதை அந்த ஐந்தாவது கோயிலில் எழுந்தருளச் செய்ய எண்ணியிருந்தேன். ஆனால், அதெல்லாம் பகற்கனவாகப் போய்விடும் போலிருக்கிறதே?"

மகேந்திரரின் யோசனைகளைக் கேட்டுப் பிரமித்த மாமல்லர், "ஏன் பகற்கனவாகப் போகவேண்டும்? யுத்தத்தினால் இந்தச் சிற்பப்பணி ஏன் தடைபடவேண்டும்?" என்று கேட்டார்.

"தடைபடாமலிருக்க வேண்டுமென்பதுதான் என் ஆசை. யுத்தம் முடிவதற்குள்ளே இந்த ஐந்து கோயில்களும் பூர்த்தியாக வேண்டுமென்று விரும்புகிறேன். அதற்காகவே ஆயனரை இன்றைக்கு இங்கே வரச் சொல்லியிருக்கிறேன். அவர் நடுக்காட்டில் போய் உட்கார்ந்திருப்பதால் வேலை நிதானமாக நடக்கிறது. அவரை இங்கேயே தங்கி வேலையைத் துரிதமாக முடிக்கும்படிச் சொல்லப்போகிறேன்...அதோ, ஆயனரும் வந்துவிட்டார்!"..

நரசிம்மர் ஆவலுடன் திரும்பிப் பார்த்தார். அவருடைய ஆவல் பூர்த்தியாயிற்று. சற்றுத்தூரத்தில் வந்து கொண்டிருந்த சிவிகையில் ஒரு பக்கத்தில் ஆயனர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். மற்றொரு பக்கம், பட்டப் பகலில் பூரணச் சந்திரன் பிரகாசிப்பதுபோல் ஒரு காட்சி தென்பட்டது. அந்தப் பூரண சந்திரன் சிவகாமியின் வதன சந்திரன்தான் என்று சொல்லவும் வேண்டுமோ?

ஒரு குதிரை

பல்லவ சக்கரவர்த்தியையும் அவருடைய திருக்குமாரரையும் பார்த்தவுடனே, சற்றுத் தூரத்திலேயே சிவிகை தரையில் இறக்கப்பட்டது.

ஆயனரும் சிவகாமியும் சிவிகையிலிருந்து இறங்கிப் பயபக்தியுடன் நடந்து வந்தார்கள்.

"ஆயனரே! வாருங்கள்! சிவகாமியையும் அழைத்து வந்தீர்களா? மிகவும் நல்லது. பிரயாணம் சௌக்கியமாயிருந்ததா?" என்று சக்கரவர்த்தி கேட்டார்.

"பல்லவேந்திரா! தங்களுடைய குடை நிழலின் கீழ்ப் பிரயாணம் சௌக்கியமாயிருப்பதற்குக் கேட்பானேன்?" என்று கூறிய வண்ணம் ஆயனார் அருகில் வந்து வணங்கினார்.

அவருக்கு பின்னால் அடக்கத்துடன் வந்த சிவகாமியும் சக்கரவர்த்தியை நமஸ்கரித்தாள். அவளுடைய உள்ளத்தில் சக்கரவர்த்தியிடம் பக்தியும் மரியாதையும் நிறைந்திருந்தன. அதே சமயத்தில் இன்னதென்று தெரியாத ஒருவகைப் பயமும் குடிகொண்டிருந்தது.

"சிவகாமி! உனக்கு மங்களம் உண்டாகட்டும்! உன்னிடம் அடைக்கலம் புகுந்திருக்கும் பரத சாஸ்திரக் கலை மேலும் மேலும் வளர்ந்து பூரணம் அடையட்டும்!" என்று மகேந்திர பல்லவர் ஆசி கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்.

"ஆயனரே! இன்றைக்கு உங்கள் பிரயாணம் சௌகரியமாயிருந்தது என்று சொன்னீரல்லவா? இனி நெடுகிலும் அப்படியே இருக்கும் என்று சொல்வதற்கில்லை. இந்த யுத்தம் முடியும் வரையில் சாலையிலே சைன்யங்களின் நடமாட்டம் அதிகமாயிருக்கும். ஆகையால் இன்னும் கொஞ்சகாலத்துக்கு நீர் இங்கேயே வந்து தங்கியிருப்பது நல்லது.."

ஆயனருக்கு தூக்கிவாரிப் போட்டது. அரண்ய வீட்டில் அரை குறையாகச் செய்யப்பட்டுக்கிடந்த நடன சிற்ப உருவங்கள் எல்லாம் அவருடைய கண் முன்னால் நின்றன.

"பல்லவேந்திரா!.." என்று ஏதோ சொல்லத் தொடங்கினார். மகேந்திரர் தமது குரலைச் சிறிது கடுமைப் படுத்திக் கொண்டு, "மறுவார்த்தை வேண்டாம் நீரும் உம் புதல்வியும் நாளை முதல் இங்கே வந்துவிட வேண்டியது இது நமது ஆக்ஞை!" என்றார்.

ஆயனர் நடுங்கியவராய், "பல்லவேந்திரா! தங்கள் ஆக்ஞைக்கு மறு வார்த்தையும் உண்டா? அவ்விதமே செய்கிறேன்" என்றார்.

"ஆயனரே! இந்தக் கோயில்களை எவ்வளவு சீக்கிரமாக வேலை செய்யலாமோ அவ்வளவு சீக்கிரமாக முடிக்க வேண்டும். கோயில்கள் பூர்த்தியாகும் வரையில் நீர் வேறு எந்த வேலையையும் கவனிக்க வேண்டியதில்லை. இந்த வேலைக்காக நீர் எப்போது எவ்வளவு திரவியம் கேட்டாலும் கொடுக்கும்படியாகத் தனாதிகாரிக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். இன்னும் உமக்கு வேண்டிய ஆட்களையும் வேறு வசதிகளையும் உடனுக்குடன் அனுப்பும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். எந்தக் காரணத்தினாலாவது காரியம் குந்தகப்படுவதாயிருந்தால் நீர் குமார சக்கரவர்த்திக்குச் செய்தி அனுப்பி வேண்டியதைத் தெரியப்படுத்தலாம்" என்று சக்கரவர்த்தி கூறியதும், அருகில் நின்ற மாமல்லரை ஆயனர் நோக்கினார்.

"ஆம், ஆயனரே! இனிச் சிலகாலத்துக்கு உமக்கு வேண்டியதையெல்லாம் மாமல்லரிடந்தான் தெரியப்படுத்த வேண்டும். நாளைய தினம் பல்லவ சைனியத்துடன் நான் போர்க்களத்துக்குப் புறப்பட்டு செல்கிறேன். நான் திரும்பி வரும்வரையில் பல்லவ சாம்ராஜ்யத்தை நிர்வகிக்கும் சகல பொறுப்புக்களையும் மந்திரி மண்டலத்தார் மாமல்லருக்கு அளித்திருக்கிறார்கள். நாளை முதல் மாமல்லர்தான் சக்கரவர்த்தி" என்றார் மகேந்திர பல்லவர்.

சக்கரவர்த்தி ஆயனரிடம் சற்றுக் கடுமையான குரலில் கூறி வந்த மொழிகளைக் கேட்டுக் கவலையும் பயமும் கொண்டிருந்த சிவகாமி அவருடைய கடைசி வார்த்தைகளைக் கேட்டதும் அளவில்லாத குதூகலம் அடைந்தாள். அவளுடைய மனத்தில் பலவித இன்பகரமான எண்ணங்கள் பொங்கித் ததும்பின. அவற்றுள் முக்கியமானது மாமல்லர் இப்போது போர்க்களத்துக்குப் போகவில்லை என்பதுதான். அதனோடு, சக்கரவர்த்தியும் போய் விடுகிறார். மாமல்லர் சக்கரவர்த்திக்குரிய சர்வாதிகாரங்களுடன் இருக்கப் போகிறார். இனி அவரும் தானும் அடிக்கடி சந்திப்பதற்குத் தடையொன்றும் இராது! தாமரைக் குளக்கரையில் மாமல்லரைச் சந்தித்து அளவளாவுவதைப் பற்றிய பகற் கனவுகள் சிவகாமியின் உள்ளத்தில் எழுந்தன, முகத்தில் அவளை அறியாமல் முறுவல் தோன்றியது. ஆசை ததும்பிய கண்களின் ஓரத்தினால் மாமல்லரை அவள் பார்த்தாள். ஆனால், ஐயோ! இதென்ன? அவருடைய கருணை ததும்பும் முகத்தில் இப்போது ஏன் இந்தக் கடுகடுப்பு? தன்னை ஏன் அவர் திரும்பிப் பார்க்கவில்லை? ஒருவேளை தான் அவ்விடம் வந்ததே அவருக்குப் பிடிக்கவில்லையோ?

பின்னரும் இரண்டு மூன்று தடவை சிவகாமி மாமல்லரின் முகத்தை ஆவலுடன் நோக்கினாள். அவர் அவள் பக்கம் பார்க்கவே இல்லை. நேற்றுத் தாமரைக் குளத்தில் அகன்ற கண்களால் விழுங்கி விடுபவர் போல் தன்னைப் பார்த்தவர் பின்னர் வீட்டிலே சக்கரவர்த்தியும் ஆயனரும் பேசிக் கொண்டிருந்தபோது அடிக்கடி கண்களினாலே தன்னுடன் இரகசியம் பேசியவர், இப்போது தன்னைப் பார்க்கவும் விரும்பாதவர்போல் இருப்பதன் காரணம் என்ன? சிவகாமியின் கண்களில் கண்ணீர் ததும்பும் போலிருந்தது. அவள் விரைவாக அங்கிருந்து அப்பால் சென்று ஒரு பாறையின் பின்னால் ஒதுங்கி நின்றாள்.

ஆனால், நரசிம்மருடைய மனநிலை உண்மையில் எவ்வாறு இருந்தது? ஆம்; அவர் கோபம் கொண்டுதானிருந்தார், ஆனால் யார்மீது என்பதை நாம் அறியோம். அது நரசிம்மருக்கே தெரிந்திராதபோது நமக்கு எப்படித் தெரிந்திருக்க முடியும்?

மாமல்லருடைய உள்ளத்திலே சிவகாமியிடம் பிரேமை பொங்கிக் கொண்டிருந்தது. சிவிகையிலே அவளுடைய திவ்விய வதனத்தைப் பார்த்ததும் அவருக்கு எல்லையில்லாத குதூகலம் ஏற்பட்டது. உடனே ஓடிச்சென்று அவளை வரவேற்க வேண்டுமென்றும், கையைப் பிடித்துச் சிவிகையிலிருந்து இறக்கி விடவேண்டுமென்றும் ஆவல் பொங்கிற்று. அதெல்லாம் முடியாமற்போகவே அவரது ஆசை கோபமாக மாறியது. அந்தக் கோபமானது எல்லாவற்றையும் எல்லாரையும் தழுவி நின்றது. பெரிய சாம்ராஜ்யத்துக்கு உரிமையுடன் பிறந்த தமது பிறப்பின் மேலேயே கோபங்கொண்டார். "எதற்காகச் சக்கரவர்த்தியின் அரண்மனையிலே நாம் பிறந்திருக்கவேண்டும்? ஏழைச் சிற்பியின் மகனாக ஏன் பிறந்திருக்கக் கூடாது?" என்று எண்ணினார்.

தாம் போர்க்களத்துக்குப் போகப்போவதில்லை என்று தந்தை சொன்னதும் சிவகாமியின் முகத்தில் பூத்த புன்முறுவல் அவருடைய கோபத்துக்குத் தூபம் போட்டது போலாயிற்று. போர்க்களத்துக்குப் போகாமல் அரண்மனையில் உட்கார்ந்திருப்பது அவமானம் என்பதை அவள் உணரவில்லை! போர்க்களத்துக்குப் போகாவிட்டாலும் அவளை அடிக்கடி பார்க்கவாவது முடியப் போகிறதா? அதுவும் இல்லை. காஞ்சிக் கோட்டையை விட்டு வெளிக் கிளம்பக் கூடாது என்று தந்தை வாக்குறுதி வாங்கிக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் அறியாமல் சிவகாமி புன்னகை பூத்து மகிழ்கிறாள்! இம்மாதிரி எண்ணங்களினால் நரசிம்மருடைய கோபம் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு வந்தது.

மனோலோகத்தில் இந்த நாடகம் நடந்துகொண்டிருக்கையில், சக்கரவர்த்தியும் ஆயனரும் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பேசும்போதே தம்முடைய முகத்தையும் மாமல்லருடைய முகத்தையும் ஆயனர் மாறி மாறி ஏறிட்டுப் பார்ப்பதைக் கவனித்த சக்கரவர்த்தி, "ஆயனரே! ஏதாவது கோரிக்கை உண்டா? என்னிடமோ மாமல்லரிடமோ தெரியப்படுத்த வேண்டியது ஏதாவது இருக்கிறதா?" என்று வினவினார்.

ஆயனர் தயங்கித் தடுமாறி, "ஆம், பல்லவேந்திரா! எனக்கு ஒரு குதிரை வேண்டும்!" என்றார்.

"என்ன கேட்டீர்?"

"நல்ல குதிரை ஒன்று வேண்டும்!"

"குதிரையா? குதிரை வேண்டும் என்றா கேட்டீர்? ஆயனரே! அதைக்காட்டிலும் என்னுடைய உயிரை நீர் கேட்டிருக்கலாம். இந்தப் பல்லவ சாம்ராஜ்யத்தையே கேட்டிருக்கலாம்! நன்றாய்க் குதிரை கேட்டீர் ஆயனரே! தென்னாடு என்றும் கண்டிராத மகா பெரிய யுத்தம் வந்திருக்கிறது என்று உமக்குத் தெரியாதா! காஞ்சியிலிருந்து தினந்தோறும் எத்தனை தூதர்கள் நாலா பக்கங்களுக்கும் போக வேண்டியிருக்கும் என்று தெரியாதா? குதிரையைத் தவிர வேறு ஏதாவது கேளும்!" என்று சக்கரவர்த்தி சரமாரியாகப் பொழிந்து நிறுத்தினார்.

மகேந்திர பல்லவர் இவ்வளவு படபடப்புடன் பேசிக் கேட்டு ஆயனர் அறியாதவராதலால் மிரண்டு ஸ்தம்பித்து நின்றார்.

"ஓஹோ! உமக்கு வேறு ஒன்றும் வேண்டாம். குதிரை தான் வேண்டும் போலிருக்கிறது. பல்லவ சாம்ராஜ்யத்தின் மகா சிற்பி ஒரு குதிரையை யாசித்தார், அதை மகேந்திர பல்லவன் கொடுக்கவில்லை என்ற பழிச்சொல் எனக்கு வேண்டாம். குதிரை தருகிறேன். ஆனால், எதற்காக, என்றுமட்டும் சொல்லும். நீரும் சிவகாமியும் பிரயாணம் செய்வதற்கு வேண்டிய சிவிகைகளும் சிவிகை தூக்கும் ஆட்களும் இருக்கிறார்கள் அல்லவா? பின் குதிரை எதற்கு" என்று சக்கரவர்த்தி கேட்டு நிறுத்தினார்.

ஆயனர் சற்றுத் தைரியமடைந்து, "பல்லவேந்திரா! மிகவும் முக்கியமான ஒரு காரியத்தை முன்னிட்டுத்தான் கேட்டேன். ஆனால், அதனாலே யுத்த காரியங்கள் தடைப்படுவதாயிருந்தால்.." என்று நிறுத்தினார்.

"அந்த முக்கியமான காரியம் என்ன? எனக்குத் தெரியலாமல்லவா? அல்லது ஏதேனும் இரகசியமா, ஆயனரே?"

"பிரபு! இரகசியந்தான்! ஆனால், தாங்கள் அறியக்கூடாத இரகசியம் அல்ல. அஜந்தா வர்ணச் சித்திரங்களின் இரகசியத்தை அறிய வேண்டுமென்று எத்தனையோ தடவை நாம் பேசிக் கொண்டதில்லையா? அந்த வர்ண இரகசியத்தை அறிந்தவர் ஒருவர் நாகார்ஜுன பர்வதத்தில் உள்ள புத்த சங்கிராமத்தில் தற்சமயம் இருக்கிறார்..."

"இதை முன்னமே ஏன் சொல்லவில்லை, ஆயனரே? அவ்வளவு முக்கியமான காரியமென்று தெரிந்திருந்தால், ஆட்சேபமே சொல்லியிருக்க மாட்டேனே? அஜந்தாவின் அற்புதச் சித்திரங்களை நேரில் போய்ப் பார்த்து வரவேண்டுமென்ற ஆசையினால் வாதாபி புலிகேசியுடன் சிநேகம் செய்து கொள்ள வேண்டுமென்றுகூட ஒரு காலத்தில் எண்ணியிருந்தேன். அதெல்லாம் பகற்கனவாய்ப் போய்விட்டது. போகட்டும், குதிரை அவசியம் தருகிறேன், ஆயனரே! குதிரை மட்டும் போதுமா, இன்னும் ஏதாவது வேண்டுமா?"

"பல்லவேந்திரரின் ரிஷப இலச்சினை பதித்த பிரயாணச் சீட்டும் வேண்டும், இது யுத்த காலமல்லவா?"

"அதுவும் தருகிறேன் இவ்வளவு முக்கியமான காரியத்துக்கு யாரை அனுப்புவதாக உத்தேசம், ஆயனரே, ஒருவேளை நீரே போவதாக உத்தேசமா?"

"எனக்குக் குதிரை ஏறவே தெரியாது, பிரபு! என்னுடைய சீடன் ஒருவனை அனுப்புகிறேன்."

"பகைவர் படைகள் வரும் வழியிலே அவன் போக வேண்டியிருக்குமே? கையில் நல்ல ஆயுதம் எடுத்துப் போக வேண்டும். இதோ இந்த வேலை அவனிடம் கொடுத்து அனுப்புங்கள்!" என்று கூறிச் சக்கரவத்தி, நரசிம்மரிடமிருந்து தாம் வாங்கி வைத்திருந்த வேலை நீட்டினார்.

ஆயனர் சற்றுத் தயங்கி நிற்கவே, "ஏன் தயக்கம்? இந்த வேல் நீர் அனுப்பப் போகும் வாலிபனுடைய வேல்தான்! மதயானையின் கோபத்திலிருந்து உம்மையும் சிவகாமியையும் பாதுகாத்த ஆயுதந்தான். பரஞ்சோதி இதை வாங்கிக்கொள்ள ஆட்சேபிக்க மாட்டான்" என்றார் சக்கரவர்த்தி.

இதைக் கேட்ட ஆயனர் மட்டுமல்ல நரசிம்மரும் சிவகாமியும்கூட ஆச்சரியக்கடலில் மூழ்கினார்கள்.

ஆயனர் தட்டுத் தடுமாறி, "பல்லவேந்திரா! தங்களுக்கு எப்படித் தெரிந்தது?" என்றார்.

"புத்த பகவான் என் கனவிலே வந்து சொன்னார்! அன்று உம் வீட்டில் தம்முடைய சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவர்களைப் பற்றியும் புத்தர் எனக்குக் கூறினார். ஆயனரே! பல்லவ சக்கரவர்த்தியின் கண்களுக்கும் காதுகளுக்கும் எட்டாமல் பல்லவ சாம்ராஜ்யத்தில் எதுவும் நடக்க முடியாது என்று உமக்குத் தெரியாதா?"

உடனே ஆயனர், கைகூப்பி வணங்கி, "பல்லவேந்திரா! நான் ஏதேனும் தவறு செய்திருந்தால் மன்னிக்க வேண்டும். சித்திரக் கலையில் உள்ள ஆசையினால் இந்தக் காரியத்தில் இறங்கினேன்" என்று தொண்டையடைக்கக் கூறினார்.

"சிற்பியாரே! அஜந்தா இரகசியத்தை அறிவதில் உமக்கு எவ்வளவு ஆசையோ அவ்வளவு எனக்கும் உண்டு. திவ்வியமாய்ப் பரஞ்சோதியை அனுப்பி வையும். ஆனால், இதெல்லாம் எனக்குத் தெரிந்ததாக அந்தப் புத்த பிக்ஷுவிடம் மட்டும் சொல்ல வேண்டாம். ஏனோ தெரியவில்லை, பௌத்தர்களுக்கு என் பேரில் இல்லாத சந்தேகங்கள் எல்லாம் தோன்றுகின்றன. புத்த பகவானிடம் எனக்குள்ள பக்தியை அவர்கள் அறியவில்லை. ஆயனரே! குன்றைக் குடைந்து அமைக்கும் இந்த ஐந்து கோயில்களில் ஒன்றில் புத்த பகவானுடைய பிரம்மாண்ட சிலையொன்று செய்து வைக்கப் போகிறேன். அதைப்பற்றித்தான் நீர் வரும் போது மாமல்லரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்!" என்றார் சக்கரவர்த்தி.

இவ்விதம் இங்கு ரஸமான சம்பாஷணை நடந்து கொண்டிருந்த போது, பாறை ஓரத்தில் சற்று மறைவாக நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் உள்ளத்தில் பலவிதமான எண்ணங்கள் அலையெறிந்து எழுந்தன.

"இந்தச் சக்கரவர்த்திதான் எவ்வளவு சதுரராயிருக்கிறார்! புத்த பிக்ஷுவைப்பற்றி மாமல்லரிடம் நாம் எச்சரிக்கை செய்ய வேணடுமென்றிருக்க, இவருக்கு ஏற்கெனவே எல்லாம் தெரிந்திருக்கிறதே! இவரிடம் எதையும் மறைத்து வைக்க முடியாது போலிருக்கிறதே! ஒருவேளை நம்முடைய இரகசியத்தையும் இவர் அறிந்திருப்பாரோ? அதனால் தான் ஒருவேளை குமார சக்கரவர்த்தி நம்மிடம் இவ்வளவு பாராமுகமாக இருக்கிறாரோ? நாம் ஏதேனும் தவறு செய்து விட்டோ மோ?.."

இவ்விதம் எண்ணாததெல்லாம் எண்ணி அவள் உள்ளம் ஏங்கிற்று. விரைவிலே குமார சக்கரவர்த்தியைத் தனிமையில் பார்த்து அவருடைய கோபத்துக்குக் காரணம் தெரிந்து கொண்டாலன்றி, அவளுக்கு மனச்சாந்தி ஏற்படாதென்று தோன்றியது.

தற்செயலாகச் சிவகாமியின் பார்வை கீழே தரையில் கிடந்த ஒரு காவிக் கட்டியின் மேல் விழுந்தது. சட்டென்று ஒரு யோசனை தோன்றிற்று. அந்தக் காவிக் கட்டியைக் குனிந்து எடுத்துக் கொண்டு பாறையில் சித்திரம் வரையலானாள்.

குளத்தின் தண்ணீருக்கு அடையாளமாக அலையைப் போன்ற இரு கோடுகளை இழுத்தாள். அதன்மேல் ஒரு தாமரைப் பூவை வரைந்தாள். பக்கத்தில் இரண்டு தாமரை மொட்டுகளையும் போட்டாள். குளத்தின் கரையிலே ஒரு மான் குட்டியின் சித்திரத்தை எழுதினாள். எழுதும்போதே கடைக்கண்ணால் பார்த்து, நரசிம்மவர்மர் தன்னைக் கவனிப்பதைத் தெரிந்து கொண்டாள். சித்திரம் எழுதி முடித்ததும் சிவகாமியின் மனத்தில் அமைதி ஏற்பட்டது. அந்தச் சித்திரத்திலடங்கிய செய்தியை நரசிம்மவர்மர் கட்டாயம் தெரிந்து கொள்வார். மற்றவர்களுக்கோ அதில் அர்த்தம் ஒன்றும் இராது. ஏதோ கிறுக்கியிருக்கிறது என்றுதான் எண்ணிக்கொள்வார்கள்! குமார சக்கரவர்த்திக்குத் தன்னிடம் அன்பு உண்டென்பது உண்மையானால், இந்தச் சித்திரத்தைப் பார்த்துவிட்டு அவசியம் அவர் தாமரைக் குளத்துக்கு வந்து சேருவார்.

அன்று மாலை சக்கரவர்த்தியும் குமாரரும் குதிரைகளின் மேல் ஏறிக் காஞ்சிக்கு இராஜபாட்டை வழியாகக் கிளம்பினார்கள். அந்தப் பாதை மத்தியானம் அவர்கள் வந்திருந்த ஐந்து குன்றுகளின் ஓரமாகத்தான் சென்றது. அவ்விடத்திற்கு வந்ததும் நரசிம்மர் சற்றுப் பின் தங்கினார். சிவகாமி சித்திரம் எழுதிய பாறைக்கு அருகில் வந்ததும் குதிரையை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கினார். அங்கே எழுதியிருந்த சித்திரத்தைப் பார்த்ததும் அவருடைய முகம் அந்தத் தாமரையைப் போலவே மலர்ச்சி அடைந்தது. தரையில் கிடந்த அதே காவிக் கட்டியை அவரும் எடுத்து மானுக்கும் தாமரைக்கும் நடுவில் ஒரு வேலின் சித்திரத்தை எழுதினார்.

மலை வழியில்

சென்ற அத்தியாயத்தில் கூறிய சம்பவம் நிகழ்ந்து நாலு தினங்களுக்குப் பிறகு பரஞ்சோதி போர் வீரனைப் போல் உடை தரித்து, கையில் வேல் பிடித்து, அழகிய உயர்சாதிப் புரவியின் மேல் அமர்ந்து, மலைப் பாதையில் தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருந்தான். சூரியன் அஸ்தமிக்க இன்னும் இரண்டு நாழிகைப் பொழுதுதான் இருந்தது. எனினும் அந்த மலைப் பிரதேசத்து மாலை வெயில் அவனுடைய இடது கன்னத்தில் சுளீரென்று அடித்தது.

பகல் நேரம் எல்லாம் தகிக்கும் வெயிலில் பிரயாணம் செய்து பரஞ்சோதி களைத்துப் போயிருந்தான். குதிரையும் களைப்படைந்திருந்தது. எனவே, குதிரையை மெதுவாகச் செலுத்திக் கொண்டு சென்றான். குதிரை மெள்ள மெள்ள அம்மலைப் பாதையில் ஏறி மேலே சென்று கொண்டிருக்கையில், பரஞ்சோதியின் உள்ளம் அடிக்கடி பின்னால் சென்று கொண்டிருந்தது. சென்ற ஒரு வார காலத்தில் அவன் அடைந்த அதிசயமான அனுபவங்கள் எல்லாம் திரும்பத் திரும்ப அவனுக்கு ஞாபகம் வந்துக் கொண்டிருந்தன.

காஞ்சி நகரில் புத்த பிக்ஷுவுடன் பிரவேசித்த அன்றிரவு நடந்த சம்பவங்கள் நினைவு வந்தபோதெல்லாம் அவை உண்மையில் நிகழ்ந்தவைதான அல்லது கனவிலே நடந்த சம்பவங்களா என்று பரஞ்சோதி அதிசயித்தான். பன்னிரண்டு நாளைக்கு முன்னால் திருச்செங்காட்டங்குடியிலிருந்து கால்நடையாகக் கிளம்பிய பட்டிக்காடுச் சிறுவனா இன்று இந்த அழகான புரவியின் மேலே ஏறிச் செல்பவன் என்று கூட அவன் ஆச்சரியப்பட்டான்.

வெயிலின் வேகத்தினால் வியர்வையைத் துடைக்கவேண்டியிருந்தபோதெல்லாம் பரஞ்சோதிக்குத் தமிழகத்துச் சாலைகளின் அழகும் வசதிகளும் ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தன. சோழ நாட்டிலும் தொண்டை நாட்டிலும் சாலை ஓரங்களில் பெரிய விருட்சங்கள் அடர்த்தியாய் வளர்ந்து, குளிர்ந்த நிழல் தந்து கொண்டிருக்கும். சாலைகளின் இரு புறத்திலுமுள்ள வயல்களில் பசுமையான நெற்பயிற் இளந்தென்றலில் அசைந்தாடும். முதிர்ந்த பயிர்கள் கதிரின் பாரம் தாங்கமாட்டாமல் வயல்களில் சாய்ந்து கிடக்கும். ஆங்காங்கே பசுமையான தென்னந் தோப்புகளும் மாந்தோப்புகளும் கண் குளிரக் காட்சி தந்து கொண்டிருக்கும். வாழைத் தோட்டங்களையும் கரும்புத் தோட்டங்களையும் கண்ணால் பார்த்தாலே நாவறட்சி தீர்த்து தணியும்.

ஆம்; வழிப் பிரயாணத்தின் போது தாகம் எடுத்துத் தவிப்பதென்பது அங்கெல்லாம் கிடையவே கிடையாது. தாமரையும், செங்கழுநீரும் நீலோற்பலமும் பூத்த குளங்களுக்குக் கணக்கேயில்லை. ஆறுகளும் சிற்றாறுகளும் சின்னஞ்சிறு வாய்க்கால்களும் அடிக்கொன்றாக வந்து கொண்டிருக்கும். இருபுறமும் பசுமையான செடி கொடிகள் படர்ந்த சிறு வாய்க்கால்களில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தால் அது ஓர் அழகு. தண்ணீர் இன்றி வாய்க்கால் வறண்டிருந்தால் அது இன்னொரு வகை அழகு. வறண்ட வாய்க்கால்களின் சிறு மணலில் நடப்பதைப் போன்ற இன்பம் வேறென்ன உண்டு? அப்படி நடக்கும்போது இரு கரைகளிலும் ஆங்காங்கே படர்ந்துள்ள காட்டு மல்லிகைக் கொடிகளில் பூத்த மலர்களிலிருந்து வரும் நறுமணம் எவ்வளவு மனோகரமாக இருக்கும்?

அதற்கிணையான இன்பம் இன்னொன்று சொல்ல வேண்டுமானால், உச்சி வேளையில் ஆலமரங்களும் வேப்ப மரங்களும் தழைத்து வளர்ந்த இராஜபாட்டைகளில் பிரயாணம் செய்வதுதான். இந்த பங்குனி மாதத்தில் சாலை ஓரத்து ஆல மரங்களிலே புதிய இளந்தளிர்கள் 'பளபள' என்று மின்னிக் கொண்டிருக்கும். வேப்ப மரங்கள் பூத்துக் குலுங்கும்! மாமரங்கள் புதிய தளிர்விடும் அழகைத்தான் என்னவென்று சொல்ல? ஒருநாளைக்கு மாமரம் முழுவதும் கருநீல நிறம் பொருந்திய இளந்தளிர்கள் மயமாயிருக்கும். மறுநாளைக்குப் பார்த்தால், கருநீல நிறம் இளஞ்செந்நிறமாக மாறியிருக்கும். அதற்கு அடுத்த நாள் அவ்வளவு தளிர்களும் தங்கநிறம் பெற்றுத் தகதகவென்று மின்னிக் கொண்டிருக்கும்.

இப்பேர்ப்பட்ட இயற்கை இன்பங்களை அளித்த இறைவனுடைய திருப்புகழை இன்னிசையிலே அமைத்து, மரக்கிளைகளில் ஊஞ்சலாடும் பூங்குயில்கள் இடைவிடாமல் பாடிக் கொண்டிருக்கும்.

திருச்செங்காட்டங்குடியிலிருந்து காஞ்சிக்கு வரும் வழியில் இம்மாதிரி இன்பக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டு வந்த பரஞ்சோதி அச்சமயம் அந்தக் காட்சிகளின் அழகையோ இன்பத்தையோ அவ்வளவாக அனுபவிக்கவில்லை.

இப்போது, எங்கே பார்த்தாலும் மொட்டைக் குன்றுகளே காணப்பட்ட பொட்டைப் பிரதேசத்தில், பசுமை என்பதையே காணமுடியாத வறண்ட பாதையில், அவன் பிரயாணம் செய்து கொண்டிருந்தபோதுதான், சோழ மண்டலத்து வயல்களும் தோப்புகளும், தொண்டைமண்டலத்து ஏரிகளும் காடுகளும் அவன் மனக் கண்ணின் முன்னால் அடிக்கடி தோன்றி இன்பமளித்தன.

மேற்குத் திசையில் மலைகளுக்குப் பின்னால் சூரியன் மறையத் தொடங்கியபோது பரஞ்சோதி, அந்த மலைப் பாதையில் ஒரு முடுக்கில் திரும்பினான். அன்றைக்கெல்லாம் முட்புதர்களையும் கள்ளிச் செடிகளையும் தவிர வேறு எதையும் காணாமல் வந்த பரஞ்சோதிக்கு எதிரே, அப்போது ஓர் அபூர்வமான காட்சி தென்பட்டது. கண்ணுக்கெட்டிய தூரம் நெட்டையும் குட்டையுமான புரச மரங்கள் ஆயிரம் பதினாயிரம் மரங்கள் இலை என்பதே இல்லாமல் ஒரே பூமயமாய்க் காட்சியளித்தன. அவ்வளவும் இரத்தச் சிவப்பு நிறமுள்ள கொத்துக் கொத்தான பூக்கள். மாலைக் கதிரவனின் செங்கிரணங்கள் அந்தப் புரசம் பூக்களின் இரத்தச் செந்நிறத்தை மிகைப்படுத்திக் காட்டின.

அது அபூர்வமான அழகு பொருந்திய காட்சிதான். ஆனால், ஒருவகை அச்சந்தரும் காட்சியுமாகும். பரஞ்சோதி பிறந்து வளர்ந்த திருச்செங்காட்டங்குடி கிராமத்தில் தென்மேற்கு மூலையில் இருந்த மயானத்தில் சில புரச மரங்கள் உண்டு. அவை பங்குனி சித்திரையில் இவ்விதம் ஒரே செந்நிறப் பூமயமாயிருப்பதை அவன் பார்த்திருந்தான். எனவே, புரச மரங்கள் பூத்திருக்கும் காட்சியைப் பார்க்கும் போது அவனுக்கு ருத்ரபூமியின் நினைவு வருவது வழக்கம்.

இப்போது அவன் கிராமத்துக்கு எத்தனையோ தூரத்துக்கு அப்பால் தனியாகக் காட்டு வழியில் போய்க் கொண்டிருந்தபோது மேற்கூறிய மயானத்தின் ஞாபகம் தோன்றி அவன் மனத்தில் பயங்கரத்தை உண்டுபண்ணிற்று. மயானத்தின் நினைவோடு பேய் பிசாசுகளின் நினைவும் சேர்ந்துவந்தது. மற்ற விஷயங்களில் மகா தைரியசாலியான பரஞ்சோதிக்குப் பேய் பிசாசு என்றால் பயம் அதிகம். 'இன்றைக்கு இந்தக் காட்டு வழியே இருட்டிய பிறகும் போக வேண்டுமே!' என்று நினைத்த போது அவனுடைய நெஞ்சையும் வயிற்றையும் என்னவோ செய்தது. அதோ அந்த இரண்டு மலைகளும் கூடுகிற இடத்தில் தான் அன்றிரவு தங்க வேண்டிய சத்திரம் இருப்பதாக அவன் அறிந்தான். அங்கே போய்ச் சேருவதற்குள்ளே இருட்டி ஒரு ஜாமத்துக்கு மேலாகி விடலாம். நிலா வெளிச்சமே இராது. முன்னிருட்டுக் காலம். 'அடடா! வழியிலே ஏன் இவ்வளவு தாமதித்தோம்?' என்று எண்ணியவனாய் பரஞ்சோதி குதிரையை வேகமாய்ச் செலுத்த முயன்றான். ஆனாலும் பகலெல்லாம் பிரயாணம் செய்து களைத்திருந்த குதிரை எவ்வளவுதான் வேகமாய்ப் போய்விடக் கூடும்?

நிர்மானுஷ்யமான அந்த மலைப் பிரதேசம் உண்மையில் அச்சத்தைத் தருவதாய்த்தான் இருந்தது. பட்சிகள் மிருகங்கள் கூட அங்கே காணப்படவில்லை. இருட்டிய பிறகு நரிகள் ஊளையிட ஆரம்பிக்கும். பயங்கரத்தை அவை இன்னும் அதிகப்படுத்தும்.

நேற்றெல்லாம் பரஞ்சோதி நேர் வடக்கே சென்ற விசாலமான இராஜபாட்டையில் பிரயாணம் செய்தான். அதன் ஜன நடமாட்டமும் குதிரைகளின் போக்குவரவும் அதிகமாயிருந்தன. பாதையில் பல இடங்களில் அவன் நிறுத்தப்பட்டான். சக்கரவர்த்தி தந்திருந்த பிரயாண இலச்சினையை அவன் அங்கங்கே காட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது.

இன்று காலையிலே இராஜபாட்டையை விட்டு மலைப் பாதையில் திரும்பிய பிறகு அத்தகைய தொந்தரவு ஒன்றுமில்லை. ஆனால் இப்போது பரஞ்சோதிக்கு ஒரு பெரிய குதிரைப் படையே அந்த வழியில் வரக்கூடாதா என்று தோன்றியது.

ஆ! அது என்ன சத்தம்! குதிரைக் குளம்படியின் சத்தம் போலிருக்கிறதே! ஆம்; குதிரைதான் பின்னால் வந்து கொண்டிருக்கிறது. வருவது யாராயிருக்கும்? யாராயிருந்த போதிலும் நல்லதுதான், இருட்டுக்கு வழித்துணையாயிருக்குமல்லவா?

வருகிறது ஒரே குதிரையா? பல குதிரைகளா? பரஞ்சோதி தன் குதிரையை நிறுத்திவிட்டுக் காதுகொடுத்துக் கேட்டான். சட்டென்று சத்தம் நின்றுவிட்டது. ஒருவேளை வெறும் பிரமையோ? யாராவது வரக்கூடாதா என்று அடிக்கடி எண்ணியதன் பயனோ?

பரஞ்சோதி மேலே குதிரையைச் செலுத்தினான். மறுபடியும் பின்னால் குதிரை வரும் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. மலைப்பாதை வளைந்து வளைந்து சென்றதனால் குதிரை சமீபத்தில் வந்தாலும் அதைத் தான் பார்க்க முடியாது.

இதற்குள்ளே சூரியன் அஸ்தமித்து நாலாபுறமும் இருள் சூழ ஆரம்பித்துவிட்டது.

அதிக வளைவு இல்லாமல் பாதை நேராகச் சென்ற இடத்துக்கு வந்தபோது பரஞ்சோதி குதிரையைச் சற்று நேரம் வேகமாக விட்டுக்கொண்டு போய்ச் சட்டென்று நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன்மேல் ஆள் இருப்பதும் தெரிந்தது. பரஞ்சோதியின் குதிரை நின்றதும் அவனும் தன் குதிரையை நிறுத்தினான்.

பரஞ்சோதிக்குச் சொல்லமுடியாத கோபம் வந்தது. குதிரையை லாகவமாய்த் திருப்பிப் பின்னால் நின்ற குதிரையை நோக்கி விரைவாகச் சென்றான். அப்பொழுது கையெழுத்து மறையும் நேரம்.

வழி துணை

குதிரையைத் திருப்பிவிட்டுக் கொண்டு பரஞ்சோதி பின்னால் வந்த குதிரையண்டை சென்றபோது அவன் மனத்தில் ஏற்கெனவே ஏற்பட்டிருந்த பீதியெல்லாம் கோபமாக மாறியிருந்தது. மார்பில் பாய்ச்சுவதற்குச் சித்தமாக அவனுடைய வலது கையானது வேலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது.

ஆனால், பரஞ்சோதி அருகில் நெருங்கியதும் அந்தக் குதிரைமீது வந்த மனிதன் செய்த காரியங்கள் வேலுக்கு வேலை இல்லாமல் செய்து விட்டன!

ஆஜானுபாகுவாய் முகத்தில் பெரிய மீசையுடனும் தலையில் பெரிய முண்டாசுடனும் விளங்கிய அந்த திடகாத்திர மனிதன், பரஞ்சோதி தன் அருகில் வந்ததும், "ஐயையோ! ஐயையோ! பிசாசு! பிசாசு!" என்று அலறிக் கொண்டு குதிரை மீதிருந்து நழுவித் 'தொபுகடீ'ரென்று கீழே விழுந்தான். அதைப் பார்த்த பரஞ்சோதிக்குப் பயம், கோபம் எல்லாம் பறந்து போய்ப் பீறிக் கொண்டு சிரிப்பு வந்தது. கீழே விழுந்தவன் போர்க்கோலம் பூண்ட வீரன் என்பதையும், அவனுடைய இடையில் கட்டித் தொங்கிய பெரிய வாளையும் பார்த்ததும் பரஞ்சோதி 'கலகல'வென்று சிரிக்கத் தொடங்கினான். பேய் பிசாசுக்குப் பயந்தவன் தான் ஒருவன் மட்டும் அல்ல என்பதை நினைத்தபோது அவனுக்கு ஒரு வகையான திருப்தி உண்டாயிற்று.

கீழே விழுந்த மனிதன் மீண்டும், "ஐயையோ! பிசாசு சிரிக்கிறதே! பயமாயிருக்கிறதே!" என்று அலறினான்.

அந்த வேடிக்கையை இன்னும் கொஞ்சம் அனுபவிக்க விரும்பிய பரஞ்சோதி, குதிரை மேலிருந்தபடியே வேலை நீட்டிக் கீழே கிடந்தவனுடைய கையில் இலேசாகக் குத்திய வண்ணம், பிசாசு பேசுவது போல் தானாகக் கற்பனை செய்துகொண்டு அடித் தொண்டைக் குரலில், "அடே! உன்னை விடமாட்டேன்! விழுங்கி விடுவேன்!" என்றான்.

அதற்கு அடுத்த கணத்தில் பரஞ்சோதி சற்றும் எதிர்பாராத காரியம் ஒன்று நடந்தது. அது என்ன என்பதையே அச்சமயம் அவனால் நன்கு தெரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. ஒரு கணம் அவன் தலை கீழாகப் பாதாளத்தில் விழுவது போலிருந்தது. உடனே அவன் தலையின் மேல் ஆயிரம் இடி சேர்ந்தாற்போல் விழுந்தது! அடுத்தபடியாக அவனுடைய மார்பின் மேல் விந்திய பர்வதம் வந்து உட்காருவதுபோல் தோன்றியது. பிறகு ஒரு பிரம்மாண்டமான பூதம், 'ஹா ஹா ஹ' என்று பயங்கரமான பேய்க்குரலில் சிரித்துக்கொண்டு அவனுடைய தோள்களைப் பிடித்துப் பலமாகக் குலுக்கியது. சற்று நிதானித்து, மனதைத் தெளிவுபடுத்திக் கொண்டு சிந்தித்த பிறகுதான் பரஞ்சோதிக்கு நடந்தது என்னவென்பது புலனாயிற்று.

பரஞ்சோதி தன்னுடைய வேலின் நுனியினால் கீழே கிடந்தவனுடைய கையை இலேசாகக் குத்தி, "விழுங்கி விடுவேன்!" என்று கத்தியவுடனே, அந்த மனிதன் பரஞ்சோதியின் வேலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு ஓர் இழுப்பு இழுத்தான். அவ்வளவுதான், பரஞ்சோதி குதிரை மேலிருந்து தடாலென்று தலைகுப்புறக் கீழே விழுந்தான். உடனே, அந்த மனிதன் மின்னலைப் போல் பாய்ந்து வந்து அவனுடைய தோள்களைப் பிடித்துக் குலுக்கினான். அதோடு, "ஹா ஹா ஹா! நீ பிசாசு இல்லை, மனுஷன்தான்! பிசாசு மாதிரி கத்தி என்னைப் பயமுறுத்தப் பார்த்தாயல்லவா? நல்லவேடிக்கை! ஹா ஹா ஹ" என்று உரத்த குரலில் சிரித்துக் கொண்டே கூவினான். பின்னர், பரஞ்சோதியின் மார்பின் மேலிருந்து எழுந்து நின்று பரஞ்சோதியையும் தரையிலிருந்து தூக்கி நிறுத்தி, "தம்பி! இந்த மயான பூமியில் ஒண்டியாகப் போக வேண்டுமே என்று பயந்து கொண்டிருந்தேன். நல்லவேளையாய் வழித்துணைக்குக் கிடைத்தாய். நீ எங்கே போகிறாய், தம்பி?" என்று ரொம்பவும் பழக்கமானவனைப் போல் தோளின் மேல் கையைப் போட்டுக்கொண்டு சல்லாபமாய்க் கேட்டான்.

பரஞ்சோதி சற்று முன் நடந்த சம்பவங்களினால் பெரிதும் அதிர்ச்சியடைந்திருந்தான். ஒரு பக்கம் அவன் உள்ளத்தில் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. அவமானம் ஒரு பக்கம் பிடுங்கித் தின்றது. தன்னை இப்படியெல்லாம் கதிகலங்க அடித்தவன் சாமானியப்பட்டவன் அல்ல. மகா பலசாலியான வீர புருஷன் என்பதை அவன் உணர்ந்திருந்தான். இதனால் அம்மனிதன் பேரில் ஒருவித மரியாதையும் அவன் மனத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆனால், "எந்த ஊருக்குப் போகிறாய் தம்பி?" என்று அந்த ஆள் கேட்டதும், புத்த பிக்ஷு செய்திருந்த எச்சரிக்கைகள் ஞாபகத்துக்கு வந்தன.

தன் தோள் மேலிருந்த அவனுடைய கைகளை உதறித் தள்ளிவிட்டு, "நான் எந்த ஊருக்குப் போனால் உனக்கு என்ன?" என்று வெறுப்பான குரலில் கேட்டான் பரஞ்சோதி.

"எனக்கு ஒன்றுமில்லை, அப்பா! ஒன்றுமே இல்லை. இன்று ராத்திரி வழித் துணைக்கு நீ கிடைத்தாயே, அதுவே போதும். ஏதோ இரகசியக் காரியமாய்ப் போகிறாயாக்கும் ஆனால்.."

இப்படிச் சொல்லி நிறுத்தி, அந்த வீரன் பரஞ்சோதியைச் சற்றுக் கவனமாக உற்றுப் பார்த்தான். அந்தப் பார்வையின் கருத்தை உணர்ந்து கொள்வதற்குள்ளே, மறுபடியும் அவன் தரையிலே விழும்படி நேர்ந்தது. ஒரே நொடியில் அவ்வீரன் பரஞ்சோதியைக் கீழே தள்ளியதுமல்லாமல், தரையில் அவன் அருகில் உட்கார்ந்து கழுத்தை நெறித்துப் பிடித்துக் கொண்டான்.

"நீ வாதாபி ஒற்றனா, இல்லையா? சத்தியமாய்ச் சொல்" என்று கடுமை நிறைந்த குரலில் கேட்டான்.

பரஞ்சோதிக்குக் கோபத்தினாலும் வெட்கத்தினாலும் கண்களில் ஜலம் வரும் போலிருந்தது. அவன் விம்முகிற குரலில், "நீ சுத்த வீரனாக இருந்தால் என்னோடு எதிருக்கெதிர் நின்று வாளோ வேலோ எடுத்துச் சண்டை செய்யும்..." என்றான்.

"உன்னோடு சண்டை போட வேண்டுமா? எதற்காக அப்பனே? நீ வாதாபி ஒற்றனாயிருக்கும் பட்சத்தில் உன்னை இப்படியே யமனுலகம் அனுப்புவேன். நீ ஒற்றனில்லையென்றால் உன்னோடு சண்டை போடுவானேன்? நாம் இருவரும் சிநேகிதர்களாயிருக்கலாம். நீ ஒற்றனில்லை என்பதை மட்டும் நிரூபித்து விடு. இதோ, இம்மாதிரி ரிஷப இலச்சினை உன்னிடம் இருக்கிறதா?" என்று கேட்டுக் கொண்டே அவ்வீரன் இடது கையினால் தன் மடியிலிருந்து வட்ட வடிவான ஒரு செப்புத் தகட்டை எடுத்துக் காட்டினான். பல்லவ சாம்ராஜ்யத்தில் பிரயாண அனுமதி பெற்ற இராஜ தூதர்களுக்கு அடையாளமாகக் கொடுக்கும் ரிஷப முத்திரை பதித்த தகடு அது.

பரஞ்சோதியும் வேண்டாவெறுப்புடன் தன் மடியிலிருந்து மேற்படி முத்திரைத் தகட்டை எடுத்துக் காட்டியதும் அவ்வீரன் பரஞ்சோதியின் கழுத்தை விட்டதோடல்லாமல் அவனைத் தூக்கி நிறுத்தி ஆர்வத்துடன் ஆலிங்கனம் செய்து கொண்டு, "தம்பி! என்னை மன்னித்துவிடு! உன் முகக் களையைப் பார்த்தாலே சொல்லுகிறது, நீ சத்ருவின் ஒற்றனாயிருக்க முடியாதென்று. இருந்தாலும், இந்த யுத்த காலத்தில் யாரையும் நம்பி எந்தக் காரியமும் செய்வதற்கில்லை. நல்லது, குதிரைமேல் ஏறிக்கொள் பேசிக்கொண்டே போகலாம்!" என்று கூறி அவ்வீரன் தன் குதிரையண்டை சென்று அதன்மேல் வெகு லாகவமாய்த் தாவி ஏறிக் கொண்டான்.

பரஞ்சோதி தனக்குள், "இவனுடன் பேச்சு என்ன வேண்டிக் கிடந்தது? இந்த மலைப்பாதையைத் தாண்டியவுடன் இவனை ஒரு கை பார்த்து இவனுக்குப் புத்தி கற்பிக்காமல் விடக்கூடாது" என்று எண்ணிக்கொண்டே தன் குதிரைமீது ஏறிக்கொண்டான்.

மாலை மங்கி இருளாகக் கனிந்து கொண்டிருந்த முன்னிரவு நேரத்தில், வானமெல்லாம் வைரச் சுடர்களென மின்னத் தொடங்கியிருந்த நட்சத்திரங்களின் இலேசான வெளிச்சத்தில் இரு குதிரைகளும் சேர்ந்தாற்போல் போகத் தொடங்கின.

மயூரசன்மன்

அந்தக் காட்டுமலைப் பாதையில் சற்று நேரம் குதிரைகள் மெதுவாகக் காலடி வைக்கும் சத்தத்தைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. பிரயாணிகள் இருவரும் மௌனத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.

பரஞ்சோதியின் மனத்தில் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. பெரிய மீசையுடனும், பிரம்மாண்டமான தலைப்பாகையுடனும் தன் பக்கத்தில் குதிரை மீது வரும் மனிதன் யாராயிருக்கும்? அவன் போர் முறைகளில் கை தேர்ந்த மகாவீரன் என்பதில் சந்தேகமில்லை. சற்று நேரத்துக்குள் தன்னை என்ன பாடுபடுத்தி வைத்துவிட்டான்? சடக்கென்று குதிரை மேலிருந்து தன்னை அவன் இழுத்துக் கீழே தள்ளியதையும், மார்பின்மேல் ஒரு கண நேரம் மலைபோல் உட்கார்ந்திருந்ததையும், மறுபடியும் தான் எதிர்பாராத சமயத்தில் திடீரென்று கீழே தள்ளி இரும்புக் கையினால் தன் கழுத்தைப் பிடித்து நெரித்ததையும் நினைக்க நினைக்கப் பரஞ்சோதிக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கின. அதே சமயத்தில் மேற்கூறிய செயல்களில் அந்த வீரன் காட்டிய லாகவமும் தீரமும் சாமர்த்தியமும் அந்த வீரனிடம் பயபக்தியை உண்டு பண்ணின. ஆஹா! இப்படிப்பட்ட ஒரு மகா வீரனுடைய சிநேகம் தனக்கு நிரந்தரமாகக் கிடைக்குமானால் அது எப்பேர்ப்பட்ட பாக்கியமாயிருக்கும்?

திருச்செங்காட்டங்குடியிலிருந்து காஞ்சிக்கு வந்தபோது வழியில் சிநேகமான புத்த பிக்ஷுவுக்கும் இந்த வீரனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? பிக்ஷு எவ்வளவோ தன்னிடம் அன்பாகப் பேசியிருந்தும், எவ்வளவோ ஒத்தாசை செய்திருந்தும் அவரிடம் தனக்கு ஏற்படாத பக்தியும் வாத்ஸல்யமும் தன்னைக் கீழே தள்ளி மேலே உட்கார்ந்த இந்த மனிதனிடம் உண்டாகக் காரணம் என்ன?

அதே சமயத்தில், அவன் கிளம்பும்போது புத்த பிக்ஷு கூறிய எச்சரிக்கை மொழிகளும் நினைவுக்கு வந்தன. "வழியில் சந்திக்கும் யாரையும் நம்பாதே! சத்ருவாக நடித்தாலும் மித்திரனாக நடித்தாலும் நீ போகுமிடத்தையாவது ஓலை கொண்டு போகும் விஷயத்தையாவது சொல்லிவிடாதே! அஜந்தா வர்ண இரகசியத்தை அறிந்துகொள்ள ஆசை கொண்டவர்கள் ஆயனரைத் தவிர இன்னும் எவ்வளவோ பேர் உண்டு. அதற்காக அவர்கள் உயிர்க்கொலை செய்யவும் பின்வாங்கமாட்டார்கள். எனவே நீ போகும் காரியம் இன்னதென்பதைப் பரம இரகசியமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதை உன்னிடமிருந்து தெரிந்து கொள்வதற்குப் பலர் பலவிதமான சூழ்ச்சிகளைச் செய்யலாம். அதிலெல்லாம் நீ ஏமாந்து விடக்கூடாது..."

இவ்விதம் புத்த பிக்ஷு கூறியதைப் பரஞ்சோதி நினைவு கூர்ந்து ஒருவேளை தன் அருகில் இப்போது வந்து கொண்டிருப்பவன் அத்தகைய சூழ்ச்சிக்காரர்களில் ஒருவன்தானோ, தன்னைக் குதிரையிலிருந்து கீழே இழுத்துத் தள்ளிப் படாதபாடுபடுத்தியதெல்லாம் ஒருவேளை பிக்ஷுவின் ஓலையைக் கவர்வதற்காகச் செய்த பிரயத்தனமோ என்று எண்ணமிட்டான். ஓலை தன் இடைக்கச்சுடன் பத்திரமாய்க் கட்டப்பட்டிருப்பதைத் தொட்டுப் பார்த்துத் தெரிந்து கொண்டு, அதைத் தன்னிடமிருந்து கைப்பற்றுவது எளிதில்லை என்று உணர்ந்து தைரியமடைந்தான்.

அப்போது சற்று தூரத்தில் ஒரு நரி சோகமும் பயங்கரமும் நிறைந்த குரலில் ஊளையிடும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிஷத்தில் முறைவைப்பதுபோல் அநேக நரிகள் சேர்ந்தாற்ப் போல் ஊளையிடும் சத்தம் கேட்கத் தொடங்கியபோது, பரஞ்சோதிக்கு ரோமம் சிலிர்த்துத் தேகமெல்லாம் வியர்த்தது. ஒரு கூட்டம் நரிகளின் ஊளை நின்றதும் இன்னொரு கூட்டம் ஊளையிட ஆரம்பிக்கும். இவ்விதம் நரிகள் கூட்டம் கூட்டமாக முறைவைத்து ஊளையிடும் சத்தமும், அந்த ஊளைச் சத்தமானது குன்றுகளில் மோதிப் பிரதிபலித்த எதிரொலியுமாகச் சேர்ந்து அந்தப் பிரதேசத்தையெல்லாம் விவரிக்க முடியாதபடி பயங்கரம் நிறைந்ததாகச் செய்தன.

இத்தனை நேரமும் மௌனமாய் வந்த வீரன், "தம்பி! இப்பேர்ப்பட்ட காட்டு வழியில் முன்னிருட்டு நேரத்தில் தன்னந்தனியாக நீ புறப்பட்டு வந்தாயே, உன்னுடைய தைரியமே தைரியம்! என் நாளில் எத்தனையோ தடவை நான் தனி வழியே பிரயாணம் செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட எனக்கே இந்தப் பிரதேசத்தில் சற்று முன்னால் கதி கலக்கம் உண்டாகி விட்டது!" என்றான்.

அப்போது பரஞ்சோதி சிறிது தயக்கத்துடன், "ஐயா! என்னைக் கண்டதும் தாங்கள் 'பிசாசு! பிசாசு!" என்று அலறிக் கொண்டு குதிரைமேலிருந்து விழுந்தீர்களே? அது ஏன்? உண்மையாகவே பயப்பட்டீர்களா? அல்லது என்னைக் கீழே தள்ளுவதற்காக அப்படிப் பாசாங்கு செய்தீர்களா? சற்று முன்னால் அப்படி அலறி விழுந்தவர், இப்போது கொஞ்சம் கூடப் பயப்படுவதாகத் தெரியவில்லையே!" என்றான்.

"ஆஹா! அது தெரியாதா உனக்கு? ஒருவன் தனி மனிதனாயிருக்கும் வரையில் ஒரு பிசாசுக்குக் கூட ஈடுகொடுக்க முடியாது. தனி மனிதனைப் பிசாசு அறைந்து கொன்று விடும். ஆனால், இரண்டு மனிதர்கள் சேர்ந்து விட்டால், இருநூறு பிசாசுகளை விரட்டியடித்து விடலாம்! இந்த மலைப் பிரதேசத்தில் இருநூறாயிரம் பிசாசுகள் இராவேளைகளில் "ஹோ ஹா!" என்று அலறிக் கொண்டு அலைவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு பிசாசுகளும் சேர்ந்து வந்தாலும், இரண்டு மனிதர்களை ஒன்றும் செய்ய முடியாது! தம்பி! இந்தப் பிரதேசத்தைப் பற்றிய கதை உனக்குத் தெரியுமா?" என்று குதிரை வீரன் கேட்டான்.

"தெரியாது; சொல்லுங்கள்!" என்றான் பரஞ்சோதி.

அதன்மேல் அந்த வீரன் சொல்லிய வரலாறு பின்வருமாறு:

ஏறக்குறைய இருநூற்றைம்பது வருஷங்களுக்கு முன்னால் வடதேசத்திலிருந்து வீரசன்மன் என்னும் பிராம்மணன் தன் சீடனாகிய மயூரசன்மன் என்னும் சிறுவனுடன் காஞ்சி மாநகருக்கு வந்தான். அவ்விருவரும் ஏற்கெனவே வேத சாஸ்திரங்களில் மிக்க பாண்டித்தியம் உள்ளவர்கள். ஆயினும் காஞ்சி மாநகரின் சம்ஸ்கிருத கடிகை (சர்வகலாசாலை)யைச் சேர்ந்த மகா பண்டிதர்களால் ஒருவருடைய பாண்டித்தியம் ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகுதான் அந்தக் காலத்தில் வித்தை பூர்த்தியானதாகக் கருதப்பட்டது. அதற்காகவே வீரசன்மனும் மயூரசன்மனும் காஞ்சிக்கு வந்தார்கள். ஒருநாள் அவர்கள் காஞ்சியின் இராஜவீதி ஒன்றில் போய்க் கொண்டிருந்தபோது, பல்லவ மன்னனின் குதிரை வீரர்கள் சிலர் எதிர்ப்பட்டார்கள்.

வீதியில் நடந்த வண்ணம் ஏதோ ஒரு முக்கியமான சர்ச்சையில் ஈடுபட்டிருந்த குருவும் சிஷ்யனும் குதிரை வீரர்களுக்கு இடங்கொடுத்து விலகிக் கொள்ளவில்லை. இதனால் கோபம் கொண்ட குதிரைவீரன் ஒருவன் குதிரை மேலிருந்தபடியே வீரசன்மனைக் காலால் உதைத்துத் தள்ளினான். குருவுக்கு இத்தகைய அவமானம் நேர்ந்ததைக் கண்டு சகியாத சிஷ்யன் அந்த வீரன் கையிலிருந்த வாளைப் பிடுங்கி வீசவே அவன் வெட்டுப்பட்டுக் கீழே விழுந்தான்.

மற்றக் குதிரை வீரர்கள் மயூரசன்மனைப் பிடிக்க வந்தார்கள். அவர்களிடம் அகப்பட்டால் தன் உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை அறிந்த மயூரசன்மன், கையில் பிடித்த வாளுடன் கீழே விழுந்த வீரனின் குதிரைமீது தாவி ஏறி தன்னைப் பிடிக்க வந்தவர்களையெல்லாம் வீராவேசத்துடன் வெட்டி வீழ்த்திக் கொண்டு காஞ்சி நகரை விட்டு வெளியேறினான்.

பல்லவ ராஜ்யத்துக்கே அவமானம் விளைவிக்கத் தக்க இந்தக் காரியத்தைக் கேட்டு, மயூரசன்மனைக் கைப்பற்றி வருவதற்காக இன்னும் பல குதிரை வீரர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். ஆனால், அவர்களிடம் அவன் அகப்படவில்லை. கடைசியில், மயூரசன்மன் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஸ்ரீ பர்வதத்தை அடைந்து, அங்கேயுள்ள அடர்ந்த காட்டில் சிறிது காலம் பல்லவ வீரர்களுக்குப் பயந்து ஒளிந்து வாழ்ந்தான். பின்னர், அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மலைச் சாதியரைக் கொண்டு ஒரு பெரிய சைனியத்தைத் திரட்டியதுமல்லாமல் அங்கே சுதந்தர ராஜ்யத்தையும் ஸ்தாபித்தான். பின்னர், அந்தப் பெரிய சைனியத்துடனே, காஞ்சியில் தன் குருவுக்கு நேர்ந்த அவமானத்துக்குப் பழி வாங்கும் பொருட்டுப் புறப்பட்டு வந்தான். மயூரசன்மனின் சைனியமும் காஞ்சிப் பல்லவ சைனியமும் இந்த மலைக்காட்டுப் பிரதேசத்திலே தான் சந்தித்தன. ஏழு நாள் இடைவிடாமல் யுத்தம் நடந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் போரில் மாண்டார்கள். இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மலைப் பிரதேசத்தையெல்லாம் நனைத்தது.

அப்படி இரத்த வெள்ளம் ஓடிய இடத்திலேதான் சில காலத்துக்குப் பிறகு இந்தப் புரசங்காடு முளைத்தது. மேற்சொன்ன பயங்கர யுத்தம் நடந்த அதே பங்குனி மாதத்தில் ஒவ்வொரு வருஷமும் புரசமரங்களின் இலை உதிர்ந்து இரத்தச் சிவப்பு நிறமுள்ள பூக்கள் புஷ்பிக்கின்றன. அந்தப் போரில் இறந்த ஆயிரக்கணக்கான வீரர்களின் ஆவிகள் இன்னமும் இங்கே உலாவிக் கொண்டிருப்பதாக அக்கம் பக்கத்துக் கிராம ஜனங்கள் நம்புகிறார்கள். ஆவிக் குதிரைகளின் மீதேறிய ஆவி வீரர்கள் வாள்களையும் வேல்களையும் ஏந்தி 'ஹா ஹா' என்று கூவிக்கொண்டு இந்த நிர்ஜனப் பிரதேசத்தில் அலைவதாகவும், யாராவது பிரயாணிகள் இரவு வேளையில் தனி வழியே வந்தால் அவர்களைக் கொன்று இரத்தத்தைக் குடித்துத் தாகத்தைத் தணித்துக் கொள்வதாகவும் சொல்லிக்கொள்ளுகிறார்கள்!

மேற்படி வரலாற்றைக் கேட்டுக் கொண்டிருந்த பரஞ்சோதிக்குக் கொஞ்சம் நஞ்சம் பாக்கியிருந்த பயமும் போய் விட்டது. அங்கே ஆவிகள் அலைவது பற்றிய கதையெல்லாம் வெறும் மூடநம்பிக்கை என்ற உறுதி ஏற்பட்டது.

"என்னைக் கண்டதும் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் செத்துப்போன வீரனின் பிசாசுதான் வந்து விட்டதென்று நினைத்து அப்படி உளறி அடித்துக்கொண்டு விழுந்தீரோ?" என்று கூறி நகைத்தான்.

"இரத்தமும் சதையுமுள்ள மனிதனோடு நான் சண்டை போடுவேன். வில்போர், வாள்போர், வேல்போர், மல்யுத்தம் எது வேண்டுமானாலும் செய்வேன். ஆனால், ஆவிகளோடு யார் போரிட முடியும்?" என்று அவ்வீரன் சிறிது கடுமையான குரலில் கூறவே பரஞ்சோதி பேச்சை மாற்ற எண்ணி, "இருக்கட்டும் ஐயா! இங்கே நடந்த யுத்தத்தின் முடிவு என்ன ஆயிற்று? யாருக்கு வெற்றி கிடைத்தது?" என்று கேட்டான்.

"மயூரசன்மனுடைய சைனியத்தைப்போல் பல்லவ சைனியம் மூன்று மடங்கு பெரியது. ஆகையால், பல்லவ சைனியம் தான் ஜயித்தது. மயூரசன்மனை உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் கைப்பற்றிப் பல்லவ மன்னன்முன் கொண்டுவந்து நிறுத்தினார்கள்...!"

"அதன் பிறகு என்ன நடந்தது?" என்று மிகுந்த ஆவலுடன் கேட்டான் பரஞ்சோதி.

"என்ன நடந்திருக்குமென்று நீதான் சொல்லேன்!" என்று அவ்வீரன் கூறிப் பரஞ்சோதியின் ஆவலை அதிகமாக்கினான்.

வைஜயந்தி

வழித் துணையாகக் கிடைத்த இந்த வீரன் எந்த மயூரசன்மனைப்பற்றிக் கூறி வந்தானோ அதே மயூரசன்மனைக் குறித்து ஏற்கெனவே புத்த பிக்ஷு கூறியிருந்தது பரஞ்சோதியின் ஞாபகத்தில் இருந்தது. ஆனால், அவர் கூறிய வரலாறு இவ்வளவு ரஸமாக இல்லை. அந்த வரலாற்றை அவர் கூறியதன் நோக்கமும் பரஞ்சோதிக்குப் பிடிக்கவில்லை. "அந்த மயூரசன்மனைப் போல் ஒரு வேளை நீயும் ஆனாலும் ஆகலாம்!" என்று புத்த பிக்ஷு கூறியது பரஞ்சோதியின் உள்ளத்தில் அருவருப்பைத்தான் உண்டு பண்ணிற்று. ஏன்? மயூரசன்மன் பேரிலேயே அவனுக்கு அருவருப்பு உண்டாக அது காரணமாக இருந்தது.

ஆனால், இப்போது மயூரசன்மன் செய்த வீரப் போரையும் உடம்பில் முப்பத்தாறு காயங்களுடன் அவன் பல்லவ மன்னனின் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டதையும் அறிந்ததும், அவன் மீது பரஞ்சோதியின் மரியாதை பன்மடங்கு வளர்ந்தது.

"அப்பேர்ப்பட்ட வீரன் பல்லவ மன்னனுக்குச் சரணாகதி அடைய மறுத்துத்தான் இருப்பான். அரசனுக்கு எதிராகக் கலகம் செய்பவர்களைப் பூமியில் புதைத்து யானையின் காலால் இடறச் செய்வதுதானே வழக்கம்! பல்லவ ராஜாவும் அப்படிச் செய்து விட்டாராக்கும்!" என்று பரஞ்சோதி மனக்கசப்புடன் கூறினான்.

"இல்லை, தம்பி, இல்லை! சாதாரணமாய் அங்க, வங்க, கலிங்க, காஷ்மீர, காம்போஜ தேசங்களின் ராஜாக்களாயிருந்தால் அப்படித்தான் செய்திருப்பார்கள். ஆனால் காஞ்சி பல்லவ மன்னர்களின் காரியங்கள் ஒரு தனிப் போக்காக இருக்கும்.."

"பல்லவ மன்னர் என்ன செய்தார்?"

"மயூரசன்மனை மன்னித்ததோடு, அவனுடைய வீரத்தை மெச்சி அவன் ஸ்தாபித்த ராஜ்யத்தை அவனுக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். அவரே நேரில் சென்று மயூரசன்மனுக்கு முடிசூட்டி விட்டு வந்தார்!"

"அப்படியா?" என்று பரஞ்சோதி தன் உண்மையான வியப்பைத் தெரிவித்துவிட்டு, "அதைக் குறித்து மயூரசன்மன் நன்றி பாராட்டினானா?" என்று கேட்டான்.

"மயூரசன்மன் மட்டுமில்லை அவன் ஸ்தாபித்த கதம்ப வம்சத்தில் பிறந்தவர்கள் எல்லாரும் சென்ற இருநூறு வருஷத்துக்கு மேலாகப் பல்லவர்களுக்குக் கப்பம் செலுத்திக் கொண்டு நன்றியுடன் இருந்து வந்தார்கள். கிருஷ்ணை - துங்கபத்திரை நதிக்கரை ஓரமாய் அவர்களுடைய இராஜ்யமும் பெருகி வந்தது. கொஞ்ச காலத்துக்குப் பிறகு வைஜயந்தி பட்டணத்தில் தங்கள் தலைநகரை ஸ்தாபித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு ஆபத்து நேர்ந்த சமயங்களில் பல்லவ மன்னர்களும் வேண்டிய உதவி புரிந்து வந்தார்கள். இருபது வருஷத்துக்கு முந்தி புலிகேசியின் சிற்றப்பன் மங்களேசன் கதம்ப ராஜ்யத்தின் மீது படையெடுத்த செய்தி தெரியுமோ இல்லையோ?"

"தெரியாதே? அது என்ன விஷயம்?" என்று பரஞ்சோதி ஆவலுடன் கேட்டான்.

"ஆமாம்; நீ சிறுபிள்ளை உனக்கு எப்படி அது தெரிந்திருக்கும்? இப்போது ராட்சஸ ஸ்வரூபம் கொண்டு பல்லவ சாம்ராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறானே, இந்தப் புலிகேசியும் இவனுடைய தம்பிமார்களும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது, இவர்களுடைய சிற்றப்பன் மங்களேசன் என்பவன் வாதாபி ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அவனுக்குத் திடீரென்று அயல் நாடுகளைக் கைப்பற்றிப் பெரிய சக்கரவர்த்தி ஆகவேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று. துங்கபத்திரையைக் கடந்து கதம்ப ராஜ்யத்துக்குள் பிரவேசித்தான். வைஜயந்தி நகரம் வரையில் வந்து அந்த நகரத்தை முற்றுகை போட்டுவிட்டான். அப்போது வடக்கு மண்டலத்துப் பல்லவ சைனியந்தான் கதம்ப ராஜாவின் ஒத்தாசைக்குச் சென்றது. வைஜயந்தி பட்டணத்துக்கு அண்மையில் பெரிய யுத்தம் நடந்தது.."

"யுத்தத்தின் முடிவு என்ன ஆயிற்று?"

"கேட்பானேன்! வீர பல்லவ சைனியந்தான் ஜயித்தது. சளுக்கர்கள் தோற்றுப் பின்வாங்கி ஓடினார்கள். ஆஹா! அப்போது மட்டும் அந்தச் சளுக்கர் படையைப் பல்லவ சைனியமும் பின் தொடர்ந்துபோய் அடியோடு நிர்மூலம் செய்திருந்தால், இப்போது இந்த யுத்தமே வந்திருக்காது!" என்றான் அவ்வீரன்.

அந்தப் பழைய வரலாறுகளையெல்லாம் அறிந்து கொள்ளுவதில் பரஞ்சோதிக்கு ரொம்பவும் சுவாரஸ்யமாயிருந்தது. யுத்தங்களைப் பற்றியும் அவை நடந்த முறைகளைப் பற்றியும் வெற்றி தோல்விகளைப் பற்றியும் தெரிந்து கொள்ள அவனுக்கு மிகவும் ஆவலாயிருந்தது. நிலா இல்லாத முன்னிரவில் வழிப்பிரயாணத்தின் அலுப்புத் தெரியாமலிருப்பதற்கும் அது ஏதுவாயிற்று.

"தோல்வியடைந்து ஓடிய சளுக்க சைனியத்தைப் பல்லவ சைனியம் ஏன் தொடர்ந்து போகவில்லை?" என்று அவன் கேட்டான்.

"அதற்குப் பல காரணங்கள் உண்டு. முக்கியமான காரணம் என்னவென்றால், வைஜயந்தி பட்டணத்துக்கு அருகில் நடந்த யுத்தத்தில் பல்லவ சைனியம் ஒரு பெரிய நஷ்டத்தை அடைந்தது. பல்லவ சேனாதிபதி அந்தப் போரில் உயிர் துறந்தார்!"

பரஞ்சோதியின் நினைவு சட்டென்று வேறு பக்கம் திரும்பியது.

"ஐயா! அந்த வீர பல்லவ சேனாதிபதியின் பெயர் என்ன?" என்று அவன் கேட்டான்.

"நீ கேள்விப்பட்டதில்லையா? சேனாதிபதி கலிப்பகைதான். இப்போதுள்ள கலிப்பகையாரின் மாமன்..."

"கேள்விப்பட்டிருக்கின்றேன், அந்த வீர புருஷரை மணம் செய்து கொள்வதாக இருந்த திலகவதியாரைப் பற்றியும் கேட்டிருக்கிறேன்" என்று பரஞ்சோதி பக்தி பரவசத்துடன் கூறினான்.

"உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறதே! நீ பெரிய சைவன் போலிருக்கிறதே!" என்றான் அவ்வீரன்.

"ஆம், ஐயா! என் உற்றார், உறவினர் எல்லாரும் சைவர்கள். திருநாவுக்கரசு அடிகளைத் தரிசிப்பதற்கென்றே நான் கிளம்பிக் காஞ்சிக்கு வந்தேன்..." என்று கூறிப் பரஞ்சோதி சட்டென்று நிறுத்தினான்.

"அப்படியா, தம்பி! நானும் சைவன்தான் திருநாவுக்கரசரை நீ காஞ்சியில் தரிசிக்கவில்லையா?"

"இல்லை!"

"ஏன்?"

"அதற்குள் இந்த வேலை வந்து விட்டது."

"எந்த வேலை?"

பரஞ்சோதி சற்று நிதானித்து, "ஐயா! என்னுடைய வேலை என்ன என்பது பற்றி நீங்கள் ஒன்றும் கேட்காவிட்டால், நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்றான்.

"ஆஹா! நீ வெகு புத்திசாலிப் பிள்ளை!" என்றான் அவ்வீரன்.

பிறகு சொன்னான், "தம்பி! உன் மாதிரியே எனக்கு ஒரு புதல்வன் இருக்கிறான். உன் வயதேதான் அவனுக்கும் இந்தப் பிரயாணத்தில் என்னோடு தானும் வர வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தான். நான் கூடாது என்று தடுத்துவிட்டேன். அதனால் அவனுக்கு என் பேரில் கோபம்.."

இப்படிப்பட்ட ஒரு வீரத் தந்தையைப் பெற்ற அதிர்ஷ்டசாலியைக் குறித்துப் பரஞ்சோதியின் மனத்தில் சிறிது பொறாமை உண்டாயிற்று. அந்தத் தகாத எண்ணத்தைப் பரஞ்சோதி மறக்க முயன்றவனாய், "ஐயா! வைஜயந்தி யுத்தத்தைப் பற்றி கூறி இடையில் நிறுத்திவிட்டீர்களே! அந்தப் போரில் சேனாதிபதி கலிப்பகை உயிர் துறந்ததாகச் சொன்னீர்கள். ஆனால், பல்லவ சைனியத்துக்கு வேறு சேனாதிபதி கிடைக்கவில்லையா? தோற்று ஓடிய சளுக்கர்களைத் தொடர்ந்து பல்லவ சைனியம் ஏன் போகவில்லை?" என்று கேட்டான்.

"விசித்திரசித்தர் என்று பட்டப்பெயர் பெற்ற காஞ்சி சக்கரவர்த்தியை நீ பார்த்திருக்கிறாயா, தம்பி?" என்று பொருத்தமில்லாமல் கேட்டான் அவ்வீரன்.

பரஞ்சோதி மௌனம் சாதித்தான்.

அவனுடைய மௌனத்தைப் பாராட்டி அவ்வீரன் தலையை ஆட்டிவிட்டு மேலே சொல்லுகிறான்.

"விசித்திரசித்தர் அந்தக் காலத்தில் மிகமிக விசித்திரமான எண்ணங்களைக் கொண்டிருந்தார். உலகத்தில் யுத்தம் என்பதே கூடாது. பகைமையும் துவேஷமும் இருக்கக் கூடாது. எல்லா ஜனங்களும் சிற்பம் முதலிய கலைகளில் ஈடுபட்டு ஆடல் பாடல்களில் ஆனந்தமாய்க் காலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணங்கள் அவர் மனத்தில் குடிகொண்டிருந்தன. நமக்கு இருக்கிற இராஜ்யம் போதும். அதிகம் என்னத்திற்கு என்ற வைராக்கியத்தையும் கொண்டிருந்தார். அப்பேர்ப்பட்ட சமயத்தில் புலிகேசியினிடமிருந்து சமாதானக் கோரிக்கையும் கிடைக்கவே, யுத்தத்தை நிறுத்தும்படி கட்டளை போட்டு விட்டார்."

"புலிகேசி எப்போது அரசன் ஆனான்?"

"சிற்றப்பன் மங்களேசன், ராஜ்யத்தின் மேலுள்ள ஆசையினால், புலிகேசியையும் அவன் தம்பிகளையும் சிறையில் போட்டிருந்தான். மங்களேசன் வைஜயந்தியின் மேல் படையெடுத்தபோது புலிகேசியும் அவன் தம்பிமார்களும் சிறையிலிருந்து தப்பி வெளியே வந்து விட்டார்கள். தோல்வியடைந்து திரும்பிய மங்களேசனைக் கொன்று விட்டு வாதாபி மன்னனாகப் புலிகேசி முடி சூட்டிக்கொண்டான். உடனே காஞ்சிச் சக்கரவர்த்திக்குச் சமாதானத் தூது அனுப்பினான். நாகசர்ப்பத்துடன் சமாதானம் செய்து கொண்டதுபோல் அந்தப் பாதகனுடன் மகேந்திர சக்கரவர்த்தியும் அப்போது சமாதானம் செய்து கொண்டார். அதனுடைய விபரீதப் பலனை இப்போது அனுபவிக்கிறார்."

"என்ன விபரீதப் பலன்?"

"விபரீதப் பலன் என்னவா? புலிகேசியின் சைனியங்கள் இந்த யுத்தத்தில் வைஜயந்தியைக் கைப்பற்றிக் கொண்டு மேலேறி வருகின்றன என்று உனக்குத் தெரியாதா? இன்னொரு பயங்கரமான செய்தி கேள்விப்படுகிறேன். வைஜயந்தி பட்டணத்தைக் கைப்பற்றியவுடனே, புலிகேசி அந்த நகரிலிருந்த செல்வங்களையெல்லாம் கொள்ளையடித்து, நகரையே கொளுத்தும்படியாகக் கட்டளையிட்டான் என்று தெரிகிறது. இதை என்னால் நம்பவே முடியவில்லை ஒருவேளை உண்மையாயிருந்தால்?.."

"இருந்தால்.."

"உண்மையாயிருந்தால், 'காஞ்சி மகேந்திரவர்மருக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்,' என்றுதான் சொல்லுவேன். உலகத்தில் ராஜாக்களும் சக்கரவர்த்திகளும் 'போரிலே புலி' என்றும், 'சண்டையிலே சிங்கம்' என்றும் பட்டப்பெயர் வாங்குவார்கள். காஞ்சி சக்கரவர்த்தி 'சித்திரகாரப் புலி' என்று பட்டம் பெற்றிருக்கிறார் அல்லவா? அவருக்கு இதெல்லாம் வேண்டியதுதானே!"

பரஞ்சோதி மீண்டும் மௌனத்தில் ஆழ்ந்தான். வைஜயந்தி பட்டணம் எரிக்கப்பட்ட செய்தி அவன் மனத்தைக் கலக்கியிருந்தது.

சற்றுப் பொறுத்து அவ்வீரன், "தம்பி! எங்கே போகிறாய், என்ன காரியமாகப் போகிறாய் என்று உன்னை நான் கேட்கவில்லை. ஆனால், இன்று ராத்திரி எங்கே தங்குவதாக உத்தேசம் என்று சொல்லுவதில் உனக்கு ஆட்சேபம் ஒன்றும் இராதே?" என்றான்.

"இந்த மலையைத் தாண்டியதும் அப்பால் ஒரு மகேந்திர விடுதி இருப்பதாகச் சொன்னார்கள். அதில் தங்கலாமென்று எண்ணியிருந்தேன். இருட்டுவதற்கு முன்னால் மகேந்திர விடுதிக்குப் போய்ச் சேர்ந்து விடலாமென்று நினைத்தேன்."

"ஆ! அதோ பார் வெளிச்சத்தை! நீ சொன்ன மகேந்திர விடுதி அந்த வெளிச்சம் தெரிகிற வீடுதான். நானும் இன்றிரவு அங்கேதான் தங்கப் போகிறேன்" என்றான் அவ்வீரன்.

கும்பகர்ணன்

பிரயாணிகள் இருவரும் விடுதியை நெருங்கியபோது, அங்கே ஆயத்தமாகக் காத்திருந்த வீரர்கள் நால்வர் கையில் உருவிய கத்திகளுடன் பளிச்சென்று முன்னால் வந்து "நில்!" என்றார்கள். விடுதியின் வாசலில் நின்ற இன்னொரு வீரன் கையில் பிரகாசமான தீவர்த்தியைப் பிடித்துக் கொண்டிருந்தான். அதன் ஒளியில் மற்ற நால்வருடைய கையிலும் இருந்த கத்திகள் மின்னித் திகழ்ந்தன.

அப்போது அந்தக் குதிரை வீரன் தன் அங்கியினுள்ளிருந்து ஏதோ ஓர் அடையாளத்தை எடுத்துக் காட்டவே, அந்த வீரர்கள் நால்வரும் சிறிது மரியாதையுடன் ஒதுங்கி நின்று அவனுக்கு வழி விட்டுப் பின்னால் வந்த பரஞ்சோதியை அணுகினார்கள். குதிரை வீரன் திரும்பிப் பார்த்து, "அவனும் என்னுடன் வருகிறான்!" என்று சொல்லவே, பரஞ்சோதிக்கும் அவர்கள் வழி விட்டார்கள்.

மூத்த பிரயாணி, விடுதித் தலைவனிடமும் மேற்சொன்ன அடையாளத்தைக் காட்டி, "நாங்கள் இருவரும் இன்று இரவு விடுதியில் தங்க வேண்டும். குதிரைகளுக்கும் தீனி வேண்டும்" என்றான்.

விடுதி தலைவன் மற்ற வீரர்களைப் போலவே மரியாதையுடன் "அப்படியே ஐயா!" என்று மறுமொழி கூறினான். இதெல்லாம் பரஞ்சோதிக்கு மிக்க வியப்பை அளித்தது. அந்த வீரன் ஏதோ பெரிய இராசாங்க காரியமாகப் போகிறான் என்றும் பரஞ்சோதி ஊகித்துக் கொண்டான். ஒருவேளை பல்லவ சைனியத்தைச் சேர்ந்த பெரிய தளபதியாகக் கூட அவன் இருக்கலாம் என்றும் சந்தேகித்தான். தான் இப்போது ஏற்றுக் கொண்டிருக்கும் காரியம் ஒருவிதமாக முடிந்த பிறகு, இந்த வீரன் எங்கே இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து இவனுடைய சிநேகிதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பரஞ்சோதிக்கு உண்டாயிற்று.

இருவரும் உணவு அருந்தியபோது, அவ்வீரன் பரஞ்சோதியைப் பார்த்து, "தம்பி வைஜயந்தி யுத்தத்தைப் பற்றி உனக்குச் சொன்னேனல்லவா? அந்தக் காலத்தில் எனக்குக் கிட்டத்தட்ட உன் வயதுதான் இருக்கும். அப்போது ஒரு தடவை நான் இந்த விடுதியில் தங்கியிருக்கிறேன். அன்றிரவு எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது!" என்றான்.

"அது என்ன?" என்று பரஞ்சோதி ஆவலுடன் கேட்டான்.

"தம்பி! இத்தனை நேரமும் நாம் ஒருவர் பெயரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே பேசிக் கொண்டிருக்கிறோம். என் பெயரைத் தெரிவிப்பதில் எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. எனக்கு என் தாய் தந்தையர்கள் இட்ட பெயர் வஜ்ரபாஹு. ஆனால், என் சினேகிதர்கள் என்னைக் கும்பகர்ணன் என்று அழைப்பார்கள். தூங்கினால் அப்படித் தூங்குவேன். இன்று போலவே அன்றைக்கும் நாளெல்லாம் பிரயாணம் செய்திருந்தபடியால் அசந்து தூங்கி விட்டேன். அப்போது என்ன நடந்தது தெரியுமா?"

"ஏதாவது பிசாசு சொப்பனம் கண்டு உளறியடித்துக் கொண்டு எழுந்தீர்களாக்கும்!" என்று பரஞ்சோதி குறும்பாகக் கூறினான்.

அதைக் கேட்ட வஜ்ரபாஹு நகைத்து விட்டு, "இல்லை இல்லை! அதைவிட ஆபத்தான விஷயம்! வீடு இடிந்து என் மேலே விழுந்துவிட்டது போல் சொப்பனம் கண்டு கண்ணை விழித்துப் பார்த்தபோது, ஐந்தாறு தடியர்கள் என்மேல் உட்கார்ந்து அமுக்கிக் கொண்டிருந்தார்கள். இரண்டுபேர் என் இடுப்பைத் தடவிக் கொண்டிருந்தார்கள் என்னத்திற்காகத் தெரியுமா?"

"ஐயா! என்னை ஞானதிருஷ்டியுள்ளவன் என்று நினைத்துக் கொண்டீர்களா? தாங்கள் சொல்லாவிட்டால் எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் பரஞ்சோதி.

"நல்லது, தம்பி! நான் சேனாதிபதி கலிப்பகையாருக்குக் கொண்டுபோன ஓலையைத் தஸ்கரம் செய்வதற்காகத்தான். என் இடுப்பில் அந்த ஓலை இருக்குமென்று அந்த முரடர்கள் எண்ணினார்கள்!"

"ஆஹா!" என்றான் பரஞ்சோதி அவனை அறியாமல் அவனுடைய வலது கை இடுப்பைத் தொட்டுப் பார்த்தது. இது ஒரு கணந்தான் மறுகணம் கை பழைய நிலையை அடைந்தது.

ஆனால், அந்த ஒரே கணநேரச் செய்கையை வீரன் வஜ்ரபாஹுவின் தீவிரமான கண்கள் கவனிக்காமல் போகவில்லை.

"அப்புறம் என்ன ஆயிற்று, ஐயா! அந்த முரடர்களுக்குத் தாங்கள் கொண்டுபோன ஓலை கிடைத்ததா?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"ஓலை கிடைக்கவில்லை என்னுடைய கை முஷ்டியினால் தலைக்கு ஏழெட்டுக் குட்டுக்கள் கிடைத்தன! பெற்றுக்கொண்டு தலை தப்பியது தம்பிரான் புண்ணியமென்று ஓட்டம் பிடித்தார்கள்!"

பரஞ்சோதி சிரித்துவிட்டு, "அந்த முட்டாள்களுக்கு நன்றாய் வேண்டும்! உங்களுடைய கும்பகர்ணத் தூக்கத்தைக் கலைத்தார்கள் அல்லவா? யாராவது ஒருவன் தனியாக வந்து இடுப்பைத் தடவியிருந்தால் ஒருவேளை ஓலை கிடைத்திருக்கும்" என்றான்.

"அப்போதும் கிடைத்திராது" என்றான் வஜ்ரபாஹு.

"ஏன்? நீங்கள்தான் கும்பகர்ணன் மாதிரி தூங்குவேன் என்று சொன்னீர்களே?"

"உண்மைதான், தம்பி! ஆனால், ஓலை இடுப்பில் இருந்தால் தானே கிடைக்கும்?"

"பின் வேறு பத்திரமான இடத்தில் அதை வைத்துக் கொண்டிருந்தீர்களா?"

"ஆமாம், அக்கினி பகவானிடமே ஒப்படைத்து விட்டேன்."

"இதென்ன? நல்ல தூதராயிருக்கிறீர்களே? ஓலையை நெருப்பிலே போட்டுவிட்டு எதற்காகப் பிரயாணம் செய்தீர்கள்?"

"ஓலையை நெருப்பிலே போடுவதற்கு முன்னால் அதைப் படித்து விஷயத்தை மனத்தில் பதிய வைத்துக்கொண்டேன்."

"ஓஹோ! இராஜாங்க தூதர்கள் அப்படிக் கூடச் செய்யலாமா என்ன?"

"சமயோசிதமாகக் காரியம் செய்யத் தெரியாதவன் இராஜாங்க தூதுவனாக இருக்கவே அருகனில்லை, தம்பி! இம்மாதிரி அபாயம் ஏதாவது நேரலாமென்று நான் எதிர் பார்த்தேன். எனவே, முன் ஜாக்கிரதையாகக் காரியம் செய்தேன், அதற்காகச் சக்கரவர்த்தியிடமிருந்து எனக்கு வெகுமதியும் கிடைத்தது."

இதையெல்லாம் கேட்ட பரஞ்சோதியின் உள்ளம் பெரிதும் குழப்பத்துக்கு உள்ளாயிற்று. இரவில் விடுதிகளில் தங்க நேர்ந்தால், மற்றவர்கள் படுக்கும் அறையில் படுக்கக் கூடாது என்று புத்த பிக்ஷு எச்சரித்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. நல்லவேளையாக அன்றிரவு படுத்துக்கொள்வதற்கு அவனுக்குத் தனி அறையே கொடுத்தார்கள்.

வஜ்ரபாஹுவும், "தம்பி! இனி மேல் உன் வழி வேறு. என் வழி வேறு. நான் அதிகாலையில் எழுந்து போய்விடுவேன். உன்னை எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. எப்போதாவது உதவி தேவையிருந்தால் என்னிடம் வரத் தயங்காதே!" என்று சொல்லி விடைபெற்றுப் படுக்கச் சென்றான்.

பரஞ்சோதி படுத்துக்கொள்ளும்போது, வஜ்ரபாஹு கூறிய அனுபவம் அவனுக்கு ஞாபகம் இருந்தபடியால், அயர்ந்து தூங்கி விடக்கூடாது என்றும், ஏதாவது சத்தம் கேட்டால் பளிச்சென்று எழுந்துவிட வேண்டுமென்றும் மனத்திற்குள் சங்கல்பம் செய்து கொண்டான். ஆனால், வாலிபப் பருவமும், நாளெல்லாம் பிரயாணம் செய்த களைப்பும் சேர்ந்து, படுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அவனை நித்திரையில் ஆழ்த்திவிட்டன.

எனினும் அவனுடைய தூக்கம் அமைதியான தூக்கமாக இருக்கவில்லை. பயங்கரமான கனவுகள் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருந்தன. செந்நிறப் புரசம் பூக்கள் நிறைந்த பிரதேசத்தில் ஆவி வடிவத்துக் குதிரை வீரர்களுக்கு மத்தியில் தானும் ஓர் ஆவி வடிவமாகி ஓயாது சுற்றி அலைந்து கொண்டிருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அலைந்து அலைந்து களைத்துப் போன பிறகு ஒரு மலைக்குகையில் அவன் போய்ப் படுத்துக் கொள்கிறான். கனவிற்குள் தூங்குவதாகக் கனவு காண்கிறான்! ஆனால், அந்தத் தூக்கத்திலும் நினைவு இருந்துகொண்டிருக்கிறது. கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன. பிசாசுகள் ஒன்று மாற்றி ஒன்று வந்து அவனுடைய இடுப்பைத் தடவுகின்றன. 'நல்ல வேளை ஓலை இடுப்பில் இல்லை! தலைக்கு அடியில் வைத்துக் கொண்டிருக்கிறோம்' என்று தோன்றுகிறது. கண்ணைத் திறந்து பார்த்தால் அந்தப் பிசாசுகள் ஓடிவிடுமென்று அவன் எண்ணுகிறான். ஆனால், எவ்வளவு முயன்றும் கண்களைத் திறக்கவே முடியவில்லை.

அப்புறம் எங்கேயோ வெகு தூரத்தில் ஒரு கொள்ளிவாய்ப் பிசாசு காணப்படுகிறது. அதை அழைத்துக் கொண்டு ஒரு கரும் பிசாசு அவனை நோக்கி வருகிறது. அருகே, அருகே, அவை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றன! கொள்ளிவாய்ப் பிசாசின் வாயிலுள்ள தீயின் ஒளியினால் அவனுடைய மூடியுள்ள கண்கள் கூசுகின்றன. கடைசியில், அந்த ஒளியின் கடுமையைப் பொறுக்க முடியாமல் கண்ணிமைகள் திறந்து கொள்கின்றன.

ஆனால், எதிரில் வந்தவை கொள்ளிவாய்ப் பிசாசும் இல்லை. கரும் பிசாசும் இல்லை என்பதை அவனுடைய திறந்த கண்கள் தெரிவிக்கின்றன. வீரன் வஜ்ரபாஹுவும், அவனுக்குப் பின்னால் கையில் விளக்கு ஏந்திக் கொண்டு அந்த விடுதியின் தலைவனுந்தான் வந்து கொண்டிருந்தார்கள்!

பரஞ்சோதி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அவனுடைய வலது கை அருகில் தரையில் கிடந்த வேலைப் பற்றியது.

ஓலைத் திருட்டு

வஜ்ரபாஹு சாவதானமான குரலில், "தம்பி பொறு! வேலைக் கைப்பற்றுவதற்குப் பதிலாகப் பொறுமையைக் கைப்பற்று. நாங்கள் பேய் பிசாசு இல்லை. 'பிசாசு சொப்பனம் கண்டீரா?' என்று என்னைப் பரிகாசம் செய்தாயே? நீ பிசாசு சொப்பனம் கண்டு அலறிய அலறலில் இந்த விடுதியிலுள்ள எல்லாரும் அல்லவா எழுந்திருக்க வேண்டியதாயிற்று?" என்றான்.

பரஞ்சோதி தான் அத்தகையை கனவு கண்டது உண்மை என்ற எண்ணத்தினால் வெட்கமடைந்து ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

பிறகு, "பொழுது விடிந்து விட்டதா? புறப்படலாமா?" என்று கேட்டுக்கொண்டு எழுந்தான்.

"அழகுதான்! இப்போது அர்த்த ராத்திரி. விடுதியில் பத்திரமாய்ப் படுத்திருக்கும்போதே இப்படிப் பயந்து உளறுகிறவன், நடு நிசியில் தனி வழியே எப்படிப் போவாய்? அப்படிப் போவதாயிருந்தால், 'அம்மா!' அம்மா!' என்று கனவிலே அலறினாயே, அந்தப் புண்ணியவதி எங்கே இருக்கிறாள் என்றாவது சொல்லி விட்டுப் போ! பிள்ளையின் கதியைப்பற்றி அன்னைக்குச் செய்தியாவது சொல்லி அனுப்புகிறோம்" என்றான் வஜ்ரபாஹு.

இந்த வார்த்தைகள் எல்லாம் கூரிய முட்களைப் போல் பரஞ்சோதியின் உள்ளத்தில் சுரீல் சுரீல் என்று தைத்தன.

"நீங்கள் நேற்றுச் சாயங்காலம் பயங்கரமான கதைகளைச் சொன்னீர்கள் அல்லவா? அதனால்தான் சொப்பனம் காணும்படி ஆயிற்று" என்று பரஞ்சோதி சமாதானம் சொன்னான்.

"போகட்டும்! இனிமேலாவது சற்று நேரம் நிம்மதியாய்த் தூங்கு. இந்தத் தீபம் இங்கேயே இருக்கட்டும்" என்றான் வஜ்ரபாஹு என்னும் வீரன். அவ்விதமே தீபத்தை வைத்துவிட்டு வஜ்ரபாஹுவும் விடுதித் தலைவனும் அங்கிருந்து சென்றார்கள்.

அவர்கள் போன பிறகு பரஞ்சோதி கண்களை மூடிக்கொண்டு தூங்கப் பார்த்தான் ஆனால் தூக்கம் வரவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தான். எழுந்து உட்கார்ந்தான். மறுபடியும் படுத்தான். அப்படியும் தூக்கம் வரவில்லை. அவர்கள் வைத்துவிட்டுப் போன தீபம் ஒரு பக்கம் அவனுடைய கண்களைக் கூசச் செய்தது. விளக்கை அணைத்து விடலாமா என்று ஒருகணம் நினைத்தான். உடனே, வேறு ஒரு நினைவு பளிச்சென்று தோன்றியது. எழுந்து உட்கார்ந்து தலைமாட்டில் துணியைச் சுற்றி வைத்திருந்த மெல்லிய சிறு மூங்கிற் குழாயை எடுத்தான். அதற்குள்ளிருந்த ஓலைக் கற்றையை வெளியில் எடுத்துத் தீபம் வைத்திருந்த இடத்துக்கு அருகிலே சென்று உட்கார்ந்தான்.

ஓலையைப் பிரித்து வைத்துக்கொண்டு உற்றுப் பார்த்தான். ஆகா! என்ன ஏமாற்றம்! அதில் ஏதோ எழுதியிருந்தது! மிக நெருக்கமாக எழுதியிருந்தது! ஆனால், என்ன எழுதியிருந்தது? அது தான் தெரியவில்லை. அதில் எழுதி இருந்தது தமிழ் எழுத்து அல்ல. சமஸ்கிருதமோ, பிராகிருதமோ, பாலி பாஷையோ தெரியவில்லை. ஆகா! கல்வி ஒருவனுக்கு எவ்வளவு அவசியமானது! தாய்ப் பாஷை ஒன்று மட்டும் தெரிந்தால்கூடப் போதாது, ஒரு தேசத்தில் வழங்கும் மற்ற பாஷைகளும் தெரிந்திருக்க வேண்டும். இத்தனை காலமாகக் கல்வி பயிலாமல் தமிழைக் கூட நன்றாய்ப் பயிலாமல் காலம் கழித்துவிட்டதை நினைத்துப் பரஞ்சோதி அப்போது வருத்தப்பட்டான்.

இத்தனை காலம் கழித்துக் காஞ்சிக்குக் கல்வி பயிலுவதற்காகக் கிளம்பி வந்தோமே? அதாவது நடந்ததா? நாம் வந்த சமயத்தில்தானா இந்த யுத்தக் குழப்பங்கள் எல்லாம் வர வேண்டும்? இந்த ஆபத்தான காரியம் நம் தலையிலேயா அமர வேண்டும்? இப்படி எண்ணமிட்டுக் கொண்டேயிருந்தபோது பரஞ்சோதிக்குத் தூக்கம் வருகிறாற்போல் இருந்தது. கண்ணிமைகள் கனத்துத் தாமாகவே மூடிக்கொள்ளப் பார்த்தன. தீபத்தடியிலிருந்து எழுந்து ஏற்கெனவே படுத்திருந்த மேடைக்குப் போகப் பரஞ்சோதி எண்ணினான். ஆனால், அந்த எண்ணத்தை அவனால் நிறைவேற்ற முடியவில்லை. தூக்க மயக்கம் அவனை மீறி மேலோங்கிற்று. அப்படியே தரையில் படுத்தான் சிறிது நேரத்தில் நினைவற்ற நிலையை அடைந்தான். அவன் கையிலிருந்து நழுவிய ஓலை தரையில் கிடந்தது.

சற்றுப் பொறுத்து அறைக் கதவு மெதுவாகத் திறந்தது. வஜ்ரபாஹு ஓசைப்படாமல் உள்ளே வந்தான். தரையில் கிடந்த ஓலைச் சுருளை எடுத்துக்கொண்டு அறையின் கதவை மீண்டும் சாத்திவிட்டு வெளியேறினான்.

வெளியேறிய வஜ்ரபாஹு இரண்டு மூன்று அறைகளைக் கடந்து சென்று விடுதியின் ஒரு மூலையில் இருந்த பெரிய அறைக்குள் புகுந்தான். அங்கே குத்துவிளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் அருகில் உட்கார்ந்து பரஞ்சோதியிடமிருந்து அபகரித்துக்கொண்டு வந்திருந்த ஓலையைக் கவனமாகப் படிக்கலானான்.

முதலில் சற்று நேரம் அவன் ஏட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய புருவங்கள் நெரிந்தன. நெற்றி சுருங்கியது. சில சமயம் மேலே நிமிர்ந்து கூரையை நோக்கியவண்ணம் யோசித்தான். சில சமயம் கையை நெரித்துக் கொண்டு பூமியை நோக்கிய வண்ணம் சிந்தித்தான். சற்றுநேரம் தீபத்தை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். கடைசியாக, அவனுடைய முகம் பளிச்சென்று மலர்ந்தது. உடனே, விரைவாகவும் உற்சாகத்துடனும் அந்த ஓலைக்கட்டிலிருந்து நாலு ஏடுகளையும் படித்து முடித்தான்.

பிறகு, பக்கத்தில் வைத்திருந்த வெற்று ஓலையில் நாலு எடுத்து அதே அளவில் கத்திரித்து வைத்துக்கொண்டு எழுதத் தொடங்கினான். துரிதமாக எழுதி முடித்துப் பரஞ்சோதி கொண்டு வந்திருந்த ஓலையையும் இதையும் ஒப்பிட்டு நோக்கினான். பரஞ்சோதியின் ஓலையை அவ்விடமே பத்திரப்படுத்தி வைத்துவிட்டுத் தான் எழுதிய ஓலையுடனே பரஞ்சோதியின் அறையை நோக்கிச் சென்றான். அங்கே பரஞ்சோதி இன்னும் தீபத்துக்குப் பக்கத்தில் மயங்கிக் கிடப்பதையும் தீபம் அணையும் தறுவாயில் இருப்பதையும் பார்த்தான். அறையில் அப்போது இலேசான புகை ஒருவித அபூர்வமணம் கமழ்ந்து கொண்டிருந்த புகை சூழ்ந்தது. மூக்கைத் துணியினால் மூடிக் கொண்டு வஜ்ரபாஹு அவ்வறைக்குள் நுழைந்தான். ஓலை முன்னே கிடந்த இடத்திலேயே தான் கொண்டு வந்த ஓலையைப் போட்டுவிட்டுத் தீபத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்த திரியை உள்ளுக்கு இழுத்து எண்ணெயில் நனைத்து அணைத்தான் இவ்வளவும் அதி சீக்கிரமாகச் செய்துவிட்டு மறுகணமே அந்த அறையைவிட்டு வெளியேறினான்.

மீண்டும் தன்னுடைய அறைக்குச் சென்று வஜ்ரபாஹு பரஞ்சோதியிடமிருந்து தான் அபகரித்த ஓலையை இன்னொரு தடவை நன்றாகப் படித்துப் பார்த்துவிட்டு, அதை ஏடு ஏடாக எடுத்து விளக்கின் ஜுவாலையில் காட்டித் தகனம் செய்தான். அப்படித் தகனம் செய்து கொண்டிருந்த போது அவனுடைய உள்ளம் தீவிரமாகச் சிந்தனை செய்து கொண்டிருந்தது என்பதை அவனுடைய முகக்குறி காட்டியது.

நாலு ஏடுகளையும் எடுத்துச் சாம்பலாக்கிய பிறகு, இன்னும் நாலு வெற்று ஏடுகளை எடுத்து எழுத்தாணியினால் எழுதத் தொடங்கினான். முன்போல் இம்முறை இவன் வேகமாகவும் இடைவிடாமலும் எழுதவில்லை. இடையில் நிறுத்தி நிறுத்தி யோசித்து எழுதினான். அவன் எழுதி முடித்து ஓலை ஏடுகளைக் குழாயில் போட்டபோது, பலபலவென்று கிழக்கு வெளுத்தது. உச்சி வானத்துக்குச் சற்று மேற் காணப்பட்ட பாதி மதி பிரகாசத்தை இழந்து பாண்டு வர்ணம் அடைந்து கொண்டிருந்தது. விண்மீன்களும் ஒளி குன்றத் தொடங்கின. பட்சிகளின் தனிக் குரல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் கேட்கலாயின.

பரஞ்சோதி கண்விழித்துப் பார்த்தபோது, அறைக்குள்ளே பலகணி வழியாக உதய நேரத்தின் இளம் வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அருகில் தரையில் கிடந்த ஓலையை அவன் ஆர்வத்துடன் தாவி எடுத்துக்கொண்டு அதை உடனே குழாயில் போட்டு இடுப்பிலும் செருகிக்கொண்டான். முதல்நாள் இரவில் அவன் பயங்கரக்கனவு கண்டது, வஜ்ரபாஹுவும் விடுதித் தலைவனும் வந்து விளக்கு வைத்து விட்டுப் போனது, தூக்கம் பிடியாமல் விளக்கண்டை வந்து ஓலையைப் படிக்கத் தொடங்கியது. கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்தது ஆகிய எல்லாம் அவனுடைய நினைவுக்கு வந்தன. இன்னமும் அவன், தலை இலேசாகச் சுற்றிக்கொண்டிருந்தது. வயிற்றிலும் கொஞ்சம் சங்கடம் இருந்தது.

ஏதோ ஓர் அபூர்வமான வாசனை அவ்வறையில் சூழ்ந்திருப்பதையும் அவன் உணர்ந்தான். ஆனால், இதிலெல்லாம் அவனுடைய கவனம் அதிக நேரம் நிற்கவில்லை. "ஓலையைத் தரையில் போட்டு விட்டு இவ்வளவு நேரம் தூங்கி விட்டோ மே, என்ன அசட்டுத்தனம்!" என்கிற எண்ணத்தினால் ஏற்பட்ட வெட்கம் மற்ற நினைவுகளையெல்லாம் போக்கடித்தது. அதே சமயத்தில் குதிரையின் காலடிச் சத்தம் காதில் விழவே, விழுந்தடித்து எழுந்திருந்து வாசற்புறம் சென்றான். அங்கே விடுதித் தலைவனும் காவலர்களும் நின்று சற்றுத் தூரத்தில் போய்க் கொண்டிருந்த குதிரையைப் பார்த்த வண்ணம் இருப்பதைக் கண்டான்.

"ஓஹோ! வஜ்ரபாஹுவா போகிறார் அதற்குள்ளே புறப்பட்டு விட்டாரா?" என்று பரஞ்சோதி வினவியதைக் கேட்டு அவர்கள் அவன் பக்கம் திரும்பிப் பார்த்தார்கள்.

குதிரை கண்ணுக்கு மறைந்த பிறகு, "ஐயா! வஜ்ரபாஹு என்கிறவர் யார்? உங்களுக்குத் தெரியுமா?" என்று பரஞ்சோதி காவலர்களைப் பார்த்துக் கேட்டான்.

"உன்னைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றல்லவா நினைத்திருந்தோம்!" என்று காவலர்களில் ஒருவன் கூறினான்.

"இன்னாரென்று தெரியாமலா நேற்றிரவு அவருக்கு அவ்வளவு மரியாதை செய்தீர்கள்?"

"காரணமில்லாமல் மரியாதை செய்யவில்லை அவரிடம் சிங்க முத்திரை போட்ட இலச்சினை இருந்ததே, உனக்குத் தெரியாதா?"

"சிங்க இலச்சினை என்றால் அதில் என்ன விசேஷம்?"

"வெகு முக்கியமான இராஜாங்கக் காரியமாகப் போகிறவர்கள் சிங்க இலச்சினை வைத்திருப்பார்கள்!"

காவலர்களில் ஒருவன், "அவர் யாராக இருக்கும்?" என்று மற்றவர்களைப் பார்த்துக் கேட்டான்.

"அமைச்சர்களில் ஒருவராயிருக்கலாம்" என்றான் ஒருவன்.

"சேனாதிபதி கலிப்பகையை நீக்கிவிட்டு வேறொரு சேனாதிபதியைச் சக்கரவர்த்தி அனுப்பப் போவதாகக் கேள்வி. புதிய சேனாதிபதியாக இருந்தாலும் இருக்கலாம்" என்றான் ஒருவன்.

"சேனாதிபதியை மாற்றுவதற்கு என்ன காரணம்? உனக்குத் தெரியுமா?" என்று கேட்டான் விடுதித் தலைவன்.

"வேறு காரணம் வேண்டுமா, என்ன? வாதாபி சைனியம் வடபெண்ணையை நெருங்கிவிட்டதாகக் கேள்வி. அப்படி இருக்க, நம் சேனாதிபதி வடக்கு மண்டலத்துச் சைனியத்தை இருந்த இடத்திலேயே வைத்துக் கொண்டிருப்பது போதாதா?"

"சக்கரவர்த்தியிடம் யோசனை கேட்கச் சேனாதிபதி கலிப்பகை காஞ்சிக்கே போயிருக்கிறாராமே?"

"அதனால்தான் சக்கரவர்த்திக்குக் கோபமாம். 'நீர் சேனாதிபதி பதவி வகித்தது போதும்' என்று சொல்லி விட்டாராம்!"

இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்த பரஞ்சோதி, "ஐயா! என் குதிரை எங்கே? நானும் கிளம்ப வேண்டும்" என்றான்.

பரஞ்சோதியைப் பற்றி அவர்கள் இன்னும் சிறிது விசாரித்து விட்டு, "நீ எங்கே போகிறாய்?" என்று கேட்டார்கள்.

"வடபெண்ணைக் கரையிலுள்ள பௌத்த மடத்துக்குப் போகவேண்டும். இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்?" என்று பரஞ்சோதி வினவினான்.

அவர்கள் வஜ்ரபாஹு சென்ற திசையைக் காட்டி, "இந்த வழியே போனால் உச்சி வேளையில் வடபெண்ணையைச் சேரலாம். அங்கிருந்து கரையோடு மேற்கே போக வேண்டும். போனால் பாபாக்னி நதி வடபெண்ணையுடன் கலக்கும் இடத்தில் பௌத்தமடம் இருக்கிறது!" என்று கூறி அவனுடைய குதிரையையும் கொடுத்தார்கள்.

பரஞ்சோதி குதிரைமீதேறிக் கிளம்பியபோது, அடடா! வஜ்ரபாஹுவும் இதே வழியில் போகிறவராயிருக்க, சற்று முன்னாலேயே எழுந்து அவருடனே கிளம்பாமல் போனேனே! அவருடன் போயிருந்தால் வழிப் பிரயாணம் எவ்வளவு உற்சாகமாக இருந்திருக்கும்? களைப்பே தெரியாமல் கதை கேட்டுக் கொண்டே ஆனந்தமாய்ப் பிரயாணம் செய்திருக்கலாமே? என்று எண்ணமிட்டான்.

மடாலயம்

பரஞ்சோதிக்கு, முன் அத்தியாயங்களில் கூறிய ஆச்சரியமான அனுபவங்கள் நேர்ந்து கொண்டிருந்த அதே தினம் மாலை நேரத்தில், காஞ்சி மாநகரில் அவனைப் பற்றிப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. பல்லவ குலம் தழைக்க வந்த குமார சக்கரவர்த்தி மாமல்ல நரசிம்மரும் சைவந் தழைக்க வந்த திருநாவுக்கரசு சுவாமிகளும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாமல்லபுரத்திலிருந்து திரும்பிவந்த அன்றிரவு மகேந்திர சக்கரவர்த்தி தம் செல்வப் புதல்வரை அழைத்துக் கொண்டு மாறுவேடத்துடன் கோட்டைக்கு வெளியே சென்றார். குதிரைகளை ஒரு மறைவான இடத்தில் நிறுத்திவிட்டு மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் மதிலைச் சூழ்ந்திருந்த அகழியின் கரையோரமாக அவர்கள் நடந்து சென்றார்கள்.

திடீரென்று அகழியில் படகு செலுத்தும் சத்தம் கேட்டு நரசிம்மர் அளவிறந்த வியப்புக்கு உள்ளானார். அவரைச் சத்தம் செய்யவேண்டாமென்று சமிக்ஞை காட்டினார் மகேந்திரர். இருவரும் அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டார்கள்.

"ஆம்; படகு ஒன்று அகழியில் சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டியவன் சத்தம் அதிகமாகக் கேளாதபடி சர்வ ஜாக்கிரதையாகத் துடுப்புகளைப் போட்டுக் கொண்டிருந்தான். படகு அக்கரையில், அதாவது, மதில் ஓரத்தில் போய் நின்றது. அதிலிருந்து இருவர் இறங்கினார்கள். அந்தச் சிறு படகை அவ்விருவருமாக இழுத்துக் கரையேற்றினார்கள். மதிலின் பக்கத்தில் அடர்த்தியாக வளர்ந்திருந்த ஒரு புதரின் மறைவில் அதைத் தள்ளினார்கள்.

மதிலண்டை சென்று அவர்கள் நின்றது ஒரு கணம்! அடுத்த கணத்தில் இருவரும் மாயமாய் மறைந்தார்கள். ஒரு பிரம்மாண்டமான சிலந்திப் பூச்சியானது தன் அருகில் வந்த இரண்டு கொசுக்களை ஒரு நொடியில் நாக்கை நீட்டி விழுங்கி விட்டு பழையபடி சலனமற்றிருப்பது போல், அந்தக் காஞ்சிக் கோட்டையானது தன்னை நெருங்கிய இருவரையும் கண்ணிமைக்கும் நேரத்தில் விழுங்கிவிட்டு மறுபடியும் அசைவற்றிருப்பது போலத் தோற்றமளித்தது.

இதையெல்லாம் பார்த்ததனால் குமார சக்கரவர்த்திக்கு உண்டான பிரமிப்பு நீங்குவதற்கு முன்னால், அங்கு இன்னொரு வியப்பான சம்பவம் ஏற்பட்டது. பக்கத்திலிருந்த வேறொரு புதரிலிருந்து ஓர் ஆள் திடீரென்று கிளம்பி வந்தான். அவன் சக்கரவர்த்திக்குத் தண்டம் சமர்ப்பித்து விட்டுப் பணிவுடன் நின்றான்.

அவனைப் பார்த்துச் சிறிதும் வியப்புறாத மகேந்திரர், "சத்ருக்னா! இந்தச் சுவரிலுள்ள கதவு எங்கே திறக்கிறதென்று ஊகிக்கிறாய்?" என்று கேட்டார்.

"இராஜ விஹாரத்தில் புத்தர் சிலைக்குப் பின்னால் திறக்கலாம், சுவாமி!" என்றான் சத்ருக்னன்.

"சுவரில் கதவு வைத்தவன் மிகவும் கெட்டிக்காரனாக இருக்கவேண்டும், இல்லையா?" "கதவு வைத்தவனைக் காட்டிலும் மேலே வர்ணம் பூசியவன் கெட்டிக்காரன் பிரபு! பட்டப்பகலில் இவ்விடமெல்லாம் வந்து பார்த்தேன் கதவு ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை."

"ரொம்ப நல்லது சத்ருக்னா! நாளைக்கு நான் வட திசைக்குப் பிரயாணப்படுகிறேன்."

"பிரபு! நானும் ஆயத்தமாயிருக்கிறேன்."

"இல்லை; நீ என்னுடன் வரவேண்டாம். மறு கட்டளை பிறக்கும் வரையில் இந்த நாகநந்தியை நீ தொடர வேண்டும்.."

"தொண்டை நாட்டை விட்டு அவர் போனால்.."

"அப்போதுந்தான்.."

"சோழநாடு, பாண்டியநாடு சென்றால்..."

"பின்னோடு போகவேண்டும். யாரிடமாவது பிக்ஷு ஓலை ஏதாவது அனுப்பினாரானால்..?"

"என்ன செய்யவேண்டுமென்று தெரியும், சுவாமி! ஆனால் செங்காட்டங்குடி வாலிபனிடம் அவர் அனுப்புகிற ஓலை?"

"அதை நான் பார்த்துக் கொள்கிறேன் எந்த முகாந்திரத்தினாலும் நாகநந்தியைத் தவறவிடக்கூடாது. ஏதாவது விசேஷம் இருந்தால் எனக்குச் செய்தியனுப்ப வேண்டும்."

"ஆக்ஞை, பிரபு!"

சக்கரவர்த்தியும் நரசிம்மரும் அங்கிருந்து அரண்மனைக்குத் திரும்பியபோது, "இராஜ விஹாரத்தை உடனே மூடிக் கோட்டை மதிலிலுள்ள துவாரத்தையும் அடைத்துவிட வேண்டாமா?" என்று மாமல்லர் கேட்டார்.

"கூடாது குழந்தாய், கூடாது. அதற்குக் காலம் வரும்போது செய்யலாம். இப்போது பகைவர்களின் சூழ்ச்சிகளை அறிவதற்கு அந்த இரகசியக் கதவு நமக்கு உதவியாக இருக்கும்" என்று சக்கரவர்த்தி மறுமொழி கூறினார்.

சக்கரவர்த்தி வடதிசைக்குப் பிரயாணமான பிறகு, காஞ்சிக் கோட்டைக்குள்ளே மாமல்லருக்குப் பொழுது போவது மிகவும் சிரமமான காரியமாயிருந்தது. ஆயனர் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் புத்த பிக்ஷுவும் பரஞ்சோதியும் ஒளிந்திருந்ததை மகேந்திரர் ஊகித்தறிந்தது, மதில் சுவரில் இருந்த இரகசியக் கதவை அவர் கண்டுபிடித்தது முதலிய காரியங்களினால் சக்கரவர்த்தியிடம் குமாரருக்கு ஏற்கெனவே இருந்த மதிப்பு பன்மடங்கு அதிகமாகியிருந்தது. ஆகவே, காஞ்சிக் கோட்டைக்கு வெளியே போகக் கூடாது என்ற தந்தையின் கட்டளையை மீறும் எண்ணமே அவருக்கு உதிக்கவில்லை.

ஆனால், இராஜ்யத்தில் பெரிய பெரிய காரியங்கள் நடந்து கொண்டிருக்கும்போது, மகத்தான யுத்தம் நெருங்கி வந்து கொண்டிருந்தபோது, கோட்டைக்குள்ளே ஒரு காரியமுமின்றி அடைந்து கிடப்பது அவருக்குப் பரம சங்கடத்தை அளித்தது. கழுக்குன்றத்தில் பல்லவ சைனியங்கள் திரண்டு கொண்டிருக்கின்றனவே, அங்கே போய்ப் படைகளைப் பார்க்கவாவது தந்தையிடம் அனுமதி பெறாமல் போனோமே என்று மாமல்லர் ஏக்கமடைந்தார். அப்பால் மாமல்லபுரம் போகவும் அவரிடம் அனுமதி பெற்றிருந்தால்...?"

ஆம்; எத்தனையோ எண்ணங்களுக்கிடையில் சிவகாமியைப் பற்றிய நினைவும் மாமல்லருக்கு அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்தது. அவள் தீட்டிய தாமரைக்கும் மானுக்கும் மத்தியில் தாம் வரைந்திருந்த வேலை அவள் பார்த்தாளோ, இல்லையோ? பார்த்திருந்தால், அதன் பொருளைத் தெரிந்து கொண்டிருப்பாளோ? அதனால் திருப்தியடைந்திருப்பாளோ?

தந்தையிடம் நாம் வாக்குக் கொடுத்திருக்கும் விஷயம் அவளுக்குத் தெரியாதல்லவா? ஆதலின், தன்னைப் பார்க்க வரவில்லையே என்று அவளுக்குக் கோபமாகத்தான் இருக்கும். அவள்தான் இங்கு ஏன் வரக்கூடாது?... ஆனால் அவள் எப்படி வருவாள்? ஆயனருக்குத்தான் தந்தை அவ்வளவு கடுமையான கட்டளையிட்டிருக்கிறாரே, வேலையை விட்டுவிட்டு அவர் வரமுடியாதல்லவா?"

இவ்விதம் குமார சக்கரவர்த்தியின் உள்ளம் பலவித சிந்தனைகளில் ஆழ்ந்திருந்தது. செய்வதற்கு வேலை ஒன்றும் இல்லாதபடியால் அவருடைய மனவேதனை அதிகமாயிற்று.

இந்த நிலைமையில் திருநாவுக்கரசு சுவாமிகள் காஞ்சிக்குத் திரும்பி வந்துவிட்டார் என்று அறிந்ததும் மாமல்லர் அவரைத் தரிசித்துவிட்டு வரலாமென்று எண்ணினார். சுவாமிகளிடம் தெரிவிக்கும்படிச் சக்கரவர்த்தி கூறியிருந்த செய்தி ஒன்று இருந்தது. எனவே, ஒரு நாள் மாலை ஏகாம்பரேசர் திருக் கோயிலுக்கருகிலிருந்த நாவுக்கரசர் மடாலயத்துக்கு அவர் சென்றார். நாவுக்கரசர் குமார சக்கரவர்த்தியை அன்புடன் வரவேற்றுத் தாம் சென்றிருந்த ஸ்தலங்களின் மகிமையைப் பற்றிக் கூறினார். சக்கரவர்த்தி வடநாடு சென்றிருப்பது பற்றியும், பல்லவ இராஜ்யத்தில் யுத்தம் வந்திருப்பதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

பின்னர் சுவாமிகள் கூறினார்: "மாமல்லரே! சக்கரவர்த்தியிடம் ஒரு விஷயம் தெரிவித்துக் கொள்ள எண்ணியிருந்தேன். அவர் இல்லாதபடியால் தங்களிடம் சொல்லுகிறேன். இந்த இடத்திலிருந்து நமது மடத்தை அப்பாற்படுத்தித் திருமேற்றளியில் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். இந்த ஏகாம்பரர் கோயில் நகருக்கு மத்தியிலே இருப்பதால் இங்கே அமைதி கிட்டுவதில்லை. மேலும், இங்கே நம்முடைய சீடர்களுக்கும் பக்கத்திலுள்ள கடிகை ஸ்தானத்தில் வடமொழி பயிலும் மாணாக்கர்களுக்கும் ஓயாமல் வாக்குவாதமும் போட்டியும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆரியம், தமிழ் இரண்டையும் அளித்த எம்பெருமான் ஒருவரே என்று அவர்களுக்கு எவ்வளவோ சொல்லியும் பயனில்லை. இளங்காளைப் பருவமல்லவா? அப்படித்தான் கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். ஏகாம்பரநாதர் கோயிலில் கூட்டம் போட்டிருக்கும் காபாலிகர்களின் தொல்லையும் பொறுக்க முடியவில்லை. அதனால் திருமேற்றளியில் எழுந்தருளியிருக்கும் இறைவன் சந்நிதிக்குப் போய்விடலாமென்று பார்க்கிறேன். இவ்விடத்தைக் காட்டிலும் அங்கே அமைதியாயிருக்கிறது."

சிரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்த குமார சக்கரவர்த்தி கூறினார்: "சுவாமி! முன்னால் ஏகாம்பரர் கோவிலிலிருந்து இந்தக் கபாலிகர்களையெல்லாம் துரத்திவிட வேண்டுமென்று சொன்னேன். தாங்கள் தான் வேண்டாம் என்கிறீர்கள். தங்கள் விருப்பத்தின்படி திருமேற்றளியில் மடத்தை அமைத்துக் கொள்வதில் ஆட்சேபமில்லை. ஆனால், சக்கரவர்த்தி தங்களிடம் தெரிவிக்கச் சொன்ன விஷயத்தைத் தெரிவிக்கிறேன். பிறகு, தங்கள் உசிதம் போல் செய்யலாம். யுத்தம் தொண்டை நாட்டுக்கே வந்துவிடலாமென்றும், இந்தக் காஞ்சி நகரம் முற்றுகைக்கு உள்ளாகலாமென்றும் பல்லவேந்திரர் கருதுகிறார். யுத்தம் ஒருவிதமாக முடியும் வரையில் தாங்கள் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் தீர்த்த யாத்திரை செல்வது நலம் என்ற அவருடைய அபிப்பிராயத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தச் சொன்னார். அதுவரையில் நமது மடத்தை மூடி வைத்துவிடுவது உசிதம் என்றும் சக்கரவர்த்தி கருதுகிறார். இதைப்பற்றி யோசித்து தங்கள் சித்தம்போல் முடிவு செய்யலாம்."

நாவுக்கரசர் சிறிது நேரம் சிந்தனை செய்துவிட்டு, "சக்கரவர்த்தியின் யோசனை எனக்கும் சம்மதமாகத்தான் இருக்கிறது. ஆனால், முன்னமே தெரியாமல் போயிற்று. திருமேற்றளியில் மடத்திருப்பணி ஆரம்பிப்பதற்காக ஆயனரை வரும்படி நான் சொல்லியனுப்பியிருக்கிறேன்... ஒரு விதத்தில் அதுவும் நல்லதுதான். நீண்ட யாத்திரை கிளம்புவதற்கு முன்னால் ஆயனச் சிற்பியாரை ஒரு தடவை பார்த்துவிட்டுப் போகலாம்" என்றார்.

ஆயனர் வருகிறார் என்று கேட்டதும் மாமல்லரின் உள்ளத்தில் குதூகலம் உண்டாயிற்று. "ஆயனர் எப்போது வருவார், சுவாமி?" என்று ஆர்வத்துடன் கேட்டார்.

"ஒருவேளை இன்று மாலையே வரக்கூடும்" என்று நாவுக்கரசர் பெருமான் கூறியதும், ஆயனர் வரும்வரையில் தாமும் அங்கே இருப்பது என்று மாமல்லர் தீர்மானித்துக் கொண்டார்.

"சுவாமி! திருச்செங்காட்டங்குடியிலிருந்து தங்களுக்கு ஓலை கொண்டுவந்த வாலிபனை ஆயனர் நாகார்ஜுன பர்வதத்துக்கு அனுப்பியிருக்கிறாரே, தெரியுமா?" என்று கேட்டார்.

"அது என்ன? எனக்கு ஒன்றும் தெரியாதே?" என்று சுவாமிகள் சொல்ல, நரசிம்மர் பரஞ்சோதியைப் பற்றித் தாம் அறிந்திருந்த விவரங்களைக் கூறினார்.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, வாசற்புறமிருந்து உள்ளே ஒரு சீடன் விரைவாக வந்து, "ஆயனர் வருகிறார்!" என்று அறிவிக்க, எல்லாருடைய கண்களும் வாசற்புறம் நோக்கின.

இரண்டாவது அரங்கேற்றம்

திருநாவுக்கரசு அடிகளுக்கு அப்போது ஏறக்குறைய ஐம்பத்தைந்து பிராயமிருக்கலாம். அப்பெருமானுடைய பொன் வண்ணத் திருமேனி முழுவதும் தூய வெண்ணீறு பூசியிருந்தது. அவருடைய கழுத்தையும் மார்பையும் ருத்திராட்ச கண்டிகைகளும் தாழ்வடங்களும் அலங்கரித்தன. சிரசிலும் கரங்களிலும் அவ்வாறே ருத்திராட்சங்கள் பொலிந்தன. காதுகளிலும் ருத்திராட்ச குண்டலங்கள் இலங்கின. இடையில் தூய வெண் துகில் உடுத்தியிருந்தார். அவருடைய திருமுகத்தில் ஞான ஒளி வீசிற்று. இறைவனை நினைந்து இடையறாது கண்ணீர்விட்ட அவருடைய கண்களில் பேரருள் ததும்பிற்று. கோயில் பிரகாரங்களில் புல் செதுக்குவதற்கான உழவாரப்படை அந்தத் தொண்டர் சிகாமணியின் திருத்தோளில் சாத்தப்பட்டிருந்தது.

திருநாவுக்கரசர் காஞ்சியில் அமைந்திருந்த சைவத் திருமடத்துக்கு அதிபராக விளங்கியபோதிலும், அவ்வப்போது ஸ்தல யாத்திரை சென்று திரும்புவது வழக்கம். தொண்டை நாட்டிலும் சோழ நாட்டிலும் உள்ள பல சிவ ஸ்தலங்களுக்கு அவர் சென்று சிவாநந்தமும் தமிழின்பமும் ததும்பும் தெய்வத் திருப்பதிகங்களைப் பாடினார். சென்ற இடங்களிலெல்லாம் ஜனங்கள் அவரைச் சிவிகையில் ஏற்றி ஊர்வலம் நடத்திச் சிறப்பாக வரவேற்றார்கள். அவர் சென்ற ஒவ்வொரு ஸ்தலத்திலும் கோயில் பிரகாரங்களில் முளைத்திருக்கும் புல்லை அவர் தம் கையில் பிடித்த உழவாரப்படையினால் செதுக்கிச் சுத்தம் செய்தார். இந்தச் சிவகைங்கரியத்தை ஆயிரக்கணக்கான மக்கள் அதிசயத்துடன் பார்த்தார்கள். அதுமுதல் தங்கள் ஊர்க் கோயில்களைப் புதுப்பித்துச் சுத்தமாக வைத்திருக்கத் தீர்மானித்தார்கள்.

வாகீசப் பெருமானுடைய திருவாக்கினால் தத்தம் ஊரிலுள்ள கோயிலுக்கு மகிமை உண்டாக வேண்டும் என்று ஜனங்கள் விரும்பினார்கள். "எங்கள் ஊருக்கும் விஜயம் செய்யவேண்டும். எங்கள் ஊர்க் கோயிலைப் பற்றியும் பாடி அருள வேண்டும்" என்று அவரிடம் வேண்டிக் கொண்டார்கள்.

அவ்விதம் அப்பெருமான் பாடிய பாடல்களை அந்தந்த ஊர்க்காரர்கள் ஓலைச் சுவடிகளில் எழுதிக் கொண்டு பெறுதற்கரிய பேறு அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தார்கள்.

இத்தகைய மகிமை வாய்ந்த நாவுக்கரசர் எழுந்தருளியிருக்கும் இடங்களில் ஜனங்கள் அருளொளி விளங்கிய அவருடைய திருமுகத்தைப் பார்த்துக் கொண்டும் அவருடைய திருவாக்கிலிருந்து எப்போது, என்ன அமுத வார்த்தை வருமோ என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டும் இருப்பார்கள்.

அங்ஙனமிருக்க, இன்று அவருடைய சொந்த மடாலயத்தில் அவரிடம் பக்தி பூண்டு தொண்டு செய்யும் சீடர்கள்கூட, "ஆயனர் வருகிறார்!" என்ற சொல்லைக் கேட்டதும் ஒருமுகமாக வாசற்பக்கம் திரும்பிப் பார்த்தார்கள் என்றால், அதிலிருந்து மக்களின் உள்ளத்தில் ஆயனச் சிற்பியார் எப்பேர்ப்பட்ட இடம் பெற்றிருந்தார் என்று ஊகித்து அறியலாம்.

அங்கிருந்தோர் எல்லாரையும்விட நாவுக்கரசரின் அருகில் வீற்றிருந்த குமார சக்கரவர்த்தியின் உள்ளத்திலேதான் அதிகப் பரபரப்பு உண்டாயிற்று. 'இதோ ஆயனர் வருகிறார்!' என்ற வார்த்தைகளைக் கேட்டதும், 'ஒருவேளை அவருடன் சிவகாமியும் வருவாளோ!' என்ற எண்ணம் அவர் மனத்தில் தோன்றிக் கிளர்ச்சியை உண்டாக்கிற்று. அடுத்த கணத்தில், 'அவள் எதற்காக இங்கு வருகிறாள்?' என்ற எண்ணம் மனச் சோர்வை உண்டாக்கியது. இவ்விதம் அவர் மாறி மாறிக் கிளர்ச்சியும் சோர்வும் அடைவது அதிக நேரம் நீடித்திராதபடி இதோ ஆயனர் வாசற்படியண்டை வந்து விட்டார்! ஆகா! என்ன 'ஜல் ஜல்' சத்தம்; பாத சரத்தின் ஒலிபோல் இருக்கிறதே! அதோ, ஆயனருக்குப் பின்னால் வரும் பெண்? சந்தேகமென்ன சிவகாமியேதான்!

குமார சக்கரவர்த்தியின் கண்கள் சிவகாமியின் முகத்தை நோக்கின. சிவகாமியின் கண்களும் முதன்முதலில் மாமல்லரின் ஆவல் ததும்பிய கண்களைத்தான் சந்தித்தன. வாடியிருந்த சிவகாமியின் முகத்தில் ஒருகணம் புதுமலர்ச்சி காணப்பட்டது. ஆனால், ஒருகண நேரந்தான்! அடுத்த கணத்தில் அந்தச் செந்தாமரை முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தன. தலை குனிந்து பூமியை நோக்கிய வண்ணம் சிவகாமி தன் தந்தையைப் பின் தொடர்ந்து அந்த மண்டபத்திற்குள்ளே நுழைந்தாள்.

நயன பாஷையில் நடைபெற்ற மேற்படி நாடகத்தை வேறு யாரும் கவனியாத வண்ணம் மண்டபத்துக்குள் அப்போது பெரும் கலகலப்பு ஏற்பட்டிருந்தது.

பணிவுக்குப் பெயர்போன நாவுக்கரசர் பெருமான், ஆயனர் மண்டபத்துக்குள்ளே நுழைந்ததும் தானும் ஆசனத்தை விட்டு எழுந்து நாலு அடி நடந்து எதிர்கொண்டு, "வரவேணும்! சிற்ப சக்கரவர்த்தியே! வரவேணும்!" என்று உபசரித்து அழைத்தார்.

ஆயனர் இதைக் கண்டதும் விரைந்து முன்னால் வந்து, "அபசாரம்! அபசாரம்" என்று கூறி கொண்டே திருநாவுக்கரசரின் திருப் பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.

நாவுக்கரசர் ஆசனத்தைவிட்டு எழுந்தபோது அவருடன் எழுந்த சீடர்கள், நாவுக்கரசரும் ஆயனரும் அமர்ந்த பிறகு தாங்களும் தத்தம் இடத்தில் அமர்ந்தார்கள்.

எல்லாரும் உட்கார்ந்த பிறகும் சிவகாமி மட்டும் ஆயனருக்குப் பின்னால் தலைகுனிந்த வண்ணம் நின்று கொண்டிருந்தாள். அப்போதுதான் அவளைப் பார்த்த நாவுக்கரசர், "ஆகா! இந்தப் பெண் யார், ஆயனரே? தங்கள் குமாரி சிவகாமியா?" என்று கேட்க, ஆயனர் "ஆம், அடிகளே! தங்களைத் தரிசிக்கப் போகிறேன் என்று சொன்ன போது சிவகாமி 'நானும் வருகிறேன்' என்றாள்! அழைத்துக் கொண்டு வந்தேன்" என்றார்.

"மிக்க சந்தோஷம் உங்கள் குமாரியைப் பார்க்க வேண்டுமென்று நானும் மிக்க ஆவலாயிருந்தேன். நடனக் கலையிலே அவள் அடைந்திருக்கும் அபூர்வத் தேர்ச்சியைப் பற்றிக் கேள்விப்பட்டேன். சமீபத்தில் அரங்கேற்றம் நடந்ததாமே? நான்தான் அச்சமயம் இல்லாமற் போய்விட்டேன்" என்று நாவுக்கரசர் கூறினார்.

"எனக்கும் அது மிக வருத்தமாயிருந்தது, சுவாமி! அன்று சிவகாமியின் நடனத்தைப் பார்த்துவிட்டு ருத்ராச்சாரியார் பிரமித்துப் போய்விட்டார். சிற்பம், சித்திரம், சங்கீதம் ஆகிய கலைகளுக்கெல்லாம் நடனக்கலைதான் ஆதாரம் என்பதை அன்றைக்குத்தான் அவர் ஒத்துக்கொண்டார். 'சிவகாமியின் நடனத்தைப் பார்த்த பிறகு சங்கீதக் கலையில் நான் கற்க வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறதென்பதை அறிந்தேன்' என்று சபை நடுவில் வாய்விட்டுச் சொன்னார்..."

இவ்விதம் ஆயனர் கூறியபோது அவருடைய குரலிலும் முகத்திலும் பெருமிதம் கொந்தளித்தது. அப்போது வாகீசர், "ஆயனரே! சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய தெய்வக்கலைகளுக்கு ஆதாரமும் நடனந்தான்! அண்ட பகிரண்டங்களையெல்லாம் படைத்துக் காத்து அழிக்கும் பெருமான் தில்லைச் சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் பயில்கிறார் அல்லவா?" என்று திருவாய் மலர்ந்தார்.

இதுவரை மௌனமாக இருந்த குமார சக்கரவர்த்தி, "சுவாமி! நடராஜப் பெருமானின் ஆனந்த நடனத்தைப் பற்றிய தங்களுடைய பாடல் ஒன்றுக்கு, அன்று ஆயனர் மகள் அபிநயம் பிடித்தாள். தாங்கள் அதை அவசியம் பார்க்க வேண்டும்!" என்றார்.

"ஆம், சுவாமி! தங்களுடைய மூன்று திருப்பாடல்களுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பதாயிருந்தாள். ஆனால், ஒரு பாடலுக்குத்தான் அபிநயம் பிடிக்க முடிந்தது. அரங்கேற்றம் நடுவில் நின்ற செய்தி கேட்டிருப்பீர்களே!" என்று ஆயனர் கூறியபோது, அதனால் ஏற்பட்ட வருத்தம் இன்னும் அவருக்குத் தீரவில்லையென்று தோன்றியது.

"கேள்விப்பட்டேன், ஆயனரே! யுத்தத்தினால் சிவகாமியின் அரங்கேற்றம் மட்டுந்தானா தடைப்பட்டது? இன்னும் எத்தனையோ காரியங்கள் தடைபடும் போலிருக்கின்றன. உம்மை நான் அழைத்த காரியம் கூட அப்படித்தான்!" என்று வாகீசப் பெருமான் கூறினார்.

"சுவாமி! என்ன காரியமாக என்னை வரச்சொல்லிப் பணித்தீர்கள்?" என்று ஆயனர் கேட்டார்.

"நமது திருமடத்தை இந்த ஏகாம்பரர் சந்நிதியிலிருந்து திருமேற்றளிக்குக் கொண்டு போக வேண்டுமென்று விரும்பினேன். இந்த இடம் நகரின் மத்தியில் இருப்பதால் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கு உகந்ததாயில்லை. ஆனால் திருமேற்றளியில் அமைதி குடிகொண்டிருக்கிறது. கோயிலைச் சுற்றியுள்ள நந்தவனத்தில் மல்லிகை மலர்களும் கொன்றை மலர்களும் பூத்துக் குலுங்குகின்றன. சந்தடி கூச்சல் ஒன்றும் கிடையாது. இறைவனைத் துதிப்பதற்கும் தமிழ் பயில்வதற்கும் திருமேற்றளி தக்க இடம்."

"பெருமானே! திருமேற்றளி இறைவன் மீது பாடல் ஏதாவது பாடப் பெற்றதோ?" என்று ஆயனர் கேட்க, நாவுக்கரசர் தமது சீடர்களைப் பார்த்தார். உடனே ஒரு சீடர் திருமேற்றளிப் பதிகத்திலிருந்து பின்வரும் பாடலைப் பாடினார்:

"செல்வியைப் பாகங்கொண்டார்  
    சேந்தனை மகனாக் கொண்டார்  
மல்லிகைக் கண்ணி யோடு  
    மாமலர்க் கொன்றை சூடிக்  
கல்வியிற் கரை யிலாத  
    காஞ்சிமா நகர்தன் னுள்ளார்  
எல்லியல் விளங்க நின்றார்  
    இலங்குமேற் றளிய னாரே!"

மேற்கண்ட பாடலைச் சீடர் இனிய குரலில் உருக்கமாய்ப் பாடிவந்தபோது நாவுக்கரசர் பெருமானின் கண்களில் நீர் ததும்பி நின்றது. திருமேற்றளிக் கோயிலில் மல்லிகையும் கொன்றை மலரும் சூடிச் சூரியனைப்போல் ஜோதிமயமாக விளங்கிய சிவபெருமானை மீண்டும் அகக் கண்ணால் அவர் நேருக்கு நேரே தரிசித்துப் பரவசமடைந்தவராகத் தோன்றினார். அந்தக் காட்சியை அங்கிருந்த மற்றவர்கள் பார்த்துப் பரவசமடைந்திருந்தார்கள்.

பாடல் முடிந்து சிறிது நேரம் வரையில் மௌனம் குடிகொண்டிருந்தது. பின்னர், நாவுக்கரசர் பரவச நிலை நீங்கித் தம்மைச் சுற்றியிருந்தவர்களைப் பார்த்தார். உடனே ஆயனர், "அடிகளே! தாங்கள் உண்மையிலேயே நாவுக்கரசர்தான். தங்களுடைய திருவாக்கு அப்படி மகிமை வாய்ந்திருக்கிறது. தங்களுடைய பாடலில் இடம் பெற்று விட்டபடியால் இந்தக் காஞ்சி நகருக்கும் இதிலுள்ள திருமேற்றளிக்கும் இனி அழிவென்பதே இல்லை. தங்கள் விருப்பத்தின்படி திருமேற்றளியில் மடாலயத்திருப்பணியை மேற்கொள்ளச் சித்தமாயிருக்கிறேன். ஆனால் துறைமுகப்பட்டினத்தில் ஒரு முக்கியமான திருப் பணியைத் துரிதமாகச் செய்து முடிக்கும்படி சக்கரவர்த்தி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். எதை முதலில் செய்வது என்று குமார சக்கரவர்த்தி ஆக்ஞை இடவேண்டும்" என்று கூறி, மாமல்லரை நோக்கினார்.

ஆயனருடைய கேள்விக்கு மாமல்லர் மறுமொழி கூறுவதற்குள், நாவுக்கரசர் சொல்லுவார்: "அதற்கு இப்போது அவசியமேயில்லை. சிற்பியாரே! தாங்கள் வரும்போதுதான் சக்கரவர்த்தியின் அபிப்பிராயத்தை மாமல்லர் எனக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தார். யுத்தம் முடியும் வரையில் என்னைச் சிஷ்யர்களுடன் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் உள்ள ஸ்தலங்களைத் தரிசித்து வரும்படி சக்கரவர்த்தி யோசனை கூறியிருக்கிறார். எனக்கும் வெகுகாலமாக அந்த ஆசை உண்டு. காஞ்சிக் கோட்டை ஒரு வேளை பகைவர் முற்றுகைக்கு இலக்கானாலும் ஆகலாம், அம்மாதிரி சமயங்களில் என் போன்ற துறவிகள் விலகியிருப்பதே நல்லது."

இவ்விதம் நாவுக்கரசர் கூறியதைக் கேட்ட நரசிம்மவர்மர் "அடிகளே! தாங்கள் இப்போது கூறிய அபிப்பிராயம் போற்றத்தக்கது. அதைச் சமண முனிவர்களும் புத்த பிக்ஷுக்களும் ஒப்புக் கொண்டு அரசியல் விஷயங்களில் தலையிடாமல் நடந்து கொண்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்?" என்றார்.

புத்த பிக்ஷு என்ற வார்த்தையைக் கேட்டதும் ஆயனருக்குச் சுருக்கென்றது. அதோடு பரஞ்சோதியைப் பற்றிய நினைவும் வந்தது.

"அடிகளே! ஒரு விஷயம் தெரிவிக்க மறந்துவிட்டேன். தங்களுடைய மடாலயத்தில் சேர்ந்து தமிழ் கற்பதற்காக ஒரு பிள்ளை சோழ நாட்டில் திருச்செங்காட்டங்குடியிலிருந்து வந்தான். திருவெண்காட்டு நமசிவாய வைத்தியரிடமிருந்து தங்களுக்கும் எனக்கும் அவன் ஓலை கொண்டு வந்திருந்தான். சித்திரக்கலை சம்பந்தமான ஒரு மகா இரகசியத்தை அறிந்து வருவதற்காக அவனை வடக்கே ஸ்ரீ பர்வதத்துக்கு அனுப்பியிருக்கிறேன்...."

"அவ்வளவு தூரமா அனுப்பியிருக்கிறீர்கள்? அங்கேயெல்லாம் யுத்தம் நடக்கும் இடமாயிற்றே? சிறு பிள்ளை என்று சொன்னீர்கள்?" என்று நாவுக்கரசர் சிறிது கவலையுடன் கேட்டார்.

"சிறு பிள்ளையாயிருந்தாலும் மகா வீரன் சுவாமி!" என்று ஆயனர் கூறி, அரங்கேற்றத்தன்று மதயானை மீது அவன் வேல் எறிந்ததை விவரித்தார்.

கடைசியாக, "பரஞ்சோதி திரும்பி வந்ததும் உடனே தங்களிடம் அனுப்பிவிடுகிறேன், சுவாமி!" என்றார் ஆயனர்.

"வேண்டாம் ஆயனரே! அவன் திரும்பிவரும் போது நான் எங்கே இருப்பேனோ, தெரியாது. எப்போது அவன் உங்கள் தொண்டில் ஈடுபட்டானோ, உங்களுடைய சீடனாகவே இருக்கட்டும். சிற்பக்கலை பயிலும் பேறு இலேசில் கிடைக்கக் கூடியதா? என்றும் அழிவில்லாத ஈசனுக்கும் என்றும் அழியாத கற்கோயில்களை அமைக்கும் கலையை காட்டிலும் சிறந்த கலை உலகில் வேறென்ன உண்டு...?"

ஆயனர் அப்போது குறுக்கிட்டு, "அடிகளே! சிற்பக் கலையைக் காட்டிலும் சிறந்த கலை வேறொன்று இருக்கிறது. எங்களுடைய கற்கோயில்கள் சிதைந்து உருத்தெரியாமல் அழிந்து போகலாம். ஆனால் தங்களுடைய கவிதைக் கோயில்களுக்கு ஒருநாளும் அழிவில்லை. கற்பகோடி காலம் அவை நிலை பெற்றிருக்கும்" என்றார்.

அப்போது குமார சக்கரவர்த்தி, "சற்று முன்னால் பேசி முடிவு செய்ததை இரண்டு பேரும் மறந்துவிட்டீர்களே? எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலையல்லவா?" என்று சொல்லவே, அங்கிருந்த எல்லாருடைய முகத்திலும் புன்னகை பூத்தது. ஆனால், சிவகாமி மட்டும் குனிந்த தலை நிமிராமலிருந்தாள்.

நாவுக்கரசர், "நல்லது, குமார சக்கரவர்த்தி! நாங்கள் மறந்து தான் போய்விட்டோ ம்! எல்லாக் கலைகளுக்கும் ஆதாரம் நடனக்கலைதான். தில்லையம்பலத்தில் ஆடும் பெருமான் முன்னால் நிற்கும் போது உள்ளமானது பொங்கிக் கவிதை வெள்ளமாய் வருவது போல் மற்ற மூர்த்தங்களுக்கு முன்னால் நிற்கும்போது வருவதில்லை!" என்று கூறிவிட்டு, ஆயனரைப் பார்த்து, "சிற்பியாரே! தங்கள் புதல்வியின் நடனத்தை நான் பார்க்க வேண்டாமா? தென்னாட்டுக்கு யாத்திரை சென்றால் திரும்பி எப்போது வருவேனோ தெரியாது. நாடெல்லாம் புகழும் சிவகாமியின் நடனக் கலையைப் பார்க்காமல் போக எனக்கு மனமில்லை. ஒரே ஒரு பாடலுக்கு அபிநயம் பிடித்துக் காட்டினாலும் போதும்!" என்றார்.

ஆயனர், "சுவாமி! சிவகாமிக்கு அத்தகைய பாக்கியம் கொடுத்து வைக்கவேண்டுமே?" என்று கூறி, தமக்குப் பின்னாலிருந்த சிவகாமியைத் திரும்பிப் பார்த்தார். அவள் முகமலர்ச்சியின்றித் தலை குனிந்த வண்ணம் இருப்பதைக் கண்டதும் ஆயனருக்குச் சிறிது வியப்பு உண்டாயிற்று.

இதையெல்லாம் கவனித்த மாமல்லர், "ஒருவேளை நான் இங்கு இருப்பதால் சிவகாமி ஆட விரும்பாமலிருக்கலாம். சுவாமி விடை கொடுங்கள்! போய் வருகிறேன்!" என்று நாவுக்கரசரைப் பார்த்துக் கூறினார்.

இந்த வார்த்தை காதில் விழுந்ததும் சிவகாமி பளிச்சென்று துள்ளி எழுந்து, நடனத்துக்கு ஆயத்தமாக நின்று, "அப்பா! எந்தப் பாடலுக்கு அபிநயம் பிடிக்க வேண்டும்!" என்று கேட்டது அழகிய மான்குட்டி ஒன்று குயிலின் குரல் பெற்று அமுதத் தமிழ் மொழியின் மழலை பேசுவதுபோல் தொனித்தது.

"பூவணத்துப் புனிதனார் முதலில் தோன்றட்டுமே!" என்று ஆயனர் பெருமிதம் தோன்றக் கூறினார்.

நாவுக்கரசர், கலை அரசர், இளவரசர் ஆகிய மூன்று மன்னர்களின் முன்னிலையில் சிவகாமியின் நடனக் கலை அரங்கேற்றம் இரண்டாவது முறை ஆரம்பமாயிற்று.

மந்த மாருதத்தில் மிதந்து வரும் தேன் வண்டின் ரீங்காரம் போன்ற குரலில் சிவகாமி பின்வரும் திருத் தாண்டகத்தைப் பாடிக்கொண்டு, அதன் பொருளுக்கேற்ப அங்கங்களின் சைகைகளினாலும் முகபாவத்தினாலும் அபிநயம் பிடித்தாள். பாடலில் ஒவ்வொரு வரியிலும், 'தோன்றும்' 'தோன்றும்' என்று வந்த போது, சிவகாமியின் பாதரசங்கள் 'ஜல்' 'ஜல்' என்று தாளத்துக்கிசைய ஒலித்தன.

"வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்  
    வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்  
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணிதோன்றும்  
    காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்  
இடியேறு களிற்றுரிவைப் போர்வைதோன்றும்  
    எழில்திகழும் திருமுடியும் இலங்கித்தோன்றும்  
பொடியேறு திருமேனி பொலிந்துதோன்றும்  
    பொழில்திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே."

இந்த தெய்வீகமான பாடலைப் பாடிக்கொண்டு சிவகாமி அதன் பொருளுக்கேற்ப அபிநயம் பிடித்தபோது, அங்கிருந்தவர்கள் எல்லாரும் தங்களை மறந்தார்கள். தாங்கள் இருக்குமிடத்தை மறந்தார்கள். அங்கு நடப்பது என்ன என்பதையும் மறந்தார்கள்.

சற்று முன்னால் நாவுக்கரசரின் சீடர் பாடியபோது அவர்களுடைய செவிகளில் இனிய தமிழ்ச் சொற்கள் நின்றன. அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கின. அப்பாடலை அவர் அனுபவித்து உருகுவதைப் பார்த்து அவர்கள் மனமும் கசிந்தன.

சிவகாமி அபிநயம் பிடித்தபோது அவர்களுடைய கண்கள் நாவுக்கரசரை நோக்கவில்லை. குமார சக்கரவர்த்தியையோ, ஆயனச் சிற்பியாரையோ அவர்கள் காணவில்லை. அந்த மடாலயத்தின் சுவர்களோ, தூண்களோ அவற்றில் அமைந்திருந்த சிற்பங்களோ, சித்திரங்களோ அவர்கள் கண்ணில் படவேயில்லை.

அவர்கள் கண்முன்னால் பாடி ஆடி அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த சிவகாமியைக்கூட அவர்கள் பார்க்கவில்லை? பின் அவர்கள் யாரை அல்லது எதனைப் பார்த்தார்கள்? சாக்ஷாத் சிவபெருமானையே தங்கள் கண் முன்னால் தத்ரூபமாக நேருக்கு நேரே பார்த்தார்கள்! அவருடைய கரத்தில் தோன்றிய திரிசூலத்தையும், அவருடைய வளர் சடைமேல் இயங்கும் இளமதியையும் பார்த்தார்கள். அவருடைய திருமிடற்றில் கொன்றை மாலையைப் பார்த்தார்கள். காதிலே வெண் குழையைப் பார்த்தார்கள். திருநீறு பொழியும் திருமேனி முழுவதையும் பார்த்தார்கள். அந்தத் தெய்வீகக் காட்சியில் தங்களை மறந்தார்கள்; இந்தப் பூவுலகையே மறந்தார்கள். பூவுலகிலிருந்து கைலாசத்துக்கு அவர்கள் போய்விட்டார்கள். பாட்டும் அபிநயமும் நின்ற சிறிது நேரத்துக்குப் பிறகு தான் எல்லாரும் சுய உணர்வு பெற்றுப் பூவுலகிற்கு வந்து சேர்ந்தார்கள்.

சுய உணர்ச்சி தோன்றியதும், அனைவருடைய கவனமும் இயல்பாக நாவுக்கரசர்பால் சென்றது. அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகி வெண்ணீறு அணிந்த திருமேனியை நனைத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். இத்தனை நேரமும் பாவனைக் கண்ணால் தாங்கள் தரிசித்துக் கொண்டிருந்த சிவபெருமான் இந்த மகான்தானோ என்று அவர்களில் பலர் எண்ணினார்கள்.

சற்று நேரத்துக்கெல்லாம் நாவுக்கரசர் தழுதழுத்த குரலில், 'ஆயனரே! திருக்கயிலையில் வீற்றிருக்கும் எம்பெருமானைத் தங்கள் குமாரி எங்கள் முன்னால் பிரத்தியட்சமாகத் தோன்றச் செய்துவிட்டாள்!" என்றார்.

ஆயனரும் கண்களில் ஆனந்தக் காண்ணீர் ததும்ப, "எல்லாம் தங்கள் ஆசீர்வாதந்தான், சுவாமி!" என்று கூறி சிவகாமியைப் பார்த்து, "இன்னும் ஒரு பாட்டுக்கு அபிநயம் பிடிக்கிறாயா, அம்மா! இது அகத்துறைப் பாடலாக இருக்கட்டுமே!" என்றார்.

வாகீசரின் ஆசி

அகத்துறைப் பாடல் ஒன்றுக்கு அபிநயம் பிடிக்கும்படி ஆயனர் பணித்ததும், நாவுக்கரசரின் திருவாரூர்த் தாண்டகத்திலிருந்து ஓர் அருமையான பாடலைப் பழம்பஞ்சரம் என்னும் பண்ணிலே அமைத்துச் சிவகாமி பாடினாள்.

ஒரு கன்னிகை முதன் முதலிலே இறைவனுடைய திருநாமத்தைச் செவியுறுகிறாள். அப்போது அவளுடைய உள்ளத்தில் அரும்பும் பக்திக் காதலானாது. பின்னர் படிப்படியாக வளர்ந்து பெருங்கனலாகிக் கொழுந்து விட்டெரிகிறது. இந்த வரலாற்றை அற்புதமான முறையில் வர்ணிக்கும் அத்திருப்பாடல் பின்வருமாறு:

"முன்னம் அவனுடைய நாமம்கேட்டாள்  
    மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டாள்  
பின்னை அவனுடைய ஆரூர்கேட்டாள்  
    பெம்மான் அவனுக்கே பிச்சியானாள்  
அன்னையையும் அத்தனையும் அன்றேநீத்தாள்  
    அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தைத்  
தன்னை மறந்தாள்தன் நாமங்கெட்டாள்  
    தலைப்பட்டாள் நங்கை தலைவன்தாளே!"

பாடலை ஒரு முறை முழுவதும் பாடிவிட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள் சிவகாமி. அப்போது பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு இவ்வுலகம் தோன்றிய நாளிலிருந்து பெண் உள்ளத்தில் அரும்பி மலர்ந்த காதல் உணர்ச்சியே ஓர் உருக்கொண்டு அவர்கள் முன்னால் நிற்பதுபோல் தோன்றியது. முதன் முதலில் ஓர் இளம் கன்னிகையில் இதயத்தில் காதல் உதயமாகும்போது அதனுடன் பிறக்கும் நாணங்கலந்த இன்பப்பெருக்கை அவர்கள் கண்முன்னால் பார்த்தார்கள். காதல் வளர்ந்து வரும் ஆரம்ப தினங்களில் காதலனுடைய பெயரைக் கேட்கும் போதும், அவனுடைய இருப்பிடம் முதலிய வரலாறுகளை அறியும்போதும், அவனுடைய குணாதிசயங்கள் வர்ணிக்கப்படும்போதும் பெண் இதயத்தில் பொங்கித் ததும்பும் ஆனந்த குதூகலத்தையும் அதனால் அவளுடைய மேனியில் ஏற்படும் அதிசயமான மாறுதல்களையும் பிரத்தியட்சமாகப் பார்த்தார்கள். நாளடைவில் அந்தக் காதல் முற்றும்போது, எப்படி அது சித்தப்பிரமையின் சுபாவத்தை எய்திக் காதலியைப் பித்துப் பிடித்தவளாக்குகிறது என்பதையும், அந்த நிலையில் காதலுக்காகவும் காதலனுக்காகவும் பெண்ணானவள் எப்பேர்ப்பட்ட தியாகங்களையெல்லாம் செய்யச் சித்தமாகி விடுகிறாள் என்பதையும் கண்டார்கள். பெற்று வளர்த்த அன்னையையும் அப்பனையும் விட்டு விட்டுக் காதலனோடு புறப்படவும் காதலுக்குத் தடையாக நிற்கும் சமூக ஆசாரங்களையெல்லாம் புறக்கணித்து ஒதுக்கவும், ஊராரின் நிந்தனைகளையெல்லாம் பொறுத்துக்கொள்ளவும் எவ்வாறு அந்தப் பெண் மனம் துணிகிறாள் என்பதையும் நேருக்கு நேரே பார்த்தார்கள்.

வாக்கினால் விவரிக்க முடியாத மேற்சொன்ன உணர்ச்சிகளையெல்லாம் பெண் உள்ளத்தில் படிப்படியாகக் காதல் முதிர்ந்து வரும் அபூர்வ பாவங்களையெல்லாம், சிவகாமி அபிநயத்தில் காட்டிவந்தபோது, சபையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு, "இது சாமானிய மனித வர்க்கத்துக்குரிய காதல் அல்ல - அண்ட பகிரண்டங்களுக்கெல்லாம் இறைவனாகிய எம்பெருமானுக்கே உரிய தெய்வீகக் காதல்!" என்று தோன்றியது.

அவ்வளவுடன் நின்று விடவில்லை. காதல் பரிபூரணமடைவதற்கு இன்னும் ஒருபடி மேலே போக வேண்டியிருக்கிறது. காதலி தனக்காக இவ்வளவெல்லாம் தியாகங்களைச் செய்ய சித்தமாயிருந்தும், அந்தத் தெய்வக் காதலன் திருப்தியடையவில்லை. மேலும் அவளைச் சோதனைக்குள்ளாக்க விரும்பித் திடீரென்று ஒரு நாள் மறைந்து விடுகிறான். இதனால் சோகக்கடலிலே மூழ்கிய காதலி வெளியுலகை அடியோடு மறந்துவிடுகிறாள். தன்னையும் மறந்து விருகிறாள். தன் பெயரைக்கூட மறந்து விடுகிறாள். "உன் பெயர் என்ன?" என்று யாரேனும் கேட்டால், காதலனின் திருநாமத்தைச் சொல்லுகிறாள்! அத்தகைய மன நிலைமையில் மறுபடியும் தெய்வக் காதலன் அவள் முன்னால் தோன்றும்போது, காதலியானவள் தான் செய்யாத குற்றங்களுக்காகத் தன்னை மன்னித்து விடும்படி கோரி அவனுடைய திருப்பாதங்களில் பணிகிறாள்!

படிப்படியாக மேற்கூறிய உணர்ச்சிகளையெல்லாம் முக பாவத்திலும் கண்களின் தோற்றத்திலும் அங்கங்களின் அசைவிலும் சைகைகளிலும் காட்டிக் கொண்டு வந்த சிவகாமி, கடைசியில்,

"தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே!"

என்ற அடியைப் பாடிவிட்டுக் கூப்பிய கரங்களுடன் அடியற்ற மரம்போலத் தரையில் விழுந்தாள்!

உடனே சபையில் "ஹா! ஹா ஹா!" என்ற குரல்கள் எழுந்தன. 'சிவகாமி!' என்று கூவிக்கொண்டு ஆயனர் எழுந்தார். எழுந்து அவள் கிடந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினார். அவரைப் பின்தொடர்ந்து மாமல்லரும் பரபரப்புடன் சென்றார்.

ஆயனர் சிவகாமி கிடந்த இடத்துக்கு அருகில் தரையில் உட்கார்ந்தார். அவருடைய அங்கங்கலெல்லாம் பதறின. அதைப் பார்த்த மாமல்லர், தரையில் உதிர்ந்து கிடக்கும் மென்மையான மலர்களை அடியார் ஒருவர் இறைவனுடைய அர்ச்சனைக்காகப் பொருக்கும் பாவனையுடனே சிவகாமியைத் தமது இரு கரங்களாலும் மிருதுவாக எடுத்து ஆயனரின் மடியின்மீது இருத்தினார்.

அதற்குள்ளாக அங்கிருந்தவர்களில் பலர் எழுந்து ஓடிவந்து அம்மூவரையும் சுற்றிக்கொண்டார்கள். சிலர் "தண்ணீர்! தண்ணீர்!" என்றார்கள். சிலர் "விசிறி! சிவிறி!" என்றார்கள்.

"வழியை விடுங்கள்!" என்று ஒரு குரல் கேட்டது. நாவுக்கரசர் பெருமான் தமது ஆசனத்திலிருந்து எழுந்து சிவகாமியின் அருகில் வந்தார். ஆயனரின் மடியில் தலை வைத்து உணர்வின்றிப் படுத்திருந்த சிவகாமியின் முகத்தை அவர் கருணை ததும்பும் கண்களினால் பார்த்தார். தமது திருக்கரத்தில் கொண்டு வந்திருந்த திருநீற்றை அவளுடைய நெற்றியில் இட்டார்.

சற்று நேரம் அந்த மண்டபத்தில் ஊசி விழும் சத்தம் கேட்கும்படியான மௌனம் குடிகொண்டிருந்தது.

காலை நேரத்தில் கருங்குவளையின் இதழ் விரிவது போல சிவகாமியின் கண்ணிமைகள் மெதுவாகத் திறந்தன. திறந்த கண்கள் நாவுக்கரசரின் திருமுகத்தை முதலில் தரிசித்தன. தந்தையின் மடியில் படுத்தபடியே சிவகாமி இரு கரங்களைக் கூப்பி அம்மகாபுருஷரைக் கும்பிட்டாள்.

"நீ மகராஜியாய் இருக்க வேணும், குழந்தாய்!" என்று வாகீசப் பெருமான் ஆசி கூறினார்.

அந்த ஆசியைக் கேட்ட சிவகாமியின் பவள நிற இதழ்களில் புன்னகையின் ரேகை தோன்றியது. அது தாமரை மலர்கள் நிறைந்த தடாகத்தில் செவ்வாம்பல் பூவானது வெட்கத்தினால் தயங்கித் தயங்கி மடலவிழ்வதுபோல் இருந்தது.

பின்னர் அவளுடைய கருவிழிகள் இரண்டும், எதையோ தேடுவதைப்போல் அங்குமிங்கும் அலைந்து, கடைசியில் குமார சக்கரவர்த்தியின் திருமுகத்தைப் பார்த்ததும் அங்கேயே தங்கி விட்டன.

"அடிகள் எனக்குக் கூறிய ஆசி மொழி தங்கள் செவியில் விழுந்ததா?" என்று அக்கண்கள் மாமல்லரைக் கேட்டதுடன், அவருடைய குற்றங்களையெல்லாம் மறந்து மீண்டும் அவருடன் சிநேகமாயிருக்கச் சித்தமாயிருப்பதையும் தெரியப்படுத்தின.

மறுபடியும் நாவுக்கரசரின் திருக்குரல் கேட்கவே சிவகாமி பூரண சுய உணர்வு வந்தவளாய் சட்டென்று எழுந்து நின்றாள். இவ்வளவு பேருக்கு நடுவில் தான் மூர்ச்சையாகி விழுந்ததை எண்ண அவளுக்குப் பெரிதும் வெட்கமாயிருந்தது.

வாகீசர் கூறினார்: "ஆயனரே! பரதக் கலையின் சிறப்பைக் குறித்து நான் படித்தும் கேட்டும் அறிந்திருக்கிறேன். ஆனால் அதனுடைய பூரண மகிமையையும் இன்றுதான் அறிந்தேன். என்னுடைய வாக்கிலே வந்த பாடலில் இவ்வளவு அனுபவமும் இவ்வளவு உணர்ச்சியும் உண்டென்பதை இதற்கு முன்னால் நான் அறியவில்லை. தங்கள் குமாரியினால் பரத சாஸ்திரமே பெருமையடையப் போகிறது. உண்மையாகவே அது தெய்வக் கலையாகப் போகிறது. தில்லைப் பொன்னம்பலத்தில் திருநடனம் புரியும் இறைவனுக்கே அர்ப்பணமாக வேண்டிய அற்புதக் கலை இது!...

இவ்விதம் சுவாமிகளின் திருவாயிலிருந்து வெளியான அருள் மொழிகளை அனைவரும் ஆவலுடன் பருகிக் கொண்டிருந்த சமயத்தில் வீதியில் குதிரையொன்று விரைவாக வரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் மடத்தின் வாசலில் வந்து நின்றது. உடனே குமார சக்கரவர்த்தி மடத்தின் வாசற்படியை நோக்கிச் சென்றார்.

வாகீசர் அங்கே சூழ்ந்து நின்றவர்களைப் பார்த்து, "நீங்களும் போகலாம்" என்று சமிக்ஞையால் கூற, எல்லாரும் தயக்கத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றார்கள்.

மாமல்லர் வாசற்படியின் அருகில் நின்று ஏவலாளன் ஒருவனுடன் ஏதோ பேசிவிட்டு, உள்ளே வந்தார். நாவுக்கரசரை நோக்கிக் கைகூப்பி, "சுவாமி! மதுரையிலிருந்து தூதர்கள் ஏதோ அவசரச் செய்தியுடன் வந்திருக்கிறார்களாம் நான் விடைபெற்று கொள்கிறேன்" என்றார்.

"அப்படியே, குமார சக்கரவர்த்தி! தந்தைக்குச் செய்தி அனுப்பினால், அவருடைய அபிப்பிராயப் படியே நான் தென் தேசத்துக்கு யாத்திரை போவதாகத் தெரியப்படுத்தவேணும்!" என்றார்.

"ஆகட்டும் சுவாமி" என்று மாமல்லர் கூறி, ஆயனரைப் பார்த்து, "சிற்பியாரே! துறைமுகம் போய்ச் சேர்ந்ததும், சிவகாமியின் சௌக்கியத்தைப் பற்றிச் செய்தி அனுப்புங்கள். சில காரணங்களினால் நான் கொஞ்ச காலத்துக்குக் காஞ்சியை விட்டு வெளிக்கிளம்ப முடியாமலிருக்கிறது" என்றார்.

இவ்விதம் பேசி வருகையில் மாமல்லர் அடிக்கடி சிவகாமியை நோக்கி அவளிடம் நயன பாஷையினால் விடைபெற்றுக்கொள்ள விரும்பினார். ஆனால், சிவகாமியோ ஆயனரின் பின்னால் குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்தாள்.

எனவே, சிவகாமியிடம் சொல்லிக் கொள்ளாமலே மாமல்லர் புறப்பட வேண்டியதாயிற்று. போகும்போது, நாவுக்கரசர் பெருமான் அங்கிருப்பதைக்கூட அவர் மறந்து 'தட்' 'தட்' என்று அடிவைத்து நடந்து சென்றதானது, ஆத்திரங்கொண்ட அவருடைய மனநிலையை நன்கு பிரதிபலித்தது.

சற்றுநேரத்துக்கெல்லாம் வாசலில் குதிரைகளின் காலடிச் சத்தமும், ரதத்தின் சக்கரங்கள் கடகடவென்று உருண்டோ டும் சத்தமும் கேட்டன. சிவகாமிக்கு அப்போது தன் உயிரானது தன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியில் சென்று ரதத்தின்மேல் ஏறிக் கொண்டு செல்வதுபோல் தோன்றியது.

நாவுக்கரசரிடம் முடிவாக விடை பெற்றுக் கொண்டு ஆயனரும் சிவகாமியும் புறப்பட வேண்டிய நேரம் வந்த போது, பெருமான் ஆயனருக்குச் சமிக்ஞை செய்து அவரைப் பின்னால் நிறுத்தினார். முன்னால் சென்ற சிவகாமியின் காதில் விழாதபடி மெல்லிய குரலில் பின்வருமாறு கூறினார்:

"ஆயனரே! உமது புதல்விக்குக் கிடைத்திருக்கும் கலை அற்புதக் கலை; தெய்வீகக் கலை. அதனாலேயே அவளைக் குறித்து என் மனத்தில் கவலை உண்டாகிறது. இத்தகைய அபூர்வமான மேதாவிலாசத்தை இறைவன் யாருக்கு அருளுகிறாரோ, அவர்களைக் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்குவதும் உண்டு. உமக்குத்தான் தெரியுமே? இந்த எளியேனை ஆட்கொள்வதற்கு முன்னால் இறைவன் எத்தனை எத்தனை சோதனைகளுக்கெல்லாம் ஆளாக்கினார்..."

சற்று முன்பு வரையில் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ஆயனர் மேற்கூறிய மொழிகளைக் கேட்டுத் தலையில் இடி விழுந்தவர் போல் பதறி, "சுவாமி! இதென்ன சொல்கிறீர்கள்? மகா புருஷராகிய தாங்கள் எங்கே? அறியாப் பெண்ணாகிய சிவகாமி எங்கே? அவளுக்கு ஏன் சோதனைகள் வரவேண்டும்? தங்களுடைய திருவாக்கில் இப்படி வந்துவிட்டதே! என்றார்.

"ஆயனரே! இரைந்து பேச வேண்டாம் சிவகாமிக்கு இது தெரிய வேண்டியதில்லை. ஆனால் நீர் முன் ஜாக்கிரதையாக இருப்பது நலம். உமது அருமைக் குமாரியைப் பார்க்கும்போது அவளுக்கு ஏதோ பெரிய துக்கம் நேரப்போகிறது என்று என் உள்ளம் சொல்லுகிறது. ஆஹா! இத்தகைய வருங்கால திருஷ்டியை இறைவன் எதற்காக எனக்கு அளித்தார்!" என்று கூறி வருகையில் நாவுக்கரசரின் கண்களில் கண்ணீர் மல்கிற்று.

"ஆனாலும் நீர் தைரியமாக இருக்கவேண்டும். இந்த உலகில் பணி செய்து கிடப்பதே நமது கடன். நம்மைத் தாங்கும் கடன் கருணை வடிவான இறைவனுடையது. உமது பணியைச் செய்து கொண்டு நீர் நிம்மதியாக இரும். எத்தனை சோதனைகள் நேர்ந்தாலும் மனம் கலங்க வேண்டாம். அன்பர்களுக்கு முதலில் எவ்வளவு துன்பங்களை அளித்தாலும் முடிவில் இறைவன் ஆட்கொள்வார்."

இவ்விதம் கூறிவிட்டு நாவுக்கரசர் பெருமான் மடத்துக்குள்ளே சென்றார். அன்று மாலை அந்தத் திருமடத்துக்குள்ளே பிரவேசித்தபோது உள்ளம் நிறைந்த குதூகலத்துடன் பிரவேசித்த ஆயனச் சிற்பியாரோ, இப்போது இதயத்திலே பெரியதொரு பாரத்துடன் வெளியேறினார். அபூர்வமான வேலைப்பாடுகளுடன் அவர் சிலை வடிவமாக்கிக் கொண்டிருந்த பெரியதொரு பாறாங்கல்லைத் தூக்கி அவருடைய இதயத்தின் மேலே யாரோ வைத்துவிட்டது போலிருந்தது.

கண்ணபிரான்

முன் அத்தியாயத்தில் கூறியபடி, இதயத்தில் பெரிய பாரத்துடனே மடத்தின் வாசற்பக்கம் வந்து ஆயனர், தம் உள்ள நிலையை வெளிக்குக் காட்டாமல் சமாளித்துக் கொண்டு, சிவகாமியைப் பார்த்து, "குழந்தாய்! இப்பொழுதே நாம் ஊருக்குத் திரும்பிவிடலாமல்லவா?" என்று கேட்டார்.

"கமலியைப் பார்த்துவிட்டுக் காலையில் போகலாம் அப்பா!" என்று சிவகாமி மறுமொழி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, கடகடவென்ற சத்தத்துடன் இரட்டைக் குதிரை பூட்டிய ரதம் ஒன்று அங்கே நின்றது. அதை ஓட்டி வந்த சாரதி ரதத்தின் முன் தட்டிலிருந்து குதித்து வந்து, மடத்து வாசலில் ஆயனரும் சிவகாமியும் நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தான். அவன் நல்ல திடகாத்திர தேகமுடையவன் பிராயம் இருபத்தைந்து இருக்கும்.

"ஐயா! இங்கே மாமல்லபுரத்திலிருந்து ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமி அம்மையும் வந்திருக்கிறார்களாமே, நீங்கள் கண்டதுண்டோ ?" என்று அவன் கேட்டான்.

"ஓகோ! கண்ணபிரானா? எங்களை யார் என்று தெரியவில்லையா, உனக்கு?" என்றார் ஆயனர்.

"அதுதானே தெரியவில்லை? இந்தச் சப்பை மூக்கையும் இந்த அகலக் காதையும் எங்கே பார்த்திருக்கிறேன்? நினைவு வரவில்லையே?" என்று கண்ணபிரான் தன் தலையில் ஒரு குட்டுக் குட்டிக் கொண்டு யோசித்தான்.

"என் அப்பனே! மண்டையை உடைத்துக் கொண்டு எங்கள் மேல் பழியைப் போடாதே! கமலி அப்புறம் எங்களை இலேசில் விடமாட்டாள். நீ தேடி வந்த ஆயனச் சிற்பியும் சிவகாமியும் நாங்கள்தான்" என்றார் ஆயனர்.

"அடாடாடா! இதை முன்னாலேயே சொல்லியிருக்கக் கூடாதா? எனக்கும் சந்தேகமாய்த் தானிருந்தது. ஆனால் 'கண்ணாற் கண்டதும் பொய், காதால் கேட்டதும் பொய்' தீர விசாரிப்பதே மெய் என்று கும்பகர்ணனுக்கு ஜாம்பவான் சொன்ன பிரகாரம்.. இருக்கட்டும். அப்படியென்றால், நீங்கள் தான் ஆயனச் சிற்பியாரும் அவருடைய மகள் சிவகாமியுமாக்கும். ஆனால், உங்களில் ஆயனச் சிற்பி யார்? அவருடைய மகள் யார்?" என்று விகடகவியான அந்த ரதசாரதி கேட்டு விட்டு, அந்திமாலையின் மங்கிய வெளிச்சத்தில் அவ்விருவர் முகங்களையும் மாறி மாறி உற்றுப் பார்த்தான்.

சிவகாமி கலகலவென்று நகைத்துவிட்டு, "அண்ணா! நான்தான் சிவகாமி. இவர் என் அப்பா. நாம் நிற்பது பூலோகம். மேலே இருப்பது ஆகாசம். உங்கள் பெயர் கண்ணபிரான். என் அக்கா கமலி. இப்போது எல்லாம் ஞாபகம் வந்ததா? அக்கா சௌக்கியமா? இன்று இராத்திரி உங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணியிருந்தோம்" என்றாள்.

"ஓஹோ! அப்படியா? கும்பிடப்போன தெய்வம் விழுந்தடித்துக் குறுக்கே ஓடிவந்த கதையாக அல்லவா இருக்கிறது? நீங்கள் எங்கள் வீட்டுக்கு வருவதாக இருந்தீர்களா?"

"ஆமாம்; வரலாமா? கூடாதா?"

"ஒருவிதமாக யோசித்தால், வரலாம். இன்னொரு விதமாக யோசித்தால் வரக்கூடாது."

"அப்பா! நாம் ஊருக்கே போகலாம். புறப்படுங்கள்!" என்று கோபக் குரலில் சிவகாமி கூறினாள்.

"அம்மா! தாயே! அப்படிச் சொல்லக்கூடாது கட்டாயம் வரவேண்டும். நான் இன்றைக்கு வீட்டைவிட்டுக் கிளம்பிய போது கமலி என்ன சொன்னாள் தெரியுமா? 'இதோ பார்! இன்றைக்கு நாவுக்கரசர் மடாலயத்துக்கு ஆயனச் சிற்பியார் வருகிறாராம். அவருடன் என்னுடைய தோழி சிவகாமியும் வந்தாலும் வருவாள். இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டுதான் இராத்திரி நீ வீட்டுக்குத் திரும்பி வர வேண்டும்' என்றாள். நான் என்ன சொன்னேன் தெரியுமா? 'அவர்கள் பெரிய மனுஷாள், கமலி! நம்மைப் போன்ற ஏழைகள் வீட்டுக்கு வருவார்களா? வந்தால்தான் திரும்பிப் போவார்களா?' என்றேன். அதற்குக் கமலி 'நான் சாகக் கிடக்கிறேன் என்று சொல்லி அழைத்துவா!' என்றாள்..."

"அடாடா! கமலிக்கு ஏதாவது உடம்பு அசௌக்கியமா, என்ன?" என்று ஆயனர் கவலையுடன் கேட்டார்.

"ஆம், ஐயா! ஒரு வருஷமாகக் கமலி அவளுடைய தோழியைப் பார்க்காமல் கவலைப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிராணனை விட்டுக் கொண்டிருக்கிறாள். முக்கால் பிராணன் ஏற்கனவே போய்விட்டது. மீதியும் போவதற்கு நீங்கள் வந்தால் நல்லது."

"அப்படியானால், உடனே கிளம்பலாம் அதற்குள்ளே இங்கே ஜனக்கூட்டம் கூடிவிட்டது" என்றாள் சிவகாமி.

உண்மையிலே அங்கே கூட்டம் கூடிவிட்டது. நகரத்தில் அந்த நெருக்கடியான பகுதியில் ஆயனரும் சிவகாமியும் அரண்மனை ரத சாரதியுடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி ஜனக்கூட்டத்தைக் கவர்ந்து இழுத்ததில் ஆச்சரியம் என்ன? ஆயனரையும் சிவகாமியையும் கண்ணபிரான் தான் கொண்டு வந்திருந்த ரதத்தில் ஏறிக்கொள்ளும்படிச் செய்தான். காஞ்சி மாநகரின் விசாலமான தேரோடும் வீதிகளில் இரண்டு குதிரை பூட்டிய அந்த அழகிய அரண்மனை ரதம் பல்லவ ராஜ்யத்தின் சிறந்த ரத சாரதியினால் ஓட்டப்பட்டு விரைந்து சென்றது.

ரதம் போய்க் கொண்டிருக்கையில் சிவகாமி "அண்ணா! உங்கள் வீட்டுக்கு வருகிறோம் என்று நான் சொன்னதற்கு "இன்னொரு விதத்தில் யோசித்தால் வரக்கூடாது என்று சொன்னீர்களே! அது என்ன?" என்று கேட்டாள்.

"தங்கச்சி! மடத்திலிருந்து குமார சக்கரவர்த்தியை அழைத்துப் போனேனல்லவா? அரண்மனை வாசலில் அவர் இறங்கியதும் என்னைப் பார்த்து, 'கண்ணா! ரதத்தை ஓட்டிக் கொண்டு மடத்துக்குப் போ! அங்கே ஆயனரும் அவர் மகளும் இருப்பார்கள். அவர்களை ரதத்தில் ஏற்றிக்கொண்டு போய் மாமல்லபுரத்தில் விட்டுவிட்டு வா! அவர்கள் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்காதே!' என்று கட்டளையிட்டார். குமார சக்கரவர்த்தி அவ்விதம் கட்டளையிட்டிருக்கும்போது, நம்முடைய வீட்டுக்கு அழைத்துப் போகலாமா என்று யோசித்தேன்" என்றான் கண்ணபிரான்.

"சுற்றி வளைத்துப் பீடிகை போடாமல் உங்களால் ஒன்றும் சொல்ல முடியாதே?" என்று சிவகாமி கேட்டாள்.

"முடியாது தங்கச்சி, முடியாது! அதற்குக் காரணமும் உண்டு. முன்னொரு காலத்தில் நான் சின்னக் குழந்தையாயிருந்தபோது..."

"நிறுத்துங்கள்! நான் அதைக் கேட்கவில்லை. அவசரமாகக் குமார சக்கரவர்த்தி மடத்திலிருந்து போனாரே, ஏதாவது விசேஷமான செய்தி உண்டோ என்று கேட்டேன்."

"மதுரையிலிருந்து தூதுவர்கள் வந்திருக்கிறார்கள்."

மதுரையிலிருந்து தூதர்கள் என்றதும் சிவகாமிக்குத்தான் முன்னம் கேள்விப்பட்ட திருமணத் தூது விஷயம் ஞாபகம் வந்தது. எனவே, "தூதர்கள் என்ன செய்தி கொண்டு வந்தார்கள்?" என்று கவலை தொனித்த குரலில் கேட்டாள்.

"அந்த மாதிரி இராஜாங்க விஷயங்களையெல்லாம் நான் கவனிப்பதில்லை, தங்கச்சி!" என்றான் கண்ணபிரான்.

அதைக் கேட்ட ஆயனர், "ரொம்ப நல்ல காரியம், தம்பி! அரண்மனைச் சேவகத்தில் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். நமக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைக் காதிலேயே போட்டுக் கொள்ளக்கூடாது" என்றார்.

அப்போது ரதம் தெற்கு ராஜவீதியில் அரண்மனையின் முன் வாசலைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. வீதியின் ஒரு பக்கத்தை முழுவதும் வியாபித்திருந்த அரண்மனையின் வெளி மதிலையும், முன் வாசல் கோபுரத்தையும், அதைக் காவல் புரிந்த வீரர்களையும் உள்ளே தெரிந்த நெடிய பெரிய தாவள்யமான சுவர்களையும், படிப்படியாகப் பின்னால் உயர்ந்து கொண்டுபோன உப்பரிகை மாடங்களையும் சிவகாமி பார்த்தாள். தன்னையும் தன்னுடைய இதயத்தைக் கவர்ந்த சுகுமாரரையும் பிரித்துக் கொண்டு இத்தனை மதில் சுவர்களும் மாடகூடங்களும் தடையாக நிற்கின்றன என்பதை எண்ணி ஒரு நெடிய பெருமூச்சு விட்டாள்.

கமலி

காஞ்சி மாநகரில் சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனைக்குப் பின்புறத்தில் விஸ்தாரமான பூந்தோட்டம் இருந்தது. பூந்தோட்டத்தின் பின்புறமதிற்சுவரையொட்டிச் சில சிறு கட்டிடங்கள் இருந்தன. அவற்றில் சில குதிரை லாயங்கள், சில ரதங்களை நிறுத்தும் கொட்டடிகள், மற்றவை ரதசாரதிகளும் தோட்டக்காரர்களும் வசித்த வீடுகள்.

அந்த வீடுகளில் ஒன்றுக்கு முன்னால், கண்ணபிரான் ஓட்டிக்கொண்டு வந்த ரதம் நின்றது. ரதத்தின் சத்தத்தைக் கேட்டு, வீட்டுக்குள்ளேயிருந்து ஒரு பெண் குதூகலமாகக் குதித்துக் கொண்டு ஓடி வந்தாள்.

"கமலி! யாரை அழைத்து வந்திருக்கிறேன், பார்!" என்று சொல்லிக்கொண்டே கண்ணபிரான் ரதத்திலிருந்து குதித்தான்.

அதே சமயத்தில் ரதத்திலிருந்து சிவகாமி இறங்குவதைப் பார்த்த கமலி, ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து சென்று சிவகாமியை ஆர்வத்துடன் கட்டிக்கொண்டாள்.

அப்போது வீட்டிற்குள்ளேயிருந்து ஒரு பெரியவர் வந்தார். "அப்பா! யார் வந்திருக்கிறார் பாருங்கள்!" என்றான் கண்ணபிரான்.

அந்தப் பெரியவர் உற்றுப் பார்த்துவிட்டு, "வாருங்கள், ஐயா!" என்று சொல்லிக்கொண்டு ஆயனரின் அருகில் சென்றார். பெரியவரும் ஆயனரும் பேசிக்கொண்டே வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார்கள். கமலியும் சிவகாமியும் உள்ளே போனார்கள்.

சிவகாமியும் கமலியும் குழந்தைப்பிராயத்திலிருந்து தோழிகள். ஆயனர் காஞ்சியில் இருந்த காலத்தில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் கமலியின் பெற்றோர்கள் வசித்தார்கள். சிவகாமி குழந்தையாயிருந்தபோதே, அவளைக் காட்டிலும் ஒன்றரை வயது மூத்தவளான கமலி சிவகாமியைத் தன் மடியில் வைத்துக்கொண்டு, "தங்கச்சி!" என்று அருமையாக அழைத்துச் சீராட்டுவாள். குழந்தை சிவகாமியும், "அக்கா! அக்கா!" என்று மழலைச் சொல்லில் குழறுவாள்.

இவ்வாறு ஆரம்பித்த அக்குழந்தைகளின் சிநேகமும் நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. ஆயனர் காட்டுக்குள்ளே சென்று வீடு கட்டிக்கொண்டு வசிக்கத் தொடங்கிய பிறகு கமலி அடிக்கடி அங்கு வந்து மாதக்கணக்கில் தங்கியிருப்பாள். சிவகாமி ஆட்டம் பயிலும் போதெல்லாம் கமலி அவள் எதிரில் இருந்து இமை கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பாள். அவளுடைய ஆட்டத் திறமையைப் பாராட்டுவாள். "என் தங்கச்சிக்கு இணை ஈரேழு பதினாலு உலகத்திலும் கிடையாது!" என்பாள். ஆயனருக்கு அடுத்தபடியாகச் சிவகாமிக்கு ஆட்டக் கலையில் ஊக்கமளித்தவள் கமலி என்று தான் சொல்லவேண்டும்.

கமலியின் தகப்பனார் காஞ்சியில் பெயர்பெற்ற குதிரை வியாபாரி. அரேபியா முதலான வெளி தேசங்களிலிருந்து அவர் குதிரைகள் தருவிப்பார். மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் கப்பலில் வந்து குதிரைகள் இறங்கும். அவற்றைக் காஞ்சிக்குக் கொண்டு வருவார். முதலில் அரண்மனைக் குதிரைலாயத்தின் தலைவரும் பல்லவ சைனியத்தின் குதிரைப் படைத் தலைவரும் வந்து, புதிதாகத் தருவிக்கப்பட்ட குதிரைகளைப் பார்ப்பார்கள். அவர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டதுபோக மற்றக் குதிரைகளைத்தான் பொது ஜனங்களுக்கு விற்கலாம்.

இதன் காரணமாக, அரண்மனைக் குதிரை லாயத்தின் தலைவர் அடிக்கடி கமலியின் தந்தையைச் சந்திப்பதற்காக அவருடைய வீட்டுக்கு வருவதுண்டு. சில சமயம் அவருடன் அவருடைய மகனும் வருவான். அந்த வாலிபன் பெயர்தான் கண்ணபிரான். தந்தைமார்கள் இருவரும் குதிரைப் பரிவர்த்தனை விஷயமாகப் பேசிக் கொண்டிருக்கையில், மகனுக்கும் மகளுக்கும் இடையே இருதய பரிவர்த்தனை நடந்து கொண்டிருந்தது. இரு குடும்பத்தாருக்கும் விஷயம் தெரிந்தபோது, கண்ணபிரானுக்கும் கமலிக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

இது நடந்து வருஷம் ஒன்றரை ஆயிற்று. இந்த ஒன்றரை வருஷமும் சிவகாமியும் கமலியும் சந்திக்கவில்லை என்றாலும், அவர்கள் ஒருவரை ஒருவர் நினையாத நாள் கிடையாது.

இரவு உணவு அருந்திய பின்னர், ஆயனரும் அரண்மனையின் அசுவபாலரும் வாசல் திண்ணையில் காற்றோட்டமாகப் படுத்துக் கொண்டு யுத்த நிலைமையைப் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். வீட்டுக்குள்ளே அரண்மனைப் பூந்தோட்டத்தை அடுத்திருந்த அறையில் சிவகாமியும் கமலியும் படுத்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யுத்தத்தைப் பற்றிப் பேசவில்லை. கமலியின் இல்வாழ்க்கைதான் அவர்கள் சம்பாஷணையில் முக்கிய விஷயமாக இருந்தது. இடையிடையே 'கலீர்' 'கலீர்' என்று அவர்கள் குதூகலமாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது.

இரவு ஒன்றரை ஜாமத்துக்குமேல் ஆனபோது, வாசல் திண்ணையிலிருந்து ஆயனர், "அம்மா! சிவகாமி! உதயத்திற்கு முன்னால் நாம் புறப்பட வேண்டும் பேசியது போதும் தூங்கு!' என்றார். கமலியும் சிவகாமியும் உடனே கண்ணை மூடிக்கொண்டு தூங்குவதற்குப் பிரயத்தனம் செய்தார்கள். சிறிது நேரம் ஆனதும், சிவகாமி தூங்கி விட்டதாக எண்ணிக்கொண்டு கமலி சத்தம் செய்யாமல் எழுந்திருந்து அந்த அறையின் ஒரு பக்கத்துக் கதவைத் திறந்துகொண்டு அடுத்த அறைக்குள் சென்றாள்.

சிவகாமி கண்களை மூடிக்கொண்டிருந்தாளே தவிர உண்மையில் தூங்கவில்லை. அவளுடைய உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் அலைமேல் அலை எறிந்து தோன்றிக் கொண்டிருந்தன.

கமலிக்குக் கண்ணபிரான்மேல் காதல் உண்டான நாளிலிருந்து அவள் தன்னுடைய அந்தரங்கத்தையெல்லாம் சிவகாமியிடம் அடிக்கடி சொல்வதுண்டு. ஆரம்பத்திலிருந்தே கமலியின் காதல் ஆனந்தமாயிருந்தது. எவ்விதத் துக்கமோ வேதனையோ அவள் மனத்தில் ஏற்பட்டதில்லை. அந்த நாட்களில் அவளுடைய பேச்சு ஒரே குதூகலமாகவும் எக்களிப்பாகவுமே இருந்து வந்தது.

கல்யாணத்திற்குப் பிறகு அந்தத் தம்பதிகளின் இல்வாழ்க்கையும் அவ்விதமே குதூகலமாயிருக்கிறதென்பதை இப்போது சிவகாமி தெரிந்துகொண்டாள். ஆனால், தன்னுடைய காதல் மட்டும் ஏன் இவ்வளவு வித்தியாசமாக இருக்கவேண்டும்? அதில் எத்தனை வேதனை? எத்தனை ஆத்திரம்? எத்தனை கோபதாபம்? கமலியின் குதூகலமான காதலுக்கும், தன்னுடைய வேதனை மயமான காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை எண்ணிப்பார்க்கப் பார்க்க தனக்குத் தகுதியில்லாத இடத்தில் காதலைச் செலுத்தியது தான் தன்னுடைய துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று சிவகாமிக்குத் தோன்றியது.

அவரோ பெரிய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்துக்கு உரியவர். நாமோ கல்லில் உளியினால் வேலை செய்யும் சிற்பியின் மகள். அவருடைய காதலுக்கு நாம் ஆசைப்படுவது பெரிய பிசகுதான். ஆனால் இந்தப் பிசகுக்குக் காரணம் யார்? இந்த ஏழைச் சிற்பியின் மகளைத் தேடிக்கொண்டு அவர் தானே வந்தார்? ஒரு கவலையுமின்றிக் காட்டில் துள்ளி விளையாடும் மானைப்போல் குதூகலமாக ஆடிப்பாடிக் கொண்டிருந்த அபலைப் பெண்ணின் உள்ளத்தில் அவர் தானே ஆசைத்தீயை மூட்டினார்? ஆஹா! அந்த ஆசையானது இப்போது இப்படிப் பெருநெருப்பாய் மூண்டு விட்டதே? உடம்பையும் உள்ளத்தையும் இப்படித் தகிக்கின்றதே?

சற்று நேரம் புரண்டு பார்த்தும் தூக்கம் வராமற்போகவே, சிவகாமி படுக்கையை விட்டு எழுந்தாள். அந்த அறையின் பின்புறச் சுவரிலிருந்த பலகணியின் மாடத்தில் உட்கார்ந்தாள். அவள் எதிர்பார்த்தபடியே பலகணியின் வழியாகப் பங்குனி மாதத்து இளந்தென்றல் ஜிலுஜிலுவென்று வந்து கொண்டிருந்தது. அது சும்மா வரவில்லை அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்த செண்பக மரங்களில் நுழைந்தும், மல்லிகைச் செடிகளின் மீது தவழ்ந்தும் அந்த மலர்களின் இன்ப நறுமணத்தை அளாவிக் கொண்டு வந்தது. அவ்விதம் செண்பகமும் மல்லிகையும் கலந்து உண்டான சுகந்தமானது சிவகாமியின் உள்ளத்தில் ஏதோ தெளிவில்லாத பழைய ஞாபகங்களை உண்டாக்கிற்று.

எத்தனை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் ஜன்ம ஜன்மாந்தரங்களில் இதே விதமான நறுமணத்தை அவள் நுகர்ந்தது போலவும், அந்தக் காலங்களிலும் இதே விதமான இன்ப வேதனை அவள் மனத்தில் குடிகொண்டிருந்தது போலவும், மங்கிய நினைவுகள் உண்டாயின. தனது அன்பைக் கவர்ந்து உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆருயிர்க் காதலன் தனக்கு வெகு சமீபத்தில் இருந்தும் அவனை அடைய முடியாதிருப்பது போலவும், இருவருக்கும் இடையில் இன்னதென்று தெரியாத இடையூறுகள் முளைத்துப் பெரிய கரிய நிழல் உருவங்கள் எடுத்து நிற்பதுபோலவும் மனத்தில் பிரமைகள் உண்டாயின.

கமலியின் மனோரதம்

விவரிக்க முடியாத இன்பத்தையும் வேதனையையும் ஒருங்கே தந்த மேற்கூறிய நிழல் நினைவுகளைப் பொறுக்க முடியாமல், பின்புறக் கதவை ஓசைப்படாமல் மெதுவாய்த் திறந்து கொண்டு பூந்தோட்டத்துக்குள் பிரவேசித்தாள். அப்போது இரவில் மூன்றாம் ஜாமம் நடந்துகொண்டிருந்தது. பிறைச் சந்திரன் விரித்த இளம் நிலவின் மோகன ஒளியில் அந்தப் பூந்தோட்டம் கனவு உலகத்தில் காணும் ஒரு காட்சி போல் தென்பட்டது.

பூந்தோட்டத்தில் உலாவி வர எண்ணிப் புறப்பட்ட சிவகாமி, வீட்டுச் சுவரோரமாகச் சற்றுத் தூரம் சென்றபோது, பேச்சுக் குரல் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். கமலியும் கண்ணபிரானும்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருந்த அறையின் பின்புறப் பலகணி வழியாக அவர்களுடைய பேச்சுத் தெளிவாகக் கேட்டது. அந்தப் பக்கம் போகமல் திரும்பிவிடவேண்டுமென்று எண்ணிய சிவகாமியின் செவியில் "மாமல்லர்" "குமார சக்கரவர்த்தி" என்ற வார்த்தைகள் விழுந்தன. பிறகு அவளுடைய கால்கள் திரும்பிச் செல்ல மறுத்துவிட்டன. பலகணியின் அருகில் சுவர் ஓரமாக நின்று அவர்கள் பேசுவதைக் கேட்டாள்.

"மாமல்லருக்குப் பெண் கொடுக்கிறேன் என்று பாண்டிய மன்னர் தூது அனுப்பியதில் என்ன ஆச்சரியம்? பூலோகத்திலுள்ள ராஜ ராஜாக்கள் எல்லாம் நான் முந்தி, நீ முந்தி என்று அவருக்குப் பெண் கொடுக்கப் போட்டியிடமாட்டார்களா?" என்றாள் கமலி.

"மாமல்லருக்குச் சீக்கிரத்தில் கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்று மகாராணிக்கு ஆசை. மூன்று தேசத்து ராஜாக்களுக்குத் திருமணத் தூது அனுப்ப வேண்டுமென்று ஏற்பாடு செய்திருந்தார். அதற்குள்ளே இந்த யுத்தம் வந்து விட்டதால் அது தடைப்பட்டுப் போயிற்று. இப்போது பாண்டிய ராஜாவே தூது அனுப்பியிருப்பதில் மகாராணிக்கு அசாத்திய சந்தோஷம்!" என்றான் கண்ணபிரான்.

"சரி; அப்புறம் என்ன நடந்தது?" என்று கமலி கேட்டாள்.

"அரண்மனையில் மாமல்லரை விட்டேன் உடனே, தாயாருக்கும் பிள்ளைக்கும் சண்டை ஆரம்பமாகிவிட்டது!.."

"சண்டையா! எதற்காக?"

"குமார சக்கரவர்த்தியிடம் 'கல்யாணம்' என்று யாராவது சொன்னாலே, அவருக்குப் பிரமாதமான கோபம் வந்து விடுகிறது. 'இதற்குத்தானா இவ்வளவு அவசரமாகக் கூப்பிட்டு அனுப்பினீர்கள்? போர்க்களத்திலிருந்துதான் ஏதோ செய்தி வந்திருக்கிறதாக்கும் என்று நினைத்தல்லவா ஓடி வந்தேன்?' என்று அவர் மகாராணியிடம் கோபமாகப் பேசினார்...! கமலி! உனக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா? மிகவும் முக்கியமான இரகசியம் கேட்டால் பிரமித்துப் போவாய்!" என்றான் கண்ணன்.

"பெண்பிள்ளைகளிடம் இரகசியம் சொல்லக் கூடாது என்று உனக்குத் தெரியாதா, கண்ணா?" என்றாள் கமலி.

"ஓஹோ! நீ பெண்பிள்ளையா? மறந்து போய்விட்டேன்!" என்று கண்ணன் நகைத்துக் கொண்டே கூறினான்.

"ஆமாம்! நீ ஆண்பிள்ளை என்பதையும் மறந்து போய் விடுவாய்! யுத்தம் வருகிறதல்லவா?"

"யுத்தம் வரட்டும்! அப்போது தெரிகிறது யார் ஆண்பிள்ளை, யார் பெண்பிள்ளையென்று! நீ என் காலில் விழுந்து, 'கண்ணா! யுத்தத்துக்குப் போகாதே!' என்று கதறப் போகிறாய். நான் உன்னை உதறித் தள்ளிவிட்டுப் போகப் போகிறேன்...."

"அப்படியா நினைத்துக்கொண்டிருக்கிறாய் உன் மனத்தில்? யுத்தம் கிட்டி வரும்போது நீ போகாவிட்டால் நானே உன்னைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளமாட்டேனா?... கல்யாணம் ஆன பிறகு நீ இப்படிப் பயங்கொள்ளியாகப் போனதைப் பார்த்துவிட்டுத்தான் குமாரச் சக்கரவர்த்தி 'கல்யாணம்' என்றாலே எரிந்து விழுகிறார் போலிருக்கிறது!"

"இப்படித்தானே நீ எண்ணிக்கொண்டிருக்கிறாய்? யுத்தம் வந்திருக்கிறபடியால் குமார சக்கரவர்த்தி கல்யாணம் வேண்டாம் என்கிறார் என்றுதான் எல்லோருமே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிசகு கமலி, பெரும் பிசகு!"

"எது பிசகு, கண்ணா?"

"எல்லாரும் நினைத்துக்கொண்டிருப்பது பிசகு. மாமல்லர் கல்யாணப் பேச்சை வெறுப்பதற்கு வேறு காரணம் இருக்கிறது. அது பெரிய இரகசியம் அதிலும் உன் தங்கச்சி சிவகாமியைப் பற்றிய இரகசியம் கமலி!"

"என்ன? என்ன? என் தங்கச்சியைப்பற்றி எனக்குத் தெரியாத இரகசியம் என்ன இருக்கிறது? ஏதாவது இசை கேடாகச் சொன்னாயோ, பார்த்துக்கொள்!"

"இசைக்கேடு ஒன்றுமில்லை. பெருமையான விஷயந்தான்!... சொன்னால், எனக்கு என்ன தருகிறாய்?"

"சொல்லிவிட்டுக் கேள்! பொருளைப் பார்த்து விட்டல்லவா விலையைத் தீர்மானிக்க வேண்டும்?" என்றாள் கமலி.

"அப்புறம் ஏமாற்றக்கூடாது, தெரியுமா? பல்லவ சாம்ராஜ்யத்தின் குமார சக்கரவர்த்தி, வீரத்தில் அர்ஜுனனையும், அழகில் மன்மதனையும் ரதம் ஓட்டுவதில் கண்ணபிரானையும் ஒத்தவரான மாமல்ல நரசிம்மர், உன்னுடைய தங்கச்சி சிவகாமியின்மேல் காதல் கொண்டிருக்கிறார், கமலி!"

"ஆ!" என்னும் சத்தம் மட்டுந்தான் கமலியின் வாயிலிருந்து வந்தது. அவள் ஆச்சரியத்தினால் திகைத்து விட்டாள்.

வெளியிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த சிவகாமியின் நெஞ்சில் அந்த 'ஆ!' சத்தமானது கூரிய அம்பைப்போல் புகுந்தது. தன்னிடம் இவ்வளவு ஆசையும் நம்பிக்கையும் வைத்துள்ள அருமைத் தோழியிடம் தனது அந்தரங்கத்தை வெளியிடாமல் இத்தனை நாளும் ஒளித்து வைத்திருந்தது பற்றி அவள் வெட்கினாள். அறைக்குள்ளே சம்பாஷணை மேலும் தொடர்ந்து நடந்தது.

"கமலி! நான் சொன்ன செய்தி உனக்கு அதிசயமாயிருக்கிறதல்லவா?" என்று கண்ணபிரான் கேட்டான்.

"அதிசயம் என்ன? நம்முடைய குமார சக்கரவர்த்தி புத்திசாலி என்றுதான் அடிக்கடி நான் சொல்லியிருக்கிறேன்? அதனால்தான் அவருக்கு என் தங்கச்சியின் மேல் மனம் சென்றது" என்று கமலி சமத்காரமாக விடை சொன்னாள்.

"ஓஹோ! அப்படியா? நீயும் உன் தங்கையும் சேர்ந்து பேசிக்கொண்டுதான் இந்த வேலை செய்தீர்கள் போலிருக்கிறது! உன்னுடைய வலையில் என்னை நீ போட்டுக் கொண்டாய்! உன் தங்கச்சி மாமல்லரையே வலை போட்டுப் பிடித்துவிட்டாள்!"

"என்ன சொன்னாய்?" என்று கமலி கம்பீரமாகக் கேட்டு விட்டு மேலும் சொல்லம்புகளைப் போட்டாள்.. "நானா உன்னைத் தேடி வந்து என்னுடைய வலையில் போட்டுக் கொண்டேன்? நானா வீட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் உன்னைத் தொடர்ந்து வந்து கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, 'கண்ணே! பெண்ணே! நீ கருணை செய்யாவிட்டால் நான் உயிரை விடுவேன்!' என்று கதறினேன்? நானா 'என்னைக் கல்யாணம் செய்துகொள் என்று கெஞ்சினேன்?..."

"இல்லை, கமலி, இல்லை! நீ உன்னுடைய கண்ணாகிற வலையை வெறுமனே விளையாட்டுக்காக விரித்தாய்! அதிலே நானாக ஓடிவந்துதான் அகப்பட்டுக் கொண்டேன்!"

"நம்முடைய கதை இருக்கட்டும் மாமல்லருக்கும் என் தங்கைக்கும் நேசம் என்கிற விஷயம் உனக்கு எப்படித் தெரிந்தது? அதைச் சொல்லு!" என்றாள் கமலி.

"ஆ! பாம்பின் கால் பாம்புக்குத் தெரியாதா, என்ன? கள்ளனுக்குத் தெரியாதா கள்ளனின் சமாசாரம்? நான் உன்னை உன் தகப்பனார் வீட்டில் அந்தக் காலத்தில் என்னமாய்ப் பார்த்தேன்! ஞாபகம் இருக்கிறதா? அம்மாதிரியே உன் தங்கையை இப்போது மாமல்லர் ஆர்வத்தோடு பார்க்கிறார்."

"இவ்வளவுதானா?"

"இன்னும் என்ன வேண்டும்? நாவுக்கரசர் மடத்தில் அபிநயம் பிடித்தானதும் உன் தங்கை மூர்ச்சையாகி விழுந்து விட்டாள் என்று சொன்னேனல்லவா? உடனே மாமல்லர் ஓடிவந்து சிவகாமியைத் தூக்கி ஆயனர் மடியின்மீது வைத்தார். கமலி அப்போது அவருடைய கைகளும் தேகமும் எப்படிப் பதறின தெரியுமா? இதுவரையில் எனக்குக் கொஞ்சம் சந்தேகமாயிருந்தது. இன்றைக்குத் தான் சர்வ நிச்சயமாயிற்று."

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவகாமியின் தேகமெல்லாம் சிலிர்த்தது. விம்மலுடன் அழுகை வரும்போலிருந்தது. சமாளித்துக்கொண்டு மேலும் நடந்த சம்பாஷணையைக் கேட்டாள்.

"இவ்வளவு கூர்மையாய்க் கவனித்தாயே, நீ ரொம்பப் புத்திசாலிதான்! மாமல்லரும் பாக்கியசாலிதான்!" என்றாள் கமலி.

"மாமல்லர் பாக்கியசாலி என்றா சொல்கிறாய்? இதனால் ஏற்படப் போகிற சங்கடங்களையெல்லாம் நினைத்தால்..."

"சங்கடம் என்ன வந்தது?"

"குமார சக்கரவர்த்தியின் கல்யாணம் என்றால், நம்முடைய கல்யாணத்தைப்போல் என்று நினைத்துக் கொண்டாயா? எத்தனை எத்தனையோ யோசனைகள் செய்வார்கள்..."

"கண்ணா! என் தங்கையை மட்டும் சாமானியமான பெண் என்று நினைத்தாயா? தமயந்தியை மணந்துகொள்ளத் தேவலோகத்திலிருந்து தேவர்கள் வந்ததுபோல் சிவகாமியைத் தேடிக் கொண்டு வரமாட்டார்களா? ஏதோ தமயந்தி மனம் வைத்து நள மகாராஜனுக்கு மாலையிட்டாள்!.."

"ஆனால் தமயந்தி அரண்மனையில் பிறந்த ராஜ குமாரியாச்சே, கமலி!"

"என் தங்கை ஆயிரம் ராஜகுமாரிகளுக்கு இணையாவாள். கண்ணா! நீ வேணுமானாலும் பார்! என்னுடைய மனோரதம் ஒருநாள் கட்டாயம் நிறைவேறப் போகிறது!"

"அது என்ன மனோரதம் கமலி?"

"இந்த யுத்தமெல்லாம் முடிந்த பிறகு, மாமல்லருக்கு மகுடாபிஷேகம் நடக்கப் போகிறது. தங்க ரதத்தில், நவரத்ன சிங்காசனத்தில் அமர்ந்து நரசிம்ம சக்கரவர்த்தி இராஜவீதிகளில் பவனி வருகிறார். அவருக்குப் பக்கத்தில், தேவேந்திரனுக்கு அருகில் இந்திராணியைப் போல் என் தங்கை சிவகாமி அமர்ந்திருக்கிறாள். தங்க ரதத்தின் முன் தட்டில் நீ ஜம் என்று உட்கார்ந்து ரதத்தை ஓட்டிக்கொண்டு வருகிறாய். நான் அரண்மனைக் கோபுர வாசலில் மேல் மாடத்தில் நின்று கொண்டிருக்கிறேன். ரதம் அரண்மனை வாசலில் வந்து நின்றதும் கூடைகூடையாக மல்லிகை மலர்களையும் சண்பகப் பூக்களையும் அவர்கள்மேல் கொட்டுகிறேன். நடுவில் உன் தலையிலும் ஒரு கூடைப் பூவைக் கவிழ்க்கிறேன். இப்படி நடக்கவேண்டும் என்பதுதான் என் மனோரதம், கண்ணா!"

"கமலி, உன் மனோரதம் நிறைவேறினால் எனக்கும் அளவில்லாத சந்தோஷந்தான்" என்றான் கண்ணன்.

சிவகாமி திரும்பித் தன்னுடைய அறைக்குள்ளே சென்று படுக்கையில் படுத்துக்கொண்டாள். இருதயத்தின் அடிவாரத்திலிருந்து பொங்கி வந்த விம்மலையும் அழுகையையும் ஆனமட்டும் முயன்றும் அவளால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.

இரவு நாலாவது ஜாமத்தில், விழிப்புமில்லாமல் நித்திரையுமில்லாமல் அரைத் தூக்க நிலையில் சிவகாமி படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும்போது, முன்னர் அவள் மனக் கண்முன் தோன்றிய நிழல் தோற்றங்கள் உருவம் எடுக்க ஆரம்பித்தன.

ஒரு செண்பக மரத்தின் கிளையில் இரண்டு புறாக்கள் உட்கார்ந்து ஒன்றோடொன்று கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கின்றன. திடீரென்று சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் தீப்பட்டு எரியத் தொடங்குகின்றன. ஆண் புறாவானது பெண் புறாவைப் பார்த்து, "நீ இங்கேயே இரு. நான் திரும்பி வந்து உன்னைக் காப்பாற்றுகிறேன்!" என்று சொல்லிவிட்டுப் பறந்து செல்கிறது. அது போன வழியையே பெண் புறா பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆண் புறா திரும்பி வருமா? வந்து, பெண் புறாவைத் தப்பவைக்குமா? இதை அறிய முடியாதபடி பெண் புறாவை நாலாபுறமும் புகை வந்து சூழ்ந்துவிடுகிறது. அந்த நேரத்தில் அவ்விதம் புகையினால் சூழப்பட்டிருப்பது பெண் புறா அல்ல தானே என்று சிவகாமி பிரமையுறுகிறாள்.

கற்பனை உலகக்காட்சி மாறுகிறது மல்லிகைத் தோட்டத்தில் ஆணும் பெண்ணுமாக ஒரு கலைமானும் ஒரு புள்ளிமானும் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கின்றன. விளையாட்டின் இடையே புள்ளிமானானது மல்லிகைப் புதருக்கு அருகில் மறைந்து நிற்கிறது. மல்லிகைப் புதரில் பூத்துச் சிரித்திருந்த வெள்ளி மலர்களுக்கும், புள்ளிமானின் மீது அள்ளித் தெளித்திருந்த வெள்ளிப்பொட்டுகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் கலைமான் புள்ளிமானைத் தாண்டிக் கொண்டு அப்பால் போகிறது. அதைக் கண்டு புள்ளிமான் சிரிக்கிறது. இப்படி அவை விளையாடிக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரத்தில் ஒரு மல்லிகைப் புதரில் இரண்டு பிரகாசமான நட்சத்திரங்கள் ஜொலிப்பதைக் கண்டு அதிசயித்தது. பிறகு, அவை நட்சத்திரங்கள் அல்ல, - அனல் கட்டிகள் என்று தோன்றியது. பின்னர், அந்த இரண்டு அனல் கட்டிகளும், ஒரு பெரிய புலியின் இரண்டு கண்கள்தான் என்று தெரியவே, பெண் மானின் சகல நாடியும் ஒடுங்கிவிட்டது. கலைமானைக் கூவி அழைக்க அது முயன்றது. ஆனால், அதன் தொண்டையிலிருந்து சத்தமே உண்டாகவில்லை.

மேலே என்ன ஆயிற்று? புள்ளிமான் தப்பித்துச் சென்றதா? கலைமானுடன் சேர்ந்ததா? அதுதான் தெரியவில்லை. அத்தகைய பயங்கர அபாயத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்த பெண்மான் உண்மையில் மான் அல்ல. தானே அந்த மான் என்று மட்டும் சிவகாமிக்கு அந்தக் கணத்தில் தெரிய வந்தது.

கட்டாயப் பிரயாணம்

மகேந்திர விடுதியிலிருந்து அதிகாலையில் கிளம்பிய பரஞ்சோதி அன்று பகலெல்லாம் பிரயாணம் செய்து, வடபெண்ணையுடன் பாபாக்கினி நதி கலக்கும் இடத்திலுள்ள புத்த விஹாரத்தைச் சூரியாஸ்தமன நேரத்தில் அடைந்தார்கள்.

விஹாரத்தின் வாசலில் புத்த பிக்ஷு ஒருவர் நின்று கொண்டிருந்தார். மாலை நிறத்து மஞ்சள் வெயிலில் பிக்ஷுவின் காவி உடையானது தங்க நிறமாகப் பிரகாசித்தது. பரஞ்சோதி குதிரையிலிருந்து இறங்கிப் பிக்ஷுவை அணுகியதும், அவர் இவனை என்னவோ கேட்டார். அவர் பேசிய பாஷை பரஞ்சோதிக்குப் புரியவில்லை. ஆனாலும் தான் யார் என்பதை விசாரிக்கிறார் என்று ஊகித்துக் கொண்டு தமிழிலேயே, தான் நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவதாகவும் தன்னை இவ்விடம் தங்கி வழி கேட்டுக் கொண்டு போகும்படி நாகநந்தியடிகள் பணித்தார் என்றும் கூறினான்.

நாகநந்தி என்று கேட்டதும் அந்தப் பிக்ஷுவின் முகத்தில் மாறுதல் காணப்பட்டது. சமிக்ஞையினால் "கொஞ்சம் இங்கேயே இரு!" என்று பரஞ்சோதிக்குச் சொல்லிவிட்டு, பிக்ஷு உள்ளே சென்றார். சற்று நேரத்துக்கெல்லாம் அவர் திரும்பிவந்து பரஞ்சோதியை விஹாரத்துக்குள் அழைத்துச் சென்றார். அந்தப் பௌத்த விஹாரம் காஞ்சியில் பார்த்த இராஜ விஹாரத்தைப் போலக் கல், மரம், சுண்ணாம்பினால் கட்டப்பட்டதல்லவென்பதையும், குன்றிலே குடைந்து அமைக்கப்பட்டதென்பதையும் பரஞ்சோதி கவனித்தான்.

காஞ்சி இராஜ விஹாரத்தைப் போல் இது அவ்வளவு பெரிதாக இல்லை. அவ்வளவு விலையுயர்ந்த பூஜாத்திரவியங்களும் இங்கே காணப்படவில்லை. ஆனால் விஹாரத்தின் அமைப்பு முறை அதே மாதிரி இருந்தது. நடுவில் பிக்ஷுக்கள் கூடிப் பிரார்த்தனையும் தியானமும் செய்வதற்குரிய சைத்யமும் அதன் பின்பக்கத்துப் பாறைச் சுவரில் பிரம்மாண்டமான புத்தர் சிலையும் இருந்தன. அந்தப் புத்தர் சிலையும், சிலைக்கு மேலே கவிந்திருந்த போதி விருட்சமும், புத்தர் மீது புஷ்பமாரி பொழிந்து கொண்டிருந்த கந்தர்வ வடிவங்களும், - எல்லாம் பாறையில் குடைந்து அமைக்கப்பட்டிருந்தன. அலங்கார தீபங்கள் வரிசை வரிசையாக ஒளிர்ந்தன. புத்தபகவானுக்கு எதிரில் பலவித வர்ண மலர்கள் தனித் தனிக் கும்பலாகக் குவிக்கப்பட்டுக் கண்ணைக் கவரும் காட்சியளித்தன. புஷ்பங்களின் நறுமணத்துடன் அகிற்புகையின் வாசனையும் சேர்ந்து சிந்தையை ஒருமுகப்படுத்த உதவி செய்தது.

சைன்யத்துக்கு இருபுறத்திலும் புத்த பிக்ஷுக்கள் தங்குவதற்கும் மாணாக்கர்கள் கல்வி பயில்வதற்கும் உரிய குகை அறைகள் குடையப்பட்டிருந்தன. ஒரு பக்கத்தின் கோடியில் மச்சுப்படிகள் போன்ற படிக்கட்டுகள் காணப்பட்டன. அந்தப் படிகளின் வழியாகப் பரஞ்சோதியைப் பிக்ஷு அழைத்துச் சென்றார். கீழேயுள்ள அறைகளைப்போல் மேலேயும் பாறையில் குடையப்பட்ட அறைகள் காணப்பட்டன. அவற்றில் விசாலமான அறை ஒன்றில் பத்மாசனமிட்டு அமர்ந்திருந்த பெரிய புத்த பிக்ஷுவிடம் பரஞ்சோதி அழைத்துச் சென்று விடப்பட்டான்.

அந்த விஹாரத்தின் தலைமைப் பிக்ஷு அவர்தான் என்பதைப் பரஞ்சோதி ஊகித்துக்கொண்டு அவரைக் கை கூப்பி வணங்கினான். "புத்தம் சரணம் கச்சாமி," "தர்மம் சரணம் கச்சாமி," "சங்கம் சரணம் கச்சாமி" என்று தலைமைப் பிக்ஷு கூறி மூன்று முறை புத்தபகவானுக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பரஞ்சோதியைப் பார்த்துத் தமிழ்ப் பாஷையில் "குழந்தாய்! நீ யார்? என்ன காரியமாக வந்தாய்? யார் உன்னை அனுப்பினார்கள்?" என்று கேட்டார்.

பரஞ்சோதி நாகநந்தியடிகள் தன்னை ஓலையுடன் அனுப்பி வைத்ததுபற்றி விவரமாகக் கூறினான்.

"நாகநந்தி கொடுத்தனுப்பிய ஓலை எங்கே? அந்த ஓலையை நான் பார்க்கலாமா?" என்று பிக்ஷு கேட்டார்.

"மன்னிக்க வேண்டும் ஓலையை சத்யாச்ரயரைத் தவிர வேறு யாரிடமும் கொடுக்கக் கூடாதென்று நாகநந்தியடிகளின் கட்டளை" என்றான் பரஞ்சோதி.

சத்யாச்ரயர் என்ற பெயரைக் கேட்டதும் பிக்ஷுவின் முகத்தில் ஒரு மர்மமான புன்னகை தோன்றியது. அதைப் பரஞ்சோதி கவனித்தானாயினும் அதன் பொருளை அறிய முடியவில்லை.

"நாகநந்தியடிகள் என்ன கட்டளையிட்டாரோ, அவ்விதமே செய். இன்றிரவு இங்கேயே படுத்துக்கொள். ஸ்ரீ பர்வதத்துக்குப் போகும் வழியெல்லாம் இப்போது அபாயம் நிறைந்ததாயிருக்கிறது. இன்று ராத்திரியே அவ்விடத்துக்குப் போகும் வீரர்கள் சிலர் இங்கே வரக்கூடும். அவர்களுடன் சேர்த்து அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உனக்கு வழி காட்டுவதுடன் பத்திரமாகவும் கொண்டு போய்ச் சேர்ப்பார்கள்!" என்று ஆசார்ய பிக்ஷு கூறி, இன்னொரு பிக்ஷுவைப் பார்த்துச் சமிக்ஞை செய்தார். அவர் பரஞ்சோதியை அங்கிருந்து அழைத்துச் சென்று உணவருந்தச் செய்த பிறகு, கீழே ஓர் அறையில், அவன் படுத்துக் கொள்வதற்கு இடம் காட்டினார். சென்ற இரவில் நல்ல தூக்கம் இல்லாமையாலும் நெடுந்தூரப் பிரயாணத்தினாலும் களைப்புற்றிருந்த பரஞ்சோதி இன்று படுத்தவுடன் நிம்மதியாகத் தூங்கலானான்.

தோளைப் பிடித்து யாரோ குலுக்குவதறிந்து பரஞ்சோதி திடுக்கிட்டுக் கண் விழித்தான். முதல்நாள் அவனை மடத்துக்குள் அழைத்து வந்த பிக்ஷுதான் அவனை எழுப்பிக் கொண்டிருந்தார். பக்கத்தில் பெரிய பிக்ஷுவும் நின்றார்.

"தம்பி! நாகர்ஜுன பர்வதத்துக்குப் போவோர் புறப்படுகிறார்கள் நீயும் கிளம்பு" என்றார் பெரிய பிக்ஷு.

பரஞ்சோதி அவசரமாக எழுந்து தலைமாட்டில் வைத்திருந்த ஓலைக் குழாயை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பிக்ஷுக்களைப் பின்தொடர்ந்து மடத்தின் வாசலுக்கு வந்தான்.

அங்கே அவனுடைய குதிரையைத் தவிர இன்னும் ஆறு குதிரைகளும், ஒவ்வொரு குதிரைக்கும் அருகில் ஆஜானுபாகுவான வீரன் ஒருவனும் நிற்பதைக் கீழ் வானத்தில் தோன்றிய பிறைமதியின் மங்கிய நிலவொளியில் பரஞ்சோதி கண்டான்.

"இந்த வீரர்கள் அவசர காரியமாக ஸ்ரீ பர்வதத்துக்குப் போகிறார்கள். இவர்களுடன் போனால் குறுக்கு வழியாக வெகு சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிடலாம்" என்று பெரிய பிக்ஷு கூறினார்.

மனத்தில் காரணம் தெரியாத தயக்கத்துடன் பரஞ்சோதி குதிரைமீது ஏறினான். குதிரைகள் வடபெண்ணை நதிக்கரையோடு மேற்குத் திசையை நோக்கி விரைந்து சென்றன.

பாசறை

புத்த விஹாரத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்துக்கெல்லாம் அக்குதிரை வீரர்களில் மூன்று பேர் பரஞ்சோதிக்கு முன்னாலும், மூன்று பேர் பின்னாலுமாகப் பரஞ்சோதியைத் தங்களுக்கு நடுவிலேயே விட்டுக்கொண்டு சென்றார்கள்.

பொழுது நன்றாய் விடிந்த பிறகு பரஞ்சோதி அவர்களுடைய தோற்றத்தைக் கவனித்தான். அவர்கள் திடகாத்திரமுள்ள ஆஜானுபாகுவான மனிதர்கள் என்று தெரிந்து கொண்டான். இந்த வீரர்கள் ஏதோ ஒரு சைனியத்தைச் சேர்ந்தவர்களாய்த்தான் இருக்கவேண்டும். முக்கியமான யுத்த காரியமாகத் தான் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் தன்னை ஏன் அந்தப் புத்த பிக்ஷு சேர்த்து அனுப்பினார்?

நேரமாக ஆக, பரஞ்சோதியின் மனக்கலக்கம் அதிகமாயிற்று. அவன் அந்த வீரர்களுக்கு முன்னால் போகவோ பின்னால் போகவோ முயன்ற போதெல்லாம், அவர்கள் அதற்கு இடங்கொடாமல் அவனை நடுவிலேயே விட்டுக் கொண்டு போனார்கள். இதைப் பார்க்கப் பார்க்க அவன் உள்ளத்தில் தனக்கு இவர்கள் வழிகாட்டி அழைத்துப் போகிறார்களா அல்லது சிறைப்படுத்திக் கொண்டு போகிறார்களா என்ற சந்தேகம் உதித்தது.

ஸ்ரீ பர்வதம் வடக்கே கிருஷ்ணா நதிக்கரையில் இருக்கிறதென்பது பரஞ்சோதிக்குத் தெரியும். ஆனால் அதிகாலையில் கிளம்பியதிலிருந்து இந்த வீரர்களோ மேற்குத் திசையை நோக்கியே போய்க் கொண்டிருந்தார்கள். ஒருவேளை கொஞ்ச தூரம் மேற்கு நோக்கிப் பிரயாணம் செய்த பிறகு வடக்கு நோக்கித் திரும்பலாம் என்று அவன் எண்ணியபடியும் நடக்கவில்லை.

சூரியன் உச்சி வானத்திற்கு வரும் வரையில் அவர்களுடன் பிரயாணம் செய்த பின்னர், பரஞ்சோதி தான் உண்மையில் சிறையாளியா இல்லையா என்பதை நிச்சயமாய்த் தெரிந்து கொள்ள விரும்பினான். அவ்விடத்தில் வடக்கு நோக்கித் திரும்பிய பாதையில் அவன் தன் குதிரையைத் திருப்பினான்.

கண்மூடித் திறக்கும் நேரத்தில் அந்த ஆறு குதிரை வீரர்களும் தன்னைச் சூழ்ந்து நிற்பதைக் கண்டான். அவர்களுடைய வேல்களின் முனைகள் அவனுடைய குதிரைமீது உராய்ந்து கொண்டிருந்தன.

எண்ணெய் ஊற்றி ஆயத்தமாய் வைத்திருக்கும் தீபத்தின் திரியானது அதன்மீது தீப்பட்டதும் சுடர்விட்டு எரியத் தொடங்குவதுபோல், பரஞ்சோதியின் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த ஆத்திரம் இப்போது கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது. கோபத்தினால் அவனுடைய இரத்தம் கொதித்தது. கையிலே வேலை எடுத்தான் அதைத் தனக்கு அருகில் இருந்தவன் மீது பிரயோகிப்பதற்காக ஓங்கினான்.

ஆகா! என்ன ஏமாற்றம்! ஓங்கிய வேல் எங்கேயோ போய் விழுந்தது. வேலுக்கு உடையவனும் தொப்பென்று தரையில் விழுந்தான். எப்படி விழுந்தோம் என்பதே முதலில் பரஞ்சோதிக்குத் தெரியவில்லை. அப்புறம் தன் உடம்பின்மீது கயிறு ஒன்று சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டான். அந்த வீரர்களில் ஒருவன் சுருக்குப்போட்ட கயிற்றைத் தன்மீது எறிந்து தன்னைக் கீழே இழுத்துத் தள்ளிவிட்டான் என்பதை அறிந்தான்.

இரண்டாவது தடவை இவ்விதம் சூழ்ச்சியினால் தான் வெல்லப்பட்டதை நினைத்தபோது, பரஞ்சோதிக்கு ஒரு பக்கம் வெட்கமும் இன்னொரு பக்கம் ஆத்திரமும் பொங்கின.

அவனுடைய குதிரையோ தன் எஜமானனுக்கு இனிமேல் தன்னால் பயனில்லையென்று உணர்ந்து கொண்டதுபோல் வந்த வழியே திரும்பி ஓடிக்கொண்டிருந்தது. தப்பிச் செல்வதற்கு இவ்விதம் வழியே இல்லாமற் போகவே "இனிப் போராடுவதில் பயனில்லை; நடப்பது நடக்கட்டும்" என்று பரஞ்சோதி சும்மா இருந்தான்.

அந்த வீரர்களில் மூவர், குதிரை மீதிருந்து இறங்கிவந்து பரஞ்சோதியின் கரங்களை முதுகுப் பக்கம் சேர்த்து, பின் கட்டு முன் கட்டாகக் கட்டினார்கள். அந்த ஆறு குதிரைகளுக்குள்ளே அதிக வலிவும் ஆகிருதியும் உள்ள குதிரையின் மீது அவனை ஏற்றி வைத்தார்கள். அவனுக்குப் பின்னால், அவ்வீரர்களில் ஒருவனும் உட்கார்ந்து கொண்டான். மறுபடியும் குதிரைகள் மேற்குத் திசையை நோக்கிச் சென்றன.

அஸ்தமிக்க ஒரு ஜாமம் இருக்கும்பொழுது, பரஞ்சோதி தனக்கு முன்னால் ஓர் அபூர்வமான காட்சியைப் பார்த்தான். அப்போது அவர்கள் சென்ற பாறையானது வரவர மேடாகி வந்த பீடபூமியின் உச்சியை அடைந்திருந்தது. அங்கிருந்து பார்க்கும்போது வெகு தூரத்துக்கு வெகு தூரம் சமவெளிப் பிரதேசமாகக் காணப்பட்டது. அந்தப் பிரதேசத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் சைனியம் தண்டு இறங்கியிருந்தது.

ஆயிரக்கணக்கான போர் யானைகள் கருங்குன்றுகளைப் போல் வரிசைவரிசையாக அங்கு நின்றன. அந்தக் கருங்குன்றுகளுக்கு இடையிடையே அடித்திருந்த கூடாரங்கள் வெண்ணிற மணற் குன்றுகளைப்போல் தோன்றின. மற்றும் எண்ண இயலாத குதிரைகள், ஒட்டகங்கள், ரிஷபங்கள், ரதங்கள், வண்டிகள் ஆகியவை எங்கெங்கும் காணப்பட்டன. சர்க்கரை இறைந்து கிடக்கும் இடத்தில் மொய்க்கும் எறும்புகளைப்போல், லட்சோபலட்சம் வீரர்கள் சில இடங்களில் நெருங்கியும், சில இடங்களில் பரந்தும், வெகு தூரத்துக்கு வெகு தூரம் காணப்பட்டார்கள்.

கூடாரங்களின் மேலே வரிசை வரிசையாகக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன. எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக ஒரு பிரம்மாண்டமான கொடி வானளாவிப் பறந்து கொண்டிருந்தது. கொந்தளித்துக் கொண்டிருக்கும் சமுத்திரத்தை நெருங்கும்போது கேட்கும் 'ஹோ' என்ற பேரிரைச்சலைப் போல், இனந்தெரியாதபடி பல ஒலிகள் வந்து கொண்டிருந்தன.

இந்தக் காட்சியைப் பார்த்த பரஞ்சோதியின் வாயிலிருந்து "ஆஹா!" என்ற சத்தம் எழுந்தது. அங்கே தண்டு இறங்கியிருப்பது பல்லவ சைனியந்தான் என்று எண்ணிய பரஞ்சோதியின் உள்ளத்தில், அப்போது அவனுடைய கட்டுண்ட நிலைமையையெல்லாம் மறக்கச் செய்துகொண்டு ஒரு பெரும் ஆர்வம் பூரித்து எழுந்தது. அது என்ன ஆர்வம் என்றால், மகத்தான வீரப் போருக்கு ஆயத்தமாகத் துடிதுடித்துக்கொண்டு நிற்கும் அந்த மகா சைனியத்தில் தானும் ஒரு போர் வீரனாகச் சேர்ந்துவிட வேண்டும் என்பதுதான்.

அந்தகாரம் சூழ்ந்த இரவில் பிரயாணம் செய்பவன் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கையில், திடீரென்று தோன்றிய மின்னலின் ஒளியிலே தான் போகவேண்டிய பாதையைக் கண்டுபிடிப்பதுபோல, பரஞ்சோதியும் தான் பிறவி எடுத்தது எதற்காக என்பதை அந்தக் கணத்தில் தெளிவாகக் கண்டுகொண்டான். ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்காகவோ, தோத்திரப் பாடல்களை உருப்போட்டுப் பாடுவதற்காகவோ, கையில் சிற்றுளி கொண்டு கல்லைக் கொத்திக் கொண்டிருப்பதற்காகவோ, வர்ணங்களைக் குழைத்துச் சுவரில் சித்திரம் எழுதுவதற்காகவோ தான் பிறக்கவில்லை! கையில் வாளும் வேலும்கொண்டு போர்முனையில் நின்று, எதிரிகளின் தலைகளைப் பனங்காய்களைப் போல் உருட்டி அவர்கள் நெஞ்சில் வேலைப் பாய்ச்சி, இரத்த வெள்ளத்தில் நீந்தி, வெற்றி சங்கு முழக்கிப் பகைவர்களை ஹதாஹதம் செய்து விரட்டி 'வீராதி வீரன்' என்று உலகமெல்லாம் பாராட்டும்படி பெயர் எடுப்பதற்காகப் பிறந்தவன்தான் என்று உணர்ந்தான்.

இந்த எண்ணமாவது பரஞ்சோதிக்கு எல்லையற்ற குதூகலத்தை உண்டாக்கிற்று. ஆயனர் வீட்டில் புத்தர் சிலைக்குப் பின்னால் ஒளிந்திருந்து அவன் பார்த்த மகேந்திர சக்கரவர்த்தியின் கம்பீர உருவம் அவன் கண்முன்னால் எழுந்தது. அதோ வானளாவிப் பறக்கும் கொடியின் அடியில் இந்த மகத்தான சைனியத்தின் பிரதம சேனாதிபதியான மகேந்திர சக்கரவர்த்தி வீற்றிருப்பார். அவர் முன்னிலையிலே தான் தன்னைக் கொண்டு போய் நிறுத்துவார்கள். சக்கரவர்த்தியின் சந்நிதியை அடைந்ததும், அவர் பாதங்களில் விழுந்து, 'பிரபு! பல்லவேந்திரா! தங்களுடைய வீர மகா சைனியத்தில் இந்தப் பட்டிக்காட்டில் பிறந்த அறியாச் சிறுவனையும் சேர்த்துகொள்ள அருள் புரிய வேணும்!' என்று வேண்டிக்கொள்வதென்று பரஞ்சோதி தீர்மானித்தான். சித்திரக் கலையுமாச்சு வர்ணச் சேர்க்கையுமாச்சு! ஆயனரும் நாகநந்தியும் எக்கேடு கெட்டாவது போகட்டும்!

இவ்விதம் பரஞ்சோதி எண்ணமிட்டுக் கொண்டே பாசறையை நெருங்கியபோது, அவனுடைய பொங்கி எழுந்த உற்சாகத்தை மீண்டும் சந்தேக நிழல் மறைத்தது. 'இங்கே இறங்கியிருப்பது பல்லவ சைனியந்தானா?' என்பதுதான் அந்தச் சந்தேகம்.

பல்லவ சாம்ராஜ்யத்தின் கொடி ரிஷபக்கொடி அல்லவா? இங்கே பறக்கும் கொடிகளில் காட்டுப் பன்றியின் உருவம் கடூரமாகக் காட்சியளிக்கின்றதே!

ஒருவேளை இது வாதாபிச் சைனியமாக இருக்குமோ! பல்லவ இராஜ்யத்தின் மீது படையெடுத்து வரும் சைனியம் இது தானோ? அம்மம்மா! இவ்வளவு பிரம்மாண்டமான படை பலமுள்ள பகைவனா பல்லவ இராஜ்யத்தின் மீது படையெடுத்து வருகிறான்?

பாசறையின் முன் வாசலை அடைந்ததும், வீரர்கள் குதிரைகளின் மீதிருந்து கீழே இறங்கிப் பரஞ்சோதியையும் கீழே இறக்கிவிட்டு அவனை நடத்தி அழைத்துச் சென்றார்கள். பாசறைக்குள் புகுந்து சென்றபோது, பரஞ்சோதியின் மனத்தில் முன்னமே தோன்றியிருந்த சந்தேகம் உறுதியாயிற்று. பாசறையில் ஆங்காங்கு நின்ற வீரர்களின் தோற்றமும் அவர்களுடைய பேச்சின் பாஷையும், இந்த சைனியம் பல்லவ சைனியமாக இருக்க முடியாது என்று ஐயமறத் தெரிவித்தன.

"ஆஹா! பகைவர்களின் பாசறைதான் இது! இங்கே வந்து அகப்பட்டுக் கொண்டோ மே? தப்பிச் செல்வதற்கு வழியே இல்லை போலிருக்கிறதே?" என்று பரஞ்சோதி எண்ணியபோது, அவனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டன. சற்று முன் உள்ளத்தில் ஏற்பட்ட குதூகலம் நிராசையாக மாறியது. அவன் உடம்பைப் பிணித்திருந்த கட்டுக்கள் அப்போது முன்னை விடப் பன்மடங்கு அதிகமாக வலித்தன. மனச் சோர்வினாலும் உடல் வலியினாலும் அவன் நிமிர்ந்து நடக்கக்கூட முடியாமல் தள்ளாடவே, அவனை அவ்வீரர்கள் இழுத்துக்கொண்டு போக வேண்டியதாக நேரிட்டது. அப்போது சற்றுத் தூரத்தில் அறிமுகமான முகம் ஒன்று தன்னை நோக்கி வருவதைப் பரஞ்சோதி கண்டான். அருகில் நெருங்கியதும் அந்த முகம் நேற்று முன்தினம் அவனுக்கு வழித்துணையாகக் கிடைத்த வஜ்ரபாஹுவின் முகந்தான் என்பது தெரிந்தது.

முதலில் பரஞ்சோதிக்குச் சிறிது உற்சாகம் உண்டாயிற்று. உடனே அவன் மனத்தில், 'நாம் இந்தக் கதியை அடைவதற்கு மூலகாரணம் இந்த மனிதன்தான்' என்ற எண்ணம் தோன்றியது.

வஜ்ரபாஹுவோ பரஞ்சோதியைப் பார்த்து மிக்க அதிசயத்தை அடைந்தவனைப் போல், "தம்பி! இது என்ன கோலம்?" என்றான்.

பிறகு, அவனை அழைத்து வந்த வீரர்களைப் பார்த்து ஏதோ கேட்டுவிட்டு, "தம்பி பயப்படாதே! சத்யாச்ரய புலிகேசி மன்னரிடம் உள்ளது உள்ளபடி சொல்லு உனக்கு தீங்கு ஒன்றும் நேராது!" என்று கூறினான்.

வஜ்ரபாஹுவின் வார்த்தைகளைக் காட்டிலும் அவனுடைய பிரகாசமான கண்களில் மின் வெட்டைப்போல் தோன்றிய சமிக்ஞையானது பரஞ்சோதிக்கு அதிக தைரியத்தை ஊட்டியது.

சத்யாச்ரயன்

வாதாபியைத் தலைநகராகக் கொண்டு, வடக்கே நர்மதை வரையிலும் தெற்கே துங்கபத்திரை வரையிலும் பரந்து கிடந்த சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியை - பாரத நாட்டில் அந்தக் காலத்திலிருந்த வீரர்களுக்குள்ளே ஒப்பற்ற மகா வீரனாகிய புலிகேசியை நேயர்கள் இப்போது சந்திக்கப் போகிறார்கள். அப்படிச் சந்திப்பதற்கு முன்னால், அந்த வீரனின் பூர்வ சரித்திரத்தை நேயர்கள் தெரிந்து கொள்ளுதல் உபயோகமாக இருக்கும்.

புலிகேசியும் அவனுடைய சகோதரர்களும் சிறுவர்களாக இருந்தபோது, அவர்களுடைய சிற்றப்பன் மங்களேசனுடைய கொடுமைக்கு ஆளாக நேர்ந்தது. மங்களேசனுடைய சிறையிலிருந்து அவர்கள் தப்பி ஓடி, வெகுகாலம் அடர்ந்த காடுகளில் ஒளிந்து வாழ்ந்தார்கள். அப்படிக் காட்டில் வசித்த காலத்தில் அவர்கள் அனுபவித்த அளவில்லாத கஷ்டங்கள் அவர்களுடைய தேகத்தை வஜ்ரதேகமாக்கி, அவர்களுடைய உள்ளத்தில் வயிரம் ஏற்றி அவர்களை இணையற்ற வீர புருஷர்களாகவும் ஈவிரக்கமற்ற கடூர சித்தர்களாகவும் செய்து விட்டன.

காலம் கை கூடி வந்தபோது, புலிகேசியும் காட்டை விட்டு வெளிவந்து, சிற்றப்பனை எளிதில் வென்று அப்புறப்படுத்திவிட்டு வாதாபிச் சிங்காதனத்தில் ஏறினான். பின்னர், தன் வீரத் தம்பிமார் துணைகொண்டு வாதாபி இராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கினான். வடதிசையில் அவனுடைய ராஜ்யத்தை விஸ்தரித்துக் கொண்டு போய் நர்மதை நதிக் கரையை எட்டியபோது அவனுடைய சைனியம் உத்தர பாரதத்தின் ஏக சக்கராதிபதியாக விளங்கிய ஹர்ஷவர்த்தனரின் படைகளுடன் முட்டவேண்டியதாயிற்று. நர்மதை நதியின் இரு கரைகளிலும் பல வருஷ காலம் போர் நடந்தது. வாதாபிப் படைகள் எவ்வளவோ வீரத்துடன் போர் புரிந்தும், வடநாட்டிலிருந்து மேலும் மேலும் ஹர்ஷரின் சைனியங்கள் வந்துகொண்டிருந்தபடியால், முடிவான வெற்றி காணமுடியவில்லை. இந்த நிலைமையில் லட்சோபலட்சம் வீரர்கள் அடங்கிய பெரும் சைனியத்துக்கு ஹர்ஷவர்த்தனர் தாமே தலைமை வகித்து வருவதாகத் தெரியவந்தபோது, புலிகேசி மேலும் அவருடன் போராடுவது விந்திய பர்வதத்தில் முட்டிக் கொள்வதேயாகும் என்பதை உணர்ந்து சமாதானத்தைக் கோரினான். மகா புருஷரான ஹர்ஷவர்த்தனரும் அதற்கு உடனே இணங்கியதுடன் புலிகேசியின் வீர தீரங்களைப் பாராட்டி நர்மதைக்குத் தெற்கேயுள்ள பிரதேசத்துக்குச் சக்கரவர்த்தியாக அவனை அங்கீகரித்தார்.

பின்னர், புலிகேசியின் கவனம் தென்னாடு நோக்கித் திரும்பிற்று. அவ்விதம் திரும்புவதற்கு முக்கிய காரணமாகவும் தூண்டுகோலாகவும் இருந்தவர்கள் ஜைன முனிவர்கள். புலிகேசி சிங்காதனம் ஏறுவதற்கு ஜைனர்கள் உதவிசெய்த காரணத்தினால், வாதாபியில் சமண முனிவர்களுக்கு விசேஷச் செல்வாக்கு ஏற்பட்டிருந்தது. அவர்களுடைய முயற்சியினாலேயே கங்கபாடி மன்னன் துர்விநீதனுடைய மகளுக்கும் புலிகேசியின் சகோதரன் விஷ்ணுவர்த்தனுக்கும் விவாகம் நடந்தது.

காஞ்சி மகேந்திர சக்கரவர்த்தி ஜைன மதத்திலிருந்து விலகிச் சைவ சமயத்தை மேற்கொண்டபோது, நாடெங்கும் உள்ள சமணர்களின் உள்ளம் கொதிப்பை அடைந்தது. ஏனெனில், கல்வியிற் சிறந்த காஞ்சி மாநகரமானது வெகு காலமாக சமணர்களுடைய குருபீடமாக இருந்து வந்தது. காஞ்சியில் வேகவதியாற்றுக்கு அப்பாலிருந்த பகுதி 'ஜின காஞ்சி' என்று வழங்கி வந்தது. தென்பெண்ணையாற்றின் முகத்துவாரத்தருகில் இருந்த பாடலிபுரம் என்னும் ஊரில் தென்னாட்டிலேயே மிகச் சிறந்த சமணப்பள்ளி புகழுடன் விளங்கி வந்தது. இத்தகைய பிரதேசத்தில், சமணத்தின் செல்வாக்குத் தாழ்ந்து சைவம் ஓங்குவது என்பதைச் சமண சமயத்தலைவர்களால் சகிக்கக்கூட வில்லை.

இவர்களுடைய தூண்டுதலுடனே புலிகேசியின் ஏக சக்கராதிபத்திய வெறியும் சேரவே, அவ்வீர மன்னன் இது வரையில் யாரும் கண்டும் கேட்டுமிராத பிரம்மாண்டமான சைனியத்துடனே தென்னாட்டின் மேல் படையெடுப்பதற்குச் சித்தமானான்.

படையெடுப்புச் சைனியம் கிளம்பியபோது, வெற்றி முழக்கத்துடனே காஞ்சியில் பிரவேசித்து மகேந்திரனுக்குப் புத்தி புகட்டலாம் என்ற எண்ணத்துடன் ஜைன ஆசார்யர்களும் சைனியத்துடனே புறப்பட்டார்கள். ஆனால், தலைநகருக்கும் பாசறைக்கும் வித்தியாசம் அதிகம் என்பதையும் சக்கரவர்த்தி புலிகேசிக்கும் போர்த் தலைவன் புலிகேசிக்கும் மிக்க வேற்றுமை உண்டு என்பதையும் விரைவிலேயே அவர்கள் கண்டார்கள். தலைநகரிலேயே பூஜ்ய பாதர், ரவிகீர்த்தி முதலிய ஜைன குருமாருக்குச் சக்கரவர்த்தியைக் காட்டிலும் அதிகமான மரியாதை நடந்தது. போர்க்களத்திலோ அவர்களைத் திரும்பிப் பார்ப்பவர்கள் யாரும் இல்லை. அந்தக் குருமார் வைஜயந்தி பட்டணத்தைக் கொளுத்தக் கூடாது என்று சொன்னதைப் புலிகேசி அலட்சியம் செய்த பிறகு, அவர்களுக்குப் போர்க்களத்தில் இருக்கவே மனங்கொள்ளவில்லை. புலிகேசியிடம் சிறிது விவாதம் செய்து பார்த்த பிறகு, அவனிடம் விடைபெற்றுக் கொண்டு அவர்கள் திரும்பிச் சென்றார்கள்.

சளுக்கச் சக்கரவர்த்தியை அவருடைய முக்கியப் படைத்தலைவர்கள் சகிதமாக நாம் சந்திக்கும்போது, மேற்கூறியபடி ஜைன குருமார்கள் பாசறையிலிருந்து போய் விட்டதைக் குறித்துத்தான் பேச்சு நடந்துகொண்டிருந்தது.

வானை அளாவிப் பறந்து கொண்டிருந்த வராகக் கொடியின் கீழே, விஸ்தாரமான கூடாரத்தின் நடுவில், தந்தச் சிங்காதனத்தில், மணிமகுடம் தரித்த புலிகேசி மன்னன் கம்பீரமாக அமர்ந்திருந்தான். சிங்காதனத்துக்கு எதிரே தரையிலே விரித்திருந்த இரத்தினக் கம்பளத்தில் ஏழெட்டுப் பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் படைத் தலைவர்கள் முதலிய பெரிய பதவி வகிப்பவர்களாக இருக்க வேண்டுமென்று அவர்களுடைய தோற்றத்திலிருந்து தெரிய வந்தது. அவர்கள் எல்லாருடைய கண்களும் பயபக்தியுடன் புலிகேசியின் முகத்தையே நோக்கியவண்ணம் இருந்தன.

புலிகேசியும் அவனுடைய படைத் தலைவர்களும் பேசிய பாஷையில் தமிழ்ச் சொற்களும் பிராகிருதச் சொற்களும் கலந்திருந்தன.

(பிற்காலத்தில் இந்தக் கலப்பு மொழியே கன்னட பாஷையாயிற்று.)

"லட்சணந்தான்! இந்த திகம்பர சந்நியாசிகள் என்ன எண்ணிக்கொண்டு நம்முடன் கிளம்பினார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் இஷ்டப்படியே யுத்தத்தை நடத்துவதாயிருந்தால் உருப்பட்டாற் போலத்தான்" என்று புலிகேசி கூறினான்.

"அவர்கள் போய்விட்டதே க்ஷேமம். அவர்கள் நம்மோடு வந்து கொண்டிருந்தால் யுத்தம் செய்யவே முடியாது. கோயில்களும் சங்கராமங்களும் ஸ்தூபங்களும் கட்டிக் கொண்டு போகலாம்!" என்றான் ஒரு படைத்தலைவன் எல்லாரும் கலகலவென்று சிரித்தார்கள்.

சிரிப்பு அடங்கியதும் இன்னொரு படைத் தலைவன், "ஜைனமுனிவர்களை அனுப்பிவிட்டோ ம். சரிதான், ஆனால், புத்த பிக்ஷுவின் இஷ்டப்படிதானே யுத்தம் நடத்துவதாக ஏற்பட்டிருக்கிறது?" என்று கூறி புலிகேசியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

"ஆகா! அது வேறு விஷயம். பிக்ஷுவின் யோசனையைக் கேட்டதில் இதுவரையில் நாம் எவ்வித நஷ்டமும் அடையவில்லை. எந்த காரியமும் தவறாகப் போனதுமில்லை" என்றான் புலிகேசி.

பிறகு, எதிரிலிருந்தவர்களில் ஒருவனைக் குறிப்பிட்டுப் பார்த்து, "நம் ஒற்றர் படை வெகு லட்சணமாக வேலை செய்கிறது போலிருக்கிறதே! பிக்ஷுவின் தூதனை நம்முடைய ஆட்கள் கண்டுபிடித்துக்கொண்டு வருவதற்கு மாறாக, தூதனல்லவா நம்மைத் தேடிப் பிடித்திருக்கிறான்?" என்று கூறியபோது இயற்கையாகவே கடுமையான குரலில் இன்னும் அதிகக் கடுமை தொனித்தது.

அந்த ஒற்றர் படைத்தலைவன் ஒருகணம் தலை குனிந்திருந்து விட்டு, பிறகு நிமிர்ந்து புலிகேசியை நோக்கி, "ஏதோ பிசகு நேர்ந்திருக்கிறது. நான் அனுப்பிய ஆட்கள் இன்னும் வந்து சேரவில்லை..." என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே கூடாரத்திற்குள் யாரோ வருவது கண்டு திரும்பிப் பார்த்து, "ஆகா! இதோ வந்துவிட்டார்களே!" என்றான்.

அப்போது, பின்கட்டு முன்கட்டாகக் கட்டியிருந்த பரஞ்சோதியை முன்னால் தள்ளிக்கொண்டு அவனைச் சிறைப்பிடித்து வந்த வீரர்கள் உள்ளே வந்துகொண்டிருந்தார்கள்.

அந்தக் காட்சியைப் பார்த்த புலிகேசி, "இது என்ன? இது என்ன? இந்தச் சிறுவன் யார்?" என்று கேட்டது, பரஞ்சோதியின் காதில் இடி முழக்கம்போல் விழுந்தது.

மர்ம ஓலை

இராஜாதிராஜனான புலிகேசி மன்னன் ஒல்லியாக உயர்ந்த ஆகிருதியும், வற்றி உலர்ந்து எலும்புகள் தெரிந்த தேகமும் உடையவனாக இருந்தான். அவனுடைய முகத்தோற்றம் இரும்பையொத்த நெஞ்சத்தையும், தயைதாட்சண்யம் இல்லாத கடூர சுபாவத்தையும் பிரதிபலித்தது. கோவைப் பழம்போல் சிவந்து அனல் கக்கிய அவனுடைய கண்களைப் பார்க்கும் போது, கழுகின் கண்களைப் போன்று தூரதிருஷ்டியுடைய கண்கள் அவை என்று தோன்றியது.

புலிகேசியின் முகத்தைப் பார்த்ததும் நமக்கு ஒருகணம் திகைப்பு ஏற்படுகிறது. 'ஆ! இந்த முகத்தை இதற்கு முன்னால் எங்கேயாவது பார்த்திருக்கிறோமா என்ன?' என்று வியப்புறுகிறோம். 'கம்பீரக்களையுடன் கடூரம் கலந்த இந்த முகத்தையும் அறிவொளியுடன் கோபக் கனலைக் கலந்து வீசும் இந்தக் கண்களையும் வேறு எங்கேயும் பார்த்திருக்க முடியாது' என்று தீர்மானிக்கிறோம். 'இத்தகைய முகம் வேறு யாருக்காவது இருப்பதென்றால், அது யமதர்ம ராஜனாகத்தான் இருக்க வேண்டும்!" என்ற முடிவுக்கு வருகிறோம்.

புலிகேசியின் முன்னிலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட பரஞ்சோதியும் அதே முடிவுக்குத்தான் வந்தான்.

பரஞ்சோதியைப் பிடித்துக்கொண்டு வந்த வீரர்களின் தலைவன் சத்யாச்ரய புலிகேசிக்கு வணக்கம் செலுத்திவிட்டு, வடபெண்ணை நதிக்கரையிலுள்ள பௌத்தமடத் தலைவர் இந்த வாலிபனைச் சக்கரவர்த்தியிடம் அழைத்துப் போகச் சொன்னதிலிருந்து நடந்தவற்றை விவரமாகக் கூறிவந்தான்.

அவன் சொல்லிமுடிப்பதற்குள்ளே புலிகேசி பொறுமை இழந்தவனாய், "அதெல்லாம் இருக்கட்டும். இவன் யார்? எதற்காக இவனைக் கொண்டுவந்தீர்கள்?" என்று கோபக் குரலில் கர்ஜித்தான்.

வீரர் தலைவன் நடுங்கிய குரலில், "நாகநந்தி பிக்ஷுவிடமிருந்து சத்யாச்ரயருக்கு ஓலை கொண்டு வந்ததாக இந்த வாலிபன் சொல்லுகிறான். இதோ அந்த ஓலை!" என்று கூறி, பரஞ்சோதியிடமிருந்து வழியில் கைப்பற்றிய ஓலையைப் புலிகேசியிடம் சமர்ப்பித்தான்.

புலிகேசி ஓலையைப் பிரித்து, கவனமாகப் படித்தான். அப்போது அவனுடைய முகத்தில் வியப்புக்கும் குழப்பத்துக்கும் அறிகுறிகள் ஏற்பட்டன. ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்தபிறகும் தெளிவு ஏற்பட்டதாகத் தோன்றவில்லை.

அவன் ஓலையைப் படித்தபோது, அவனுக்கு எதிரில் இருந்த படைத் தலைவர்கள் அவனுடைய முகத்தையே பார்த்தவண்ணம் இருந்தனர்.

பரஞ்சோதியோ சொல்லமுடியாத மனக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். அவன் நாகநந்தியின் ஓலையை எடுத்துக் கொண்டு கிளம்பியபோது, இம்மாதிரி பகைவர்களிடம் சிறைப்பட்டு எதிரி அரசன் முன்னால் நிற்க நேரிடுமென்று நினைக்கவே இல்லை. அந்த எதிரியின் பாசறையில் வஜ்ரபாஹுவைச் சந்தித்ததும், அவன் போகிறபோக்கில், "சத்யாச்ரய புலிகேசியிடம் உண்மையை உள்ளபடி சொல்லு!" என்று கூறியதும் அவனுடைய மனக் குழப்பத்தை அதிகமாக்கின.

இன்னும் நாகநந்தி தன்னிடம் ஓலையைக் கொடுத்த போது கூறிய வார்த்தைகள் நினைவு வந்தபோது அவன் தலையே கிறுகிறுக்கும் போல் ஆகிவிட்டது. 'இந்த ஓலையை நீ சத்யாச்ரயரிடமே கொடுக்க வேண்டும். வேறு யாரிடமும் கொடுக்கக்கூடாது. சத்யாச்ரயரை ஒருவேளை நீ வழியிலேயே சந்தித்தாலும் சந்திக்கலாம். எப்போது எந்தக் கோலத்தில் அவர் இருப்பார் என்று சொல்லமுடியாது. அவரை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நீ அதிசயப்படாதே!' - இவ்விதம் நாகநந்தி பிக்ஷு கூறியது அவனுக்கு நினைவு வந்தது. 'நாகநந்தி கூறிய சத்யாச்ரயர் இந்த வாதாபி சக்கரவர்த்தி புலிகேசியா? நாம் கொண்டு வந்த ஓலையில் உள்ள விஷயம் அஜந்தா வர்ணக் கலவை சம்பந்தமானதுதானா? அல்லது, ஒரு பெரிய மர்மமான சூழ்ச்சியில் நாம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோமா?' என்று பரஞ்சோதி எண்ணியபோது, அவன் அறிவு குழம்பியது.

புலிகேசி சட்டென்று தலையைத்தூக்கி, எதிரே இருந்த படைத்தலைவர்களைப் பார்த்து, "இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது தெரியுமா?" என்று கேட்டான். உடனே, "உங்களால் ஒரு நாளும் ஊகம் செய்ய முடியாது" என்று தானே மறுமொழியும் கூறிவிட்டு, இடிஇடியென்று சிரித்தான்.

இடிமுழக்கம் நிற்பதுபோலவே சட்டென்று சிரிப்பை நிறுத்திவிட்டு, காவலர்களுக்கு நடுவில் கட்டுண்டு நின்ற பரஞ்சோதியை உற்று நோக்கினான். புலிகேசியினுடைய கழுகுக் கண்களின் கூரிய பார்வை பரஞ்சோதியின் நெஞ்சையே ஊடுருவுவது போலிருந்தது.

புலிகேசி அவனைப் பார்த்துக் கடுமையான குரலில், "பிள்ளாய்! உண்மையைச் சொல்! நீ யார்? எங்கு வந்தாய்? இந்த ஓலையைக் கொடுத்தது யார்? இதிலுள்ள விஷயம் இன்னதென்று உனக்குத் தெரியுமா?" என்று சரமாரியாகக் கேள்விகளைப் போட்டான்.

அந்தக் கேள்விகளில் ஒன்றையும் புரிந்து கொள்ள முடியாதவனாய் பரஞ்சோதி மௌனம் சாதித்தவண்ணம் நின்றான். அதனால் புலிகேசியின் கோபம் கணத்துக்குக் கணம் பொங்கிப் பெருகிற்று.

அதைப் பார்த்த படைத் தலைவர்களில் ஒருவன், "பிள்ளையாண்டான் செவிடு போலிருக்கிறது!" என்றான்.

இன்னொருவன், "ஊமை!" என்றான்.

மற்றொருவன், "அதெல்லாம் இல்லை பையனுக்கு நம்முடைய பாஷை புரியவில்லை! அதனால்தான் விழிக்கிறான்!" என்றான்.

அப்போது புலிகேசி, "ஆமாம்; அப்படித்தான் இருக்க வேண்டும். ஜைன முனிவர்கள் கோபித்துக் கொண்டு போனதில் அதுதான் ஒரு சங்கடம். அவர்கள் இருந்தால் எந்த பாஷையாக இருந்தாலும் மொழிபெயர்த்துச் சொல்லி விடுவார்கள். போகட்டும், இவனைக் கொண்டுபோய்ச் சிறைப்படுத்தி வையுங்கள், பிறகு பார்த்துக் கொள்வோம்!" என்று கூறியவன், திடீரென்று, "வேண்டாம், இவன் இங்கேயே இருக்கட்டும். சற்று முன்பு வந்திருந்த வீரன் வஜ்ரபாஹுவை உடனே போய் அழைத்து வாருங்கள்!" என்றான்.

வஜ்ரபாஹுவை அழைக்க ஆள் போனபிறகு, புலிகேசி படைத் தலைவர்களைப் பார்த்துக் கூறினான்.

"இந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறது, தெரியுமா? கேளுங்கள் அதிசயத்தை! இந்த ஓலை கொண்டுவருகிற பையனிடம் அஜந்தா வர்ண இரகசியத்தைச் சொல்லி அனுப்ப வேணுமாம். இரண்டு வருஷம் நான் அஜந்தா குகைகளிலேயே வசித்திருந்தும் அந்தப் புத்த பிக்ஷுக்களிடமிருந்து வர்ண இரகசியத்தை என்னால் அறிய முடியவில்லை. பிக்ஷுக்கள் அவ்வளவு பத்திரமாக அஜந்தா வர்ண இரகசியத்தைப் பாதுகாக்கிறார்கள். அப்படியிருக்க இந்தப் பிள்ளையிடம் அதைச் சொல்லி அனுப்பும்படி இந்த ஓலையில் எழுதியிருக்கிறது. எழுத்தோ நம் பிக்ஷு எழுதியதாகவே தோன்றுகிறது. இதைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர், மைத்ரேயரே!" என்று சொல்லிக் கொண்டே, புலிகேசி மன்னன் அந்த ஓலையை ஒற்றர் படைத் தலைவனிடம் நீட்டினான்.

மைத்ரேயன் ஓலையை வாங்கிக் கவனமாகப் படித்தான். பின்னர் சக்கரவர்த்தியைப் பார்த்து, "சத்யாச்ரயா! இதில் ஏதோ மர்மமான செய்தி இருப்பதாகத் தெரிகிறது. பையனை விசாரிக்கிறபடி விசாரித்தால் தெரிகிறது!" என்றான்.

"அழகுதான், மைத்ரேயரே! பையனை எப்படி விசாரித்தாலும் அவன் சொல்கிறது நமக்கு விளங்கினால் தான் உபயோகம்? அதற்காகத்தான் வஜ்ரபாஹுவை எதிர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்றான் புலிகேசி.

இப்படி அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வஜ்ரபாஹு கூடாரத்துக்குள் நுழைந்தான். புலிகேசியின் அருகில் வந்து வணங்கி, "இராஜாதி ராஜனே! மறுபடியும் ஏதாவது ஆக்ஞை உண்டா?" என்று கேட்டான்.

"வஜ்ரபாஹு, உம்மைப்போலவே இந்தப் பையனும் எனக்கு ஓர் ஓலை கொண்டு வந்திருக்கிறான். ஆனால், அதிலுள்ள விஷயம் மர்மமாக இருக்கிறது. ஓலையை யார் கொடுத்தார்கள், யாரிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்பதை விவரமாக விசாரித்துச் சொல்லும், அதற்காகத்தான் உம்மை மீண்டும் தருவித்தேன்" என்றான்.

வஜ்ரபாஹு பரஞ்சோதியின் பக்கம் திரும்பி உற்றுப் பார்த்து, "ஆகா! இந்தப் பையனா? இவனை நான் முந்தாநாள் இரவு மகேந்திர மண்டபத்தில் பார்த்தேனே! இவனைப் பார்த்ததுமே எனக்கு சந்தேகம் உண்டாயிற்று. விசாரித்தேன். ஆனால், பையன் அமுக்கன். மறுமொழியே சொல்லவில்லை!" என்றான்.

"இப்போது விசாரியும், மறுமொழி சொல்லாவிட்டால் நாம் சொல்லச் செய்கிறோம்" என்றான் வாதாபி அரசன்.

"மன்னர் மன்னா! இவன் சுத்த வீரனாகக் காண்கிறான். இவனைப் பயமுறுத்தித் தகவல் ஒன்றும் அறிய முடியாது. நானே விசாரித்துப் பார்க்கிறேன்" என்று வஜ்ரபாஹு கூறி விட்டு பரஞ்சோதியை நோக்கி, "தம்பி! நான் அப்போதே சொன்னேனல்லவா, அதன்படி சத்யாச்ரயரிடம் உள்ளது உள்ளபடி சொல்லு! பயப்பட வேண்டாம். நான் உன்னை தப்புவிக்கிறேன்" என்றான்.

அதற்குப் பரஞ்சோதி, "ஐயா! எனக்குப் பயமே கிடையாது எதற்காகப் பயப்படவேண்டும்? உயிருக்குமேலே நஷ்டமாகக் கூடியது ஒன்றுமில்லை அல்லவா? இந்த ஓலையை நாகார்ஜுன பர்வதத்துக்குக் கொண்டுபோய்ச் சத்யாச்ரயரிடம் கொடுக்கும்படி நாகநந்திபிக்ஷு கூறினார். நீங்கள் சொல்லுகிறபடி இவருக்குத்தான் இந்த ஓலை என்றால், பெற்றுக்கொண்டு விடை எழுதிக் கொடுக்கட்டும் நான் எடுத்துக்கொண்டு திரும்புகிறேன். அல்லது இந்த ஓலை இவருக்கு அல்ல என்றால் ஓலையைத் திருப்பிக் கொடுக்கட்டும் வேறு என்ன நான் சொல்லக்கூடும்?" என்றான்.

வஜ்ரபாஹு புலிகேசியைப் பார்த்து, "அரசர்க்கரசரே! ஓலையை நாகநந்தி பிக்ஷுதான் கொடுத்ததாகவும், அதில் ஏதோ அஜந்தா வர்ணச் சேர்க்கையைப்பற்றி எழுதியிருப்பதாகவும் பிள்ளையாண்டான் சொல்கிறான். அந்த ஓலையை நான் சற்றுப் பார்வையிடலாமா?" என்று கேட்டான்.

புலிகேசி ஓலையை வஜ்ரபாஹுவிடம் கொடுத்து, "இதிலிருந்து தெரியக்கூடியது ஒன்றுமில்லை. நீர் வேணுமானாலும் பாரும்" என்றான்.

வஜ்ரபாஹு ஓலையில் சிறிது நேரம் கவனம் செலுத்தி விட்டு, "பிரபு! நாகார்ஜுன பர்வதத்திலுள்ள புத்த சங்கராமத்தின் தலைவரின் திருநாமம் சத்யாச்ரய பிக்ஷு தானே?" என்று கேட்டான்.

"ஆமாம், அதனால் என்ன?"

"இந்த ஓலை அவருக்கே இருக்கலாம் அல்லவா?"

"இருக்கலாம்; ஆனால், நாகநந்தி அவருக்கு இம்மாதிரி விஷயத்தைப் பற்றி எழுத நியாயமே இல்லையே?"

"பிரபு! இந்த ஓலையைப் படித்ததும் நாகநந்தி பிக்ஷு கூறிய ஒரு விஷயம் எனக்கு ஞாபகம் வருகிறது. கிருஷ்ணா நதிக் கரையோடு வேங்கி ராஜ்யத்தின்மேல் படையெடுத்துச் செல்லும் தங்கள் சகோதரருக்கும் செய்தி அனுப்பவேண்டும் என்று அவர் சொன்னார். ஒருவேளை தங்கள் சகோதரர் விஷ்ணுவர்த்தன மகாராஜாவுக்கு இதில் ஏதாவது செய்தி இருக்கலாம் அல்லவா?"

இதைக் கேட்டதும் புலிகேசியின் முகம் பிரகாசமடைந்தது. "வஜ்ரபாஹு! நீர் மகா புத்திசாலி. நம்முடனேயே நீர் இருந்து விடலாமே? பல காரியங்களுக்கு அனுகூலமாயிருக்கும்" என்றான்.

பிறகு, தன் படைத் தலைவர்களிடம் சிறிது கலந்து யோசித்து விட்டு, "எப்படியும் விஷ்ணுவர்த்தனனுக்கு நான் ஓலை அனுப்ப வேண்டியிருக்கிறது. ஓலையுடன் ஒன்பது வீரர்கள் போகட்டும். அவர்களுடன் இந்தப் பையனையும் அனுப்புங்கள். இவனுடைய ஓலையின் விஷயம் என் தம்பிக்கும் விளங்காவிட்டால், இவனை உடனே சிரச்சேதம் செய்யக் கட்டளையிட்டு அனுப்புங்கள்!" என்றான்.

பிறகு வஜ்ரபாஹுவை நோக்கி, "இந்த விஷயத்தைப் பையனிடம் சொல்லும்" என்று ஆக்ஞாபித்தான்.

வஜ்ரபாஹு பரஞ்சோதியிடம், "தம்பி! நாகார்ஜுன மலைக்கு இங்கிருந்து சக்கரவர்த்தியின் ஓலையுடன் ஒன்பது வீரர்கள் நாளைக் காலையில் போகிறார்கள். அவர்கள் உன்னையும் அழைத்துப் போவார்கள். நீ கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம். நாளை இராத்திரி உன்னை அநேகமாக நான் வழியில் சந்திப்பேன்" என்றான்.

பரஞ்சோதி அகமும் முகமும் மலர்ந்தவனாய், "ஐயா! தங்களுடன் பிரயாணம் செய்வதாயிருந்தால் நரகத்துக்கு வேணுமானாலும் நான் வரச் சித்தம். தங்களிடம் கதை கேட்க அவ்வளவு ஆவலாக இருக்கிறது!" என்றான்.

"பையன் என்ன சொல்கிறான்?" என்று புலிகேசி கேட்டதற்கு, "பிள்ளையாண்டான் பலே கைகாரன். தான் கொண்டுவந்த ஓலை தங்களுக்கு இல்லையென்றால் தன்னிடமே திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்கிறான். இளங்கன்று பயமறியாது என்று தமிழிலே ஒரு பழமொழி உண்டு!" என்றான் வஜ்ரபாஹு.

புலிகேசி சிரித்துவிட்டு, "அப்படியா? நல்லது. ஓலையைப் பையனிடமே கொடுத்து வைக்கலாம். இப்போதைக்கு அவனுடைய கட்டையும் அவிழ்த்து விடுங்கள்!" என்றான்.

ஓலையைப் பரஞ்சோதியிடம் கொடுத்ததோடு, அவனுடைய கட்டுக்களையும் உடனே அவிழ்த்து விட்டார்கள். பிறகு, அவனைச் சக்கரவர்த்தியின் சமூகத்திலிருந்து அழைத்துச் சென்றார்கள்.

மறு நாள் அந்தி மயங்கும் சமயத்தில் பரஞ்சோதியும் அவனுக்கு முன்னும் பின்னுமாகச் சென்ற ஒன்பது வீரர்களும் காட்டு மலைப் பாதையில் ஒரு குறுகிய கணவாயைத் தாண்டி, அப்பால் சற்றுத் தூரத்திலிருந்த ஒரு பழைய பாழடைந்த வீட்டை அடைந்தார்கள். அந்த வீட்டின் வாசல் திண்ணையில் ஒரு முதிய கிழவன் உட்கார்ந்திருந்தான். தலையும் தாடியும் நரைத்த அக்கிழவன் உலகப் பிரக்ஞையே அற்றவனாய்க் கையிலிருந்த ஜபமாலையை உருட்டிக் கொண்டிருந்தான். பத்துக் குதிரைகள் சேர்ந்தாற்போல் வந்து அவ்வீட்டின் வாசலில் நின்றதைக்கூட அவன் பொருட்படுத்தவில்லை.

அந்த வீரர்களில் ஒருவன் கிழவனை என்னவோ கேட்க, அவன் இரண்டொரு வார்த்தையில் மறுமொழி கூறிவிட்டு மறுபடியும் ஜபமாலையை உருட்டலானான்.

அன்றிரவு அந்தப் பாழ் வீட்டிலேயே தங்குவதென்று அவ்வீரர்கள் முடிவு செய்தார்கள். தங்களில் நாலு பேரை நாலு ஜாமத்துக்குக் காவல் செய்யவும் ஏற்படுத்திக் கொண்டார்கள். எல்லாரையும்விட அதிகக் களைப்புற்றிருந்த பரஞ்சோதிக்குப் படுத்தவுடனேயே கண்ணைச் சுற்றிக் கொண்டு தூக்கம் வந்தது. தூக்கத்தில் ஆழ்வதற்கு முன்னால் அவன் மனத்தில் கடைசியாக 'வஜ்ரபாஹு இன்றிரவு சந்திப்பதாகச் சொன்னாரே? இனி எங்கே சந்திக்கப் போகிறார்?' என்ற எண்ணம் தோன்றியது.

பரஞ்சோதி அன்றைக்கும் தூக்கத்தில் கனவு கண்டான். புலிகேசியின் கூரிய கழுகுப் பார்வை ஒரு கணம் அவன் நெஞ்சை ஊடுருவிற்று. 'இவனை யானையின் காலால் இடறச் செய்யுங்கள்!' என்று புலிகேசி கட்டளையிடுகிறான். பரஞ்சோதி தன்னை இடற வந்த யானையின் மீது வேலை எறிந்துவிட்டு ஓடுகிறான். யானை அவனை விடாமல் துரத்தி வருகிறது. கடைசியில், அது கிட்ட நெருங்கிவிட்டது . யானையின் தும்பிக்கை தன் தோளில் பட்டதும், பரஞ்சோதி திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்கிறான். பார்த்தால் யானையின் முகம் அந்த வீட்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து ஜபமாலை உருட்டிக் கொண்டிருந்த கிழவனின் முகமாகவும், துதிக்கை அக்கிழவனின் கையாகவும் மாறியிருக்கின்றன.

இது கனவில்லை. உண்மையாகவே அந்தக் கிழவன் தன்னைத் தொட்டு எழுப்புகிறான் என்பதைப் பரஞ்சோதி உணர்ந்ததும் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான்.

மாயக் கிழவன்

கிழவனுடைய கையில் வேல் ஒன்று இருப்பதையும், அதைப் பெற்றுக்கொண்டு தன்னுடன் கிளம்பி வரும்படி கிழவன் சமிக்ஞை செய்வதையும், பலகணி வழியாக வந்த நிலவின் மங்கிய ஒளியில் பரஞ்சோதி உற்றுப் பார்த்துத் தெரிந்து கொண்டான். பரஞ்சோதி சிறிது தயங்கியபோது, கிழவன் அவனுடைய ஒரு கையைத் தன்னுடைய இடது கையினால் அழுத்திப் பிடித்தான். உடனே, பரஞ்சோதிக்குப் பழைய ஞாபகம் ஒன்று வரவே, அந்த மாயக் கிழவன் கொடுத்த வேலை வாங்கிக்கொண்டு துள்ளி எழுந்தான்.

இருவரும் வீட்டின் கொல்லைப்புறம் வழியாக வெளியே வந்தார்கள். பரஞ்சோதி தன்னுடைய குதிரையும் இன்னொரு குதிரையும் அங்கே சேணம் பூட்டி ஆயத்தமாக நிற்பதைக் கண்டான். இருவரும் குதிரைகள் மேல் பாய்ந்து ஏறிக்கொண்டார்கள்.

பரஞ்சோதி எதிர்பார்த்ததுபோல், கிழவனுடைய குதிரை உடனே பாய்ச்சலில் கிளம்பவில்லை. பரஞ்சோதிக்கு முதுகுப் புறத்தைக் காட்டிய வண்ணம் அவன் ஏதோ செய்து கொண்டிருந்தான். எனவே, பரஞ்சோதியும் தன்னுடைய குதிரையை இழுத்துப் பிடிக்க வேண்டியதாயிற்று.

தாமதம் செய்துகொண்டிருந்த கிழவன் நடுவில், "தம்பி! என்னை யார் என்று தெரிகிறதா?" என்று கேட்டான்.

"தாடியைப் பார்த்து முதலில் ஏமாந்துதான் போனேன். கையைப் பிடித்து அழுத்தியதுந்தான் தெரிந்தது. பிசாசுக்குப் பயப்படாத சூரர் வஜ்ரபாஹு தாங்கள்தானே?" என்றான் பரஞ்சோதி.

உரத்த சத்தத்துடன் சிரித்துக்கொண்டு கிழவன் திரும்பிய போது அவன் முகத்திலிருந்த நரைத்த தாடியைக் காணவில்லை. தாடி நீங்கிய முகம் வீரன் வஜ்ரபாஹுவின் முகமாகக் காட்சி அளித்தது. "யோசித்துச் சொல்லு, அப்பனே! என்னோடு வருவதற்கு உனக்குச் சம்மதமா?" என்று வஜ்ரபாஹு கேட்க, பரஞ்சோதி, "எனக்கு வரச் சம்மதந்தான். உங்களுக்குத்தான் இங்கிருந்து போகும் உத்தேசம் இல்லை போலிருக்கிறது!" என்றான்.

"ஏன் அப்படிச் சொல்லுகிறாய்?"

"பின்னே, இப்படிச் சத்தம் போட்டுப் பேசுகிறீர்களே? அவர்கள் விழித்துக்கொள்ள மாட்டார்களா!"

"அவர்களை எழுப்புவதற்காகவேதான் இரைந்து பேசுகிறேன். தூங்குகிறவர்களை ஏமாற்றிவிட்டு ஓடித் தப்பித்துக் கொண்டான் என்ற அவப் பெயர் அச்சுதவிக்கிராந்தனுடைய வம்சத்தில் உதித்த வீரன் வஜ்ரபாஹுவுக்கு வரப்படுமா?" என்று கூறி, எதையோ நினைத்துக்கொண்டவன்போல் இடி இடியென்று சிரித்தான்.

இதற்குள் வீட்டு வாசலில் காவலிருந்த வீரன் குதிரைகளின் காலடிச் சத்தத்தையும் பேச்சுக் குரலையும் கேட்டு வீட்டைச் சுற்றிக் கொல்லைப்புறம் வந்து பார்த்தான். இரண்டு பேர் குதிரை மேலேறிக் கிளம்பிக் கொண்டிருப்பதை அவன் கண்டு, "ஓ!" என்ற கூச்சலுடன் வீட்டுக்குள் ஓடினான். உடனே, அந்த வீட்டுக்குள் வீரர்கள் ஒருவரை ஒருவர் எழுப்பும் சத்தமும், "என்ன? என்ன?" என்று கேட்கும் சத்தமும், "மோசம்!" "தப்பி ஓடுகிறார்கள்" என்ற கூக்குரலும் ஒரே குழப்பமாக எழுந்தன.

வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஏறியிருந்த குதிரைகள் முதல் நாள் வந்த பாதையில் திரும்பிச் செல்லத் தொடங்கின. ஆனால், வஜ்ரபாஹு குதிரையை வேண்டுமென்றே இழுத்துப் பிடித்து அதன் வேகத்தைக் குறைத்ததுடன் ஆங்காங்கு நின்று நின்று சென்றான். பரஞ்சோதி இந்த தாமதத்தைப்பற்றிக் கேட்டபோது, "சளுக்கர்கள் நம்மை வந்து பிடிப்பதற்கு அவகாசம் கொடுக்க வேண்டாமா? அவர்கள் வழி தப்பி வேறு எங்கேயாவது தொலைந்து போய் விட்டால்...?" என்றான்.

"போய்விட்டால் என்ன?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இவ்விடத்துக்குக் கொஞ்ச தூரத்தில் ஒரு மலைக் கணவாய் இருக்கிறதல்லவா? அந்தக் கணவாயில் துர்க்கா தேவி கோயில் ஒன்று இருக்கிறது. நேற்று வரும்போது நீ கவனித்தாயா?"

"இல்லை!"

"நீ எங்கே கவனிக்கப் போகிறாய்? உன்னுடைய கவனமெல்லாம் ஒருவேளை திருவெண்காட்டுக் கிராமத்திலே இருந்திருக்கும்...."

"என்ன சொன்னீர்கள்?"

"அந்தத் துர்க்கையம்மன் கோயில் வழியாக நான் நேற்றைக்கு வந்தபோது, இன்று சூரியோதய சமயத்தில் அம்மனுக்கு ஒன்பது உயிர்களைப் பலி கொடுப்பதாக வேண்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இவர்கள் வேறு வழியில் போய்விட்டால், என்னுடைய வேண்டுதலை நிறைவேற்ற முடியாதல்லவா?"

ஆனால், மேற்கூறிய கிழவனின் வார்த்தைகள் பரஞ்சோதியின் செவியில் விழுந்தனவாயினும், அவன் மனத்தில் பதியவில்லை.

பெரியதொரு வியப்பு அவனுடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது. திருச்செங்காட்டங்குடியிலிருந்து அவன் கிளம்பியதிலிருந்து, எத்தனை எத்தனையோ அதிசய சம்பவங்களைப் பார்த்திருக்கிறான். இவ்வளவிலும் இடையிடையே அவனுடைய மனமானது திருவெண்காட்டுக்குப் போய் வந்துகொண்டிருந்தது. ஆனால் அந்த விஷயம் இந்த வேஷதாரி வஜ்ரபாஹுவுக்கு எப்படித் தெரிந்தது என்று நினைத்து, பரஞ்சோதி ஆச்சரியக்கடலில் மூழ்கினான்.

பலபலவென்று பொழுது விடியும் தருணத்தில் வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் ஒரு மலைக் கணவாயை அடைந்தார்கள். அவர்கள் இதுகாறும் வந்த பாதையானது அங்கே குறுகி இருபுறமும் செங்குத்தாக, ஓங்கி வளர்ந்த பாறைச் சுவர்களின் வழியாகச் சென்றது. கணவாயைத் தாண்டியதும், ஒரு பக்கம் மட்டும் பாறைச் சுவர் உயர்ந்து, இன்னொரு பக்கம் அகல பாதாளமான பள்ளத்தாக்காகத் தென்பட்டது.

இந்த இடத்துக்கு வந்ததும் வஜ்ரபாஹு தன் குதிரையை நிறுத்தினான். பரஞ்சோதியையும் நிறுத்தும்படிச் செய்தான். காலை நேரத்தில் குளிர்ந்த இளங்காற்று மலைக் கணவாயின் வழியாக ஜிலுஜிலுவென்று வந்தது. பட்சிகளின் மனோகரமான குரல் ஒலிகளுடன் தூரத்திலே குதிரைகள் வரும் காலடி சத்தம் டக், டக், டக், டக் என்று கேட்டது.

"தம்பி! உன்னை மறுபடியும் கேட்கிறேன்; அந்தச் சளுக்க வீரர்கள் வருவதற்குள்ளே தீர்மானமாகச் சொல். உனக்கு என்னோடு வருவதற்கு இஷ்டமா?" என்று வஜ்ரபாஹு கேட்டான்.

"உங்களோடுதான் வந்துவிட்டேனே? இனிமேல் திரும்பிப் போக முடியுமா?"

"உனக்கு இஷ்டமில்லாவிட்டால் இப்போதுகூட நீ திரும்பிப் போய் அவர்களுடன் சேர்ந்துகொள்ளலாம்"

"சேர்ந்துகொண்டு..."

"அவர்கள் போகும் இடத்துக்கு நீயும் போகலாம்."

"அவர்கள் எங்கே போகிறார்கள்?"

"நாகார்ஜுன மலைக்குப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் போகப் போவது யமலோகத்துக்கு!"

"அங்கே அவர்களை அனுப்பப் போவது யார்!"

"உனக்கு இஷ்டமிருந்தால் நீயும் நானுமாக. இல்லாவிட்டால் நான் தனியாக.."

பரஞ்சோதி சிறிது யோசித்துவிட்டு, "தாங்கள் எங்கே போகிறீர்கள்?" என்று கேட்டான்.

"பல்லவ சைனியத்தின் பாசறைக்கு!"

"ஆஹா! நான் நினைத்தபடிதான்!" என்றான் பரஞ்சோதி.

"உனக்கு எப்படித் தெரிந்தது?"

"நேற்றெல்லாம் யோசனை செய்ததில் தெரிந்தது."

"இன்னும் என்ன தெரிந்தது?"

"தாங்கள் காஞ்சிச் சக்கரவர்த்தியின் ஒற்றர் என்றும் தெரிந்தது."

"தம்பி! உன்னை என்னவோ என்று நினைத்தேன் வெகு புத்திசாலியாக இருக்கிறாயே?"

"ஐயா! நான் தங்களுடன் வந்தால் பல்லவ சைனியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்வார்களா?" என்று கேட்டான் பரஞ்சோதி.

"கட்டாயம் சேர்த்துக்கொள்வார்கள் கரும்பு தின்னக் கூலியா? உன்னைப் போன்ற வீரனைப் பெறப் பல்லவ சைனியம் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!" என்றான் வஜ்ரபாஹு.

பரஞ்சோதி இதற்கு மறுமொழி சொல்லவில்லை. சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, "அப்பனே! என்ன யோசிக்கிறாய்?" என்று வஜ்ரபாஹு கேட்டான்.

"என்னிடமுள்ள ஓலையை என்ன செய்வது என்றுதான்!"

"அதோ தெரிகிற பள்ளத்தாக்கிலே ஓடுகிற தண்ணீரிலே போடு. அதனால் இனிமேல் பிரயோஜனம் ஒன்றுமில்லை."

"நாகநந்தியும் ஆயனரும் எவ்வளவு ஏமாற்றமடைவார்கள்?"

"ஆம்; நாகநந்தி பெரிய ஏமாற்றந்தான் அடைவார்!" என்று கூறிவிட்டு, வஜ்ரபாஹு 'கலகல'வென்று சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறீர்கள்?"

"இப்படிப்பட்ட கும்பகர்ணனாகப் பார்த்து, அந்தப் புத்த பிக்ஷு ஓலையைக் கொடுத்தாரே என்றுதான்."

"ஐயா! தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான் இப்படியே நாகார்ஜுன மலைக்குப் போய் நாகநந்தியின் ஓலையைக் கொடுத்து விட்டுப் பின்னர் பல்லவ சைனியத்தின் பாசறைக்கு வருகிறேன்."

"வீண் வேலை, அப்பனே! நாகநந்தி உன்னிடம் கொடுத்த ஓலை அக்கினிக்கு அர்ப்பணமாகிவிட்டது!"

"என்ன சொன்னீர்கள்!"

"நாகநந்தியின் ஓலை தீயில் எரிந்துபோய்விட்டது என்றேன்."

"இதோ என்னிடம் இருக்கிறதே!"

"அது நான் எழுதிவைத்த ஓலை, தம்பி!"

"என்னுடைய சந்தேகம் சரிதான்!" என்று பரஞ்சோதி கூறி ஓலைச் சுருளை எடுத்து வீசிப் பள்ளத்தாக்கில் எறிந்தான்.

"அன்றிரவு தீபத்தில் மயக்க மருந்து சேர்த்து என்னைத் தூங்க வைத்துவிட்டுத்தானே ஓலையை எடுத்தீர்கள்?" என்று கேட்டான்.

"உன்னுடைய வேலின் முனையைப்போலவே உன் அறிவும் கூர்மையாகத்தான் இருக்கிறது!" என்றான் வஜ்ரபாஹு.

வஜ்ரபாஹுவை ஆச்சரியமும் பக்தியும் ததும்பிய கண்களினால் பரஞ்சோதி பார்த்து, "ஐயா! நாகநந்தி என்னிடம் அனுப்பிய ஓலையில் என்ன எழுதியிருந்தது?" என்று கேட்டான்.

"புலிகேசியைக் காஞ்சி மாநகருக்கு உடனே வந்து, தென்னாட்டின் ஏக சக்ராதிபதியாக முடிசூட்டிக் கொள்ளும்படி எழுதியிருந்தது!"

"அடடா! அப்படிப்பட்ட துரோகமான ஓலையையா நான் எடுத்துக்கொண்டு வந்தேன்? ஐயோ! என்ன மூடத்தனம்!" என்று புலம்பினான் பரஞ்சோதி.

"போனதைப்பற்றி அப்புறம் வருத்தப்படலாம் இதோ சளுக்க வீரர்கள் யமனுலகம் போக அதிவேகமாக வருகிறார்கள். நீ என்ன செய்யப் போகிறாய்?" என்று வஜ்ரபாஹு கேட்டான்.

"தங்கள் விருப்பம் எப்படியோ, அப்படி!"

"சரி, இந்தக் கணவாயின் இருபக்கமும் நாம் இருவரும் நிற்கலாம். முதலில் வருகிறவன் மார்பில் உன்னிடமுள்ள ஈட்டியைப் பிரயோகம் செய். அப்புறம் இந்த வாளை வைத்துக் கொண்டு உன்னால் முடிந்த வரையில் பார்!" என்று வஜ்ரபாஹு கூறி, தான் வைத்திருந்த இரண்டு வாள்களில் ஒன்றைக் கொடுத்தான்.

பரஞ்சோதி ஆர்வத்துடன் அந்த வாளை வாங்கிக் கொண்டு தன்னுடைய 'கன்னி'ப் போருக்கு ஆயத்தமாய் நின்றான்.

மலைக் கணவாய்

சூரியன் உதயமாகி இரண்டு நாழிகைப் பொழுது ஆனபோது, அந்த மலைக் கணவாய்ப் பிரதேசம் கோரமான ரணகளமாய்க் காட்சியளித்தது. இளம் கதிரவனின் செங்கிரணங்கள் பாறையில் ஆங்காங்கு தோய்ந்திருந்த கரும் இரத்தத்தில் படிந்து ரணகளத்தின் கோரத்தை மிகுதிப்படுத்திக் காட்டின. கால் கை வெட்டுண்டும், தலை பிளந்தும் தேகத்தில் பல இடங்களில் படுகாயம் பட்டும் உயிரிழந்த ஒன்பது வீரர்களின் பிரேதங்கள் அந்தக் கணவாய் பாதையிலே கிடந்தன.

அப்படிக் கிடந்த உடல்களினிடையே வஜ்ரபாஹு சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அந்த உடல்களை அவன் புரட்டிப் பார்த்தும் அவற்றின் உடைகளைப் பரிசோதித்தும் எதையோ பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்ததாகத் தோன்றியது.

சற்றுத் தூரத்தில் ஒரு பாறையின் மீது பரஞ்சோதி உட்கார்ந்திருந்தான். அவன் முகத்தில் மிகுந்த சோர்வும் அருவருப்பும் குடிகொண்டிருந்தன. கையிலே வாளைப் பிடித்து ஊன்றிக் கொண்டிருந்தான். பக்கத்திலே இரத்தம் தோய்ந்த வேல் கிடந்தது.

சற்று முன்னால் நிகழ்ந்த கொடுமையான ஒரு சம்பவம் பரஞ்சோதியின் மனக் கண் முன்னால் நின்றது. சளுக்க வீரர்களில் மூன்று பேரைப் பரஞ்சோதியும் ஐந்துபேரை வஜ்ரபாஹுவும் யமனுலகுக்கு அனுப்பினார்கள். அவர்களுக்குச் சற்றுத் தூரத்திலேயே நின்ற ஒன்பதாவது வீரன் சண்டையிடாமல் குதிரையைத் திருப்பி விட்டுக் கொண்டு ஓடப் பார்த்தான். அப்போது வஜ்ரபாஹு வேலை எறிய, அது ஓடுகிறவன் முதுகில் போய்ப் பாய்ந்தது, அவனும் செத்து விழுந்தான். அதுவரையில் வஜ்ரபாஹுவின் அஸகாய சூரத்தனத்தைப் பார்த்துப் பார்த்து வியந்து கொண்டிருந்த பரஞ்சோதிக்கு இதைப் பார்த்ததும் பெரும் வெறுப்பு உண்டாயிற்று. "ஓடுகிறவன் முதுகில் வேல் எறிவதும் ஒரு வீரமா?" என்று வஜ்ரபாஹுவை அவன் மனம் இகழத் தொடங்கியது.

திடீரென்று 'ஆ!' என்ற சத்தத்தைக் கேட்டு பரஞ்சோதி திரும்பிப் பார்த்தபோது, வஜ்ரபாஹு ஓர் ஓலையைக் கையில் வைத்துக்கொண்டு படிப்பதைக் கண்டான். பிறகு, வஜ்ரபாஹு விரைந்து வந்து பரஞ்சோதி உட்கார்ந்திருந்த பாறைக்குப் பக்கத்தில் நின்ற தன் குதிரைமீது ஏறிக் கொண்டான். பரஞ்சோதி இன்னும் எழுந்திராமல் உட்கார்ந்திருப்பதைக் கண்டு, "தம்பி! நீ வரப்போவதில்லையா?" என்று கேட்டான்.

பரஞ்சோதி ஆசாபங்கமும் அருவருப்பும் நிறைந்த கண்களினால் ஒரு தடவை வஜ்ரபாஹுவைப் பார்த்துவிட்டு மறுபடியும் முன்போல் தலையைக் குனிந்து கொண்டான்.

வஜ்ரபாஹு குதிரையுடன் பரஞ்சோதியின் அருகில் வந்து, "அப்பனே! கைதேர்ந்த வீரனைப் போல் நீ சண்டையிட்டாய். அதிலாகவத்துடன் போர் புரிந்து மூன்று ராட்சஸச் சளுக்கர்களைக் கொன்றாய். உன்னைப் பல்லவ சைனியத்தின் குதிரைப் படைத்தலைவனாக ஆக்கவேண்டும் என்று பல்லவ சேனாதிபதியிடம் சொல்ல எண்ணியிருக்கிறேன். இத்தகைய சோர்வும் சோகமும் உன்னை இப்போது பிடித்ததன் காரணம் என்ன?" என்று கேட்டான்.

பரஞ்சோதி மறுமொழி சொல்லவும் இல்லை. தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை. வஜ்ரபாஹுவின் முகத்தையே பார்க்கவிரும்பாதவன்போல் கிழக்கே மலைக்கு மேலே சூரியன் தகதகவென்று ஒளி வீசிச் சுழன்று கொண்டிருந்த திசையை நோக்கினான்.

வஜ்ரபாஹு குதிரையை இன்னும் கொஞ்சம் பரஞ்சோதியின் அருகில் செலுத்திக்கொண்டு கூறினான்: "தம்பி! உன்னை இந்த நிலையில் பார்த்தால் எனக்கு யாருடைய ஞாபகம் வருகிறது தெரியுமா? குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் இருதரப்பு சைனியங்களும் வந்து யுத்தத்துக்கு ஆயத்தமாக நின்றன. யுத்தம் ஆரம்பிக்க வேண்டிய சமயத்தில் அர்ச்சுனன் வில்லைத் தேர்த்தட்டில் போட்டுவிட்டு, 'எனக்கு ராஜ்யமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்னால் யுத்தம் செய்ய முடியாது!' என்று சோகமடைந்து விழுந்தான். உன்னை இப்போது பார்த்தால் அந்த அர்ச்சுனனைப் போலவே இருக்கிறது."

அர்ச்சுனன் என்ற பெயர் காதில் விழுந்தவுடனேயே பரஞ்சோதி வஜ்ரபாஹுவை நோக்கினான். அவனுடைய கண்களிலே சோர்வு நீங்கி ஒரு புதிய ஒளி சுடர் விட்டது. வஜ்ரபாஹு நிறுத்தியதும், "அப்புறம் என்ன நடந்தது?" என்று ஆர்வத்துடன் கேட்டான்.

"நல்ல வேளையாக அர்ச்சுனனுக்குக் கிருஷ்ண பகவான் ரதசாரதியாக அமைந்திருந்தார். பரமாத்மா அர்ச்சுனனைப் பார்த்து 'அர்ச்சுனா! எழுந்திரு! நீ ஆண்பிள்ளை! க்ஷத்திரியன்! யுத்தம் செய்வது உன் தர்மம், கையிலே வில்லை எடு!' என்றார். இந்த மாதிரி இன்னும் பதினெட்டு அத்தியாயம் உபதேசம் செய்தார்! அதனால் அர்ச்சுனனுடைய சோர்வு நீங்கி மறுபடியும் ஊக்கம் பிறந்தது..." என்று சொல்லி வஜ்ரபாஹு நிறுத்தினான்.

"பிறகு?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"பிறகு என்ன? அர்ச்சுனன் காண்டீபத்தைக் கையில் எடுத்து நாணேற்றி டங்காரம் செய்தான். கிருஷ்ணபகவான் பாஞ்ச ஜன்யம் என்கிற சங்கை எடுத்து 'பூம் பூம்' என்று ஊதினார். உடனே மகாபாரத யுத்தம் ஆரம்பமாயிற்று."

"யுத்தம் எப்படி நடந்தது?" என்றான் பரஞ்சோதி.

"லட்சணந்தான். இங்கே நான் உட்கார்ந்து உனக்குப் பாரத யுத்தக் கதை சொல்லிக் கொண்டிருந்தால், இப்போது நடக்க வேண்டிய யுத்தம் என்ன ஆகிறது?" என்று சொல்லி விட்டு வஜ்ரபாஹு தன்னுடைய குதிரையைத் திருப்பிக் கொண்டு அந்த மலைப் பாதையில் மேலே போகத் தொடங்கினான்.

பரஞ்சோதி துள்ளி எழுந்து வேலையும் வாளையும் எடுத்துக் கொண்டு தன் குதிரையின் மீது தாவி ஏறினான். விரைவில் அவன் வஜ்ரபாஹுவின் அருகில் போய்ச் சேர்ந்தான்.

வஜ்ரபாஹு திரும்பிப் பார்த்து, "தம்பி! வந்து விட்டாயா? உன் முகத்தைப் பார்த்தால், என்னோடு சண்டை பிடிக்க வந்தவன் மாதிரி தோன்றுகிறது; அப்படித்தானே?" என்றான்.

"பயப்படாதீர்கள் அப்படி நான் உங்களோடு சண்டை செய்ய வந்திருந்தாலும் பின்னாலிருந்து முதுகில் குத்திவிட மாட்டேன்! முன்னால் வந்துதான் சண்டையிடுவேன்! போர்க்களத்திலிருந்து ஓடும் எதிரியின் முதுகில் வேலை எறிந்து கொல்லும் தைரியம் எனக்குக் கிடையாது!" என்று பரஞ்சோதி கசப்பான குரலில் சொன்னான்.

வஜ்ரபாஹு சற்று மௌனமாயிருந்துவிட்டு, "அப்பனே! ஓடித் தப்ப முயன்றவனை நான் வேல் எறிந்து கொன்றிராவிட்டால் என்ன நேரும் தெரியுமா?" என்றான்.

"என்னதான் நேர்ந்துவிடும்?"

"நாம் பார்த்த மாபெரும் வாதாபி சைனியம் ஒரு மாதத்திற்குள்ளாகக் காஞ்சி நகரின் வாசலுக்கு வந்து சேர்ந்து விடும். வைஜயந்தி பட்டணத்துக்கு என்ன கதி நேர்ந்ததென்று சொன்னேன் அல்லவா?"

"வைஜயந்தியின் கதி காஞ்சிக்கு நேருமா? பல்லவ சைனியம் எங்கே போயிற்று? மகேந்திர சக்கரவர்த்தி எங்கே போனார்?"

"அதுதானே மர்மமாயிருக்கிறது, தம்பி! காஞ்சியிலிருந்து கிளம்பிய மகேந்திர பல்லவர் எங்கே போனார் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை! அவர் இன்னும் பல்லவ சைனியத்தின் பாசறைக்கு வந்து சேரவில்லையாம்!" என்றான் வஜ்ரபாஹு.

பரஞ்சோதி சற்றுச் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! அப்புறம் அர்ச்சுனன் என்ன செய்தான்? சொல்லுங்கள்!" என்று கேட்டான்.

புலிகேசியின் காதல்

வறண்ட மலைப் பிரதேசங்களையும் அடர்ந்த வனப் பிரதேசங்களையும், நீர் வற்றி வெண்மணல் பரந்த நதிகளையும் கிளி கொஞ்சும் மாந்தோப்புக்கள் சூழ்ந்த அழகிய கிராமங்களையும் கடந்து வஜ்ரபாஹுவும் பரஞ்சோதியும் இடைவிடாது பிரயாணம் செய்து கொண்டு போனார்கள்.

சில சமயம் வஜ்ரபாஹு வீர ரஸம் செறிந்த பாரத யுத்தக் கதைகளைப் பரஞ்சோதிக்குக் கூறுவான். அர்ச்சுனனுடைய வில் தொழில் திறன்களையும், அபிமன்யுவின் அசகாய சூரத்தனத்தையும், பீமனுடைய கதாயுதம் நிகழ்த்திய விந்தைகளையும் பற்றி வஜ்ரபாஹு சொல்லும் போதெல்லாம் பரஞ்சோதிக்கு ரோமாஞ்சம் உண்டாகும். குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் தானும் பாண்டவர்களின் கட்சியில் நின்று வீரப் போர் செய்வதாக எண்ணிக் கொள்வான். அவனையறியாமலே அவனுடைய கைகள் வில்லை வளைத்து நாணேற்றும். பகைவர் மீது வேலை வீசும். வாளைச் சக்கராகாரமாய்ச் சுழற்றும்.

இன்னும் சில சமயம், வஜ்ரபாஹு ஆழ்ந்து யோசனை செய்யத் தொடங்கி விடுவான். அப்போது பரஞ்சோதி கேட்கும் கேள்விகளுக்கு அவன் விடை சொல்லமாட்டான். மேடு, பள்ளம், காடு, தண்ணீர் என்று பாராமல் குதிரையை நாலு கால் பாய்ச்சலில் விடுவான். அவன் பின்னோடு பரஞ்சோதி குதிரையைச் செலுத்திக் கொண்டு செல்வதே பெரும் பிரயத்தனமாயிருக்கும்.

இன்னும் சில சமயம் வஜ்ரபாஹு வாதாபி சைனியத்தின் படையெடுப்பைப் பற்றியும் பல்லவ ராஜ்யத்துக்கு வந்திருக்கும் பேரபாயத்தைப் பற்றியும் பேசுவான். அப்போதெல்லாம் அவனுடைய தொனியில் கவலை நிறைந்திருக்கும். அமைதி குடி கொண்ட அழகிய கிராமங்களின் ஓரமாக அவர்கள் போகும்போது, "ஆஹா! இந்தக் கிராமங்களுக்கெல்லாம் இன்னும் கொஞ்சநாளில் என்ன கதி நேரப் போகிறதோ, தெரியவில்லையே?" என்று சொல்லுவான்.

நீண்ட கிளைகளை நாலாபுறமும் பரப்பிக் கொண்டு குளிர்ந்த நிழல் தந்து நின்ற விசாலமான ஆலமரங்களையும், பசுமையான தென்னந் தோப்புக்களையும் பார்க்கும்போதெல்லாம் வஜ்ரபாஹு பெருமூச்சு விடுவான். "மறுபடியும் நாம் இந்தப் பக்கம் வரும்போது கண் குளிரும் இந்தப் பசுமையைக் காண்போமா?" என்பான்.

இந்த அதிசயமான கவலைக்குக் காரணம் என்னவென்று பரஞ்சோதி வற்புறுத்திக் கேட்டபோது வஜ்ரபாஹு கூறினான்: "அப்பனே! நீ அந்த வாதாபி சைனியத்தின் பாசறையை முழுவதும் சுற்றிப் பார்க்கவில்லை. நான் பார்த்தேன்! அந்த பிரம்மாண்டமான யானைப் படையையும் நினைத்து, இந்தப் பசுமையான மரத்தோப்புகளையும் பார்த்தால், எனக்கு கண்ணில் ஜலம் வருகிறது. ஒரு யானை ஒரு நாளில் எவ்வளவு ஆகாரம் சாப்பிடும், தெரியுமா?"

"தெரியாது, ஐயா!"

"ஆறு மரக்கால் அரிசி, ஒன்பது தார் வாழைப்பழம், இருபத்தைந்து தேங்காய், ஓர் ஆலமரத்தில் பாதி இவ்வளவையும் சாப்பிட்ட பிறகு யானையின் பசி அடங்காது!"

"அம்மம்மா!" என்றான் பரஞ்சோதி.

"இவ்வளவுக்கும் மேலே யானைப்பாகனுக்கும் அதன் வயிற்றில் இடம் இருக்கும்! ஆனால் யானைகள் சைவ விரதம் கொண்டவையாகையால் யானைப்பாகனைச் சாப்பிடுவதில்லை!"

பரஞ்சோதி சிரித்துவிட்டு, "வாதாபிப் படையில் அப்படி எத்தனை யானைகள் இருக்கின்றன?" என்று கேட்டான்.

"பதினையாயிரம் யானைகள், அப்பனே! பதினையாயிரம் யானைகள்! இவ்வளவு யானைகளும் ஒரு தடவை காஞ்சிநகர் வரையில் வந்துவிட்டு திரும்பினால் போதும்! அவை வந்துபோன வழியெல்லாம் பசுமையென்பதே இல்லாமல் பாலைவனமாய்ப் போய்விடும்."

"காஞ்சி நகரம் வரையில் வாதாபி சைனியம் வந்துவிடும் என்று அடிக்கடி சொல்கிறீர்களே, அது ஏன்?"

"பதினையாயிரம் யானைகளையும் ஐந்து லட்சம் காலாட் படைகளையும் யாரால் தடுத்து நிறுத்த முடியும் தம்பி? கடவுளே பார்த்து நிறுத்தினால்தான் நிறுத்தியது!"

"காஞ்சிக் கோட்டையை ஏன் அவ்வளவு பத்திரப்படுத்தினார்கள் என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது" என்று பரஞ்சோதி சொன்னதைக்கேட்டு வஜ்ரபாஹு ஏளனக் குரலில் சிரித்தான்.

"ஏன் சிரிக்கிறீர்கள், ஐயா?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"காஞ்சிக் கோட்டையை ரொம்பவும் பத்திரப்படுத்தி இருப்பதாகத்தான் ஒரு காலத்தில் நான் கூட நினைத்தேன். ஆனால் அந்த எண்ணம் எவ்வளவு தவறு என்று இப்போது தெரிகிறது."

"ஏன்? கோட்டைக்குப் பத்திரம் போதாதா?" என்று பரஞ்சோதி கேட்டான்.

இரகசியச் சுரங்க வழியாகத் தன்னை நாகநந்தி வெளியேற்றியது அவன் ஞாபகத்துக்கு வந்தது.

"வாதாபி யானைகள் சாராயத்தைக் குடித்துவிட்டு வந்து காஞ்சிக் கோட்டையின் கதவுகளை மோதும்போது கோட்டைக் கதவுகள் எப்படி நொறுங்கிச் சின்னா பின்னமாகப் போகின்றன என்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது" என்றான் வஜ்ரபாஹு.

"இதென்ன விந்தை? யானைகள் சாராயம் குடிக்குமா என்ன?"

"யானைகளை மாமிச பக்ஷணிகளாகச் செய்ய முடியவில்லை. ஆனால் மதுபானம் செய்யப் பழக்கியிருக்கிறார்கள். வாதாபி சைனியத்தில் ஆயிரக்கணக்கான வண்டிகளில் பெரிய பெரிய சால்களில் சாராயம் கொண்டு வருகிறார்கள். யானைகளைச் சாராயம் குடிக்கச் செய்து கோட்டைக் கதவுகளை முட்டச் செய்யப்போகிறார்களாம்!"

"இது என்ன அநாகரிக யுத்தம்" என்றான் பரஞ்சோதி.

"யுத்தமே அநாகரிகந்தான், தம்பி!" என்றான் வஜ்ரபாஹு.

"எல்லா யுத்தத்தையும் அநாகரிக யுத்தம் என்று சொல்ல முடியுமா? நாட்டைக் காப்பதற்காக மகேந்திர சக்கரவர்த்தி நடத்தும் யுத்தம் அநாகரிக யுத்தமா?" என்றான் பரஞ்சோதி.

"மகேந்திர சக்கரவர்த்தியின் பெயரை மட்டும் என் காது கேட்கச் சொல்லாதே! தேசப் பாதுகாப்பை அசட்டை செய்து விட்டு ஆடலிலும் பாடலிலும் அவர் காலம் கழித்ததை நினைத்தால் எனக்குக் கோபம் கோபமாய் வருகிறது!"

பரஞ்சோதி வஜ்ரபாஹுவின் முகத்தைச் சற்றுக் கவனமாய்ப் பார்த்துவிட்டு, "அப்படியானால், காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கவே முடியாது என்று நினைக்கிறீர்களா?" என்றான்.

"வாதாபி சைனியம் நேரே காஞ்சிக்கு வந்துசேர்ந்தால் காஞ்சிக் கோட்டையைக் கடவுளால் கூடக் காப்பாற்ற முடியாது!"

"அப்படி வந்து சேராதல்லவா?"

"அதன் பொருட்டுத்தான் ஓட முயன்றவன் முதுகில் வேலை எறிந்து கொன்றேன். நாகநந்தி கொடுத்ததாகப் புலிகேசியிடம் ஓர் ஓலை கொடுத்திருக்கிறேன். அதைப்பற்றிப் புலிகேசிக்குச் சந்தேகம் தோன்றாதிருந்தால் காஞ்சியைத் தப்புவிக்கலாம்."

"நீங்கள் கொடுத்த ஓலையில் என்ன எழுதியிருந்தது, ஐயா?"

"தம்பி! அந்த விஷயத்தைப்பற்றி நீ கேளாமலிருந்தால் நான் பொய் சொல்லவேண்டிய அவசியமும் ஏற்படாது!" என்று முன்னொரு தரம் பரஞ்சோதி கூறிய வார்த்தைகளை வஜ்ரபாஹு இப்போது திருப்பிக் கூறினான்.

பரஞ்சோதி சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு, "ஐயா! நீங்கள் கொடுத்த ஓலையின் பலனாகச் சளுக்க சைனியம் காஞ்சிக்கு வராமல் வாதாபிக்கே திரும்பிப் போய் விடுமா?" என்று கேட்டான்.

"அப்பனே! காஞ்சி என்ற பெயரைக் கேட்டதும் புலிகேசியின் கண்களில் தோன்றிய ஆசை வெறியை நீ பார்த்திருந்தாயானால் இவ்விதம் கேட்டிருக்க மாட்டாய். என்னை அச்சுத விக்கிராந்தனுடைய சந்ததியில் வந்தவனாக நினைத்துக்கொண்டே புலிகேசி தன்னுடைய மனத்தை நன்றாக திறந்து காட்டினான்..."

"அது யார் அச்சுதவிக்கிராந்தன்?" என்று பரஞ்சோதி குறுக்கிட்டுக் கேட்டான்.

எந்த விஷயத்தையும் ஐயந்திரிபறத் தெரிந்து கொள்வதில் அவனுக்கு அடங்காத ஆசை ஏற்பட்டிருந்தது.

"பாண்டிய நாட்டுக்கும் சோழ நாட்டுக்கும் மத்தியில் இருநூறு வருஷத்துக்கு முன் தனி அரசு செலுத்திய அச்சுதக் களப்பாளனைப் பற்றி நீ கேட்டதில்லையா? அந்த அச்சுதக் களப்பாளனின் வம்சம் நான் என்றதும் புலிகேசி நம்பி விட்டான். 'நீ காஞ்சி நகர் பார்த்திருக்கிறாயா?' என்று கேட்டான். 'பார்த்திருக்கிறேன்' என்றேன். காஞ்சிநகர்க் காட்சிகளை விவரமாக வர்ணிக்கும்படி சொன்னான். நான் அவ்விதமே காஞ்சியை வர்ணித்தபோது, புலிகேசியின் முகத்தில் தோன்றிய பரபரப்பைப் பார்க்க வேணுமே! எலியைப் பார்த்த பூனையின் கண்களில் தோன்றும் ஆசைவெறி புலிகேசியின் கண்களிலும் அப்போது தோன்றியது. இராவணன் சீதையைப் பார்த்து என்ன சொன்னான் தெரியுமா தம்பி! 'என்னிடம் நீ ஆசை கொள்கிறாயா? அல்லது உன்னைக் காலைப் போஜனத்துக்குப் பலகாரமாகச் செய்து சாப்பிட்டு விடட்டுமா?' என்றானாம். அதுபோல புலிகேசி காஞ்சி நகரைக் கட்டி ஆள ஆசைப்பட்டாலும் படுவான் அல்லது அதை அக்கினிக்கு இரையாக்க விரும்பினாலும் விரும்புவான். புலிகேசியின் காதல் விபத்திலிருந்து காஞ்சிமா தேவியைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று வஜ்ரபாஹு கூறிவிட்டு நெடிய மௌனத்தில் ஆழ்ந்தான்.

பிரயாண முடிவு

சூரியாஸ்தமன சமயத்தில் ஒரு மலைப் பாதையின் முடுக்குத் திரும்பியதும் பல்லவ சைனியம் தண்டு இறங்கியிருக்கும் பாசறை தென்பட்டது. பல்லவ சைனியத்தைப் பார்த்தவுடனேதான் வஜ்ரபாஹுவின் கவலைக்கு எவ்வளவு தூரம் காரணம் உண்டு என்பதைப் பரஞ்சோதி உணர்ந்தான்.

வாதாபி சைனியத்துக்கும் பல்லவ சைனியத்துக்கும் அவ்வளவு மலைக்கும் மடுவுக்குமான தாரதம்மியம் இருந்தது.

"தம்பி? பார்த்தாயா?" என்றான் வஜ்ரபாஹு.

"பார்த்தேன், ஐயா!"

"இன்னமும் நீ நம்புகிறாயா, பல்லவ சைனியம் ஜயிக்கும் என்று?"

"கட்டாயம், ஜயிக்கும் ஐயா! சந்தேகமே இல்லை!" என்று பரஞ்சோதி அழுத்தந்திருத்தமாகச் சொன்னான்.

"அவ்வளவு நிச்சயமாகச் சொல்கிறாயே, எதனால் சொல்கிறாய்."

"பல்லவ சைனியத்தின் பட்சத்தில் தர்ம பலம் இருக்கிறது. அதோடுகூட, மகேந்திர சக்கரவர்த்தியும் இருக்கிறார்!"

"ஏது ஏது, மகேந்திர சக்கரவர்த்தியிடம் உனக்கு அபார நம்பிக்கை இருக்கிறதே?" என்றான் வஜ்ரபாஹு.

"ஆம், ஐயா!"

"பல்லவ சக்கரவர்த்தியை நீ பார்த்திருக்கிறாயா, தம்பி?"

"முன்னம் இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆயனச் சிற்பி வீட்டில் புத்த விக்கிரகத்துக்குப் பின்னால் நான் ஒளிந்திருந்தபோது ஒரு தடவை பார்த்தேன். இன்னொரு தடவை காஞ்சியில் நடு ராத்திரியில் மாறுவேடத்தில் பார்த்தேன். அப்போது சக்கரவர்த்தி கிட்டத்தட்டத் தங்களைப் போலத்தான் இருந்தார்! தங்களைப் போலவே பெரிய மீசையும் வைத்திருந்தார்."

"ஆமாம்! நான்கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன். மகேந்திர சக்கரவர்த்தி சில சமயம் மாறுவேடம் பூண்டு ஊர்சுற்றுவது உண்டு என்று. சக்கரவர்த்தியை நான் என்றும் என்னைச் சக்கரவர்த்தி என்றும் கூடச் சிலர் சந்தேகப்பட்டிருக்கிறார்கள்."

"எனக்கு அம்மாதிரியெல்லாம் சந்தேகம் கிடையாது ஐயா!"

"அது போகட்டும், வாதாபி சைனியம், பல்லவ சைனியம் இரண்டையும் நீ பார்த்திருக்கிறாய். தம்பி! இன்னமும் பல்லவ சைனியத்தில் சேருவதற்கு இஷ்டப்படுகிறாயா?"

"இஷ்டப்படுவது மட்டுமல்ல; பல்லவ சைனியத்திலே சேரத் துடித்துக்கொண்டிருக்கிறேன். இங்கே நாம் பேசிக் கொண்டு நிற்கும் நேரமெல்லாம் வீண் போவதாகவே நினைக்கிறேன்."

"அப்படியானால், எனக்கு விடைகொடு!"

"என்ன? என்னை இங்கே விட்டுவிட்டா போகிறீர்கள்?"

"ஆமாம்; நான் முதலில் போய்ப் பல்லவ சக்கரவர்த்தியைப் பார்த்து உன்னைப்பற்றிச் சொல்கிறேன். அவர் இஷ்டப்பட்டால் உன்னை அழைத்து வரச் செய்வார். அது வரையில் நீ பாசறைக்கு வெளியிலேதான் காத்திருக்க வேண்டும்."

"சக்கரவர்த்தி பாசறையில் இருக்கிறாரா? காஞ்சியிலிருந்து கிளம்பியவரைப் பற்றி அப்புறம் செய்தியே இல்லை என்றீர்களே!"

"இதற்குள்ளே ஒருகால் வந்திருக்கலாமல்லவா?"

"ஐயா! சக்கரவர்த்தியை நான் ஒரு தடவை நேரில் பார்க்க விரும்புகிறேன். அதற்குத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்!" என்று பரஞ்சோதி ஆர்வத்துடன் சொன்னான்.

"எதற்காகச் சக்கரவர்த்தியைப் பார்ப்பதற்கு அவ்வளவு ஆவலுடன் இருக்கிறாய்?" என்றான் வஜ்ரபாஹு.

"காஞ்சிக் கோட்டையைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்புவிக்கும்படி கேட்டுக் கொள்வதற்குத்தான்!"

"ஓகோ! மதயானையின் மீது வேல் எறிந்த வீரன் அல்லவா நீ? சிவகாமி சுந்தரியைக் காப்பாற்றியது போல் காஞ்சி சுந்தரியையும் காப்பாற்ற விரும்புகிறாய் போலிருக்கிறது! உன்னைப் போன்ற மகா வீரனை, தாளம் போட்டுக் கொண்டு பாசுரம் பாடுவதற்கும் கல்லுளியை வைத்துக் கொண்டு கல்லைச் செதுக்குவதற்கும் உன் மாமா அனுப்பி வைத்தாரே! அது எவ்வளவு பெருந்தவறு?"

"சிற்பக் கலை தெய்வீகக் கலை, ஐயா!"

"போதும் போதும்! அப்படியெல்லாம் சொல்லித்தான் மகேந்திர சக்கரவர்த்தி பல்லவ சாம்ராஜ்யத்தை இந்தக் கதிக்குக் கொண்டு வந்து விட்டார். சக்கரவர்த்தியிடம் நானும் ஒரு விண்ணப்பம் செய்து கொள்ளப்போகிறேன். 'மலையைக் குடைவது, பாறையைச் செதுக்குவது முதலிய காரியங்களை எல்லாம் நிறுத்துங்கள். பல்லவ ராஜ்யத்திலுள்ள அவ்வளவு சிற்பிகளையும் ஏவி ஒவ்வொரு ஊரிலும் ஒரு பாரத மண்டபம் கட்டச் சொல்லுங்கள். அந்த மண்டபங்களில் ஒவ்வொரு நாளும் ஜனங்கள் கூடிக்கேட்கும்படியாக மகாபாரதம் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள்' என்று கேட்டுக் கொள்ளப் போகிறேன்."

"இதெல்லாம் எதற்காக?" என்று பரஞ்சோதி கேட்டான்.

"இந்த யுத்தத்தை மகேந்திர சக்கரவர்த்தியாலும் பல்லவ வீரர்களாலும் மட்டும் ஜயித்து விடமுடியாது. பல்லவ நாட்டிலுள்ள மக்கள் எல்லாரும் வீரமும் பௌஷ்யமும் அடைய வேண்டும். உயிரைத் திரணமாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்."

வஜ்ரபாஹு பரஞ்சோதியைப் பிரிந்து செல்வதற்கு முன்னால் அவனை அன்புடன் தழுவிக்கொண்டு, "தம்பி! எனக்கு ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கும் உன்னுடைய வயதுதான். நீங்கள் இருவரும் சேர்ந்தீர்களானால் எவ்வளவோ அரும் பெரும் காரியங்கள் செய்யலாம்!" என்றான்.

பரஞ்சோதி, நாத் தழுதழுக்க, "ஐயா! சிறு பிராயத்தில் நான் என் தந்தையை இழந்தேன்! என்னையும் உங்கள் புதல்வனாகவே ஏற்றுக் கொள்ளுங்கள்!" என்று கூறினான்.

வீரன் வஜ்ரபாஹு பாசறைக்குள் புகுந்து சென்ற பிறகு பரஞ்சோதிக்கு ஒவ்வொரு விநாடியும் ஒரு யுகமாகத் தோன்றியது. சக்கரவர்த்தியிடமிருந்து தன்னை அழைத்து வரும்படி எப்போது ஆக்ஞை வருமென்று அவன் ஆவலுடன் காத்திருந்தான்.

சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பல்லவ சைனியத்தின் பாசறையில் ஒரு பெரிய கலகலப்பு ஏற்பட்டது. திடீரென்று பல ஆயிரம் வீரர்களின் குரல்கள் எழுப்பிய ஜயகோஷம் வானவெளியையெல்லாம் நிரப்பி மலை அடிவாரம் வரை சென்று எதிரொலி செய்தது. சங்கங்களும் முரசங்களும் பேரிகைகளும் சேர்ந்து முழங்கிய பேரொலி வானமுகடு வரையில் சென்று முட்டித் திரும்பியது.

பாசறையின் வாசலில் நின்று காவல் புரிந்த வீரர்களைப் பரஞ்சோதி தயக்கத்துடன் நெருங்கி, பாசறைக்குள்ளே மேற்கூறிய கோலாகலத்தின் காரணம் என்னவென்று கேட்டான்.

அதற்கு, "மகேந்திர பல்லவ சக்கரவர்த்தி பாசறைக்கு வந்து விட்டார்!" என்று குதூகலமான மறுமொழி கிடைத்தது.