அவளை முதன்முதலாகப் பார்த்தபோது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. ‘என்ன அதிசயம்! இவ்வளவு சிறிய காராக இருந்தாலும், நான்கு பேர் அமர இடமிருக்கிறதே!’ என்று எண்ணினேன்.
என் குட்டித்தங்கை நீட்டாவோடு ஒரு சுவற்றின் மீது அமர்ந்திருந்தபடி, கார்களை எண்ணிக் கொண்டிருந்தேன். எனக்கு கார்கள் என்றால் கொள்ளை ஆசை! என் கனவுகள்கூட கார்களை பற்றித்தான் இருக்கும்! தெருவில் செல்லும் எல்லா கார்களின் விவரங்களும் எனக்கு அத்துபடி.
கார்கள் அற்புதமானவை, அல்லவா? ‘ப்ர்ரூம் ப்ர்ரூம்’ என சப்தமிடும் கார்களில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்.
அவளுடைய முகப்பு விளக்குகள் பளீரென்ற மஞ்சள் நிறத்தில் சிமிட்டின.
அவள் ஒரு சிவப்பு தேவதையைப் போல் இருந்தாள். பல கேள்விகள் என் மனதில் வட்டமிட்டன. அவள் எங்கே வசிக்கிறாள்? அவள் பெயரென்ன? எனக்கு அவளைப்பற்றி நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும்.
சைக்கிளில் எங்கள் குடியிருப்பின் நுழைவாயிலை நோக்கிச் சென்றேன். காவல்கார மாமாவிடம், அந்த பளபளக்கும் சிறிய சிவப்பு காரைப் பற்றி ஏதாவது தெரியுமா எனக் கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, “உனக்கு அந்த காரைப் பிடித்திருக்கிறதா? அந்த காரும், அதன் சொந்தக்காரரும் சமீபத்தில்தான் இங்கு குடிவந்தார்கள். அவர்கள் 112ஆம் எண் வீட்டில் வசிக்கிறார்கள்” என்று சொன்னார்.
அவருக்கு “நன்றி” சொல்லிவிட்டு, நான் வீட்டுக்கு விரைந்தேன்.
அன்று மாலை, 112ஆம் எண் வீட்டுக்கு, என் புதிய பக்கத்து வீட்டுக்காரரைத் தேடிச் சென்றேன்.
ஆனால், அங்கு பெரிய பெரிய கார்கள் காணப்பட்டனவே தவிர, அந்தச் சிறிய சிவப்பு காரைக் காணவில்லை. பின்னர், சிறிது தள்ளி இருந்த ஒரு கம்பிக்கதவைப் பார்த்தேன். அதற்குப் பின்னே அந்த சிவப்பு தேவதையும் இருந்தாள்.
அவளது இடது பக்கத்தில் ஒரு மின்வடம் இணைக்கப்பட்டிருந்தது.
ஓ! சிவப்பு தேவதை மின்சாரத்தில் இயங்குபவள். பெட்ரோலிலோ டீசலிலோ அல்ல. எனவே, அவள் ஓடுவதற்கு மின்சாரம் ஏற்றுவது அவசியம்!
அடுத்த நாள், சிவப்பு தேவதை வேகமாக என்னைத் தாண்டிப் போனாள். தெருவின் ஓரமாக ஓடி, நிறுத்தச் சொல்லி கையை உயர்த்தினேன். அவளும் நின்றாள்!
உள்ளே நரைத்த முடியுடனிருந்த பாட்டி, என்னைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர் பார்ப்பதற்கு என் பாட்டியைப் போலவே இருந்தார்.
சிவப்பு தேவதையை இலேசாகத் தட்டிக் கொடுத்துவிட்டு, “எனக்கு கார்களைப் பற்றி நிறைய தெரியும்; ஆனால், இதுபோன்ற காரை நான் இதுவரைப் பார்த்ததில்லை. இவளை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது” என்றேன்.
“என்னையும் உனக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்”என்றார் அந்தப் பாட்டி!
“சிவப்பு தேவதையோடு இருப்பதால் நீங்களும் நல்லவராகத்தான் இருப்பீர்கள், அதனால் உங்களையும் பிடிக்கும்!” என்று சிரித்துக்கொண்டே சொன்னேன்.
“சிவப்பு தேவதை... இந்தக் குட்டி காருக்கு ஏற்ற நல்ல பெயர்தான் வைத்திருக்கிறாய்!” என்று சொன்னார் பாட்டி.
“உங்களை, சிவப்பு தேவதையின் பாட்டி என்று அழைக்கலாமா?” எனக் கேட்டேன். கார்கள், மோட்டார் பைக்குகள் மீதான எனது விருப்பத்தையும், என் புகைப்படத் தொகுப்பையும் பற்றிச் சொன்னேன்.
“நாங்கள் கொஞ்ச நாட்கள் முன்னர்தான் இங்கே குடி வந்தோம். அதனால் இங்கே யாரையும் தெரியாது” என்று கூறினார்.
“நீ எங்களை நிறுத்தியதில் எனக்கு மகிழ்ச்சிதான்” என்றார் சிவப்பு தேவதையின் பாட்டி.
“என் பெயர் மீட்டோ. என் அம்மாவிடம் உங்களை அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு அறிமுகம் செய்துவைக்கச் சொல்கிறேன். அதற்குமுன் சிவப்பு தேவதையைப் பற்றி இன்னும் நிறையச் சொல்லுங்கள்” என்று கேட்டேன்.
பாட்டி என்னை சிவப்பு தேவதையில் ஒரு சுற்று போய் வரலாம் என்று அழைத்தார். நான் மிகுந்த உற்சாகமானேன்.
வேகமாக வீட்டுக்குப் போய், பாட்டியுடன் காரில் வெளியே செல்ல அம்மாவிடம் அனுமதி கேட்டேன்.
பின், சிவப்பு தேவதையின் மடியில் துள்ளி அமர்ந்தேன். பாட்டி அவளை இயக்க, சிவப்பு தேவதை சாலையில் ஓட ஆரம்பித்தாள். சாலையில் வேகமாகப் பாய்ந்தபோதும், காரிலிருந்து சப்தமே எழவில்லை; இலேசான உறுமலே கேட்டது.
பாட்டியிடம் கார் எப்படி நிசப்தமாகச் செல்கிறது என்று கேட்டேன். “சிவப்பு தேவதை சத்தம் போடுவதோ, புகை விடுவதோ இல்லை!” என்றார் பாட்டி.
சிவப்பு தேவதை, சிறிய, பெரிய என எல்லா கார்களின் நடுவிலும் புகுந்து வழுக்கிச் சென்றாள். சாலையில் அனைவரும் எங்களைப் பார்த்துப் புன்னகைத்தனர்.
அனைவரின் கவனமும், இந்த மாயாஜால காரின் மீதே இருந்தது.
சிவப்பு சமிக்கை விளக்கில் நின்றிருந்தபோது, ஒரு ஆட்டோ ஓட்டுநர், பாட்டியிடம் ஆர்வத்துடன் சிவப்பு தேவதையைப் பற்றி பல கேள்விகள் கேட்டார்.
சமிக்கை விளக்கு, பச்சையாக மாறியதும், எல்லோருக்கும் முன்பு நாங்கள் சிட்டாய்ப் பறந்து விட்டோம். அதுவும் ‘ப்ர்ரூம் ப்ர்ரூம்’ உறுமல் இல்லாமல்!
வேகமாக, நாங்கள் ‘இந்தியா கேட்’டின் அருகே சென்றுவிட்டோம். பாட்டி, தனக்கும் எனக்கும் ஐஸ்க்ரீம் வாங்கினார். எங்கும், எல்லாமும் சாம்பல்நிறமாகக் காட்சி அளித்தன. அதற்கு புகைப்பனிதான் காரணம் என்று பாட்டி சொன்னார்.
தில்லியில் காற்று தூசியும் புகையுமாய் இருக்கிறது என்று என் அப்பா கூறியதைச் சொன்னேன்! ”கார்கள் வெளிவிடும் புகையால் காற்றில் மாசு அதிகமாகிறது. அதனால், கார்கள் மீதான என் ஆர்வம் அம்மாவுக்குப் பிடிக்காது” என்றேன்.
பாட்டி நான் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார். “எனக்கும் என் தங்கை நீட்டாவுக்கும் அடிக்கடி இருமலும் சளியும் வருவதற்கு, சுற்றுச்சூழல் மாசுபாடுதான் காரணம்; ஆனால், கார்கள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் என்னதான் செய்வது!” என்றேன்.
சிவப்பு தேவதையை கடந்த எட்டு வருடங்களாக ஓட்டுவதாகவும், தாங்கள் நல்ல நண்பர்கள் என்றும் பாட்டி கூறினார்.
திடீரென, சிவப்பு தேவதை என்னிடம் ஏதோ கிசுகிசுத்தது போல் தோன்றியது: “மீட்டோ! நான் பிற கார்களைப் போல சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதில்லை. மேலும், நான் ஓடவும் நிற்கவும் சிறிது இடமே போதும்.”
எனக்கு இப்போது சந்தேகமே இல்லை. நிச்சயமாக, சிவப்பு தேவதை ஒரு மாயப்பிறவிதான். புகை இல்லை, சத்தம் இல்லை, பெட்ரோல் இல்லை, டீசல் இல்லை! அவளால் என்னுடன் பேசவும் முடிகிறது!
“மாற்றுச் சக்தியை உபயோகிக்கும் கார்கள் காற்றில் மாசு அளவைக் குறைக்கும். யாருக்குத் தெரியும்?நீயும் ஒரு விஞ்ஞானியாகி, முற்றிலும் மாசே ஏற்படுத்தாத கார்களைக்கூட கண்டுபிடிக்கலாம்” என்றார் பாட்டி.
அப்படி ஒரு காரைக் கண்டுபிடித்து அதை வானவில் தேவதை என்று அழைக்கவேண்டுமென நான் தீர்மானித்துவிட்டேன்!
பசுமை கார்கள்
பசுமை கார் சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கூடியது. பெட்ரோலை மிகக் குறைந்த அளவு உபயோகித்தோ அல்லது முழுக்க தவிர்த்தோ, கரியமில வாயு(Carbon dioxide) வெளியிடுவதைக் குறைக்கவோ தவிர்க்கவோ செய்யும். பலவகையான பசுமை கார்கள் இருக்கின்றன.
மின்சார கார்: இது மின்சக்தியில் இயங்குகிறது. ஆற்றலை, மீண்டும் மீண்டும் திறனேற்றக் கூடிய மின்கலங்களில் சேகரித்து வைத்துக் கொள்கிறது.
கலப்பு ஆற்றல் கார்: இதில் இரண்டு மோட்டார்கள் இருக்கும். அவற்றில் ஒன்று மின்சாரத்திலும், மற்றொன்று உள்எரிப் பொறியோடு பெட்ரோலிலும் செயல்படும். சாதாரண கார்களைவிடக் குறைந்த அளவே பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், இது குறைந்த அளவே மாசு ஏற்படுத்தும்.
ஹைட்ரஜன்(நீரியம்) கார்: பெட்ரோலுக்குப் பதிலாக ஹைட்ரஜனைப் பயன்படுத்தும் கார் இது. புகைக்குப் பதிலாக வெறும் நீராவியையே வெளியிடுவதால் இது சுற்றுச்சூழலுக்கு நல்லது.
சோலார் கார்: இது சூரிய ஆற்றலைக் கொண்டு செயல்படுகிறது. சோலார் பலகங்கள், சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்றி காரை இயக்குகின்றன. இதிலிருந்து புகையோ வேறு கழிவோ வெளிவராது.