சோனாவின் மாமா குச்சி ஐஸ் செய்பவர்.
குச்சி ஐஸுக்கு சுஸ்க்கி, கோலா என
வேறு பெயர்களும் உண்டு.
ஒரு நாள் சோனா தன் மாமா எப்படி
குச்சி ஐஸ் செய்கிறார் என்று பார்க்க
அவர் வீட்டிற்குச் சென்றாள்.
சோனாவின் மாமா நான்கு மிகப் பெரிய பாத்திரங்களில் குச்சி ஐஸ் செய்வதற்காக வெவ்வேறு நிறம் மற்றும் மணங்கள் உள்ள சாறுகளைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
"மாமா, நானும் உதவி செய்யவா?" என்று கேட்டாள் சோனா.
"இல்லை சோனா. நீ அப்படி சும்மா உட்கார்ந்து, நான் வேலை செய்வதை கவனமாக பார்" என்று சொன்னார் மாமா.
மாமா பாத்திரத்தில் ஒரு சாரத்தையும் மணத்தையும் சேர்த்தார். "ஆ..ஆ..ஆ, இந்த வாசம் என் தொண்டையை உறுத்துதே. இது நாவல் பழ சுவைதானே?" என்று கேட்டாள் சோனா.
"சரியாகச் சொன்னாய் சோனா. இது குச்சி ஐஸுக்கு புளிப்பு சுவையைக் கொடுக்கும்" என்று சொன்னார் மாமா.
"ஆனால் எனக்கு வேறு வாசனையும் வருதே. அது நல்ல வாசனை இல்லை!" என்று சொன்னாள்.
மாமா வேறு ஒரு பாத்திரத்தில் ஒரு சாரத்தையும் மணத்தையும் சேர்த்தார்.
சோனா நன்றாக முகர்ந்து பார்த்து விட்டு, “ம்ம்ம்ம், இது மிதமான இனிப்பான வாசனை! மாதுளம் பழ குச்சி ஐஸ்!” என்று சொன்னாள்.
"அட! சோனா மறுபடியும் சரி!" என்று சொல்லிவிட்டு வேறு பாத்திரத்திற்கு சென்றார் மாமா.
"ஆனால் எனக்கு வேறு ஒரு கெட்ட வாசனையும் அடிக்கின்றதே!" என்று சொல்லிவிட்டு மூக்கைக் சுருக்கினாள் சோனா.
"நான், இப்போழுது ரோஸ் சாரம் சேர்க்கின்றேன்" என்று சொல்லி மூன்றாவது பாத்திரத்தில் உள்ள திரவத்தை கலக்கிக் கொண்டே, "இப்போழுது நல்ல வாசனை வருகின்றதா?" என்று கேட்டார் மாமா.
"ஏதோ எரிகிறது மாமா! பாத்திரத்தின் அடியில் எதுவோ தீய்கிறது" என்று கத்தினாள் சோனா.
மாமா சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு, கொதித்துக் கொண்டிருந்த பால் பாத்திரத்தை சட்டென்று இறக்கி வைத்தார்.
“சபாஷ் சோனா! பால் அடி பிடிக்க ஆரம்பித்தது,
நீ பால் ஐஸை காப்பாற்றி விட்டாய்!”
என்று சொல்லிக் கொண்டே, பாலை வேறு ஒரு
சுத்தமான பாத்திரத்தில் எடுத்து ஊற்றினார்.
மாமா முதல் பால் ஐஸை சோனாவிற்கு கொடுத்தார்.
ஆசையாக அவள் முதுகைத் தட்டி கொடுத்து
“எங்க சோனா மிக சுட்டி!” என்றார்.