sonna namba maatteenga

சொன்னா நம்பமாட்டீங்க!

இந்தக் கதையில் வரும் குழந்தையை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். பள்ளிக்கூடத்தில் அவனை யாருக்கும் பிடிக்கவில்லை. என்றாலும், அவனுக்கு எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும். சொன்னா நம்பமாட்டீங்க. வகுப்பில் யாரும் கவனிக்காத நேரத்தில், கேலி செய்யும் சக மாணவனையும் கூட அவனுக்குப் பிடிக்கும். மீன்கள் நிறைந்த ஒரு குளத்தைக் கண்டுபிடித்த போதுதான் தான் தனியாக இல்லை என்பதைப் புரிந்து கொண்டான். இனி அவன் செய்ய வேண்டியதெல்லாம், நம்பிக்கையை வளர்த்துக் கொள்வதுதான்.

- Ramki J

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சொன்னா நம்பமாட்டீங்க. ஆனா, எனக்கு என் பள்ளிக்கூடத்தை ரொம்பப் பிடிக்கும்.

அங்கே ஓடி விளையாட நிறைய இடம் இருக்கும்.

வெளியே வெயில் அதிகமாக இருந்தால், அங்கே உள்ள பெரிய நூலகத்துக்குள்ள போய் ஒளிஞ்சுப்பேன்.

ஆனா, பள்ளிக்கூடத்தில் யாருக்கும் என்னைப் பிடிக்காது.

சொன்னா நம்பமாட்டீங்க. எங்க பள்ளிக்கூடத்துல ஒரு பெரிய குளமும் அதில் ஏகப்பட்ட மீன்களும் உண்டு.

என் கூடப் பேச யாரும் இல்லைனாலோ, மற்றவர்கள் என்னைத் துன்புறுத்தி ஓய்ந்துவிட்டாலோ, அந்தக் குளத்துக்குப் பக்கத்தில் நின்று மீன்களை எண்ணுவேன்.

நான் எதையும் சரியாகவே செய்யமாட்டேன். தொட்டிக்குள் எத்தனை மீன்கள் இருக்கின்றன என்பதை அடிக்கடி மறந்துவிடுவேன்.

ஆனால், குளத்திலுள்ள எல்லா மீன்களையும் எனக்குத் தெரியும் நீலக்கலர் குட்டி மீன்கள் எப்போதும் கூட்டமாகவே இருக்கும். கருப்புப் புள்ளிகளோடு இருக்கிற ஆரஞ்சு மீன், எப்பப் பார்த்தாலும் கல்லைக் கொரித்துக் கொண்டே இருக்கும். தங்க மீன் பயங்கர சிடுசிடுப்பா இருக்கும். வெள்ளி மீன்கள் ஒரு இடத்தில் நிற்காது. கருப்புத் துடுப்புகளோடு இருக்கிற அந்த ஒரே ஒரு சிவப்பு மீன் மட்டும்…

எப்போதும் தனிமையாக இருப்பதாகத் தோன்றும்.

சொன்னா நம்பமாட்டீங்க. ஆனா, அது ஒரு ஸ்பெஷலான மீன்தான்.

நிழல் மாதிரி நகர்ந்து செல்லும். குளத்துக்குள் அது எங்கே இருக்கும், எப்போது வெளியே வரும் என்பதெல்லாம் எனக்கு மட்டுமே தெரியும்.

வகுப்புக்குக் கூட போகாமல் அதை பார்ப்பதற்காக பல மணி நேரம் காத்திருந்ததும் உண்டு.

என்னன்னா, எனக்கு எதுவும் சரியாக வராது.

என் கண்கள் இடுங்கி இருக்கும். எனக்குக் கண் சரியா தெரியாது. மூக்கு ஒழுகிக்கொண்டே இருக்கும். நான் பேச ஆரம்பித்தால், கீச்சுக் குரலாக இருக்கும். ஆசிரியர்கள் எப்போதும் என்னைத் திட்டிக் கொண்டிருப்பார்கள். யாரும் என் பக்கத்தில் உட்கார கூட மாட்டார்கள்.

எனக்கு எதுவும் சரியாக வராது. சில சமயம் என்னால் அழக்கூட முடியாது.

சொன்னா நம்பமாட்டீங்க. ஆனா, இதெல்லாம் 100 சதவீதம் உண்மை.

யாரும் பார்க்காதபோது, பையன்கள் எல்லாம் என்னை அடிப்பார்கள், உதைப்பார்கள். மண்ணில் எச்சிலைக் கலந்து உருட்டி என் மேல் எறிவார்கள்.

நான் கண் மூடி அழ ஆரம்பித்தால், அழுகை சத்தம் உள்ளேயே சிக்கிக் கொள்ளும். அப்போது என்னால் மூச்சுவிடக் கூட முடியாது.

எனக்கு எதுவும் சரியாக வராது. எனக்கு மூச்சுவிடக் கூட தெரியவில்லை. பேச நினைத்தால், வார்த்தைகள் எதுவும் வெளியே வராது.

நான் நினைப்பது ஒன்று, சொல்வது ஒன்றாக இருக்கும்.நான் என்ன சொன்னாலும், செய்தாலும் எல்லோரும் என்னைப் பார்த்து சிரிப்பார்கள்.

சொன்னா நம்பமாட்டீங்க. ஆனா, எனக்கும் நிறைய நண்பர்கள் உண்டு. அவர்கள் என்னைச் சுற்றி எப்போதும் இருப்பார்கள். தூரத்து தேசங்களைப் பற்றிய கதைகளைச் சொல்வார்கள். அப்போது அவர்களோடு நானும் தப்பித்து ஓடுவிடுவேன்.

அவர்களெல்லாம் நிஜமில்லை என்று எனக்குத் தெரியும்.

நான் படித்த புத்தகங்களிலிருந்து அவர்களை உருவாக்கி வைத்திருக்கிறேன்.

நான் ஒரு பெண் போல் இருப்பதாக பையன்கள் சொல்கிறார்கள். ஆனால், பெண்களோ நான் அவர்களைப் போல் வீரமாகவும் உறுதியாகவும் இல்லை என்கிறார்கள்.

அவர்கள் சொல்வது சரியாகக் கூட இருக்கலாம். கீழே விழுந்து மூச்சுவாங்கிக் கொண்டிருந்தாலும், எனக்கு எங்கே வலிக்கிறது என்று சொல்லத் தெரியாது.

நல்ல ஆசிரியர்கள் கூட என்னைப் பார்த்தால் பாவப் படுவார்கள். நான் ஒரு நல்ல பையன்.

கெட்டிக்காரன் ஆகலாம். ஆனால், முயற்சியெடுத்து கடுமையாக உழைப்பதில்லை என்பார்கள்.

அப்படி நான் முயற்சி செய்யும்போது, எனக்கு எல்லாம் மறந்துபோகின்றன. மகிழ்ச்சியானவையும் கூட.

சொன்னா, நம்பமாட்டீங்க. ஆனா, எனக்கு எல்லோரையும் சிரிக்க வைக்கப் பிடிக்கும். வகுப்பில் ஆசிரியர் கவனிக்காத போது விதவிதமான வேடிக்கைகளை நான் செய்து காட்டுவேன். காதில் பென்சிலை சொருகிக் கொள்வது. நாக்கால் மூக்கைத் தொட முற்சிப்பது, இப்படி நிறைய.

சில சமயம், சில சமயம் மட்டும், இதையெல்லாம் யாராவது கவனித்து, என்னைப் பார்த்து சிரிப்பார்கள். அன்று முழுவதும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனால், எனக்கு எதுவுமே சரியாக வராது.

உண்மையில், நான் எதையும் தாறுமாறாகவே செய்வேன். என்னால் எதையும் சரியாக யோசிக்கக் கூட முடியாது.

வகுப்பில் கரும்பலகையைப் பார்த்தால், அங்கே இருட்டாக ஒரு கடல் விரிந்து கிடப்பது போலவும், அதில் சாக்பீஸால் எழுதியவை எல்லாம் கடல் அலை போலவும் தெரியும்.

படிப்பதற்காக புத்தகத்தைத் திறந்தால், அதில் எறும்புகள் ஊர்வது போல் இருககும். கண்ணை திறக்கவே முடியாத அளவுக்கு வலிக்கும்.

நான் ரொம்ப மோசம். அதனால், யாராவது கோபப்பட்டால், அதற்கு நான்தான் காரணம் என்று நினைத்து வருத்தப்படுவேன்.

சொன்னா நம்பமாட்டீங்க. ஆனா, அன்றைக்கு ஒரு பயங்கரமான சம்பவம் நடந்தது.

அன்று நான் குளத்தின் அருகே நின்றபடி மீன்களை எண்ணிக்கொண்டு இருந்தேன். அப்போது, ஒரு பையனை எல்லோரும் சேர்ந்து தண்ணீரில் தள்ளியதைப் பார்த்தேன்.

அவன் என்னைப் போலவே இருந்தான்.

பிரின்ஸிபல் அழைத்தபோது, அறையில் நானும் அவனும்தான் இருந்தோம். நான்தான் எதையும் சரியாக செய்யமாட்டேனே. நான் பயந்து போயிருந்தேன். யார் உன்னைத் தொட்டியில் தள்ளினார்கள் என்று பிரின்ஸ்பல் அவனைக் கேட்டார்., அவர் கண்கள் என்னை ஊடுருவிக் கொண்டிருந்தன. ஆனால் அவன் எதுவும் சொல்லவில்லை.

அவனைப் பார்க்கும்போது பாவமாக இருந்தது. நிஜமாகத்தான். நான்தான் செய்தேன் என்று சொல்லிவிடலாம் போல் இருந்தது. அவன் என்னை நோக்கி விரலால் சுட்டிக் காட்டினான்.

நான் கண்களை மூடிக்கொண்டேன். என்னால் மூச்சுவிட முடியவில்லை...

சொன்னா நம்பமாட்டீங்க. ஆனா, அதைச் செய்தது நானில்லை என்று அவன் மெல்லிய குரலில் சொன்னபோது பிரின்ஸிபல் கூட நம்பவில்லை.

“என்னாச்சுன்னா” என்று அவன் மெதுவாக பேச ஆரம்பித்தான். ”எனக்கு எதுவும் சரியாக செய்யத் தெரியாது. பையன்களும் பெண்களும் என்னைக் கேலி செய்வார்கள். டீச்சர் எப்போதும் என்னைத் திட்டிக் கொண்டே இருப்பார்கள்…”

நான் அவனைப் பார்த்தேன். எனக்குப் புரிந்துவிட்டது. என்னைப் போல் ஒருவன்!