soodaana kozhukattai suvaiyaana kozhukattai

சூடான கொழுக்கட்டை! சுவையான கொழுக்கட்டை!

மலையின் அடிவார கிராமம் ஒன்றில் தாத்தா ஒருவர் சுவையான கொழுக்கட்டைகளை விற்க வருகிறார். கடைசியாக மலையின் பெயரே அவரால் மாறி விடுகிறது.

- Tamil Madhura

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தெற்குத் தைவானின் கோஸோங் நகரில் 'பான் பின் ஷான்' என்ற மலை இருந்தது. அதற்கு 'ஒரு பாதி' என்பது பொருள்.

மலைக்கு இப்படி ஒரு பெயர் இருப்பது விந்தையாக இருக்கிறதல்லவா. ஆனால் அந்த மலையைப் பாருங்கள் பாதி மலையை யாரோ வாள் கொண்டு சரியாகப் பெயர்த்து எடுத்தது போலில்லை. இப்போது பெயர்க்காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்குமே. இனி இதற்குப் பின்னிருக்கும் கதையைக்  காண்போமா.

வெகு காலத்திற்கு முன்பு 'பான் பின் ஷான்' ஒரு முழுமையான மலையாக இருந்தது. அதற்குக் கீழே கிராமம் ஒன்று இருந்தது. ஒரு நாள் அந்த கிராமத்திற்கு ஒரு வயதான தாத்தா தலையில் ஒரு பெரிய பானையை சுமந்தபடி வந்தார்.

தாத்தாவின் தலைமுடியும், தாடியும் வெள்ளை வெளேரென்று பனித்துகள் போல நரைத்திருந்தது. முகம் முழுவதும் சுருக்கங்கள் இருந்தது. அவரது அணிந்திருந்த பழைய உடையோ நைந்து இருந்தது. அவர் தலையின் மீதிருந்த பானையை கிராமத்தின் நடுவில் அனைவரும் கூடும் இடத்தில் இறக்கி வைத்து விட்டு பானையின் மூடியைத் திறந்தார்.

அந்த இடத்தில் இனிப்பான கொழுக்கட்டையின் நறுமணம் பரவியது.

"சூடான கொழுக்கட்டை! சுவையான கொழுக்கட்டை" சத்தம் போட்டு கூப்பிட்டார் தாத்தா "ஒன்று ஒரு காசு, இரண்டு ரெண்டு காசு, மூன்று வாங்கினால் இலவசம்"

கிராமத்தினர் வியப்படைந்தனர். இவ்வளவு சுவையான மணமுள்ள கொழுக்கட்டையை இலவசமாகக் கொடுக்கும் இந்த மனிதன் என்ன முட்டாளா என்று பார்த்தனர்.

மீண்டும் தாத்தா உரக்கக் கத்தினார்   "சிகப்புப் பயிரும், எள்ளும் கலந்து செய்த சுவையான கொழுக்கட்டை.  ஒன்று ஒரு காசு, இரண்டு ரெண்டு காசு, மூன்று வாங்கினால் இலவசம்"

அவரை சுற்றி மக்கள் சூழ்ந்து கொண்டனர். தங்களுக்குள் பேசிக் கொண்டனர். "இதில் ஏதாவது சூழ்ச்சி இருக்கும். எப்படி மூன்று கொழுக்கட்டைகளை இலவசமாகத் தர முடியும்?"

"ரொம்ப ருசியாக இருக்கும்" என்றபடி பெரிய அறிவாளி வாங்கிடம் முதல் கொழுக்கட்டையைக் கொடுத்தார். அது கோழி முட்டையின் அளவிற்கு பெரிதாய் இருந்தது. வாங் அதை ருசித்து உண்டதை அனைவரும் பார்த்தனர்.

வாங் இரண்டாவது கொழுக்கட்டையை உண்டவுடனேயே வயிறு முழுவதும் நிறைந்துவிட்டது. இருந்தாலும் அவன் தாத்தாவை பார்த்து "நான் மூன்றாவது கொழுக்கட்டையை சாப்பிட்டால் பணம் தர வேண்டாம் அல்லவா?"

"ஆமாம். மூன்று கொழுக்கட்டைகளை உண்டால் பணம் தர வேண்டாம்" என்றார் தாத்தா. அறிவாளி வாங் மூன்றாவது கொழுக்கட்டையை வாயில் திணித்துக் கொண்டான். இப்போது உணவு இலவசம் அல்லவா.

தாத்தா சொன்ன வாக்கைக் காப்பாற்றினார். வாங் வயிறு புடைக்க உண்டு விட்டு மகிழ்ச்சியாகச் சென்றான்.

விரைவில் அங்கிருந்த மக்கள் அனைவரும் ஆளுக்கு மூன்று கொழுக்கட்டைகளை இலவசமாக சாப்பிட்டனர். விரைவில் பானை  முழுவதும் காலியாகிவிட்டது. சிலர் உணவு கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.

"உங்கள் கிராமத்தினர் அனைவரும் காலி செய்துட்டாங்களே" என்று அவர்களுக்கு பதில் அளித்து விட்டு வெறும் பானையை சுமந்தபடி கிளம்பிச் சென்றார்.

எதிர்பாராதாவிதமாக, மூன்று கொழுக்கட்டைகளை விழுங்கிய கழுகுப் பார்வை சான் கதறினான் "அங்க பாருங்க, மலையில் பாதியைக் காணோம்"

"உளறாதே" என்றனர் கிராமவாசிகள் "வயிறு முட்ட கொழுக்கட்டையை சாப்பிட்டது உன் மூளை வேலை செய்ய மாட்டிங்குது" அனைவரும் அவனைப் பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினர். சான் நீண்ட நேரம் அங்கேயே நின்று மலையை வெறித்துப் பார்த்தான்.

அன்று மாலை கிராமம் முழுவதும் தாத்தாவைப் பற்றியே பேச்சு "அந்த ஆள் சரியான முட்டாள். யாராவது மூன்று கொழுக்கட்டைகளை இலவசமாகத் தருவாங்களா" என்று சொல்லி நகைத்தனர். "தினமும் அவர் வந்தா நல்லாருக்கும்"

மறுநாள் காலை. தாத்தா மறுபடியும் பானை முழுவதும் கொழுக்கட்டைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் பொதுமக்கள் கூடும் இடத்திற்கு வந்தார்.

தாத்தா உரக்கக் கத்தினார்   "நிலக்கடலையும், எள்ளும் கலந்து செய்த சுவையான கொழுக்கட்டை. ஒன்று ஒரு காசு, இரண்டு ரெண்டு காசு, மூன்று வாங்கினால் இலவசம்"

இந்த முறை முதல் நாளை விட சீக்கிரமாகவே பானை காலியாகிவிட்டது. மக்கள் அனைவரும் ஆளுக்கு மூன்று கொழுக்கட்டைகளை இலவசமாகவே உண்டனர். தாத்தாவும் அந்த இடத்தை விட்டு புதிரான சிரிப்புடன் கிளம்பினார்.

மூன்றாவது நாள், தாத்தா மீண்டும் வந்தார். இந்த முறை கிராமத்தினர் அனைவரும் அவருக்காகக் காத்திருந்தனர். அவர்களால் முடிந்த அளவுக்கு இலவச உணவினைத் தின்று தீர்த்துவிட விரும்பினர்.

எதிர்பாராத விதமாக அங்கே ஒரு குரல் ஒலித்தது "தாத்தா எனக்கு ஒரே ஒரு கொழுக்கட்டை தர முடியுமா?"

அனைவரும் ஆச்சிரியத்துடன் திறந்த வாய் மூடாமல் யார் இப்படிக் கேட்பது என்று அறிந்துக் கொள்ளத் திரும்பினர்.

மூன்று கொழுக்கட்டைகளே இலவசமாகக் கிடைக்கும் பொழுது ஒரு காசு கொடுத்து ஒன்றினை விலைக்கு வாங்கும் மடையனைப் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு ஆர்வம். அங்கே ஒரு வாலிபன் அமைதியான தோற்றத்துடன் கையில் ஒரு காசை நீட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

தாத்தா பேசினார் "நான் சொன்னதைக் கேட்கவில்லையா. ஒன்று ஒரு காசு, இரண்டு ரெண்டு காசு, மூன்று வாங்கினால் இலவசம்"

"கேட்டேன். ஆனால் நான் இரண்டு தினங்களாக உங்களைப் பார்க்கிறேன். தினமும் பெரிய பானையை சுமந்து வருகிறீர்கள். கொழுக்கட்டைகளை இலவசமாகத் தருகிறீர்கள். ஆனால் வெறும் கையுடன் திரும்பிச் செல்கிறீர்கள். அதைக் கண்டு எனக்கு வருத்தமாக இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவ நினைத்தேன். ஆனால் என்னிடம் ஒரு கொழுக்கட்டை வாங்கத்தான் காசு இருக்கு."

அந்த வாலிபன் சொன்னதைக் கேட்டு கிராமத்தினர் அனைவரும் வெட்கித் தலை குனிந்தனர்.

தாத்தா முன்னே வந்து அந்த வாலிபனைக் கட்டி அணைத்ததுக் கொண்டார். "கடைசியில் உன்னைக் கண்டுபிடித்து விட்டேன். நான்தான் மலையின் கடவுள்.

உன்னை என் சீடனாகத் தேர்ந்தெடுக்கிறேன்.

எனக்குத் தெரிந்த மந்திர வித்தைகளை எல்லாம் கற்றுத் தருகிறேன்" என்று கண்களில் கண்ணீர் முகச் சுருக்கங்களில் வழிந்தோடச் சொன்னார்.

கிராமத்தினர் அனைவரும் மலையின் கடவுள் ஓர் கருணையுள்ளம் கொண்ட சீடனைத் தேடி தங்கள் கிராமத்திற்கு வந்திருக்கிறார் என்று உணர்ந்து கொண்டனர்.

அதன் பின்னர் தாங்கள் உண்டது கொழுக்கட்டை இல்லை என்றும் அவை எல்லாம் அந்த மலையிலிருந்து தோண்டிய கல்லும் மண்ணும் மந்திர சக்தியால் இப்படி உருமாறி இருக்கின்றன என்றும் மலை கடவுள் மூலம் தெரிந்துக் கொண்டனர்.

அதைக் கேட்டதும் மக்கள் அனைவரும் ஓடிச் சென்று பானையிலிருந்த கொழுக்கட்டையைப் பார்த்தனர். ஆனால் அந்த பானை முழுவதும் களிமண்தான் நிரம்பியிருந்தது. எல்லாரும் மலையைத் திரும்பிப் பார்த்தனர். அங்கு பாதி மலைதான் நின்றுக் கொண்டிருந்தது. கழுகுக் கண் சான் முன்னரே சொன்னான். ஆனால் அவர்கள்தான் கேட்கவில்லை.

மலைக் கடவுள் அவனது சீடனை அழைத்துக் கொண்டு மீண்டும் மலைக்கே திரும்பிவிட்டார். கிராம மக்கள் தங்களது பேராசையை எண்ணி குற்ற உணர்வால் வெட்கித் தலைகுனிந்தனர். அந்த மலையை  ஒரு பாதி என்று அழைக்கத் தொடங்கினர். அத்துடன் இனி பேராசை கொள்வதில்லை என்று முடிவெடுத்தனர்.

இப்போது சொல்லுங்கள், ஒரு தாத்தா சுவையான கொழுக்கட்டைகளுடன் உங்கள் ஊருக்கு வந்து  "சூடான கொழுக்கட்டை! சுவையான கொழுக்கட்டை! ஒன்று ஒரு காசு, இரண்டு ரெண்டு காசு, மூன்று வாங்கினால் இலவசம்" என்று விற்றால் எத்தனை பேர் வாங்குவீர்கள்?

இந்தக் கதையில் நீங்கள் பார்த்த படங்கள் எல்லாம் அழகழகான தொப்பி அணிந்து இருந்ததைப் பார்த்தீர்கள் அல்லவா. அந்தப் பாரம்பரிய தொப்பிகளைத் தான் விவசாயிகள் நிலத்தில் வேலை செய்யும் போது வெயிலில் இருந்து காக்க அணிந்து கொள்வார்கள். உங்களுக்கும் அது போன்ற தொப்பியை செய்யலாமா.

தேவையான பொருட்கள்

1) செய்தித்தாள் அளவுள்ள சார்ட் பேப்பர். 2) கத்திரிக்கோல் 3) ஓட்டுவதற்கு பசை 4) இரண்டு நீளமான  நூல்கள்.

செய்முறை:

1)சார்ட் பேப்பரில் ஒரு வட்ட வடிவத்தை வரைந்து வெட்டிக் கொள்ளுங்கள்

2)படத்தில் குறிப்பிட்டது போல V வடிவத்தை வெட்டிக் கொள்ளவும்.

3)படத்தில் வரைந்திருப்பதைப் போல A பகுதியை B பகுதியுடன் இணைத்து ஒட்டிக் கொள்ளவும். இப்போது கூம்பு வடிவத்தில் ஒரு தொப்பி கிடைத்துவிடும்.

4)அதன் இரண்டு எதிர் பகுதிகளில் துளையிட்டு நூல் ஒன்றினை இணைக்கவும்.

5)இப்போது வெயிலில் இருந்த பாதுகாக்க ஒரு  அழகான தொப்பி தயார். உங்களுக்குப் பிடித்த டிசைனில் அதனை அலங்கரிக்கவும்.