விவேகா தனது வீட்டின் அருகிலுள்ள சூரியகாந்திப் பூந்தோட்டத்தை வண்ண ஓவியமாக வரைய நினைத்தாள். ஒருநாள் மதியம் சூரியகாந்திகளைக் கவனமாகப் பார்த்தாள்.
“ஏன் அப்பூக்களுக்குச் சூரியகாந்திப் பூ என்று பெயர்? ஒருவேளை அவை சூரியனைப்போல் தோற்றமளிப்பதனாலோ என்னவோ!” என்று மோன்ட்டு, போன்ட்டுவிடம் சொன்னாள்.
அன்று மாலை மோன்ட்டு, போன்ட்டுவை வெளியே அழைத்துச் சென்று உணவளித்தாள் விவேகா.
தூரத்தில் சூரியகாந்திப் பூக்கள் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
“அதோ பார், பில்லி! உன்னைப் போன்றே, சூரியகாந்திப் பூக்களும் தூங்கப் போகின்றன போலும்” என்று விவேகா தன் பூனையிடம் கூறினாள்.
இறுதியாக, விவேகா ஓவியத்தை வரையத் துவங்கினாள். அவள் முதலில், மதியம் பார்த்தது போல வானின் உச்சியில் இருந்த சூரியனை வரைந்தாள்.
பின்பு, சூரியன் மறையும்போது பார்த்தது போல தலையை தொங்கப்போட்டுத் தூங்கும் சூரியகாந்திகளை வரைந்தாள்.
அடுத்த நாள் காலை தனது ஓவியத்தை சரிபார்க்க விவேகா சூரியகாந்திப் பூந்தோட்டத்திற்கு விரைந்தாள்.
“அய்யோ! நான் எல்லாவற்றையும் தவறாக வரைந்து விட்டேனே! இன்றைக்கு மறுபடியும் சரியாக வரைய வேண்டும்.”
“இந்த சூரியகாந்திப் பூக்கள் தூங்கி எழுவது போல இருக்கின்றன, என் ஓவியத்தில் இருக்கும் பூக்களோ தூங்கி விழுவது போல இருக்கின்றன.”
“இந்தத் தடவை நான் சரியாக வரைந்தே தீருவேன்” என்று போன்ட்டு, மோன்ட்டுவிடம் விவேகா உறுதியாகச் சொன்னாள்.
மதியம் தோட்டத்திற்குச் சென்று பார்த்துவிட்டு பூக்கள் எப்படி இருந்தனவோ அப்படியே வரைந்தாள்.
மறுநாள் காலை தனது புதிய ஓவியத்தை சரிபார்க்க தோட்டத்துக்கு ஓடினாள் விவேகா.
“இது எப்படி சாத்தியம்? இந்தச் சூரியகாந்திப் பூக்கள் மிகக் குறும்புக்காரப் பூக்களாக இருக்குமோ? இது என்ன மாயமோ, மந்திரமோ?”
ஆர்வத்துடன் விவேகா தோட்டத்திலேயே மிக உயரமான மரத்தின் கிளையின் மேல் ஏறினாள்.
“அவை என்னதான் செய்கின்றன என்று கவனமாகப் பார்க்கிறேன்!”
விவேகா, அடுத்த சில நாட்கள் தொடர்ந்து சூரியகாந்திப் பூக்களைக் கூர்ந்து கவனித்து வந்தாள்.
விவேகா ஒரு வாரத்திற்கு, தினமும் அவற்றை ஓவியமாய் வரைந்தாள். ஞாயிற்றுக் கிழமையன்று எல்லா ஓவியங்களையும் ஒருசேரப் பார்த்தாள். சூரியகாந்திப் பூக்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று அவளுக்கு சட்டெனப் புரிந்துவிட்டது.
“இதில் ஒன்றும் மாயமோ மந்திரமோ இல்லை. சூரியகாந்திப் பூக்கள், சூரியனைப் பின்பற்றவே விரும்புகின்றன!” என்று புன்னகைத்தாள்.
சூரியகாந்திகள் சூரியனைப் பின்தொடர்வது ஏன்?
பூமி சூரியனைச் சுற்றிவரும்போதே தனது அச்சிலும் சுழல்கிறது. அப்படிச் சுழலும்போது ஒரு பாதி பூமி சூரியனை நோக்கி இருக்கும், அதைத்தான் நாம் ‘பகல்’ என்கிறோம். அதேநேரம் பூமியின் மற்றொரு பாதி இருண்டிருக்கும். அதைத்தான் இரவு என்கிறோம்.
அதிகாலையில் சூரியன் கிழக்கில் உதித்து, மாலையில் மேற்கில் மறைகிறது. இந்த நேரத்தில் செடிகொடிகள் சூரிய ஒளியை வைத்துத் தங்களுக்கான உணவைத் தயாரித்துக் கொள்கின்றன. ஆனால் எல்லாச் செடிகளும் சூரியனைப் பின்தொடர்வதில்லை. இளம் சூரியகாந்திகளின் தண்டிலிருக்கும் சில செல்கள் அவற்றை சூரிய ஒளியை நோக்கித் திரும்பச் செய்கின்றன. இதனை ஒளிதூண்டுதிருப்பம்(Heliotropism) என்கிறோம். இதனால்தான், சூரியகாந்திப் பூக்கள் வானில் சூரியன் இருக்கும் திசையைப் பின்தொடர்கின்றன.