sooriyanai virumbum sukku

சூரியனை விரும்பும் சுக்கு

சுக்கு என்னும் பூனைக்கு சூரியனை மிகவும் பிடிக்கும். தாதாஜிக்கும்தான்! சூரிய ஒளியில் அப்படி என்னதான் சிறப்பு? வாருங்கள், தெரிந்துகொள்ளலாம்!

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுக்குவுக்கு சூரிய ஒளி படும் இடங்களில் உட்கார ரொம்பப் பிடிக்கும்.

வாயிற்கதவுக்கு பக்கத்திலுள்ள சுவர்தான் அவளுக்குப் பிடித்தமான இடம். அங்கிருந்து அவளால் எல்லாவற்றையும் பார்க்கமுடியும்...

தப்பனின் அம்மா கம்பளி உலர்த்துவதை

அர்கா தன் விளையாட்டு ஷூக்களைக் கழுவுவதை

தப்பன் முடி உலர்த்துவதை

விஜய் மீன் விற்பதை.

ஒருநாள் அர்கா, தப்பன், மற்றும் தப்பனின் தாத்தா மூவரும் களையெடுத்துக் கொண்டிருப்பதை சுக்கு பார்த்தாள்.

“என்னை, வெயில் படும் அந்த இடத்திற்குத் தள்ளிக்கொண்டு போகிறாயா?” என்று கேட்டார் தாதாஜி. “சூரிய ஒளி என்னுடைய எலும்புகளுக்கு நல்லது. உங்களுக்கும்தான்!”

அர்காவும், தப்பனும் தாதாஜியை கதகதப்பான, வெளிச்சமான தோட்டத்திற்கு தள்ளிச் சென்றனர்.

“வீஈஈஈல்ல்ல்!” என்று கூச்சலிட்டனர்.

“வேகமா, வேகமா!” என்றார் தாதாஜி.

“கவனமா, கவனமா!” என்று எச்சரித்தார் தப்பனின் அம்மா.

சுக்குவின் பார்வை விஜய்மீது இருந்தது. “சீக்கிரம், சீக்கிரம்” என்று முனகினாள் சுக்கு. அவளுக்கு நல்ல பசி!

மறுநாள் மழை பெய்தது. “அய்யோ, என் ரங்கோலி!” என்று புலம்பினாள் அர்கா. “அய்யே, என் சட்டை!” என்றான் தப்பன். “போச்சு, என்னுடைய ஊறுகாய்!” என்று கூக்குரலிட்டார் தப்பனின் அம்மா. சுக்குவுக்கும் வருத்தமாக இருந்தது. இப்போது, விஜய் எப்படி மீன் கொண்டுவருவார்?

சுக்கு பசியோடு அடுப்பின் அருகே அமர்ந்திருந்தாள். அப்பளம், காய்கறிகள், மசாலா. சே! முரப்பா, ஜாம், ஊறுகாய். சீ! அப்போதுதான் சுக்கு மேலே பார்த்தாள்....

..ஆகா, ஒரு ஜாடி நிறைய கருவாடு!

ஹைய்யா! இன்று வெயில் அடிக்கிறது!

“சூரிய ஓவியங்கள் செய்யலாமா?” என்று கேட்டார் தாதாஜி.

அர்காவும் தப்பனும் தாதாஜி கேட்ட எல்லாவற்றையும் கொண்டுவர ஓடினர்: கருப்பு வரைபடத்தாள் ஒன்று, கற்கள், நாணயங்கள் போன்ற தட்டையான கனமான பொருட்கள்.

கற்களையும் நாணயங்களையும் அந்தத் தாளின்மீது வைத்து ஒரு வடிவத்தை உருவாக்கினர்.

“நான்கு மணி நேரம் இது வெயிலில் இருக்கட்டும்” என்றார் தாதாஜி.

நான்கு மணி நேரத்தில் என்ன நடக்கும் என்று சுக்கு யோசித்தாள்.

“சுறுசுறுப்பான குட்டிப் பசங்களே! உங்களைப் போலவே சூரியனும் இன்று நிறைய வேலை செய்திருக்கிறது” என்றார் தாதாஜி.

சூரியன் தாதாஜியின் மடியை வெதுவெதுப்பாக்கி இருந்தது. ம்ம்ம்… சுக்குவுக்கு சூரியனை மிகவும் பிடித்திருந்தது!

செம்பருத்தித் தேநீர் தயாரிக்கலாமா?

இதைச் செய்யத் தேவையானவை:- மூடியுடன் கூடிய ஒரு ஜாடி- நான்கு செம்பருத்திப் பூக்களின் இதழ்கள் - ஒரு லிட்டர் குடிநீர் - நான்கு தேக்கரண்டி சர்க்கரை

செய்முறை: ஜாடியில் சுத்தமான நீரை நிரப்புங்கள்.செம்பருத்தி இதழ்களை நன்றாகக் கழுவி தண்ணீரில் போடுங்கள்.ஜாடியை மூடி நன்றாகக் குலுக்குங்கள். அதை வெயிலில் மூன்று மணி நேரம் வையுங்கள். சர்க்கரை சேர்த்துக் கலக்குங்கள்.

உங்கள் செம்பருத்தித் தேநீர் தயார்! குடித்து மகிழுங்கள்!

வெயில் நாட்கள் மகிழ்ச்சியான நாட்கள்

- சூரியன் ஒரு நட்சத்திரம். அது நமக்கு ஒளியையும் வெப்பத்தையும் தருகிறது. - சூரிய ஒளியும் வெப்பமும் செடிகள் வளரக் காரணமாக உள்ளது.- காலையில் சிறிது நேரம் சூரிய ஒளி நம் உடலில் படுவது உடல்நலனுக்கு நல்லது. - சூரியன் மிக மிக தூரத்தில் உள்ளது. ஆயினும் நமக்குத் தேவையான எல்லா ஆற்றலையும் கொடுக்கிறது. - விஞ்ஞானிகள் சூரிய ஆற்றலைப் ‘பிடித்து’ பல வகைகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், நீங்களும் நானும் சூரிய வெளிச்சத்தில் விளையாடியே அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.