sringeri srinivasan sirikka katrukkollgiraar

சிருங்கேரி சீனிவாசன் சிரிக்கக் கற்றுக்கொள்கிறார்

’வருடாந்திர முடி திருத்தும் நாள்’ கதையில் சிருங்கேரி சீனிவாசன் தலைமுடியைக் கோபத்தில் பிய்த்துக் கொண்டார். ’நிறைய வாழைப்பழங்கள்’ கதையில் அவருக்கு ஒரு புதிய யோசனை வந்தது. ’ரொம்ப சத்தம்’ கதையில் அவருக்கு அமைதி கிடைத்தது. இந்தக் கதையில் சிடுசிடுப்பான ஆனால் அன்பான, நீள முடி கொண்ட விவசாயிக்கு மீண்டும் ரொம்பக் கோபம் வருகிறது.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சிருங்கேரி சீனிவாசன் ஒரு நல்ல விவசாயி.

அவர் வளர்க்கும் வாழைப்பழங்கள் அற்புதமானவை, சுவையான வாழைப்பழ அல்வா செய்ய ஏற்றவை.

ஆனால் அவர் உலகத்திலேயே பயங்கர சிடுமூஞ்சி. கோபம் வந்துவிட்டால் போதும், அவரது நெற்றியில் ஆழமான கோடுகள் விழும். மூக்கு சிவக்கும். கண்களிலும் அதன் தீவிரம் தெரியும்.

சிருங்கேரி சீனிவாசன் சிடுசிடுத்தால் மற்றவர்கள் அவரை விட்டு விலகி ஓடுவார்கள். அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் நண்பர்கள் ஒளிந்து கொள்ள இடம் தேடுவார்கள். அவரது பசுக்களும் நாய்களும் ஓடிவிடும். வயலில் இருக்கும் காகங்கள் கூட அவர் சிடுசிடுப்பதைக் கண்டு பறந்தோடிவிடும்.

சிருங்கேரி சீனிவாசன் அடிக்கடி சிடுசிடுப்பார். விளைச்சல் சரியில்லையென்றால். முடிதிருத்துபவருக்கு அவரது தலை முடியை வெட்ட நேரமில்லையென்றால். டீவி சரியாக வேலை செய்யவில்லையென்றால். இப்படி ஏதேதோ காரணங்கள்.

ஒருநாள் சிருங்கேரி சீனிவாசன் வாழைக்குலைகள் அறுவடைக்காக தோட்டத்திற்கு போனார். அன்று அவருக்கு மனசு சரியில்லை. ஏன் என்று யாருக்கும் தெரியவில்லை.

பெரிய குலைகள் கொண்ட மரத்தினருகே சென்றார். குலை அழகான பழங்களுடன் இருந்தது. விரைவில் அவருக்குப் பிடித்த சுவையான வாழைப்பழ அல்வா செய்யலாம். சிடுசிடுப்பான முகத்தில் சின்ன சிரிப்பு!

அந்த சமயம் பார்த்து குரங்குகள் கூட்டமாக, மரத்துக்கு மரம் தாவியபடி அருகில் வந்தன. சிவந்த பின்பாகம் கொண்ட ஒரு பெரிய குரங்கு, சரியாக சிருங்கேரி சீனிவாசன் பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வாழைமரத்தின் மீது குதித்தது.

மீண்டும் அவர் முகத்தில் சிடுசிடுப்பு. கொஞ்சம் கொஞ்சமாக சிடுசிடுப்பு வளர்ந்தது. இதுவரையில் இல்லாத மகா சிடுசிடுப்பு, அது தலை முதல் கால் வரை பரவியது.

குரங்குகளுக்கே உரிய கோபத்துடன் இருந்த அந்தக் குரங்கே ஆச்சரியப்பட்டது. இதுவரை இப்படி ஒரு சிடுசிடுப்பை அது பார்த்ததேயில்லை! பாதி உரித்த பழத்தை கீழே போட்டது. இன்னும் கொஞ்சம் பழங்களை கீழே போட்டது. விரைவில் அடுத்தடுத்த மரங்களுக்குத் தாவி, அவரது சிடுசிடுப்பிலிருந்து பாதுகாப்பான தூரத்திற்குப் போய்விட்டது.

குரங்கு மரத்துக்கு மரம் தாவிச் செல்வதை சிருங்கேரி சீனிவாசன் பார்த்தார். அதைத் துரத்திச் சென்றார். குரங்கிற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க நினைத்தார்.

துரத்தி செல்லும் வழியில் கீழே கிடந்த வாழைப்பழத் தோலில் சறுக்கினார்.

சரக் என்று விழுந்தார். அவரது செருப்பு மண்ணில் மாட்டிக் கொண்டது.

சுதாரித்து எழுந்து, குரங்கை மீண்டும் துரத்த முயன்றார். சரக்! மீண்டும் வழுக்கி விழுந்தார். இப்போது குப்புற விழுந்தார்.

பின் எப்படியோ சமாளித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். வாயில் இலைகள், மண், கிளைகள். தலையை தூக்கிப் பார்த்தார். குரங்குகளைக் காணவில்லை.

சிருங்கேரி சீனிவாசன் தன்னைத்தானே பார்த்துக் கொண்டார். அழகான சட்டை அழுக்கு சட்டையாகி இருந்தது. கைகளிலும் அழுக்கு. சிராய்ப்பும் ஏற்பட்டிருந்தது. கால்களைக் காணவில்லை, அவை மண்ணுக்குள் புதைந்திருந்தன!

திடீரென அவர் தன் கேலிக்குரிய நிலையை எண்ணிப் பார்த்தார். சிருங்கேரி சீனிவாசன் என்ற, பெயர்பெற்ற விவசாயி. இப்பொழுது இலைகள், மண், சேதமான பழங்களின் குவியல் மத்தியில் உட்கார்ந்திருக்கிறார். அவருக்கே வேடிக்கையாக தோன்றியது. சிருங்கேரி சீனிவாசன் சிரிக்க ஆரம்பித்தார். முதலில் சின்ன சிரிப்பு... ஹிஹிஹி. பின் அது பெரியதானது ஹா ஹா ஹா!

சிரிக்க சிரிக்க அவருக்கு இன்னமும் சிரிக்க வேண்டும் போல இருந்தது.

சிரிப்பு இன்னும் பெருகியது. ஹாஹாஹா! இன்னும்... இன்னும்

வயிற்றைப் பிடித்துக் கொண்டு, மண்ணில் புரண்டு சிரித்தார். ஹாஹாஹா! அவர் கண்களிலிருந்து நீர் வழிந்தது.

அவருடைய சிரிப்பு இசைநயத்துடன் இருக்கவே அருகிலுள்ள பறவைகள் அதனை கேட்பதற்கு அருகில் வந்தன. அவரது பலத்த சிரிப்பைக் கேட்டு குரங்குகளும் திரும்பி வந்தன. அவருடைய சிரிப்பு வேடிக்கையாக இருந்ததால் நிறைய குழந்தைகள் ஓடி வந்தனர். அவர் சிரிப்பதே புதியதாக இருந்ததால், அவருடைய குடும்பத்தினரும் அதைக் கேட்க அங்கு வந்தனர்.

சிருங்கேரி சீனிவாசன் சிரிக்க சிரிக்க மற்றவர்களுக்கும் அந்தச் சிரிப்பு தொற்றிக் கொண்டது. பறவைகள் கூச்சல் போட்டன. காகங்கள் கரைந்தன. குரங்குகள் சத்தம் போட்டன. குழந்தைகள் கலகலவென்று சிரித்தார்கள். வாழைத்தோட்டமே அசைந்து ஆடியது. முடி வெட்டுபவர் சிரித்தார். தையற்காரரும் சிரித்தார். தூரத்து குகையில் வசித்த புலி கூட தன்னுடைய மீசைக்குள் சிரித்தது.

திடீரென்று சிருங்கேரி சீனிவாசனின் சிரிப்பு முடிவுக்கு வந்தது. அவரை சுற்றியிருந்த அனைத்தும், அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்தனர். அவருக்கும் மகிழ்ச்சிதான். “வாருங்கள்! வீட்டுக்குப் போகலாம்” என்று தன் குழந்தைகளை நோக்கி கை நீட்டினார். சிருங்கேரி சீனிவாசன் முகத்தில் இப்பவும் சில சமயம் சிடுசிடுப்பு தெரிகிறது. ஆனால் அவருக்கு சிரிக்கவும் பிடிக்கிறது. அதுவும் ஊரிலேயே பலமான சிரிப்பு அவருடையது.