sshhh enna athu

உஷ்ஷ்ஷ்! என்ன அது?

தாராவும் தியாவும் இரவில் தூங்கத் தயாராகும்போது, சுவற்றில் எதையோ பார்க்கிறார்கள். பூதம்! சகோதரிகள் இருவரும் சேர்ந்து பூதத்தை விரட்டி விடுவார்களா, என்ன?

- Sneha

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“தியா, தாரா சமர்த்தாக தூங்குங்கள்! குட் நைட் தியா. குட் நைட் தாரா!” அப்பா விளக்கை அணைத்தார்.

ஷ்விஷ்! ஃப்ளாஃப்!

என்னது அது? தாரா தியாவைப் பார்த்தாள். தியா தாராவைப் பார்த்தாள்.

“பூதம்!”

தியாவும் தாராவும் போர்வைக்குள்ளே ஒளிந்து கொண்டனர்.

“என்ன செய்யப் போறோம்?” என்றாள் தியா.

டும்! ஆ!

“நாம் அதை பயமுறுத்தி துரத்திவிடலாம்” என்றாள் தாரா.

“நாமே சொந்தமாக ஒரு பூதம் செய்து துரத்தலாம். ஸ்கார்ஃப் சாத்தான்” என்றாள் தியா.

“அதுவும் கால்பந்து தலையோடு!”

“அது பயந்து விட்டது என நினைக்கிறேன்” என்றாள் தாரா.

“இல்லை... அது எழுந்து நிற்கிறது” என்று சொல்லிக் கொண்டே தியா ஒளிந்து கொண்டாள்.

ஆ! ஐயோ!

“சீக்கிரம், உன் போர்வையை எடு. நாம் ஒரு போர்வைப் பேய் செய்யலாம்!” என்றாள் தியா.

“டார்ச் எங்கே?” என்று தாரா கேட்டாள்.

தியா தெருவிளக்கை கை காட்டினாள்.

விஷ்க் விஷ்க்!

“நான் டார்ச்சை வைத்து என்னுடைய மழைக்கோட்டினால் ஒரு நாற்காலி அரக்கன் செய்கிறேன்” என்றாள் தியா.

“இரண்டு பூதங்களைப் பார்த்தால் அது பயந்து ஓடிவிடும். டார்ச்சை இன்னும் பக்கத்தில் கொண்டு வா... நாம் நாற்காலி அரக்கனைப் பெரியதாக்குவோம்” என்றாள் தாரா.

ஷம்ப்! பூஃப்!

தாரா போர்வைக்கு அடியில் இருந்து தன் கைகளை அசைத்தாள்.

க்ரிக்! க்ரீச்!

“நீங்கள் இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று அப்பா கேட்டார்.

“அப்போ நீங்கள்தான் அந்த பூதமா?” என்று தாராவும் தியாவும் கீச்சிட்டார்கள். “எந்த பூதம்?”

க்ளிக்! ப்ளிங்!

ஹாஹாஹா! ஹிஹிஹி! எல்லோரும் சிரித்து, நிழல் பூதங்கள் செய்து விளையாடினர்.

நிழல் பார்த்தல் ஒரு திடமான பொருளின் மீது ஒளி படும்போது, அதன் பின்னே ஒரு இருண்ட வடிவம் உருவாகிறது. இந்த இருண்ட வடிவத்திற்கு நிழல் என்று பெயர். ஒளியைப் பொறுத்து நிழல்களும் மாறும். பொருளின் பக்கத்தில் ஒளி இருந்தால், நிழல் பெரிதாக இருக்கும். ஒளி தூரத்தில் இருந்தால், நிழல் சிறியதாக இருக்கும். ஒரு பொருளின் மீது ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளிகள் விழுந்தால், இரண்டு நிழல்கள் தெரியும்.

வெவ்வேறு பொருட்கள் வெவ்வேறு வகையான நிழல்களை உருவாக்கும். விதவிதமான பொருட்களால் ஆன உருவங்களை வைத்து நிழல் உண்டாக்கிப் பாருங்கள். ஒரு கிளாஸ் தண்ணீர், புத்தகம், வலை இவற்றின் மீது டார்ச் விளக்கை அடித்துப் பார்த்து அதன் நிழல்கள் எப்படி மாறுகின்றன எனப் பாருங்கள்.