sudipta sengupta paaraigalai vaasippavar

சுதிப்தா சென்குப்தா – பாறைகளை வாசிப்பவர்

சுதிப்தாவுக்கு மலையேறுவது என்றால் மிகவும் பிடிக்கும். புத்தகங்களை வாசிப்பதைப் போல அவர் பாறைகளையும் வாசிப்பார். அண்டார்டிகாவில் கால் பதித்த முதல் இந்திய, பெண் நிலவியலாளரான சுதிப்தா, அங்குள்ள ஸ்கர்மேக்கர் குன்றுகளில் ஏறி அதன் பாறைகள் சொல்லும் கதைகளைக் கண்டறிந்திருக்கிறார்.

- Subhashini Annamalai

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுதிப்தா, பாபாவுடன் கணக்குப் பாடம் படிக்க உட்காரும்போது, அவளது மனம் மலைகளை நோக்கி சஞ்சரிக்கும்.

பெரிய பாறைகளின் மீது ஏறுவதையும் பனிபடர்ந்த மலை முகடுகளைக் கடப்பதையும் கற்பனை செய்வாள்.

மலையேற்ற வல்லுநராக ஆவதே அவளுடைய கனவாக இருந்தது.

விரைவில், சுதிப்தாவின் பள்ளிக்கல்வி நிறைவு பெற்றது. அவர் கல்லூரியில் இயற்பியல் படிக்க விண்ணப்பித்தார். அங்கே, பேராசிரியர் ஒருவர் நிலவியல் படிக்குமாறு பரிந்துரைத்தார்.

நிலவியலாளர்கள், பாறைகளையும் அவை உருவாகும் விதங்களையும் ஆய்வு செய்வார்கள். சுதிப்தா, ஆய்வுக்காக கற்களைச் சேகரிப்பார். கற்களைத் தேடி மலையேறுவார். தொலைதூரப் பிரதேசங்களுக்கும் ஆளரவமற்ற இடங்களுக்கும் பயணிப்பார்.

உலகின் எல்லா மூலைகளில் உள்ள பாறைகளையும் ஆய்வு செய்தார். பூமியின் விசைகளால் பாறைகளில் எவ்வாறு வடிவ மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள விரும்பினார்.

தனது கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னரும்கூட பல வருடங்கள் தொடர்ந்து படித்தார்.

நாளடைவில், புத்தகங்களை வாசிப்பதுபோல அவரால் பாறைகளை வாசிக்க முடிந்தது. ஒரு பாறை நிலநடுக்கத்தோடு தொடர்புடையதா, மலையின் பகுதியாக இருந்ததா என்பதை அவரால் எளிதில் சொல்ல முடிந்தது.

அவர் தொடர்ந்து மலையேற்றமும் செய்து கொண்டிருந்தார். எவரெஸ்ட் சிகரத்தில் கால்பதித்த முதல் இரண்டு நபர்களில் ஒருவரான டென்சிங் நார்கே அவருக்கு மலையேற்றத்தில் உயர்கட்டப் பயிற்சி அளித்தார்.

பூமியின் அடியாழத்தில் இருக்கும் அதிகமான வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக பாறைகள் மிருதுவாகிவிடும். அதனால் அவற்றின் வடிவங்களில் மாறுபாடுகள் ஏற்படும். பூமியின் மேற்பரப்புக்கு அருகில் அழுத்தம் குறைவாக இருக்கும். அங்கே, பாறைகளில் வெடிப்புகள் தோன்றலாம். சிலநேரங்களில், ஒரே பாறை வெவ்வேறு காலகட்டங்களில் பல்வேறு விசைகளின் தாக்குதலுக்கு ஆட்படலாம். அதனால் அது பலமுறை வடிவ மாற்றங்களுக்கு உள்ளாகும்.

பாறைகளைத் தேடும் பயணம், சுதிப்தாவை தொலைதூர இடங்களில் பலவகையான ஆபத்தான சாகசங்களுக்கு இட்டுச்சென்றது.

ஒருமுறை அவர், காட்டு யானைகள் நடமாடக்கூடிய சிங்பூம் என்ற இடத்தில் மலையேறிக் கொண்டிருந்தார். அப்போது அவரது வழிகாட்டி கத்தினார்,

“யானை, யானை! ஓடுங்கள், ஓடுங்கள்!”

கற்கள் நிரம்பிய தோள்பையுடன், எவ்வளவு வேகமாக ஓட முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடினார் சுதிப்தா. ஆனால், உண்மையில் அங்கே யானைகள் இருந்தனவா?

இல்லை, அவர் கண்டது எல்லாம் மான்கள் மற்றும் காட்டுப் பன்றிகளின் காலடித்தடங்கள் மட்டும்தான்.

மற்றொரு முறை, அவர் ஸ்காண்டிநேவிய கேலடோநைட்ஸ் மலைத்தொடர்களில் ஏறிக்கொண்டிருந்தார். சூரியன் மறையும் நேரம், அவர் ஒரு குறுகிய செங்குத்தான குன்றின் மேல் இருந்தார். அப்போது திடீரென்று சூழ்ந்த அடர்த்தியான பனிமூட்டத்தில் அவரால் தன்னுடைய கைகளையே பார்க்க முடியவில்லை. ஒரு மணிநேரம் உறைந்துபோய் அங்கேயே நின்றுவிட்டார். லேசாக நகர்ந்திருந்தாலும், அவர் மலையுச்சியிலிருந்து கீழே விழுந்திருக்கக்கூடும்!

அடுத்த நாள், அவர் ஒரு பசுமையான பள்ளத்தாக்கின் குறுக்கே நடந்து கொண்டிருந்தார். சுதிப்தா, திடீரென்று மூழ்கத் துவங்கினார்! ஏனென்றால், அது புல்வெளி இல்லை. சதுப்பு நிலம்! தன்னுடைய முழு ஆற்றலையும் சேர்த்து தன்னை வெளியே இழுத்துக்கொண்டு முகாமிற்குத் திரும்பினார்.

உலகின் மிகக் குளிர்ச்சியான பிரதேசமான அண்டார்டிகாவிற்கு விரைவில் ஒரு ஆய்வுப்பயணம் நடக்கவிருப்பது சுதிப்தாவிற்குத் தெரியவந்தது. அதற்கு விண்ணப்பிக்க ஆவலுடன் காத்திருந்தார்! ஆனால், அந்த ஆய்வுப்பயணத்தில் பெண் விஞ்ஞானிகளை அனுமதிக்கவில்லை.

ஆச்சரியமாக ஓராண்டு கழித்து, நேர்முகத் தேர்வுக்கு வரச்சொல்லி தந்தி ஒன்று வந்தது. என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ளும் முன்னரே, கோவாவிலிருந்து அண்டார்டிகாவிற்கு கப்பல் வழி பயணமானார். அந்தக் கப்பலில் இருந்த மற்ற ஒரே பெண் விஞ்ஞானி கடல் உயிரியலாளரான அதிதி பன்ட் மட்டுமே.

அண்டார்டிக் ஒப்பந்தத்தின்படி அண்டார்டிகா, ‘அமைதி மற்றும் அறிவியலுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட இயற்கை மையம்’. அங்கே தளங்களை நிர்மாணித்துள்ள எல்லா நாடுகளும், தங்கள் ஆராய்ச்சிகளை அமைதி மற்றும் பூமியின் மேம்பாட்டிற்காக மட்டுமே செய்வோம் என்று உறுதி எடுத்துள்ளனர். மேலும், தங்கள் ஆராய்ச்சி முடிவுகளை பிற நாட்டு விஞ்ஞானிகளுடன் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் பகிர்ந்து கொள்கிறார்கள்.

கோவாவிலிருந்து புறப்பட்டு 23 நாட்கள் பயணித்து, ஃபின்போலாரிஸ் கப்பல் அண்டார்டிகா வந்து சேர்ந்தது. அதில் மொத்தம் 83 பேர் இருந்தனர் – விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் ஆயுதப்படை அதிகாரிகள். அவர்கள் இந்தியாவின் முதல் ஆய்வுக்கூடமான தக்ஷிண் கங்கோத்ரியை* நிறுவினர்.

*இந்தத் ஆய்வுத்தளம் 1980களின் பிற்பகுதியில் பனியில் மூழ்கியபின் கைவிடப்பட்டது.

கப்பல் தளத்திலிருந்து சுதிப்தாவின் கண்களுக்கு எட்டிய தூரம் வரை நீலமும் வெள்ளையுமாகத்தான் தெரிந்தது. மரங்கள், செடிகள், விலங்குகள், மனிதர்கள் எதுவும் தென்படவில்லை. பென்குவின்கள் மட்டும்தான் இருந்தன.

டிசம்பர் 27, 1983 அன்று சுதிப்தா மற்றும் அதிதி இருவரும் அந்தப் பனிக்கண்டத்தில் கால்பதித்த முதல் இந்தியப் பெண்கள் என்ற பெருமையைப் பெற்றார்கள்.

உலகிலுள்ள மொத்த பனியில் 90% அண்டார்டிகாவில்தான் உள்ளது.

அண்டார்டிகாவில் பாறை மாதிரிகளைத் தேடுவது எளிதல்ல. சுதிப்தா ஆய்வுக்கூடத்திலிருந்து வெளியே செல்லும்போது எப்போதும் தனது சாய்வுமானியையும்(Clinometer) கையில் எடுத்துச் செல்வார். அது திசைகளை மட்டுமல்லாமல் பாறைகளின் சாய்வையும் காட்டும் ஒரு கருவி.

தான் நடந்து கொண்டிருக்கும் பனி மற்றும் பாறையாலான பாலங்கள் எப்போது உடையும் என்றோ எப்போது பனிப்பிளவுகள் ஏற்படும் என்றோ அவருக்குத் தெரியாது. நான்கு கிலோமீட்டர் தடிமன் கொண்ட பனிப்பரப்பின் மீது நடந்து செல்லும்போது இடையிடையே வறண்ட பனிக்காற்று பலத்த வேகத்தில் முகத்தில் அடிக்கும்.

அவரால் பாறைகளை எங்குமே கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தப் பனிப்பிரதேசத்தில் அவர் பாறைகளை எங்கே கண்டுபிடிப்பது?

மலையுச்சிகளில்!

அண்டார்டிகாவில் பனியிலிருந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் மலை முகடுகள் நிறைய உண்டு. தனது ஆய்வுக்கான பாறைகளைக் கண்டுபிடிக்க, சுதிப்தா இந்த மலை முகடுகளின் மீது ஏறுவார். சுமார் 20 கிலோ எடைகொண்ட பாறைகளைக் கண்டுபிடித்து அவற்றை தனது தோள்பையில் போட்டு எடுத்துவருவார். உறுதியான இந்தப் புதிய பாறைகளை பலமணிநேரம் முயன்று அவர் சுத்தியால் உடைப்பார். குறிப்பெடுப்பதற்குத் தனது பேனாவைக்கூடத் திறக்க முடியாதபடி குளிராக இருக்கும்.

கோடையில் வெப்பநிலை -20 முதல் -30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குளிர்காலத்தில் அது -89 டிகிரி செல்சியஸ் வரை இறங்கலாம்.

சுதிப்தா அண்டார்டிகாவில் நிறைய பாறைகளைச் சேகரித்தார். பெரிய பாறைகள். சிறிய பாறைகள். கூரிய முனைகளுடைய பாறைகள். குறுக்கே கோடுகளுடைய பாறைகள். பல மில்லியன் வருடங்கள் நீளும் அவற்றின் வரலாற்றை அவரால் அறிய முடிந்தது.

சில பாறைகளின் வடிவ மாற்றத் தடங்கள் தென் ஆப்பிரிக்காவில் உள்ள பாறைகளை ஒத்திருந்தன. மேலும் சிலவற்றின் தடங்கள் தென் இந்தியாவில் காணப்படும் பாறைகளை ஒத்திருந்தன.

பல மில்லியன் வருடங்களுக்கு முன், ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகா ஆகிய கண்டங்கள் அனைத்தும் ஒன்றாக, ஒரே பெரிய நிலப்பரப்பாக இருந்தன என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதன் பெயர் கோண்ட்வானாலேண்ட். இருபது மில்லியன் வருடங்களுக்கு முன்பு, அது பிரிந்து பல கண்டங்களாக விலகிச்செல்லத் தொடங்கியது. அண்டார்டிகா தென் துருவத்தை அடைந்தது.

சுதிப்தா மீண்டும் ஒரு முறை அண்டார்டிகாவிற்குச் சென்றார். மீண்டும் அவர் பல மைல்கள் பனியில் நடந்தும் மலைகளில் ஏறியும் புதிய பாறைகளைக் கண்டிபிடித்தார். அவர் உன்னிப்பாக கவனித்தும் கேட்டும் எழுதியும், இந்த உலகம் எப்படி உருவானது என்பதைப் பற்றிய பல கதைகளை நமக்காக சேகரித்து வந்திருக்கிறார்.

சுதிப்தா பயன்பாட்டுப் நிலவியலில் தனது இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் கட்டமைப்புப் நிலவியலில் முனைவர் பட்டப்படிப்பை முடித்தார்.

சுதிப்தா, லண்டனிலுள்ள இம்பீரியல் காலேஜ் ஆஃப் சயின்ஸில் முனைவர் பட்டத்திற்கு பிறகான தனது ஆராய்ச்சியைத் தொடரத் தேர்வானார். 2018வரை இந்த ஃபெல்லோஷிப்பைப் பெற்ற ஒரே இந்திய நிலவியலாளர் இவர்தான்.

பாறைகளில் செதுக்கப்பட்ட ஒரு கதை

சுதிப்தாதான் கிழக்கு அண்டார்டிகாவின் ஸ்கர்மேக்கர் மலைகளில் நிலவியல் ஆய்வின் முன்னோடி. அவர் தொடங்கிய ஆய்வை மேலும் பல விஞ்ஞானிகள் தொடர்ந்தார்கள்.

அவர் பெற்ற சில விருதுகள்: சாந்தி ஸ்வரூப் பட்னாகர் விருது(1991), மற்றும் அண்டார்டிக் விருது(2000), டி.என் வாடியா பதக்கம்(2016).

சுதிப்தா கொல்கத்தாவிலுள்ள ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் நிலவியல் விஞ்ஞானத் துறையின் பேராசிரியராகவும் ஐ.என்.எஸ்.ஏவின் மூத்த விஞ்ஞானியாகவும் இருந்தார்.