Sulabaa

சுலபா

அழியாப்பேரும், மங்காப்புகழும், குறையா பணமும் அளவுக்கு மீறி இருந்தாலும், அது அளவுக்கு மீறி இருக்கும் காரணமே சுலபாவிற்கு சுலபத்தில் வாழ்க்கை மீது சலிப்பு தட்டிவிடுகிறது. எத்தனையோ இடையூறுகளைத் தாண்டி சம்பாதித்த திரையுலகப் புகழையும் பணத்தையும் விட்டு ஆன்மீகத்தை நாடிச்செல்லும் காரணம் என்ன என்பதை இந்தக் கதையின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

- நா. பார்த்தசாரதி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

அத்தியாயம் - 1

சுலபாவுக்குக் காரணமே புரியாமல், சலிப்பாகவும், எரிச்சலாகவும் இருந்தது. எல்லாப் புகழுரைகளும் வர்ணனைகளுமே பொய்யாகவும், புளுகுகளாகவும் தோன்றின.

தன்னுடைய காரியதரிசி கொண்டு வந்து கொட்டிய கடிதக் குவியல்களில் ஒன்றிரண்டை எடுத்துப் படித்ததுமே திகட்டியது. அலுப்பூட்டியது. குமட்டிக் கொண்டு வந்தது. ‘அழகுப் பெட்டகமே! ஆரணங்கே! பழகுதமிழே! பைங்கிளியே... உன்னை மணந்து கொள்ளத் துடிக்கிறேன்’ - என்று புலம்பியது முதற் கடிதம்.

‘வாழ்ந்தால் வசந்தம், படத்தில் கதாநாயகியாக வந்து கல்லூரி வகுப்பறையில் நீங்கள் நடித்திருக்கும் காட்சி ‘சுபர்ப்’. அந்தக் கல்லூரியில் நான் ஒரு மாணவனாக இல்லையே என்று ஏங்குகிறேன்.’ - என்று எழுதியிருந்தான் அடுத்த இரசிகன்.

ஏங்கவும், உருகவும், செய்யாத இயல்பான கடிதங்கள் மிக மிகக் குறைவாகவே இருந்தன. எல்லாக் கடிதங்களும் ஏங்கின அல்லது அவளுக்காக உருகின.

சினிமாவில் நடிக்க ஆரம்பித்த புதிதில் இப்படி நாலைந்து கடிதங்கள் தபாலில் கிடைத்தால் கூடப் போதை - புகழ் மயக்கம் - தலை சுற்றியது. இன்னும் எழுத மாட்டார்களா என்று எதிர்பார்க்கத் தோன்றியது அன்று. இன்றோ மரத்துப் போய்விட்டது. படிக்கப் படிக்க வெறுப்பூட்டியது.

முதலில் பீடித்தவனையே தொடர்ந்து பீடிப்பதாலோ என்னவோ புகழும் ஒரு தொற்று நோயாகவே இருப்பது புரிந்தது. ‘எபிடமிக்’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அப்படி ஒரே சமயத்தில் பல்லாயிரக் கணக்கான மக்களைப் பீடிக்கும் கொள்ளை நோய் வகைகளில் முதன்மையானது ‘புகழ்’ என்று அவள் எண்ணினாள். ஒருத்தரைப் பிடித்துப் போய் புகழ ஆரம்பித்தால் கும்பல் கும்பலாகச் சேர்ந்து கொண்டு வந்து புகழ்ந்து தீர்க்கிறார்கள். உதாசீனம் செய்யத் தொடங்கினாலும் அப்படித்தான். வெகுஜனங்களின் உடல் நிலையைப் பாதிக்காமலே அவர்களையும், அவர்களால் புகழப் படுகிறவர்களையும் அவ்வப்போது, பாதிக்கும் நோய்களில் புகழும் பழியும் முக்கியமானவையாயிருந்தன. ஓர் ஆடு போகிற திசையில் கண்களை மூடிக் கொண்டு பின்னால் போகும் ஆட்டு மந்தையைப் போல முதல் நபர் புகழ ஆரம்பித்த ஆளை மூச்சு முட்டும்படி புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்த ஆள் கிடைத்தவுடன் முந்திய ஆளை விட்டுவிடுகிறார்கள். புதிய ஆளைப் பிடித்துக் கொள்கிறார்கள். அப்புறம் அந்தப் புதிய ஆள் மாட்டிக் கொள்கிறான்.

அதிகப் பணமும், வசதிகளும், மரியாதையும் வருகிறவரை ஒவ்வொரு படியாகக் கால் ஊன்றி நடந்து நிதானமாக மேலே ஏற வேண்டியிருக்கிறது. பணம், வசதி, மரியாதை எல்லாம் வந்த பின், விநாடியில் ஐந்து மாடிகளுக்குத் தூக்கிக் கொண்டு போக முடிந்த அசுர வேகமுள்ள லிஃப்ட் கிடைத்து விடுகிறது. லிஃப்ட்டில் ஏறிய பின் மேலே போகச் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏறி நிற்க இடம் கிடைத்தால் போக விரும்பிய உயரத்திற்குப் போய்க் கொண்டே இருக்கிறது, லிஃப்ட். நாமாக நிறுத்த முயன்றாலொழிய அது தானாக நிற்பதில்லை; நிறுத்தப்படுவதுமில்லை.

வாழ்வில் கடந்த ஒரு டஜன் வருஷங்களாகப் ‘பிரேக்டவுன்’ ஆகாத ஒரு லிஃப்ட்டில் ‘சுலபா’ இருக்கிறாள். அதுபாட்டுக்கு மேலே மேலே போய்க் கொண்டே இருக்கிறது. நிற்கவில்லை. மேலே போவது சலிப்பூட்டி வெறுப்பூட்டி எங்காவது அந்தரத்தில் ‘நின்று தொலைத்தால் கூடத் தேவலையே’ என்று அவளே நினைக்கிற அளவுக்குப் போரடிக்கிற வேகத்தில் அது மேலே மேலே போய்க் கொண்டிருந்தது. நின்றாலும் பிடிப்பதில்லை, நிற்காமலே போய்க் கொண்டிருப்பதும் பிடிப்பதில்லை; வாழ்க்கையே வேடிக்கைதான். ஓடினால் நிற்க ஆசையாயிருக்கிறது. நின்றால் ஓட ஆசையாயிருக்கிறது. ஓடிக் கொண்டே நிற்க முடிவதில்லை. நின்று கொண்டே ஓட முடிவதில்லை. ஏதாவது ஒன்றைத்தான் செய்ய முடிகிறது. இரண்டும் செய்ய இயல்வதில்லை;

தலைதெறிக்கிற வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிற போது திடுதிப்பென்று நிற்க முயல்வது கூட ஆபத்தானது. வேகத்துக்கு ரோஷம் அதிகம். தன்னிலிருந்து விலகி ஐந்தாம் படையாகிறவனைத் தடுமாறிக் கீழே வீழ்த்திவிட்டுத்தான் அது மேலே நகரும்?

வேகத்திலிருந்து விலகி நின்று விட முயலும் போதெல்லாம் குமாரி சுலபா தடுமாறியிருக்கிறாள். தாகத்தால் தவித்து வந்தவருக்கு முதல் நாலைந்து மடக்குத் தண்ணீரைப் பருகுவது போல் தொடக்கத்தில் சில ஆண்டுகள் இந்தப் பணம், வசதிகள், புகழ் எல்லாமே பிடித்திருந்தன அவளுக்கு.

“தென்றலே! தேனே! என் கனவுகளில் எல்லாம் நீயே வருகிறாய்! உன்னைக் கனவுகளில் காணும் போதெல்லாம் அப்படியே வாரியணைத்துக் கண்ணாடிக் கன்னத்தில் ஓர் ‘இச்’ பதித்து...” என்று விடலைத் தனமாக எழுதும் நமைச்சல் எடுத்த ஓர் இளம் இரசிகனின் ‘ஏ’ ரகக் கடிதங்கள் கூட அவளுள் கிளுகிளுப்பை ஊட்டிக் கிளரச் செய்த காலங்கள் உண்டு. அந்த வேளைகளில் எல்லாம் லிஃப்ட்டில், காரில், விமானத்தில் படுவேகமாகப் போகிற ஓர் உல்லாச உணர்வை அவள் அடைந்திருக்கிறாள். மேலே போகிற வேகம் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

தன் அழகைப் புகழ்ந்து இப்படி எழுதியிருக்கிற அமெச்சூர் இரசிகர்களுக்குக் கையெழுத்துடன் தன் புகைப்படம் கூட அனுப்பியிருக்கிறாள். அது ஒரு காலம். இப்போது அப்படிப் படங்கள் அனுப்புவதற்கு அவசியமே இல்லை. எந்தப் பத்திரிகையைப் புரட்டினாலும் அவள் படங்கள் இருந்தன. அவள் படம் பிரசுரமாகாத இதழ் அபூர்வம் தான்.

தற்காலத் தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டுமில்லை, மலையாள, தெலுங்கு, கன்னடப் பத்திரிகைகளிலும் இந்திப் பத்திரிகைகளிலும் கூட அவள் படங்கள் வெளி வந்தன.

தெலுங்கு அவள் தாய்மொழி. தமிழ்நாடு அவள் பிழைக்க வந்து முன்னேறிய இடம். மலையாளத்திலும், கன்னடத்திலும் பேசி நடிக்கக் கற்றுக் கொண்டாள். இந்தியில் அவள் வாயசைத்தாள். அவளுக்காக வேறு யாரோ பேசினார்கள். அவளோடு ஹீரோவாக நடித்திருந்த சில நடிகர்கள் மார்க்கெட் இழந்து உட்கார்ந்து விட்டார்கள். அவளோ நித்ய கன்னியாக நிலைத்து நின்றாள். அவளுடைய ‘ரேட்’ உயர்ந்து கொண்டே போயிற்று. தன்னோடு ஹீரோவாக நடித்தவர்களின் மகன்களோடும், சிலரைப் பொறுத்தவரை பேரன்களோடும் கூட அவள் கதாநாயகியாக நடித்திருந்தாள். ஓடியாடிக் காதல் செய்திருந்தாள்.

படங்களில் எத்தனையோ பல நடிகர்களோடு அவள் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த சமயங்களில் அவளைப் பற்றியும் அந்தக் கதாநாயக நடிகர்களைப் பற்றியும் இணைத்துக் கிசுகிசுக்கள் வெளிவந்துள்ளன. ஆனால் கிசுகிசுக்களாகவே பிசுபிசுத்துப் போயினவே ஒழியச் செய்தியாகவோ, உண்மையாகவோ ஆனதே இல்லை.

‘அவர் இவளைக் காதலிக்கிறார் - விரைவில் திருமணத்தில் முடியலாம். இவள் அவரைக் காதலிப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் -’ என்றெல்லாம் கிசுகிசுக்கள் பிரசுரமாகி அவளுடைய கவர்ச்சியையும் மார்க்கெட்டையும் அதிகமாக்கின. வம்புகள் கூட விளம்பரம் ஆயின.

ஓர் உண்மை அவளுக்கு நன்றாகத் தெரியும். ஓர் இளம் நடிகைக்கு இலட்சக்கணக்கான இரசிகர்களும் பிரபலமும், கவர்ச்சியும் எல்லாம் திருமணமாகி ஓர் ஆண் பிள்ளையின் தாலிக் கயிற்றால் தொழுவத்தில் கட்டப்படும் வரைதான்.

ஒருத்தனது தாலிக் கயிற்றால் கட்டப்பட்ட பின் அவள் பலருடைய கனவுலகக் கன்னியாக இருக்க முடியாது. தாலி அவள் மாட்டுத் தொழுவத்தில் கட்டப்படுகின்ற மாட்டைப் போல வீட்டுத் தொழுவத்திலே கட்டிப் போட்டு விடவே பயன்படுகிறது. இவை எல்லாம் அவளது கருத்துக்களாக இருந்தன. ஆனால் நாளாக ஆக இக் கருத்துக்களில் சில முற்றிக் காம்பின் பிடி தளர்ந்து உதிர்ந்து விட்டன. சுற்றியுள்ள மனிதர்களின் பொய்கள், புனைவுகள், நடிப்புக்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் சுலபாவுக்குள்ளும் சில மாற்றங்கள் உண்டாயின. சிலவற்றில் பிடிவாதங்கள் தானே தளர்ந்தன. வேறு சிலவற்றில் பிடிப்புக்கள் ஏற்பட்டன. தொங்குகிறவன் ஒரு பிடியை விடுவதற்கு முன் வேறொன்றைப் பற்றிக் கொள்ளாமல் முந்திய பிடியை விட முடியாது. அப்படி விட்டால் கீழே விழுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

சுலபாவுக்கும் பழைய பிடிகளை விட நினைக்கும் போதே புதிய பிடிப்புக்களை யோசித்துத் தேட வேண்டியதாயிருந்தது. அப்படிப் புதியதைத் தேடாமல் பழையதை விட முடியவில்லை.

கோடீசுவரர்களாகிய சில தயாரிப்பாளர்கள் அவளை மணந்து கொள்ள ஆசை தெரிவித்தனர். அவர்களுக்கு ஏற்கெனவே மணமாகி இருந்தும் கூட முதல் மனைவியை விரோதித்துக் கொண்டு கூட இவளோடு இணையத் துடித்தனர். இவளது சொத்து - எதிர் கால வருமானம் எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு தங்கப் பறவையை அதன் பெறுமானத்தையும், விலைமதிப்பையும் கணித்து விட்டு அவர்கள் சிறைப்பிடிக்க ஆசைப்படுவது அவளுக்குப் புரிந்தது. வேறு சில நடிகர்கள், வருகிற பத்து ஆண்டுகளுக்குத் தங்களோடு நடிக்க வகையாக ஒரு கதாநாயகி அகப்பட்டாள் என்கிற நைப்பாசையில் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதன் மூலம் அல்லது கட்டாமலே அவளை மனைவியாக்கிக் கொள்ள முயன்று அவளிடம் தோற்றது தான் கண்டபலன். எல்லாருடைய நைப்பாசையும் தந்திரமும் அவளுக்குப் புரிந்தன. சுற்றிலும் ஒரே பொய்யும் புனை சுருட்டுமாக இருந்ததே ஒழிய நிஜம் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் தென்படவே இல்லை. வீடு வாசல்கள், தியேட்டர், என்றும் ரொக்கம் என்றும் அவளிடம் பயங்கரமான சொத்துச் சேர்ந்திருந்தது. தன்னை நெருங்குகிறவர்கள் அழகுக்காக நெருங்குகிறார்களா, சொத்துக்காக நெருங்குகிறார்களா என்ற பயம் சுலபாவுக்கு இருந்தது. சந்தேகங்களும் ஏற்பட்டன. எச்சரிக்கையும் ஏற்பட்டது.

அது பயமா, தற்காப்பா, என்று அவளுக்கே சமயா சமயங்களில் குழப்பமாக இருந்தது. புகழுரைகளாக வரும் கடிதங்களிலிருந்து நேரில் பேசுகிறவர்கள் வரை யாரையும், எதையும் நம்பி விட முடியாமல் இருந்தது. எதுவரை நிஜம், எதற்கு மேல் பொய் என்று தெரிவது சிரமமாயிருந்தது.

எதிர்ப்படும் ஒவ்வொரு புகழ்ச்சியிலும் ஓர் உள்நோக்கம் இருந்தது. அவளுக்கு அநுபவமும், பொறுப்பும் ஏறஏறப் புகழுரைகளை வேர்வையையும் அழுக்கையும் துடைத்தெறிவது போல் மேலாகத் துடைத்தெறியக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அது தவிர்க்க முடியாததாகிப் போயிருந்தது.

இளமை அநுபவங்கள் அவளுக்கு அதைக் கற்றுக் கொடுத்திருந்தன. புகழ்ந்து புகழ்ந்தே அவளைச் சீரழித்திருந்தார்கள் பலர். இன்று அது அவளுக்குப் புரிந்தது.

சிறு வயதில் அரும்பாக இருந்த போதே அவளைச் சினிமாவில் சேர்த்து விடுவதாகச் சென்னைக்கு அழைத்து வந்து அவளிடம் சொல்லாமலும், அவள் சம்மதத்தைப் பெறாமலும் அவளுக்குத் தெரியாமலுமே அவளை ஒரு விபசார விடுதியில் இருநூற்றைம்பது ரூபாய்க்கு விற்று விட்டுப் போனான் அவள் நம்பிய முதல் மனிதன். குண்டூரிலிருந்து அவள் பட்டினம் கிளம்பிய போது அவள் பெயர் சுப்பம்மா. அவளை ஆசை காட்டி அழைத்து வந்து சந்தையில் மாடு விற்பது போல் விற்று விட்டுப் போன குப்பைய ரெட்டியை அதன் பின் அவள் சந்திக்கவே முடியவில்லை.

அத்தியாயம் - 2

எந்த விடுதிக்கு அவளுக்குத் தெரியாமலே அவள் விற்கப்பட்டிருந்தாளோ அந்த விடுதியின் அழுக்கடைந்த நாள்பட்ட நாற்றமெடுத்த படுக்கையிலிருந்து அதிர்ஷ்டம் அவளைக் காப்பாற்றியது.

ஏதோ ஒரு பலவீனமான நிலையில் அங்கே அவளிடம் வந்த ஒரு தயாரிப்பாளர் சினிமாவுக்கான முகக்கட்டு அவளிடம் இருப்பதாகக் கண்டு பிடித்து அவளை அந்த நரகத்திலிருந்து விடுவித்துத் தமக்கு மட்டுமே உரிமையாக்கித் தனியாக ஒரு சிறிய வீட்டில் குடியமர்த்தினார். அவளை அவர் மட்டுமே அநுபவிக்க முடிந்தது.

முன்பு தசை வியாபார விடுதியில் இருந்தவரை எதுவும் அவளுக்கு என்று தனியாகவோ, சொந்தமாகவோ இருந்ததில்லை. அவளுடைய உடல் உட்படத்தான். அதுதான் அந்த விடுதி நடைமுறை.

அங்கே புடைவை, சோப்பு, சீப்பு, அலங்காரத்துக்கான கவரிங் அணிகலன்கள் எல்லாமே விடுதிக்குச் சொந்தம். மாலை வேளைகளில் தொழிலுக்கு அணிவகுத்து நிற்பதற்கு முன் அவற்றை அவரவர்கள் உபயோகிக்கலாம். கிராக்கிக்குத் தகுந்த மாதிரி எதிர்பார்க்கிற வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாதிரி யார் வேண்டுமானால் அவற்றை அணிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் அழுக்கடைந்த கிழிந்த கவர்ச்சியற்ற அவரவர்களுடைய சொந்த உடைகளைத்தான் அவர்கள் அணிந்து கொள்ள வேண்டும். இதுதான் அந்த விடுதியின் நடைமுறையாயிருந்தது. எல்லார்க்கும் எல்லாம் சொந்தம் - யாரும் எதையும், எவரையும் தனியாக உரிமை கொண்டாட முடியாது என்பது போல ஒருவகைப் பொது நிலைமைதான் அங்கே நிலவியது. அங்கிருந்து அவளைப் பிரித்துத் தமது தனியுடைமை ஆக்கிக் கொண்ட கிழட்டுத் தயாரிப்பாளர் ஒரு நாள் பின் மாலை வேளையில் யாரும் எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமான போது சுப்பம்மா என்கிற ‘சுலபா’வின் பொற்காலம் தொடங்கியது.

அவளை விடுதியிலிருந்து விடுவித்த போதே, ‘சுப்பம்மா’ என்கிற பழைய தேய்ந்து போன - வேலைக்காரிகளுக்கும், எடுபிடிகளுக்கும், பாத்திரம் தேய்ப்பவர்களுக்குமே உரியது போல ஒலிக்கும் பெயரை நீக்கிச் ‘சுலபா’ என்று சினிமாவுக்கே உரிய முறையில் புதுப் பெயரிட்டு ஞானஸ்நானம் செய்திருந்தார் தயாரிப்பாளர். ‘சுலபா’வைத் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும், சினிமாத் தொழிலுக்கு நிதியுதவி செய்பவர்களும் ‘சுலபமாக’ அணுக முடிந்தது. இது அவள் வெற்றிகளின் இரகசியம். இந்த ரிஷிமூலம், நதி மூலங்களை இப்போது யாரும் கேட்கத் தயாராயில்லை. ஆனால் அவள் வரலாற்றின் முதல் நுனியில் இப்படிச் சில ‘மூலக்காரணங்கல்’ இருந்தன என்பது மட்டும் உண்மை. இந்த மூலகாரணங்களால் அவள் வளர்ந்திருந்தாள்.

இவற்றால் அவள் எச்சரித்து வைக்கப்பட்டிருந்தாள் என்பதும், போதுமான அளவு விழிப்புடன் இருந்தாள் என்பதும் உண்மை. மனிதர்களைப் பற்றிய அவளது பால பாடங்களாக இவை உள்ளே நிரம்பியிருந்தன. புகழ், பழி, பேர், பெருமை, எல்லாமே பண வசதியைப் பொறுத்து அமையக் கூடிய சினிமா உலகில் அவள் பெற்றிருந்த அநுபவங்கள் அவளை எதையும் சமாளிக்கிற தயார் நிலையில் வைத்திருந்தன. அநுபவங்களே அவளுடைய பலமாயிருந்தன.

வாழ்க்கையில் அநுபவங்களை விடப் பெரிய ஆசிரியன் யாரும் இருக்க முடியாது. பள்ளிக் கூடங்களில் மழைக்கும் ஒதுங்கியிராத அவள் கற்றதெல்லாம் வாழ்க்கை அநுபவங்களிலிருந்துதான். வாழ்வின் அநுபவங்கள் உடனிருந்தே கற்றுக் கொடுப்பவை என்பதை அவள் நன்றாகப் புரிந்து கொண்டிருந்தாள். அநுபவங்களின் மூலம் பாடங்கள் பதிவதைப் போல வேறு எவற்றின் மூலமும் அத்தனை அழுத்தமாகப் பதிவதில்லை என்பதைச் சுலபா உணர்ந்திருந்தாள். தடுமாறி விழுந்த அநுபவங்கள் தான் மேற்கொண்டு தடுமாறி விழாமல் அவளைக் காப்பாற்றின என்று சொல்ல வேண்டும். விழுந்தவற்றிலேயிருந்து எழுவதற்கும் எழுந்தவற்றிலே இருந்து இனி விழாமல் இருப்பதற்கும் அவள் தெரிந்து கொண்டிருந்தாள்.

பரந்து விரிந்த இந்த உலகில் இப்போது அவளுக்கு உண்மையான உறவினர் என்று யாருமில்லை. தொழில் வசதிகளுக்காக வீட்டோடு நீண்ட நாட்களாக உடனிருக்கும் ஆயாக் கிழவி நரசம்மாவைத் தன் தாய் போல் படப்பிடிப்புக்களுக்கும், அவுட்டோர்களுக்கும் அழைத்துச் செல்லுவதுண்டு. நரசம்மாவைத் தவிரக் கடிதப் போக்குவரத்து - வரவு செலவு - கால்ஷீட் - ஷெட்யூல் விவரங்கள் குறித்த டைரி வைத்துக் கொள்ள ஒரு காரியதரிசிப் பெண்ணும் இருந்தாள். ‘கவிதா’ என்று அழகான பெயர் அவளுக்கு. பி.ஏ. பட்டதாரி. தன்னுடைய நம்பர் ஒன், நம்பர் டூ ஆகிய இரண்டு கணக்கு வழக்குகளையும் கூட இவனை நம்பிவிட்டிருந்தாள் சுலபா.

ஆனால் அதற்கும் காரணம் இருந்தது. கவிதாவின் தாய் மாமன் தான் சுலபாவின் ஆடிட்டர். அவளுடைய வரவு செலவு இன்கம்டாக்ஸ் - வெல்த்டாக்ஸ் விவகாரங்களை அவர் தான் பார்த்துக் கொண்டார்.

“வெளி ஆட்கள் யாரையும் வேலைக்கு வைத்துக் கொள்ளாதே! காலம் கெட்டுக் கிடக்கிறது! எதை எங்கே உளறி வைப்பான்கள் என்று தெரியாது! என் மருமகள், தங்கமான பெண். எந்தத் தகவலையும் மூச்சு விட மாட்டாள். எனக்கும் நம்பிக்கையானவள். உனக்கும் நம்பிக்கையானவள். வேலையில்லாமல் இருக்கிறாள், பிரியப்பட்டதைக் கொடு! வாங்கிக் கொள்வாள்” - என்று ஆடிட்டரே கவிதாவைக் கொண்டு வந்து விட்டிருந்தார். அவளைப் பற்றி அவர் சொன்னவை நூற்றுக்கு நூறு உண்மையாயிருந்தன. கவிதா மிகமிக அடக்கமாகவும் நம்பிக்கையாகவும் நடந்து கொண்டாள். நேரம் காலம் கணக்குப் பார்க்காமல் வேலை செய்தாள். வீட்டுக்குப் போவதிலேயே குறியாயில்லை. “கொஞ்சம் வேலை இருக்கிறது. உன் உதவி தேவைப்படுகிறது. இன்னிக்கு மட்டும் இங்கேயே சாப்பிட்டுவிட்டு என்னோடு தங்கிவிடேன்” என்று சுலபா சொல்லி வேண்டிக் கொள்கிற தினங்களில் பிகு பண்ணிக் கொள்ளாமல் அவளுடனேயே தங்கினாள். சம்பளத்துக்கு வேலை பார்ப்பவளைப் போலப் பழகாமல் குடும்பத்தில் ஒருத்தியைப் போலப் பழகிய காரணத்தினால் கவிதாவைச் சுலபாவுக்கு மிக மிகப் பிடித்திருந்தது. ஆனாலும் நரசம்மாவைக் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டிய இடங்களுக்குக் கவிதாவையும், கவிதாவைக் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டிய இடங்களுக்கு நரசம்மாவையும் கூப்பிட்டுக் கொண்டு போக அவள் முயலுவதே இல்லை. அதில் கவனமாயிருந்தாள்.

மிகச்சில சமயங்களில் மட்டுமே இரண்டு பேரையும் ஒரே இடத்திற்குக் கூப்பிட்டுக் கொண்டு போக நேரிடும். ஆனால் அப்படி இடங்களும், சந்தர்ப்பங்களும் மிகமிகக் குறைவு தான். மிக மிக அபூர்வம் தான்.

காரியதரிசி கவிதாவையும் நரசம்மாவையும் தவிர ஒரு சமையற்காரி, ஒரு தோட்டக்காரன், ஒரு வீட்டு வேலைக்காரி, ஒரு டிரைவர், ஒரு கூர்க்கா, ஆகியவர்கள் அந்த பங்களாவில் உண்டு. இரண்டு பசுமாடுகள், ஓர் அல்சேஷியன், நாலு பூனைகள், இவை அங்கிருந்த பிராணிகள்.

பங்களாத் தோட்டத்தின் ஒரு கோடியிலுள்ள சின்ன அவுட் ஹவுஸில் தோட்டக்காரனும் அவன் குடும்பமும் குடி இருந்தன. காலையில் பால் கறப்பதும், பசுமாடுகளைப் பராமரிப்பதும் கூட அவனிடமும் அவன் மனைவியிடமுமே விடப்பட்டிருந்தன. கூர்க்காவுக்கு வாசலில் கேட் அருகிலேயே ஒரு சிறிய அறை வசிப்பிடமாக அமைந்தது. தோட்டத்துக் குழாய், அவன் குளிக்கக் கொள்ளப் பயன்பட்டது. இருபத்தைந்து முப்பது மனை விஸ்தீரணமுள்ள பெரிய காம்பவுண்டில் கட்டிடம் இருந்த இடம் உள்ளடங்கிய இரண்டு மனை அளவு மட்டுமே. மற்றப் பகுதிகளில் எல்லாம் புல்வெளி, பூஞ்செடி கொடிகள், வாழை, மா, பலா முதலிய மரங்கள் என்று கிளி கொஞ்சும் சோலையாயிருந்தது. அந்தப் பங்களா. வெயிலே உள் நுழைய முடியாது.

தோட்டத்து, ‘லானில்’ எப்போதாவது வருஷப் பிறப்பு பொங்கல் என்று அவள் பத்திரிகைக்காரர்களை விருந்துக்கு அழைப்பதுண்டு. இப்போது அம்மாதிரிப் பத்திரிகைக்காரர்களை அழைத்து விருந்து வைத்துப் பரிசுப் பொருள்களைக் கொடுத்துப் பப்ளிஸிடி தேடும் ஆசை கூடக் கழன்று போய் விட்டது. புகழ் பெறுகிற வரை ஆதரித்து எழுதுவதற்காகப் பத்திரிகைக்காரர்களுக்கு விருந்து. புகழ் பெற்று உச்சிக்கு வந்ததும் வம்புகள் பண்ணாமலிருக்க, எதிர்த்து எழுதாமலிருக்க தொழிலையும் பெயரையும் பாதிக்கிற கிசுகிசுக்களை எழுதாமலிருக்க என்று எதிர்மறையாக ஒரு பாதுகாப்பு முயற்சி என்பதாகப் பத்திரிகைகளிடம் ஒரு கலைஞனுக்கு இருவகை ஈடுபாடுகள் இருப்பதுண்டு. அதுதான் வழக்கம்.

ஆனால் வரவர இப்போது கொஞ்ச நாளாக இருவகை ஈடுபாடுகளுமே அவளுக்கு இல்லை. ஏதோ ஒர் இழப்பில், ஏக்கத்தில் அடைய முடியாத எதையோ எண்ணித் தன் எஜமானி தவிப்பது போல் கவிதாவுக்குத் தோன்றியது.

அதைச் சுலபாவிடம் எப்படி விசாரிப்பது என்று தயங்கினாள். விசாரிப்பது நாசூக்காக இராததோடு அதிகப் பிரசங்கித்தனமாகி விடுமோ என்றும் பயமாக இருந்தது. விரக்தியும், சலிப்பும் கலையின் எதிரிகள் என்பது கவிதாவுக்குப் புரிந்திருந்தது. அதனால் தான் அவள் தன் எஜமானியைப் பற்றிக் கவலைப் பட்டாள்.

சுலபாவின் ஆடிட்டரும் தன் தாய் மாமனுமான ஆடிட்டர் கனகசபாபதியிடம் போய் இந்த நிலைமையைத் தெரிவித்து யோசனை கேட்டாள் கவிதா. “ஒரே இடம் ஒரே தொழில், ஒரே மாதிரி மூஞ்சிகளைப் பார்த்துப் ‘போர்டம்’ ஆகியிருக்கும். எங்கேயாவது ஃபாரின் டிரிப் அடிச்சிட்டு வரச் சொல்லி யோசனை சொல்லிப் பாரேன்” என்றார் அவர்.

“நான் சொல்லப் போய் ஒருவேளை எனக்கு ஃபாரின் டிரிப் போகணும்னு ஆசையோன்னு அவங்க தப்பா புரிஞ்சுக்கிட்டாங்கன்னா என்ன செய்யிறதுன்னுதான் பயமா இருக்கு மாமா!” - என்றாள் கவிதா.

“அப்போ நீ பேசாமே இரு! நானே ஒரு நாள் நானாத் தேடி வர்ற மாதிரி அவளைத் தேடி வரேன். அப்ப என் யோசனையாக நானே சொல்ற மாதிரி இதைச் சொல்றேன். நீயும் கூட இரு” - என்றார் கனகசபாபதி.

அவர் யோசனை கவிதாவுக்குப் பிடித்திருந்தது. “ஒரு மாசம் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஜப்பான் எல்லாம் சுத்திட்டு வான்னு’ யோசனை சொல்றேன் பாரு! உடனே சரீன்னுடுவா” - என்றார் அவர்.

சொன்னபடி அவர் சுலபாவைத் தேடி வந்தார். பேச்சு வாக்கில் தம்முடைய யோசனையைச் சொன்னார். உற்சாகமாக விவரமாக வெளிநாட்டுப் பயணத்தை வர்ணித்தார்.

அத்தியாயம் - 3

கனகசபாபதி சொல்லிய யோசனையைக் கேட்டுச் சுலபா சிரித்தாள். உடன் இருந்து அடக்கமாக நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்த காரியதரிசி கவிதாவுக்கு அந்தச் சிரிப்பைக் கண்டு அவநம்பிக்கை தான் ஏற்பட்டது. தன் எஜமானி அம்மாளின் ஒவ்வொரு சலனத்தையும் பதவுரை பொழிப்புரை எழுதி அர்த்தப்படுத்தி விட அவளால் முடியும். உதடு அசையாமல் - இதழ்கள் பிரியாமல் புன்னகை புரிந்தால் இன்ன அர்த்தம், வாய்விட்டுச் சிரித்தால் இன்ன அர்த்தம், முகத்தைச் சீரியஸ்ஸாக வைத்துக் கொண்டு பதில் சொல்லாமலே யோசித்தால் இன்ன அர்த்தம், “பார்க்கலாம்” என்று ஒரு வார்த்தை மட்டும் சொன்னால் இன்ன அர்த்தம், “அவசியம் செஞ்சுட வேண்டியதுதான்”- என்று கூறி விட்டு அமுத்தலாக இருந்தால் இன்ன அர்த்தம் என்பதை எல்லாம் கூடவே இருந்து நன்றாக ஸ்டடி பண்ணியிருந்தாள் கவிதா.

‘இவள் படங்களில் நடிப்பதை உணர்ச்சிக் குவியல், நடிப்பின் சிகரம் என்றெல்லாம் கொண்டாடுகிறார்களே, அதை விடப் பிரமாதமாக வாழ்வில் அல்லவா நடிக்கிறாள்? நடிக்கிற போது நடிப்பதை விட அதிகமாகவும் ஆழமாகவும் இவள் நடிப்பது நடிக்காத வேளைகளில்தான்’ - என்று கவிதாவுக்குள் ஓர் உணர்வு ஏற்பட்டிருந்தது, அதுதான் உண்மை என்பதும் அவளுக்குள் உறுதிப்பட்டிருந்தது.

‘இவள் மனம் இந்த வயசிலேயே ஆழம் காண முடியாத ஒரு சமுத்திரம் மாதிரி இருக்கே? அந்தச் சமுத்திரத்திலே எங்கே நல்முத்துச் சிப்பிகளும் வலம்புரிச் சங்கும் பவழமும், இருக்கின்றன, எங்கே ஆபத்தான சுறாமீன்களும், திமிங்கிலங்களும், கடற் சிலந்தியும் இருக்கின்றன என்பதை எல்லாம் பிரித்துக் கண்டு பிடிக்க முடியாமலிருந்தது. எப்போது எது கிடைக்கும் என்பதும் புதிராகவே இருந்தது.

அதனால்தான் சுலபா சிரித்ததுமே கவிதா யோசித்தாள், சிரித்ததோடு நின்று விடாமல் சுலபாவே பதிலும் சொன்னாள்:

“வெளி நாட்டுக்குப் போயிட்டுவான்னு நீங்க சுலபமாச் சொல்லிட்டிங்க ஆடிட்டர் சார்! கையிலே இருக்கிற ‘ஷெட்யூலை’ எல்லாம் முடிச்சுக் குடுக்காமல் நான் கிளம்பினால் இந்தப் புரொட்யூஸர்ஸ் என்னைப் போக விட்டுருவாங்கன்னா நெனைக்கிறீங்க...?”

“அவங்க விடறாங்களா, இல்லியாங்கிறது முக்கியமில்லேம்மா! நாம போகணும்னு நினைக்கிறமா இல்லியாங்கிறதுதான் முக்கியம். புரொடக்ஷன் வேலை நடந்துக்கிட்டிருக்கிறப்பவே நடுவிலே உன் உடம்புக்குச் சுகமில்லாமப் போனா என்ன பண்ணுவே?”

“உடம்புக்குச் சுகமில்லாமே ஒய்வு எடுத்துக்கிறேன்னு சொல்றதும் உல்லாசப் பயணம் போறேன்னு சொல்றதும் ஒண்ணாயிடுமா?”

“நீ சொல்றது நியாயந்தான் சுலபா! உடம்புக்குச் சுகமில்லேன்னா அவங்களே மேற்கொண்டு எதுவும் கேட்காமே விட்டுடுவாங்க... ஃபாரின் ட்ரிப் போறேன்னா அப்பிடி விட மாட்டாங்க...”

“அவனவன் கோடிக் கணக்கிலே இன்வெஸ்ட் பண்ணிட்டுக் காத்திருக்கான், என்னிக்கிடா புரொடக்ஷனை முடிச்சு, ரிலீஸ் டேட் போட்டு விளம்பரம் பண்ணலாம்னு காத்துக்கிட்டிருக்கிறப்ப நீங்க திடுதிப்னு ஃபாரின் போறேன்னான எப்பிடி இருக்கும்? முன்பணம் குடுத்திட்டு வெயிட் பண்ற, டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் வேற பிடுங்கித் தின்னுடுவாங்க... இதெல்லாம் நாமே கொஞ்சம் யோசனை பண்ண முடியுமே?”

“நீ சொல்றதெல்லாம் நூத்துக்குநூறு சரிதான்! அலை ஓய்ந்து நீராட முடியாது. இத்தனைக்கும் நடுவிலே என்னவாவது சாக்குப் போக்குச் சொல்லிப் பிரயாணம் போயிட்டு வர வேண்டியதுதான். எதாவது மெடிகல் ட்ரீட்மெண்ட் அது இதுன்னு புளுக வேண்டியதுதான்.”

“ஒரு நடிகனோ நடிகையோ எக்காரணத்தை முன்னிட்டும் பொய்யாகக் கூடத் தனக்கு நோய் வரும், தான் மருத்துவச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது மாதிரிச் செய்திகளைப் பரப்பவே கூடாது. அது ‘ஆண்டி செண்டிமெண்ட்ஸ்’ விவகாரம். கவர்ச்சியை உடனே பாதிக்கும். தன்னுடைய அபிமான ஹீரோ அல்லது ஹீரோயின் உடல் நலம் கெட்டு மருந்து சாப்பிட நேரிடும் அல்லது சிகிச்சைக்குப் போக நேரிடும் என்பது போன்ற கற்பனையின் சாயல் கூட விசிறியின் மனத்தில் விழக் கூடாது.”

“உன்னுடைய லெளகீக ஞானம் பிரமாதம் சுலபா! நீ சொல்றது தான் சரியான ஸைகாலஜி. உடல் நலக் குறைவுன்னு சொல்லி வெளிநாடு போக முடியாது. கூடாது.”

“ஒரே ஒரு வழிதான் இருக்கு! இப்போ நான் நடிச்சிட்டிருக்கிற புரொடக்ஷன்ஸிலேயே ஏதாவது ரெண்டொண்ணுலே ஃபாரின் லொக்கேஷனை வர்ர மாதிரிப் பண்ணுங்கன்னு யோசனை சொல்லி நமக்கும் ஒரு பைசாச் செலவு இல்லாமே அவங்க காசிலேயே ஊர் சுத்திப் பார்க்கலாம்.”

“திடீர்னு கதையை அப்பிடி மாத்த முடியுமா சுலபா?”

“நம்ப சினிமாவில் எப்பிடி வேணும்னலும் எப்பவேணும்னாலும் மாத்த முடிஞ்ச ஒரே விஷயம் கதைதான் சார்! நம்ம இஷ்டத்துக்குப் பண்ணிக்கலாம்.”

“அப்படீன்னா ஒரு சினிமாக் கதைங்கிறது குடுகுடுப்பைக்காரன் சட்டை மாதிரி ஒட்டுப் போட்ட துணியா ஆயிடாதா?”

“ஏற்கெனவே சினிமாக் கதாசிரியருங்களே அப்பிடித்தான் சட்டையைத் தைச்சு எடுத்திட்டு வந்திருப்பாங்க! அதுலே இன்னும் ரெண்டு ஒட்டுக் கூடப் போடச் சொல்லி நாம சொன்னக் கேட்டுப்பாங்க...”

“எகிறிக்கிட்டு எதிர்த்து நின்னு மாட்டேன் அது இதுன்னு அடம் பிடிக்க மாட்டாங்களா?”

“ஊஹூம்! மாட்டவே மாட்டாங்க! ஹீரோ, ஹீரோயின், காமிராமேன், டைரக்டர் இவங்கள்ளே யாராவது அடம் பிடிச்சால்தான் எடுக்கும். கதாசிரியரும், பாட்டு எழுதறவங்களும் அடிம்பிடிச்சா அவங்களையே கழட்டி வுட்டுருவாங்க. அடுத்த படத்துக்குச் சான்ஸ் கிடைக்காது. ஃப்ளெக்ஸிபிளா இருந்தால் தான் பிழைக்கலாம். அவங்களுக்கும் அதெல்லாம் தெரியும். எத்தனையோ நடிகைங்க “வசனகர்த்தா சார்! எனக்கு ல, ள, ழ, வாயிலே நுழையாது. தயவு செய்து இந்த எழுத்துங்க மாறி மாறி வர்ரமாதிரி டயலாக் வேணும்”னு கேட்டு மாத்திக்கிட்டிருக்காங்களே...?”

“‘என் வாளைச் சுழற்றி உன் தலையைச் சீவி எறிவேனடா பாவிப் பயலே’-என்பதில் வாள், சுழற்றி, தலை என்று மூன்று ஒலிகளும் வருகின்றன. இதை யங் சூப்பர்ஸ்டார் பிரதாப் காந்த் பேசினல் எப்படி இருக்கும் சுலபா?”

“‘என் வாலைச் சுளற்றி உன் தளையைச் சீவி எறிவேனடா பாவிப் பயளே!’ என்றுதான் பிரதாப் காந்தால் பேச முடியும். எனவே இந்த வசனம் அப்படியே பேசப்பட்டால் பிரதாப் காந்துக்கு ‘அத்தனை நீளவால்’ எப்போது முளைத்தது என்ற சந்தேகம் கேட்கிறவர்களுக்கு உண்டாகி விடும். இதைத் தவிர்க்க ஒரே வழி வசனத்தை மாற்றுவதுதான் சார்!”

“வசனத்தை மாற்றினால் கதை மாறாதா?”

“அதான் முன்னேயே சொன்னேனே; சூப்பர் ஸ்டாருங்க அப்ஜெக்ட் பண்ணினா வசனம், கதை எல்லாமே மாறியாகணும். இல்லாட்டிக் கதாசிரியரையே மாத்திப் பிடுவாங்க...”

“அப்போ கதையிலே அமெரிக்கா ஜப்பான்னு லொக்கேஷன் வர்ர மாதிரிப் பண்ணியாவது ஒரு ஃபாரின் டிரிப் அடிச்சிட்டு வரப் பாரேன்.”

“நான் மட்டுமில்லே! எனக்கு ஒரு பெர்ஸனல் அஸிஸ்டெண்ட் வேணும்னு புரொட்யூஸரை வற்புறுத்தி அவங்க செலவிலேயே கவிதாவையும் கூட்டிக்கிட்டுப் போயிட்டு வந்துடலாம்.”

“நல்ல ஐடியா! உடனே முடிவு செய்து போயிட்டு வாங்க! மனசும் தெம்பா ஃப்ரஷ்ஷா ஆகும். சலிப்பு நீங்க அதுதான் சரியான வழி.”

“இன்னிக்கி யாராவது புரொட்யூஸ்ருங்க வருவாங்க, பேசிப் பார்க்கிறேன். அநேகமாக நான் சொன்னாத் தட்டிச் சொல்லமாட்டாங்க” - என்று பதில் சொல்லிவிட்டுத் தன் காரியதரிசி கவிதாவின் பக்கம் திரும்பி, “ஞாபகம் வச்சிக்கோ கவிதா! இன்னிக்கிக் கால்ஷீட் - யாராவது புரொட்யூஸர் தேடி வருவாங்க. அப்போ இதை ஞாபகப்படுத்து” - என்றாள். கவிதாவும் சரி என்று தலையை அசைத்தாள். ஆடிட்டர் கனக சபாபதி திருப்தியாக விடைபெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார். ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து கறுப்பில் வரவேண்டிய ரொக்கம் வராததால் அவருடைய தயாரிப்பில் அன்றைய கால்ஷீட்டுக்குப் போவதில்லை என முடிவு செய்து பிடிவாத மாக வீட்டிலிருந்தாள் சுலபா.

சூட்சுமம் அவளுக்குத் தெரியும். இது ஒரு டெக்னிக். காமிரா, ஸ்டுடியோ, புரொடக்ஷன், யூனிட் எல்லாம் தயார்ப் பண்ணி நிறுத்திய பின் ஆர்ட்டிஸ்ட் வரவில்லை என்றால் மற்ற ஏற்பாடுகள் வீனாகிவிடும். எங்கேயாவது கொள்ளை வட்டிக்குக் கைமாற்று ஏற்பாடு செய்தாவது ரொக்கத்தை எடுத்துக் கொண்டு வீடு தேடி வருவார்கள். அதற்கு முன் போய்விடக் கூடாது.

சுலபா இப்படி நாட்களில் நரசம்மாவை டெலிஃபோன் அருகே உட்கார்த்தி வைத்து விடுவாள். அவள் டெலிஃபோனே எடுத்து, “அவங்களுக்கு உடம்பு நல்லா இல்லே! இன்னிக்கிக் ‘கால்ஷீட்’ முடியாதுன்னு சொல்லச் சொல்லிட்டாங்க” என்று கடுமையான குரலில் தமிழும் தெலுங்கும் கலந்த கொச்சையில் கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி ஒரே பதிலைச் சொல்லுவாள் நரசம்மா. எரிச்சலூட்டுகிற மாதிரிச் சொல்லுவாள்.

சொல்லப்படுகிற அதிகாரப்பூர்வமான பதில் இதுதான் என்றாலும் தயாரிப்பாளர்களுக்கு உண்மை புரியும். நம்பர் டூ அக்கவுண்டில் அந்த ஷெடயூலின்போது ரொக்கமாகத் தருவதாய் ஒப்புக் கொண்டிருந்த தொகையை நேரில் போய்த் தந்து விட்டால் காரியம் முடியும் எனபதை அவர்கள் பழக்கமான விதத்தில் அறிவார்கள். இந்த மாதிரி வருமானத்தைப் படம் முடிந்து ரிலீஸான பின் வாங்க முடியாது. நம்பர் ஒன் அக்கவுணட் பணத்தையாவது காண்ட்ராக்ட் அது இது எனறு ஆதாரங்களை வைத்து வழக்குத் தொடுத்து வாங்கி விடலாம். கறுப்பில் பேசியதை அவ்வப்போது கால்ஷீட்டுக்கு முன்னால் ரொக்கமாக வாங்கினால் ஒழிய ஏமாற்றி விடுவார்கள். இதை எல்லாம் தங்கமாகவும், வைரமாகவும் மாற்றி விடுவது சுலபாவின் வழக்கம். வர வர இப்படிப் பணத்தை என்ன செய்வதென்று முழிக்க வேண்டியிருந்தது. நிலமாக வாங்கிப் போட்டாயிற்று. நகைகளாக வாங்கிப் போட்டாயிற்று. பங்களாவிற்குள் பளிங்காக இழைத்தும் அழகுபடுத்தியாயிற்று. ‘இண்டீரியர் டெகரேஷன்’ என்ற பேரில படுக்கையறை பாத்ரூம், டைனிங் ஹால் வரவேற்புக் கூடங்களை அழகு செய்வதல் பல லட்சங்களை வருஷா வருஷம் செலவிட்டும் தீராமல் மேலே மேலே வந்து கொண்டே இருந்தது. அவளுடைய அலுப்புக்கு இது ஒரு காரணம். ‘இதெல்லாம் எதற் காக, யாருக்காக விட்டுவிட்டுப் போகப் போகிறோம்?’ என்ற கேள்வி அந்தரங்கமாக உள்ளே எழும்போது மனத்தை ஏதோ இறுக்கிப் பிழிந்தது. கையிலிருக்கும் படங்கள் முடிந்ததும் ஓர் அறிக்கை விட்டு விட்டு நடிப்பதையே நிறுத்தி விடலாமா என்று கூட எண்ணினாள்.

வெறும் முப்பது வயதிற்குள் உடம்பு கொஞ்சும் இளமையைக் காட்டினாலும் மனம் எண்பது வயது முதுமையையும் கவலையையும் உணர்ந்தது. விரக்தியை அடைந்தது. ஆடிட்டரோடு கலந்து பேசி இந்தச் சொத்தை எல்லாம் ஒரு டிரஸ்ட் ஆகப் பண்ணி நல்ல காரியங்களுக்காக ஒதுக்கி விட்டு விட்டு - எங்காவது பெண்களுக்கான சேவா சிரமத்தில் சேர்ந்து விடலாமா என்று கூட அவளுக்குச் சமய சமயங்களில் தோன்றியிருக்கிறது உண்டு.

செலவழிக்கப் பணமில்லாமல் கோடிக்கணக்கான ஏழைகள் ஒருபுறமும், கோடிக்கணக்கில் வந்து குவிந்துகொண்டே இருக்கும் பணத்தை எப்படிச் செலவழிப்பதென்று தெரியாமல் தன்னைப் போல் தவிக்கும் சிலருமாக வாழ்க்கை முரண்படுகிற எல்லைகளை அவள் சிந்தித்தாள். மனம் மேலும் குழம்பியது.

“எஸ்.பி.எஸ். பார்க்க வந்திருக்கிறார் அம்மா! வரச் சொல்லட்டுமா?’’- கவிதாவின் குரல் சுலபாவை இந்த உலகிற்குக் கொண்டு வந்தது. எஸ்.பி.எஸ். தான் அவள் எதிர்பார்த்துக் காத்திருந்த புரொட்யூஸர். நிச்சயம் பணத்தோடுதான் வந்திருப்பார். ஸ்டுடியோவுக்குப் புறப்பட வேண்டியிருக்கும். கவிதா சுலபாவின் காதருகே வந்து, “அந்த ‘ஃபாரின் டிரிப்’ விஷயம் ஞாபகப்படுத்தச் சொன்னிங்களே?” என்று நினைவூட்டினாள்.

அத்தியாயம் - 4

தயாரிப்பாளர் எஸ்.பி.எஸ். கையில் ஒரு அழகான மஞ்சள் நிற ஃப்ரீப் கேஸுடன் நரி நுழைவது போல் பம்மிப் பம்மி உள்ளே நுழைந்தார். அவர் வந்து இறங்கிய மழமழ என்று பெயிண்ட் மின்னிப் பளபளக்கிற ஏ.சி. டீலக்ஸ் டயோட்டா போர்ட்டிகோவில் கம்பீரமாக நின்றது. மிகுந்த தயக்கத்தோடு பங்களா முன்வராந்தாவில் இருந்த சோபாக்களில் ஒன்றில் உட்கார்ந்த அவரை, “உள்ளே வாங்க! அம்மா கூப்பிடறாங்க” - என்று கவிதா வந்து உள்ளே அழைத்தாள். கூலிங்கிளாஸைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் சென்ட் வாசனையை அந்தப் பகுதி முழுவதும் படரவிட்ட கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண் டார் எஸ்.பி.எஸ். என்கிற எஸ்.பி.சிவதாணு. அசடு வழியக் கவிதாவைப் பார்த்து ஒரு தரம் சிரித்தார். பின்பு அலுத்துக் கொள்ள ஆரம்பித்தார்:

“பத்து மணிக்கு வரேன்னிருந்தேன்! கொஞ்சம் நேரமாயிடிச்சு... செட்ல எல்லாரும் ரெடியா இருக்காங்க... அம்மா அழுக்கு நோட்டு வாங்க மாட்டாங்க... அழுக்குன்னலே அவங்களுக்கு அலர்ஜி... அதுனாலே எல்லாத்தையும் சலவைநோட்டா மாத்த நேரமாயிடிச்சு... புது நோட்டு அவசரமா மாத்தணும்னு நூறு ரூபாய்க்கு நாலணு ‘வட்டம்’ கேட்கிறான். கமிஷன் வெட்டாமச் சலவை நோட்டு வாங்க முடியலே. சாராயக் கடைங்க வந்து போனலும் போச்சு... மார்க்கெட்ல அழுக்கு நோட்டுச் செலாவணி ஒரேயடியா அதிகரிச்சுப் போச்சு...”

“பரவாயில்லே! வாங்க சார்! அம்மா உங்களை எதிர்பார்த்து ரெடியா இருக்காங்க... உடனே கிளம்பிறலாம்.”

எஸ்.பி.எஸ். அம்பாள் சந்நிதிக்குள் நுழையும் பரம பக்தனைப் போல் செருப்புக்களை அறை முகப்பிலேயே கழற்றி விட்டுப் பயபக்தியோடு கவிதாவைப் பின் தொடர்ந்து குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்த ‘சுலபா’வின் தனியறைக்குள் நுழைந்தார்.

“வாங்க எஸ்.பி.எஸ்! இந்தா கவிதா! அவருக்குக் குடிக்க எதாச்சும் ஜூஸ் குடு! பாவம்! எங்கெங்கியோ அலைஞ்சு களைச்சுப் போய் வந்திருக்கார்” - என்று சுலபா அவரை வரவேற்றாள்.

“பணம் நேத்தே ரெடிங்க! உங்களுக்குப் பிடிச்ச மாதிரிச் சலவை நோட்டா மாத்தறதுக்குத் தான் ஒரே அலைச்சல். பெரிய ஐம்பது கொண்டாந்திருக்கேன். சலவை நோட்டு வாங்கக் கமிஷன் மட்டுமே சுளையா நூத்தி இருவத்தஞ்சு ரூபா போயிரிச்சும்மா.”

“இந்தாங்க! புறப்படறத்துக்கு முன்னடி எண்ணிக்குங்க” - என்று நோட்டுக் கட்டுக்களை ஒவ்வொன்றாக ஃப்ரீப் கேஸிலிருந்து எடுத்து டீப்பாயில் வைத்தார் எஸ்.பி.எஸ். புத்தம் புதிய பளீர் என்ற கட்டுக்கள்.

தனித்தனி ஐயாயிரம் ஐயாயிரமாகப் பத்துக் கட்டுக்கள். செண்ட் தெளித்த கர்சீப்பும் ஃப்ரீப் கேஸில் கூட வைக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும். வாசனை ஏ.சி. அறை முழுவதும் ஜமாய்த்தது. தூக்கி அடித்தது.

“நம்ம எஸ்.பி.எஸ். கை பட்டால் ரூபாய் நோட்டுக் கூட ஜம்முன்னு மணக்குது.”

சிரித்தபடி சுலபா இப்படிச் சொன்னதில் எஸ்.பி.எஸ். உச்சி குளிர்ந்து போனார்.

“எல்லாம் உங்க லட்சுமி கடாக்ஷம் தான் அம்மா! பத்திரமா எண்ணி எடுத்து வைக்கச் சொல்லுங்க... நாம புறப்படஇம்! டயமாச்சு...”

“எண்றதாவது ஒண்ணாவது... எஸ்.பி.எஸ். சொன்னால் சரியாதான் இருக்கும். அப்படியே எடுத்து லாக்கர்லே வைடி கவிதா.”

“மத்தியானம் லஞ்சுக்கு நீங்க இங்கே வரவேணாம்! உங்களுக்கும் சேர்த்து எங்க வீட்டிலேருந்தே வந்துடுது...”

“அது பரவாயில்லே எஸ்.பி.எஸ்! உங்ககிட்ட வேற ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்... மறந்திடிச்சே...?...ஆங்... இப்ப நினைவு வருது. நம்ம புரொடக்ஷன் ஒண்ணுலே ஏதாவது லண்டன், பாரிஸ், டோக்கியோன்னு லொக்கேஷன் வர்ர மாதிரிப் பண்ணுங்களேன். படம் ஹிட் ஆவும், ஜனங்க திரும்பத் திரும்ப மகாபலிபுரத்தையும், பிருந்தாவன் கார்டன்ஸையும் பார்த்துப் பார்த்துச் சலிச்சுப் போயிட்டாங்க...”

“ரியலி... நான் எப்ப வேணா ரெடிங்கம்மா! உள்ளூர்லியே உங்க கால்ஷீட் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு... தவிக்கிறேன். பிஸியா இருக்கிற உங்களைப் போய் ஃபாரின் கிளம்புங்கன்ன என்ன சொல்லுவீங்களோன்னு பயந்துக் கிட்டில்லே நான் ஃபாரினே வராமப் பார்த்துக் கிட்டிருக்கேன்.”

“உங்க பயம் சரியில்லே! நான் கொஞ்சம் ஃப்ரீயா வெளியிலே சுத்தலாம்னு பார்க்கிறேன். லொக்கேஷன் முடிவு பண்ணி ஃபாரின் எக்ஸேன்ஜ் எல்லாம் தாராளமா அரேன்ஜ் பண்ணுங்க. போயிட்டு வரலாம்.”

“சரி ஸெட்ல லஞ்ச் டயத்திலே இதைப் பத்தி மேலே பேசுவோம். இப்பக் கிளம்புங்க. போகலாம்! காத்துக்கிட்டி ருப்பாங்க.”

காரியதரிசி கவிதா மேக்கப் பெட்டி முதலியவற்றுடன் உடன் கிளம்பச் சுலபா புறப்பட்டாள். கார் மோகினி ஸ்டுடியோ போகிற வரை மறுபடி ஃபாரின் லொக்கேஷன் பற்றிய உரையாடல்களே தொடர்ந்தன. சுலபா பிரவேசித்தவுடன் செட் களை கட்டியது, தயாரிப்பாளரின் கவலை எல்லாம் அன்றைய செட் வாடகை, காமிரா வாடகை, யூனிட் செலவுகள் வீணாகிவிடாமல் வேலை நடந்து முடிய வேண்டுமே என்பதுதான்.

அது தவிரவும் ஊர்வசி பட்டத்தை இரண்டு முறை பெற்றவளும் பேரைச் சொன்னலே ஏரியா விற்பனையில் போட்டி வரக் கூடியவளுமான பேரழகு நடிகை சுலபா மேல் எஸ்.பி.எஸ்.ஸுக்கு ஒரு மயக்கமே உண்டு. அவள் ‘நீ தோப்புக் கரணம் போடு நான் எண்ணிக் கொள்கிறேன்?’- என்றால் கூட உடனே இடுப்பில் மேலாடையைக் கட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போடத் தொடங்கிவிடுவார். அவளை வைத்து அவர் தயாரிக்க இருந்த படங்களின் மூலமே அவர் கோடீசுவரராக முடியும் என்பதனால் தொடர்ந்து அவளை, ‘நல்ல மூடில்’ வைத்துக் கொள்வதற்கு எதுவும் செய்யத் தயாராயிருந்தார் அவர் என்பதுதான் உண்மை.

நடுப்பகல் ஒரு மணி வரை ஷூட்டிங் நடந்து முடிந்ததும் லஞ்ச் இண்டர்வெல் வந்தது. எஸ்.பி.எஸ். ஹீரோ குமார விஜயன், சுலபா, எஸ்.பி.எஸ்.ஸின் புரொடக்ஷன் மேனேஜர் எல்லாரும் கூட்டமாக இருந்தனர்.

“இந்தப்பா தனபால்! அந்தக் கதை வசனகர்த்தா கந்தசாமியைக் கூப்பிடு சொல்றேன்” - என்று தன்னுடைய புரொடக்ஷன் மேனேஜரைக் கூப்பிட்டுச் சொன்னார். தனபால் உடனே உள்ளே செட்டுக்கு ஒடினான்.

வலது காதில் சொருகிய நீளமான பால்பாயிண்ட் பேணாவும் கையில் ஒரு கத்தை ஸ்கிரிப்ட்டுமாக ஒரு ரெட்டை நாடி சரீர ஆவி வந்தார். அதிக உயரமுமில்லை, குட்டையுமில்லை, குரல் மட்டும் வெண்கலக் கடையில் யானை புகுந்த மாதிரி இருந்தது. நீண்ட நாட்களாக ஏதோ ஓர் இயக்கப் பேச்சாளராயிருந்து அப்புறம் வசனம் எழுத வந்தவர் போன்ற சாயல் தெரிந்தது. எஸ்.பி.எஸ்.ஸிடம் மரியாதையாக இருக்கிற பவ்யம் தென்பட்டது. அவரைப் பார்த்ததும் எஸ்.பி.எஸ். மிகவும் உரிமையாக, “கந்தசாமி! உங்க கிட்டி ஒரு விஷயம்... நம்ம கதையிலே எப்பிடியாச்சும் லண்டன், நியூயார்க், பாரிஸ், டோக்கியோ, இது மாதிரி ஃபாரின் லொக்கேஷன் வரணும்னு டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஆசைப்படறாங்க. ஏதாவது வழிபண்ணுங்களேன்” என்றார்.

இதைக் கேட்டுக் கதை வசனகர்த்தா கந்தசாமி ஓரிரு கணங்கள் விசனகர்த்தாவாக மாறினார்.

“அது எப்பிடீங்க? கதையோ அசல் கிராமியக்கதை! நிறைய ரூரல் மாஸ் அப்பீல் வேணும். ஊர், ஊரா நூறுநான் ஒடணும். சின்னச் சின்ன ஊர்லே கூடப் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகணும்னீங்க. அதுனாலே படுகிராமீயக் கதையா எடுக்க ஆரம்பிச்சோம். இப்பத் திடீர்னு பாரிஸ், லண்டன் வரணும்னு எப்பிடி...?”

“ஏன்யா? கிராமீயக் கதா நாயகன் லண்டன், பாரிஸ் எல்லாம் போகக் கூடாதா என்ன?”

“போகலாங்க... ஆனாக் கதை இடம் குடுக்கணுமே? பாதி எடுத்தாச்சே.”

“எடுத்தா என்னய்யா? ‘மாட்டுக்கார மன்னாரு’ன்னு பேர் வைக்கிறதா இருந்தோம். இப்போ ‘உலகம் சுற்றிய உழவன்’னு வச்சிட்டுப் போறோம்.”

“ஏகமாச் செலவழிச்சு ‘மாட்டுக்கார மன்னாரு - மக்களைப் பார்த்துச் சொன்னரு - மக்கள் எல்லாம் அதிசயிச்சு நின்னரு’ - ன்னு டைட்டில் ‘சாங்’ ஒன்ணு ரிக்கார்ப் பண்ணியிருக்கமே...?”

“சாங் பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டுமே! இல்லாட்டி வேற படத்துக்கு யூஸ் பண்ணிக்கலாம். விட்டாலும் விட்டிரலாம்.”

“அது கஷ்டங்க... இப்ப இருக்கிற புரொடக்ஷன் காஸ்ட்லே ஒரு பாட்டுக்கு மட்டும் முப்பதாயிர ரூபாய்க்கு மேலே செலவாகுதுங்க... படத்திலே நாலு பாட்டுன்ன அதுவே கிட்டத்தட்ட ஒண்ணரை லட்சம் முழுங்கிடுது” என்று புரொடிக்ஷன் மானேஜர் தனபால் குறுக்கிட்டான்.

எஸ்.பி.எஸ். விடவில்லை. “தொடர்ந்து படம் எடுக்கிறோம். பாட்டை எதிலயாவது சேர்த்து விட்டுறலாம். மத்த ஆஸ்பெக்ட்டைப் பத்தி யோசியுங்க” என்றார். நேரடியாகச் சுலபா ஆசைப்படறாங்கன்னு சொல்லி அவளை வம்பில் மாட்டி விடாமல் “டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஃபாரின் லொக்கேஷன் வேணும்ன்னு சொல்றாங்க” என்று விஷயத்தை யாருமே மறுக்க முடியாதபடி வெளியிட்டிருந்தார் எஸ்.பி.எஸ். அருகே அழகுப் பொம்மையாக எதுவுமே பேசாமல் அமர்ந்திருந்த சுலபா கூட அவரது சாமர்த்தியத்தை வியந்தாள். எஸ்.பி.எஸ்.ஸா கொக்கா? எதையும் முடிவு செய்ய வேண்டியது அவர்தான் என்றாலும் ஒரு சர்வாதிகார முடிவையே ஜனநாயகமாக எடுப்பது போல் காட்டிக் கொள்ள விரும்புகிற தற்கால ஃபாஷனை அவரும் ஒப்புக்காகக் கடைப்பிடித்தார். ‘கதை ஃபாரின் லொக்கேஷனுக்குப் போக வேண்டும்’ என்பது அவருடைய தீர்மானம் என்பது எல்லாருக்கும் புரிந்து விட்டது. இனி அதற்கு ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதையும் எல்லாரும் புரிந்து கொண்டு விட்டார்கள்.

“இதுலே சிரமம் ஒண்ணுமில்லே! புரொட்யூலர் சொல்ற படி பண்ணிடலாம். டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நினைக்கிறதைப் பண்ணலேன்னாக் கழுத்தறுத்துடுவாங்க... ஏரியா விற்பனை படுத்துப் போயிரும்” என்றார் டைரக்டர்.

“எடிட் பண்றப்போ கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் எடுத்துக் கிட்டாக் கதையைக் கோவையாக் கொண்டு போயிடலாம். எல்லாம் எடிட்டிங்கிலேதான் இருக்கு” என்றார் ஹீரோ குமார விஜயன்.

சுலபா மட்டும் கடைசி வரை வாயே திறக்கவில்லை. மெளனமாகச் சிரித்துக் கொண்டே எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாள். மாலையில் ஷூட்டிங் முடிந்து அவரவர்கள் கிளம்பு முன் “ஃபாரின் லொக்கேஷன் இருக்கு! லண்டன் பாரிஸ் போறோம். ரொம்பச் செலவாகும். ஃபாரின் எக்ஸ்சேன்ஜ் கிடைக்கிறது கஷ்டம். அதுனால ஒரு டஜன் ஆட்களுக்கு மேலே போய் விடாமல் ஒரு சின்ன யூனிட் மட்டும் போனால் போதுமானது” என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார் எஸ்.பி.எஸ். வெளிநாட்டுப் பயணம் போவது உறுதியாயிற்று.

அத்தியாயம் - 5

தன் காரியதரிசி கவிதாவைத் தவிர அவரே எதிர்பாராத விதமாக ஆடிட்டரையும் கூட அழைத்துக் கொண்டு போனாள் சுலபா. அதிலும் ஒரு திட்டம் இருந்தது. எங்கெங்கோ எப்படி எப்படியோ குல்மால் செய்து மாத்தி வைத்திருந்த ஃபாரின் கரன்ஸியில் சுவிஸ் பாங்கில் ஒரு இரகசிய நம்பர் அக்கெளண்ட் வைத்துக் கொள்ள ஆடிட்டர் உடனிருக்க வேண்டும் என்று எண்ணினாள் சுலபா. அவளே ஆடிட்டரை உடன் வர வற்புறுத்தினாள்.

மிகப்பல சினிமாப் பெரும் புள்ளிகளின் நம்பர் ஒன் நம்பர் டூ அக்கவுண்டுகளைக் கவனித்து வந்த ஆடிட்டர் கனக சபாபதிக்கு நல்ல அநுபவம் ஸ்விஸ் பாங்க் விவகாரங்களில் இருந்தது. தானே தனியாக ஏதாவது ஏடா கூடமாகப் பண்ணிப் புரியாத தேசத்தில் வம்பில் மாட்டிக் கொள்ளக் கூடாதென்று எண்ணினாள் சுலபா. அதனால்தான் ஆடிட்டரையும் கூப்பிட்டிருந்தாள்.

பாண்டிச்சேரியில் பிறந்து இப்போது பிரெஞ்சு நாட்டில் பல ஊர்களில் வாழும் உறவினர்கள் பலர் கனகசபாபதிக்கு இருந்தார்கள். அதனால் அவர் உதவி தேவைப்பட்டது.

ஆனால் பயணத்தின் இந்தப் பகுதியைப் பற்றித் தயாரிப்பாளர் எஸ்.பி.எஸ்.ஸுக்குத் தெரிய விடவில்லை அவர்கள்.

“உதவியாளர்ங்கிற முறையிலே கவிதா வரப்போரு, என்னோட ஆடிட்டரும் கூட வரார். அவர் செலவுகளை நான் பார்த்துக்கிறேன்” - என்று உபசாரத்துக்காக எஸ்.பி.எஸ்.ஸிடம் சுலபா கூறினாள்.

“செலவு என்னம்மா பெரிய விஷயம்? உங்க ஆடிட்டர் தானே? அவரும் நம்ம யூனிட்ல ஒருத்தர் மாதிரித் தான்! வரட்டும். நமக்கும் நாலு இடத்திலே பேசக் கொள்ள ஒரு படிச்ச ஆளாவது வேணும். அவருக்காக நீங்க செலவழிக்க வேணாம் என் கிட்டவே விட்டுடுங்க” என்று எஸ்.பி.எஸ். பெருந்தன்மையாகப் பதில் சொல்லிவிட்டார்.

வாழ்க்கையில் அவளுடைய ஆசைகள் ஒவ்வொன்றும் சுலபமாக நிறைவேறி வந்தன. கடைசியாக இந்த ஸ்விஸ் பேங்க் ஆசையும் நிறைவேறப் போகிறது. ‘சுலபா’ என்று தனக்குப் பெயர் வைத்துக் கொடுத்தவரை இப்போது அவள் உள்ளம் வாழ்த்தியது. எல்லாம் சுலபமாகவே நடந்து விடுகின்றனவே!

பயணத்தில் படப்பிடிப்பை விட அவர்கள் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது தான் முக்கியமாயிருந்தது.

கதாநாயகன், கதாநாயகி, காமிராமேன், டைரக்டர், தயாரிப்பாளர், தயாரிப்பாளரின் நெருக்கமுள்ள இரண்டு பணக்கார விநியோகஸ்தர்கள், கதாநாயகியோடு அவள் காரியதரிசி கவிதா, ஆடிட்டர் கனகசபாபதி என்று ஒன்பது பேர். புறப்பட்டார்கள். கிடைத்த அந்நியச் செலாவணி அநுமதியில் இந்த ஒன்பது பேர்தான் போகமுடியும் என்று ஆகிவிட்டது. இவர்களிலேயே சிலருக்கு அநுமதி வாங்குவதற்காக யூனிட்டில் சம்பந்தப்பட்டவர்களைப் போலப் பெயர்கள் சூட்ட வேண்டியிருந்தது. கவிதா ‘காஸ்ட்யூம் அஸிஸ்டெண்ட்’ ஆனாள், கனகசபாபதி - புரொடக்ஷன் கண்ட்ரோலர் ஆனார். எஸ்.பி.எஸ்.ஸின் இரு நண்பர்களும் லொக்கேஷன் ஷாட் சம்பந்தப்பட்ட இரண்டு முக்கிய நடிகர்கள் என்று காட்டப்பட்டிருந்தனர். அந்தியச் செலாவணி அநுமதி வாங்குவதற்கு இந்த மாதிரிக் காண்பித்தாக வேண்டியிருந்தது. எஸ்.பி.எஸ். இன்னும் இரண்டு மூன்று பேர்களைச் சேர்த்துப் பன்னிரண்டு பேர் வரையில் கூப்பிட்டுக் கொண்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் ஒன்பது பேருக்குத்தான் அநுமதி கிடைத்தது. அதற்கு மேல் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை, புறப்படுவதற்கு முன் எல்லாப் பத்திரிகைகளிலும் செய்திகளும் விளம்பரங்களும் தடபுடல் பட்டன.

‘எஸ்.பி.எஸ், புரொடக்ஷன்ஸாரின் மாபெரும் தயாரிப்பு. கவர்ச்சிக் கன்னி சுலபா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் லண்டன், பாரிஸ் நகரங்களில் படப்பிடிப்பு ஆக ஏற்பாடு’ - என்று விளம்பரமாயிற்று. அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை காரணமாக நியூயார்க் - டோக்கியோ எல்லாம் விடுபட்டுப் போயிற்று. அவர்களும் பொருட்படுத்தவில்லை.

இந்த ஃபாரின் லொக்கேஷனுக்கு ஆகிற செலவை மட்டுமே கணக்கிட்டால் கூட உள்நாட்டில் கச்சிதமாக இன்னொரு படம் எடுத்து முடித்து விடலாம் என்று தெரிந்தது. ஆனாலும் கண்ணை மூடிக்கொண்டு செலவழிக்கத் தயாராயிருந்தார்கள். ‘சுபவிரயங்கள்’ என்று சோதிட பாஷையில் ஒரு பதப்பிரயோகம் உண்டு. ‘சுபமான வீண்செலவுகள்’ என்று அதற்கு அர்த்தம். எஸ்.பி.எஸ்.ஸைப் பொறுத்தவரை இது ஒரு ‘சுய விரயம்’தான்.

ஆனால் பணம் விரயமாகாமல் சினிமாவில் லாபம் சம்பாதிக்கவே முடியாது என்பதைப் பாலபாடமாகவே அவர் கற்றுத் தெரிந்து கொண்டிருந்தார்.

ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகை பாதாம்கீர் கேட்டால் அவள் உதவியாள் - மேக்-அப்-மேன் நடிகையின் தாய் என்ற பெயரில் அவள் மெய்க்காப்பாளராக அல்லது பொய்க்காப்பாளராக செட்டுக்குள் வரும் மூதாட்டி, கார் டிரைவர் இத்தனை பேருக்கும் பாதாம் கீர் வாங்கிவர வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் இது எரிச்சலூட்டியது.

“என்னப்பாது? பணத்தை சும்மா வாரி விடறீங்களே? யார் அப்பன் வீட்டுச் சொத்துப் பாழ்போகுது? அந்தப் பொம்பளைத்தான் நடிக்கிது. லைட் வெளிச்சத்தில் நின்னு வாட வேண்டியிருக்கு. பாதாம்கீர் கேட்குது! இவனுகளுக்கெல்லாமும் கூடப் பாதாம்கீர் இல்லாட்டி வேற எதுவும் தொண்டையிலே எறங்காதோ?” - என்று கடுமையாகக் கண்டித்துக் கொண்டிருந்தார் எஸ்.பி.எஸ். நடைமுறையில் அதனால் பல இடைஞ்சல்களை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. “என்னாய்யா இது மாதிரிக் கஞ்சப் பெட்டிப் புரொட்யூஸரை நான் பார்த்ததே இல்லை” என்று அவர் காதுபடவே பேச ஆரம் பித்தார்கள்.

மெல்ல மெல்ல அநுபவம் வந்த பின்பு அவர் முற்றாக மாறினார். யாதார்த்தத்தைப் புரிந்து கொண்டார்.

இந்தக் கலையே ஒரு சுபவிரயம். இதில் போய் விரயம், வீண், என்று பார்க்கக் கூடாது. வாழ்க்கையில் இப்படி எத்தனையோ அழகான வீண் செலவுகள் இருக்கின்றன. விறகு வெட்டுகிறவன் நாள் முழுவதும் நெற்றி வேர்வை ஆறாக ஓடி வேலை செய்துவிட்டு முப்பது ரூபாய்க்கும் குறைவாகக் கூலி வாங்கிக் கொண்டு போகிற இதே உலகில் அரைமணி நேரம் பாடுகிற இசைக்கலைஞன், கால்மணி நேரம் ஒரு ஷாட்டுக்கு நடிக்கிற நடிகை, ஆயிரக்கணக்கில் வாங்குகிறாளே என்று தர்க்கம் செய்து பயனில்லை. அது வேறு இது வேறு.

‘நிறைய விரையம் செய்தால்தான் நிறையச் சம்பாதிக்க முடியும் என்கிற மாதிரி ஒரு கலை இது! இங்கே சிக்கனம் பார்க்க விரும்புகிற நல்லவனை எல்லாருமாகச் சேர்ந்து நஷ்டப்படுத்தி விடுவார்கள், சுபவிரயத்தைச் சகித்துக் கொள்கிற மனப் பக்குவமே இதில் வெற்றி’ - என்ற இரகசியம் அவருக்குப் புரிந்த பின் அவர் தேறியிருந்தார்.

பதினைந்து வருஷங்களுக்கு முன் தேவகோட்டையில் எஸ். பி. எஸ், சிட்பண்ட்ஸ் அதிபராயிருந்த சொ.ப.சொ. வேறு இன்றைய எஸ்.பி.எஸ். வேறு. அன்றைய எஸ்.பி.எஸ். அறவே மாறிவிட்டார் இப்போது, ஐம்பதினாயிர ரூபாய் சலவை நூறுகளாக வாங்க நூற்று இருபத்தைந்து ரூபாய் வட்டம் கொடுக்க அன்றைய சொ.ப.சொ. துணிந்திருக்க மாட்டார். இன்று அப்படிப் புது நோட்டுக்களாகக் கொண்டு போய்க் கொடுப்பது ஒரு நடிகையை மகிழ்விக்கும் என்று புரிந்துவிட்டால் அதை உடனே நிறைவேற்றித் தருவது தம் கடமை என்று புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக் கொண்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த ஞானம் தான் தொழிலில் அவருக்கு மேலும் மேலும் வெற்றியைக் கொடுத்தது என்று சொல்ல முடிந்தது. மார்க்கெட்டில் “எஸ்.பி.எஸ். அண்ணன? ஃபார் ஹிம் நத்திங் இஸ் இம்பாஸிபிள்” என்று பேசக்கூடிய பெருமையைத் தந்திருந்தது.

“உலகில் சந்தோஷமாக இருக்க ரெண்டு வழிங்க இருக்கு. மத்தவங்களைக் கஷ்டப்படுத்திச் சந்தோஷம் அடையிறது ஒண்ணு. அதிலே எனக்கு நம்பிக்கை இல்லே. மத்தவங்களைத் தாராளமாச் சந்தோஷப்படுத்தி நாமளும் சந்தோஷமா இருக்கிறது இன்னெண்ணு. இந்த ஃபீல்டிலே இன்னிக்கி இந்த ரெண்டாவது வழிதான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்று எஸ்.பி.எஸ். தம் வாழ்க்கை பிலாஸபியைத் தாமே எப்போதாவது ரொம்பவும் வேண்டப்பட்டவர்களிடம் சொல்வது உண்டு.

“ஒரு முழுப் புரொடக்ஷனுக்கு ஆகிற செலவுகளை ரெண்டு மூணு லொக்கேஷன் ஷாட்டுக்காக வீணாக்கணுமா?” என்று எஸ்.பி.எஸ்.ஸின் நண்பர் ஒருவர் அவர் தம்முடைய யூனிட்டோடு வெளிநாடு புறப்படுவதற்கு முன் கேட்டார்.

“விரயம் தான் நஷ்டம். இது வெறும் விரயமில்லே, சுபவிரயம். இதுலே நஷ்டம் வராது” என்று சுருக்கமாகப் பதில் சொன்னர் எஸ்.பி.எஸ். ‘சுபவிரயம்’ என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று.

அதைவிட வேடிக்கை என்னவென்றால் முழு யூனிட்டுக்குமான வெளிநாட்டுப் பயண உடைகள் எடுக்கத் தைக்க - என்று எல்லாச் செலவுகளையும் அவரே பார்த்துக் கொண்டார்.

யூனிட் முதலில் லண்டன் போய்விட்டு அங்கே மூன்று நாள் தங்கியபின் அப்புறம் பாரிஸ் போவது என்று ஏற்பாடாகி இருந்தது.

ஒவ்வோர் இடத்திலும் படிப்பிடிப்பு வேலைகள் மிகச் சில மணி நேரங்கள் தான். ஷாப்பிங், ஊர் சுற்றிப் பார்த்தல் ஆகியவற்றுக்கே அதிக நேரம் செலவாயின.

லண்டனில் அவர்கள் இரண்டு ஹோட்டல்களில் தங்கினார்கள். சுலபா, கவிதா, ஆடிட்டர், எஸ்.பி.எஸ். நால்வரும் ஹைட்பார்க் எதிரே இருந்த மார்பின் ஆர்ச் அருகிலுள்ள பிரபல கம்பர்லாண்ட்ஸ் ஹோட்டலில் தங்கினர்கள். மற்றவர்கள் கொஞ்சம் உள்ளே பிக்காடில்லி சர்க்கஸ் அருகே ஓர் இரண்டாந்தர ஹோட்டலில் தங்கினர்கள். எல்லாமே வசதியாகத்தான் இருந்தன.

பகலில் ஹைட்பார்க்கில் கொஞ்சம் ஷூட்டிங் நடந்தது. சுலபாவும், கதாநாயகனும் டூயட் பாடியபடியே ஓடிப் பிடித்து விளையாடுகிறார்கள். பார்க்குக்கு உள்ளே இருந்த ‘ஸெர்ப்பண்டைன் லேக்’கில் இருவரும் படகு செலுத்துகிற மாதிரி ஒரு ஷாட் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஹைட்பார்க்கிலோ, ஏரியிலோ, பகலில் கூட்டமே இல்லை. இருந்த ஒரு சிலரும் இவர்களது ஷூட்டிங்கைத் திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. பட்டிக்காட்டான்கள் யானை பார்க்கிற மாதிரி ஷூட்டிங் பார்க்கக் கூடும் நம்மூர்க் கூட்டம் லண்டனில் இல்லாதது புதுமையாயிருந்தது. உள்ளூறக் கொஞ்சம் ஏமாற்றமாகவும் இருந்தது. தங்களையோ தங்கள் படப் பிடிப்பையோ யாருமே பொருட்படுத்தவில்லை என்பதனால் வந்த ஏமாற்றம் அது. கவனிக்கப்படாமல் விடப்பட்ட வருத்தம் உள்ளூற இருந்தது.

அத்தியாயம் - 6

அதே போலப் பாரிஸில் ஈஃபில் டவர் அருகேயும் வார் ஸெயில்ஸ் அரண்மனை முகப்பிலும் படப்பிடிப்புக்கள் இருந்தன. பாரிஸில் இருந்தபோது ஒரே ஒரு நாள் ஆடிட்டரும், சுலபாவும் தலைமறைவானர்கள். காலை ஆறு மணிக்கே புறப்பட்டு ‘ஜூரிச்’ போனார்கள். அன்று முழுவதும் ஜூரிச்சில் கழித்தார்கள். பாரிஸிலிருந்து ஆடிட்டர் கனக சபாபதியின் உறவினர் ஒருத்தர் முந்திய தினமே ஜூரிச் சென்று எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டு இவர்களை விமான நிலையத்துக்கு வந்து அழைத்துப் போனார். ‘ஸ்விஸ் பாங்க்’ கணக்கு விவகாரத்தை முடித்துக் கொடுத்தார். பிற்பகலுக்குள் அந்த வேலை முடிந்து விட்டது. பிற்பகலுக்கு மேல் அங்கிருந்து ஜெனிவாவுக்குப் போய்ச் சுற்றிப் பார்த்து விட்டு மறுநாள் காலை ஜெனிவாவிலிருந்து பாரிஸ் திரும்பினர்கள்.

இந்தியாவில் இந்த மாதிரி அவள் இஷ்டம் போல் சுற்ற முடியாது. படிப்பிடிப்பு என்றால் அது கிராமமாயிருந்தாலும் நகரமாயிருந்தாலும் கூட்டம் கூடிவிடும். இங்கே பாரிஸில் படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக் கொண்டு நின்றாலும், நீச்சல் உடையில் நடுத்தெருவில் நின்றாலும் சீந்துவாரில்லை. யாரென்றோ ஏனென்றோ பார்ப்பவர்கள் இல்லை, விசாரிப்பவர்கள் இல்லை. இப்படிக் கவனிக்கப்படாமலும் விசாரிக்கப்படாமலும், வியக்கப்படாமலும் இருந்ததில் நிம்மதி என்று இவர்களே சொல்லிக் கொண்டாலும் உள்ளூற ஆதங்கமாகத்தான் இருந்தது. ‘டேய் சுலபா டோய்!’ - என்று காணாததைக் கண்டுவிட்ட மாதிரித் துரத்திக் கொண்டு ஓடிவரும் பாமரக் கூட்டம் இல்லாததில் உள்ளே ஏக்கமாக இருந்தாலும் வாய் என்னவோ, ‘இங்கே ரொம்ப ஃப்ரீயா இருக்கு, ரசிகர்களோட டிஸ்டர்பன்ஸே இல்லை’- என்று சொல்லி மகிழ்வது போலப் பாசாங்கு செய்தது. சுற்றி இருப்பவர்களுக்குத் தங்களை யாரென்றே தெரியவில்லை. தாங்கள் யாரென்று அவர்கள் கவலைப்படவும் இல்லை என்பது ஊமைக் காயமாக உள்ளே வலிக்கத்தான் செய்தது. தங்களை வியந்து தொழாதவர்கள் மத்தியில் தாங்கள் இருக்கிறோம் என்பதைச் சிரமப்பட்டுத்தான் சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது. யாரும் ‘ஆட்டோ கிராப்’ கேட்கவில்லை. பொது இடங்களில் ஷூட்டிங் நடப்பதுகூட யாருடைய கவனத்தையும் கவரவில்லை. அடிவருடிகளும், துதிபாடிகளும், பிறரைக் கவனித்துக் கவனித்தே தம்மை மறந்து விடுவோரும் நிறைந்த இந்தியா மாதிரி இந்த நாடுகள் இல்லாதது புரிந்தது, யாரையும் யாரும் கவனிக்கவே மாட்டேனென்கிறார்கள். அவரவர்கள் வேலையை அவரவர்கள் கவனித்தார்கள். மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படவும் வியக்கவும் யாருக்கும் நேரமோ அவகாசமோ இருந்ததாகத் தெரியவில்லை. இது புதுமையாயிருந்தது. இந்திய இட்லி, இந்திய ரசம், இந்திய சாம்பார் எல்லாம் கிடைக்காதது போல இந்தியக் குணங்களும் காணக் கிடைக்கவில்லை இங்கே.

காதுத் தோட்டுக்கும், மூக்குத்திக்கும் வைத்துக் கட்டுவதற்கு நல்ல ப்ளுஜாக்கர் வைரம் - பெல்ஜியம் கட்டிங் உள்ளதாகத் தேர்ந்தெடுத்து வாங்க வேண்டுமென்றாள் சுலபா.

யூனிட்டில் மற்றவர்களை எல்லாம் பாரிஸிலிருந்தே ஊர் திரும்பச் சொல்லிவிட்டுச் சுலபர், கவிதா, கனகசபாபதி, எஸ்.பி.எஸ். நால்வரும் வைரம் வாங்குவதற்காக ஆம்ஸ்டர்டாம் சென்றார்கள்.

திரும்பிய பின் கனகசபாபதி கூறியது போலவே சுலபாவை இந்த வெளிநாட்டுப் பயணம் மாற்றியிருந்தது. அவள் உற்சாகமாகவும் விரக்தியற்றும் இருந்தாள். புகழுக்காகவும், கூடி நிற்கிற துதிபாடிகளுக்காகவும் ஏங்கினுள். வைரம் தேர்ந்தெடுத்து வாங்க ஆசைப்பட்டாள். ஸ்விஸ் கிரெடிட் வங்கியில் இரகசிய எண் கணக்கு வைத்துக் கொண்டாள். எஜமானிக்கு வாழ்க்கையில் பிடிப்பு உண்டாக்க இந்தப் பயணம் பயன்பட்டதைக் கவிதா உணர்ந்தாள்.

லண்டனில் இரண்டு காட்சிகளும், பாரிஸில் இரண்டு காட்சிகளும் எடுத்து முடித்ததுமே படப்பிடிப்பு வேலைகள் முடிந்து விட்டன. வேடிக்கை பார்க்கக் கூட்டம் கூடாத - சடங்கு போன்ற - எந்த இடைஞ்சலும், அசெளகரியமுமற்ற அந்தப் படப்பிடிப்புகள் சுளுவாக முடிந்து விட்டன. எல்லாரும் ஊர் சுற்றுவது -பாரிஸ் பை நைட் - பஸ் டிரிப், ஷாப்பிங் போவது ஆகிய வேலைகளைத் தான் உற்சாகமாகச் செய்தார்கள்,

எஸ்.பி.எஸ். புரொடக்ஷன்ஸார் பாரிஸில் படிப்பிடிப்பு - லண்டனில் சுலபா - என்று செய்திகளை முன் கூட்டி ஊரிலிருந்து புறப்படும் போதே எழுதிக் கொடுத்தபடி தமிழ்த் தினசரிகள் பிரமாதமாக நாலு காலம் தலைப்போடு பிரசுரித்து ஊரையே கலகலக்கப் பண்ணிக் கொண்டிருந்தன. அவர்கள் யூனிட் வெளிநாட்டில் இருந்த இருபது நாளும் வெளிவர ஏற்ற இருபது தலைப்புச் செய்திகளை அழகாக எழுதிக் கோடுத்து வெளியிடும் பொறுப்பு - புரொடக்ஷன் மானேஜரிடமும் வசனகர்த்தாவிடமும் விடப்பட்டிருந்தது. அவர்கள் அதை ஜிஞ்ஜாமிர்தம் பண்ணினார்கள். வெளிநாட்டுப் படப்பிடிப்புக்கு விளம்பரம் கிடைத்துக் கொண்டிருந்தது.

ஊர் திரும்பியதும் மீதி உள்ள நாலைந்து ஷெட்யூல்களை முடித்து ரீரிகார்டிங், எடிடிங் பூர்த்தி செய்தால் சூட்டோடு சூடாகப் படத்தை ரிலீஸ் பண்ணிவிடலாம். ஏரியா விற்பனை முன்னைவிட அதிகமாக ஆகும். அதில் வருகிற லாபத்தைப் பார்க்கும்போது இந்த வெளிநாட்டுப் படப்பிடிப்புச் செலவு கொசுக்கடி மாதிரித்தான். சட்டப்படி கிடைத்த வெளிநாட்டுச் செலாவணி தவிரவே எஸ்.பி.எஸ். முதல் சுலபா வரை வேறு தனிவசதிகளும் கைநிறைய இருந்தன.

ஜூரிச் அக்கவுண்ட், ஆம்ஸ்டர்டாமில் பதினாறுகல் வைத்துத் தோடு கட்டுவதற்கு வைரம் எல்லாம் நினைத்தது போல் செய்து கொள்ள முடிந்தது.

அதிகம் பிரபலமாகப் பிரபலமாகச் சுலபாவுக்குள் அப்படி ஒரு பிடிவாத குணம் வளர்ந்து வந்தது. ‘தான் நினைத்தது நடக்க வேண்டும், அதுவும் நினைத்தபடியே பிசகாமல் நடக்க வேண்டும், அதற்குத் தடையாயிருப்பதை எல்லாம் நிர்மூல மாக்கிவிட வேண்டும்’ என்ற மனப்பான்மை வளர்ந்து கொண்டு வந்தது. ‘எல்லார் நினைப்பதும் நடக்க வேண்டும். எல்லாரும் ஆசைப்பட வேண்டும். எல்லாரும் வாழ வேண்டும்’ என்று எண்ணி அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுவது ஜனநாயக மனப்பான்மை. ‘தான் நினைப்பது மட்டும் நினைத்தபடி நடக்க வேண்டும்’ - என்று எண்ணுவது சர்வாதிகாரம். உள்ளுக்குள் அவள் சர்வாதிகாரி போலத்தான் ஆகியிருந்தாள். சர்வாதிகாரம் செல்லுபடி ஆயிற்று. சலாம் போட்டுக் கொண்டு அடிபணிந்தார்கள் இங்கே.

சலவை நோட்டாக வேண்டும் என்றால் அப்படியே செண்ட் தெளித்து எடுத்து வந்து காலடியில் குவித்தார்கள். வெளிநாடு போய்ப் படப்பிடிப்பு நடித்த வேண்டும் என்றால் உடனே வெளிநாட்டுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். எல்லாமே நடந்தன. எல்லாமே நினைத்தபடியே நினைத்த விதத்தில் நடக்கிற போதும் மனம் அதே நிலைக்குப் பழகி அதையே எங்கும் எதிர்பார்க்கிறது. எதிர்பார்த்தது, எதிர்பார்க்கும்.

சுலபாவும் இப்போது அந்த நிலைக்கு வந்திருந்தாள். அவள் சொன்னதை ‘அது சாத்தியமில்லை’ - என்று யாராவது மறுத்துப் பேசினால் அவளுக்குக் கோபம் வந்தது. அவள் சொல்கிற எதையும் யாராவது எதிர் நின்று விவாதிக்கவோ, வினவவோ முயன்றால் கூடப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை அவளால். ஒருவரிடம் ஆணவம் கொடி கட்டிப் பறப்பதற்கு இவை எல்லாம் புற அடையாளங்கள் என்றால் சுலபா விடம் இந்த அடையாளங்கள் வெளிப்படையாகவேத் தென்படத் தொடங்கின.

“உன்னை யாரும் யோசனை கேக்கலே! பேசாமே நான் சொல்றதைக் கேளு! எனக்கு எதை எப்படிச் செய்யணும்னு தெரியும்” - என்பன போன்ற வாக்கியங்கள் அவளிடம் அடிக்கடி வெளிப்பட்டன இப்போது.

கவிதா இதைக் கவனித்தாலும் தனக்கேன் வம்பு என்று பேசாமல் இருந்து விட்டாள். ஒரு படத்தில் ஒரு காட்சியில் அவள் பாடுவதாக ‘நான் ஒரு பயித்தியக்காரி’- என்ற எடுப்புடன் ஒரு பாடல் இருந்தது. அந்தத் திரைக் கதையில் அந்தக் குறிப்பிட்ட காட்சியில் அவள் அப்படிப் பாடுவதுதான் பொருத்தம் என்று ஏற்பாடு செய்து பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் பலநாள் சிரமப்பட்டு அதை இசையமைத்து முடித்திருந்தார்கள். அவளுக்கு அந்தப் பாட்டுத் தன்னுடைய ‘இமேஜைக்’ கெடுத்து விடுமோ என்று மனத்திலே பட்டது. அவ்வளவு தான். மெல்ல டைரக்டர் மூலம் அந்தப் பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் சொல்லி அனுப்பினள். அது ‘ஹிட் ஸாங்’ ஆகப் புகழ் பெறும் என்று நம்பிக்கொண்டிருந்த அவர்களுக்கு இவள் கூறியதைக் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது. இவள் பாட்டை மாற்றச் சொல்லி வற்புறுத்தினுள்.

“உங்களைத் தனிப்பட யாரும் நெனைக்க மாட்டாங்க மேடம்! அந்தப் படத்திலே நீங்க நடிக்கிற ரோலுக்கு அந்தப் பாட்டுப் பொருந்துதா இல்லியான்னு மட்டுமே பார்ப்பாங்க” என்று எவ்வளவோ சொல்லி வாதாடினார் பாடலாசிரியர். அவர் வாதத்தை அவள் ஏற்கவில்லை.

கதாசிரியரும், இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் இணைந்து மறுத்தனர். “சரி நாளைக்குப் பார்ப்போம்! போய் வாங்க”.என்று அவர்களை விடைகொடுத்து அனுப்பி விட்டு அவர்கள் சம்பந்தப்பட்ட சில தயாரிப்பாளர்களுக்கு அன்றிரவே ஃபோனில் தகவல் சொல்லிப் பேசினாள் சுலபா. மூன்று பேருக்கும் அடுத்தடுத்துச் சில தயாரிப்புக்களுக்கான ஒப்பந்தங்கள் இரத்து ஆயின. ஒன்றும் புரியாமல் திணறி நடுநடுங்கிப் போனார்கள் அவர்கள். விசாரித்ததில் அது சுலபாவின் வேலை என்று புரிந்தது. பிழைப்பைக் கெடுக்கிறாளே என்று அஞ்சி நடுங்கி ஓடிவந்து அவளிடம் முறையிட்டார்கள். கெஞ்சிக் கேட்டு மன்றாடினார்கள்.

“இதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை” - என்று சிரித்து மழுப்பினாள் அவள். அந்தச் சிரிப்பில்தான் மர்மம் இருந்தது. எச்சரிக்கை இருந்தது. ‘என்னிடமா வாலாட்டுகிறீர்கள்?’ - என்ற எச்சரிக்கை அதில் தொனித்தது. உடனே பாடலும் இசையும் மாறின. ‘நானொரு பயித்தியக்காரி’ - பாட்டு மாற்றப்பட்டது. தொழிலையும் பிழைப்பையும் காப்பாற்றிக் கொள்ளும் ஆத்திரத்தில் பாடலாசிரியர் சுலபாவை வாழ்த்தியே ஒரு பாடலைத் தனியாக எழுதி வந்து நேரில் அவளிடமே பாடி விட்டார்.

கலை பாராட்டும் கவின் பேரழகே
கண் பார்த்துக் கருணை காட்டு!
பல பாராட்டிப் பயனென்ன?
பகை பாராட்டி விளைவென்ன?
நிலை மாறாத பெண்ணரசி
நித்தியமாம் நடிப்பரசி!
சுலபாவைப் போலுண்டோ தொல்லுலகில்?

என்று பாடிச் சட்டம் போட்டு வரவேற்பு இதழ் போல் கண்ணாடியிற் பொதிந்து தந்து அவளிடம் மன்னிப்பும் கேட்டார் பாடலாசிரியர்.

அதன் பின்புதான் இரத்து ஆன ஒப்பந்தங்கள் அவருக்குத் திரும்பக் கிடைத்தன. தான் நினைத்ததற்குக் குறுக்கே நிற்பவர்களை அவள்... பொறுத்து விட்டுக் கொடுத்ததே கிடையாது. எப்படியும் அவர்கள் பணிந்தே ஆக வேண்டும். அதற்கான காரியங்களை அவளால் செய்ய முடிந்தது. நிகழ்காலம் இப்படி நடந்தாலும் கடந்த காலத்தில் தன்னை எதிர்த்தவர்களைத் தேடிப் பழி வாங்க முடியவில்லையே என்கிற கவலை உள்ளூற அவளை வாட்டியது உண்டு. அப்படிப்பட்டவர்களை அவள் மறக்க முயன்றாள். ஆனால் மறப்பது சுலபமாக இல்லை.

அத்தியாயம் - 7

சினிமாவில் சேர்த்து விடுவதாக சென்னைக்கு அழைத்து வந்து தன்னை விபசார விடுதியில் விற்றுவிட்டு இரவோடு இரவாகத் தலைமறைவாகிப் போனானே குப்பையரெட்டி அவன் இப்போது அகப்பட்டால் பழி வாங்கலாம். அல்லது பழியைத் தீர்த்துக் கொள்ளலாம். உலகத்தின் எந்த மூலையில் - எந்த நிலையில் எப்படி அவன் இருந்தாலும் இப்போது அவளால் பழி தீர்க்க முடியும். ஆனால் அகப்பட வேண்டுமே? அவன் அகப்பட்டால் அவளால் எதுவும் செய்ய முடியும். ‘சுலபா’வே ஒரு குணசித்திரமாகிப் போனாள். விரக்தி ஒரு புறமும், தன்னை எதிர்ப்பவர்களை வைரம் வைத்து அழிக்கும் குணம் ஒருபுறமுமாக அவள் விளங்கினாள்.

மனிதர்கள் மெல்ல மெல்ல அவளுக்குப் பயப்பட ஆரம்பித்தார்கள். பயம் மரியாதையைக் கொண்டு வந்தது. மரியாதை பயத்திலிருந்து விளைந்தது.

பயப்படாதவர்கள், எழுந்து நிற்காதவர்கள், தன்னைப் பார்த்ததும் பீடி குடிப்பதை நிறுத்தி விட்டுப் பதறிக் கை கூப்பாதவர்கள், எல்லாரையும் ஞாபகமாக வஞ்சம் தீர்க்கிற குணம் அவளுள் வளர்ந்தது. புற எளிமை என்பது ஒரு வேஷ மாக மட்டும் இருந்தது.

ஒரு வகையில் பார்த்தால் இது தாழ்வு மனப்பான்மையின் விளைவுதான். தாழ்வு மனப்பான்மைதான் மறுபுறத்தில் ஆணவமாக உருவெடுக்கும். பயமும், அவநம்பிக்கையும்தான் வன்முறையாகவும் பிடிவாதமாகவும் வெளியே தெரியும். சுலபாவிடமும் அப்படித்தான் அவை தெரிந்தன.

சுலபா யாரையும் எதையும் நம்ப மறுத்தாள். எல்லார் மேலும் சந்தேகப்பட்டாள். மற்றவர்களை நம்ப மறுப்பவர்களுக்குத் தன்னம்பிக்கை குறைவாகவே இருக்கும். அவளுக்கும் அப்படித்தான் இருந்தது.

புகழை அவள் வெறுத்தாள் என்றால் அதற்குக் காரணம் புகழுகிறவர்கள் மேலெல்லாம் அவள் சந்தேகப் பட்டாள். அவரவர்கள் எப்படி எப்படி இருப்பார்களோ அப்படி அப்படித் தான் இருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ள மறுத்து இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தானாக எதிர் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தபடி மனிதர்கள் இல்லாதபோது அவளுக்குக் கோபம் வந்தது. தான் சொல்லியது தவறாகவே இருந்தாலும் மனிதர்கள் அதைக் கேட்க வேண்டும், அதற்கு இசைந்து அதன்படி செயல்பட வேண்டும் என்று அவள் விரும்பினாள்.

எதிர்த்துப் பேசுபவர்கள், அவள் யோசனை சரியில்லை என்பவர்கள் மேலெல்லாம் கோபப்பட்டாள் சுலபா.

இதைப் பலம் என்பதா, பலவீனம் என்பதா என்று புரியாமல் கவிதாவும் மற்றவர்களும் சிரமப்பட்டார்கள். தன்னை இலட்சியம் செய்து மதித்தவர்களைச் சுலபா மதிக்காமல் அலட்சியம் செய்தாள். தன்னை அலட்சியம் செய்த வர்களைப் பழி வாங்கத் திட்டமிட்டாள்.

ஒரு குளோஸப் - ஷாட்டில் மகா நிபுணரான கேமிராமேன் ஒரு கோணத்தை முடிவு செய்தபின் இவள் தன் முகத்தை அந்தக் கோணத்திலிருந்து படம் பிடித்தால் நன்றாயிராது என்றாள்.

“இல்லேம்மா! நான் சொல்றதைத் தயவு செய்து கேளுங்க! இது சோகக் காட்சி. இதிலே இதுதான் பிரமாதமா இருக்கும்” - என்று காமிரா நிபுணர் வாதிட்டார். இவள் நடிக்க வருவதற்கு முன்பே காமிரா நிபுணராகப் பெயரெடுத்திருந்தவர் அவர்.

அதற்கு ஒப்புக்கொண்டது போல் சுலபா மெளனமாயிருந்து விட்டாள். ஆனால் அன்றிரவே தயாரிப்பாளர் அவளைச் சந்தித்தபோது அவரது படத்தில் தான் மேற்கொண்டு, “நடிக்க முடியாது” என்றாள் சுலபா, “ஏன்? என்ன காரணம்... யாராவது உங்க மனசு நோகும்படி நடந்துக் கிட்டிருந்தா எங்கிட்டச் சொல்லுங்க” - என்றார் தயாரிப்பாளர்.

சுலபா மெளனம் சாதிக்கவே அவரது கோபம் அதிக மாயிற்று.

“யார் என்ன செஞ்சாங்கன்னு சொல்லுங்கம்மா... இப்பவே அவனைக் கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பறேன்.”

“என் தலை எழுத்து ஒரு காமிராமேனிட்ட நான் அவ மானப்படி வேண்டியிருக்குது.”

அந்தக் காமிராமேன் ஒரு ஜென்டில்மேன் என்பது தயாரிப்பாளரின் அபிப்பிராயமாயிருந்தது. சுலபா காமிராமேனைக் குறை கூறியதும் அவர் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்துப் போனார். என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை அவருக்கு. அவளோ முரண்டு பிடித்தாள். தயாரிப்பாளர் கெஞ்சினார்:

“நாட்டிலே இன்னிக்கி முன்னணியிலே இருக்கிற ரெண்டு மூணு புகழ்பெற்ற காமிரா மேன்களிலே அவரும் ஒருத்தராச்சுங்களே மேடம்! நீங்கதான் கொஞ்சம் பெரியமனசு பண்ணணும்.”

“அப்போ நாங்கள்ளாம் நாட்டிலே உள்ள புகழ்பெறாத ஆளுங்களா? இல்லே பத்தோடப் பதினெண்ணுங்கிற மாதிரி ஆளுங்களா? நீங்க சொல்றதைப் பார்த்தால் அதுமாதிரித் தொனிக்குதே?”

“அய்யய்யோ! நான் அந்த மாதிரி அர்த்தத்திலே சொல்லலே அம்மா. ஒரு ‘ஆங்கிளை’ அவர் சரியான ‘ஆங்கிள்’னு முடிவு பண்ணியிருந்தா அது படத்துக்கு உப யோகமானதாகத்தான் இருக்கும். தப்பா எதுவும் இருக்கா தேன்னு...?”

“அவரு பெரிய ஆளானா அது அவர் மட்டிலே... எனக்கு அந்த ‘ஆங்கிள்’ பிடிக்கலேன்னா அவர் ஏன் கேட்கமாட்டேங்கிறாரு?”

அவள் குரலில் கடுமையும் முரண்டும் ஏறின. அவருக்குப் பயமாயிருத்தது. தனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் வீம்புக்காக அவள் தலையிடுகிறாள் என்று அவருக்குப் புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் இருந்தது.

‘இவளுடைய நடிப்பு ஏதோ ஓர் இடத்தில் சரியில்லை’ என்று காமிராமேன் கூற முன் வந்தால் அதற்கு இவள் என்ன மதிப்பளிப்பாள் என்று எண்ணிப்பார்த்தார் அவர். அப்படித் தன் நடிப்பைப் பற்றி மற்றொருவர் அபிப்ராயம் சொல்ல முன்வருவதையே அவள் சகித்துக் கொள்ள மாட்டாள் என்பது அவருக்குப் புரிந்தது. ஆனாலும் மற்றவர்கள் விஷயத்தில் அதிக உரிமை எடுத்துக்கொண்டு தலையிட அவள் சிறிதும் தயங்கவில்லை. படிப்பறிவும் காரண காரியச் சிந்தனையுமற்ற அவளுடைய ‘ஈகோ’வின் கூர்மை பனங்கருக் குப் போல எதிர்ப்படுகிறவர்களைத் தாறுமாறாக அறுக்கக் கூடியதாயிருந்தது. இவளையும் விரோதித்துக் கொள்ள முடியாது. காமிராமேனையும் விரோதித்துக் கொள்ளக் கூடாது. எப்படியாவது இரண்டு பேரையுமே சமாளித்தாக வேண்டும் என்று முடிவு செய்தார் தயாரிப்பாளர். காமிராமேன் எடுத்துச் சொன்னல் கட்டுப்படுவார். கேட்டுக் கொள்வார். ஆகவே அவரிடம் இதமாகப் பேசிப் பார்த்து அவர் மூலமே இவளை வழிக்குக் கொண்டு வருவதென்று முடிவு செய்தார்.

காமிராமேனைச் சந்தித்தார். தம் நிலையை விளக்கினார். காமிராமேனுக்குப் புரிந்தது.

“சார் இது லைக்கலாஜிகல் டிஸ்பியூட்! இதை எந்த ஆங்கிள்லே சரிப்படுத்தறதுங்கிறதை எங்கிட்டவே விட்டுடுங்க. நானே சரிப்படுத்திடறேன். வேற ஒண்ணுமில்லே! அந்தம்மா வோட ‘ஈகோ’வை நான் ஒத்துக்கிறேனா இல்லையாங்கிறது தான் அவங்க கேள்வி. அந்த ‘ஈகோ’வை நான் எதிர்த்துச் சர்ச்சை செய்ய மாட்டேன்னு அவங்க புரிஞ்சுக்கிட்டாலே என்னை விட்டுடுவாங்க.”

“படிச்சவங்களோட ஈகோவாவது வெண்ணெயிலே இறங்கிற கத்திமாதிரி ஒசைப்படாமச் சிதறாமல் அறுக்கும். படிக்காதவங்க ஈகோவோ பனைமடல் மாதிரி இரத்தம் சிந்த வச்சிரும்.”

“சரியாச் சொல்றீங்க! இந்தம்மாவோட வீம்புக்கும் ஈகோவுக்கும் காரணமே அவங்களோட தாழ்வு மனப்பான்மை தான். அதை நான் நல்லாப் புரிஞ்சுக்கிட்டிருக்கேன். எங்கிட்ட விட்டுடுங்க நானே அவங்களைச் சந்தித்துப் பேசிச் சரிப்படுத் திக்கிறேன்” என்று காமிராமேன் நம்பிக்கையோடு உறுதி கூறினார். உலக அநுபவம் மிக்கவரும் சுலபாவை விட வயது மூத்தவருமான அந்தக் காமிராமேன் மறுநாளே அந்தப் பிரச்னைக்கு முடிவு கட்டி விட்டார்.

பூக்கடையில் ஐந்து ரூபாய் செலவழித்துப் பாலிதின் உறையில் அழகாக அடுக்கிய மலர்க்கொத்து ஒன்றை வாங்கிக் கொண்டு அவளைச் சந்திக்கப் போனார் அவர்.

அவள் உள்ளே இருந்து கொண்டே அலைக்கழித்தாள்,

“உடம்பு சரியில்லை. இன்னிக்கி யாரையும் பார்க்க முடியாதாம்” என்று நரசம்மா மூலம் வேண்டுமென்றே சொல்லியனுப்பினாள். அவர் அசரவில்லை.

“இன்னிக்கி வெள்ளிக்கிழமை! மங்கலமான நாள். பூங்கொத்தோடு பார்க்க வந்திருக்கேன். பார்க்காமப் போக மாட்டேன்னு சொல்லுங்க” என்றார்.

நரசம்மா மறுபடி உள்ளே ஓடினாள். திரும்பி வந்து, “என்ன விஷயமாப் பார்க்கணும்னு கேட்கிறாங்க” என்றாள்.

“ஒரு விஷயமுமில்லே. அவங்களுக்கு மரியாதை செலுத்திட்டுப் போக வந்தேன். அவ்வளவுதான்.”

அவள் உள்ளே போய்விட்டு மறுபடி திரும்பி வந்து, “ஒருமணி நேரம் ஆகும்! உங்களால அதுவரை ‘வெயிட்’ பண்ண முடியுமான்னு கேட்கிறாங்க?” என்றாள்.

“ஒருமணியோ, ரெண்டு மணியோ அவங்களைப் பார்த்து இந்தப் பூவைத் தராமல் நான் போகப் போறதில்லே” - அவள் தன்னைப் பதம் பார்க்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. கயவர்களை அவர்களுக்குத் தோற்பதுபோல் போக்குக் காட்டி விட்டு அப்புறம் தான் ஜெயிக்க வேண்டும் என்ற உத்தி அவருக்கு நன்றாகத் தெரியும்.

முதலில் சொன்னது போல் அவ்வளவு காலதாமதம் செய்துவிடாமல் மிக விரைவிலேயே அவரை உள்ளே கூப்பிட்ட னுப்பினாள் சுலபா. போனதும் பூங்கொத்தைக் கொடுத்து விட்டு அவளை இதமாகப் புகழ ஆரம்பித்தார் அவர். “இன்னிக்கி இருக்கிற ஸ்டாருங்களிலேயே காமிராவுக்கு அதிர்ஷ்டமான முகம் உங்களுது தான்.”

முதலில் அவள் நம்பவில்லை. பின்பு அவள் மெல்ல மெல்ல இளகினாள்.

“உங்க முதல் படத்திலேருந்து நான் பரம ரசிகன்.”

“ரொம்பப் புகழாதீங்க... ப்ளீஸ்.”

“இந்தச் சமீபத்துக் காமிரா ஆங்கிள் பத்தின சண்டை கூட நமக்குள்ள அவசியமில்லாதது. ஏதோ என் போறாத வேளைன்னு தான் சொல்லணும். அந்த ஆங்கிளைக் கூட நீங்க நினைக்கிற படியே மாத்திடலாம்.”

“வேண்டாம்! நீங்க மூத்தவர். அநுபவஸ்தர். உங்க விருப்பப்படியே விட்டுடலாம். தெரியாத்தனமா உங்களைத் தப்பாப் புரிஞ்சுக் கிட்டேன்.”

“நீங்க நினைக்கிறபடியே மாத்திடலாம் மேடம். கவலைப் படாதீங்க...”

“வேண்டாம்! பழையபடியே இருக்கட்டுங்க. நான் புரொட்யூஸர் கிட்டப் பேசிடறேன்.”

வந்த காரியத்தை ஜெயித்தாயிற்று. அவர் மேலும் சுலபாவைப் புகழ்ந்து அவள் ஆணவத்தின் கிளர்ச்சி நிலையில் தமது காரியத்தைச் சாதித்துக் கொண்டு திரும்பினர். வெற்றி சுலபமாயிருந்தது.

அத்தியாயம் - 8

சினிமா உலகைப் பொறுத்தவரை அவள் ஆணவத்தை அதுவரை யாரும் தட்டிக் கேட்கவில்லை. சினிமா அவளுக்குச் சேர்த்துக் கொடுத்திருந்த புகழும் செல்வமும் அந்த உலகிற்கு வெளியேயும் அவள் ஆணவம் செலாவணியாகும்படி செய்திருந்தது என்பதே உண்மை.

கடந்த காலக் கணக்கு என்ற பழைய பாக்கியில் குப்பையரெட்டி மட்டுமே மீதமிருந்தான். அவனைப் பழிவாங்க அவன் ஆள் அகப்படவில்லை. மேலே ஏறுவதற்கு உயரங்களே மீதமில்லாத அத்தனை உயரத்தில் இப்போது அவள் இருந் தாள். அதனால் தான் சலிப்பாயிருந்தது. முயற்சியும் ஊக்கமும் அற்றிருந்தன.

இன்னும் அடைவதற்கு என்று எந்த வசதியுமே மீதமில்லாத அத்தனை வசதிகளில் அவள் திளைத்துக் கொண்டிருந்தாள். அதனனால் வாழ்க்கையைப் பற்றிய தாகம் எதுவுமே இல்லை. மந்தமாக இருந்தது.

உலகில் எல்லாரும் அவளைக் காதலித்தார்கள். அவள் காதலிக்க எதுவுமே யாருமே மீதமில்லைபோல் தோன்றியது.

சுலபாவுக்குச் சில மேல் வர்க்கத்துக் குடும்பத் தலைவிகள் சிநேகிதமாயிருந்தார்கள். அவர்களில் இரண்டொருவர் வீட்டுக்கு அவள் அடிக்கடி போவாள். அவள் வீட்டுக்கும் அவர்கள் வருவார்கள். மனம் விட்டுப் பேசுவார்கள்.

இப்படி அவர்கள் சந்திப்பின் போது பல விஷயங்களைப் பற்றிய பேச்சு வரும். ஆண்கள் யாரும் கூட இல்லாத சமயங்களில் பால் உணர்வு கவர்ச்சி - பிறரை மயக்கும் அழகு - எல்லாம் பற்றிக் கூட அவர்கள் நேரம் போவது தெரியாமல் பேசி இருக்கிறார்கள். விவாதித்திருக்கிறார்கள்.

இத்தகைய சிநேகிதிகளில் ஒருத்திதான் கோகிலா. ஒரு சிமெண்ட் கம்பெனி உரிமையாளரின் நடுத்தர வயது மனைவி. படித்தவள். அவளும், சுலபாவும் தங்கள் அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்வதுண்டு. ஒரு முறை கோகிலா தன் கணவர் ஊரில் இல்லாத சமயமாகப் பார்த்துச் சுலபாவை டின்னருக்கு அழைத்திருந்தாள். கோகிலா, சுலபா இருவருமே எப்போதாவது ‘பிராந்தி’ குடிப்பது உண்டு. கோகிலாவுக்குச் சுலபாவின் பழக்கம் இது எனத் தெரியும். நடித்துக் களைத்து வீடு திரும்பினால் அயர்ந்து உறங்க இது தேவை என்று ஆரம்பித்து அப்புறம் இது பழக்கமாகிவிட்டது. கோகிலா ஏதோ பிரசவத்துக்குப்பின் மருந்தாக ஆரம்பித்து அப்புறம் மேல்தட்டு சிநேகிதத்தில் பழக்கமாக்கிக் கொண்டு விட்டாள். அர்பன் சொஸைட்டி ஹேபிட்டாக வந்துவிட்டது.

இவர்கள் தனியே சந்தித்த விருந்தின்போது இரண்டு ரவுண்டு சுகமான பிஸ்கட் பிராந்தி உள்ளே கதகதவென்று இறங்கியதும் - சூடு வேலை செய்தது.

கோகிலா சுலபாவைக் கேட்டாள்,

“பார்த்தவுடன் இவனை அநுபவித்துவிட வேண்டும் என்று எந்த ஆண்பிள்ளையாவது உன்னை நினைக்கச் செய்திருக்கிறானா?”

“சினிமாவைப் பொறுத்தவரை அப்படி ஆசைப்பட்டு நினைக்க இடைவெளியோ அவகாசமோ கிடையாது கோகிலா! புகழ்பெறுகிறவரை நீ ஆசைப்படி வாய்ப்பே கிடையாது. உன்னை ஆசைப்படுகிற வசதியுள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்கே நேரம் போய்விடும்.”

“ஆசை, காதல், இச்சை எல்லாமே வறண்டு போய்விடும் என்கிறாயா?”

“மற்றவர்கள் அநுபவம் எப்படியோ, என் அநுபவம் அப்படித்தான். விரக்தி அடையும் அளவு நான் கசந்து போயி ருக்கிறேன். இப்படி முன்னுக்கு வர என்னைக் கசக்கிப் பிழிந் திருக்கிறார்கள்.”

“நெஞ்சைத் தொட்டுச் சொல் சுலபா? இது உறுதி தானா?”

“தற்போதுள்ள நிலைமையைச் சொல்கிறேன். எந்த ஆண்பிள்ளையும் எனக்கு அழகனாகத் தெரியவில்லை. யாரைப் பார்த்தாலும் மிருக இச்சையுள்ள ஓர் இயந்திரமாகவே கண்ணுக்குப் படுகிறான் கோகிலா. அந்த முதல் குப்பைய ரெட்டி தொடங்கி எல்லாருமே திருட்டுப் பயல்கள்.”

“இது தற்காலிகமான கோபம். இன்னும் நீ சந்யாசினி ஆகிடவில்லை. உன்னை ஆசைப்படாத யாராவது எதிர்ப் பட்டால் ஒருவேளை நீ அவன் மேல் ஆசைப்படலாம் சுலபா!”

“என்னைச் சுற்றி அத்தனை நிதானமும் பொறுமையுமுள்ள நிஜமான ஆண்மகன் யாருமே இல்லையடி கோகிலா...”

“இதுவரை நீ சந்தித்த ஆண்களில் யாருமே உனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கவில்லை என்கிறாயா?”

“நிர்ப்பந்திக்கப்பட்ட சந்தோஷங்கள் எல்லாம் நிஜமான சந்தோஷங்கள் ஆவதில்லை.”

“யாரும் ஏற்பாடு செய்யாமல் - ஒரு பெண்ணுக்கு ஆணிடமோ, அல்லது ஆணுக்குப் பெண்ணிடமோ ஏற்படுகிற சுயேச்சையான யதேச்சையான உல்லாஸம் என்பதை நீ ருசித்ததே இல்லை என்றா சொல்கிறாய்?”

“குப்பைய ரெட்டி என்கிற படுபாவியிடம் சிக்கியிரா விட்டால் அந்த உல்லாஸம் எனக்கும் கிடைத்திருக்கலாமோ என்னவோ?”

“காமம் சம்பந்தமான எல்லா அசல் மகிழ்ச்சிகளுமே சுயேச்சையானவை. யதேச்சையானவை. தற்செயலானவை! மழையையும், காற்றையும் போல இயல்பானவை.”

“எனக்கு அதை எல்லாம் புரிந்துகொள்ளவே வாய்த்த தில்லை.”

“தற்செயலாக நம்மேல் வீசும் தென்றலின் ஓர் இழை, நிலவின் ஒரு கீற்று, மழையின் ஒரு துளி போன்றது அசலான சந்தோஷம்.”

“நான் உடல்களை நிறையச் சந்தித்திருக்கிறேன். சந்தோஷம் என்பது மனசைப் பொறுத்தது இல்லையா?”

“மனசோடு கூடிய உடம்புதான் சந்தோஷம் சுலபா! உடம்புகள் மூலமாகத்தான் மனசுகளின் சந்தோஷம் உணரப் பட முடியும்.”

“மனசால் தவறு என நினைத்தபடியே இரண்டு உடம்புகள் அசல் சந்தோஷத்தை அறிய முடியாது, உணர இயலாது.”

“ஒருவரை வெல்கிறோம் என்ற உணர்வோடு அடைகிற மகிழ்ச்சியும் சமமானதில்லை.”

“காதலில் முழு மகிழ்ச்சிக்கு இருவருமே சமமாகத் தோற்க வேண்டும், இருவரில் ஒருவர் மட்டுமே ஜெயித்து விடுவது போல அடைவது இன்பமல்ல. வேட்டை. வேட்டையில் தான் குறிவைத்த மிருகத்தை வலையில் பிடித்து வீழ்த்துவார்கள்.”

“வேட்டையில் பிடிபட்ட மிருகம் போல வாழ்ந்து விட்டதாகச் சொல்கிறாய் சுலபா! உனக்கென்று தனியாக ஆசைகள் எதுவும் இல்லையா?”

“உண்டு கோகிலா! உன்னிடம் சொன்னால் நீ ஒரு வேளை என்னைத் தப்பாக எண்ணிக் கொள்ள நேரிடும்.”

“அசடே? இதில் தப்பாக நினைக்க என்ன இருக்கிறது? நான் என் மனசைத் திறந்து உன்னிடம் பேசுகிறேன். நீ உன் மனசு விட்டு என்னிடம் பேசமாட்டேனென்கிறாய்?”

“அன்றரும்பிய மலராகப் பரிசுத்தமாக - ஆண்கள் யாரும் தீண்டாத கன்னியாக இருந்த என்னை விலை கொடுத்து ஒவ்வொருவராக வேட்டையாடினார்கள். முப்பது வயது முடிவதற்குள்ளேயே எண்பது வயது மூப்பை என்னுள் திணித்தார்கள். என் மனத்தின் இயல்பான ஆசை ஊற்றுக் கண்களை எல்லாம் அடைத்தார்கள். பணத்தால் - புகழால் அந்த இனிய ஊற்றுக் கண்கள் அடைபட்டுப் போயின.”

“நீ சொல்வது முழு உண்மை இல்லை சுலபா! உனக்குள் இன்னும் ஏதோ ஓர் ஆசை இருக்க வேண்டும். அதை நீ மறைக்கிறாய்.”

“எப்படி? எதனால் நீ இதை அநுமானிக்க முடிகிறது?”

“உன்னிடம் எல்லாவற்றின் மேலும் வெறுப்பும் கசப்பும் நிரம்பியிருக்கின்றன. எல்லாவற்றையும் வெறுப்பவர்கள் ஏதாவது ஒன்றின் மேல் ஆசைப்படுகிறவர்களாக இருப்பார்கள் என்பது மனத் தத்துவம். பரிபூரணமான துறவிகள்தான் எதையும் வெறுக்காமல் விரும்பவும் - எதையும் விரும்பாமல் விட்டுவிடவும் முடிந்தவர்கள். நீ துறவியைப் போல் பேசுகிறாய், ஆனால் துறவியில்லை. பிஞ்சிலே பழுத்தவள் - ஐமீன் பழுக்க வைக்கப் பட்டவள். உன் வெறுப்புக்கள் மேலாக மிதப்பவை. அவை அப்படி மிதக்கக் காரணமான ஆசைகள் அடி நீராகத் தேங்கியிருக்கின்றன என்பதுதான் உண்மை.”

“இதெல்லாம் எப்படிச் சொல்கிறாய் கோகிலா? ஜோசியமா?”

“ஃப்ராய்டிலிருந்து ஹக்ஸ்லி வரை எவ்வளவு படித்திருப்பேன்? உன் மனசை அப்படியே எக்ஸ்ரே எடுத்து வைக்க என்னால் முடியும்டி சுலபா?”

“நீ அவ்வளவு சிரமப்பட வேண்டிய அவசியமில்லை கோகிலா! நான் மறைத்தால் தானே நீ எக்ஸ்ரே எடுக்க முயல வேண்டும்? நானே சொல்லி விடுகிறேன். உள்ளதை அப்படியே சொல்லி விடுகிறேன். என்னை இரத்தவெறி பிடித்தவள் - காமாந்தகாரி என்றெல்லாம் முடிவு செய்து விடாதே. உண்மையைச் சொன்னேன் என்று மட்டுமே சந்தோஷப்படு! வேறுவிதமாக எண்ணாதே.”

“நானும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். சொல்லு! உண்மைகள் எப்படி இருந்தாலும் விமர்சனத்திற்கு அப்பாற் பட்டவை. அவைகளை உண்மைகளாக மட்டுமே பார்த்துவிட்டு விலகிவிட எனக்குத் தெரியும்! உண்மைகளைப் பிரதிபேதம், பாட பேதம் பார்த்து ஆராய எனக்குப் பைத்தியமில்லை.”

“என்னுடைய அந்தரங்கம் குரூரமானது என்று நீ என்னைக் கேவலமாக நினைக்கலாம்.”

“சந்தோஷங்கள் குரூரமானவை அல்ல, ஆனால் குரூரமான ஆசைகள் இருக்க முடியும். அவற்றை விமர்சிப்பதற்காக நான் வினாவவில்லை...”

“என்னை முதல்முதலாக மற்றவர்கள் கெடுத்துப் பாழாக்கிய மாதிரி ஐம்புலன்களையும் அடக்கி ஆசைகளைக் கட்டுப் படுத்தி விலகி வாழும் இளைஞர்களாகத் தேடிக் கெடுத்துவிட வேண்டும் என்கிற வைரம் பாய்ந்த பழிதீர்க்கும் எண்ணம் என்னுள் அடிமனத்தில் உண்டு.”

“உன்னைக் கெடுத்தவர்கள் பணத்தோடு வந்து அதைச் செய்தார்கள்.”

“உண்மை! அன்று என்னிடம் பணம் இல்லை. அழகு மட்டும் இருந்தது. நான் கெட்டேன். இன்று என்னிடம் பணம் இருக்கிறது. அழகு இருப்பதாக மற்றவர்கள் சொல்கிறார்கள். பணத்தைச் செலவழித்துப் பெண்களைத் தேடி வந்து கெடுக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே சொந்தமா என்ன? பணத்தைச் செலவழித்து ஆண்களைக் கெடுத்துப் பழி தீர்க்க வேண்டும் என்று எனக்குள்ளும் ஒரு தணியாத வெறி உண்டு.”

“ஏற்கெனவே நீ சினிமா மூலம் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாய் என்று உனது கடுமையான விமர்சகர்கள் சொல்லலாம்.”

“சொல்கிறார்கள். ஆனால் அதன் மூலம் பழிதீர்த்து விட்ட திருப்தி எனக்குள் ஏற்படவில்லையே?”

“அப்படியானால் அந்த ஒரு திருப்திக்கு நீ கொடுக்க விரும்பும் விலை என்ன சுலபா?”

“ஆண்வர்க்கத்தைப் பழி வாங்கி முடித்து விட்டேன் என்ற திருப்தி கிடைக்குமானால் என் முழுச் சொத்துச் சுகங் களை இழக்கக் கூட நான் தயாராயிருப்பேன் கோகிலா! அதன் பின் வாழ்க்கையே கூடி எனக்கு அவசியமில்லை. என்னுடைய இலட்சியமே முடிந்து விட்ட மாதிரி...” கண்களில் நீர் மல்கச் சொன்னாள் சுலபா.

அத்தியாயம் - 9

மூன்றாவது ரவுண்டு பிராந்தியும் தீர்ந்தது. சிப்ஸை எடுத்து நீட்டினாள் கோகிலா. வறுவலை எடுத்துக் கொண்டு சாப்பிட்ட சுலபா இன்னொரு ரவுண்டுக்காக கிளாஸை மீண்டும் எடுத்து நீட்டினாள். “நாலாவது ரவுண்டா? உன் மனம் அதிக மாகக் குழம்பிப் போயிருக்கிறது என்று நினைக்கிறேன்.”

“ஆமாம்! இன்னொரு ரவுண்டுதான் அதைத் தெளிவு படுத்தும்.”

கோகிலா மறுக்கவில்லை. “எல்லாப் பார்ட்டிகளிலும் ஹோஸ்ட் பாட்டிலை மூடி வைத்தபின் கிளாலை நீட்டுபவர் களால் ஹோஸ்டுக்கு லாபமே தவிர நஷ்டமில்லை. அப்படி விருந்தினன் கேட்டதைச் செய்கிற தங்கக் கம்பியாக இழுபடு வான். அவனுக்காக மூடிய சீஸா மட்டுமல்லாமல் அவசிய மாயின் புதிய பாட்டில்களே திறககப்படலாம்” - என்று கோகி லாவின் கணவர் மாடிஸன் அவென்யூ வெளியீடான ‘பிஸினஸ் பார்ட்டி அண்ட் காக்டெயில்’ - என்ற புத்தகத்திலிருந்து அடிக்கடி ஒரு கொட்டேஷனை எடுத்துச் சொல்லுவார். இப்போது கோகிலாவுக்கு அந்த மேற்கோள் நினைவு வந்தது. சுலபாவுக்கும் அது பொருந்தியது.

அவளைப் பொறுத்தவரை இப்போது சுலபா கிளாலை நீட்டுகிறாள். சுலபாவிடமிருந்து மேலும் புதிய விஷயங்கள் தெரியும் என்றால் அவளுக்காகப் பழைய பாட்டிலின் மீதத்தை மட்டும் இன்றிப் புதிய பாட்டில்களே திறக்கப்படலாம் என்கிற முடிவுக்கு வந்தாள் கோகிலா,

நவ நாகரிகமான டேபிள் மேனர்ஸ், எக்ஸிகியூட்டிவ் பார்ட்டீஸ், பற்றி நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்களை வீடு நிறைய வாங்கி அடுக்கியிருந்தார் அவள் கணவர். அதில் ஒரு புத்தகத்தில், “ஒரு புதிய பாட்டிலின் மூடியைத் திறப்பதனால் ஒரு புதிய உலகின் கதவுகளே திறக்கப்பட நேரிடலாம். அப்படி வேளைகளில் கஞ்சனாகி விடாதே. பாட்டிலைத் தாராளமாகத் திற. கிளாஸ்களை நிறை. லாபத்தை அடை” என்று கூட இருந்தது. சுலபாவுக்கு நாலாவது ரவுண்டு ஊற்றிய போது ஐந்தாவது ரவுண்டையும் எதிர் பார்த்துப் பாட்டிலை மூடாமலே வைத்திருந்தாள் கோகிலா. தான் மட்டும் கச்சிதமாக மூன்றாவது ரவுண்டோடு நிறுத்திக் கொண்டாள். “என்னடி கோகிலா? உன் கிளாஸ் மட்டும் காலியாவே இருக்கு?” - என்று சுலபா கேட்ட போது கூட, “உனக்கே தெரியும் டி சுலபா! நான் எப்பவுமே மூணு ரவுண்டோட நிறுத்திடுவேன்... மோர் ஓவர் டு டே ஐயாம் நாட் ஃபீலிங் வெல்...” - என்று சமாளித்தாள். கோகிலா இப்படிக் கூறியபின் சுலபா அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவுமில்லை.

‘டிப்ளமேடிக் பார்ட்டி’களில் இப்படி ஒரு தரப்புக் கிளாஸை விட்டு விட்டு, எதிர்த் தரப்பு கிளாஸை மட்டுமே நிரப்புவது ஒற்றறியும் முயற்சியாகக் கருதப்படும் என்பதும் அப்படி விருந்துகளில் எப்போது எத்தனை ரவுண்டு ஊற்றினாலும் இருதரப்பு கிளாஸ்களிலுமே சம அளவில் ஊற்ற வேண்டும் என்பதும் மரபு. தொடங்கும் போதும் இருதரப்பு கிளாஸ்களிலும் டோஸ்ட் சொல்லி நிரப்பி உயர்த்திப் பிடிக்க வேண்டும். முடிக்கும் போதும் அப்படியே முடிக்க வேண்டும். சுலபாவின் நிலையில் ராஜதந்திரம் எதுவும் இல்லை. அவளே அதிகம் பருக விரும்பினாள், அதிகம் பேசவும் முன்வந்தாள். உள்ளே போகப் போக நிறைய விஷயங்கள் வெளி வந்தன. தன்னை நம்பி விருந்துக்கு வந்த சிநேகிதியிடம் இப்படிச் ‘சாராயத்தை வார்த்துப் பூராயம் அறிவது’ சரியில்லை என்று கோகிலாவுக்கே தோன்றினாலும் அந்த அடக்கத்தை ஆசை வென்றது. சுலபாவின் அந்தரங்கங்களை அறியும் ஆசையைக் கோகிலாவால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. ஒரு நிலமைக்குப் பின் கோகிலா கேட்காமலே சுலபா விஷயங் களைக் கொட்டத் தொடங்கினாள். இவள் தடுத்தால் கூட நிறுத்தமாட்டாள் போலிருந்தது. அத்தனை வேகத்தில் எல்லாம் பீறிட்டுக் கொண்டு வந்தன.

“உனக்குத் தெரியுமோ கோகிலா? அந்தக் குப்பைய ரெட்டியே நல்ல அழகன். அரைத்த சந்தனம் மாதிரி நிறத்தில் கட்டுமஸ்தான உடம்பு. இறுகிய தசைகள். சிரித்தால் அவன் முகத்தை விட்டுப் பார்வை விலகாது. ஆனல் அந்தப் படுபாதகன் என்னை ஒரு பெண்ணாக இலட்சியம் பண்ணித் தீண்டியதே இல்லை. மற்றவர்களுக்கு என் உடம்பை விற்றுப் பணம் பண்ணுவதிலேயே குறியாயிருந்தான்.”

“நீ அவனைக் கவர முயலவே இல்லையா? ஒரு வேளை உன் அந்தரங்கம் அவனுக்குத் தெரியாதோ என்னவோ?”

“தெரியாமல் என்னடீ? இங்கே என்னை அழைத்து வந்து அந்தக் கோடம்பாக்கம் லாட்ஜில் தங்க வைத்தபோது கூட அவன் ஒரு டபிள் ரூமாக எடுத்ததைப் பார்த்து நான் மகிழ்ந் தேன். டபிள் ரூமில் என்னை விட்டுவிட்டு அவன் அதே மாடி யில் இன்னொரு தனியறையில் போய்த் தங்கினான். அப்போது நானே வெட்கத்தை விட்டு விட்டு ‘சேர்ந்து தங்கும்படி’ மனசு விட்டுப் பேசி அவனைக் கெஞ்சினேன். என் ஆசையைக் கூடிக் குறிப்பாக அறிவித்தேன். அவன் மறுத்து விட்டான்.

“உன்னை ஒரு சினிமாப் பார்ட்டி இப்போ இங்கே இட்டுக்கினு போக வரப் போவுது. நான்கூட இருந்தா சந்தேகப்படுவாங்க” - என்று புளுகினான்.”

“உண்மையான காரணம் என்னவாயிருக்கும்டி சுலபா? அவனுக்கு உன்னைப் பிடிக்கலியா? அல்லது அவன் ஆண்மையே அற்றவனா? என்ன காரணம்...?”

“என்னைவிட மட்டமான, முகம் முழுவதும் அம்மை வடு நிரம்பிய அழகற்ற பெண்களோடு கூடக் குண்டுரில் அவன் சுற்றியிருக்கிறான்.”

“ஸோ... ஆண்மையுள்ளவன் தான்! உன்னை மட்டும் ‘விற்பனைக் குவாலிட்டி’ கெடாமல் விற்றிருக்கிறான்.”

“இது எச்சிற் பண்டம். நமக்கு வேண்டாம் என்கிற அலட்சியமும் திமிரும் கூடக் காரணமாயிருக்கலாம்.”

“அந்த அம்மை வடு மூஞ்சிப் பெண்கள் என்றாயே. அவர்கள் எச்சிற் பண்டம் இல்லையா?”

“இல்லை! அவர்கள் என் மாதிரி டைப் இல்லை. உயர் குடும்பங்களில் பிறந்தவர்கள். இவன் அழகுக்காக இவனை வட்ட மிட்டவர்கள்.”

“உன் அழகை இவன் விற்க மட்டுமே விரும்பினான் என்கிறாயா சுலபா?”

“இவன் அழகன் என்று இவனிடம் இரகசியமாக வந்த அழகற்ற பெண்களைக் கூட இவன் பயன்படுத்திக் கொண்டான்,”

“அதே சமயம் இவனே தேடிக் கண்டுபிடித்த அழகியான உன்னை, நீ ஏழை, தாழ்ந்த பிரிவினள் என்பதற்காக மற்றவர்களுக்கு விற்றான் என்கிறாய்!”

“அவர்கள் மூலமும் இவனுக்குப் பணம் வந்தது. என் மூலமும் இவனுக்குப் பணம் வந்தது.”

“அவர்களை இவன் பெண்ணாக மதித்தான். பெண்ணாக நடத்தினன். பெண்ணாக அநுபவித்தான். உன்னை மட்டும் வியாபாரப் பொருளாக விற்று லாபம் சம்பாதித்தான்.”

“என்னை இரத்தமும் சதையுமுள்ள பெண்ணாகவே மதிக்கவில்லை அந்தக் கிராதகன்.”

“உன் ஆதங்கம் புரிகிறது சுலபா! ஒரு பெண்ணுக்கு ஆண் செய்ய முடிந்த அவமானங்களில் மிகப் பெரியது அவளைப் பெண்ணாகவே புரிந்து கொள்ளாமலிருப்பதுதான்.”

“அவன் என்னை மானபங்கப் படுத்தியிருந்தால் கூடி நான் திருப்திப் பட்டிருப்பேன். அதற்குக் கூட நான் லாயக்கில்லாதவள் என்று அவன் அலட்சியம் செய்ததுதான் எனக்கு பெரிய மானபங்கமாயிருந்தது கோகிலா. என்ன மானபங்கப்படுத்தாமலே அதைவிட அதிகமாக அவமானப் படுத்தி விட்டான் அவன்.”

“ஒரு பெண்ணை மானபங்கப் படுத்துவதுதான் அவமானம் என்று இதுவரை கேள்விப் பட்டிருக்கிறேன். நீயோ மானபங்கப் படுத்தக் கூட லாயக்கற்றவள் என ஒரு பெண்ணை ஓர் ஆண் ஒதுக்கியதன் மூலமே அவமானப்படுத்தியது பற்றிக் கூறுகிறாய்.”

“அந்த அளவுக்கு நான் கேவலமானவள், பலரிடம் சீரழிந்தவள் என்று என்னைப் பற்றி அவன் மிக மிக மட்டமாக நினைத்திருக்கிறான் கோகிலா!”

“நீ அவனை நினைத்து ஏங்கியிருக்கிறாய்! அவன் உன்னைச் சாதாரணமாகக் கூட நினைக்கவே இல்லை.”

“நினைக்காதது கூடத் தப்பில்லை. நான் ஏங்கியதை அலட்சியமே செய்திருக்கிறான் அவன். அவனைப் போல் ஒருத்தனை நினைத்து ஏங்க நான் தகுதியற்றவள் என்பது போல் கூட நடந்து கொண்டிருக்கிறான் அவன்.”

“ஆண் பிள்ளையின் திமிர்களில் மிகவும் குரூரமான மன்னிக்க முடியாத திமிர் இது.”

“இன்று அவன் அகப்பட்டால் கூட அந்தத் திமிருக்குப் பழி வாங்குவேன். இன்னும் நான் தீர்க்க முடியாத பழங் கணக்கு அது.”

“நான் அநுமானித்தது சரிதான் சுலபா.”

“என்ன அநுமானித்தாய் நீ?”

“யாரொருவர் மனப்பரப்பில் வெறுப்பும் விரக்தியும் நிராசையுமாக மிதக்கின்றனவோ அவருடைய அடிமனத்தில் இந்த உணர்வுகள் மிதக்கக் காரணமான ஏதாவது ஓர் ஆசை நிச்சயம் இருக்கும். அந்த ஓர் ஆசை மட்டும் வற்றி விடுமானால் அப்புறம் இந்த வெறுப்பு, விரக்தி, எல்லாமே மிதக்க முடியாமற் போய் விடும்.”

“இன்று கோடிக்கணக்கான இரசிகர்களின் கனவில் அழகியாக அங்கீகரிக்கப்பட்டு விட்ட நான் அதைப் பிடிவாதமாக அங்கீகரிக்க மறுத்த ஒருவனைப் பழி வாங்கவே அந்தரங்கமாக விரும்புகிறேன்.”

“விரும்பினால் மட்டும் போதுமா? அந்த ஒருவன் அகப்பட வேண்டுமே? அப்படியே அகப்பட்டாலும் அவன் பழையபடி தான் இருப்பான் என்பது என்ன நிச்சயம்? ஒரு வேளை இன்று அவன் உன்னைக் காமுறலாம்.”

“காதலோ காமமோ அவனுடைய வசதிக்காக என்னிடம் காத்திருக்கவில்லை.”

“ஆனால் நீ இன்னும் ஏங்கிக் கொண்டிருக்கிறாயே?”

“இது ஆசை தீர்வதற்கான ஏக்கமில்லை! அதே மாதிரித் தோற்றமுள்ள மேல் வர்க்கத்துப் பரிசுத்தவான் ஒருவனைச் சீரழித்தால் கூட என் வேகம் தணிந்து விடலாம்.”

“துர்த் தேவதைகளின் கோபத்தைத் தணிக்கத்தான் ஆடு கோழிகளைப் பலி கொடுப்பார்கள் சுலபா!”

“குப்பையரெட்டி விஷயத்தில் நானும் ஒரு துர்த் தேவதையாகத்தான் காத்திருக்கிறேன். என் பலிகளில் தான் உள் வெறுப்புத் தணியும்.”

மேலும் அடுத்த ரவுண்டுக்காக அவள் கிளாஸை நீட்டிய போது கோகிலா இதமாக மறுத்து அவளைக் கைத்தாங்கலாக டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள். சுலபாவுக்குள் இத்தனை வேதனைகள், ஏக்கங்கள், அந்தரங்கங்கள், பழி வாங்கல் உணர்வுகள் நிரம்பியிருக்கும் என்று கோகிலா எதிர் பார்க்கவில்லை. சுலபா அவள் நடித்த படங்களில் எல்லாம் ஏற்றவற்றை விடப் பெரிய சுயமான குணசித்திரத்தைத் தனக்குள் தானாக ஏற்று நடமாடிக் கொண்டிருந்தது புரிந்தது. கோகிலாவுக்கு அவள் மேல் பிரியமாகவும் இருந்தது. இரக்கமாகவும் இருந்தது. பெரிய பெரிய சாம்ராஜ்யப் பகைகளை விட இந்த அந்தரங்கமான காதல் பகை - அல்லது காமப் பகை கடுமையாகவும் பெரியதாகவும் உள்ளே மறைந்திருப்பது புரிந்தது.

அத்தியாயம் - 10

‘அவள் தான் இணையற்ற பேரழகி’ என்று ஒப்புக் கொண்ட எல்லாரையும் சுலபா மன்னிக்கத் தயாராயிருந்தாள். அழகில் அவளுடைய ‘சுப்ரீமஸியை’க் கேள்வி கேட்கக் கூடியவர்கள் சர்ச்சை செய்யக் கூடியவர்கள் எல்லாரையும் அவள் வெறுத்தாள். விரோதித்துக் கொள்ளக் கூடத் தயாராயிருந்தாள். காமிராமேனிடம் கூட முதலில் அவளுக்கு ஏற் பட்ட விரோதம் பின்பு அவர் நேரில் வந்து ‘உங்களைப் போலக் காமிராவுக்கு அழகான முகம் வேற இல்லே’- என்று புகழ்ந்தவுடன் மாறிவிட்டது. மன்னித்து விட்டாள்.

சுய கர்வத்தை மிதக்கச் செய்கிற தாழ்வு மனப்பான்மை அவளுள்ளே நிரம்பியிருந்தது. அந்தத் தாழ்வு மனப்பான்மை மட்டும் உள்ளே நிரம்பியிராவிட்டால் அவளுடைய கர்வம் மேலெழுந்து நிற்காமல் போயிருக்கும்.

தன் வேலைக்காரர்கள் கீழ் நிலையிலுள்ளவர்கள், ஊழியம் புரிகிறவர்கள் கால்களில் விழுந்து கும்பிடுவது அவளுக்குப் போதையூட்டியது.

அதை அவள் விரும்பினாள். குப்பையரெட்டி அவளை அன்று ஒரு மனுஷியாகவே மதிக்கவில்லை. இன்றோ பலர் அவளைத் தெய்வமாக மதித்தார்கள். வணங்கினார்கள்.

என்ன மதிப்பு இன்று வந்தாலும் குப்பையரெட்டி அன்று மதிக்காததும் சேர்த்தேதான் நினைவு வந்தன. அதை மறக்கவே முடியவில்லை. ஆறாத வடுவாக அது உள்ளே இருந்தது. சினிமா சம்பந்தப்பட்டவர்களின் பிள்ளைகள் பெண்கள் கலியாணமாகிப் பார்க்க வந்தால் அவர்கள் விழுந்து கும்பிட்டு ஆசி கேட்கிறார்களா இல்லையா என்று கவனித்தே அவர்களுக்குத் தான் செய்ய வேண்டியதைச் செய்தாள். இது பற்றிக் காரியதரிசி கவிதாவுக்கு ஸ்டான்டிங் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் இருந்தன. நம்பர் டூ கணக்கு ரொக்கத் தொகையிலிருந்து நூறு ரூபாய் உறையிலிட்டது, ஐநூறு ரூபாய் உறையிலிட்டது என இரண்டு கவர்களைத் தயாராக வைத்திருப்பாள் கவிதா.

தேடிவந்த மணமக்கள் காலில் விழுந்து கும்பிட்டால் எஜமானியிடம் ஐநூறு ரூபாய் உறையை நீட்டுவாள். காலில் விழுந்து கும்பிடா விட்டால் வெறும் நூறு ரூபாய் உறைதான். கவிதாவின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்த போது சுலபா அதில் ஆர்வமே காட்டாதது போல நடந்து கொண் டாள்.

“அவசரப்பட்டுக் கல்யாணம் கிலியாணம்னு ஆம்பிளையோட மாட்டுத் தொழுவத்திலே தாலிக் கயிற்றாலே கட்டப்பட்டு உள்ளே போயிறாதே. உன் சுதந்திரம் எல்லாம் பறிபோய் நிற்கப் போறே” - என்று சுலபா கூறியபோதே திருமணங்களின் மேலும் ஆண்களின் மேலும் அவளுக்கு இருந்த வெறுப்பும் ஆத்திரமும் புலப்பட்டன.

தான் கலியாணம் செய்து கொள்வதற்கு முன்பே சுலபாவிடமிருந்து விலகிட வேண்டும் என்று அவள் நினைத்துக் கொள்வதுண்டு. கலியாணத்திற்குப் பின் சுலபாவிடம் வேலை பார்ப்பது மிகவும் சிரமம் என்று கவிதா தனக்குத் தானே புரிந்து கொண்டிருந்தாள். சுலபாவும் ஜாடைமாடையாக அதைத் தெரிவித்திருந்தாள்.

“பெண்களை அவமானப் படுத்தறாங்க, அலட்சியம் செய்யிறாங்க, கொடுமைப் படுத்தறாங்க, கேவலப் படுத்தறாங்க... கொத்தடிமை மாதிரி வேலை வாங்கறாங்க. பிள்ளை பெறுகிற மிஷின் மாதிரித் தேய்ந்துத் துரு பிடிக்க விடறாங்க, கொஞ்சம் முதுமை வந்ததும் புறக்கணிக்கிறாங்க...இத்தனை பண்ணியும் எந்தப் பொம்பிளையும் ஆம்பிளை கையாலே தாலி கட்டக் கழுத்தை நீட்டிக்கிட்டு ஓடறதை இன்னும் நிறுத்தலே. ஆம்பிளைகிட்ட அப்பிடி என்னதான் மயக்கமோ தெரியிலே” என்று கடுமையாக விமர்சிப்பாள் சுலபா.

கவிதா இவற்றையெல்லாம் விமர்சிக்காமல் விவாதிக்காமல் பொறுமையாகக் கேட்டுக் கொள்வாள். விவாதிப்பதும், விமர்சிப்பதும் எஜமானிக்குப் பிடிக்காதவை என்பது தான் காரணம்.

இந்தப் போக்கைப் பற்றி எஜமானியின் பொருளாதார ஆலோசகரும், தன் மாமாவுமான கனகசபாபதியிடம் மெதுவாகப் பலமுறை பிரஸ்தாபித்து விவாதித்திருக்கிறாள் கவிதா.

கவிதாவைப் போன்ற திருமணமாகாத ஓர் இளம் பெண்ணிடம் எந்த அளவு இதற்கு விளக்கமாகப் பதில் சொல்லலாமோ அந்த அளவு கனகசபாபதியும் பதில் சொல்லியிருந்தார்.

வரவர இப்படிப் புகார் கவிதாவிடம் இருந்து அதிகம் வந்தது.

“எப்பப் பார்த்தாலும் இதையே சொல்லிப் போரடிக்கிறாங்க! அத்தனை ஆம்பளைங்களும் நரமாமிச பட்சிணிங்கிறாங்க, அதுக்கு நான் உடனே கைதட்டி சபாஷ் சொல்லணும்னும் ஆசைப்படறாங்க மாமா! ஒரே ரோதனையாப் போச்சு...”

“இந்த விஷயத்திலே அவள் ஒரு ‘சைக்காலஜிகல் மித்’ அதாவது மனோதத்துவப் புதிர் கவிதா. ‘ஃபெமினிஸ்ட்’னு கூட ரொம்ப கெளரவமாகச் சொல்லிவிட முடியாது. இதில் அவளை நாம மாத்தறது முடியாத காரியம். நமக்கு ஒத்து வர்ர வரை இருக்கலாம். பிடிக்கலைன்ன முதல்நாள் சொல்லிட்டு மறு நாளே ஒதுங்கிக்கலாம்... தப்பில்லே... கிட்டத்தட்ட அலுங்காமல் குலுங்காமல் மாசம் மூவாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறே! காரிலே கூட்டிக்கிட்டுப் போய்க் காரிலேயே வீட்டு வாசல்லே கொண்டு வந்து டிராப் பண்ணிடறா. கோடிக்கணக்கிலே வெள்ளையும் கறுப்புமாகச் சொத்தைச் சேத்து வச்சுட்டுப் பூதம் காக்கிற மாதிரித் தனியே காத்துக் கிட்டிருக்கா... உனக்கோ இன்னும் ரெண்டு மூணு வருஷத்திலே கலியாண ஏற்பாடு எதுவும் நாம பண்ணப் போறதில்லே. அதுவரை பல்லைக் கடிச்சுக் கிட்டுப் பொறுமையா இருந்துடேன். கலியாண ஏற்பாடுன்னு வர்ரப்போ நானே சுலபா கிட்டப்போயி, ‘நாளையிலேருந்து கவிதா வேலைக்கு வரமாட் டாள்’னு சொல்லிடறேன். அதுவரை எனக்காகப் பொறுத்துக்கோ! ஆம்பளை செகரெட்டிரி அவளுக்குப் பிடிக்காது. வேற பொம்பளைங்களை விடறது நம்பிக்கையில்லே. என் இண்ட்ரஸ்டிலேயாவது நீ அங்கே இருந்தாகணும். அவளோட நம்பர் டூ அகவுண்ட் பணத்திலே என்னோட க்ளையண்ட்ஸ் நெறையப் பேர் கடன் வாங்கியிருக்காங்க. நான் சம்பந்தப் பட்டிருக்கேன்”

இவ்வளவும் கேட்ட பின் வேறு வழியின்றி “சரி மாமா! பொறுத்துக்கிறேன்” என்பாள் கவிதா. விரக்தியையும் ஆசைகளையும் பக்கத்தில் பக்கத்தில் வைப்பது, தளிரையும் நெருப்பையும் அருகருகே இருக்கச் செய்வதுபோல் தான். சுலபாவின் அருகே கவிதாவும் அப்படித்தான் இருந்தாள். சதா காலமும் சுலபாவின் விரக்தியான ஆண் எதிர்ப்புப் பிரசாரத்தைக் கேட்டுக் கேட்டு இளம் தளிராக இருந்த அவள் வெதும்பினாள் வாடி வதங்கினாள். சபித்தாள்.

ஒருநாள் சுலபா ஏதோ ஸ்டூடியோவில் படிப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் அன்று லீவு போட்டிருந்த கவிதாவை டாக்ஸி ஸ்டாண்ட் அருகே ஓர் அழகிய இளைஞனோடு பார்க்க நேர்ந்து விட்டது. சுலபாவின் ஏ.சி. கார் கவிதாவின் அருகே வந்து ஓசைப் படாமல் நின்றது. “நீ மட்டும் ஏறிக்கொள்” என்று கடுப்போடு அவளை அழைத்தாள் சுலபா.

“என் கூட இன்னொரு நண்பர் இருக்கிறார் அம்மா! இன்று நான் லீவு... நாளை உங்களைப் பார்க்கிறேன்' என்றாள் கவிதா.

“யாருடி அவன்?”

கவிதா இந்த ஆணவமான கேள்விக்குப் பதிலே சொல்லவில்லை. நல்ல வேளையாகக் கவிதா ஏ.சி. காருக்குள் உட்கார்ந்து கதவை அடைத்துக் கொண்டு எஜமானியம்மாளிடம் பேசி விட்டு வந்ததால் அவள் ‘யாருடீ அவன்?’ என்று கேட்டது வெளியே கவிதாவின் காதலனுக்குக் கேட்டிருக்க முடியாது. மெல்ல ஏதோ சாக்குப் போக்குச் சொல்லிக் கழற்றிக் கொண்டாள் கவிதா.

அந்த ஒரு நாள் அவளுடைய சுதந்திரமான தினம், எஜமானியின் விரக்தியில் இருந்து வெளி உலகத் தென்றலைத் தாராளமாக அநுபவிக்க முடிந்த நாள்.

“கூப்பிட்டால் போய்விட்டு வருவதுதானே?” என்றான் அவள் காதலன்.

“ஐயோ போரடிச்சுக் கொன்னுடுவா... இன்னிக்கு நான் லீவு.”

“இத்தனை பெரிய ஸ்டார் தெருவிலே பார்த்து ஏ.சி. டயோட்டாவை அருகில் கொண்டு வந்து நிறுத்திப் பிரியமாக் கூப்பிடறப்பப் பிகு பண்ணிக்கிறியே?”

“உங்களுக்குத் தெரியாது! அந்த ஏ.சி.க் காருக்குள்ளே ஒரே புழுக்கமா இருக்கும். அவங்க சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி ரம்பமா அறுப்பாங்க.”

“நீ அவங்க கிட்டக் கொஞ்சம் மரியாதையா நடந்திட்டிருக்கணும் கவிதா” என்றான் அவள் காதலன்.

அந்தப் பேச்சை மாற்றி அவனைத் தன் உலகுக்குள் கொண்டு வர அவள் மிகவும் சிரமப்பட்டு முயல வேண்டியிருந்தது. லிவு போட்டுவிட்டு வந்தபின்னும்தேடிவந்து தன்னுடைய சுதந்திரத்தில் குறுக்கிட்ட எஜமானியம்மாள் மேல் கோபம் கோபமாக வந்தது கவிதாவுக்கு.

அத்தியாயம் - 11

மறுநாள் அவள் வேலைக்குப் போனபோதும் நாகரிகம் இல்லாமல் அவள் மனசு புரியாமல் சுலபா அதே பேச்சை மீண்டும் தொடங்கினாள்.

“ஏண்டீ யாரோடவோ சுத்தறியே? உன் அங்கிளுக்குத் தெரியுமாடீ? இதெல்லாம் ஏதாவது வம்புலே கொண்டு போய் விட்டுடப் போவுது? ஜாக்கிரதை” - என்று சுலபா தேவையின்றித் தலையை நுழைத்து உரிமை எடுத்துக் கொண்டது கவிதாவுக்கு அறவே பிடிக்கவில்லை. எஜமானி பத்து வாக்கியம் பேசினால் கவிதா பதிலுக்கு அரை வாக்கியம் சொன்னாள்.

“என்ஃபிரண்டு ரொம்ப நல்லவரும்மா... அங்கிளுக்குத் தெரியும்” - என்று பதில் சொல்லிவிட்டு வழக்கமான வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். தான் அதுபற்றி விசாரிப்பதே கவிதாவுக்குப் பிடிக்கவில்லை என்பதைச் சுலபா புரிந்து கொண்டாள். அதனல் அவளது ஆத்திரம் மேலும் அதிகமாயிற்று. அவள் தன்னைப் பொருட்படுத்தவில்லையோ என்று எண்ணியதும் சுலபாவின் ஈகோ கிளர்ந்தெழுந்து விசுவரூபம் எடுத்து விட்டது. ‘காதல் விஷயத்தில் தலையிடவோ அட்வைஸ் கூறவோ உனக்கென்ன யோக்கியதை?’ - என்பதாகக் கவிதா தன்னைப் பற்றி எண்ணுகிறாளோ என்று சந்தேகம் வந்தவுடன் சுலபாவின் ஆணவமும் ஆத்திரமும் சீறிப் படம் எடுத்தன; சுலபா ஆடிட்டருக்கு ஃபோன் செய்து பேசினாள். “லீவு போட்டுட்டு எவனோ கண்டவனோட எல்லாம் சுத்திக்கிட்டிருக்காளே?” - என்று தடாலடியாகப் பேசினாள். ஆடிட்டருக்கே சுலபா பேசிய விதம் பிடிக்கவில்லை.

ஆடிட்டர் சொன்னர்: “இதெல்லாம் நாம ஒண்ணும் கன்டிக்க முடியாது சுலபா. கவிதா இந்தக் காலத்துப் பெண்... ஒருத்தர் சொல்லிக் கேட்கிறவள் இல்லே. இப்ப முளைச்சதுகள் எல்லாம் அடங்கவா செய்யிது?”

அவள் இந்தக் காலத்தவள் என்று கனகசபாபதி சொல்லிய விதத்திலிருந்து தன்னை ஹைதர் காலத்து மனப்பான்மையுள்ளவள் போல அவர் சித்திரிக்க முயல்வது சுலபாவுக்கு எரிச்சலூட்டியது. தன் இளமையையோ, அழகையோ இப்படிக் குறைத்து மதிப்பிடும் எந்த உரையாடலையும் அவள் ஒப்பியதுமில்லை உடன்பட்டதுமில்லை. மறுக்காமல் விட்டதுமில்லை.

“நாம மட்டும் போன நூற்றாண்டிலியா இருக்கோம்? நாமளும் இந்தக் காலத்திலே தானே இருக்கோம் ஆடிட்டர் சார்?”

“இருக்கோம்! ஆனால் பெரியவங்க சொல்றதை இந்தக் காலத்து பசங்க எங்கேம்மா கேட்கிறாங்க? நீயே சொல்லு...”

மீண்டும் மீண்டும் சுலபாவுக்கும் கவிதாவுக்கும் நடுவிலேயே ஒரு தலைமுறைக் காலம் இடைவெளிப்படுவது போலக் கனகசபாபதி பேசியது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆத்திர மூட்டிவிட்டது.

“எதுக்கும் கண்டிச்சு வையுங்க சார்! இங்கே வேலை பார்க்கிறதனாலேதான் நான் கவலைப்பட வேண்டியிருக்கு... இன்னாரோட பெர்ஸனல் செகரெட்டரியாம்... இப்பிடிக் கண்டபடி சுத்தறாளாம்னு பேராயிடிப்படாது.”

“சொல்றேன். நாம சொல்லத்தான் சொல்லலாம். அப்புறம் கேட்கிறதும் கேட்காததும் அவள்பாடு” - என்று சமாதானம் சொல்லி ஃபோனை வைத்தார் ஆடிட்டர்.

ஏற்கனவே சுலபாவிடம் வேலைக்குச் சேருவதற்கு முன்னால் கவிதாவுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாஸே நடத்தியிருந்தார் அவர். அவளுக்கு எது எது பிடிக்கும் எது எது பிடிக்காது என்று படித்துப் படித்துக் கவிதாவிடம் சொல்லியிருந்தார் அவர்.

“அங்கே வேலை பார்க்கிற வரையில் அவளை விட அழகாகத் தோன்ற முயலாதே! அவளை விட நீ அழகானவள் என்பதை மறந்துவிடு, அவளைவிட நல்ல சேலை உடுத்தாதே! நல்ல நகை அணியாதே! அவள் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதோ நீ தொலைந்தாய்! எந்த முனையிலும் சுலபாவின் ஈகோவை இலேசாகக் கூட வடுப்படுத்த முயலாதே... அது உனக்கு ஆபத்துக் கவிதா.”

“அதுக்காக நான் அவலட்சணமாக மாறிவிட முடியுமா?”

“மாறவும் வேண்டாம்! ஒன்றும் வேண்டாம். அவள் ஈகோவை அப்படியே ஒப்புக் கொள். அதற்குப் பணிந்து வணங்குவது போல் பாவனை செய், ‘மேடம் யூ லுக் ஸோ ப்யூட்டிஃபுல்’ என்பது போல் அவ்வப்போது நடுநடுவே அவளிடம் சொல்லிவை! உன் சொந்த அழகைச் சொந்த வாலிபத்தை மெல்ல மறந்து விடு.”

. “இது என்ன உத்தியோகமா அல்லது தண்டனையா?”

“இரண்டும் தான் கவிதா.”

“ஒரு சம்பளத்திற்கு நாலு வேலே பார்க்கச் சொல்லுகிறீர்களே?”

“என்ன செய்வது கவிதா! இவள் ஒரு‘மென்டல் கேஸ்’. இப்படி எல்லாம் கவனமாக நடக்காவிட்டால் நீ இவளிடம் நீண்ட காலம் வேலை பார்க்க முடியாது.’’

“இவளைத் திருப்திப்படுத்த நான் என்னைக் கிழவியாக்கிக் கொள்ள முடியுமா?”

“யார் ஆக்கிக் கொள்ளச் சொன்னர்கள்? சுலபாவின் இளமையை நீ மறுக்க முயலாதே என்று தானே சொன்னேன்.”

“இதன் அர்த்தம்?”

“அவள் இளமையைக் கொண்டாடு உன் இளமையை மறந்து விடு.”

“அது எப்படி மாமா சாத்தியம்?”

“அது நிச்சயமாக சாத்தியம் கவிதா! நாம் மறந்து விடு வதனால் நமது இளமையும் அழகும் குன்றிவிடப் போவதில்லை. தான் அழகு என்று இடைவிடாமல் நினைத்து அதையே எண்ணி மாய்ப்பவர்கள்தான் மூத்துப் போகிறார்கள். ஞாபக மில்லாமல் விடப்படும் எந்த அழகும் அப்படி மூப்பதில்லை. கவனித்துப் பராமரிக்கப்படும் எத்தனை மல்லிகைப் பதியன்கள் பூக்காமலே போகின்றன! யாரும் கவனிக்காத எத்தனை வன மல்லிகைகள் தாமாகப் பூத்துக் கொட்டுகின்றன.”

அவரது வாதம் சரியாகவே இருந்தது. அவள் மறுத்துப் பேசவில்லை. சுலபாவிடம் வேலைக்கு ஒப்புக்கொள்ள இசைந்தாள்.

பழைய இந்த விவாதங்கள் எல்லாம் இப்போது கவிதாவுக்கு மீண்டும் நினைவு வந்தன. சுலபாவின் குணசித்திரத்தை மாமா கனக சபாபதி எத்தனை கனகச்சிதமாக எடை போட்டு முடித்திருக்கிறார் என்று உணர்ந்தபோது கவிதாவுக்கு வியப்பாகவே இருந்தது.

வெறும் உடல் நோயாளிகளிடம் கூட நர்ஸாக இருந்து விடலாம். அது மிகவும் எளிய காரியம். தாங்கள் நோயாளிகள் என்று தாங்களே உணராத மன நோயாளிகளிடம் உதவியாளராயிருப்பது பயங்கரமானது. தான் ஒரு மனநோயாளி என்பது சுலபாவுக்கே தெரியாது. அதை அவளுக்குத் தெரி விக்கவும் கூடாது. அவளுடைய அழகுக்கும், ஆரோக்கியத்துக்கும் கவிதாவே அடிக்கடி நற்சான்றிதழ் கொடுக்கிற காரியத்தையும் செய்தாக வேண்டியிருந்தது. சிரமமாகத்தான் இருந்தது. சுலபாவின் முரண்டுகளுக்கும் அறியாமைக்கும் ஏற்ப இசைந்து பழகுவது கவிதாவுக்குப் பழகி இருந்தாலும் சமயா சமயங்களில் ஒரே மேக்காலில் ஒரு நொண்டிமாட்டோடு சேர்ந்து இழுக்கிறாற்போல உணர்ந்தாள் கவிதா.

கவிதாவுக்கு ஆங்கிலமும் இந்தியும் நன்றாகப் பேசவரும். சுலபாவுக்குத் தெலுங்கும் தமிழும் மட்டுமே வரும். ஆங்கிலம் வராது. இந்தி தெரியாது.

பிறரிடம் கவிதா இந்தியும் ஆங்கிலமும் பேசுமுன் எஜமானிக்கு அது உகப்பாக இருக்குமா இல்லையா என்று பார்த்து யோசித்துத் தயங்கிப் பேச வேண்டியிருக்கும். எஜமானிக்குப் பிடித்தால் பேசவேண்டும். பிடிக்காவிட்டால் பேசாமல் இருக்க வேண்டும்.

படப்பிடிப்புக்காக அவர்கள் வெளிநாடு போயிருந்தபோது சுலபசவின் முன்னிலையில் ஒரு வெள்ளைக்காரனிடம் கவிதா சரமாரியாக ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்ததைக் கவனித்துப் பொறுமையின்றி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க உடன் அமர்ந்திருந்தாள் சுலபா. கவிதாவே தன்னை அம்போ என்று விட்டுவிட்டு இன்னேர் ஆண்மகனிடம் இணைந்து பேச ஆரம்பித்தது சுலபாவுக்குப் பிடிக்கவிலலை. அதுவும் தனக்குத் தெரியாத மொழியில் படு லாகவமாக அவள் தன்னைப் பொருட்படுத்தாமல் இன்னொருத்தனிடம் தனக்கு முன்பாகவே பேசியது அவளுக்குக் கடுப்பாயிருந்தது. காட்டுமிராண்டித்தனமாக நடுவே குறுக்கிட்டு,

“என்னடி உனக்குத்தான் இங்கிலீஷ் தெரியும்னு பொளந்து கட்டிக்கிட்டிருக்கியா” - என்றாள். கவிதாவுக்குச் சை என்றாகிவிட்டது. குறுக்கிட்டுப் பேசுமுன் “ஸாரி ஃபார் த இண்டரெப்ஷன்” என்று ஆயிரம் வருத்தமும் மன்னிப்பும் கூறிவிட்டு மற்றவர்கள் உரையாடலில் குறுக்கிடுகிற அதிநாகரிக நாட்டில் சுலபாவோட கூடச் சென்றதே பாவம் என்று பட்டது கவிதாவுக்கு. சுலபா ஒவ்வொரு நேரம் ஒவ் வொரு மூடில் இருந்தான். அவளைத் தேடிவந்து யாராவது ஆங்கிலத்தில் பேசினால் அதைத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல அவன் கூறும் பதில்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்ல என்று கவிதாவின் உதவி அவளுக்குத் தேவைப்பட்டது. அப்படி வேளைகளில் எல்லாம் கவிதா தயங்காமல் ரெடிமேடாக உடன் முன்வந்து தனக்கு உதவ வேண்டும் என்று சுலபாவே எண்ணினாள். கட்டளையும் இட்டாள்.

ஆனால் கவிதா எபபோதாவது தானே சுயேச்சையாகச் சுலபாவுக்குத் தெரியாத சில விஷயங்கள் தனக்குத் தெரியும் என்று தற்செயலாகக் காட்டிக் கொள்ள முயன்றால் கூட அவளுக்குப் பொறுக்காது, கோபம் வந்துவிடும்.

“உனக்கு எல்லாம் தெரியுது....இங்கிலீஷ்லே பேசலாம் இந்தியிலே பேசலாம்கிற திமிர்டீ” - என்று சுரீர் என ஆரம்பித்து விடுவாள்.

முதல் முதலாகச் சுலபாவுக்கு இந்தியில் டூப் குரல் கொடுக்கக் கூடக் ‘கவிதா’வையே ஏற்பாடு செய்யலாம் என்று யோசனை கூறினார் ஒரு தயாரிப்பாளர். ஏனென்றால் கவிதாவின் இந்தி நன்றாயிருந்தது. கொஞ்சம் முயன்று ஓர் இந்தி ஆசிரியரை விட்டுப் பழக்கினால் அவள் வடநாட்டுக்காரர்களைப் போலவே சகஜமாக இந்தி பேசுவாள் என்று தோன்றியது. சுலபாவுக்கோ இந்தி உச்சரிப்பு அறவே வரவில்லை. கவிதாவுக்குக் கூடக் குரல் தானம் செய்ய ஆசை தான். அது தானமுமில்லை. கணிசமான வருமானமும் கிடைக்கும் என்று தெரியவந்தது. சுலபா என்ன நினைத்தாளோ எப்படிப் புரிந்து கொண்டாளோ. கடைசி நிமிஷத்தில் அந்தத் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு, “கவிதாவைத் தொந்தரவு பண்ணுதிங்க... நல்லா இந்தி பேசற ஒரு வடக்கத்திப் பொண்ணையே குரலுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க” என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டாள். இதில் கவிதாவுக்கு ஏமாற்றம் தான்.

மாமாவிடம் போய்ச் சொன்னாள்: “எனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும்! இந்தி பேச வராத வேற சில ஆர்ட்டிஸ்ட்டுக்கும் குரல் கொடுக்கக் கூப்பிடுவாங்க! என் குரலும் உச்சரிப்பும் பிரமாதமா ‘சூட்’ ஆகும்னு அவங்களே டெஸ்ட் பண்ணி முடிவு சொல்லிட்டப்ப இவ திடுதிப்னு குறுக்கிட்டுக் கூடாதுன்னுட்டாளே?”

“நல்ல வேளை! நீ தப்பிப் பிழைத்தாய். அவளுக்குப் பிடிக்காததை நீயாக ஒப்புக் கொண்டு செய்ய ஆரம்பித்து அப்புறம் சித்திரவதை அநுபவிப்பதைவிட முதலிலேயே விட்டுப் போனதற்காகச் சந்தோஷப்படு” என்றார் மாமா.

இவை எல்லாம் அநுபவங்கள் என்றாலும் கவிதாவின் ஏமாற்றங்களைப் படிப்படியாக வளர்க்க இவை போதுமானவையாக இருந்தன. எஜமானியின் விரக்தி வெப்பத்திற்கு அருகிலேயே தொடர்ந்து இருந்தால் தானே வாடிக் கருகி விடுவோமோ என்ற எண்ணம் கவிதாவுக்குள் வளர்ந்தது. எஜமானியின் ஈகோவை நிறைவு செய்யத் தன் ஈகோவை வலிந்து அடக்குவது கவிதாவுக்கே பிடிக்கவில்லை.

அத்தியாயம் - 12

கோகிலா சுலபாவுக்கு ஃபோன் செய்தாள். தன் விருந்துமுறை முடிந்து சுலபாவின் தரப்பிலிருந்து ஒரு விருந்து பாக்கியிருந்தது. அதை அப்படிக் கடன் பாக்கியை வசூலிப்பது போல் வலிந்து கேட்டுப் பெற முடியாது. கூடவும் கூடாது. ஆனால் சுலபாவுக்கு எப்படியாவது நினைவுபடுத்த வேண்டும்தான். அதற்கு ஆயிரம் வழிகள் இருந்தன. ‘டூயிங் நைஸெஸ்ட் திங்க்ஸ் இன் நாஸ்டியஸ்ட்வே’ என்பதையே மாற்றி ‘டூயிங் நாஸ்டியஸ்ட்திங்ஸ் இன் நைஸெஸ்ட்வே’ எனப் பழகியிருந்தாள் கோகிலா. மோசமான விஷயங்களை நாசூக்காக ஆரம்பித்து முடிப்பது கோகிலாவுக்குக் கைதேர்ந்த கலை.

“என்ன சுலபா! உன்னைப் பார்த்து ஒரு யுகம் ஆனாப்ல இருக்குடீ... எப்படி இருக்கே? ஒரு பத்திரிகையிலே உன் பாரிஸ் படப்பிடிப்பு அநுபவம் பற்றிப் பார்த்தேன்... நல்லாச் சொல்லியிருந்தே' என்றாள் கோகிலா. புரிந்து கொண்டு பதில் சொன்னாள் சுலபா: "எனக்கு இந்த சண்டே ஈவினிங் நைட் எல்லாம் ஃப்ரீ கால்ஷீட் இல்லாமே ஃப்ரீயா வச்சுக்கிட்டிருக் கேன். சண்டே டின்னருக்கு இங்கே வந்துடேன்...”

“என்னைத் தவிர வேற யாராவது வராங்களா? நாம ரெண்டு பேர் மட்டும்தானா?”

“வேற நம்ம ஃபிரண்ட்ஸ் யாரையாவது கூப்பிடணும்னாச் சொல்லு கூப்பிடறேன். எனக்கு யாரும் வேண்டாம்னு படுது. நாம பலதும் மனசு விட்டுப் பேசுவோம். உன் இரகசியங்களை நீ மறைக்காமல் என்னிடம் சொல்லுவே. என் இரகசியங்களை நான் மறைக்காமல் உன்னிடம் சொல்லுவேன். பிடிச்சால் இஷ்டம் போலக் கூடி ரெண்டு ரவுண்டு பிஸ்கட் சாப்பிடுவோம். மத்தவங்களைக் கூப்பிட்டோம்னா இதெல்லாம் வம்பு ஆயிடும்.”

“சரியாச் சொன்னேடீ சுலபா! என் அபிப்ராயமும் அது தான். நம்ம அந்தரங்கங்கள் நம்மோட இருக்கணும். மத்தவங்க மூலமா அநாவசியமா வெளியேறிடப்பிடாது.”

“அப்ப நீ மட்டும் வா போறும். டிரைவர்கூட வேணாம்... வழக்கம் போல் நீயே ‘ஸெல்ஃப்’ எடுத்துக்கிட்டு வந்துடு கோகிலா! இல்லாட்டி நானே வண்டி அனுப்பட்டுமா?”

“வேண்டியதில்லை சுலபா! புது மாருதி வந்தப்புறம் இவர் அதை என் டிஸ்போஸல்லியே விட்டுட்டார். சொந்தமா ஓட்டிக்கிட்டு வர்ரத்துக்கு ரொம்ப சுகமா இருக்கு.”

“நான் கூட ஒரு மாருதி ஏ.சி.டீலக்ஸ் மாடலுக்கு ஏற் பாடு பண்ணச் சொல்லியிருக்கேன். பெட்ரோல் நெறையக் குடுக்குதுங்கிறாங்க...”

“டேங்க் ஃபுல் பண்ணிட்டாப் பத்துப் பன்னண்டு நாள் கவலையில்லாமே இருந்துடலாம்.”

“இப்ப விற்கிற பெட்ரோல் விலையில அது பெரிய காரியம்டி கோகிலா.”

“அப்படி எங்களை மாதிரி மனுஷா கவலைப்படறது நியாயம்டி சுலபா! உனக்கென்ன வந்தது? ‘கடிலாக்’ ஓட்டிப் பெட்ரோல் செலவழிச்சாக் கூடக் கவலையில்லே! கோடி கோடியாச் சேர்த்து வச்சுட்டு என்னடி பண்ணப் போறே? அநுபவிக்காத பணம் எதுக்கு ஆகப் போகுது? செலவழிக்கப் படாத பணம்கிறது கன்னி கழியாத பெண் மாதிரி. அதுனாலே நமக்கும் பிரயோசனமில்லே பிறருக்கும் பிரயோசனமில்லே.”

“என்னடி பிரமாதமான மூடில இருக்கியா? உதாரணம்லாம் எப்பிடி எப்பிடியோ வருதே?”

“நான் சுமாரான மூடிலே எப்பவுமே இருக்கிறதில்லேடி சுலபா!”

“அப்போ ஞாயிறன்னிக்கி டின்னரிலே பேச நெறைய விஷயம் இருக்குன்னு சொல்லு.”

“ப்ளெண்டி! நேத்திக்குக் கூட இங்கிலீஷ்ல செக்ஸைப் பத்தி ஒரு பிரமாதமான நியூ புக் படிச்சேன். உங்கிட்ட நிறையச் சொல்லணும்...”

“போறுமே! இதெல்லாம் ஃபோன்ல ஒண்ணும் வேண் டாம்...”

“ஃபோனுக்கு விரகதாபம் அது இதுல்லாம் கிடையாது சுலபா.”

“நீ ரொம்ப மோசம் டீ கோகிலா! வர வர உனக்கு வாய் துளுத்துப் போச்சு... சண்டே மறந்துடாதே...”

“அதுவரை நிறையச் சேர்த்துவச்சுக்கிறேன் சுலபா.”

“எதை டீ சேர்த்து வச்சுக்கப் போறே?”

“உங்கிட்டப் பேசறத்துக்கான இரகசியங்களைத்தான் சொல்றேன்... அது சரி... இன்னொண்ணு கேட்க மறந்துட்டேனே...?”

“என்னடி? கேளேன்...”

“டின்னர் ‘வெட்’ தானே?”

“உனக்குன்னலே அது ‘வெட்’ பார்ட்டியாத் தானே இருக்க முடியும்?”

“இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமாங்கிறாப்ல நீ என்னமோ பெரிய டீ டோட்டலர் மாதிரிப் பேசறயேடி சுலபா?”

“உங்கூடச் சேர்ந்தப்புறம் எப்படீடீ டீட்டோட்டலரா இருக்க முடியும் கோகிலா?”

கேள்வி எகத்தாளமாய் வந்தது.

“இது நான் உன்னைக் கேட்க வேண்டிய கேள்வியாக்கும். கொஞ்சம் இடம் கொடுக்கப் போக நீ முந்திக் கொண்டு என்னைக் கேட்கிறாய்!”

இப்படி வளர்ந்து முடிந்தது அவர்கள் உரையாடல். சுலபாவுக்குக் கோகிலாவுடன் தனி டின்னர் என்றாலே படுகுஷி, கோகிலாவும் சரி அவள் புருஷனும் சரி படு சுதந்திரமான பேர் வழிகள். புருஷனை அவள் சுதந்திரமாக விட்டிருந்தாள். புருஷன் அவளைச் சுதந்திரமாக விட்டிருந்தான். தேவைக்கதிக மான சுதந்திரங்கள், பெர்மிஸிவ்னெஸ்கள் எல்லாம் உள்ள அமெரிக்காவிலோ, பிரான்ஸிலோ பிறந்திருக்க வேண்டிய தம்பதிகள். தவறிப் போய் இந்தியாவில் இருந்தார்கள். கோகிலாவும் சுலபாவும் சிநேகிதம் ஆனதே ஒரு வேடிக்கையான கதை.

ஏதோ ஒரு மேல் மட்டத்துப் பணக்கார வீட்டுப் பார்ட்டி ஒன்றில் அறிமுகமானார்கள். கோகிலா நகைச்சுவையாகப் பேசினாள். நிறைய செக்ஸ் ஜோக்குகளாகச் சொன்னாள். பிளேபாய் ஜோக்ஸ் நிறைய வந்தது. பெண்களில் இத்தனை வெளிப்படையான கலகலப்பான ஆட்களைச் சினிமா உலகில் கூட அவள் சந்தித்ததில்லை. அப்புறம் கோகிலா தன் வீட்டுக்கு ஒரு நாள் இவளைச் சாப்பிடக் கூப்பிட்டாள். இவளு டைய பலவீனங்கள் அவளுக்குப் புரிந்தன. அவளுடைய பலவீனங்கள் இவளுக்குப் புரிந்தன. பரஸ்பரம் இருவரும் தவிர்க்க முடியாத சிநேகிதிகள் ஆகிவிட்டார்கள். அந்தரங்கங் களைப் பகிர்ந்து கொண்டார்கள். கோகிலா அழகி மட்டுமில்லை; துணிச்சல்காரி, படித்தவள் என்பதால் சுலபாவுக்கு அவளிடம் ஈடுபாடு ஏற்பட்டது, ‘சூப்பர்ஸ்டார் சுலபா தன் நெருங்கிய தோழி - தான் வாடீ போடீ என்று பேசுகிற அளவு உரிமையுள்ளவள் என்றறிந்ததும் பிறர் தன்னை மதிக்கிற மதிப்புக் கோகிலாவை அப்படியே கிறங்க அடித்திருந்தது. இவர்களைப் பிடிக்காத - இவர்கள் சிநேகிதம் பிடிக்காத சில பொறாமைக்காரர்கள் இவர்கள் இரண்டு பேரும் ‘லெஸ்பியன்ஸ்’ என்று கிளப்பிவிட்டு வம்பு பேசினார்கள். கோகிலாவே ஒருநாள் வேடிக்கையாக, இதைச் சுலபாவிடம் ஃபோனில் சொல்லிச் சிரித்தாள்.

“நம்மைப் பத்தி மத்தவங்க கொழுப்பெடுத்துப் போய் என்ன பேசிக்கிறாங்க தெரியுமாடி சுலபா?”

“தெரியாதே...? என்ன பேசிக்கிறாங்களாம்? தெரிஞ்சாச் சொல்லேன்.”

“சே! வேணாம்... அதைக் கேட்டு வீணா உன் மனசு தான் சங்கடப்படும். நான் தாங்கிப்பேன். ‘ஆமாம் அப்படித்தான்! உங்களுக்கு என்னடி வந்திச்சு?’ன்னு எதிர்த்துக் கேட்கக்கூடத் துணிஞ்சிருவேன். நீ பாவம் இதைக் கேட்டா அப்படியே இடிஞ்சு போயிருவே!”

“அப்பிடி என்னதான் சொல்றாங்கடி? சொல்லேன், அதையும் நான் கேட்டுத் தெரிஞ்சுக்கிறேன்.”

“நாம ரெண்டு பேரும் லெஸ்பியன்ஸாம்.”

“புரியலியே...? அப்பிடீன்னா..."

உண்மையிலேயே சுலபாவுக்கு லெஸ்பியன்ஸ் என்றால் என்னவென்றே தெரிந்திருக்கவில்லை. கோகிலாவுக்கு இதை நம்பவே முடியவில்லை. தன்னளவு பாலியல் மனத்தத்துவ நூல்களைச் சுலபா படித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் இப்படிச் சில முக்கியமான வார்த்தைகள் கூடவா தெரியாமல் இருக்கமுடியும்! என வியந்தாள். நம்பக் கூட முடியாமல் இருந்தது. கோகிலா அதைச் சொல்லிய விதத்தில் சுலபாவின் ஆவல் கிளர்ந்து விட்டிருந்தது. அது என்ன வென்று தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும் என்று துடித்தாள் அவள்.

“உனக்குப் புரியலேன்னா அதை மறந்துடு சுலபா... வொர்ரீ பண்ணிக்காதே. நேரே பார்க்கறப்பச் சொல்றேன். ஃபோனில் வேண்டாம்.”

“சஸ்பென்ஸ் எல்லாம் வேணாம். இப்பவே சொல்லிடு கோகிலா.”’

கோகிலா கலகலவென்று ஃபோனிலேயே இரைந்து சிரித்தாள்.

“என்னடி நான் கேட்கிறேன். நீ பாட்டுக்குச் சிரிக்கிறே?”

“பின்னே... சிரிக்காமே வேற என்ன பண்ணுவாங்க... இதைப் போயி ஃபோனிலே விளக்குன்னா சிரிப்புத்தான் வரும்.”

“நிமிஷத்துக்கு நிமிஷம் சஸ்பென்ஸையும் அதிகமாக்கி விஷயத்தையும் என்னன்னு சொல்லாமக் கழுத்தை அறுக்கிறத்துக்குப் பதிலா நீ இதைப் பத்தி எங்கிட்டப் பிரஸ்தாபிச்சே இருக்க வேணாம்டி கோகிலா.”

“இது ‘ஏ’ விஷயம். அடல்ட்ஸ் ஒன்லி. ஃபோன்ல சொல்லமுடியாது. நேரே பார்த்தால் கொஞ்சம் டெமான்ஸ்ரேட் பண்ணிக் கூட விளக்கிட முடியும்.”

இப்போது சுலபாவுக்கு ஏதோ கொஞ்சம் புரிந்த மாதிரியும் இருந்தது. புரியவும் இல்லை. செக்ஸ் விஷயம் என்று மட்டும் விளங்கியது.

“பொல்லாதவடி நீ! ஆரம்பிச்சு விட்டுடுவே! முழுக்கச் சொல்லாமல் இப்படித்தான் சித்திரவதை பண்ணுவே. இது உன் வழக்கமாவே போச்சு! சீக்கிரமா நீயே நேரில் வந்து சொல்லப்பாரு” என்று கூறி டெலிஃபோனை வைத்தாள் சுலபா.

அத்தியாயம் - 13

கோகிலாவுக்கும் சுலபாவுக்கும் நெருக்கமான சிநேகிதம் இருந்தாலும் இருவருக்குமிடையே நிறைய வேறு பாடுகள் இருந்தன. கோகிலா மனத்தத்துவத்தில் பட்டதாரி, ஏராளமான ஆங்கில நாவல்களையும் உளவியல் நூல்களையும் படித்தவள். தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவள். உலகப் புகழ் பெற்ற நாவல்கள், காப்பியங்கள், கதைகள், நாடகங்களின் கதாபாத்திரங்களையும் அவர்கள் பற்றிய திறனாய்வு நூல்களையும் படித்தவள்.

சுலபா ஃபார்மல் எஜுகேஷனுக்காகத் தெலுங்குத் திண்ணைப் பள்ளிக் கூடத்திலும் ஒதுங்காதவள். அவளுடைய செல்வத்துக்கும் புகழுக்கும் பின்னால் கூட முறையான படிப்பு என்பது ஓரளவுதான் வளர முடிந்தது. அதற்குள் புகழும் பணமும் அதைவிட அதிகம் வளர்ந்து விட்டன.

அளவாய் அழகாய்ச் செதுக்கி எடுத்த தங்கச்சிலை போன்ற வனப்பும், முகவசீகரமுமே சுலபாவின் பெரிய முதலீடுகளாக அமைந்து அவளை முன்னுக்குக் கொண்டு வந்திருந்தன. படிப்பு இன்மை குறையாக உணரப்படாத அளவு செல்வம் அவளிடம் சேர்ந்து விட்டது.

தெலுங்கிலும் ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுத்துக் கூட்டி அவள் கையெழுத்துப் போடும் விதங்களை வைத்தே அவள் அதிகம் படிக்காதவள் என்பதைச் சொல்லிவிட முடியும். ரொம்ப வருஷங்களுக்குப் பின் தினத்தந்தி படிக்கப் பழகிக் கொண்டாள். வீட்டுக்கு வருகிற ஆங்கில நாளிதழ்களைக் கவிதாதான் படிக்க வேண்டும். சுலபா படிப்பதாகச் சிலவேளை பாவிப்பாள்.

தன் உடலின் வசீகரமான வளைவுகளாலும் முகத்தின் மோகனப் புன்னகையாலும் - பெண்ணுக்கு அதிக அழகு என்றும் கம்பீரம் என்றும் வர்ணிக்கத்தக்க எடுப்பான உயரத்தாலும் அவள் கவர்ச்சி பிரமாதமாயிருந்தது. நல்ல சண்பகப் பூவின் மேனி நிறம், சிரிப்புக்கு மட்டுமே கனகாபிஷேகம் செய்யலாம் போல அத்தனை அழகான பல்வரிசை. எதிரே நிற்பவர்களைச் சுருட்டி விழுங்கும் சிரிப்பு. மோகனமான கண்கள். உல்லாசமான இந்த விழிகளுக்கும், புன்னகைக்கும் அப்பால்தான் விரக்தியும், வெறுப்பும் மறைந்திருக்கின்றன என்பதைச் சத்தியம் செய்து சொன்னால் கூட நம்புவது சிரமமாயிருக்கும். இப்படிப் பட்டவளிடம் போய்க் கோகிலா ‘லெஸ்பியன்’ என்றால் என்ன புரியும் இவளுக்கு?ஃபோனில் பேசிய மறுதினம் நேரில் பார்த்த போது கோகிலா லெஸ்பியனிஸம் பற்றி இவளிடம் விவரித்ததும் இவள் சிரித்தாள். கேலியாகக் கேட்டாள்:

“அந்த மாதிரிக் கூட உண்டா என்ன?”

“அந்த மாதிரி மட்டும் என்ன? அதற்கு நேர் மாறாக இந்த மாதிரியும் கூட உண்டுடி” - என்று லெஸ்பியனிஸத்திற்கு நேர் மாறானதைக் கோகிலா விவரித்த போது கூட எல்லாம் தெரிந்த குருநாதர் முன் சிஷ்யை கேட்பது போல் அடங்கிக் கேட்டுக் கொண்டிருந்தாள் சுலபா. கோகிலா கூறுபவை இவளுக்குப் புதியவையாயிருந்தன. ஆனால் இதெல்லாம் கோகிலாவும் சுலபாவும் பழகத் தொடங்கிய புதிதில்தான். நாளாக நாளாக நிறைய இரக சியங்களை - நிறைய விஷயங்களைக் கோகிலாவிடம் பழகிப் பழகியே தெரிந்து கொண்டாள் சுலபா. கோகிலாவைப் போல ஒரு படித்த - எந்தப் போக்கிரித்தனத்துக்கும் துணிந்த மேல் வர்க்கத்துப் பெண்ணின் நட்பு சுலபாவுக்கு அவசியமாயிருந்தது. அந்த நட்பு இதமாகவும், சுகமாகவும், தேவையானதாகவும் இருந்தது. கோகிலாவும் இவளும் சந்திக்கத் தவறிய வாரக் கடைசிகளே அநேகமாக இராது. இருவரும் ஒருவர் மனசுக்குள் இருப்பதை இன்னொருவரிடம் கொட்டித் தீர்த்து விடுவார்கள். பாரம் குறைந்த மாதிரி உணர்ந்த பின்பே இருவருக்கும் திருப்தி ஏற்படும். இப்படிச் சந்திப்புக்கள் பேச்சுக்களின்போது கவிதாவோ, நரசம்மாவோ கூட உடனிருக்க அவர்கள் அநுமதிப்பதில்லை. இந்தச் சந்திப்புக்களின் சுகங்களை இவர்கள் இருவர் மட்டுமே பங்கிட்டுக் கொண்டார்கள்.

சுலபா வெளிநாட்டில் படிப்பிடிப்பு ஏற்பாடுகள் முடிந்து திரும்பியதும் அவளும், கோகிலாவும் தங்களுக்குள் சந்தித்துக் கொண்டது சுவாரஸ்யமானதொரு சந்திப்பாக இருந்தது.

தன்னோடு வெளிநாட்டுக்கு வந்திருந்த யாருமே பிரயோசனமில்லை. கோகிலாவோடு வெளிநாடு போயிருந் தால் நன்றாயிருந்திருக்கும் என்று சுலபாவை உணரச் செய்து விட்டாள் கோகிலா. அவள் ஒவ்வொன்றாகச் சொல்லி அதைப் பார்த்தாயா? இங்கு போனாயா? அதெல்லாம்‘என்ஜாய்’ பண்ணாமலா திரும்பி வந்தாய்? - என்று கேட்கக் கேட்கச் சுலபாவுக்கு ஒரே ஏமாற்றமாகவும், தவிப்பாகவும் போயிற்று. இவள் அவசர அவசரமாகப் பார்த்துவிட்டு வந்திருந்த பாரிஸ் நகரை விடக் கோகிலா ஆர அமரப் பலமுறை பார்த்து விட்டு வந்திருந்த பாரிஸ் கேட்கச் சுகமாயிருந்தது. இவள் பார்த்து முடித்த லண்டனை விட அவள் பார்த்து ரசித்து நினைவூட்டிய லண்டன் சுகமானதாயிருந்தது. அவள் இடங்களைத் தேடித் தேர்ந்தெடுத்துப் பார்த்திருந்தாள்.

“பாரிஸ் போயிருந்தியே பிகால் பார்த்தியா?”

“அப்படீன்ன?...”

“பிகாலுக்கு உன்னை யாருமே கூட்டிக்கிட்டுப் போகலியாடீ?”

“போகலியோ எனக்கென்ன தெரியும்டி?”

“அப்படியானல் நீ பாரிஸைப் பார்க்கவே இல்லைடீ! இனிமேல் புதுசா என்னோட ஒரு தடவை வந்து பார்த்தால் தான் உண்டு.”

“உன்னோடப் பாரிஸைப் பார்க்கப் போறதுங்கிறது ஒரு பாரிஸைக் கைகோத்து உடனழைத்தபடி இன்னொரு பாரிஸைப் பார்க்கப் போகிற மாதிரின்னு சொல்லணும்டி கோகிலா.”

“பின்னென்ன பாரிஸை நர்சம்மாவோடவும், கவிதா வோடவுமா போய்ப்பார்க்க முடியும்? கோகிலா, கூட இருந் தால் நீ அதிர்ஷ்டசாலியா யிருந்திருப்பேடீ?”

“நான் துரதிருஷ்ட சாலிதான்டீ! கவிதாதான் என்கூட இருந்தாள்.”

“கவிதாவுக்கு என்ன தெரியும்? பாவம். சிறிசு. கல்யாண மாகாதவள்.”

“அப்படியில்லேடி கோகுலா! அவளும் யாரோ ஓர் இளைஞனைக் காதலிக்கிறாள். சதா காலமும் லீவு போட்டு விட்டு அவனோடு ரெஸ்ட்டாரெண்டுகள், தியேட்டர்கள், பார்க்குகள் என்று கால்தேயச் சுற்றுகிறாள்.”

“சும்மா ஆண்களைச் சுற்றுகிற பெண்கள் எல்லாம் பிரார்த்தனையுடன் அநுமார் கோயிலையோ, பிள்ளையார் கோயிலையோ சுற்றுகிறவர்கள் மாதிரித்தான். அவர்களுக்கு எப்போது எப்படி வரம் கிடைக்கும் என்றே தெரியாது! பிள்ளையார் கோயிலையும், அநுமார் கோயிலையும் சுற்றுகிற மாதிரித்தான் கவிதாவோடு பாரிஸையும் லண்டனையும் பய பக்தியோடு சுற்றிப் பார்த்துவிட்டு வந்திருக்கிருய் நீ.”

“போதும்டீ! ரொம்பத்தான் கிண்டல் பண்ணாதே. நான் சுற்றிப் பார்த்ததிலே என்ன குறை? தயாரிப்பாளர் எஸ்.பி.எஸ். என்னைத் தரையிலே இறங்கவிடாமல் பார்த்துக் கொண்டார். கப்பல் மாதிரி ஒரு லிமோஸின் கார் எல்லா இடத்துக்கும் கூட்டிக்கிட்டுப் போச்சு. ஜூரிச்சுக்கும், ஜெனிவாவுக்கும், பிளேன்ல பறந்தோம். ஆம்ஸ்டர்டாமிலே ப்ளூஜாக்கர் வாங்கினோம்! ஒரு குறையும் இல்லே...”

“அப்படிக் கீழே இறங்காமே லிமோஸின்ல சுத்தினதுதான் தப்பு. பாரிஸ் என்பது சுகந்தம், பாரிஸ் என்பது உல்லாசம், பாரிஸ் என்பது சந்தோஷம். பையில் பணத்துடனும் மனசில் மகிழ்ச்சியுடனும் கீழே இறங்கி நடப்பவர்கள்தான் அதை அநுபவிக்க முடியும். மெட்ரோ ரயிலில ‘ரவுண்ட் ட்ரிப்' டிக்கட்டை வாங்கி வைத்துக் கொண்டு இஷ்டம் போல் சுற்றினால் அங்கங்கே சுகங்களும், சந்தோஷங்களும் கேளிக்கை களும் இறைந்து கிடப்பது புரியும். கேளிக்கைகள் அதிகம் இறைந்து கிடிக்கிற இடம்தான் பிகால், ‘மெளலின் ரோஜ்’ போய்ப் பார்த்தியா? ‘பிகால்’லே ரெண்டு மூணு கேஸட்டாவது வாங்கினியா? நாலஞ்சு ஃப்ளோர் ஷோவாவது பார்த்தியா? பாரிஸ்ல என்னதான் பண்ணினே?”

“எஸ்.பி.எஸ். சிரமப்பட்டு டிக்கெட் வாங்கி லிடோவுக்குக் கூட்டிக் கிட்டுப் போனார். அதுக்கு நேரம் கிடைக்கிறதே சிரமமாப் போச்சு, லேட் நைட் ஷோவாப் பார்த்து டிக்கெட் வாங்கிப் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்.”

“அதெல்லாம் இருபது வருசத்துக்கு முன்னாடிப் பாரிஸ் போனவன் பார்த்தேன்னு சொல்லிப் பீத்திக்கிட்டிருக்கிற பழைய விவகாரம்! எய்ட்டீஸ்ல ஒருத்தன் சொல்லிக்கிறதுக்கு லைஃப்ஷோ, மெளலின் ரோஜ்னு எத்தினி எத்தினியோ புதுசா வந்திருக்கேடீ?”

“அதெல்லாம் எனக்கென்னடி தெரியும்? என்னைக் கூட்டிக்கிட்டுப் போனவங்க எங்கெங்கே கூட்டிக்கிட்டுப் போனாங்களோ அதெல்லாம் தான் நான் பார்த்தேன்.”

“சில சமயத்திலே கூட்டிக்கிட்டுப் போறவங்களும் கூடப் போறவங்களும் சேர்ந்து ரெண்டு குருடங்க யானை பார்த்த கதையா ஆயிடும். கூட வர்ரவருக்குப் பிடிக்குமோ பிடிக்காதோங்கிற தயக்கத்திலேயும், கூச்சத்திலேயும் கூட்டிக்கிட்டுப் போறவங்களுக்குச் சிலதை விசாரிக்கவும், சொல்லவும் தோன்றாது. கூட்டிக்கிட்டுப் போறவர் தன்னைப் பத்தி என்ன நினைப்பாரோ என்ற தயக்கத்திலும், பயத்திலும், கூச்சத்திலும் கூடப் போகிறவரே தன் ஆசைகளை உள்ளே புதைத்துக் கொள்வது உண்டு. நம்மிடையே வேஷங்கள் அதிகம். வேஷங்களைப் பிறர் முன் களைய நாம் விரும்புவதே இல்லை. தனியே நமக்கு நாமே அந்தரங்கமாக உடைமாற்றுவது போல் அவற்றை இரகசியமாகக் களைந்துவிட்டு மறுபடி வேஷம் போடுகிறோம். இந்தியர்களின் பொதுக் குணங்களில் இதுவும் ஒன்று சுலபா! ஓர் ஃபிரெஞ்சுக்காரனோ, அமெரிக்கனோ இப்படி வேஷம் போடுவதுமில்லை. களைவதும் இல்லை. நாம் இரண்டையுமே அடிக்கடி செய்கிறோம். வேஷம் போடுகிறோம். களைகிறோம். மோஸ்ட் ஆஃப் த இண்டியன்ஸ் ஆர் ஸ்பிளிட் பெர்ஸ்னாலிட்டீஸ்...”

“என்னைப் பொறுத்தவரை வேஷம் போடுவதும் களைவதும், கலைப்பதும் மறுபடி புதுவேஷம் போடுவதும்தான் என் தொழில் கோகிலா!”

“நம் நாட்டில் வேஷம் போடுபவர்கள் யார் என்பது கேள்வியில்லை. வேஷம்போடாதவர் யார் என்பது தான் கேள்வி. மேக்கப் இல்லாமலே சகஜமாக வேஷம் போடுவதைப் பிறவிக் குணமாகப் பெற்ற கோடிக்கணக்கான மக்கள் உள்ள நாட்டில் நாம் வாழ்கிறோம்டி சுலபா!”

“கொஞ்சங் கூடத் தேசபக்தியே இல்லாமல் இப்படி உன் சொந்த நாட்டையே வேஷதாரிகளின் தேசம் என் கிறாயேடீ? இது உனக்கே நன்றாயிருக்கிறதா கோகிலா?”

“தேசபக்தி வேறு! ஆத்ம பரிசோதனை வேறு. இந்தக் கடுமையான விமரிசனம் ஆத்ம பரிசோதனைதான். வேஷம் போடுவதும், இரகசியமாகக் களைவதும், பிறகு புது வேஷம் போட முயல்வதும் நமது தேசிய குணங்களில் தலையாயது.”

“நீ ஒருத்தியாவது இந்தத் தேசத்தில் விதிவிலக்காக இருக்கிறாயே? அது போதாதாடீ?”

“இருக்கிறேன்! ஆனால் எங்கே என்னை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முடிகிறது. நானும் வேஷம் போடத்தான் வேண்டியிருக்கிறதடீ சுலபா! நம் சமூக அமைப்பு அப்படி! நான் வெளிப்படையாக என் வேஷங்களைக் களைந்து நினைப்பதைப் பேச ஆரம்பித்தால் அப்புறம் என்னைப் பற்றி என்ன சொல்லுவாங்க தெரியுமா? ‘கோகிலா சரியான திமிர் பிடிச்ச பொம்பளை. ஷீ இஸ் அப்டு எனிதிங்’னு கமெண்ட் அடிக்க ஆரம்பிச்சிடுவாங்க, நம்மூரைப் பத்தி எனக்கு நல்லாவே, தெரியும்டி சுலபா!”

அத்தியாயம் - 14

கோகிலாவுடன் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. சுவாரஸ்யமாகத் தொடரும், சுலபா அந்த உரையாடல் சுகத்தை அநுபவிப்பதற்காக ‘கால்ஷீட்களை’ இரத்துச் செய்திருக்கிறாள். பல்லாயிரக்கணக்கில் செலவழித்துப் போடப்பட்ட ‘செட்’களையும் யூனிட் ஏற்பாட்டையும் மறந்து படப்பிடிப்புக்குப் போகாமல் உரையாடல் சுகத்தில் ஈடுபட்டிருக்கிறாள். மனிதர்கள் அறிய ஆசைப்படும் இரகசியங் களும், விவரங்களும் தெரிந்த விரும்பத்தக்க கான்வர்சேஷனலிஸ்ட் கோகிலா ஒருத்திதான்.

கோகிலாவின் அந்தரங்க லைப்ரரியில் பாலியல் பற்றிய புத்தகங்கள் மட்டுமில்லை, வீடியோ டெக்கும் பாரிஸ், கோபன் ஹேகன் போன்ற நகர்களுக்குப் போனபோது இரகசியமாக வாங்கி வந்த ‘லைஃப் ஷோ’ வீடியோ கேஸட்டுகளும் கூட உண்டு. அவை படுநீலமானவை என்பது சுலபாவின் அபிப்ராயம். “இது 1986ல் தான் படுநீலம். 1987ல் 88ல் இதைத் தூக்கி அடிக்கிற படுபடு நீலம்லாம் வந்துடும் பாரு” என்பாள் கோகிலா. “அதுசரி இதெல்லாம் செய்யிறியே...? உங்களவர் ‘அப்ஜெக்ட்’ பண்ணமாட்டாரா?”

“அவரே பிஸினஸ் பார்ட்னர்ஸை எண்டர் டெயின் பண்ண நாலு பேருக்குக் கிளாஸ்ல தண்ணியை ஊத்திக் குடுத்து இதெல்லாம் போட்டுக் காண்பிக்கச் சொல்றதுகூடி உண்டுடீ!”

“உன் துணிச்சல் வேற யாருக்கும் வராதுடீ! கோகிலா”

“நீ இப்பிடிப் புகழறே அவரானாப் பம்பாய், கல்கத்தா டில்லியிலே பெரிய பெரிய கோடீசுவர பிஸினஸ் மேகனெட் களோட மனைவிமார்கள் கத்துக்கிட்டிருக்கிற ‘டேக்டிஸ்’ல நூற்றுலே ஒரு மடங்குகூட நான் கத்துக்கலேன்னு குறைப் பட்டுக்கிறாரு, அவங்க இன்னும் மாடர்னா இன்னும் அப்டு டேட்டா இருக்காங்களாம். புருஷன் இல்லாதபோது தேடிவர்ர பிஸினஸ் பார்ட்னர்ஸுக்குக் கூட உள்ளே கூப்பிட்டு உட்கார வச்சு டிரிங்க்ஸ் ஸெர்வ் பண்றாங்களாம்.”

“ஆரம்ப நாளிலே சினிமாவிலே நாங்க இப்பிடி எத் தனையே பண்ணியிருக்கோம்! ஒரு மிஷின் மாதிரிப் பணக் காரங்களை, முதலீடு செய்யிறவங்களை விநியோகஸ்தர்களைச் சந்தோஷப்படுத்தியிருக்கோம்...”

“இருக்கலாம். ஆனால் அது வேற, இது வேற. இதுவே வெறும் சரீர சந்தோஷம் மட்டும் பத்தாது. இண்டெலக்சுவல், ப்ளெஷர் முக்கியம், அவங்களோட அரசியல் முதல் ‘குக்கெரி’ வரை இங்கிலீஷ்ல சரளமா உரையாடணும். ஜோக் அடிக்கணும். அவங்க ஜோக்கடிக்கிறப்ப அது சுமாரான ஜோக்கா யிருந்தாலும் பிரமாதமா ரசிச்சுச் சிரிக்கணும். அவங்க ரொம்ப ‘ஸ்மார்ட்’னு நாலுதடவை அவங்க கிட்டவே சொல்லிப் புகழணும். அவங்க நம்மைப் புகழறப்போ அதைச் சடங்கு மாதிரி ஏற்காமே முகம் சிவக்கப் புன்னகை புரிந்து வெட்கப் படறமாதிரி நடிக்கணும். ‘ஹேவ் ஸம் மோர்...’ என்று அதிகமாகப் பருகச் சொல்லி உபசரிக்கணும். நிறைய இங்கிதங்களைப் பயன்படுத்தி இங்கிதக் குறைவான காரியங்களைக் காதும் காதும் வச்சாப்ல சாதிச்சுக்கணும். ஒரு ‘கால்கேர்ளுக்கும் புரொஃபஷனல் ஹோஸ்டெஸ்ஸுக்கும் இப்படி நிறைய வித்தியாசம்லாம் இருக்குடி சுலபா!”

இதைக் கேட்டுச் சுலபாவுக்குச் சுரீரென்றது, கோகிலா தன்னைக் ‘கால்கேர்ள்’ என்கிறாளோ என்று பட்டது. ஆனால் சிறிது நேரம் மேலும் பேசிப் பார்த்தபோது மனத்தில் கவடமில்லாமல் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறாள் என்று சுலபாவுக்கே புரிந்தது. கோகிலாவைப் பொறுத்தவரை அவளது திறமைகளும் அழகும் கெட்டிக்காரத்தனமும் ஆயிரம் தொழில் முறை ஹோஸ்டஸ்களுக்கும் மேலானவை என்பது சுலபாவுக்குப் புரிந்துதான் இருத்தது. இவள் கணவனின் வியாபாரம் ஒன்றிற்குப் பத்தாக லாபம் தந்து கொழிப்பதற்குக் காரணம் இவளைப்போல் தங்கக் கம்பியாக இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்கும் மனைவியாகத் தானிருக்க வேண்டும் என்று நம்பினாள் சுலபா.

நடிகை சுலபா ஒரு குணசித்திரம் என்று கோகிலா எண்ணினாள். கோகிலாவே ஒரு குணசித்திரம் என்று சுலபா வுக்குத் தோன்றியது. இருவருக்குமே தனிமனித ஒழுக்கங் களில் நம்பிக்கை போயிருந்தது. இவர்களது அந்தரங்க நட்பு என்பது அந்த அடிப்படையில் உருவானது தான். இருவருக் குமே பெண்கள் நினைத்தால் - முயன்றால் எதையும் சாதிக்க முடியும் என்ற அகம்பாவம் உள்ளூர இருந்தது.

‘விபசாரிக்கும்’ ‘உபசரணப் பெண்ணுக்கும்’ வித்தியாசமிருப்பதாகக் கோகிலா சொன்னாள். பச்சையான பதப் பிரயோகமும் நாசூக்கான பதப்பிரயோகமும் - தொனியில்வித்தியாசப் படலாமே ஒழிய அர்த்தத்தில் ஒரே மாதிரியான வைதான், ஒரே விளைவை உடையவைதான்.

‘முட்டாள் தனமாகப் படுகிறது’ என்பதற்கும் ‘புத்திசாலித் தனமாகப் படவில்லை’- என்பதற்கும் ஒரே அர்த்தம்தான். ஆனால் ‘முட்டாள் தனமாகப்படுகிறது’ - என்பவன் யாரைப் பார்த்து அப்படிச் சொல்லுகிறானோ அவனுடைய விரோதத்தை உடனே சம்பாதித்துக் கொள்கிறான். ‘புத்திசாலித்தனமாகப் படவில்லை’ - என்பவன் கேட்பவனோடு உடனடி விரோதத்தைத் தவிர்க்க முடிகிறது. கோகிலா புத்திசாலித்தனமாக எல்லாம் செய்தாள். அவள் கணவன் டாட்டா, பிர்லா போலக் கோடீசுவரனாக உதவினாள். முதலில் இல்லா விட்டாலும் நாளடைவில் சுலபா கூடச் சில கோடிகளை இரகசியமாகக் கோகிலாவின் கணவனிடம் பினாமி பெயர்களில் முதலீடு செய்திருந்தாள். சிநேகிதமாகப் பிடித்து மெல்ல மெல்லச் சுலபாவைக் கணவனின் தொழில்களில் பணம் போட வைத்துவிட்டாள் கோகிலா.

மத்திய மாநில ஆளும் கட்சிகளுக்கும் ஆட்சியைப் பிடிப்பது போல முன்வரும் கட்சிகளுக்கும் தேர்தல் நிதி ரொக்கமாகத் தரவேண்டி வரும் போதெல்லாம் கோகிலாவின் கணவருக்குச் சுலபா தான் உதவ வேண்டியிருந்தது. தேர்தல் நிதிக்குக் கணக்கில் காட்டாத ரொக்கம் வேண்டும் என்று கழுத்தறுத்தால் எங்கேயிருந்து அவ்வளவு பெரிய தொகையை ஒரே நாளில் தேடுவது? சுலபாவிடம் தான் சுலபமாக அது கிடைத்தது. சுலபாவுக்குத் தெரியாமலே அவளுக்கு நட்பு வலை விரித்துத் தன் அந்தரங்கங்களை அவளுக்குக் கூறுவது போல் அவன் அந்தரங்கங்களை ஒன்று விடாமல் அறிந்து அவசரப்பட்டு விடாமல் சில வருஷங்கள் வரை இந்தச் சிநேகிதத்தைப் பயன் கருதாத வெறும் நட்பாகவே தொடரும்படி பொறுத்துக் காத்திருந்து காலம் கனிந்தவுடன் பணமாகக் ‘கேஷ்’ பண்ணிக் கணவனுக்கு வாங்கிக் கொடுத்த சாதுரியம் கோகிலாவினுடையது.

கோகிலாவின் கணவன் உலகின் தலைசிறந்த ஒரே ஒரு ராஜதந்திரியாக - டிப்ளமேட்டாக கின்னஸ் புத்தகத்தில் இடம பெற வேண்டிய அத்தனை சாமார்த்தியம் உள்ளவன், படு ஸ்மார்ட் ஆசாமி.

“நீ முதலில் உன் எதிராளியின் பூட்டப்பட்ட மனக் கதவுகளைத் திறப்பதற்காக உன் சொந்த இரகசியங்களையும் அந்தரங்கங்களையும் எதிராளியிடம் தாராளமாகத் திறந்து சொல்லத் தொடங்கு. உன் செயலால் எதிராளியின் மனக் கதவுகள் பூட்டுக்கள் எல்லாம் திறக்கப்படுகிற வரை தொடர்ந்து பேசு. எதிராளியின் மனக்கதவுகள், போதுமான அளவு திறந்து விட்டதை அறிந்ததும் உடனே உன் மனக் கதவுகளைப் பத்திரமாக மூடிப் பூட்டிவிட்டு எதிரே திறக்கப்பட்ட கதவுகளுக்குள்ளே நுழைந்து என்னென்னவற்றைக் கடத்திக் கொண்டு வர முடியுமென்று பார்! டெல் மோர் ஸீக்ரெட்ஸ் இன் ஆர்டர் டு கெட் மோர் ஸீக்ரெட்ஸ் ஃப்ரம் அதர்ஸ்” - என்பதுதான் கோகிலாவின் கணவன் அடிக்கடி கூறும் ராஜதந்திர தத்துவம். மனிதர்களையும், மனங்களையும் கவர்ந்து வசப்படுத்தும் உத்திகளில் அவன் நிபுணன். அவனுடைய திறமையான ‘கோச்சிங்’கிலும் ஸ்பெஷல் கிளாஸிலும் சரிபாதிதான் கோகிலாவே தயாராகியிருந்தாள்.

“போறாது! யூ ஹாவ் டு லேர்ன் மோர்” - என்று அவளிடம் சொல்வான் அவன். சுலபாவை அவளது அனைத்து அந்தரங்கங்களோடும் தன் சிநேகிதியாகச் சிறைப்பிடிக்கக் கணவன் சொல்லிக் கொடுத்த வழிகளில்தான் முயன்று வெற்றி பெற்றிருந்தாள் கோகிலா. கோகிலாவின் கணவனைப் பற்றிச் சொல்லும்போது, “நத்திங் இஸ் இம்பாஸிபிள் ஃபார் மிஸ்டர் கே.வி.லிங்கம்” என்று பிஸினஸ் சர்க்கிளில் சொல்லுவார்கள். கொச்சையாகவும், பொறாமையாகவும் பேசும்போது, “வைத்திலிங்கமா? அவன் பெரிய வல்லாள கண்டனாச்சே” என்பார்கள். கே.வி.லிங்கம் என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட கே.வைத்திலிங்கத்தால் முடியாத காரியமே இல்லை. எந்த இக்கட்டான நிலையிலும் சிக்கலின் மறுநுனியைக் கண்டுபிடித்து அழகாகச் சரி செய்து சிக்கலைத் தீர்த்துக் கொடுத்துவிட அவனால் முடியும். தொழிலதிபர்களிடையே அவன் நிபுணனாகப் பெயர் பெற்றிருந்தான்.

ஒரு சமயம் டெல்லியில் ஒரு இண்டஸ்ட்ரியல் லைசென்ஸ் படுதாமதமாக இழுத்தடித்தது. இன்ஷ்யூரிங் அதாரிட்டி ஆபீஸர் எதிலும் வசப்படாமல் நழுவினன். தூண்டித் துளைத்து விசாரித்ததில் அந்த ஆபீஸர் ‘கஜாரண்ய சுவாமிகள்’ என்ற மெளனச் சித்தரிடம் அளவு கடந்த பக்தியுள்ளவர் என்று தெரிந்தது. கஜாரண்ய சுவாமிகள் மடத்து நிர்வாகியைப் பிடித்து அடுத்த மாசம் நடக்கிற விசேஷ பூஜைக்கு வந்து ஆசிபெற வேணும் என்று சுவாமிகளே அநுக்கிரகிப்பதாக ஒரு கடிதம் டெல்லி ஆபீசருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று.

கஜாரண்யத்தில் நடந்த அந்த பூஜைக்கு டெல்லி ஆபீஸர் வந்தார். கோகிலாவும் அவள் கணவரும் கூடச் சென்றார்கள். தரிசனம் முடிந்ததும் மடத்து நிர்வாகி கோகிலாவையும் அவள் கணவரையும் டெல்லி ஆபீஸர் முன் அறிமுகம் செய்து, “நம் சுவாமிக்குப் பரமபக்தர்கள்! இந்தத் தம்பதிகள் மேல் அவருக்குக் கொள்ளை விசுவாசம்” என்றார். கோகிலாவின் கணவரது ஏற்பாடு இது. அடுத்த வாரமே நேரில் போய் லைசென்ஸ் பெற்று வர முடிந்து விட்டது. இதற்குத் திட்டமிட்டதே கோகிலாவின் கணவன்தான். மற்றொரு சமயம் ஒரு லைசைன்ஸில் கையெழுத்திட வேண்டிய ஆபீஸருக்காகத் திருத்துறைப் பூண்டிக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து ஒரு லாரி லோடு ஏட்டுச் சுவடிகளுடன் ஒரு நாடி ஜோஸியனையே டெல்லிக்கு அழைத்துப் போக வேண்டி வந்தது. அழைத்துப் போய் வேலையை முடித்துக் கொண்டு வந்தார்.

“டெல்லிங்கிறது ஒரு பெரிய ஹ்யூமன் மியூஸியம். எத்தனை வித மனங்களும் மன விகாரங்களும் அங்கு உண்டோ அத்தனைக்கும் பரிகாரங்கள் உண்டு” என்பான் கோகிலாவின் கணவன்.

“சில பேர் பாட்டில் கேட்பான். சிலபேர் அழகைக் கேட்பான். சிலபேர் ஜோஸியம் கேட்பான். இன்னம் சிலபேர் ‘ரெண்டு பாட்டில் தென்னமரக்குடி எண்ணெய் வேணுமே’ன்னு - ஏதாவது நாட்டு மருந்தாச் சொல்லி அனுப்புவான். ஸ்காட்ச் முதல் தென்னமரக்குடி எண்ணெய் வரை எல்லாமே காரியத்தைச் சாதிச்சுக் குடுக்கும். மலைக்கப்பிடாது. மிரளபடாது. துணிஞ்சு ஈஸியா எடுத்துக்கிட்டு முயற்சி பண்ணினா எல்லாமே முடியும்” என்று ஊர் திரும்பி வந்து கோகிலாவிடம் விவரித்துக் கொண்டிருப்பது அவள் கணவனின் வழக்கமான செயல்தான்.

“இது போருமே? மேலே மேலே வளரணும்னு ஏன் நாயா அலையணும்” என்று சில சமயம் கோகிலா அவனை நேருக்கு நேர் கேட்பாள்.

“எனக்கு இது போறாது கோகீ! என்னோடது மிருகப்பசி. அதாவது அனிமல் அப்பீடைட். என்னாலே முடியாததுன்னு எதுவும் இருக்கப்படாது” என்பான் அவன். அந்த வெறிதான் அந்த வெற்றி வெறிதான் முடிவாக ஒரு தொத்து வியாதிபோல அவளையும் சேர்த்துப் பீடித்து விடும், சுலபாவின் இருபத்தெட்டாவது பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. பொதுவாக அவள் இருபத்தாறு, இருபத்தேழு, இருபத்தெட்டு என்று அடுத்தடுத்து வயது கூறியபோது கோகிலா கூட அதை நம்பவில்லை. வயதைக் குறைத்துக் கூறிக் கொள்வது நடிகைகளைப் பொறுத்தவரையில் ஒரு மரபாகவும் நாகரிகமாகவும் தகுதியாகவுமே கருதப்பட்டது. நடிகர்களில் கூடப் பலர் அப்படித்தான் செய்தார்கள். அதில் “மார்க்கெட் ரகசியம்” இணைந்திருப்பதாகச் சொல்லப்பட்டது. அந்தரங்கமான இரண்டொருவரைத் தவிர யாரும் நடிகைகள் தங்கள் பிறந்த நாள் பற்றிச் சொல்லுவதே இல்லை. அதுவும் உண்மையைச் சொல்லுவதே இல்லை.

நடிகையைப் பெற்ற தாயால் கூட அவளது சரியான பிறந்த தேதியைச் சொல்ல முடியுமா என்பது கேள்விக்குறி தான் - என்று கூட வேடிக்கையாக ஒரு வசனம் சினிமா உலகில் உண்டு.

உயிர்த்தோழி கோகிலா சுலபாவிடம் எத்தனையோ உரிமைகளை எடுத்துக் கொண்டும் துணிந்து ஒருநாள் கூட “ஏண்டி சுலபா! எனக்குத் தெரிந்தால் என்ன? உன் உண்மை யான வயதே இருபத்தெட்டுத்தானா?” - என்று வினவக் கூட முயன்றதில்லை. ஒரு சினிமா நடிகையிடம் வயது விசாரிப் பது என்பது தயங்கி ஒதுங்க வேண்டிய ‘சென்ஸிடிவ் இஷ்யூ’ வாகக் கருதப்பட்டது.

‘எனக்கு என்றும் பதினெட்டுத்தான்’ என்பது போலவே பல நடிகைகள் நடந்துகொண்டார்கள். ஒரு நடிகை கற்பை இழப்பதை விட இளமையை இழப்பதையோ இழப்பாகக் காட்டிக் கொள்வதையோதான் அதிகம் வெறுத்தாள். அதாவது தமக்கு வயதானதாகக் காட்ட மனம் ஒப்பவில்லை. சுலபாவின் வயது பற்றிக் கோகிலாவுக்கு மட்டுமின்றிக் கவிதாவுக்கும் கூடச் சந்தேகங்கள் உண்டு. இருவரும் எவ்வளவோ முயன்றும் சுலபாவின் உண்மை வயதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. அதிகாரபூர்வமாகச் சுலபாவே அறிவித்த இருபத்தேழுதான் நம்பப்பட வேண்டியிருந்தது, இருபத்தெட்டு இப்போது வந்து கொண்டிருந்தது. பள்ளிச் சான்றிதழ்களை வைத்துத் துப்புத் துலக்க முடியாது. அவள் மழைக்குக் கூடப் பள்ளிகளில் ஒதுங்கியதில்லை, அதனால் சர்டிபிகேட்டுகளில் ‘டேட் ஆஃப் பெர்த்’ பார்க்க வழியில்லை. சுலபாவின் தாய் என்று அறிமுகப்படுத்தப்பட்ட நரசம்மாவுக்கும் வயது பற்றி எல்லாம் மூச்சு விடக் கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை செய்யப் பட்டிருந்தது போலும். ஏனெனில் வயது பற்றி யாராவது பேச்சை ஆரம்பித்தாலே நரசம்மா விதிர்விதிர்த்து நடுங்கினாள். இதனால் நம்பும்படியாக இல்லாவிட்டாலும் சுலபாவே அதிகாரபூர்வமாகச் சொல்லியிருந்த தேதியை வைத்துக் கணித்து அவளுடைய 28-வது பிறந்தநாள் இன்னும் சில வாரங்களில் வர இருப்பதைக் கோகிலா அநுமானித்தாள்.

ஆனால் நடிகை சுலபாவின் கற்பனைப் பிறந்த நாட்கள் கூட இரகசியமானவை. கோகிலாவுக்கு மட்டுமே தெரிந்தவை. ஒவ்வொரு பிறந்த நாளையும் ஒரு புதிய மகிழ்ச்சியும் அநுபவம் கிடைக்கிற மாதிரி எப்படிக் கொண்டாடுவது என்பதையே கோகிலாதான் திட்டமிடுவாள், பெரும்பாலும் அது சுலபாவுக்குப் பிடித்த மாதிரியே இருக்கும். கோகிலாவும் சுலபாவுமே அதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். இது கூட இரண்டு மூன்று வருடங்களாகத்தான். அதற்கு முன்போ கொண்டாட்டமே கிடையாது.

இருபத்து ஆறாவது பிறந்தநாளை மேற்கு மலைத் தொடரில் நடுக்காட்டில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்கி விநோதமாகக் கொண்டாடினார்கள் அவர்கள். இருபத்து ஏழாவது பிறந்த நாளைக் காஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரியின் நீர்ப்பரப்பில் மிதக்கும் ஒரு படகு வீட்டில் கொண்டாடினர்கள். அந்த ஷிகாரா (படகுவீடு) ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலின் வசதிகள் உள்ளதாயிருந்தது. கோகிலா மட்டுமே கூடப் புறப்பட்டுப் போயிருந்தாள்.

வரப்போகும் 28-வது (அதிகாரப் பூர்வமான) பிறந்த நாளை எப்படிக் கொண்டாடுவது என்று ஞாயிறன்று சுலபாவின் வீட்டில் டின்னருக்குப் போகும்போது அவளிடம் சஸ்பென்ஸாய் அறிவிப்பதாக முடிவு செய்திருந்தாள் கோகிலா. சுலபா தன் வீட்டுக்கு முந்திய டின்னருக்கு வந்த போது தெரிவித்த சில ஆசைகளின் அடிப்படையில் கோகிலா அதை யோசித்து வைத்திருந்தாள். சுலபாவின் மனநிலையை தவிப்பை - நீண்டநாள் ‘காம்ப்ளெக்ஸ்’களைத் தெரிந்து கொண்டு அதற்கேற்பக் கோகிலா சிந்தித்து வைத்திருந்தாள். சுலபாவும் அதற்கிசைவாள் என்றே கோகிலாவுக்குத் தோன்றியது. இதில் சுலபாவை அவள் நம்பினாள். சுலபாவின் வீட்டுக்கு அந்த ஞாயிறன்று கோகிலா விருந்துக்கு வந்த போதே இரவு எட்டுமணி. முன்னெச்சரிக்கையாகக் கவிதாவை வீட்டுக்கு அனுப்பியிருந்தாள் சுலபா. நரசம்மா வீட்டில் இருந்தாள். மாடியில் சுலபாவின் ஏ.சி. செய்த தனியறையில் சந்திப்பு. “கீழே டைனிங் ஹாலில் பத்து மணிக்குச் சாப்பிட வருவோம்! இன்னின்ன அயிட்டங்கள் மெனு” என்று நரசம்மாவிடமும் வேலைக்காரியிடமும் உத்தரவு போட்டாயிற்று. எந்த ஃபோன் வந்தாலும் என்னைக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்ணாதே! நீயே பேசிக்கொள். யார் தேடி வந்தாலும் நீயே சமாளித்துச் சொல்லி, அனுப்பிவிடு” என நரசம்மாவிடம் பொறுப்பை ஒப்படைத்திருந்தாள் சுலபா.

தானும் கோகிலாவும் சந்திக்கிற சந்திப்புக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாதென்று திட்டமிட்டிருந்தாள் சுலபா. அவளிடம் அதிகப் பணம் கொடுத்து வாங்கிய பிரெஞ்சு ‘ஷாம்பைன்’ சிக்கியிருந்தது. கோகிலாவுக்குப் படுகுஷி. அன்றிருந்த உற்சாகத்தில் கோகிலா சிகரெட்டும் பிடித்தாள், அவள் எவ்வளவோ வற்புறுத்தியும் சுலபா மறுத்து விட்டாள்.

“இது மட்டும் என்னலே முடியாதுடீ! எனக்குச் சிகரெட்டுப் புகையின்னலே பிடிக்காது! கமட்டிக்கிட்டு வரும். அந்தக் கிராதகன் குப்பையரெட்டி என்னை ஒரு விடுதிக்கு விலைபேசி வித்துட்டு ஓடினானே, அந்த விடுதியிலே வாயில் சிகரெட் நாற்றமும். பீடிவாடையுமுள்ள வேர்வைநெடியோடப் பல தடியன்கள் வருவாங்க. காசுக்காக அவங்களைச் சகிச்சுக்கிறப்ப எல்லாம், ‘சிகரெட் குடிக்காத - புகையிலை போடாத - ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத உடம்பு பூ மாதிரி மணக்கிற ஒரு சின்ன வயசுச் சாமியாரையாவது நிம்மதியா அநுபவிச்சுட்டுச் சாகணும்’னு எனக்கு அப்பத் தோணும்டி கோகிலா.”

இதில் சுலபாவின் ‘சப் கான்ஷியன்ஸ் மைண்ட்’ புரிந்தது. அவள் உள் மனத்தில் என்ன அடங்கிக் கிடக்கிறது என்பது கோகிலாவுக்கு ஏற்கெனவே ஒரு தினுசாக விளங்கியிருந்தது. இப்போது அவளே பேசியதும் அது தெளிவாகவே புரிந்தது. இவள் படித்திருந்த பிராய்ட், யுங், ஆட்வர் முதலியவர்களின் கருத்துக்களைக் கொண்டு சுலபாவின் மன நிலையை விளங்கிக் கொள்ள முடிந்தது, அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மனநிலைகள், காமம் சம்பந்தமான பழிவாங்கல் உணர்ச்சிகள் மிகவும் விநோதமானவை என்று படித்தும் கேள்விப்பட்டுமிருந்தாள் கோகிலா. அவற்றில் சில நம்பமுடியாதபடி இருந்தன. ஆனால் காரண காரியங்களோடு சிந்திக்கத் தக்கவையாக இருந்தன. சுலபாவின் உள்ளடங்கிய ஆசை எங்கே எப்படி எதில் இருந்தது என்பதைக் கோகிலா மெல்ல மெல்லக் கண்டு பிடித்தாள். அநுமானித்தாள்.

பரிசுத்தமான கன்னிமை உடலும் அழகுத் தேவதையாகச் சினிமாவில் மின்னப் போகிறோம் என்ற ஆசையுமாகக் கிளம்பி வந்த அவளைப் பீடி வாடை குமட்டும் வாய் நாற்றமும், சிகரெட் நெடி, சாராய வாடை, வியர்வை நாற்றமும் நிறைந்த மனிதர்களின் அழுக்கடைந்த முடை நாற்றமெடுத்த மலிவான படுக்கைகளில் தள்ளிவிடக் காரணமாயிருந்த குப்பையரெட்டியை அவள் இன்னும் மறக்கவில்லை.

ஆனால் இன்று அவள் இருக்கிற இடமே இண்டிமேட் ரெவ்லான் வாசனையில் மிதந்தது. இதற்கு அடிப்படைக் காரணமே அவள் குமட்டும் நாற்றங்களிலிருந்து மேலெழுந்து வந்தது தான்.

கோகிலா கேட்டாள்:

“உலகின் தலைசிறந்த இங்கிதமான ஆண் வேட்கை பற்றிய கவிதையை நம்மூர் ஆண்டாள்தான் பாடியிருக்கிருள்... தெரியுமோ?”

“ஆண்டாள்னா பக்தி மான்களிலே வைத்துப் பேசறது தானே வழக்கம்? நீ இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?”

“தான் விரும்புகிற ஆணுக்காகத் தொடுத்து வைத்த மாலையை முதலில் தன்மேல் சூட்டி அழகு பார்ப்பதும் - தான் விரும்புகிற ஆணின் அழகிய உதடுகள் கருப்பூரவாசனை உள்ளவையாயிருக்குமா? தாமரைப்பூ வாசனையுள்ளவையாயி ருக்குமா? இனிப்பாயிருக்குமா? என்றெல்லாம் அந்த வாயில் ஊதப்பட்ட சங்கிடம் விசாரிப்பதும் - காமத்தின் இங்கிதமான வெளிப்பாடல்லவா?”

“உன்னை மாதிரி - அதென்ன பிராடா - ஃபிராய்டா என்னமோ அடிக்கடி ஒரு பேரு சொல்லுவியே - அவனைப் படிச்சிருக்கிற பொம்பிளைங்கள்ளாம் ஆண்டாளைப் பத்திப் பேசறதே பாவம்டி கோகிலா...”

“‘கருப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்திருக்குமோ... சொல்லாழி வெண் சங்கே’ன்னு பாடிருக்காளே ஆண்டாள் அதுக்கு வேற என்னடி அர்த்தம்?”

“அர்த்தமோ, அனர்த்தமோ எல்லாம் வேண்டாம். ஆனா ரொம்ப அழகாப் பாடியிருக்காடீ! அந்த வரிகளைத் திருப்பி இப்பச் சொன்னால் கூட அதுதான் என் ஆசை டீ கோகிலா!'

“என்ன ஆசை...?”

“உடம்பில் பச்சைக் கருப்பூரம் மணக்கிற - வாயில் இதழ்களில் ஏலக்காய் வாசனையுள்ள சந்தன நிற மேனிச் சந்தியாசி ஒருத்தனையாவது நம் இஷ்டத்துக்கு அநுபவிச்சிட்டுச் சாகணும்.”

“இதில் ஏதோ பெரிய பழிவாங்கல் உணர்வு இருக்கிறது! எல்லா அழகிய பெண்களும் சந்நியாசிகளை - யாருமே அநுபவிக்காத அழகிய இளம் சந்நியாசிகளை வெறியோடு பார்க்கிறார்கள் என்பது ஒரு சைக்காலஜிடீ சுலபா!”

“ஆண்களில் எத்தனை பணக் கொழுப்பும் உடல் கொழுப்பும் உள்ளவன் யாருமே தீண்டாத புதுப்பொண்ணு - இளசா வேணும்னு பயித்தியம் பிடிச்சு அலையிறாங்க? உண்டா இல்லியா?”

“யாராலும் தொடப்படாத அழகுகள் முதலில் தன்னால் அநுபவிக்கப் படவேண்டுமென்று நினைக்கிற ‘மேனியாக்’குகள் ஆண்களில் தான் உண்டு என்று நேற்றுவரை நினைத்திருந்தேன். பெண்களிலும் உண்டு என்று இப்போது புரிகிறதடி சுலபா...”

“இருந்தால் என்ன தப்பு? அப்படிப் புதுப் புது மலராக நாடித் தேனுண்ணும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே தனியுரி மையா என்ன?”

“நீ பெண்ணுரிமை இயக்கத்தில் இருக்க வேண்டியவள் சுலபா!”

“எனக்கு இயக்கம் அது, இது, எல்லாம் புரியாது கோகிலா. ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுப்போமே பாதம்கீர் - அந்த நிறத்திற்குப் பளிரென்று இருக்கிற - பிறந்ததிலேயிருந்து பெண்களையே அநுபவித்திராத ஓர் இளம் சந்நியாசியை அடையும் துடிப்பு என்னுள் இடைவிடாமல் இருக்கிறது. இதைத் தவிர்க்கவோ தணிக்கவோ முடியவில்லை. இது தீயாக உள்ளே கனல்கிறது.”

“அவன் உடம்பில் கர்ப்பூரம் மணக்க வேண்டும்! இதழ்களில் ஏலக்காய் சுவைக்க வேண்டும். தோள்களில் சந்தனம் கமகமக்க வேண்டும். அவன் சரீரம் தாமரைப் பூப் போல் இருக்க வேண்டும். இல்லையாடி சுலபா?”

“நிச்சயமாக அப்படிச் சில இளம் சந்நியாஸிகளை நானே பார்த்து மோகித்திருக்கிறேன். முற்றிய தேங்காயின் நிறம் போல் கறையே இல்லாத தூய பல் வரிசையால் அவர்கள் சிரிக்கும் போது மோகத்தால் கிறங்கியிருக்கிறேன். ஆண்டாளைப் போல் பாட முடிந்திருந்தால் என் உள்ளுணர்வு களைப் பாட்டாகவே அவர்களுக்கு நானும் எழுதி அனுப்பி யிருக்க முடியும்! என் தாபங்களும் தாகங்களும் அப்படியே மனத்துக்குள் நிற்கின்றன. பாட்டாக வரவில்லை! வேறுவித நெருப்பாய் உள்ளே குழைகிறது.”

“எந்த அழகிய துறவியிடமாவது பாதபூஜை - காணிக்கை அது இது என்ற சாக்கில் நீ நெருங்கியிக்கிறாயா? ஜாடைமாடையாகவாவது உன் அந்தரங்கத்தை நீ ஆசைப்படுகிற துறவிக்கு எட்ட விட்டிருக்கிறாயா?”

“என் ஆசைகள் ஒருதலைக் காமமாகவே உள்ளடங்கி விட்டன என்பதுதான் உண்மை. கணிசமாய் விரக்தியடையும் நிலைக்கு இந்த ஆசைகள் என்னைத் தள்ளியதுதான் உண்மை.”

“நீ ஒரு விநோதமான பெண்ணடீ சுலபா.”

“திருடனுக்குக் கன்னக்கோலை ஒளித்து வைக்க இடமில்லாததுபோல் என்னுடைய இந்த அந்தரங்க வேட்கையை நான் யாரிடமும் இதுவரை வெளியிடக்கூட இல்லை. உன்னிடம் தான் ஏற்கெனவே ஒரு தடவை ஜாடையாய்ச் சொன்னேன். இன்று வெட்கத்தை விட்டு வெளிப்படையாய்ச் சொல்லுகிறேன். சில பால சந்யாசிகளின் அருகே நிற்கிற போது அவர்கள் மேனியிலிருந்து துளசியும் சந்தனமும் மணப்பது போல் உணர்வேன். திருப்பதியில் போய் வெங்கடசலபதிக்கு முன் கர்ப்பக் கிருகத்தில் தரிசனம் செய்கிற ஒவ்வொரு தடவையும் இப்படி வாசனையை உணர்ந்து என் நினைவுலகச் சந்தியாசியைத் தழுவியணைத்துக் கோவிலில் நினைக்கத் தகாததை எல்லாம் நினைத்துப் பரவசப்படுவேன். எவ்வளவோ முயன்றும் என்னால் இதைத் தவிர்க்க முடியவில்லையடி கோகிலா.”

“உன்னை அடையக் கோடீசுவரன்கள் பலர் தவம் கிடக்கிறான்கள். நீயோ ஒரு சுத்தமான இதுவரை பிரம்மசரியம் கெடாத ஒரு புதுச் சாமியார் வேண்டும் என்கிறாய்!”

“அது என் ஆசையா அல்லது பழிவாங்கும் வேட்கையா என்று உடனே பிராய்டில் இறங்கிவிடாதே! என்னுள் ஒரு வெறியாகவே கனன்று வரும் விஷயம் இது.”

இதற்குப் பதில் சொல்லாமல் சிறிது நேரம் யோசித்தாள் கோகிலா. சுலபாவின் முகத்தையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தாள், பின்பு நிதானமாக அவளை வினவினாள்.

“உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்தநாள் வரு கிறதே; அதற்குப் பரிசாக அன்றைய தினம் நீ விரும்புகிற வகையிலான கறைபடாத - புத்தம் புதிய சாமியார் ஒருத்தரை உனக்கு நான் அளித்தால் நீ சந்தோஷப்படுவாயா?”

“அது எப்படியடி சாத்தியம்?”

“இப்படியெல்லாம் கேள்வி கேட்காதே! உன் அந்தரங்க சிநேகிதியை நம்பு. உன்னுடைய இருபத்தெட்டாவது பிறந்த நாளில் உனக்குக் கர்ப்பூர வாசனையும், ஏலக்காய் நறுமணமும் சந்தன கமகமப்பும் கிடைக்கும்.”

அத்தியாயம் - 15

ஷாம்பைன் பாட்டில் காலியாயிற்று. வழக்கம்போல் சுலபாதான் அதிக ரவுண்டு வந்திருந்தாள், கோகிலாவின் கட்டுப்பாடு சுலபாவிடம் எப்போதும் இருந்ததில்லை. அவள் எதிலுமே அளவாயிருப்பாள். சுலபாவால் அது முடிவதில்லை. எதையோ மறக்க முயல்கையில் அதிகம் குடிக்க நேர்ந்தது. எதையோ பேசத் துணிவதற்கான சூடு உடம்பில் இருக்க அதிகம் குடிக்க முடிந்தது. விருந்தளிப்பவளாக இருந்தாலும், விருந்து ஏற்பவளாக இருந்தாலும் இரண்டிலும் அதிகம் பருகுகிறவள் சுலபாவாகவே இருந்தாள்.

கீழே படியிறங்கிச் சாப்பாட்டு மேஜைக்குப் போகவே தடுமாறும் போலிருந்தது.

“சாப்பிட இன்னும் கொஞ்ச நேரமாகலாமா? உனக்கு ஒன்றும் அவசரமில்லியே? இன்னும் கொஞ்சநாழி பேசிட்டி ருக்கலாமே?” - என்றாள் சுலபா.

கோகிலா சம்மதித்தாள், “எனக்கு ஒண்னும் அவசரமே இல்லை! டிரைவர் ப்ராப்ளமும் கிடையாது. நானே ஓட்டிக் கிட்டுப் போகப் போறேன். எங்க வீட்டுக்காரரும் ஊர்ல இல்லே, ஏதோ பிஸினஸ் விஷயமாகக் கல்கத்தா போயிருக் கிறார்.”

“நீ சொன்னதை நினைச்சால் கொஞ்சம் பதட்டமா இருக்கே? எப்பிடிடீ முடியும்? ஒரு சாமியாரை இங்கே கூப்பிட்டா...வருவாங்களா? நாம தேடிக்கிட்டுப் போறதும்... நல்லா இருக்காது...”

“நீ இன்னும் அந்த விஷயத்திலேயே இருக்கியா சுலபா?”

“ஆசையைத் தூண்டிவிட்டுட்டு இப்படிக் கேள்வி கேட்டா என்னடி அர்த்தம்? நான் கேட்கிறதுக்குப் பொறுமையாப் பதில் சொல்லு... இல்லாட்டி எனக்கு ராத்திரி எல்லாம் தூக்கம் வராது...”

கோகிலா சிரித்தாள். கேட்டாள்!

“உன்னை நினைச்சு எத்தனையோ ஆம்பிளைங்க ராத்திரி எல்லாம் தூக்கமில்லாமத் தவிக்கிறாங்க! உனக்கு இன்னும் முகம் தெரியாத ஆம்பிளையை நினைச்சு நீயும்தான் தூக்கமில்லாமல் ஒருநாள் தவியேன்! அதிலே என்ன தப்பு.”

“என் நிலையில் நீ இருந்தால்தான் என் தவிப்பு உனக்குப் புரியும்டீ கோகிலா.”

“இன்னும் சில வாரங்கள் தான் இடையிலிருக்கின்றன. உன் தாபமோ, தாகமோ, தவிப்போ - நீ எப்படி விரும்புகிறாயோ அதை எல்லாம் - ஒன்று சேர்த்து வைத்துக்கொள்! உன் இருபத்தெட்டாவது பிறந்த தினத்தன்று நீ விரும்பிய சுகத்தை உனக்குக் கிடைக்கச் செய்வது என் பொறுப்பு.”

“பொறுப்பு இருக்கட்டும்! அதில்தான் பல சிக்கல்கள் இருக்கின்றன. இங்கே நரசம்மா கவிதா யாருக்கும் இது பற்றித் தெரியக்கூடாது. இரகசியமாக இது நடக்கணும்.”

“இதெல்லாம் படிச்சுப் படிச்சு நீ சொல்லணுமாடீ சுலபா? நான் பார்த்துக்கிறேன். எங்கிட்ட விட்டுடு. எனக்கு உன் தோது தெரியும்.”

தன் சிநேகிதியிடம் இந்த அந்தரங்கத்தைத் தான் பகிரங்கமாகப் பகிர்ந்து கொண்டு சொல்லியிருக்கக் கூடாதோ என்று சுலபா இப்போது இரண்டாவது எண்ணமாக யோசித்துத் தயங்கினாள்; இவள் ஒன்று கிடக்க ஒன்று செய்து அவமானமாகவோ, தலைக் குனிவாகவோ முடிந்துவிடக் கூடாதே என்று பயமாகவும் இருந்தது, அதே சமயம் கோகிலாவின் திறமையை ஒரேயடியாகக் குறைத்து மதிப்பிடவும் மனசு இடம் கொடுக்கவில்லை. வர்த்தகர்கள், சந்நியாசிகள், அரசியல்வாதிகள், எல்லாத் தரப்பிலும் கோகிலாவுக்கு நல்ல பரிச்சயம் உண்டு என்பதைச் சுலபா அறிவாள்.

ஏதாவது தாறுமாறாக முடிந்து வெறும்வாயை மெல்லும் பத்திரிகைகளுக்குக் கிசுகிசு அவல் கிடைத்து, “சாமியாருக்கு வலைவிரித்து நடிகை சுலபா ஏமாந்தாள்” என்று கிண்டல் செய்தி ஆகிவிடக் கூடாதே என்று தான் அவள் பயந்தாள். ஒவ்வொரு நிபந்தனையாகக் கோகிலாவிடம் கூறினாள்.

“அந்த சந்தியாசிக்கு நான் யாரென்றே தெரிய வேண்டிய அவசியமில்லை கோகிலா! கூடியவரை லெளகீக உலகின் தொடர்புகளே அற்ற நைஷ்டிக பிரம்மசாரியாயிருந்தால் நல்லது! என் புகழும் பழியும் அவருக்குத் தெரிய வேண்டியதில்லை.”

“சினிமாவுக்கும் தியேட்டருக்கும் போகாத சந்நியாசி என்றே வைத்துக் கொண்டாலும் கூட மூலைமுடுக்கு எல்லாம் வீடியோ உள்ள இந்த நாளில் உன்னை யாரென்று தெரியாத சாமியாரா இல்லையா என்று கண்டு பிடிப்பது சிரமம்.”

“தெரிந்தால் என்னை வெறுத்து ஒதுக்கி விடலாம். சே. என்று கேவலமாக நினைக்கலாம். எச்சிற்பண்டம் என ஒதுக்க நினைக்கலாம்! ஒரு சாமியாருக்கு என் அழகு மட்டும் போதாதே?”

“பழங்களில் அணிற்கடித்த எச்சில் ரொம்ப விசேஷம் என்று சிலர் விரும்பிச் சாப்பிடுவார்கள்! நீ அப்படி ருசியானவள் சுலபா.”

“பழங்களுக்கு அது சரியாயிருக்கலாம். மனிதர்களுக்கு ஒத்து வராது. அணில் கடித்த பழமும் நாமும் ஒன்றாகி விட முடியாது கோகிலா”

“உனக்குத் தெரியாது சுலபா சில பேருக்கு அணில் கடித்த பழங்கள் தான் ரொம்பப் பிடிக்கும்.”

மீண்டும் திரும்பத் திரும்பத் தோழி கோகிலா இப்படியே ஒப்பிட்டது சுலபாவுக்குப் பிடிக்கவில்லை. குற்றமுள்ள மனசு குறுகுறுப்பது போல் உள்ளே குறுகுறுத்தாலும் தன்னைக் குத்திக் காட்டும் உள் நோக்குடன் கோகிலா பேசியிருக்க மாட்டாள் என்று சுலபா நன்றாக அறிந்திருந்தாள்.

எந்த ஓர் இளம் பெண்ணும் இன்னோர் இளம் பெண்ணுக்குச் செய்து தரக்கூடும் என்று கற்பனையில் கூட எதிர்பார்க்க முடியாத உதவியைத் தனக்கு வலுவில் முன் வந்து செய்யத் துணிந்திருக்கும் கோகிலாவின் செயலில் குறை காண முயலக் கூடாது என்று தன் மனத்தையே அப்போது சுலபா கடிந்து கொண்டாள். மேனியில் பொன் நிறம் ஒளிரும் சந்தனமும் பச்சைக் கருப்பூரமும் மணக்கக் கூடிய - ஊளைச் சதையில்லாத செதுக்கி எடுத்தது போல வைரம் பாய்ந்த ஒரு வசீகரமான பிரம்மசாரியை - பெண் என்றால் என்ன என்று முதல் முதலாக இவள் மூலமே அறியப் போகிற ஒரு பிரம்மசாரியை - அந்த அநுபவத்தின் எல்லா த்ரில்களுடனும், கிக்குகளுடனும் அடையப் போகிறோம் என்ற உணர்வு நினைக்கும் போதே சுலபாவைப் புல்லரிக்கச் செய்தது. கடந்த காலத்தில் அழகற்ற அருவருப்பான வியர்வையும், பீடி, சிகரெட்டும் நாறுகிற குரூரமான பல ஆண் உடம்புகளை வியாபார ரீதியாகத் தான் மகிழாமல் மிஷின்போல அவள் மகிழச் செய்திருந்தாள், அதன் விளைவு இன்று நாற்றமும், வியர்வையுமே அவளுக்குப் பிடிக்கவில்லை. சுத்தமும் நறுமணமுமே அவளுடைய இன்றைய இலட்சியங்களாயிருந்தன. அழுக்கடைந்து கசங்கிய ரூபாய் நோட்டுக்களை வைக்க வேறு இடமின்றி ஜாக்கெட்டுக்குள்ளும் இடுப்பிலும் வாங்கிச் சொருகி மேலும் அழுக்கடையச் செய்த பழைய நாட்கள் குமட்டிய காரணத்தால் இன்று புத்தம் புதுச் சலவை நோட்டுக்களை மட்டுமே அவள் கைகளால் தீண்டினாள்.

பரிசுத்தத்தை அநுபவித்து அழுக்குகளைப் பழிவாங்க விரும்பினாள். நறுமணங்களை நுகர்ந்து துர்நாற்றங்களை மறக்க விரும்பினள். வீட்டில் ஏ.சி. அறைகள் மணமாக இருக்கக் கூடப் பம்பாயிலிருந்து வாசனையை இதமாக ஸ்பிரே செய்யும் ஒரு சிறிய அழகான எலெக்ட்ரிக் கைமிஷன் வாங்கி வைத்திருந்தாள்.

“சுலபா என்றால் சுகமான நறுமணம். சுலபா என்றால் சுத்தம். சுலபா என்றால் நறுவிசான துல்லியமான பழக்க வழக்கங்கள். சுலபா என்றால் கவர்ச்சி” என்று பேரெடுத்திருந்தாள் அவள். இதை எல்லாம் கூர்ந்து கவனித்திருந்த தயாரிப்பாளர்கள் அவளுக்கு ரொக்கம் கொண்டு வந்தால் கூட உயர்ரக செண்ட் தெளித்துப் புத்தம் புதிய நோட்டுக் கட்டுக்களாகக் கொண்டு வந்து கொடுக்கப் பழகியிருந்தனர்.

ஸெட்டில் காபி, குளிர்பானம், பாதாம்கீர் கொண்டு வருகிற போது - கொண்டு வருகிற பையன், அவன் உடை, கொண்டு வருகிற கிளாஸ் எல்லாமே சுத்தமாயிருக்க வேண்டும். இவளைத் திருப்திப்படுத்த என்றே எஸ்.பி.எஸ் பாலக்காட்டிலிருந்து நல்ல நிறமுள்ள சுத்தமான பழக்க வழக்கமுள்ள ஒரு நாயர்ப் பையனை வேலைக்கு அமர்த்தியிருந்தார். “அவங்களுக்குப் பசங்க நீட்டா ஜம்முனு இருக்கணும்ப்பா. இல்லாட்டி கிளாஸை அப்படியே மூஞ்சியிலே கிடாசிடுவாங்க” - என்று புரொடக்ஷன் மேனேஜரிடம் அடிக்கடி எஸ்.பி.எஸ். சுலபாவுக்காக அக்கறை எடுத்துக் கொண்டு பேசுவார். ஒரு தேவதையை வழிபடுவது போல் தயாரிப்பாளர்கள் அவளை வழிபட்டனர். அவளைப் பிரார்த்தித்தனர். வரம் வேண்டினர், மன்றாடினர். நைவேத்தியம் செய்தனர்.

அரைத்தச் சந்தன நிறம்தான் அவளுக்கு மிகவும் பிடித்த நிறம். வெளிர் நிறங்களில் தங்கமும் பாதாம் கீரின் வண்ணமும் அவளுக்கு மிக மிகப் பிடித்தமானவை. முதல் முதலாக அவளை ஏமாற்றிவிட்டு ஓடிய குப்பையரெட்டி கூட அந்த நிறம்தான். பாதாம்கீரைக் கையில் பிடித்தபடியே சுலபா அதன் நிறத்தில் என்னென்னவோ ஞாபகங்கள் வந்து அப்படியே இலயித்துப் போய் உட்கார்ந்து விடுவாள் சில சமயங்களில். பருகி முடித்து விட்டால் அந்த நிறத்தைப் பார்த்து இரசிக்க முடியாதே என்று அப்படியே இலயித்துப் போய்ப் பிரமை பிடித்தவள் போல அதை நோக்கியபடி அவள் உட்கார்ந்து விடுகிற மர்மத்தை நரசம்மாவினால் கூடக் கண்டு பிடிக்க முடியவில்லை. “அம்மாவுக்குப் பாதாம்கீர்னா ரொம்பப் பிடிக்கும்” - என்று மட்டும் வேலையாட்கள் ஸ்டூடியோ பணி யாட்கள் அதைப் புரிந்து கொண்டிருந்தனர். கலப்படமில்லாத ஸ்வர்ணத் தாம்பாளத்தில் அங்கங்கே அடர்த்தியாக அரைக் கீரை விதையைத் தூவினாற்போல் மயிரடர்ந்த இளம் துறவி களின் பரந்த மார்பும், புஜங்களும் அவள் உள்ளத்தைக் கிறங் கச் செய்பவை. ஒருநாள் நல்ல போதையில் தன் அந்தரங்கத் தில் சிறிதும் மறைக்காமல் “அப்படித் தங்கத் தாம்பாளம் போன்ற மார்பையும் முற்றிய மூங்கிங் போல ஒளிமின்னும் புஜங்களையும் பிளேட்டில் இருக்கிற பாதாம் அல்வாவைச் சாப்பிடுவது போல் சாப்பிட வேண்டும்டி கோகிலா” என்று சுலபா வர்ணித்த அடங்காத வெறியைக் கேட்டுக் கோகிலா அவளைக் கிண்டல் கூடச் செய்திருக்கிறாள்.

“வர வர நீ கன்னி பால்ஸ் - மாதிரிப் பேச ஆரம்பிச்சிட்டேடீ சுலபா!”

“கன்னி பால்ஸ்... அப்டின்னா என்னடி அர்த்தம் கோகிலா...”

“நரமாமிச பட்சிணிகள்னு அர்த்தம்...”

“நரர்கள்னா அதுலே ஆண் பொண் எல்லாமே அடங்குமே, நான் சொல்றது அழகிய சுந்தரமான தேஜஸ் நிறைந்த ஆண்களை மட்டும் தானடி!”

“நீ தேர்ந்தெடுத்த நரமாமிச பட்சிணி! உனக்கு அதுவே சாய்ஸ் இருக்கு. ‘கஜாரண்ய சுவாமி’ மாதிரி யாரையும் மோகிக்கச் செய்கிற ஓர் அழகிய இளம் சாமியார் உன் போன்றவர்களிடம் தனியே சிக்கினால் என்ன ஆவாரோ? பாவம்!”

மன்மதனைப் போல் அழகுள்ள கஜாரண்ய சுவாமிகளின் பெயரைக் கோகிலா சொன்னவுடன் தேஜஸ்வியான அந்த அழகரின் முகமும் பரந்த இறுகிய மார்பும் புஜங்களும் நினைவு வந்து அவள் அப்படியே சொக்கிப் போய்ச் சித்தப் பிரமை பிடித்தவள் போல அமர்ந்து விட்டாள்.

“சந்தேகமே இல்லை! நீ ஒரு மேனியாக் தான்.”

“மேனியாக்னா...?”

சுலபாவுக்கு அந்த வார்த்தையைக் கோகிலா விளக்கி விவரித்தாள்.

உடன் சுலபாவிடமிருந்து பதில் வந்தது.

“இந்த கஜாரண்ய சுவாமிகள் மாதிரித் தேஜஸ்வியான சுந்தரபுருஷனை அநுபவிக்க முடியும்னா - அநுபவிச்சிட்டு அதுக்கு விலையா என் சொத்துச் சுகம் எல்லாத்தையும் ஈடு கொடுக்கக் கூட நான் தயார்.”

“‘நீ நரகத்துக்குத் தான் போவாய்’ என்று அவரது பக்தர்கள் உன்னைச் சபிப்பார்கள்.”

“அந்தப் பேரழகை ஒருமுறை அநுபவிப்பதே சுவர்க்கமாக இருக்கும். அப்படி அநுபவம் கிடைத்துவிட்டால் அதன் பிறகு நரகத்துக்குப் போகக் கூட நான் தயார்.”

“எல்லா ஆசாபாசங்களையும் மோக முனைப்புக்களையும், ஜெயித்துவிட்டுச் சிரிக்கிற ஒரு துறவியின் மேல் நீ மோகம் கொள்கிறாய்!”

“பலரை ஜெயித்தவனை ஜெயிப்பது தான் சுகம்! தோற்றவர்களை ஜெயிப்பதில் ஜெயம் எங்கே இருக்கிறது?”

“ஸோ எல்லாவற்றையும் - எல்லாரையும் வென்ற ஒருவன் உனக்குத் தோற்க வேண்டும்! ரொம்பத்தான் பேராசைக்காரிடீ நீ! உன் பேராசை விநோதமானதுதான்.”

எப்போதோ நடந்திருந்த இந்தப் பழைய உரையாடலிலிருந்தும் இதில் உதாரணமாக இடம்பெற்ற கஜாரண்ய சுவாமி என்ற பேரழகரின் உருவத்திலிருந்தும் சுலபாவின் கனவிலுள்ள பரிசுத்தமான ஆணழகு எது என்பதைக் கோகிலா அநுமானமாகவும், பேரளவு சரியாகவும் புரிந்து கொண்டிருந் தாள். இது அவளுக்கு நினைவிருந்தது.

கோகிலா பார்ட்டி முடிந்து வீடு திரும்பும் போது இரவு ஒருமணி. “கவலைப்படாதே! உன்னைத் தயாராக்கிக் கொள்! உன் இருபத்தெட்டாவது பிறந்த நாளன்று கஜாரண்ய யோகி மாதிரி ஒருவரிடம் உன்னைத் தனியே கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பி விடுவேன் என்று நம்பிக்கையாக இரு! உனக்கு அப்படி ஒரு தனிமையில் அப்படி ஒரு பேரழகுடன் பன்னிரண்டு மணி நேரம் தங்க ஏற்பாடு செய்து விடுகிறேன். அதன் பின் உன் சாமர்த்தியம். பாதாம் அல்வாவை பிளேட்டில் முன்னால் வைத்து விடுகிறேன். சாப்பிடுவதும், ருசிப்பதும் ருசிக்காததும், பயன்படுத்திக் கொள்வதும் பயன்படுத்தாமல் போவதும் எல்லாம் உன் பாடு, விஷ் யூ குட்லக்” என்று உற்சாகமாக வாக்குறுதியளித்து விடை பெற்ற கோகிலா விடம் விவரமாக எல்லாம் சொல்லுமாறு தூண்டித் துருவினாள் சுலபா. “உரிய சமயத்தில் எங்கே எப்படி யார் என்பதெல்லாம் கூறப்படும்” என்று பூடகமாகப் பதில் கூறிவிட்டுப் போய்ச் சேர்ந்தாள் கோகிலா. சுலபாவின் இருபத்தெட்டாவது பிறந்த நாள் வர இன்னும் மூன்றே நாட்கள் தான் இருந்தன. அது ஒரு வெள்ளிக்கிழமையாகப் பார்த்து வந்தது. பிறந்த நாள் என்பதே கோகிலாவுக்கு மட்டும் தான் தெரிவிக்கப் பட்டிருந்தது.

“சொந்த விஷயமாகக் கோகிலாவும் நானும் சில காரியங்கள் கவனிக்க வேண்டியிருக்கு. வர்ர வியாழன், வெள்ளி, சனி மூணு நாளும் ஃபரீயா வை” என்று கவிதாவிடம் சொல்லி விட்டாள் சுலபா. அவளும் குறித்துக் கொண்டாயிற்று.

தான் பிறந்த பிறவிலேயே மிச்சமிருக்கும் ஒரே ஆனந்தம் என்று சுலபா நினைத்த வெள்ளிக்கு முன்பாக ஒரு நாளும், பின்பாக ஒரு நாளும் சேர்த்தே சொல்லியிருந்தாள்.

செவ்வாய்க்கிழமை காலையில் கோகிலா ஃபோன் செய்தாள்:

“சுலபா! உன் விஷயமாக இன்று போகிறேன். அநேக மாக வெற்றியோடு திரும்புவேன்.”

“எங்கேயடீ போகிறாய்? எப்போது திரும்புவாய்?”

“எங்கே என்பதெல்லாம் வந்து சொல்கிறேன். அநேகமாக இன்று மாலை அல்லது இரவில் திரும்புவேன். உன்னுடைய வர்ணனைப்படி சாமுத்ரிகா லட்சணமுள்ள ஓர் இளம் சாமியாரைக் கண்டு பிடிச்சாச்சு, அவர் உன்னைச் சந்திக்குப்படி செய்யணும், அதுக்காகத்தான் போய்க்கிட்டிருக்கேன்.”

“ரொம்ப தூரமோடீ கோகிலா?”

“கொஞ்சம் தூரம்தான், வந்து சொல்றேன் எல்லாம்.”

கோகிலாவின் பக்கமாக ஃபோன் வைக்கப்பட்டு விட்டது. இவளை மேலும் தொண தொணக்க விடாமல் ஃபோனை அவளே வைத்து விட்டாள். இவளுக்கானால் இங்கே மனசும் உடம்பும் நிலை கொள்ளவில்லை. பரபரத்தன. உடனே ஆகாயத்தில் பறக்க வேண்டும் போலவும், கடலில் முக்குளிக்க வேண்டும் போலவும் தோன்றியது. சுற்றி இருந்த எல்லாமும், எல்லாரும் சின்னதாய்க் குறுகிப் போனாற் போலிருந்தது. தன் அழகைக் கண்ணாடி முன் நின்று பார்த்துக் கொண்டாள். நடிப்பதற்காக வசனம் பேசித் தன் முகபாவத்தைத் தானே சரி பார்த்துப் பழகும் விசேஷ முழுநீள பெல்ஜியம் கண்ணாடி அது. உணர்ச்சிகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும். குளியலறையிலும் ஒரு பெரிய கண்ணாடி இருந்தது. குளிக்கும் போது பசு வெண்ணெயைத் திரட்டித் திரட்டிச் செய்தது போன்ற மிருதுவான தன் தந்த நிற முழு உடம்பை - அந்நியமான அந்த யாரோ ஒரு சந்தியாசியின் பார்வையில் அது எப்படித் தோன்றும். எவ்வாறு படும் என்கிற எண்ணத்தோடு பார்ப்பதை அவளால் அன்று தவிர்க்க முடியவில்லை. அணிந்து புனைந்து அலங்காரங்களுடன் அந்தப் புதியவருக்கு எப்படித் தோற்றமளிப்போம் என்பதை வெளியே உள்ள கண்ணாடியில் பார்த்தாயிற்று, திருப்திகரமான விடையும் பெற்றாயிற்று. அணியாமல், புனையாமல் - அணிகளையும், புனைவுகளையும் கழற்றிய ‘கைபுனைந்தியற்றாக்'கவின் பெறுவனப்பில் எப்படித் தெரிவோம் என்பதை இங்கே குளியலறையிலே பார்த்தாயிற்று. உறுதி செய்து கொண்டும் ஆயிற்று.

இப்படி எல்லாம் தன்னை அந்நியமாக ஆக்கி அந்நியனுடைய பார்வையிலே எப்படி அழகாயிருப்போம் என்று சமீப காலமாக அவள் பார்த்துக் கொண்டதே இல்லை. இப்படி யாரையும் புதிதாகக் கவர வேண்டிய அவசியமே அவளுக்கு ஏற்பட்டதில்லை. நீண்ட காலத்துக்குப் பின் இந்த ‘ரிஹர்சல்’ அவளுக்குத் தேவைப்பட்டது. அநுராக செளந்தரிய ஒத்திகையை இன்று தனக்குத் தானே அவள் செய்து பார்த்துக் கொண்டாள்.

ஒரு படை எடுப்புக்கு முன் படைகளையும், ஆயுதங்களையும் சரிபார்க்கிற படைத்தலைவனுடைய நிலையில் இன்று இவள் இருந்தாள். புலன்களிலும், ருசிகளிலும் அவ்வப் போது தோற்கும் சராசரி மனிதர்களுக்கான படை எடுப்பில்லை இது. புலன்களை வென்றவர்களைத் தோல்விக்கு அழைக்கும் புதிய படை எடுப்பு இது. கோகிலாவிடம் சுலபாவே சொல்லியது போல் - இது தோற்றவர்களை வெல்லும் முயற்சியில்லை. வென்றவர்களைத் தோற்கச் செய்யும் முயற்சி. ஆகவே அவள் தன் அழகு என்ற இயற்கை அரணையும் புனைவுகள் என்ற சாதனங்களையும் சரி பார்த்து வைத்துக் கொண்டாள். எல்லாப் படைகளையும் வெல்வதற்கு ஆயத்தப்படுத்தி வைத்துக் கொண்டாள்.

“காதலில்... காமத்தில், சந்தோஷம் அடைய வேண்டுமானால் நன்றாகத் தோற்க வேண்டியிருக்கும்” - என்று கோகிலா சொல்லியிருந்தது நினைவு வந்தது.

கோகிலா காதலிலும் பக்தியிலும் எந்தத் தரப்பில் ஆணவமும் தன் முனைப்பும் விஞ்சி நிற்கிறதோ அந்தத் தரப்புத் தோற்றுவிடுகிறது என்கிறாள். தோற்கிற வெற்றி எது? வெல்கிற தோல்வி எது? என்பது பற்றிக் கோகிலாவின் விளக்கங்கள் சுலபாவுக்குப் புதுமையாகவும் புரியாதவையாக வும் இருந்தன. வருகிற வெள்ளிக்கிழமையன்று தானே வெல்லப்போவது போல் முயன்றாள் சுலபா. ஆனால் தோற்கப் போவது போல் உணர்ந்தாள். உணர்வும் செயலும் முரண் பட்டன. ஒரு வேளை இந்த விவகாரத்தில் கோகிலா சொல்லு வது போல் தோற்பது தான் வெற்றியோ என்று எண்ணவும் தோன்றியது இவளுக்கு.

பிற்பகல் கழிந்தது. மாலையும் வந்தது. இரவு எட்டு மணிக்குத்தான் கோகிலாவிடமிருந்து அவள் எதிர்பார்த்த டெலிஃபோன் கால் வந்தது.

“என்னடீ ஆச்சு?”

“நேரிலே இதோ அங்கே புறப்பட்டு வந்துக்கிட்டே இருக்கேன்.”

“காயா? பழமா?”

“ஏறக்குறையப் பழம்தான்... நேரே வந்து எல்லாம் விவரமாச் சொல்றேன்.”

இருபது நிமிஷத்தில் கோகிலா நேரில் வந்து சேர்ந்தாள். சுலபா கேட்காமல் அவளே திட்டத்தை விவரித்தாள். வேகமாக அடித்துக் கொள்ளும் நெஞ்சுடன் ஆவல் பரபரக்கும் மனநிலையோடு செவிமடுத்தாள் சுலபா.

“காரியத்தை ஏறக்குறைய நமக்குச் சாதகமான எல்லை வரை கொண்டு வந்திருக்கேன். மத்தது உன் சாமர்த்தியம்.”

“அப்பிடீன்னா...? கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன். எனக்குப் புரியலியே?”

“விவரமாச் சொல்றேன். குறுக்கே பேசாமக் கேட்டுக்கோ! வெள்ளிக் கிழமை காலம்பர நாம ரெண்டு பேரும் எங்க ஏ.சி. பென்ஸ் காரில் திருப்பதி போறோம். திருப்பதியிலே சகஸ்ரகலசாபிஷேகம் பண்ணிப் பெருமாளைத் தரிசனம் பண்ணிட்டுப் பகல் மூணு மணிவரை அங்கே ஒய்வு எடுக்கிறோம். அப்புறம் அங்கிருந்து மதனபள்ளி போற ரோட்டிலே ரிஷி வேலிக்கு முன்னாடி இருக்கிற ‘திவ்ய சேவாசிரமம்’ என்கிற ஆசிரமத்துக்குப் போகிறோம். அந்த ஆசிரமம் ஒரு காட்டாற்றின் கரையில் முந்நூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய மாந்தோப்புக்குள் குளு குளு என்று அமைந்திருக்கிறது. குளு குளு என்றிருக்கும் அதன் சூழ்நிலையே மிகவும் ரம்மியமானது. அதிலே இளம் வயதில் பலவிதமாகச் சீரழிந்து வாழ்வை இழந்து வழி தவறிய பெண்களுக்கு மறுவாழ்வு அளித்துக் கல்வி தொழிற்பயிற்சி எல்லாம் தரும் நிலையங்கள் உள்ளன, இன்னொரு பகுதியில் அதை நடத்தும் திவ்யானந்தர் என்ற அழகிய துறவியின் ஆசிரமம் ஆற்றங்கரையில் ஒதுக்குப்புறமாக இருக்கிறது. இந்தத் திவ்யானந்தர் பேரழகன். உன் கனவுகளில் நிரம்பியிருக்கும் எல்லா செளந்தரியங்களும் நிறைந்த சுந்தரபுருஷன். தூய பல் வரிசை மின்ன வெண்முத்துப் போல் சிரிக்கிறார். கொழுந்துவிட்டு எரியும் அக்னிபோல மேனிநிறம். பக்கத்தில் நின்றால் வா வா என்று இழுக்கும் மல்லிகைப்பூ மணக்கிற சரீரம். ஒளி உமிழும் காந்தக் கண்கள். ஆனால் ஒரே ஒரு விஷயம் மட்டும் என்னல் ஏற்பாடு செய்ய முடியவில்லை. வழிதவறுகிற இளம் பெண்களுக்குப் புத்திமதி கூறும் அவரிடம் உன்னைக் கொண்டுபோய் நெருங்க வைப்பது சுலபம். வேறு விவரங்களை ஒரு துறவியிடம் பச்சையாகப் பேரம் பேசி முடிப்பது சிரமம் என்பதால், “என் சிநேகிதி ஒருத்தி உங்கள் புத்திமதிகளைக் கேட்க விரும்புகிறாள் சுவாமி! நிரம்ப வசதியுள்ள பணக்காரி - இந்த ஆசிரமத்துக்கு லட்ச லட்சமாக உதவக் கூட அவளால் முடியும். பகலில் இங்கு வரவும் உங்களிடம் பேசவும் கூச்சப்படுகிறாள். தயங்குகிறாள். உங்களுடன் தங்கிப் பேசினால் அவள் திருந்தி மனம் மாறக் கூடும். வெள்ளியன்று மாலை அவளை இங்கே அழைத்து வருகிறேன். மறுநாள் அதிகாலையில் நானே திரும்ப வந்து அவளைக் கூட்டிக் கொண்டு போய் விடுவேன். உங்கள் அருட் பார்வையில் அவள் திருந்தி விடுவாள் என்பது என் நம்பிக்கை” என்றேன்.

நான் கூறியதைக் கேட்டு அவர் சிரித்தார். அந்தச் சிரிப்பில் நானே மயங்கிச் சொக்கிப் போனேன்.

“அவள் பகலில் வந்தால் என்ன? இதில் ஒளிவு மறைவு எதற்கு?” என்று கேட்டார்.

“பெரிய வசதியுள்ள குடும்பத்து யுவதி! பகலில் வழுக்கி விழுந்தோரைத் திருத்தி வாழ்வு தரும் இந்த ஆசிரமத்திற்குத் தேடி வரக் கூச்சப்படுகிறாள் சுவாமீ! உங்களைப் போல் ஒரு மகானுக்கு அருள்புரிய எந்த நேரமானால் என்ன? நீங்கள்தான் பெரிய மனசு பண்ணி அவளைத் திருத்த வேணும்” என்றேன். வேண்டியபடியே “சரி! அழைத்து வா!” - என்றார் திவ்யானந்தர்.”

சுலபா கோபமாகக் குறுக்கிட்டாள்.

“மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான் என்பது போல இப்படி ஏற்பாடு பண்ணி விட்டு வந்திருக்கியேடீ கோகிலா! விடிய விடிய உட்கார்த்தி எனக்கு உபதேசம் பண்ணிக் காலையில் விபூதி குங்குமம் கொடுத்துத் திருப்பி அனுப்பிவிடப் போகிறார்.”

“அதுவரை உன் சாமர்த்தியங்கள் எங்கேடி போயிருக்கும்? பிறந்ததிலிருந்து புலன்களை அடக்கிய ஓர் இளம் வயதுச் சாமியாருடன் கிறங்க அடிக்கும் போதையூட்டுகிற பேரழகுள்ள நீ ஓரிரவு தனியே விடப்படப் போகிறாய், வேறு யாரும் உங்கள் இருவரைத் தவிர அங்கு இருக்கப் போவதில்லை. பன்னிரண்டு மணி நேரம் உபதேசம் கேட்கிற அளவு படுமந்தமானவளாடி நீ?”

“என்ன என்ன செய்யச் சொல்கிறாய்?”

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை! தண்ணீரில் தூக்கிப் போட்டபின் இப்படித்தான் நீந்தணும்னு மீன் குஞ்சுக்கு யாரும் சொல்லித்தர மாட்டார்கள் சுலபா.”

“பாதிக் கிணறு தாண்டின மாதிரி ஏற்பாடு பண்ணிவிட்டு வந்திருக்கிறாய்?”

“ரொம்ப டெலிகேட்டான விஷயம் இது! என்னைப்போல ஒரு பெண் உன்னைப் போல ஒரு பெண்ணுக்கு இது வரைதான் ஏற்பாடு பண்ண முடியும் இந்த விஷயத்தில். என் கணவர் எத்தனையோ வியாபார நண்பர்களுக்கு ஹோட்டல் - ஹோஸ்டஸ் - எல்லாம் ஃபோனிலேயே ஏற்பாடு பண்ணிப் பேசறப்போ நானே கேட்டிருக்கேன். அது ஈஸி. வசதியுள்ள ஆண்களுக்கு உபசரணைப் பெண்கள் அரேஞ்ஜ் பண்றது சுலபம். வசதியுள்ள உன் போன்ற ஒரு பெண்ணுக்கு நீ சொல்கிற வர்ணனைகளுக்கு உட்பட்ட ஓர் ஆண்மகனை ஏற்பாடு செய்யிறதுங்கிறது முடியாத காரியம். விபரீதமான முயற்சியும் கூட. அதனால் என்னமோ சொல்லி எப்படியோ பேசி உள்ளே நுழைந்து அந்தத் திவ்ய சேவாசிரமத்துக்கு ஐயாயிரம் ரூபாய் டொனேஷன் வேறு தந்து நான் என் மேல் நம்பிக்கை வரச் செய்ய வேண்டியிருந்ததடி சுலபா. என் மேலும் நான் சொன்ன ஏற்பாட்டின் மேலும் சந்தேகமே ஏற்படாமல் பெருந்தன்மையாக அந்தத் திவ்யானந்தர் ஒப்புக் கொண்டதே பெரிய விஷயம். வெறும் படத்தில் சிரிக்கிற சிரிப்பு ஆடுகிற ஆட்டம், தோன்றுகிற தோற்றத்தின் மூலமே பல லட்சம் மக்களை மயங்க அடித்துப் பைத்தியமாக்கியிருக்கிற நீ பெண் வாடையே படாமல் வறண்டு - காய்ந்து போயிருக்கிற ஒரு சாமியாரை வசப்படுத்துகிற வேலை கூட மீதமில்லாமல் நீ அங்கே போன வுடன் தயாராகச் சொம்பிலிருந்து தண்ணிர் படுகிற மாதிரி, முடியணும்னு நெனச்சா நான் ஒண்ணுமே பண்ண முடி யாதுடி!”

“நீயே இப்படித் தயங்கினால் நான் என்னடி பண்ணுவேன் கோகிலா!”

“மேயப் போகிற மாட்டுக்குக் கொம்பிலே புல்லைக் கட்டி விடமுடியாது என்பார்கள்...”

“நான் மாடா?”

“இல்லை பசு? காளையைத் தேடிப் போகிறாய். தேடி வருகிற பசுவைப் பெரும்பாலும் காளை கைவிடுவதில்லை.”

கோகிலா கிண்டல் செய்கிறாளோ என்று பட்டது சுலபாவுக்கு பதில் சொல்லாமல் இருந்தாள். கோகிலாவே மேலும் பேசலானாள்:

“உன் சக்தி உனக்குத் தெரியாதுடீ சுலபா! விசுவாமித்திர முனிவனே மேனகையிடம் மயங்கிப் பல்லிளித்திருக்கிறான். திவ்யானந்தர் உன்னிடம் எந்த மாத்திரம்? உன் அழகுக்கு இந்தச் சாமியார் ஒரு சவால் என்று நினைத்துக் கொண்டு போ. உன்னல் அவரை ஜெயிக்க முடியும்.”

“ஜெயிப்பதில் சந்தோஷமில்லை என்று நீயே சொல்லியிருக்கிருய்!”

“இந்தமாதிரி ஓர் ஆண்பிள்ளையை ஜெயிப்பதே அவனிடம் எல்லாவற்றையும் தோற்பதற்குத் தானே?" பணம் ஏதாவது கொண்டு போக வேண்டுமா?”

“கொண்டுபோனால் தப்பில்லை! நல்ல காரியம் செய்கிறார். ரொக்கம் தான் வேண்டும் என்பதில்லை. ‘செக்’காகவே தரலாம். இன்கம்டாக்ஸ் விலக்கு உத்தரவுகூட வாங்கியிருக்கிறார்.”

“நானும் டொனேஷன் தரத்தான் போகிறேன். எவ்வளவு என்று அங்கே போன பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் கோகிலா!”

“உன்னையே இழக்கப் போகிறாய்! பணத்தை இழப்பதா பெரிய காரியம்?”

அத்தியாயம் - 16

வெள்ளிக்கிழமை விடிந்தது. அதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து நீராடித் தயாரானாள் சுலபா. சரியாக நாலில் இருந்து நாலேகாலுக்குள் காருடன் வருவதாகக் கோகிலா முதல் நாளிரவே ஃபோனில் சொல்லியிருந்தாள். தாங்கள் இருவரும் எங்கே போகிறோம் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம் என்றும் சுலபாவிடம் எச்சரித்திருந்தாள் கோகிலா.

சுலபா மிக எளிமையாகவும் அதே சமயத்தில் கவர்ச்சியாகவும் தன்னை அலங்கரித்துக் கொள்வதற்கு ஏற்ற சாதனங்களை உடன் எடுத்துக் கொண்டிருந்தாள் வாசனைப் பொருள்கள் உயர் ரக செண்ட், சந்தன அத்தர், புனுகு ஜவ்வாது என்று அள்ளிக்கொண்டு போனாள். செக் புஸ்தகம் எடுத்துக் கொண்டாள். குறும்புக்காரக் கண்ணனை நாடிப் போகும் ஒரு இளம் கோபிகையைப் போன்ற மனநிலையில் இருந்தாள் சுலபா. மனத்தில் ஒரே சிருங்கார அவஸ்தை.

அன்று அவள் தன்னைக் கண்ணாடியில் பலமுறை அழகு பார்த்துக் கொண்டாள். சமீப காலத்தில் இப்படி ஒர் அழகுப் பரபரப்பை அவள் அடைந்ததே இல்லை. தான் அழகு என்பதில் அவளுக்குச் சந்தேகமோ, இரண்டாவது அபிப்பி ராயமோ கண்ணாடியில் பார்த்து உறுதி செய்து கொள்ளும் அவசியமோ இதுவரை ஏற்பட்டதே இல்லை, இன்று தான் முதல் முதலாக அந்த இனிய பதற்றமும், பரபரப்பும் அவளுக்கு ஏற்பட்டன. அதை அவளே உணர்ந்தாள். அநுபவித்தாள். அவஸ்தைப்பட்டாள்.

மெய்சிலிர்க்கும் ஓர் அநுபவத்தை இதுவரை வேறு பெண்களையே தீண்டியறியாத ஒரு பரிசுத்தமான ஆண்மகனைத் தீண்டப் போகிறோம் என்ற எண்ணத்தைத் தாங்கி இதயமே சுகமாகக் கனத்து வீங்கியிருந்தது.

மூன்றாவது மனிதருக்கு இந்த நாசூக்கான விஷயம் பரவி விடக்கூடாது என்பதனால் அத்தனை பெரிய ஏ.சி. பென்ஸ் காரில் கோகிலாவும் சுலபாவும் மட்டுமே பயணம் செய்தார்கள். கோகிலா எக்ஸ்பர்ட் டிரைவர். பெண் பயில் வான் மாதிரிக் கோகிலாவுக்கு நல்ல கட்டுமஸ்தான உடம்பு. இலேசில் சோர்ந்து விடமாட்டாள். “நீயே ஓட்டறதாலே நிறுத்தி நிறுத்தி வேணுமானாப் போகலாம். சிரமப் படாதே. அவசரம் ஒண்ணுமில்லே” என்று சுலபா வீட்டை விட்டுக் கிளம்பும்போது சொன்னாள்.

“கையிலே லேடஸ்ட் பென்ஸை வச்சுக்கிட்டு அதையே என்னலே கட்டை வண்டி மாதிரி ஓட்ட முடியாது. சகஸ்ர கலசாபிஷேகத்துக்கு நேரம் ஃபிக்ஸ் பண்ணியாச்சு. கோயிலைத் தரிசனம் பண்ண வர்ரவங்க உன்னைத் தரிசனம் பண்ற மாதிரி ஆயிடப்படாது. அஞ்சேமுக்கால் ஆறுக்குள்ளே போயிட்டம்னாக் கூட்டம் சேராமே எல்லாம் காதும் காதும் வச்சாப்ல முடியும்” என்றாள் கோகிலா. சுலபா மறுத்துச் சொல்லாமல் கேட்டுக் கொண்டாள்.

“இங்கே திருப்பதியிலே சாமி தரிசனம் முடிஞ்சு ஊர் திரும்பறோம்கிறதுதான் மத்தவங்க கிட்ட நாம சொல்ல வேண்டியது. ஆனல் பகல் முழுதும் இங்கேயே ஏ.சி. சூட்டில் தங்கிவிட்டு இருட்டியதும் இரகசியமாக மதனபள்ளி ரோட்டி லுள்ள திவ்ய சேவாசிரமத்தில் உன்னைக் கொண்டுபோய் விட்டு விடுவேன். அங்கே திவ்யானந்தர் உன்னை எதிர்பார்த்துத் தனியாக் காத்திருப்பார்.”

“நீ என்ன செய்வதாக உத்தேசம்டி கோகிலா.”

“நானா? நான் உன்னை அங்கே டிராப் பண்ணியதும் நேரே திருப்பதி திரும்பி ஏற்கனவே நாம் ரிஸர்வ் செய்த அதே ஏ.சி. சூட்டில் ஓய்வு கொண்டுவிட்டு மறுநாள் அதாவது நாளைக் காலையில் உன்னைப் பிக் அப் செய்ய ஆசிரமத்துக்கு மீண்டும் வருவேன்.”

“என்னை நிராயுதபாணியானவளாக நிர்ப்பலமான வளாகத் தனியே அந்த இளம் சாமியாரிடம் விட்டுவிட்டு நீ போய்விடுகிறாய்?”

“மோக யுத்தத்தில் ஆணோ பெண்ணோ நிராயுத பாணிகள் ஆவதில்லை. அவர்களுடைய தாபங்களே அவர்களுக்குப் போதுமான ஆயுத பலங்கள்.”

“பல விஷயங்களைத் திவ்யானந்தரிடம் மனசு விட்டுப் பேச முடியாமல் போயிற்று என்றாய்! அவர் என்னைச் சந்திக்கும் போது தனியாயிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை மட்டும் நீ எப்படி விதித்தாய்?”

“நீ மனசு விட்டுப் பேசக் கூச்சப்படுவாய் என்று சொல்லி அவருடைய சம்மதத்தைப் பெற்றேன். அந்த நிர்மலமான இளைஞர் சந்தேகம், பயம், ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற் பட்டவராயிருக்கிறார். கள்ளம் கபடிமே தெரியவில்லை. உடனே சம்மதித்தார். இளம் பெண்ணான ஓர் அழகியை இரவில் தனியே சந்திக்கச் சொல்லி மற்றோர் பெண்வந்து வேண்டுகிறாளே, இது என்ன சதியோ என்றெல்லாம் நினைக்கிறவராகவே அவர் தென்படவில்லை.”

“உடம்பு மட்டுமின்றி மனசும் கறைபடாதது என்று சொல்.”

“நிறையப் படித்தவர். சீரழிகிற பெண்களைத் திருத்திப் புது வாழ்வு அளிக்கும் நற்பணிக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்.”

“குப்பைய ரெட்டி போல் பெண்களைச் சீரழிப்பதற்கு வாழ்க்கையையே செலவழிப்பவர்கள் உள்ள இதே உலகில் தான் இந்தத் திவ்யானந்தரும் இருக்கிறார்.”

“குப்பைய ரெட்டி கூழாங்கல்! இது மாணிக்கம்.”

கோகிலா படுவேகமாகக் காரைச் செலுத்தினாள். பலபல வென்று விடிகிற நேரத்துக்குக் கார் திருமலையில் இருந்தது. சந்நிதியில், தரிசனம் செய்கிறபோது உணர்ந்த சந்தனம் பச்சைக் கருப்பூர வாசனை அவளது வழக்கமான ஞாபகங்களைக் கிளரச் செய்தன. அதே புனித வாசனைகளும் பிரம்மசரியத்தின் காந்தியும், தேஜஸும் அழகும் உள்ள ஓர் உடல் அன்றிரவு தனக்கு விளையாடக் கிடைக்கப் போகிறது என்ற உணர்வும் ஏற்பட்டது. அது அநுராகச் சுவையாக உள்ளே தங்கியது.

சகஸ்ர கலசாபிஷேகம் முடிந்து பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டு அறைக்குத் திரும்பினார்கள். பகல் உணவும் அறைக்கே வந்தது. நேரம் நெருங்க நெருங்கச் சுலபாவுக்குப் பரபரப்பும் பூரிப்பும் ஆவலும் கிளர்ந்தன. மனசு நிலை கொள்ளாமல் தவித்தது.

‘என்ன உடுத்திக் கொண்டு போவது? எதை எதை அணிவது?’ - என்று சுலபா அதிகமாக அலட்டிக் கொள்வதைப் பார்த்துக் கோகிலா அவளைக் கிண்டல் செய்தாள்.

“கோவில் திருவிழாவுக்காக அம்மன் விக்கிரகத்தை ஓவராக அலங்கரிக்கிற மாதிரி ஒரேயடியாக அலங்கரித்துக் கொண்டால் உன் இயற்கையான வசீகரமே தெரியாது. சிம்பிளாக - உன் அழகே அதிகம் தெரிகிறமாதிரி - நகைகள் புடைவை பவுடர் முதலியவை உன்னைவிட அழகாகத் தோன்றி அதிகப் பிரசங்கித்தனம் பண்ணாத வகையில் போய் நில்! வெள்ளைவாயில் புடைவை. உன் தங்க நிறக் கழுத்தின் பொன் வண்ணத்தை எடுத்துக் காட்டுகிற மாதிரி ஒரு மெல்லிய கருகமணிமாலை, தோடு, மூக்குத்தி - நீ விரும்பினால் காலில் கொலுசு கைகளுக்குக் கருநிறக் கண்ணாடி வளையல்கள். இவை போதும்.”

“பட்டுப் புடைவை வேண்டாமென்கிறாயா?”

“வேண்டவே வேண்டாம்! உன் உடம்பே மழமழப்பான வெண்பட்டுக் குவியல் மாதிரி! ஒரு பட்டில் இன்னொரு பட்டு நிற்காது.”

“சென்ட் லிப்ஸ்டிக்...”

“வாசனை தெளித்துக் கொள்! உதட்டுச் சாயம் வேண்டாம். ஏற்கெனவே செர்ரிப்பழம் போல மின்னும் உன் உதடுகளுக்குச் சாயம் வேண்டியதில்லை.”

“எல்லாம் சரி! நீயோ எதையும் வெளிப்படையாக விட்டுப் பேசிக் கொள்ளவில்லை என்கிறாய். சந்திக்க மட்டும் ஏற்பாடு பண்ணியிருப்பதாகச் சொல்கிறாய்! அவரிடம் நான் எப்படியடி ஆரம்பிப்பேன்? எப்படி மயக்கி எப்படி வசப்படுத்தி எப்படி..?”

“செக் புத்தகம் கொண்டு போ! திவ்ய சேவாசிரமத்தின் சேவைகளைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லு. குப்பையரெட்டி மாதிரி எவனோ ஒருத்தன் உன் வாழ்வைப் பாழாக்கி விட்டான் என்பதைச் சொல்லு... உங்கள் உபதேசம்தான் என்னைக் கைதூக்கிவிடும் என்று சொல். அழு. கால்களைத் தொட்டு வணங்கு - மன்றாடு! மெல்ல மெல்ல வசப்படலாம்.”

“நான் நிர்ப்பலமாக உணர்கிறேன்.”

“இந்த நிர்ப்பலமே உன் பலம் சுலபா! நீ ஒரு செளந்தரியப் படையெடுப்பு நடத்தப் போவது புரியாமல் இப்படிப் பேசாதே.”

“பயமாயிருக்கிறதடீ.”

“நீ ஒன்றும் பச்சைக் குழந்தையில்லை. முதலிரவுக்குப் போகிற பேதைக் கன்னிப் பெண்ணுமில்லை, பலரை நொடியில் வென்ற வெற்றியரசி என்பதை நினைத்துக் கொள்!”

“இதுவரை நான் ஆண்களை வென்றிருப்பது உண்மை! ஆனால் என் தாபங்கள் தீர வேணுமானால் நான் இங்கே தோற்க வேண்டுமேடீ கோகிலா!”

“கவலைப் படாதே எந்தப் பஞ்சும் நெருப்பில் எரியும் சுலபா!”

“இதில் யார் நெருப்பு? யார் பஞ்சு?”

“காமம் கனிந்து திரண்ட எல்லாப் பேரழகுமே எரியும் நெருப்புத்தான்! இங்கு உன் அழகுதான் அக்னி.”

“நான் நீறு பூத்த நெருப்புத்தான் கோகிலா! என்னல் எரிக்க முடியுமா?”

“உன்னல் முடியுமோ முடியாதோ; உன் அழகால், சிரிப்பால் விழியால், அங்க வனப்பால் எதிரே நிற்கிறவனின் பிரம்மசரியத்தை எரித்துப் பொசுக்கி விடமுடியும்.”

ஜல்லிக்கட்டுக்குப் போகிற பந்தயக் காளையைக் கொம்பு சீவி எண்ணெய் பூசி முட்டுவதற்கான வெறியூட்டி அனுப்புகிற மாதிரிச் சுலபாவைத் தயாராக்கினாள் கோகிலா.

மாலை மணி ஐந்து. சுலபா மறுபடி நீராடினாள். கோகிலா சொல்லியிருந்தபடி எளிமையாக அலங்கரித்துக் கொண்டாள், வந்து நின்றாள். பார்த்துவிட்டுக் கோகிலா சொன்னாள்:

“சபாஷ்! இப்படியே வாரியணைத்துக் கொள்ளணும் போலிருக்கிருய்! இப்படி வெண்மை நிறம் சந்நியாசிகளுக்கு எப் போதுமே பிடிக்கும்.”

“எனக்குக் காவி நிறம் ரொம்பக் கவர்ச்சிடீ கோகிலா.”

“ரொம்பப் பொருத்தம்! வெண்மையில் காவி சேர்ந்தால் சரியாக ஒட்டிக் கொள்ளும்.”

“என்னென்ன எடுத்துக் கொள்ளணும்? கோகிலா!”

“முதலில் நீ மறந்து விடாமல் உன்னை எடுத்துக் கொள்! கைப்பையில் கையெழுத்திட்டுத் தேதி போட்டுத் தொகை போடாத ஒரே ஒரு செக் லீஃப் மட்டும் வைத்துக் கொள்! வேறு எதுவும் வேண்டாம்! எல்லாவற்றையும் இங்கே அறையிலேயே விட்டு விடு. வீண் சுமை எதுவும் வேண்டாம்.”

“மாற்றுப் புடைவை ஒன்று வேண்டாமா?”

இதைக் கேட்டு கோகிலா குறும்புத்தனமாகச் சிரித்தாள். அவள் விழிகளில் குறும்பு மின்னியது.

“நல்ல ஞாபக சக்தியடி உனக்கு! மாற்றுப் புடவை கொண்டு வந்திருந்தால் எடுத்துக்கொள். எனக்கு ஆட்சேபணை இல்லை.”

சுலபா உள்ளே போய்ப் பெட்டியை எல்லாம் குடைந்து விட்டுத் திரும்பி வந்து, “இந்த வெள்ளை வாயில் புடவையைத் தான் மாற்றுப் புடைவையாகக் கொண்டு வந்தேன். கட்டிக் கொள்ளப் பட்டுப் புடைவை என்று எண்ணி இதைக்கூட மாற்றாக எடுத்து வைத்தேன். இப்போது இதையே மெயின் ஆகக் கட்டிக் கொண்டாயிற்று... வேறு மாற்றுப் புடை வைன்னா ‘சில்க்’ தான் இருக்கு.”

“அப்படியானால் விடு! மாற்றுப் புடவையே வேண்டாம்! நீ ஆசைப்பட்ட சந்தனமும் பச்சைக் கருப்பூரமும், ஏலமும் மணக்கிற பரிமள சுகந்தங்களின் உஷ்ண மூச்சுக்கள் படிகிற அதே புடைவையே உன் உடம்பை அலங்கரிக்கட்டுமே.”

சுலபா இதைக் கேட்டுப் புதுமணப் பெண் போல வெட்கப்பட்டாள். தப்பு வராமல் கவனமாகத் தன் செக் புத்தகத்திலிருந்து ஒரு லீஃபை எடுத்துத் தேதி போட்டுக் கை யெழுத்திட்டுக் கைப்பையில் பேனாவுடன் வைத்துக் கொண்டாள்.

மாலை ஐந்தே முக்கால் மணிக்கு அவர்கள் கார் மலையிலிருந்து கீழே இறங்கியது. ஏ.சி. காராகையினால் சுலபாவின் இங்கிதமான பரிமள நறுமணங்களால் காரே சாந்தி முகூர்த்த அறை போல் கமகமத்தது. காரை ஒட்டியபடியே கோகிலா சொன்னாள்:

“நீ சாதுரியமாகப் பேசித்தான் அவரைக் கவர வேண்டும்! இப்படிச் சந்நியாசிகளிடம் மனசைக் கவராமல் உடம்பைக் கவர்வது கஷ்டமான காரியம். வழி சொல்லி அழைத்து வாயிற்படி வரை கொண்டு போய்விட மட்டுமே என்னால் முடியும்! படை எடுப்பை வெற்றிகரமாக முடிப்பது உன் கையில் தான் இருக்கிறது.”

“நான் என்ன பேச முடியும்? இந்த மாதிரிப் படித்த ஞானியிடம் நான் பேச என்ன அகப்படும் கோகிலா!”

“உன் கஷ்டங்களைச் சொல்! அறிவுரை கேள். பிரமாதமான காதல்களை இரக்கம்தான் உண்டாக்குகிறது.”

அத்தியாயம் - 17

வனாந்தரமாக மண்டிக்கிடந்த அந்த மாந்தோப்புக்குப் பிரதான சாலையிலிருந்து விலகிய செம்மண் புழுதி படிந்த கிளைச்சாலைக்குள் இவர்களது பென்ஸ் திரும்பியபோது மாலை ஆறே முக்கால் மணி. காட்டுக்கே உரிய பச்சை வாசனையும் சிள் வண்டுகளின் ‘கீங்கீஸ்’ ஒலியும் ஆரம்பமாகி விட்டன. சுலபாவின் நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஏதோ ஒரு சுகமான தவற்றைச் செய்யத் துணிந்து விட்டாலும் அதைச் செய்யக்கூடாது என்று ஒரு கணமும் செய்து சுகம் காணவேண்டும் என்று மறு கணமுமாக மாறி மாறித் தோன்றின. மாந்தோப்பின் அருகே ஓடை நீர் சலசலக்கும் ஒலி ஜலதரங்கமாய் ஒலித்தது. ஆகாயம் நீலப் படுதாவாய் மேலே விரிந்து கிடந்தது. ஒரு கர்மயோகி போல் காரை மாந்தோப்பின் முகப்பில் நிறுத்தி விட்டு எந்தப் பதற்றமும் இல்லாத குரலில்,

“சுலபா வா! வலது காலை முன் வைத்து இறங்கு” - என்று மணப்பெண்ணுக்குச் சொல்வது போல் சொல்லி அவளை இறக்கி அழைத்துக் கொண்டு உள்ளே ஒற்றையடிப் பாதையில் சென்றாள் கோகிலா.

இவர்களது கார் நின்ற இடத்திலிருந்து பத்து நிமிஷம் ஒற்றையடிப் பாதையில் நடக்க வேண்டியிருந்தது. அந்த ஒற்றையடிப் பாதை கொஞ்சம் மேடாயிருந்த பகுதியிலிருந்த ஒரு குடில் போன்ற சிறிய கட்டிடத்துக்கு இட்டுச் சென்றது, கீழே சற்றுப் பள்ளத்தாக்கான பகுதியில் ஹாஸ்டல் போலத் தெரிந்த விளக்குகள் மின்னும் ஓர் நீண்ட கட்டிடத்தைக் காட்டி, “அதுதான் வழுக்கி விழுந்த பெண்கள் மறுவாழ்வு விடுதி! பக்கத்தில் தெரிவது அவர்களுக்குப் பல்வேறு தொழில்களைக் கற்பிக்கும் பயிற்சி நிலையம். எதிரே தெரிவது திவ்யானந்தர் தங்கும் குடில்” - என்று மெல்லிய குரலில் சொன்னாள் கோகிலா. அதில் மின் விளக்கு இல்லை. அகல் விளக்கின் ஒளியில் அமர்ந்து தியானத்தில் இருந்த திவ்யானந்தர் காலடி ஓசை கேட்டுக் கண் திறந்தார். இளஞ்சூரியனைப் போல் அழகாயிருந்தார் திவ்யானந்தர். திருப்பதியில் கர்ப்பக் கிருகத்தில் உணர முடிந்த அதே சந்தனம் கருப்பூரம் இணைந்த நறுமணம் நிலவியது குடிலில். இருவரும் வணங்கினர்கள். கோகிலா சொன்னாள். “சுவாமி! நான் அன்னிக்கு வந்து சொன்னேனே என் சிநேகிதி... அது இவதான்! உங்க புத்தி மதிதான் இவளுக்குப் புதுவாழ்வு காண்பிக்கணும்.”

சுலபா மீண்டும் அவரை வணங்கினாள். “உங்கள் உபதேசம் இவளை நல்வழிக்குக் கொண்டு வரும்னு நம்பிக்கையோடப் போறேன் சுவாமி! காலையில் வருகிறேன்” - என்று கோகிலா புறப்பட்டு விட்டாள். உபசாரத்துக்காகக் கூட திவ்யானந்தர் ‘நீயும் இரேன்’ என்று கோகிலாவைக் கேட்கவில்லை. சுலபா அப்படியே கட்டுண்டு உட்கார்ந்திருந்தாள். கீழே கார் ஸ்டார்ட் ஆகித் திரும்புகிற ஓசை கேட்டது. கோகிலா புறப்பட்டு விட்டாள்.

எதிரே மாயக் கண்ணனே துறவியாக அமர்ந்திருப்பது போல் ஒரு தேஜஸ். ஒரு காந்தி, ஒரு தெய்வீகப் புன்னகை.

“உன் மனசில் இருப்பதை ஒளிக்காமல் சொல்லம்மா?”

சுலபாவுக்கு முதலில் பேசவரவில்லை, பொய்யும் சொல்ல வரவில்லை! நிஜம் பேசவும் முடியவில்லை.

“உன்னைப் பார்க்கும்போது சாட்சாத் சரஸ்வதியே மனக் கஷ்டத்தோடு என் எதிரே வந்து உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது.”

சுலபா மெல்ல விசும்பினாள் கண்களில் நீர் கரந்து சுரந்து வெளிப்பட்டது. காணாமல் போன தாயைக் கண்ட குழந்தை போல் திடீரென்று அழ ஆரம்பித்தாள்.

பெண்ணே! நீ அழுவது தவறில்லை! அழுகையில் தான் துயரங்கள் கரையும். அழாமல் எந்தப் பெண்ணும் இங்கே வருவதில்லை. ஆண்களின் பொறுப்பற்ற ஆசைகளில் நைந்த பல இளம் பெண்களை மீட்டுத் தற்கொலை செய்து கொள்ளாமல் தடுத்து வாழ்வில் நம்பிக்கையூட்டி வழிகாட்டி அனுப்பும் பணியைத்தான் இந்த ஆசிரமத்தில் செய்து வருகிறோம்! நீயும் இங்கே நம்பிக்கை பெறமுடியும்.”

“உங்கள் பணியைக் கேட்டு என் இதயம் கரைந்து உருகுகிறது சுவாமி.”

டயலாக் மாதிரி எப்படியோ ஒரு வாக்கியம் பேசிவிட்டாள் சுலபா. ஞாபகம் வந்து செக்கைக் கைப்பையிலிருந்து எடுத்து எழுந்து வணங்கி அவர் காலடியில் வைத்தாள்.

தங்கத்தில் வடித்து மெருகிட்ட மாதிரி எத்தனை அழகான, திருவடிகள். அந்தக் கால்களையே ஆசைதீர முத்தமிடலாம் போலிருந்தது சுலபாவுக்கு.

“இது என்ன?”

“உங்கள் சேவையில் என் பங்கும் இருக்கட்டும் என்று...”

“நீ மிகவும் பெரிய வசதியுள்ள குடும்பத்துப் பெண் என்று உன் சிநோகிதி சொன்னாள்.”

“...”

“ஏழைகளை விட வசதியுள்ளவர்கள் தான் அதிகம் வழி தவற நேரிடுகிறது.”

“ஒரு படுபாவி என் வாழ்வையே சீரழித்து விட்டான் சுவாமீ! என்னை ஆசைகாட்டி மோசம் செய்து எங்கோ எப்படியோ கூட்டிச் சென்று கடைசியில் ஒரு விபசார விடுதியில் விற்றுவிட்டு ஓடிவிட்டான்.”

“உன்னைப் போன்ற பெரிய குடும்பத்துப் பெண்கள் எப்போதும் பண உதவி செய்ய முன்வருகிறீர்களே ஒழிய இப்படி விடுதியில் நேரடியாக ஈடுபட்டுச் சேவை செய்ய முன் வருவதில்லை. உன் தோழியும் அன்று ஒரு தொகை டொனேஷன் கொடுத்தாள். நீயும் தொகை போடாமல் ஒரு செக் கொடுத்திருக்கிறாய்!”

“என் மாசு நீங்க எப்படிப்பட்ட சேவையைச் செய்யும்படி நீங்கள் கட்டளையிட்டாலும் நான் செய்யத் தயாராயிருக்கிறேன்.”

“திருந்துவதற்கு விரும்புகிற யாரும் தவற்றை உணரவும், ஒப்புக் கொள்ளவும் துணிய வேண்டும். ஏழைப் பெண்கள் தவறுகளை உணர்ந்து ஒப்புக் கொண்டு திருந்துகிறார்கள். உங்களைப் போன்ற வசதியுள்ள குடும்பத்துப் பெண்கள் தவறுகளை மறைத்துக் கொண்டு வாழப் பழகுகிறீர்கள். இதுபோன்ற இடங்களுக்கு வரக்கூடப் பிறர் பார்க்காத நேரம், பிறர் பார்க்காத தனிமை எல்லாம் உங்களுக்கு வேண்டியிருக்கிறது.”

“...”

“வழுக்கிவிழுந்த பெண்களின் இல்லத்தில் நம்மைப் பார்த்ததாக யாரும் யாரிடமும் பேசிவிடக் கூடாது என்ற பயம் பாசாங்காக உருவாகி விடுகிறது.”

சுலபாவுக்குச் சுரீரென்று உரைத்தது.

“எளியேனைப் பொறுத்தவரை பாசாங்கு எதுவுமில்லை சுவாமீ! வீடு வாசல், பணம், சுகம், எல்லாவற்றையும் நான் மதிக்கவில்லை. நீங்கள் இடும் கட்டளையைச் சிரமேற் கொண்டு செய்யத் தயாராயிருக்கிறேன்.”

“இப்படிப் பெண்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் ஆசிரமத்தை என்போல் ஒரு துறவி நடத்துவதில் சில தர்ம சங்கடங்கள் இருக்கின்றன, இந்தப் பணியில் எனக்கு உதவியாக லட்சுமீகரமான முக அமைப்புள்ள - பார்த்தால் விரசமான எண்ணமே வராத தெய்வீக முக ராசியுள்ள ஒரு பெண்மணி எனக்குத் தேவை. உன்னைப் பார்த்தால் அப்படி முகராசி தெரிகிறது. என்னோடு இந்தப் பணியில் ஈடுபடும் துணிவு உனக்கு வருமா? எந்த ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்தால் எனக்கே என் தாயின் முன் நிற்பது போன்ற உணர்வு வருகிறதோ அப்படி ஒரு முகம் உனக்கு இருக்கிறது!”

“சுவாமி! நிஜமாகவா? ஆண்களின் சாலங்களில் நைந்த முகத்தைப் பார்த்தா இப்படிச் சொல்கிறீர்கள்...”

“உன் முகத்தில் ஓர் ஆசிரமத்தின் அன்னையைப் பார்க்கிறேன். இந்தத் திவ்யசேவாசிரமம் இதன் அன்னையாக உன்னை அழைத்தால் நீ வருவாயா பெண்ணே?”

“நானா?... இந்தப் பாவ ஜென்மமா?”

“வீணாகச் சுயநிந்தனை செய்து கொள்ளாதே! எந்த நிமிஷம் இந்த ஆசிரமத்தின் அன்னையாக வரச் சம்மதிக்கிறாயோ அந்த நிமிஷமே உன் கோலம் மாறவேண்டும். எளிய காவிநிறச் சேலை. இங்கேயே இந்த அலமாரியில் அப்படிச் சேலைகள் நிறைய வாங்கி வைத்திருக்கிறோம். சேருகிற பெண்களுக்கு இங்கே அது தான் யூனிஃபாரம். நீயும் அதை அணிய வேண்டும். நகைகள், ஆடம்பரங்கள் கூடாது! இந்தப் பணியை விடத் தொகை போடாத உன் செக் கூட எனக்குப் பெரிதில்லை.”

“யோசிக்க நேரம் கொடுங்கள்.”

“பணக்காரர்களால் யோசிக்காமல் நல்லது கூடச் செய்ய முடியாது. காரை விட்டுவிட, பங்களாவை விட்டுவிட பணத்தை விட்டுவிட, மமதையை விட்டுவிட, எல்லாவற்றுக்கும் யோசிக்க வேண்டும். யோசித்தபின் விட முடியாது. விட்டபின் யோசித்துப் பயனில்லை. நான் கூட விஜயவாடாவில் ஒரு கோடிசுவரனின் ஒரே மகனாகப் பிறந்தேன். யோசிக்காமல் திடீரெனக் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் ஒரு நாள் இப்படிச் சாமியாரானேன்.” ஐந்து நிமிஷ மெளனத்தின் பின் மீண்டும் அவரே கூறினர்:

“நல்லது செய்ய யோசிப்பதற்குள் சிலசமயம் நம் வாழ்வே முடிந்து போய் விடுகிறது! முடிவதற்குள் ஆரம்பிக்க வேண்டும் நாம்.”

சுலபாவுக்குத் தான் எதற்காக அங்கே வந்தோம் என்பதே வேகமாக மறந்து கொண்டிருந்தது. எதிரே இருந்த தீப்பிழம்பின் வேகத்தில் உள்ளே சில எரிந்தன. பொசுங்கிப் பொடிப் பொடியாயின.

அவர் பேசிக் கொண்டிருந்தபோதே குழந்தைபோல் தூங்கி விட்டார் அங்கே. வெறும் தரையில் - அப்படியே வலது கையை மடித்து வைத்துக் கொண்டு தூங்கும் அந்தச் சுந்தர புருஷனின் அருகே நெருங்கி நடுங்கும் கைகளினால் தன் மடியில் தலையை எடுத்து வைத்துக் கொண்டாள் அவள்.

சாட்சாத் திருப்பதிப் பெருமாளையே எடுத்து மடியில் கிடத்திக் கொள்வது போலிருந்தது.

அத்தியாயம் - 18

பொழுது விடிவதற்கு இன்னும் சில நாழிகைகள் இருந்தன. ‘கருப்பூரம் நாறுமோ, கமலப் பூ நாறுமோ, திருப் பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?’ - என்று பாவித்தபடியே அந்தச் சந்தனம் மணக்கும் சிரசைத் தன் மடியிலிருந்து தரையில் அலுங்காமல் எடுத்துவிட்டு உறங்கச் செய்து பின் சுலபா எழுந்திருத்தாள். இப்போது அவள் மனசில் பாரமோ பரிதவிப்போ இல்லை. வெளியேயும் அவளுள்ளேயும் விடிந்து கொண்டிருந்தது. அங்கே குடிலிலிருந்தே பின்புறமாக ஓடைக்கு இறங்குவதற்கு வழி இருந்தது. கை வளைகள், கழுத்துமணி, மோதிரம், தோடு, மூக்குத்தி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் களைந்து குடிலினுள் வைத்து நீராடி வரச் சென்றாள். திரும்பி வந்து அவர் முந்திய இரவில் சுட்டிக் காட்டியிருந்த அந்த அலமாரியைத் திறந்து அந்த ஆசிரமப் பெண்கள் கட்டும் யூனிஃபாரமான சிவப்பு நிறச் சேலையில் ஒன்றை எடுத்துத் தானும் அணிந்தாள். கருமை மின்னும் ஈரக் கூந்தல் பிடரியில் புரண்டது.

அப்போது திவ்யானந்தர் கண் விழித்து எழுந்திருந்தார். இன்னும் இருள் முழு அளவில் பிரியவில்லை. மங்கிய விளக்கொளியில் காவி உடையில் அவளைப் பார்த்த அவர் இதமான குரலில் மெல்ல வினவினார்:

“யோசித்து ஒரு முடிவுக்கு வந்து விட்டாய் என்று நினைக்கிறேன்.”

“யோசித்து முடிக்கவில்லை! முடிவதற்குள் யோசித்து விட்டேன்.”

“உனது தொகை போடாத செக்கை விடப் பெரியது இது. பண தானத்தை விட சிரமதானம் எனக்குப் பிடிக்கும்.”

அவர் நீராடச் சென்றார்.

கோகிலா வருகிற நேரமாயிற்று. சுலபா அவளை எதிர் கொள்ள முகப்பை நோக்கி ஒற்றையடிப் பாதையில் நடந்தாள். இப்போது அவள் மனம் பூப்போல் மிருதுவாயிருந்தது. சுற்றிலும் அங்கங்கே மலர்ந்து கொண்டிருந்த பவழமல்லிகைப் பூக்கள் இவளுடைய இருதயத்துக்குள் முந்திய இரவே மலர்ந்திருந்தன. மணம் பரப்பின.

அந்த மாந்தோப்பு, அதன் குளிர்ச்சி, அதன் சமுதாயப் பணி, அதன் தொண்டுகள் எல்லாமாகத் திடீரென்று அவளு டைய மனத்தில் மரியாதைக்குரியதொரு மூப்பையும், தாய்மையையும் கொண்டு வந்திருந்தன. திடீரென்று ஒரே ஒரு ராத்திரியில் பல அநாதைப் பெண் குழந்தைகளுக்கும் ஒரே ஒரு விவரம் தெரிந்த ஆண் குழந்தைக்கும் அவள் தாயாகி இருந்தாள். தூரத்தில் ஓடை நீர்ப்பரப்பில் மூழ்கும் தீக் கொழுந்தாய் மின்னிய அந்தத் துறவியின் உடம்பை நோக்கி, ‘மற்றை நம் காமங்கள் மாற்று’ - என்று பிரார்த்தித்தாள் சுலபா. அவளது காமங்கள் மாறியிருந்தன. தகனமாகியிருந்தன.

அவள் யாரையே எரிக்க வந்தாள். எரிந்து போயிருந்தாள். ஜெயிக்க வந்தாள். தோற்றுப் போயிருந்தாள். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த மின்னல் தாக்கி அவள் உள்ளேயிருந்த அசுர குணங்கள் சாம்பலாகி விட்டிருந்தன.

இருபத்தெட்டு வயது பிறந்தவுடன் அத்த இருபத்தெட்டு வயதின் மொத்தமான பாவச் சுமைகளையும் அழுக்குகளையும் இப்படி ஒரு அதிகாலையில் ஒரு காட்டு ஓடையில் நீராடிக் களைந்து விட்டு புதிதாக முதல் வயதிலிருந்து மறுபடி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்த மாதிரி மனசு இந்த விநாடியில் சத்துவகுணமே நிரம்பிச் சாந்தமாயிருந்தது. ‘ஏன் இப்படி மாறினோம்? எந்த நொடியில் மாறினோம்? எதற்காக மாறினோம்?’ - எல்லாமே மாயம்போல் நடந்து முடிந்திருந்தன. நம்பமுடியாத மாற்றம். இனி மாறவே முடியாத புது நம்பிக்கை. கார் வருகிற ஓசை கேட்டது. கோகிலா தனது இந்தக் கோலத்தையும் இந்த முடிவையும் எப்படி எதிர் கொள்வாள் என்று நினைத்துக் கற்பனை செய்ய முயன்றாள் சுலபா.

ஒற்றையடிப் பாதையில் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். கோகிலாவின் முகத்தில் ஒரே வியப்பு.

“இதல்லாம் என்னடீ வேஷம் சுலபா! மாற்றுப் புடவைக்காக இந்த யூனி ஃபாரத்தை எடுத்துக்கிட்டியா?”

“நேற்று வரை வாழ்விலும், படங்களிலும் நான் போட்டவைதான் வேஷம் கோகிலா! இன்றும் இனியும் இதுதான் நிஜம்!”

அவள் குரலிலிருந்த உண்மையையும், உருக்கத்தையும் பார்த்துப் பதறிய கோகிலா “என்னடீ ஆச்சு உனக்கு” என்று அருகில் வந்து கைகளைப் பற்றினாள்.

“ஒன்றும் ஆகவில்லை! இந்தா! இதை நீ எடுத்துக் கொண்டு போ.”

கோகிலா அந்தப் பொட்டலத்தைக் கை நீட்டி வாங்கினாள். பிரித்துப் பார்த்தாள். சுலபாவின் விலையுயர்ந்த வைரத் தோடுகள், மூக்குத்தி, மோதிரம், மாலை, வளைகள் எல்லாம் அதில் இருந்தன.

“இதுவரை பழகிய நமது சிநேகிதத்தின் அடையாளமாக இவற்றை இனி நீ வைத்துக் கொள்.”

“விளையாடதேடீ! இதெல்லாம் இந்த வயசிலே உன்னாலே முடியாது. நான் என்னமோ நெனைச்சு இங்கே உன்னை இட்டுக்கொண்டு வந்துவிட்டேன். பிள்ளையார் பிடிக்கக் குரங்காப் போச்சே? இதென்னடீ விபரீதம்?... பாதி நிற்கிற படம் எல்லாம் என்ன ஆறது? வீடு, வாசல், சொத்துச் சுகத்தை எல்லாம் விட்டு இங்கே இந்தக் காட்டில் சாமியாரிச்சியா இருக்கணுமா நீ? நான் விடமாட்டேன். இந்தக் கோர வேஷத்தைக் களைந்துவிட்டு என்னோடு உடனே புறப்படுடீ!”

கோகிலா உணர்ச்சி வசப்பட்டுப் பதறினாள், இன்னும் சிறிது நேரத்தில் அழுது விடுவாள் போலிருந்தது. அவளால் சுலபாவின் இந்த ‘மெடமார்பஸைத்’ தாங்க முடியவில்லை.

சுலபாவிடமோ கோகிலாவின் இந்த வார்த்தைகள் எந்த உணர்வையும், எந்தச் சலனத்தையும் உண்டாக்கவில்லை. தெளிவான - நிதானமான குரலில் கோகிலாவுக்குப் பதில் சொன்னாள் அவள்.

“இனி என்னல் நடிக்க முடியாது! நான் வாழவேண்டும். வாழப் போகிறேன். ஒப்பந்தம் உள்ள புரொட்யூஸர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு. ஆடிட்டிரையும், கவிதாவையும் உரிய ஏற்பாடுகளுடன் இங்கே அனுப்பி வை. கணக்குகளை ஒழுங்கு செய்து என் சொத்துக்களை இந்த ஆசிரமத்துக்கு எழுதி வைக்கணும்.”

“சுலபா! இதென்னடி விபரீதம்...? அடி பாவீ!”

இதற்குப் பதில் சொல்லாமல் கோகிலாவைக் கும்பிட்டு விட்டு ஒற்றையடிப் பாதையில் ஒரு மெளன நிழலாய்த் திரும்பி நடந்தாள் சுலபா.

“தனது 28-வது பிறந்த நாளில் திரைவானிலிருந்து ஒரு புகழ்பெற்ற நட்சத்திரம் தனது எல்லாப் பிரகாசங்களுடனும் அழகுடனும் ஆன்மீகத் தோட்டத்துக்குள் உதிர்ந்து விட்டது” - என்று தேடி வருகிற பத்திரிகைக்காரர்களுக்குத் தான் சொல்ல வேண்டிய வாக்கியத்தை யோசித்தபடியே காரை நோக்கித் திரும்பி நடந்தாள் கோகிலா.