சிண்ட்டூவுக்கு சுற்றிச் சுழலும் பொருட்களைக் கண்டால் மிகவும் வியப்பாக இருக்கும். அது வீட்டிலோ, பண்ணையிலோ, விளையாட்டுத் திடலிலோ, மாவரைக்கும் ஆலையிலோ, கிராமத்துத் திருவிழாவிலோ, எங்கேயானாலும் சரி.
வீட்டில் மின்விசிறி சுற்றிச் சுழலும்போது, தாத்தா வெயிலின் சூடே தெரியாமல் காலையிலிருந்து மாலை வரை செய்தித்தாள் படித்துக்கொண்டிருப்பார்.
குயவுச் சக்கரம் சுற்றிச் சுழலும்போது பாட்டி அழகான மண்பானைகளும் சட்டிகளும் செய்வார்.
டிராக்டரின் சக்கரங்கள் சுற்றிச் சுழலும்போது அப்பா வயலில் மண்ணை உழுவார்.
கிணற்றில் கப்பி சுற்றிச் சுழலும்போது அம்மா கிணற்றிலிருந்து தண்ணீரை இறைப்பார்.
காற்றாலை விசிறி சுற்றிச் சுழலும்போது மனீஷ் மாமா தானியங்களை அரைத்து மாவாக்குகிறார்.
பம்பரம் சுற்றிச் சுழலும்போது, அதன் பல வண்ணங்களை சிண்ட்டூவும் அவனுடைய நண்பர்களும் உட்கார்ந்து கண்கொட்டாமல் பார்ப்பார்கள்.
கிராமத்துத் திருவிழாவில் இராட்டினம் சுற்றிச் சுழலும்போது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, மனிஷ் மாமா, சிண்ட்டூ எல்லோரும் மேலே, கீழே போய்ச் சுற்றி வருவார்கள். தூங்கப் போகும்போது சிண்ட்டூ தன் அம்மா, அப்பாவிடம், “பூமி சுற்றிச் சுழலும்போது நமக்கு பகலும், இரவும் வருகின்றன என்று என் வகுப்பு ஆசிரியர் சொல்லிக்கொடுத்தார்” என்றான்.