teenaavin nei naechu

டீனாவின் நெய் பேச்சு

டீனாவுக்கு நெய் ரொம்பப் பிடிக்கும். அதுவும் அவளுக்கு விருப்பமான பூரண் போளியின் மேல் வைக்கப்படும்போது இன்னும் பிடிக்கும். ஆனால், இந்த நெய் எங்கிருந்து கிடைக்கிறது?

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

டீனாவுக்கு, தன் பூரண் போளியின் மேலிருக்கும் நெய் ரொம்பப் பிடிக்கும். “அம்மா! இத்தனை மணமாகவும் சுத்தமாகவும் உள்ள நெய் எங்கிருந்து கிடைக்கிறது?”

“அது மிருதுவாகவும் வெண்மையாகவும் உள்ள வெண்ணெயிலிருந்து கிடைக்கிறது.”

”அந்த வெண்ணெய் எங்கிருந்து கிடைக்கிறது?”

”புளிப்பும் இனிப்புமான தயிரைக் கடைந்தால் கிடைக்கிறது.”

”அந்தத் தயிர் எங்கிருந்து கிடைக்கிறது?”

”ஆடை படிய வற்றக் காய்ச்சிய பாலிலிருந்து கிடைக்கிறது.”

”அந்தப் பால் எங்கிருந்து கிடைக்கிறது?”

”நம் கபிலா மாடு நமக்கு பால் தருகிறாள்.”

”அவள் ஏன் நமக்கு பால் தர வேண்டும்?”

”ஏனென்றால் நாம் அவளுக்கு பசும்புல்லைத் தின்னத் தருகிறோம். அவளை அன்போடு கவனித்துக் கொள்கிறோம்.”

”அதனாலே?”

“அதனாலே அவள் நமக்கு பால் தருகிறாள்! அதிலிருந்து டீனாவுக்கு சுத்தமான,‘நெருநெரு’ நெய் கிடைக்கிறது!”

சமையலறை ஒரு அறிவியல் ஆய்வுக்கூடம் போன்றது. சமைக்கும்போது பலவிதமான இயற்பியல், வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அங்கே, பால் வெவ்வேறு சுவையான பண்டங்களாக மாறக்கூடும்.

நீ பாலை எப்படி சாப்பிட விரும்புகிறாய்?