லோட்டனைப் பாருங்கள்! லோட்டன் நீள அலகுடைய ஒரு தேன்சிட்டு. அதன் இறக்கைகள் கத்தரிப்பூ, அரக்கு வண்ணம் கொண்டவை.
மஞ்சள், சாம்பல் வண்ணத்தில்
இருப்பது அதன் தங்கை லில்லி.
லோட்டன், லில்லியைப் போன்ற தேன்சிட்டுகள் இலங்கை, இந்தியாவின் சில பகுதிகளில் வாழ்கின்றன.அவை நூறு ரூபாய் நோட்டின் நீளத்துடனும் பத்து ரூபாய் நாணயத்தின் எடையுடனும் இருக்கும்.
15செமீ
14செமீ
லோட்டனும் லில்லியும் வளைந்த அலகைக் கொண்டவை. மலர்களிலிருந்து தேனை உறிஞ்ச வசதியாக குழாய் வடிவ நாக்கும் இவற்றுக்கு உண்டு.
லோட்டனும் லில்லியும் பிறந்தபோது அவற்றின் அலகுகள் குட்டையாகவும் அகன்றும் இருந்தன. அது அவற்றின் பெற்றோர் உணவு ஊட்ட வசதியாக இருந்தது.
அவற்றின் பெற்றோர் உணவைத் தங்களது வயிற்றில் கொஞ்சம் செரித்துவிட்டுதான் இவற்றுக்கு ஊட்டும்.
லோட்டனும் லில்லியும் நன்றாக வளர்ந்ததும் பறக்கக் கற்றுக்கொண்டன.
தமது உணவைத் தாமே தேடிக்கொள்ளவும் கற்றுக்கொண்டன.
லோட்டனும் லில்லியும் தாங்கள் சாப்பிடும், குடிக்கும் உணவிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன.
இந்த ஆற்றலே அவற்றின் தசைகளை இயக்கிப் பறக்க உதவுகிறது.
ஆனால், லோட்டன், லில்லியால் மனிதர்களைப் போல் ஆற்றலைத் தங்கள் உடலில் கொழுப்பாகச் சேமிக்க இயலாது.
அவற்றின் உடல் மிக லேசாக இருக்கவேண்டும்.
இல்லாவிட்டால், அவற்றால் பறக்க முடியாது.
அதனால்தான் தேன்சிட்டுகள் ஒருநாளைக்கு பலமுறை உண்கின்றன.
சொல்லப்போனால், ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை உணவு தேடிப் பறப்பதிலேயே அவை கழிக்கின்றன.
லோட்டனும் லில்லியும் பூக்களில் இருக்கும் தேனைக் குடிக்கின்றன.
அவை சிலந்திகளையும் பூச்சிகளையும் விரும்பிச் சாப்பிடும்.
சில நேரம் சிறிய, சாறுள்ள பழங்களையும் சாப்பிடும்.
நீங்கள் எப்போதாவது தோட்டத்திலோ பூங்காவிலோ லோட்டன், லில்லியைப் போன்ற பறவைகளைப் பார்த்தால், அவை என்ன சாப்பிடுகின்றன என்று கூர்ந்து கவனியுங்கள்.
ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது? ஆற்றல் உணவிலிருந்து கிடைக்கிறது.மனிதர்கள், பறவைகள் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் உயிர் வாழ்வதற்கு ஆற்றல் தேவை. உடலை இயக்கவும் மூளை சிந்திக்கவும் அது அவசியம்.சில பறவைகள் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை உண்ண வேண்டும். இல்லையென்றால், அவை உயிர்வாழ அவற்றின் உடலில் போதிய ஆற்றல் இருக்காது.வேறு வழியே இல்லையென்றால் வளர்ந்த மனிதர்கள் இரண்டு மாதங்கள்வரை சாப்பிடாமல் உயிர் பிழைத்திருக்க முடியும். ஆனால், ஆரோக்கியமாக வாழ நாம் ஒரு நாளைக்கு பல முறை சாப்பிட்டாக வேண்டும்.