துருவி என்னும் தும்பி இப்பொழுதுதான் பறக்கக் கற்றுக் கொண்டாள். அவள் குளத்தருகே தனது நண்பர்களுடன் பறப்பாள். அவர்கள் தவளைகளைப் பார்த்து கேலி செய்வார்கள். மதிய உணவுக்குக் கொசுக்களை சாப்பிடுவார்கள்.
மாலையில் துருவி அருகிலிருந்த காட்டுக்குள் சென்றாள். அங்கிருந்த பறவைக்கூடுகளையும் சிலந்தி வலைகளையும் பார்த்தாள். ஆனால், வானத்தில் மேகங்கள் கூடுவதைப் பார்க்க மறந்தாள்.
தொப்! துருவியின் தலைமீது ஒரு மழைத்துளி விழுந்தது. துருவி வீட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும்பினாள். தன்னுடைய சிறகுகள் நனைவதை அவள் விரும்பவில்லை.
‘‘எனக்கு ஒரு குடை வேண்டும்’’ என்று நினைத்தாள் துருவி. குல்மொஹர் மரத்தை நோக்கிப் பறந்து சென்றாள். அது உறுதியான சிவப்புக் குடை போலத் தோன்றியது.
அதன் இலைகள் மிகச் சிறியனவாக இருந்தன. ‘‘இது ஒரு எறும்பைக் கூட மூட முடியாத அளவுக்குச் சிறியதாய் இருக்கிறதே. எனக்கு இதைவிடப் பெரிய குடை வேண்டும்’’ என்று நினைத்தாள் துருவி.
நட்சத்திர வடிவில் இருக்கும் பெரிய இலைகளைப் பார்த்தாள் துருவி. முதலில் ”இந்தப் பப்பாளி மரத்தின் இலை ஒரு நல்ல குடையாகும்” என்று நினைத்த துருவி, ”இல்லை! இல்லை! இவை மழைநீரையெல்லாம் உள்ளே விடுகின்றன” என்று கவலைப்பட்டாள்.
காற்று பலமாக வீசத்தொடங்கியது. ஆனால், துருவி குடையை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. அவள் ஒரு செடியின் கீழே ஒதுங்கினாள். உடனே அதன் இலைகள் மேற்புறமாய் மடித்துக்கொண்டன.
”சே! பாசமே இல்லாத செடி” என்று தொட்டாச்சிணுங்கிச் செடியிடம் கோபித்துக் கொண்டாள் துருவி.
துருவி மனம் வருந்தினாள். காடு முழுவதும் இலைகள் உள்ளன. மெலிதான மற்றும் தடிமனான இலைகளும், சிறிய மற்றும் பெரிய இலைகளும் உள்ளன. ஆனால் அவற்றில் ஒன்று கூட குடையாகவில்லை.
திடீரென்று துருவி ஒரு ஆலமரத்தைப் பார்த்தாள். அதன் இலைகள் நட்சத்திர வடிவிலோ முட்களுடனோ இல்லை. அதன் இலைகள் மிகப் பளுவாகவோ அல்லது சிறியதாகவோ இல்லை!
துருவி ஆலமரத்தை நோக்கிப் பறந்து சென்றாள். அதன் ஒரு இலைக்கடியில் தொற்றிக் கொண்டாள். ஆம்! துருவி தன் குடையைக் கண்டுபிடித்து விட்டாள்!
தும்பிகள் பற்றி மேலும் தகவல்கள்
தும்பிகள் சிறந்த பயணிகள்! நம் தோட்டங்களிலும் வயல்களிலும் பொதுவாகக் காணப்படும் தும்பி வகையான ‘தேசாந்திரித் தட்டான்’ (wandering Glider) இந்தியாவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் இடையே உள்ள கடலைத்தாண்டி பயணிக்கக் கூடியது. அவை இந்தியப் பெருங்கடலைக் கடக்க 16,௦௦௦ கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணித்துச் செல்பவை. அவை தங்கள் பயணத்தை அக்டோபர் மாதத்தில் தொடங்கி டான்சானியா போன்ற நாடுகளை ஜனவரி மாதத்தில் சென்றடையும். வழியில் மாலத்தீவு, சேஷெல்ஸ் போன்ற தீவுகளில் தங்கிச் செல்லும்.
தும்பிகளின் உடல் அதிக சூடாகவோ அல்லது அதிகக் குளுமையாகவோ இருந்தால் அவற்றால் பறக்க இயலாது. இவை காலையில் சூரியனிடமிருந்து வெப்பத்தைப் பெற தங்கள் சிறகுகளை விரிக்கும். மாலையில் சில தும்பிகள் தங்கள் உடம்பைத் தூக்கிய வண்ணம், வயிற்றை சூரியனுக்குக் காண்பித்துத் தங்களைக் குளுமையாக்கிக் கொள்ளும்.