thakkaali chutiniyai seithathu yaar

தக்காளிச் சட்டினியைச் செய்தது யார்?

தாராவும் ரவியும் பழங்களையும் காய்கறிகளையும் வாங்குவதற்காக சந்தைக்குச் செல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பழம் நசுங்கிவிடுகிறது! கனமான மற்றும் லேசான பொருட்களைக் கொண்டு ‘வரிசைப் படுத்துதலை’ இக்கதை அறிமுகம் செய்கிறது. இப்புத்தகத்தின் படங்கள் அனைத்தும் வேண்டாத காகிதத் துண்டுகள், பழைய புத்தகங்கள், மற்றும் படுக்கையின் அடியில் வைத்து நீவப்படாமல் சேகரிக்கப்பட்ட காகிதப் பைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை.

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இன்று தாராவும் ரவியும் சந்தைக்குச் செல்கின்றனர்.

வாங்க வேண்டிய பழங்கள், காய்கறிகளின் பட்டியலை அம்மா அவர்களிடம் கொடுத்துள்ளார்.

சந்தையில், சாறு நிறைந்த சிவப்புத் தக்காளிகளை தாரா பார்த்தாள், “அம்மா நமக்குப் பிடித்த தக்காளிச் சட்டினி செய்யப் போகிறார் என்று நினைக்கிறேன்” என்றாள் அவள்.

காய்கறிகள் விற்பவரான மோனப்பா எல்லாவற்றையும் எடை போட்டார். பையினுள் இவையெல்லாம் சென்றன:

1 கிலோ புதிய சிவப்புத் தக்காளிகள்½ கிலோ வெங்காயம்

½ கிலோ உருளைக்கிழங்கு 1 தேங்காய் 6 எலுமிச்சம் பழங்கள்

*அரை என்பது ½ என்று எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பொருளை இரு சமமான பகுதிகளாகப் பிரித்தால் கிடைக்கும் ஒரு பகுதி ஆகும்.

*கிலோகிராம் என்பது கிலோ என்று எழுதப்பட்டுள்ளது.

தாராவும் ரவியும் பாடிக்கொண்டே வீடு திரும்புகின்றனர்: “எங்களுக்கு வேண்டும்… தக்காளிச் சட்டினி, தக்காளிச் சட்டினி! அம்மா செய்யும் சுவையான தக்காளிச் சட்டினி!”

திடீரென்று, “உன் கால் மேலும் ஏதாவது சிந்துகிறதா, என்ன?” என்று ரவி தாராவிடம் கேட்டான்.

பை ஈரமாக இருந்தது. அடடா! கீழே இருந்த தக்காளிகள் எல்லாம் நசுங்கிப் போயிருந்தன.

தாரா ரவியிடம் முணுமுணுத்தாள், “நம்முடைய தக்காளிச் சட்டினியைப் பார்க்க நல்லாவே இல்லை. அம்மா செய்வதைப் போலில்லை!”

அடுத்த வாரம், தாராவும் ரவியும் கவனமாக இருந்தனர்.

“கனமான காய்கறிகள் கீழே! லேசான, மென்மையான காய்கறிகள் மேலே!” என்று ரவி சொல்லிக்கொண்டே இருந்தான்.

பைக்குள் இவையெல்லாம் சென்றன: 1 தர்ப்பூசணி ½ கிலோ உருளைக்கிழங்கு 1 தேங்காய் ½ கிலோ திராட்சை 6 வாழைக்காய்கள் ½ கிலோ தக்காளி, எல்லாவற்றிற்கும் மேலே.

ஆனால், வீட்டிற்குச் சென்ற போது, திராட்சைகள் வாழைக்காய்களின் அடியில் நசுங்கி திராட்சைப்பழச் சாறாக மாறியிருப்பதை அவர்கள் கண்டனர்!

“அன்று தக்காளிகளைச் சட்டினியாகச் செய்தோம். இன்று திராட்சைகளைப் பழச்சாறாக ஆக்கி விட்டோம். அடுத்த தடவை என்ன செய்யப் போகிறோமோ!” என்று தாரா வருத்தத்தோடு சொன்னாள்.

அடுத்த முறை, அம்மாவின் பட்டியலில் ஆரஞ்சுகள் இருந்தன.

அவை மென்மையாகவும் லேசாகவும் இருந்தன. எனவே அவை தக்காளிகளை அடுத்து மேலே வைக்கப்பட்டன.

தாராவும் ரவியும் சட்டினிப் பாடலைப் பாடிக்கொண்டே வீடு திரும்புகையில், நண்பர்கள் அவர்களைக் கண்டனர்.

நண்பர்களுக்குத் தாகமாக இருந்ததால், எல்லா ஆரஞ்சுப் பழங்களையும் தின்று விட்டனர்!

காணாமல் போன ஆரஞ்சுப் பழங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட அம்மா அவர்களை அணைத்துக் கொண்டார். அதைப் பற்றி வருத்தப்பட வேண்டாம் என்றார்.

அடுத்த வாரம், தாராவும் ரவியும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டனர்.

ஆரஞ்சுகளை, எல்லாவற்றையும் விட லேசான புதினா இலைகளுக்குக் கீழே மறைத்து வைத்தனர். இப்போது அவர்களின் தாகம் கொண்ட நண்பர்களால் ஆரஞ்சுகளைக் கண்டுபிடிக்க முடியாது!

அன்று இரவு, அம்மா சுவையான தக்காளிச் சட்டினியும், எலுமிச்சை சாதமும் செய்தார். தாராவும் ரவியும் சப்புக் கொட்டிக் கொண்டு விரைவாகச் சாப்பிட்டனர்.

அதன் பின் அவர்களுக்கு என்ன கிடைத்தது, தெரியுமா? ஆம்! இனிப்பான, சாறு நிறைந்த ஆரஞ்சுகள்!

1. உங்களுடைய அம்மா, ஆப்பிள்கள், தர்ப்பூசணி, வாழைப் பழங்கள் ஆகியவற்றை வாங்கி வர கடைக்கு உங்களை அனுப்பினால், எந்தப் பழத்தை அடியில் வைக்கவே மாட்டீர்கள்?

2. உங்களுடைய பையில் ½ கிலோ சர்க்கரை, ½ கிலோ தேயிலை, இரண்டு பிஸ்கட் பொட்டலங்கள் வைக்கப்பட வேண்டும். எந்தப் பொருளை மேலே வைப்பீர்கள்?

3. ஒரு நாள் காலை ரவி, அரை டஜன் முட்டைகள், ½ கிலோ வெங்காயம், 1 ரொட்டிப் பொட்டலம், ¼ கிலோ உருளைக் கிழங்குகள் வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றான்.

“முட்டைகளைக் கவனமாகப் பார்த்துக் கொள்!” என்று அம்மா சொன்னார்.

எந்தப் பொருளை ரவி பையின் அடியில் வைக்கவே கூடாது?