ஆன்னாவுக்கு தன் சொந்த ஊரான கோவாவிலிருந்து மும்பைக்கு இடம் மாறுவதில் மிக்க மகிழ்ச்சி. ஆனால் மாமா, பாட்டி, நண்பர்கள் அனைவரையும் குறிப்பாக ‘மாண்டோ’வைப் பிரிந்து செல்வதில் அவளுக்கு வருத்தம்தான்.
மாண்டோ, பொறுப்புடன் இருக்கும் ஒரு நாய். அது நாள் முழுவதும் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருக்கும். அக்கம்பக்கத்தில் திருமணங்கள் நடக்கும் போதெல்லாம், ஆன்னாவின் மாமா அவரது வயலினை வாசிப்பதை நிறுத்தும் வரை, வருத்தமாக ஊளையிடும்!
ஆன்னாவிற்கு மாண்டோவை மிகவும் பிடிக்கும். அது அவளை அந்நியர்களிடமிருந்தும், அபாயத்திலிருந்தும் காப்பாற்றும் என்று அறிவாள். மாமாவின் வயலினின் கீச்சல் சத்தத்திலிருந்தும் கூட அது அவளைக் காப்பாற்றும்!
மும்பை ஒரு சந்தடி மிக்க நகரமாக இருந்தது. பறவைகளின் சத்தம், தேவாலயத்தின் மணி ஓசை, கிராமத்தின் இசை ஆகியவற்றைக் கேட்க முடியாமல் ஏங்கினாள் ஆன்னா. மாமாவின் வயலின் கீச்சலை கேட்க மட்டும் அவள் ஏங்கவில்லை.
சில நாட்களில் பள்ளி முடிந்த பிறகு, அஞ்சல் கடிதங்கள் மற்றும் பொட்டலங்களைப் பட்டுவாடா செய்யும் தன் அப்பாவுடன் செல்வாள் ஆன்னா.
அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மின்தூக்கியில்(lift) செல்வதற்கு ஆன்னா ஆவலுடன் காத்திருப்பாள். ஒரு நாள், குறும்புத்தனமாக எல்லாப் பொத்தான்களையும் அழுத்தினாள். மின்தூக்கி ஒவ்வொரு மாடியிலும் நின்று கதவு திறந்துகொண்டது!
ஒவ்வொரு மாடியின் சுவற்றிலும் ஒரு சிவப்பு நிற ஒலிபரப்புப் பெட்டி(speaker box) பொருத்தியிருந்தது. ஒவ்வொரு மாடியிலும் மேற்கூரையின் உட்பரப்பில் நூதனமான ஒரு நீர்த்தூவியும்(shower) இருந்தது.
‘இங்கே யார் குளிக்க விரும்புவார்கள்?’ என்று வியந்தாள் ஆன்னா.
ஆன்னா, அவற்றைப் பற்றி புரிந்து கொள்ள முயன்றாள். சிவப்பு நிற ஒலிபரப்பி ஒருபோதும் பாட்டுப் பாடவில்லை.
அந்த நீர்த்தூவி? சொட்டுத் தண்ணீர் கூட அதிலிருந்து விழவில்லை. குழாய்வாயும் கண்ணில் படவில்லை!
ஒரு நாள் மதிய வேளையில், ஆன்னாவும் அவளது தந்தையும் ஐந்தாவது மாடியில் மஞ்சு பாட்டியின் வீட்டுக் கதவருகில் இருந்த போது, திடீரென்று மிகப் பயங்கரமான ஓலம் கேட்டது.
“அப்பா, அது என்ன பயங்கரமான சத்தம்?”
“அது தீ எச்சரிக்கை என்று நினைக்கிறேன். ஆன்னா! வா, நாம் உடனே தீயிலிருந்து காக்கும் மீட்பு வழி(Fire Exit) உள்ள மாடிக்குச் செல்ல வேண்டும்.”
பாதுகாப்பான அந்த இடத்திற்கு விரைந்து வந்த அனைவரையும் ஆன்னா பார்த்தாள்.
“கவலைப்படாதே ஆன்னா, இரண்டாம் மாடியில் சிறியதாகத் தீப்பிடித்திருக்கிறது. அவ்வளவுதான். அதோ அபாயச் சங்கொலி கேட்கிறதா? அதுதான் தீயணைப்பு வண்டி — நமக்கு உதவி செய்ய விரைந்து வந்துள்ளது.” என்றார் அப்பா.
திடீரென்று உட்கூரையிலிருந்த அந்த நூதனமான நீர்த்தூவி, சுற்றிலும் எல்லா இடங்களிலும் நீரைத் தெளிக்க ஆரம்பித்தது.
அடடா, அந்த மூலையில் யாரது? மஞ்சு பாட்டியின் பூனைக்குட்டி! பாவம்! தீயையும் தண்ணீரையும் பார்த்து மிரண்டுபோயிருந்தது.
திக்கற்ற அச்சிறிய பூனைக்குட்டியின் நிலைமையைப் பார்த்து ஆன்னாவுக்கு தைரியம் வந்தது. அதைக் காப்பாற்ற ஓடினாள்.
இப்போது ஆன்னாவுக்கு துணிவு சற்றே அதிகமானது. “நீர்த்தூவியிலிருந்து தண்ணீர் எப்படி வந்தது, அப்பா?” என்று அவள் கேட்டாள்.
“ஆன்னா! அது தீயணைப்புத் தெளிப்பான். தீப்பிடித்தால் அது தானாகவே இயங்கும்,” என்றார் அப்பா.
“ஆனால், குழாய்வாய் எங்கே, அப்பா?” என்று கேட்டாள் ஆன்னா. ஆன்னாவின் தந்தை அந்த நீர் தெளிப்பானைப் பார்த்தார். அவருக்கும் சரியாகத் தெரியவில்லை.
“அதற்குக் குழாய்வாய் இல்லை, ஆன்னா,” என்றார் மஞ்சு பாட்டி. “அந்த சிவப்புக் குழாயில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும். தண்ணீர் கொட்டாமல் இருக்க அதற்கு இறுக்கமான ஒரு அடைப்பான் உள்ளது. அருகில் எங்கேனும் தீப்பிடித்தால், அந்தச் சூட்டில் அடைப்பான் உடைந்துவிடும். உடனே அதிலிருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்.”
ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்து கொண்ட அப்பா, “அப்படியா!” என்றார்.
பீப் பீப் பீப் பீப்…
ஒரு பெரிய வெள்ளை ஏணி அவர்கள் எதிரில் எழும்பியது.
“தயவுசெய்து குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் மற்றும் முதியவர்கள் முதலில் வரட்டும்” என்று தீயணைப்பாளர் தனது ஒலிபெருக்கியில் அறிவித்தார்.
தீமீட்பு மின்தூக்கியில்(fire lift) ஏறும்பொழுது ஆன்னாவின் கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட மஞ்சு பாட்டி, தமது கண்களை இறுக்கி மூடிக் கொண்டார். ஆனால், ஆன்னா தனது கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்று நீ மிகவும் தைரியமாக இருந்தாய், ஆன்னா” என்று பெருமையுடன் பாராட்டினார் அப்பா. “அபாயச் சங்கொலி உன்னை பயமுறுத்தியதா?”
ஆன்னா அவரை அணைத்துக்கொண்டு இல்லையென தலையாட்டினாள்.
“அபாயச் சங்கொலி இன்று நம்மையெல்லாம் காப்பாற்றியது, தெரியுமா? அது நமக்கு நன்மை தருவதே,” என்று மென்மையாகச் சொன்னார் அப்பா.
“அது கொஞ்சம் நம் மாண்டோவைப் போல, அப்பா,” என்று ஆன்னா கிசுகிசுத்தாள். அப்பா குழப்பத்துடன் பார்த்தார்.
“அபாயச் சங்கொலி தினமும் சத்தம் போடாமல் அமைதியாக இருக்கும். அது பயங்கரமாக அலறுவது நம்மை அபாயத்திலிருந்து காப்பாற்ற மட்டும்தான்!” என்று விவரித்தாள் ஆன்னா.
தொழில்நுட்பம் நமக்கு பல விதங்களில் உதவி செய்கிறது. திடீரென்று பள்ளிக்கூடங்கள், திரைப்பட அரங்குகள் மற்றும் இதர கட்டடங்களில் தீப்பிடித்தால், தீயணைப்புக் கருவிகள் தானாக இயங்கி நம் உயிர்களைக் காப்பாற்றும்.
தீப்பிடித்தால் அபாயச் சங்கொலி அலறும்போது நாம் செய்ய வேண்டியவை:
1. அமைதியாக எழுந்து பக்கத்திலிருக்கும் தீயிலிருந்து காக்கும் மீட்பு வழிக்கு நடந்து செல்ல வேண்டும். மின்தூக்கியில் செல்லக் கூடாது. ஏனென்றால், தீப்பிடித்திருக்கும் போது அது இயங்காது.
2. ஓடக்கூடாது. ஓடினால் புகையை நிறைய சுவாசித்து விடுவோம்; அல்லது மோதிக் கொள்வோம்; அல்லது நெருக்கடியில் மிதிபட்டு விடுவோம்.
3. தீயை அணைக்க தண்ணீரை வீசி எறியக் கூடாது. வீசினால் தீ வேகமாகப் பரவக்கூடும் அல்லது மின்மரணம்(electrocution) நேரக்கூடும்.
4. பெரியவர்களின் உதவியுடன் மின்சார சுவிட்சுகளை அணைக்க வேண்டும். மின்சார உபகரணங்களையோ, சுவிட்சுகளையோ தொடக்கூடாது.
5. வெளியேறும் வழியில் புகை மண்டியிருந்தால், கீழே குனிந்தோ, தவழ்ந்தோ செல்வது நல்லது.
6. கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பாக வந்து சேர்ந்தவுடன், அருகே எங்கு மக்கள் கூடி இருக்கிறார்களோ அங்கே சென்று அமைதியாக குழுமி இருக்க வேண்டும்.
7. உங்கள் குடும்பத்தினரோ பொறுப்பாளரோ வந்து உங்களை அழைத்துச் செல்லும் வரை அங்கேயே காத்திருக்க வேண்டும்.
8. உங்களுக்குக் காயம் பட்டிருந்தால் அருகிலிருக்கும் பெரியவர்களிடம் உதவி கேட்க வேண்டும்.