Thenali Raman Kadhaikal

தெனாலி ராமன் கதைகள்

சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

- Unknown

Source: tamilsurangam.in
Licesne: Creative Commons

காளியிடம் வரம் பெற்ற கதை

சுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர். தெனாலி ராமனுக்குப் பள்ளி சென்று படிப்பது என்பது வேப்பங்காயாகக் கசந்தது. ஆனால் மிகவும் அறிவுக்கூர்மையும் நகைச் சுவையாகப் பேசக்கூடிய திறனும் இயற்கையாகவே பெற்றிருந்தான். வீட்டுத்தலைவர் இல்லாத காரணத்தால் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நிலை தெனாலி ராமனுக்கு ஏற்பட்டது. அதனால் என்ன செய்வது என்ற கவலை அவனை வாட்டியது.

ஒருநாள் தெனாலிக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் இராமனின் நிலையைக்கண்டு அவனுக்கு ஒரு மந்திரத்தைக் கற்றுக் கொடுத்தார். அந்த மந்திரத்தை பக்தியுடன் ஜபித்தால் காளி பிரசன்ன மாவாள் என்றும் சொல்லிச் சென்றார். அதன்படியே இராமனும் ஊருக்கு வெளியே இருந்த காளி கோயிலுக்குச் சென்று முனிவர் கற்றுக் கொடுத்த மந்திரத்தை நூற்றியெட்டு முறை ஜெபித்தான். காளி பிரசன்னமாகவில்லை. இராமன் யோசித்தான். சட்டென்று அவனுக்கு நினைவுக்கு வந்தது. முனிவர் சொன்னது ஆயிரத்துஎட்டு முறை என்பது. உடனே மீண்டும் கண்களை மூடிக் கொண்டு காளியை ஜெபிக்கத் தொடங்கினான்.

இரவும் வந்து விட்டது. ஆனாலும் இராமன் காளி கோயிலை விட்டு அகலவில்லை. திடீரென்று காளி அவன் எதிரே தோன்றினாள்.

"என்னை ஏன் அழைத்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று கோபமாகக் கேட்டாள் காளி. அவளை வணங்கி எழுந்த இராமன் கைகளைக் கூப்பித் தொழுதவாறே கேட்டான்.

"தாயே நானோ வறுமையில் வாடுகிறேன். என் வறுமை அகலும் வழியும் எனக்கு நல்லறிவும் தரவேண்டுகிறேன். காளி பெரிதாகச் சிரித்தாள்.

" உனக்குப் பேராசைதான். கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டுமா?"

"ஆம் தாயே. புகழடையக் கல்வி வேண்டும். வறுமை நீங்கப் பொருள் வேண்டும். இரண்டையும் தந்து அருள் செய்ய வேண்டும்." என்றான் இராமன்.

காளி புன்னகையுடன் தன் இரண்டு கரங்களை நீட்டினாள். அதில் இரண்டு கிண்ணங்கள் பாலுடன் வந்தன. அந்தக் கிண்ணங்களை இராமனிடம் தந்தாள் காளி.

"இராமா! இந்த இரண்டு கிண்ணங்களிலும் உள்ள பால் மிகவும் விசேஷமானது. வலது கிண்ணம் கல்வி. இடது கிண்ணம் செல்வம். நீ ஒரு கிண்ணத்திலுள்ள பாலை மட்டுமே குடிக்க வேண்டும். உனக்கு எது மிகவும் தேவையோ அந்தக் கிண்ணத்தின் பாலை மட்டும் குடி" என்றாள் புன்னகையுடன்.

இராமன் " என்ன தாயே! நான் இரண்டையும் தானே கேட்டேன்.ஒரு கிண்ணத்தை மட்டும் அருந்தச் சொல்கிறாயே. நான் எதை அருந்துவது தெரியவில்லையே" என்று சற்று நேரம் சிந்திப்பது போல நின்றான். பிறகு சட்டென்று இடது கரத்திலிருந்த பாலை வலது கரத்திலிருந்த கிண்ணத்தில் கொட்டிவிட்டு அந்தக் கிண்ணத்துப் பாலை மடமடவெனக் குடித்து விட்டுச் சிரித்தான். காளி திகைத்து நின்றாள்.

"நான் உன்னை ஒரு கிண்ணத்திலுள்ள பாலைத்தானே குடிக்கச் சொன்னேன்!"

"ஆம் தாயே, நானும் ஒரு கிண்ணத்துப் பாலைத்தானே குடித்தேன்." என்றான்.

"ஏன் இரண்டையும் ஒன்றாகக் கலந்தாய்?"

"கலக்கக் கூடாது என்று நீ சொல்லவில்லையே தாயே!"

காளி புன்னகை புரிந்தாள். "இராமா! என்னையே ஏமாற்றி விட்டாய். நீ பெரும் புலவன் என்று பெயர் பெறாமல் விகடகவி என்றே பெயர் பெறுவாய்." என்று வரம் தந்து விட்டு மறைந்தாள்.

இராமன் விகடகவி என்று சொல்லிப் பார்த்துச் சிரித்துக் கொண்டான். திருப்பிப் படித்தாலும் விகடகவி என்றே வருகிறதே என்று மகிழ்ந்தான்.

ராஜகுருவின் நட்பு

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.

அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான். ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.

நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார்.

தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.

தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான்.

பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான்.

தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.

ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.

உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா...... மரியாதையாக வெளியே போ, இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார்.

வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்.

வித்தைக்காரனை வென்ற கதை

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்."என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார்.

இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.

தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். " இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?" இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது." அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது." என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது." என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?" "

வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.""அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்."என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை "தொபுகடீர்" என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்."இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? "" அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்."

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்."இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?" என்றார் அரசர் வருத்தத்தோடு. "அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.

இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. " என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.

ராஜகுருவை பழிக்குப் பழி வாங்குதல்

ஒரு நாள் அதிகாலை நேரம் ராஜகுரு குளத்துக்குக் குளிக்கச் சென்றார். அப்போது அவரை அறியாமலேயே தெனாலிராமன் பின் தொடர்ந்தான். குளக்கரையை அடைந்ததும் ராஜகுரு துணிமணிகளை எல்லாம் களைந்து கரையில் வைத்துவிட்டு நிர்வாணமாக குளத்தில் இறங்கி குளித்துக் கொண்டிருந்ததார். மறைந்திருந்த தெனாலிராமன் ராஜகுருவின் துணிமணிகளை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.

குளித்து முடித்து கரையேறிய ராஜகுரு துணிமணிகளைக் காணாது திடுக்கிட்டார். உடனே தெனாலிராமன் அவர் முன் தோன்றினான்.

தெனாலிராமன் எனது துணிமணிகளைக் கொடு என்று கெஞ்சினார். அதற்குத் தெனாலிராமனோ உன் துணிமணிகளை நான் பார்க்கவில்லை. நானும் குளிக்கவே இங்கு வந்துள்ளேன். என்னிடம் வம்பு செய்யாதீர்கள் என்றான்.

ராமா........ என் துணிமணிகளைக் கொடுத்துவுடு. இன்னும் சிறிது நேரத்தில் நன்கு விடியப்போகிறது. இக்குளத்துக்கு பெண்கள் குளிக்க வந்து விடுவார்கள். உடனே என் துணிமணிகளைக் கொடு என்று மீண்டும் மீண்டும் கெஞ்சினார்.

அவர் கெஞ்சுதலைக் கேட்ட தெனாலிராமன் என் நிபந்தனைக்கு உட்பட்டால் உம் துணிமணிகளைத் தருகிறேன். இல்லையேல் தர முடியாது என்று கூறி விட்டான்.என்னை அரண்மனை வரை உன் தோளில் சுமந்து செல்ல வேண்டும். அப்படியென்றால் தருகிறேன், இல்லையென்றால் தரமுடியாது என்று கூறி விட்டான்.

தெனாலிராமன் மிகப் பொல்லாதவன் என அறிந்து கொண்ட ராஜகுரு சம்மதித்தார். பின் துணிமணிகளை ராஜகுருவிடம் கொடுத்தான். உடையணிந்து கொண்ட ராஜகுரு தெனாலிராமனை தன் தோள் மீது சுமந்து சென்று கொண்டிருந்தார். இதை ஊர் மக்கள் அனைவரும் வேடிக்ககை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இதை மன்னர் கிருஷ்ண தேவராயரும் உப்பரிகையிலிருந்து பார்த்து விட்டார். உடனே தனது காவலாளிகட்கு உத்தரவிட்டார். அதாவது தோள் மேல் இருப்பவனை நன்கு உதைத்து என்முன் நிற்பாட்டுங்கள் என்று. உப்பரிகையிலிருந்து மன்னன் பார்த்து விட்டதை அறிந்த தெனாலிராமன், அவர் தோளிலிருந்து இறங்கி அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் ஐயா என்னை மன்னியுங்கள். ராஜகுருவை அவமானப்படுத்திய பாவம் என்னைச் சும்மாவிடாது. ஆகையால் என் தோள் மீது தாங்கள் அமருங்கள். நான் உங்களை சுமந்து செல்கிறேன் என்றான். அவன் பேச்சை உண்மையென்று நம்பிய ராஜகுரு தெனாலிராமன் தோள்மீது உட்கார்ந்து கொண்டான். தெனாலிராமன் ராஜகுருவை சுமந்து சென்று கொண்டிருக்கையில் காவலாட்கள் அருகில் வந்துவிட்டனர். ராஜகுருவை நையப்புடைத்து மன்னர் முன் நிற்பாட்டினார்கள்.

இதைப் பார்த்த மன்னர் ராஜகுருவை ஏன் அடித்தீர்கள் என வினவினார் அதற்கு காவலாட்கள் தெனாலிராமன் தோள் மீது அமர்ந்து இருந்தவர்தான் இந்த ராஜகுரு. தாங்கள் தானே தோள் மீது அமர்ந்திருப்பவரை அடித்து உதைக்கச் சொன்னீர்கள். அதன்படியே செய்துள்ளோம் என்றனர். மன்னர் ராஜகுருவை அழைத்து விவரத்தைக் கேட்டார். ராஜகுருவும் தன் தவறை உண்மையென்று ஒத்துக்கொண்டார்.தெனாலிராமன் செய்கை மன்னருக்கு நகைச்சுவையுண்டு பண்ணினாலும் அவன் செய்த தவறுக்கு தக்க தண்டனை வழங்க விரும்பினார்.

ஆகையால் தெனாலிராமனை அழைத்து வர அரண்மனை காவலாட்களை அனுப்பினார். காவலாட்களும் தெனாலிராமனை சிறிது நேரத்தில் மன்னர் முன் கொண்டு வந்து நிற்பாட்டினார்கள்.

தெனாலிராமன் நீ ராஜகுருவை அவமானப்படுத்திவிட்டாய். மேலும் அவரை உதையும் வாங்க வைத்துவிட்டாய். இது மன்னிக்க முடியாத குற்றமாகும். ஆகவே உன்னை சிரத்தேசம் செய்ய உத்தரவு இடுகிறேன் என்றார் மன்னர்.

இதைக் கேட்ட தெனாலிராமன் தன் உயிருக்கு ஆபத்து வந்ததை எண்ணி வருந்தினார். அவன் தன் இஷ்ட தேவதையான காளி தேவியை தன்னைக் காப்பாற்றும்படி மனதிற்குள் துதித்தான்.

காவலாட்களும் அவனை கொலை செய்ய அழைத்துச் சென்றார்கள். அப்போது அவர்களிடம் தன்னை விட்டுவிடும்படியும் பணமும் தருவதாகவும் வேண்டினான். காவலாட்களும் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவனது வேண்டுகோளுக்கு இணங்கி கொலை செய்யாமல் விட்டு விட்டனர். இனி இவ்வூரில் இருக்காதே, வேறு எங்காவது போய்விடு என்று சொன்னார்கள். அவர்களிடம் அப்படியே செய்கிறேன் என்று சொல்லிய தெனாலிராமன் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டான்.

காவலாட்களும் ஒரு கோழியை அறுத்து அதன் இரத்தத்தை வாளில் தடவி மன்னரிடம் தெனாலிராமனை கொலைசெய்து விட்டோம் என்று சொல்லி விடடனர். மன்னரும் இதை உண்மை என்று நம்பினார்.

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும். அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார்.

இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார். இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார். அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார்.

மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே.......... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள். அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார். இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார். இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னல் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர். ஓ.......... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு.

மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார். உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார்.

இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

கூனனை ஏமாற்றிய கதை

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.

ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.

" கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர்.

ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது. "அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான்.

"யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான்.

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.

"அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான்.

கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

பாத்திரங்கள் குட்டி போட்ட கதை

விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பது பைசா வட்டி இதனால் வட்டிக்கு அவனிடம் பணம் வாங்கும் மக்கள் அவதியுற்றனர்.

இதையறிந்த தெனாலிராமன் அந்த சேட்டை நயவஞ்சகமாக திருத்த திட்டம் தீட்டினான்.

அந்த சேட் பாத்திரங்களையும் வாடகைக்கு விடுவதுண்டு. ஒரு நாள் தெனாலிராமன் சேட்டைச் சந்தித்து "தன் மகனுக்குக் காதணி விழா நடைபெறுவதாகவும் அதற்குச் சில பாத்திரங்கள் வாடகைக்கு வேண்டுமென்றும் விழா முடிந்ததும் கொண்டு வந்து தருவதாகவும்" கூறினான்.

அதன்படியே சேட்டும் பாத்திரங்களை தெனாலிராமனுக்குக் கொடுத்தான். சில நாள் கழித்து தெனாலிராமன் அந்தப் பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்துக் கொடுத்தான்.

இதைப் பார்த்த சேட் "நான் பெரிய பாத்திரங்கள் மட்டும் தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை நான் கொடுக்கவில்லையே......... அவற்றையும் ஏன் கொடுக்கிறாய்" என்று கேட்டான்.

அதற்குத் தெனாலிராமன் "உமது பாத்திரங்கள் "குட்டி" போட்டன. அவற்றையும் உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் அவற்றையும் சேர்த்து எடுத்து வந்தேன்" என்றான்.

இவன் சரியான வடிகட்டியான முட்டாளாக இருப்பான் போல என்று எண்ணி "ஆமாம் ஆமாம். இவற்றை நான் உன்னிடம் கொடுக்கும் போது சினையாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன" என்று அனைத்துப் பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டான். சில மாதங்கள் கழித்து "தன் வீட்டில் விசேடம் நடைபெற இருப்பதாகவும் அதற்கு மன்னரும் அரசுப் பிரதானிகளும் கலந்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப்பாத்திரங்களும் வேண்டும்" என்று கேட்டான்.

இவனுடைய நாணயத்தை அறிந்த சேட் பொன் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களைக் கொடுக்க சம்மதித்தான். கொடுக்கும் போது இவை கர்ப்பமாக இருக்கின்றன. விரைவில் குட்டிபோடும். இவற்றின் குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வா என்றான்.

"சரி" என்று ஒப்புக் கொண்டு தங்க வெள்ளிப் பாத்திரங்களைத் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான். சில மாதங்கள் ஆயின. பாத்திரங்கள் திரும்ப வருவதாகக் காணோம்.

ஆகையால் சேட் நேரே தெனாலிராமன் வீட்டுக்குச் சென்றான். தெனாலிராமனைச் சந்தித்து "இவ்வளவு நாட்களாகியும் ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வந்து தரவில்லை" என மிகக் கோபமாக கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் "சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தான் தங்களைப் பார்க்க வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா.........பிரசவம் கஷ்ட்மாக இருந்தது அதனால் அனைத்துப் பாத்திரங்களும இறந்து விட்டன" எனத் தெரிவித்தான்.

இதைக் கேட்ட சேட் "யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?" எனக் மிகக் கோபமாகக் கேட்டான். அதற்குத் தெனாலிராமன் "பாத்திரங்கள் குட்டி போடும் போது அவை ஏன் இறக்காது" என்று கேட்டான்.

"என்னுடன் வா மன்னரிடம் முறையிடுவோம் அவரின் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்" என்றதும்

வேக, வேகமாக அவ்விடத்தை விட்டு நகன்றான் சேட்.

இருப்பினும் தெனாலிராமன் அவனை விடாது மன்னரிடம் இழுத்துச் சென்று மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி முறையிட்டான்.

எல்லா விவரங்களையும் கேட்டறிந்த மன்னர் "பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது ஏன் இறக்கக் கூடாது? உன் பேராசைக்கு இது ஒரு பெரு நஷ்டமே ஆகையால் இனிமேலாவது மக்களிடத்தில் நியாயமான வட்டி வாங்கு" என புத்திமதி கூறி அவனை அனுப்பி வைத்தார் மன்னர்.

தெனாலிராமனின் புத்திசாலித் தனத்தை மன்னர் மனமாரப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.

டில்லி அரசரை வென்ற கதை

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார். அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.

கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.

டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.

ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"

" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.

" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.

" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?

எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்"

"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்

பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"

பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"

என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.

" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?

தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."

"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..

வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.

கிடைத்ததில் சம பங்கு

ஒருநாள் கிருஷ்ணதேவர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில் காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன்

மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். "ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்" என்றான். இதைக் கேட்ட வாயிற் காப்போன் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற் காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் ஆக நடித்தவன் வெண்ணை திருடி கோபிதைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேட்ம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் "ஏன் இவ்வாறு செய்தாய்" என வினவினார். அதற்குத் தெனாலிராமன் "கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடி பட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்" இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் "அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு பாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள் " என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கனார்.

சோதிடனைக் கொன்ற கதை

ஒரு சமயம் பீஜப்பூர் சுல்தான் கிருஷ்ண தேவ ராயரின் படை வலிமையைப் பற்றிக் கேள்விப்பட்டான்.ராயர் சுல்தானுடன் போர் தொடுக்க எண்ணியுள்ளதையும் அறிந்து கொண்டான்.இதை எப்படியேனும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணம் கொண்டான்.

அதனால் ஒரு சூழ்ச்சி செய்தான்.அரசர் ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் என்பதை அறிந்து கொண்டான். ரகசியமாக அரண்மனை ஜோதிடரை சந்தித்தான் சுல்தான்.நிறைய பொன்னைக் கொடுத்து ராயரின் படையெடுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொண்டான்.

பொன்னுக்கு ஆசைப்பட்ட அந்த வஞ்சக ஜோதிடன் நேராக விஜயநகர அரண்மனைக்கு வந்தான்.கிருஷ்ணதேவ ராயர் படையெடுக்கத் தயாராக உள்ளதை அறிந்துகொண்டான். அவன் உள்ளம் வேகமாக வேலை செய்தது. மன்னர் முன் சென்று நின்றான்.மிகவும் தயங்குவது போல் பாசாங்கு செய்தவன் "அரசே! தற்போது தாங்கள் படையெடுப்பது சரியல்ல.ஏனெனில் தங்களின் கிரகநிலை தற்போது சரியில்லை.எனவே படையெடுப்பில் தற்போது இறங்க வேண்டாம்." என்று கூறினான். மந்திரி பிரதானிகளும் அதையே கூறினர். அவர்களும் மன்னரின் உயிரைப் பெரிதென மதித்தனர்.அரசியரும் மன்னரையுத்தத்திற்குப் போகவேண்டாம் எனத் தடுத்தனர். அரசரும் யோசித்தார்.தெனாலிராமன் இவற்றையெல்லாம் கவனித்தவண்ணம் இருந்தான்.அவனுக்கு ஜோதிடன் மேல் சந்தேகம் ஏற்பட்டது.எனவே மன்னனிடம்"அரசே! நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்? சோதிடன் சொன்ன பலன்கள் எல்லாம் நடந்து விடுகின்றனவா என்ன?" என்று தைரியம் சொன்னான்.

ராயரும் அதை ஆமோதித்தார்."ராமா! நீ சொல்வதும் சரிதான். ஆனால் இதை எப்படி மற்றவர்களுக்கு நிரூபிப்பது?சோதிடம் பொய் என்று நிரூபிப்பவருக்குபத்தாயிரம் பொன் பரிசு என்று அறிவியுங்கள்" என்றும் ஆணையிட்டார்.

தெனாலிராமனுக்கு மிக்க மகிழ்ச்சி. "அரசே! நானே இதை நிரூபிக்கிறேன். ஆனால் அந்த சோதிடனுக்குத் தண்டனை தருகின்ற உரிமையையும் எனக்குத் தரவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான். மன்னரும் இதை ஒப்புக்கொண்டார்.

மறுநாள் சபா மண்டபத்தில் சோதிடனும் தெனாலிராமனும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ராமன் சோதிடரைக் கூர்ந்து கவனித்தான்.அவர் மேல் அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அவன், "சோதிடரே! நீர் கூறும் சோதிடம் தவறாமல் பலிக்குமல்லவா?" என்றான் மெதுவாக.

"அதிலென்ன சந்தேகம்? நான் சொன்னால் அது கண்டிப்பாக நடந்தேறும்." தன் கரங்களைக் குவித்தபடியே "நீங்கள் பல்லாண்டு வாழ்ந்து பலன்களைச் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்" என்றான் ராமன் பணிவாக.

சோதிடனும் கர்வத்துடன் தலையை அசைத்துக் கொண்டான்.

"அப்படியானால் தங்களின் ஆயுள் காலத்தையும் தாங்கள் அறிவீர்கள் அல்லவா?"

"ஓ! நான் இன்னும் நாற்பது ஆண்டுகள் உயிர் வாழ்வேன். இது சத்தியம்." சோதிடன் பெருமையுடன் கூறினான்.

"உமது வாக்கு இப்போதே பொய்த்து விட்டதே! " என்றவாறே அருகே நின்ற சேனாதிபதியின் வாளை உருவி அந்த வஞ்சக சோதிடனின் தலையை வெட்டினான் ராமன்.

அனைவரின் திகைப்பையும் நீக்கிய ராமன் அந்த சோதிடனின் சுவடிக்கட்டை பிரித்துக் காட்டினான். அதனுள் பிஜாபூர் சுல்தான் சோதிடனுக்கு அனுப்பிய கடிதங்கள் இருக்கக் கண்டான். அந்த சோதிடன் பீஜப்பூர் சுல்தானின் கைக்கூலி என்று அறிந்து அவனுக்குத் தண்டனை அளித்ததற்காக ராமனைப் பாராட்டினார்.தன் வாக்குப் படியே பத்தாயிரம் பொற்காசுகளையும் அளித்து மகிழ்ந்தார். அதன்பின் தன் எண்ணப்படியே பீஜபூரையும் குர்ப்பாகானையும் வெற்றி கொண்டார் கிருஷ்ணதேவராயர்.

சூடு பட்ட புரோகிதர்கள்

மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்பும் மரியாதையும் உண்டு. தாய் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். அவரது தாயாருக்கு வயோதிகம் ஆகிவிட்டபடியால் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். வைத்தியரை அழைத்து தன் தாயின் உடல் நிலையைப் பரிசோதிக்கச் செய்தார். பரிசோதனை செய்த வைத்தியரும் "தங்கள் தாயார் அதிக நாள் தாங்க மாட்டார்கள். விரைவில் சிவலோகப் பதவி அடைந்து விடுவார்கள்" என்று கூறினார். அது கேட்ட மன்னர் வேதனையுற்றார்.

தன் தாயாரிடம் சென்று "அம்மா, உங்களுக்கு சாபிட எது மிகவும் ஆசையாக இருக்கிறது" என்று கேட்டார்.

அதற்கு அவரது தாயாரும் "மாம்பழம் தான் வேண்டும்" என்றார். அப்போது மாம்பழம் கிடைக்கக் கூடிய காலமல்ல இருப்பினும் தன் ஆட்களை அனுப்பி எங்கிருந்தாவது மாம்பழம் வாங்கி வர ஏற்பாடு செய்தார். ஆட்கள் மாம்பழம்

வாங்கி வர புறப்பட்டனர்.

மாம்பழம் வந்து சேர்வதற்குள் அவரது தாயார் மரணம் அடைந்து விட்டார்.

மாம்பழம் சாப்பிடாமலேயே தன் தாயார் மரணம் அடைந்தது குறித்து மன்னர் மிக வேதனை அடைந்தார்.

அதற்குப் பரிகாரம் காண எண்ணி அரண்மனைப் புரோகிதர்களை அழைத்து ஆலோசனை கேட்டார்.

பேராசைபிடித்த புரோகிதர்களும் "மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவரது ஆன்மா சாந்தியடைய தங்கத்தால் 108 மாங்கனைகளைச் செய்து 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் சரியாகிவிடும்" என்றனர்.

மன்னரும் அதற்குச் சம்மதித்தார். 108 மாம்பழங்கள் தங்கத்தால் செய்ய ஏற்பாடு செய்தார். சில நாட்களில் தங்க மாம்பழம் தயார் ஆனது. அவற்றை 108 புரோகிதர்களுக்கு மன்னர் கொடுத்தார். புரோகிதர்களும் மிக மகிழ்சியுடன் அவற்றைப் பெற்றுக் கொண்டனர்.

இச்செய்தியை தெனாலிராமன் அறிந்து வேதனையுற்றான். புரோகிதர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்க எண்ணினான். அதன்படியும் செயலாற்றத் துணிந்தான்.

புரோகிதர்களைச் சந்தித்தான். "என் அம்மாவிற்குத் திதி வருகிறது. அதற்குத் தாங்கள் அனைவரும் வந்து புரோகிதம் பண்ணுங்கள். என்னால் முடிந்தளவு தருகிறேன்" என்றான்.

புரோகிதர்களும் மகிழ்ந்து தெனாலிராமன் வீட்டிற்கு வந்தனர். அவனும் புரோகிதர்களை வரவேற்று உட்காரச் செய்தான். பின் கதவுகளை நன்கு தாழிட்டுப் பூட்டிக் கொண்டான். ஏற்கனவே நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியால் ஆளுக்கு ஒரு சூடு போட்டான்.

புரோகிதர்கள் அய்யோ அம்மாவென்று கதறினார்கள். பின் மன்னரிடம் சென்று முறையிட்டனர்.

இதைப் பார்த்த மன்னர் தெனாலிராமன் மீது அளவிலடங்காக் கோபங்கொண்டார்.

பின் தன் பணியாட்களை அனுப்பி தெனாலிராமனை இழுத்து வரச் செய்தார். தெனாலிராமனைப் பார்த்ததும் "ஏனடா புரோகிதர்களுக்கு இவ்வாறு சூடு போட்டாய்" என்று கேட்டார்.

"மன்னாதி மன்னா..... என்னை மன்னிக்க வேண்டும் நான் சொல்லுவதை தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டுகிறேன். என் தாயார் உடல் நலமில்லாதிருந்து இறக்கும் தருவாயில் வலிப்பு நோய் வந்து விட்டது. அதற்கு வைத்தியர்கள் என் தாயாருக்குச் சூடு போடும்படி சொன்னார்கள். நான் சூடு போடும் முன் என் தாயார் இறந்து விட்டார்கள். ஆகையால் என் தாயாரின் ஆன்மா சாந்தியடைய புரோகிதர்களுக்கு சூடு போடும்படி பெரியவர்கள் சொன்னார்கள். அவர்கள் சொன்னபடியே தான் புரோகிதர்களுக்குச் சூடு போட்டேன். இதில் என்ன தப்பு" என்று மன்னரிடம் கேட்டான் தெனாலிராமன்.

இதைக்கேட்ட மன்னர் கோபம் கொண்டு "என்னடா தெனாலிராமா, இது முட்டாள் தனமாக இருக்கிறதே" என்றார்.

இல்லை அரசே, விளக்கமாகக் கூறுகிறேன் சற்றுக் கேளுங்கள்" என்றான்.

முன்பு தங்கள் தாயார் மாம்பழம் சாப்பிடாமல் இறந்ததால் அவர்கள் ஆன்மா சாந்தியடைய 108 பொன்மாங்கனிகள் 108 புரோகிதர்களுக்குக் கொடுத்தால் தான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்று சொன்னார்களே...... அதன்படியும் தாங்கள் கொடுத்தீர்களே......................"

அதுபோலவே என் தாயாரின் வலிப்பு நோய்க்கு சூடு போட முடியாமல் போனதால் தான் இவர்களுக்குச் சூடு போட்டேன் என்றான். இதைக் கேட்ட மன்னர் நகைத்து விட்டார். தெனாலிராமனைப் பாராட்டினார். புரோகிதர்களின் பேராசையையும் புரிந்து கொண்டார்.

வைத்திய செலவு

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர்.

போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.

அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

அதிசயக்குதிரை

கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது. ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.

குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான். "குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார். அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.

இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

நீர் இறைத்த திருடர்கள்

ஒரு சமயம் விஜயநகர ராஜ்யத்தில் கடும் வறட்சி ஏற்பட்டது. பருவ மழை தவறி விட்டதால் குளம், குட்டை, ஏரி எல்லாம் வற்றிவிட்டது. தெனாலிராமன் வீட்டுக் கிணற்றிலும் நீர் குறைந்து அதிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் தினமும் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மிகவும் சிரமப்பட்டான் தெனாலிராமன்.

இந்த சமயத்தில் ஒரு நாள் இரவு நான்கு திருடர்கள் தன் தோட்டத்தில் பதுங்கி இருப்பதைக் கண்டான். உடனே வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம், "அடியே, நம் நாட்டில் பருவ மழை தவறிவிட்டதால், பஞ்சம் ஏற்பட்டு விட்டது. எனவே நிறைய திருட்டு நடக்க ஆரம்பித்து விட்டது. பஞ்ச காலம் முடியும் வரை நாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். எனவே நாம் ஒரு காரியம் செய்வோம்" என்று வெளியே பதுங்கியிருந்த திருடர்களுக்கு கேட்கும் வண்ணம் உரத்த குரலில் பேசினான்.

"அதற்கு என்ன செய்யலாம்?" என்று தெனாலிராமனின் மனைவி கேட்டாள்.

"வீட்டிலுள்ள நகை, மற்றும் விலையுயர்ந்த பொருட்களை எல்லாம் இந்தப் பெட்டியில் போட்டு பூட்டு. நாம் இந்தப் பெட்டியை யாருக்கும் தெரியாமல் கிணற்றில் போட்டு விடலாம். பஞ்சம் தீர்ந்து திருட்டுப் பயம் ஒழிந்ததும் மீண்டும் கிணற்றிலிருந்து எடுத்துக் கொள்ளலாம்" என்று முன்போலவே உரக்கக் கூறினான் தெனாலிராமன். திருடர்களும் இதைக் கேட்டனர்.

அதே சமயம் ரகசியமாக தெனாலிராமன் தன் மனைவியிடம் திருடர்கள் ஒளிந்திருப்பதைக் கூறி ஒரு பழைய பெட்டியில் கல், மண், பழைய பொருட்களை எல்லாம் போட்டு மூடினான். அந்தப் பெட்டியைத் தூக்க முடியாமல் தூக்கி வந்து கிணற்றுக்குள் 'தொப்'பென்று போட்டு விட்டு வீட்டுக்கு திரும்பிவிட்டான் தெனாலிராமன்.

திருடர்களும், "தெனாலிராமன், வீட்டிற்குள் புகுந்து திருடும் நம் வேலையை சுலபமாக்கிவிட்டான். நாம் எளிதாக கிணற்றிலிருந்து பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று தங்களுக்குள் பேசிக் கொண்ட்னர்.

பெட்டியை எடுக்க கிணற்றுக்கு அருகே வந்தனர் திருடர்கள். கிணறு ஆழமாக இருந்ததால் உள்ளே இறங்கப் பயந்த திருடன் ஒருவன், "அண்ணே! தண்ணீர் குறைவாகத்தான் உள்ளது. நாம் நால்வரும் ஏற்றம் மூலம் மாற்றி மாற்றி நீரை இறைத்து விட்டால் சுலபமாகப் பெட்டியை எடுத்துக் கொண்டு போகலாம்" என்று கூறினான். அதைக்கேட்ட மற்றவர்களும் அவன் திட்டத்துக்கு ஒப்புக்கொண்டனர். அதன்படி ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்றம் மூலம் நீர் இறைக்கத் தொடங்கினர்.

சற்று நேரம் கழித்து வேறு வழியாக தோட்டத்திற்கு சென்ற தெனாலிராமன், திருடர்கள் இறைத்து ஊற்றிய நீரை தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும், கொடிகளுக்கும், பயிர்களுக்கும் பாயுமாறு கால்வாயைத் திருப்பி விட்டான்.

இப்படியே பொழுது விடிந்தது விட்டது. ஆனால் கிணற்றில் தண்ணீர் குறையவில்லை. இதனால் திருடர்களும், "நாளை இரவு மீண்டும் வந்து நீரை இறைத்து விட்டு பெட்டியை எடுத்துக் கொள்ளலாம்" என்று பேசிக் கொண்டு சென்றனர்.

அப்போது தோட்டத்திலிருந்து வந்த தெனாலிராமன் அவர்களைப் பார்த்து, "நாளைக்கு வரவேண்டாம். நீங்கள் இறைத்த தண்ணீர் இன்னும் மூன்று தினங்களுக்குப் போதும். எனவே மூன்று தினங்கள் கழித்து வந்தால் போதும். உங்கள் உதவிக்கு நன்றி நண்பர்களே!" என்று கூறினான்.

திருடர்களுக்கு இதைக் கேட்டதும் மிகவும் அவமானமாய் போய்விட்டது. தங்களை ஏமாற்றி நீர் இறைக்கச் செய்த தெனாலிராமனின் அறிவை மனத்திற்குள் எண்ணி வியந்தனர். மேலும் அங்கே இருந்தால் எங்கே மாட்டிக் கொள்வோமோ என்ற அச்சத்தில் திரும்பிப் பார்க்காமல் ஓட்டம் பிடித்தனர் திருடர்கள்.

புலவரை வென்ற தெனாலிராமன்

ஒரு சமயம் விஜயநகரத்திற்கு வித்யாசாகர் என்ற ஒருவர் வந்திருந்தார். அவர் சகல சாஸ்திரங்களையும் அறிந்த புலவர். தம்மை போல யாரும் புலமை பெற்றவர் இருக்கமுடியாது என ஆணவம் கொண்டவர். அதனால் ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள புலவர்களையெல்லாம் வாதத்திற்கு அழைத்து வெற்றி பெற்று, பெருமையாக திரிந்து கொண்டிருந்தார். அவ்வாறே ஒருநாள் விஜயநகரத்திற்கும் வந்தார்.

அவர் இராயரின் அவைக்கு வந்து தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த அவையில் பெத்தண்ணா, சூரண்ணா, திம்மண்ணா போன்ற புலவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் வல்லவர்கள். அவர்கள் கூட வித்யாசாகரை கண்டு அஞ்சி பின்வாங்கினர். தன்னிடம் வாதிட யாரும் முன்வராதது கண்ட வித்யாசாகர் ஆணவமுற்றார். தன் அவையில் சிறந்தவர்கள் இல்லையோ என இராயருக்கோ வருத்தம்.

அந்த சமயத்தில் தெனாலிராமன் அவை முன் வந்து "பண்டிதரே! உம்மிடம் வாதம் புரிய நான் தயார். இன்று போய் நாளை வாருங்கள்" என்றான்.

இதை கேட்டதும் மன்னருக்கும், மற்ற புலவர்களுக்கும் உற்சாகமாக இருந்தது. அவர்கள் இராமனை வெகுவாக பாராட்டினர். இருந்தாலும் மறுநாள் வித்யாசாகரை இராமனால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

மறுநாள் இராமனை ஆஸ்தான பண்டிதரை போன்ற விலையுயர்ந்த ஆபரணங்களால் அலங்கரித்து அவைக்கு அழைத்து வந்தனர். இராமன் தன் கையில் பட்டுத்துணியால் சுற்றப்பட்ட ஒரு கட்டை வைத்திருந்தான்.

வாதம் ஆரம்பமாகியது. வித்யாசாகர் இராமனின் கையில் இருந்த கட்டைப்பார்த்தார். அது என்னவாக இருக்கமுடியும்? என்று அவரால் ஊகிக்கமுடியவில்லை. எனவே "ஐயா! கையில் வைத்திருக்கிறீர்களே! அது என்ன? " என்று கேட்டார்.

இராமன் அவரை அலட்சியமாகப் பார்த்து, கம்பீரமாக "இது திலாஷ்ட மகிஷ பந்தனம் என்னும் நூல். இதைக்கொண்டுதான் உம்மிடம் வாதிடப்போகிறேன்!" என்றான்.

வித்யாசாகருக்கு குழப்பம் மேலிட்டது. அவர் இது வரை எத்தனையோ நூல்களை படித்திருக்கிறார். கேட்டிருக்கிறார். ஆனால் இராமன் கூறியது போல் ஒரு நூலைப்பற்றி இதுவரை கேள்விபட்டதில்லை. அந்த நூலில் என்ன கூறியிருக்குமோ? அதற்கு தம்மால் பதில் சொல்ல முடியுமோ? முடியாதோ? என்ற பயம் ஏற்பட்டது. அதனால் நயமாக "வாதத்தை நாளை வைத்துக்கொள்ளலாம்" என்று சொல்லிவிட்டு சென்றார்.

அன்றிரவு வித்யாசாகர் பல்வாறு சிந்தித்து பார்த்தார். இராமன் கூறிய நூல் புரிந்துக்கொள்ள முடியாத நூலாக இருந்தது. இதுவரை தோல்வியே கண்டிராத அவர் இராமனிடம் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆகவே அந்த இரவே சொல்லிக்கொள்ளாமல் ஊரை விட்டே ஓடிவிட்டார்.

மறுநாள் அனைவரும் வந்து கூடினர். ஆனால் வித்யாசாகர் வரவில்லை. விசாரித்த பொழுது அவர் இரவே ஊரை விட்டு ஓடி விட்டார் என்ற செய்திதான் கிடைத்தது. வெகு சுலபமாக அவரை வென்ற இராமனை அனைவரும் பாராட்டினர்.

மன்னர் இராமனிடம் "இராமா! நீ வைத்திருக்கும் திலகாஷ்ட மகிஷ பந்த என்ற நூலை பற்றி நானும் இதுவரை கேள்விபட்டதேயில்லை. அதை எங்களுக்கு காட்டு!" என்றார்.

இராமன் மூடியிருந்த பட்டுத்துணியை விலக்கினான். ஏடுகள் எதுவும் காணப்படவில்லை. அதற்கு பதிலாக எள், விறகு, எருமையை கட்டும் கயிறு இருந்தது. அதை கண்டதும் எல்லாரும் வியப்புற்றனர்.

இராமன், "அரசே! திலகம் என்றால் எள், காஷ்டம் என்றால் விறகு, மகிஷ பந்தனம் என்றால் எருமை கட்டும் கயிறு. இதன உட்பொருளை வைத்து தான் திலகாஷ்ட மகிஷபந்தனம் என்று சொன்னேன். இதைப்புரிந்து கொள்ளாத புலவர் பயந்து ஓடிவிட்டார்" என்று கூறிச்சிரித்தான். அனைவரும் சிரித்தனர். மன்னர் இராமனை பாராட்டி பரிசளித்தார்.

பிறந்த நாள் பரிசு

மன்னர் கிருஷ்ணதேவராயருக்குப் பிறந்தநாள் விழா. நகரமெல்லாம் தோரணம், வீடெல்லாம் அலங்காரம்! மக்கள் தங்கள் பிறந்த நாள் போல மன்னரின் பிறந்த நாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

முதல்நாள் இரவே வீதிகள் தோறும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், வாண வேடிக்கைகள், அரண்மனையில் வெளிநாடுகளிலிருந்து வந்த தும்துவர்களுக்கு விருந்து ஏகதடபுடலாக நடந்தது.

மறுநாள் அரச சபையில் அரசருக்கு மரியாதை செலுத்துதல் நடந்தது. முதலில் வெளிநாடுகளிலிருந்து வந்த அரசப் பிரதானிகள், தங்கள் நாட்டு மன்னர்கள் அனுப்பிய பரிசுகளைத் தந்தனர்.

பிறகு அரசப் பிரதானிகள், பொதுமக்கள், மன்னருக்கு பரிசளித்து மரியாதை செலுத்தினார்கள். அதன்பிறகு அரசரின் நெருங்கிய நண்பர்கள் தங்கள் பரிசுகளை அளித்தனர். அப்போதுதான் பெரியதொரு பொட்டலத்துடன் தெனாலிராமன் உள்ளே நுழைந்தான். அரசர் உள்பட எல்லாரும் வியப்போடு பார்த்தனர்.

மற்றவர்களிடம் பரிசுகளை வாங்கித் தன் அருகே வைத்த மன்னர், தெனாலிராமன் கொண்டு வந்த பரிசுப் பொட்டலம் மிகப் பெரிதாக இருந்ததால் அவையிலுள்ளவர்கள் ஆவலோடு என்ன பரிசு என்று பார்த்ததால் அந்தப் பொட்டலத்தைப் பிரிக்கும்படி தெனாலிராமனிடம் கூறினார் அரசர்.

தெனாலிராமன் தயங்காமல் பொட்டலத்தைப் பிரித்தான். பிரித்துக் கொண்டே இருந்தான். பிரிக்கப் பிரிக்கத் தாழைமடல்கள் காலடியில் சேர்ந்தனவே தவிர பரிசுப் பொருள் என்னவென்று தெரியவில்லை.

அதனால் எல்லாரும் ஆவலுடன் கவனித்தனர். கடைசியில் மிகச்சிறிய பொட்டலமாக இருந்ததைப் பிரித்தான். அதற்குள் நன்றாகப் பழுத்துக் காய்ந்த புளியம்பழம் ஒன்றிருந்தது.

அவையினர் கேலியாகச் சிரித்தனர்.

அரசர் கையமர்த்திச் சிரிப்பு அடங்கியவுடன், ""தெனாலிராமன் கொடுத்த பரிசு சிறிதாக இருக்கலாம். அதற்கு அவன் கொடுக்கப் போகும் விளக்கம் பெரிதாக இருக்கலாமல்லவா?'' என்று அவையினரைப் பார்த்துக் கூறிவிட்டு தெனாலிராமன் பக்கம் திரும்பி, ""ராமா இந்த சிறிய பொருளைத் தேர்ந்தெடுத்ததின் காரணம் என்ன?'' எனக் கேட்டார்.

""அரசே, ஒரு நாட்டை ஆளும் மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை விளக்கும் பழம் புளியம்பழம் ஒன்று தான். மன்னராக இருப்பவர் உலகம் என்ற புளிய மரத்தில் காய்க்கும் பழத்தைப் போன்றவர். அவர் பழத்தின் சுவையைப் போல இனிமையானவராக இருக்க வேண்டும்.

""அதே நேரத்தில் ஆசாபாசங்கள் என்ற புளியம்பழ ஓட்டில் ஒட்டாமலும் இருக்க வேண்டும் என்பதை விளக்கவே இந்த புளியம்பழத்தைப் பரிசாகக் கொண்டு வந்தேன். புளியம்பழமும் ஓடும்போல இருங்கள்!'' என்றான்.

அவையினர் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மன்னர் கண்கள் பனிக்க ஆசனத்தைவிட்டு எழுந்து தெனாலிராமனைத் தழுவி, ""ராமா எனக்குச் சரியான புத்தி புகட்டினாய். ஒரு பிறந்த நாள் விழாவிற்கு இத்தனை ஆடம்பரம் தேவையில்லை.

""பொக்கிஷப் பணமும் பொது மக்கள் பணமும் வீணாகும்படி செய்து விட்டேன். உடனே விசேடங்களை நிறுத்துங்கள். இனி என் பிறந்தநாளன்று கோயில்களில் மட்டுமே அர்ச்சனை ஆராதனை செய்யப்பட வேண்டும். அவசியமில்லாமல் பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்யக்கூடாது,'' என உத்தரவிட்டார்.

தெனாலிராமனின் துணிச்சலையும் சாதுரியத்தையும் எல்லாரும் பாராட்டினர்.

அரசர் தனக்கு வந்த பரிசுப் பொருள்களில் விலை உயர்ந்தவற்றைத் எடுத்து தெனாலிராமனுக்குப் பரிசாகத் தந்தார்.

அரசியின் கொட்டாவி

திருமலாம்பாள் என்ற அம்மையார் கிருஷ்ண தேவராயர் துணைவியருள் ஒருவர். அவர் அடிக்கடி கொட்டாவி விட்டுக்கொண்டே இருப்பார். அது பழக்கமாகி விட்டது. ஆனால் அரசருக்கோ அது பிடிக்கவில்லை. அன்றிரவு அரசர் ஆசையோடு நெருங்கிச் சென்ற போதும் அவள் கொட்டாவி விட்டுக் கொண்டே இருந்தாள். அப்போது அவள் முகத்தைப் பார்க்கவே மன்னருக்குப் பிடிக்கவில்லை. அன்றிலிருந்து அவளிருக்கும் பக்கம் செல்வதையே மன்னர் தவிர்த்து வந்தார்.

அம்மயாருக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. மிகவும் வருத்தத்துடன் இருந்த அம்மையாரைப் பார்த்த தெனாலிராமன் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

அம்மையாரோ, நான் கொட்டாவி விடுவது பிடிக்காமல் மன்னர் எனது இருப்பிடத்திற்கு வருவதையே நிறுத்திவிட்டார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை" என்று வருந்தினாள்.

தெனாலிராமன் இப்பிரச்சனையைத் தீர்ப்பதாக அம்மையாருக்கு வாக்குகொடுத்துச் சென்றான்.

ஒரு நாள் அரசு அதிகாரிகள் சிலர் அரசரைக் காண வந்தனர். அப்போது தெனாலிராமனும் அரசருடனிருந்தான். அந்த அதிகாரிகள் நாட்டில் பயிர்வளத்தை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றி அரசருடன் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

தெனாலி ராமனோ அவர்களது பேச்சினுள் புகுந்து "பயிர் நன்றாக வளர வேண்டுமானால் யாரும் கொட்டாவி விடக்கூடாது" என்றான்.

மன்னரும் மற்றவர்களும் தெனாலிராமனை வினோதமாகப் பார்த்தனர். தெனாலிராமனோ விடாமல் "விவசாயம் செய்பவர்கள் யாரும் வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடவே கூடாது. அப்போது தான் பயிர் நன்றாக வளரும்" என்றான்.

மன்னருக்கு கோபம் வந்துவிட்டது. "ராமா, இது என்ன வினோதம், விவசாயத்திற்காக வாழ்நாள் முழுவதும் கொட்டாவி விடாமல் இருக்கமுடியுமா?" என்றார்.

"வேறென்ன மன்னா, உங்கள் முன்னால் கொட்டாவி விடும்போது உங்களுக்கு கோபம் வருவதைப் போல, பயிர்கள் முன்னால் கொட்டாவி விட்டால் பயிர்கள் கோபித்துக்கொள்ளாதா? கேவலம் கொட்டாவியால் ஒருவர் வாழ்க்கை நாசம் ஆக வேண்டுமா?" என்று கூறிவிட்டு மன்னரை ஓரக்கண்ணால் பார்த்தார் தெனாலி ராமன்.

மன்னருக்கு தெனாலிராமன் சூசகமாக் என்ன சொன்னார் என்று புரிந்து போனது. அப்போதே கேவலம் கொட்டாவிக்காக தன் மனைவியை கோபித்துக் கொண்டேனே என்று வருந்தினார். தெனாலி ராமன் புத்திசாலித்தனமாக தகுந்த நேரத்தில் அதை புரியவைத்தான் என்பதையும்

எண்ணி மகிழ்ந்தார்.

பின்னர் மகிழ்ச்சியில் திளைத்த அம்மையாரும் மன்னரும் சேர்ந்து, தெனாலிராமனுக்கு பரிசுகளை பல அளித்து மகிழ்ந்தார்கள்.

இராஜாங்க விருந்து

ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.

விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு "இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது" என்றார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். "உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம்

இருக்கிறது" என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக "ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை

உண்பதே தனி சுகம் தான்" என்றார்.

தெனாலிராமனோ "கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்" என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம்

கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். "அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே" என்றார்.

தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா?

ஒரு சமயம் அரபுநாட்டு அரசர் கிருஷ்ணதேவராயருக்கு ஒரு அதிசய ரோஜா செடி ஒன்றை பரிசாக அளித்தார். அதை மன்னர் தனது தோட்டத்தில் நட்டு வைத்தார்.

சிறிது காலத்திற்கு பிறகு அந்த செடியில் இருந்து ரோஜா மலர்கள் மலர்ந்தன. அங்கு வந்த தெனாலி ராமனின் மகன் அதை பறித்து தனது தாய்க்கு பரிசாக கொடுக்க நினைத்து பூக்களை பறிக்க தொடங்கினான். பூக்களைப் பறித்துக்கொண்டு இருக்கும் போது அரண்மனைக் காவலர்கள் பார்த்துவிட்டனர்.

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயரிடம் காண்பிக்க அழைத்துச் சென்றனர். செல்லும் வழியில் தெனாலி ராமன் காவலர்களை பார்த்து "என்மகனை எங்கே அழைத்துக்கொண்டு செல்கிறிர்கள்?" என்று கேட்டான்.

அவர்களோ! "உங்கள் மகன் ரோஜா பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இப்போது அவனை மன்னரின் பார்வைக்காக அழைத்துச் செல்கிறோம். வேண்டுமென்றால் அவன் கைகளில் உள்ள திருடிய ரோஜா பூக்களை பார்" என்று அவன் கைகளை காண்பிக்கச் செய்தனர்.

தெனாலிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தன் மகனை காப்பாற்ற விரும்பிய தெனாலி சிறுது நேரம் யோசித்து தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி மகன் மேல் போர்த்திவிட்டான்.

இன்று வெயில் அதிகமாக உள்ளது. இந்த துணி என் மகனை காப்பாற்றும் என்று கூறிவிட்டுச் சென்றார்.

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தெனாலிமகன் தந்தை கூறியதை யோசிக்க தொடங்கினான். உடனே ஒவொரு பூக்களாக சாப்பிட ஆரம்பித்தான். துண்டு முடி இருபதனால் அவன் பூக்களை சாப்பிடுவதை காவலர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை

அரண்மனைக் காவலர்கள் தெனாலி ராமனின் மகனை அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னால் அழைத்துச்சென்றனர்.

காவலர்கள் மன்னரை பார்த்து "அரசே! தெனாலி ராமனின் மகன் பூக்களை திருடிய போது அவனை நாங்கள் பிடித்துவிட்டோம். இந்த குற்றத்திற்கு நீங்கள் தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறினர்.

மன்னரும் எல்லாவற்றையும் கேட்டறிந்து, பின்னர் அரசர் காவலர்களை பார்த்து, "திருடிய பூக்கள் எங்கே?" என்று கேட்டார்.

காவலர்கள் மன்னரை பார்த்து, "பூக்கள் அனைத்தும் அவன் கைகளில் தான் அரசே உள்ளது" என்று காவலர்கள் கூறினர்.

அரசர் தெனாலி மகனை பார்த்து, "உன் கைகளை காட்டு" என்று கூறினார்.

அவனும் வெறும் கைகளை காண்பித்தான். அவன் கைகளில் எதுவும் இல்லை.

மன்னர் தெனாலிமகனை பார்த்து, "நீ பறித்த பூக்கள் எங்கே?" என்று கேட்டார்

அவனோ! மன்னரைப் பார்த்து, "நான் பூக்கள் எதுவும் பறிக்க வில்லை. என் தந்தைக்கு அவமானம் ஏற்படுத்தவே இந்த இரண்டு காவலர்களும் இப்படி செய்தார்கள்" என்று கூறினான்.

மன்னரும் அந்த இரண்டு காவலர்களையும் திட்டி அனுப்பிவிட்டார்.

தெனாலியும் அவன் மகனும் எப்படியோ தப்பித்தோம் என்று சிரித்துக்கொண்டே வீட்டிற்கு புறப்பட்டனர்.

தெனாலிராமன் விற்ற குதிரை

ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

வைத்திய செலவுக்கு தெனாலி ராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் “பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்” என்று கேட்டார்.

தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.

பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலி ராமனை சந்திக்கப் புறப்பட்டான்.

தெனாலிராமனைப் பார்த்து “என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு” என்றான். தெனாலி ராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கும் சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

“சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா” என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான்.

சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து “உன் குதிரை என்ன விலை” என்று கேட்டான்.

அதற்கு தெனாலி ராமனோ “குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்” என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான்.

பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். “குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே” என்றான்.

அதற்கு தெனாலிராமன் “ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்டேன் நீ வாங்க மாட்டேன் என்கிறாயே! இது என்ன நியாயம்” என்றான்.

சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது.

மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.

தெனாலிராமனும் கத்தரிக்காயும்

ஒரு முறை தெனாலிராமனுக்கு கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அதீத விருப்பம் ஏற்ப்பட்டது. அரண்மனைத் தோட்டத்தில் பிஞ்சு கத்திரிக்காய் அதிகமாக விளைந்திருப்பதைக் கேள்விப்பட்டார்.

ஆனால் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது. நாம் உபயோகிக்கக் கூடாது என்ன செய்வது. என்னவென்றாலும் இன்று கத்தரிக்காய் சாப்பிட்டே தீருவது என்று தீர்மானித்த தெனாலிராமன் ஒரு ஆலோசனை செய்தார். காவலாளிக்கு தெரியாமல் கத்தரிக்காய் அனைத்தையும் சத்தமில்லாமல் பறித்துக் கொண்டார்.

வீட்டுக்கு சென்று மனைவியிடம் "இன்றைக்கு விதவிதமாய் கத்தரிக்காய் பதார்த்தம் செய்" என்றார். தெனாலிராமன் கொண்டுவந்த கத்தரிக்காய் அரண்மனை தோட்டத்திலிருந்து பறித்து வந்தது என்று தெரிந்ததும் தெனாலிராமனது மனைவி மிகவும் கலக்கமடைந்தார்.

தெனாலிராமன் "நீ பயப்படாதே! எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமைத்து வை" என்றார். அவரது மனைவியும் மறுபேச்சு பேசாமல் கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு என்று வித விதமாக செய்து வைத்தார். இருவரும் சாப்பிடத்தயாரானார்கள்.

தெனாலிராமன் தனது மகனை எங்கே என்று கேட்டார். அவன் வெளித்தின்னையில் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதை மனைவி தெரிவித்தார். உடனே தெனாலிராமனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

அவர் ஒரு குடம் நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து தின்னையில் படுத்திருந்த தனது மகன் மீது ஊற்றினார். பதறியடித்து எழுந்த மகனைப் பார்த்து "வெளியே மழை பெய்கிறது, உள்ளே போய் படுத்துக் கொள்" என்று கூறினார்.

அரைத்தூக்கத்தில் இருந்த மகனும் அவர் சொன்னதைக் கேட்டவுடன் வேக வேகமாக வீட்டுக்குள் சென்றான். படுத்துறங்கப் போன்றவனை தெனாலிராமன் எழுப்பி "கத்தரிக்காய் சாப்பாடு ருசியாய் இருக்கிறது, சாப்பிட்டு விட்டு தூங்கு" என்று கூறினார்.

அவனும் தூக்கக்கலக்கத்துடனேயே நன்றாகச் சாப்பிட்டான். பிறகு எல்லோரும் படுத்து நிம்மதியாய் தூங்கினார்கள்.

மறுநாள், தெனாலிராமன் அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் பறித்த விஷயம் எப்படியோ மன்னருக்குத் தெரிந்து போனது.

மன்னர் தெனாலிராமனை அழைத்து வரச் சொன்னார். நடக்கப் போவதை யூகித்துக் கொண்ட தெனாலிராமனும் மன்னர் முன் சென்று நின்றார்.

மன்னர் தெனாலியைப் பார்த்து கேட்டார்" தெனாலிராமா! அரண்மனைத் தோட்டத்தில் கத்தரிக்காய் எல்லாம் காணாமல் போனது உனக்குத் தெரியுமா ? என்றார். தெனாலிராமனோ எதுவும் அறியாதது போல "என்ன? அரண்மனைத் தோட்டத்துக் கத்தரிக்காய் காணாமல் போனதா?" என்றார்.

மன்னரோ விடுவதாய் இல்லை. "ஒன்றும் அறியாதது போல் கேட்கிறாய் ராமா! நீ தான் கத்தரிக்காய் அனைத்தயும் பறித்ததாக நான் கேள்விப்பட்டேன். உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலி ராமனோ "இல்லவே இல்லை" என்று சாதித்தார்.

மன்னர் உடனே தெனாலிராமா "நீ உனது மகனை அழித்துவா. குழந்தைகள் பொய் சொல்லாது. நேற்று நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள் என்பதை நான் உன் மகனை விசாரித்து தெரிந்து கொள்கிறேன். " என்றார்.

தெனாலிராமனது மகனை காவலாளிகள் அழைத்து வந்தார்கள். மன்னன் சிறுவனிடம் அன்பாக விசாரித்தார். "தம்பி நேற்று உஙகள் வீட்டில் என்ன சாப்பிட்டீர்கள்?" உடனே சிறுவன் சொன்னான் "கத்தரிக்காய் குழம்பு, கத்தரிக்காய் கூட்டு மற்றும் சாதம் எல்லாம் சாப்பிட்டோம். மிகவும் ருசியாக இருந்தது."

உடனே மன்னன் தெனாலிராமனைப் பார்த்தார். இப்போது மாட்டிக் கொண்டாயா தெனாலிராமா. இபோதாவது உண்மையை ஒத்துக் கொள்" என்றார். தெனாலிராமனோ விடாப்பிடியாக மறுத்தார். "மன்னா, இவன் இரவில் கனவு கண்டு அதை உளறுகிறான். நன்றாக விசாரியுங்கள். நீங்கள் நம்பும்படியாக அவன் கூறினால் நான் உண்மை என‌ ஒத்துக் கொள்கிறேன்". என்றார்.

மன்னன் சிறுவனைப் பார்த்து மீண்டும் கேட்டார். "குழந்தாய் நேற்று உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்று விளக்கமாகச் சொல்" சிறுவனோ நேற்று இரவு ஜோ வென்று மழை பெய்ததா! அப்பா என்னை வீட்டுக்குள் கூட்டிக் கொண்டு போனாரா...! அப்போ கத்தரிக்காய் வைத்து சாப்பிடச் சொன்னார்களா...! சாப்பிட்டிவிட்டு பிறகு நான் உறங்கி விட்டேன்" என்றான்.

தெனாலிராமனோ நேற்று மழை பெய்ததா மன்னா! நீங்களே சொல்லுங்கள் என்று மன்னரை கேள்வி கேட்டார்.

மன்னர் குழம்பிப் போனார். அவையில் இருந்தவர்களை விசாரித்தார். நேற்று நகரத்தின் எந்தப்பகுதியிலும் மழை பெய்யவில்லை என்று எல்லோரும் சொன்னார்கள்.

மன்னரும் சரி தெனாலிராமன் சொன்னதைப்போல குழந்தை கனவில் கண்டதைத்தான் சொல்கிறான் என்று சொல்லி தெனாலிராமனையும் விடுவித்தார். மனதிற்குள் மகிழ்ந்து கொண்டே தெனாலிராமனும் இடத்தை காலிசெய்தார்.

பிறுதொருநாள் மன்னரிடம் தாம்தான் கத்தரிக்காயை திருடியதாக ஒத்துக் கொண்டு நடந்தவைகளை சொல்ல மன்னர் ஆச்சரியமாத்துடன் சிரித்து மகிழ்ந்தார். பிறகு தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி பல பரிசுகளை அளித்து மகிழ்ந்தார்.

உலகிலேயே வெண்மையான பொருள் எது?

ஒருசமயம், தெனாலிராமன் அரசவையில் இருந்தபோது, தூக்கம் கண்ணைச் செருகியது. அதைக் கண்டு உறுப்பினர்கள் சிரித்து விட்டனர்.

அப்போது அமைச்சர், “அரசே! தெனாலிக்கு வயதாகி விட்டது. ஓய்வு கொடுங்கள்” என்றார். அரசரிடம் பதில் இல்லை.

மறுநாள் அரசர், “என் மனதில் ஒரு கேள்வி, உலகிலேயே வெண்மையான பொருள் எது? இதற்குச் சரியான பதிலை நீங்கள் சொல்லி விட்டால், தெனாலியை ஓய்வு கொடுத்து அனுப்பி விடுவேன்” என்றார்.

அமைச்சர், “வெள்ளி நகை தான்...” என்றார்.

அரசகுரு, “பால் தான்!'' என்றார்.

சிலர், “சம்பா மலர்!'” என்றனர்.

வேறு சிலர், “மல்லிகை தான்”' என்றனர்.

இன்னும் சிலர், “சுண்ணாம்பு தான்!” என்றனர்.

அரசர் திருப்தி அடையவில்லை. தெனாலியிடம் கேட்டார்.

“நாளைக்குக் கூறுகிறேன்” என்றார் தெனாலி.

மறுநாள் தெனாலி வெள்ளி நகை, கொஞ்சம் பால், சம்பா மலர், மல்லிகை மலர்கள் ஆகியவற்றை வரவழைத்தார். சுண்ணாம்பும் வந்தது.

பிறகு ஒரு பெரிய அறையில் தரை விரிப்பின் மீது அவற்றை வைத்து, கதவு மற்றும் ஜன்னல்களைச் சாத்தித் திரையிட்டார்.

வெளியில் வந்து, “அரசே! இவர்களிடம் உள்ளே போய் அவரவர்கள் வெண்மை என்று கருதும் பொருளை எடுத்து வரச் சொல்லுங்கள்...” என்றார்.

அனைவரும் உள்ளே போயினர். அவர்களுக்கு உள்ளே இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒருவருக்குப் பால் பாத்திரம் காலில் இடறி, பால் தரையில் கொட்டியது. இன்னொருவர் காலில் நகைகள் இடறின. வேறொருவர் பூக்களை மிதித்து விட்டார். ஒரு பாத்திரத்தில் இருந்த சுண்ணாம்பு கவிழ்ந்தது.

மூவரும் பதறி, ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டனர்.

அதே சமயம் தெனாலிராமன் அறையில் மேற்புறக் கதவைத்திறந்தார். அறையில் ஒளி பரவியது. அப்போது அங்கிருந்த பொருட்கள் பளிச்சென்று தெரிந்தன.

அச்சமயம், அரசர் கிருஷ்ணதேவராயர் உள்ளே வந்தார்.

உடனே தெனாலிராமன், “அரசே! என்னுடைய பதில் இப்போது உங்களுக்கு விளங்கியிருக்குமே! உலகில் எல்லாவற்றையும் விட வெண்மையான பொருள் பாலோ, வெள்ளி நகையோ, சுண்ணாம்போ அல்லது மலர்களோ அல்ல. அப்படியிருந்தால், இருட்டறையில் அவை பளிச்சிட்டிருக்க வேண்டுமே! ஏன் கண்ணுக்குத் தெரியவில்லை? எனவே, உலகில் வெண்மையான பொருள் சூரியனின் பிரகாசம் மட்டும்தான். அதனால்தான் உலகின் மற்ற எல்லாப் பொருள்களும் பிரகாசிக்கின்றன” என்றார். அதைக் கேட்ட அரசர், மகிழ்ச்சியடைந்து, தெனாலியை வாரி அணைத்துக் கொண்டார்.

சபையினரிடம் அரசர், “தெனாலிராமன் நமக்கு ஏன் இத்தனை பிரியமானவனாக இருக்கிறான் என்பதை இப்போது நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்களே...?” என்றார்.

“தெனாலிக்கு ஓய்வு கொடுத்து அனுப்புங்கள்” என்று யோசனை கூறியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போயினர்.

தங்க மஞ்சள் குருவி!

விஜய நகர் விழா கோலம் பூண்டிருந்தது! அரச உற்சவம்! அதில் கலந்துகொள்ள அண்டை நாட்டு அரசன் விஜயவர்தனர் வந்தார். விழா முடிந்த பிறகும் சில தினங்கள் விஜயநகரில் தங்கினார்.

ஒருநாள் அரசர் அவரிடம், "அரசே நான் கேள்விப்பட்டேனே...? தங்கள் அவைப் புலவர் தெனாலிராமன் மிகவும் சாதுரியசாலியாமே! அவரிடம் சொல்லி, எனக்குக் காலையில் தங்கமஞ்சள் நிறத்திலும், நடுப்பகலில் சிவப்பு நிறத்திலும், இரவில் ஏழு வர்ணங்களிலுமாக உருமாறும் அற்புதக் குருவி ஒன்றைக் கொண்டு வந்து தரச் சொல்லுங்களேன்...'' என்றார்.

மேலும், "அது சில சமயம் மூன்று காலாலும், சில சமயம் இரட்டைக் காலாலும், பிறகு ஏழு இறக்கை கொண்டு வானில் பறக்கவும் வேண்டும்'' என்றார்.

அரசர் உடனே தெனாலியை அழைத்து, "விரைவில் அத்தகைய குருவியைக் கொண்டு வா...'' என்று உத்தரவிட்டார்.

அதைக் கேட்டுத் தெனாலிராமனுக்குத் தலை சுற்றியது. அத்தகைய பறவை பற்றி அவர் ஒரு போதும் கேள்விப்பட்டது கூட இல்லை.

ஆனால் சிரித்தவாறே, "சரி.... அரசே! நாளைக்கு நான் அத்தகைய பறவையோடு வருகிறேன்'' என்றார்.

மறுநாள் தெனாலி, சபைக்குத் தாமதமாக வந்தார். அவர் நிலைமை மிக மோசமாக இருந்தது. கிழிந்த உடைகள். அதில் புற்களும், முட்களும், மண்ணும் ஒட்டியிருந்தன. கையில் குருவி எதுவும் இல்லாத ஒரு பறவைக் கூண்டு.

அவர் அரசரிடம், "என்ன சொல்வேன் அரசே! அதிசயமான கதை நடந்து விட்டது. அந்தக் குருவி கையில் கிடைத்து விட்டது. நானும் அதைக் கூண்டில் அடைத்து விட்டேன். அதை இங்கு எடுத்து வரும்போது, அது தனது மாயமான ஏழு இறக்கைகளை விரித்துப் பறந்து சென்று விட்டது. காட்டில் அதைத் துரத்திக் கொண்டு வெகுதூரம் சென்று விட்டேன். அது மீண்டும் என் கையில் சிக்கவில்லை'' என்றார்.

தொடர்ந்து, சற்று தூரத்தில் பறந்து சென்றவாறே அது என்னிடம் சொல்லிற்று, "அரசரிடம் போய்ச் சொல்... காலையாகிற போதோ அல்லது இரவாகிறபோதோ அல்லது நடுப்பகல் ஆகிறபோதோ, வெளிச்சமோ இருட்டோ இல்லாத போது, நானே எனது ஏழு இறக்கைகளால் பறந்து, திரும்ப வந்து விடுகிறேன்... என்றது'' என்றார்.

அதைக் கேட்டதும் அரசருக்கு மட்டுமல்ல, அண்டை நாட்டு மன்னர் விஜயவர்தனருக்கும் தலை சுற்றியது.

அப்படிப்பட்ட சமயம் எங்கு உண்டாகும்? "காலை ஆகாமல், நடுப்பகல் ஆகாமல், இரவு ஆகாமல் வெளிச்சம், இருட்டு ஆகும் சமயம் எது?'' என்று அனைவரும் வியப்படைந்தனர்.

அதைக் கேட்டு விஜயவர்தனர், அரசர் இருவரும் சிரித்து விட்டனர்.

விஜயவர்தனர் சொன்னார், "தெனாலியின் சாதுரியம் பற்றி இதற்கு முன்பு கேள்விப்பட்டுள்ளேனே தவிர, இப்போது தான் நேரில் பார்த்தேன்...'' என்று புகழ்ந்தார்.

கருப்பங்கழி!

விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார். இதைப் பார்த்த மற்ற அரசவையினருக்கு தெனாலி மீது பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி, “அரசே! எங்களிடம் என்ன குறை? நீங்கள் ஏன் எங்களை விடத் தெனாலிக்கு அதிக முக்கியத்துவம் தருகிறீர்கள்?'' என்று கேட்டனர். இதற்கு பதில் அரசரின் சிரிப்புத்தான்.

ஒருநாள், தெனாலி விடுப்பில் சென்றிருந்தார். அரசர், அமைச்சர், சேனாதிபதி முதலானோர் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றனர். பேசிக் கொண்டே ஒரு கிராமத்தை அடைந்தனர். ஓரிடத்தில் விவசாயிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தார் அரசர். அவர்களிடம் சென்று, “நாங்கள் வெளிநாட்டினர், உங்களை இந்நாட்டு அரசர் சரியாகக் கவனித்துக் கொள்கிறாரா?'' என்றார்.

உடனே அனைவரும் அரசரைப் புகழ்ந்தனர். பிறகு அரசர் ஒரு முதிய விவசாயியிடம் அதே கேள்வியைக் கேட்டார். உடனே அவர் சட்டென்று அங்கிருந்து எழுந்து எங்கோ போய்விட்டுப் பிறகு திரும்பி வந்தார்.

அவர் கையில் ஒரு கருப்பங்கழி! வந்ததும் அதை அவர் இரு கையாலும் உடைத்தவாறு, “சகோதரா! எங்கள் அரசர் இதைப் போன்றவர்'' என்றார். அவரது பதில் அரசருக்கு ஆச்சரியத்தைத் தந்தது. அமைச்சரைத் திரும்பிப் பார்த்தார்.

அமைச்சரோ “அரசே! அவர் உங்களை அவமானப் படுத்துகிறார். அவர், "எங்கள் அரசர் பலவீனமானவர்; எவரும் அவரை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பதைக் குறிக்கக் கரும்பை ஒடித்துக் காட்டினார்'' என்றார்.

இதைக்கேட்டதும், அரசருக்கு ஆத்திரம் வந்தது. அவர் ஏதோ கூற வந்தார்.

அப்போது பின்னாலிருந்து தலைப்பாகை கட்டிய ஒருவர் எழுந்து, “கோபப்படாதீர்கள் தயாநிதியே! இப்போது கிழவர் கரும்பை உடைத்து, அரசர் கரும்பு போல் மேலிருந்து கசப்பும், இடையில் இனிப்பும் உடையவர் என்பதை உணர்த்தத்தான் இப்படி செய்தார்'' என்று கூறிக் கொண்டே தனது பொய்த் தாடியை எடுத்தார். அது வேறு யாருமல்ல! தெனாலிராமன்தான்.

“அரசே! என்னைக் கண்டு பிடிக்க முடியாவிட்டாலும், நான் உங்களது பணியாள். என்னால் உங்களை விட்டு எப்படி இருக்க முடியும்?'' என்றார். அதைக் கண்ட அரசர் சிரித்துவிட்டார். தெனாலியை வாரி அணைத்துக்கொண்டு, “நான் உன்னிடம் பிரியம் வைத்திருப் பதற்குக் காரணமே இதுதான்'' என்று புகழ்ந்தார்.

கேட்டுக் கொண்டிருந்த அமைச்சர், ராஜகுரு மற்றும் சேனாதிபதிக்கு அவமானமாகப் போய்விட்டது. அதன்பிறகு அரசவையில் தெனாலியின் மதிப்பு மேலும் அதிகரித்து விட்டது.

நன்றி தினமலர்!

மோதிரம்

விஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர்.

அப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், “தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது?” என்றார்.

அது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, “தெனாலிராமா! வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்” என்றார்.

“அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை! எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...” என்றார்.

“அதற்கென்ன... அப்படியே செய்யலாம்...!” என்று அரசர் ஏற்றுக் கொண்டார்.

“அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்” என்றார் தெனாலிராமன்.

ஏன்...? எதற்கு? என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார்.

பெற்றுக்கொண்டே தெனாலிராமன், “அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன்” என்றார்.

மோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, “யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்...” என்றார்.

அடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அதனுள் எப்படி இறங்கி அதை எடுப்பது? அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை.

அதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, “தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...!” என்றார்.

அதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார்.

அரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார்.

தொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது.

மகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், “மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது” என்றார்.

அமைச்சர் வெட்கித் தலைகுனிந்தார்.

தென்னை மரம்!

அரசர் கிருஷ்ணதேவராயரின் அவைக்கு ஒரு நபர் வந்தார்.

அவர் அரசரிடம், “அரசே! என்னுடைய வயலும் பக்கத்து வீட்டுக்காரர் வயலும் அருகருகில் உள்ளன. இரண்டுக்கும் இடையில் உள்ள வரப்பில், ஒரு தென்னை மரம் உள்ளது. பக்கத்து வீட்டுக்காரர் அதை எனக்கு விற்று விட்டார். நான்தான் அதை நன்றாகப் பராமரித்து வருகிறேன். இன்று அவர் என்னைத் தேங்காய் பறிக்கக் கூடாது என்றார். இப்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டு விட்டாராம். மரம் திரும்ப அவருக்கு வேண்டுமாம்...” என்று முறையிட்டார்.

அதைக் கேட்டு அவையினர் அனைவரும் திடுக்கிட்டனர். அமைச்சர் சொன்னார். “அந்த மனிதாபிமானம் அற்ற மனிதரைக் கைது செய்து வந்து சிறையில் அடைக்க வேண்டும்” என்றார்.

அதற்குள் சேனாதிபதி, அந்த நபரைக் கைது செய்து வரத் தயாராகி விட்டார்.

அப்போது அரசர் "என்ன செய்யலாம்?" என்று கேட்பதைப் போல் தெனாலிராமனைப் பார்த்தார்.

தெனாலிராமன் புரிந்து கொண்டு, “தாங்கள் அனுமதி தந்தால், இதற்கான தீர்வை நாளைக்குத் தள்ளி வைத்துக் கொள்ளலாம்...” என்றார்.

அரசர், “சரி” எனவே, தெனாலி அந்த நபரிடம், “நாளைக்கு உன் பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து வா...” என்று அவனை அனுப்பி விட்டார்.

மறுநாள் அந்த நபரும், பக்கத்து வீட்டுக்காரனும் சபைக்கு வந்தனர்.

இருவரிடமும் நன்கு விசாரித்த பிறகு தெனாலிராமன் சொன்னார்.

“அப்படியானால் நீ உன் மரத்தைத் திரும்ப எடுத்துக் கொள்ள விரும்புகிறாய் இல்லையா?” என்றார்.

அதற்கு அவன், “ஆம் ஐயா!” என்றான்.

“சரி, நீ அவனுடைய பணத்தைத் திரும்பக் கொடுத்துவிடு...” என்றார் தெனாலிராமன்.

அவனும் பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டான்.

சபையினருக்கு ஒன்றும் புரியவில்லை. “தெனாலி ஏன் இப்படியெல்லாம் செய்கிறார்?” என்று திகைத்தார்.

பிறகு தெனாலி, மரத்தை வாங்கியவரிடம், “சரி... இன்றிலிருந்து அந்த மரம் உன்னுடையது இல்லை...” என்றார்.

அந்த மனிதரிடம் ஏமாற்றம்.

அப்போது தெனாலிராமன் தொடர்ந்து, “இன்னொரு விஷயம்... அந்த மரம் நீ வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே அதை நீ திரும்பக் கொடுத்து விட வேண்டும்...” என்று கூறி விளக்கினார்.

“அதாவது நீ மரத்தை அவரிடம் வாங்கும்போது அம்மரம் காய்க்கத் தொடங்கவில்லை. ஆகவே, அதைத் திரும்ப ஒப்படைப்பதற்கு முன்பு எல்லாக் காய்களையும் பறித்துக் கொண்டுவிடு...” என்றார் வாங்கியவரிடம்.

திரும்பப் பெற்றவரிடம், “காய் இல்லாத மரத்தைத்தானே நீ விற்றாய்...? ஆகவே, என்றைக்கும் காயில்லாத மரம்தான் உன்னுடையது. அதில் இனிமேல் காய்க்கும் காய்கள் எல்லாம் மரத்தைத் திரும்பக் கொடுத்தவரையே சேரும்... அதை அவர் பறித்துக்கொள்ள அவ்வப் போது நீ அனுமதிக்க வேண்டும் தடுக்கக் கூடாது; நீயும் பறித்துக் கொள்ளக் கூடாது...” என்றார்.

தெனாலியின் இத்தீர்ப்பை அரசர் ஆமோதித்தார்.

திரும்பப் பெற்றவன் முகத்தில் ஏமாற்றம்.

புகார் கொடுத்த நபர் மகிழ்ச்சியுடன் எல்லாரையும் குறிப்பாக, தெனாலிராமனை வணங்கி விட்டு விடைபெற்று சென்றார்.

கூன் வண்ணான்

ஒரு போலிச்சாமியார் ஒருவன் விஜயநகரத்துக்கு வந்து சேர்ந்தான். அவன் மக்களுக்கு போதை மருந்தை விற்று பணத்தை ஏராளமாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். போதை மருந்தை உட்கொண்ட மக்கள் பலர் பைத்தியம் ஆனார்கள். பலர் மாண்டார்கள்.

இச்செய்தி தெனாலிராமனுக்கு எட்டியது. ஆகையால் போலிச் சாமியாரைத் தொலைத்துக் கட்ட முடிவு செய்தான். அதன்படியே சாமியாரை சந்தித்து அவனுடன் நட்புக் கொண்டான். தகுந்த சமயம் பார்த்து சாமியாரைக் கொன்று விட்டான்.

இச்செய்தி மன்னனுக்கு எட்டியது. தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பி அழைத்துவரச் செய்தார். ஏன் சாமியாரைக் கொன்றாய் என்று கேட்டார். அதற்குப் போதை மருந்தால் பலர் பைத்தியம் பிடித்து மாண்டனர். ஆகையால் தான் கொன்றேன் என்றான்.

போலிச்சாமியார் தவறு செய்து இருந்தாலும் அவனைக் கொல்ல உனக்கு ஏது அதிகாரம்? அதை என்னிடமல்லவா தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவித்திருந்தால் நானே அந்தப் போலிச் சாமியாருக்குத் தக்க தண்டனை கொடுத்திருப்பேன்.

இவ்விஷயத்தில் நீ தன்னிச்சையாக செயல் பட்டதற்கு உனக்கு மரணதண்டனை விதிக்கிறேன் என மன்னர் தீர்ப்புக் கூறினார்.

உடனே தன் ஆட்களை அழைத்து ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் ஒரு குழியை வெட்டி அதில் தெனாலிராமனை கழுத்தளவு புதைத்து யானையை விட்டு தலையை இடறுமாறு பணித்தார்.

அவ்வாறே தெனாலிராமனும் குழியில் கழுத்தளவு புதைக்கப்பட்டான். பின் யானையைக் கொண்டு வர பணியாளர்கள் சென்று விட்டனர்.

அப்போது சிலகழுதைகளை ஓட்டிக்கொண்டு ஒரு கூன் வண்ணான் வந்து கொண்டிந்தான்.

ஒரு மனிதன் பூமிக்குள் கழுத்தளவு புதையுண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். பின் தெனாலிராமனிடம் வந்து ஐயா, தாங்கள் ஏன் இவ்வாறு புதையுண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு மிக நீண்ட நாட்களாகவே முதுகு கூன் விழுந்து விட்டது. அதனால் மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தேன். நேற்று ஒரு வைத்தியரை ஆலோசனை கேட்டேன். அவர்தான் ஒருநாள் முழுவதும் இவ்வாறு இருந்தால் கூன் நிமிரிந்து விடும் என்று சொன்னார். நான் குழியில் புதையுண்டு ஒருநாள் ஆகப் போகிறது. ஆகையால் மண்ணைத் தோண்டி என்னை மேலே எடு என்றான்.

அதன்படியே கூன் வண்ணானும் மண்ணைத் தோண்டி தெனாலிராமனை மேலே தூக்கி விட்டான். இப்போது தெனாலிராமனைப் பார்த்தான். அவன் முதுகு கூன் இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றான். இதை உண்மை என்று நம்பிய கூன் வண்ணான் அதே குழியில் அவனைக் கழுத்தளவு புதைக்கச் சொன்னான். தெனாலிராமனும் கூன் வண்ணானை அவ்வாறே செய்தான்.

உடனே தெனாலிராமன் அவ்விடத்தைவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். சிறிது நேரத்தில் பணியாட்கள் யானையுடன் அங்கு வந்தனர். யானையை விட்டு குழியில் புதையுண்ட மனிதனின் தலையை இடறச் செய்தனர். கூன் வண்ணான் தலை சின்னா பின்னமாகியது.

அச்சமயத்தில் தன் அரண்மனை அதிகாரிகளும் போலிச் சாமியாரைக் கொன்றது நியாம்தான் அதனால் தெனாலிராமனைக் கொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.

அந்நேரத்தில் பணியாட்களும் அங்கு வந்து "தெனாலிராமனின் தலையை யானையை விட்டு இடறிவிட்டோம்" என்று தெரிவித்தனர்.

தெனாலிராமனின் மரணத்துக்கு மன்னர் வருந்திக் கொண்டிருக்கையில் மனனர் முன் தெனாலிராமன் தோன்றினான். தெனாலிராமனைக் கண்ட மன்னர் மகிழ்ந்தார். நீ யானையால் இறந்ததாகப் பணியாட்கள் தெரிவித்தார்களே.. பின் எப்படி உயிரோடு வந்தாய் என்று வினவினார்.

அதற்குத் தெனாலிராமன் நடந்தவற்றை விவரமாகக் கூறினான். மன்னரும் அவனுடைய சாமர்த்தியத்துக்கு மனமாரப் பாராட்டி பரிசு வழங்கினார்.

மறுபிறவி

தெனாலிராமன் கொலை செய்யப்பட்ட செய்தி ஊர் முழுவதும் தீ போல் பரவியது. அப்போது சில அந்தணர்கள் மன்னரைச் சந்தித்தனர். நியாயமாக ஒரு பார்ப்பனரைக் கொன்றது மிகக்கொடிய பாவமாகும்.

அவனது ஆவி தங்களுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்றனர். இதைக்கேட்ட மன்னர் கலங்கினார். இதற்குப் பரிகாரம் என்னவென்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தணர்கள் அவன் ஆவி சாந்தி அடைய

அமாவாசை அன்று நள்ளிரவு சுடுகாட்டிற்குச் சென்று பூஜை செய்தால் நலம் என்றனர். உடனே மன்னர் ராஜகுருவை அழைத்து அமாவாசையன்று நள்ளிரவு சுடுகாட்டில் தெனாலிராமன் ஆவிக்கு பூஜை செய்ய உத்தரவு விட்டார்.

இதைக்கேட்ட ராஜகுரு நடுநடுங்கினார். நடுகாட்டில் நள்ளிரவு நேரத்தில் பூஜை செய்வது என்றால் எனக்குப்பயமாக இருக்கிறது என்றார்.

அப்படியென்றால் துணைக்கு சில புரோகிதர்களையும் அழைத்துச் செல்லுங்கள் என மிகக் கண்டிப்புடன் மன்னர் கட்டளையிட்டார். மன்னர் கட்டளையை மீற முடியாத ராஜகுரு பூஜைக்கு ஒத்துக்கொண்டார்.

அமாவாசை அன்று நள்ளிரவு புரோகிதர்கள் சகிதம் சுடுகாட்டிற்குச் சென்று பூஜை நடத்தினார்கள். ராஜகுரு பூஜையின் இறுதியில் அங்கிருந்த மரத்தை மேல் நோக்கிப் பார்த்து தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்மராட்சசனே என்று பலத்த குரலில் அழைத்து எங்களுக்கு ஒரு தீங்கும் செய்யாதே... உன் ஆன்மா சாந்தியடைய பூஜை செய்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே மரத்திலிருந்து ஓர் உருவம் பயங்கர சத்தத்தோடு கீழே குதித்தது.

இதைப்பார்த்த ராஜகுருவும் புரோகிதர்களும் பயத்தால் நடு நடுங்கி அலறி அடித்துக்கொண்டு அரண்மனைக்கு ஓடினார்கள்.

அப்போது நடுநிசி நேரமாதலால் மன்னர் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். இருப்பினும் மன்னரை எழுப்பினார். நடந்தவற்றை நடுக்கத்தோடு கூறினார்.

இதைக் கேட்ட மன்னர் இதற்கு பரிகாரம் காண ஆழ்ந்த யோசனை செய்தார். பின் ஒரு முடிவுக்கு வந்தார்.

தெனாலிராமன் ஆவியாகிய பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்டி நாட்டிற்கு நன்மை உண்டாகச் செய்பவர்களுக்கு ஆயிரம் பொன் பரிசளிக்கப்படும் என்று பறைசாற்றி அறிவிக்கச் செய்தார்.

இதைக் கேட்ட நாட்டு மக்கள் யாரும் பிரம்மராட்சசனை ஒழித்துக்கட்ட முன் வரவில்லை. சில நாட்களுக்குப்பின் ஒரு துறவி மன்னரைக்காண வந்தார். மன்னரும் அந்தத்துறவியிடம் தெனாலிராமனின் ஆவியாகிய பிரம்ம ராட்சசனை ஒழித்துக் கட்டும்படி வேண்டினார்.

இதைக்கேட்ட துறவியர், மன்னர் பெருமானே, கவலையை விடுங்கள், பிரம்மராட்சசனை என்னால் முடிந்தளவு ஒழித்துக்கட்ட முயற்சிக்கிறேன். இது நிரந்தரமான ஏற்பாடாக இருக்காது. மீண்டும் தெனாலிராமன் உயிர் பெற்று வந்தால் தான் பிரம்மராட்சசனுடைய அட்டகாசம் சுத்தமாக குறையும் என்றார்.

அப்படியானால் தங்களால் மீண்டும் தெனாலிராமனை உயிர்ப்பிக்க முடியுமா? என வினவினார் மன்னர்.

ஓ... தாராளமாக என்னால் முடியும் என்றார் துறவு. மன்னர் மகிழ்ந்து தாங்கள் தெனாலிராமனை உயிர்ப்பித்துக் காட்டுங்கள். அதுவே எனக்குப் போதும் என்றார்.

உடனே துறவியார் தான் அணிந்திருந்த வேடத்தைக் கலைத்தார். நான்தான் தெனாலிராமன். துறவி வேடத்தில் வந்தேன் என்றார். இதையறிந்த மன்னர் மகிழ்ந்து தெனாலிராமனைக் கட்டித் தழுவிக் கொண்டார். பின் ஆயிரம் பொன் பரிசளித்தார்.

கிருஷ்ண லீலை

ஒருநாள் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் கிருஷ்ண லீலா நாடக நாட்டியம் நடைபெற ஏற்பாடு செய்திருந்தார். தெனாலிராமனைத் தவிர மற்ற எல்லா முக்கியப்பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசியும் மற்றும் சில பெண்களும் கலந்து கொள்வதால் தெனாலிராமன் இருந்தால் ஏதாவது கோமாளித்தனம் செய்து நிகழ்ச்சியை நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவான் என எண்ணி தெனாலிராமனை மட்டும் நாடக அரங்கினுள் விட வேண்டாமென்று வாயிற்காப்போனிடம் கண்டிப்புடன் சொல்லி விட்டார் மன்னர்.

இதை அறிந்தான் தெனாலிராமன் எப்படியாவது அரங்கத்தினுள் சென்று விடுவது என தீர்மானித்துக் கொண்டான்.

நாடகம் நடைபெறும், அரங்கின் வாயிலை நெருங்கினான் தெனாலிராமன். உள்ளே செல்ல முற்பட்டான்.

வாயில்காப்பானோ அவனை உள்ளே விட மறுத்து விட்டான். மீண்டும் மீண்டும் கெஞ்சினான். வாயிற்காப்போன் மசியவில்லை.

இந்நிலையில் தெனாலிராமன் ஒரு தந்திரம் செய்தான். “ஐயா, வாயிற்காப்போரே என்னை உள்ளே விட்டால் என்னுடைய திறமையால் ஏராளமான பரிசு கிடைக்கும். அதில் பாதியை உனக்குத் தருகிறேன்” என்றான்.

இதைக் கேட்ட வாயிற்காப்பான் முதலில் சம்மதிக்காவிட்டாலும் பின்னர் கிடைப்பதில் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டான்.

அரங்கத்தினுள் செல்ல வேண்டுமானால் மீண்டும் இன்னொரு வாயிற்காப்போனை சமாளிக்க வேண்டியிருந்தது. அவனும் தெனாலிராமனை உள்ளே விட மறுத்தான். முதற் வாயிற் காப்போனிடம் சொல்லியதையே இவனிடமும் சொன்னான். இவனும் பாதி பரிசு கிடைக்கிறதே என்று மகிழ்ந்து அவனை உள்ளே விட்டுவிட்டான்.

ஒருவருக்கும் தெரியாமல் தெனாலிராமன் ஓர் மூலையில் போய் உட்கார்ந்து கொண்டான்.

அப்போது கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவன் வெண்ணை திருடி கோபிகைகளிடம் அடி வாங்கும் காட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே மூலையில் இருந்த தெனாலிராமன் பெண் வேடம் அணிந்து மேடையில் தோன்றி கிருஷ்ணன் வேடம் போட்டு நடித்தவனை கழியால் நையப் புடைத்து விட்டான். கிருஷ்ண வேடதாரி வலி பொறுக்கமாட்டாமல் அலறினான்.

இதைப்பார்த்த மன்னர் கடுங்கோபமுற்று மேடையில் பெண் வேடமிட்டுள்ள தெனாலிராமனை அழைத்து வரச்செய்தார் பின் “ஏன் இவ்வாறு செய்தாய்” என வினவினார். அதற்குத் தெனாலிராமன் “கிருஷ்ணன் கோபிகைகளிடம் எத்தனையோ மத்தடிபட்டிருக்கிறான் இப்படியா இவன் போல் அவன் அலறினான்” இதைக் கேட்ட மன்னருக்கு அடங்காக் கோபம் ஏற்பட்டது. தெனாலிராமனுக்கு 30 கசையடி கொடுக்குமாறு தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் “அரசே இப்பரிசை எனக்கு கொடுக்க வேண்டாம். ஏனென்றால் எனக்குக் கிடைக்கும் பரிசை ஆளுக்குப் பாதி பாதி தருவதாக நம் இரண்டு வாயிற்காப்போன்களிடம் உறுதியளித்து விட்டேன்.

ஆகையால் இப்பரிசினை, அவர்கள் இருவருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.

உடனே மன்னர் அவ்விரு வாயிற்காப்போன்களையும் அழைத்து வரச்செய்து இது குறித்து விசாரித்தார்.

அவ்விருவரும் உண்மையை ஒத்துக் கொண்டார்கள்.

அவ்விருவருக்கும் தலா 15 கசையடி கொடுக்குமாறு மன்னர் பணித்தார். மேலும் தெனாலிராமனின் தந்திரத்தைப் பாராட்டி அவனுக்குப் பரிசு வழங்கினார்.

அரசவை விகடகவியாக்குதல்

அந்த ஆண்டு ஆந்திராவில் மழையே பெய்யவில்லை. அதனால் ஏரி, குளம், குட்டை அனைத்தும் வறண்டு கிடந்தன. அதனால் விவசாயம் நடைபெறவில்லை. அதனால் தண்ணீர்ப் பஞ்சமும் உணவுப் பஞ்சமும் தலை விரித்தாடியது.

அப்போது அக்கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்து சேர்ந்தார். அவர் வந்து சேர்ந்த அன்றே பலமான மழை பெய்ய தொடங்கியது. ஆறு, ஏரி, குளம், குட்டை எல்லாம் நிரம்பிவிட்டன.

சாமியார் வந்ததன் காரணமாகத்தான் நல்ல மழை பெய்துள்ளது என்று எண்ணிய அவ்வூர் மக்கள் சாமியாரை வாயாரப் புகழ்ந்து அவரை வணங்கி ஆசி பெற்றனர்.

இதை பார்த்துக் கொண்டிருந்த தெனாலி ராமன் கலகலவென நகைத்துக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த சாமியார், தெனாலிராமனை அருகில் அழைத்து தம்பி நீ ஏன் சிரிக்கிறாய்? என வினவினார்.

அதற்கு தெனாலிராமன் "மழை பெய்வதும் பெய்யாமல் போவதும் இறைவன் செயலே. அப்படியிருக்க தாங்கள் வந்தவுடன் தங்கள் மகிமையால்தான் மழை பெய்துள்ளது என்று மக்கள் எண்ணுவது ஒரு பனை மரத்தில் நன்கு பழுத்துள்ள பனம் பழம் கீழே விழும் நேரத்தில் காக்கை உட்கார்ந்ததாம். காக்கை உட்கார்ந்ததும் பனம் பழம் கீழே விழுந்ததாம். அப்போது அதை பார்த்தவர்கள் காக்கை உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது என்று சொன்னார்களாம். அது போலவே இவ்வூர் மக்கள் செயலும் இருந்ததால் தான் சிரித்தேன்" என்றான் தெனாலிராமன்.

இதைக் கேட்ட சாமியார் உண்மையை உணர்ந்து அவன் மேல் கோபப்படவில்லை. தம்பி உன்னிடம் திறமை இருக்கிறது. நீ காளி மகாதேவியின் அருளைப் பெற்றால் பிற்காலத்தில் புகழ் பெற்று விளங்குவாய் என்று நல்லாசி கூறினார்.

இதைக்கேட்ட தெனாலிராமன் காளிமகாதேவியின் சந்நிதியை அடைந்தான். அவளின் திருஉருவத்தைக் காண பலவாறு வேண்டி தவம் இருந்தான். கடைசியில் தெனாலிராமன் முன் தோன்றினாள் காளிதேவி. அவளது உருவத்தைப் பார்த்துப் பயப்படுவதற்குப் பதிலாக பலமாக சிரித்தான். அவன் சிரிப்பதைப் பார்த்த காளிதேவி, என் கோர உருவத்தைப் பார்த்து எல்லோரும் அஞ்சுவார்கள். நீயோ பலமாகச் சிரிக்கிறாய்? ஏன் என்று வினவினாள்.

அதற்கு தெனாலிராமன் எனக்கு சளிபிடித்தால் என்னுடைய ஒரு மூக்கை சிந்துவதற்கு என்னுடைய இரண்டு கைகளே போதவில்லை. அப்படியிருக்க உனக்கு ஆயிரம் தலை உள்ளது. ஆனால் கைகள் இரண்டே பெற்றுள்ளாய். உனக்கு சளிபிடித்தால் ஆயிரம் மூக்கையும் எப்படி இரண்டு கைகளால் சிந்துவாய் என்று எண்ணினேன். அதனால் எனக்கு சிரிப்பு வந்தது என்றான். இதைக் கேட்டதும் காளிமகாதேவியே சிரித்து விட்டாள்.

பின் மகனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். பெரும் பேரும் புகழும் பெற்றுத்திகழ்வாய். உனக்கு கஷ்டம் நேரும் போதெல்லாம் என்னை நினை. உனக்கு உதவி செய்கிறேன் எனக்கூறி மறைந்தாள் காளிதேவி.

விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் அரண்மனையில் தாத்தாச்சாரியார் என்பவர் ராஜகுருவாக இருந்தார்.

தெனாலி கிராமத்துக்கு அருகில் உள்ள ஊர் மங்களகிரி அவ்வூருக்கு ராஜகுரு தாத்தாச்சாரியார் வந்திருந்தார்.

அவ்வூர் மக்கள் ராஜகுருவை வணங்கி ஆசி பெற்றுச் சென்றனர். இதையறிந்த தெனாலிராமன் ராஜகுருவை சந்தித்தான். தன்னுடைய விகடத் திறமையாலும் பேச்சாற்றலாலும் ராஜகுருவின் "சிஷ்யன் ஆனான்.

ராஜகுருவின் நட்பு கிடைத்த பின் தன் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதாகவும் அதனால் மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் சிபாரிசு செய்து அரண்மனையில் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுமாறும் வேண்டிக் கொண்டான். அவன் வேண்டுகோள்படியே ராஜகுருவும் அரண்மனையில் வேலையில் சேர்த்து விடுவதாக வாக்களித்தார்.

நான் போய் ஆள் அனுப்புகிறேன். அதன் பின் நீ வா என்று சொல்லி விஜயநகரத்துக்குச் சென்று விட்டார்.

தெனாலிராமன் மிகக் கெட்டிக்காரனாக இருக்கிறான். இவனை மன்னரிடம் சொல்லி அரண்மனையில் விகடகவியாக சேர்த்துவிட்டால் நம் வேலை போய்விடும் என்று எண்ணிய ராஜகுரு தெனாலிராமனுக்கு ஆள் அனுப்பவே இல்லை.

தெனாலிராமனும் ராஜகுருவிடமிருந்து ஆள் வரும் வரும் என்று எதிர்பார்த்து பல மாதங்கள் ஓடிவிட்டன. எந்தத் தகவலும் அவனுக்குக்கிட்டவில்லை. ஆகையால் விஜயநகரம் சென்று ராஜகுருவை நேரில் பார்த்து அரண்மனையில் சேர்ந்து விட வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான்.

அதன்படியே மனைவி, மகனுடன் பல நாட்கள் நடந்து விஜய நகரம் வந்து சேர்ந்தான்.

பலவித இடையூறுகளுக்கிடையே தெனாலிராமன் ராஜகுருவை அவரது இல்லத்தில் சந்தித்தான்.

தெனாலிராமனைப் பார்த்ததும் ராஜகுரு அதிர்ச்சி அடைந்தார். யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். இதைக் கேட்ட தெனாலிராமன் பதறினார்.

ராஜகுருவே நான்தான் தெனாலிராமன். தாங்கள் மங்களகிரிக்கு வந்த போது நண்பர்கள் ஆனோம். நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாங்கள் அரசவையில் என்னைச் சேர்த்து விடுவதாகச் சொன்னீர்கள். ஆள் அனுப்பிய பின் வா என்றீர்கள். பல மாதங்களாக தங்களிடமிருந்து ஆள் வராததால் தான் நான் நேரில் வந்துள்ளேன். தயவு செய்து என்னை பற்றி மன்னரிடம் சொல்லி அரசபையில் சேர்த்து விடுங்கள் என்று வேண்டினான்.

உன்னை யாரென்றே எனக்குத் தெரியாதப்பா.... மரியாதையாக வெளியே போ.... இல்லையேல் அவமானப்படுவாய் என்று விரட்டினார்.

வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட தெனாலிராமன் பழிக்குப்பழி வாங்கத் துடித்தான். காளி மகாதேவியைத் துதித்தான்

அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும் ஓர் ஆசனத்தில் அமர்ந்தான்.

மன்னர் கிருஷ்ண்தேவராயர் வந்தவுடன் சபை கூடியது. வேற்றூரிலிருந்து வந்த தத்துவஞானியை விழாவைத் தொடங்கி வைத்து விவாத மன்றத்தை ஆரம்பிக்கச் சொன்னர்.

தத்துவ ஞானியும் ஏதேதோ சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் விளங்கவில்லை. அவர் பேச்சின் இறுதியில் மாய தத்துவம் பற்றி நீண்ட நேரம் பேசினார். அதாவது நாம் கண்ணால் காண்பதும் மாயை, உண்பதும் மாயை என்று சொன்னர்.

இதைக்கேட்ட அறிஞர்கள் முதல் அரசர்வரை எவருமே வாய் திறக்கவில்லை. ராஜகுரு மௌனமாகி விட்டார்.

சுற்றும் முற்றும் பார்த்த தென்னாலிராமன் எழுந்து நின்றான்.

தத்துவஞானியைப் பார்த்து, "ஐயா தத்துவ ஞானியாரே ஏன் பிதற்றுகிறீர் நாம் உண்பதற்கும் உண்பதாக நினைப்பதற்கும் வித்தியாசமே இல்லையா?" எனக் கேட்டான்.

அதற்கு தத்துவஞானி வித்தியாசம் இல்லை என்றான்.

அதை சோதிக்க தெனாலிராமன் அரசரிடம் ஒருவிருந்துக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். விருந்து ஏற்பாடு ஆயிற்று.

அனைவரும் பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார். தத்துவஞானிக்கு உணவு பரிமாறியும் சாப்பிடக்கூடாது எனக் கட்டளை இட்டுவிட்டனர். அதனால் தத்துவஞானி தன் தவறை உணர்ந்தான். இதைப்பார்த்த அரசர் தெனாலிராமனின் திறமையைப் பாராட்டி பொன் பரிசளித்தது மட்டுமில்லாமல் அன்று முதல் அவரது அரசவை விகடகவியாக்கினார்.