thensittin paattu

தேன்சிட்டின் பாட்டு

மௌட்டுஷி பளிச்சென்ற வண்ண மலர்களை விரும்பும் ஒரு குட்டி தேன்சிட்டு. தீதிமாவின் வீட்டுப் பூந்தொட்டிகளில் நிறைய வண்ண மலர்கள் இருக்கின்றன. மௌட்டுஷி, அவற்றில் இருக்கும் தேனைக் குடித்துவிட்டு தீதிமாவிற்கு அழகிய பரிசொன்றைக் கொடுப்பாள். அந்தப் பரிசு என்னவாக இருக்கும்?

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

குட்டி மௌட்டுஷிக்கு இன்று ஒரே அலைச்சல்.

பெரிய வேப்பமரத்தின் ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு பறந்தபடி இருக்கிறாள்.

பெரிய வேப்பமரத்தில் பெரிய தேன்கூடு ஒன்று இருக்கிறது. தேனைச் சேகரித்துவந்த தேனீக்கள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

“எனக்கும் தேன் வேண்டும்” என்று நினைத்துக்கொண்டாள் மௌட்டுஷி.

அது ஒரு குளிர்கால மதியவேளை. “எங்காவது தேன் கிடைக்கிறதா என்று சுற்றிப் பார்க்கிறேன்” என்று சொல்லிக்கொண்டாள்.

பெரிய வேப்பமரத்தை ஒட்டியிருக்கும் பெரிய வீட்டில், தீதிமா மதியநேர வெயிலை இரசித்தபடி உட்கார்ந்திருந்தார். அவரது பால்கனியில் இருந்த தொட்டிகளில் பல வண்ண மலர்கள் பூத்திருந்தன.

பட பட பட! மௌட்டுஷி ஒரு அழகிய சிவப்புப் பூவிடம் பறந்துசென்றாள். தன் ஊசி அலகால் தேனைக் குடித்தாள்.

“ஆகா! வயிறு நிரம்பிவிட்டது!” மௌட்டுஷிக்கு உண்ட மயக்கம். “அப்படியே அந்த மரத்தின் கிளையில் அமர்ந்து ஆடினால் நன்றாகத் தூங்கலாம்!”

ஆனால், அப்போது இரண்டு மைனாக்கள் பால்கனிக்கு வந்தன. வந்ததும் சண்டை போட ஆரம்பித்துவிட்டன.

அச்சோ! மௌட்டுஷியின் தூக்கம் பறந்து சென்றது. அவளுக்கு சண்டை என்றாலே பிடிக்காது. மௌட்டுஷியும் பறந்து செல்ல முடிவெடுத்தாள். பட பட பட!

போகும் முன், தீதிமாவுக்காக தன் இனிய குரலில் மௌட்டுஷி ஒரு குட்டிப் பாடலைப் பாடினாள்.

அம்மா கேட்டார், எங்க போயிருந்த?

நான் சொன்னேன் டுய் டுய் டூய்ய்.

அக்கா திட்டினாள், காணாமல் போயிருந்தா?

நான் ஆடினேன் டுய் டுய் டூய்ய்.

பாட்டி தேடினார், தேன் எங்கே காணோம்?

என் வயித்துக்குள்ள டுய் டுய் டூய்ய்.