tholaipesigal andrilirunthu indru varai

தொலைபேசிகள் - அன்றிலிருந்து இன்று வரை

அலெக்சாண்டர் க்ரஹம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்ததும் உலகத்திலேயே இரண்டே இரண்டு தொலைபேசிகள் தான் இருந்தன! இப்போதோ, ஏறக்குறைய அனைவரிடமும் கைபேசிகள் இருக்கின்றன. இப்புத்தகத்தில் தொலைபேசிகள் எப்படி படிப்படியாக கைபேசி வரை உருவாகின என்று படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

யாரையாவது தொலைபேசியில் அழைக்க வேண்டுமென்றால் என்ன செய்வீர்கள்? கைபேசி எங்கே என்று தேடுவீர்களா? தந்திவடம் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் நிலவழித் தொலைபேசியைப் பயன்படுத்துவீர்களா? அல்லது, தபால் நிலையத்திலோ மளிகைக் கடையிலோ இருக்கும் தொலைபேசியை அங்கிருப்பவரிடம் பணம் கொடுத்துவிட்டுப் பயன்படுத்துவீர்களா?

எதுவாக இருந்தாலும் அழைக்கும் முறை ஒன்றுதான்: எண்ணை சுழற்றி விட்டோ அல்லது ஒற்றி விட்டோ மணி அடிப்பதற்காகக் காத்திருக்க வேண்டும்.

ஆனால் இது எப்போதுமே இவ்வளவு எளிதாக இருந்ததில்லை.

அலெக்சாண்டர் க்ரஹம் பெல், தொலைபேசியை 1880களில் கண்டுபிடித்தார்.

மார்ச் 10, 1876இல் தனது உதவியாளர் வாட்சனை முதலில் அழைத்தார். தன்னை வந்து பார்க்குமாறு வாட்சனிடம் தொலைபேசியின் வாய்ப்பகுதியில் பெல் கத்தினார். யூஎஸ்ஏவின் பாஸ்டனில் இருந்த அவர்களது அலுவலகத்தில் பெல் கத்துவதை அடுத்த அறையில் இருந்த உதவியாளர் தன்னிடமிருந்த செவிக்குழலில் கேட்ட பின்னர் அவரைப் பார்க்க ஓடினார்.

அப்போது தொலைபேசியில் எண்கள் கிடையாது. இரு தொலைபேசிகள் ஒன்றோடொன்று தந்தி வடத்தால் இணைக்கப்பட்டிருந்தன!

தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகியதும் ‘தொலைபேசி இணைப்பகம்’ (telephone exchange) என்ற ஒரு பொது மையம் அமைக்கப்பட்டது. ஒரு பகுதியில் இருக்கும் அனைத்து தொலைபேசிகளும் ஒரு ‘இணைப்புப் பலகை’(switch board) மூலம் அப்பகுதியிலுள்ள தொலைபேசி இணைப்பகத்தோடு இணைக்கப்பட்டிருக்கும். அங்கே ஒரு இயக்குநர்(operator) சரியான தந்தி வடங்களை இணைப்புப் பலகையில் சொருகி இரு தொலைபேசிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்துவார்.

இணைப்புப் பலகை என்பது இது போல இருக்கும்.

தொலைபேசிகள் இப்படத்தில் காண்பது போல இருந்தன. அவற்றில் பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித்தனிப் பகுதிகள் இருந்தன. எண் சுழற்றிகள் அப்போது வந்திருக்கவில்லை!

பின்னர் எப்படி யாரையேனும் அழைப்பது?

“ஹெலோ! நான் உங்களுக்கு எப்படி உதவலாம்?”

”தொலைபேசி இயக்குநரே, மருத்துவர் மிங்க் அவர்களோடு இணைக்க முடியுமா?’’

‘‘ஒரு நிமிஷம்”

முதலில் நீங்கள் செவிக்குழலை(receiver) எடுக்கவேண்டும். தொலைபேசி இயக்குநர் உடனே உங்களை வரவேற்பார். பின்னர் இயக்குநர் சில தந்தி வடங்களை இணைத்ததும் மருத்துவரின் தொலைபேசி மணியடிக்கத் தொடங்கும்.

ஆனால் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று கவனமாக இருக்கவேண்டும், ஏனென்றால் தொலைபேசி இயக்குநர் விரும்பினால் நீங்கள் பேசுவதைக் கேட்க முடியும்.

தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒரே இயக்குநர் அனைத்து அழைப்புகளையும் இணைப்பது சாத்தியமில்லாமல் போனது.

எனவே தொலைபேசிகள் எண் சுழற்றிகளோடு வடிவமைக்கப்பட்டன. நீங்கள் இயக்குநரிடம் யாரை இணைக்க வேண்டும் என்று சொல்வதற்கு பதிலாக எண்ணை சுழற்ற(dial) வேண்டும். இந்த எண், இணைப்புப் பலகைக்குச் சென்று தொலைபேசிகள் தன்னால் இணைக்கப்பட்டு விடும்.

இருந்தாலும் தொலைதூர அழைப்புகளை தொலைபேசி இயக்குநர்களே இணைத்தார்கள்.

1920களின் கடைசிப் பகுதியில் தொலைபேசியின் வடிவம் மாறியது. என்னவாக மாறியது தெரியுமா?

நீங்கள் படத்தில் காண்பது போல் செவிக்குழலும் பேசும் பகுதியும் ஒரே கருவியாகி விட்டன. இதை ஒரு கையில் பிடித்துக் கொண்டு பேசலாம். அல்லது கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் அழுத்திக் கொண்டு, கைகளால் எழுதிக் கொண்டோ கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டோ பேசலாம்.

சீக்கிரமே, மக்கள் பயணத்திலிருக்கும் போதும் அழைப்புகள் செய்ய விரும்பினர்.

இல்லை, இன்னும் கைபேசிகள் வந்திருக்கவில்லை. ஆனால் தெருக்களில் இருந்த பொதுத் தொலைபேசிச் சாவடிகளிலிருந்து யாரை வேண்டுமானாலும் அழைக்கலாம். 1930களில் உலகெங்கும் முக்கியமான நகரங்களில் இத்தகைய சாவடிகள் இருந்தன.

உண்மையில், பெரும்பாலானோர் இப்படித்தான் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டனர். பெரிய பணக்காரர்கள் மட்டுமே வீட்டில் தொலைபேசி வைத்திருந்தனர்.

சில வருடங்களுக்குப் பின்னர், மக்கள் வண்டி ஓட்டும் போதே தொலைபேசியைப் பயன்படுத்த விரும்பினர். எனவே, குரல் கருவி மற்றும் எண் சுழற்றியோடு கூடிய முழுமையான தொலைபேசிகள், மகிழ்வுந்துகளில் அமைக்கப்பட்டன.

ஆனால் இந்த மகிழ்வுந்து தொலைபேசிகளில் தந்திவடங்கள் கிடையாது! அவை ரேடியோ அலைகளைப் பயன்படுத்தி மற்ற தொலைபேசிகளைத் தொடர்பு கொண்டன.

1970களில் சிலரிடம் பையில் வைத்து எடுத்துச் செல்லக் கூடிய தொலைபேசிகள் இருந்தன. அது செயற்கைக்கோள் அலைபேசி(satellite phone) எனப்பட்டது. அதன் மூலம் உலகில் வேறிடங்களில் இருக்கும் அதே போன்ற அலைபேசிகளோடு செயற்கைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

செயற்கைக்கோள் அலைபேசிகள் பெரிதாக பிரபலம் ஆகாததற்குக் காரணம் அவற்றைப் பயன்படுத்த வானிலிருக்கும் செயற்கைக்கோள் நேரடிப் பார்வையில் இருக்க வேண்டும். எனவே ஒரு இருபது மாடிக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் நீங்கள் வசித்தீர்கள் என்றால் அலைபேசியில் அழைக்கவோ அல்லது அழைப்பைப் பெறவோ மொட்டை மாடிக்குத்தான் செல்ல வேண்டும்.

கைபேசிகளும்(cell phones) இதே காலகட்டத்தில் பயன்பாட்டுக்கு வந்தன. அவற்றுக்கு செயற்கைக் கோள்களோடு நேரடித் தொடர்பு தேவைப்படவில்லை. இக்கைபேசிகள் அருகிலிருக்கும் கோபுரத்தோடு(Tower) தொடர்பு கொண்டன. அதனால் வீட்டிற்குள்ளோ, அலுவலகத்திற்குள்ளோ அமர்ந்துகொண்டே பேச முடிந்தது.

1973இல் உருவாக்கப்பட்ட முதல் கைபேசியின் எடை ஒரு கிலோவுக்கு மேல் இருந்தது! பின்னர், அது சிறிது சிறிதாகி இப்போது சட்டைப்பைக்குள் வைக்குமளவுக்கு மாறியிருக்கிறது.

கைபேசிகளை உபயோகிப்பது பலவிதங்களிலும் வசதியாக உள்ளது.

நிலவழித் தொலைபேசிகள் தந்திவடங்களால் இணைக்கப்பட வேண்டும். இதனால் ஊர்களுக்கு இடையே நிலத்தைத் தோண்டி இணைப்புக் கம்பிகள் இட வேண்டும். இதற்கு நிறைய செலவாகும் என்பதால் நிறைய கிராமங்களில் தொலைபேசிகள் இல்லாமல் இருந்தது. ஆனால் தந்தி வடமில்லா கைபேசிகள் இதை மாற்றி விட்டன. இப்போது ஏறக்குறைய அனைவரிடமும் ஒரு கைபேசி இருக்கிறது.

இன்றைய கைபேசிகள் அழைப்பதைத் தவிர மேலும் பலவிதப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. அவை அரட்டையடிக்க, விளையாட, மின்னஞ்சல்களை அனுப்ப, இணையத்தில் தேட, இசை கேட்க, படங்கள் பார்க்க, புகைப்படங்கள் எடுக்க, காணொளிப் பதிவுகளைச் செய்ய, வேறு பயன்பாடுகளை(applications) நிறுவிக்கொள்ள போன்றவற்றிக்கு உதவுகின்றன.

இப்போதுள்ள நுண்ணறிபேசிகளை(smart phones) அழைப்புகளையும் மேற்கொள்ளக் கூடிய ஒரு கணினி(computer) எனலாம்.

எதிர்காலக் கைபேசிகள் இன்னும் வேறு என்னவெல்லாம் செய்யுமோ?

இன்று, உங்கள் நண்பரின் பெயரைச் சொன்னாலே உங்கள் கைபேசி அவரை அழைத்து விடும். ஒருவேளை வருங்காலத்தில் உங்கள் கைபேசியிடம், “எனது மூன்றாம் வகுப்பு கணித ஆசிரியரின் எண்ணைக் கண்டுபிடித்து அழை,” என்று சொன்னால் அது செய்யக்கூடும்!

உங்கள் கைபேசி, பொருட்களின் முப்பரிமாண பிம்பங்களைக் காட்டக்கூடும். அப்போது அப்பொருளின் எல்லா பக்கங்களையும் மற்றும் உள்ளேயும் பார்க்க இயலக்கூடும்!

கைபேசிகள் வளைக்கக் கூடியதாகக் கூட இருக்குமென்றும் நான் யூகிக்கிறேன். அவற்றை மணிக்கட்டில் கட்டிக்கொள்ளும்படியோ சுருட்டி சிறிய கைப்பைக்குள் வைத்துக் கொள்ளும்படியோ இருக்கக்கூடும்!

மின்கலத் திறனேற்றுதல்(battery charging) – இதைச்செய்ய இப்போதிருப்பதை விட ஒரு சிறந்த வழி பிறக்க வேண்டும். சூரிய சக்தி மின்கலங்கள்(solar cells) சிறந்தவை - அவற்றை திறனேற்ற வெயில் படுமாறு வைத்தால் போதுமானது.

அசைவு மூலம் திறனேற்றுதலும் ஒரு நல்ல தீர்வே. இது இயக்க ஆற்றலைப்(kinetic energy) பயன்படுத்தும். அதாவது கைபேசி அசைவுறும் போதெல்லாம் திறனேறும். மின்கலத்தில் திறன் குறையும் போது நீங்கள் சாலையில் கொஞ்ச தூரம் ஓடினால் போதும். கைபேசிக்குத் திறனேறுவதோடு உங்களுக்கும் நல்ல உடற்பயிற்சியாகும்!

நுண்ணறிபேசிகள் விரைவிலேயே காலாவதியானதாகி விடுகின்றன. பெரும்பாலோர் தங்கள் செல்பேசிகளை ஓரிரு வருடங்களில் தூக்கிப் போட்டுவிட்டு புதியதை வாங்குகிறார்கள். இது நிறைய கழிவைச் சேர்க்கிறது. கைபேசிகள் பூமியோடு ஒத்திசைவதாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! தீங்குவிளைவிக்கும் கதிரியக்கம் இல்லாமல், நச்சுப் பொருட்கள் இல்லாமல் முழுவதும் திரும்பப் பயன்படுத்தக்கூடிய அல்லது எளிதாய் மக்கும் பொருட்களால் செய்யப்பட்டதாக இருந்தால் நல்லது. அது தான் உண்மையிலேயே நுண்ணறிவுள்ள தொழில்நுட்பமாக இருக்கும்!

நீங்கள் சொல்லுங்கள், கைபேசிகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆசிரியர்

அலெக்சாண்டர் க்ரஹம் பெல் தொலைபேசியைக் கண்டுபிடித்தார். மற்ற விஞ்ஞானிகளும் அதே போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். பெல்லின் பெற்றோர்கள் அவரை

ஒலி மற்றும் பேச்சு குறித்து கற்றுக் கொள்ளத் தூண்டினர்.

அவரது அப்பா உரையாற்றுதல் துறை பேராசிரியர். அலெக்சாண்டரின் அம்மாவோ ஏறக்குறைய கேட்கும் திறனை இழந்திருந்தார். ஆனாலும் அவர் பியானோ வாசிக்கப் பயின்றிருந்தார். அலெக்சாண்டர் தன் அம்மாவின் நெற்றிக்கு அருகே சென்று பேசுவார் அந்த அதிர்வுகளின் மூலம் அவர் என்ன பேசுகிறார் என்று புரிந்து கொள்வார். பின்னாளில் அலெக்சாண்டர் கேட்கும் திறனிழந்தோருக்கான பள்ளி ஒன்றை பாஸ்டனில் தொடங்கினார்.

தன் வாழ்நாள் முழுவதும் புதுப்புதுத் தகவல் தொடர்பு வழிகளைக் கண்டுபிடித்த வண்ணம் இருந்தார். அவரது பெயரில் 18 கண்டுபிடிப்புகளுக்கான உரிமங்கள் இருந்தன. அவரது முதல் கண்டுபிடிப்பு கோதுமையிலிருந்து உமி நீக்குவதற்கான ஒரு கருவியாகும். அப்போது அவருக்கு வயது 16 மட்டுமே.

அலெக்சாண்டர் க்ரஹம் பெல்லுக்கு தொலைபேசியை உருவாக்கும் யோசனை எப்படி வந்தது தெரியுமா? ஒலியானது, அதிர்வுகள் மூலம் பயணிப்பது அவரை ஈர்த்தது. பேசும்போது உங்கள் தொண்டையில் கை வைத்து பார்த்தீர்கள் என்றால் அந்த ஒலியை உருவாக்கும் உங்கள் குரல்வளை நாண்களின் அதிர்வை உணரலாம்.

யாரேனும் பேசும்போதோ சிரிக்கும் போதோ அந்த அதிர்வுகள் உங்கள் காதை அடைந்து செவிப்பறைகளை அதிரச் செய்கின்றன. இப்படித் தான் உங்களுக்கு ஒலி கேட்கிறது. பேசுபவர் தூரமாகப் போகப் போக அதிர்வுகள் பலமிழந்து மறைந்து போகின்றன.

ஒலியைப் பார்க்க வாருங்கள்

இச்செய்முறை நம்மை ஒலியைப் பார்க்க வைக்கும்.

தேவையான பொருட்கள்:

– ஒரு கிண்ணம்

– ஒரு நெகிழித்தாள்(plastic cling wrap)

– சில அரிசி மணிகள்

– ஒரு எஃகுத்(steel) தட்டும் கரண்டியும்

செய்முறை:

1. கிண்ணத்தின் வாயைச் சுற்றி நெகிழித்தாளை இழுத்துக் கட்டவும். தொய்வடைந்து விடாமல் இருக்கிறதா என உறுதி செய்யவும்.

2. நெகிழித்தாளின் மீது சில அரிசி மணிகளைத் தூவவும்.

3. தட்டையும் கரண்டியையும் கிண்ணத்திற்கு அருகே கொண்டு செல்லவும், ஆனால் தொடவேண்டாம்.

4. கிண்ணத்தைத் தொடாமல் தட்டை, கரண்டியால் அடிக்கத் தொடங்கவும். உங்களுக்கு என்ன தெரிகிறது?