thoonilirundhu maaligai varai

தூணிலிருந்து மாளிகை வரை

தீராவுக்கு கட்டடங்கள் என்றால் பிடிக்கும். அம்மாவும் அப்பாவும் அவளுக்கு ஒரு குட்டி விமானத்தை செய்து கொடுத்தனர். தீரா இப்போது கட்டடங்கள் எவற்றால் செய்யப்பட்டிருக்கின்றன என்று ஆராயக் கிளம்பிவிட்டாள்.

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தீராவுக்கு கட்டடங்களையும் கட்டட அமைப்புகளையும் பார்க்க ரொம்பப் பிடிக்கும்.

உயரமான தூண்கள். பெரிய கோபுரங்கள். மரத்தாலான கட்டடங்கள். களிமண் கட்டடங்கள். புதிய கட்டடங்கள். பழைய கட்டடங்கள்.

தீராவுக்கு இவை எல்லாவற்றையும் பார்க்க ஆசை. அவை எவற்றால் செய்யப் பட்டிருக்கின்றன என்று தெரிந்துகொள்ளவும் ஆசை.

எனவே, அம்மாவும் அப்பாவும் அவளுக்கு ஒரு குட்டி விமானம் செய்து கொடுத்தனர். அவள் செய்யவேண்டியது எல்லாம், அவள் பார்க்க விரும்பும் கட்டட அமைப்பை நினைத்துக்கொண்டு, அதன் பெயரை முணுமுணுப்பது மட்டுமே. டொட்டடொய்ங்! அந்த விமானம் அவளை அங்கே கொண்டு சேர்த்துவிடும்.

முதல் பயணத்துக்கு,

தீரா போக விரும்பிய இடம்...

டெல்லி மெஹ்ரௌலியில் இருக்கும் இரும்புத் தூண்

தீரா ஒரு பெரிய இரும்புத் தூணைப் பார்த்தாள். அது 1600 ஆண்டுகள் பழையது. அதில் துருவே காணோம்! அதில் வினோதமான வளைவுகளும் வளையங்களும் இருந்தன. அந்தப் பெரிய உறுதியான தூணைக் கட்டிப்பிடித்துக் கொள்ள விரும்பினாள், தீரா!

இப்போது தீரா போக விரும்பிய இடம்...

ராஜஸ்தானிலிருக்கும் தங்கக் கோட்டை

தீரா ஒரு பரந்து விரிந்த பாலைவனத்தின் நடுவில் இருந்தாள். ஒரு குன்றின் உச்சியில் மஞ்சள் மணற்கல்லால் கட்டப்பட்ட கோட்டை ஒன்று இருந்தது. கோட்டைக்கு உள்ளே நிறைய வீடுகள் இருந்தன. அவள் கண்சிமிட்டினாள். அந்தக் கோட்டை தங்கத்தைப்போல் மின்னியது.

அடுத்து தீரா போக விரும்பிய இடம்...

கர்நாடகாவிலிருக்கும் விட்டலா கோவில்

தீரா ஒரு பெரிய அரங்கத்தை நோக்கி ஓடினாள். அங்கே நிறைய கல் தூண்கள் இருந்தன. அங்கே 56 பெரிய தூண்களும் அவை ஒவ்வொன்றையும் சுற்றி ஏழு சின்ன தூண்களும் இருந்தன. அந்தத் தூண்களைத் தட்டியபோது, அவை பாடின. சரிகமப...

இப்போது தீரா போக விரும்பிய இடம்...

தமிழ்நாட்டிலிருக்கும் பத்மநாபபுரம் அரண்மனை

தீரா மரத்தால் கட்டப்பட்ட அரண்மனை ஒன்றில் இருந்தாள். கதவுகள், மாடங்கள், சாளரங்கள் என எல்லாமே மரத்தால் செய்யப்பட்டிருந்தன. அரசரின் கட்டில்கூட 64 மரத்துண்டுகளால் செய்யப்பட்டிருந்தது! அங்கே அவள் ஒரு அரசியைப் போல உணர்ந்தாள்.

அடுத்து தீரா போக விரும்பிய இடம்...

தெலுங்கானாவில் இருக்கும்  சார்மினார்

தீரா ஒரு நீண்ட சுழல் படிக்கட்டில் ஏறினாள். ஒரு உயரமான கிரானைட் கட்டடத்தின் கூரையை அடைந்தாள். அவளைச் சுற்றி நான்கு கோபுரங்கள் இருந்தன. அவள் கீழே இருந்த முற்றத்தில் விளையாட விரும்பினாள்.

இப்போது தீரா போக

விரும்பிய இடம்...

மேற்கு வங்கத்திலிருக்கும் பிஷ்ணுபூர் கோவில்கள்

தீரா கூம்பு வடிவத்தில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்தாள். எங்கு பார்த்தாலும் பல வண்ணச் சாயல்களில் சுடுகற்கள்! சில சுவர்களில் டெரக்கோட்டா* தாமரைப் பூக்கள் இருந்தன.

*சுடப்பட்ட களிமண்

அவள் கோவிலின் அருகிலிருந்த பெரிய வளைவில் சாய்ந்து ஓய்வெடுத்தாள்.

தீராவுக்கு சோர்வாக இருந்தது. இப்போது தீரா முணுமுணுத்தாள், “வீட்டுக்குப் போகலாம்!”

பொருத்துங்கள் பார்க்கலாம்!  தீரா பல்வேறு பொருட்களால் கட்டப்பட்ட அமைப்புகளையும் கட்டடங்களையும் சென்று பார்த்தாள். கீழே இருக்கும் அமைப்புகளையும் கட்டடங்களையும் அவை எவற்றால் செய்யப்பட்டது என்பதோடு சரியாக இணையுங்கள்.

மரம்

அதிரும் கற்கள்

மணற்கற்கள்

டெரக்கோட்டா

இரும்பு

கிரானைட்

இரும்புத் தூண், டெல்லி

பத்மநாபபுரம் அரண்மனை, தமிழ்நாடு

பிஷ்ணுபூர் கோவில்கள், மேற்கு வங்கம்

விட்டலா கோவில், கர்நாடகா

சார்மினார், தெலுங்கானா

தங்கக் கோட்டை, ராஜஸ்தான்

கட்டடப் பொருள்

அமைப்பு/கட்டடம்