tinevum thooraththu malaiyum

டினேவும் தூரத்து மலையும்

ஊஷ்… ஊஷ்... மலைகள் நிறைந்த ஊரான இச்சாலியில் டினேவுக்கு ஒரு சப்தம் கேட்கிறது. அது மலைகள் அவளைக் கூப்பிடும் சப்தம். வளர வளர, டினே தன் பிரியத்துக்குரிய மலையை நெருங்க கனவு காண்கிறாள். ஆனால் உலகின் உயரமான மலை உச்சியை அவளால் அடையமுடியுமா? அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒரு மலையேற்றக்காரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கதை, கனவுகளையும் தன்னம்பிக்கையின் ஆற்றலையும் கொண்டாடுகிறது.

- Gayathri sivakumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

“நான் அச்சத்தை முழுவதுமாக விட்டுவிட்டேன்; ஆம், விதிமுறைகள் மற்றும் சமூகத்தின் மீதான அச்சத்தை. தோல்வியைக் கண்டோ மரணத்தைக் கண்டோ நான் ஒருபோதும் பயப்பட்டதில்லை. என் சொந்த பலத்தையே நான் நம்பினேன். எனக்கு இயற்கையாகக் கிடைத்த திறமையை வளர்த்துக்கொண்டேன். என் பலவீனங்களை மேம்படுத்திக் கொண்டேன். எல்லாவற்றையும் விட எப்போதும் என் மனம் சொன்ன வழியையே பின்பற்றினேன்.”

- டினே மேனா, மலையேற்ற வல்லுநர்

அன்று மே 9, 2011. டினே மேனாவுக்கு மிக முக்கியமான நாள். டினே தனது 25ஆவது வயதில், வடகிழக்கு இந்தியாவிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் பெண் ஆனார். 8,848 மீட்டர்கள் உயரம் கொண்ட, உலகிலேயே மிக உயரமான மலைச்சிகரம் எவரெஸ்ட். இதன் உயரம் ஏறக்குறைய ஐயாயிரம் பேர் (ஆறு அடி உயரம் கொண்டவர்கள்) ஒருவர் மேல் ஒருவராக நிற்கும் உயரத்துக்கு சமம்!

மலையேறுவதை மிகவும் நேசித்த சிறுமியான டினேவின் பயணம்தான் இந்தக் கதை.

ஊஷ்... ஊஷ்... அருணாச்சலப் பிரதேசத்தின் மிஷ்மி மலைகளில் வசிக்கும் டினே, தொலைதூர மலைகளின் அந்த அற்புதமான அழைப்பைக் கேட்கிறாள். தன்னால் மட்டுமே கேட்கமுடிகிற அந்த ஒலியால் அவள் ஈர்க்கப்பட்டாள்.

டினேவுக்கு எதன் மீதாவது ஏறுவது மிகவும் பிடிக்கும். அவள் மரங்களின் மீது ஏறினாள். காட்டினுள் ஓடி நதியில் மீன் பிடித்தாள். அவள் தனது பாட்டி நாயாவைப் போலவே வலிமையாகவும் அச்சமின்றியும் இருந்தாள். எப்போதாவது டினே தவறி விழுந்துவிட்டால், அவளது தந்தை நாபா, அவளை எழுந்து தொடர்ந்து செல்லும்படி சொல்வார்.

டினேவுக்கும் அவள் தங்கை சோனிக்கும் ஆப்பிள், ஆரஞ்சு, மற்றும் காட்டில் இருக்கும் பழங்களை சாப்பிட மிகவும் பிடிக்கும். வெயிலில் கிடந்தபடி பல நீண்ட நாட்களைக் கழித்தனர்.

ஆஹா, என்ன ஒரு இனிமையான வாழ்க்கை என்று எண்ணி டினே புன்னகைப்பாள்!

ஒருநாள், டினேவின் உலகம் தலைகீழாக மாறியது. இச்சாலியில் பள்ளிக்கூடம் எதுவும் இல்லாததால் அவர்களது குடும்பம் அருகில் இருந்தவற்றிலேயே பெரியதான ரோயிங் நகரத்துக்குக் குடிபெயர்ந்தது.

ரோயிங்கில், ‘ஊஷ்’ ஒலி சற்று குறைந்து மெல்லிய ஓசையாக கேட்டுக்கொண்டிருந்தது. அவளுக்கு வேண்டியதெல்லாம் அந்த மலைகளிலேயே இருக்கவேண்டும் என்பதுதான்.

பத்து வருடங்கள் கழித்து, டினே தன் பள்ளிக்கல்வியை முடித்திருந்தாள். மலையின் அழைப்பு மேலும் வலுவானது -

ஊஷ், ஊஷ்.

தன்னுடைய மலைகளின் அருகில் இருப்பதற்காக, ஒரு ராணுவப் பயணத்தில் சுமைதூக்குபவராக பணிபுரிய டினே விண்ணப்பித்தார். கனமான சுமைகளைத் தூக்குவதிலும் பலநாட்கள் தொடர்ந்து நடப்பதிலும் மற்ற சுமைதூக்குபவர்களுக்கு ஈடாக அவள் இருந்தாள். ஆனால் அதில் ஒரு சிறிய சிக்கல் - பெண்களுக்கு சுமைதூக்குபவராக பதிவு செய்ய அங்கே அனுமதி இல்லை.

ஆனால் அந்த விஷயம் அவளைத் தடுத்து நிறுத்தியதா? நிச்சயமாக இல்லை! டினே பையனைப் போல உடையணிந்து கொண்டு பணிபுரியத் தொடங்கினாள். ஒவ்வொரு நாளும் அவள் 25 கிலோ வரை சுமக்கவேண்டியிருந்தது. ஒரு பெண், ஆண் போன்று வேடமணிந்து பணிபுரிந்ததை அறிய அனைவருக்கும் கிட்டதட்ட ஒரு வாரமானது!

விதிகளை மீறியதற்காக டினே கண்டிக்கப்பட்டாள். ஆனால் பையன்கள் வேலைசெய்யும் அளவு அவளாலும் செய்யமுடியும், அத்தோடு மற்றவர்களைக் காட்டிலும் அவளுக்குத்தான் வழிகள் நன்கு தெரியும். எனவே, அதிகாரிகள் அவளை தொடர்ந்து பணிபுரிய அனுமதித்தார்கள். அவளது இந்த செயல் பிற்காலத்தில் பெண் சுமைதூக்குபவர்களுக்கு எதிராக இருந்த தடையை நீக்க உதவியது.

டினே தனது கடுமையாக உழைப்பால் மலையேற்றப் பயணங்களை திட்டமிடும் ஒரு ஒருங்கிணைப்பாளராக மாறினாள். அப்படித்தான் ஒருமுறை, ஒரு பயணக் குழுவின் தலைவரான டாக்டர் ரோமியோ மெய்டேயை சந்தித்தாள். “ஒரு திறமையான மலை ஏறுபவருக்கு உண்டான அனைத்து அம்சங்களும் இயற்கையாகவே உன்னிடம் இருக்கின்றன. பலம், உடற்கட்டு, தீர்மானம் என எல்லாமே உன்னிடம் இருக்கின்றன. நீ கற்றுக்கொள்ள வேண்டியது உத்திகளைத்தான்” என்றார் அவர்.

டாக்டர் மெய்டேய் டினேவின் வழிகாட்டியானார். அவள் தனது பயிற்சியைத் தொடங்கினாள்.

ஆனால் எவரெஸ்ட் சிகரத்தில் முதல்முதலில் ஏறியவர் பற்றிய எவரெஸ்டுக்கான பந்தயம்(The Race for Everest) என்ற ஒரு பிரபலமான திரைப்படத்தை டினே பார்த்தபோதுதான், அவள் தன் கனவு மலையைப் பற்றி அறிந்துகொண்டாள். ஊஷ் ஒலி பெரும் இரைச்சலானது. எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறுவதே டினேவின் கனவானது.

ஒருவழியாக டினே நேபாலுக்குச் சென்றார். பதட்டமாக இருந்தாலும் அவர் தீர்மானத்துடன் இருந்தார். செர்ரிங் ஷெர்பாவுடன்* சேர்ந்து ஏறத் தொடங்கினார். மலையேற்றம் நான்கு நிலைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அனைவரும் ஆங்காங்கே உள்ள வெவ்வேறு முகாம்களில் ஓய்வு எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்து, சில நாட்களில் உச்சியை அடைய வேண்டும். ஆனால் செர்ரிங் ஷெர்பா மற்றும் டினே குழுவினர் இரண்டாவது முகாமை அடைந்தபோது வானிலை மோசமடைந்திருந்தது. *ஷெர்பாக்கள், மலையேறும் திறனுக்காக பிரபலமான, உயரமான இமாலயப் பிரதேசங்களில் வசிக்கும் திபெத்திய இனக்குழுவினர்.

ஆனால் ஊஷ் சப்தம் இசையாகி இன்னும் சத்தமாகவும் மயக்குவதாகவும் இருந்தது!

“தொடர்ந்து செல்ல வேண்டுமா?" என்று செர்ரிங் கேட்டார்.

“இதைச் செய்ய இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் எனத் தோன்றவில்லை” என்று டினே கூறினார்.

ஒருவழியாக, அவர்கள் தங்களது இறுதி முகாமை அடைந்தனர். ஆனால் பலமான காற்றில் அவர்களது கூடாரமும் உணவுப்பொருட்களும் பறந்துவிட்டன. அவர்கள் இன்னொரு கூடாரத்தில் தஞ்சம் அடைந்தனர். அவர்களிடம் வாக்கி-டாக்கிகளோ மருந்துகளோ இல்லை. டினே, செர்ரிங்கிடம் இருந்ததெல்லாம் ஒரு நூடுல்ஸ் பாக்கெட் மட்டுமே.

“அதில் பாதியை இருவருமாக சாப்பிடுவோம்” என்றார் செர்ரிங். “ஒருவேளை உயிருடன் இருந்தால், மீதியை சாப்பிடுவோம்” என்று டினே தீர்மானமான புன்னகையுடன் கூறினார். அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு இரண்டு அடிகளுக்கும் காற்று அவர்களை ஒரு அடி பின்னால் தள்ளியது. புயற்காற்று, ‘இங்கிருந்து போய்விடு’ என ஊளையிட்டது. ஆனால் டினேவுக்கு “ஊஷ்” ஒலி மட்டுமே கேட்டுக்கொண்டிருந்தது.

ஒரு புதிய உத்வேகத்துடன், உச்சியை அடையும் கடைசிப் பயணத்தை அச்சமின்றித் தொடங்கினர்.

மே 9, 2011 அன்று காலை 10.45 மணியளவில், டினே உலகின் மிக உயர்ந்த மலையின் உச்சியை அடைந்தார். மரமேறுவதில் விருப்பம் கொண்டிருந்த அந்தச் சிறுமி உலகத்தின் உச்சிக்கு ஏறிவிட்டிருந்தாள். தன் தூரத்து மலையை அடைந்துவிட்டாள். வாழ்க்கை முழுக்க அவளை அழைத்துக்கொண்டேயிருந்த ஒலியுடன் இணைந்தும் விட்டாள். ஊஷ், அவள் தன் பிரியத்துக்குரிய மலையுடன் நடனமாடினாள்.

டினே மேனா, மலையேறுபவர்

டினே மேனா வடகிழக்கு இந்தியாவிலிருந்து எவரெஸ்ட்டின் உச்சியை அடைந்த முதல் பெண் என்ற சாதனைக்குரிய சாகசக்காரர்.

டாக்டர் ரோமியோ மெய்டேயின் ஆலோசனைப்படி, ​​டினே இம்பாலில் உள்ள மணிப்பூர் மலையேறுதல் மற்றும் பயிற்சிச் சங்கத்தில் சேர்ந்தார். அங்கே படிப்பில் தங்கப் பதக்கத்தையும், டார்ஜிலிங் நகரில் உள்ள ஹிமாலயன் மவுண்டெய்னீரிங் இன்ஸ்டிட்யூட்டில் அடிப்படை மலையேறுதலில் சிறந்த மாணவருக்கான இன்னொரு தங்கப் பதக்கத்தையும் டினே வென்றார்.

மலையேற்றப்பயிற்சி அளிப்பவராக நல்ல ஊதியத்தோடு வந்த வாய்ப்பை, எவரெஸ்டில் ஏறும் கனவுக்காக மறுத்தார். அவர் தனது பயணத்திற்காக தனியாரிடம் ஊக்கத்தொகை பெற்றார்.

சைக்கிளிங் வீரரான அவரது சகோதரி ரூபி லோம்போ தொடங்கி பல வடகிழக்கு இளைஞர்களுக்கு டினே ஊக்கமளித்துள்ளார். சாகசங்களை விரும்பும் குழந்தைகளுக்கு டினே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறார்.