tok tok

டொக் டொக்!

இரவு நேரம். ஆனால், சோனாப்பூர் ராஜாவால் தூங்கமுடியவில்லை. காரணம், எங்கிருந்தோ வருகிற மர்மச் சத்தம்தான்!என்ன ஆயிற்று? ராஜா தூங்கினாரா இல்லையா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

டொக் டொக்…. டொக் டொக்!

சோனாப்பூர் ராஜா தூக்கம் வராமல் புரண்டார். ’என்ன சத்தம் அது?’

ஏற்கெனவே அன்று இரவு சாப்பிட்ட பட்டர் சிக்கன் அவருடைய வயிற்றுக்குள் கடமுடா செய்துகொண்டிருந்தது. போதாக்குறைக்கு இந்த டொக் டொக் சத்தம் வேறு!

ராஜா தன் அருகே படுத்திருந்த ராணியை சந்தேகமாகப் பார்த்தார், ‘ஒருவேளை இவள்தான் சத்தம் போடுகிறாளோ?’

ம்ஹூம், இல்லை. ராணி நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார்.

ஆனால், சத்தம்மட்டும் தொடர்ந்து கேட்டது. டொக் டொக்... டொக் டொக்!

’என்ன அவஸ்தை இது?’ என்று கத்தியபடி எழுந்தார் ராஜா, ‘நான் இந்த நாட்டின் அரசனாக இருந்து என்ன பிரயோஜனம்? ஒரு சின்ன டொக் டொக் சத்தத்தைத் தடை செய்யமுடியவில்லையே!’

ராஜா தன்னுடைய குண்டு தேகத்தைத் தூக்கிக்கொண்டு எரிச்சலுடன் எழுந்து வந்தார். அவரைப் பார்த்த காவலாளிகள் பயந்து நடுங்கினார்கள்.

‘இது என்ன சத்தம்?’ கோபமாகக் கேட்டார் ராஜா.

‘தெரியலை மன்னா’ என்றார்கள் காவலாளிகள், ‘நாங்களும் நிறைய தேடிப் பார்த்துவிட்டோம், இந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்கவேமுடியவில்லை!’

‘முட்டாள்களே!’ என்று கர்ஜித்தார் ராஜா, ‘நீங்கள் ஐந்து நிமிடத்துக்குள் இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்காவிட்டால் உங்களையெல்லாம் வேலையை விட்டு நீக்கிவிடுவேன்!’

டொக் டொக்... டொக் டொக்!

பயந்த காவலாளிகள் நேராக அந்த நாட்டின் படைத் தளபதியிடம் ஓடினார்கள். ’ஐயா, தயவுசெய்து இந்த டொக் டொக் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து நிறுத்துங்கள், இல்லாவிட்டால் எங்கள் வேலை போய்விடும்’ என்று கெஞ்சினார்கள்.

அவர் பெயர் ரன்வீர் சிங். ஆறடி உயரம், மூன்றடி அகலம், முகத்தில் கம்பீரமான முறுக்கு மீசை!

‘முட்டாள்களே’ என்று கத்தினார் ரன்வீர் சிங். கை தட்டினார், ‘யாரங்கே!’

உடனே, சில படை வீரர்கள் ஓடிவந்தார்கள். ‘என்ன விஷயம் தளபதியாரே?’

டொக் டொக்... டொக் டொக்!

‘இந்தச் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடியுங்கள்’ என்று கட்டளையிட்டார் தளபதி.

வீரர்கள் ஓடினார்கள். அரண்மனையின் ஒரு மூலை, முடுக்கைக்கூட விட்டுவைக்காமல் சல்லடை போட்டுத் தேடினார்கள், பெட்டிகளைத் திறந்தார்கள், சுவர்களைத் தட்டிப் பார்த்தார்கள், இந்தச் சத்தத்தில் அரண்மனையில் அன்று இரவு யாருக்கும் தூக்கம் வரவில்லை. தூங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள்கூட எழுந்துவிட்டன! டொக் டொக்... டொக் டொக்!

மறுநாள் காலை, அரசர் அசந்து தூங்கிவிட்டார். ஆகவே, சபைக்குத் தாமதமாகதான் வந்து சேர்ந்தார்.

முதல் வழக்கு, ஒரு பசு மாடு பற்றியது. அது யாருக்குச் சொந்தம் என்று இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டார்கள்.

‘என்னுடைய மாடு அது!’ என்றான் முதல் ஆள்.

’இல்லவே இல்லை, அது என்னுடைய மாடு’ என்றான் இன்னொருவன், ‘இரண்டு வருடங்களாக நான்தான் அந்த மாட்டிடம் பால் கறக்கிறேன்!’

’பொய் சொல்லாதே, மூன்று வருடங்களாக நான் அந்த மாட்டின் பாலைக் கறந்து, அதில் இனிப்புகளைத் தயாரித்துக் கடவுளுக்குப் படைத்துவருகிறேன்’ என்றான் முதல் ஆள்.

‘எனக்குத் தலை வலிக்கிறது’ என்றார் ராஜா. ‘மந்திரியாரே, எனக்கு வயிறு சரியில்லை, இவர்கள் ரொம்ப சத்தம் போடுகிறார்கள், பேசாமல் அந்த மாட்டை ரெண்டாக வெட்டி ஆளுக்கு ஒரு துண்டு கொடுத்துவிடுங்கள்.’

‘அரசே, மாட்டை வெட்டுவது தவறு’ என்றார் மந்திரி சிந்தாமணி.

அவருடைய வேலையே இதுதான். ராஜா பசி மயக்கத்தில், களைப்பில் ஏதாவது தவறான தீர்ப்பு வழங்கிவிட்டால், அதைக் கவனித்துத் திருத்துவது. பல வருடங்களாக இந்த வேலையைச் செய்து அவருடைய தலையே வழுக்கையாகிவிட்டது.

மந்திரியாரே, எனக்கு மூன்று நாளாகத் தூக்கம் இல்லை’ என்றார் ராஜா, ‘அப்புறம் எப்படி நான் ஒரு நல்ல அரசனாக நடந்துகொள்ளமுடியும்?’

‘தூக்கம் இல்லையா? ஏன் அரசே?’ நடந்ததைச் சொன்னார் ராஜா. ’டொக் டொக்’ என்ற சத்தத்தைக் கேட்டதும் சிந்தாமணியின் முகம் மலர்ந்தது, ‘கவலைப்படாதீர்கள், உங்கள் பிரச்னையை நான் தீர்த்துவைக்கிறேன்’ என்றார்.

அன்று இரவு, உள்ளூர் மிருகக்காட்சி சாலையைச் சேர்ந்த பசுபதி அரண்மனைக்கு வந்தார்.

டொக் டொக்… டொக் டொக்!

பசுபதி இந்தச் சத்தத்தைக் கேட்டதும் வீட்டுக்கு ஓடினார். ஒரு கூண்டு, பாத்திரம் நிறைய புழுக்களைக் கொண்டுவந்தார். சத்தம் கேட்ட இடத்தின் அருகே சுவரில் ஓர் ஓட்டை போட்டு, அதில் அந்தப் புழுக்களை வைத்தார். பிறகு எல்லாரும் ஒளிந்துகொண்டு காத்திருந்தார்கள்.

சிறிது நேரத்தில் ஒரு சிறிய சிவப்பு, பழுப்புப் பறவை அங்கே வந்தது. அதன் அலகு மஞ்சள் நிறத்தில் நீளமாக இருந்தது. புழுக்களைப் பார்த்தவுடன் ஆசையாகக் கொத்தித் தின்ன ஆரம்பித்தது.

பசுபதி உடனே பாய்ந்தார். அதனைக் கூண்டுக்குள் அடைத்துவிட்டார்.

அரசர் மகிழ்ந்துபோனார் , ‘இந்தச் சின்ன பறவையா இவ்வளவு சத்தம் போட்டது?’ என்று வியந்தார் . ‘நன்றி நண்பர்களே, உங்கள் சேவை இந்த நாட்டுக்குத் தேவை!’

மறுநாள் காலை. நன்றாகத் தூங்கி எழுந்த அரசர் மலர்ந்த முகம், புத்துணர்ச்சியோடு சபைக்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டார்!

பசுபதி அவர் முன்னே நின்றான், ‘அரசே, இந்தப் பறவை எனக்கு வேண்டாம்’ என்றான்.

‘ஏன்? என்னாச்சு?’

‘இந்த டொக் டொக் சத்தத்தால் மிருகக்காட்சி சாலையில் மிருகங்களெல்லாம் ராத்திரி முழுக்கத் தூங்கவில்லை. இப்போது, அவை தூங்கிவிட்டன, மிருகங்களைப் பார்க்க வரும் குழந்தைகள் ஏமாந்துபோகிறார்கள்!’

‘அடடா’ என்றார் ராஜா. ‘இந்தப் பறவையை என்ன செய்யலாம்? பிரியாணி செய்து சாப்பிட்டுவிடலாமா?’அரசரின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட சிந்தாமணி, ‘அச்சச்சோ, அது தப்பு’ என்று அலறினார், ‘இது மிகவும் அபூர்வமான பறவை, அதிர்ஷ்டப் பறவையும்கூட, இதைக் கொல்லக்கூடாது!’

‘அப்படியானால் என்ன செய்வது?’ என்றார் அரசர், ‘இந்தச் சத்தத்தால் மிருகங்களும் தூங்கமுடியாது, மனிதர்களும் தூங்கமுடியாது, நாடுமுழுக்கத் தூக்கமில்லாதவர்கள் உலவிக்கொண்டிருந்தால் என்ன ஆவது?’

இன்னொரு மந்திரி முன்னே வந்தார், ‘மன்னா, அந்தப் பறவையை நான் வளர்க்கிறேன்’ என்றார். ’எங்கள் வீட்டில் ஒரு பொடிப்பயல் இருக்கிறான், அவன் ராத்திரி முழுக்கக் கத்துவதால் நாங்கள் யாரும் தூங்குவதே இல்லை, அதோடு இந்தச் சத்தமும் இருக்கட்டும், பிரச்னையில்லை!’’ஆஹா’ என்று கத்தினார் சிந்தாமணி. ‘யாரையும் தூங்கவிடாத இந்தப் பறவைக்கு ஏற்ற ஒரு நல்ல இடத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!’

உடனடியாக, அந்தப் பறவை அவர்களுடைய நாட்டின் எல்லைப் பாதுகாப்புப் பகுதிக்கு அனுப்பப்பட்டது. அங்கே அது ராத்திரி முழுக்க டொக் டொக் சத்தம் போட, வீரர்கள் தூக்கம் இல்லாமல் விழிப்புணர்வோடு வேலை பார்த்தார்கள். எதிரிகளால் அந்த நாட்டை நெருங்கமுடியவில்லை!

மகிழ்ச்சியடைந்த ராஜா, அந்தப் பறவையைத் தன்னுடைய நாட்டின் தேசியப் பறவையாக அறிவித்தார். அதன் ‘டொக் டொக் சேவை’யால் எல்லாரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்.