udalai uruvaakkubavargal

உடலை உருவாக்குபவர்கள்

அம்மா வயிற்றுக்குள் இருக்கும்போதே, தன் குட்டித் தங்கைக்கு எப்படி முடியை, நுரையீரல்களை, நீண்டுகொண்டே இருக்கும் கால்களை எல்லாம் உருவாக்கிக்கொள்ளத் தெரிகிறது என வாவா வியக்கிறான். நம்மில் இருக்கும் கோடிக்கணக்கான செல்கள், எப்படி வளர்ந்து நமது உடலை உருவாக்குகின்றன எனத் தெரிந்துகொள்ளலாம், வாருங்கள்.

- shilpa charles

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

வாவாவின் தங்கை சின்னு வேகமாக வளர்ந்து வருகிறாள்.

முதன்முதலில் சின்னுவை மருத்துவமனையில் வாவா பார்த்தபோது அவள் சின்னதாக, முடியே இல்லாமல் இருந்தாள். சின்னு மென்மையாக, இளஞ்சிவப்புநிறப் புழு மாதிரி இருந்ததால் அவளைத் தூக்கவே பயப்பட்டான் வாவா.

இப்போது சின்னுவிற்கு வாவாவைப்போல கருமையான முடி இருக்கிறது. அம்மம்மாவின் மூக்கைப் போலவே உருண்டையாகவும் வளைந்தும் இருக்கிறது அவள் மூக்கு.

சின்னுவின் கண்கள் அம்மா, பானு சித்தியின் கண்களின் நிறத்தைக் கொண்டிருக்கின்றன.

நாளுக்கு நாள் ஒரு பெரிய வலுவான முட்டையைப் போல வளர்ந்து வரும் பானு சித்தியின் வயிற்றைப் பார்த்த வாவா, “ஆச்சரியமா இருக்கு!” என்றான்.

“முதல்ல, அம்மாவோட வயித்துல சின்னு ஒரு குட்டி முட்டை போலதான் இருந்தா... உங்களோட வயித்துல இருக்க பாப்பா மாதிரி. இப்போ கொஞ்சம், நம்ம எல்லாரையும் மாதிரி இருக்கா!”

“இந்த பாப்பா எப்படி இருக்கும்னு நினைக்கிற, வாவா?” என்று கேட்டார் பானு சித்தி.

சின்னு அம்மாவின் வயிற்றுக்குள் இருந்தபோது, அவள் பொறுமையாக வளர்ந்துகொண்டிருப்பதாகச் சொல்லியிருந்தார் அம்மா. போதுமான வலுப்பெற்று, உலகைச் சந்திக்கத் தயாரான பின்னரே சின்னு வெளியே வருவாள் என்றும் விளக்கியிருந்தார்.

“சின்னு உள்ள இருந்தபோது அம்மா வயிறு இருந்தத விட, உங்க வயிறு குட்டியா இருக்கே, பானு சித்தி? நெஜமாவே பாப்பா உள்ள இருக்கா?”

“ஹாஹா! பாப்பா உள்ளதான் இருக்கு. இப்போதைக்கு ரொம்ப சின்ன, செல் உருண்டையா இருக்கு. ஆனா, எல்லாம் மும்முரமா வேலை செய்யுது. எல்லா செல்களும் பிரிஞ்சு பிரிஞ்சு, பெருகிகிட்டே இருக்கு. மெல்ல மெல்ல, அந்த செல்லெல்லாம் ஒண்ணுசேர்ந்து கண்ணாகவும், காதாகவும், மத்த பாகங்களாகவும் மாறும்.”

“ஆங்! செல் அப்படின்னா என்னன்னு எனக்குத் தெரியும்!” வாவா ஜன்னலின் வழியாக எக்கி மரத்திலிருந்து ஒரு மாதுளம்பழத்தைப் பறித்தான். “இந்த முழுப் பழமும் ஒரு உறுப்புன்னா, இதுல உள்ள சின்னச்சின்ன விதைகள்தான் செல்கள்” என்றான் வாவா.

தன் உடலில் மட்டுமல்ல, அனைத்து உயிரினங்களிலுமே செல்கள்தாம் இருப்பதிலேயே சிறிதான, அடிப்படையான உயிர்ப்பொருள் என வாவாவுக்குத் தெரியும்.

“ஆமாம், வாவா. செல்கள்தான் எல்லா உயிர்களையும் உருவாக்கும் கட்டுமானப் பொருள்” என்றார் பானு சித்தி.

“ஆனா, எல்லா உயிர்களும் செல்களாலதான் உருவாகுதுன்னா, அப்போ ஒரு செல் என்னவா வேணாலும் ஆகலாமே? சித்திக்குப் பிறக்கும் குழந்தை பாண்டா கரடியா கூட இருக்கலாம்!” என்றான் வாவா.

பானு சித்தி சிரித்துவிட்டு, “அப்படியிருந்தா அவன பாண்டா அண்டான்னே கூப்பிடலாம்” எனச் சொன்னார். “எனக்கு பாண்டா அண்டா வேணாம்!” என்று வாவா தரையை உதைத்தான்.

“செல்கள் ரொம்ப புத்திசாலிகள், வாவா. ஒவ்வொரு செல்லும் அது என்ன வேலை செய்யணும் என்பதையும், வேலை முடிஞ்சு அது என்னவா ஆகும் என்பதையும் தகவலா சேமிச்சி வெச்சிருக்கும். அந்தத் தகவலுக்குப் பேர் டி.என்.ஏ* அதாவது ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலம்” என்று விளக்கினார் பானு சித்தி.

“இந்த டி.என்.ஏ பார்க்க எப்படி இருக்கும்?” என்று கேட்டான் வாவா.

*DNA - deoxyribonucleic acid

“டி.என்.ஏ ஒரு சுழலும் ஏணியப் போல இருக்கும். கிட்டத்தட்ட நூடுல்ஸ் மாதிரி ரெண்டு இழைகள் அதுல இருக்கும். அதுல அப்பா, அம்மாகிட்ட இருந்து வந்த ஜீன்கள் என்ற வழிமுறைகள் இருக்கும்” என்றார் பானு சித்தி.

இது வாவாவுக்கு அவன் சமையலறையில் பார்த்த நூடுல்ஸை நினைவுபடுத்தியது.

இரண்டு நூடுல்ஸ்களை கைகளில் எடுத்துக் கொண்டு, “அப்போ... இந்த ஜீன்கள் எனக்கு அம்மாகிட்ட இருந்து வந்ததா?” என விளையாட்டாய்க் கேட்டான் வாவா.

“பாதி அம்மாகிட்ட இருந்து, பாதி அப்பாகிட்ட இருந்து. ஒரு ஜீன் தொகுப்பு அம்மாவோடது, இன்னொண்ணு அப்பாவோடது” என்றார் பானு சித்தி.

“பாண்டா அண்டாவோட அப்பாவும் அம்மாவும் பாண்டாக்களா இருந்திருந்தா, அதுவும் பாண்டாவா பிறக்கும். ஆனா, நானும் சித்தப்பாவும்தானே பாப்பாவோட அப்பா அம்மாவா இருக்கிறோம்” என விளக்கினார் பானு சித்தி.

“அப்போ, இப்படித்தான் ஒரு செல்லுக்கு தான் என்னன்னு தெரியுது! அந்த விஷயம் டி.என்.ஏல இருக்கு!” என்றான் வாவா.

“ஆனா, தோல், முடி, கண், விரல் எல்லாம் எந்த மாதிரி செய்யணும்னு பாண்டா அண்டாவுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான் வாவா.

“நம்மளோட எல்லா செல்களுக்குள்ளயும் ஒரு ப்ளூப்ரிண்ட் இருக்கு. இந்த வீட்டக் கட்டினபோது அம்மாகிட்ட கட்டடக் கலைஞர் ஒரு திட்டத்த குடுத்தாரு. ஞாபகமிருக்கா?” என்றார் பானு சித்தி.

“ஆமா. அந்தத் திட்டத்தாலதான் வீட்டோட கதவு, ஜன்னல், வாசல், கூரையெல்லாம் எங்கெங்க இருக்கணும்னு நமக்குத் தெரிஞ்சுது” என்றான் வாவா.

“நம்ம டி.என்.ஏவும் ஒரு ப்ளூப்ரிண்ட் மாதிரிதான். அது செல்களுக்கு, என்ன செய்யணும், எப்போ உருவாக்கத் தொடங்கணும்னு சொல்லும். ஒவ்வொரு செல்லும் பிரிஞ்சு பெருகும்போது, ஜீன் அத கண்ணாக, விரலாக, இல்ல ரெண்டு நுரையீரலாக மாறணும் அப்படின்னு சொல்லுது” என்றார் பானு சித்தி.

“அப்போ, ஒவ்வொரு உயிரினமும் தன்னைத்தானே கட்டியெழுப்பிக்கிற வீடு போல! அற்புதம்தான்!” என வியந்தான் வாவா.

“ஆமா. அப்புறம் வாழ்நாள் முழுசும் நம்ம உடம்பு அதையே வளர்த்தும், பராமரிச்சும் வெச்சுக்குது. அதனாலதான் நீ உயரமா வளர்ந்துகிட்டே போற!” என்றார் பானு சித்தி.

“அப்போ, நான் வளர எதுவுமே செய்ய வேண்டியதில்ல! என்னோட டி.என்.ஏவே அந்த வேலையப் பார்த்துக்கும்” எனச் சொல்லி சிரித்தான் வாவா.

“நீயும் அத நல்லா கவனிச்சுக்கணும். உன்னோட உடம்புக்கு தேவையான தூக்கமும் சாப்பாடும் வேலையும் குடுத்தா, அது தன்னோட வேலையை சுலபமாகவும் திறனுடனும் செய்யும்” என்றார் பானு சித்தி.

“கண்டிப்பா செய்வேன் சித்தி!” என்றான் வாவா.

தகவல் பேழை

மனித உடலில் சராசரியாக எத்தனை செல்கள் இருக்கின்றன, தெரியுமா?

37.2 ட்ரில்லியன் செல்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.

செல்கள் மிக மிகச் சிறியவை. அவற்றை நுண்ணோக்கி வழியாகத்தான் பார்க்கமுடியும். உங்கள் கையிலுள்ள ஒவ்வொரு செல்லும் ஒரு மணற்துகளின் அளவு இருந்தாலே உங்கள் கை ஒரு பள்ளிப் பேருந்து அளவுக்கு இருக்கும்!

உங்கள் குடும்ப மரவடிவப் படத்தை உருவாக்குங்கள்.

உங்கள் குடும்பத்தை வரையுங்கள்! உங்களின், உங்களது உடன்பிறந்தோரின், பெற்றோரின் சாயல்கள் யாரிடமிருந்தாவது வந்திருக்கிறதா எனக் கண்டுபிடியுங்கள்.

உங்கள் அண்ணனின் கட்டுக்கடங்காத தலைமுடி நாக்பூரிலுள்ள ப்ரித்வி மாமாவிடம் இருந்து வந்ததா? இல்லை, பாலம்பூரிலுள்ள பின்பின் அத்தையிடமிருந்து வந்ததா?

உங்கள் பெரியப்பா மகளின் கன்னக்குழிகள் பாட்டியிடமிருந்து வந்தனவா?