udavum karam

உதவும் கரம்

வகுப்புக்கு ஒரு புதிய பெண் வந்திருக்கிறாளாம். அவள் பள்ளியைச் சுற்றிப்பார்த்துத் தெரிந்துகொள்ள நான் உதவவேண்டுமாம். ஆனால்... அவள் நம்மைப்போல் இல்லையே! அவளுக்கு நான் எப்படி உதவுவது? அனைவருக்கும் இவ்வுலகில் இடம்வேண்டும். எல்லோரும் நட்போடு வாழவேண்டும் என்பதை உணர்த்தும் ஓர் அற்புதமான கதை!

- N. Chokkan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அன்புள்ள… எப்படியும் நீ இந்தக் கடிதத்தைப் படிக்கப் போவதில்லை, ஆகவே, இங்கே உன்னுடைய பெயரை எழுதவேண்டிய அவசியமும் இல்லை.

நீ எங்களுடைய பள்ளிக்குப் புதிதாக வந்திருக்கிறாய். அதனால், உனக்கு நான் வழிகாட்டியாக இருக்கவேண்டும் என்று என்னுடைய ஆசிரியை சொன்னார். ஆனால், 'வழிகாட்டி' என்றால் என்ன என்றே எனக்குத் தெரியவில்லை. அப்புறம் அகராதியில் தேடிக் கண்டுபிடித்தேன். உனக்கு வழிகாட்டியாக இருக்க நான் தயார். ஆனால், உன்னைப் பற்றிய முக்கியமான அந்த விஷயத்தை அவர் எனக்குச் சொல்லவில்லையே.

நேற்றைக்குப் பள்ளியிலிருந்து வீட்டுக்குச் செல்லும்போது அலி,

கௌரவ், சுமி, ராணி எல்லாரும் அதைப் பற்றியேதான்பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்றே எனக்குப் புரியவில்லை என்று நான் பொய் சொல்லவேண்டியிருந்தது.

மொத்தத்தில், நண்பர்களிடம் என்னைப் பொய் பேச வைத்துவிட்டாய் நீ.

இப்படிக்கு,நான்.

ஹாய்,மற்றவர்களை வெறித்துப் பார்ப்பது தவறு என்று என் அம்மா அடிக்கடி சொல்வார். ஆனால், எல்லாரும் நாள் முழுக்க உன்னை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். உனக்குக் கஷ்டமாக இருக்காதா?உன்னை மட்டுமா? உனக்கு ’வழிகாட்டி’யாக உன்னோடு திரிந்துகொண்டிருப்பதால் அவர்கள் என்னையும்தான் வெறித்துப் பார்க்கிறார்கள்!

நீ ஏன் எங்களுடைய பள்ளிக்கு வந்தாய்? நீ முன்பு படித்த பள்ளியிலேயே தொடர்ந்து படித்திருக்கலாமே. உன்னால்தானே எனக்கு இத்தனை பிரச்சினை!

நேற்றைக்கு என்ன நடந்தது தெரியுமா? நான் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது கெளரவும் அலியும் ஏழாம் வகுப்பைச் சேர்ந்த அவர்களுடைய இரண்டு நண்பர்களும் என்னைப் பிடித்துக்கொண்டார்கள். உன்னைப் பற்றி விசாரித்தார்கள். அவர்களிடம் நான் எதுவும் பேச மறுத்து விட்டேன். ஆகவே, அவர்கள் என்னுடைய பையைப் பிடுங்கிக் கொண்டார்கள். அதைத் திரும்பத் தரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.அதன் பிறகு, அவர்கள் அந்தப் பையைச் சாலையோரமாகவீசிவிட்டார்கள். அதை எடுப்பதற்காக நான் மலைப்பக்கமாக இறங்கினேன். அப்போது என்னுடைய சட்டை எங்கேயோ சிக்கிக் கிழிந்துவிட்டது. அம்மா என்னை மிகவும் திட்டினார்.

இதெல்லாமே உன்னுடைய தவறுதான்.இப்படிக்கு,நான்.

ஹலோ,

இந்தப் பையன்களின் தொல்லை தாங்கமுடியவில்லை. எப்போதும் அவர்கள் என்னைத் தொந்தரவு செய்கிறார்கள். திரும்பத் திரும்ப உன்னுடைய அந்த விஷயத்தைப் பற்றியேதான் கேட்கிறார்கள்.

இதை அவர்கள் என்னிடம் ஏன் கேட்கவேண்டும்? உன்னிடமே நேரடியாகக் கேட்கலாமே? அது எப்படி உனக்கு வந்தது, எப்படி இயங்குகிறது என்றெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?

நீ எல்லா வேலைகளையும் ஒரே கையினால்தான்செய்துகொண்டிருந்தாய். உன்னுடைய இடக்கை நகரவே இல்லை. ஆரம்பத்தில் உனக்கு என்ன பிரச்னை என்று என்னால்ஊகிக்க இயலவில்லை. பிறகு, கொஞ்சம் பக்கத்தில் வந்து பார்த்தபோதுதான் ஏதோ சரியில்லை என்று எனக்குப் புரிந்தது.உன்னுடைய ஒரு கை மிகவும் வினோதமாக இருந்தது, அந்தக் கைமீது பிளாஸ்டிக் பூசியது போல் இருந்தது. அது ஒரு பொம்மைக் கையாக இருக்குமோ என்று நான் நினைத்தேன். சிறிது நேரம் கழித்துதான் எனக்கு விஷயம் புரிந்தது. அதுமட்டுமல்ல. மதிய உணவு நேரத்தில் என்ன நடந்தது என்பதையும் நான் கவனித்தேன்.

சரி, அப்புறம் பார்க்கலாம்.

இப்படிக்கு,நான்.

ஹலோ, என்னுடைய அக்கா தில்லியில் பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார். அவர் இன்றைக்கு என்னை தொலைபேசியில் அழைத்தார். நான் அவரிடம் உன்னைப் பற்றிச் சொன்னேன். ”அக்கா, எங்கள் வகுப்புக்கு ஒரு புதிய பெண் வந்திருக்கிறாள். அவளுக்கு ஒரு பொய்க் கை இருக்கிறது.”அதைக் கேட்ட அக்கா சொன்னார், ”அது பொய்க் கை அல்ல, ப்ராஸ்தெடிக் கை.”

இதோ பார், நான் உனக்கு ஓர் அறிவுரை சொல்லப்போகிறேன். நீ பள்ளிக்குப் புதியவளாக இருக்கலாம்.

அதற்காக எப்போதும் மூலையிலேயே தனியாக நின்று கொண்டிருந்தால் மற்ற பையன்கள், பெண்கள் உன்னை வெறித்துப் பார்ப்பார்கள். உன்னைப் பற்றியேதான் ஏதாவது வம்பு பேசிக்கொண்டிருப்பார்கள்.

நீ அதையெல்லாம் மறந்துவிட்டு, எங்களுடன் விளையாட வா. நீ ஊஞ்சல் ஆடலாமே! ஊஞ்சலாடுவது எல்லாருக்கும் பிடிக்குமே! நீ இந்தப் பள்ளிக்கு வந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. இனிமேல் நீயாகவே  பள்ளியில் எங்கும் சென்றுவரலாம். உன்னை நான் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க முடியாது. இதெல்லாம் உனக்கே புரியாதா? உனக்கு என்ன சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை!

இப்படிக்கு,

நான்.

ஹாய்,மதிய உணவு நேரத்தில் நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, நான் உன்னைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு நிஜமாகவே உன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் வந்திருக்கிறது. ஒரே ஒரு கையோடு இருப்பது வினோதமான விஷயமா? உன்னுடைய கைமட்டும்தான் பொய்யா, அல்லது தோள்பட்டையிலிருந்து விரல்வரை எல்லாமே பொய்யா?மன்னித்துவிடு, நான் பொய் என்று சொல்லியிருக்கக்கூடாது. ப்ராஸ்தெடிக் என்று சொல்லியிருக்க வேண்டும். இன்றைக்கு சுமியும் கௌரவும் நானும் ஒன்றாகப் பள்ளிக்கு நடந்து வந்தோம். வழியில் அவர்கள் உன்னை வைத்து ஒரு புதிய விளையாட்டை விளையாடினார்கள். அதன் பெயர், ’ஒற்றைக் கை சவால்’.

அதாவது, எல்லா வேலைகளையும் ஒரே கையால் செய்யவேண்டும். உதாரணமாக, பையில் பொருள்களை எடுத்து வைப்பது, சட்டைக்குப் பொத்தான் போடுவது போன்றவை. சுமியால் அவளுடைய ஷூ லேஸ்களை ஒரே கையால் கட்ட இயலவில்லை. ஆகவே, அவள் ஷூ லேஸைக் கட்டாமலே நடந்துவந்தாள். திடீரென்று தடுக்கி விழுந்துவிட்டாள். அவளுடைய முகவாயில் வெட்டிவிட்டது. இதைப் பார்த்த ஆசிரியை அவளுக்கு மருந்து போட்டுவிட்டார். ஆனால், சுமி அலட்சியமாக இருந்ததற்காக அவளை மிகவும் திட்டினார். "மலைப்பகுதியில் ஷூ லேஸ் கட்டாமல் இப்படி ஓடலாமா? நீ வீட்டுக்குத் திரும்பும்போது எங்கேயாவது விழுந்துவிட்டால் என்ன ஆவது!”

இந்தப் பெரியவர்கள் எப்போதும் இப்படிதான். எதற்கெடுத்தாலும் கவலைப்படுவார்கள்!

உன் உண்மையுள்ள,

நான்.

ஹாய்,உனக்குத் தெரியுமா? சில நேரங்களில் நாம் எதைப்பற்றியாவது பேசிக்கொண்டிருப்போம். ஆனால், சிறிதுநேரம் கழித்து முற்றிலும் மாறுபட்ட வகையில் அது அப்படியே நடந்துவிடும். என்னுடைய முந்தைய கடிதத்தில், நான் சுமியைப்பற்றியும் ஷூ லேஸ்களைப் பற்றியும் உனக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். இன்றைக்கு, நீ உன்னுடைய ஷூ லேஸ்களைக் கட்டுவதை நான் பார்த்தேன்.

ஆஹா! நீ பிரமாதமான ஆள்தான்! நான் இரண்டு கைகளை வைத்து ஷூ லேஸ் கட்டுவதைவிட வேகமாக நீ ஒரே கையால் ஷூ லேஸ் கட்டிவிட்டாய்.

நீ என்னுடைய தோழியாக இருந்தால், நான் உன்னுடன் ஷூ லேஸ் கட்டும் பந்தயம் வைத்துக்கொள்வேன். அல்லது, ஒரே கையால் எப்படி ஷூ லேஸ் கட்டுவது என்று சொல்லித்தருமாறு உன்னிடம் கேட்பேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் வீட்டுக்கு வந்த பிறகு ஒரே கையால் என்னுடைய ஷூ லேஸைக் கட்ட முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், என்னால் அது முடியவில்லை. நீ மட்டும் எப்படி ஒரே கையால் ஷூ  லேஸைக் கட்டுகிறாய்? நாளைக்கு நான்  உன்னிடம் அதைப் பற்றிக் கேட்கவேண்டும்.

மிகவும் ஆர்வத்துடன்,

நான்.

ஹாய்,ஒரே கையால் நிறைய வேலைகளைச் செய்யலாம் என்று நீசொன்ன பிறகு, நான் அதை முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், அது மிகவும் சிரமமாக இருந்தது!எனக்கு இன்னும் இந்த விஷயம் புரியவே இல்லை. நீ எப்படி ஒரேகையால் எல்லா வேலைகளையும் செய்கிறாய்? குளிப்பது, உன்னுடைய ஆடைகளை உடுத்திக்கொள்வது, உன்னுடைய பையை எடுத்து வைப்பது… இதெல்லாம் உனக்குக் கஷ்டமாக இல்லையா?அன்றைக்கு மதிய உணவு நேரத்தில் உன்னைப் பார்த்ததிலிருந்து, நீ எல்லா வேலைகளையும் வித்தியாசமாகச் செய்ய வேண்டியிருக்கும் என்பது எனக்குப் புரிந்தது, ஆனால், அது எந்த அளவு சிரமமாக இருக்கும் என்பதை நான் இப்போதுதான் புரிந்துகொள்கிறேன்.

இதோ பார், நான் முன்பு உன்னிடம் சொன்ன விஷயங்களுக்காக என்னை மன்னித்துவிடு… குறிப்பாக, நீ எங்களோடு விளையாடவேண்டும் என்று நான் அவசரப்பட்டு அழைத்தது தவறுதான்.

அப்போது நீ மிகவும் கூச்சமாக உணர்ந்திருப்பாய் என்று நினைக்கிறேன். ஒருவேளை நீ விளையாட வந்திருந்தாலும், உன்னால் ஊஞ்சலில் விளையாடியிருக்க முடியாது. நான் ஒரே கையை வைத்துக்கொண்டு ஊஞ்சலாட முயன்றேன், முடியவில்லை, இரண்டு கைகளாலும் ஊஞ்சலைப் பிடித்துக் கொள்ளாவிட்டால் சமநிலை தவறிவிடுகிறது. அது உனக்குச் சிரமம்தான். ஆனால், நீ ஜங்கிள் ஜிம் பிரமாதமாக விளையாடுகிறாய். என்ன, உன்னால் அந்தக் கம்பிகளிலிருந்து தொங்கத்தான் முடிவதில்லை. அப்புறம், நீ ஓட்டப்பந்தயத்தில் அசத்துகிறாய். விளையாட்டு நாளன்று ஓட்டத்தில் முதல் பரிசு வாங்கிய அலியைவிட நீ வேகமாக ஓடுகிறாய்.

அப்புறம் பார்க்கலாம்.

இப்படிக்கு,

நான்.

ஹலோ,அந்தப் படம் மிகவும் வேடிக்கையாக இருந்தது, இல்லையா?எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்திருந்தது. சிரித்துச் சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது, சிரிப்பு அதிகமாகி அழுவது போலாகிவிட்டேன். பள்ளியில் திரைப்படங்களைத் திரையிட்டுக் காட்டுகிற நாளெல்லாம் எனக்கு மிகவும் பிடிக்கும். காரணம், அப்போது வகுப்புகள் இருக்காது.

நீ நம்முடைய பள்ளிக்கு வருவதற்கு முன்னால், அவர்கள் ஒரு தொலைந்துபோன புலிக்குட்டியைப் பற்றிய படமொன்றைக் காட்டினார்கள்.  பயமாக இருந்தது. அது உண்மைக்கதை என்பதால் அப்படி.  அதன்பிறகு, யாரோ அதைக் கண்டுபிடித்து, அதன் குடும்பத்துடன் சேர்த்துவைத்தார்கள்.

உனக்குத் தெரியுமா? இது போன்ற உண்மைக்கதைகளை, ஆவணப்படம் என்பார்கள். புலிக்குட்டிகள் மிகவும் அழகானவை, இல்லையா? சென்றவருடம் எங்கள் வீட்டருகே ஒரு நாய்க்குட்டி இருந்தது. அது மிகவும் அழகாக இருந்தது. ஆனால், அது வளர்ந்தபிறகு அவ்வளவு அழகாக இல்லை. சரி, நான் கிளம்புகிறேன்.

இப்படிக்கு,நான்.

ஹலோ, ஹலோ!

உனக்குத் தெரியுமா, உன்னை பேருந்தில் பார்த்தபோது எனக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது! என்னுடைய தந்தையும் உன்னுடைய தந்தையும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவே தெரியாது. இந்த அலுவலக பிக்னிக்குக்கு நீ வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. காரணம், சென்ற வருடம் நாங்கள் இப்படி பிக்னிக் சென்றபோது என் வயதுக் குழந்தைகள் யாருமே வரவில்லை, எனக்கு மிகவும் போர் அடித்தது.

இந்த முறை உன்னோடு மகிழ்ச்சியாக விளையாடினேன்! சரி, எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது, நான் கிளம்புகிறேன். நாளைக்குப் பள்ளியில் பார்ப்போம்.

இப்படிக்கு, நான்.

ஹாய்,

உனக்கு ஓர் எச்சரிக்கை. பள்ளி ஆண்டு விழா நெருங்க நெருங்க, நம்முடைய பிரின்சிபல் சாருக்குக் கொஞ்சம் பித்துப்பிடித்துவிடும். அவர் உன்னைப் பார்த்துக் கத்தலாம். சொல்லப்போனால் அவர் எல்லாரையும் பார்த்துக் கத்துவார். அதைத் தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொண்டு வருத்தப்படாதே. பிரின்சிபல் சார் ஏன் இப்படி நடந்துகொள்கிறார் என்று நான் என்னுடைய தாயைக் கேட்டேன். ”ஆண்டு விழா என்பது அவருடைய கௌரவப்பிரச்னை. அதனால்தான் மிகவும் பதட்டப்படுகிறார்” என்றார்.

அவர் சொல்வது எனக்கு சரியாகப் புரியவில்லை, ஆனால் பிரின்சிபல் சார் மிகவும் பதட்டத்தில் இருப்பதாகதான் எனக்குத் தோன்றுகிறது. இன்றைக்கு நீ அவருடைய தலையைப் பார்த்தாயா? ஏதோ மின்சாரக் கம்பியைத் தொட்டுவிட்டவர்போல் இருந்தார் அவர்! என்ன இருந்தாலும் ராணி அவருடைய மேஜையில் தவளையைப் போட்டிருக்கக் கூடாதுதான்!

சரி, நான் இந்தக் கடிதம் எழுதுவதை அவர் பார்ப்பதற்கு முன்னால், நான் கிளம்புகிறேன்!

இப்படிக்கு,

நான்

ஹேய்,

உன்னுடைய புதிய கை மிகப் பிரமாதமாக இருக்கிறது! நீ கோபித்துக்கொள்ளாவிட்டால் ஒரு விஷயம் சொல்கிறேன்,

உன்னுடைய பழைய கை கொஞ்சம் போர் அடித்தது… அது ஒரு பொம்மைக் கை போல சும்மா கிடந்தது, அவ்வளவுதான்…

ஆனால், இந்தப் புதுக் கை மாய மந்திரம்போல் இருக்கிறது. நீ

இப்போது விரல்களை அசைக்கலாம், எதையாவது பிடிக்கலாம், இன்னும் ஏதேதோ செய்யலாம்!

உன்னுடைய புதுக் கையைப் பார்த்ததும், “நாம் கை குலுக்கலாமா?” என்று நான் கேட்டதை நீ தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டாய் என்று நம்புகிறேன். நான் கொஞ்சமும் சிந்திக்காமல் அப்படிக் கேட்டுவிட்டேன். உன்னுடைய புதிய கையை வைத்து உன்னால் பொருள்களைத் தூக்க முடியுமா? நாளைக்கு நாம் அதை முயற்சி செய்து பார்க்கலாம்.

இன்னொரு விஷயம், நான் இப்பொழுதுதான் யோசித்தேன், இதற்குமுன் நான் உனக்கு எழுதிய ஓரிரு கடிதங்களில் நான் உன்னுடைய ப்ராஸ்தெடிக் கையைப் பற்றிப் பேசவே இல்லை. அதை நான் முற்றிலும் மறந்துவிட்டேன் என்றே சொல்லலாம். உன்னிடம் இன்னும் ஏதேதோ பேசவேண்டும் என்றுதான் எனக்கு ஆசையாக இருக்கிறது. உன்னுடைய கை எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிய குறுகுறுப்பு இப்போது போய்விட்டது. அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை.

நட்புடன்,நான்.

நட்போ-மீட்டர் புதிர்

உங்களுடைய நண்பர்கள் எந்தச் சுற்றுச்சூழலிலும் நன்கு ஒத்துப்போவதற்கு நீங்கள் உதவுவீர்களா? இந்த நட்போ-மீட்டர் புதிரை விளையாடித் தெரிந்துகொள்ளுங்கள்! 1. பள்ளிக்கு ஒரு புதிய மாணவர் வந்திருக்கிறார். அவர் பள்ளியைச் சுற்றிப்பார்த்துத் தெரிந்துகொள்ள நீங்கள் உதவவேண்டும் என்று ஆசிரியர் கேட்டுக்கொள்கிறார். நீங்கள் என்ன நினைப்பீர்கள்?

a. ஆஹா, எனக்கொரு புது நண்பர்!      b. அவரே தனியாக இந்தப் பள்ளியைச் சுற்றிப்பார்க்கலாமே, நான் எதற்கு?

c. ச்சே…

2. உங்கள் வகுப்பில் ஒரு பெண்ணுக்கு சரியாக நடக்கவருவதில்லை, இதைப் பார்த்துப் பிறர் சிரிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்?

a. எதுவும் செய்யமாட்டேன். அது அவர்களுடைய பிரச்னை

b. அந்தப் பெண்ணிடம் ‘இதையெல்லாம் நினைத்து நீ வருத்தப்படாதே” என்பேன்.

c. என் வகுப்புத் தோழர்களிடம், ‘அந்தப் பெண்ணின் நிலைமையில் உங்களைக்            கற்பனை செய்துபாருங்கள்!’ என்று சொல்வேன்

3. உங்களுடைய வகுப்பில் புதிதாகச் சேர்ந்துள்ள ஒரு மாணவர், பாடங்களைச் சரியாகப் படிக்க இயலாமல் சிரமப்படுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?

a. வகுப்பிலேயே மிகவும் நன்றாகப் படிக்கும் மாணவரை அழைத்து,             அவருடைய குறிப்புகளை இந்தப் புதிய மாணவருக்குத் தருமாறு             சொல்வேன்        b. ஆசிரியரிடம் இந்தப் புதிய மாணவருக்கு உதவச் சொல்வேன்        c. அவரிடம் சென்று ‘நான் உனக்கு உதவலாமா?’ என்று கேட்பேன்

4. வகுப்புக்குப் புதிதாக வந்திருக்கும் ஒரு பெண், மிகவும் கூச்ச சுபாவத்துடன் இருக்கிறார். அவர் யாருடனும் விளையாடுவதில்லை. நீங்கள் என்ன செய்யலாம்?

a. அவரை அப்படியே விட்டுவிடலாம். பின்னர் கூச்சம் குறைந்தவுடன்              அவர் விளையாட வருவார்        b. அவரை அழைத்து விளையாட்டுகளில் சேர்த்துக்கொள்ளலாம்        c. அவர் அருகே சென்று அமர்ந்துகொள்ளலாம். அவராகப் பேசட்டும்            என்று காத்திருக்கலாம்.

உங்கள் மதிப்பெண்கள்:

Q1.

a - 1; b - 2 ; c - 3

Q2.

a - 2; b - 1 ; c - 3

Q3.

a - 3; b - 2; c - 1Q4.a - 2; b - 1; c - 3

நீங்கள் வாங்கிய மொத்த மதிப்பெண்களைக் கூட்டிப்பாருங்கள், அதற்கான பலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்:

4-6 மதிப்பெண்கள்: நீங்கள் பிறவி நண்பர். எப்போதும் பிறருக்கு உதவுவீர்கள். பிறர் உங்களிடம் உதவி கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டீர்கள். நீங்களே சென்று உதவுவீர்கள்.

7-9 மதிப்பெண்கள்: நீங்கள் சுதந்திரமானவர். பிறரும் அப்படியே இருக்கவேண்டும் என்று நினைக்கிறவர். உங்களுக்குப் பிறர்மீது அக்கறை உண்டு. ஆனால், அவர்களை எந்தவிதத்திலும் வற்புறுத்த நீங்கள் விரும்புவதில்லை.

10-12 மதிப்பெண்கள்: உங்களுக்குக் கொஞ்சம் கூச்ச சுபாவம் இருக்கிறது. ஆனால், கருணையும் இருக்கிறது. பிறரை மகிழ்விப்பதற்காக உங்களால் இயன்ற மறைமுகமான உதவிகளையெல்லாம் நீங்கள் செய்வீர்கள்.