ulagai sutri oru milagaayudan

உலகைச் சுற்றி ஒரு மிளகாயுடன்!

எளிய மிளகாய்க்குப் பின்னால் எத்தனை சுவாரசியமான கதை இருக்கிறது தெரியுமா? அது நம்மை உலகைச் சுற்றி அழைத்துச்செல்கிறது! இது உணவுக்கு ருசி சேர்க்கும் மிளகாயைப் பற்றிய கதை மட்டுமல்ல. துணிச்சல்மிக்க வீரர்கள், வணிகர்கள் மேற்கொண்ட வீரசாகசப் பயணங்களைப் பற்றியும், புயலடிக்கும் கொந்தளிப்பான கடல்கள், மற்றும் புதிய நிலங்களைப் பற்றியும் நமக்கு எடுத்துச்சொல்லும் நூல் இது. உலகமயமாக்கம் பற்றிய ஆய்வில் பெயர்பெற்ற நிபுணரின் கைவண்ணத்தில் உருவான இந்த சுவாரசியமான நூலை படித்து மகிழுங்கள்!

- Latha Ramakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அப்புவின் வீட்டைச் சுற்றி வளையமிட்டிருந்த தேங்காய், மாங்காய், சப்போட்டா மரங்களுக்குப் பின்னால் சூரியன் அப்போதுதான் கீழிறங்கி மறைந்திருந்தான். வானத்தில் இன்னமும் இளஞ்சிவப்பு வண்ணச் சாயல் மிச்சமிருந்தது. கத்திரிக்காய்கள், தக்காளிகள் மற்றும் சுரைக்காய்கள் என்று அப்பு குடும்பம் பயிரிட்டிருந்த வீட்டுக் காய்கறித்தோட்டத்தில் மிருதுவான ஒளி பரவியிருந்தது. பறவைக்கூட்டங்கள் ஆகாயத்தின் குறுக்காகப் பறந்து தங்கள் கூடுகளுக்குத் திரும்பிக்கொண்டிருந்தன.

அப்புவின் அம்மா இரவு உணவிற்காக மீன்கறி சமைத்துக்கொண்டிருந்தார் அதற்குக் கொஞ்சம் பச்சை மிளகாய்கள் தேவைப்பட்டன. பன்னிரெண்டு வயதுச் சிறுவன் அப்பு, நன்கு வளர்ந்து பளபளப்பாய் பச்சை வண்ணத்தில் மின்னிக்கொண்டிருக்கும் மிளகாய்கள் சிலவற்றை எடுத்துவரத் தோட்டத்திற்குச் சென்றிருந்தான். பச்சை மிளகாய்களைப் பறித்துக்கொண்டிருந்தபோது “உன்னுடைய குடும்பத்திற்கு நான் கொடுப்பவற்றை அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்று ஒரு கனத்த குரல் கூறுவதைக் கேட்டுத் திடுக்கிட்டான்.

அப்புவுக்கு மயிர் கூச்செறிந்தது. யாரேனும் தனக்குப் பின்னால் பதுங்கியிருக்கிறார்களா என்று பார்த்தான். யாருமில்லை. அந்த கனத்த ஆனால் இதமான குரல் அவனுடைய முழங்கால் அளவு உயரத்தில், இலைகளோடு இருந்த மிளகாய்ச் செடியிலிருந்து ஒலிப்பதுபோல் தோன்றியது. “பயப்படாதே, நான் அஜார் உச்சு – மிளகாய்களின் ஆவி” என்று கூறியது அந்தக் குரல்.

“நீ தினமும் மாலைவேளைகளில் என் செடிகளுக்கு நீர் ஊற்றுகிறாய். அவற்றை பிரியத்தோடு பேணிப் பராமரிக்கிறாய். என் மீது நீங்களெல்லாம் இத்தனை அன்பும், அக்கறையும் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என்னுடைய வீட்டிலிருந்து பல்லாயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இங்கு இருக்கிறேன். எனவே, நீ என்னிடம் காட்டும் அன்பும் அக்கறையும் எனக்கு மிகவும் ஆறுதலளிக்கிறது.”

ஒரு செடி பேசுவதைக் கேட்ட அதிர்ச்சியிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு வர அப்புவுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன. பின், அப்பு கேட்டான்: “நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?”

“அமெரிக்காவிலிருந்து, வெகுதூரத்திலிருந்து வருகிறேன். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், மெக்ஸிகோ நாட்டிலிருந்து” என்று அஜார் உச்சு பதிலளித்தார்.

மெக்ஸிகோ எங்கேயிருக்கிறது என்று அப்புவுக்குத் தெரியாது. அதைப் பற்றி மேலும் விவரங்களைக் கேட்பதற்குள் உள்ளே சமையலறையிலிருந்து அப்புவின் அம்மா “அப்பு, சீக்கிரம் மிளகாய்களைக் கொண்டுவா” என்று கூவியழைத்தார்.

அதைக் கேட்டு அஜார் உச்சு “நீ உடனே போயாகவேண்டும் என்று நினைக்கிறேன். நாளை மீண்டும் இங்கே வா. நான் இன்னும் நிறைய விஷயங்களைச் சொல்கிறேன். ஆனால், தயவுசெய்து நாம் பேசியதைப் பற்றி வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. இந்தியாவுக்கும், உலகின் பிற பகுதிகளுக்கும் நாங்கள் பயணமான கதையை உனக்குச் சொல்வேன்” என்று கூறினார். திகைப்பும் பிரமிப்புமாக அப்பு தலையாட்டிவிட்டு, ஓட்டமாய் ஓடிப்போனான். ‘

அட, பின்கட்டிலுள்ள தோட்டத்திலிருக்கும் இந்தச் சின்னச் செடி தொலைதூர நாடாகிய மெக்ஸிகோவிலிருந்து வந்திருக்கிறது!’

“இத்தனை நேரம் அங்கே என்ன செய்துகொண்டிருந்தாய்?” என்று அவனுடைய அம்மா கேட்டார். அஜார் உச்சு சொன்னது அப்புவுக்கு ஞாபகம் வந்தது. “அம்மா! போன முறை பார்த்தபோது இல்லாத தக்காளிகள் நிறைய செடிகளில் புதிதாய் முளைத்திருப்பதைப் பார்த்தேன் நான்” என்றான். மிளகாய்ச்செடி எங்கிருந்து வந்ததோ அந்த இடத்திலிருந்துதான் தக்காளிச்செடியும் வந்தது என்பதைப் பின்னர் தெரிந்துகொள்வான் அவன்.

தன்னுடைய அம்மா சுடச்சுடப் பொறித்துத் தந்த மீன் துண்டுகளை வேகவேகமாய் சாப்பிட்டுமுடித்தான் அப்பு. பின், தன்னுடைய அறைக்கு ஓடி, தன்னுடைய பிறந்தநாளின்போது பரிசாகக் கிடைத்த சின்ன உலக உருண்டையைக் கையிலெடுத்துக்கொண்டான். அவசர அவசரமாய் அதை அப்படியும் இப்படியும் திருப்பிப்பார்த்தான். தென் அமெரிக்கா எந்தப் பகுதியில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முயன்றான். அது உலக உருண்டையின் மறுபக்கத்தில் இருந்தது. அவன் உடனடியாக அஜார் உச்சு குறிப்பிட்ட நாட்டைக் கண்டுபிடித்துவிட்டான். அப்புவுக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்த நாள் வருவதற்கு நெடுநேரமாவதுபோல் தோன்றியது அப்புவுக்கு. அவனுடைய மனம் அன்று பூராவும் மிளகாயையும் மெக்ஸிகோவையும் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தது. வகுப்பில் பாடங்களை சரியாகக் கவனிக்க முடியவில்லை. மாலையில் சீக்கிரமே வீட்டுப்பாடத்தை செய்துமுடித்துவிட்டான்.

அவன் மனம் முழுக்க ஒரே எண்ணம்தான் நிரம்பியிருந்தது – பேசும் செடி! மாலையில் சூரியன் மறையும் சமயத்தில் தண்ணீர்க்குவளையை நிரப்பிக்கொண்டு காய்கறித்தோட்டத்தை நோக்கி நடந்தான். அங்கிருந்த கத்திரிக்காய்ச் செடிகள், பசலைக்கீரை, தக்காளி மற்றும் பாகற்காய்ச் செடிகொடிகளுக்கு நீரூற்றிவிட்டு, பின் மிளகாய்ச்செடியிடம் வந்தான். மிளகாய்ச் செடிகளுக்குத் தன் நீர்க்குவளையில் எஞ்சியிருந்த நீரை ஊற்றி முடித்தான். அங்கிருந்த மிளகாய்ச் செடிகளில் பளீரென்ற பச்சை வண்ண மிளகாய்கள் நிறைந்திருந்தன. அவற்றில் சில சிவப்பாக மாறிக்கொண்டிருந்தன. அவன் தண்ணீர் ஊற்றி முடித்ததும் அஜார் உச்சு பேசினார். “அப்பாடா! இன்று ஒரே வெயில். நீ தண்ணீர் ஊற்றியது எத்தனை இதமாக இருக்கிறது தெரியுமா! மிக்க நன்றி அப்பு!” கதை கேட்கும் ஆர்வத்தோடு, வசதியாய் முழந்தாளிட்டு அமர்ந்துகொண்டான் அப்பு.

“பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு” என்று தங்கள் கதையைச் சொல்லத் தொடங்கினார் அஜார் உச்சு. “இன்க்கா கடவுளர்கள் தென் அமெரிக்காவில் உள்ள அகன்ற பெரிய மலைகளையும் காடுகளையும் ஆண்டுவந்தார்கள். அவர்கள் அங்கேயிருந்த மக்களுக்கு உதவிசெய்ய நான்கு சகோதரர்களை அனுப்பினார்கள். இன்க்கா மக்கள் சோளம், உருளைக்கிழங்கு, தக்காளி, வெண்ணெய்ப்பழம் என்று பல காய், கனி வகைகளைப் பயிரிட்டு வந்தார்கள். அந்த மக்களின் வாழ்க்கையை வளப்படுத்த கடவுளர்களால் அனுப்பிவைக்கப்பட்ட நான்கு சகோதரர்களில் அஜார் உச்சுவும் ஒருவர். அவருடைய ஆவி மிளகாய்ச்செடிகளுக்குள் குடிகொண்டிருக்கிறது. அதுவே மக்களுக்கு மிகவும் பிடித்த பழங்களில் ஒன்றாக மாறியது” என்று அந்தக் குரல் அப்புவிடம் தொடர்ந்து பேசியது.

“உண்மையில் மிளகாய் ஒரு பழம்தான். நீ அதைக் காய்கறி என்று நினைக்கலாம். ஆனால், அது பழம். மற்ற பழங்களைப் போல் அது தித்திப்பாக இல்லை என்றாலும் அதுவும் விதைகளை உற்பத்தி செய்கிறது, அந்த விதைகளிலிருந்து புதிய மிளகாய்ச்செடிகள் முளைக்கின்றன. அவ்வாறாக, அஜார் உச்சுவின் ஆன்மா தொடர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறது. அந்தப் பகுதியின் சோளம் மற்றும் உருளைக்கிழங்குகளின் உப்புச்சப்பற்ற உணவுக்கு சுவையும் மணமும் சேர்க்கும் சிறந்த சுவையூட்டியாக மிளகாய், மிகவும் பிரபலமாகிவிட்டது. ஆஸ்ட்டெக் மற்றும் இன்க்கா மக்கள் பழுத்த, உலர்ந்த மிளகாய்களைக் காணிக்கையாக வழங்கவேண்டும் என்று மன்னர்கள் கேட்டனர்.”“காணிக்கை என்றால் என்ன?” என்று கேட்டான் அப்பு.

“அது மன்னருக்கு மக்கள் தரும் ஒருவித வரி” என்று அஜார் உச்சு விளக்கிக் கூறினார்.

ஆஸ்ட்டெக் மற்றும் இன்க்கா பேரரசுகள்

மெக்ஸிகோ நாடாக இன்றிருக்கும் நிலப்பகுதியில் ஆஸ்ட்டெக் மக்களால் உருவாக்கப்பட்ட பண்டைய மனித நாகரிகம் ஒன்றிருந்தது. அந்த மக்கள் பொதுவான மொழி ஒன்றைப் பேசினார்கள். நஹுவாட்ல். ஏறத்தாழ 700 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் தம்மை ஒரு பேரரசாகக் உருவாக்கிக்கொண்டார்கள். வளமான பயிர்த்தொழிலை உருவாக்கிக்கொண்டார்கள். சோளம், மிளகாய், மிளகு, வெண்ணெய்ப்பழம் மற்றும் பிற பல கனிகளைப் பயிரிட்டு வளர்த்தார்கள்.

மேலும், அழகான துணிமணிகளை நெசவு செய்ய மிக நயமான பருத்தியைப் பயிராக்கினார்கள். அணிகலன்கள் செய்வதற்கு அவர்களிடம் எக்கச்சக்கமாய் தங்கம் இருந்தது. ஒரு ஏரியின் நடுவில் அவர்கள் தங்களுடைய தலைநகர் ‘டெனோச்டிட்லான்’ஐ நிர்மாணித்துக்கொண்டார்கள்.

ஸ்பெயின் நாட்டினர் ஆஸ்ட்டெக் தலைநகரான ‘டெனோச்டிட்லான்’ஐக் கைப்பற்றுகின்றனர்.

இன்னும் சற்று தெற்கு நோக்கி நகர்ந்தால் இன்று ‘பெரு’ என்று அறியப்படும் ஆண்டெஸ் மலைகளின் மீது மற்றொரு இன மக்கள் – இன்க்காக்கள் – வாழ்ந்துவந்தனர். இவர்கள் சூரியக்கடவுளை வழிபட்டுவந்தார்கள். சூரியக்கடவுளின் மகன்களில் ஒருவர் அஜார் உச்சு என்று அவர்கள் நம்பினார்கள். ஒரு பேரரசை அவர்கள் உருவாக்கினார்கள். அது தென் அமெரிக்காவின் தென்முனை வரை விரிந்து பரவியது. வலிமை வாய்ந்த இன்க்கா மன்னர்கள், மக்களிடமிருந்து தங்கத்தையும் மிளகாய்களையும் வரியாக வசூலித்தார்கள். மக்களின் உடலுழைப்பையும் வரியாகப் பெற்றார்கள்.

இன்க்கா மக்களுக்குச் சக்கரங்கள் எப்படி உருவாக்குவது என்று தெரிந்திருக்கவில்லை. அப்படியிருந்தும் அவர்கள் 25,000 மைல்கள் நீளமுள்ள சாலைகளை அமைத்தார்கள். பெரிய நினைவாலயங்களை நிர்மாணிக்க மிகவும் பாரமான கற்களைத் தூக்கிச்சென்றார்கள். அவற்றைக் கட்டையின் மீது உருட்டிச்சென்றார்கள். ஒருவேளை அவர்களுடைய வண்டிகளுக்குச் சக்கரங்கள் தேவைப்படாதிருந்திருக்கலாம். ஏனெனில், அவற்றை இழுத்துச் செல்வதற்கு அவர்களிடம் குதிரையோ, எருமைகளோ இருக்கவில்லை. ஆடுபோன்ற ‘லாமா’க்கள் மட்டுமே பொதிவிலங்குகளாக அவர்களிடம் இருந்தன.

ஆஸ்ட்டெக்

மாயா

இன்க்கா

இடது பக்கமிருப்பது ஆஸ்ட்டெக்-மாயா பேரரசின் வரைபடம். காட்சிப்படுத்தல் மட்டுமே, அளவுகளுக்கானதல்ல.

“இதெல்லாம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது!” என்று கூறினான் அப்பு. “ஆனால், உங்கள் நாட்டிலிருந்து இங்கே இந்தியாவுக்கு எப்படிப் பயணமாகி வந்தீர்கள்?”

உலக உருண்டையில், இந்தியாவை மெக்ஸிகோவிலிருந்து பிரித்திருக்கும் பெருங்கடலையும் ஆப்பிரிக்கக் கண்டத்தையும் அப்பு கவனித்திருந்தான். அவனுடைய கேள்விக்கு “அது ஒரு பெரிய கதை” என்று பதிலளித்துப் பேச ஆரம்பித்தது அந்தக் குரல். “எங்களுடைய பரம்பரை நிலத்திற்கு வந்த அயல்நாட்டினர் எங்கள் மிளகாய்ச் செடியை உலகெங்கும் கொண்டுசெல்ல உதவினார்கள். ஆனால், உண்மையில் அவர்கள் இந்தியாவுக்குச் செல்வதற்கான வழியைத் தேடித்தான் எங்கள் நாட்டிற்கு வந்தார்கள். ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு நாள், ஸ்பெயின் நாட்டு ராஜா-ராணியால் அனுப்பப்பட்டிருந்த மூன்று பாய்மரக் கப்பல்கள் நாங்கள் இருந்த பகுதிக்கு அருகில் வந்துநின்றன. கிறிஸ்டஃபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய கப்பல் தலைவன் அந்தக் கப்பல்குழுவைத் தலைமையேற்று வழிநடத்திவந்தார். அவருடைய தலைமையில் அந்தக் கப்பல்களில் வந்தவர்கள், இந்தியாவுக்கு ஒரு குறுக்குவழி கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து பயணமாகி வந்திருந்தனர். அங்கே மிகப் பெரிய அமெரிக்கக் கண்டங்களும், பசிஃபிக் பெருங்கடலும் தங்கள் பாதையின் குறுக்கே நிற்பதை அவர்கள் அறியவில்லை.”

“அவர்கள் எதற்காக இந்தியாவுக்கு வரவேண்டும் என்று விரும்பினார்கள்?” என்று அப்பு கேட்டான்.

அஜார் உச்சு சிரித்தார். “ஏனெனில், இந்தியாவில்தான் மிளகு பயிராகிறது. கருமிளகு என்று நீங்கள் சொல்வீர்களே, அது. ஐரோப்பியர்கள் கருமிளகைத் தங்கள் உணவில் கலந்து சுவையூட்டிக்கொள்வதை மிகவும் விரும்பினார்கள். கொலம்பஸ் தன் கையோடு கொஞ்சம் கருமிளகை வைத்திருந்தார். அதைக் காண்பித்து மக்களிடம் தனக்கு என்ன வேண்டும் என்று புரியவைக்கலாமே என்பதற்காக. தான் இந்தியாவுக்கு வந்துவிட்டோம் என்று அவர் உறுதியாக நம்பினார். ஆஸ்ட்டெக், இன்க்கா மற்றும் தான் சந்தித்த உள்ளூர்வாசிகளையெல்லாம் இந்தியர்கள் என்றே அழைத்தார் அவர்.”

“ஓ! அவர்கள்தான் செவ்விந்தியர்கள் – அப்படித்தானே!” என்று ஆச்சரியத்தோடு, தன்னுடைய கண்டுபிடிப்பை எண்ணிப் பூரித்துப்போய்க் கூவினான் அப்பு. அந்த இந்தியர்களிடம் விற்பனைக்குக் கருமிளகு இல்லை என்பதை அறிந்து மிகவும் ஏமாற்றமடைந்தார் கொலம்பஸ். ஆனால், அவர்கள் அந்தப் பகுதி மக்கள் பயிரிட்டிருந்த பலவகையான மிளகாய்களை அவருக்குக் காண்பித்தார்கள். கொலம்பஸ் அவற்றை ருசிபார்த்தார்.

இந்தியாவின் மிளகைப் போலவே அந்த மிளகாய்களும் காரமாக இருப்பதைக் கண்டுகொண்டார் அவர். அந்தச் சிறிய பழத்தை ‘சில்லி-பெப்பர்’ என்று குறிப்பிட்டவர் அவற்றைத் தன் ஸ்பெயின் நாட்டிற்கு எடுத்துக்கொண்டுபோவதற்காய் தன்னிடமிருந்த பைகளில் நிரப்பிக் கொண்டார் என்று விவரித்தார் அஜார் உச்சு. ‘கொலம்பஸ் கருமிளகைத் தேடிவந்தார். ஆனால் அவர் கொண்டுசென்றதோ பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய்’ என்று தனக்குள் எண்ணிக்கொண்டான் அப்பு. அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ‘இந்தியர்களை’ சந்திக்கிறார்!

அடுத்த நாள், மிளகாய்ச் செடிகளுக்கு நீர் ஊற்றிய பிறகு அப்பு அஜார் உச்சுவிடம் வணக்கம் தெரிவித்தான். “வா, வா, கண்டுபிடிப்புகளின் காலம் பற்றி நான் உனக்குக் கண்டிப்பாகக் கூறவேண்டும்” என்று அஜார் உச்சு தெரிவித்ததும் அப்புவுக்கு உற்சாகம் பீறிட்டது.

ஒரு புதிய கம்ப்யூட்டர் விளையாட்டுபோல் அத்தனை ஆர்வம் அவனுடைய மனதிற்குள் கொப்பளித்தது. கண்முன் உலகின் ஒரு பெரிய வரைபடம் மங்கலாக உருவாக ஆரம்பித்தது. அதில், பாரசீகம், ஸ்பெயின் ஆகிய நாடுகளும் அவற்றின் துறைமுகங்களும் மின்னத் தொடங்கின.

“ஐரோப்பியர்களுக்கு இந்தியாவின் மிளகு என்றால் கொள்ளைப்பிரியம்” என்று விவரமாக எடுத்துரைத்தார் அஜார் உச்சு. “ரோமானியப் பேரரரசு இருந்த காலகட்டத்திலேயே, செல்வந்தர்கள் தங்கள் இறைச்சி உணவுப்பண்டங்களில் நறுமணம் மிக்க மிளகைச் சேர்த்துச் சாப்பிடுவதை மிகவும் விரும்பினார்கள்.

அந்தச் சுவையூட்டியான மிளகை, மிக அதிக விலை கொடுத்து வாங்க அவர்கள் தயாராயிருந்தார்கள். துணிச்சல் மிக்க அராபிய மற்றும் கிரேக்க மாலுமிகள் அரபிக்கடலில் பயணம் மேற்கொண்டு கேரளாவுக்குச் சென்று தங்களிடமுள்ள வேறு பண்டங்கள், தங்க நாணயங்களை அங்கே கொடுத்து பதிலுக்கு கருமிளகை வாங்கிவந்து, அவற்றை ஐரோப்பாவின் செல்வவளம் மிக்க மனிதர்களிடம் விற்று பெரிய அளவு லாபம் சம்பாதித்தார்கள்”.

ஐரோப்பியப் பேரரசுகள்

இவ்வாறு அராபியர்களால் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகு போன்ற சுவையூட்டிகளை நீண்டகாலமாகவே ஐரோப்பியர்கள் தங்கள் உணவில் சேர்த்துவந்தார்கள். அந்தச் சுவையை ஆனந்தமாக ருசித்து மகிழ்ந்தார்கள். போர்த்துகீசியர்களும், ஸ்பெயின் நாட்டு மக்களும் கடலில் நீண்ட பயணம் செல்வதற்கு ஏற்ற திடமான படகுகள் மற்றும் படகைச் செலுத்துவதற்குரிய திசை காட்டும் கருவிகள் ஆகியவற்றை உருவாக்கும் வழிவகைகளைக் கற்றுத் தேர்ந்தார்கள்.

இதனால் பெருங்கடலில் படகில் பயணமாவது அவர்களுக்கு எளிதாகியது. எனவே, அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து இந்தியாவிற்குச் செல்லப் புறப்பட்டார்கள்.

இங்கிலாந்து (ஆங்கிலேய சாம்ராஜ்யம்) ஆங்கிலேய ஆட்சிப்பகுதிகள் பிரான்ஸ் பாரசீகம் ஸ்பெயின் நெதர்லாந்து பெல்ஜியம் ஐக்கிய அமெரிக்க நாடுகள்

உலகப் பேரரசுகளின் வரைபடம் 1945

அப்படிப் புறப்பட்ட கிறிஸ்டஃபர் கொலம்பஸ் அமெரிக்காவைச் சென்றடைந்தார் (1492). வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார் (1498). அவர்கள் தங்களுடைய வர்த்தகப் பகுதிகளை முதலில் நிறுவிக்கொண்டார்கள். பின் படிப்படியாக தங்கள் ஆயுத பலத்தாலும், சூழ்ச்சியாலும், தந்திரத்தாலும் அந்த நாடுகள் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். வேளாண்தொழில், மற்றும் கனிமவளங்களில் செழித்து விளங்கிய நிலப்பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்ளும் பேராசையோடு ஆங்கிலேயர், டச்சுக்காரர்கள், பிரெஞ்சுக்காரர்கள், பெல்ஜியம் நாட்டினர், டானிஷ்காரர்கள் மற்றும் இத்தாலியர்களும் பரந்த உலகைத் தங்கள் ஆளுகைக்குட்பட்ட காலனிப் பகுதிகளாகப் பிரித்தாள ஆரம்பித்தார்கள்.

கிறித்துவ நாடுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவதைத் தடுக்க போப்பாண்டவர் பூமியின் மீது ஒரு கற்பனைக்கோட்டை வரைந்தார். அந்தக் கோட்டின் ஒரு பக்கத்திலுள்ள நிலப்பகுதியை ஸ்பெயினும் மறு பக்கத்தில் உள்ளதை போர்ச்சுகலும் தத்தம் ஆட்சியதிகாரத்தின் கீழ் வைத்துக்கொள்ள ஆரம்பித்தன. ஆனால், இந்த ஆக்கிரமிப்புப் பேராசையில் ஆங்கிலேயர் களும் டச்சுக்காரர்களும் சேர்ந்துகொண்டபோது அந்தக் கற்பனைக்கோடு புறந்தள்ளப்பட்டது. 1947இல் விடுதலை பெறும்வரை, இந்தியா பிரிட்டிஷ் காலனியாக ஆங்கிலேயப் பேரரசின் பொக்கிஷமாகவே விளங்கியது.

ஸான் ஸால்வடாரைச் சேர்ந்த கரீபியத் தீவில் க்றிஸ்டஃபர் கொலம்பஸ் வந்திறங்குகிறார்

ரோமானியப் பேரரசு

இன்று இத்தாலியின் தலைநகராக விளங்கும் ரோமின் அருகே நிர்மாணிக்கப்பட்டிருந்த ஒரு சிறிய நகரிலிருந்து படையெடுப்புகளின் மூலம் ஒரு பெரிய பேரரசு – ரோமானியப் பேரரசு உருவாகி ஏறத்தாழ 500 வருடங்கள் ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்டுவந்தது. ரோமானியப் பேரரசில் பல மொழிகள் பேசும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மனிதர்கள் குடிமக்களாக இருந்தார்கள். ரோமானியப் பேரரசர்களில் ஒருவர் ஆப்பிரிக்க மக்களினத்தைச் சேர்ந்தவராகக்கூட இருந்தது உண்டு. விரிவான சட்டதிட்டக் கட்டமைப்பின் மூலம் அமைதியும், ஒழுங்கும் கூடிய குடியியல் சமூகம், குடிமைச்சமூக வாழ்க்கை அங்கே இருந்துவந்தது.

மத்திய தரைக்கடலைச் சுற்றி பரவியிருந்த ரோமானியப் பேரரசு,117 CE. வரைபடம் அளவுக்கானதல்ல.

வரிகளின் மூலம் திரட்டப்பட்ட செல்வம் பெரிய ராணுவத்தைக் கட்டமைத்துப் பராமரிக்கவும் ஆளும்வர்க்கத்தினரின் வாழ்க்கைக்குரிய வசதிகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. சீனப் பட்டுவகைகள், இந்தியாவின் நறுமணப்பொருட்கள், சுவையூட்டிகள் போன்றவை மிகவும் பிரபலமாக விளங்கின. ரோமானியப் பேரரசு இன்றைய எகிப்திற்குப் பரவிய பிறகு, இந்தியாவுடனான வர்த்தக உறவுகள் மலர்ந்தன. இந்தியாவின் நறுமணப் பொருட்களையும், சுவையூட்டிகளையும் வாங்குவதற்காக தங்க, வெள்ளி நாணயங்கள் ஏராளமாய் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. பொக்கிஷமாகக் கருதிய மிளகை பத்திரமாக சேமித்துவைக்க ரோமானியர்கள் பயன்படுத்திய வெள்ளி மிளகுப் பானைகளின் மூலம் வசதியான, ஆடம்பரமான வாழ்க்கைக்கு இந்தச் சுவையூட்டிகள் எவ்வளவு முக்கியமாக விளங்கின என்பதை நம்மால் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். சுவையூட்டிகளுக்கென்றே ஒரு தனியான சந்தை ரோம் நகரில் நிர்மாணிக்கப்பட்டது. நகரின் மிக நவநாகரிகமான தெருவுக்கு ‘பெப்பர் ஸ்ட்ரீட்’ (மிளகுத்தெரு) என்று பெயரிடப்பட்டது.

எதனால் ஐரோப்பியர்கள் மிளகின் மீது பித்தாக இருந்தனர்? இந்திய கிராமத்துக் கடையில் ஒரு சில ரூபாய்களைக் கொடுத்து மக்கள் வாங்கும் கருமிளகு, ஐரோப்பாவில் பல கிலோகிராம்கள் தங்கத்தை விலையாகத் தந்து வாங்கப்பட்டது. ஏன் அப்படி? அந்தப் பண்டம் ஐரோப்பாவில் கிடைப்பது மிகவும் அரிதாக இருந்த நிலையே அதற்குக் காரணம். வணிகர்கள் அவற்றை தொலைதூரத்திலிருந்த மர்மமான நிலப்பகுதியிலிருந்து கொண்டுவந்தார்கள். மாதக்கணக்காய் மிக ஆபத்தான பெருங்கடல்களில் பயணம் செய்தார்கள். அதன்பின், ஒட்டகச் சிவிகைகளில் அகன்று விரிந்திருந்த பாலைவனங்களில் பயணம் செய்தார்கள். மிளகு உணவுக்குச் சுவை சேர்த்ததோடு மட்டுமல்ல, அது மருந்தாகவும் செயல்படக்கூடியது என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். மிக முக்கியமாக, நீங்கள் எத்தனை பெரிய செல்வந்தர் என்று மற்றவர்களிடம் காட்டிக்கொள்ள நீங்கள் பயன்படுத்தும் பொருட்களில் மிளகே மிகவும் போற்றத்தக்க பண்டமாயிருந்தது. அரசர்களும், மேற்குடி மக்களும் கொஞ்சம் மிளகை சிறிய பட்டுப்பைகளில் போட்டு அவற்றை விழாநாட்களில் விருந்தினர்களுக்குக் கொடுத்து உபசரித்தார்கள். எனவே, கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டு மன்னரிடம் அவரைச் சுவையூட்டிகளின் பிரபுவாக உயர்த்திக்காட்டுவதாக உறுதியளித்தார். அப்படியென்றால், அவர் வளமிக்க மன்னனாக அடையாளங்காணப்படுவார் என்று அர்த்தம்.

ஆனால் கிழக்கு மத்தியதரைப் பகுதியில் விரிந்து பரந்த ஓட்டோமான் பேரரசு உருவாகி வலுப்பெற்றபோது ஐரோப்பாவிலிருந்த மிளகுப் பிரியர்களுக்குப் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டது. 15ஆம் நூற்றாண்டு சமயம் கப்பல் கட்டுபவர்கள், அதிக வலுவான கப்பல்களை எப்படிக் கட்டமைப்பது – தங்கள் பாய்மரங்களை, காற்றை முடிந்தளவு பயன்படுத்திக்கொள்ள ஏற்றவாறு எப்படி அமைப்பது என்பதைக் கற்றுத்தேர்ந்திருந்தார்கள். பெருங்கடல்களைப் பற்றி அறிய அவர்கள் அறிவு வளர்ந்திருந்தது. இருந்தும் விரிந்த நீர்ப்பரப்பும், மறுபுறம் கடலைத் தாண்டி அமைந்திருந்த நிலப்பகுதியும், இன்னமும் மர்மமாகவே இருந்தது.

வெள்ளியாலான மிளகுக் குடுவைகள்

ஓட்டோமான் பேரரசு

இசுலாமிய மதத்தால் உத்வேகம் பெற்றவர்களாய், மத்திய ஆசியாவிலிருந்த துருக்கிய மொழி பேசும் மக்கள், ‘ஓஸ்மான் பே’ என்பவரின் தலைமையில், இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர்களிடம் இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றப் படையெடுத்துச் சென்றனர். ஓஸ்மான் பேக்குப் பிறகு வந்த இரண்டாம் மொகமது 1453இல் வெற்றிகரமாகப் படையெடுத்துச் சென்று பைஸாண்ட்டைன் பேரரசின் தலைநகராக விளங்கிய கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றினான். அடுத்து வந்த நூற்றாண்டுகளில், துருக்கிய ஓட்டோமான் (இந்தப் பெயர் நிறுவனர் ஓஸ்மானிலிருந்து உருப்பெற்றது) பேரரசாக மிகப் பெரிய இசுலாமியப் பேரரசாக, வட மத்தியதரைப் பகுதி முதல் எகிப்து, யேமன் முடிய இருந்த நிலப்பரப்புகளைத் தன் ஆட்சியின் கீழ் வைத்திருந்த பெரிய முகலாயப் பேரரசாக எழுச்சி பெற்றது.

ஓட்டோமான் கான்ஸ்டாண்ட்டிநோபிளைக் கைப்பற்றும் காட்சி

பக்திமிக்க இஸ்லாமியர்களாக இருந்தபோதிலும் துருக்கிய சுல்தான் மன்னர்கள், ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க பல்வேறு மதங்களைச் சேர்ந்த வல்லுநர்களைப் பணிக்கு அமர்த்திக்கொண்டனர். துருக்கிய ராணுவம் இன்று மேற்கத்திய செவ்வியல் இசையில் இரண்டறக் கலந்துவிட்ட, இசைமேதை மொஸார்ட்டின் மனதிலும் இடம்பிடித்துவிட்ட இசைக்கருவிகளான மேளங்கள், ஜால்ராக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு விரிவான ராணுவ அணிவகுப்பு இசைக்குழுவை உருவாக்கினார்கள். துருக்கிய ராணுவத்தினர் வியன்னா மீது தாம் மேற்கொண்டிருந்த முற்றுகையைக் கைவிட்டுச் செல்லும்போது தற்செயலாக காப்பிக்கொட்டைகள் நிரம்பிய மூட்டைகளை விட்டுச்சென்றதன் மூலம் ஐரோப்பியர்களை காஃபிக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்கள். வுல்ஃப்காங்க் அமேதியஸ் மொட்ஸார்ட், மேற்கத்தியப் பாரம்பரிய இசைமேதை

கடற்பயணம், திசைகாட்டி, படகு கட்டுதல்

ஓட்டோமான் பேரரசு எழுச்சிபெற்றதன் விளைவாக ஐரோப்பியர்கள் இந்தியாவுக்குச் செல்ல வேறு கடல்வழியைக் கண்டுபிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்தச் காலகட்டத்திற்குள் அவர்களிடம் பெருங்கடலைப் பற்றிய அறிவும், கப்பலைத் திறம்படச் செலுத்தும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்திருந்தன. கடற் பயணத்தின் முன்னோடிகளான போர்ச்சுகீசியர்கள் முன்பிருந்ததைக் காட்டிலும் மேலான வரைபடங்களை உருவாக்கிக்கொண்டார்கள். அதேபோல் வானியல் அறிவையும் வளர்த்துக்கொண்டார்கள். எனவே அவர்களால் ஆப்பிரிக்காவின் அட்லாண்டிக் கடலோரப்பகுதிக்கு கப்பலில் பயணமாக முடிந்தது. ஆப்பிரிக்காவின் முனையிலிருந்து இந்துமாக் கடலைக் கடந்து சுவையூட்டிகளின் நிலமாக விளங்கிய கேரளாவுக்குச் செல்ல முடியும் என்று அவர்கள் நம்பினார்கள். அதற்கு முன்பு இந்தியர்களும் அராபியர்களும் தேக்குமரப் பலகைகளை சணலால் கட்டிப் படகுகள் உருவாக்கினார்கள். அராபிய மாலுமிகள் முக்கோண வடிவ லாட்டீன் பாய்மர நுட்பத்தைப் பயன்படுத்தி படகை காற்றுக்கு எதிர்த்திசையில் எவ்வாறு செலுத்துவது என்பதையும், சுக்கானின் உதவியோடு படகோட்டுவது எப்படி என்றும் தெரிந்துகொண்டனர். ஆஸ்ட்ரோலோப் என்ற இந்தக் கருவி ஆழ்கடலில் படகைச் சரியாகச் செலுத்துவதற்கு மாலுமிகளுக்கு உதவியது.

சூரியனோ சந்திரனோ அல்லது நட்சத்திரங்களோ இல்லாத நிலையிலும் படகைக் கடலில் சரிவரச் செலுத்துவதற்கு உதவியாக சீனர்கள் முதலில் உருவாக்கியிருந்த ஒழுங்கற்ற, ஆரம்பநிலைக் காந்தவிசைத் திசைகாட்டியிலிருந்து ஒரு நேர்த்தியான மாலுமிகளுக்கான திசைகாட்டியை போர்ச்சுகீசியர்கள் வடிவமைத்தார்கள். ஆழ்கடலில் தாங்கள் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பதை முன்பைக் காட்டிலும் துல்லியமாகக் கண்டறிய உதவியாய் ஐரோப்பியர்களும் ‘ஆஸ்ட்ரோலோப்’ஐக் கண்டுபிடித்தார்கள்.

திசைகாட்டியின் உதவியோடு கடலில் பயணமாகும்போது அவர்கள் சீரான இடைவெளிகளில் முடுச்சுகளிட்ட நீளமான கயிறுகளைக் கடலில் இறக்கி அதன் உதவியோடு, தாங்கள் எத்தனை தூரம் பயணமாகியிருக்கிறோம், எத்தனை வேகமாகப் பயணிக்கிறோம் என்பதைக் கணக்கிட்டுக்கொண்டார்கள். அதனால்தான் இன்றுவரையும், எரிவாயுவாலும், எரிபொருளாலும் இயங்கும் படகுகள் தங்களுடைய பயணத்தை மைல்கள், கிலோமீட்டர்கள் என்று கணக்கிடுவதைக் காட்டிலும் மேற்குறிப்பிட்ட ‘முடிச்சுகள்’ மூலமே கணக்கிட்டுக்கொள்கின்றன.

“மையிருட்டான இரவு ஒன்றில் ‘டார்ச்’ விளக்கை எடுத்துக்கொண்டு வெளியே சென்றால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்,” என்று கூறினார் அஜார் உச்சு. “நீ அந்த டார்ச் விளக்கை எரியச்செய்தால் அது உனக்கு முன்னால் சாலையில் சிறிது தூரம் வரை என்ன இருக்கிறது என்று மங்கலாக ஒளியேற்றிக்காட்டுகிறது. ஆனால், அந்தக் குறுகிய வட்டத்திற்கு அப்பால் ஒரே இருட்டாக இருக்கிறது. அங்கே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க முடியவில்லை. விரிந்து பரந்த பெருங்கடலில் பயணம் மேற்கொண்ட மாலுமிகளுக்கும் அப்படித்தான் இருந்தது. பின், படிப்படியாக, வரைபடத்தை உருவாக்குபவர்கள், கடற்பயணம் மேற்கொண்டவர்களின் குறுந்தொலைவுக் காட்சிகளை ஒன்றிணைத்து ஒரு விவரமான வரைபடத்தை உருவாக்கினார்கள்.

ஆனாலும், கடற்பரப்பில் தெரிந்த பகுதிகளைவிட தெரியாத பகுதிகளே அதிகமாக இருந்தது. கடற்பயணம் மேற்கொள்வதில், அடுத்து என்ன வருமோ என்பது தெரியாது. தவிர, வேறுபல ஆபத்துகளும் நிறைந்திருந்தன. ஒரு புயலில், அலைகள் மூன்று மாடிக் கட்டிடத்தைவிட உயரமாக மேலெழும்பக்கூடியவை. அவற்றால் கப்பல்களை எளிதாக விழுங்கிவிட இயலும். பல நேரங்களில் அப்படி நடந்துள்ளது. ஆயிரக்கணக்கான மனிதர்கள் மூழ்கிப்போயிருக்கிறார்கள். அல்லது, கப்பல்கள் கடலில் தகர்ந்துபோயிருக்கின்றன. இருந்தும் கடலைக் கடந்து கடலின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்று கண்டறியும் முயற்சியை கைவிடப்படவில்லை. ஏன் அப்படி?

அத்தகைய ஆபத்தான, வீரசாகச முயற்சிகளை ஊக்குவித்து அதை மேற்கொள்வதற்கான செலவை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கும் செல்வந்தர்கள் நிறையவே இருந்தார்கள். கடலின் மீது பயணமாகி அக்கரைக்குச் சென்று திரும்பும் மாலுமிகள் கொண்டுவரும் சுவையூட்டிகள், நறுமணப்பொருட்கள், தங்கம், வெள்ளி முதலானவை தாங்கள் செலவழிக்கும் பணத்தைவிட அதிக வருவாயைத் தங்களுக்குக் கொண்டுவரும் என்று அவர்கள் நம்பினார்கள். ஐரோப்பியர்கள், குறிப்பாக ஸ்பெயின் மற்றும் போர்த்துகீசிய நாட்டு மன்னர்கள், நேரடியாக இந்தியாவுக்குக் கடலில் பயணிப்பதன் மூலம் வாணிபத்தில் அதிக லாபங்களைப் பெற விரும்பினார்கள். போர்ச்சுகீசியர்கள் தென்பகுதி நோக்கி அட்லாண்டிக் பெருங்கடலின் ஆப்பிரிக்கக் கரையோரமாகச் சென்று அங்கிருந்து கிழக்கு திசையில் பயணமாகி இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டார்கள். அப்படி இந்தியச் சுவையூட்டிகள், செல்வவளங்களை நோக்கிச் செல்ல ஒரு கடல்வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல கப்பல்கள் கடலில் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஆனால், இறுதியில், இந்த இடைவிடா முயற்சிகளின் பயனாய் போர்த்துகீசிய மாலுமியான வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கு வந்துசேர்ந்தார்.”

“உனக்கு ஏற்கெனவே இத்தாலிய நகரான ஜெனோவாவைச் சேர்ந்த கப்பல் காப்டன் ஒருவரைப் பற்றித் தெரியும். அவர்தான் கிறிஸ்டஃபர் கொலம்பஸ். உலகம் உருண்டையாக இருப்பதால் அட்லாண்டிக் பெருங்கடலில் மேற்குப்புறமாகப் பயணமானால், பருவக்காற்றுகளால் தள்ளப்பட்டு சீக்கிரமே ஜப்பானையும் இந்தியாவையும் சென்றடைந்துவிட முடியும் என்று அவர் நம்பினார். அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் உள்ள நிலப்பகுதியைப்பற்றி கொலம்பஸுக்கு எதுவுமே தெரியாது. மேலும், அவர் ஒரு தப்புக்கணக்கு போட்டுவிட்டார்.

ஆனால், அது அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக மாறியது! பூமியின் நீள அகலத்தைக் கொலம்பஸ் தப்பாகக் கணக்கிட்டுவிட்டார்” என்று அஜார் உச்சு கூறினார்.

“பூமியின் உண்மையான அளவை மிகக் குறைவாகக் கணக்கிட்டுவிட்டார் கொலம்பஸ். ஐரோப்பாவுக்கும் ஆசிய கண்டத்திற்கும் இடையே உள்ள உண்மையான தூரத்தை அவர் அறிந்திருந்தால் பயணம் மேற்கொள்ளும் முயற்சியையே கைவிட்டிருப்பார்.

அவ்வளவு நீண்ட தொலைவைக் கடல்வழியாகக் கடப்பதற்கு நிறைய உணவும், தண்ணீரும் தேவைப்படுவதோடு, அதிக எண்ணிக்கையில் மாலுமிகளும் பன்மடங்கு பெரிய கப்பலும் தேவை. அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக ஆசியாவுக்குப் பயணமாவது போர்ச்சுகீசியர்களின் பயண வழியை விட குறைவான தொலைவு என்று அவர் ஸ்பெயின் நாட்டு அரசியான இஸபெல்லாவை ஒருவழியாக நம்ப வைத்தார்.

அரசியின் ஆசிர்வாதத்தோடும் பணத்தோடும் 1492ஆம் ஆண்டு வசந்த காலத்தின்போது கொலம்பஸ்ஸின் தலைமையில் சாண்ட்டாமரியா, நினா மற்றும் பிண்ட்டா என்ற மூன்று சிறிய கப்பல்கள் – தங்கள் பயணத்தை இலக்கறியா இடம் நோக்கித் தொடங்கின. முடிவற்ற கடல்வெளியாகத் தோன்றிய நீர்ப்பரப்பில் சில வாரங்கள் தென்மேற்குத் திசையில் பயணம் செய்த பின் கைவசமுள்ள தண்ணீரும் உணவும் குறைந்துகொண்டே போயிற்று. கப்பல் சிப்பந்திகள் கவலைப்படலானார்கள்.

இறுதியாக, நிலவொளி நிறைந்திருந்த இரவொன்றில் பாய்மரத்தின் உச்சிப்பகுதி யிலிருந்து கடலைக் கண்காணித்துக்கொண்டிருந்த மாலுமி உரக்கக் கூவினார்! “நிலம்! அதோ நிலம்!” காலையில் அந்த மாலுமிகள் அதற்கு முன்பு வரை ஐரோப்பியர்கள் யாருமே கால்வைத்திராத புதிய நிலப்பகுதியில் கால்வைத்தார்கள்.

ஆடைகள் எதுவும் அணிந்திராத, யாருக்குமே புரியாத ஒரு மொழியை தங்களுக்குள் பேசிக்கொண்ட, அங்கிருந்த மனிதர்கள் மாலுமிகளை வியப்போடு பார்த்தார்கள். அதுதான் ஸான் ஸால்வடார். ஒரு கரீபியத்தீவு. ஆனால், இந்தியாவுக்கு வந்துவிட்டதாக உறுதியாக நம்பினார் கொலம்பஸ். அங்கே கரையில் சந்தித்த மனிதர்களை இந்தியர்கள் என்றே எண்ணினார்.

“கொலம்பஸின் இந்த பயணத்திற்கு ஆறு வருடங்கள் கழித்து உண்மையாகவே இந்தியாவுக்கு வந்தவர் யார் தெரியுமா?” என்று கேட்ட அஜார் உச்சு. “அவர்தான் வாஸ்கோ ட காமா. நான்கு கப்பல்களும் 170 மாலுமிகளும் கொண்ட போர்ச்சுகீசிய மன்னருக்குச் சொந்தமான கப்பல்படைக்கு தலைமையேற்று ஆப்பிரிக்க முனையைச் சுற்றி பத்து மாதப் பயணம் செய்து கேரளாவைச் சேர்ந்த கோழிக்கோட்டை அடைந்தார். மிளகு வாங்க மிகச் சரியான இடம் அதுவே!”

வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கு முதன்முதலாய் பயணம் செய்த கடல்வழி (1497 முதல் 1499 வரை)

வாஸ்கோ ட காமா கோழிக்கோடு மன்னர் ஜமோரினிடம் “மன்னரே, உங்கள் ஊரிலிருக்கும் மிளகுச் செடிகளில் சிலவற்றை நான் எங்களுடைய நாட்டிற்கு எடுத்துச்செல்ல அனுமதிப்பீர்களா?” என்று கேட்டார்: மன்னர் ஜமோரின் அதற்கு “சரி, நீங்கள் சில மிளகுச்செடிகளை எடுத்துக்கொண்டு செல்லுங்கள். ஆனால், எங்கள் நாட்டின் சூரியனையும் மழையையும் உங்களால் எடுத்துக்கொண்டு செல்ல முடியாதே” என்று சொல்லி புன்னகை செய்தார். அவருடைய வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை விரைவிலேயே போர்ச்சுகீசியர்கள் புரிந்துகொண்டனர். மிளகை இறக்குமதி செய்வதற்கு பதிலாக, போர்ச்சுகீசியர்கள் 1510இல் கோவாவை உள்ளூர் மன்னரிடமிருந்து கைப்பற்றி, இந்தியாவில் குடியேறினார்கள்.

கோவா விரைவிலேயே மிக அதிக அளவில் மிளகை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யும் வணிகத் துறைமுகப்பகுதியாக மாறியது. ஸ்பெயின் மன்னருக்கு பதிலாக போர்ச்சுகல் மன்னர் “மசாலாக்களின் மன்னர்” ஆனார்.

“விதிவசத்தால், இந்தியாவுக்கு வந்துசேர முயன்றுகொண்டிருந்த போர்ச்சுகீசிய கப்பல்தலைவன் ஒருவர் தென் அட்லாண்டிக் பெருங்கடலில் வீசிய காற்றின் வேகத்தில் திசைமாறி தென் அமெரிக்காவில் உள்ள நிலப்பகுதி ஒன்றை சென்றடைந்தார். அந்த நிலப்பகுதிதான் பிரேஸில் நாடு. அந்தப் பகுதி போர்ச்சுகீசியரின் குடியிருப்புப் பகுதியாக மாற்றப்பட்டது. இந்தியாவில் அறிமுகப் படுத்தப்பட்ட பலப்பல புதிய உணவுப்பண்டங்களின் ஆதாரமானது பிரேஸில்.

கோவாவிலிருந்து பெரிய பயணக்கப்பல்களில் மிளகு, கிராம்பு, ஏலக்காய், லவங்கப்பட்டை, மற்றும் வேறு பல நறுமணப்பொருட்கள், சுவையூட்டிகளை நிரப்பிக்கொண்டு லிஸ்பன் நகரை நோக்கிச் சென்ற போர்ச்சுகீசியர்கள், தென் அமெரிக்காவிலிருந்து பல புதியவகைப் பழங்கள், காய்கறிகள், மற்றும் விலங்கினங்களை இந்தியாவுக்குள் கொண்டுவந்தனர்.

ப்ரேஸிலின் மிளகாய் மற்றும் பிற புதிய உற்பத்திப்பொருட்களோடுகூட பைனாப்பிள், காஜு என்று அழைக்கப்பட்ட முந்திரிபருப்பு மற்றும் ரப்பர் மரங்கள் போன்ற புதியவகை உற்பத்திப் பொருட்கள் இருப்பதை ஸ்பெயின் நாட்டினர் அறிந்துகொண்டார்கள். விரைவிலேயே ப்ரேஸில் நாட்டுப் பண்டங்களை நிரப்பிக்கொண்டு கப்பல்கள் போர்ச்சுகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனுக்கு புறப்பட்டுச் சென்றன. அந்த பண்டங்கள் அங்கிருந்து கோவாவுக்கு நீண்ட தூரம் பயணமாகிச் சென்ற கப்பல்களில் ஏற்றியனுப்பப்பட்டன.

வாஸ்கோ ட காமா இந்தியாவுக்கு வந்துசேர்கிறார்.

கோவாவில் மிளகாய்க்கு இருந்த பல பெயர்களில் ஒன்று ‘பெர்னாம்புகோ பெப்பர்’. ப்ரேஸில் நாட்டில் எந்தத் துறைமுகத்திலிருந்து மிளகாய் கப்பலில் ஏற்றப்பட்டதோ அந்தத் துறைமுகத்தின் பெயரே அது!” அஜார் உச்சு சற்றே பேச்சை நிறுத்திவிட்டு, பின், “கோவா! அதுவே உலகிற்கான இந்திய நுழைவாயில்!” என்று உணர்ச்சிகரமாகக் கூறினார்.

கோவா ஒளிமயமாகத் தகதகத்தது. கண்களை மூடிக்கொண்டான் அப்பு! ஏராளமான கப்பல்களும் விதவிதமான ஆடையணிகளில் மாலுமிகளும் இருக்கும் பரபரப்பாக இயங்கும் ஒரு துறைமுகத்தை கற்பனை செய்துபார்த்தான்.

“மிளகாய்விதைகள் கோவாவுக்கு வந்துசேர்ந்த உடனேயே வியாபாரிகள் அவற்றை உடனடியாக வாங்கிக்கொண்டார்கள்” என்று கூறிய அஜார் உச்சு, அப்புவின் முகபாவத்தைக் கண்டு சிரித்தார். “உணவுக்கு அது மிகவும் சிறப்பாக ருசியும் மணமும் சேர்த்ததால் காரமான மிளகாய் வேகவேகமாய்க் கைமாறியது. அவை வட இந்தியா முழுவதும் பரவி, கோவாயி மிர்ச்சி(கோவாவின் மிளகாய்) என்று அழைக்கப்படலாயிற்று.

நீளமாக, உருண்டையாக, கொழுத்ததாக, குட்டையாக என, வெவ்வேறு வகைகளாக இருந்த இந்த மிளகாய்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் பரவின. வங்காளத்திற்கும் இலங்கைக்கும் இடையே கடல் வாணிபம் மும்முரமாக நடந்துகொண்டிருந்ததால் அங்கிருந்து இலங்கைக்கு மிளகாய் சென்றிருக்கக்கூடும். அதனால்தான் வங்காளிகள் ‘சில்லி லங்கா’ என்று இலங்கையைக் குறிப்பிடுகிறார்களோ என்னவோ,” என்று வேடிக்கையாகச் சொன்னார் அஜார் உச்சு. “ஆனால், இந்த மிளகாய் இந்தியாவுக்கு வந்த பிறகு இங்கேயே இருந்துவிட்டதா? இல்லை. அது மேற்கு நோக்கிப் பயணமாகியது! வணிகர்கள் மிளகாயை மத்திய ஆசியாவுக்கும், துருக்கிக்கும், ஹங்கேரிக்கும் எடுத்துச்சென்றார்கள். ஹங்கேரி நாட்டில் புதியவகை மிளகாய் பப்ரிக்கா உற்பத்தி செய்யப்பட்டது. அது ஹங்கேரியின் மிக விருப்பமான உணவுத் தயாரிப்புப் பொருளாக மாறியதால் பாப்ரிக்கா பெயர்பெற்ற உணவுப் பண்டமாக மாறியது.”

“இவ்வாறு, ஏறத்தாழ 9000 ஆண்டுகளுக்கு முன்பு தொலைதூர நாடான மெக்ஸிகோவில் வசித்துவந்த மனிதர்களால் உண்ணுவதற்காக நாட்டுத் தாவரமாக்கப்பட்ட காட்டுத்தாவரங்களில் ஒன்று உலகெங்கும் சமையலுக்குத் தேவையான இன்றியமையாத பண்டமாக மாறிவிட்டது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ஸ்பானிய பாதிரியார் ‘மிளகாய் இல்லாமல் மெக்ஸிகோ மக்கள் தாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதையே நம்ப மாட்டார்கள்!’ என்று எழுதினார். ”அது உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியது” என்றார் அஜார் உச்சு.

கோவா புதிய பண்டங்களுக்கான ஒரு சுவாரசியமான இடமாக மாறியது! இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மாமன்னர் ஜஹாங்கீர் தன்னுடைய அரசவையிலிருந்து அதிகாரி ஒருவரை கோவாவுக்கு அனுப்பி – புதிய உலகமாக அறியப்பட்டிருந்த வட அமெரிக்கா, தென் அமெரிக்காவிலிருந்து ஏதாவது புதிய பண்டங்கள் வந்திருக்கின்றனவா என்று பார்த்துவரச் செய்வார். அவ்வாறு செல்லும்போது ஒருமுறை அவருடைய அதிகாரி பைனாப்பிள்களையும் மற்றும் ஒரு வினோத வடிவப் பறவையையும் கொண்டுவந்தார். அந்த வினோத வடிவப் பறவை வான்கோழியாகும். மாமன்னர் அந்த வினோதப்பறவையை சித்திரங்களாகத் தீட்டும்படி அரசவை ஓவியருக்குக் கட்டளையிட்டார். ஓவியரும் அவ்வாறே செய்தார். மாமன்னரின் உத்தரவுப்படி ஆக்ராவில் பைனாப்பிள்கள் பயிரிடுவதற்காக ஒரு தனி தோட்டம் நிர்மாணிக்கப்பட்டது. பைனாப்பிள்களுக்கு பிரேஸிலில் வழங்கப்பட்டிருந்த பெயர் அனானாஸ். ஆக்ராவிலும் அதே பெயரில்தான் அது அழைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் உருளைக்கிழங்குகள் தென் அமெரிக்காவில் உள்ள ‘பெரு’ நாட்டில் மட்டுமே பயிராகிவந்தன. பின்னர் அவையும் முகலாய சமையலறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டன. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் அயல்நாட்டுப் பிரதிநிதியான ஸர் தாமஸ் ரோவுக்கு முகலாய அரண்மனையில் விருந்தளிக்கப்பட்டபோது அந்த விருந்தில் இடம்பெற்றிருந்த முக்கிய உணவுப்பண்டம் கிழங்குவகையைச் சேர்ந்த ஒரு புதிய காய்கறி. அதுதான் உருளைக்கிழங்கு. அதற்கு முன்பு அத்தகைய காய்கறியை அந்த அயல்நாட்டுப் பிரதிநிதி சுவைத்ததேயில்லை. அவருக்கு அதன் ருசி மிகவும் பிடித்திருந்தது.

பெரும்பாலான மக்கள் சைவ உணவை விரும்பிச் சாப்பிடுபவர்களாக இருந்த நாடொன்றில் – சோளம், தக்காளி, ஓக்ரா, சிவப்பு பீன்ஸ், வேர்க்கடலை மற்றும் வெண்ணெய்ப்பழம் போன்ற புதிய உணவுப்பண்டங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. காய்கறிகள் மட்டுமல்லாமல் பலப்பல புதுவகைப் பழங்களும் அறிமுகமாயின. பப்பாளிப்பழம், லிச்சி, கொய்யாப்பழம், சீதாப்பழம், சப்போட்டாப்பழம் (மெக்ஸிகோவில் அதன் மூலப்பெயர் சிக்கோசப்போட்டீ) – இவையெல்லாம் இந்தியாவில் ஏற்கெனவே அறிமுகமாகி ருசியும் சுவையும் வளமுமாய் இருந்த இந்திய உணவுக்கு கூடுதல் வளம் சேர்த்தன.

கோவா துறைமுகத்தில் வியாபாரிகள்

“இந்தியாவில் விளைந்த பொருட்களையும் அயல்நாட்டினர் தங்களோடு எடுத்துச்சென்றிருப்பார்கள் என்பது நிச்சயம்”என்று கூறினான் அப்பு.

“கண்டிப்பாக. இந்திய மிளகு மீது ஐரோப்பியர்கள் பித்தாக இருந்தனர். எனவே, இந்தியாவுக்குச் செல்ல புதிய கடல் மார்க்கங்களை அவர்கள் தொடங்கினார்கள்.அதில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு வந்ததும் இங்கே விளைந்த மாம்பழங்கள் மற்றும் தேங்காய்கள் அவர்களுடைய நாவையும் நெஞ்சையும் கொள்ளை கொண்டன. எனவே, அவற்றை பிரேஸிலிலும் பயிரிட்டார்கள். இப்பொழுது பிரேஸிலிலும், மெக்ஸிகோவிலும் மாம்பழம் முதன்மையான கோடைகாலக் கனிகளில் ஒன்று” என்று கூறினார் அஜார் உச்சு.

“ஆனால், போர்ச்சுகீசியர்கள் இந்தியாவுக்கு வருவதற்குப் பல வருடங்களுக்கு முன்பாகவே இந்தியா கரீபியத் தீவுகளுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இன்னொரு பயிரை வழங்கி அவர்களைச் செல்வவளம் மிக்கவர்களாக மாற்றியது. அதுதான் கரும்பு. வெகுகாலம் முன்பாகவே கரும்பு தென்கிழக்கு ஆசியாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தியர்கள் கரும்புச்சாறிலிருந்து சர்க்கரை எடுப்பதற்கான பல்வேறு வழிமுறைகளை உருவாக்கினார்கள். ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வருகை தந்த சீன பௌத்தத் துறவிகள் இனிப்புக் குன்று என்று குறிப்பிட்ட கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரையைப் பார்த்து அதிசயப்பட்டார்கள். சைனாவின் வலிமை வாய்ந்த மன்னன் தன்னுடைய பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை மன்னன் ஹர்ஷவர்தனின் அரசவைக்கு அனுப்பி, கரும்பு மற்றும் சர்க்கரை தயாரிப்பது குறித்து சீனர்களுக்குக் கற்றுத்தர இருவரை அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொண்டான். சில பௌத்தத் துறவிகளோடு, சர்க்கரை தயாரிப்பது எப்படி என்று அறிந்த இரண்டு பேரும், கரும்பையும், சர்க்கரை தயாரிப்பு வழிமுறையையும் அறிமுகம் செய்ய சீனாவுக்குப் பயணமானார்கள். சர்க்கரை இந்தியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியமான பண்டங்களில் ஒன்று. அராபிய வர்த்தகர்கள் கரும்பை எடுத்துச் சென்று மத்தியதரைக்கடல் பகுதியில் இருந்த ஸைப்ரஸ் தீவில் ஒரு பயிராக அறிமுகப்படுத்தினார்கள். ஐரோப்பியர்களுக்குச் சர்க்கரை மிகவும் பிடித்துப்போய்விட்டதால், மிகவும் லாபகரமாக ஒரு வர்த்தகம் செய்ய வாய்ப்பிருப்பதை ஸ்பெயின் வணிகர்கள் உணர்ந்துகொண்டனர். அவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்து பெரிய சர்க்கரை தோட்டங்களை உருவாக்கி, உலகெங்கும் சர்க்கரையை ஏற்றுமதி செய்தனர்.”

“ஆக, நாம் தென் அமெரிக்காவுக்கு சர்க்கரை கொடுத்து பதிலுக்கு மிளகாய் பெற்றுக்கொண்டோம்!” என்று கூவினான் அப்பு. இதை எண்ணிப்பார்க்கவே, அப்புவுக்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது.

சூரியன் ஆகாயத்தைச் நிறமாக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த அப்புவுக்கு விரைவிலேயே அம்மா தன்னை அழைப்பார் என்று தெரிந்தது. “நம்முடைய வாழ்க்கையும் நாம் உண்ணும் உணவும் உலகின் மற்ற பகுதிகளோடு எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது, எப்படித் தொடர்புடையதாக இருக்கிறது என்பதை இப்போது உன்னால் புரிந்துகொள்ள முடியும். பாஸ்போர்ட்டுகள் இல்லாமல் பயணமாகின உணவுப்பண்டங்கள்! இந்த உலகம் நாம் உண்ணும் உணவுவகைகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது!” என்றார் அஜார் உச்சு.

அப்புவின் மனம், முதன்முதலாக அஜார் உச்சுவின் குரலைக் கேட்ட அந்த மாலைவேளையை நோக்கி விரைந்தோடிக்கொண்டிருந்தது! அவர்களுடைய வீட்டின் பின்பக்கத்திலிருக்கும் தோட்டத்தில் அவர்கள் மிளகாய் தக்காளிச் செடிகளை மட்டும் வளர்க்கவில்லை. கொய்யா மற்றும் பப்பாளி மரங்களையும் வளர்த்தனர். தன்னுடைய ரகசியத்தோழனாக இருந்து தனக்கு மிக மிக அற்புதமான கதைகளைக் கூறியதற்காக அஜார் உச்சுவுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, அப்பு நேராகத் தன்னுடைய அறைக்குச் சென்றான். ஒரு வெள்ளைத்தாளை வெளியே எடுத்தான். தன்னுடைய க்ரேயான் பென்சில்களால் அதில் பெரிய எழுத்துகளில் பளிச்சென்று எழுதினான்: உலகின் தோட்டம். அதைக் கையிலெடுத்துக்கொண்டு கீழிறங்கிச் சென்று தன் அம்மாவிடம் அதைக் காண்பித்தான். தங்கள் வீட்டுத் தோட்டத்தின் வாசற்கதவில் அதை மாட்ட விரும்புவதாகத் தெரிவித்தான்.

அதைக் கேட்டு அவனுடைய அம்மா ஆச்சரியப்பட்டார். “ஏன்?” என்று கேட்டார்.

“அது ஒரு பெரிய கதை. இன்றிரவு அப்பா வீடு திரும்பியதும் நான் அதை உங்களுக்குச் சொல்வேன்” என்று கூறி புன்னகைத்தான் அப்பு.