கருப்பு நிற நாய்க்குட்டி ஒன்று, தன் தாயுடன் வாழ்ந்து வந்தது. அருகிலிருக்கும் மரத்தில் ஒரு கிளி இருந்தது. எப்பொழுதும் நாய்க்குட்டியைப் பார்த்து, " என்னைப் பார். பச்சை சிறகுகளும், சிவப்பு அலகுமாய் எவ்வளவு அழகாய் இருக்கிறேன் பார். உன்னைப் பார். இருட்டின் வண்ணத்தில் கருப்பாக இருக்கிறாயே! " என்று கேலி செய்து கொண்டு இருந்தது.நாய்க்குட்டியும் சுற்று முற்றும் பார்த்தது. "ஆமாம். கிளி சொல்வது போல் , யாருமே கருப்பாய் இல்லை. சிவப்பு நிறக் கொண்டையுடன் சேவல், பிரவுன் நிறத்தில் எலிகள், .....என்று எல்லோருமே அழகாக இருக்கின்றனர். நான் மட்டுமே கருப்பாக இருக்கிறேன்." என்று அங்கலாய்த்துக் கொண்டது.
நாய்க்குட்டி தன் தாயிடம்," அம்மா! நான் மட்டும் ஏன் கருப்பாக இருக்கிறேன்?" என்று கவலையுடன் கேட்டது. அதன் தாய்," கருப்பாக இருந்தால் என்ன ? அதனால் ஏன் வருந்துகிறாய்? நம்முடைய நன்றியுணர்ச்சியை எல்லோரும் பாராட்டுவார்கள் . அதை நினைத்து நாம் பெருமைப்பட வேண்டும். அதை விட்டு விட்டு, ஏன் உன் நிறத்தை நினைத்து வருத்தமடைகிறாய்?" என்று சமாதானப் படுத்தியது.ஆனாலும் நாய்க்குட்டிக்குத் தன் தோற்றத்தைப் பற்றிய வருத்தமும், தாழ்வு மனப்பாண்மையும் இருந்துக் கொண்டேயிருந்தது. அதனால். அன்றிரவு அதற்குத் தூக்கமே வரவில்லை. வீட்டை விட்டு வெளியில்வந்து வருத்தத்துடன், வாலை ஆட்டிக் கொண்டே இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தது.
ஓடிக் கொண்டே ஒரு காட்டிற்குள் நுழைந்து விட்டோம் என்பதை உணர்ந்தது நாய்க்குட்டி. திடீரென்று ஒரு பெரிய அலறல் சத்தம். தூக்கிவாரிப் போட்டது நாய்க்குட்டிக்கு. அலறல் வந்தத் திசையை அண்ணாந்துப் பார்த்தது. அங்கே பெரிய உருண்டைக் கண்களுடன், ஆந்தை ஒன்று மரக் கிளையில் உட்கார்ந்திருந்தது. பார்க்கவே பயங்கரமாயிருந்தது. ஆனாலும்,தைரியத்தைத் திரட்டிக் கொண்டு நாய்க்குட்டி ஆந்தையிடம்," நீ சந்தோஷமாக இருக்கிறாயா? " என்றுக் கேட்டது.
அதற்கு ஆந்தை,"ஆமாம். நான் மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறேன். அதில் உனக்கென்ன சந்தேகம்.?" என்று கேட்கவும்,நாய்க்குட்டி," உன் பெரிய கண்கள் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது. அலறலில் காடே அதிருகிறது.. அதைப்பற்றியெல்லாம் உனக்குக் கவலை இல்லையா ? நீ சந்தோஷமாக இருப்பதாக சொல்கிறாயே?" என்று கேட்டது."நான் இந்தக் காட்டின் இரவு நேரக் காவல்காரன். அது உனக்குத் தெரியுமா? மேலும் ஆந்தைகள் மிகவும் புத்திசாலிகள் என்று சொல்கிறார்களே அது உன் காதுகளில் விழுவதில்லையோ? இதெல்லாம் தான் எனக்குப் பெருமை. போ ! போ!.” என்று சற்றுக் கோபமாகவே ஆந்தை சொல்லவும் நாய்க்குட்டி பயந்து போய் ஓடியது.
அப்போது எதிர்பட்டது ஒரு குள்ள நரி. நரியை நிறுத்தி, “ நரியாரே! நீ சந்தோஷமாக இருக்கிறாயா?” என்று நாய்க்குட்டி கேட்கவும்,நரி நின்று, " ஏன் கேட்கிறாய்? என் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்?" என்று திருப்பிக் கேட்டது. “ இல்லை. நீ குள்ளமாக இருக்கிறாய்.மேலும் உன்னை தந்திரக்காரன் என்று சொல்கிறார்களே. அதைப்பற்றிய வருத்தம் இல்லையா உனக்கு? அதைத்தான் கேட்டேன்." என்று தயங்கி தயங்கி நாய்க்குட்டி சொன்னது.
நரியோ,” என் உயரத்தைப் பற்றி நானே கவலைப் படாத போது உனக்கென்ன வந்தது. என் புத்திக் கூர்மையை தந்திரம் என்று மற்றவர்கள் சொல்வதை நான் பொருட்படுத்துவதேயில்லை. எவ்வளவு நண்பர்களை என் புத்திக் கூர்மையினால், ஆபத்திலிருந்துக் காப்பாற்றியிருக்கிறேன் என்று தெரியுமா? அதெல்லாம் தான் எனக்குப் பெருமை. அதனால் நான் சந்தோஷமாயிருக்கிறேன். “ என்று சொல்லிய நரி பதிலுக்குக் காத்திராமல் ஓடிப் போய் விட்டது.
அந்த சமயத்தில் , காரிருட்டில் தன் முன்னே ‘பளபள’ என்று வெளிச்சத்தை வாரி வீசிக் கொண்டே மின்மினிப் பூச்சி ஒன்றுப் பறந்து வந்தது..
நாய்க்குட்டி மின்மினிப் பூச்சியை தன் வாலை ஆட்டி நிறுத்தியது.
நாய்க்குட்டி, “ இப்பொழுது நீ ஒளியைப் பாய்ச்சுகிறாய்.சரி. ஆனால் பகலில் நீ இருக்கும் இடமே தெரியாதே. அது உனக்கு வருத்தம் தானே.உன் வாழ்க்கையில் சந்தோஷமே இருக்காது போலிருக்கிறதே! “ என்று சொல்லவும்,
மின்மினிப் பூச்சியோ, “ யார் சொன்னது நான் சந்தோஷமாக இல்லை என்று. எப்பொழுது வெளிச்சம் தேவையோ அப்பொழுது வெளிச்சம் தருகிறேன். அது போதாதா? என் நண்பர்களுக்கு என்னாலான உதவியை செய்கிறேனே. அந்த மகிழ்ச்சி போதும்!” என்று சொல்லி விட்டு விர்ரென்றுப் பறந்து போனது .மின்மினிப் பூச்சி.
இப்பொழுது, மரத்தில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருந்த வவ்வால் கண்ணில் பட்டது. .
நாய்க்குட்டி வவ்வாலைப் பார்த்து,” அசிங்கமான வவ்வாலே! நீ அழகில்லாதவன் என்று உனக்குத் தெரியமா? எல்லோரும் நேராக நடக்கவும், பறக்கவும் செய்யும் போது, நீ மட்டும் தலை கீழாக தொங்கிக் கொண்டிருக்கிறாயே. உனக்கு அதில் நிச்சயம் வருத்தமிருக்கும் தானே ! “என்று கேட்டது.
நாய்க்குட்டிக்கு, இப்பொழுது எல்லாமே புரிந்துப் போனது. வேகமாக வீட்டை நோக்கி ஓடியது. அதன் தாய் வெளியே கவலையுடன் காத்துக் கொண்டிருந்தது. போனவுடன் தாய் ,” எங்கே சென்றாயடா என் செல்லமே! “ என்று வாஞ்சையுடன் கேட்கவும், நாய்க்குட்டி நடந்த அத்தனையும் சொல்லியது. ,” அம்மா இனிமேல் நானும் என் தோற்றத்தைப் பற்றியோ, நிறத்தைப் பற்றியோ கவலை கொள்ளப் போவதில்லை. நம்மைப் போல் நன்றியுடையவர்கள் யார் சொல்லு? அதை நினைத்துப் பெருமைக் கொள்கிறேன்." என்று நாய்க்குட்டி சொன்னதும்.
அதன் தாய் அதனை உச்சி முகர்ந்தது. பின் இருவரும் தூங்கச் சென்றனர்.
குழந்தைகளே, “நாய்க்குட்டி சொன்னது உண்மை தான் அல்லவா? நிறத்திலோ தோற்றத்திலோ அழகில்லை. நம் குணம்,நாம் எப்படி நடந்து கொள்கிறோம், மற்றவர்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறோம் என்பதெல்லாம் தான் முக்கியம்.அது தான் உண்மையான அழகு.”