unniyin viruppam

உன்னியின் விருப்பம்

மின்விசிறியின் கீழே படுத்துக்கொண்டு, குளிர்ந்த எலுமிச்சைச் சாறைப் பருகிக்கொண்டே, தொலைக்காட்சியில் கேலிச்சித்திரம் பார்க்க உன்னிக்கு விருப்பம். ஆனால், இவற்றைச் செய்யவிடாமல் அவனை எது தடுக்கின்றது? அதைக் கண்டுபிடிக்க, இந்தக் கதையைப் படியுங்கள்.

- Sheba Ravindran

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தக், தக், தக்!

இந்தச் சத்தம் கேட்டு படுக்கையிலிருந்து விழித்தெழுந்த உன்னி, ஜன்னலின் வெளியே பார்த்தான்.

அவனது வீட்டினருகே சிலர் தோண்டிக்கொண்டும் சம்மட்டியால் அடித்துக்கொண்டும் இருந்தனர். அவர்களைச் சுற்றி தடிமனான கம்பிகளும், மரக்கம்பங்களும் கிடந்தன.

ஒரு வேளை காட்டினுள் புது வீடு கட்டுவார்கள் போலும் என்று உன்னி எண்ணிக்கொண்டான்.

அம்மா, சூடான கரி நிரம்பிய இஸ்திரிப் பெட்டியினால்  பள்ளிச் சீருடைகளை தேய்த்துக்கொண்டிருப்பதை உன்னி பார்த்தான்.

“அம்மா, நம் வீட்டிற்கு

வெளியே வேலை செய்து கொண்டிருக்கும் அந்த ஆட்கள் யார்?” என்று கேட்டான் உன்னி.

“உனக்கு சீக்கிரமே தெரிய வரும். இப்போது இட்டலிகள் சூடு ஆறுவதற்கு முன் போய்ச் சாப்பிடு” என்று மர்மமாக சிரித்துக்கொண்டேகூறினார் அம்மா.

காலை உணவுக்குப் பின், கதகதப்பான சீருடைகளை அணிந்துகொண்டு, “போய் வருகிறேன், அம்மா!” என்று உன்னி விடைபெற்றான்.

காட்டின் வழியே காப்பித் தோட்டத்தை நோக்கி அவன் விரைந்து சென்றான். அவனது உயிர்த்தோழி அம்மு இங்கே வசிக்கிறாள்.

இதோ, அவள் அவனை நோக்கி கையசைக்கிறாள்!

“வா! நாம் ஒரு பந்தயம் வைத்துக்கொள்வோம்,” என்று அவர்கள் இருவரும் ஓட்டம் பிடித்தார்கள்!

இரு நண்பர்களும் காப்பிச் செடிகளின் நடுவே வேகமாக ஓடினார்கள். ஒரு பெரிய மாமரத்தை வட்டமாகச் சுற்றிக்கொண்டு ஓடினார்கள். ஓடையினைத் தாண்டிக் குதித்து ஓடினார்கள்.

இறுதியாக, பள்ளிக்குச் செல்லும் சாலையை அடைந்தார்கள்.

இருவரும் வகுப்பை நோக்கி நடக்கையில், அம்மு, ஒரு ராகத்தை முனகிக் கொண்டே வருவதை உன்னி கேட்டான்.

அது, தொலைக்காட்சியில் அவளுக்குப் பிடித்தமான கேலிச்சித்திரத்தில்வரும் ராகம்.

“அந்த கேலிச்சித்திரத்தில் வரும் சிறுவன், தன்னுடைய மாயக்கண்ணாடியின் உதவியோடு வில்லன்களை எதிர்த்து சண்டை போடுவான்!” என்று அம்மு விளக்கினாள்.

என்றைக்கு தன் வீட்டில் தொலைக்காட்சிப்பெட்டி இருக்கும் என்று வியந்து கொண்டிருந்தான் உன்னி.

ட்ரிங்ங்ங்ங்ங்!

பள்ளியின் மணி அடிக்கிறது!

மின்விசிறியின் அடியிலிருக்கும் இருக்கையில் அமர்வதற்காக, அம்முவும் உன்னியும் விரைந்துச் செல்கிறார்கள். ஆஹா! என்னவொரு அற்புதமான காற்று!

உன்னி, தன் வீட்டில் மின்விசிறியின் அடியில் படுத்துத் தூங்குவதைப் போல கற்பனை செய்கிறான். ஆஹா! அதுவும் கோடை காலத்தில் மிக நன்றாக இருக்குமே!

இடைவேளை நேரத்தில், உன்னியும் அவனது நண்பர்களும் விளையாடுவதற்காக ஓடினார்கள். அது மிகவும் வெயிலான நாள் என்பதனால், அவர்களுக்கு விரைவில் தாகம் எடுத்துவிட்டது. குட்டன் சேட்டனின் கடையில்,எலுமிச்சைச் சாறுவாங்கச் சென்றனர்.

‘சர்ர்ர்!’ உன்னியின் பிசுபிசுப்பான கைகளில், குவளை 'சில்'லென்றிருந்தது.

“நம் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி இருந்தால், அம்மா செய்யும் எலுமிச்சைச்சாறும் இதைப் போலவே ருசியாக இருக்கும்” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டான் உன்னி.

கேள்விகளால் உன்னியின் தலையே வெடித்துவிடும் போலிருந்தது. ஜானகி மிஸ்ஸிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று தீர்மானித்தான்.

“மிஸ்! குட்டன் சேட்டனின் கடையில் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது; ஆனால் எங்கள் வீட்டில் இல்லை! பள்ளியில் மின்விசிறி இருக்கிறது; ஆனால் எங்கள் வீட்டில் இல்லை! அம்முவின் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது; ஆனால் எங்கள் வீட்டில் இல்லை! எதனால் இப்படி, மிஸ்?” எனக் கேட்டான் உன்னி.

“உன்னி! உன்னுடைய வீடு எங்கே இருக்கிறது?” எனக் கேட்டார் ஜானகி மிஸ்.

“என் வீடு காட்டினுள் இருக்கிறது, மிஸ். காப்பித் தோட்டத்தையும் தாண்டி!”என்றான் உன்னி.

“ஓ!அப்படியா! மின்விளக்குகள், மின்விசிறிகள், குளிர்சாதனப்பெட்டி மற்றும் தொலைக்காட்சிப்பெட்டி செயல்படுவதற்கு மின்சாரம் தேவை. உனது வீட்டில் மின்சாரம் இல்லையெனத் தெரிகிறது” என்றார் ஜானகி மிஸ்.

“ஆனால், ஏன்?” எனக் கேட்டான் உன்னி.

“கிராம மின் நிலையத்திலிருந்து கம்பிகள் மூலமாக வீடுகளுக்கு மின்சாரம் வருகிறது. உனது வீடு, அடர்ந்த காட்டுக்கு நடுவே இருப்பதனால், மின்சாரக் கம்பிகளை உன் வீட்டு வரைக்கும் கொண்டுவருவது கடினம்,” என்றார் ஜானகி மிஸ்.

உன்னிக்கு ஒரே ஏமாற்றமாகப் போய்விட்டது.

பள்ளி முடிந்த பிறகு, நண்பர்கள் இருவரும் காப்பித் தோட்டத்தின் வழியாக அம்முவின் வீட்டை நோக்கி ஓடினர். சூரியன் மறைந்துகொண்டிருந்தான்.

அம்மு மின்விளக்கைப் பொருத்திவிட்டு, “நான் இப்போது படிக்கப் போகிறேன்,” என்றாள்.

“இருட்ட ஆரம்பித்துவிட்டது. நானும் சீக்கிரமாக என் வீட்டுக்குச் சென்று, மண்ணெண்ணெய் விளக்கைப் பொருத்த வேண்டும்,” என்று பெருமூச்சுடன் கூறிச் சென்றான் உன்னி.

வீட்டு வாசலில் அப்பா

சில ஆட்களிடம் பேசிக்கொண்டிருப்பதை உன்னி கவனித்தான்.

அவர்கள், காலையில் வீட்டருகே சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்த அதே ஆட்கள்.

“இங்கே என்ன நடக்கிறது, அச்சா?” எனக் கேட்டான் உன்னி.

அனைவரும் அவனைப் பார்த்து புன்முறுவல் செய்தனர்.

அம்மா, சுவரின் மீதிருந்த மின்விசையைச் சுட்டிக்காட்டினார்.

உன்னி பொத்தானை அழுத்தினான். உடனே...

டடா!

அறை முழுவதும் ஒளியால் நிறைந்தது.

அனைவரும் கரவோசை எழுப்பினர். இதற்கு, ஒரே ஒரு அர்த்தம் தான் இருக்கவேண்டும்...

“என்னால் நம்பவே முடியவில்லை! இறுதியாக, நம் வீட்டிற்கும் மின்சாரம் வந்துவிட்டது!” என்று ஆச்சரியத்தோடு கூவினான் உன்னி.

இப்போது உன்னியால் மின்விளக்கின் அடியில் படிக்க முடியும்.

மின்விசிறியின் அடியில் தூங்க முடியும்.

சில்லென்ற எலுமிச்சைச்சாறு பருக முடியும்.

அத்தோடு, மாயக்கண்ணாடி அணிந்த சூப்பர் ஹீரோவின் சாகசங்களையும் பார்க்க முடியும்!

உங்களுக்குத் தெரியுமா?

- மின்சாரத்தை பல வழிகளில் உருவாக்க முடியும். இந்தியாவில், பிரதானமாக நிலக்கரி மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

- நீர், காற்று மற்றும் சூரியஒளியில் இருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

- இந்தியாவில், 1905-ல் முதன்முறையாக மின்சாரத்தைப் பெற்ற நகரம், பெங்களூரு ஆகும்.

- இன்னும், இந்தியாவில் பல வீடுகளில் மின்சார வசதி இல்லை. பீகார் மாநிலம் மின்சார வசதியில்லாத வீடுகளைப் பெருமளவில் கொண்டுள்ளது. உத்தர பிரதேசம், ஜார்கண்ட், ஒடிஷா போன்ற பிற மாநிலங்களிலும் இன்றும் பல மக்கள் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர்.

வினாடி வினா!

1. சில நேரங்களில், நீங்கள் வானத்தில் மின்கீற்றுகளைப் பார்ப்பீர்கள். அதை என்னவென்று அழைப்பார்கள்?

2. தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்சாதனப்பெட்டி மற்றும் மின்விசிறி போன்றவை செயல்படுவதற்கு தன் வீட்டிற்கு மின்சாரம் கிடைக்கவேண்டும் என்ற விருப்பம் உன்னிக்கு! மின்சாரத்தில் செயல்படும் வேறு மூன்று சாதனங்களை உங்களால் கூறமுடியுமா?

3. ஒருவகை மீன் வேட்டையாடுவதற்கும், ஆபத்திலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்வதற்கும் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. அந்த மீனுடைய பெயர் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

4. நம் நாட்டில், ஒரு தென்னிந்திய மாநிலத்தில், 2017–ம் ஆண்டில், முதன் முறையாக எல்லா வீடுகளுக்கும் மின்சார வசதி கிடைத்தது. அது எந்த மாநிலம்?

விடைகள்:

1. மின்னல்

2. இஸ்திரிப் பெட்டி, கணினி,  வெந்நீர் க்  கொதிகலன்

3. மின்சார விலாங்கு

4. கேரளா