utkarnthe ulagam sutra

உட்கார்ந்தே உலகம் சுற்ற...

நந்தினியின் பாட்டி மந்திரக்கதைகள் சொல்லக்கூடியவர். அவரிடம் கதை கேட்க யாருக்குத்தான் பிடிக்காது

- S. balabharathi

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நந்தினிக்கு பாட்டி என்றால் மிகவும் பிடிக்கும்.

பாட்டிக்கும் நந்தினி என்றால் கொள்ளைப் பிரியம்.

ஆனால் அவரோ கிராமத்தில் இருந்தார்.

நந்தினியின் அப்பா எவ்வளவோ அழைத்தும் நகரத்திற்கு வர மறுத்துவிட்டார்.

ஆண்டுக்கு ஒரு முறை கோடை விடுமுறையில் அவள் கிராமத்திற்கு வரும் போதுதான் பாட்டியை பார்க்க முடியும்.

இந்த கோடை விடுமுறைக்கும் பாட்டியைப் பார்க்க தன் அம்மா அப்பாவுடன் செல்லவிருக்கிறாள் நந்தினி.

விடுமுறையில் வரும் நந்தினிக்கு என நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கி வைத்திருப்பார் பாட்டி.

அவற்றைக்கொண்டு, விதவிதமான கதைகளைச் சொல்லுவார் பாட்டி.

பாட்டி, கதை சொல்லும் போது நந்தினியின் கண்களை மூடிக்கொள்ளச் சொல்லுவார்.

கண்களை மூட்டிக்கொண்டுதான் கதைகளைக் கேட்கவேண்டும்.

பாட்டியின் வார்த்தைகளில் ஏதோ ஒரு வித்தை இருந்தது. அதுவொரு மந்திரம் போல, அவர் கதை சொல்லச்சொல்ல அந்த காட்சிகள் எல்லாம் அப்படியே அங்கே நிகழும்.

அப்படித்தான் ஒரு முறை சைக்கிள் பொம்மையை எடுத்து, “நீ ஓட்டிக்கொண்டு போனாயா?” என்று பாட்டி சொல்ல, ‘ட்ரிங்.. ட்ரிங்...’ என்று மணி அடித்தபடி, சைக்கிள் ஓடுவது போலவே உணர்ந்தாள் நந்தினி.

இடி இடிப்பதைப் பற்றி பாட்டி கதை சொல்லும்போது, ‘டமார், டமார்’ என்று நிஜமாகவே வானத்தில் இடியோசை கேட்கும்.

பயந்துபோன நந்தினி, அந்த மாதிரி கதைகளைச் சொல்லவேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

அப்புறம் பாட்டி, ஜாலியான கதைகளைச் கூறத்தொடங்கிவிட்டார்.

ஒருமுறை ஆட்டோவை வைத்து விளையாட்டுக் காட்டிய பாட்டி,

ஆட்டோவை ஹெலிக்காப்டர் போல பறந்துபோனது என்றார்.

’ட்ரூ..ட்ரூ..ட்ரூ..’ என்ற ஓசையுடன் ஆட்டோ பொம்மையின் தலையில் சுழலும் ரெக்கை முளைத்து, அது பறக்கத்தொடங்கியது.

தனது ஊற்றுகோளில் அமர்ந்துகொண்டு காற்றில் பறக்கும் கதையை பாட்டி சொன்னார் என்றால், வேகமாகப் பறக்கும் போது முகத்தில் காற்று உரசுமே அதுபோல காற்று மோதிச்செல்லும்.

இன்னொருமுறை, ஒரு குட்டி ஆம்புலன்ஸ் வாகனத்தை கையில் எடுத்த பாட்டி, இந்த குட்டி ஆம்புலன்ஸை ஓட்டப்போறது யார் தெரியுமா? குட்டியான நந்தினி என்றார்.

அவ்வளவு தான். அந்த வாகனத்தின் அளவிற்கு நந்தினி சுருங்கிப்போனாள்.

மற்றொரு முறை, நீயும் நானும் ஒரு படகில் போய்க்கொண்டிருந்தபோது என்று பாட்டி கதை சொல்ல, கண்களை மூடி இருந்த நந்தினிக்கு படகு பயணத்தில் துள்ளி வரும் மீன் எல்லாம் மனக்கண்ணில் விரிந்தது.

இதோ, இந்த கோடை விடுமுறையை பாட்டியுடனும் அவர் கதைகளுடனும்  செலவளிக்க அம்மா, அப்பா, தம்பிப் பாப்பாவுடன் தொடர்வண்டியில் பயணமாகிவிட்டாள் நந்தினி.

ஊர் போய் சேர்ந்ததும் பாட்டியிடம் விதவிதமான புதிய கதைகளைக் கேட்டு, பொழுதைப் போக்கிக் கொள்ளப்போகிறாள்.

+++

ஆமாம்; உங்கள் விடுமுறைக்கு, நீங்கள் எங்கே போனீர்கள்?!