vaalizhantha panri kutti

வாலிழந்த பன்றிக் குட்டி

பன்றிக் குட்டியான பொங்கலுக்கு ஒரு சிறிய சிக்கல்! பரபரப்பான சாகசங்களைத் தேடி அவளுடைய வால் மட்டும் அடிக்கடி அவளை விட்டுவிட்டு ஓடிப்போய்விடுகிறது! ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்கும் இந்தப் புத்தகத்தில் தன் ஓடிப்போன வாலைக் கண்டுபிடிக்க பொங்கலுக்கு உதவுங்களேன்!

- Anitha Ramkumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பன்றிக் குட்டியான பொங்கலுக்கு தூங்கப் பிடிக்கும். சில சமயம் அவள் நாள் முழுக்கத் தூங்குவாள்.

எனவே, அவள் வால் சலிப்படைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை!

ஒருநாள் மதியம், பொங்கல் தன் குட்டித் தூக்கத்திலிருந்து எழுந்தபோது அவள் வாலைக் காணவில்லை. அது அவளை விட்டுவிட்டு சாகசப் பயணம் சென்றுவிட்டது!

வாலில்லாமல் தன்னைப் பார்க்க வேடிக்கையாக இருக்குமோ என்று கவலைப்பட்ட பொங்கல், அதைத் தேடிச்செல்ல முடிவெடுத்தாள்.

சரக்! “இந்தக் காடு ஒரே அழுக்கா இருக்குது!” என்றாள் பொங்கல்.

அய்யே! தரையிலிருந்த மரக்கட்டையில் தடுக்கி…

டமால்! என அருகிலிருந்த புதரில் விழுந்தாள்.

“என் வாலை யாராவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள் பொங்கல்.

“அதுக்குப் பதிலா, ஒரு காளான் வாலைப் பயன்படுத்திப் பார்க்குறியா?” என்று கேட்டது மந்தி.

“ம்ஹூம்! எனக்கு என்னோட வால்தான் வேண்டும்” என்று சொல்லிவிட்டு

பொங்கல் தன் வாலைத் தேடி வேறிடம் சென்றாள்.

அப்பப்பா! “இந்த நகரம் ஒரே இரைச்சலா இருக்குது!” என்றாள் பொங்கல்.

பீப்-பீப்! வளைந்து நெளிந்து வந்த ஆட்டோ ரிக்‌ஷாவிலிருந்து தப்பி…

டிரிங்-டிரிங்! மிதிவண்டிக்கு அடியில் உருண்டு செல்ல முயன்றாள் பொங்கல்.

“என் வாலை யாராவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள் பொங்கல்.

“அதுக்குப் பதிலா, ஒரு பலூனை வாலாகப் பயன்படுத்திப் பார்க்குறியா?” என்று கேட்டது காக்கா.

“இதையா! எனக்கு என்னோட வால்தான் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, பொங்கல் தன் வாலைத் தேடி வேறிடம் சென்றாள்.

ஹர்ரம்ப்ப்ப்! “இந்தக் குகை ஒரே இருட்டா இருக்குது!” என்றாள் பொங்கல்.

டக்-டொக்! ஜாக்கிரதையாகக் கல் தரையில் நடந்து…

தடால்! தரையில் குவிந்திருந்த கற்களில் தடுக்கி விழுந்தாள்.

“என் வாலை யாராவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள் பொங்கல்.

“அதுக்குப் பதிலா, இந்த ஊசிப்பாறை வால் வேண்டுமா?” என்று கேட்டது வௌவால்.

“அம்மாடீ! எனக்கு என்னோட வால்தான் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, பொங்கல் தன் வாலைத் தேடி வேறிடம் சென்றாள்.

சலக்-சலக்! “கடலுக்கடியில ஒரே ஈரமா இருக்குது!” என்றாள் பொங்கல்.

தொம்-தொம்! வண்ண மீன்கள் சில பொங்கலுடன் நடனமாட முயன்றன.

உஷ்ஷ்ஷ்! பவளப்பாறைகளின் பின்னால் ஒளிந்துகொண்டாள் பொங்கல்.

“என் வாலை யாராவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள் பொங்கல்.

“அதுக்குப் பதிலா, இந்த கடற்பாசி வாலை வைத்துக்கொள்ளேன்!” என்றது ஆமை.

“அய்யே! எனக்கு என்னோட வால்தான் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, பொங்கல் தன் வாலைத் தேடி வேறிடம் சென்றாள்.

அஅஅஆவ்! “இந்தப் பாலைவனம் இவ்வளவு சூடாக இருக்குதே!” என்றாள் பொங்கல்.

உஊஊ! தான் ஒரு மணல்மேட்டின் ஓரத்தில் அமர்ந்திருப்பதை பொங்கல் உணரவில்லை.தடால்! அவள் கீழே உருண்டு விழுந்தாள்.

“என் வாலை யாராவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள் பொங்கல்.

“இந்த கள்ளிச்செடியை வாலாக வைத்துக்கொள்ளேன்!” என்றது ஒட்டகம்.

“ஆஆஆஆ!” என்று அலறினாள் பொங்கல்.

“எனக்கு என்னோட வால் இப்பவே வேணும்” என்று சொல்லிவிட்டு, பொங்கல் தன் வாலைத் தேடி வேறிடம் சென்றாள்.

ப்ர்ர்ர்ர்! “மலைக்கு மேலே குளிர் நடுக்கித் தள்ளுகிறதே!” என்றாள் பொங்கல்.

அய்யோ! மேலிருந்து பார்க்கும்போதுதான் தான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறோம் என்று அவளுக்குப் புரிந்தது.

கிர்கிர்கிர்ர்ர்ர்! தலை சுற்றி கீழே விழும் முன் சட்டென்று பின்னால் நகர்ந்தாள்.

“என் வாலை யாராவது பார்த்தீர்களா?” என்று கேட்டாள் பொங்கல்.

“இந்தக் காலுறை வாலை வைத்துக்கொள்கிறாயா?” என்று கேட்டது யாக்.

தன் புத்தம்புது வாலை உற்றுப் பார்த்தாள் பொங்கல்.

“இது ரொம்ப அழகா இருக்குதே!” இதுவரை தான் பார்த்த எல்லா வால்களையும் ஒரு முறை நினைத்துப் பார்த்தாள்.

ஹர்ரம்ப்ப்ப்! “ம்ஹூம்! நிச்சயமாக கள்ளிச்செடி வால் மட்டும் வேண்டவே வேண்டாம்.”

ஆனால், எல்லோருக்கும் ஒரே ஒரு வால் இருக்கும் பொழுது, தான் மட்டும் வித விதமான வால்களை வைத்து அழகு பார்க்கும் அனுபவம் புதிதுதான் என்று உணர்ந்தாள். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தாள்.

அவளது வால் உலகெங்கும் சுற்றி சாகசங்கள் செய்துகொண்டிருக்கட்டும். பன்றிக் குட்டி பொங்கல், வீட்டிலேயே இருந்து தன் சொந்தச் சாகசங்களில் ஈடுபடுவாள்.