பள்ளி முடிந்த பிறகு, நாங்கள் அரச மரத்தடியில் விளையாடுவோம். நொண்டி, ஒரு குடம் தண்ணி, கண்ணாமூச்சி, பாண்டி, மேடு பள்ளம், கண்டுபிடி, ஏழு கற்கள்...போன்றவை அவற்றில் சில.
மரத்திற்குப் பக்கத்தில் தான் ராஜு மாமாவின் தேநீர்க் கடை இருந்தது. வெயில் அதிகமாக இருக்கும் போது அவர் எங்களுக்காக ஒரு கூஜா நிறைய எலுமிச்சைச் சாறும் குவளைகளும் வைத்திருப்பார்.
இதை எங்கள் எட்டு பேருக்கும் எப்படி சரிசமமாய்ப் பிரிப்பது?
அமனின் சட்டைப் பையில் கயிறு ஒன்று இருந்தது. கூஜாவில் இருந்த பழச்சாறின் அளவிற்கு சரியாக நாங்கள் அந்தக் கயிற்றை வெட்டினோம்.
பின்னர் அந்த கயிற்றை இரண்டாக மடித்தோம். மடித்ததை, மீண்டும் இருமுறை மடித்தோம். இப்போது, எங்களிடம் எட்டு சமமான பாகங்கள் இருந்தன.
எட்டாக மடித்த கயிற்றைக் கூஜாவின் வெளிப்புறம் வைத்து எட்டு சமமான பிரிவுகளை நாங்கள் குறித்தோம்.
மனுவும், சாராவும் சேர்ந்து கூஜாவைத் தூக்கி பழச்சாறைக் குவளைகளில் கவனமாக ஊற்றிக் கொடுத்தார்கள்.
குடித்த பின்னர் எல்லோரும், ‘‘இது மிகவும் ருசியாக இருக்கிறது மாமா! எங்களுக்கு இன்னும் வேண்டும்!’’ என்றனர்.
‘‘ஓ! நீங்களே இதைச் செய்யலாம்! இதன் செய்முறையை அந்தப் பலகையில் எழுதிப் போடுகிறேன்’’ என்றார் ராஜு மாமா.
எலுமிச்சை பழச்சாறு செய்முறை:
1/10 பிழிந்த எலுமிச்சைச் சாறு 2/10 சர்க்கரைப் பாகு 7/10 குளிர்ந்த நீர் இவை எல்லாவற்றையும் ஒரு கூஜாவில் ஊற்றவும்.
நன்றாகக் கலக்கிப் பரிமாறவும்.
நம்மிடம் நீர், சர்க்கரைப் பாகு மற்றும் பிழிந்த எலுமிச்சைச் சாறு இருக்கிறது. ஆனால், நமக்கு இப்பொருட்களை பத்தின் பகுதிகளாக அளக்கத் தெரியாதே?!
அப்பொழுது குரியா, “நாம் ஏற்கனவே எட்டு பிரிவுகளை குறித்து வைத்துள்ளோம். அத்தோடு இன்னும் இரு பிரிவுகளைக் குறித்து விட்டால், நமக்கு பத்து பிரிவுகள் கிடைத்து விடும்” என்றான்.
அலோக் எலுமிச்சையை பிழிந்த சாறைக் கூஜாவின் முதல் குறி வரை ஊற்றினான்.
நான் இரண்டு பகுதிகளுக்கு சர்க்கரைப் பாகை ஊற்றினேன். இப்பொழுது, மூன்றாவது குறி வரைக்கும் கலவை வந்து விட்டது.
மனு குளிர்ந்த நீரை பத்தாவது குறிவரை ஊற்றினான்.
பின்னர், ஒரு நீளமான கரண்டியால் கலக்கினோம். இப்போது எலுமிச்சைச் சாறு தயார்! அதை எட்டு குவளைகளில் ஊற்றினோம். எங்களிடம் இன்னும் பழச்சாறு மிச்சம் இருந்தது. நாங்கள் அதை ராஜு மாமாவுக்காக ஒரு பெரிய குவளையில் ஊற்றினோம்.
“சபாஷ்!” என்று பாராட்டினார் ராஜு மாமா. “நான் இது வரை குடித்ததிலேயே இது தான் மிகவும் ருசியான எலுமிச்சைச் சாறு! சூடான பக்கோடாவுடன் சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்” என்றார்.
“ஹைய்யா! மிக்க நன்றி, மாமா!” என்று நாங்கள் மகிழ்ச்சியாகக் கூவினோம்.
செய்து பார்!
கால் பங்கு பாதி பங்கு முக்கால் பங்கு முழு பங்கு
இந்த வார்த்தைகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?
ஒரு முழு எலுமிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரியவரின் உதவியோடு அதை 8 சரி பகுதிகளாக வெட்டுங்கள். கத்தியை கவனத்துடன் உபயோகிக்கவும். ஒவ்வொரு துண்டும், முழு பழத்தின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு துண்டையும் ஒரு ’பின்னம்‘ எனலாம். இப்போது பாதி எலுமிச்சையாகும் விதமாகத் துண்டுகளை ஒன்று சேருங்கள்.
எத்தனைத் துண்டுகள் உள்ளன?
முக்கால் பங்கு எலுமிச்சையை உங்கள் நண்பரிடம் கொடுங்கள். எத்தனைத் துண்டுகள் அதில் உள்ளன?
உங்கள் சகோதரன் அரை எலுமிச்சையைக் கேட்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அதற்கு எத்தனைத் துண்டுகள் வேண்டும்?
எட்டில் ஒரு பங்கு = 1/8