நீங்கள் வேர்ல்ட் வைட் வெப் என்னும் வலையம் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இல்லையா? பரவாயில்லை.
இணையம் பற்றியாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? ஆமாம் என்கிறீர்களா? நல்லது.
இணையம் என்றால் என்னவென்று தெரியுமா? “உறுதியாக சொல்ல முடியாது. இது கணினிகளோடு சம்மந்தப்பட்ட விஷயம் என்பது மட்டும் தெரியும்” என்று சொல்கிறீர்களா? நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இது முழுமையான விடையல்ல.
அப்படியானால் முழுமையான விடை என்னவென்று கேட்கிறீர்களா? ஹ்ம்ம்ம். இதற்கு விடை சொல்வதற்கு ஒரு நிபுணர் தேவை. ஒன்று சொல்லட்டுமா? அப்படி ஒருவரை எனக்குத் தெரியும். அவர் எப்பொழுதும் கணினியின் அருகிலே இருப்பார். நாம் நேராக கணினி அறைக்கு செல்வோம்.
ஹாய் நெட்டிகுட்டி! சில குழந்தைகள் உன்னை சந்திக்க வந்திருக்கிறார்கள். வெளியே வா. எங்கே இருக்கிறாய்?
வெளியே வா. ஹா.... அதோ இருக்கிறாள். குழந்தைகளே, ஒரு ஹலோ சொல்லுங்கள். அவளது உருவத்தையோ, நளினத்தையோ பார்த்து அசந்து விடாதீர்கள். அந்தச் சின்ன தலைக்குள் ஏராளமான விஷயங்களை வைத்திருக்கிறாள்.
நெட்டிகுட்டி, இணையம் என்றால் என்ன?
இங்கு எல்லோரும் அதனை தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
ஆஹா! இது பெரிய கேள்வி! எளிதாக பதில் சொல்லப் பார்க்கிறேன். இணையம் என்னும் இன்டெர்நெட், (இன்டெர் கன்னெக்டெட் நெட்வர்க்ஸ் என்பதின் சுருக்கம்) உலக அளவில் பல கணினிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கும் தொகுப்பாகும்.
இந்த கணினிகளில், பிரம்மாண்டமான கணினிகள் (ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்களில் உபயோகிக்கப்படுவது), மேஜை கணினிகள் (வங்கிகள் மற்றும் கணினி மையங்களில் காணப்படுவது) மடிக்கணினிகள் (தோளில் மாட்டிக் கொண்டு எடுத்து செல்வது), செல்ஃபோன்கள் (பெரிய சத்தம் எழுப்பி திரையரங்கில் படம் பார்ப்பதற்கு தடையாக இருப்பது) இவைகள் அல்லாது, இளைய சமுதாயம் உபயோகிக்கும், காதுகளிலிருந்து முளைத்தது போல் தோன்றும் சின்ன சின்ன ஹெட்ஃபோன்களோடு கூடிய குட்டி ம்யூசிக் ப்ளேயர்கள் கூட இதில் அடங்கும்.
இந்த கணினிகள் எல்லாம் ஒன்றோடு ஒன்று, கம்பிகள் மற்றும் கேபிள்களால் இணைக்கப்பட்டு இருக்கலாம். இந்த கேபிள்கள் தரைக்கு மேல், தரையின் கீழ், கடலின் அடியில் கூட (பெரிய கணினிகளை இணைக்க) இருக்கலாம். அல்லது கம்பிகள் இல்லாமல் தகவல் பரிமாற்றம் நடக்கலாம் (மடிக்கணினி, செல்ஃபோன்கள் மற்றும் ம்யூசிக் ப்ளேயர்கள்). எனவே, இணையத்தை உபயோகிக்க உங்கள் கணினியை மின் இணைப்போடு இணைத்து, ஒரே இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. நீங்கள் எங்கிருந்தாலும் இணையம் மூலம் உலகத்தோடு உங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
அவ்வளவுதானா? இணையம் என்பது நண்பர்களோடு பேச, சினிமா பாடல்களை பதிவிறக்கம் செய்ய, திரைப்படத்திற்கு டிக்கட் பதிவு செய்ய, பள்ளி வேலைகளுக்காக விஷயங்களை தேட, மருத்துவமனையின் தொலைபேசி எண்ணை கண்டுபிடிக்க உதவுவது என்று நாங்கள் நினைத்திருந்தோம்.
அது இணையம் அல்ல! அவையெல்லாம் உண்மையிலே அற்புதமான ஒன்றின், அதை என்னவென்று சொல்வது... பொறுங்கள் சொல்கிறேன்.... ம்ம்ம். வலையம். வேர்ல்ட் வைட் வெப் எனும் வலையம், அதன் ஒரு பகுதி. இதனை W3 என்று சுருக்கமாக அழைப்போமா? W3 என்பது மிகமிகமிக அதிகமான பக்கங்களின் ஒரு தொகுப்பாகும். W3இல் தற்போது 40 பில்லியன் பொதுப்பக்கங்கள் உள்ளன.
ஒரு பக்கம் என்பதில், வார்த்தைகள், எண்கள், புகைப்படங்கள், பாடல்கள், வீடியோ கிளிப்புகள் மற்றும் இன்னும் பல வடிவங்களில் தகவல்கள் இருக்கும். பக்கங்களின் இந்தத் தொகுப்பு, பல லட்சம் கணினிகள், கைபேசிகள், ம்யூசிக் ப்ளேயர்கள் வழியே இணையத்தினுள் இணைந்து இருக்கிறது.
எனவே W3 என்பது இணையம் அல்ல, அதன் ஒரு பகுதி மட்டுமே, அதுவும் அதன் சிறந்த பகுதி. நீங்கள் இணையத்தை ஒரு உணவகமாக நினைத்தால் W3 என்பது அங்கு கிடைக்கும் பிரபலமான உணவாகும். அந்த உணவை எடுத்து, சுவையான பகுதிகளை ருசிக்க உதவும் தேக்கரண்டிதான், வெப் ப்ரௌசர் (வலை உலாவி).
ஆஹா! நெட்டிகுட்டி, உன் பேச்சு எங்களுக்கு பசியைக் கிளப்பிவிட்டது. எதனால் W3 இத்தனை பிரபலமாக இருக்கிறது என்று கொஞ்சம் சொல்லேன்.
நிச்சயமாக! W3 தரும் இந்த அதிக உற்சாகத்துக்குக் காரணம், அதிலுள்ள:
மின்னஞ்சல் - இதன் மூலம் உலகத்தில் யார் எந்த மூலையில் இருந்தாலும், அவர்களுக்குக் கடிதம் அனுப்பவும், அந்தக் கடிதத்தை அவர் ஒரு நிமிடத்திற்குள் பெறுவதும் முடியும். இந்த கடிதத்தை ஒருவர் அமெரிக்காவுக்கு தபால் மூலம் அனுப்பினால், போய் சேர 15 நாட்கள் ஆகும். அதோடு இதற்குப் பணம் செலவழிக்கவும் வேண்டும். ஆனால் மின்னஞ்சல் இலவசம்.
தேடல் (சர்ச்) - இது பல லட்சக்கணக்கானபல்வேறு தலைப்புகளில் தேவையான மற்றும் தேவையற்ற விஷயங்களை தேடித் தெரிந்து கொள்ள உதவுகிறது.
கங்கை நதி எந்த மாநிலங்கள் வழியே பாய்கிறது என்று தெரிய வேண்டுமா? அல்லது சுதந்திரதேவி சிலை எப்படி இருக்கும் என்று பார்க்க வேண்டுமா? சமீபத்திய பாலிவுட்டின் பிரபலமான பாடலை கேட்க. பார்க்கத் தவறிய சோட்டா பீம் எபிசோடை பார்க்க. சமீபத்திய T20 உலகக்கோப்பை விளையாட்டில் ஸ்கோர் தெரிந்து கொள்ள. அடுத்த நாள் மும்பை – பூனே ரயிலுக்கு டிக்கெட் கிடைக்குமா என்று பார்க்க. எல்லாவற்றுக்கும் இது உதவும்.
ஒருவர், உலகத்தில் எங்கு இருந்தாலும், அவர் தன் கணினியை இணையத்தில் இணைத்து, விஷயங்களை பகிர்ந்து கொள்ள முடிவு செய்து, அதை W3இல் பதிவேற்றம் செய்தால், உங்களால் அதை உடனடியாக தேடிப்பிடிக்க முடியும். அதுவும் இலவசமாக!
ஆனால், கோடிக்கணக்கான பக்கங்களில் உங்களுக்குத் தேவையான பக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது?
மிகவும் எளிது. ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பிரத்தியேக விலாசம் உண்டு. உங்கள் தபால்காரர் எப்படி உங்கள் வீட்டு முகவரியை வைத்து உங்கள் வீட்டை கண்டுபிடிக்கிறாரோ, அதுபோல் வெப் ப்ரௌசரும் கண்டுபிடிக்க உதவும். எனவே உங்களுக்குத் தேவையான பக்கத்தின் முகவரி கைவசம் இருந்தால் உடனடியாக கண்டுபிடிக்கலாம்.
ஆனால் தேவையான முகவரி இல்லாதபோது என்ன செய்வது? இது பிரச்சினையே இல்லை. தேடல் பொறி (ஸர்ச் இஞ்சின்) எனும் அற்புதமான சேவையை உபயோகித்து, கண்டுபிடிக்கலாம். உங்களுக்கு உதவ இதுவும் W3இல் இருக்கிறது.
பகிர்வது (ஷேரிங்): இது நீங்கள் விரும்பும் எதையும் பகிர்ந்துகொள்ள உதவுகிறது. நீங்கள் விரும்பும் ஒரு பாடல், உங்கள் நாயின் படம், புத்திசாலித்தனமான வழியில் ஒரு கடினமான கணிதக்கணக்கின் தீர்வு, நம்முடைய வீதிகளில் குப்பை இல்லாமல் வைத்துக் கொள்ளவதற்கான உங்களது பெரிய திட்டம். இவற்றை எல்லாம் உலகிலுள்ள எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள முடியும். இணையம் அல்லது W3 மீது எந்த ஒரு தனி மனிதனுக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ* அதிகாரம் இல்லை. எனவே எதையும் பகிர்ந்து கொள்ள முன் அனுமதி பெற அவசியமில்லை.
இது எத்தனை வசதியானது என யோசியுங்கள்! இதுவரை புத்தகங்கள் இருந்தன. திரைப்படங்கள், தொலைகாட்சி மற்றும் நாளிதழ்கள் உங்களுக்கு உலக விவரங்களைக் கொடுத்தன. அவை உங்களிடம் பேசின. ஆனால் உங்களால் அவற்றிடம் பேச முடியவில்லை. W3 வந்த பின் எல்லாம் மாறிவிட்டது. உங்களால் கேட்கவும் முடியும், அதோடு உங்கள் எண்ணத்தை சொல்லவும் முடியும். இதற்கு நீங்கள் ஒரு முக்கிய நபராகவோ, வயதில் மூத்தவராகவோ இருக்க அவசியமில்லை. இதுதான் W3 யை அற்புதமானதாக ஆக்குகிறது. இது உண்மையில் இலவசமானது. எல்லோருக்குமானது மற்றும் ஒரு சனநாயக அமைப்பு. இணையத்தில் இணைந்துள்ள அனைவருக்கும் தங்கள் குரலை வெளிபடுத்த வாய்ப்பளிக்கிறது.
அடடா! நெட்டிகுட்டி இது பிரமாதம்! இப்போது முற்றிலும் வேறுபட்ட ஒரு விஷயத்தைப் பார்ப்போம். W3யில் முதல் இரண்டு Wக்கள் உலகளாவிய என்பதைக் குறிக்கிறது. ஆனால் மூன்றாம் W குறிக்கும் வலை என்பது என்ன? உண்மையில் இணையம் தானே ஒரு வலை?
நல்ல கேள்வி! இணையம் ஒரு வலை என்று நீங்கள் சொல்வது சரிதான். (ஏனெனில் எல்லா கணினிகளும் ஒன்றுக்கொன்று இதன் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.) ஆனால் W3யும் ஒரு வலைதான். இதை நான் விளக்குகிறேன். W3 என்பது கோடிக்கணக்கான பக்கங்களால் உருவாக்கப்பட்டது என்பது நினைவில் இருக்கிறதல்லவா? இவையெல்லாம் ஒன்றுக்கொன்று ஹைப்பர் லிங்க் வசதி மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
அதாவது முடிவே இல்லாமல் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்துக்கு சென்று கொண்டே இருக்கலாம். இப்பொழுது புரிகிறதா, ஏன் W3யும் ஒரு வலைதான் என்பது? இது அறிவு, தகவல் மற்றும் பொழுதுபோக்கு இவைகளை மனிதகுலம் உபயோகித்து, அனுபவிப்பதற்கான ஒரு பிரம்மாண்டமான வலையம், என்பது இப்பொழுது புரிகிறதா?
நன்றாகப் புரிகிறது. இப்பொழுது எங்களுக்குத் தெரிய வேண்டியதெல்லாம், இப்படிப்பட்ட அற்புதமான யோசனைக்கு காரணமான சூப்பர் மூளை யாருடையது?
இதைக் கேட்க மாட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன். இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல, நாம் இருபது ஆண்டுகள் பின்ன்க்கி, ஸ்விட்சர்லாந்தில் உள்ள CERN என்னும் அணு ஆராய்ச்சி ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டும். அங்குள்ள விஞ்ஞானிகளும் ஐரோப்பாவின் பிற ஆய்வக விஞ்ஞானிகளும், பல திட்டங்களில் இணைந்து செயலாற்றிக் கொண்டிருந்தார்கள். ஆனால், வேலைகளை விரைவாகவும் எளிதாகவும் ஒருவரோடு மற்றவர் பகிர்ந்து கொள்ள வழியிருக்கவில்லை. அவர்கள் நேரடியாக மற்ற ஆய்வகங்களுக்கு பயணம் செய்வதன் மூலமோ தபால் மற்றும் கூரியர் சேவைகளை பயன்படுத்தியோ தங்கள் ஆராய்ச்சியின் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்தினர்.
செர்ன் ஆய்வகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானியான டிம் பர்னர்ஸ்-லீக்கு இது அலுப்பாக இருந்தது. தகவல்களை வேகமாகவும் சிறப்பாகவும் பகிர்ந்துகொள்ள வழி ஒன்றைக் காண முடிவு செய்தார். அவர் கணினிகளில் தகவல்களை இணைக்கும் ஹைபர்டெக்ஸ்ட் என்ற யோசனையை முன்வைத்தார்.
இந்த யோசனை செர்ன் ஆய்வகத்தில் சிறப்பாக செயல்படவே, எல்லோரும் மகிழ்ந்தனர். அதன்பின் டிம் பர்னர்ஸ்-லீ தனது இரண்டாவது பெரிய யோசனையைக் கொண்டுவந்தார்.
இந்தக் கண்டுபிடிப்பு செர்ன் ஆய்வகத்திற்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் உதவும். அதனால் இதனை ஆய்வகத்து அளவில் கட்டுப்படுத்தக் கூடாது. ஹைபர்டெக்ஸ்ட் என்னும் இந்த யோசனையை உலககெங்கிலும் உள்ள மற்ற விஞ்ஞானிகளுடன் இலவசமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஆய்வக அதிகாரிகளிடம் பேசி சம்மதிக்க வைக்க முயன்றார்.
அவர்களும் ஒப்புக்கொண்டனர். டிம் பர்னர்ஸ்-லீ தன் யோசனையை எல்லா விஞ்ஞானிகளோடும் பகிர்ந்து கொண்டதோடு, அதனை உபயோகிப்பவர்களிடம் மேலும் அதனை மேம்படுத்தவும் புதுமைகளைச் சேர்க்கவும் வலியுறுத்தினார்.
பூமியில் எந்த பாகத்திலிருந்தும் உடனடியாக தகவல்களைப் பெற மற்றும் பகிர்ந்து கொள்ள உதவும் இந்த யோசனை, மிக சக்தி வாய்ந்ததாகவும், கவர்ச்சிகரமாகவும் இருந்தது. மக்கள் அதிகமாக ஹைபர்டெக்ஸ்டை உபயோகிக்க ஆரம்பித்ததோடு அதனை மேம்படுத்தவும் செய்தனர்.
1993 ஆம் ஆண்டுக்குள்ளேயே பல லட்சம் மக்கள் உபயோகப்படுத்தும் அளவில், W3 மாபெரும் வளர்ச்சி கண்டது. இன்று சுமார் இரண்டு பில்லியன் மக்கள் W3யை ஏதாவது ஒரு விதத்தில் உபயோகிக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பாகமாகும்.
ம்ம்ம்! டிம் பர்னர்ஸ் லீ இப்படி பொதுநலத்திற்காக முடிவெடுக்காமல் இருந்திருந்தால், நம் வாழ்க்கையே வேறு விதமாக இருந்திருக்கும் அல்லவா?
நீ சொல்வது முற்றிலும் சரி! அப்போ, டிம் பர்னர்ஸ் லீ மற்றும் W3க்காக கொஞ்சம் உற்சாகமாக சத்தம் போடலாமா?
நிச்சயமாக நெட்டிகுட்டி நிச்சயமாக!
எல்லோரும் தயாரா? டிம் பர்னர்ஸ் லீ மற்றும் W3க்கு - ஹிப் ஹிப்...
......ஹுர்ரே!