vanaththil oru nadaippayanam

வனத்தில் ஒரு நடைப்பயணம்

மிசோரமின் துணிச்சல் மிக்க வனக்காவலரான ஸக்கூமா என்பவரோடு இணைந்து நடக்கலாம் வாருங்கள். அவர் நம்மைக் காட்டிற்குள் நடத்திச் செல்லும் பொழுது விதவிதமான விலங்குகளைப் பற்றியும் காடுகளைப் பாதுகாப்பதின் பயன்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.

- Malarkody

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

மிசோரத்தில் இப்பொழுதுதான் விழித்தெழுந்த சூரியன், தன் கதிர்களால் டாம்பா சரணாலயத்தை இதமாகத் தட்டியெழுப்பி உயிரூட்டுகிறது.

குறுகிய மண்பாதையில் மூங்கில்கள் ஒன்றோடொன்று மிக நெருக்கமாய் ஓங்கி வளர்ந்து நிற்கின்றன. அருகே செலிங் ஆறு சலசலத்து ஓடுகிறது. அடர்ந்து விரிந்த மரங்களின் விதானம் வானத்தைத் தொடுவது போல் மேலெழும்பியிருக்கிறது.

பனித்துளிகள் தரையில் விழுந்து ‘ட்ப்... ட்ப்…’ என்று அமைதியான விடியற்காலைப் பொழுதில் மெலிதாக சப்தமெழுப்புகின்றன.

அங்கே நிசப்தம் என்பதா? இல்லை. அசைவில்லை எனலாம். நிச்சயமாக அமைதியாக உள்ளது. ஆனால் நிசப்தமாக அல்ல. வனங்கள் நிசப்தமான இடங்கள் அல்ல.

சீரிகைப்பூச்சிகள்(crickets) கீச்சிடுகின்றன. பெரிய சாம்பல் நிற மரங்கொத்திகள் மர உச்சியில் இருந்து கொக்கரிக்கின்றன. வெள்ளைப்புருவ குரங்குகள் (Hoolock gibbons) கூட்டமாகக் கூச்சலிடுகின்றன. பெரிய இந்திய இருவாச்சியின்(horn bill) அழைப்பு காடெங்கும் எதிரொலிக்கிறது.

காட்டில் வசிப்பன எல்லாம், “காலை வணக்கம், நாங்கள் எழுந்துவிட்டோம்” என்றழைக்க, ஒருங்கிணைந்து பண்ணிசைக்கும் இசைக்குழுவைப் போல விடியற்காலைப் பொழுது உதிக்கிறது.

இந்த உயிரோட்டமுள்ள கதம்ப இசையின் நடுவே ஒரு வனக்காவலர் அயராது உழைத்துக்கொண்டிருக்கிறார்.

ஸக்கூமா டான் என்பவர் ஆற்றருகே ஒரு மரத்தின் மேலிருக்கும் புகைப்படக்கருவிப் பொறியை பரிசோதிக்கிறார்.

இவர் மிசோரம் வனத்துறையின் ‘விலங்கு வேட்டைத் தடுப்பு முகா'மின் பாதுகாவலர். யாரும், எதுவும் காட்டுக்குத்தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பதற்காக தினமும் காட்டில் ரோந்து செல்கிறார். முகாமில் அவர் அயர்ந்து தூங்கும் வேளையிலும் காட்டைக் கண்காணிப்பதற்கு புகைப்படக்கருவி உதவுகிறது.

ஸக்கூமா அந்த புகைப்படக்கருவியில் முதல் நாள் இரவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஓட்டிப் பார்க்கிறார். ஒரு பன்றிமுக வளைகரடியும் கேளையாடு ஒன்றின் பெரிய மூக்கும் எதிர்பாராத விதமாக அதில் பதிவாகியிருந்தன.

ஸக்கூமா புன்னகைக்கிறார். அவர் மிகவும் நேசிப்பது இந்தச் சிறு தருணங்களைத்தான். அவர் இந்தக் காட்டையும் அதில் வாழும் அனைத்தையும் நேசிக்கிறார். நேற்றையது ஒரு அமைதியான இரவாக இருந்திருக்குமெனத் தோன்றுகிறது.

மிருகங்களின் நடவடிக்கைகளைப் புரிந்துகொள்ள உதவுவதால் ஸக்கூமாவிற்கு புகைப்படக்கலை மீது விருப்பம் அதிகம். அதனால் ரோந்து செல்லும் வேளையில், தன் சொந்த புகைப்படக்கருவியில் புகைப்படங்களையும் காணொளிகளையும் எடுப்பார்.

வடகிழக்கு இந்தியாவின் காடுகளைப் பற்றி உலகிற்கு தெரிந்தவை மிகச்சில விவரங்களே. அதனால் அவர் படங்களையும் கதைகளையும் உள்ளூரில் இருக்கும் மிசோரம் மக்களுடனும் மிகத்தொலைவில் வசிக்கும் பிறருடனும் பகிர்ந்துகொள்வார்.

காண்பதற்கு அரியவையான சாம்பல்நிற மயில்(grey peacock pheasant) மற்றும் எளிதில் பிடிபடாத மேகச்சிறுத்தை போன்ற மிருகங்களையும் படம் பிடித்துள்ளார் ஸக்கூமா.

மேகச்சிறுத்தை எதையும் பற்றிக்கொண்டு திறமையாக ஏறும் வல்லமை பெற்றது என்பதும், தெளிவாய் வெளித்தெரியும் கோரைப்பற்களை கொண்டது என்பதும் அவருக்கு இப்பொழுது நன்றாக தெரியும்.

ஒரு நிமிடம் பொறுங்கள்!

அது என்ன?

ஸக்கூமா அந்த காணொளியை உற்றுப் பார்க்கிறார் – மூன்று ஆண்கள் பதுங்கிப் பதுங்கி இருட்டில் செல்கின்றனர்.

மீண்டும் அந்த காணொளியை ஓட்டிப் பார்க்கிறார்.

புகைப்படக்கருவிப் பொறியை மீண்டும் அதே இடத்திலேயே வைத்துவிட்டு, அவர்கள் ஏதாவது தடயங்களை விட்டு சென்றிருக்கின்றனரா என்று ஸக்கூமா தன்னைச் சுற்றி பார்க்கிறார்.

அவர்கள் சரணாலயத்தைச் சுற்றியிருக்கும் பாதுகாக்கப்பட்ட கிராமங்களில் இருந்து வந்தவர்களாக இருக்கலாமோ என்று யோசிக்கிறார்.

மீசோக்கள், ரியாங்குகள், சக்மாக்கள்* டாம்பாவைச் சுற்றி வாழ்கின்றனர். சிலசமயம், அனுமதி இல்லாவிட்டாலும் இவர்கள் மரத்துக்காகவோ, மீன் அல்லது மிருகங்களை வேட்டையாடுவதற்காகவோ சரணாலயப் பகுதிக்குள் வருவார்கள்.

*இவர்கள் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த பழங்குடியினர்.

காட்டுக்கு ஏற்படக்கூடிய மற்றொரு அச்சுறுத்தல் பற்றிய கவலை ஸக்கூமாவுக்கும் அவர் குழுவினருக்கும் இருந்தது. பனம்பழத்திலிருந்து எடுக்கப்படும் பனை எண்ணெய் மிக வேகமான வருவாய்க்கு வழிவகுப்பதால், மக்கள் அதிகமான எண்ணிக்கையில்பனை மரங்களை நடத்துவங்கியுள்ளனர்.

இந்தப் பயிரிடுதலுக்கு இடமளிப்பது காட்டை முழுவதுமாக வெறுமையாக்கிவிடும். வனத் துறையினர், காடு மற்றும் வனவிலங்குகளை பராமரிப்பது பற்றியும் சட்டத்தை மீறுவோருக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என்பதைப் பற்றியும் மக்களிடையே விழிப்புணர்வைப் பரப்பி வருகின்றனர். ஆனால் மாற்றம் மெதுவாகத்தான் வரும் என்று ஸக்கூமாவிற்கு தெரியும்.

ஆற்றை ஒட்டி மிக விரைவாக முன்னேறிச் சென்ற ஸக்கூமா, அங்கே எதையோ பார்த்து நின்றுவிட்டார். அது வேட்டைக்காரர்களால் பொருத்தப்பட்ட பொறி. ஒரு கேளையாடு(Barking Deer) அதன் பிடியில் சிக்குண்டிருந்தது.

அந்த மானைப் பார்த்த ஸக்கூமாவிற்கு உள்ளம் உருகியது. எத்தனை முறை இது போன்ற சம்பவங்களைப் பார்த்தாலும், இன்னமும் ஒரு விலங்கின் வலியைக் கண்டால் மனம் வேதனை கொள்ளத்தான் செய்கிறது.

பயந்திருக்கும் அந்த கேளையாட்டின் அருகில் எச்சரிக்கையோடு சென்றார் ஸக்கூமா. தப்பிக்க முயற்சித்துக் கொண்டேயிருந்ததால் அந்த விலங்கு சோர்வடைந்திருந்தது. ஆனால் நல்ல வேளையாக உயிரோடிருந்தது.

ஸக்கூமா விரைந்து செயல்பட்டார். தன் துறையினருக்கு ரேடியோ மூலம் தொடர்பு கொண்டபடியே பதட்டமாயிருந்த கேளையாட்டை சமாதானப்படுத்த முயல்கிறார் அவர்.

உதவி வந்து சேர்ந்தது. பாதுகாவலர்கள் கேளையாட்டை பாதிக்காத வண்ணம் அந்த பொறியை வெட்டி எடுத்தனர்.

விடுபட்ட அந்த கேளையாடு விட்டால் போதும் என்று பாய்ந்து காட்டிற்குள் சென்று மறைந்தது. எல்லோருக்கும் நிம்மதியாயிற்று. அந்த மான் சரியாகிவிடும்! ஆனால் இன்னமும் வேலை பாக்கி இருக்கிறது.

அந்த வேட்டைக்காரர்கள் பொறியில் ஏதாவது சிக்கியுள்ளதா என்று பார்க்க மீண்டும் வருவார்கள். அதனால் குழுவைச் சேர்ந்த சிலர் ஒளிந்து காத்திருந்தனர். அந்தி சாய்ந்து வெளிச்சம் மங்கலாக, இதமாய் வீசும் காற்று மெல்லிய கிசுகிசுக்கும் குரல்களை அவர்களின் காதுகளுக்குக் கொண்டுவந்தது. ஸக்கூமா அந்த புகைப்படக்கருவிப் பொறியில் பார்த்த மூன்று மனிதர்களையும் அடையாளம் கண்டுகொண்டார்.

அந்த வேட்டைக்காரர்கள், தங்கள் கைகளில் துணிப்பையுடன், சிக்கியிருக்கும் வேட்டையை சுமந்து திரும்பும் நம்பிக்கையுடன் ஓசையின்றி பதுங்கி நடந்துவந்தனர்.

ஆனால் அவர்கள் தப்புவதற்கு முன், ஸக்கூமா மற்றும் அவரது குழுவினர் அவர்களை சூழ்ந்தனர். வேட்டைக்காரர்கள் கைது செய்யப்பட்டு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

எல்லாம் விரைவாக முடிந்துவிட்டது! இனி, முகாமில் மேலதிகாரிகள் விசாரணையை ஆரம்பிப்பார்கள்.

ஸக்கூமா, மரங்களும் மூங்கில்களும் சூழ்ந்த செங்குத்தான அந்த மலைப்பகுதியில் வழி கண்டுபிடித்தவாறு செல்லும்போது டாம்பாவின் மேல் இருள் கவிகிறது. அவ்வப்போது மூங்கிலின் சடசடவென்ற கிரீச்சொலி சத்தத்தை கேட்பதற்காக அவர் நிற்கிறார் . அவை அவருடன் பேசுவது போல் இருக்கிறது.

இந்த இயற்கையின் ரகசியங்கள், அதன் வியப்பூட்ட வைக்கும் அழகு, இவைதான் ஸக்கூமாவுக்கு தினமும் காட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற ஊக்கத்தைக் கொடுக்கின்றன. அது அவ்வளவு எளிதானது அல்ல. காட்டின் எல்லையில் நடக்கும் சண்டை, வன்முறையைக் கையிலெடுக்கும் சில கள்ள வேட்டைக்காரர்கள், தன் சொற்ப சம்பாத்தியத்தால் ஏற்படும் திண்டாட்டங்கள் - இவை எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டும்.

ஆனால் அவருக்கு இதெல்லாம் ஒரு நாளின் வேலைக்குள் அடக்கம்.ஸக்கூமா காட்டுக்குச் சொந்தம். காடு ஸக்கூமாவுக்குச் சொந்தம்.

ஸக்கூமாவை சந்தியுங்கள்:

மிசோரமின் டாம்பா புலிகள் சரணாலயத்தில், ஸக்கூமா, வனத்துறையில் வனக்காவலராகவும், வனவிலங்குகளைப் புகைப்படம் எடுப்பவராகவும் பணிபுரிகிறார். இது, இந்தியாவிலேயே மிகமிகக் சிக்கலான நிலப்பரப்பு கொண்ட, மிகவும் ஒதுக்கமாய் அமைந்துள்ள, ஒரு புலிகள் சரணாலயம்.

ஸக்கூமா புகைப்படக்கலையை தானாகவே கற்றுக்கொண்டவர். இவர், டாம்பாவின் பல்லுயிர்களான தாவரங்கள், விலங்குகள், பூச்சி வகைகள், நிலநீர் வாழ்வன, ஊர்வன, பறவைகள், பாசிகள் மற்றும் பூஞ்சான்கள் உள்ளிட்ட பலவும் அடங்கிய மதிப்புமிக்க புகைப்படத் தொகுப்புகளை உருவாக்கியுள்ளார்.