பினிடாவை பயணப்பூச்சி கடித்துவிட்டது. அவளுக்குப் பயண ஆசை பற்றிக்கொண்டது! பையை மாட்டிக்கொண்டு வீர தீரமாக கிளம்பினாள் பினிடா வண்டு!
ஓஓ!
“சாகசங்களே, இதோ வருகிறேன்!”
ஐயோ! வண்டு நிறுத்தத்திலிருந்து கடைசி கம்பளிப்பூச்சிப் பேருந்து கிளம்பி விட்டதே! “நிறுத்துங்க!” என்று கூவியபடியே வண்டியின் பின், கையை ஆட்டிக் கொண்டு ஓடினாள் பினிடா. ஆனால், வண்டியின் வேகம் குறையவில்லை. அங்கு வந்த ஷாகி நாயைப் பார்த்த பினிடா அவர் முதுகில் ஏறிக் கொண்டாள்.
ஷாகி நாய், அவளை பாடும் மரங்களின் நாட்டில் விட்டது. பாடும் மரங்கள் பினிடாவிற்கு ஒரு பாட்டுப் பையைப் பரிசாகக் கொடுத்தன.
பாட்டுப் பையுடன் நடந்த பினிடா, திடீரென கால் தடுக்கி கீழே விழுந்தாள்.
பாட்டுப் பை நேராக அவளது உணர்கொம்புகளின் மீது விழுந்தது. உடனே, அவை பாட்டுப் பாட ஆரம்பித்தன!
பினிடாவுக்கு உற்சாகம் பற்றிக்கொண்டது. அவள் நெளிந்து வளைந்து உருண்டு நடனமாடிக்கொண்டே நகைகளின் நகரத்துக்கு வந்து சேர்ந்தாள். அங்கு, திரு.கோக்டோ குடும்பத்தினரைச் சந்தித்தாள். அவர்களும் ஆடிப் பாடி களித்துக் கொண்டிருந்தனர். பினிடா தன் மியூசிக் கொம்புகளைப் பாட வைத்து அவர்களோடு சேர்ந்து ஆடினாள்.
பினிடாவிற்கு முன்பு எப்போதும் இல்லாத மகிழ்ச்சி இசையால் கிடைத்தது! அவள் அந்த மகிழ்ச்சியை எல்லோரோடும் பகிர்ந்து கொள்ள விரும்பினாள். எனவே, அவள் பனி மலைக்குச் சென்றாள். அங்கும் எல்லோரும் “யா ஜுலே” என்று மகிழ்ச்சியுடன் சேர்ந்து பாடி ஆடினர்.
உலகைச் சுற்றி பயணித்துவிட்டு பினிடா வீட்டுக்குத் திரும்பி வந்தாள். வீட்டிலும் பாடிக்கொண்டே இருந்தாள். தான் கற்றுக் கொண்டதையெல்லாம் வாசித்தாள். அவளுடைய பாட்டு நந்தவனம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே இருந்தது!
ஒரு வண்டின் பயணமும், ஓவியப் புத்தகமும்
ஒரு சமயம், ஒரு ஓவியப் புத்தகத்திற்கு பயணம் செய்யும் ஆசை அதிகமானது. அது ராஜீவ் ஐப்பின் பைக்குள் போய் புகுந்து கொண்டது. நல்ல வேளை! ராஜீவ் ஒரு ஓவியர். அவர், உலகம் சுற்றும் பினிடா வண்டு என்ற கற்பனைப் பாத்திரத்தை வரைந்தார். பினிடாவைப் போலவே, ஓவியப் புத்தகத்திற்கும் பயணத்தில் ஆசை! ஆகவே இருவரும் குன்னூரில் இருக்கும் கல்யாணி கணபதியைச் சென்றடைந்தனர். அவர், அவளை ஷாகி என்ற சடை நாயின் மீது சவாரி செய்ய வைத்தார். பின்னர் அவர்கள் அருணாச்சலப் பிரதேசம் சென்றனர். அங்கு ஓகின் நயம் பினிடாவிற்கு பாட்டுப்பையை பரிசளித்தார்! அடுத்ததாக அவர்கள், டான்யா கோட்னாலாவின் அழைப்பின் பேரில் டெஹ்ராடூன் சென்றனர். அவர் பாட்டுப் பையைத் தெரியாமல் திறந்துவிட்டார். எனவே அவற்றை மியூசிக் கொம்புகளாக்கினார். அங்கிருந்து மணிப்பூர் சென்ற அந்த ஜோடிக்கு, லுங்ஷாய் லெய்சன் பல புதிய நண்பர்களை வரைந்து கொடுத்தார். அடுத்து அவர்கள் லடாக்கிற்கு விரைந்தனர். பிரபாகர் டப்ரல் உள்ளிட்ட பிற நண்பர்களை அவர்கள் அங்கே சந்தித்தனர். ஆடிப் பாடி, புது நண்பர்களுடன் இணைந்து மகிழ்ந்து களித்த பின்னர் பயணக் களைப்படைந்த பினிடாவும் மற்றும் ஓவியப் புத்தகமும் பெங்களூரு வந்து சேர்ந்தனர். முதலில் ருச்சி ஷாவை அணுகினர். அவர் ஒரு மகிழ்ச்சிகரமான முடிவை அவர்களுக்கு அமைத்துக் கொடுத்தார்.
இறுதியாக அவர்கள், தங்கள் வீடான பிரதம் புக்ஸின் இருப்பிடத்திற்குச் சென்றனர். இப்போது, அவர்கள் கதை உங்கள் கையில்! பினிடாவும், ஓவியப் புத்தகமும் பல முறை படிக்கப்பட்டு நெடுங்காலம் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும்!