varayalam vilayadalam vaa

வரையலாம், விளையாடலாம் வா!

ஜீனுவும் அவள் அஜ்ஜியும் வட்டங்கள், முக்கோணங்கள், சதுரங்கள் ஆகியவற்றை வரைகின்றனர். பின்னர் அவற்றை பலவாறாக மாற்றுகின்றனர். இந்த எளிமையான கதை குழந்தைகளுக்கு வடிவங்களை அறிமுகம் செய்து வைத்து அவர்களின் கற்பனைத்திறனைப் பயன்படுத்த ஊக்கமளிக்கிறது.

- S Krishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஜீனு அவளுடைய கோடை விடுமுறையை தனது பாட்டியின் வீட்டில் கழிக்கிறாள். அங்கே அவளுக்கு நண்பர்கள் இல்லை. அதனால் அவளுக்குப் பொழுதே போகவில்லை.

“அஜ்ஜி, என்னுடன் விளையாட வா!” என்றாள் அவள்.

“சீக்கிரம் போய் ஒரு பலப்பத்தைக் கொண்டு வா. நாம் ஒரு விளையாட்டு விளையாடலாம்” என்றார் அஜ்ஜி.

ஜீனுவுக்கு ஒரே உற்சாகம். ‘அஜ்ஜி என்ன விளையாட்டு விளையாடப் போகிறார்?’ அஜ்ஜி ஒரு வடிவத்தை வரைந்தார்.

“இது என்ன என்று உன்னால் சொல்ல முடியுமா?” என்று கேட்டார் அவர்.

“இது ஒரு வட்டம்!” ஜீனு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். அவளுக்கு இது போன்ற சிறுபிள்ளைத் தனமான விளையாட்டுகள் பிடிக்காது.

“சரியாகச் சொன்னாய்! அதில் வேறு என்ன தெரிகிறது?” என்றார்.

ஜீனு சற்றே யோசித்தாள், பின்பு புன்னகைத்தாள்.

“இது ஒரு சிரிக்கும் முகம்!” என்றாள்.

அஜ்ஜி கை தட்டினார். “இப்போது உனக்கு விளையாட்டு புரிந்து விட்டது!”

“இங்கே பாருங்கள்! நான் என்ன வரைந்திருக்கிறேன் என்று!” என்றாள் ஜீனு.

வரைந்து பார்: மூன்று வட்டங்களை வைத்து உன்னால் என்ன வரைய முடியும்?

அஜ்ஜி மற்றொரு வடிவத்தை வரைந்தார்.

“இது ஒரு முக்கோணம்!” என்று கூவினாள் ஜீனு.

பின் அவள் சிரித்தாள்.

“இங்கே பாருங்கள்! நான் இதை என்ன செய்திருக்கிறேன் என்று!”

“பிரமாதம், ஜீனு!” என்றார் அஜ்ஜி. “பார், நம்முடன் விளையாட யார் வந்திருக்கிறார் என்று!”

வரைந்து பார்: மூன்று வட்டங்கள் மற்றும் நான்கு முக்கோணங்களைக் கொண்டு உன்னால் என்ன வரைய முடியும்?

அஜ்ஜி நான்கு பக்கங்களைக் கொண்ட ஒரு வடிவத்தை வரைந்தார்.

“இது ஒரு செவ்வகமா?” என்று ஜீனு கேட்டாள்.

“நன்றாகப் பார். எல்லாப் பக்கங்களும் ஒரே அளவாக இருக்கின்றன.’’

“இது ஒரு சதுரம்! ம்... பார் அஜ்ஜி. நான் ஒரு ஜன்னலை வரைந்திருக்கிறேன்.”

“உன் ஜன்னலுக்கு அருகில் ஒரு மரம் வேண்டுமா?” என்று கேட்டார் அஜ்ஜி.

’’ஆமாம், அஜ்ஜி! வேண்டும்!’’ என்றாள் ஜீனு.

பலப்பத்தால் வரையப்பட்டிருந்த அந்தப் படங்கள் எல்லாவற்றையும் ஜீனு பார்த்தாள். ‘அவற்றுக்கு அவள் வண்ணம் தீட்டலாமா?’

வரைந்து பார்: ஒரு முக்கோணம், ஒரு செவ்வகம் ஆகியவற்றைக் கொண்டு நீ என்ன வரைவாய்?

சில நிமிடங்களுக்குப் பின், ஜீனு தான் வண்ணம் தீட்டிய படத்தை அஜ்ஜிக்குக் காட்டினாள்.

“ஆஹா! பல வட்டங்கள், முக்கோணங்கள், சதுரங்கள்!” என்றார் அஜ்ஜி.

“ஆமாம், அஜ்ஜி! ஆனால் அதற்கு மேலும் ஒன்று உண்டு! பாருங்கள், இங்கே ஒரு பறவை மரத்திலுள்ள தன் கூட்டை நோக்கிப் பறந்து செல்கிறது. அங்கு மதிய உணவுக்கு யார் வருகிறார் தெரியுமா? அவளது நெருங்கிய நண்பனான திரு. ஒட்டகச்சிவிங்கி!” என்றாள் ஜீனு.

“உனக்கு நல்ல அறிவு, ஜீனு!” என்று அஜ்ஜி ஆச்சரியப்பட்டார்.

ஜீனு மேலும் சில படங்களை வரைய விரும்பினாள். அவளும் அஜ்ஜியும் அடுத்து என்ன வரைந்தார்கள்?

வரைந்து பார்: வட்டங்கள், முக்கோணங்கள், சதுரங்கள் ஆகியவற்றைக் கொண்டு நீ என்ன வரையப் போகிறாய்?