அன்று, சிருங்கேரி சீனிவாசன் வருடாவருடம் முடி வெட்டும் நாள்.
சிருங்கேரி சீனிவாசன் வழக்கம் போல உள்ளூர் முடிதிருத்துபவரிடம் செல்வதற்காக வீட்டை விட்டு கிளம்புகிறார்.
ஆனால் முடிதிருத்துபவரோ “இத்தனை நீளமான முடியை வெட்ட இன்று நேரமில்லை. கடை நிரம்பியிருக்கிறது” என்றார்.
வருத்தமடைந்த சிருங்கேரி சீனிவாசன் தன் மனைவியிடம் உதவி கேட்க வீட்டிற்குத் திரும்பி வந்தார்.
ஆனால் அவர் மனைவியோ “இத்தனை நீளமான முடியை வெட்ட இன்று நேரமில்லை” என்றார்.
சற்றே கோபமடைந்த சிருங்கேரி சீனிவாசன் தன்னுடைய நண்பரான தையல்காரரிடம் சென்றார்.
ஆனால் தையல்காரரும் “இத்தனை நீளமான முடியை வெட்ட இன்று நேரமில்லை” என்றார்.
இப்போது கொஞ்சம் கவலையடைந்த சிருங்கேரி சீனிவாசன், தன்னுடைய மற்றொரு நண்பரான தச்சரிடம் சென்றார்.
ஆனால் தச்சரும் “இத்தனை நீளமான முடியை வெட்ட இன்று நேரமில்லை” என்றார்.
பாவம் சிருங்கேரி சீனிவாசன். இந்த வருடம் முடி வெட்டும் நாளில், அவருடைய முடியை வெட்ட யாருமேயில்லை.
கண்ணீருடன் அவர் கால்போன போக்கில் நடந்து, கிராமத்தை ஒட்டியிருக்கும் காட்டையும் கடந்தார்.
ஒரு குகையின் அருகில் உட்கார்ந்துகொண்டு சத்தமாக அழுதார்.
“இந்த நாள் ஏறக்குறைய முடிந்து விட்டது. என்னுடைய முடியை வெட்டும் வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுவேன்? கடவுளே! எனக்கு உதவி செய்!”
குகைக்குள் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்த புலிக்கு, இந்த சத்தத்தால் மிகுந்த தொந்தரவு உண்டானது.
கூரான நகங்களுடைய தன் பெரிய கால்களை சிருங்கேரி சீனிவாசனை நோக்கி ஆட்டியபடி, உறுமிக்கொண்டே புலி வெளியே வந்தது.
பாவம்… சிருங்கேரி சீனிவாசனுக்கு பயமென்றால் அப்படி ஒரு பயம்…
அந்தப் பயத்தில் அவர் தலையிலிருந்து எல்லா முடியும் கொட்டிவிட்டது.
சிருங்கேரி சீனிவாசன் தன் கிராமம் வரை ஓடியே சென்றார். புலி திரும்ப குகைக்குள் தூங்க சென்றுவிட்டது.
சிருங்கேரி சீனிவாசனுக்கு இனி ரொம்ப காலத்துக்கு முடி வெட்ட வேண்டிய அவசியமே வராது!