துபாயிலோ, குவைத்திலோ வேலை வாங்கித் தருவதாக மாத்யூ செய்திருந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துதான் அகல்யா அவனைச் சந்திக்கச் சென்றாள்.
நொடித்துத் தளர்ந்து நோயில் விழுந்து விட்ட வயதான பெற்றோரையும், படித்துக் கொண்டிருக்கிற தம்பி தங்கைகளையும் காப்பாற்ற அவளுக்கு ஓர் உத்தியோகம் தேவைப்பட்டது. வெறும் உத்தியோகமாக மட்டுமில்லை. கை நிறையப் பணம் சம்பாதிக்கிற உத்தியோகமாகத்தான் தேடினாள் அவள். ஆனால் குறைவாகச் சம்பாதிக்க முடிந்த வேலைகூடக் கிடைக்கிற வழியாயில்லை.
மாத்யூவை அவள் சந்தித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று அவனே நினைத்தான். முதலில் அவளும் அப்படித்தான் நினைக்க நேர்ந்தது.
வியாபாரத்தில் மகத்தான பேராசைகளும், அதற்குத் தேவையான திட்டங்களும் முனைப்பும் உள்ள ஒரு நடுத்தர வயது மனிதனை நமக்குள் கற்பித்துப் பார்த்துக் கொண்டால் அவன் தான் 'மாத்யூ'வாக இருப்பான். மாத்யூவின் நினைப்பிலும் அகராதியிலும் 'சாத்தியமில்லை; முடியாது' என்ற வார்த்தைகளே கிடையாது.
அவன் ஒருவனுடைய அகராதியில் மட்டுமில்லை. பணம் சம்பாதிக்க விரும்புகிற எவருடைய அகராதியிலும் அந்த வார்த்தைகள் இருக்க முடியாதுதான். மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதுதான் வியாபாரம்.
மாத்யூவோ சகல கலா வல்லவனாக இருந்தான். அரண்மனைக்காரன் தெருவாகிவிட்ட அர்மேனியன் தெருவின் கட்டடம் ஒன்றின் மூன்றாவது மாடியில் 'மாத்யூ டிராவல்ஸ்' - என்று போர்டு தொங்கினாலும் போர்டில் அறிவிக்கப்படாத வேறு பல லாபகரமான வியாபாரங்களையும் அவன் செய்தான். அவனுடைய நிறுவனத்தில் ஆண்களைவிடப் பெண்கள் - அதுவும் இளம் பெண்கள் - அதிக எண்ணிக்கையில் வேலை பார்த்தார்கள்.
அகல்யவைப் பார்த்தவுடன் மாத்யூவுக்குப் பிடித்து விட்டது.
"துபாய் வேலை ஒன்றும் லட்டு மாதிரி உடனே கையில் கிடைத்துவிடாது. அதற்கு நிறைய முன் பணம் செலவழிக்க வேண்டும். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. இங்கேயே வேண்டுமானால் ஒரு வேலை தருகிறேன்" - என்று வார்த்தைகளையும் புன்னகையையும் சேர்த்து அவள் முன் வழங்கினான் மாத்யூ.
அகல்யா சம்மதித்தாள். அவளுக்கு மலையாளம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரிந்திருந்தது வசதியாகப் போயிற்று. அவளுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்புக் காலம் வரை அவர்கள் குடும்பமே பாலக்காட்டில் தான் இருந்தது. பின்புதான் சென்னைக்குப் பிழைப்பைத் தேடிக் குடியேறியது.
மாத்யூவைப் போன்ற கெட்டிக்கார வியாபாரிக்கு இப்படி மூன்று மொழிகள் தெரிந்த பெண் எத்தனையோ விதங்களில் பயன்படக் கூடியவளாகவும் அவசியமாகவும் இருந்தாள்.
எப்படியோ மாதம் இருநூறு, முந்நூறு ரூபாய் கிடைக்கிற மாதிரி ஒரு வேலை கிடைத்தால் கூடப் போதும் என்று தேடி அலைந்தவளுக்கு, "முதலில் மாதம் ஐநூறு ரூபாய் தர முடியும்! அப்புறம் போகப் போக ஏதாவது பார்த்துச் செய்யலாம்" என்று மாத்யூ கூறிய சொற்கள் அமிர்தமாகக் காதில் ஒலித்தன.
'மாத்யூ டிராவல்ஸ்' அலுவலகத்தில் ஏற்கனவே அகல்யாவின் வயதை ஒத்த வயதுடைய வேறு சில பெண்களும் வேலை பார்த்து வந்தார்கள். துணைக்கு இன்னும் இரண்டு மூன்று பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்தபோது அகல்யாவுக்கு ஆறுதலாக இருந்தது.
வீட்டில் அப்பளமும், சீடையும், முறுக்கும் தயாரித்துக் கடைகளுக்கும், ஸ்டால்களுக்கும், தேடிக் கொண்டு போய் விற்றுப் பிழைத்து வந்த குடும்பத்தில் ஒரு நபர் உத்தியோகத்துக்குப் போய் மாதம் சம்பளம் வாங்கப் போவதை எண்ணினால் மகிழ்ச்சியாகத் தான் இருக்கும்.
"அகல்யாவுக்கு வசதியாக ஒரு வேலை கிடைச்சால் தான் நம்ம குடும்பம் தலை தூக்க முடியும்" என்று அடிக்கடி அவள் தந்தை பெருமூச்சுடனும் ஏக்கத்துடனும் கூறுவது உண்டு. அந்தப் பெருமூச்சுக்கும் ஏக்கத்துக்கும் இனி அவசியமில்லை என்பதை நினைத்தபோது ஒரு விநாடி அகல்யாவுக்கே நிம்மதியாயிருந்தது.
"இது மிஸ் அகல்யா. நாளையிலிருந்து இங்கே வேலைக்கு வரும். டெலக்ஸ் அனுப்பறது, ரெஸீவ் பண்றதெல்லாம் கத்துக் குடுக்கணும்" என்று மற்ற இரண்டு பெண்களிடமும் மாத்யூ அவளை மலையாளத் தமிழில் அறிமுகப்படுத்திய போது அவர்கள் சிரித்த ஒரு தினுசான சிரிப்பும், நடந்து கொண்ட தினுசும் அகல்யாவுக்கு என்னவோ போல் இருந்தன.
ஒரு வேளை தான் அவர்களை விட அழகாகவும் நிறமாகவும் இருப்பதால் அவர்கள் பொறாமை அப்படி வெளிப்பட்டிருக்கலாம் என்று அவளாகக் கற்பனை செய்து கொண்டாள்.
தன் வீட்டில் போய் அகல்யா இந்த விவரங்களைச் சொல்லியபோது எல்லோருக்குமே திருப்தியாகத்தான் இருந்தது. சின்னஞ்சிறு குழந்தைகளை முறுக்குடனும், சீடையுடனும் கடற்கரைக்கும், கடைவீதிகளுக்கும் துரத்துவதை இனியாவது குறைத்துக் கொள்ள முடியும் என்று நினைத்து அந்த ஏழைக் குடும்பம் நிம்மதியடைந்தது.
மாத்யூ டிராவல்ஸில் வேலை பார்க்கச் சென்ற முதல் நாளே அங்கிருந்த மற்றவர்கள் தன்னிடம் அவ்வளவு சுமுகமாகவும் கலகலப்பாகவும் பழகவில்லை என்பது அகல்யாவுக்கே புரிந்தது. பொறாமையா, அசூயையா... எது காரணம் என்பதும் தெரியவில்லை.
அவர்கள் அவளைச் சுட்டிக் காட்டித் தங்களுக்குள் கண்களைச் சிமிட்டி ஏதோ மெல்லிய தணிந்த குரலில் பேசிக் கொண்டார்கள். நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்கள். அகல்யாவின் குடும்ப வறுமையும், சிரமங்களும் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமலும் கண்டு கொள்ளாமலும் இருக்க அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தன.
போகப் போகப் பல விவரங்கள் அகல்யாவுக்குப் புரிந்தன.
மாத்யூ டிராவல்ஸில் வாடிக்கைக்காரர்கள் பயணம் செய்ததை விட மாத்யூதான் அதிகமாகப் பிரயாணம் செய்தான். இன்று சிங்கப்பூர், நாளை ஹாங்காங், நாளன்றைக்கு பாங்காக், துபாய் என்று மாத்யூ மாதத்தில் முக்கால்வாசி நாட்கள் வெளியேதான் இருந்தான். வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்தும், பூடகமான டெலக்ஸ் செய்திகள் பறந்தன. டிக்கட்டுகள் விமானப் பயண ஏற்பாடுகள் மூலம் வந்த வருவாயை விடப் பல லட்சக் கணக்கில் வேறு வகை வருமானம் குவிந்தது.
கடத்தல், கொல்லைப்புற வழியில் மணி எக்ஸ்சேஞ்ஜ் என்று பல விவகாரங்கள் அங்கே காதும் காதும் வைத்தாற் போல் நடந்து கொண்டிருந்தன. சூதுவாதில்லாத ஏழைக் குடும்பம் ஒன்றின் அப்பாவிப் பெண்ணாகிய அகல்யா கபடங்களையும், கள்ளங்களையும் புதிதாக மெல்ல மெல்லக் கற்றுத் தேற வேண்டியிருந்தது. கலையாகப் பழக வேண்டியிருந்தது.
சில நாட்கள் காலை ஏழரை மணிக்கே வரவேண்டியிருந்தது. வேறு சில நாட்களில் வீடு திரும்பவே இரவு பத்து மணிக்குமேல் ஆயிற்று. இரவு பத்தரை மணிக்குமேல் சிட்னி, சிங்கப்பூர் மார்க்கமாகச் சென்னையில் இறங்கும் விமானத்தில் அவர்கள் எதிர்பார்க்கிற பிரயாணி அல்லது பிரயாணிகள் இருந்தால் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கே போக வேண்டியிருக்கும்.
'மாத்யூ டிராவல்'ஸின் மர்மங்களும், உள் விவகாரங்களும் இரகசியங்களும் அவளுக்குப் புரியப் புரிய அவளது சம்பளத்தில் ஒவ்வொரு நூறாகக் கூடிக் கொண்டே போயிற்று. கம்பெனியில் அவள் தவிர்க்க முடியாதவள் ஆனாள்.
'ஹண்ட்ரட் கோகனட்ஸ்' - என்று தொடங்கி 'நூறு தேங்காய்கள் அனுப்பவும்' என ஒரு தந்தியோ டெலக்ஸோ வந்தால் அந்தச் சொற்களின் அன்றையை அர்த்தம் என்ன என்பது மாத்யூவுக்கு அல்லது அகல்யாவுக்கு மட்டுமே தெரியும். நூறு தேங்காய்களைப் போலப் பல இரகசிய வாக்கியங்கள் இவர்கள் அனுப்பும் டெலக்ஸிலும், பெறும் டெலக்ஸிலும் சர்வ சகஜமாக அன்றாடம் புழங்கிக் கொண்டிருக்கும்.
'டிராவல்ஸ்' என்பது பெயருக்கு ஒரு முகமூடியாக - அங்கீகரிக்கப்பட்ட பெயராக இருந்ததே ஒழிய அங்கு லாபம் தருகிற - சட்ட விரோதமான பல காரியங்கள் நடந்தன.
சிங்கப்பூரிலும், ஹாங்காங்கிலும் மாத்யூவுக்கு ஆட்களும், ஏற்பாடுகளும் உண்டு. இரண்டாயிரம் சிங்கப்பூர் டாலரை சிங்கப்பூரில் மாத்யூவின் ஆளிடம் இந்தியாவுக்குப் பயணம் செய்கிற ஒருவர் கொடுத்து விட்டால் அதன் அதிகாரப் பூர்வமான இந்திய மதிப்பை விடக் கூட ரூபாய்கள் உள்ள ஒரு தொகையை மாத்யூ டிராவல்ஸ் இங்கே அவருக்கு ரொக்கமாகக் கொடுத்துவிடும். நம்பிக்கை அடிப்படையிலும் சில அடையாளக் குறியீடுகளை வைத்தும் இந்தச் சட்ட விரோதமான இரகசியப் பொருளாதாரப் பரிமாற்றம் நடைபெற்று வந்தது. மிக மிக அந்தரங்கமாக அதிக இந்திய ரூபாய்களை வாங்கிக் கொண்டு டாலர், ஸ்டெர்லிங் நோட்டுக்களைக் கூட விற்று வந்தார்கள்.
தேசவிரோதமான அபாயகரமான இந்தக் காரியங்களைச் சாதாரணமானதொரு டிராவல் ஏஜன்ஸி என்ற முகமூடி அணிந்து செய்து வந்தான் மாத்யூ.
ஆபத்தான இந்த வேலையை விட்டு விட வேண்டும், குறைந்த சம்பளம் கிடைத்தாலும் வம்பில்லாத ஒரு நல்ல வேலையாகப் பார்க்க வேண்டும் - என்று நடுநடுவே அகல்யாவுக்குத் தோன்றும். அம்மாதிரி மன நிலையையோ... அதைப் பிரதிபலிக்கும் பேச்சையோ அவளிடம் கண்டால் உடனே சற்றும் தயங்காமல் அவள் சம்பளத்தில் நூறு ரூபாயை உயர்த்தினான் மாத்யூ.
ஒரு சில மாதங்களில் அவள் மாதச் சம்பளம் ஆயிரத்தை தாண்டி விட்டது. இம்மாதிரி வியாபார நிறுவனங்களில் பரஸ்பர நம்பிக்கையும் உள் இரகசியங்களைக் காப்பாற்றுவதுமே முக்கியத் தகுதி. அது ஆண்களைவிடப் பெண்களிடம் அதிகமாக இருப்பதை மாத்யூ அநுபவத்தில் அறிந்திருந்தான். பெண்களிடம் ஒரு சௌகரியம் இருந்தது. தங்கள் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைப்பவர்கள் அதைக் காப்பாற்ற வேண்டிய பெண்களின் சில இரகசியங்களைத் தங்களோடு வைத்திருந்தால் பரஸ்பரம் இரு தரப்பு இரகசியங்களும் பிழைத்துவிடும். ஆண்களிடம் வேறு தொல்லை இருந்தது. கோவாவிலிருந்து 'டிஸௌஸா' என்றொரு வாலிபன் ஆரம்பத்தில் 'மாத்யூ டிராவல்ஸி'ல் வேலை பார்த்தான். ஒரு வருடத்துக்குள் தொழில் இரகசியங்களை எல்லாம் புரிந்து கொண்டு பக்கத்துப் பிராட்வேயில் 'டிஸௌஸா டிராவல்ஸ்' - என்று ஆரம்பித்துப் பிரிந்து போய்விட்டான். இந்தக் கசப்பான அநுபவத்துக்குப் பின் மாத்யூ - பெண்களை மட்டுமே அதிக அளவில் வேலைக்குச் சேர்த்தான். அதுவும் அதிக அளவு பொருளாதார வசதியில்லாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை விவரமறிந்து வேலைக்குச் சேர்த்தான்.
பொதுவான பயமும் - பண ஆசையும் - விசுவாசமும் இணைந்திருக்கும் நபர்களாகப் பொறுக்கி எடுத்துக் கூட வைத்துக் கொண்டான் மாத்யூ. டிஸௌஸா போன்றவர்களை மீண்டும் உள்ளே விட அவன் தயாராயில்லை.
முதல் இரண்டு வருடங்கள் வரை எல்லாம் பிரமாதமாயிருந்தன. சம்பளத்தைத் தவிர திடீர் திடீரென்று வெளிநாட்டுக் கடிகாரம், நைலெக்ஸ் புடவை, துணிமணிகள், ஸெண்ட், என்று அகல்யா வீட்டில் கொண்டு வந்து குவித்தாள். தம்பி, தங்கைகள் கையில் எல்லாம் 'டிஜிட்டல் வாட்ச்கள்' டாலடித்தன. கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு பழக்கமே இல்லாத கர்நாடகமான அம்மா கையில் கூட வற்புறுத்தி ஒரு 'டிஜிட்டல்' கைக்கடிகாரத்தை மாட்டி விட்டிருந்தாள் அகல்யா. இனிமேல் வீட்டில் கடிகாரம் கட்டுவதற்குக் கைகள் மீதமில்லை என்ற அளவுக்கு ஆகிவிட்டது.
வேலை பார்ப்பவர்களின் நம்பிக்கையையும், விசுவாசத்தையும் அடைய மாத்யூ பல நல்ல காரியங்களைச் செய்தான். ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளன்று சுளைசுளையாகச் சலவை நோட்டுக்களை எண்ணிச் சம்பளம் கொடுத்தான்.
அகல்யா அங்கு வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது வருடம், நான்காவது மாதமாகிய ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதி. அன்று காலை 10 மணிக்கே வழக்கம் போல் மாத்யூ எல்லாருக்கும் சம்பளம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் திடீரென்று எதிர்பாராத விதமாக மப்டியில் நுழைந்த ஒரு போலீஸ் பார்ட்டி மாத்யூவிடம் அடையாளங்களையும், ஆர்டரையும் காண்பித்து விட்டு அலுவலகத்தைச் சோதனை போட ஆரம்பித்தார்கள்.
சம்பளப் பணத்துக்காகப் பிரித்துத் திறந்து வைக்கப்பட்டிருந்த மாத்யூவின் கைப்பெட்டியில் இருந்து பச்சை நிற ஸ்டெர்லிங் நோட்டின் கட்டு ஒன்று சரிந்தது. வந்திருந்த போலீஸ் ரெய்டு பார்ட்டியின் முக்கிய இன்ஸ்பெக்டர் அதை கவனித்து விடவே தலைவலி ஆரம்பமாயிற்று. பெட்டியை முழுவதும் குடைந்ததில் ஸ்டெர்லிங், டாலர் என்று மேலும் பல கற்றைகள் அகப்பட்டன. இன்ஸ்பெக்டர் விவரங்களை விசாரித்த போது, "தங்கள் கஸ்டமர்களாகிய பிரயாணிகள் சிலருக்காகப் பாங்கிலிருந்து எடுத்த எக்ஸ்சேஞ்ஜ் தொகையே அது" - என்று துணிந்து புளுகினான் மாத்யூ. இன்ஸ்பெக்டர் உடனே அதற்கான 'டாகுமெண்ட்ஸ்' எங்கே என்று கேட்டபோது அவனால் சமாளிக்க முடியவில்லை. தடவினான். பூசி மெழுகினான். கடைசியாகக் கைதானான். அவன் கண் முன்பே 'மாத்யூ டிராவல்ஸ்' போலீஸாரால் பூட்டி ஸீல் வைக்கப்பட்டது.
தனது செயல்களுக்கும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர்கள் அப்பாவிகள் என்று மாத்யூவே கூறிவிட்டான். என்றாலும் அகல்யா முதலியவர்களைச் சோதனையிட்டு அவர்கள் எதையும் வெளியே கொண்டு போகவில்லை என்று உறுதி செய்து கொண்டே போக அனுமதித்தனர் போலீஸார்.
அகல்யாவும் அங்கு உடன் வேலை பார்த்த 'கிரேஸி' என்னும் மற்றோர் ஆங்கிலோ இந்தியப் பெண்மணியும் வீடு செல்வதற்காக பீச் ஸ்டேஷனை நோக்கி மௌனமாக நடந்து கொண்டிருந்தார்கள். சேர்ந்து அருகருகே நடந்து போய்க் கொண்டிருந்தாலும் இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
முதலில் அகல்யாதான் ஆரம்பித்தாள்:- "கோடி ரூபாய் கிடைச்சாலும் இனிமே இதுமாதிரி டிராவல் ஏஜென்ஸீலே வேலை பார்க்க மாட்டேன்."
"பம்பாயிலே என் பிரதர் கம்பெனி 'எக்ஸிகியூடிவ்' ஆக இருக்கிறான். அவன் சிபாரிசிலே எங்கேயாவது 'ஸ்டெனோ' ஆகப் போயிடலாம்னு பார்க்கிறேன். இந்த ஊரே எனக்குப் பிடிக்கலே. ஐயாம் டயர்டு ஆஃப் திஸ் ஜாப்" என்றால் கிரேஸி.
"கிரேஸி! நான் எத்தனையோ தடவை இந்த மாத்யூவை வார்ன் பண்ணியிருக்கேன். ப்ரீஃப் கேஸிலே கத்தை கத்தையா ஃபாரின் கரென்ஸியைத் திணிச்சுண்டு அலையாதே... மாட்டிண்டுடுவேன்னு... அவன் கேட்டாத் தானே? இன்னிக்கு மாட்டிண்டாச்சு..."
"இதெல்லாம் 'நத்திங்' மாத்யூவுக்கு. இது கொசுக்கடி மாதிரித்தான். எப்படியாவது சமாளிச்சுத் தப்பி வெளியே ரிலீஸ் ஆகித் தொழில் நடத்துவான் பாரு! டேக் இட் ஃப்ரம் மீ... அகல்யா..."
"அது ரொம்பக் கஷ்டம் கிரேஸி! இது ரொம்பப் பெரிய அஃபென்ஸ். அத்தனை சுலபமா விட்டுட மாட்டாங்க..."
"எப்படியும் தொலையட்டும். நமக்கு இனிமே இந்த மாதிரி 'ஜாப்' வேண்டாம். ஸ்டிரெயிட் ஃபார்வர்டா ஒரு ஜாப், அது வசதிகளே இல்லாத வேலையானாலும் பரவாயில்லே, போதும்."
"எல்லா வசதியான வேலையிலேயும் இப்படி வசதிக் குறைவான பல அபாயங்கள் இருக்கத்தான் இருக்கும்னு தோண்றது."
"அப்படியானா அந்த வசதி நமக்குத் தேவையில்லே... ஒரு சாதாரண வேலை - நல்ல வேலை போதும்." மாத்யூவின் மேல் ஏற்பட்ட வெறுப்பில் ஒரு தற்காலிக நெருக்கம் அவர்களிடையே உண்டாகியிருந்தது.
கிரேஸீ 'செயிண்ட் தாமஸ் மவுண்ட்'டில் வசித்தாள். அகல்யா மாம்பலத்தில் வசித்தாள். மின்சார ரயிலில் பயணம் செய்யும் போது இனி இந்த ஜன்மத்தில் இப்படிப்பட்ட வம்பான வேலைக்குப் போவது இல்லை என்ற உறுதியில் தான் இருவருமே பரஸ்பரம் பேசிக் கொண்டிருந்தனர்.
மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கும் போது கூட, "இன்னிக்குத் தேதி முப்பது! வாங்கின சம்பளம் இருக்கு. உடனே வேலை கிடைக்கலேன்னாலும் பத்துப் பதினைஞ்சு நாள் அலைஞ்சுத் தேடியாவது ஒரு கௌரவமான வேலையாகப் பார்க்கணும்" என்றாள் அகல்யா. இருவருமே கடுமையான வைராக்கிய மன நிலையில் இருந்தார்கள். மாத்யூ நடத்தி வந்த அந்நியச் செலாவணி மோசடி போன்ற தொழில்களில் வேலை பார்க்கவே அருவருப்பு அடைந்திருந்தார்கள் அவர்கள். ஏப்ரல் மாதம் கடைசி நாளான முப்பதாந்தேதி மின்சார ரயிலில் பரஸ்பரம் விடை பெற்றுக் கொண்ட அந்தத் தொழில் சிநேகிதிகள் மறுபடி சந்திக்க எத்தனை மாதங்கள் ஆகுமோ என்ற கவலையோடு பிரிந்தார்கள்.
ஆனால் அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கே அதாவது மே முதல் தேதி உழைப்பாளிகள் தினத்தன்றே அகல்யாவும் கிரேஸியும் சந்தித்துக் கொள்ள முடிந்தது.
சந்தித்த இடம் பிராட்வே. சந்திக்க நேர்ந்த அலுவலகம் 'டிஸௌஸா டிராவல்ஸ்'. ஒன்பதே முக்கால் மணிக்கு கிரேஸி அங்கே நுழைந்த போது 'டெலக்ஸ் டெஸ்க்' அருகே, "மோஸ்ட் இமீடியட் - செண்ட் ஹண்ட்ரட் செர்ரி ஃப்ரூட்ஸ்" - என்று சிங்கப்பூருக்கு ஒரு கேபிள் செய்தி அனுப்பிக் கொண்டிருந்தாள் அகல்யா. எதிர்பாராமல் அங்கே கிரேஸியைப் பார்த்ததும் ஒரு கணம் அகல்யாவுக்கும், அகல்யாவைப் பார்த்ததும் கிரேஸிக்கும் முகத்தில் அசடு வழிந்தது. அடுத்த கணமே சமாளித்துக் கொண்டு,
"ராத்திரி டிஸௌஸா வீட்டுக்கு வந்திருந்தான்" - என்ற ஒரு வாக்கியத்தையே 'கோரஸ்' மாதிரிப் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டார்கள். அப்போது டிஸௌஸா குறுக்கிட்டுச் சிரித்தபடியே இருவரையும் பார்த்துச் சொன்னான்:-
"எங்கே பறந்தாலும் - பறவைகள் பழையபடி பழகிய - தெரிந்த கூடுகளுக்கே திரும்பி வந்தாக வேண்டும்."
அகல்யா, கிரேஸி இருவருமே அவன் கூறியதை ஏற்பது போல் அவனை நோக்கிப் புன்முறுவல் பூத்தனர்.