Vasthathu Venum

வஸ்தாது வேணு

"ஏய்! இப்படி உள்ளே வா! வேடிக்கை பார்த்தது போதும்" என்றான் வேணு நாயக்கன். அவனுக்கு எதிரில் பீங்கான் தட்டில் சோறு வட்டித்திருந்தது. மோர் கலந்து பிசைந்து கொண்டு ஊறுகாய்க்காகக் காத்திருந்தான். அவர் மனைவி வீட்டு வாசற்படியில் நின்று, ஏதோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

- அமரர் கல்கி

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

"ஏய்! இப்படி உள்ளே வா! வேடிக்கை பார்த்தது போதும்" என்றான் வேணு நாயக்கன். அவனுக்கு எதிரில் பீங்கான் தட்டில் சோறு வட்டித்திருந்தது. மோர் கலந்து பிசைந்து கொண்டு ஊறுகாய்க்காகக் காத்திருந்தான். அவர் மனைவி வீட்டு வாசற்படியில் நின்று, ஏதோ தெருவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

"ஏஹே! காது கேட்கவில்லையா? போலீஸ்காரன் குடி வருவதைப் பார்க்கக்கூடாது. சட்டத்துக்கு விரோதம்; ஜெயிலில் போட்டுவிடுவார்கள்" என்று சொல்லி வேணு நாயக்கன் பலமாகச் சிரித்தான்.

ஆனால் மங்கம்மாளுக்கு இந்தப் பரிகாசம் புரியவில்லை. அவள் திரும்பி வந்து, "ஜெயிலில் போட்டு விடுவார்களா? விளக்குமாற்றால் அடிப்பேன், இந்த உதவாக்கரைப் போலீஸ் வேலைக்கு எவ்வளவு ஜம்பம்! இரண்டு வண்டி சாமான்! கட்டில் மெத்தை, நாற்காலி, டிரங்குப்பெட்டி, வாத்தியப்பெட்டி-ஒன்றிலும் குறைவில்லை! குட்டிகளுக்கெல்லாம் துரைசாணி மாதிரி ஜாக்கெட். ஐயோ! என்ன ஜம்பம்" என்று சொல்லிக் கையால் தன் கன்னத்தில் ஒரு இடி இடித்துக் கொண்டாள்.

"நீ சும்மாயிரு. அவர்கள் ரொம்பக்காலம் இங்கே இருந்து வாழப் போகிறார்களோ? பார்த்து விடுகிறேன்" என்றான் வேணு நாயக்கன்.

"வாழாமல் என்ன? அவர்களுக்கு என்ன கேடு? மாதம் முதல் தேதி சர்க்கார் சம்பளம் வருகிறது" என்றாள் மங்கம்மாள்.

"எல்லா சர்க்கார் சம்பளத்தையும் நான் பார்த்துவிடுகிறேன். வேணு நாயக்கன் கிட்டவா அந்த ஜம்பமெல்லாம் பலிக்கும்?"

"வந்தால் வரட்டுமே, நமக்கென்ன பயம்?" என்றாள் மங்கு.

"என்ன சொன்னாய்? வாயை அலம்பிக்கிட்டுப் பேசு. நானா பயப்படுகிறவன்? இவனைப் போல் ஆயிரம் சிவப்புத் தலைப்பாகையைப் பார்த்திருக்கிறேன்" என்று அதட்டிப் பேசினான் வேணு.

வஸ்தாது வேணு நாயக்கனைத் தெரியாதவர்கள் நெல்லிப்பாக்கத்தில் ஒருவரும் கிடையாது. ஏன்? சென்னைப் பட்டினத்திலேயே ஒருவரும் கிடையாதென்றுகூடச் சொல்லலாம். முக்கியமாக சாயங்கால வேளைகளில் கள்ளு, சாராயக் கடைகளில் அவனுடைய ஆர்ப்பாட்டம் அதிகமாயிருக்கும். அவனைக் காணாத இடங்களில் ஜனங்கள் "போவன்னா நாயக்கன்" என்று அவனைப் பற்றிப் பேசுவார்கள். எதிரில் கண்டால், "என்ன வஸ்தாது நாயக்கரே!" என்பார்கள்.

அவனுடைய ஜீவனோபாயம் எப்படியென்பது யாருக்கும் நிச்சயமாய்த் தெரியாது. ஆனால் சென்னை நகரில் எந்தவிதத் தேர்தல் நடந்தாலும் சரி, வேணு நாயக்கனை அங்கே பார்க்கலாம். யாராவது ஒரு கட்சியார் அவன் உதவியை நாடுவது நிச்சயம். மீசையை முறுக்கிவிட்டுக்கொண்டு கையில் தடியுடன் நின்றானானால் எதிர்க் கட்சியாருக்குக் கொஞ்சம் கதி கலங்கத்தான் செய்யும்.

இவ்வளவு பிரபல மனிதன் மீது நெல்லிப்பாக்கம் போலீஸார் 'நிகா' வைத்திருந்ததில் வியப்பில்லையல்லவா? சுற்றுப்பக்கத்தில் எங்கே கலகம் அடிதடி நடந்தாலும் அதில் வேணு நாயக்கன் சம்பந்தப்பட்டிருப்பான் என்பது அவர்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஆனால், அவனைப் பிடித்து மாட்டுவதற்கு மட்டும் இதுவரை அவர்களுக்குத் தக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எவ்வளவு பலமான வழக்கு அவன்மீது கொண்டு வந்தாலும், தேர்தலில் அவன் உதவி பெற்ற பிரபல வக்கீல்கள் ஆஜராகிக் 'கேஸை' உடைத்து வந்தார்கள். ஒரே ஒரு தடவை அவனிடம் ஒரு வருஷத்துக்கு நன்னடத்தை வாங்க முடிந்தது. மற்றொரு முறை முப்பது ரூபாய் அபராதம் போட்டார்கள். அதற்கு மேல் ஒன்றும் நடக்கவில்லை.

இந்த நிலைமையில், வேணு நாயக்கனுக்குப் போலீஸ்காரனென்றால் "பூனைக்குட்டி விசுவாசம்" ஏற்படுவது இயல்பேயல்லவா? ஆகவே, அடுத்த வீட்டிற்கு ஹெட்கான்ஸ்டேபிள் ஒருவன் குடி வருகின்றான் என்று அறிந்தது முதல் அவன் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. சாராயக் கடையில் யாரோ இதைப்பற்றிப் பிரஸ்தாபித்த போது "அடே! சும்மா பார்த்துக் கொண்டிரு. மூன்று நாளில் அந்த நெருப்புக்குச்சியைக் கிளப்பாவிட்டால் என் பெயர், வஸ்தாது வேணு நாயக்கன் அல்ல!" என்று சொல்லிக் கொண்டு அவன் மீசையை முறுக்கினான்.

ஆனால் மாதம் மூன்று ஆகியும் அந்த நெருப்புக் குச்சி புறப்படுகிற வழியாயில்லை. இவ்வளவு நாளும் வேணு நாயக்கன் சும்மாயிருந்தானென்று நினைக்க வேண்டாம். தன்னாலியன்ற முயற்சியெல்லாம் செய்துதான் வந்தான். அவன் உத்தரவுப்படி மங்கம்மாள் தினம் காலையில் வாசலைக் கூட்டிக் குப்பையை அடுத்த வீட்டு வாசலில் தள்ளிவிட்டு வருவாள். ஆனால் சற்று நேரத்திற்கெல்லாம் அவ்வளவு குப்பையும் வட்டியும் முதலுமாக, வேணு நாயக்கன் வாசலுக்கே திரும்பி வந்துவிடும்.

வேணு ஒரு நாள் சாராயக் கடையிலிருந்து ஏராளமான கண்ணாடிப் புட்டிகள் கொண்டுவந்தான். கதவைச் சாத்திவிட்டு அவைகளைத் துண்டு துண்டாய் உடைத்தான். நடு நிசிக்கு எழுந்து போய் அந்தத் துண்டுகளைப் போலீஸ்காரன் வீட்டுக் கொல்லையில் வீசிக் கொட்டி விட்டு வந்தான். இந்த நொறுக்கல் தொண்டு செய்தபோது அவன் கையில் இரண்டு மூன்று இடத்தில் காயம் உண்டாகி இரத்தம் வடிந்தது. அவன் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஆனால் மறுநாள் சாயங்காலம் அவன் குடிமயக்கத்துடன் வீடு திரும்பிக் கொல்லைப்புறம் போகையில் இரண்டு காலிலும் இரண்டு பெரிய கண்ணாடித் துண்டுகள் குத்திக் காலை கிழித்தபோது கட்டாயம் பொருட் படுத்த வேண்டியதாயிற்று. "ஐயோடி! அப்பாடி" என்று முனக ஆரம்பித்தான். "என்ன ஓய்! தேள் கொட்டிவிட்டதா?" என்று அடுத்த வீட்டுக் கொல்லையிலிருந்து ஒரு சத்தம் வந்தது. "பீங்கான் தட்டு வேண்டாம்; ஆசாரக் குறைவு; இனிமேல் இலை போட்டுத்தான் சாப்பிடவேண்டும்" என்றான் வேணு. இந்த ஊதாரிச் செலவின் இரகசியம் முதலில் மங்கம்மாளுக்கு விளங்கவில்லை. வேணு சாப்பிட்டு எழுந்ததும் "ஓய் இலையை மேலண்டைப் பக்கமாய்ப் போடு, தெரிகிறதா?" என்று சொன்னபோதுதான் அவளுக்கு விஷயம் விளங்கிற்று. மங்கம்மாள் அப்படியே செய்துவிட்டு வந்தாள்.

சிலநாள் வரையில் வேணு சந்தோஷமாக இருந்தான். ஆனால் ஒரு நாள் இராத்திரி கொல்லைப்புறம் போனபோது அவன் சந்தோஷம் மாறிவிட்டது. என்னவோ சந்தேகப்பட்டு அவன் கொல்லைச் சுவர் வழியாகப் பக்கத்துக் கொல்லையை எட்டிப் பார்த்தான். போலீஸ்காரன் புதிதாய் வாங்கியிருந்த பசு மாடுதான், மூன்று தம்பிடி கொடுத்து வாங்கிய வாழை இலையை ஆனந்தமாய் மென்று தின்று கொண்டிருப்பதை அவன் கண்டான். குப்பை, கண்ணாடித்துண்டு முதலிய சாமான்கள் உடனுக்குடன் திரும்பி வந்து கொண்டிருக்க, எச்சில் இலை மட்டும் வராத காரணம் இப்போதுதான் வேணுவுக்கு புலனாயிற்று.

பிறகு, ஒரு நாள் வேணு நாயக்கன் தன் வீட்டிலிருந்த ஓட்டைத் தகரங்களையெல்லாம் சேகரித்தான். கொல்லைப்புறம் கொண்டுபோய் ஒரு பெரிய தகரத்தை வீசி எறிந்தான். அடுத்த கொல்லையிலிருந்த போலீஸ்காரன், "இந்தா இந்தத் தகரத்தை எடுத்து வை. மாட்டுக்குத் தீனி வைக்க உதவும்" என்று தன் பெண்சாதியிடம் அருமையாய்ச் சொன்னான். வேணுவுக்குப் பலத்த கோபம் வந்து விட்டது. "ஓய்! அப்படி ஊர்சொத்தைச் சுரண்டித்தான் நீர் காலட்சேபம் செய்கிறதோ?" என்று கத்தினான். "ஓஹோ இது உம்முடைய தகரமா?" என்று அடுத்த கொல்லையிலிருந்து போலீஸ்காரன் சொன்னான். மறுநிமிடத்தில் அந்த ஓட்டைத்தகரம் வந்து வேணு நாயக்கன் தலைமேல் நேராய் இறங்கிற்று. பிறகு, அவன் முதுகைத் தடவிக் கொடுத்துக்கொண்டு தரையில் விழுந்து ஒரு குதி குதித்தது. "என்ன ஓய்! தலைமேல் விழுந்து விட்டதா என்ன?" என்றான் போலீஸ்காரன்.

"நாசமாய்ப் போக! ஒரு நாளைக்கு உன் மண்டையை உடைக்காமல் விடப்போகிறேனா?" என்று வஸ்தாது நாயக்கன் முணு முணுத்துக் கொண்டான்.

வேணுநாயக்கனுக்கு ஒரு மாத காலம் நல்ல தூக்கம் கிடையாது. இரவு பகல் இதே யோசனைதான். கள்ளு, சாராயக் கடைகளில் அவன் பல மந்திராலோசனைகள் நடத்தினான். அந்தப் போலீஸ்காரனைக் கசக்கி சாறு பிழிந்துவிட வேண்டுமென்று அவன் நண்பர்கள் எல்லோரும் ஒரு முகமாய் அபிப்பிராயப்பட்டார்கள். ஆனால், அதற்கு வழியும் சாதனமும் சொல்லுவார் யாருமில்லை. "வலிய அழைத்தாலும் சண்டைக்கு வராதவனை என்ன செய்யமுடியும்? எப்படியும் அவனை ஒரு கை பார்க்காமல் விடாதே" என்று மட்டும் ஊக்கப்படுத்தி வந்தார்கள். ஒரு நாள் மாலை மிக்க முகமலர்ச்சியுடன் வேணு வீடு திரும்பினான். "என்ன விசேஷம்?" என்று அவன் மனைவி கேட்டாள்.

"விசேஷம் இருக்கிறது" என்றான் வேணு. அவன் மனைவியின் ஆவல் பதின்மடங்கு அதிகமாயிற்று. "என்ன? என்ன?", என்று கேட்டாள்.

"இன்றைக்கு வக்கீல் ஐயாவிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு நல்ல யோசனை சொல்லியிருக்கிறார். இதற்குத்தான் படித்தவர்கள் சினேகம் வேண்டுமென்பது" என்றான்.

"என்ன யோசனை? சொல்லு, சொல்லு."

"போலீஸ்காரன் பிறத்தியான் வீட்டுக்குள் நுழையக்கூடாது. வாரண்டு வைத்துக்கொண்டு தான் நுழையலாம். அப்படியில்லாமல் நுழைந்தால் அவனை மாட்டிவிடலாம்."

"அதற்கென்ன இப்போது?"

"என்னவா? அதுதான் சட்டம். அடுத்த வீட்டுச் சிவப்புத் தலைப்பாகையை ஒழிக்க வழி."

"எப்படி ஒழிக்கிறது?"

"இன்னும் புரியவில்லையா? அடுத்த வீட்டுப் போலீஸ்காரனை நம் வீட்டில் நுழையும்படி செய்ய இரண்டு சாக்ஷிகள் வைத்துவிட வேண்டியது. அப்புறம் வக்கீல் ஐயன் பார்த்துக் கொள்ளுகிறான்."

"எப்ப நுழையும்படிச் செய்கிறது?"

"ஆ! அதுதான் இரகசியம், இதோ பார். இந்தத் தடியினால் உன்னை இன்று நொறுக்கப் போகிறேன்" என்றான்.

"ஐயோ! உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா, என்ன?"

உடனே வேணு நாயக்கன் விழுந்து விழுந்து சிரித்தான். "பைத்தியமில்லை; யுக்தி" என்றான்.

"இதோ பார்! நன்றாய் கேட்டுக்கொள். பரண் மேல் பழைய மெத்தை கிடக்கிறதல்லவா? அதை எடுத்துப் போடு. இந்தத் தடியினால் அதைப் போட்டு அடிக்கப் போகிறேன்! ஆனால், நீ உன்னைத்தான் அடிப்பதாகப் பாசாங்கு செய்ய வேண்டும். கூகூவென்றுகத்து. என்மேல் உனக்கிருக்கும் ஆத்திரத்தையெல்லாம் கொட்டித் திட்டு. 'கொல்கிறானே, கொல்கிறானே' என்று கூச்சல் போடு. வாசல் கதவைத் தாளிடாமல் இவ்வளவும் செய்யப் போகிறேன். அந்தச் சிவப்புத் தலைப்பாகை கட்டாயம் உள்ளே நுழையும். நான் வாசலில் ஓடிப்போய் எதிர் வீட்டுக் காரர்களைக் கூப்பிட்டு சாட்சி வைத்து விடுகிறேன்" என்றான்.

முதலில் மங்கம்மாளுக்கு இந்த யோசனை பிடிக்கவில்லை. மெத்தையில் அடிப்பதற்குச் சம்மதியாவிட்டால் முதுகின்மேல் அடி விழுமென்று தோன்றிற்று. ஆகவே, "சரி" யென்று ஒப்புக் கொண்டாள்.

சாப்பாடு முடிந்தது. அடுத்த வீட்டில் போலீஸ்காரனும் அவன் மனைவியும் படுத்துக்கொண்டார்கள் என்ற தெரிந்தபின், அந்தச் சுவர் ஓரமாக மெத்தையைக் கொண்டுபோய் போட்டான். "முதலில் கொஞ்சம் வாய்ச் சண்டை போட வேண்டும். உன் மனத்தில் என் மேலுள்ளதையெல்லாம் சொல்லித் தீர்த்துவிடு. பக்கத்து வீட்டுக்குக் கேட்கும்படி உரக்கப் பேசு" என்றான்.

மங்கம்மாள் பயந்துகொண்டே ஆரம்பித்தாள். ஆனால், இதற்கு முன்னெல்லாம் அவள் ஒரு வார்த்தைப் பேசியதும் வேணு வாயில் போடுவது வழக்கம். இப்பொழுது அவன் பேசாமலிருக்கவே அவளுக்கு உற்சாகம் பிறந்தது. எட்டு வருஷ காலமாய் அவள் மனதில் குமுறிக்கொண்டிருந்தவைகள் அனைத்தையும் எடுத்து வெளியே விடத் தொடங்கினாள். கால் மணியாயிற்று. அரை மணியும் ஆயிற்று. வேணு காரியம் என்னவென்பதை மறந்து போனான். உண்மையிலேயே தானும் தன் மனைவியும் சண்டையிடுவதாகவே கருதினான். "இவ்வளவுதானா? இன்னும் உண்டா?" என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.

"இன்னும் இருக்கிறது" என்று கூறி மங்கம்மாள், மேலும் ஆரம்பித்தாள் புராணத்தை. ஆனால் வேணுநாயக்கன் உண்மையாகவே தடியைத் தூக்கிக்கொண்டு வருகிறான் என்று தெரிந்ததும் "வீர்" என்று ஒரு பெரிய கூச்சல் போட்டுக் கொண்டு சமயலறைக்குள் ஓடிக் கதவைச் சாத்தித் தாழ்ப்பாளிட்டுக் கொண்டாள். உள்ளிருந்தபடியே அவள், வேணு நாயக்கன், அவனுடைய அப்பன், பாட்டன், இன்னும் இஷ்டமித்திர பந்து ஜனங்கள் எல்லாருடைய குணாதிசயங்களையும் வர்ணித்து அவர்களை ஆசீர்வாதஞ் செய்யலானாள். அவள் வேணுநாயக்கனையும் விடவில்லை.

இந்தச் சமயத்தில் அடுத்த வீட்டிலிருந்து போலீஸ்காரன் குரல் கேட்டது. "என்ன ஓய் காட்டு பூனையை ஓட்டித் தொலையும். தூக்கத்தைக் கெடுக்கிறது" என்றான் அந்தப் பொல்லாத குள்ள நரி. உடனே வேணு நாயக்கனுக்குப் பழைய ஞாபகம் வந்தது. தொப்பு தொப்பென்று பழைய மெத்தையைப் போட்டு அடிக்கத் தொடங்கினான் பாவம்! மூன்று தலைமுறையாக வேணு நாய்க்கன் குடும்பத்தைத் தாங்கி வந்த அந்த மெத்தை அன்று படாத பாடு பட்டது. துணி, சுக்கு சுக்காய்க் கிழிந்தது, பஞ்சு தூள் தூளாகப் பறந்தது.

போலீஸ்காரன்மேல் கோபம் ஒரு பக்கம், பெண்சாதி மேல் ஆத்திரம் ஒரு பக்கம்; அரை மணி நேரத்துக்கு மேலாகியும் வேணுநாய்க்கன் ஓயவில்லை. திடீர் என்று வாசற்கதவு திறக்கும் சத்தம் கேட்டது. "ஆஹா! ஜயித்தோம்" என்று அளவிலாத குதூகலத்துடன் முன்னைவிட ஓங்கி அடித்தான். திடு திடுவென்று யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. "மாட்டிக் கொண்டாயா நெருப்புக்குச்சிப் பயலே!" என்று எண்ணுவதற்குள் திடுதிடுவென்று முதுகில் ஐந்தாறு அடி விழுந்துவிட்டது. "ஆஹா பயலே!" என்று சத்தமிட்டுக்கொண்டு வேணு குதித்து எழுந்தான். முதுகிலும் தலையிலும் தோளிலும் மாறி மாறி அடி விழுந்தது. திரும்பிப் பார்த்ததும் வேணுவுக்குத் திகைப்பு உண்டாகிவிட்டது. ஏனென்றால் அவ்வளவு தைரியமாய் உள்ளே நுழைந்து தன்னை அடித்தவன் போலீஸ்காரனல்ல; தன் மைத்துனன் முத்துநாயக்கன். மங்கம்மாளின் அண்ணன் - என்பதை அவன் கண்டான். "சங்கதி என்னடா? கழுதை மகனே! உன் கை வரிசையைக் கடைசியில் என்னிடமே காட்டுகிறாயா? முத்துநாயக்கன் தங்கையை ஒருவன் அடிப்பதற்காயிற்றா?" என்று மேலும் சாத்தினான் முத்துநாயக்கன்.

அன்று வஸ்தாது நாயக்கன் வைகுண்டத்துக்கே போயிருப்பான். ஆனால், நல்ல வேளையாக மங்கம்மாளுக்கு விஷயம் தெரிந்து போயிற்று. அவள் கதவைத் திறந்துகொண்டு ஓடிவந்து அண்ணன் கையைப் பிடித்துக் கொண்டாள். மேலே ஒரு காயம் இல்லாமல் அவள் கொழுக்கட்டைபோல் இருப்பதைக் கண்டதும் முத்து நாயக்கனுக்குக் கோபம் தணிந்தது. பிறகு, சுற்றுமுற்றும் பார்த்தான். பழைய மெத்தையின் பதினாயிரம் துண்டு துணுக்குகளைக் கண்டான்.

"என்ன சமாசாரம்?" என்று கேட்டான். எல்லா விவரமும் மங்கம்மாள் சொன்னாள். முத்து நாயக்கன் ஒரு நிமிஷம் திகைத்து நின்றான். பின்னர் வேணுநாயக்கன் மீது காறி உமிழ்ந்து விட்டு ஓட்டம் பிடித்தான். மங்கம்மாள் வாசல் கதவைத் தாளிடப் போனாள். அந்த நிசி வேளையில் தெருவிலிருந்த அத்தனை வீட்டு வாசலிலும் ஜனங்கள் வந்து நிற்கக் கண்டாள். மிக்க வெட்கத்துடன் திரும்பி வந்து படுத்துக்கொண்டாள்.

மறுநாள் காலையில் வஸ்தாது வேணுநாயக்கன் எழுந்து, வழக்கம்போல் வெளியே வந்தான். தன் முதுகு, தோள், முகம், எல்லாம் வீங்கியிருந்ததை அவன் கவனிக்கவில்லை. அடுத்த வீட்டு வாசலில் தயாராய்க் காத்திருந்த போலீஸ்காரன் அவனைப் பார்த்து, "இதென்ன நாயக்கரே! நீரல்லவோ உம் பெண்சாதியை அடித்ததாக ஊரெல்லாம் பிரஸ்தாபமாயிருக்கிறது? பாவம்? உம்மையா அந்த அம்மாள் அப்படி அடித்துவிட்டாள்? உடம்பெல்லாம் தடித்துப் போயிருக்கிறதே!" என்றான். பிறகு, அன்று முழுதும் வேணு வெளிக்கிளம்பவேயில்லை.

ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப் பிள்ளைக்குத் தோட்ட வேலையில் கொஞ்சம் பைத்தியமுண்டு. அவன் அந்த வீட்டுக்கு வந்து ஆறு மாதந்தான் ஆயிற்று. இதற்குள் கொல்லையைக் கிளிகொஞ்சும்படி வைத்திருந்தான். ஆள் உயரம் வளர்ந்திருந்த கொத்தவரைச் செடிகளில் கொத்துக்கொத்தாய்க் காய்த்திருந்தது. ஒரு பக்கம் மல்லிகைச் செடிகள் செழிப்பாகக் கிளம்பி அப்போதுதான் மொட்டுவிட்டிருந்தன. ஒரு பந்தலில் புடலங்காய்கள் பிஞ்சும் பழமுமாய்த் தொங்கின. மற்றொரு பந்தலில் அவரைக் கொடி பச்சைப்பசேல் என்று அடர்த்தியாய்ப் படர்ந்திருந்தது. புதிய இங்கிலீஷ் குரோட்டன்ஸ்களும் வாடாமல்லிகைச் செடிகளும் மற்றொரு பக்கம் காணப்பட்டன. இரண்டு மூன்று வாழைக் கன்றுகளும் வளர்ந்திருந்தன. வீராசாமிப் பிள்ளை வீட்டில் தங்கும் நேரத்தில் முக்கால் பங்கு நேரம் புழக்கடைத் தோட்டத்திலேயே கழிப்பது வழக்கம். ஒரு செடியில் ஒரு இலைக்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால் அவனுக்கு அன்றிரவு தூக்கம் வராது.

வஸ்தாது வேணு நாயக்கன் பழைய மெத்தையுடன் யுத்தம் புரிந்து ஒரு மாதமாயிற்று. ஒரு நாள் காலையில் ஹெட்கான்ஸ்டேபிள் படுக்கையை விட்டு எழுந்ததும் வழக்கம் போல் புழக்கடைக்குச் சென்றான். அவன் அடிவயிற்றில் பகீர் என்றது. "ஐயோ" என்று ரொம்பவும் தீனமான குரலில் ஒரு பெரிய கூச்சல் போட்டான். திடீரென்று கீழே விழுந்து மூர்ச்சையடைந்தான்.

அவன் மனைவி படுக்கையிலிருந்து குதித்தெழுந்து ஒரே ஓட்டமாய் ஓடி வந்தாள். நேற்று மாலை கிளி கொஞ்சிக் கொண்டிருந்த தோட்டம் இன்று, அனுமான் அழித்த அசோகவனம் போல் இருப்பதைக் கண்டாள். ஒரு செடி, ஒரு கொடி, ஒரு புல் பூண்டு உருப்படியாயிருக்க வேண்டுமே! கிடையாது. அவரைக் கொடிகள் அறுபட்டுக் கிடந்தன. கீரைப்பாத்திகள் மிதிபட்டு கிடந்தன. மல்லிகைச் செடிகள் வேறோடு பிடுங்கப்பட்டிருந்தன. வாழைக் கன்றுகள் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்தன. கொத்தவரை, வெண்டைச் செடிகள் நிர்மூலமாய்க் கிடந்தன. ஒரே துவம்ஸம், ஒரே நாசம்.

ஹெட்கான்ஸ்டேபிள் மனைவி மகா உத்தமி. சாதாரணமாய் அதிர்ந்து பேசும் வழக்கம் அவளிடம் கிடையாது. ஆனால் இந்த மகா பாதகத்தை யாரால்தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்? "அடபாவி, நீ நாசமாய்ப் போகமாட்டாயா! உன்னைத் தெய்வம் கேட்காதா!" என்று கத்திக் கொண்டு இரண்டு கை மண்ணை வாரி வேணு நாயக்கன் கொல்லைப்பக்கம் இறைத்தாள். உடனே ஓடி வந்து கணவனுக்கு சைத்தியோபசாரம் செய்யத் தொடங்கினாள். அவனுக்கு ஸ்மரணை வந்ததும் இன்னொரு தடவை தோட்டத்தைப் பார்த்தான். அவ்வளவுதான், எழுந்து உள்ளே ஓடிப்போய்க் கூடத்தில் குப்புறப் படுத்துக்கொண்டான். அப்போது அவன் கண்ணிலிருந்து பெருகியது கண்ணீரா இல்லை, அதை இரத்தம் என்று சொல்ல வேண்டும்.

மணி பத்தடித்தது. "எத்தனை நேரம் இப்படிப் படுத்திருப்பது? எழுந்திருங்கள். வெளியே போய் விட்டு வாருங்கள். வேறு வீடு இருந்தால் பார்க்கக் கூடாதா? இந்தப் பாழும் வீட்டை விட்டுப் போகலாம்" என்றாள் போலீஸ்காரன் மனைவி. வீராசாமிப்பிள்ளை எழுந்து, உடுப்புத் தரித்துக் கொண்டு 'டியூடி' பார்க்கச் சென்றான்.

ஒரு குறுகலான சந்து. இரண்டு பக்கமும் மதில் சுவர். ஜன நடமாட்டம் கிடையாது. மின்சார விளக்குகள் அழுது வடிந்தன. இரவு பதினொரு மணிக்கு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை தனியாக வீடு நோக்கி வந்துகொண்டிருந்தான். அந்தச் சந்தின் நடுவில் மற்றொரு சந்து சேருமிடத்தில் அதன் வழியாக வேறொரு மனிதன் வந்தான். இந்த முச்சந்தியில் ஒரு மின்சார விளக்கு இருந்தபோதிலும் பக்கத்தில் மரங்கள் அதிகமிருந்தபடியால் சாலையின் பெரும் பகுதியில் நிழல் வீழ்ந்திருந்தது. தற்செயலாக அம்மனிதன் முகத்தை வீராசாமிப்பிள்ளை பார்த்த நேரமும் அவன் மீது வெளிச்சம் விழுந்த நேரமும் ஒத்துக்கொண்டன. வந்தவன் வஸ்தாது வேணு நாயக்கன்.

போலீஸ்காரன் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த துக்கம் அவ்வளவும் அந்நேரத்தில் குரோதமாக மாறிற்று. இருவரும் நேருக்கு நேர் நின்று ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள். வேணுவுக்குக் குடி மயக்கம். எனவே, ஆள் இன்னார் என்று அறிந்து கொள்ள ஒரு நிமிஷம் பிடித்தது. உடனே பல்லை இளித்துக்கொண்டு, "என்ன சிவப்புத்தலைப்பா? தோட்டம் எப்படி இருக்கிறது?" என்றான்.

அதற்கு மேல் வீராச்சாமியால் தாங்க முடியவில்லை. கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தான். ஆனால், வஸ்தாது வேணுநாயக்கனா இதற்கெல்லாம் பயப்படுகிறவன்? இத்தகைய சந்தர்ப்பத்தைத்தான் அவன் வெகு காலமாகத் தேடிக் கொண்டிருந்தது. ஐந்து நிமிஷத்தில் போலீஸ்காரன் கீழே விழுந்து மண்ணை கவ்வினான். கொஞ்ச நேரத்தில் அவன் பிண்டப் பிரதானமாகியிருப்பான். ஆனால், அந்தச் சமயத்தில் அவனுடைய அதிர்ஷ்டம் வந்து குறுக்கிட்டது.

இவர்கள் கட்டிப் புரண்டது அடர்ந்த மர நிழலுள்ள இடம். இரண்டு கையிலும் இரண்டு பெட்டி தூக்கிக்கொண்டு அவ்வழியே ஓடிவந்த மூன்றாவது மனிதன் ஒருவன், இவர்கள் மீது கால் இடறித் தொப்பென்று விழுந்தான். அவன் வைத்திருந்த பெட்டியொன்று வஸ்தாது நாயக்கன் தோள்மீது விழுந்தது. அவன் திடுக்கிட்டு எழுந்திருந்தான். இதுதான் சமயமென்று போலீஸ்காரன் சட்டென்று நழுவிச் சத்தம் போடாமல் மரத்தடியில் ஒளிந்து கொண்டான். குடி மயக்கத்திலிருந்த வேணுவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஓடி வந்தவன் இருட்டில் விழுந்து கிடப்பதுதான் தெரிந்தது. அவன் தான் போலீஸ்காரன் என்று நினைத்து ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவனை பிடித்துக் குத்தத் தொடங்கினான். அவன் பேசுவதற்கும் இடம் கொடுக்கவில்லை. மேலும் மேலும் விழுந்த அடி பொறுக்காமல் அந்த மனிதன் மூர்ச்சையடைந்தே போனான். வஸ்தாது இரண்டு மூன்று தடவை அவனைப் புரட்டிப் பார்த்துவிட்டு வேகமாய் வீடு நொக்கி நடந்தான். "இவ்வளவு தடியனா அந்தப் போலீஸ்காரன்? ஒருவேளை, உடம்பு வீங்கிப்போயிற்றா?" என்று நினைத்துக் கொண்டான்.

வேணு சந்து திரும்பிப் போன பிறகு ஹெட்கான்ஸ்டேபிள் வீராசாமி மரத்தின் மறைவிலிருந்து வெளியே வந்தான். கீழே கிடந்தவனை உற்றுப் பார்த்தான். கீழே கிடந்த பெட்டிகளையும் பார்த்தான். கொஞ்சம் சந்தேகம் உதித்தது. தூரத்தில் ஏதோ 'கோல்மால்' நடக்கும் சத்தம் கேட்டது. சந்தேகம் உறுதிப்பட்டது. பெட்டிகளை எடுத்துக் கொண்டு சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைவாக நடந்தான். ஒரு பங்களாவின் வாசலில் ஏக தடபுடலாய்க் கிடந்தது. பலர் கூடி இரைந்து கொண்டிருந்தார்கள். இரண்டு போலீஸ்காரர்களும் ஒரு சப்-இன்ஸ்பெக்டருங்கூட நின்றார்கள். கையில் பெட்டிகளுடன் உடம்பெல்லாம் இரத்தம் சொட்ட உடுப்பெல்லாம் கிழிந்து அலங்கோலமாய் வந்த வீராசாமியைக் கண்டதும் அங்கே பெருங் கிளர்ச்சி உண்டாயிற்று.

"என்ன?"

"ஏது?"

"அகப்பட்டானா?"

"ஓடிப் போனானா?"

"ஐயோ, பாவம்! நன்றாய் அடிபட்டிருக்கிறான்!"

"எத்தனை பேர்?"

"திருட்டுப் பசங்கள்?"

இவ்வாறு ஏக காலத்தில் பலர் கூச்சல் போட்டார்கள். வீராசாமிக்குக் கொஞ்சம் விஷயம் விளங்கிற்று. தன் அதிர்ஷ்டத்தைத் தானே வியந்து கொண்டான்.

இதற்குள் வீட்டு எஜமான் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடி வந்தான். வீராசாமி கையில் பெட்டிகளைக் கண்டதும் அவனுக்குக் கரை காணாத சந்தோஷம் உண்டாயிற்று. "ஐயோ! பிழைத்தேன். உயிர் வந்தது. நீ மகாராஜனாய் இருக்க வேண்டும்" என்று வீராசாமியைக் கட்டிக் கொண்டான். பெட்டிக்குள் ரூபாய் 20,000 பெறுமான நகைகளல்லவா இருந்தன!

சப் இன்ஸ்பெக்டர் இப்போது குறுக்கிட்டு, "அதெல்லாம் இருக்கட்டும். என்ன சமாசாரம்? சீக்கிரம் சொல்லு. திருடனை எங்கே கண்டாய்? என்ன நடந்தது? சீக்கிரம் சொல்லு" என்றார்.

வீராசாமிப் பிள்ளையின் மூளை வரும்போதே வேலை செய்துகொண்டிருந்தது. எனவே, அவன் தயங்காமல் சொல்லலுற்றான்:- "வட பக்கத்து சந்து வழியாய் வந்து கொண்டிருந்தபோது மூன்றுத் தடிப்பசங்கள் குறுக்குச் சந்து வழியாய் ஓடி வந்தார்கள்! என்னைக் கண்டதும் திடுக்கிட்டு நின்றார்கள். உடனே எனக்கு சந்தேகம் தட்டிற்று. 'அடே திருட்டுப் பயல்களே!' என்று சும்மா ஒரு அதட்டல் அதட்டினேன். உடனே மூன்று பேரும் என் மேல் வந்து விழுந்தார்கள். அப்பா! என்ன பாடுபட்டு போனேன்! தப்பிப் பிழைப்பது இனி மேல் இல்லையென்றே நினைத்துவிட்டேன். இருந்தாலும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சண்டை போட்டேன். கையில் கத்தி, துப்பாக்கியும் ஒன்றுமில்லை. அந்த மூன்று பேரிலும் ஒருவன் தான் நல்ல தடியன், ஒரு திமிறு திமிறிக்கொண்டு அவன் நெற்றியைப் பார்த்து ஒரு குத்து விட்டேன். அப்படியே அவன் சுருண்டு விழுந்தான். மற்ற இரண்டு பேரும் ஓடியே போனார்கள். கீழே விழுந்தவன் மறுபடியும் எழுந்து தாக்கினான். மூன்று பேரையே ஒரு கை பார்த்தவன் ஒருவனுக்குப் பயப்படுவேனா? அடித்துப் போட்டேன். அந்த மரத்தடியிலேயே இப்போது கிடக்கிறான். உயிர் இருக்கிறதோ செத்துப் போனானோ, தெரியாது. பெட்டிகளை எடுத்துக்கொண்டு ஓடி வந்தேன்."

எல்லோரும் கையில் லாந்தர்களுடன் கிளம்பிச் சென்றார்கள். முச்சந்தியில் கீழே விழுந்து கிடந்த பிரம்மாண்ட மனிதனைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிரமையுண்டாகிவிட்டது. வீராசாமியையும் கீழே கிடந்தவனையும் மாறி மாறிப் பார்த்தார்கள். 'இத்தனை பெரிய ஆளை இவன் எப்படி அடித்தான்?' என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். நல்ல வேளையாக அவன் மூக்கில் மூச்சு வந்துகொண்டிருந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் கண்ணைத் திறந்தான். கையிலும் காலிலும் விலங்கு பூட்டிப் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோனார்கள்.

ஹெட் கான்ஸ்டேபிள் வீராசாமிப்பிள்ளை ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து வஸ்தாது வேணு நாயக்கன் அடித்த அடியினால் உண்டான காயங்களை ஆற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான். வேணுவும் அந்த ஒரு வாரமாக வெளியில் கிளம்பவில்லை. ஆனால், அடுத்த வீட்டுப் போலீஸ்காரன் ஆஸ்பத்திரியில் இருப்பதைமட்டும் தன் மனைவி மூலம் விசாரித்துத் தெரிந்து கொண்டான். மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, "வஸ்தாது வேணு நாயக்கனிடமா இவன் கைவரிசை காட்டினான்?" என்று உறுமிக்கொண்டே இருந்தான்.

"என்னவோ திருடனைப் பிடித்தான், என்று சொல்லிக்கொள்கிறார்கள்" என்றாள் மங்கம்மாள்.

"திருடனா, திருடன்! இந்தக் கையினால் எண்ணி 99 குத்து அல்லவா விட்டேன்?" என்றான்.

"ஐயோ இரையாதேயுங்கள்!" என்று மங்கம்மாள் அவன் வாயைப் பொத்தினாள்.

எட்டாம் நாள் காலையில் வீராசாமிப்பிள்ளை எழுந்து வீட்டுக்கு வெளியில் வந்தான். அவன் தலையில் இன்னும் கட்டுப் போட்டிருந்தது. வேணுவும் அச்சமயம் வெளியே வந்தான். அவனால் சும்மாயிருக்க முடியவில்லை. "என்ன ஓய்! காயம் இன்னும் ஆறவில்லையா?" என்றான். வீராசாமி சும்மாயிருந்தான். வேணு மறுபடியும் "என்ன ஓய், பேசக்காணும்? பயப்படாதே. இனிமேல் குத்தவில்லை" என்றான்.

வீராசாமி, "என்னாங்காணும் உளறுகிறீர்!" என்றான்.

"நானா உளறுகிறேன்? அதற்குள் முதுகு 99 குத்தையுமா மறந்துவிட்டது?" என்று சொல்லிச் சிரித்தான் வேணு.

"என்ன? நீயா அன்று என்னை அடித்தாய்?"

"பின்னே யார்! உன் அப்பனா?"

"இரு, இரு. எதிர் வீட்டுக்காரர்களைக் கூப்பிடுகிறேன். இரண்டு பேரை வைத்துக் கொண்டு இதைச் சொல்லு."

"சொன்னால் தலை போய் விடுமோ?"

"தலை போகாது. பன்னிரண்டு வருஷம் கடுங்காவல்; அவ்வளவுதான். மூன்று திருடர்களில் ஒருவனைப் பிடித்தாகி விட்டது. இரண்டு பேர் ஓடிப் போனார்கள். ஓடிப்போனவர்களில் நீ ஒருவனா? ரொம்ப சந்தோஷம்" என்றான் போலீஸ்காரன்.

நடையிலிருந்து இந்த சம்பாஷணையை கேட்டுக் கொண்டிருந்த வேணுவின் மனைவிக்குப் பாதி பிராணன் போய்விட்டது. வேணுவுக்கு நன்றாக விளங்கவில்லை. இருந்தாலும் கொஞ்சம் பயமுண்டாயிற்று. உடனே அவன் தட்டுத் தடுமாறிக் கொண்டு "போனதெல்லாம் போகட்டும் அண்ணே? நாம் அண்டை வீட்டுக்காரர்கள். ஏன் மனத்தாங்கல், - இனி சிநேகமாயிருப்போம்" என்றான். "அந்தப் பாக்கியம் எனக்கில்லை, நாயக்கரே! நான் நாளையே இந்த வீட்டை விட்டுப் போகிறேன்" என்றான் வீராசாமி. வேணுவுக்கு மிக்க சந்தோஷம் உண்டாயிற்று. 'தொலைந்தான் சனியன்' என்று மனத்தில் நினைத்துக் கொண்டான். "அதேன் அண்ணே? வந்து ஆறுமாதங்கூட ஆகவில்லையே. ஏன் போகவேண்டும்" என்று கேட்டான்.

வீராசாமிப் பிள்ளை, "அதை ஏன் கேட்கிறாய், தம்பி! 'யானைக்குட்டி முதலி!' என்னும் பெயர் பெற்ற திருடனை நான் பிடித்துக் கொடுத்தேன். அவனோடு சண்டை போட்டுத்தான் காயமாயிற்று. இதற்காக சர்க்கார் என்னை சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு உயர்த்தி இருக்கிறார்கள். அதோடு திருட்டுப்போன நகையை மீட்டுக் கொடுத்ததற்காக ஆத்தூர் ஜமீன்தார் ஆயிரம் ரூபாய் வெகுமதி கொடுத்தார். இனிமேல் நான் ஏன் இந்த எட்டு ரூபாய் வீட்டில் குடியிருக்க வேண்டும்? முப்பது ரூபாய்க்கு ஒரு மச்சு வீடு பார்த்திருக்கிறேன்!" என்றான்.

வேணு நாயக்கனுக்கு இன்னும் விளங்கவில்லை. மனக்குழப்பமே அதிகமாயிற்று. "என்னடா அதிசயம்! குற்றுயிராகும் வரையில் தலையிலும் முதுகிலும் மாறி மாறிக் குத்தியவன் நான். என்னவோ திருடன் திருடன் என்கிறானே?' என்று திகைத்தான். அன்று சாயங்காலம் சாராயக் கடைக்குப் போனான். அங்கே விசாரித்து விஷயங்களையெல்லாம் நன்றாகத் தெரிந்துகொண்டான். அன்றிரவு வந்து வீட்டில் சுரமாகப் படுத்தவன் அப்புறம் ஒரு மாதம் வரை எழுந்திருக்கவில்லை.