Verukkuneer

வேருக்கு நீர்

பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன. கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. "நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?" என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.

- ராஜம் கிருஷ்ணன்

Source: சென்னை நூலகம்
Licesne: Creative Commons

பொருளடக்கம்

முன்னுரை

பாரத நாடு முழுவதும் காந்தியடிகள் பிறந்த நூறாவது ஆண்டை 1969ல் கொண்டாடினார்கள். அதற்கு முந்திய ஆண்டுகளில் நான் சென்னையிலேயே பெரும்பாலும் தங்கியிருக்கவில்லை. 1968ம் ஆண்டின் இறுதியில் நான் சென்னைக்கு வந்தபோது, சுதேசமித்திரன் நாளிதழில் காந்தி நூற்றாண்டை ஒட்டி என்னைச் சில கட்டுரைகள் எழுதச் சொல்லிக் கேட்டார்கள். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும், அவருடைய இலட்சியங்களைப் பற்றியும் நான் படித்து இருந்தேனே தவிர, நாட்டு விடுதலைப் போரில் எவ்வகையிலேனும் பங்கு கொண்டோ, அப்படிப் பங்கு கொண்டவர்களோடு தொடர்பு கொண்டோ சிறிதும் அநுபவம் பெற்றிருக்கவில்லை. எனவே தயக்கத்துடன் ஒப்புக் கொண்டு அடிகளின் வாழ்க்கையைப் பற்றியும் சத்தியாக்கிரகத் தத்துவத்தைப் பற்றியும் வெளிவந்திருந்த நூல்கள் அனைத்தையும் படித்துப் பார்ப்பதென்று முனைந்தேன்.

டாக்டர் ரங்காச்சாரி வாழ்க்கை வரலாற்றை எழுது முன் சென்னையில் 1931, 32-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த அந்நியத் துணி மறுப்பு, மதுக்கடை மறியல் போன்ற போராட்டங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தேன். அடுத்து, கோவா விடுதலைப் போரை மையக் கருத்தாக வைத்து நான் நாவல் புனையச் செய்திகள் சேகரிக்கையில் காந்தியடிகளின் சாத்துவிக முறைப் போராட்டத்தைத் துவங்குமுன், அதற்குத் தகுதியான உரிய ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி, கோவா விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற பெரியார் நீலகண்ட கரபூர்க்கர் என்னிடம் விவரித்தார். 'சத்தியாக்கிரகம்' என்ற சொல்லின் உண்மைப் பொருளைப் பற்றிய அவர் உரை என்னை ஆழ்ந்து சிந்திக்கச் செய்தது. கோவா விடுதலைக்கு, வன்முறை ராணுவமே பயன்பட்டது.

அப்போது ஏன் அஹிம்சை முறை பயனற்றுப் போயிற்று? காந்தீய இலட்சியங்கள் செயல் முறைக்குப் பொருந்தாத வெறுங் கனவுகள் தாமா? நாடெங்கும் நாட்டு விடுதலைக்கு முன் புயல்போல் கிளர்ந்த எழுச்சி உண்மையில் நாட்டுப்பற்று என்ற அடிப்படையில் இருந்து எழவில்லையா?

அடிகள் பிறந்த நூறாவது ஆண்டை நாம் கொண்டாடியபோது, அவருடைய இலட்சியங்களிலிருந்து பிறழ்ந்து, நாடு வேறு திசையில் சென்று கொண்டிருப்பதையே அப்போது நடந்த நிகழ்ச்சிகள் விளக்கின. நாடெங்கும் வன்முறைச் செயல்கள் அமைதியைக் குலைத்தன. மானந்தம்பாடி, புல்பள்ளி போன்ற காட்டு மலைப் பிராந்தியங்களில் வன்முறைப் புரட்சியாளர் பயங்கரச் செயல்களில் இறங்கினர். வங்கத்தில் அன்றாட வாழ்க்கையே நிலைகுலைய வன்முறை வெறிச் செயல்கள் திகிலைக் கூட்டின. நாட்டு விடுதலை என்ற இலட்சியத்துக்காக மட்டுமின்றி, சமுதாய மேன்மைக்காகவும் அரிய கொள்கைகளை வகுத்து, தியாகத்தின் அடிப்படையில் உருவாகி ஆலமரமாக வளர்ந்து மக்களிடையே பெருஞ் செல்வாக்கைப் பெற்றிருந்த அரசியல் கட்சி, வலது, இடது என்று இரண்டு சாரிகளாகப் பிரிந்து உடைந்து வலுவிழந்து, அரசியல் வானில் கொந்தளிப்பு மிகுந்தது. சமுதாய மேன்மைகளுக்காக எந்த அந்த அடிநிலைகளை உயரிய மதிப்போடு போற்றி வந்தோமோ, அந்த அடி நிலைகளே ஆட்டம் கண்டன. அரசியற் கட்சிகளின் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்ளும் வகையில் அவை செல்வாக்கு இழந்து, தனி மனிதர்களின் சண்டை சச்சரவுகளாகச் சீர் குலைந்தன.

நாளிதழுக்குக் கட்டுரைகள் எழுதுவதற்காகவே நான் ஆழ்ந்து சிந்தித்தாலும், கட்டுரைகள் முடிந்த பின்னரும் என்னால் அமைதி காண இயலவில்லை.

புற உலகின் அறைகூவல்களை எதிர்த்து நோக்க என்னுள் ஒரு யமுனா உருவானாள்.

நீலகிரி மலைத்தொடரின் பல நிலைகளிலும் வாழும் வாய்ப்பும் அநுபவமும் எனக்கு இயைந்திருந்தன. 'குறிஞ்சித் தேனு'க்காக நான் மலை வாழ் மக்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கையில் ஒட்டியிருந்த அண்டை மாநிலமாகிய கேரளப் பகுதியில் வாழும் மக்களைப் பற்றிய செய்திகளையும் அறிந்திருந்தேன். குறிப்பாக, மானந்தம்பாடி, வயநாடு பிராந்தியங்களில் வாழும் அடியர், பணியர் வாழ்வு பற்றிய பல கட்டுரைகளை மலையாளத்தில் இருந்து மஞ்சரி இதழ்களுக்குத் தமிழாக்கம் செய்திருந்தேன். எனவே, அந்தச் சூழல் பற்றிய செய்திகள் எனக்கு 'வேருக்கு நீர்' புதினத்துக்கான பகைப் புலத்தைத் தீட்ட உதவின.

அந்த ஆண்டின் இறுதியில் நான் வங்கத் தலைநகர், கல்கத்தாவுக்குச் சென்றேன். அங்கே நான் நேரில் கண்ட காட்சிகளையும் அநுபவங்களையுமே கதையில் சித்தரித்திருக்கிறேன். அந்த அமைதி குலைந்த அன்றாட வாழ்க்கையைப் பல கோணங்களிலிருந்தும் காணும் வண்ணம், பீகார் மாநிலத்திலும் பிரயாணம் செய்தேன்; பாட்னாவில் இரண்டு மாத காலம் தங்கினேன். அரசியல் நிலைக்குக் காரணமான அறியாமையும் வறுமையும் இசைந்துவிட்டால், வன்முறைக் கிளர்ச்சிகள் தோன்றாமலிருக்க முடியாது. அந்நாளில் உயர்மட்டத்தில் விருந்து போன்ற வைபவங்களில் ஒழுக்கச் சிதைவு ஒன்றே குறியாக இருப்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பும் பெற்றேன். தனிமனித ஒழுக்கம் சமுதாயத்துக்கு என்ற அடிப்படையான காந்திய இலட்சியங்கள், நழுவிப் போய்விட்டன. அந்நாள், எனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியும் துயரமும் இந்நவீனத்தைப் புனையத் தூண்டு கோலாயின. இந்நவீனத்தைப் பலதரப்பட்ட மக்கள், ஆய்வாளர், அரசியலார் படித்து, பல வகையில் என்னிடம் கருத்துக்களையும் ஐயங்களையும் கேட்டிருக்கின்றனர். புறவாழ்வில் ஏற்படும் பாதிப்புகளினால் எனது, மன அரங்கில் ஏற்படும் கருத்துக்களும் கிளர்ச்சிகளும் எனது இலக்கியப் படைப்புகளுக்கு உந்துதல்களாக இருந்து வருகின்றன. 'நாவல்' என்ற இலக்கிய உருவை நான் எனது கருத்து வெளியீட்டு மொழியாகக் கொண்டிருக்கிறேன். அந்த வகையில் அந்நாளில் கல்கத்தாவிலும் பீகாரிலும் நான் சந்தித்த மக்களையே கதாபாத்திரங்களாகவும் உலவ விட்டிருக்கிறேன்; அவர்கள் யாவரும் தனிமனிதர்களாகத் தோன்றாமல், சமுதாயத்தின் பிரதிநிதிகளாகவே தோன்றுவார்கள். தனிமனிதப் பிரச்னைகளை வளர்த்துக் கொண்டு செல்கையில் கதையமைப்பு வேறு விதமாக இருக்கக் கூடும். இங்கோ, நிகழ்ச்சிகள், நடப்புகள், கற்பனையல்ல.

இந்த நவீனத்துக்கு அந்நாள் (1973) மத்திய சாகித்ய அகாதமி நிறுவனப் பரிசு பெறும் சிறப்பும் கிடைத்தது.

பீகார் மாநிலத்தில் அன்று நான் கண்ட அரசியல் கோளாறுகளும், மக்களின் பிரச்னைகளும், முறுக்கேறி நாட்டின் ஆட்சியை மாற்றும் அளவுக்கு நிகழ்ச்சிகள் தொடர்ந்திருக்கின்றன.

கங்கை தன் வண்மைக்கரம் கொண்டு தழுவும் இந்த மண்ணில், இந்நாவலில் குறிப்பிட்ட, பிரச்னைகளும், நெருக்கடிகளும் புதிய வலிமைகள் பெற்றிருக்கின்றன. "நீங்கள் காந்தீயக் கொள்கைகளை ஆதரிக்கவில்லையா அம்மா?" என்று என்னைப் பலர் இந்த நூலைப் படித்துக் கேட்டிருக்கின்றனர்.

பலதரப்பட்ட மக்கள் கொண்ட மிகப் பெரிய பாரத சமுதாயம் இது. இலக்கிய ஆசிரியர்கள், சிந்தனையாளர், ஒதுங்கியிராமல், தத்தம் வழியிலே நாம் கொண்டிருக்கும் நடைமுறையில், கொள்கைகளில் வெற்றி பெற்ற அம்சம் எது, மறுபரிசோதனைக்குரிய அம்சம் எது என்று சிந்தனை செய்வது அவசியமாகிறது; அதை மக்களிடம் கொண்டு செல்வதும் கடமையாகும் என்று கருதுகிறேன்.

இந்நூலுக்குச் சிறப்பளித்தவர்களுக்கும், வெளியீட்டாளருக்கும் இதனைப் படித்துக் கருத்துரை கூறியவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாசக பெருமக்கள் மக்களாட்சி நிலவும் இந்நாட்டில் ஆற்றல் மிகுந்தவர்கள். அவர்களைச் சிந்திக்கச் செய்ய வேண்டும் என்பதே என் அவா.

அன்புடன் ராஜம் கிருஷணன்

25-2-80

அத்தியாயம் - 1

"மாலை ரொம்ப நல்லாயிருக்கு ரங்கா! நிசப் பூமாலை போலவே இருக்கு!" என்று யமுனா வியந்து பாராட்டுகிறாள்.

ரங்கனுக்குப் பெருமை பிடிபடவில்லை. பெரிய முண்டாசும் சந்தனப் பொட்டும் கோட்டுமாக, கம்பீரமாகத்தான் நிற்கிறான்.

"ரங்கா கௌடர் வெறும் தோட்டக்காரர் இல்லை. ஒரு நல்ல கலைஞர் என்பதை விளக்கி விட்டார்" என்று துரை புகழ்மாலை போடுகிறான்.

"வெறும் ரோஜா, முல்லை என்று மாலை அமையாமல் கீழ்நாட்டுப் பூ, மலைநாட்டுப் பூ எல்லாம் கலந்த பூ மாலையாக இருப்பதுதான் இதன் சிறப்பு. என்ன சொல்கிறீர்கள் சுமதி தாயி?"

"மாலையை யாருக்குப் போடப் போகிறீர்கள்? அதைத் தெரிந்து கொண்டால் தான் சிறப்பைச் சொல்ல முடியும்!"

சுமதி தாயி மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண்மணி. வார்தா ஆசிரமத்திலிருந்து காந்திய நெறி பயின்றவள். அவள் இந்த நீலமலை மூலை ஆசிரமத்தில் இவர்கள் கொண்டாடப் போகும் நூற்றாண்டு விழாவில் பங்கு கொள்ள வந்திருப்பதே சிறப்புத்தான்.

"பாரத தேவியாக வேடம் போடப் போகிறாளே அந்தச் சிறுமி பார்வதிதான், இதை அணியப் போகிறாள். நேற்று ஒத்திகையில் பார்த்தீர்களே..." என்று யமுனா விளக்கிய பின்னரே அவளுக்குப் புரிகிறது.

"அதானே பார்த்தேன், பாபுஜியின் படத்துக்கு இது எப்படிப் பொருந்தும் என்று?"

"அதற்குத்தான் கதர் மாலை முன்பே போய்விட்டதே! பல மதங்கள், பல வண்ணங்கள், பல மொழிகள், பல தரங்கள் - இவற்றை விளக்கப் பலதரத்துப் பூக்கள். ஆனால் பாரத சமுதாயம் ஒரே பண்பாட்டின் சரட்டில் ஊடுருவி நிற்கிறது..." என்று யமுனா விளக்குகையில் துரைக்கு அவள் பரவசமுற்று நிற்பதாகத் தோன்றுகிறது. உணர்ச்சி வசப்பட்டால் மலரிதழ்கள் போன்று மடிந்தாற் போல் அவளுடைய மடல்கள் சிவந்து விடுகின்றன. எங்கோ ஒரு கிராமத்து மூலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று அமைந்த ஒதுக்குப்புறத்தில் பிறந்து வளர்ந்திருக்கும் அவன் காந்தி கிராமத்து அரிஜனச் சிறுவர் இல்லத்துக்கு வரும்வரையிலும் அந்தக் குப்பை மேட்டுச் சண்டை சச்சரவுகளையும் சல்லாப விநோதங்களையும் தானே அறிந்திருந்தான்? அந்தப் பருவத்தில் படியாததை பின்னே வாழ்நாளெல்லாம் படிய வைத்தாலும் அந்த ஈடுபாடு வராதோ?

யமுனா காந்தி நூற்றாண்டு விழாவுக்காக ஆசிரமக் குழந்தைகளைக் கொண்டு ஒரு கதம்ப நிகழ்ச்சி தயார் செய்திருக்கிறாள். உண்மைதான். ஆனால் இந்த ஆசிரமத்தில் யார் தாம் காந்தியடிகள் கண்ட அன்றைய பாரத சமுதாயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்? யமுனாவின் தந்தை, இன்று நடமாட்டமில்லாமல் கட்டிலோடு முடங்கிவிட்ட தந்தை, அந்த நாட்களில் காந்தியடிகளுடன் சம்பாரன் சத்யாக்ரகத்துக்கே புறப்பட்டவர்; யமுனாவின் தாயோ, காந்திஜீயின் சேவாக்கிராம ஆசிரமத்தில் கிடைத்த துணை. இவர்களெல்லோரும் கூடக் காந்தியடிகளைப் பற்றியோ, நாட்டுப்பற்றைப் பற்றியோ பேசும் போது இப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவதில்லை. அவன்... அரிஜனங்கள் என்று தாய் போல் கனிவு கொண்ட அடிகளின் பெயரால் நிறுவப்பெற்ற கருணை இல்லத்திலேயே அரசு நீட்டிய கையைப் பற்றிக் கொண்டு சமுதாயம் மதிக்கத் தகுந்த மனிதனாக உருவாகி இருக்கிறான். 'துரைராசன் பி.ஈ.' என்று கடிதங்களில் வரும் வரியிலேயே அவன் தன்னைத்தானே பார்த்து மகிழ்ந்து கொள்ளுகிறான். எனினும், இந்த யமுனாவைப் போல் அவன் உணர்ச்சிப் பரவசனாகி விடுவதில்லை. ரங்கன் வைத்த ஒட்டுச் செடியில் மலர்ந்து நிற்கும் ரோஜாவைப் போன்ற அந்த முகம்; ஒட்டில் மலை ரோஜாவுக்குரிய வண்ணச் சிறப்பு உண்டு. அடுக்கடுக்கான இதழ்கள். ஆனால் மலை ரோஜாவுக்கில்லாத வாசனை, எண்ணங்களை நிறைக்கச் செய்கிறது. இந்த ஆசிரமத்துக்கு யமுனா ரோஜா; இல்லை... மான்! இல்லை... சிங்கம்...; இல்லை ராஜகுமாரி...

"என்ன நீங்கள் பஸ்ஸுக்குப் புறப்பட்டு விட்டீர்களா? திகைத்துப் போனாற்போல் நிற்கிறீர்களே?" என்று யமுனா கேட்கும் போது தான் அவன் ஒரு புன்னகை செய்து சமாளிக்கிறான்.

"மற்ற சாமான்களெல்லாம் ஜோசஃப் சாருடன் போயாச்சில்ல?"

"ஆமாம்; இந்த மாலைதான் எனக்குத் தெரிந்து பாக்கி. நீங்கள் முன்னே போய் ரங்கனுடன் பஸ்ஸைக் கொஞ்சம் பிடித்து வையுங்கள்; ஓட்டமாக வருகிறேன்!"

சுமதியும் அவளுமாக நடக்கின்றனர். பூங்காக் குடிலிலிருந்து அவர்கள் இல்லம் செல்லும் சரளை மண் பாதையின் இருமருங்கிலும் பச்சைக் குஞ்சம் கட்டினாற் போல் காணப் பெறும் வாசனைப் புல் பாத்திகள் வறண்டு கிடக்கின்றன; ஒரு புறம் பள்ளத்திலோடும் ஆற்று நீரை மேட்டுக்கு இறைத்துத் தரும் பம்ப் செட் ஓடிக் கொண்டிருந்தாலும் வானவனின் கருணையின்றி வளமுண்டோ என்று கேட்கும் பாவனையில் இலைக்கோசும் பூக்கோசும் சவலைக் குழந்தைகளைப் போல் காட்சியளிக்கின்றன. ரங்கனின் தந்தை உதகையின் ஐரோப்பிய கவர்னர்கள் காலத்து மாளிகைத் தோட்டத்தில் பணி செய்தவன். இந்த ரங்கன் அந்தச் சிறுவயதிலேயே ரோஜாப் பதியன்களிலும், 'ஸ்வீட் பீஸ்' கொத்துகளின் நறுமணச் சூழலிலும் வளர்ந்தவன். ஏழு வயசிலேயே ஜாடிகளில் அழகாகப் பூப்போடுவானாம். பாரததேவிக்கு அவனைக் கொண்டு காகிதப் பூமாலை கட்டச் சொல்ல வேண்டியிருக்கிறது! பூந்தோட்டத்தைக் குறுக்கி, மேலும் மேலும் பெருகும் வயிற்றுப் பசித் தீயை அவிக்க, கப்பைக் கிழங்கும் வாழையும் நட்டிருக்கிறார்கள்.

"துரை இங்கே எத்தனை காலமாக இருக்கிறார் யமு?" என்று கேட்கிறாள் சுமதி தாயி.

யமுனா சட்டென்று தலை நிமிர்ந்து பார்க்கிறாள். "...துரை இங்கே வேலைக்கு என்று வரவில்லையே? பில்லூர் அணை கட்டும்போது படிப்பை முடித்து வேலைக்கு வந்தார். அப்போதெல்லாம் ஓய்வு நாட்களில் இங்கு வருவார். அம்மாவனோடு பேசுவார். பம்ப்செட், விளக்கு - ஏதானும் கோளாறிருந்தால் கவனிப்பார். பிறகு அணை திட்டம் முடிந்து வேலை இல்லாமலாகிவிட்டது. ஆறேழு மாசமாய் வேலை இல்லை. வேலை கிடைக்கவில்லை. ஒரு மாசம் முன்னே இங்கே வந்தார். இங்கே பெரிய பையன்கள் நாலைந்து பேருக்கு அடிப்படைத் தொழில் நுணுக்கங்கள், வொயரிங் போன்றதெல்லாம் அவராகச் சொல்லிக் கொடுக்கிறார். அம்மாவனுக்கு அவரை ரொம்பப் பிடிக்கும். "வேலை கிடைக்கலேன்னு கவலைப்படாதே. நீ இங்கேயே இரு" என்று சொல்லியிருக்கிறார். துரை திருக்குறள் வகுப்பு எடுப்பார். கேட்டுக் கொண்டே இருக்கலாம், சுமதி தாயி!"

"அதான் முதலில் இங்குள்ள ஆதிவாசி இருளர் இனமோ, என்று நினைத்தேன். எனக்குங்கூட அவருடைய பேச்சு, சுபாவம் எல்லாம் பிடித்திருக்கிறது. இப்படி எத்தனை எத்தனை இளைஞர்களை நம்பிக்கையற்ற எதிர்காலத்துடன் வைத்திருக்கிறது!"

யமுனா யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள்.

ருக்மிணி அம்மை குடிலின் வாயிற்புறம் மூங்கிற் குழாயால் கன்றுக் குட்டிக்குக் கஞ்சி புகட்டிக் கொண்டிருக்கிறாள்.

மூங்கிற் தட்டிக்கு மேல் ஓடுகள் வேயப் பெற்ற இல்லம். பதினான்குக்குப் பதினாறாய் மண்ணில் மெழுகிய கூடம், சுவரில் நூல் சிட்டம் நிறைவேறாமல் மாட்டியிருக்கிறது. மூங்கில் அலமாரியில் அடுக்காகப் புத்தகங்கள். ஒரு கொக்கியில் அரிக்கேன் விளக்கு தொங்குகிறது. ஒட்டி ஒரு வாயிற்படி தெரிகிறது. உள்ளே புகுந்தால் பத்தடிக்குப் பன்னிரண்டாக ஒரு அறை, மரக்கட்டில் ஒன்றில் யமுனாவின் தந்தை படுத்திருக்கிறார். கைக்கெட்டும்படியாக வலது பக்கம் நீண்ட பலகையில் புத்தகங்கள் எழுதும் பலகை, மூக்குக் கண்ணாடி, ஒரு கடிகாரம் இருக்கின்றன. அங்கும் ஓர் அலமாரி நிறைந்த புத்தகங்கள். நலிந்த உருவில் படுத்திருப்பவரின் வயதை அறுபதிலிருந்து எண்பது வரையிலும் கொண்டு நிறுத்தலாம். கதிரேசனின் ஒளிப்பட்டிராத குருத்துப் போல் முகம் வெளுத்துச் சுருங்கியிருக்கிறது. அகன்ற நெற்றியும் கூரிய... செதுக்கு அமைப்புமாக விளங்கும் அந்த முகம் ஒரு காலத்தில் மிகுந்த ஒளியுடன் திகழ்ந்திருக்கக் கூடும்? கட்டில் சாதாரணக் கட்டில்களை விட, அவர் உடலுக்கேற்ற வகையில் நீளமாக இருக்கிறது. சுருங்கிய பாதங்கள், உள்ளங்காலின் வெண்மையான நிறம், முதியவர் நடமாட்டம் விட்டுப் பல நாட்கள் ஆயின என்றுரைக்கிறது.

இலேசான நச்சுக் கொல்லியின் மணம் நோயாளியின் அறை என்ற உணர்வைத் தோற்றுவித்தாலும், "என்னம்மா பஸ்ஸுக்குப் போகல்லே?" என்று கேட்பவரின் குரல் ஆரோக்கியமாகவே இருக்கிறது.

"போய்க் கொண்டே இருக்கிறோம்பா, சுமதி தாயி உங்ககிட்டச் சொல்லிக்காம போய்விடுவார்களா?"

"சுமதி தாயியா? போய் வாங்கம்மா! இவ்வளவுக்கு நினைப்பு வச்சு இந்த மூலைக்கு..."

குவிந்த கரங்கள் நடுங்குகின்றன. சற்று முன் ஆரோக்கியமாக ஒலித்த குரல் கரகரத்து ஒலிக்கிறது. யமுனா அந்தக் கைகளைப் பற்றிக் கொண்டு விழிக்கடைகளைத் துடைக்கிறாள்.

"நான் உண்மையிலே பெங்களூர் காங்கிரஸுக்கா வந்தேன்? ராம்ஜியைப் பார்க்கணும், ருக்மிணி தாயியைப் பார்க்கணும்னுதான் ஓடி வந்தேன்."

"எப்படியிருந்த குடும்பம், எப்படியோ போய்விட்டது. ஆண்டவன் இருக்கிறார்... வேறெதைச் சொல்ல?"

"எனக்கு நம்பிக்கையே போய்விட்டது சுமதி தாயி!"

"சை... இதென்ன ராம்ஜி? நீங்களா! உங்கள் நம்பிக்கை ஏன் போக வேண்டும்? இதோ, யமுனாவைப் பார்த்துக் கொண்டா நீங்கள் இப்படிப் பேசுகிறீர்கள்?"

அவர் தாமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு அவர்கள் இருவரையும் பார்க்கிறார். கை குவிகிறது மீண்டும்.

"போய் வாங்கம்மா? போய் வாம்மா, யமுனா!"

ருக்மணி அம்மை வாயிற்படியில் நிற்கிறார். சுமதி அவளைத் தழுவி விடை பெறுகிறாள். "இந்த மூலையில் சத்தியம் இருக்கிறது. அது இருக்கும். சத்தியம் எங்கேனும் மாயுமோ சோதரி?"

சுமதிக்குப் பேச நா எழவில்லை.

யமுனா தன்னுடைய மாற்றுச் சேலையையும் இரண்டொரு தேவைகளையும் பைக்குள் திணித்து மாட்டிக் கொள்கிறாள்.

பஸ் நிற்கிறதோ என்னவோ?

"வாருங்கள் சுமதி தாயி?" இருவரும் சாலையைப் பிடிக்க விரைகின்றனர். ஜூலை மாசம் இருபது தேதியில் மேற்குத் தொடரில் இப்படி வறட்சி நிலவுவதுண்டோ? மூடிக் கண் திறந்து வானவன் கண்ணாமூச்சி யாடுவதுடன் மறைந்து போகிறான். ஒரு மேகக் குஞ்சு சினையாவதில்லை; ஆறு மெலிந்து இழையாக ஓடுகிறது. எங்கோ சந்திர மண்டலத்தை எட்டிப் பிடிக்கிறார்கள். அரசியல் வானில் கொந்தளிப்பு, தனி மனிதர்களையும் அது ஆட்டிப் படைக்கிறது. ஆனால் இந்த மூலை நோஞ்சான் குழந்தையாய், கண்களில் மட்டும் ஒளியை வைத்துக் கொண்டு உயிர்த்திருக்கிறது.

கண்களில் மட்டுமே ஒளி...

"ஓ! சாலையில் பஸ் வந்து நிற்கிறதே?"

ரங்கன் நீளமான அந்த மாலைப் பெட்டியை, (மூங்கிலிழைகளால் ஒரு பெட்டி முடைந்திருக்கிறானே?) பஸ் உள்ளே ஏற்ற வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறான்.

"ஊட்டி, ட்ராமாக்குப் போறது, பாரததேவிக்கு மாலை. இல்லாட்டி கண்டா முண்டா சாமான்களோடு மேலே போடலாம்" என்று மாலைப்பெட்டியுடன் நிற்கிறான்.

"இருக்கட்டுமேய்யா? அதான் பொட்டிக்குள்ள வச்சிருக்கியே? கீழே அல்லாம் மெறிச்சி துவையலாக்கிடுவாங்க..."

ரங்கனின் முகத்தில் கவலை கனக்கிறது.

"அதென்னமோ தெரியாதுங்க என் பக்கத்தில் அது இருக்கணும்."

"அப்ப அந்தாளையும் மேலே ஏத்திடுங்க!" என்று யாரோ ஒருவர் நகைச்சுவையுடன் சிரிக்கிறார்.

"இந்தாய்யா, ஒண்ணும் ஆகாது. நான் கியாரண்டி. போடப்பா, மேலே..." பெட்டியைக் காக்கிச் சட்டை ஆள் பற்றும் போது ரங்கன் அழுதுவிடுவான் போலிருக்கிறது.

"ரங்கனின் முகத்தைப் பாருங்க யமுனா!" என்று நகைக்கிறான் துரை.

"பாவம், ஒரு அற்பமான உடைமை. இதற்கே இப்படி மனித இயல்பு இருக்குமானால் தனி உடைமை என்று மனிதனோடு பரம்பரை பரம்பரையாக ஊறியவற்றை எல்லாம் எப்படிப் பிரித்து எடுப்பது?" என்று கூறிக்கொண்டே யமுனா பஸ்ஸிலேறி முன்புறம் அவர்களுக்காக ஒதுக்கப் பெற்ற இருக்கை ஒன்றில் அமர்ந்து கொள்கிறாள்.

"அதுதான் ரத்தம் சிந்தப் பிரிக்கும் தந்திரம்" என்று விடையிறுக்கிறாள் சுமதி.

"நீங்க என்ன, மார்க்ஸீயம் பேசுறீங்க?"

"பெங்களூர் காங்கிரஸுக்கப்புறம் வேற என்ன, எப்படிப் பேசுவதாம்? அதுவே இது; இதுவே அது..."

"நீங்க என்ன எல்லாத்துக்கும் பெங்களூர் காங்கிரஸை வம்புக்கிழுக்கிறீர்கள்? நீங்க ரைட்டா?" என்று சிரிக்கிறான் துரை.

"நீங்க லெஃப்டா?" என்று திருப்பிக் கேட்கிறாள் சுமதி தாயி. உண்மையில் சுமதி தாயி எத்தனை தடவைகளோ தான் பெங்களூர் காங்கிரஸுக்கு வந்தவள் என்பதை நினைப்பூட்டி விட்டாள். தன் மனத்தாங்கலைக் கொட்டிக் கொள்ளத்தான் அவர்களைத் தேடி வந்திருப்பாளோ என்று கூட யமுனா நினைக்கிறாள். தங்கிய இரண்டு நாட்களிலும் நூற்றாண்டு விழாக் கதம்ப நிகழ்ச்சியைக் கொண்டே அவனைப் பேசவிடாமல் அடித்தாயிற்று.

"இப்ப ஆசிரமத்தில் பம்ப்செட் ஓடுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கு. ராம்ஜி சரியாக இருந்தால் ஒவ்வொரு குடமாக மேட்டிலேறித் தண்ணீர் இரைக்கச் சொல்வாராக்கும்!"

"ஹும், அதெல்லாம் நடக்கும் செயலில்லை. ஆசிரமத்திலிருந்து வரும் ரங்கன், இப்ப ஊட்டியில் ரேஸ் இருந்தால் அங்கே தான் முதலில் போவான். இல்லாவிட்டால் எங்கே சினிமா ஸ்டார்கள் வந்து ஷூட்டிங் நடக்கிறதோ அங்கு ஆஜராவான். இந்த பஸ்ஸையே எடுத்துக் கொள்ளுங்கள்; இருபது வருஷத்துக்கு முன்னே இங்கே வெளியுலகம் எப்படி இருக்குமென்று தெரிந்திருக்காது. இப்ப நம்ம மாரி இருளன் சினிமா எங்கேன்னு அலைகிறான். பிரேமா சினிமாப் பாட்டு, நல்ல தமிழில் எப்படிப் பாடுது?"

யமுனாவுக்குப் பேசும் உற்சாகமோ, கலகலப்போ இல்லை.

மலைப்பாதையில் உய் உய்யென்று பஸ் ஏறுகிறது. எட்டு ஆண்டுகளுக்கு முன் இங்கே அமைக்கப் பெற்றிருக்கும் நீர் மின் நிலையங்களுக்காகப் போட்ட சாலை; இந்த இருண்ட மலைக் கானகங்களில் புத்தொளியும் புதிய நாகரிக மலர்ச்சியும் வந்துவிட்டதன் அடையாளமாக இந்தப் பஸ் குதிரைப் பந்தயத் திருவிழாவுக்கும் மக்களைச் சுமந்து கொண்டு மலையேறுகிறது. வனவிலங்குகளின் இருப்பிடமாகத் திகழ்ந்த இருண்ட கானகங்கள் இன்று கரைந்து விட்டன. தன்னிச்சையாகக் குதித்துச் செல்லும் அருவிகள் இன்று மறைந்து விட்டன. மலைச்சரிவெங்கும் பச்சைக் குவியல்களாகத் தெரியும் தேயிலைச் செடிகளினூடே கரைந்த கானகங்களினூடே கோபுரந்தாங்கிகளில் வீரிய மிக்க மின்வடங்கள் செல்கின்றன. நீர்த்தேக்கங்களை ஒட்டிச் செயற்கைப் பூங்காக்கள். அவற்றை ஒட்டிய சுற்றுலா விடுதிகள்; வாயில் விடுதிகள்; வாயில்களில் நீண்ட படகு போன்று பளபளக்கும் ஊர்திகள். சில நீர்த்தேக்கங்களில் அலங்காரப் படகுகளும் வைத்திருக்கிறார்கள். ஆனால் நீரில்லையே! புற்சரிவுகளில் உல்லாசம் விரும்பி வருபவர்களுக்காக மட்டக் குதிரைகளைப் பிடித்துக் கொண்டு நிற்கும் ஏழைகளுக்கொப்ப அணைத் தேக்கம் காட்சியளிக்கிறது.

ஏழைமை கொடியது. வயிற்றுக்கில்லாத ஏழைமை மட்டுமல்ல; 'இந்த முக்கல் முனகல் பஸ்ஸில் இடித்து நெருக்க, வயிற்றுக்குடல் சுருண்டு வாயில் வந்து விடுவது போல் புரட்ட, இப்படிப் போக வேண்டியிருக்கிறதே; அந்தப் படகுக் காரில் போக வழியில்லையே' என்ற ஏக்கத்தைத் தோற்றுவிக்கும் உணர்ச்சியும் ஏழைமையிலிருந்து பிறப்பது தான். அதை எப்படியேனும் வெற்றி கொள்ள வேண்டும் என்று தான் கஞ்சிக்குத் தானியம் வாங்க வைத்திருக்கும் கைப்பொருளையும் 'ஜாக்பாட்'டில் கொண்டு கொட்டுகிறார்கள்.

வெளியிலிருந்து சில்லென்று காற்று முகத்தில் வந்து படிகிறது.

மேலே மழை பெய்யுமோ?

சில வளைவுகள் ஏறுமுன்பே சாரல் பெருந்துளிகளாய் பஸ்ஸைத் தாக்குகிறது. பரபரவென்று பஸ்ஸின் திரைச் சீலைகளை இழுத்து மாட்ட ஒரு சிறு போராட்டம் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. கொக்கிகள் இருந்தால், கண்ணுள்ள ஓரங்கள் கிழிந்து போயிருக்கின்றன. கண்ணிருந்தால் கொக்கிகளில்லை!

படபடவென்று அவைகளும் நீர்த்துளிகளுமாக மோதிக் கொள்ள, கொண்டையூசி வளைவுகளில் ஏற இயலாமல் வழுக்கி வழுக்கிப் பின்வந்து முன்னேறுகிறது வண்டி...

சுமதி பைக்குள்ளிருந்த சால்வையை எடுத்துப் போர்த்திக் கொள்கிறாள். கறுப்பில் சிறுசிறு பூக்கள் தைத்த சால்வை.

"இதை எங்கே வாங்கினீர்கள் சுமதி தாயி?"

"இது பிரபாதேவி கொடுத்தார். அஸ்ஸாமில் நெய்தது என்று நினைக்கிறேன்."

பிரபாதேவி யாரோ? சுமதி தாயி நாட்டுக்குச் சுதந்தரம் கிடைத்த பிறகு, முதல் அரசியல் தேர்தலில் நிற்கவில்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் நின்று வெற்றி பெற்று ஐந்தாண்டுக் காலம் மாநில சட்ட மன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறாள். அடுத்த தேர்தலில் வெற்றி பெறவில்லை. பிறகு தேர்தலுக்கே நிற்கவில்லை. பதவிக் காலத்தில் தொடர்புகளும், நட்பும் நிறைய இருந்திருக்கும்.

"மஞ்சூரு... மஞ்சூரு...!"

கோட்டும் தலைப்பாகையுமாக, சிறிது மழை பெய்த குளிர்ச்சியில் பளிச்சென்று காணும் பச்சைகளிடையே மனிதக் கும்பல் குதிரைப் பந்தயத்துக்கும் திரைப்பட விழாவுக்கும் போகத் துடித்துப் பஸ்ஸை நெருங்குகிறது.

"பூக்கூடையைக் கீழே இறக்குங்கப்பா!" என்று ரங்கன் குரல் கொடுப்பது யார் செவிகளிலும் விழவில்லை. கூட்டம் அதிகம் தான். ஏழு பேர்களை அதிகமாகக் கீழே நடக்குமிடத்தில் உட்கார ஏற்றிக் கொள்கிறான் கண்டக்டர். பிறகு தேநீரருந்தச் செல்கிறான். துரை ஆவி பொங்கும் தேநீர் தம்ளர் இரண்டை ஏந்திக் கொண்டு வருகிறான்.

"என்ன இது? நாங்க கேட்கவில்லையே?"

"கேக்காம போனா நான் வாங்கிவரக் கூடாதா?"

"அதுசரி..." என்று சுமதி புன்னகையுடன் வாங்கிக் கொண்டு யமுனாவிடம் ஒன்றைக் கொடுக்கிறாள்.

"முதலில் ராம்ஜியின் லட்சியம், இந்த மலைக்காடுகளில் காந்திஜியின் ஊருளி ஆசிரமத்தைப் போல ஒன்று அமைத்து இயற்கையின் வைத்திய சேவை செய்ய வேண்டுமென்பது தான். பிறகு அவரே சல்ஃபா மருந்துகள், ஊசி வைத்தியம் எல்லாம் செய்ததை நானே முன்பு ஐம்பத்தெட்டில் வந்த போது பார்த்தேன். தேநீரைக் கண்ணெடுத்துப் பார்த்திராத ருக்மிணி பாயி, மூன்று நேரம் தேநீரருந்தியதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்..."

"இங்கே வாழ்க்கை முறையே சோதனையாக வாழ்ந்து பார்ப்பதுதானே சுமதி தாயி?"

"நம் ஜனநாயகம் - அல்ல மக்களாட்சியைப் போல..." என்று சிரிக்கிறான் துரை.

"ஆமாம். பரிட்சையில் தோல்வியும் வரலாம் என்பதற்கு இதுவே அத்தாட்சி."

"நம் ஜனநாயகம் தோல்வி என்று சொல்கிறீர்களா என்ன?" என்று யமுனா கேட்கும் கேள்வி வேகமாக வந்து தாக்குகிறது.

"பின்ன, இது வெற்றியாக்கும்?"

"சந்தேகமில்லாமல், முதல் முதலில் உலகிலேயே பலாத்காரத்தில் மட்டும் நம்பிக்கை கொண்ட ஒரு கட்சி ஜனநாயக முறைத் தேர்தலில் பதவிக்கு வந்திருப்பது இந்த நாட்டில்தான். பல்வேறு இன மத மொழிக் கலப்புள்ள புதிய விடுதலை பெற்றதொரு நாடு என்பதை மனக் கண்ணில் நிறுத்திக் கொண்டு வெற்றியா தோல்வியா என்பதை நீங்கள் ஆராய்ச்சி செய்யுங்கள்!"

"அடேயப்பா! யமுனாவுக்கு எத்தனை ரோசம் வருகிறது. கட்சி மாறுவதும், அரசுகள் கவிழ்வதும், முட்டையடிப்பதும் ஜனநாயகத்தின் மாபெரும் வெற்றியானால் வைத்துக்கொள்..."

சுமதியின் குரலில் நகையின் இழை மாறவில்லை.

"அது, இத்தனை பெரிய ஒரு அமைப்பில் ஜனநாயக உரிமையினால் ஏற்பட்ட ஒரு வண்ணம். அதனால் ஜனநாயக உரிமை வெற்றியில்லை என்று எப்படிச் சொல்ல முடியும். குருடனாக இருந்த மகன் கண் பெற்றதால் நாள்தோறும் சினிமா பார்த்துக் கெட்டுப் போகிறான். அதனால் அவனுக்குக் கண் கிடைத்ததே தப்பு என்று ஒரு தாய் சொல்வாளா? அடங்கி ஒடுங்கிக் கிடந்த எல்லாச் சக்திகளும் ஆசைகளும் அந்தக் கண்களைப் பெற்றதனால் விழித்துக் கொண்டிருக்கின்றன. இதைச் சமாளிக்க வழிகாட்டி அழைத்துச் செல்ல நல்ல தலைவர்கள் வேண்டும்."

"அதைச் சொல்லுங்கள் ஒப்புக் கொள்கிறேன்..."

"அதுசரி; அந்த நாட்களில் தலைவர்கள் தன்னலமற்ற தியாகத்தினாலும் நாட்டுப் பற்றினாலும் எளிய மக்களும் தரம் உயர வாழ வேண்டும் என்று மெய்வருந்தச் சேவை செய்ததினாலும் உருவானவர்கள். இந்நாட்களிலோ கூட்டங்களாலும் கோஷங்களாலும் பூமாலைகளாலும் பத்திரிகைகளாலும் உருவாக்கப்படுகிறார்கள். உண்மையான தியாகிகளுக்கும் தொண்டர்களுக்குங் கூட இந்நாட்களில் இந்த விளம்பரங்கள் இல்லையேல் எடுபடவில்லை. இதனால் கையில் பணமுள்ளவன் மற்றவர்களை விலைக்கு வாங்கிச் சாதித்துக் கொள்கிறான். மிருக வலிமை கொண்டவன் பணக்காரனை வெருட்டி மிரட்டி வன்முறையில் அவனை விலைக்கு வாங்குகிறான்..."

"இது ஏன் இப்படி ஆயிற்று?"

"என்னைக் கேட்டால் நான் என்ன சொல்லட்டும்? நான் தலையுமில்லை; பணமும் கிடையாது. இந்தக் கால இளைஞரின் ஆர்வத்தைத் தூண்டிவிடும் சாமர்த்தியமுமில்லாத பத்தாம் பசலி..."

"ஏனிப்படி அலுத்துக் கொள்கிறீர்கள்? நீங்கள் அடுத்த முறை தேர்தலுக்கு நிற்கையில் நான் பிரசாரம் செய்ய வரேன் பாருங்க; போஸ்டர் போடணும் - அதில் தான் வெற்றியே அடங்கிக் கிடக்கு; என்ன சொல்றீங்க யமுனா?" என்று கேட்கிறான் துரை.

யமுனா வரிவரியாகக் காய்ந்து கிடக்கும் விளைநிலச் சரிவுகளைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். முகத்திலே உற்சாக மலர்ச்சிக்கு மாறாகத் தீவிரம் குடி கொண்டிருக்கிறது.

அத்தியாயம் - 2

ஜோசஃப் முன்னதாகவே வந்து பஸ் நிற்குமிடத்தில் அவர்களுக்காகக் காத்து நிற்கிறார். முடியில் பாதிக்குப் பாதியாய் வெண்ணிற இழைகள் அடர்த்தியான கிராப்பில் பங்கு கொண்டிருக்கின்றன. சிறிய ஹிட்லர் மீசை கருப்பாகவே இருக்கிறது. விழிகளின் கூர்மை மூக்குக் கண்ணாடியிலும் தெரிகிறது. அந்த நாட்களில் ஜயப்பிரகாஷ் அச்சுத பட்டவர்த்தன் கோஷ்டியில் இருந்தவர் ஜோசஃப். ஜயப்பிரகாஷ் தீவிர அரசியலை உதறிச் சர்வோதயத் தொண்டுக்கு வழிகாட்டிய போது, ஜோசஃப் ராம்ஜியின் சேவாசிரமத்தில் பங்கு பெற வந்தார். அப்போது இந்த ஆசிரமம் கூடலூர்ப் பக்கம் அமைந்த இயற்கை வைத்திய இல்லமாகத் தானிருந்தது.

யமுனா சிறு வயசுக் குழந்தையாக அவருடைய தோளிலும் மடியிலும் முதுகிலும் ஏறி விளையாடியவள். பின்னர் அவள் கோவை நகரில் படிக்கச் சென்று விடுதியில் இருந்த நாட்களில் காந்திய நெறிமுறைகளுடன் இயங்கிய அந்தப் பள்ளி விடுதியில் இவளைப் பார்க்க அடிக்கடி இந்த அம்மாவன் தாம் வருவார். குடைப்போன்று அமைக்கப் பெற்ற அந்தப் பார்வையாளர் கொட்டகையில், கதர்ச் சட்டையும் கையில்லா உட்கோட்டும் மூக்குக் கண்ணாடிக்குள் அன்பு தவழும் விழிகளுமாக நிற்பார். "எந்தா? குட்டிக்கு எந்து வேணும்?" என்று கேட்டவண்ணம் மடியிலிருந்து இரகசியமாக ஒரு பொட்டலத்தை எடுத்து அவள் கைகளில் வைப்பார்.

அதில் எண்ணி இருபது நேந்திரங்காய் வறுவல் வில்லைகள் இருக்கும். ஆசிரமம் போன்ற அந்த விடுதியில் வறுவல் பொரியல் போன்ற தீனிகள் செய்யமாட்டார்கள். ஜோசஃப் கோவைக்கு வரும்போது நூறுகிராம் வறுவலை வாங்கிக் கொரித்துக் கொண்டு, ஊர் முழுவதும் சுற்றுவார். அதில் அவளுக்கு இருபது துண்டுகள், தங்கமொகரக்கனைப் போல் பங்கு கொண்டு வருவார்.

அன்று போல் இன்றும் ஜோசஃப் அம்மாவன் நிற்கிறார். அந்த வெயிஸ்ட் கோட், கதர் ஜிப்பா, வேஷ்டி...

"அம்மாவன் நேந்திரங்கா வறுவல் கொண்டு வந்திருக்கிறாரோ?" என்று சிரித்துக் கொண்டே யமுனா இறங்குகிறாள், முகம் ரோஜா மலராக மாறி இருக்கிறது.

"ஆஹா... ஹ...! வறுவலோ வறுவல், ஆன வெல பின்னே, குடிக்கான் வெள்ள மில்ல, குஞ்ஞே!"

"நாம் ஒரு பிளாஸ்டிக் கூஜாவில் கொண்டு வந்திருக்கலாம். சொல்லக்கூடாதா யமுனா?" என்று துரை சிரிக்கிறான். பளீரென்று பற்கள் கவர்ச்சியாக இருக்கின்றன.

"சுமதி தாயி ஏன் பேசவில்லை?"

"பேச என்ன இருக்கிறது? காந்திஜி இருந்தால் இப்ப என்ன சொல்வார்னு நினைச்சேன்."

"ஓ... அவர் தான் இல்லையே, வண்டி நிற்கிறது; வாருங்கள்..."

கருநீல வண்ணத்தில் முன்னும் பின்னுமாகப் படகு போல் நீண்ட சுகமாக வண்டி.

"இது யார் வண்டி?" என்று கேட்கிறாள் யமுனா.

"என்ன கேள்வி? இந்தக் கோடி கோடி அணைத் திட்டத்தில் பெரியவர்களான பலரில் ஒரு ஏழைக் குடிமகனுடைய வண்டி. ஏறிக்கொள்..."

அவர் சுமதி தாயியைப் பொருள் பொதிந்த பார்வையுடன் நோக்குகையில் ரங்கன் மாலைப் பெட்டியுடன் விடு விடென்று குன்றில் ஏறிச் செல்கிறான்.

"இந்தக் கதரும் பையும் காரும் பொருத்தமாக இல்லையே என்று பார்த்தேன்."

"காந்திஜியே பிர்லாவின் 'பாக்கார்டில்' பிரயாணம் செய்திருக்கிறார். ஆறுதல் கொள்..." என்று சுமதி கிண்டுகிறாள்.

கார் இழிந்து வளைந்து சாலைகளில் பூத்து மின்னும் விளக்கு வரிசைகளினூடே ஏறி இறங்கி அவர்களைக் கீதா மஹாலுக்குக் கொண்டு செல்கிறது.

ரங்கன் அதற்குமுன் காட்சி நடக்கும் அரங்குக்குச் சென்று விட்டான்.

அவனை அழைத்தாலும் ஏறியிருக்க மாட்டான். "அது வழியிலே நின்று போச்சின்னா? ரெண்டெட்டில் குறுக்கே ஏறினா கீதா மஹால்" என்பான். 'சூதுவாதற்ற, எளிய, நேரான, பொறுப்புள்ள... செயலில் நிறைவு காணும் குடிமகன். இவனை விட எந்த வகையில் நாமெல்லாரும் மேம்பட்டவர்கள்' என்று எண்ணிக் கொண்டே யமுனா அணியறைக்குள் நுழைகிறாள்.

அணியறைக்குள் மேற்பர்வை செய்யத் தேவையில்லாத கோலாகலம். அவர்கள் முன்பொரு முறை ஆதிவாசிகள் சம்மேளன்ம் நடந்தபொழுது உதகை நகர் வந்து கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த முழுநேர நிகழ்ச்சி புதியது. உற்சாகமும் கலகலப்பும் நிரம்புகிறது.

"என் பொட்டு சரியாக இருக்கா, அக்கா?"

"பின் போட்டு விடுங்கக்கா?"

குழந்தைகள் அவரவரே ஒருவருக்கொருவர் வேடம் பூண உதவி செய்து கொள்ளப் பழக்கி இருக்கின்றனர். தொட்டால் ஒட்டும் பொய்ச் சாயமினுக்கு கிடையாது. பால பூர்வமான பேச்சு நடிப்புத்தான் சிறப்பு.

பாரதத் தாயாக வேடமணிந்திருக்கும் பார்வதி இருளர் குலப்பெண். கரிய மினுமினுத்த முகத்தில் அவள் மட்டும் ரோஸ் பவுடரையும் ஜிகினா தூளையும் போட்டுக் கொண்டிருக்கிறாள். ஜிகினா மின்னும் முடி; சந்தன வண்ணத்தில் பச்சைக் கரையிட்ட சேலை; வெள்ளை சோளி, மூவண்ணக் கொடி கையில்.

"நல்லாயிருக்காக்கா!"

"பிரமாதம் போ!"

சிறுவன் மோகன், சரிகைத் தொப்பியும் கோட்டுமாக நிற்கிறான் முருகி, புத்லீபாய் வேடத்தில் பாபா காந்தி அவனுடைய அண்ணன் ரங்கன் - மீசை அற்புதம்!

"அக்கா, எல்லாரையும் ஒரு 'க்ரூப்' போட்டோ எடுக்கணும். ஏற்பாடு செய்யுங்கக்கா" என்று கூறும் பிரேமா ஆசிரியை. படகர் வகுப்பைச் சேர்ந்தவள்.

இப்போது அணியறையில் புதியதொரு சிரிப்பலை பரவுகிறது.

சத்தியத்தையும் கொல்லாமையும், இல்லறத்தையும் துறவறத்தையும் அரசியலையும் அன்பு நெறியையும் அன்றே தம் குறளில் பொதிந்து தந்த தெய்வப் புலவர் தோன்றுகிறார்.

"இன்ஜினியர் ஸாரே? அஸ்...லாயி!"

துரை தன் சடை முடியைச் சற்றே விலக்கிவிட்டுச் சிரிக்கிறான்.

"அப்படியா? இது... (சடைமுடியைக் காட்டி) ரொம்பப் பெரிசில்லை?"

"ஆமாம், அதற்கேற்ற உடலில்லை உங்களுக்கு!" என்று உரைக்கிறாள் யமுனா.

"தொப்பையில்லை..." என்று துரை மீண்டும் சிரிக்கிறான்.

"தப்பு. தெய்வப் புலவர் நீட்டலும் மழித்தலும் வேண்டாமென்று சொன்னவர். அவருக்குச் சடாமுடி, தாடி எல்லாம் இருக்குமா என்பது ஐயத்திற்குரியது. ஆனால் தொந்தி நிச்சயமாக இருக்காது. அருளும் அறிவும் ஒளிரும் அந்தப் புலவர் வற்றிச் சுருங்கிய மெய்யுடன் தான் தோற்றம் தருவார்..." என்று யமுனா நிறுத்துகிறாள்.

"அது சரி; இப்ப என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் இந்த வேஷம் போடவா, வேண்டாமா?"

"சே, விடக்கூடாது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே அன்பையும் அறத்தையும் கொல்லமை நெறியையும் அவர் அருளியிருப்பதைக் காட்ட வேண்டும். இந்த முடி, தாடி இரண்டையும் அளவைக் குறைத்தால் நல்லது; இல்லையா அம்மாவா?"

"சர்தார்ஜி மாதிரி இருக்கலாம். வள்ளுவர் வட நாட்டாரா என்ற பிரச்னையைக் கிளப்பலாமானால் செய்யட்டும்..."

அப்போது அணியறை வாயிலிலிருந்து வந்த ஒரு பெண் யமுனாவின் முழங்கையைப் பற்றுகிறாள்.

"உங்களைப் பெரிய வீட்டம்மா கூப்பிடுறாங்கக்கா ஹால்ல கூட்டம்; ரொம்பக் கூட்டம்..."

"யாரு, கமலம்மாவா? வந்திருக்காங்களா..."

"ஆமாம். சேர்லே உட்கார்ந்திருக்காங்க..."

அரங்கத்தில் கூட்டம் நெருக்கித் தள்ளுகிறது. ரங்கன் பெரிய முண்டாசும் கோட்டுமாகக் கம்பீரமாக மேடையில் நின்று "சைலன்ஸ்!" என்று கத்துகிறான். உடனே ஒரு குபீர்ச் சிரிப்பு கூரையை முட்டுகிறது. டிக்கெட்டில்லாத காட்சியாதலால் பெண்களும் குழந்தைகளும் நெருக்கி வழிகின்றனர். யமுனாவுக்கு எத்தனையோ முகங்கள் பரிச்சயமானவை; புன்னகைகள் அவளை விசாரிக்கின்றன. ஓரமாகச் சுவரோடு ஒட்டி அமைந்த நாற்காலி வரிசை ஒன்றில் காஷ்மீரச் சால்வையும், நூலிழைகளாய் நரைத்த கூந்தலுமாகக் கமலம்மா கை காட்டுகிறாள்.

"நமஸ்தே, வாங்க, நீங்க மதறாஸ் போயிட்டீங்களோன்னு நினைச்சேன். ரொம்ப சந்தோஷம்..."

"அடுத்த வாரந்தான் போகிறேன். ராத்திரிக்கு இங்கே தானே தங்குவாய்?"

"ஆமாம். இவங்கல்லாம் ஸ்கூல் ஹாலில் தங்கிடுவாங்க; நானும் கூட..."

"வேண்டாம். நீ வாயேன்; அங்கே தங்கலாம்!"

"சரி..."

"அம்மா வரலே? ஏம்மா, அப்பாவைக் கூட மெள்ள வண்டியில் சாய்த்தாற் போல் வச்சுக் கூட்டி வரக் கூடாதா?"

"வரலாம். அவருக்கு வரவேணுமின்கிற ஆர்வமே இல்லாமப் போயிட்டுதே! அம்மாவை அவர் போகச் சொன்னார். ஆனால், அம்மா அப்படி வரமாட்டாளே?"

"எனக்கு ஊருக்குப் போகுமுன்ன அங்கே வரணும்னு. காரைப் பையன் எடுத்திட்டுப் போயிடறான்."

கமலம்மா இதைக் கூறும் போது குரல் தழுதழுப்பது தெரியாமல் மறைத்துக் கொள்கிறாள். ஆனால் பயனளிக்கவில்லை.

"நீ வாம்மா; நாடகம் முடிஞ்சி நான் காத்திருப்பேன்!"

தொண்டையில் சொல் இடறி விழுவதைப் போலிருக்கிறது.

ஜோசஃப் கூட்டத்தை வரவேற்று, காந்தியடிகள் தம் வாழ்க்கையின் வாயிலாக விளக்கிய லட்சியங்களைப் பற்றிச் சொல்ல முயலுவதே இந்தக் கலை நிகழ்ச்சிகளின் நோக்கம் என்று எடுத்துரைக்கிறார். அன்பாலும், அருளாலும் சிறுமைகளை ஒழிக்கப் பாடுபடுவதே இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதன் பொருள். பாரத நாட்டின் பண்பாடாய் வந்த அஹிம்சையும் சத்திய நெறியும் நைந்து, வன்முறையிலும் ரத்தப் புரட்சியிலும் இளம் சமுதாயம் நம்பிக்கை வைக்கும் அபாயத்தை உணர்ந்து, அதைப் போக்கும் வழிகாண இந்த நூற்றாண்டைக் கொண்டாட வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்துகிறார்.

யமுனா அரங்கத்து மூலையில் அவரைப் பார்த்துக் கொண்டு சிந்தனை ஓட்டமே நிலைத்து விட்டாற் போல் நிற்கிறாள். உற்சாகக் கலகலப்பை எல்லாம் எங்கோ மலை முகட்டில் மிதந்து வரும் கரிய நிழல் அழித்து விடுவதைப் போல் ஒரு பிரமை.

பாரததேவி மேடையில் தோன்றுகிறாள். அவள் தம் புதல்வர் புதல்வியர் அவள் முன் சத்தியப் பிரதிக்ஞை எடுத்துக் கொள்கின்றனர். வள்ளுவர் தம் குறளில் காந்தியத்தைக் காட்டுகிறார். சின்னஞ்சிறு மோகனின் உள்ளம் அஹிம்சை நெறியிலும், அன்பு வழியிலும் அருட்கனி கொய்யப் பக்குவமடைவதை விளக்கும் காட்சிகள் மேடையில் உயிர்க்கின்றன.

"அடாடா? இத்தனையும் இருளர் மக்களா? நம்ப முடியலியே!"

"ஆசிரமம் இருக்கு இருக்குன்னு சொல்லுவாங்க. என்ன அழகாகத் தமிழ் பேசி, பாடி...!"

பாராட்டுரைகள் மலர்ச் சரங்களாய் உள்ளத்தை மகிழ்விக்க வருகின்றன. நன்றி கூறுவது அவள் பொறுப்புத்தான். ஆனால் துரையிடம் வந்து, "உங்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். எனக்காக நீங்க நன்றி சொல்லி விடுங்களேன்; கொஞ்சம்!"

"ஏன், பரவாயில்லை. நீங்க நல்லாப் பேசுவீங்க!"

"உங்ககிட்ட புகழுரை கேட்கவா வந்தேன்? எனக்காகப் பேசமாட்டீர்களாக்கும்?"

துரைதான் நன்றி கூறுகிறான். கிடைத்த சந்தர்ப்பத்தில் யமுனாவின் ஆற்றலைப் புகழ்ந்து வைக்கிறான்.

அவளுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. "இதெல்லாமா சொன்னேன்?"

அவனுடைய கண்களும் பற்களும் போட்டி போட்டுக் கொண்டு ஒளிருகின்றன.

கூட்டம் கலையுமுன் யார் யாரோ யமுனாவைச் சூழ்ந்து கொள்கின்றனர்.

சுமதி தாயி வெண்பட்டுத் துகில் அரைத் தலை மூட இடது மூக்கில் ஒற்றை நட்சத்திரம் மின்ன, ஓர் அம்மையாருடன் வாழ்த்துகிறாள்.

"மாதாஜி ராம்ஜியின் மகள்..."

"பேடீ...!" என்று அந்த அம்மையார் அவளைத் தழுவிக் கொள்கிறாள். பழம் பெரும் சோஷலிசவாதியான ஸின்னாஜியின் மனைவியாம் மாதாஜி. அவளுடைய தந்தை அந்தப் பழைய நாட்களில் காந்தியடிகளுடன் சம்பாரன் சத்யாக்ரகத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவர்களுடைய இல்லத்தில் தான் தங்கினாராம். பாரத நாடு விடுதலையடைவதைப் பார்க்காமலே கண்களை மூடிவிட்டார் ஸின்னாஜி. ஒரு மகள், மகன், அம்மையார் எல்லாருமே அரசியலில் பங்கு பற்றியவர்கள். மருமகன் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தான்.

எல்லாச் செய்திகளையும் மாதாஜியே மூச்சுவிடாத கீச்சுக் கிரலில் அப்பட்ட ஹிந்தியில் தெரிவிக்கிறாள். அவர்களுக்கெல்லாம் விடை கொடுத்துவிட்டு, சிறுவர் சிறுமியருக்கு உற்சாகமான பாராட்டுகளை வழங்கிவிட்டு அவள் திரும்பும் வரையிலும் கமலம்மா வண்டியில் அமர்ந்திருக்கிறார். ஜோசஃப் கதவடியில் நிற்கிறார்.

"மன்னிக்கணும். நீங்க ஏம்மா காத்திருக்கணும்? முன்ன போயிட்டா நான் வர மாட்டேனா..."

"நீங்களும் வரீங்களா அம்மாவா?"

"இல்ல நீ போயிட்டு வா யமு. காலையிலே வரேன்..."

வண்டி ஓட்டி, கதவை அறைந்து சாத்துகிறான்.

கமலம்மாவின் கை மென்மையாக அவள் தோளில் படிகிறது.

"வெகு அழகாகப் பண்ணிட்டேம்மா. எனக்குச் சொல்லவே தெரியலே. இத்தனை குழந்தைகள் மனசிலும் நீ சொல்ல வந்தது பதிஞ்சிருக்கும்" குரல் தழுதழுக்கிறது. கமலாம்மா ஏன் இவ்வளவு நெகிழ்ந்து போகிறார்!

சுதீர் மேநாடு சென்று ஏதோ ஒரு தொழிற் பட்டத்தையோ நிர்வாகப் பயிற்சியையோ பெற்று வந்து, தந்தை ஆலமரமாகப் பெருக்கிய வர்த்தக நிறுவனங்களை ஒரு குடைக்கீழ் ஆண்டு கொண்டிருந்தால் கமலம்மா இப்படி அற்பத்துக்கு நெகிழ்ந்து போவாரோ? இந்தச் சேலையின் மீது நலிந்த கையைப் போட்டு அன்பை இழைய விடுவாரோ?

வாழ்க்கையின் வண்மையில், எதிர்காலத்தில் நம்பிக்கை இல்லாதவர் தாம் வன்முறைப் புரட்சியில் நம்பிக்கை வைப்பார்கள். சுதீருக்குக் கண் விழிக்கும் போதே வாழ்க்கை ஒளிமயமான வண்ணக்குடை பிடித்திருக்கிறது. ஏன் இப்படி? ஏன்... ஏன்?

வண்டி சாரிங் கிராஸ் வளைவுப் பாதையில் ஏறி மேலே செல்கிறது. வாயில் பச்சைக் கம்பளப் பரப்பா, ரோஜாப் பூக்களா ஒன்றும் தெரியவில்லை. வண்டி ஓட்டி, வண்டியை நிறுத்திக் கொண்டு தான் இறங்கிக் கதவைத் திறக்கு முன் யமுனா முந்திக் கொள்ள முயன்றும் பயனில்லை. வீட்டு முன் அறை விளக்கைச் சமையற்காரர் போடுகிறார். கண்ணாடிக் கதவு திறந்து கொள்கிறது.

மெத்தென்ற கம்பள விரிப்பும், பளபளக்கும் பட்டைக் கண்ணாடிக் குடுவையில் 'ஆஸ்டர்' பூக்களும், குளுமையான இளநீல ஒளியும்...

"உள்ளே வாம்மா யமு...? சுப்பையா, எனக்கும் பாலை சூடாக்கி விட்டு யமுனாவுக்குத் தட்டுவை!" என்று பணிக்கிறார் கமலம்மா.

சோடா பாட்டில் கண்ணாடிக்குள் தெரியும் கோலிகள் போன்ற விழிகளுடன் அவர்களைப் பார்த்து விட்டு வணக்கத்துடன் உள்ளே செல்கிறார் சுப்பையா.

அத்தியாயம் - 3

யமுனாவுக்கு நல்ல பசி. இந்த மாளிகை அவளுக்குப் புதிதல்ல. குளிர்ந்த நீரை வாளியில் நிரப்பி வைத்திருக்கிறான் சுப்பையா. அவள் முகத்தைக் கழுவிக் கொண்டு உணவு மேசைக்கு முன் வந்தமருகிறாள்.

களைக் கோசைக் கீறி வேக வைத்து மிளகுப்பொடி தூவி வைத்திருக்கிறான். பூக்கோசும் காரட்டுமாக சாம்பார். சன்ன அரிசிச் சாதத்தை ஆவி பரக்கத் தட்டில் வடிக்கிறான்.

"இந்த வருஷம் மார்க்கெட்டில் களைக் கோசே இல்லை. நேத்து மரியன் கொஞ்சம் கொண்டு வந்தான். சுதீருக்குத்தான் ரொம்பப் பிடிக்கும்..."

'சுதீர்' என்ற ஒலியைக் கேட்கையிலேயே யமுனாவின் உடலில் ஒரு சிலிர்ப்பு பரவுகிறது. கமலம்மாவின் விழிகள் அவளிடம் நிலைக்கின்றன.

"...அங்கே அவனை பார்க்கலேம்மா?"

"இல்லையேம்மா?"

"பின்ன... கார் அந்தப் பக்கம் தானே கொண்டு போனதாக டிரைவர் சொன்னான்? பாதி வழி போய் இவனை இறக்கி விட்டானாம்?"

"வந்தாரோ என்னமோ? அங்கே... எதற்கு வருகிறார்?"

"ஏம்மா, நீ இப்பல்லாம் அவனோடு பேசறதில்லையா?"

கமலம்மாவின் உதடுகள் உணர்ச்சியை அடக்க முடியாமல் துடிப்பது நன்றாகத் தெரிகிறது.

"சுப்பய்யா? அப்பளம் பொரிக்கலியா?"

"வேண்டாம்மா, இதுவே அதிகம்..." என்று குறுக்கிடுகிறாள் யமுனா.

"சரி, வடுமாங்காய் கொண்டு போடு சுப்பய்யா!"

பவானி ஆற்றின் கரையில் காட்டுமா என்றோர் இனம் உண்டு. குத்தகைகாரர்கள் சலகை சலகையாக இறக்கிக் காரமடைச் சந்தையில் கொண்டு போய் விற்பார்கள். அது காய்க்கோ பழத்துக்கோ உதவாது. ஆனால் வடுவாக இறக்கி உப்பிலிட்டால் அமுதமாக இனிக்கும்.

குருடன் கிடைத்த நூலைப் பற்றிக் கொண்டு நடப்பது போல் மனசை எதை எதையோ நினைத்து ஓட விட்டாலும், சரடு அறுந்து போகிறது.

சுதீர்...சை. அவள் எதற்காக இங்கு வந்தாள்? அங்கு குழந்தைகளுடன் பள்ளிக் கொட்டகையில் முரட்டுக் கம்பளத்தைப் போர்த்துக் கொண்டு முடங்கியிருக்கலாம். தன் வெற்றிக் கனவுகளில் திளைக்கப் பேசிக் கொண்டு உறங்கியிருக்கலாம். இங்கே தோல்வியை நினைக்க வருவாளோ?

கமலம்மாவின் அறையில் இன்னொரு கட்டில்; மெத்தென்ற கம்பளம் நான்காக மடித்துச் செருகப்பட்டிருக்கும் படுக்கை. தலையணை உறையில் பூநூல் வேலைப்பாடு கண்களைக் கவருகிறது. கமலம்மா வெகு நேர்த்தியாகப் பூநூல் வேலை செய்வார். இரண்டு கிளிகள் மேலும் கீழுமாகச் சிவந்த மூக்குகளில் 'பீஸ்' என்ற ஆங்கில எழுத்துக்களை - அமைதி என்ற பொருளுடைய சொல்லை - கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.

"இது எப்போது போட்டீர்களம்மா? இந்த டிசைன் வெகு அழகு!"

"நூல் கோத்து ஊசி குத்தினால் கண்ணில் தண்ணி கொட்டுது. ஆனாலும் இப்பல்லாம் ராத்திரி கண்ணைக் கொட்டினால் தூக்கமே வரதில்லே. இப்படி முழங்கையை ஊனிண்டு உக்காந்திருக்கமேன்னு ஒண்ணு தொடங்கினேன். அஞ்சு மாசம் ஆச்சு அது போட. மனசு தான் சாந்தி கொள்ளலே..."

பீஸ்... பீஸ்... சாந்தி... சாந்தி!

பிரார்த்தனையின் முடிவில் தந்தை சாந்தி சொல்வது அவளுடைய செவிகளில் ஒலிக்கிறது.

ஓம் சாந்தி : ஆப சாந்தி : அந்தரிக்ஷம் சாந்தி :
வனஸ்பதய சாந்தி : சாந்தி : சாந்தி...

அலைகள் அடங்கி, அடங்கி, அடங்கி, அடங்கி...

அந்த சாந்தி, அமைதியை, இந்த இரு கிளிகள் மூக்கில் வைத்துக் கொண்டிருக்கும் காட்சியினால் கொண்டு வர முடியவில்லை. இரண்டு கிளிகள் ஜோடி - ஆணும் பெண்ணும் தானா?

"கமலம்மா! அமைதிக்குப் புறாவை அல்லவோ பறக்க விடுகிறார்கள்? நீங்கள் கிளியைப் போட்டீர்களே?"

"புறாவுக்குப் பளிச்சென்று பச்சை வண்ண உடம்பும் சிவப்பு மூக்கும் கொடுக்க முடியுமாம்மா? பூ நூல் வேலைக்குப் பூக்களும் கிளிகளும் தான் அழகாக எடுப்பாக இருக்கும். வானமும் கடலும் நாரைகளும் ஓவியம் தீட்ட நன்றாக இருக்காமலா இருக்கும்" என்று மொழிகிறார் கமலம்மா.

அமைதியையும் விடுதலையையும் ஆனந்தத்தையும் புறாக்களைப் பறக்க விடுவதன் மூலம், ஒரு அடையாளம் போல் (Symbolic) மெய்ப்பிக்கின்றனர். கூட்டில் அடைத்த கிளியைப் பறக்க விடக் கூடாதா?

"ஏன் கூட்டில் அடைத்த கிளியைப் பறக்க விடுவதில்லை கமலம்மா?" கமலம்மா நெற்றிச் சுருக்கங்கள் ஆழமாகக்கீற்றிட யோசனை செய்கிறார். அவர் உண்மையில் யோசனை செய்கிறாரா? இல்லை அவளையே பார்க்கிறாரா?

"ஏன் கமலம்மா?"

"எனக்குத் தெரியலியேம்மா?"

"ஒருகால் சுதந்தரத்தின் ஆனந்தத்தையும் முழுப் பயனையும் கிளியினால் உயரப் பறந்து எடுத்துக் காட்ட முடியாதென்றிருக்குமோ? மனிதன் சொல்லிக் கொடுத்ததைச் சொல்லிக் கொண்டு கூரிய மதியின்றி, கூண்டுக்குள் இருக்கத் தகுதி தான் என்று மழுங்கிக் கிடப்பதாலிருக்குமோ?"

"என்னமோ? அதனால் தான் பெண்களைக் கிளிகளுக்கு ஒப்பாக்குகிறார்கள்; கிளிக்குச் சுதந்தரம் கொடுப்பதையும் பலர் விரும்பவில்லை..." என்று தனக்கே உரிய வகையில் பொருள் காண்கிறார் கமலம்மா.

"எப்படியானாலும் இந்த மாதிரி நன்றாக இருக்கிறது கமலம்மா. சுதந்தரம் வேண்டும்! கிளிகளுக்குச் சுதந்தரம் வேண்டும்! ஆனாலும் அந்தச் சுதந்தரம் ஒரு வரையறைக்குள் செயல்பட வேண்டும்!"

யமுனாவின் குரலில் உற்சாகம் பொங்குகிறது. கமலம்மா உளம் நெகிழ்கிறார்.

"இந்த நாலு கோட்டு வரையறை இருக்கிறதே, கமலம்மா! இதற்கும் பொருள் இருக்கிறது, உங்களுக்கு நினைப்பிருக்கா கமலம்மா! சபர்மதி ஆசிரமத்தில் இருந்த போது, காந்திஜி, அப்பா எல்லோரும் தினமும் மாலையில் நடக்கப் போவார்களாம். சிறைச்சாலை மதில்சுவர் வரையிலும் போய்த் திரும்புவார்களாம். அப்பாவிடம் அந்த மதிலைக் காட்டி பாபுஜி, "சிறையில் இருக்கும் போது தாம் விடுதலையை இழந்து விட்டதாக நினைக்கிறோம். ஆசிரமத்தில் விடுதலையுடன் இருக்கிறோம். இந்த மதில் புறத்தே தெரியும் சுவர் அதை நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறது. ஆசிரமத்தில் இதைப் போல் புறச் சுவர்களில்லை. ஆனால் அகத்தே சத்தியம், எளிமை, தியாகம், அஹிம்சை ஆகிய நற்பண்புகளைச் சுவராக எழுப்பிக் கொண்டாலே நாம் விடுதலையின் முழு இன்பத்தையும் பயனையும் பெற முடியும்" என்பாராம். விடுதலை, தீய சக்திகளுக்கும் எழுச்சி கொடுத்து விடக்கூடும் என்பதை அவர் வலியுறுத்தி இருக்கிறார். விடுதலை என்பது வெறும் அரசியல் விடுதலை மற்றுமில்லை என்று கூறி இருக்கிறார். தனி மனிதனின் ஒழுக்க உயர்வினாலேயே ஜனநாயக அரசு வெற்றிகரமாகச் செயல்பட முடியும். இதை விடுதலை பெற்ற நாட்டின் அரசியல் தலைவர்கள் பிடியாகப் பற்றி இருந்தால் இன்று இப்படி ஒரு சீர்கேடு வந்திருக்குமோ?"

கமலம்மா பேசவில்லை.

"ஏன் கமலம்மா? நீங்கள் ஏதோ என்னிடம் பேச வேண்டுமென்று சொல்லி இங்கே கூட்டி வந்தீர்கள். நானே பேசிக் கொண்டிருக்கிறேனே?..."

அவர் கூரையைப் பார்க்கிறார்.

கண்களில் மளமள வென்று நீர் பெருகுகிறது.

"சே...சே... என்னம்மா இது...?

"ஒண்ணுமில்லே குழந்தை... நான் என்னவெல்லாம் நினைச்சிருந்தேன்! இந்த வீட்டில் நீங்கள் குடும்பம் பண்ண வரும் போது இதை எப்படியெல்லாம் அலங்கரிக்க வேணும்னு பைத்தியக்காரி போல் நாள் பூர கற்பனை செய்வேன். இப்ப... சாந்திங்கிற நினைப்பே வேம்பாப் போயிட்டது..."

"நினைக்கிறதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கையில் என்னம்மா இருக்கிறது? சுகத்துக்கும் துக்கத்துக்கும் இடைப்பட்ட ஒரு போராட்டந்தான் வாழ்க்கை. இரண்டையும் அமைதியாகக் கடப்பதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறதென்று அப்பா சொல்வார்." கமலம்மாவுக்குத் தன் முன் இருபத்து மூன்று வயசுக்குரிய அரிவையொருத்தி உட்கார்ந்திருப்பதாகத் தோன்றவில்லை. அநுபவம் வாய்ந்ததொரு மூதாட்டி இதம் கனிய அமர்ந்திருப்பது போல் தோன்றுகிறது.

"யமுனாம்மா, இவனைக் குடும்பத்திலிருந்தே ஒதுக்கினாற் போல் செய்துவிட்டார்கள். சொத்து, சுகம், பந்தம் எல்லாமே பிரிஞ்சாப்போல்தான். எஸ்டேட்டுக்கா போகிறான்? எஸ்டேட்டுக்கும் இவனுக்கும் சம்பந்தமில்லையென்றே ஒதுக்கி விட்டார்கள். வைக்கோற்பிரியில் பொறியை வச்சுக் கட்டுவார்களா? அவர்களைச் சொல்லியும் குற்றம் இல்லை. ஒரு வருஷமா ஒண்ணு மாத்தி ஒண்ணில் லாக்கவுட்டு, அடிதடி, சண்டை, கொலை. தான் பிறந்த குடிக்கே துரோகம் பண்ணினா எப்படி? அவனப்பா இதை எல்லாம் பார்க்காமப் போயிட்டார்..."

உள்ளூற மொட்டுவிடும் துயரத்தைத் திருகி எறிந்து கொண்டு யமுனா அசைவற்றிருக்கிறாள்.

"லண்டனுக்கும் அமெரிக்காவுக்கும் எத்தனை பையன்கள் போகவில்லை? இவன் மட்டும் படிக்கப் போனவன், என்னென்ன பேச்சுகளெல்லாமோ இறக்குமதி செய்து கொண்டு வந்தது என் கொடுமை..."

"அதெல்லாம் சும்மா, கொள்கையைப் பிடித்துக் கொள்ள இங்கே வழி இல்லையா கமலம்மா? வசதி இல்லாத குடும்பங்களில் வாழ்க்கை ஏமாற்றமாகப் போகும் போது இப்படி வன்முறைப் புரட்சிக் கொள்கைகளில் இறங்குவது நடக்கக் கூடியதென்றெண்ணினேன். இப்ப, அளவு மீறி வசதி வாய்ப்புக்கள் இருக்கும் போது, எந்த வகையிலேனும் விறுவிறுப்புத் தேட, இப்படியும் ஒரு கொள்கை வலையில் விழமுடியும்னு புரிகிறது. அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது..."

"என்னென்னமோ சொல்றாம்மா. இம்மாதிரி விறுவிறுப்பா புத்தி தீட்சண்யமாக இருக்கும் இளசுகளை, கட்சி வலைக்குள் கொள்கைகளைக் காட்டி இழுக்க பெரிய தலைகளெல்லாம் அன்றாடம் டீயில் ஒரு துளி கஞ்சாவையோ அபினையோ கூடக் கலந்து கொடுப்பாளாமே? தச்சு ராஜீவெல்லாம் சொல்றதுக. எனக்கென்ன புரிகிறது? கைநழுவிப் போவதுதான் தெரிகிறது..."

கமலம்மாவின் துயரம் நெஞ்சைத் திறந்து கொண்டு வருகிறது. யமுனாவுக்கு ஊமைக் காய்ச்சல் குபீரென்று வெளிக்கிளம்பி விட்டாற் போலிருக்கிறது.

"கமலம்மா, நீங்கள் ஒன்றுமட்டும் திடமாக நம்புங்கள், இவர்கள் கொள்கைப்படி நம் நாட்டில் புரட்சி வந்து சமமாக முடியவே முடியாது. இந்த வழியே தப்பு வழி. தப்பு வழியில் இறங்கியவர்கள் எப்படியும் ஒருநாள் நேர் வழிக்குத் திரும்பித்தானாக வேண்டும். நீங்கள் நிச்சயமாக நம்புங்கள்."

யமுனாவின் கண்கள் ஒளிருவதையே விடாய் தீர்த்துக் கொள்ளும் வறியனைப் போல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த முதியவள் விளக்கை அணைத்து நீல பல்பைப் போட்டுவிட்டு யமுனா படுக்கிறாள். கமலம்மாவும் கம்பளியை இழுத்து விட்டுக் கொண்டு தலையைச் சாய்க்கிறார்.

யமுனாவுக்குப் படுக்கை பொருந்தவில்லை. ஜன்னல் கதவுகளைச் சாத்தி இருப்பதால் போலும், மேலும் கம்பளியைப் போட்டுக் கொண்டதும் உடலின் குளிர்ச்சிக்கு அது இதமாக இல்லை. செவிமடல்கள், கண்களில் இலேசான வெம்மை. கம்பளியைத் தள்ளினாலோ உடலின் மேல் குளிர் ஓடுகிறது. ஆனால் உட்சூட்டை அந்தப் புறக்குளிர்ச்சி குறைத்து சமமாக்கவில்லை.

கண்களை மூடினாலும் உறக்கம் கொள்ளவில்லை.

"ராம்...ராம்...ராம்...ராம்...ராம்..."

உதடுகளை மட்டும் அசையச் சொல்லிவிட்டு நெஞ்சம் எங்கோ செல்கிறது.

"அவன் என்ன கொண்டு போகிறான்?"

"அரிசியும் கொஞ்சம் கிழங்குமாவும்."

"எங்கு கொண்டு போகிறான்? எதற்குக் கொண்டு போகிறான்? அவன் யார்?"

கேள்விகள் நாவரையிலும் வந்து தங்கி விடுகின்றன. அம்மா நிற்காமலே அப்பாவின் குடில் பக்கம் போகிறாள்.

"அம்மா!... அம்மா!..."

"சுதீர் அந்தப் பக்கம் எதற்கு நடமாடுகிறானாம்?"

முள்ளியாற்றின் அக்கரை அண்டை மாநிலம். ரங்கனின் அப்பன் அங்கே போய்க் குடித்துவிட்டு மதுவிலக்குச் சட்ட ஒழுங்கைக் காப்பாற்றுவான்.

கூப்பிடு தொலைவில் மின் நிலையம் எழும்பிக் கொண்டு இருக்கையில் இங்கு கிடைக்கும் பங்கீட்டு அரிசியை அரை வயிற்றைக் கால் வயிறாக்கி மீத்து, ஆற்றைத் தாண்டி அப்பால் இரட்டிப்புப் பட்டினி விலைக்கு விற்று வயிறு நிரம்பக் குடித்தவர்களை அவள் அறிந்திருக்கிறாள்.

'அம்மா இரட்டிப்புப் பட்டினி விலைக்கு விற்கிறாளா? அல்லது அந்தப் பாவப்பட்ட ஏழைகளுக்குப் பசித்தீ இருக்குமிடத்தில் புரட்சித் தீயை ஒரு பக்கம் துரோகிகள் மூட்ட உதவி செய்கிறாளா? இரண்டு நாட்களாக அம்மாவின் நடப்பில் கரவு காண்பதால் பேச்சில் சரளமில்லை. நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்குக் கூப்பிடவில்லை. யாரிடம் சொல்வது? அம்மாவிடம் சொல்லலாமா? அவளை வயிற்றில் வைத்து வளர்த்த நாள் முதல் அன்பு நெறியே சத்தென்று ஊட்டி இருக்கும் அம்மாவிடமேயா ஐயப்பாடு?'

'ஒருகால் அம்மாவும் இப்போது இந்தப் புரட்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பாளோ?'

கண்களை மூடிமூடிப் புரண்டாலும் உறுத்தல் மாய்ந்து குளிர்ந்த உறக்கம் அவளைத் தழுவவில்லை. கண்ணாடிக் கதவுகளைச் சாத்திக் கொண்டு தான் படுத்திருக்கிறார்கள்; அதனால் வெளியே புயலடித்தால் கூட உள்ளே அது அமைதியைக் குலைக்காது. ஆனால் உள்ளத்து அமைதியின்மையை வெளியே பிரதிபலிப்பது போல், செவிகளில் ஏதேதோ மெதுவாக விழுகின்றன.

காற்றில் சருகுகள் பறக்கின்றன.

எழுந்து கதவை நீக்கிப் பார்த்தால் கமலம்மா விழித்து கொள்வார். உண்மையில் அவரும் உறங்குகிறாரோ?

அவள் மெல்ல ஓசைப்படாமல் முன்னறைக்கு வருகிறாள்.

சன்னல் கதவை நீக்கிப் பார்க்கிறாள். தொலைவில் எங்கோ வளைவுச் சாலையில் தெரு விளக்கொன்று தெரிகிறது. குளிர்ந்த காற்று வீசுகிறது. இரவின் தன்மை கன்னங்களைத் தழுவும் போது இதமாக இருக்கிறது. மலை முகடுகளில் மேகங்கள் குவிகின்றன போலும்.

மக்கள் வேண்டித் தவமிருக்கும் மழை.

காற்று வலுத்து மரங்களைப் பேயாட்டமாடச் செய்யும் சடார் படாரென்று கண்ணாடிக் கதவுகளில் மோதி எறியும் மழைச் சாரலை எதிர்நோக்கிக் கொண்டு அவள் சன்னலுக்கு வெளியே கையை நீட்டிக் கொண்டு நிற்கிறாள்.

அவர்களுடைய ஆசிரமம் இருக்கும் தாழ்வரைப் பகுதிகளில் அந்த மாவட்டத்திலேயே மிகக் குறைவான அளவு மழைதான் பெய்யும். அந்தக் கானங்கள் கூடலூர்ப் பகுதிக் கானகங்களைப் போல் வளமானவை அல்ல. என்றாலும் அந்த மழைக்கே குடிலின் ஓரங்களில் கழுதைகளோ, நாய்களோ, வந்து ஒண்டி நிற்கும். சில சமயங்களில் மான் கூட வருவதுண்டு. ஒரு தடவை செந்நாயொன்று வந்ததாக ரங்கன் சொன்னான். "பேசாமலிரு, அது வந்த வழியே போய்விடும்" என்றாராம் அப்பா. இப்போது சுற்று வட்டம் காட்டையே அழித்து நாடாக்கி விட்டார்கள். மான்கள் கூட வருவதில்லை. ஒருவருக்கொருவர் நம்பிக்கை மாறி அச்சம் தலைதூக்கி நிற்கிறது.

அவள் பார்த்துக் கொண்டே இருக்கையில் வீட்டின் கீழே சாலையின் வளைவில் ஏதோ லாரி வரும் ஓசை. வெளிச்சம் பாய் விரித்தாற் போல் சாலையில் படிகிறது. பிறகு அணைகிறது. சாலை மேலேறிச் சுற்றினாற் போல் வீட்டுக்கு வரும் பாதை... அந்தப் பாதையிலேயே கண்களைப் பதித்துக் கொண்டு அவள் நிற்கிறாள். நெஞ்சத் துடிப்புகள் செவிகளையே நிறைக்க வலுக்கின்றன. அவன் வளைவுப் பாதையில் ஏறி வரவில்லை. குறுக்கே ஏறி நேராக வாயிலில் நிழல் தட்ட வருகிறான்.

அதற்கு முன் கொக்கியைத் திறந்து கிளிக்கென்ற ஓசையுடன் பூட்டைத் திறக்கிறாள் யமுனா.

அவள் அவன் உள்ளே வரும்போது விளக்கைப் போடாமல் ஓரத்தில் விலகி நிற்கிறாள்.

அவன் உள்ளே நுழைந்து கிளிக்கென்று கதவைச் சாத்துகிறான். பிறகு விளக்கைப் போட்டுவிட்டு நேராக அவளைப் பார்க்கிறான். மேலே பளபளக்கும் மெழுகுச் சீலை போன்ற துகிலில் ஜிப்போட்ட ஜாக்கெட்; நெடிது வளர்ந்த தோற்றம். கமலம்மாவின் கம்பீரமான முகத்தின் வார்ப்பு. முடி வாராமல் கலைந்து கிடக்கிறது. முகத்தில் ஒழுங்கு இல்லாத ஐந்தாறு நாளையக் கருமை.

"ஓ...ஹ்!" என்று ஒலியெழும்புகிறது. புன்னகை விரிகிறது.

"எனக்காகக் காத்திருக்கிறாயா யமு."

மெல்லிய குரலோடு அவள் அருகில் நெருங்குகிறான்.

அவள் ஒதுங்கிக் கொள்கிறாள்.

"ரொம்பக் கோபம் போலிருக்கு!"

நாற்காலியில் உட்கார்ந்து காலணிகளைக் கழற்றி எறிகிறான். அவற்றைப் பார்த்தால் நெடுந்தொலைவு நடந்து வந்திருக்கிறானென்று தோன்றுகிறது.

குளியலறைக்குள் அவன் சென்று கதவடைத்துக் கொள்கையில் அவளுள் ஓர் போராட்டம் நிகழ்கிறது.

கமலம்மா எழுந்து வருவாரா? அல்லது எழுப்பலாமா?

சுப்பையா உள்ளே போர்த்து மூடிக் கொண்டு உறங்குவானாக இருக்கும். அவனை எழுப்புமுன் கமலம்மா எழுந்து விடுவார்.

இது நல்ல சந்தர்ப்பம்.

மனம் விட்டுப் பேசலாமல்லவா?

ஆனால் அவனைப் பார்க்கும் போது தன்னுடைய ஆற்றல்களெல்லாம் ஒளிந்து கொள்ள, தேர்ந்தெடுத்த சொற்களெல்லாம் மறந்து போய்விடுமோ?

கெய்ஸரில் சுடுநீர் இருக்கும், அல்லது குளிர்ந்த நீரில் தான் இப்படித் தலையைத் துவட்டிக் கொண்டு வேற்றுடை மாற்றி வருகிறானோ? அவனாகவே சாப்பாட்டு அறைக்குள் சென்று விளக்கைப் போடுகிறான். கமலம்மா எழுந்து வரவில்லை.

இது வழக்கமோ?

ஆனால்... வழக்கமாக அவனுக்கு யார் கதவு திறப்பார்களோ?

"நீ சாப்பிட்டாச்சா யமு?"

பரிவு மேலிடும் விசாரணை.

"ஹும், அம்மாவை எழுப்பட்டுமா?"

"வேண்டாம். நான் நேரம் கெட்ட நேரத்தில் வந்தால் கதவைக் கூட இடிக்க மாட்டேன்..."

அவளை நோக்கி, கண்கள் சிறுக்க ஓர் சிரிப்பு.

"பின்னே?"

"அதற்கெல்லாம் வழி இருக்கிறது."

"ஏன் இந்தத் திருட்டுத்தனம்? ஏன் நேர்வழியை விட்டுவிட்டு இப்படி நடமாட வேண்டும்?"

அவனே தட்டுக்களை வைத்துக் கொண்டு ஆறிப்போன ரொட்டியையும் களைக்கோசையும் எடுத்துப் போட்டுக் கொள்கிறான்.

"இதுதானா? நான் சூடாக்கிக் கொண்டு வரட்டுமா?"

"வேண்டாம்; வேண்டாம். உட்கார் யமு. உன்னைப் பார்த்துப் பேசி எத்தனை நாட்களாச்சு! நான் இப்பத்தான் கீதாமஹால் போஸ்டர் பார்த்து உன்னை நினைச்சிட்டு வந்தேன்..."

"நானும் உங்களைப் பார்த்துப் பேசணும்னு உக்காந்திருக்கிறேன், அது தெரியுமா?"

ஆறிப்போன ரொட்டி; அதுவும் சுப்பையாவுக்கு ரொட்டி செய்யத் தெரியாது போலும்! தோல் போல் இழுக்கிறது. தாடைகள் அசைய அசைய அதைக் கடித்து அவன் மெல்லுகிறான்.

"என்ன யமு, பார்க்கிறே?"

"ஒண்ணுமில்லே..."

"என்னமோ பேசணும்னியே? நான் சாப்பிடறப்ப நீ பேசு; நான் கேட்கிறேன்."

"என்ன பேசறதுன்னு புரியவில்லை. பேச எனக்கு வாயில்லாம அடிச்சப்புறம் பேச்சு எழும்புமா?"

மேசையில் அவளுடைய விரல் கோலமிடுகிறது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

"யமு, உன்னைப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்புத் தான் வருகிறது..."

"ரொம்ப நன்றி."

அவன் தட்டில் கைகழுவிட்டுத் தண்ணீரை மடக்மடக்கென்று குடிக்கிறான். பிறகு கைகளைத் துடைத்துக் கொண்டு எழுந்திருக்கிறான்; ஒரு சிகரெட்டைக் கொளுத்திக் கொண்டு அவளருகில் நாற்காலியை இழுத்துக் கொண்டமருகிறான்.

"யமு நீ பேசலியா?"

"உங்களிடம் என்ன பேசுவது? என் அம்மா, 'குட்டி சினந்து வீட்டைக் கொளுத்துவதாகப் பயமுறுத்தினால் சிரிக்கத்தானே தோன்றும்' என்றாள். என்னால் அப்படி நினைக்க முடியவில்லை. நான் எப்படிப் பொருட்படுத்தாமலிருப்பேன்? இரத்த வெறிக்கு ஒன்றுமறியாத மக்களைத் தூண்டி விடுவதால் உங்களுடைய சித்தாந்தம் நிறைவேறி விடுமா? உலகம் தோன்றிய நாளிலிருந்து எவரும் வன்முறையில் சாந்தியும் இன்பமும் காணலாம் என்று கூறியிருக்கவில்லை. அது அன்பு நெறியினாலும் கொல்லாமையினாலும் தான் வளர முடியும். இரத்தப் புரட்சி செய்து சமத்துவம் கண்டிருக்கும் நாடுகளில் அச்சமில்லாத - ஐயமில்லாத - அவநம்பிக்கையில்லா அமைதி இருக்கிறதா என்று நீங்கள் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு சொல்லுங்கள். புரட்சி செய்ய வேண்டும்; நான் ஒப்புகிறேன். ஆனால் இப்படி வேண்டாம். ஊரூராய்ப் படை திரண்டு போய் மக்களின் மனங்களின் அன்பு நெறியை வளர்க்கப் பாடுபடுவோம். அந்தப் படையின் முன்னணியில் நிற்க நான் வருகிறேன். இது... இது... வேண்டாம்"

அவன் கருமை படர்ந்த மோவாயைக் கையால் தேய்த்துக் கொண்டு சிரிக்கிறான்.

"இந்த நாட்டின் பேதைமை எல்லாம் ஒன்று சேர்ந்த உருவம் ஒன்று எப்படியிருக்குமோ, அப்படி இருக்கிறது உன்னைப் பார்த்தால்! இவ்வளவு படிப்புப் படித்து கண் முன் நடக்கும் இத்தனை அநீதிகளையும் பார்த்து, ஏமாற்று மோசடிகளுக்குக் காந்தி என்ற கவசத்தைப் போட்டுக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகளைத் தெரிந்து கொண்டு, யமு... எனக்கு ஒரு பெரிய ஏமாற்றமாக நீ காட்சி கொடுக்கிறாய்..."

"நீங்கள் அந்த முதலை வாயில் விழுந்து விட்டீர்கள். தப்பி வர முடியாமல் சுற்றிச் சுற்றி வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். என்னைப் பேதை என்று சொல்லும் உங்களை, நான் அறிவாளி, மிகுந்த செயல் திறமையும், வாக்குவன்மையும் உடைய தலைவர் என்று நினைத்துத் தான் பார்க்கிறேன். இந்த வழியைச் சரி என்று நம்ப முடியவில்லை. கையில் இரத்தக் கறையைத் தோய்த்துக் கொண்டு எளியரை அச்சுறுத்துவது, தொண்டையைக் கிழிப்பதும், குடலை எடுப்பதும், நாகரிகமடைந்த மனிதன் ஒப்பும் செயல்களா?"

அவன் விழிகள் பெரியதாக உறுத்துப் பார்க்கின்றன. அவளுக்குப் புல் நுனிகளாய்க் கைகள் நடுங்குகின்றன. ஆனாலும் சமாளித்துக் கொள்கிறாள். குபீரென்று பயங்காட்டிச் சிரிப்பது போல் சிரிக்கிறான்.

"பரவாயில்லை யமு... நீ பயங்கொளி இல்லை. உன்னைப் போன்றவர்கள் ஒரு முனையில் நின்றால் நூறு நூறாய்ப் படை திரண்டெழுவார்கள். இந்த நாட்டின் ஆற்றலனைத்தும் இப்படி அஹிம்சை என்ற ஆஷாடபூதித் தனத்திலும், அன்பு என்ற போலிப் புரட்டிலும் சிறை இருக்கிறது. தளைகளை உடைத்தெறியுங்கள்! புரட்சிக்கு வழிகோலுங்கள்! யமுனா, ஆற்றுத் தண்ணீர் போகட்டும் போகட்டும் என்று விட்டுக் கொண்டே இருந்தால், அதுவாக இந்தா என்று நிலங்களுக்குப் பாயாது; மின்சாரத்தைக் கொடுக்காது; வெள்ளமாய் ஊரை அழிக்கும். இல்லையேல் கடலில் போய்ப் பாழாகும். அதைத் தடுத்துக் குப்புற விழச்செய்துதான் பலன் பெற வேண்டும். ஒரு சிலரே திரும்பத் திரும்ப நாட்டின் செல்வங்களை அநுபவிக்கும் இந்த முறை ஒழிய வேண்டும். அது ஒழியாது; ஒழிக்க வேண்டும். யமுனா நாற்பத்தேழில் கிடைத்த சுதந்திரம் கொழுத்த முதலாளிகளுக்குத்தான் என்று தெரிந்து கொள். ஐந்தாண்டுத் திட்டங்கள் இந்த நாட்டின் ஒரு சில முதலாளிகளையே கொழுக்க வைத்திருக்கிறதென்றுணர்ந்து கொள்! உன்னுடைய காந்தியின் அஹிம்சை, கோழைகளின் சாக்கு. அதை விட்டெறிந்து விட்டு உண்மையான புரட்சிக்கு எங்களுடன் வா. உனக்குப் பயங்கள் துச்சம் என்பது எனக்குத் தெரியும்..." சம்பங்கிப் பூவிலிருந்து பொன் பொறிகள் சிதறினாற் போல் இருக்கிறது.

"உன்னைப் போன்ற இளம் தலைமுறையின் கைகளில் தான் இந்த நாட்டுக்கு விமோசனம் வரப்போகிறது. கைராட்டையிலும் பண நாயகத்திலும் விமோசனம் வர முடியாது; புரட்சியானாலேயே வரும்..."

தான் கோழையாக நிற்பது போன்ற உணர்வை அவளுக்கு அந்த கணத்தில் அவன் தோற்றுவிக்கிறான்.

'செய் அல்லது செத்துமடி' என்று காந்தியடிகள் முழங்கிய போது இந்நாட்டு இளைஞர்களும் யுவதிகளும் எப்படி எழுந்தார்கள்? எப்படி ஆவேசமாக முன் வந்தார்கள்?

அதைத் தாயும் தந்தையும் ஜோசஃப் அம்மாவனும் சொல்லித்தான் அவள் அறிந்திருக்கிறாள். அப்போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் இறங்கினார்கள். அது என்ன புரட்சி?

இப்போது... அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

அந்த சில விநாடிகளில் வியப்பும் மருட்சியும் கொண்ட விழிகள் அவன் மீது நிலைக்கின்றன. பின்வாங்கத் துணியாத சாவை மதியாத, கொள்கையையே தருமம் என்று இரத்தக் குழம்பில், நெருப்புக் குழிக்குள் அடி வைக்கும் துணிவு... அது பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டிருக்குமா?

மென்மையைக் குரலில் குழைத்துக் கொண்டு புன்னகை செய்கிறான். அவளுடைய அம்மா, அந்தக் காலத்தில் கமலம்மாவுடன் ஆசிரமத்துக்கு வரும் இந்தப் பிள்ளையை 'சுதீரா' என்று அழைப்பாள். வசந்தத்தின் தொடக்கத்தில் ஒரு மழை பெய்ததும் குவியல் குவியலாகப் புறப்பட்டு வரும் வண்ணத்துப் பூச்சிகளைச் சிறுமியாய் அவனுக்குக் காட்டி மகிழ்ந்திருக்கிறாள் அவள். பின்னர் கல்லூரி இளைஞனாக அவன் அங்கு வந்தபோது அவள் முகையவிழும் பருவத்தில் உலகையே அறியத் துடிக்கும் ஆர்வத்துடன் அவனிடம் கேள்விகள் கேட்டதுண்டு. கவலையோ கடினமோ அறியாத மலர்ந்த முகம். அவனுடைய கைகள் பெண்ணின் கைகளைப் போல் மென்மை வாய்ந்தவை. அவன் சிரிக்கும் போது காற்றில் பூச்சரம் அவிழ்ந்து உதிர்ந்தாற் போல் இருக்கும். புன்னகை பூத்தாலே கன்னங்கள் குழியும். அந்த சுதீரன் எங்கே?

மனிதனாக வளர்ந்து பெற்ற மென்மையான பரிணாம அங்கிகளை உரித்துக் கொண்டு, விலங்குத் தன்மையை அப்பட்டமாகக் காட்ட முனையும் இந்த சுதீரன் எப்படி உருவானான்?

"நீ இப்படிப் பார்த்து ஆளைப் பைத்தியமாயடிக்காதே..." அவன் முகத்தில் உறைந்திருந்த உணர்ச்சிகளின் நெகிழ்ச்சி மின்னுகிறது. கைப்பிடி அவளைப் பற்றி இழுக்கும் அளவுக்கு வலுக்கிறது.

அவள் விலுக்கென்று பின்னுக்கு இழுத்துக் கொண்டு திரும்புகையில் கமலம்மாவின் மீது மோதிக் கொள்கிறாள்.

"என்னை எழுப்பியிருக்கலாமே? இடியும் மின்னலுமாக இருக்கு... ஜன்னலெல்லாம் சாத்தியிருக்கா?"

யமுனா படுக்கையில் வந்து உட்காருகிறாள்.

வெளியே மழை சடார் படாரென்று அடிக்கிறது. காற்றில் மரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. அவள் உலகில் கண்விழித்த நாளாய் உள்ளத்தில் வேரூன்றி வளர்ந்திருக்கும் ஒரு பெருமரமும் பேயாட்டம் ஆடுவது போலிருக்கிறது.

அத்தியாயம் - 4

விடியும் நேரத்திலேயே உறங்கினாலும், கண் விழிக்கும்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. படுக்கையில் கமலம்மாவைக் காணவில்லை. யமுனா குளியலறைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து, இதமான வெந்நீரில் நீராடிய பின், சேலையைச் சோப்புப் போட்டுக் கசக்கி வெளியே உலர்த்தப் போகிறாள். முதல் நாள் பெய்த மழை ஈரத்தில் பசுமை மின்னுகிறது. விண்மணி பளிச்சென்று முகம்காட்டி அந்தப் பசுமை கண்டு பூரிக்கிறது. அவள் பின்வாயில் வழியாக உள்ளே கூடத்துக்கு வரும்போதுதான் மலையாளம் கலந்த அம்மாவனின் மழலைத் தமிழ் செவிகளில் விழுகிறது. தம் கதர் சால்வையுடன் அவர் உட்கார்ந்திருக்கிறார். சுதீர் பைஜாமாவும் சிகரெட் புகையுமாகச் செட்டில் சாய்ந்து மலையாளத்தில் பேசுகிறான்? ஆம், மலையாளத்தில் "சமரத்திண்டே ஃபர்ஸ்ட் காஷுவாலிட்டி" என்று ஏதோ செவிகளில் விழுகின்றன.

"குட் மோர்னிங், எந்தா யமு, சுகமில்லையோ?" என்று கேட்கிறார் கையில் ஆவி பறக்கும் தேநீர் கிண்ணத்துடன்.

"ஒன்றுமில்லையே?"

"பின்ன கண்ணெல்லாம் சிவந்து இடுங்கி..."

சுதீர் எங்கோ பார்த்துப் புகை விட்டுக் கொண்டிருக்கிறான்.

"எப்போது வந்தீர்கள்!"

"குஞ்ஞம்மையும் கமலம்மையும் ஒருபாடு நேரம் கண் முழிச்சு சம்சாரிச்சதாக்கும்!"

அவள் அதற்கு மறுமொழி கூறாமல் சுதீரை உறுத்துப் பார்க்கிறாள். அவன் காலை மடக்கிக் கொண்டு புகையை விட்டுக் கொண்டிருக்கிறான். இந்த சுதீர் முன்பு எத்தனை மரியாதையுள்ள நாகரிக மனிதனாக நடந்து கொண்டிருந்திருக்கிறான்? நீதிபதி வீட்டுக் குழந்தைகளின் செல்லப் பிராணியாகச் சொகுசாக வளர்ந்த நகரத்து நாகரிக நாய், பொன்னைத் தேடிப் பனிக்கண்டத்துக்குச் சென்ற பேராசை மனிதனுக்குத் துணை போக, கொஞ்சம் கொஞ்சமாக நாடு நகர வாசனைகளை எல்லாம் உதிர்த்து, நள்ளிரவில் குந்தியிருந்து ஊளையிடக் கானகத்துக்குத் தன்னைப் பழக்கிக் கொண்ட கதை நினைவுக்கு வருகிறது. மனித குலம் நாகரிகப் பரிமாணத்தில் முன்னேறிய பின் திசை கெட்டுத் தறிகெட்டுக் குப்புற விழத் திரும்பிப் பார்க்கிறது.

"எந்தா யமு?"

"பிரேக் ஃபாஸ்ட் சாப்பிடம்மா. உடம்புக்குச் சுகமில்லையாம்மா?" கமலம்மா பூஜையறையிலிருந்து வருகிறார்.

"பேர் பேராகக் கேட்கிறீர்கள்?..."

முரமுரத்த ரொட்டி வில்லைகளும் வெண்ணையும் பழப் பச்சடியும் கொண்ட தட்டத்தை ஏந்தி வருகிறான் சுப்பையா.

"காப்பியா, டீயா..." என்று அவன் மெல்லக் கேட்கையில், "டீயே இருக்கட்டும்" என்று கூறிவிட்டு யமுனா ரொட்டி வில்லையில் வெண்ணை தடவிக் கொண்டு, "நீங்கள்?... நீங்கள்?" என்று சுதீரையும் ஜோசஃபையும் பார்க்கிறாள்.

"இன்னிக்கு இங்கே ஏதானும் வேலை இருக்கா யமு?" என்று கமலம்மா கேட்கிறார்.

"இல்லே, பொருட்காட்சி சாமான்களைப் பிரேமாவும் ரங்கனும் எடுத்துக் கொண்டு வருவார்கள். நான் எல்லோருடனும் போகிறேன் ஆசிரமத்துக்கு."

"அப்ப... அடுத்த மாசமோ, அதற்கடுத்த மாசமோ மெட்றாஸ் வருவாய்?"

"அது-நிச்சயமில்லை. ஒரு நினைப்பு இருக்கிறது. வந்தால் உங்களைப் பார்க்காமல் போவேனா?"

"நீ பெரியப்பா வீட்டில் தங்குவாய்..."

"எனக்கு எல்லாம் ஒன்று தான் கமலம்மா..."

"பின் அங்கே வந்து தங்கு. எனக்குச் சந்தோஷமாக இருக்கும்."

"சரி. கமலம்மா என் துணிகளை இங்கே உலர்த்தி இருக்கிறேன். ரங்கன் வந்தால், கொடுத்து விடுங்கள்; நான் சொல்லிவிட்டுப் போகிறேன்..."

"இருக்கட்டுமே!"

விடைபெற்றுக் கொள்ளும்போது கமலம்மாவைக் குனிந்து வணங்கத் தோன்றுகிறது.

வாயிலில் மழை நீர்த் துளிகளை வயிரமாகத் தாங்கி மின்னிக் கொண்டு ஐந்தே இதழ்களுடன் கட்டவிழ்த்திருக்கும் அரக்கு வண்ண வெல்வெட் ரோஜாவைக் கிள்ளி அவன் ஈரக் குழலில் செருகுகிறார் கமலம்மா.

"வண்டி இருக்கே, கொஞ்சம் இருங்களேன்? டிரைவர் வந்திடுவான்...?"

"வேண்டாம்மா, மழை பெய்த சுகத்தில் நடக்கச் சந்தோஷமாக இருக்கும்... வரேம்மா..."

"வரேம்மா! எந்தா சுதிர்? பின்னக் காணாம்!"

"ரைட்டோ?"

அவன் வாசலில் வந்து நிற்கிறான். சிரிப்பதுபோல் தோன்றுகிறது. யமுனா பேசவில்லை. வளைவு திரும்பி, கீழே இறங்கிப் பாதையில் நடக்கின்றனர். தலை மறையும் வரையிலும் மேட்டில் நின்று கமலம்மா பார்க்கிறார்.

வெயில் பளிச்சென்று விழவில்லை; நீளம் தெரியமல் வானமெங்கும் பஞ்சுப் பிசிறுகள் சிதறிக் கிடக்கின்றன. எப்போதேனும் காற்றின் அசைவில் அவை விலகும்போது பளிச்சென்று நீலமாகச் சிரித்துக் கொண்டு கதிரோன் தன் குழந்தைகளாகப் பசுமைகளை மெல்ல வருடுகிறான். உடனே பொறுக்காத பஞ்சுத் துணுக்குகள் அந்தச் சிரிப்பை மாய்க்க ஓடோடி வருகின்றன.

"ராத்திரி நல்ல மழை. இந்த வருஷத்துப் பஞ்சக் கொடுமை போச்சு. உறக்கம் கொள்ளாத சந்தோஷம்" ஜோசஃப் மௌனத்தைக் கலைக்கிறார்.

"நீங்கள் சுதீரோடு என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?" என்று அவரைக் கேட்டாள் யமுனா.

"நானா? என்ன பேசினேன் சுதீரோடு? காப்பிக்கும் சாய்க்குமுள்ள வித்தியாசங்கள்..."

"அதில் சமரத்திண்டே காஷுவாலிட்டி என்ன வந்தது?..."

"அதோ? நான் அரசியல் ஒண்ணுமே பேசவில்லையே. யுத்தம்னு வந்தால் உண்மை போகும் அல்ல? அதான். ஏது சமரத்திலும் முதல் காஷுவாலிட்டி இப்ப சத்யமாணு?"

"அம்மாவா, எனக்குப் பெரிய போராட்டமாக இருக்கிறது. நாம் பைத்தியக்காரத்தனமாக, நடக்காத இலட்சியத்தைப் பற்றிக் கொண்டு போறாடுகிறோமோன்னு தோன்றுகிறது. எனக்குத் தெரிஞ்சே முன்ன நான் படித்த போது ஹாஸ்டலில் பூரி கூடச் செய்ய மாட்டார்கள். அப்போதே டில்லியிலிருந்து ஒரு அம்மா, காந்திய சர்வோதயம் கொண்டாடுபவர், வந்தால் எல்லா வகையும் செய்வார்கள். நம் ஆசிரமத்தில் இருந்து வரும் குழந்தைகளே வெளியே அழுக்குப் படிந்த தின்பண்டங்களைக் கண்டால் வாங்கித் தின்கிறார்கள். ஆசிரமத் தொண்டர்கள் வாழ்நாள் முடியக் கதர், எளிமை, கொல்லாமை, தூய்மை என்று பிரதிக்ஞை எடுத்துக் கொள்கிறோம். பிரேமா ஆசிரமத்தை விட்டு வீட்டுக்குப் போனால் நைலக்ஸ் வகைதான் உடுத்துகிறாள். போன மாசம் யாரோ ஒரு நீண்ட முடி வெள்ளைக்கார ஜோடி நம் குடிசையில் வந்து தங்கினார்களே, அவர்கள் கஞ்சா கொண்டு வந்திருந்ததாக ரங்கன் சொன்னான். இந்த மலையில் கஞ்சா பயிரிடுகிறார்களா என்று விசாரிக்கவே அவர்கள் வந்ததாக துரை சொன்னார். இந்த உலகத்தை நாம் என்ன செய்ய முடியும்?"

ஜோசஃப் மறுமொழி ஏதுமே கூறவில்லை.

சுமதி தாயி, மாதாஜியுடன் காலையிலேயே புறப்பட்டுப் போய்விட்டாளாம். துரையும் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற குழந்தைகளும் கூடக் காலை பஸ்ஸில் ஆசிரமத்துக்குத் திரும்புகிறார்கள்.

யமுனாவும் ஜோசஃபும் வரும்போது பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் நேராக அந்த வழியில் செல்லாது. எனினும் காத்திருந்து அதில் ஏறுகின்றனர். பிற்பகல் இரண்டரை மணிக்கு அது மஞ்சூரில் வந்து நிற்கிறது. அணைக்கட்டும் மின்நிலையமும் வந்த பிறகு பெருத்த ஊர். பஸ் நிற்குமிடம் வழக்கம் போல் கசமுசவென்றிருக்கிறது. மழை பெய்திருப்பதால் சரிவுகளில் பெண்கள் மண்வெட்டியும், கொத்தும், கூடையுமாகச் சளைக்காமல் வேலைக்கு இறங்கி விட்டனர். படுகப் பெண்டிர் மண்ணின் செவ்வியர்.

சரிவில் கொத்திக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்துக் கொண்டு நிற்கையில், யமுனாவின் முகத்தில் ஏக்கத்தின் சாயல் படருகிறது. "அந்தப் பெண்ணைப் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது. அரசியலின் அவலங்களைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் காலமறிந்து உழைத்து விளைவு காண்பதற்காக வாழ்கிறாள். அறிவு வளர வளரப் பிரச்னைகளும் சங்கடங்களும் தான் வளருகின்றன. அறியாமை போற்றக் கூடியதொன்றாகிறது."

"அறியாமை - அறிவு, இரண்டையும் சரியான பொருளில் கண்டு நீ சொல்லவில்லை. வெறும் ஏட்டுக் கல்வியினால் அறிவு கூடிவிட்டதாகவும், பத்திரிகை படித்து அரசியல் அக்கப்போர்களை விவரிக்காததனால் அறியாமை நிறைந்தவளென்றோ ஏன் எடைபோடுகிறாய்? ஆனால் யமு, இப்பப் பாரு. உன்னைப் பார்த்துக் கொண்டு அவள் வேலை மறந்து நிற்கிறாள்?" இது ஜோசஃப்.

உண்மைதான். அந்த நங்கை இவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். யமுனா சிரிக்கையில் அவளும் புன்னகை பூக்கிறாள்.

"இது எந்தொரு சல்யம் பிடிச்ச வாழ்வு. அந்தப் பெண் எத்தனை அழகு! எத்ர பாக்யசாலி! ஒருபாடு படுச்சு, டீச்சர் உத்தியோகம் பார்ப்பது எத்ர கேமன்மை யானு! 'இப்படி வெயிலும் பனியும் கொண்டு, மழயும் சகிச்சி, மானத்தையும் மண்ணையும் பார்த்து வாழ்வதொரு வாழ்வா!'ன்னு நினைச்சிருக்கும் யமு. மனுஷ மனசுக்குத் திருப்தி ஒருபோதும் கிடையாது. தியாகத்திலே ஆரம்பிச்சு அஞ்சு ஏக்கரும் பத்து ஏக்கரும் வாங்கினவர்கள், பொது வாழ்வில் சுயநலப்பசை ஒட்டி ஒட்டிப் பதவிப் பித்தாகி விட்டதைக் கண்ணால் பார்க்கலே? கிடச்சதைச் செம்மையாக்கிக் கொள்ள அறிவு வேணும். ஒரு செரட்டைச் சில்லுகிட்டியெங்கிலும் அதையும் தேச்சு மினுக்கிக் கலாவஸ்துவாக ஆக்குவதுபோல் வாழ்க்கையை வாழணும் குஞ்ஞே. சுகதுக்கம் சமமாகும் போள் ஏக்கமேது; நம்பிக்கையோடு முயற்சி செய். பலனைப் பற்றிக் கவலைப்படாதே. அதுதானல்லோ கீதாசாரியன் சொன்னதுங்கூட?"

"அம்மாவா! பதவியிலமர்ந்தால் அப்படிச் சமமாகப் பார்க்க முடியாதென்று தான் நீங்கள் கரையோரமாக ஒதுங்கி விட்டீர்களா?"

மூக்குக் கண்ணாடிக்குள்ளிருக்கும் விழிகள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன.

"பதவியில் அமருமுன் நம்முடைய தலைவர்களின் பேச்சுகளும் நடப்பும், பிறகு கொள்கைகளைக் கையாள ஆட்சி கைக்கொண்டு பிறகு மாறிப் போவதால் தான் இளந் தலமுறை நம்பிக்கையில்லாமல் போனது. தனிமனிதனின் ஒரு தூய்மையான நடப்பினாலேயே நாணயம், ஒழுங்கு எல்லாம் இருந்தாலே சமுதாயமும், ஜனநாயக அரசாட்சியும் மேன்மையாகும்..."

"இதற்கு நம்மால் இப்ப என்ன செய்ய முடியும் அம்மாவா?"

"உம்...?...யமு, இந்த நூற்றாண்டு ஆகோஷமெல்லாம் எதற்கு? நமக்கு விளம்பரமா? அல்ல. ஒரு பத்து நூறு குட்டிகள் இளந்தலமுறை கண்டு கேட்டு மனசில் வாழ்க்கையின் நல்ல நல்ல நெறிகளெல்லாம் பதியணும். இந்த நூற்றாண்டுத் திட்டமாக, வெறும் பாதயாத்திரையோடு நிற்காமல், மூலை முடுக்கெல்லாம், முக்கியமாக மனுஷ மதிப்புகளுக்கு இடம் கொடுக்காத நகரத்தில் நெறியோடு கூடிய வாழ்க்கைக்குப் பிரசாரம் செய்ய வேணும். இது என்னோட யோசனை..."

யமுனா மௌனமாக நிற்கிறாள்.

"அம்மையிடமும் அச்சனிடமுங்கூட இதே சொன்னது. ஏற்கெனவே முதிர்ந்து வழிமாறிப் போனவர்களைத் திருத்துவதை விட, இனி வளரும் தலைமுறைக்கு நல்ல வழிகாட்டுவது அவசியம் அல்ல? மூலைக்கு மூலை எலிமெண்டரி ஸ்கூல் மிடில் ஸ்கூல் ஹைஸ்கூல் எங்கும் பிரசாரம் செய்யணும். ஒரு நல்ல சமுதாயத்துக்கு வித்திடணும். யமுனா உரச்சு நிற்கணும் எந்தா?"

"செய்யலாம் அம்மாவா..."

"இதில் ஒரு சங்கடம். ஏது மண்ணாங்கட்டிக்கும் அரசியல் கலர் பூசினால்தான் இப்போள் விளம்பரம் கிட்டும். நாட்டுக்கார் மத்தியில் கொடி கட்டிப் பரன்ன சினிமாக்காரங்களே, இந்த கதிக்கு வந்திருக்கும் போது நாம் எம் மாத்திரம்? ஒரு பத்து ஸ்கூலில் சர்வோதய சேவா சிரமத்தைச் சேர்ந்த யமுனா காந்தியப் பிரசாரம் செய்யப் போவதாக ஏற்பாடு செய்யலாம்னு வச்சால், ஒவ்வொரு ஸ்கூலும் அரசியலுக்கு அப்பால் இருக்கணும். அரசு ஸ்கூல் ஒருவகை, மானேஜ்மெண்டாயிருந்தால் ஒரு குறிப்பிட்ட கட்சிண்ணு சார்ந்து இருந்தால் கஷ்டம்..."

ஆசிரமம் வழியாகக் கோவை செல்லும் பஸ் முக்கி முனகிக் கொண்டு வருகிறது. அந்தப் பாதையில் சுற்றி வளைந்து மலையை விட்டிறங்கும் பஸ் அது ஒன்றுதான். ஆசிரமத்திற்குச் சாலையில் இறங்கிய பின் செம்மண் பாதையில் நடக்க வேண்டும்.

சாலையில் வந்து இறங்கும் போது மாலையில் ஐந்தே கால் மணியாகியது. வானம் இருண்டு கிடக்கிறது. கானகத்தினிடையே மனிதப்பூண்டின் அரவம் கேட்காத அமைதி. அடர்ந்த காடுகள் மண்டிக் கிடக்கும் ஆற்றின் கரைகளினூடே அவள் சிறுமியாய் ஜோசஃபுடன் எத்தனை நாட்கள் குதித்து நடந்திருக்கிறாள்! அணைத்திட்டங்கள் வருமுன்பு அங்கு பள்ளிக்கூடம் கிடையாது. அப்பாவும் அம்மாவும் மருந்துப் பெட்டியையும் ஊசிக்குழாயையும் தூக்கிக் கொண்டு மலைகளையெல்லாம் சுற்றப் போய் விடுவார்கள். ஜோசஃப் அம்மாவன் பாதையைச் சீர் செய்வார். ஆற்றுத் தண்ணீரை இறைத்து விளைநிலம் பாலிப்பார். மாலையில் ஒவ்வொரு கிராமமாக பஜனை செய்யப் போவார். படிப்புங் கூடக் கற்பிப்பார். அவள் இருளக் குழந்தைகளிடையே அரசகுமாரியைப் போல் அச்சமின்றிச் சுற்றுவாள். காடை, உடை, புளி, ஆல், அத்தி, கோங்கு மரங்களிடையே காட்டுக் கொடிகள் பின்னிப் படர்ந்து கிடக்கும் இடங்களில் வன விலங்குகளின் அச்சம் உணராமல் முன் செல்வாள். 'காட்டுத் தோழர்களே, நாங்கள் வருகிறோம்' என்று இருவரும் கைகளைக் கொட்டிக் கொண்டு செல்வார்கள். சிவந்து நீரோட்டம் வாய்ந்த நெல்லிக்கனிகளைக் கடித்துக் கொண்டு சென்ற அந்த நாட்கள் எவ்வளவு இன்பமானவை!

ஒருமுறை சுதீரை அழைத்துச் சென்று யாரோ ஒரு இருளப் பிள்ளையைக் கத்தச் சொல்லி, கரடி கத்துகிறது என்று அச்சுறுத்திக் கைகொட்டிச் சிரித்திருக்கிறாள். அவன், இப்போது அவளை அச்சுறுத்திப் பார்க்கிறான்.

பாறை இடுக்குகளில் பெரிய கொடுக்கோடு குடியிருக்கும் தேள் வர்க்கங்களைக் காட்டி, அம்மாவன் அவளுக்குக் கொல்லாமையும் அஞ்சாமையும் பழக்கியிருக்கிறார். பெரிய புற்றுக்குள் பாம்பு இருக்குமோ என்று குச்சி கொண்டு குத்திப் பார்க்கக் கூடாது என்று சுதீருக்கு அந்தக் காலத்தில் அவள் விளக்கியதுண்டு. அங்கே திறந்த வெளிபோன்று அகன்ற சரிவில் ஆறு உருண்டைக் கற்களுக்கிடையே குழந்தைச் சிரிப்புச் சிரித்துக் கொண்டு வரும். அணைத்தேக்கம் வந்த பிறகு அந்த அழகுகளெல்லாம் கனவாகி விட்டன. மின்நிலையத் திட்டம் நடைபெற்ற காலத்தில் வண்ண வண்ணமாக மக்கள் அங்கே உல்லாசப் பொழுது போக்க வருவார்கள். அவளும் அம்மாவனும், தந்தையும் தாயும், ரங்கனும் அவன் குழந்தைகளும், காலையில் அங்கு சென்று பிரார்த்தனை பாடி, நீராடி, கூட்டாஞ் சோறு பொங்கி உண்டு களித்த நாட்கள் பல. கமலம்மா உதகை ஸீஸனுக்கு வந்தால் ஆசிரமத்தில் வந்து ஒரு வாரம் தங்குவார். அவருங்கூட அந்த இடத்துக்கு அழைத்துச் செல்லச் சொல்வார். அம்மாவன் கமலம்மாவுக்காகவே தனியாக ஒரு குடிலைத் தம் கைகளால் கட்டினாராம். இப்போதும் அது விருந்தினர் குடிலாக இருக்கிறது. இப்போது கமலம்மா அங்கு வந்து தங்குவதில்லை. உதகைக்கு வந்தாலும், இம்முறை ஆசிரமத்துக்கு வரவேயில்லை...

ரி...ம் ரீ...ஈம் என்ற குழளொலி அவள் சிந்தையை துண்டித்துத் தூக்கி வாரிப் போடச் செய்கிறது.

சாலையின் ஓரமாக அவள் விலகிக் கொள்கிறாள். அந்த நீல வண்டி சுர்ரென்று வந்து உராய்ந்தாற் போல் நிற்கிறது.

"சுதீர்..."

சுதீர் தான் ஓட்டும் ஆசனத்திலிருந்து கதவைத் திறந்து கொண்டு சிரிக்கிறான். காட்டுமிராண்டித் தோற்றம் காண்பித்த கருமையும் காதோரத் தூண்களும் கூட மழிக்கப்பட்டு முகம் மென்மை இயல்பைக் காட்டுகிறது.

"உங்க பஸ்ஸைப் பிடிக்கணும்னு துரத்திக் கொண்டு வந்தேன். இந்தா யமு?"

யமுனாவிடம் சிரித்துப் பேசி, அந்தப் பழுப்பு நிறப் பாக்கெட்டைக் கொடுக்கிறான்.

"என்னது இது?"

"உன் சேலை. விட்டுப்போய் விட்டாயே? வேறொன்றுமில்லை; பயந்துவிடாதே!"

"நன்றி, இதை... நீங்கள் கொண்டு வருவதற்காகவா... வாருங்கள்!"

"ஏன், இதைக் கொண்டு வருவதற்காக நான் வரக் கூடாதா?" ஒரு சிரிப்பு. சண்பகப் பூக்கள் இளங்காற்றில் சிதறுகின்றன. கதவைச் சாத்துகிறான்.

"நீங்கள் உள்ளே வரலியா?"

"இல்லே. கோயமுத்தூர் போகிறேன். ஆறரை மணிக்கு ஒரு மீட்டிங்."

வண்டி பாதையில் மெல்ல இழிந்து செல்கிறது.

சேலையை அழகாக மடித்துக் காகிதப் பைக்குள் வைத்துக் கட்டியிருக்கிறார். கமலம்மா தான் கட்டியிருப்பார்.

கோயமுத்தூர் கூட்டத்துக்குப் போகிறேன் என்று சொல்லியிருப்பாரோ; போகும்போது கமலம்மா புடவையைக் கொண்டுபோய்க் கொடு என்று சொல்லியிருப்பாரோ?

உள்ளே வந்து காகிதத்தைப் பிரிக்கும் போது மேலாக ஒரு துண்டுக் கடிதம் இருக்கிறது. "நேற்றிரவு பண்புக் குறைவாக நடந்திருந்தால் மன்னித்துவிடு. சுதீர்..."

அத்தியாயம் - 5

இரண்டு நாட்களுக்கு ஆசை காட்டிவிட்டு ஊமைப் புழுக்கமாக வாட்டுவாயோ என்று மண்-வானைப் பார்த்து உருகும் வெப்பம். கோவை நகரத்தில் பொதுவான நிலையிருந்தாலே நீருக்கு நெஞ்சுலரக் காத்துக் கிடக்க வேண்டும். பஞ்சாலைகளில் சீக்குப் பிடித்தது போக ஆரோக்கியமானவைகளும் தண்ணீர்த் தட்டில் தவிக்கும் நிலை. வறுமையும் புழுதியும் வறட்சியும் தெருவெல்லாம் உற்சாகங்களை அடியோடு வறட்டி இருக்கின்றன. மலையடிவாரத்திலிருந்து வரும் வண்டிக்காக ஜோசஃபும் யமுனாவும் நிற்கின்றனர். அவர் அவளை ரயிலேற்றிவிட்டு மறுநாள் பாதயாத்திரையில் பங்கு கொள்ளப் போகிறார்.

பெண்கள் வாசனை முகப்பொடியும் பூவுமாகக் கடைவிரித்து அலங்காரம் செய்து கொள்ளும் அறையில் அந்த மணங்களை அமுக்கிக் கொண்டு உட்புறமிருந்து நாற்றம் வீசுகிறது. குடலுக்குள் புகுந்து அங்கு என்ன இருந்தாலும் தள்ளி விடுவேன் என்று சவால் விடுகிறது.

தங்கள் மனப் பலவீனங்களையும் உடல் அழுக்குகளையும் வெளியில் காட்டுவதைப் பண்புக் குறைவாகவும் அநாகரிகமாகவும் கருதும் காலம் பழையதாகி விட்டது என்று அவளுடைய அம்மா சொன்னது நினைவுக்கு வருகிறது. தந்தை படுக்கையோடு படுக்ககயாக நோயில் விழு முன் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் அவளும் தாயும், மதுரைப் பக்கத்துக் காந்தி கிராமத்துக்குப் போனார்கள். மதுரை ரயில் நிலையத்துப் பொதுக் குளியறையில் அம்மா பெண்கள் முகம் சுளிக்க ஒரு அறிவுரை நல்கிவிட்டுத் தேய்த்துக் கழுவினாள். இப்போது இன்னும் காலம் முன்னேறிச் செல்கிறது. சந்திர மண்டலத்தில் முதல் மனிதன் அடிவைத்து விட்டான்.

நகரமே பார்க்காத, வெளிச்சம் தெரியாத ஆதிவாசிப் பெண்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? அவர்கள் புறத் தூய்மையின் சுகத்தை அறியாத பேதைகள். ஒரு வகையில் அந்த எளியவர்களுக்குச் சுத்தம் ஆடம்பரமும் கூட. இந்த மலைக்காட்டு ஏழைகள் குளித்துத் துணி துவைத்தால் துணிகள் கரைந்துவிடும் என்று துவைக்காமலிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பளிங்குக்கல் பரவிய குளியலறையில் வந்து புழங்கும் நாகரிக மக்கள் சுதந்திரத்தின் சுகம் மிஞ்சி, அகம்பாவமாகிவிட்ட நிலையில் தங்கள் மலினங்களை நாணமின்றி வாரி இறைக்கின்றனர்.

குளித்து உடை மாறும் அணியலறையில் செருப்பைத் தொடும் தேக்க நீர் நாற்ற நீராக இருக்கிறது. பீங்கான் பாண்டத்தில் எவளோ ஒருத்தி போடக் கூடாத பொருளைப் போட்டு, அது அடைத்து போகும் பணியைச் செய்திருக்கிறாள்.

யமுனா துடைப்பம் தேடித் தேக்க நீரைத் தள்ளித் துப்புரவு செய்கையில் ஒரு முப்பது வயசுக்காரி, மூன்று வயசுக் குழந்தைக்குரிய உடையுடன் அங்கு வருகிறாள். யமுனாவை அவள் துப்புரவுக்காரி என்று நினைத்திருக்க வேண்டும்.

"அப்புறம் சுத்தம் செய், அப்பால் போ!" என்று விரட்டுகிறாள். யமுனா நிமிர்ந்து பார்க்கிறாள்.

"பொது இடங்களில் கொஞ்சம் பொறுப்பாக நடந்து கொள்ளக் கூடாதா, பெண்கள்? அதுவும் படித்த பெண்கள் இதை நினைத்துப் பார்க்க வேண்டாமா?"

அவள் மறுமொழி ஏதும் கூறவில்லை. "அப்படியா சேதி?" என்று ஏளனமாகக் கேட்பது போல் பார்வையை வீசிவிட்டுப் போகிறாள்.

துடைப்பத்தை மூலையில் வைத்துவிட்டு அவள் அலுப்போடு வெளியே வருகிறாள். அரை வயிறும் முக்கால் முதுகும் தெரியக் காட்டிக்கொண்டு நாலைந்து பெண்கள். கொடுக்கு மீசைகள் குறுந்தாடிக் கோலங்களில் சில இளைஞர்கள். மனிதன் சந்திரனில் காலூன்றி, மனித குலத்துக்கு ஒரு முன்னேற்றத் தாவல் என்று முழங்கிய வீரனைப் பற்றிய விமரிசனங்கள்; கலகலக்கும் சிரிப்புகள்; கத்திக்குத்து இரத்தங்கள், பெண்ணுடலின் விரிவான கோலங்கள்; காமக் களியாட்டங்களின் சங்கேதப் படலங்கள் ஆகியவற்றை அட்டைகளில் விளம்பரம் செய்து கொண்டிருக்கும் புத்தகங்களைத் தள்ளு வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு ஒரு அழுக்குச் சட்டைப் பையன் ரெயிலடி மேடையில் ஊர்ந்து செல்கிறான். அந்தப் புத்தகங்களில் பொதிந்துள்ள விஷயங்களைப் பற்றி அவனுக்கு ஏதும் தெரியாது; அக்கறையுமில்லை. அவற்றை அவன் ஆங்கிலம் படித்த மேல்நாட்டு நாகரிகக்காரர்களுக்குத்தான் விற்கிறான்.

"எந்தா யமுனா சிந்தனை வயப்பட்டது?"

"ஒண்ணுமில்ல; பாத்ரூம் கழுவப் போனேன்; தண்ணீரில்லை."

"ஓ; அது சரி. ஆனா இது பாபுஜி இருந்த காலமில்ல. நீ செய்வதைப் பார்த்து நாணி யாரேனும் உதவ வரலியே?"

"நான் இந்த வேலையைக் கூலிக்குச் செய்வதாக நினைத்தாள் ஒருத்தி..."

யமுனா கலகலவென்று சிரிக்கிறாள்.

அவரோ அவளைப் பெற்று வளர்த்த தந்தை தன் மகள் கணவன் வீடு செல்ல விடைபெற நிற்பது போல் உணர்ச்சி தழுதழுக்க நோக்குகிறார்.

"யமுனா, எனக்கு உன்னைப் பார்க்கப் பெருமையாயிருக்கு; ஒரு கலாகாரன், தன் சிருஷ்டியைப் பார்த்துச் சந்தோஷப்படுவது போல், நிண்டம்மையும் அச்சனும் காட்டுக் குழந்தைகளை மக்களாய் சுவீகரிச்சு உன்னை நான் சுவீகரிச்சு, மகளே வில்வித்தையும் குதிரையேற்றமும் கற்பிச்சு மகனை யுத்தரங்கத்துக்கு அனுப்புவது போல் எனக்குள்ளே ஒரு எண்ணம். என் கண்முன் வளர்ந்த நீ எப்படி இருக்க வேணும்னு நினைச்சேனோ, அதெல்லாம் கை கூடினாப் போல் சந்தோஷம். ஆனால் எத்ர கட்டிக் கொடுத்தாலும், சொல்லிக் கொடுத்தாலும், சமர பூமியைக் கண்டதும் நடுநடுங்கிப் போகிறவர்கள் தான் இந்த அஹிம்சா வழியில் அதிகமான பேர்களும், பதவியையும் பொறுப்பையும் வகிக்க வருபவர்கள் தான் எல்லாரும். அந்தக் களத்தில் மின்மினிப் பூச்சிகளாக ஆண்மையிழந்து சுற்றிக் கொண்டிருப்பவர்களையே இன்றைக்கு நாடு முழுசும் பார்க்கிறோம். நீ ஏது பதவி வகிச்சாலும் எரிமுட்டை தட்டி ஜீவனம் செய்தாலும் பத்து நூறு குட்டிகளுக்குப் படிப்பிச்சாலும், ஒரு முரட்டுப் புருஷனுக்கு மணவாட்டியானாலும் சத்தியத்தையும் அஹிம்சையையும் முழு வடிவத்தில் அந்த வாழ்விலே, அந்தத் தொழிலிலே காணவேணும். அப்போள் லோகத்துள்ள சக்தியெல்லாம் நிண்டே பங்கில் வரும். சத்தியமே ஜயம்னு ஏட்டில் வரஞ்சு வச்சாப்போல அது வராது குஞ்ஞே. அதை வாழ்விலே வரைந்து கொள்ள வேணும். நான் உனக்கு என்றென்றைக்கும் எப்போதும் சொல்லும் ஒரே அறிவுரை இதுதான். ஊருக்கு இதைச் சொல்லத்தான் உன்னை ஆசையோடு உருவாக்கினேன்..."

சரளமாக மெதுவாக இழிந்து கொண்டிருந்த அருவி பெரிய பெரிய பாறைகளையும் மண்ணையும் காட்டிக் கொண்டு வறண்டு விட்டாற்போல் அவளுக்குத் தோன்றுகிறது. தண்ணீர் வழியும் போது தோன்றாத அச்சம், தண்ணீரில்லாத போது தோன்றுகிறது.

"எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது, அம்மாவா! சில சமயங்களில் பயமாக இருக்கிறது. உங்களை, அம்மையை, அப்பாவை, எல்லோரையும் இந்தக் காட்டிலிருந்து நாட்டுக்குக் கொண்டு போக வேண்டும் போல் ஒரு பரபரப்பு. உங்களிடம் சொன்னால் கேலி செய்வீர்கள்..."

"எந்த பயம் பற்றி?..." அவருடைய புருவங்கள் அவளுடைய முகத்தைக் கண்டு சுருங்குகின்றன.

"அக்கரையிலிருந்து மாரன்கோரனெல்லாம் இங்கு வந்து அரிசி கேழ்வரகெல்லாம் கடத்திப் போகலாமா? அம்மாவே யார் பக்கம், என்ன நினைக்கிறாள், என்னிடம் ஏன் மறைக்கிறாளென்று புரியவில்லை, அம்மாவா!"

"அம்மையோ? என்ன பொய்? எனக்குப் புரியவில்லை மகளே?"

அவள் விளக்குகிறாள்.

"ரத்தப் பசிக்காரர்க்குச் சோறிடுவது முறையோ அம்மாவா? அக்கரையில் சுதீர் அப்பாவி மலைக்காட்டுப் பணியரையும் அடியரையும் ரத்தப் பசிக்காரர்களாக்க, அந்த துரோகிகளுக்கு இங்கே தெரிந்து உதவி செய்யலாமோ?"

"யமுனா, பசியென்று வரும்போள் தராதரம் பார்ப்பவள் அம்மையல்லே. ரத்தப்பசி எப்படி வரும்? வயிற்றுப் பசி முற்றும் போது வரும். வயிற்றுப் பசி அவிஞ்சால் - பின்ன அது வரான் வழியல்ல. யமுனா, காட்டில் இருக்கும் நிசப்புலிகளை விட, நாட்டில் பசுத்தோல் போர்த்திய புலிகள் நிறைய வளர்ந்துவிட்ட அபாயத்தைச் சமாளிக்க, நிசப்புலிகளே வந்து போலிகளைக் காட்டிக் கொடுக்கும் நிலை இன்றைக்கிருக்கிறது. ஆண்டவனுக்கே அர்ப்பணமாக்கிக் கடைசி வரையில் அன்பு வழியில் தைரியமாக நடப்பது தான் நம் கடமை, யமுனா. பாபுஜி நவகாளியில் அடிவச்சு யாத்திரை செய்தப்போள் பிரார்த்தனைக் கூட்டத்தில் கொள்ளைக்காரனும் கொலைகாரனும் வந்து கண்ணீர் விட்டதை நான் பார்த்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கை போகாது. சுதீரனும் சகாக்களும் நம் ஆசிரமத்தை இரத்தக் களறியாக்க வரும்போதும் அஹிம்சை தீபத்தைக் கையிலேந்திக் கொண்டு, அச்சமின்மை என்ற வாளாயுதத்தை நெஞ்சில் தாங்கி நிற்போம். அச்சமேது மகளே? நீ பாடுவாயே? 'அச்சமில்லைன்'னு அன்னுசமர நடந்த போது பாடிய பாட்டு? அது இன்னும் இருக்கு..."

இந்த நம்பிக்கையைச் செவிமடுக்கையில் உள்ளம் புல்லரிக்கிறது.

"நல்ல நல்ல காரியங்களுக்கு வேண்டி ஒரு முறை காத்திருந்தாலும் பாதகமில்லை மகளே, நம்பிக்கை இழக்கக்கூடாது."

"பெரியப்பாவே எல்லா ஏற்பாடுகளும் செய்து இருக்கிறார் என்றால் எப்படி இருக்குமோ. அதுவேறு தெரியவில்லை. அவருடன் அதிகமாகக் கூட நான் பழகியதில்லை..."

"உனக்கு அதெல்லாம் சொல்லித் தர வேண்டுமா, யமு? அங்குள்ள சர்வோதய சங்கம் மூலமாகத்தான் பேச்செல்லாம் ஏற்பாடு செய்வார். நீ உன் ஆழமான எளிமையான பேச்சால் உண்மைக்கு உயிர் கொடுக்கணும்..."

அவள் வண்டி வரும் திசையைப் பார்த்துக் கொண்டு மௌனமாக நிற்கிறாள்.

"யாருக்குக் கல்யாணம்? பெரியச்சன் மகனுக்கோ?"

"இல்லை. மகளின் மகளுக்கு. நான் இரண்டு வருஷத்திற்கு முன் போயிருந்தப்போ கூட மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தார். நீருவுக்கு ஐ.ஏ.எஸ்.ஸாக..."

"ஓ! ரஸமாகப் பொழுது போகும், அப்போது உனக்கு?"

"நான் அங்கே படித்து முடிந்து வரவேணுமென்று ஒரே பிடியாக இருந்தார். பெரியம்மை காலமான பிறகு நான் இப்பத்தான் அங்கே போறேன்."

"அப்ப ஒருகால் பெரியச்சன் உனக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சிருப்பாரோ?"

"ஓ... ஒரு ஐ.ஏ.எஸ். பார்ப்பாராக இருக்கும்!"

"த்ஸ...த்ஸ...ஐ.ஏ.எஸ்.ஸைக் கல்யாணம் கழிக்க ஆசையுண்டானால் சொல் மகளே? க்யூவில் நிற்க ஞான் கொண்டு வரும், ஆசையுண்டோ?"

யமுனா மறுமொழி ஏதும் கூறவில்லை. வண்டி வந்து விட்டது. கூட்டம் மூன்றாம் வகுப்புகளை முற்றுகை இட முண்டியடித்துக் கொண்டு ஓடுகிறது.

இடத்தைக் கண்டுபிடித்து ஏறுவதற்குள் பல பேருடன் முட்டி மோத வேண்டியிருக்கிறது. ஓரத்திலுள்ள ஒற்றை ஆசனம்.

எத்தனையோ முறைகள் பல சந்தர்ப்பங்களை ஒட்டி அவள் சென்னைக்குப் பிரயாணம் செய்திருக்கிறாள். பெரிய தந்தையின் வீட்டில் தங்கியிருக்கிறாள் எனினும் இப்போது காலவரையறை ஏதும் இல்லாத நாட்கள் தங்கக் கூடும். எதிர்காலம் திட்டவட்டமாகத் தெரியாது. வண்டி, தொழில் நகரத்துக் குடிசைகளை எல்லாம் தாண்டிச் செல்கிறது.

கோயமுத்தூரில் எல்லாப் பகுதிகளும் அவளுக்குத் தெரியும்.

வண்டி டெக்ஸ்டூலைக் கடந்து செல்கையில் விளக்குகள் பூத்துவிட்டன.

"கொஞ்சம் காலை எடுத்துக்கிறீங்களா?"

இரட்டைப் பின்னல் தொங்க அவற்றில் கனகாம்பரம் சரமும் ஊசலாட, பூக்குலுங்குவது போல் நைலான் சேலையில் நிற்கிறாள் ஒரு தங்கை.

"நீங்க...நீ... யமுனால்ல?"

"ஆமாம். அருணாதானே?"

"அருணாவேதான்."

பெருமிதம் ததும்பும் சிரிப்பொன்று இதழ்களில் விளையாடுகிறது. உயர்நிலைப் பள்ளியில் யமுனாவுக்கும் கீழ்வகுப்பில் அருணா படித்தாள். மாணவர் மன்றப் பேச்சுப் போட்டியில் ஆண்டுதோறும் அவள் பரிசைத் தட்டிக் கொண்டு செல்வாள். அடுக்குமொழி அருணா என்றே பெயர் அவளுக்கு. நல்ல குரல் அவளுடைய சொத்து. அவளுடைய மாமன் திராவிட முன்னேற்றக் கட்சியின் ஒரு தலையாய உறுப்பினன். அவர்களுடைய வீட்டில் அண்ணாதுரை விருந்துண்ண வந்திருக்கிறார். ஏன், அவளுக்கு அந்தப் பெயரை வைத்ததே அவர்தாம். அந்தக் காலத்திலேயே அந்தத் தலைவரின் பெயர் சொன்னாள் உருகிப் போவாள்.

"இங்கே எப்படி அருணா?"

"நாலு நாளா மேல்வட்டத்தில் பிரசாரக் கூட்டங்கள்; பேசிப் பேசித் தொண்டைக் கட்டிப் போச்சு..."

தொண்டை கட்டித்தான் இருக்கிறது.

"ஏனிப்படி மூணாங்கிளாசில் வரே?"

"ஏன் யமு? என்னை என்னன்னு நினைச்சிட்டே? நாங்க ஏழைங்க; எங்கக் கட்சி ஏழைங்க கட்சி."

யமுனா சிரித்துக் கொள்கிறாள்.

"நீ என்ன பண்ணிட்டிருக்கே யமு? எம்.ஏ. பண்றேன்னு சொன்னாங்க..."

"ஒண்ணும் புரியலே. உன் பாடு பரவாயில்லே அருணா..."

"என்ன பரவாயில்லே? ஒரே நாளில் ரெண்டு மூணு மீட்டிங் இருந்திடுதா? சமாளிக்க முடியறதில்ல..."

"ஆனா, உனக்கு இதுதானே எத்தனை நாளாகவோ குறிக்கோளாக இருந்தது?"

அருணா அழகாகச் சிரிக்கிறாள்.

சிறு கூடான உடல்வாகு, உதட்டருகில் ஒரு மச்சம். கவர்ச்சி நிறைந்த கண்கள்! அவள் பேசும் போது கண்கள் இணைந்து பாவங்களை வெளியிடுகின்றன. சுருண்டு அடர்ந்த தலைமுடி, குட்டையான இரட்டைப் பின்னல்களாக விளங்குகிறது. மார்புப் பள்ளத்தில் அழகாக இரு உதயசூரியன் பதக்கம் இழைகிறது. கறுப்பிலே சிவப்பு ரோஜாக்கள் அச்சிட்ட சேலை.

"பிரசாரம் என்றால் என்ன பேசுவாய்?"

"பேச்சு மட்டுமில்லை. பேச்சு, பாட்டு இரண்டும் கலந்து கதாகாலட்சேபம் மாதிரி..."

"அதெப்படி?"

"ஆட்சியில் என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறோம் என்று கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்வதுதான். இந்த நடப்பு ஆண்டில் எத்தனை பள்ளிகள், சாலைகள், மருத்துவமனைகள் திறந்தோம். ஆட்சிக்கு வந்த பின் என்னென்ன திட்டமிட்டு நிறைவேற்றி இருக்கிறோம் எனப்தைப் பாட்டாக, கதையாகச் சொல்வோம்."

"நகரங்களில் செய்யமாட்டாயா? இதெல்லாம் யார் ஏற்பாடு செய்வார்கள்?

"ஏன் செய்யாமல்? அந்தந்த வட்டத்தின் செயலாளர்கள் ஏற்பாடு செய்வார்கள்."

"இதற்கு மாதச் சம்பளம் உண்டா?"

"இல்லே, ஒரு நிகழ்ச்சிக்கு இத்தனைன்னு பங்கு போட்டுக் கொள்வோம்..."

"நாங்கன்னா யாரு?"

"பக்க வாத்தியக்காரர்களெல்லாந்தான். நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க ஒரு குழு இருக்கிறது. ஊருக்குத் தகுந்தாற் போல் வசனங்களை மாற்றி அமைப்போம். தேர்தல் சமயத்தில் ஓய்வே இருக்காது..."

"உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அருணா..."

அருணா அதை ஒப்புக் கொண்டு கலகலவென்று சிரிக்கிறாள். பிறகு அவள் கால்களுக்கிடையில் வைத்த கூடையை இழுத்துத் திறந்து இரண்டு வால்பேரிக்காய்களை எடுக்கிறாள். ஒன்றை யமுனாவிடம் கொடுத்து விட்டு மற்றதைக் கடிக்கிறாள்.

"ஒரே பசி. கார் அலையக்குலைய வேகமாகக் கொண்டு வந்துவிட்டது" அவள் ஒன்றைத் தின்று முடித்து இன்னொன்றைக் கடிக்கையில் யமுனா பாதிகூட மெல்லவில்லை.

"வால்பேரி நல்லாயிருக்கில்லே?"

"எனக்கு உன்னுடைய நிகழ்ச்சி ஒண்ணு கேட்கணும்னு ஆசையாயிருக்கு."

அருணா கபடமில்லாமல் சிரிக்கிறாள்.

"நீ ரொம்பப் படிச்சிருக்கே யமுனா; நான் சொல்றதெல்லாம் கிராம மக்களுக்கு."

"தேர்தல் சமயத்தில்தான் பிரசாரம் செய்வீங்கன்னு நினைச்சேன். எப்போதுமா பிரசாரம்?"

கண்களை உருட்டி விஷயத்தின் தீவிரத்தை அவள் விளக்குகிறாள்.

"பிரசாரம் ஒரு கட்சி நிலைச்சி நிற்க உயிர்த்தண்ணி சோறு மாதிரி. அது பதவியில் இருந்தாலும் தேவை, இல்லாட்டியும் தேவை. தேர்தல் இல்லாத காலத்தில் தான் அவசியம் தேவை."

"அப்ப, பொய்யான பிரசாரத்தினால் கூட ஒரு கட்சி பதவிக்கு வந்து விடலாம் இல்லையா?"

அருணா யமுனாவின் கையைப் பற்றிக் கொண்டு உதட்டைக் கடித்துப் பொய்க் கோபம் காட்டுகிறாள்.

"ஏ, குறும்பு! பொய்ப் பிரசாரம் எதற்குச் செய்ய வேண்டுமாம்? பொய்ப் பிரசாரத்தில் எப்படி வரமுடியும்? நம் மக்கள் முட்டாள்களா? இந்தக் கட்சி பதவிக்கு வருவதற்கு மக்கள் எல்லோரும் இதற்கு முன் இருபது வருஷ ஆட்சியில் தங்களுக்கு அடிப்படைத் தேவைகூடக் கிடைக்கவில்லைன்னு புரிஞ்சிட்டதுதான் காரணம். தென்னாட்டுக் கிராமங்களில் காந்தியைப் பலருக்குத் தெரியாது. ஆனால் அண்ணா என்று சொன்னால் லட்சோப லட்சம் மக்கள் உருகிப் போகிறார்கள். ஒவ்வொரு குடிசையிலும் நான் உங்களில் ஒருவன் என்று கலந்து கொண்டவர் அவர்."

யமுனாவுக்கு 'இப்போது அடிப்படைத் தேவைகள் கிடைக்கின்றனவா?' என்று கேட்க ஆசைதான். அவள் கிடைக்கிறது என்று தான் சொல்வாள். இல்லை என்பதை தன்னால் நிரூபிக்க முடியாது.

"அது போகட்டும். அருணா - நீ திருமணம் செய்து கொள்ளலியா?"

"அதைப்பற்றி யோசிக்கவே எனக்குப் பொழுதில்லை. சரியாப் போகுது..."

"யார் கண்டது? அடுத்த தேர்தலுக்குப் பிறகு நீயே மந்திரியாகி விடலாம்!" அருணாவுக்கு இந்தப் புகழுரை பிடித்திருக்கிறது! சிரித்துக் கொள்கிறாள்.

"அறுபத்தேழிலேயே அண்ணா, 'பாப்பாவை நிறுத்தி வச்சா ஓட்டை வாரிட்டு வந்திடும். வயசாகலியேன்னு பார்க்கிறேன்' என்றார். ஆனால் நான் தேர்தலுக்கு நிற்க மாட்டேன்."

"ஏன்?"

"எனக்கு இந்த வாழ்க்கை தான் பிடிச்சிருக்கு. இது கலை. கலைக்காக வாழ்வதுதான் எனக்கு இஷ்டம்..." என்று உதயசூரியன் முகப்பை உதட்டில் வைத்துக் கொள்கிறாள்.

கலை! பிரசாரமும் ஒரு கலையோ? இருக்கலாம். அறுபத்து நான்கு கலைகளில் அதுவும் ஒன்றாக இருக்கலாம்.

வாழ்க்கையில் அரசியல் என்றாலும் அதில் ஒரு முகமாகக் குவிய, திட்டவட்டமாக இளவயசில் ஒரு கோட்பாட்டை வரையறுப்பது சுதந்திர சிந்தனைகளைத் தடைச் செய்வதுதானே? பொதுவுடைமைத் தத்துவ நாடுகளில் இதைக் கண்ணுங் கருத்துமாகச் செய்கிறார்கள். சுதந்திர சிந்தனை என்றாலும், சட்டதிட்டக் கூடுகளில் வளரும் செடியாகவே வளருகிறது. அவளும் அப்படித்தான் அம்மாவனும் அப்படித்தான். அவர்கள், காந்தி என்ற ஒருவர், இலட்சியம் என்று கண்ட சட்டதிட்டங்களுக்கு தம்மைப் பழகிக் கொண்டிருக்கின்றனர். யமுனாவுக்கு டெரிலீனும் காஞ்சிபுரமும் பிடிக்கவில்லை. பழக்கந்தானே காரணம்?

ஆனால்... இப்போதெல்லாம் காந்தியடிகளின் பெயரைச் சொன்னாலே அவள் மனமொன்றி விடுவதில்லை. அது குருட்டு பக்தி என்று அறிவு குறுக்கிடுகிறது. சத்திய வாழ்வு வாழ முடியுமா என்று அவர் தம்மைச் சோதனைக்குள்ளாக்கிக் கொண்டார். வெற்றியின் பிசிறுகளை உலகம் கண்டு கொண்டது. அவருடைய மட்டத்துக்கு கோடானு கோடியும் உயர முடியுமா? ஆழ்ந்து சிந்தனை செய்தால் சுதீர் கூறினாற் போல் வாழ்க்கையில் ஒரு போலித்தனம் வளரவே அவர் வழி காட்டி இருக்கிறார்...

திடீரென்று எங்கோ வழிமாறிப் போவது போல் குளிர் சிலிர்ப்பு ஓடுகிறது. உடல் குலுங்குகிறது இலேசாக.

"என்னைப் பற்றியே கேட்டியே? நீ இப்போ எங்கே போயிட்டிருக்கே அதைச் சொல்லலியே?"

"நானா? பெரியப்பா வீட்டுக்கு..."

"பட்டணமா?"

"ஆமாம்; பரங்கிமலைக்கும் பல்லாவரத்துக்கும் நடுவே வீடு... சந்தானம்னு, செகரிடேரியட்லேருந்து ரிடையராகி இருக்கிறார்."

"போன முனிசிபல் எலெக்ஷனில் சுதந்திரக் கட்சியிலே நின்னாரே அவரா?"

"ஆமாம். அப்படின்னு என்னை வரச்சொல்லி லெட்டர் கூட எழுதியிருந்தார்."

"நீ ஏன் வந்திருக்கக் கூடாது. யமு? நான் கூட்டணி பிரசாரத்துக்குப் போயிருந்தேன். அவரு கார் தானே வந்தது? எங்க மாமனுக்கு ரொம்ப வேண்டியவர். புத்தி வாக்கம் தொகுதியிலே எங்க மாமன் சட்டமன்றத்துக்கு நின்னு வெற்றி பெற்றப்ப சந்தானமையரு கூட்டணிப் பக்கம் இருந்தாரே?"

"ஓ...?"

"நீ ஏன் வரலே?"

"எனக்கு அரசியல்னா பயமாயிருக்கு அருணா."

"நீ இப்படிச் சொல்வது தப்பு. ஆளுங்கட்சியோடு கூட்டா இருக்கிறப்ப உனக்கென்ன பயம்..."

"எனக்கு உன்னைப் போலெல்லாம் பேசத் தெரியாது அருணா."

"அதெல்லாம் சும்மா. நான் நம்பமாட்டேன். சொகுசா கல்யாணம் கட்டிக்கிட்டு உக்காந்திடுவியோ என்னமோ?"

அருணாவோடு அவளும் சேர்ந்து சிரிக்கிறாள்.

"அதுவும் கூடத் தப்பில்லே..."

அத்தியாயம் - 6

சென்டிரலில் பெரியப்பாவின் வீட்டிலிருந்து யாரேனும் வந்திருப்பார்கள் என்று யமுனா எதிர்பார்த்திராமல் இல்லை. பெரியப்பா வயோதிகர். வீட்டோடு இருக்கும் பெரியம்மாவின் விதவைத் தங்கை வெளியில் வரமாட்டாளாக இருக்கும். நீரு, பெரியப்பாவின் மகள் வயிற்றுப் பேத்தி. அவளை எதிர் கொண்டழைக்க வரலாம். ஆனால் அவளுக்குத் திருமணம் நிச்சயமாயிருக்கிறதாம். வருகிறாளோ இல்லையோ? நீருவின் தம்பி ரவி... வரலாம். அல்லது கார்தானே; பெரியப்பாவே வருகிறாரோ? அல்லது ஓட்டி மட்டுமே ரெயிலடி மேடையில் நிற்கிறானோ?

அருணாவை வரவேற்கத்தான் கறுப்பு சிவப்புக் கரைத்துண்டுகளுடன் நாலைந்து பேர் நிற்கின்றனர்.

"நான் வரேன் யமு! ஒரு நாளைக்கு நிச்சயமாக நீ என் நிகழ்ச்சிக்கு வரணும்!" என்று விடை பெற்றுக் கொண்டு அருணா கைப்பையை ஆட்டிக் கொண்டு குதி உயர்த்தும் குமிழ் செருப்பு டக்டக்கென்று ஒலிக்க நடந்து செல்கிறாள்.

கைப்பெட்டியும் கையுமாக யமுனா இறங்கிச் சில நிமிடங்கள் கூட்டம் கலைவதைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.

அப்போதுதான் நீண்ட கதர் ஜிப்பா. கறுப்புக் கரையிட்ட கதர் வேட்டி ஆகிய கோலத்துடன் ஓர் இளைஞன் அவளை நோக்கி வருகிறான்.

செந்தாழை நிறம், அந்தணன் என்ற நிலைக்குரிய மென்மையையோ, மேன்மையையோ உடனே ஏற்றி வைத்துவிட முடியாமல் முகத்தில் ஒரு முரட்டுத்தனம் தெரிகிறது. கண்கள் இலேசாகச் சிவந்திருக்கின்றன. வெற்றிலை, சிகரெட் பழக்கம் உண்டு என்று அறிவிக்கும் உதடுகள், முடி வெட்டிக் கொள்ள நேரம் இல்லாது போன்றதொரு கிராப்பு.

"நமஸ்காரம்." குரலில் சுரசுரப்பு. கைகள் குவிகின்றன.

"நமஸ்காரம். நீங்கள்..."

"இந்துநாத்! தென்வட்டம் யூத் காங்கிரஸ் லீடர். நேத்துதான் நீங்க வரதா பெரியப்பா சொன்னார். வாங்கோ வண்டி வெளியே இருக்கு..."

இப்படி அரசியல் கலப்பட வரவேற்பை அவள் சற்றும் எதிர் நோக்கி இருக்கவில்லை.

அவளுக்குத் தெரிந்து பெரியப்பா கதர் உடுத்தியவரல்ல. அந்தக் காலத்தில் குடும்பத்துக்கு ஒட்டாமல் போய்விட்டான் என்று தந்தையைப் பற்றி கண்டவர்களிடமெல்லாம் குற்றம் சொல்வாராம். சென்ற தடவை அவள் பெரிய தந்தையின் வீட்டில் சில நாட்கள் தங்கிய போது கூடக் காங்கிரஸின் கொள்கைகளை வாயில் வறுத்து அரைத்துக் கொண்டிருந்தார். இந்த இளம் காங்கிரஸ் தலைவன் பெரியப்பாவுக்கு வேண்டியவன் தானா?

"பெட்டியை இப்படிக் கொடுங்க?" என்று அவன் கேட்க, அவள் பரவாயில்லை என்று தடுக்க இறுதியில் சற்றுப் பலமாகவே பிடுங்கினாற் போல் பெற்று, கூட வந்த ஒரு போர்ட்டர் தலையில் வைக்கிறான்.

"எனக்கு எத்தனையோ நாளாக உங்களைப் பார்க்க வேண்டுமென்றே ஆவல்! பெரியப்பா சொன்னார். நானே அழைச்சிண்டு வந்துடரேன்னு கிளம்பிட்டேன். சர்வசேவா சங்கத்துக்காரா ஏதோ மீட்டிங்குக்கெல்லாம் ஏற்பாடு பண்றதாகச் சொன்னார். நீங்க பேசாம எங்கிட்ட விட்டுடுங்கோ. நான் திக்கெட்டும் பேர் சொல்றாப்போல விளம்பரம் பண்ணிட மாட்டேன்? லீடர்ஷிப் உங்களைத் தேடி வந்திண்டிருக்கு. உண்மையைச் சொல்லப் போனா, மிஸ் யமுனா, தென்னாடே காத்துக் கிடக்கு. அப்பா, அம்மா, குடும்பமே தேசத் தொண்டர்கள். நாட்டுக்காக விரலசைக்காத கபோதிகள்ளாம் கதரின் பேருக்கே ஒரு கெட்ட பேர் ஏத்த மாட்டிண்டு இன்னிக்கு இம்பாலா காரில் போறப்ப, இப்படியும் ஒரு குடும்பம் இருக்குமான்னு ஆச்சரியப்பட்டேன்..."

நல்ல வேளை, இந்துநாத் அவள் பேசவேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை. கார்க் கதவைத் திறந்து, "உட்காருங்கள்" என்று உபசரிக்கிறான். புதிய அம்பாஸடர் கார். ஓட்டியும் புதியவனாக இருக்கிறான். அவன் முன்புறம் அமர்ந்து கொள்கிறான். வண்டி சென்டிரலைக் கடக்கிறது. தென்படும் சுவர்களிலெல்லாம் போஸ்டர்கள், சினிமா, அரசியல், இலக்கியம், தனி மனிதப் பிரவாகம் எல்லாமே சுவர்களில்! ஓ! நகரம் நகரம் தான்!

"இந்தப் போலிகளுக்கெல்லாம் சாவு மணி அடித்து உண்மையான தியாகிகளை, நாட்டுப்பற்று உள்ளங்களைச் சேர்த்து, அரசியலைப் புனிதமாக வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனே நான் அரசியலுக்கு வந்தேன் மிஸ் யமுனா. நான் ஏற்கெனவே நம் வட்டத்திலேயே நாலு கூட்டங்களுக்கு காந்தி நூற்றாண்டு விழாக் கொண்டாட ஏற்பாடு பண்ணியாச்சு. உங்களுக்கு நல்ல பின்னணி, படிப்பு, பர்ஸனாலிட்டி, பெண்ங்கற கிளாமர் எல்லாம் இருக்கு. நீங்க சும்மா மேடையில் நின்னாலே போதும், கூட்டம் தன்னால மயங்கிடும்" என்று சொல்லிவிட்டு அவன் கண்ணாடியில் அவள் முகம் தெரியாதபடி நகர்ந்து கொள்கிறான்.

"நீங்கள் நினைப்பதுபோல் என் எண்ணங்களில் பொதுக் கூட்டங்களும் தலைமைப் பதவியும் கொஞ்சமும் கிடையாது. உண்மையைச் சொல்லப் போனால் நான் தப்பித் தவறிக் கூட அரசியல் பக்கமே போக விரும்பவில்லை."

"அப்பா?" அவன் சட்டென்று அவளைத் திரும்பிப் பார்க்கிறான்.

அவள் புன்னகை செய்கிறாள். நீண்ட முடி வறட்சியாகப் பறந்து முகத்தை மறைக்க வந்து விழுவதே அழகாக இருக்கிறது. நீலத்தில் கறுப்புப் பூ எல்லைக் கட்டிய கதர்ச் சேலை. புதைய புதைய அதே மாதிரியான சோளி. கைகளில் இரண்டு கண்ணாடி வளையல்கள். அணிமணிகள் வேறொன்றுமே இல்லையெனினும் அடுக்கு நந்தியா வட்டை மலர்ந்தாற் போன்ற புன்னகை முகம்.

"மிஸ் யமுனா, நம்முடைய நட்பு பிரமாதமான பலனைக் கொடுக்கப் போறதுன்னு நிச்சயமாக நான் நம்பறேன். அதனால் முதலிலேயே உங்கள் கருத்து தப்புன்னு சொல்லக் கூடாதுன்னு பார்க்கிறேன். இந்த மாதிரி இன்டலக்ச்சுவல்களெல்லாம் ஒதுங்கி ஒதுங்கித்தான் இன்னிக்கு அரசியல் சாக்கடை மட்டத்துக்கு வந்திருக்கு..."

சில வினாடிகள் மௌனம்.

தொடர்ந்து விடுவிடென்று கேட்கிறான்.

"அரசியல் வேண்டாம்! அப்ப சர்வோதயம் அது இதெல்லாம் எப்படிச் செயல்படும்? பேப்பரில் ஒரு நாலு வரிச் செய்தி போட வேண்டுமானால் அதற்கு ஒரு மந்திரி பேர் இருந்தால் தான் வரது. அரசியல் பதவிங்கற துருப்புச் சீட்டு இல்லாம ஒண்ணும் நடக்காது. அதனால் அரசியல் பதவியைச் சம்பாதிக்க முதலில் முயற்சி செய்யணும். அதில்லாமல் ஒரு சுக்கும் நடக்காது..."

யமுனா மௌனமாகிறாள்.

அவர்களுடைய கானகப் பகுதியில் அரசியல் கூட்டங்கள் நடப்பதில்லை என்றாலும் பல இடங்களிலும் அவள் அரசியல் கூட்டங்கள் கேட்டதில்லையா? எதிர்க்கட்சிக்காரர்கள் பன்றியை கழுதையைக் கூட்டத்தில் புகுத்துவார்கள். கட்சித் தலைகளின் நடத்தைகளில் அவதூறுகளைக் கோத்து வீசுவார்கள். அடுக்கு மொழி அலங்காரங்கள்; நீதி நூல்களிலிருந்து மேற்கோள்கள் - சொற்களே ஆயுதங்கள்! அத்தகைய அரங்குகளுக்கா அவள் தயாராக வேண்டும்?

அவளால் அதை ஒப்ப முடியவில்லை. உயர் பண்புகளுடைய பெண் ஒருத்தியின் மனசில் கற்பு நெறி எப்படி வேரூன்றியிருக்குமோ, அப்படித் தீர்மானமான அரசியல் பதவிகளைச் சாராத பொறுப்புக்குரியவளாகவே அவள் தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறாள். அந்த வெறுப்பு அவள் சுற்றுமுற்றும் கண்டறிந்ததால் வளர்ந்ததுதான்.

தொடக்கமே குழப்பம். வீடு வரும் வரையில் அவள் பேசவில்லை. பொட்டலில் ஒரு பசுந்தீவு - மாஞ்சோலையிடையே பெரியப்பாவின் பங்களா காட்சியளிக்கிறது. அங்கே அவர் வீடு கட்டிய காலத்தில் ரெயில் நிலையம் இருந்த ஒன்றரை மைல் தொலைவுக்கும் சில குடிசைகளைத் தவிர சுற்று வட்டத்தில் ஒரு வீடு கிடையாது. இப்போதோ அழகழகாகச் செப்புகள் போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக வீடுகள் எழும்பியிருக்கின்றன. போட்டி போட்டுக் கொண்டு குடிசைகளும் கட்சிக் கொடிகளும், தேநீர்க் கடைகளும் சாக்கடைகளும் பெருகி இருக்கின்றன. கடைவீதி ஒன்று குடிசைகளைப் பிரித்துக் கொண்டு வட்டத்தில் முதுகெலும்புபோல் ஓடுகிறது. நசநசவென்று குழந்தைகள் தெரியும் ஒரு கூரைக் கொட்டகை - பள்ளிக்கூடம் போலிருக்கிறது. தையற் கடைகள், கசாப்பு, மின்கடை, லாண்டிரி, சைக்கிள் கடை, அடகுக் கடைகள்...!

கடைகள், மனிதர்கள், அரசியல் கட்சிகள், தெருக்கள், குடிசைகள், சாக்கடைகள், கடன்காரர்கள்... இவை வளர்ச்சியின் அம்சங்கள் தாமோ? வளமையின் அறிகுறிகள் தாமோ?

வண்டி மரத்தடியில் வந்து நிற்கிறது. கதவை அறைந்த ஓசை கேட்டுச் சோடாபுட்டி மூக்குக் கண்ணாடியும் டிரான்சிஸ்டர் கையுமாக ரவி வருகிறான்.

"என்ன ரவி?"

ரவி ஒரு சிரிப்புச் சிரித்துத் தலையை ஆட்டிவிட்டு உள்ளே ஓடுகிறான். இந்துநாத் "தாத்தா இருக்காரா? பரவாயில்லை. பூஜையில் இருந்தால் கூப்பிட வேண்டாம். அப்புறம் வந்து பார்க்கறேனென்று சொல்! நான் வருகிறேன் மிஸ் யமுனா" என்று அவளுடைய பதிலுக்குக் காத்திராமல் சொல்லிவிட்டுப் போகிறான்.

நீரு மாடிப்படியிலிருந்து விரைந்து இறங்கி வருகிறாள். ஒடி வந்து தழுவிக் கொள்கிறாள். உள்ளிருந்து சின்னம்மா ஈரக்கூந்தலும் நெற்றி நடுவில் துளி நீறுமாக வந்து புன்னகையுடன் வரவேற்கிறாள்.

நீரு எப்படி வளர்ந்திருக்கிறாள்? பாவாடை தாவணியுடன் இல்லை. நல்ல உயரம், பருமன், மஞ்சளில் இளம் பச்சை இலைகள் அச்சிட்ட நைலக்ஸ் - அதே கடுகு மஞ்சளில் குட்டைக் கையும் அரை முதுகுமாகச் சோளி.

"பழனி! பெட்டியை மாடியில் கொண்டு வை" என்று உத்தரவிடுகிறாள் சின்னம்மா. இடுப்பு நிஜாரைச் செருகிக் கொண்டு வெற்று மேனியாய் ஒரு பத்து வயதுப் பையன் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போகிறான்.

முன்பு மாடியில் ஓர் அறையும் வராந்தாவுந்தான் இருந்த நினைவு - இப்போது இரண்டு பக்கங்களும் இரண்டு படுக்கை அறைகள், குளியலறைகள் இருக்கின்றன. மொஸெய்க் தரையில் முகம் தெரிகிறது. நீருவின் அறையில் நுரை மெத்தைப் படுக்கையில் நேர்த்தியான பூவிரிப்பு. மெல்ல விசிறி சுழல்கிறது. ஓரத்தில் முகம் பார்க்கும் கோழி முட்டை வடிவக் கண்ணாடி கூடிய ஒப்பனை மேசை. அதில் தான் எத்தனை வகையான குப்பிகள், ஜாடிகள்!

"நீ இங்கே குளிச்சு டிரஸ் பண்ணிக் கொள்ளலாம் யமு. கிணற்றில் 'போர்' போட்டப்புறம் மேலே தண்ணீர் கொட்டுகிறது. ஒரு கெய்ஸர் வாங்கி வையுங்கோன்னா தாத்தாவுக்கு இன்னும் மனசு வரல..."

"பரவாயில்லை நீரு. நான் கிணற்றங்கரையிலேயே துவைத்துக் குளிப்பேன். எனக்கு இந்த ஆடம்பரங்கள் தான் பழக்கமில்லை..."

"அதெல்லாம் உங்க காட்டிலேதான் தலையெழுத்து. இங்கே என்ன கஷ்டம்! பழனி! பழனி! அம்மாவுக்கு வெந்நீர் இங்கே கொண்டு வை!"

"எனக்கு வெந்நீரே வேண்டாம். நான் என்ன மாப்பிள்ளையா, இப்படி உபசாரத்துக்கு?"

இதற்குள் சின்னம்மா காப்பியை எடுத்துக் கொண்டு வருகிறாள்.

"அடடா... நீங்க ஏங்க எடுத்து வரணும்?..."

சின்னம்மா பதிலுக்கு புன்னகையுடன் போகிறாள்.

குளியலறையில் அமிழ்ந்து குளிக்கும் பிளாஸ்டிக் தொட்டி, துடைக்கும் துண்டுகள், சோப்பு வாசனைகள். இரண்டு வாளிகளில் வெந்நீர் வருகிறது.

இத்தகைய ஆடம்பரங்களை யமுனா முன்பு இங்கு கண்டதில்லை. வாழ்க்கையின் இன்பங்களெல்லாம் இத்தகைய சுகங்களில்தான் இருக்கின்றன என்று தான் எல்லோரும் கருதுகிறார்கள்.

நீரு கல்லூரியில் புகுந்த முதல் ஆண்டே தவறிப் போனாள்.

தந்தை உத்தரப்பிரதேசத்திலோ ராஜஸ்தானத்திலோ ஐ.ஏ.எஸ். வர்க்கம். இவளும் ரவியும் படிப்புக்காகவே பாட்டனார் வீட்டில் தங்கி இருக்கின்றனர். தோழிகள் அரட்டை. வஞ்சனையில்லாத நாவுக்கு வேண்டிய நல்ல உண்டிகள். சினிமாக்கள் - இப்படி உல்லாசப் பொழுது போக்காக இவளுக்குப் போகின்றன நாட்கள். மேனி சம்பங்கிப் பூவின் மென்மையோடு மினுமினுக்கிறது. இனி... திருமணம்.

உலர்ந்த சேலையை உடுத்திக் கொண்டு தலையில் துண்டுடன் அவள் வெளியே வருகையில் மாடியில் யாருமே இல்லை போலிருக்கிறது.

"நீரு?..." என்று திரையைத் தள்ளிக் கொண்டு ஓரடி வைத்தவள் திடுக்கிட்டாற் போல் பின்வாங்குகிறாள்.

ஆயிரம் கோணல்களாக உடல் குறுகுறு போல் தோன்றுகிறது.

பம்பாய் டையிங் விளம்பரத்தில் காணும் ஆண் மகனைப் போல் ஓர் ஆடவன். நீரு அவன் மார்போடு ஒட்டிக் கிடக்கிறாள்.

யார்... இவன் தாம்... இவர் தாம்... அவளுக்கு நிச்சயிக்கப் பட்ட...

பட்டுத் துணியைக் கொண்டு மூடினாற் போல் செவிகள் சூடேற, வாளியில் சேலையைப் போட்டு வந்து ரெயிலழுக்குப் போகத் துவைத்துத் தோட்டத்தில் உலர்த்துகிறாள்.

பெரியப்பா எத்தனை நேரமாகப் பூஜை செய்கிறார்.

மோடாவில் நாள்தாள் கிடக்கிறது. ஊஞ்சற்பலகையில் யாருமில்லை.

பூஜை அறைப் பக்கமிருந்து தான் மனசைக் கவ்வும் பத்தி வாசனை வருகிறது. சின்னம்மா நிவேதனம் கொண்டு போகிறாள்.

யமுனா இருப்புக் கொள்ளாமல் நாள்தாளைப் பிரித்துப் பார்க்கிறாள்.

பாங்கி தேசியமயச் சட்டம் லோக்சபாவுக்கு வந்திருக்கிறது. சந்திரப் பிரயாண விவரங்கள்; பாராட்டுதல்கள்... கட்சிப் பிளவின் காரசாரத் தாக்குதல்கள்.

மனம் பதியவில்லை.

மெள்ளப் பூஜை அறைப் பக்கம் செல்கிறாள்.

அடிவைக்குமுன் தூக்கி வாரிப் போடுகிறது, அங்கிருந்து வரும் ஒலி.

"மலையாளத்தான் இருக்கும் வரை உருப்படாது..."

'பெரியப்பா யாரிடம் என்ன பேசுகிறார்?'

"ஏதோ ஒரு பையனைச் சுமாராகப் பார்த்து இந்தப் பெண்ணை, நம்மாலானது, பிடிச்சுக் கொடுக்கலாம்னு பார்க்கிறேன். காந்தியாவது பிரசாரமாவது?"

ஒட்டுக் கேட்பது இரத்தத்தைச் சுவைப்பதற்கொப்ப அருவருப்பைக் கொடுக்கிறது.

"என்ன பெரியப்பா? பூஜையின் போது பேசமாட்டீர்கள் என்று வெளியே இருந்தேன். பேச்சுக் குரல் கேட்டது. பூஜையின் இடைவேளையா?"

"உன்னைப் பத்தித்தான் கேட்டேன். இந்துநாத் வந்திருந்தானா?"

"உம்..."

பெரியப்பா கற்பூரத்தைக் கொளுத்திச் சம்புடத்திலுள்ள சாளக்கிராமங்களுக்குக் காட்டுகிறார். பெரியப்பா நல்ல சிவப்பு. வெளியில் அலையாத மினுமினுப்பு; தலை முழுதும் வழுக்கை.

"கற்பூரம் ஒத்திக் கொள்..."

காதில் துளசியுடன், கழுத்தில் உருத்திராட்ச மாலையுடன் அபிஷேக நீரைக் கொடுக்கிறார். உள்ளுக்குள் ஏதோ ஒன்று கையை நீட்டாதே என்று தடுக்கிறது.

'மலையாளத்தான் யார்?...யாரை...?'

அபிஷேக நீரை வாங்கிக் கொள்கிறாள். பூவை ஈரக் குழலில் சூடிக் கொள்கிறாள். சின்னம்மாவுடன் விழுந்து வணங்குகிறாள். உள்ளுணர்வு என்ற ஒன்று அந்தச் சொல்லில் பொங்கி எழுகிறது. அவள் பட்டும்படாமலும் இயங்குகிறாள்.

அத்தியாயம் - 7

பெரியப்பா பூஜையை முடித்துவிட்டு ஒரு வெள்ளித் தம்ளர் நிறையப் பாலைப் பருகுகிறார். காதில் துளசியுடன் ஊஞ்சலில் வந்து உட்காருகிறார். நீருவும் அவளுடைய வருங்காலக் கணவனும் காரில் ஏறிக் கொண்டு நகைக் கடைக்குச் செல்வதாகக் கூறிவிட்டுப் போகின்றனர். ரவி கல்லூரிக்குப் போய்விட்டான். சின்னம்மா சமையல்கட்டுக்குப் போகிறாள்.

"அப்புறம்?"

யமுனா அவரை நிமிர்ந்து நோக்குகிறாள்.

"உங்கப்பா ஏதானும் பாங்கியில் பணம் போட்டிருக்கிறானா?"

யமுனா கைவிரலால் ஊஞ்சற்பலகையில் கோலமிடுகிறாள் தலைகுனிந்த வண்ணம்.

"எதற்குக் கேட்கிறீர்கள் பெரியப்பா?"

"எதற்கா? உனக்குக் கல்யாணம் பண்ண வேண்டாமா? குறைந்த பட்சம் இருபது வேணுமே?"

"நான் அப்படியெல்லாம் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக இல்லை பெரியப்பா. அப்பா உங்களுக்கு எழுதவில்லை?"

"அவன் கிடக்கிறான். அந்த சர்வ சேவா சங்கத்துக்காரனும் கூட வந்து போனான். என்ன அசட்டுத்தனம்? பின் உன் வயசுப் பெண் எனக்குக் கல்யாணம் செய்துவையென்றா சொல்வாள்? இந்த வயசில் கன்னியாக இருப்பேன்; சமூக சேவை செய்வேன்னு சொல்றதுதான். இப்படிச் சொன்னதுங்க மனசு தெரியாமப் பெத்தவங்களும் இருந்தா பஸ்ஸைத் தவறவிட்டாப் போல வாழ்க்கையைத் தவற விட்டுவிட்டுத் தலை நரைச்சும் தளர்ந்தும் போகிறதுங்க?"

"நான் அதைச் சொல்லலே பெரியப்பா, எனக்குக் கல்யாணம்னா, வரதட்சணை கேட்கிறவர்களுக்கு நானே சம்மதிக்க மாட்டேன் என்று சொல்ல வந்தேன்."

"ஓகோ, அதைச் சொல்றியா?" என்று பெரியப்பா சிரிக்கிறார். அத்தனை பொய்ப் பற்களும் அழகாக இருக்கின்றன.

"நல்ல பிரதிக்ஞைதான். அதற்காக நீ நம் வீட்டு அடுக்களை ஒத்தாசைக்கு வரும் பையனைக் கல்யாணம் செய்து கொள்ள முடியுமா? ஒரு எஸ்.எஸ்.எல்.ஸி. படிச்ச கிளார்க்குன்னா இரண்டாயிரம் கையில்; நகை, நட்டு, பாத்திரம், கல்யாணம், ஜவுளி இப்படீன்னு பதினைஞ்சுக்குப் போகிறது. அப்ப நீ 'கிளார்க்கை'க் கல்யாணம் பண்ணிக்கிறேன்னாலும் அவன் சம்மதிக்க மாட்டான். 'எம்.ஏ.யா? வேண்டாம்'பான். நீருவை நான் ஏன் டிகிரியே வேண்டான்னு வச்சேன்? நாம வேலைக்கா அனுப்பப் போகிறோம்? பெண்கள் வேலை செய்ய வந்தப்புறம் எந்த ஆபீஸ் உருப்படுகிறது? இல்லை ராஜ்யம் தான் உருப்படுகிறதா?"

யமுனாவுக்குப் பொங்கி வருகிறது. ஆனால் நா எழும்பவில்லை. இந்த இடத்திற்கு வந்ததே தப்போ? அப்படியில்லை இங்கேதான் முட்டி மோதிக் கொள்ள வேண்டும்.

"உங்களைப் போன்ற பெரியவர்கள் இப்படிப் பேசினால் எப்படி பெரியப்பா? எங்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் நீங்கள்..."

"என்ன நம்பிக்கையை இன்னும் கொடுப்பது? பார்வதியின் மாமா சாகும்வரை என்னிடம் சொல்லாத நாளில்லை. அப்பவே உங்கப்பாவுக்குப் பெண்ணைக் கொடுத்து நர்ஸிங்ஹோம் வச்சுத் தரேன்னார். லட்ச லட்சமாச் சம்பாதிக்கிறான், அவனோடு படிச்ச பூவராகவன். இப்ப... எங்கேயோ போய்ச் சேர்ந்தான். காந்தி பேரைச் சொல்லிட்டு எவனெவனெல்லாமோ உச்சிப் பதவியில் உக்காந்திருக்கிறான். அப்படியேனும் புண்ணியம் உண்டா? நானேனும் பூஞ்சை. வயிரம் பாய்ந்த கட்டையாக இருப்பான். எப்படிக் கைகால் விளங்காது படுக்கை போட்டுட்டது?... எல்லாம் அந்த ஆண்டவனுக்குத் தெரியும். இந்தக் கல்யாணம் பண்ணிக் கொண்டதிலேந்து... ஹும் அதெல்லாம் இப்ப எதுக்கு? மலையாளத்தானே மந்திரம் தந்திரம் வைப்பு ஏவல்னு தொழில் செய்றவன். யார் என்ன செய்தானோ?"

ஒரே புரட்டலாகத் தலைமீறிக் கொண்டு வருகிறது ஆத்திரம். பெரியப்பா இத்தனை நாட்களில் இவ்வளவு வெளிப்படையாகப் பேசியதில்லை. முகம் சிவக்க உளம் குமுற தலை நிமிராமல் கொதித்துக் கொண்டிருக்கிறாள்.

"ஐம்பத்தேழில் இங்கே வந்திருந்தானே, அப்பத்தான் மனசுவிட்டுப் பேசினான். 'எனக்கே ஒண்ணும் பிடிக்கலே அண்ணா. காந்திஜி நினைச்சபடி நடக்கலே. எல்லாம் சுயநலமும், பதவி ஆசையுமாகப் போய்விட்டது என்ன பண்றது? காலம் கடந்து போய்விட்டது, இனிமே வேற விதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியாது. ஒரு சட்டத்தில் புகுந்தாச்சு. அவ்வளவுதான். ஓரோரு சமயம் இந்தப் பெண் குழந்தையை நல்லபடி வளர்த்துக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கவலை தான் தோணுறது'ன்னான். 'அதுக்கு ஏண்டா நீ கவலைப்படறே, நான் பார்த்துக்கறேன்'னு கூடச் சொன்னேன். இப்ப அங்க ஸ்கூல் நடக்க, கவர்மென்ட் கிரான்ட் ஏதானும் வரதா?"

அவளுக்கு மறுமொழி கூறப் பிடிக்கவில்லை.

அந்த இருட்டுக் காட்டிலே, ராட்சஸச் சக்கரங்கள் சுழன்று தேஜோ மயமாக ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்கும் காட்சிகளைப் பார்த்திருப்பாரா இவர்? எங்கிருந்தோ குடும்பம் குடும்பமாய்ப் பஞ்ச, பனாதைகளும் வந்து கல்லுடைத்து வயிறு பிழைத்து, தேரும் திருநாளும் கொண்டாடியதைப் பார்த்திருப்பாரா? விளக்கென்றால் இன்னதென்று தெரியாமல் காட்டுக்குள் என்றோ வலை வைத்துப் பிடித்த விலங்குகளின் இறைச்சியை அடுப்படியில் கட்டித் தொங்கவிட்டு அடுத்த விலங்கு விழும் வரை வைத்து உண்டும், உண்ண ஒன்றுமிராமல் பட்டினி கிடந்தும் மலேரியாவிலும், அறியாமை நோய்களிலும் சீழ் பிடித்து நெளிந்த சமுதாயம் இன்றைக்கு ஒளியிலே சிரிக்கும் காட்சிகளைக் கண்டு அந்தப் பெருமிதத்தை அநுபவித்திருப்பாரா? ரங்கிக்கும் முருகிக்கும் பிரேமா குதித்துக் குதித்துக் கோலாட்டம் சொல்லிக் கொடுக்கையில் அவர்களின் முகங்களில் மலரும் உற்சாகங்களைக் கண்டிருப்பாரா?

காரும் பங்களாவுந்தான் முன்னேற்றம் என்பதை அவர் கண்டிருக்கிறார். மனிதன் மனிதனாக வாழப் பயில்வதே முன்னேற்றம் என்பதை அவள் கண்டிருக்கிறாள். தந்தை நோயில் விழுமுன், ஒவ்வொரு கானக மூலையாகத் தேடிக் கொண்டு எளியவருக்குச் சிகிச்சை செய்யப் போவார். அவரை ஒரு தேவகுமாரனுக்கு மேலாக இன்றும் அவர்கள் போற்றுகின்றனர். அவரா இவரிடம் அந்தச் சேவை வாழ்க்கையைப் பற்றிக் குறைபட்டிருப்பார்! அப்படியே அம்மை அப்பாவை வழி திருப்பி விட்ட குற்றத்தைச் செய்திருப்பவளானால் அது வாழ்த்தப்பட வேண்டியதன்றோ...? அம்மா... அம்மாவையா...?

கண்கள் நிறைந்து விடுகின்றன அவளுக்கு.

"நீ எதுக்கு அழறே, இப்ப? உனக்கு வயசு வந்தாயிட்டது. உண்மை தெரியணும்னு சொல்றேன். நான் பதினாலு வயசில் குடும்பப் பொறுப்பை ஏத்துக் கொண்டவன். பெரிய படிப்புப் படிக்கணும்னு ஆசைப்பட்டேன், முடியல்ல. உங்கப்பாவுக்கு அந்தப் படிப்பு வேணும்னு பதினெட்டு வயசில் கிளார்க் வேலைக்குப் போனேன். ஆயிரத்துக்கு மேலே சம்பளம் வாங்கினேன். டிராப்ஃட் எழுதினா இங்கிலீஷ் துரையெல்லாம் அசந்து போயிடுவான். மூணு தங்கையைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்து, நல்லது பொல்லாதது ஒண்ணு விடாமல் செய்திருக்கிறேன். உங்கப்பா குடும்பத்துக்கு என்ன செய்தான்? உங்க பாட்டி... எங்கம்மா... சாகும்வரை ஒரு முழத்துணி அவன் கையால வாங்கிக் கொடுத்து உடுத்தியதில்லை. இதெல்லாம் எதற்குச் சொல்றேன்னா... ஸில்லியா ஏன் அழறே இப்ப?"

கண்களைத் துடைத்துக் கொள்கையில் அவளுக்கு உள்ளூற நாணமாக இருக்கிறது.

"அதுதான், உங்கப்பா பண்ணின தப்பைப் பண்ணாமல் நல்லபடியாக வாழணும்னு சொல்றேன். ஏதோ கல்யாணம் ஆகும் வரைக்கும் ஏதானும் வேலை செய். ஆசைக்கு மீட்டிங்கிலே பேசு, லேடீஸ் கிளப்புக்குப் போ. ஆனால் அதெல்லாம் உறுதியில்லே..."

ஒரே குழப்பமாக இருக்கிறது. நல்ல குடும்பம். குடும்பத்தை நல்லபடியாகக் கொண்டு வந்தாலே சமுதாயம் சிறக்கும். ஆனால் அப்பாவும் அம்மாவும் தப்பா செய்தார்கள்? எங்கே இருள் மண்டிக் கிடக்கிறதென்று தேடிப் போய் ஒளிரச் செய்ய முயன்றது தப்பா?

"நேத்து நரசிம்மனைப் பார்த்தேன். 'எங்க கம்பெனில நாங்க லேடீஸை வேலைக்கு எடுக்கவே தயங்கறோம். அவங்க வந்தா கல்யாணம், பிறகு மெடர்னிடி லீவு... லீவுக்குப் பதிலாள்... ரெட்டைப்படிச் செலவு... கம்பெனிக்கு நஷ்டம்! என்னதான் ஆயிரம் சமம்னாலும் நாங்க வருஷக் கடைசின்னா ராப்பகலாய் ஆஃபீஸீல் உட்கார்ந்து வேலை செய்வோம். அதுங்களைக் கேக்க முடியுமா? அங்கேயே கண்ணிலே தண்ணி விட்டு அழுதிடுங்க"ன்னான் - நியாயந்தானே?" என்று நிறுத்துகிறார்.

அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.

"உனக்கு ஜாதகம் ஏதானும் இருக்கா? உங்கப்பாவுக்கு எழுதினால் பதிலே கிடையாது. இப்பக்கூட அந்த மலையாளத்தான் தான் மீட்டிங் அது இதுன்னு எழுதினான். நீ முதலில் இங்கே வரட்டும், பார்ப்போம்னு நான் ஒண்ணும் சொல்லலே. எல்லாம் மேலுக்கு சாதி இல்லே சனமில்லேன்னு சொல்றானே ஒழிய, கிட்டிமுட்டி சம்பந்தம்னு தூண்டி துளைச்சுக் கேட்பானுக. அதனால நீ இங்கே தானிருக்கணும். நீரு கல்யாணமானதும் உனக்கும் நல்ல வரனைப் பார்த்துக் கட்டி வச்சிடறேன். என் கடமையாய். அதுவரைக்கும் ஏதோ மீட்டிங், அது இதுன்னு பொழுதைப் போக்கிட்டிரு... என்ன?"

எதைச் சொல்வது? எலிப்பொறியில் சிக்கிக் கொண்டாற் போல் இருந்தது. அந்த இலட்சியத்துக்கும் இந்த நடப்புக்குமிடையே பாலம் போடுவதைப் பற்றிக் கனவிலும் கருத முடியாதென்று தோன்றுகிறது. குனிந்த தலை நிமிராமல் நிற்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.

அத்தியாயம் - 8

கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டு யமுனா அரை மணியாகக் காத்து நிற்கிறாள். நீரு புடைவை மாற்றிக் கொண்டு இன்னமும் வரவில்லை. வாசலில் கார் தயாராக நிற்கிறது.

மாடியிலிருந்து வாசக் கலவைகள் காற்றிலேறிச் சவாரி செய்த வண்ணம் நாசியைக் குசலம் விசாரிக்கின்றன. மணிப் பிரவாளப் பேச்சுகள், சிரிப்பொலிகள், பட்டு மென்மைகளின் சரசரப்புக்கள்...

யமுனா எட்டிப் பார்க்கிறாள்.

"நீரு? உனக்கு வர நேரமாகுமா? நான் முன்னே போகட்டுமா?"

"இல்லே...டி! காரிலே போகலாமே?..."

"நீ அஞ்சு நிமிஷம்னு சொன்ன நினைவு. ஒரு மணி நேரம் ஆகப் போகிறது."

"போடி... இந்தக் கொண்டை இப்போதும் சரியில்லை..."

அவளுக்குத் தலையில் குல்லா வைப்பது போல் ஒரு தோழி, அவள் தலையைப் பற்றிக் கோண்டிருக்கிறாள்.

"சரியா இருக்காடி?"

நீரு கண்ணாடியின் முன் வலமும் இடமுமாக அசைந்து பார்க்கையில், "கச்சிதமாய் விழுந்திருக்கு..." என்று தோழி முத்தாய்ப்பு வைக்கிறாள்.

"பின்னே நீ என்ன சொல்லுவே? இது கொஞ்சம் லெஃப்ட்டிலே சாய்ந்தால் தான் இயற்கையாக இருக்கும்!" என்று இன்னொருத்தி வெட்டுகிறாள்.

"முடி கொஞ்சம் இருக்கிறவங்களுக்குத்தான் இது பிரமாதமாக இருக்கும். சைனாபஜாரில் ஒரு கடையில் நைலான் கொண்டை ஆர்டர்படி செய்து கொடுக்கிறான். ரூபமாலாவுக்கு அவன் தான் வாடிக்கை..."

"பின் அங்கேயே போய் 'ஆர்டர்' கொடுக்கலாமாடி?"

கொண்டையை அவிழ்த்து, பின்னலைப் போட்டுக் கொண்டு மீண்டும் ஒரு முக ஒப்பனை - திருத்தம் முடித்து அவள் கிளம்ப மேலும் அரை மணியாகிறது.

"இவதான் யமுனா; எம்.ஏ. பாலிடிக்ஸ் - காந்தி நூற்றாண்டுக்காக இங்கெல்லாம் பேச வந்திருக்கா. என் 'கஸின்' - இவ ரேகா, இவ சுமி, இவ மிருணா..." என்று யமுனாவையும் தோழிகளையும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைக்கிறாள் நீரு.

ரேகா யமுனாவிடம் "நீங்க வேலையாயிருக்கிறீர்களா?" என்று கேட்கிறாள்.

"அதான் சொன்னேனேடி காந்தி ஆசிரமம். இப்பக் கூட்டங்களில் பேசுவது முழு வேலை. இமாசலம் போக வேண்டிய சாது போலக் கதர் தவிர உடுத்த மாட்டாள். ரிக்ஷா ஏற மாட்டாள். நகை... மூச்சு விடக்கூடாது; இவளுக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்கடி?"

"ஒரு முப்பது இருக்கும்னு நினைச்சேன்..."

"இல்லே, இருபத்தஞ்சு..."

"சுத்த மண்டுகள்டீ! இவ நாலட்ஜ் நாப்பது ஐம்பதுன்னு கூடச் சொல்லும். ஆனா என்னைவிட ரெண்டு மாசம் சின்னவ..."

"ஆ..." என்று எல்லாரும் வாயைப் பிளந்து கொண்டு அவளைப் பார்க்கின்றனர்.

"உங்க 'கிளப்'பில் வந்து ஒரு நாள் நான் பெண்களுக்கு காந்தி சொன்னதைப் பற்றிப் பேசட்டுமா நீரு?"

"ஏய், ஐடியா! நாமும் நூற்றாண்டு கொண்டாடலாம்! ரேகாவின் தங்கை டான்ஸ் ஆடத் துடியாய்த் துடிக்கிறாள். ஊர் முழுதும் கூட்டி அமர்க்களம் பண்ணி விடலாம். அவளும் எங்கெங்கோ போய்ப் பேசுகிறாள். நாம் விளம்பரம் கொடுக்க வேண்டாம்?"

யமுனாவுக்கு அழுவதா சிரிப்பதா என்று பல சமயங்களில் புரியவில்லை.

அரசியல் வண்ணங்களின்றி உயரிய இலட்சியங்களை இளம் உள்ளங்களில் தோற்றுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்திருக்கும் அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பள்ளிக்கூடங்களிலிருந்து அவளைச் சொற்பொழிவாற்ற அழைக்க வரும் போது, பெரியப்பா, 'என் மகள் என் மகள்!' என்று உறவு கொண்டாடுகிறார். அவர் உத்தியோக நாள்களின் வேடத்தில், மூடிய கோட்டும் வெள்ளை நிஜாரும் அணிந்து, காரில் அவளை அழைத்துச் செல்கிறார். அறிமுகமாக நாலு வார்த்தைகள் பேசும் சந்தர்ப்பத்தையும் தானே எடுத்துக் கொள்கிறார். சிறுவர் சிறுமியர் கட்டிய பசுக்களைப் போல் வந்து உட்கார்ந்திருக்கின்றனர். முடிவில் 'செல்வி யமுனா எம்.ஏ., காந்திய லட்சியவாதி, காந்தி இந்த நூற்றாண்டு கண்ட மாதர்குலமணி' என்றெல்லாம் சம்பந்தமில்லாமல் அடைமொழிகளும் அடுக்கு மொழிகளுமாகப் பாராட்டி நன்றி தெரிவிப்பார்கள்.

"என்ன மரியாதை தெரியுது இதுகளுக்கு? ஒத்தை மாலையை வாங்கி வச்சிருக்கா! மாலைக்கா நீ அங்கேருந்து இங்கே வந்திருக்கே?" என்று பெரியப்பா முணுமுணுக்கவும் சந்தர்ப்பங்கள் அமைகின்றன.

சில பள்ளிக்கூடங்களில் காந்தி கண்காட்சி என்று பத்திரிகை அட்டைப்படங்களை - சினிமாக்காரர்கள் உட்பட கத்தரித்து ஒட்டி வைத்திருக்கின்றார்கள். "ஓ! காந்தி என்றால் உருகிப் போய்விடுவேன்" என்று நீச்சல் உடை அழகியான திரைத் தாரகையின் கூற்றும் ஓரிடத்தில் இடம் பெற்றிருந்தது.

காந்தியைப் பற்றிய பேச்சுப் போட்டிகளை ஓரிரு சங்கங்களில் ஏற்பாடு செய்தார்கள். அடுக்கு மொழிகள் முதலிடம் பெற்றுச் சொல்லுக்குப் பொருளே தேவையில்லை என்று தான் சிறுவர் சிறுமியர் புரிந்து கொண்டு விளாசினார்கள். ஒரு மாதர் சங்கத்தில், வயிரமும் பட்டும் பளபளப்பை வாரி வீச, சதைகள் உடை மீறிப் பிதுங்கி வழிய ஒரு அம்மாள் தலைமை வகித்தாள் - "காந்தி நம் நாட்டுக்குச் சூது செய்து, வாது செய்து, சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்" என்று தொடங்கி, தன்னையும் காந்தியோடு ஒப்பிட்டுப் பேசலானாள். யமுனா 'ஐயோ' என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அரசியல் நெடிவீசும் ஆசாமிகள் சில இடங்களில் தலைமை வகிக்க வந்தார்கள். வடநாட்டுக் காந்தியிலிருந்து வழுக்கி, தென்னாட்டுக் காந்தியைப் பற்றிப் பேசி ஒப்புமை கண்டார்கள்.

அன்றாட வாழ்க்கையில் குழந்தைகள், சத்தியம், எளிமை, அஹிம்சை ஆகிய லட்சியங்களோடு வாழ முயல வேண்டும் என்பதுதான் அவள் பேச்சின் சாரம். ஆனால் தலைமை வகித்து முடிவுரை செய்பவர்களோ, நன்றி கூறுபவர்களோ, பேச எழுந்திருக்கும் போதே தன் முயற்சிகள் பயனளிக்கப் போவதில்லை என்ற நிராசையே அவளுக்கு உண்டாயிற்று.

ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற துடிதுடிப்பு உந்துகிறது. ஆனால்...

"எங்கே இறங்கணும், யமு?"

நீரு கேட்ட பின் தான் நினைவுலகுக்கு மீள்கிறாள்.

"ஓ, லஸ் வந்து விட்டதா? இங்கேயே நிறுத்திக் கொள். இறங்கிக் கொள்கிறேன்."

"நீ இடத்தைச் சொல்லேன்?"

"இதுதான் இடம்."

யமுனா கதவைத் திறந்து கொண்டு ஒரு சிரிப்பு சிரித்து விடை கொடுக்கிறாள்.

மழை குமுறிக் கொண்டு கொட்டத் தயாராக இருக்கிறது.

பூங்கா வளைவைக் கடந்து விடுவிடென்று நடக்கிறாள். மழைக்கு அஞ்சி ஓடுவது போல் தானிருக்கிறது.

இலட்சலட்சமாய் மக்கள் குடிசைகளில் வெயிலையும் மழையையும் எதிர்த்துப் போராடும் நகரம் என்ற நினைவையே அடியோடு அகற்றும் விசாலமான தோட்டம். வண்ணப் பூக்களும் பூங்கொடிகளும் அணைத்து நிற்கும் பால்கனிகளுடன், கனவுலகக் காட்சியாய்த் தோற்றம் தரும் மாளிகை. வாயிலில் கூண்டு இருக்கிறது. கூர்க்காவைக் காணவில்லை.

அவள் உள்ளே பாதையில் நடக்கிறாள். நேராக மாளிகையின் முகப்புக்குச் செல்லாமல் வலது பக்கமுள்ள சிறிய இல்லத்துக்குச் செல்லும் பாதையில் நடக்கிறாள். ஜன்னல்கள் சாத்தியிருக்கின்றன. கமலம்மா சன்னல்களைச் சாத்த மாட்டாரே? ஸுஸ்வாகதம் என்று பசுங் கீரையினால் எழுதப் பெற்றிருக்கும் முன்வாயில் கோலம் களையிழந்து கிடக்கிறது. வாயிற் கதவிலும் பூட்டு தொங்குகிறது.

ஒரே ஒரு கூடமும் ஒட்டிய பூஜை அறையும் குளியலறையும் கொண்ட இல்லம் சாத்திக் கிடக்கிறது. கூடத்தில் ஊஞ்சற் பலகை தொங்கும். நேர் எதிரே மாமா, சுதீரின் தந்தை, ஆலமரமாய்ப் பரவி நிற்கும் வர்த்தக நிறுவனத்தைத் தோற்றுவித்த முதல்வர், படத்தில் காட்சி தருவார். அந்தக் காலத்தில் கதர் உடுத்தி காந்தி பக்தரானாலும், தொழில் வளர்ச்சிக்கு அந்த இலட்சியங்கள் முட்டுக்கட்டை போடாதவாறு பார்த்துக் கொள்ளத்தானே வேண்டும்? அரசோடு இணங்கி, இணங்க வைத்து, ஆளுங்கட்சிக்கு அள்ளிக் கொடுத்து, சலுகைகளைப் பெற்றுப் பல்கிப் பெருகினார் என்று சொல்லலாம்.

தோட்டத்துப் பின்புறப் பாதையிலும் யாரையும் காணவில்லை. பெரிய மூன்றடுக்கு மாளிகையை நிமிர்ந்து பார்க்கிறாள். வழவழவென்ற வண்ணச் சுவர்கள் தெரியும் விசாலமான அறைகள்; நேர்த்தியான வாயில் திரைகள். பக்கச் சுவரை ஒட்டி இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி உயர்ந்து, ஊஞ்சல் தொங்கும் மூன்றாம் மாடி முகப்புக்கு அழகு செய்கின்றன. மண் தொட்டிகளிலிருந்து படாதப் பூங்கொடிகள்; தொங்கும் இழைகளில் ஊசலாடிக் கொண்டு மயங்கச் செய்யும் பசுங்குவியல்கள் - இத்தனை கோலாகலத்திலும் மனிதப் பூண்டைக் காணவில்லையே?

யமுனா வீட்டின் முன்புறம் செல்லாமல் சுற்று வழியிலேயே பின்பக்கம் செல்கிறாள். அங்கே பணியாளர் குடியிருப்புகள் துண்டாக அமைந்திருக்கின்றன. பின்பகுதித் தாழ்வரையில் சமையற் பணியாளர் (சுப்பையா இல்லை) ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து திடீர்ச் செய்திகளைச் சுடச்சுடத் தரும் தாளைச் சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருக்கிறார்.

"...ஏங்க, கமலம்மா இல்லையா?"

அவர் தாளிலிருந்து கண்களை விலக்கி நிமிர்ந்து பார்க்கிறார்.

"இல்லையே."

"ஊரிலில்லையா?"

"ஆமாம். சுவாமிகளைப் பார்க்க சிருங்கேரி போனார் நேத்துதான்."

"ஓ... வர நாளாகுமா?"

"அதெல்லாம் அம்மா ஒண்ணும் சொல்றதில்லை; என்னன்னு விவரம் தெரிவிச்சா, வந்தா சொல்றேன்."

"இங்கே பெரிய வீட்டிலும் யாருமில்லையா?"

"சின்னவரும் சம்சாரமும் ஜப்பான் போயிருக்கா. பெரியம்மா உள்ளே இருப்பார். யாரைப் பார்க்கணும் நீங்க? ரேகா கூட இன்டர்நேஷனல்னு வந்திருக்கும் 'கெஸ்ட்' கூடப் போயிருக்காப்பல..."

"கமலம்மாவைத்தான் பார்க்க வந்தேன், வேறொண்ணுமில்ல..."

அவள் நடக்கத் திரும்புகிறாள்.

அவளுடைய எளிமையான கோலம், கமலம்மாவிடம் ஏதேனும் உதவி கோரி வரும் ஏழைப் பெண்ணாக அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

அலட்சியமாக மறுபடியும் நாள்தாளில் கண்களை ஊன்றுகிறார்.

அவள் சட்டெனத் திரும்பி, "கமலம்மா வந்தபின் ஊட்டியிலிருந்து யமுனா வந்திருந்தான்னு சொன்னாப் போதும்" என்று கூறுகிறாள். மறுமொழிக்குக் காத்திராமல் திரும்புகிறாள்.

எத்தனை பெரிய மாளிகை; என்னென்ன வசதிகள்; பெரிய பெரிய காற்றோட்டமான அறைகள் வெறுமையாக இருக்கின்றன. அதே சமயம், சுத்தமும் சுகமும் அண்ட முடியாத சாக்கடைக் குட்டையே தோட்டமாகக் கொண்டு குடிசைகளில் புழுக்களாய் நெளியும் மக்கள்.

மனிதகுலம் நாகரிகப் பாட்டையில் செல்கிறது என்று இந்த மாளிகைகளை மட்டும் பார்த்துக் கொண்டு சொல்பவர்கள் மனச்சாட்சியைக் குழி தோண்டிப் புதைத்தவர்கள் தாம்! வேறென்ன?

மாளிகையிலிருந்து வெளியேறி அவள் பஸ் நிறுத்தத்தில் வந்து நிற்கிறாள். சுவரின் எதிரே வரிசையாகச் சுவரொட்டிகள்; ஒன்றன் மேலொன்றாக நீ முந்தி நான் முந்தி என்று அடிபிடியாகப் பற்றிக் கொண்ட இடங்களிலெல்லாம் சுவரொட்டிகள். காமக் களியாட்டங்களின் பச்சையான காட்சிகளை, முச்சந்தியிலும் நாற்சந்தியிலும் பெரிய அளவில் வைக்கிறார்கள்; இங்கே கழுத்து நோகாமல் பார்க்கச் சிறிய அளவில் ஸெக்ஸ், காட்டுமிராண்டித்தனமான கொலை, கொள்ளை வன்முறை என்று ஒரு படத்தின் காட்சிகளைப் பற்றிய சுய விளம்பரங்கள். அரசியல்வாதிகளின் சுய விளம்பரங்கள், எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு சுவரைப் பற்றிக் கொண்டிருக்கின்றன.

மழை இனி தாக்குப் பிடிக்க முடியாது என்று இப்போது தூற்றல்களாக விசிறி விட்டு உடனே வலுக்கிறது. கைப்பையைத் தலைக்கு நேராகச் சரித்துக் கொண்டு, அருகில் தென்படும் கடைப்பக்கம் ஓடி ஒதுங்குகிறாள்.

"ஹலோ...?"

வெள்ளையாகத் தெரியும் ஒரு கொத்திலிருந்து தனியாகப் பிரிந்து வருபவன் போல் இந்துநாத் வருகிறான்.

கறுப்புக்கரை போட்ட கதர் வேட்டி, ஜிப்பா, கையில் ஒரு நீளவாட்டு ஜிப் பை.

"இப்படி உள்ளே வாங்க, மழை விழுகிறதே? எங்கே இப்படி...? உங்களை அப்புறம் பார்க்க வரணும்னு நினைப்பு. தலைவரோடு வெளியே போயிட்டேன். இப்பத்தான் வசந்த நகர் ஸ்கூல்ல நீங்க பேசினதா மீனாட்சி சொன்னா. உங்க மீட்டிங் ஒண்ணு ஏற்பாடு செய்யணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் வந்துட்டீங்க... நூறு வயசு..."

"ஐயையோ? பூமி தாங்காது!" என்று யமுனாவும் சேர்ந்து சிரிக்கிறாள்.

"பி.எம். விசிட் சம்பந்தமா ஏகரகளை, ஒரே சண்டை. இப்ப யாருக்கும் ஒண்ணும் புரியலே. என்னடா வரேன்னு சொல்லிட்டுப் போனானே ஆளையே காணோமேன்னு நினைக்கப் போறீங்க..." என்று குரலை இறக்கி அவன் முடிக்கு முன் யமுனா குறுக்கிடுகிறாள். "நோ நோ... பெரியப்பா தான் சொன்னாரே?"

"அதான் பேப்பரில் பார்த்திருப்பீங்களே? தெருப் பசங்க சண்டை போல ஆயிட்டுது..."

"நீங்க என்ன சம்பந்தமில்லாமல் பேசுறீங்க? நீங்க ரைட்டா, லெஃப்டான்னு தெரிந்து கொள்ளலாமா?"

"அதென்ன அப்படிக் கேட்டுட்டீங்க? ஒரு நாட்டுக்கு ரைட்டும் வேணும், லெஃப்டும் வேணும். இடது கையில்லாம முடியுமா, வலது கையில்லாம முடியுமா?"

"அது சரி..."

"வலது பக்கம் ஆளு அதிகமானால் இடது பக்கமும் இடது பக்கம் பளு அதிகமானால் வலது பக்கமும் சரியத்தானே வேண்டியிருக்கு? அரசியலில் இப்ப இன்னும் ஒரு நிலவரமும் புரியலே. யார் பக்கம் வலு அதிகம்ங்கறது சொல்ல முடியாம ஒரே குழப்பமாயிருக்கு. நீங்க பாலிடிக்ஸ் படிச்சிருக்கீங்க. நடைமுறைக்குப் படிப்பெல்லாம் ஒத்து வராது. ஏனிப்படி நாம் இங்கே நின்னு பேசணும்? மழையோ இப்போதைக்கு விடாது போலிருக்கு. உள்ளே வாங்கோ காப்பி சாப்பிடலாம்..."

"வேண்டாம், இப்ப வீட்டுக்குப் போயிடணும். நான் சாப்பிட வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறேன்."

"எப்ப? மணி இப்போதே பன்னிரண்டரை. ஒரு பஸ் பிடிச்சு, இரண்டு பஸ் பிடிச்சில்ல போகணும்? உள்ளே வாங்கோ ஒரு காப்பி இல்லாட்டா வேறு ஏதானும் சாப்பிடலாம்..."

மழைக்கு நின்ற இடம் ஓட்டல் படிதான் என்பதை அவள் இப்போதுதான் கவனிக்கிறாள். மழை பெய்தாலும் உள்ளே புழுக்கத்துக்குக் குறைவில்லை.

'குடும்பம்' என்ற தடுப்புக்குள் செல்கின்றனர். அந்த நேரத்தில் சாப்பாட்டுக் கூட்டமே அதிகம்.

"நீங்க காப்பி வேண்டாம்னா, என்ன சாப்பிடறீங்க? ஏம்பா? ரெண்டு ரோஸ் மில்க் கொண்டு வா" என்று அவளைக் கேட்டும் மறுமொழியை எதிர்பாராமலும் பணிக்கிறான்.

உலர்ந்த நெஞ்சுக்கும் புழுக்கத்துக்கும் அந்தப் பானம் இதமாகத்தான் இருக்கிறது. அவன் 'ஸ்ட்ரா'வைத் தூக்கி எறிந்து விட்டு ஒரே மூச்சில் டம்ளரைக் காலி செய்கிறான். கைக்குட்டையால் நெற்றியை ஒத்திக் கொண்டு, "மிஸ் யமுனா, நீங்க நிச்சயமா அரசியல் உலகுக்கு வந்துதான் ஆகணும்" என்று புன்னகை செய்கிறான்.

"நான் சும்மா முகஸ்துதி பண்ணுறேன்னு நினைக்காதீங்கோ. நீங்க ஒரு வயிரம். பட்டை போட்டுட்டா அரசியல் வானில் உதய நட்சத்திரம். உங்களுக்கு நல்ல பின்னணி, படிப்பு, கிளாமர் எல்லாம் இருக்கு. உங்களை எப்படி உருவாக்கணும்கறதை நான் உங்களைக் கண்ட போதே திட்டம் போட்டுட்டேன். என்ன சொல்றீங்க...?"

இன்னும் பாதி தம்ளர் கூட உள்ளிறங்கவில்லை. குத்துவிளக்கின் சுடர்போல் ஓர் அடக்கமான புன்னகை அவள் முகத்தில் விளங்குகிறது.

உண்மையில் தீராத மற்றும் மரணத்துக்கஞ்சாத நேர்மையும், எளிமையுந்தான் தேவையென்று சொல்ல வந்த அவள் இந்த வகையில் தான் பிறரைக் கவருகிறாளா?

"ஏன் சிரிக்கிறீர்களிப்ப?"

"இல்லே வயிரத்துக்குப் பட்டை போடறதுன்ன என்னன்னு நினைச்சேன்!"

"நீங்க ரொம்ப குறும்பு போலிருக்கு! அரசியல்னா இப்ப அவனவன் பதவி, பணம், அதிகாரம்னு முன்னேற வாய்ப்பளிக்கும் களம்னுதான் அர்த்தம். இதிலே புகுந்து வெற்றிகரமாக வர ஒரு சாமர்த்தியம் வேணும். நீங்க ஒரே நேர்க்கோடா, ஹும். கொள்கைப்படிதான் போகணும்னு நிலவரம் புரியாம முட்டிக்கக் கூடாதே? அதான் பட்டை போடற வேலையை எங்கிட்ட விட்டுடுங்கன்னேன்."

"புரிகிறது... நீங்க உட்காருன்னா, நான் உட்காரணும், பேசுன்னா பேசணும். எழுந்திருன்னா எழுந்திருக்கணும்? அதாவது உங்க தொழுவத்தில் கட்டின மாடு போல..."

'ஆஹா, ஆஹா'வென்று அவன் சிரிக்கிறான். மற்றவர்கள் அவர்களைத் திரும்பிப் பார்க்கும்படி அவன் சிரிக்கும் போது யமுனா உள்ளூறக் கூறுகிறாள்.

"என்னமாப் பேசறீங்க? நீங்க நிச்சயம் இந்த எழுபத்திரண்டில் எங்கேயானும் நின்னு ஜயிச்சு, நிச்சயமாப் பதவிக்கு வந்தே ஆகணும்... வரணும்..."

அவள் அவசரமாகத் தம்ளரைக் காலி செய்துவிட்டு மேஜையில் வைக்கிறாள்.

"நான் நிச்சயமாக அரசியல் பதவிக்குப் போட்டி போட மாட்டேன்."

"உங்களைப் போல இருக்கிறவள்ளாம் இப்படிச் சொல்லித்தான் இந்த நாடே உருபடாம போயிருக்கு. நீங்க மாட்டேன்னா யார் விடப் போறா! நான் முதல்ல இப்ப ஒரு டாக்சியைப் பிடிச்சிண்டு வரேன்..." என்று வேட்டி தடுக்க, நிழலுள்ள நடை பாதையோரம் சென்று வண்டி பேசுகிறான். யமுனா அம்மாவனுக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணிக் கொண்டே நிற்கிறாள்.

அத்தியாயம் - 9

மழை ஆவேசம் வந்தாற் போல் கொட்டித் தீர்க்கிறது. நவராத்திரிக் கோலாகலங்களிடையே, காந்தி நூற்றாண்டு விழாக்களும், அரசியல் சண்டைக் கூட்டங்களுங்கூட அந்த மழையில் சிக்கித் தவிக்கின்றன. நீருவின் கல்யாண முகூர்த்தம் அக்டோபருக்குத் தாவி உறுதிப் படுகிறது. வீட்டில் அத்தைகளும், மாமன் மாமிகளும் வந்து போகும் கூட்டம். யமுனா ஒன்றிலும் பட்டுக் கொள்ளாமல் நாட்களைக் கடத்துகிறாள்.

"பொறுமை... உனக்குப் பொறுமை வேண்டும் மகளே!" என்று மட்டும் எழுதிவிட்டு வேடிக்கை பார்க்கும் அம்மாவனிடம் குழந்தையைப் போல் கோபம் கொள்கிறாள்.

"யமு? என் ஃபிரன்ட்ஸெல்லாம் உன்னோடு காந்தி ரயிலைப் பார்க்க வரணும்னு ஆசைப்படறாளே. நீ எங்களுக்கெல்லாம் மனுகாந்தியை இன்ட்ரட்யூஸ் பண்றியா?"

யமுனா வழக்கம் போல் சிரிக்கவில்லை.

"அங்கே உங்களுக்கு என்ன இருக்கிறது?"

"அந்தப் பழைய மூக்குக் கண்ணாடி, கடியாரம், பாதக் குறடுகள் இதெல்லாவற்றையும் பார்ப்பதற்கு இந்த மழையில் க்யூ வேறு நிற்க வேண்டும்; வேற வேலையில்லை!"

"பின் இந்த ரயிலுக்குப் பள்ளிக்கூடங்களிலிருந்து வாண்டுகளெல்லாம் கூடப் போறாங்களே?" என்று வியந்து கேட்கிறாள் சின்னம்மா.

"பிழைப்பில்லாமல் போகிறார்கள். நீ என்னமோ ஹங்கேரியன் லேஸ் வேணுன்னியே? அதற்காகக் கடைகளெல்லாம் போய்த் தேடினாலும் பலன் உண்டு. அந்த வற்றல் காய்ச்சி அம்மாவைக் கண்டு உனக்கு என்ன ஆக வேணும்? நீ தண்டத்துக்குக் கதர்ப் புடவையை வாங்க வேண்டி இருக்கும். ஸ்கிரீனுக்குக் கூட ஆகாது" என்று எரிச்சலுடன் மறுமொழி கூறுகிறாள் யமுனா.

"சபாஷ் யமு; இப்படிக் கையைக் கொடு. உனக்கு என் கல்யாணத்துக்கு ஸ்பெஷலா இரண்டு பட்டுப் புடவை. புது டிசைனில்..." என்று ஆரவாரிக்கிறாள் நீரு.

"மிக்க நன்றி. ஆறு சமுத்திரத்தில் விழுந்தாலென்ன, சமுத்திரம் ஊரில் புகுந்து ஆற்றை விழுங்கினாலென்ன, நீயே என்னை மாற்றி விடு. வம்பே இல்லை!"

"உன்னை மாற்ற முடியாதுன்னு நினைக்கிறியா?"

"நான் அப்படிச் சொன்னேனா?"

நீரு கண்களில் ஒளி தெறிக்கச் சிரிக்கிறாள். "இப்படி வைராக்கியமாக இருப்பவர்கள் தான் 'காதல்'ன்னு ஒண்ணில் இடறி விழுந்து விடுவார்கள். பிறகு பார்க்கணுமே? சற்று முன் சொன்னியே? அதப் போல இந்த ஆறு எந்த சமுத்திரத்தில் போய் விழுதோ?"

பிறகு உடனே தொடர்ந்து "யார் கண்டது? நாளைக்கே நீ ஒரு மந்திரியின் 'மனைவி'யாராக ஆகலாம். உனக்கு அந்த அளவுக்கு 'பிராஸ்பெக்டஸ்' இருக்கிறது" என்று கிண்டுகிறாள்.

"போகிறது, நீயே 'மந்திரி'யாராக ஆவாய்னு சொல்லாம விட்டியே?"

"அப்படிச் சொன்னால் நான் மாட்டேன்னு முறைப்பே? இப்படிச் சொன்னதால் ஒப்புக் கொள்கிறாய். ஏ...ய்! யாரடி அந்த ஆள்?"

இம்மாதிரி நாள் முழுதும் பேசிக் களிக்க நீரு தயார் தான். ஆனால், பெரியப்பாவின் குரல் வீச்சாக ஒலிக்கிறது.

"யமுனா! யமுனா!..."

யாரேனும் கடிதம் எழுதியிருக்கிறார்களோ?

பரபரப்புக்குக் காரணம் ஒரு அஞ்சலட்டைதான்.

"இந்தா பாரு, இது... யாரிது?"

"எது?"

"இதப் பாரு!"

புருவங்கள் நெருங்கிக் கடுமையை வெளியிடுகின்றன.

"சுடர்ப் பொறிகள்" என்ற தலைப்பு.

முற்போக்குக் குழுவினர் என்று ஒரு முகவரி, மக்கள் முற்போக்கு இலக்கியப் பொறிகள் சிதறுமிடமாம்.

'அன்புள்ள மிஸ் யமுனா,

எங்கள் வட்டத்தில் தாங்கள் ஒரு நாள் வந்து சிறப்புச் சொற்பொழிவு ஆற்ற வேண்டுமென்று நாங்கள் பெரிதும் விரும்புகிறோம். தாங்கள் ஒப்புதல் தெரிவித்தால் நேரில் வந்து காண்கிறோம்.

அமைப்பாளர்,
ரமேஷ்'

"யாரிது?"

"எனக்குத் தெரியவில்லையே பெரியப்பா?"

"உனக்குத்தான் நேரடியா எழுதியிருக்கிறார்கள். இந்த சுடர்ப்பொறி, தீப்பந்தமெல்லாம் கத்தி கபடாக்காரங்க கூட்டம். உன்னைத் தெரிஞ்சு தைரியமா எழுதியிருக்கிறானே? இந்த ரமேஷை உனக்குத் தெரியுமா? கத்தி கபடாக் கட்சிக்காரனுக சகவாசம் உண்டா உங்கம்மாவுக்கு?"

பெரியப்பா ஏன் அம்மாவை இழுக்க வேண்டும் இதில்? கண்ணுக்குத் தெரியாக் காற்றுக்கு நடுநடுங்கும் ஒட்டடைத் தூசு போல் அவளுள் ஓர் நடுக்கமும் உண்டாகிறது.

"இது யாராக இருந்தாலும், என்னைக் கேக்காம இங்கே ஒரு பயலையும் விடவேண்டாம். இந்த மாதிரிக் கூட்டத்துக்கெல்லாம் நீ போகக்கூடாது, என்ன?"

"எனக்கு யாரென்றே தெரியவில்லையே, பெரியப்பா?"

"அதெல்லாம் தெரியாது. கடுதாசியைக் கிழித்தெறி. நீ இதற்கெல்லாம் பதில் கூட எழுதக் கூடாது!"

இது அலர்ஜியா? இந்தக் கார்டில் கட்சிச் சின்ன வாடை கூட இல்லையே? ஆனால் இம்மாதிரியான இலக்கியம், சமுதாயம் என்ற போர்வைகளைப் போர்த்துக் கொண்டு தான் அந்த அறிவியல்வாதிகள் கட்சி வலையை விரிக்கிறார்கள் என்பதை அவள் அறிந்திருக்கிறாள்.

மேல் - கீழ் என்ற பாகுபாடுகள் இருந்தே தீர வேண்டும் என்ற உடும்புப் பிடிக்குள் தங்களை வளர்த்துக் கொண்டிருக்கும் தலைமுறைக்கு ஆத்திரம் வருகிறது.

தனிமையில் அந்தக் கசங்கிய அட்டையைப் பிரித்துப் பார்க்கிறாள். ஒவ்வோர் எழுத்திலும் கதிர் ஒளிந்திருப்பதைப் போல் பிரமை உண்டாகிறது. எதிரான கொள்கைக்காரர்களென்றால் அழைப்பை கிழித்துப் போட்டுவிட்டு ஒளிந்து கொள்வதா நெறியுள்ள செயல்? அது தானன்றோ அவளுடைய களம்?

இதற்கு என்ன செய்வதென்று இரவு பகலாய்ச் சிந்தனை செய்கிறாள்.

பெய்யாத மழை கொட்டித் தீர்த்து, ஏரி குளங்களை நிரப்பிவிட்டு, குடிசைகளை மிதக்கவிட்டு, இன்னமும் தூற்றலும் முணுமுணுப்பாக இருக்கிறது. மாலை ஐந்து மணியளவில் பெரியப்பா, குச்சியைச் சுழற்றிக் கொண்டு பேட்டை நிலவரம் அறியப் போகிறார். நீருவும் ரவியும் புதிய சினிமாவுக்குப் போயிருக்கின்றனர். சின்னம்மா எங்கோ மடத்தில் கந்தபுராணம் கேட்கச் செல்கிறாள்.

"யமு? நீ எங்கும் போகலியா?" என்று ஒவ்வொருவரும் கேட்கும்போதெல்லாம் அவள் உடம்பு சரியில்லாதது போல் பாவனை செய்து கொள்கிறாள்.

வீட்டில் ஒருவரும் இல்லை என்று அறிந்த பின் தொலைபேசியை எடுத்து, அந்த வட்டத்துக் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தைக் கூப்பிடுகிறாள். "ஹலோ... இந்துநாத் இருக்கிறாரா?"

"ஸ்பீக்கிங்..."

"யமுனா பேசறேன். உங்களை என்ன அன்றைக்குப் பிறகு காணவே இல்லை?"

"நான் என்ன செய்ய வேண்டும்? நீங்க தான் அரசியல்னாலே அலர்ஜின்னு தீத்துட்டீங்களே?"

"இல்லை, எனக்குச் சில விஷயங்கள் கேட்க வேண்டும், பேச வேண்டும். நீங்க வந்தால் கேட்கலாம் என்று நினைக்கிறேன்."

"என்ன விஷயம்? ஃபோனில் சொல்ல முடியாத விஷயமா யமுனா?"

அவளுக்கு முகம் சிவந்து போகிறது.

"இல்லே. சுடர்ப் பொறின்னு ஒரு அமைப்பில் பேச எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. பெரியப்பாவுக்கு அது கத்தி கபடாக் கட்சியைச் சார்ந்ததுன்னு ஒரே கோபம். கடிதாசியையே கிழிச்சிப் போடச் சொல்றார். அப்படியெல்லாம் அதில் ஒன்றுமில்லை. உங்களிடம் கேட்கலாம்னு..."

"டோன்ட் வொர்ரி. கட்டாயம் நீங்க போய்ப் பேச நான் ஏற்பாடு செய்கிறேன். இந்த மாதிரிச் சந்தர்ப்பத்தை விடுவது முட்டாள் தனம்."

"நீங்கள் புரிந்து கொண்டது போல அவர் புரிந்து கொள்ளலியே?..."

"கவலை வேண்டாம். நான் நாளையே போய் ஏற்பாடு செய்யறேன்."

"அப்படியென்றால்?"

"அந்த இடத்தில் மிஸ் யமுனா ஏற்பாடு செய்து, நாள் கொடுத்துவிட்டு வருவேன்னு அர்த்தம்."

"ரமேஷ்னு பேர் போட்டிருக்கு..." என்று முகவரியைப் படிக்கிறாள்.

"அப்ப சரியோ, குட்லக்? நாளைக்கு வரேன்" என்று விடை பெறுகிறான்.

அவன் மறுநாள் சொன்னபடி வரவில்லை. யமுனா புதிய குரல் கேட்கும்போதெல்லாம் அவன் வருகிறான் என்று பார்த்து ஏமாந்து போகிறாள். வழக்கம் போல் நாள்தாளைப் பார்த்து, 'பாங்கி தேசியமயம், ரபாட், கொட்டித் தீர்க்கும் மழை, பிவாண்டி' என்று பெரியப்பாவின் மனசுக்கேற்ப அரட்டையடிக்க அவர் வயசுக்கொத்தவர்கள் யாரேனுந்தான் வந்து போகிறார்கள்.

நான்கு நாட்களுக்குப் பின் ஒரு நாள் மாலையில் அவன் தலையைக் காட்டுகிறான். நீரு ரவி இல்லை; சின்னம்மா சமையற்காரியுடன் பின்புறம் ஏதோ வேலையில் மூழ்கிக் கிடக்கிறாள். பெரியப்பா கூட்டுறவுச் சங்க போர்டுக் கூட்டத்துக்குச் சென்றிருக்கிறார். பரபரப்பை அடக்கிக் கொண்டு அவள் அவனை வரவேற்கிறாள்.

"பெரியப்பா இல்லையா?" என்று அவன் விஷமமாகக் கண்ணைச் சிமிட்டுகிறான். அது எப்படியோ இருக்கிறது.

"இல்லை... உட்காருங்கள்."

"நாளை ஞாயிறு மாலை ஐந்தரைக்கு, 'சுதா' நுங்கம்பாக்கத்தில் - முற்போக்கு இளைஞர் மன்றத்தில் யமுனா காந்தீய இலட்சியங்கள் - உரை. அரேஞ்ச்ட்."

அவளுடைய விழிகள் அகலுகின்றன. "அப்ப எப்படிப் போவது?... பெரியப்பா இப்போது வருவார். நீங்களே பக்குவமாகச் சொல்லிவிடுங்கள்..."

அவன் சிரிக்கிறான்...

"ரொம்பப் பயப்படுகிறாயோ?"

சட்டென்று அவன் ஒருமையான வசனத்துக்கு இறங்கி விட்டதை அவள் கவனிக்கவில்லை.

"பயமில்லை, இது மரியாதை. அவரை எதிர்க்காமல் அவருடைய கருத்து சரியில்லை என்று அறிவுறுத்த வேண்டும்..."

"ஏதேனும் சொல்லி சமாளியேன்?"

"அது சரி உண்மையிலேயே அவர் அபிப்பிராயப்படுவதைப் போல் அது கட்சியைச் சார்ந்த அமைப்பா?"

"நீ... இலேசில்லே, தெரிஞ்சுதானே நீ பூச்சிகாட்டறே. ஒண்ணு வைச்சுக்கோ. கிழம் பழம் அங்கே கிடையாது. பெரிய மனுஷ வீட்டுத் தலைமுறைகளெல்லாம் இருக்கு. அந்த ரமேஷ் இந்துஸ்தான் கம்பெனிக்காரர் வகையறா. அங்கேதான் டிரேட் யூனியன் லீடரா உற்பத்தியாயிருக்கான்! சுதீர்குமார்னு கேள்விப்பட்டிருப்பியே; 'டெரரிஸ்ட்' சபோர்ட்டர்னான்; ஒரு சோடாபாட்டில் கண்ணாடி. நோஞ்சான் கருத்துக்களை மோத விடறது இந்த அமைப்பின் இலட்சியம்னான். அவா ரொம்ப பிஸி எனக்கே பார்க்கிறது கஷ்டம். எப்படியோ ஃபிக்ஸ் பண்ணிட்டேன். போஸ்டர் நிச்சயம் போடணும்னேன். அப்போ, ஞாயிற்றுக்கிழமை அஞ்சுமணிக்கு ரெடியா இரு. சரிதானே?"

"பெரியப்பாவிடம்..."

"அடாடா... என்ன நீ பூச்சி காட்டறே? அவரிடம் நான் சொல்லிக்கிறேன். வந்து கூட்டிப் போறேன்."

"ச...ரி..."

எங்கேயோ அறிமுகமில்லாத கானகப் பாதையில் அடிவைப்பதைப் போலிருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று நாள்தாளில் இன்றைய நிகழ்ச்சிகளின் வரிசைப் பார்க்கவே நடுக்கமாக இருக்கிறது.

நல்ல வேளையாக அதில் அறிவிப்பு வரவில்லை. சுவரொட்டிகளை எங்கே ஒட்டினார்களோ, பெரியப்பா கண்களில் பட்டிருக்க நியாயமில்லை என்று தெம்பு கொள்கிறாள். ஆனால் சொன்னால் சொன்னபடி இந்துநாத் அம்பாஸடர் வண்டியில் வந்து இறங்கிய போது வேர்த்து கொட்டுகிறது. பெரியப்பா வறுத்த முந்திரிப் பருப்போடு மாடு கறந்த பின் புதிய பாலில் கலந்த காப்பியுடன் ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறார்.

"நமஸ்காரம் மாமா?"

"அடேடே... கார் வரதே யாரோன்னு பார்த்தேனே. வா, கண்ணிலேயே காணோம்?"

"ஒண்ணுமில்லே தலைவர்கள் பண்ணும் மானக் கேடு - தலை நீட்ட முடியலே நமக்கு. நம்ம வட்டத்தின் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டம் போட்டுக் காந்தி நூற்றாண்டை நடத்தணும்னு பார்க்கறேன். சரியாக போகிறது..."

"யாருக்குப் பிறந்த நாள்?"

"யாருக்குப் பிறந்த நாள்? காந்திக்கு. அதோட, இந்த வட்டத்துக்கே பெரியவராக இருக்கேள் - அதோ காந்தி பரம்பரை வழி. உங்களுக்குத்தான் கொண்டாடக் கூடாதா? உங்களைப் போல் பெரியவாள்ளாம் ஒதுங்கி மறக்கும்படி பண்ணினதே தப்பு. எப்படியும் இந்தப் பிளவு எப்படிப் போறதுன்னு பார்த்துத்தான் யோசிக்க வேண்டியிருக்கு; இப்பக் கூட ஒரு மீட்டிங்குக்குத்தான் போறேன். யமுனாஜி, நமஸ்காரம்!" மாடிப்படியின் கீழ் தயங்கி நிற்கும் அவளுக்கு ஒரு பெரிய கும்பிடாகப் போடுகிறான்.

"எங்கே கிளம்பறாப்போல, நான் சகுனத் தடையா வந்திருக்கேனா? சேவா நிலையம் வரைக்குமா? கிளம்புங்க. உங்களை 'டிராப்' பண்ணிடறேன்."

அவள் புன்னகை பூக்கிறாள், "அதெப்படி நிச்சயமாகக் கேட்கிறீர்கள்?"

"பின்ன நீங்க எங்க போறிங்கன்னு புரிஞ்சுக்க முடியாதா?"

கேட்டுக் கோண்டே அருகில் நகர்ந்தபடி கண்களால் ஒரு அதட்டல், 'அசட்டுப்பிசட்டென்று பேசாமல் வண்டியில் ஏறிக்கொள்' என்று பொருள்பட, அவள் பின்புறம் ஏற கதவு திறக்கிறான். அந்தப் பெரிய வண்டியில் முன்னே ஒரு ஓட்டி அமர்ந்திருக்கிறான். இந்துநாத் அவன் அருகில் தான் அமருகிறான்.

வண்டி எல்லை கடக்கும் வரையிலும் அவன் பேசவில்லை.

யமுனா குழப்பத்தை மறைத்துக் கொள்ள வெளியே பார்வையை ஓடவிடுகிறாள்.

சுவரில் புதியவைகளாகப் பளீரென்ற கறுப்பு சிவப்பு வண்ணக் கொட்டை எழுத்துத் தாள்கள்.

"அறிஞர் அண்ணாவின் அறுபதாவது பிறந்தநாள் விழா! முத்தமிழ்ச் செல்வி, இசைக்குயில், கலையழகி, அருணா -

அண்ணா கதைப் பாட்டு.

அண்ணா வழி நடக்கும் இளவல்கள் செய்யும் சாதனைகள்.

அனைவரும் திரண்டு வருக! செல்வி அருணா!

அண்ணா புகழ்ந்து ஆசி கூறிய செல்வி அருணா!"

எல்லாத் தாள்களிலும் அருணா உதயசூரியன் டாலர் சங்கிலி மார்புக்குழியில் பளிச்சிட, கறுப்புப் பின்னணி சிவப்பு ரோஜாப் புடவையில் சிரிக்கிறாள்.

"இந்த அண்ணா திடல் எங்கே இருக்கிறது?"

"நம்ம வீட்டுக்குப் பின் தெருவோடு போனால் குடிசையெல்லாம் வருதே. அங்கே குப்பை கொட்டிக் கொட்டி முட்டு முட்டாத் தெரியறதே? அதுக்குப் பின்னாலெல்லாம் தான் அண்ணா திடல். வில்லிப் பயல்களுக்குக் குடிசைக் கட்டிக்க புறம்போக்கைக் கொடுத்து செட்டில் பண்ணதே நாமதான். இப்ப இவங்க கொடியைப் போட்டு எங்க சாதனைங்கறான்..."

யமுனா சிரித்துக் கொள்கிறாள்.

எல்லா இடங்களிலும் மண்ணின் சுவடறியாக் குழந்தைகளைத் தாம் இந்த அரசியல்வாதிகள் ஆசைகாட்டிக் கைக்குள் போட்டுக் கொள்கிறார்கள்?

அத்தியாயம் - 10

சுடர்ப் பொறிகள்...

மிஸ் யமுனா எம்.ஏ. என்று எழுதப்பட்ட கரும்பலகை வாயிலில் தெரிகிறது.

வாயிலில் கார்களாக நிற்பதிலிருந்து, உயர்படிக்காரர்கள் பலர் கூட்டத்திற்கு வந்திருக்கிறார்கள் என்று புரிகிறது.

யமுனாவும் இந்துநாத்தும் வண்டியிலிருந்து இறங்குகையில் சுருண்ட கிராப்பும் இறங்கிய கிருதாவுமாக ஒரு இளைஞன் முன்வந்து கைகூப்புகிறான். வயது இருபதுக்குள் தானிருக்கும். அழகிய பூ வேலை செய்த அரைக்கை ஜிப்பாவும் பைஜாமாவும் அணிந்திருக்கிறான்.

"ரமேஷ்..."

"நீங்கள் ஒப்புக் கொண்டதில் ரொமப் சந்தோஷம்."

"பேராசிரியர் சூரிய நாராயணா..."

தலை நரைத்துப் பல் விழுந்த கிழவரை அவளுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்கள். அவர் தாம் தலைமை தாங்கப் போகிறார்.

"அந்த நாளில் உங்கப்பா, என்னுடைய - காலேஜ் மேட்..." என்று அவர் முன் வரிசை ஒற்றைப் பல் தெரியச் சிரிக்கிறார்.

யமுனாவுக்கு எப்போதும் ஏற்படாத நடுக்கமும் குழப்பமும் தோன்றுகின்றன. இம்மாதிரியான கூட்டம் ஒன்றில் அவள் பேசியதில்லை என்று, நினைவு குறுக்கிடுகிறது. எதிரே வரிசை வரிசையாக அமர்ந்திருக்கும் முகங்களில் ஒன்று கூடப் பெண்ணுக்குரியதில்லை! இன்றைய இளம் பெண்கள், அரசியலிலோ, வேறு வகையான சமுதாய வாழ்விலோ எந்த அளவுக்கு ஆர்வம் கொள்கின்றனர் என்பதற்கு ஓர் அளவு கோலாக அந்தக் கூட்டம் இருப்பதாக நினைக்கிறாள். சிந்தனைகள் விஷய வட்டத்துள் வராமலே சுழல்கின்றன. குறுந்தாடி, நீண்ட கிருதாக்கள், அரும்பு மீசை, உள்ளத்தின் விகாரங்களை வெளியாக்கும் வகையில் ரோமக் கோலங்கள்... காந்தியடிகள் கூடச் சில படங்களில் மீசை வைத்துக் கொண்டிருக்கிறார். 'சிலருக்கு இயற்கையாக மீசை சாந்த இயல்பைக் காட்டுவதில்லை. அம்மாவனின்...' அவள் தன்னைக் குலுக்கிக் கொள்வது போல் நிமிர்ந்து உட்காருகிறாள். அந்த ரமேஷ்தான் அவளை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார்.

"காந்தியின் வழியிலேயே எண்ணங்களை வளர்க்க, அதே பாதையில் முதிர்ந்திருக்கும் அவர் பேச்சைக் கேட்க இங்கே கூடியிருக்கும் கூட்டத்தை வரவேற்கிறேன். மாறுபட்ட கருத்துக்கள் மோதிச் சிதறிக் குழம்பிக் கலங்கி புதிய எண்ணங்கள் உருவாக வேண்டும் என்பது எங்கள் நோக்கம்..."

முகங்களைப் பார்த்துக் கொண்டே இருந்ந்தவர்களுக்குச் சட்டென்று எல்லாம் அசைவற்று நின்றாற் போல் இருக்கிறது. வரவேற்புரையின் வாசகங்கள் செவிகளில் எழுந்து எங்கோ பொருளின்றி வறண்டு போகின்றன. அங்கே சுதீர்... சுதீர் தான்... வாயிலில் யாருடனோ பேசிக் கொண்டு...

ஒரு கணம் சித்தத்தை உள் நிறுத்தி இறையருள் வேண்டுகிறாள். பேசும்போது 'தான்' என்ற உணர்வு குறுக்கிடும் போது, அடுத்து என்ன என்று பொருளே மறக்கக் குழம்பி விடுவாள். முன்பு கல்லூரியில் மேடையேறி வரவேற்புரை, நன்றி நவிலல் கூறிப் பழகிய நாட்களில் அவளுக்கு இத்தகைய அநுபவங்கள் நேர்ந்ததுண்டு. அந்தக் கூச்சங்களெல்லாம் திரும்பி வந்து விட்டாற் போலிருக்கின்றன.

'ஆண்டவனே இன்று ஏன் இப்படியாகிறது?' என்று மனசைத் துடைத்துக் கொண்டு எதிரே குழந்தைகள் அமர்ந்திருப்பது போல் நினைத்துக் கொள்கிறாள்.

"ஜனநாயகம் சிறக்க, தனி மனிதன் செம்மை நெறியில் ஒழுகுதல் வேண்டும். தேவைகளை அதிகரித்துக் கொள்ளும் ஒரு மாய சுபீட்சம் உண்மையில் வண்மை அல்ல. விஞ்ஞான அறிவியல் வளர்ச்சியினால் மனிதனின் விலங்கியல் தன்மையே பெருகுமானால், அவன் உண்மையில் ஒளியை நோக்கி விடுதலை பெற்றிருப்பவனல்ல. பகிர்ந்துண்ணும் மனமும் அடுத்தவனும் வாழ வேண்டும் என்ற எண்ணமும் பிறக்க அவை தடை செய்யும். இந்த உண்மையான சுதந்திரத்தையும் சமத்துவத்தையும், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ளாத அன்புநெறியில் வாழ்ந்தால் காணலாம் என்கிறார். அந்த நெறி அவர் புதிதாகக் கண்டதொன்றுமில்லை. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பாரத நாட்டில் அறிவோர் வகித்த நெறிதான்." அவளுக்கு நேரான பாதையில் தங்கு தடையில்லாமல் செல்லச் சரளம் வந்து விட்டது. அடுக்கு மொழிகள் செய்யும் ஜாலங்கள் ஏதுமில்லை. குரலில் தேனின் இனிமையும் ஆலயமணியின் நாதமும் குலவுகின்றன. அது உள்ளத்திலிருந்து ஒலிப்பூக்களைக் கொண்டு வந்து கேட்பவர்களின் செவிகளை நிறைக்கின்றன.

முடிவில் கரகோஷம் நீண்டு ஒலிக்கிறது.

அவள் உட்கார்ந்த பிறகு கொல்லென்று அமைதி படிகிறது.

ரமேஷ் மேடையில் நிற்கிறான். "நண்பர்கள் கேள்விகள் கேட்கத் துடித்துக் கொண்டிருப்பதை அறிவேன். கேள்விகள் சுருக்கமாக இருக்க வேண்டும். கால்வரையறை என்ற ஒன்றை நினைவில் வைத்துக் கொண்டு கேட்பது நல்லது..."

இந்த ஒரு அம்சம் கூட்டத்தின் பிற்பகுதியில் தலை நீட்டும் என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லையே? நினைக்க நேரமில்லை.

கேள்விகள் வந்து விடுகின்றன.

முதலில் ஒரு கிருதா மீசைக்காரன் எழுந்திருக்கிறான்.

"காந்தியம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாத இலட்சியம். சந்திரனில் மனிதன் கால் வைக்கும் நாளில் கைராட்டையைக் கட்டிக் கொண்டு அழுவது மடத்தனம். விண்வெளியில் சீறிப் பாயும் நிலவுக் கப்பலை விட, கைராட்டை எந்த வகையில் மேன்மையாகிறது என்பதை விளக்க வேண்டும்?"

ரமேஷ் அவளைப் புன்முறுவலுடன் பார்க்கிறான்.

அவளோ அமைதியுடன் "நான் கேள்விகளை குறித்துக் கொள்கிறேன். எல்லாக் கேள்விகளையும் கேட்டு விடட்டும்" என்று மறுமொழி கூறுகிறாள்.

"அஹிம்சை என்பதன் தத்துவம் என்ன? பிற நாடுகள் சர்வ நாச சக்தி படைத்த ஆயுதங்களைத் தயாரிக்கும் போது, இன்னொரு கன்னத்தையும் திருப்பிக் காட்டுகிறேன் என்று சொல்வது நகைபுக்கிடமில்லையா? இந்த அஹிம்சைத்தனத்தைப் பிறகு வாழ்விக்க, சகோதரியின் இனத்தில் ஒரு பூண்டு கூட மிஞ்சாதே? இதற்கு என்ன சொல்கிறீர்கள்?"

"மனிதன் தேவைகளைக் குறைக்காமற் போனால் குலம் அழிந்து போகும் என்று அச்சுறுத்தும் சகோதரி மனிதன் வீடு வாசலுமின்றி, விலங்கோடு போர் புரிந்து பச்சை ஊனைப் புசித்த நாட்களில் தேவைகள் மிகக் குறைவாக இருந்ததால், அந்தக் காட்டுமிராண்டியே இன்றைய மனிதனை விட மேலானவன் என்று கருதுகிறாரா? எப்படி? விளக்கம் தேவை."

ஒரு குறும்புக்காரன் குடும்பக் கட்டுப்பாட்டை ஆராய்கிறான்.

"காந்தியம் செயற்கைச் சாதனங்கள் உபயோகிக்காமல் கருத்தடை என்று சொல்கிறது. வருடம் 365 நாட்களும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தாலும், ஒரே ஒரு நாள் பொல்லாத எழுச்சி ஏமாற்றிவிடக் கூடுமே! இத்தனை கோடியும் மகாத்மாக்களாகி விடலாம் என்று அம்மையார் கருதுகிறாரோ? அது எப்படி முடியும்?"

"இலட்சியங்கள் செயலளவுக்கு எளிதாக இருந்தாலே நிலைக்க முடியும். காந்திய இலட்சியங்கள் அவர் காலத்திலேயே படுதோல்வி கண்டன. இன்று அடிபட்டு வீழ்ந்த அவற்றைக் குற்றுயிரும் குலையுயிருமாகத் தட்டியெழுப்ப வேண்டிய அவசியம் என்ன?"

கேள்விகளைக் கேட்பவர்கள், மான்போல் நிற்கும் ஒருத்தியைத் தாக்க வந்திருக்கும் காட்டெருதுகளைப் போல் கேள்விகளைத் தொடுக்கின்றனர்.

இந்துநாத் பரபரப்புடன் ரமேஷைப் பார்த்து, "இதென்ன ஸார், இர்ரலவெண்ட் கேள்வியெல்லாம் கேட்க விடுகிறீர்கள்? இது இண்டலக்சுவல் மீட்டிங்கா, இல்லே உங்கள் சட்டசபைன்னு நினைச்சேளா?" என்று சீறுகிறான்.

"இது யாரையா பேச்சாளருக்கு வக்காலத்து வாங்கிட்டு வருபவன்?"

"கருத்து மோதல் என்றால் கத்தரிக்காய் என்று எண்ணமா?"

கேலி, கிண்டல், சிரிப்பு, ஏளனம், தீ வெடிகள்...

"அமைதி அமைதி!" என்று சூரியநாராயணர் மேசையைத் தட்டுகிறார்.

"நீங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்லப் போறேளோன்னோ?" என்று யமுனாவிடம் குனிந்து மெல்லிய குரலில் கேட்கிறார். யமுனா புன்முறுவலுடன் ஒலி பெருக்கியின் முன் வந்து நிற்கிறாள்.

"சகோதரர்களே, அமைதி வேண்டுகிறேன். மனிதன் விலங்குத்தன்மை மாறி பரிணாம வளர்ச்சியின் படிகளேறி மனிதத் தன்மையின் படியில் வந்து நிற்கிறான். இந்தப் படியிலிருந்து மீண்டும் விலங்குத் தன்மைக்கு இழிந்து கொண்டிருப்பதையே இப்போது உலகெங்கும் நிகழும் பல நிகழ்ச்சிகளிலிருந்து தெளிவாகக் காண்கிறோம். விஞ்ஞான அறிவியல், மெய்ஞானத்தை நோக்காகக் கொள்ளாதவரை, மனிதனைக் கீழ்நோக்கி இழுக்கத் துணை செய்கிறது. இது தவிர்க்கப் பட வேண்டும். அந்த எல்லை, இருக்கும் சக்திகளைப் பகிர்ந்து கொண்டு, எல்லோரும் உணவு - உடை - உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளையேனும் அநுபவிக்கப் போதுமான இடத்தில் குறிக்கப்பட வேண்டும். நூறு பேர் வாழக்கூடிய விசாலமான மாளிகையில் நான்கு பேர் குடியிருக்கின்றனர். அதே மாளிகையின் பின்புறம் கழிவு நீரோடைக்கரைக் குடிசையில், நான்கு பேர் இருக்கப் போதுமான இடத்தில் பதினான்கு பேர் நெருக்குகின்றனர். அந்த மாளிகை வாசிகளான நால்வர், எட்டுப் பேர் வாழக்கூடிய இடத்தை எடுத்துக் கொள்ளட்டும். மீதியை இல்லாதவருக்குப் பங்கிட முன் வரட்டும். இம்மாதிரி விட்டுக் கொடுக்கத் தனிமனிதனின் தரம் உயர வேண்டும். அதற்கு அந்த அடிப்படைப் பண்புகள் - எளிமை, தியாகம் எல்லாம் தேவையாகின்றன. பேராசையைக் கொல்ல வேண்டுமானால் விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை வேண்டும். அவா அறுத்தலே அச்சமின்மைக்கு ஆதாரம். இவ்வகையில் தனி மனிதத் தொகுதிகள் சிறந்தால் சமுதாயத்தில் சொத்துக்கள் பொதுவுடமையாக மாற்றம் பெறும் போது சிக்கல் நேராது. பண்டைய நீலகிரிக் கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்தாரும் பொதுவாக நிலம் திருத்தி உண்டு மகிழ்ந்தனர். ஒரு வீட்டில் துயரம் நேர்ந்தால் அனைவரும் அதைப் பங்கிட்டுக் கொண்டு ஆறுதல் கொள்வார்கள். ஒரு வீட்டில் தட்டுப்பாடு வந்து, புதிய பயிரைத் தெய்வத்துக்குப் படைக்குமுன் கொய்ய நேர்ந்தால், அதைத் தவிர்க்க மற்றவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்களுக்குத் தானியம் அளிப்பார்கள். இன்று அந்தப் பண்புகள் அழிந்து போய் விட்டன. தேவைகளைப் பெருக்கிக் கொண்டு பேராசையில் மக்கள் திளைப்பது தான் இதற்குக் காரணம். கைராட்டையை விண்வெளிக் கலத்தை விட மேன்மையாக ஏன் கருதுகிறேனென்றால் எல்லோரும் விண்வெளியில் செல்லும் பேராசையில் சோர்ந்து விழுவதை விட எல்லோரும் மானம் காத்துக் கொள்ளத் தம் உடையைத் தாமே தயாரித்துக் கொள்வதனால் பல எளியோரின் பிரச்னைகளைத் தீர்க்கலாமே என்பதனால்தான். குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி நண்பர் கூறினார். அதைப் பற்றிப் பேசுவதற்கோ ஆராய்வதற்கோ இது உரிய இடம் அல்ல. இந்த விஷயம் பற்றிய ஆசிரம வெளியீட்டை வாங்கிப் பார்த்துக் கொள்ளலாம். அடுத்து, இலட்சியங்கள் ஒருநாளும் தோல்வி அடைவதில்லை. காந்தியடிகள் எந்த இலட்சியத்தையும் புதிதாகத் தோற்றுவிக்கவில்லை. அலட்சியமாக நழுவ விட்டதை எடுத்துக் கொடுத்தார். இந்தியச் சமுதாயம் இன்றும் நிலைத்து நிற்கக் காரணமானவையே அந்த இலட்சியங்கள் தாம். நாட்டில் வேறு புதிய புதிய சமயங்களும் கொள்கைகளும் மோத வந்துங்கூட, சத்தியம், அஹிம்சை அன்பு ஆகிய நெறிகளின் அடிப்படையில் உயர்ந்து நிற்கும் ஆன்மிக வாழ்வு என்ற தத்துவத்தில், நோக்கத்தில், எல்லாச் சமயங்களும் ஒன்றே என்று நிலை கண்டதனாலேயே இந்தச் சமுதாயம் இன்னும் புதுமை அழியாமல் நிலைத்து நிற்கிறது..."

ஒலி பெருக்கித் தண்டைப் பற்றிக் கொண்டு அவள் புன்னகை புரிகிறாள். நெற்றி வியர்க்கிறது. இந்துநாத் மலைத்துப் போனாற்போல் உட்கார்ந்திருக்கிறான்.

தொலைவில் ஒரு கறுவல் முகம் உயர்கிறது.

"காந்தி மேலை நாட்டுக் கல்வி முறையை எதிர்த்தார். தம் மக்களுக்கு அக்கல்வியைக் கற்பிக்கவில்லை. ஆனால் முழுசும் மேல் நாட்டுக் காற்றிலேயே வளர்ந்த ஒருவரைத் தமக்குப் பிறகு தன் மொழியைப் பேசுவார் என்று தேர்ந்தது எதனால்?"

"மன்னிக்க வேண்டும் நண்பரே! நான் உயரிய இலட்சியங்களைப் பற்றியே பேச வந்தேனே ஒழிய காந்தி என்ற தனி மனிதரைப் பற்றியே பேச வரவில்லை" என்று அவள் ஒதுங்கப் பார்க்கிறாள்.

"ஹோ, ஹோ" என்ற ஆரவாரங்களும் கேலிகளும் எழுகின்றன.

"தோல்வி... வெட்கம்... அவருடைய இலட்சியங்களில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்று ஒப்புக் கொள்ளுங்கள்!" என்ற ஆர்ப்பாட்டங்கள்.

"நான்சென்ஸ்! இதென்ன கசாப்புக் கடையா?" என்று இரட்டைக் குரலில் கத்துகிறான் இந்துநாத்.

சூரியநாராயணர் அவளைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.

'வயசுப் பெண்ணாக லட்சணமாகக் கல்யாணம் கார்த்திகைன்னு குடும்பத்தில் இருந்து பேர் சொல்ல மாட்டாயோ! இப்படி இதுக நார்நாராகக் கிழிச்சிப் போட வந்து மாட்டிப்பியோ?' என்று இரங்குகிறார்.

"காந்தியைத் தனிமனிதர்னு விட்டு வைக்கலியே? இந்த நாடு கண்ணை மூடிண்டு அவர் சொன்னதைச் செய்யணும்னு தானே இப்ப சொல்கிறீர்கள்?" என்று மீண்டும் ஓர் குரல் ஒலிக்கிறது.

"கல்வி என்பது மனசைப் பண்படுத்த வேண்டும். அந்த வகையில் இந்நாட்டில் ஏட்டுக் கல்வி முறை பயனளிக்கவில்லை என்று அவர் கண்டாரே ஒழிய, மேலை நாட்டுக் கல்வியை அவர் வெறுக்கவில்லை. செயல்திறனும், கூரிய மதியும், நாட்டு மக்களைக் கவரும் சொல்வன்மையும் கூடிய ஒருவரை அவர் தமக்குப் பின் வாரிசாக்கியதில் தவறில்லையே?"

"ஏன்? அந்த வகையில் பல தலைவர்கள் இருந்தார்களே? அவர்களை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?"

அவளைத் திக்குமுக்காடச் செய்து ரசிக்கவே இந்தக் கேள்விகள் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

"இதை விரிப்பதோ விவரிப்பதோ இன்றைய கூட்டத்துக்குப் புறம்பான விஷயம்..."

"புறம்பாக எப்படி ஆகும்? அந்த இலட்சியங்களை வெற்றிகரமாகச் செயல் முறையாக்கியதாக நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் அந்தத் தலைவரே, தம் கட்சிக்காக இலட்சியத்தைப் பலி கொடுத்து விட்டுக் கட்சியை வலுவாக்க வேறொரு மனிதருக்கு வாக்குக் கொடுத்தார். காந்தி அந்தக் காலத்திலேயே விலைக்கு வாங்கப்பட்டார். அந்த விலை நாட்டின் தலைமைப் பொறுப்பு - அல்லது பதவி!"

யமுனாவுக்குச் செவி மடல்கள் குப்பென்று எரிகின்றன.

இந்த அவதூறுகளை வீசுபவன் சுதீர்தான்.

"அம்மணி, காந்தியம் எந்நாளும் நடைமுறைக்கு ஒத்து வரமுடியாத பிதற்றல் என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்!" என்று கறுவல் முகம் எழும்பி உட்கார்ந்து கெக்கலி கொட்டுகிறது.

பஜனை மண்டபத்தில் கூச்சலும், குழப்பமும் உண்டாகும்போது 'நமப் பார்வதி பதயே!' என்று எழுப்புவார்களே, அப்படி சூரியநாராயணர் மேசையைத் தட்டி விட்டு எழுந்திருக்கிறார்.

"ஒரு பேச்சாளரை நாம் பேசக் கூப்பிட்டிருக்கிறோம். ஒரு விஷயம் பேசச் சொல்கிறோம்; பேசுகிறார். கேள்வி கேட்பதே நாகரிகக் குறை. அதிலும் இது... அவசியமில்லைன்னு நினைக்கிறேன்" என்று தொடங்கி நன்றி கூறி கூட்டத்தை முடிக்க வழி செய்கிறார். யமுனா கெட்ட கனவினிடையே விழித்த குழந்தையைப் போல் உட்கார்ந்திருக்கிறாள். நன்றி கூறும் சம்பிரதாயச் சொற்கள் செவிகளில் விழுமுன் கரைந்து போகின்றன.

"பிரமாதமாகப் பேசினே. இதுகள் அசத்துகள். கேள்வி கேட்கறதுக்குன்னே கூட்டத்துக்கு வரும்..." என்று விடை கொடுத்துவிட்டு சூரியநாராயணர் மாலையையும் கைத்தடியையும் எடுத்துக் கொண்டு பெரிய காருக்குள் ஏறிச் செல்கிறார். வழியனுப்ப வருவது போல் நான்கு பேர் தொடர்ந்து வருகையில் சுதீர் அவளுக்காக வழியில் நிற்பான் என்று எதிர்பார்க்கிறாள். நெஞ்சு சோர்ந்து விழுகிறது. சிகரெட்டும் கையுமாக இந்துநாத்தான் கதவடியில் நிற்கிறான்.

இப்போது வண்டியின் பின்னால் அவளருகில்தான் உட்காருகிறான். ஆனால் அவள் சிந்தையில் அவன் அருகில் இருப்பதே உறைக்கவில்லை. பெரிய தோல்வி கண்ட ஏமாற்றத்தில் திரும்பத் திரும்ப எதை எதையோ எண்ணிச் சோருகிறாள்.

"கொன்னுட்டே போ, யமுனா!"

வண்டி தார்ப்பாதையில் செல்கிறது. தெருவெல்லாம் ஒளி மயங்கள் - நெரிசல்கள் - போக்குவரத்து ஊர்திகள்.

"கடைசியில் வளைச்சு வளைச்சுக் கேள்வி கேட்டானே, அவனைத் தெரியுமா, யார்னு?"

"ஹம்...?"

"அவன் தான் சுதீர்குமார். கீழ வெண்மணிக்கப்புறம் ஆளே தலைமறைவா இருந்தாப்பல. இன்னிக்கு வந்திருக்கிறான்..."

"ஓ..."

"ஆனாலும் நீ படுபிரமாதம்? பாலிடிக்ஸில் பிரமாதமா ஷைன் பண்ணுவே!"

"..."

"என்ன பேசலே? அன்னிக்கு நான் சொன்னதை எதிர் பாராம சரின்னு ஒப்புக் கொண்டுட்டே. அப்ப..."

வண்டி ஓர் ஒளிமயமான உலகில் முன் வந்து நிற்கிறது.

ஒரு... ஓட்டல்.

"வீட்டுக்குப் போலாமே? மணி எட்டரையாகிறதே?"

"எனக்குத் தெரியாதா? நீ இறங்கு சொல்றேன்."

"எதற்கு? வீட்டுக்குப் போகணும் எனக்கு..."

"எனக்கே ஒரே பசி, உன்னால்... அடக்கிட்டிருந்தேன்."

அவள் இறங்க வேண்டித்தானிருந்தது.

மேல்மாடி... எங்கோ நீளப் போகிறான்.

குடும்பம் என்று போட்டிருக்கிறது. ஆனாலும் குடும்பம் ஒன்றும் அங்கு இல்லை.

"எனக்கு ஒன்றும் வேண்டாம்."

அவன் பொருட்படுத்தவில்லை. ஏதோ இனிப்பு கொண்டு வரச் சொல்கிறான் போலிருக்கிறது.

சர்வர் போன பின் அங்கே யாரையும் காணவில்லை.

மேசையில் முழங்கையை ஊன்றி முகத்தைத் தாங்கிக் கொண்டு அவளை வைத்த கண் வாங்காமல் பார்க்கிறான். அவள் வெளி வாயிலைப் பார்க்கிறாள்.

தோளில் அவன் கை படிகிறது.

சுரீரென்ற உணர்வுடன் குலுங்கி எழுந்திருக்கிறாள்.

ஆனால் அவன் ஒன்றும் நடவாதது போல் சிரிக்கிறான்.

"சீ, விடுங்கள்!"

"ரொம்பக் கோவிச்சுக்கிறியே?"

கையை எடுத்துவிட்டான். ஆனால் அவளுடைய செருப்புக் கால்மேல் அவன் வெற்றுப் பாதம் படிகிறது.

அப்போது சிப்பந்தி இரண்டு இனிப்பையும் தம்ளரையும் வைத்துவிட்டுப் போகிறான்.

"என்ன, கத்தப் போறியா? நாளைக்குப் பேர் பேப்பரில் வரணும்னு ஆசையானால் கத்து...!"

அவளுக்கு வியர்த்துக் கொட்டுகிறது.

"காலை எடுக்கிறாயா, என்ன வேணும்; ஸ்கௌன்டரல்..." செருப்பைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு நிற்கிறாள்.

"ஏனிப்படி கோவிச்சுக்கிறே கண்ணம்மா? கல்யாணமாறதுக்கு முன்ன கொஞ்சம் உரிமை எடுத்துக்கக் கூடாதா...?

"கல்யாணமா? என்ன பேத்தல்?"

"ஆஹா... ஹா... உனக்கு இன்னும் பெரியப்பா சொல்லலையா கண்ணு? என்னம்மா வெட்கப்பட்டு நடிக்கிறே, போ!"

"நான்சென்ஸ். இந்த மாதிரி எண்ணங்களை அடியோடு ஒழிச்சிடுங்க."

"பார், பார்; உன்னை வேறு எவன் கல்யாணம் பண்ணிண்டாலும் என்னை விட அருமை தெரிஞ்சு நல்லது செய்ய மாட்டான். நான் இன்னிக்குக் கூட்டத்தைச் சமாளிச்சுக் கொடுத்ததற்கே நீ இந்த பூச்சாண்டித் தனத்தை மூட்டை கட்டி வைக்கணும். நீ யாருக்காகவும் பயப்பட வேண்டாம்...!"

"ஹம்..."

ஒரு உறுமல் உறுமிவிட்டு நாற்காலியைத் தள்ளிக் கொண்டு எழுகிறாள். எதிரே வரும் பணியாளன் மீது மோதாத குறையாக ஓடி வருகிறாள். ஜுர வேகமாக இருக்கிறது. எந்த பஸ்ஸில் ஏறுகிறோம் என்று தெரியாமலேயே, அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று ஏறுகிறாள்.

அத்தியாயம் - 11

இம்மாதிரியான சந்தர்ப்பம் ஒன்று நேராமலிருந்தால் தான் அவள் நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருந்திருப்பாள். அவனுக்கு ஒன்றும் இது ஏமாற்றமாயிருந்திருக்காது. வழியில் கல் குவித்திருக்கிறது; மரத்தில் கனி இருக்கிறது; போகிற போக்கில் வீசி எறிந்து வைத்தால் போகிறது; அவ்வளவுதான். ஆனால், அவளுக்கு வீடு வந்து சேர்ந்த பிறகும் அந்தப் படபடப்பு அடங்கவில்லை. படபடப்புக்குக் காரணம் இந்துநாத்தின் நடப்பு மட்டுமல்ல. அன்றைய கூட்ட நிகழ்ச்சியே காரணம். தன்னால் சுதீரின் கேள்விகளுக்கு மறுமொழி கூற முடியவில்லை என்ற தோல்வி உணர்வுதான் குறுகுறுக்கிறது.

சுதீர் தன்னை விட அதிகமான கல்வி கேள்வியும் அநுபவமும் புத்தி சக்தியும் பெற்றவன் என்று அவளை அறியாமல் அவளுள் ஓர் எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. அது எப்படி ஏற்பட்டது?

அசைக்க முடியாத தன்னுடைய நம்பிக்கைகளை அவன் அசைப்பது போல் பலவீனத்துக்கு ஆளாகிறாள். அவனைக் காணும் போது அந்நாட்களில் ஏற்பட்டிருந்த வியப்பும், அவனைத் தோற்கடிக்க வந்த விளையாட்டுத் தோழன் என்ற உணர்வில் உருவானது போன்ற வீம்பும் இன்றளவும் அவளுக்கு மாறியிருக்கவில்லை.

வீம்பு. வீம்புக்குக் காரணம் பலவீனம் என்று தோன்றியதும் தன் மீதே வெட்கமும் வேதனையும் கோபமும் ஏற்படுகின்றன.

உண்மையில் சுதீர்தான் சுதந்திர வெளியிலே உருவானவன். அவளோ சட்ட திட்டங்களுள் வளர்ந்த பறவைதான். இளம் பருவத்தில் இயல்பாகத் தோன்றும் ஆசைகள் கிள்ளி எறியப்பட்டன. சின்னஞ் சிறுமியாக இருந்தபோது, வஜ்ரேசுவரி என்ற பெண் அணிந்திருந்த ஜிமிக்கியைப் பார்த்துவிட்டு அம்மானிடன் 'அதுபோல் எனக்கும் வேண்டும்' என்று கேட்டதுண்டு. நோட்டுப் புத்தகத்தில் அந்த ஜிமிக்கியைப் போல் வரைந்து வைத்திருக்கிறாள்; அம்மாவன் அவளுடைய ஆசையைக் கேட்டுச் சிரித்துவிட்டு, காந்தியடிகள் தென்னாட்டுக்கு வந்து ஹரிஜன நிதிக்குப் பெண்களிடம் பொன் நகைகளை வேண்டிய கதையைத் தொடங்கினார். கழற்றி ஒவ்வொன்றாக அந்தப் பெண் கொடுத்தாளாம். அவர் சிரித்துக் கொண்டே, "இனி மேல் மீண்டும் இத்தகைய அணிகளைப் பூணுவதில்லை என்று உறுதி மொழியும் தா!" என்று கேட்டாராம். அந்தப் பெண்ணின் தாய் குறுக்கிட்டு, "ஐயோ, அப்படியானால் என் மகளை மணந்து கொள்ள ஒருவரும் வரமாட்டாரே?" என்று வருந்தினாளாம். "அத்தகைய ஒருவன் வராவிட்டால் நான் மணந்து கொள்வதில்லை!" என்று சொன்னாளாம் அந்தப் பெண். அப்படிச் சொல்லக்கூடிய பெண் அந்தக் காலத்தில் இருந்திருப்பாளாக இருக்கும். இப்போது...?

செல்வச் செழிப்பில் பிறந்த சுதீர் இத்தகைய சட்ட திட்டங்களுள் குன்றியிருக்க மாட்டான். அந்தச் சுதந்திரம் தங்களுக்கே எதிராக அவனை உருவாக்கிய போதும் பெற்றவர் பொறுக்கிறார்கள். ஒருகால், அவள் தான் இத்தனை நாட்களும் ஒரு போலியான நம்பிக்கையில் தன்னை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக உணர்ந்து சுதீரின் வழியிலே திரும்பினால்...

தாய், தகப்பன்... அம்மாவன்... என்ன செய்வார்கள். பெரியப்பா அவள் வீடு திரும்பி வருகையில் படுக்கை போட்டுவிட்டார்.

"ஏம்மா இத்தனை நேரம்? ஃபோன் பண்ணியிருக்கக் கூடாது? பெரியப்பா நீ தனியாகப் போகவில்லைன்னு நிம்மதியாகப் படுத்து விட்டார்னாலும் எனக்குக் கவலையாக இருந்தது. கார் உள்ளே வரலியா?" என்று கேட்கிறாள் சின்னம்மா.

"எதிர்பாராமல் நேரமாயிட்டது..."

குற்ற உணர்வுடன் தட்டை வைத்துக் கொண்டு மேசையின் முன் அமர்கிறாள்.

"நீ போன பிறகு உன்னைத் தேடிண்டு ஒரு பையன் வந்தான். கறுப்பா, ஒல்லியா அங்கே ஆசிரமத்திலேருந்து வந்தேன்னான். இங்கே இன்டர்வ்யூ எதற்கோ வந்தானாம்..."

"யாரு?..."

"எனக்குத் தெரியலே. பெரியப்பா வாசலில் நிறுத்திப் பேசினார். ஏழரை மணி வரையிலும் காத்திருந்தான். பெரியப்பா பலகாரம் பண்றச்சே மணி எட்டேகாலாயிட்டது..."

"ஆசிரமத்திலேருந்தா! ஓ! யார், துரையா?"

"பேரெல்லாம் தெரியாது..."

"ஒண்ணுமே பேசலியா! அட பாவமே? திரும்பிப் போயிட்டாரா?"

"நாளைக்குக் காலையில் வரேன்னு சொன்னான் போலிருக்கு. பெரியப்பா சேவா நிலையத்துக்குக் கூட போன் பண்ணாப்பல. நீ அங்கே வரவேயில்லேன்னு சொன்னாராம் ரங்கநாயகி..."

பச்சை மிளகாயை நறுக்கென்று கடித்து விட்டாள்.

மடக் மடக்கென்று தண்ணீரைக் குடித்துவிட்டு மாடிக்கு வருகிறாள். நீருவின் அறையில் விளக்கெரிகிறது.

மரக்கட்டிலில் தன் சமுக்காளப் படுக்கையை விரித்துக் கொள்கையில், நீரு படித்துக் கொண்டிருக்கும் சினிமாப் பத்திரிகையை விட்டெறிந்து விட்டு, "ஹே, என்ன பிக்சருக்குப் போனீங்க!" என்று கேட்கிறாள், குறுநகையுடன்.

"பிக்சரா?"

"சும்மா சொல்லு, உன் ரகசியத்தை நான் ஒண்ணும் வெளியே விட்டுடமாட்டேன்!"

"என்ன இரகசியம்?"

"ஏய்... தாத்தா ஒரு பந்தலிலேயே இரண்டு கல்யாணத்தையும் சேர்த்து நடத்திட்டா செலவு குறையும்னு சந்தோஷப்படுவார். என்னிடம் எதற்கு மறைக்கிறாய், கள்ளி?"

இப்போதுதான் யமுனாவுக்குப் புரிகிறது. 'ஆஹாஹா?'வென்று சிரித்துத்தான் எரிச்சலை விழுங்கிக் கொள்ள வேண்டும்.

"ஏய்... எனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு நினைக்க வேண்டாம். நீ சேவா நிலையம் போறேன்னு புளுகறதும் அவர் கண் ஜாடை காட்டி வண்டியிலே ஏத்திக்கிட்டுப் போறதும்..."

"சும்மா இரு நீரு! பேத்தாதே!"

"என்ன படம்னு மட்டும் சொல்லிடு. 'லவ் அண்ட் ஹவ் டு மேக் இட்'டா?"

"உளறாதே! அவன் எங்கேயோ போனான். நான் எங்கேயோ போனேன்."

"ஆஹாஹா...! 'லவ்'னு சொல்லிட்டா நாக்கை எச்சிலை முழுங்கிக் கழுவிக் கொள்ளலாம். பரவாயில்லை சொல்லி விடு!"

"நீரு, அது கிடக்கட்டும், யாரோ சாயங்காலம் என்னைத் தேடி வந்திருந்தாராமே!"

"யாரோ, உங்க ஆசிரமத்து மலைஜாதிபோல இருந்தது. தாத்தா அவனை நிறுத்திக் குலம் கோத்திரம் விசாரித்தார். அவன் தண்ணீர் குடித்த டம்ளரைப் பெருந்தேவியைக் கொண்டு அலம்பி வைக்கச் சொன்னார். ஏண்டி விஷயத்தை மறைச்சு மழுப்பறே? இப்ப சொல்லு! லவ் அண்ட் ஹவ் டு மேக் இட் தானே?" பொதுவுடைமைக் கோட்பாடுள்ள நாட்டில் சந்தேகிக்கப்படும் நபர்கள் ஏதேனும் குற்றத்தை, அவர்கள் சொல்கிறபடி ஒப்புக் கொள்ளும் வரை சித்திரவதை செய்வார்களாம். இவள் அந்த வகையைச் சேர்ந்தவள்.

"நீ அதை தான் போய்ப் பார்த்தேன் என்றால் தான் விடுவாய், கிடக்கட்டும். வந்தவர் பெயர் துரை என்று சொன்னாரா?"

"துரையா? - ஹையோ? என்ன பெயரடி...?" என்று அவள் விழுந்து விழுந்து சிரிக்கிறாள். யமுனாவுக்கு வேதனையாக இருக்கிறது. பரிதாபமாக அவளைப் பார்க்கிறாள். நீரு அந்தச் சினிமாவைப் பற்றியே சொல்லிச் சொல்லிக் கண்களை மூட வொட்டாமல் அடிக்கிறாள்.

காலையில் கீழே அவள் தலையைக் கண்டதும் பெரியப்பா முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு வருகிறார். இதற்குள் தினமும் குளிக்கப் போயிருப்பாரே?

"ராத்திரி எத்தனை மணிக்கு வந்தே?"

வளைவு நெளிவில்லாமல் மொட்டையாக ஒரு கத்தி வீச்சுக் கேள்வி.

"பத்தரையாகி விட்டது?"

"அவ்வளவு நேரமா? சினிமாவுக்குப் போறதானால் ஒழுங்காய்ச் சொல்லிக் கொண்டு போவது தானே? எதற்கு இந்த ஆஷாடபூதி வேஷம்?"

"அப்படியெல்லாமில்லை. சினிமாவுக்கு யார் போனா?" என்றாள் தலையைக் குனிந்து கொண்டு.

"சரி, எங்கே போனாலும் சொல்லிக் கொண்டு போகணும். இல்லை, பொழுதோடு திரும்பணும். எனக்கு எதுவும் ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டாக இருக்கணும். இந்த கச்சாபிச்சாவெல்லாம் பிடிக்காது."

"நேற்றுக் கொஞ்சம் நேரமாகி விட்டது. எதிர்பார்க்கவில்லை; தப்புதான்."

"அப்ப, இந்தக் கல்யாணத்துடன் முகூர்த்தம் பார்த்து விடலாமா?"

முகத்தில் அவளுக்கு ஜிவ்வென்று கடுமை ஏறுகிறது.

"எதற்கு?"

"எதற்கா? என்னிடம் நீருவிடம் பேசறாப்போல என்ன கேள்வி? எத்தனை நேரம் கழிச்சு வந்தாலும் கவலை இல்லையே?"

"நீங்கள் நினைக்கிறது முழுத் தப்பு. இந்த எண்ணம் உங்களுக்கு வரும்படி நடந்து கொண்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்."

பெரியப்பாவுக்கு ஆத்திரம் வந்து விடுகிறது. "என்ன? உனக்குத்தான் பேசத் தெரியும்னு நினைப்பா?"

"மன்னிக்கணும் பெரியப்பா, கல்யாணத்தைப் பற்றிய நினைப்பே கொஞ்சமும் கிடையாது."

"பின்னே? அந்த நினைப்பில்லாமலா அவனுடன் ஊர் சுத்தப் போறே? அந்தச் சமாசாரமெல்லாம் என் கண்முன் இந்த வீட்டில் நடக்க விடமாட்டேன்!"

"நீங்கள் ஏன் தப்பாக நினைக்கிறீர்கள்? நான் ஊர் சுத்தப் போகவில்லை. உண்மையில் அவன் தான் என் சுதந்திரத்தில் தவறாகக் குறுக்கிடுகிறான். நான் மதிப்புக் கொடுத்ததே பிசகு என்று தோன்றுகிறது."

"ஓ! இப்ப இப்படித் திருப்பிக் கொள்கிறாயாக்கும். ஏன், அவனுக்கென்ன? இந்தக் காலத்தில் இந்தச் சாமர்த்தியம் தான் வேண்டியிருக்கு. எம்.ஏ.யும் எம்.எஸ்.ஸியும் யாருக்கு வேணும்? பெரிய பெரிய அரசியல் தலையெல்லாம் சிநேகம். நீ வாணா பாரு. நாளைக்குக் கல்யாணம்னா சென்ட்ரல் மினிஸ்டர் வரை அழைச்சிடுவான். உக்காந்து சாப்பிட இரண்டு வீடு இருக்கு. அம்மா பரம சாது, அவன் இஷ்டப்பட்டால் பட்டதுதான். மாட்டுப்பெண் நல்ல சாதியில்லே குலமில்லேன்னு சொல்ல மாட்டாள். இப்ப பாலிடிக்ஸ் போற போக்கைப் பார்த்தா, இந்தப் பயல் நாளைக்கே மந்திரியாக வந்தால் ஆச்சரியப்பட மாட்டேன். உனக்குப் பிடிக்கிறதாடான்னேன். பதிலே சொல்லாம சிரிச்சிட்டுப் போனான். இவனை விட உனக்கு எங்கேருந்து பெரிய கொம்பன் வரப் போறான்னு இவனைக் குறை சொல்றே?"

"..."

"ஒண்ணு வச்சுக்கோ! ஜாதகக்கட்டைத் தூக்கிட்டு எந்தப் பக்கம் போனாலும், 'அம்மா யாரு? அப்பா யாரு?'ன்னு விசாரிக்காம பேசமாட்டா. பெரிய பெரிய சீர்திருத்தவாதிப் பட்டம் வச்சிண்டிருக்கிறவாதான் தூண்டித் தூண்டிக் கேக்கறா! இவனும் நீ என்னமோ பாலிடிக்ஸில் இறங்கினால் துணையாயிருப்பேன்னு தான் சரிங்கறான். இல்லாட்டா இன்னித் தேதியில் பத்தாயிரம் வரதட்சிணையுடன் அவனுக்குப் பெண் கொடுக்கக் காத்திருக்கா. பையன் சுண்டினால் ரத்தம் தெறிக்கும் சிவப்பு. ராஜா போல் இருக்கிறான். உனக்கு என்ன ஆட்சேபணை?"

"...எனக்கு அதெல்லாம் சொல்லத் தெரியாது. நான் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. ஊருக்குப் போவதாகத் தீர்மானம் செய்துவிட்டேன்."

"என்னது?"

அவருக்கு உதடுகள் துடிக்கின்றன. அடிக்க வந்துவிடுவார் போலிருக்கிறது. அவள் அழுத்தமாகவே, "எனக்குக் கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணமே கிடையாது. நான் ஏதோ நினைத்துக் கொண்டு வந்தேன். ஊருக்குப் போகிறேன்" என்று கூறுகிறாள்.

"என்ன நினைச்சு வந்தே?"

"பாத யாத்திரையில் கலந்து கொள்ளலாம்னு இருந்தேன். இங்கே இப்படி இலட்சியப் பிரசாரம் பண்ணலாம்னு அப்பா சொன்னார்; வந்தேன்..."

"இந்தச் சுரைக்காயெல்லாம் சோறு போடுமா? லட்சியமாவது மண்ணாங்கட்டி? வயசுப் பெண்ணைத் தனியே தண்ணீரைத் தெளிச்சி அவன் அனுப்புவது. உங்கம்மா சோத்து மூட்டைக் கட்டிக் கொடுத்து நீ வரதா; நான்சென்ஸ்! உலகம் பெண் குழந்தையைத் துணையில்லாம அனுப்பறவா யாருன்னு காத்திண்டிருக்கு. நீ தறிகெட்டுப் போகக் கூடாது. ஒரு தக்க துணையோடு போகணும்னு நான் சொல்றேன். நீ ஊருக்குப் போகக் கூடாது!"

அவளுக்கு என்ன மறுமொழி கூறுவதென்றே தெரியவில்லை.

அப்போது "சார்!" என்ற குரல் கேட்டது.

யமுனாவுக்குத் துணுக்கென்றிருக்கிறது.

துரை... தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு...

அவளைக் கண்டதும் அவனுடைய முகம் மலருகிறது.

அப்போதுதான் புன்னகை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டாற் போல் அவள் முகம் பளிச்சென்று மலருகிறது.

"நேத்து நீங்க வந்தீங்களாம். இப்பதான் சொன்னாங்க..."

"ஆமாம் ஒரு இண்டர்வ்யூன்னு வந்தேன். செலக்ஷன் ஆயிட்டது. மாச முதல்ல 'ஆர்டர்' வந்திடுன்னாங்க. உங்ககிட்ட இந்த சந்தோஷமான சமாசாரம் சொல்லணும்னு வந்தேன்."

"ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது எனக்கும். இங்கேயே வேலையா?"

"இல்லே, கல்கத்தாவுக்குப் போக வேண்டும். கொஞ்ச நாள் மூணு மாசமோ என்னமோ டிரெயினிங் போல. இப்ப நானூறு ரூபாய் சம்பளமும் அலவன்சும் தருகிறார்களாம். இது போதாதா?"

"அதிகம்..."

பெரியப்பா வாயில்படியில் வந்து நிற்கிறார்.

சில விநாடிகள் வந்த காரியம் முடிந்துவிட்டாற் போல் அந்தப் புன்னகையுடனே நிற்கிறான்.

அவளுக்கும் என்ன கேட்பதென்று தெரியவில்லை.

சட்டென்று, "எங்கே தங்கியிருக்கிறீர்கள்?" என்று விசாரிக்கிறாள்.

"ஒரு நண்பன் வீட்டில்..."

"எல்லோரும் அங்கு சுகந்தானே?"

"ஜோசஃப் சார் பாதயாத்திரை முடிந்து வந்துவிட்டார். ஐயா தான் ரொம்பப் பலவீனமாய்விட்டார். பேசறதேயில்லை. நீங்க இங்கே வந்த பிறகு பிரார்த்தனைக்குக் கூட எழுந்து உட்காருவதில்லை. ஏதானும் சிகிச்சை பண்ணலாமென்றால் ஒத்துக் கொள்ளவே மாட்டேனென்கிறார். அம்மாதான் பாவம்; இப்போதெல்லாம் வெளியே காண முடிவதேயில்லை."

"அவருக்கு நம்பிக்கையே போய்விட்ட மாதிரி இருக்கிறது. அதை எப்படிக் கொடுப்பதென்று தான் எனக்கும் புரியவில்லை - நீங்கள் எத்தனை நாள் தங்குவீர்கள் இங்கே?"

இந்நேரமும் அவனை நிற்க வைத்தே பேசுகிறாள். அவனை உட்காருங்கள் என்று பெரியப்பாவும் கூடச் சொல்லவில்லையே!

"அதுதான் சங்கடம். இன்னும் ஒரு வாரத்தில் உத்தரவு வருமென்றால் இப்போது அங்கு ஒருதரம் வீணுக்கு வண்டிச் செலவு செய்வானேன் என்று தோன்றுகிறது. உங்களிடம் சொல்வதற்கென்ன? ஜோசஃப் சார் தான் பணம் கொடுத்திருக்கிறார். இங்கு வந்த பிறகுதான் கல்கத்தாவுக்குப் போகவேண்டும் என்று தெரிகிறது. இங்கே உத்தரவு வரும் வரையில் அங்கே இங்கே தங்கிக் கொண்டு பணத்தைச் செலவழிப்பதற்கு, ஊருக்கே போய் விடலாமென்று தோன்றுகிறது. நீங்கள் எத்தனை நாள் தங்குவீர்கள் இங்கே...? எல்லாம் எப்படி இருக்கிறது? 'விவரமாக அவளிடம் கேட்டு வாருங்கள்' என்று அம்மா சொன்னார்..."

யமுனா எங்கோ சூனியத்தைப் பார்த்துக் கொண்டு நெடுமூச்செறிகிறாள்.

"எதுவும் உற்சாகத்தைக் கொடுக்கும்படியாக இல்லை. ஆனால் நாம், அதை எதிர்பார்த்தா வந்தோம்? இருந்தாலும் இப்போது அப்பாவைப் பற்றிக் கேட்ட பிறகு எனக்கு உடனே திரும்பிவிட வேண்டும் போலிருக்கிறது..."

"நீங்கள் அதற்காக அவசரப்பட்டு முடிவு பண்ண வேண்டாம்..."

பெரியப்பாவைப் பார்க்கிறான் அவன்.

பெரியப்பா சடக்கென்று உள்ளே திரும்பிப் போகிறார்.

சில விநாடிகள் முகம் இருள அவர் சென்ற திக்கையே நோக்கிக் கொண்டு அவள் நிற்கிறாள்.

"நீங்கள் தப்பாக நினைக்கக்கூடாது; கொஞ்சங்கூட மாற்றமே ஏற்படவில்லை..."

"நான் புரிந்து கொண்டேன். அப்ப, நீங்களும் வருவதானால், போய் டிக்கெட் வாங்கி இடம் போடட்டுமா?"

"செய்யுங்கள். எனக்கு மனசு ரொம்பக் குழப்பமா இருக்கிறது. உங்களை நிக்க வைத்தே பேசுகிறேனே? உட்காருங்கள்..." என்று வராந்தாவில் உள்ள பிரம்பு நாற்காலியைக் காட்டுகிறாள்.

"பரவாயில்லை. நான் நாளை மாலையே இடம் கிடைத்தால் வாங்கி விடட்டுமா? தூங்க வசதி கிடைக்காது."

"ஆமாம். இப்போதைக்கு எனக்கு ஒரு வேலையும் இங்கு இல்லை; நான் வந்து விடுகிறேன்."

"சரி அப்ப நான் நாளை மாலை இங்கு வருகிறேன். டிக்கெட் கிடைத்து விட்டால், இல்லையேல்..."

"போன் நம்பர் தருகிறேனே, சொல்லி விடுங்கள் போதும்..."

தொலைபேசி எண்ணைச் சிறு தாளில் குறித்துக் கொடுக்கிறாள். அவன் அதை வாங்கிக் கொண்டு விடை பெற்றாலும், யமுனா அவனுடன் இறங்கி நடக்கிறாள். மாமரங்கள் மழைக்குச் செந்தளிர் அணிந்து பூரித்திருக்கின்றன. தரையில் ஈரம் காயவில்லை. எங்கேயோ, ஒரு குயில், 'கூவ்' 'கூவ்' என்று குரல் கொடுக்கிறது. துரை முன்னே செல்கையில் மௌனமாக நடக்கும் யமுனாவுக்கு அவன் அருந்துவதற்குக் கூட ஏதேனும் தந்து உபசரிக்கவில்லையே என்று உறுத்துகிறது. அதை எப்படிச் சொல்வது என்று புரியாமலே நடக்கையில் அவனுடைய பைக்குள்ளிருந்து ஒரு புத்தகம் தலை நீட்டி எட்டிப் பார்க்கிறது.

"அதென்ன... புத்தகமா..."

துரை திரும்பி நிற்கிறான். "ஓ இதுவா? பழைய 'இம்பிரின்ட்' பிளாட்ஃபாரத்தில் நேற்று வாங்கினேன்" என்று அவளிடம் எடுத்துக் கொடுக்கிறான். 'எக்ஸ் அன்டச்சபிள்ஸ்' (மாஜி தீண்டாதோர்) என்ற தலைப்பு அவள் கருத்தைக் கவ்விக் கொள்கிறது. தன்னையுமறியாமல் அவள் கண்கள் அவனைச் சந்திக்கின்றன. "ஆமாம், இந்தத் தலைப்பைப் பார்த்து விட்டுத்தான் இரண்டு மாசப் புத்தகங்களையும் வாங்கினேன்..."

"அமெரிக்கர் எழுதியதா?"

"ஆமாம். நேற்று இங்கு வருமுன் ஒரே மூச்சில் படித்தேன். அப்புறந்தான் வந்தேன். தீண்டாதோர், மாஜி தீண்டாதோர் என்ற பெயரில் ஒரு புதிய சாதியைத் தோற்றுவித்திருக்கின்றனர். சரிதானே?"

அவனுடைய புன்னகையில் சிறுமையின் நிழல் தெரிகிறது.

"எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. பெரியப்பா நேற்றும் இப்படித்தான் உங்களை நிற்கவைத்து அனுப்பினாரா?"

"அதெல்லாமில்லை. மலைச்சாதியா என்று கேட்டார். இல்லையென்று சொன்னதும், 'இன்டர்வ்யூவுக்கு வந்தேன், வேலையில்லாத இன்ஜினியரிங் பட்டதாரி' என்றதும் உட்காரச் சொன்னார். பிறகு தான் படித்தது, வளர்ந்தது எல்லாம் கேட்டார். நான் தக்கர் பாபா வித்யாலயம், அங்கே இங்கே என்று சொன்னதும் சந்தேகம் வந்து விட்டது. நான் அழுத்தமாகவே பின் தங்கிய வகுப்பு என்று சொன்னேன். குடிக்கத் தண்ணீர் கேட்டேன். ஒரு அம்மாள் கொண்டு வந்து வைத்தார். உண்மையில் நீங்கள் இங்கே இருப்பீர்கள். இரவுக்கு தங்கிவிடலாம் என்று தான் பையோடு வந்தேன்... பேசாமல் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு, ரயில்வே ஸ்டேஷனில் படுத்துத் தூங்கினேன். காலையில் எழுந்து காப்பி குடித்துவிட்டு வந்தேன். நீங்கள் எந்த இடத்தில் வந்து முட்டிக் கொள்கிறீர்கள் என்று புலனாயிற்று."

அவளுடைய கண்களில் நீர் சுரந்து விட்டது.

"நீங்கள் எதற்கு வருத்தப் படுகிறீர்கள்? எங்களை இப்போது ஓட்டலில் ஏற்கிறார்கள்; குடிக்க நீர் கொடுக்கிறார்கள். படித்தோம்; சமுதாயத்தில் மதிப்பாக வாழ முடியும். ஆனால் வாழ்க்கை என்று ஒரு தனிமனிதனின் தேவைகளோடு ஆராய்ந்தால் எங்கள் நிலை என்ன? என் போன்றவர்களுக்குக் குப்பைச் சகதியில் வேர்; அதை விட்டுப் பெயர்ந்து விட்டோம்; மேல்படிகளில் நாங்கள் ஊன்ற யார் இடம் கொடுப்பார்கள்? அலுவலகத்தில் இடம் கிடைத்திருப்பதே பெரிய காரியம். உங்களைத் தவறாக நினைப்பதாகக் கருதக் கூடாது. மாற்றங்கள் இயல்பாக வருவதில்லை" என்றான்.

"வரும்; வந்து விடும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மறுமலர்ச்சி பெற்ற பெண்கள் எத்தனையோ பேர்! ஒரு புதிய சமுதாயம் தோன்றக் கூடும்..."

"நம்பிக்கையில் தான் உலகமே இன்று பிழைத்திருக்கிறது யமுனா. அதைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் நான் இன்றும் வந்திருக்கிறேன். பெரியவரிடம் சிரித்துக் குசலம் விசாரித்ததும் அதனால் தான்..."

"நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையுடையவர்!"

"அப்படியெல்லாம் புகழ வேண்டாம். இப்படி எண்ணுவதற்கு என்னை உருவாக்கியவர்களுக்கு நான், என்றென்றும் நன்றி செலுத்திக் கொண்டிருப்பேன். நீங்களெல்லாம்... உங்கள் பெற்றோர், அவர்களைப் போன்ற பெரியவர்கள் இந்த உலகில் இன்னும் வாழ்கிறார்கள் என்பதே நம்பிக்கை. நேரமாகிவிட்டது யமுனா. நான் டிக்கெட்டைப் போய்ப் பார்க்கிறேன்; வருகிறேன்."

"ஓ, டிக்கெட்டுக்குப் பணம் கொண்டு வருகிறேன். சற்று இருங்கள்..."

"என்னிடம் இருக்கிறது யமுனா. நாளை பார்க்கலாம்."

அவன் சுற்றுக் கதவைக் கடந்து கண்களுக்கு மறையும் வரையிலும் யமுனா அங்கேயே நிற்கிறாள்.

அத்தியாயம் - 12

மாலை பிரார்த்தனையை முடித்துக் கொண்டு ருக்மிணி அம்மை விடுவிடென்று பாதையில் வந்து கொண்டிருக்கிறாள். மழை மூட்டம் கம்மென்றிருக்கிறது. சாப்பிடும் கூடத்தில் கலகலவென்று பேசும் குரல் மட்டும் மெல்ல ஒலிக்கிறது. முன்பெல்லாமானால் மாலை பிரார்த்தனைக்கு அவள் விடுதிக் கூடத்துக்குச் சென்றால், யமுனா தந்தையின் அருகில் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடுவாள். அவளும் உதகைக்கோ வேறெங்கோ சென்றால் ஜோசஃப் ராம்ஜியின் அருகில் இருப்பார். இன்று ஜோசஃபும் அருகில் இல்லை. இப்போதெல்லாம் அவர் தனிமையையே பெரும்பாலும் விரும்புகிறார். ருக்மிணி நினைத்துப் பார்க்கிறாள். இந்த இரண்டு மூன்று மாத காலத்தில் அவர் வெறும் மூச்சுப் பொம்மையாக மாறிவிட்டார்.

அஹிம்சை நெறியில் அளவற்ற நம்பிக்கை வைத்த அவர், அந்த நம்பிக்கைக்குப் பேரிடியாய் சம்பவங்கள் நிகழ்ந்ததுமே சோர்ந்து போனார். அவருடைய உடல் நலிவு, வெறும் உடல் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல; உள்ளத்தில் விழுந்த அடிகளே, அவரைப் படுக்கையில் வீழ்த்தியிருக்கின்றன. சீனத் தாக்குதல் நிகழ்ந்த போது நிராயுதபாணிகளாய் எல்லையில் அணி நிற்க ஒரு படையைத் திரட்ட வேண்டும் என்று எல்லாத் தலைவர்களுக்கும் எழுதினார். வறட்சியைப் பொருட்படுத்தாமல் ஓடி ஓடித் தலைவர்களைச் சந்தித்து அஹிம்சை நெறியோடு தாக்கியவனை எதிர்நோக்கி நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்படி நிராயுதபாணிகளை வன்முறையில் வீழ்த்தினால் உலகை அது அசைக்கக் கூடும் என்று நம்பினார். முயற்சி விழலுக்கிறைத்த நீராயிற்று. அப்போதே ஒரு நள்ளிரவில் அதிர்ச்சி கண்டு கை கால் சுவாதீனம் இழந்தவர் தாம்.

அவர் உயிர் பிழைத்திருப்பதே அஹிம்சா நெறியில் மிஞ்சியிருக்கும் நம்பிக்கை ஒளிதான் என்று அவளுக்குத் தோன்றுகிறது. வெளி உலகச் செய்திகளை அவள் மறைத்து விடுவாளோ என்று வானொலிப் பெட்டியைத் தன்னறைக்குள் வைத்துக் கொள்வார். பத்திரிகைகளைப் படிப்பார்; யமுனாவிடம் பேசுவதென்றால் அலுப்பே கிடையாது. மாலை நேரங்களில் மெல்ல வெளியே சாய்வு நாற்காலியில் சாய்த்து வைக்கச் சொல்வார். பிறகு சக்கர நாற்காலி ஒன்று தயாரித்தார்கள். பிரார்த்தனைக்குங்கூட இடையில் போய்க் கொண்டிருந்தார். திடீரென்று எல்லாம் பிடிக்காமலாயின. மலர்களில் தான் எத்தனை மகிழ்ச்சி கொள்வார்? காட்டுக் குழந்தைகள் அந்த ஐயனைத் தேடிவரும் போது அருகில் அழைத்துத் தொட்டு மகிழ்வார். யமுனா ஊருக்குப் போன பிறகு அவர் ஒன்றிலும் பற்றுக் கொள்ளாமல் கூட்டுப் புழுவாய் முடங்கிவிட்டாரே?

இப்போது உணவும் சுருங்கி, உறக்கமும் பிடிக்காமல் பிரமை பிடித்துக் கிடக்கிறார்.

"குழந்தைகள் வந்திருக்கிறார்கள். மாரி பையனைக் காட்ட வந்திருக்கிறான்" என்று காலையில் சொன்னாள்.

"போகச் சொல்" என்று சைகைதான் காட்டினார்.

திடீரென்று "யமுனா ஏன் இன்னமும் வரவில்லை?" என்று கேட்டார்.

இந்த வெறுப்பு எதற்கு அறிகுறி?

ருக்மிணி எந்த நிலையிலும் கலங்கியதில்லை. இன்று அருகில் யமுனா இருந்தால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

குடிலில் குத்துவிளக்கு எரிகிறது. அவர் கண்களை மூடிக்கொண்டு அயர்ந்து கிடக்கிறார்.

அவள் அருகில் வந்து மெல்ல அந்தக் கையைத் தொட்டெடுக்கிறாள்.

பழைய நினைவுகள் குமுறிக் கொண்டு வருகின்றன.

"கடல் எங்கோ இருக்கிறது; மலை எங்கோ இருக்கிறது. கடல் நீரில் விளையும் உப்பையும் மலை மண்ணில் விளையும் புளியையும் இணைத்து வைத்தார் யார்? இந்த இணைப்பின் அதிசயந்தான் என்ன?..." என்று அவர்கள் இறைவனின் சந்நிதியில் மணமக்களானபோது, மகாராஷ்டிரக் கவிஞரான நண்பர் வாழ்த்துக் கவிதை படித்தார். புளியும் உப்புமாய்க் கரைந்து, கபடற்ற ஏழைக் குழந்தைகளை மகிழ்விக்க வந்த நாட்களை நினைத்துக் கொள்கிறாள். கண்கள் பனிக்கின்றன.

"நீ ஏன் அழுகிறாய் ருக்மிணி; எனக்குச் சொல்லாமல் எதையோ மறைக்கிறாய்."

அவசரமாக அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

"உங்களிடம் ஒளிக்க எனக்கு ஒன்றுமில்லை..."

"...நீ... என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டிராது போனால், இன்றைக்கு மேலான நிலையில் சந்தோஷமாக இருந்திருப்பாய். என்னால் தானே ஆளும் கட்சியின் பக்கம் சாராமல் எதிர்க்கட்சிக்கு வந்தாய்? நீ இப்போது அதற்காக வருத்தப்படாமலிருக்கிறாயா ருக்மிணி?"

"பாலேட்டில் பணியாரம் செய்து தாயார் கொடுத்திருக்கையில் குழந்தை வேறு எதற்கானும் ஆசைப்படுவதுண்டா? வீணாக ஏன் மனசை வருத்திக் கொள்கிறீர்கள்?"

"உனக்கு இப்போது, இந்த யுகத்தில், தியாகம், சேவை, உண்மை என்று வாழ்ந்து இந்த நாட்டை உயர்த்த முடியுமென்று நம்பிக்கை இருக்கிறதா ருக்மிணி?"

"எனக்கு நம்பிக்கை ஏன் குறைய வேண்டும்? சோதனைகள் வருவது நம் நம்பிக்கையைக் குறைப்பதற்காக அல்ல. நல்லதெல்லாம் உடனே பலன் கொடுக்காது. ஒரு தலைமுறை அல்லது இரு தலைமுறை கூடக் காத்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வீர்களே?"

"யமுனா அப்படி நினைப்பாளா? அந்தப் பொறுமை இந்தத் தலைமுறைக்கு வருமா? ஒரு காலத்தில் நாம் எப்படி எப்படியோ நினைத்தவர்களெல்லாம் தலைகுப்புறச் சரியும் போது, இந்த மண்ணில் தான் விளைய வேண்டுமென்று நட்ட குருத்து வேர் பிடித்து ஆலமரமாகும் என்ற நம்பிக்கை எங்கே வரப்போகிறது?"

"ஏன் வராமல்? யமுனாவிடம் நிச்சயமாக நம்பிக்கை வைக்கலாம். எந்தச் சோதனை வந்தாலும் இறங்கி விடமாட்டாள்."

சில விநாடிகள் உத்தரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"அவளுக்கு இருபத்தைந்து வயசாகிறது..."

அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்பதை அறிந்தாற் போல் அவள் அமைதியாக இருக்கிறாள்.

"ருக்மிணி கமலம்மா இப்போதெல்லாம் ஊட்டிக்கே வருவதில்லையா? அந்தப் பையன், அவன் பெயரென்ன, சுதீர் என்ன செய்கிறான்?..."

"இப்போது இங்கே வருவதில்லை. யமுனா கமலம்மாவைப் பார்த்தேன்னு சொன்னாள்..."

"அந்தப் பையனுக்கு என்ன; அப்பா தேடி வைத்ததெல்லாம் இருக்கிறது! அந்தம்மாவுக்கு யமுனாவைக் கல்யாணம் செய்து கொள்ள வேணும் என்று ஆசை உண்டு..."

ருக்மிணி என்ன பேசுவாள்?

உலகம் அறியாப் பாலகனாக இருந்த காலத்தில் சுதீர் அங்கு வருவான். யமுனாவும் அவனும் காடெல்லாம் சுற்றித் திரிவார்கள். இப்போதெல்லாம்... வந்தாலும் இங்கு வருவதில்லை. ஆற்றைத் தாண்டி அக்கரையில் நடமாடுகிறான். பிறகு நாட்டு வாட்டம் தீர்க்க நாசவழியே நல்வழி என்று துண்டுப் பிரசுரங்களை விசிறிவிட்டுப் போனான். அந்தப் பெண்ணின் நம்பிக்கையையும் அசைத்துவிட்டுப் போனான் என்றெல்லாம் எப்படிச் சொல்வது?

"யமுனாவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. நீ அதை நினைப்பதில்லையா ருக்மிணி?"

"எப்படி நினைக்காமலிருப்பேன்?"

"என் மகள் ஜான்ஸிராணியாகணும்னு எனக்கு இஷ்டமில்லை. ஒரு சீதையாக, ருக்மிணியாக உன்னைப் போல..."

நெஞ்சு விம்மி முட்டுகிறது. ருக்மிணி அந்த நெஞ்சை நீவி விடுகிறாள். கண்ணீர் பொங்குகிறது.

"நான் இருக்கும் போது நீங்கள் இப்படியெல்லாம் வருந்தக் கூடாது. அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையைப் பற்றிய உணர்வு எனக்கு எப்போதும் இருக்கிறது. சிறு வயதில் அவளை அனியனிடம் விட்டுவிட்டுக் கவலையில்லாமல் நம் பணியைச் செய்தோம். அவளை இந்தச் சாதாரண ஆசாபாசங்களுடன் நாம் வளர்க்கவில்லை. அவள் குத்துவிளக்காய் நிழலைத் தாங்கினாலும் சுற்றுப்புறமெல்லாம் ஒளி காட்டுவாள்..."

"ஆமாம். அந்தப் பையன் துரை எங்கே? ஓ, இன்டர்வ்யூன்னு போனானில்லை?"

"ஆமாம் வேலை கிடைக்குமாம். அனியனுக்குக் கடிதாசி வந்திருக்கு..."

"நல்ல பையன். அவனைப் பற்றி உன் அபிப்பிராயம் என்ன?"

"நல்ல பையன். இனிமையான சுபாவம்..."

"யமுனாவும் அவனும்..."

ருக்மிணியை அவர் பார்க்கிறார். அவளுக்கு இது தோன்றியதே இல்லை. துரைக்கு யமுனா...யமுனாவைத் துரைக்கு...

"ஏன்... நீ பேசவில்லை? மனிதன் எத்தனை ஒட்டாது விரக்தியுடன் வாழப் பழகினாலும் நம்பிக்கைத் துளிரைத் தன் பாரம்பரியத்தில் தான் காண ஆசைப்படுகிறான்... பெரிய பெரிய மனிதர்கள் கூட இதற்கு விலக்கில்லை... நீ என்ன நினைக்கிறாய்?"

"யமுனா வரட்டும். பிறகு, அவள் மனதறிந்து செய்யலாம்..."

"எனன்னெக்கமோ அண்ணா இவ்வளவு சிரத்தையுடன் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறாரே என்று. அது ஒரு பக்கம் நம்மைக் கண்டால்தான்... குழந்தையாவது வேற்றுமை இல்லாமல் போகட்டும் என்று சொன்னேன்..."

"நான் துரையிடம் சொல்லி அனுப்பினேன். அவளுக்கு எதிர்காலத் திட்டம் என்று ஒன்று நிச்சயமாக இல்லை என்று தெரியும். பார்ப்போம்..."

ருக்மிணி எழுந்திருக்கிறாள். இருள் பரவியாயிற்று. ரங்கன் பால் கறந்து வைத்திருக்கிறான்! அவள் உள்ளே சென்று அடுப்பை மூட்டுகிறாள்.

குடிலின் வாயிலில் கால்களைக் கழுவிக் கொண்டு யாரோ உள்ளே நுழையும் அரவம் கேட்கிறது.

அனியனோ?

"வணக்கம்மா!"

சமையல் பகுதியின் பக்கம் துரை சிரித்துக் கொண்டு நிற்கிறான்.

ஆண்மையின் வீச்சான முரட்டுத்தனமோ, செருக்கின் துடிதுடிப்போ இல்லை. பணிவும், அமைதியும், முந்தைய தலைமுறையினர் எட்டி நிற்க வைத்து ஒதுக்கிய பரிதாபமும் இன்னமும் கண்களில் நிழலாடுவது போல் தோன்றுகின்றன.

"வேலை கிடைத்து விட்டதம்மா!" என்று கைகுவிக்கிறான்.

"அப்படியா! எங்கே?"

"இன்னும் பத்து நாளில் 'ஆர்டர்' வரும். கல்கத்தாவில் தான் டிரெயினிங் இருக்குமாம்! சம்பளம் நானூறு ரூபாயும் அலவன்சும்..."

"ரொம்ப சந்தோஷம். ஆனால் நீங்க போனால் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கும்."

"முதலில் ஒரு வாரத்தில் ஆர்டர் வருவதானால் இங்கே வீண் செலவு பண்ணிட்டு வருவானேன்னு பார்த்தேன். ஆனால் யமுனா தான் ஒத்துக் கொள்ளலே."

"யமுனாவா? பார்த்தீங்களா?"

"பார்த்தீங்களாவாவது?"

அதற்குள் "அம்மா!" என்று கன்றின் குரல் ஒலிக்கிறது. அலுப்பும் சோர்வும் புழுதியும் அழுக்கும் நீட்டிய கரங்களுள் சங்கமமாகின்றன.

"இப்போதுதான் உங்களை நினைத்தோம்... மகளே..."

விழிகள் நனைந்து பளபளக்க அவர்களிருவரையும் ருக்மிணி பார்க்கிறாள். இவர்கள் இருவருமாக வருவார்கள் என்று அவள் சற்று முன் கூட நினைக்கவில்லை. எண்ணங்கள் செயலாவதற்கு இது தோற்றுவாயா?

அவர்களிருவரையும் பெரியவரிடம் அனுப்பிய ருக்மிணி விரைவாக உணவு தயாரிக்கிறாள்.

'வங்கத் தலைநகரில் வன்முறைச் செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இந்தப் பையன் அங்கே போகிறான். யமுனா... யமுனா... அவள் தன் எதிர்காலம் குறித்துச் சிந்தனை செய்யாமலா இருப்பாள்?'

தகப்பன் அறிவைப் பார்ப்பான்; தாய் பொருளைப் பார்ப்பாள்; மகள் அழகனை வேண்டுவாள் என்பது உலக வழக்கு.

இங்கே அந்த உலக வழக்கைத் தகர்த்துப் புதுமையைத் தோற்றுவிக்க அவர்கள் குடும்பம் நடத்துகிறார்கள். யமுனா துரையை விரும்புவாளோ? அவளுடைய மனதை அறியும் அந்தரங்க நெருக்கமே தன்னிடம் இல்லை போலிருக்கிறது அவளுக்கு. அம்மாவனிடம் தான் அவளுக்கு சலுகை நெருக்கமெல்லாம்.

பெரியவரின் அறையில் பேச்சும் சிரிப்பொலியும் கலகலப்பாக இருக்கின்றன. 'அனியன்' அங்குதானிருக்கிறானோ.

யமுனா தன்னுடைய கூட்டங்களைப் பற்றித்தான் பேசுகிறாள். சினிமா தாரகை காந்தியைப் பற்றிக் கேட்டாலே உருகுவதையும், மாதர்குல திலகம் மாணிக்கவல்லியம்மை காந்தி சூதுகள் செய்து சுதந்திரம் வாங்கிக் கொடுத்ததைப் பற்றிப் பேசியதையும், நாவேந்தன் காந்தியாரையும், அறிவுலகம் மாமேதையையும் ஒப்பிட்டுச் சொற்களை அடுக்கி அடுக்கிக் கோபுரம் கட்டியதையும் விவரிக்கிறாள். ஒரே சிரிப்பு.

"எந்தா ஏடத்தி? மோள். வல்ய... பிரசங்கியாயி?"

"ஆமாம்... வ...ல்...ய, வலிய... வலிய..." என்று யமுனா சிரிக்கிறாள். "போகும்போது கடவுளே, அவர்கள் பெரியப்பாவுக்கு ஒரு மாலையை வைத்திருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வேன். மாலை போஸ்டர் அடுக்குமொழி சோடா, மைக்கு... ஆமாம், கூட்டத்தில் எட்டு பேரே இருந்தால் கூட மைக் கட்டாயம் வேண்டும். எல்லாம் குறைவில்லை. பெண் மிகமிக அழகு தான். கண்கள் தாம் இல்லை. நான் எதற்காகப் பேசினேன் என்று எனக்கே புரியவில்லை. மேடையேறி ஏறி எல்லோரும் அது இது என்று புகழ்வதைக் கேட்டுக் கேட்டு, நான் நிசமாகவே லீடராயிடுவோமோன்னு பயம் வந்துவிட்டது. துரை கூப்பிட்டார். 'லீடர்ஷிப்'புக்கு ஒரு கும்பிடுன்னு ஓடிவந்து விட்டேன்." துரை சிரித்த முகம் மாறாமல் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறான்.

"என்னைப் பார்க்க இவர் பெரியப்பா வீட்டுக்கு வந்த பிறகு தான் இவருக்கு உலகமே புரிந்தது. கேளுங்கள் அம்மாவா? சுவாரசியமாக இருக்கும்."

"சேச்சே, என்ன யமுனா நீங்க. அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க!"

"பெரியப்பா அடுத்த முறை என்னையே படி ஏற்றுவாரா என்பது சந்தேகம்..." என்று யமுனா நிறுத்துகிறாள்.

"இனி பேசியது போதும். சுடுநீர் இருக்கிறது. குளித்துச் சாப்பிட வாருங்கள். துரை, நீங்களும்..." என்று ருக்மிணி பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைக்கிறாள்.

அத்தியாயம் - 13

அன்றிரவு ஜோசஃபின் குடிலில் படுத்திருக்கும் துரை உறங்கவில்லை. தாயின் அருகில் கிடக்கும் யமுனாவுக்கும் உறக்கம் கொள்ளவில்லை.

"அம்மா...?"

இருளில் அந்தக் குரல் சுமந்து வரும் துடிப்புகள் தெளிவாகக் கேட்கின்றன.

"யமு...?"

"...வந்து சாப்பிடும்போது அம்மாவன் தெரிவித்தாரே... என் கல்யாணத்தைப் பற்றி முன்னமே நீங்கள் யோசனை செய்ததுதானா...?"

"யோசனை செய்யாமல் எப்படி இருக்க முடியும் மகளே?"

"துரை... அவராக உங்களிடம் கேட்டாரா?"

"ஏனம்மா? நாங்களாகத்தான் சொன்னோம். உணர்ச்சி முட்டிப்போய்க் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டான். உன் மனசு எனக்குத் தெரியலியே?"

"அம்மா..."

'அம்மா, அம்மா' என்று கூப்பிடுகிறாளே ஒழிய நா வரைக்கும் வரும் கேள்வி நாநுனியில் தங்கிவிடுகிறது.

"என் கல்யாணத்தைப் பற்றி இத்தனை நாள் நீங்கள் விளையாட்டாகக் கூடப் பேசியிருக்கவில்லையேன்னு எனக்கு எதிர்பாராததாக இருக்கிறது."

"பேச சந்தர்ப்பம் வரவில்லையே ஒழிய, மனசில் இல்லாமலிருக்குமா? அப்பா சொல்லத் தெரியாமல் நெஞ்சை வருத்திக் கொள்கிறார் என்று தோன்றியது. நீ போனதிலிருந்து அவர் யாருடனும் பேசுவதில்லை; படிக்கச் சொல்வதில்லை. பிரார்த்தனையில் கூட நம்பிக்கை விட்டாற்போல் கண்களை மூடிக் கொண்டு கிடக்கிறார். எனக்குக் கலக்கமாக இருந்தது. துரையிடம் உன்னை வரச்சொல்லி அனுப்பினேன்..."

"..."

"துரை இங்கே ஆசிரமத்திலேயே இருந்து பழகியிருக்கிறான். சாத்விக இயல்பு, நல்ல குணம், யமுனாவை அவனுக்கு ஏன் கொடுக்கக் கூடாது என்று அவர் தான் கேட்டார். அனியனுக்கு ரொம்ப சந்தோஷம். ஆனால் மகள் மனதில் என்ன இருக்கிறதென்று தான் எனக்குப் புரியவில்லை. இது கட்டாயமில்லை. உனக்கு உன் வாழ்க்கைத் துணைவனைத் தேர்ந்து கொள்ள முழு சுதந்திரம் உண்டம்மா, தெரிகிறதா?"

"அந்த சுதந்திரத்தினால்தான், பெரியப்பாவின் ஆலோசனையைத் தள்ளிவிட்டு இங்கு வந்தேன்... அம்மா... நான் ஒன்று கேட்கட்டுமா?"

"கேள்..."

"நான் சுதீரை நினைத்துக் கொண்டு கஷ்டப்படுவேனோ என்று நீங்கள் எனக்குத் திருமணம் செய்ய நினைக்கிறீர்களோ என்று தான்..."

ருக்மிணிக்குத் தொண்டை கம்முகிறது. "அப்படியெல்லாம் இல்லையம்மா? உன் அப்பா, தான் கடமையைச் செய்யவில்லை என்று உள்ளூற வேதனைப்படுகிறார். நம்பிக்கையை நழுவ விடுகிறார். அவருக்கு இந்த நாட்டு விடுதலையிலும் பின்னர் அதன் உன்னத உயர்விலும் அத்தனை நம்பிக்கை இருந்தது! அந்தக் குரலை நான் கேட்டவள் யமு! அந்தக் குரலில் பெருமை கொண்டவள். அவர் தம் குடும்பத்தைப் பற்றித் தனியாக நினைத்துப் பேசியே நான் அறிந்ததில்லை. இப்போது அவர் சொந்தக் குடும்பம், மகள் என்று நினைத்து வீழ்ந்த நம்பிக்கைத் துளியை மீட்கப் பார்க்கிறார். யமுனாவுக்கு இருபத்தைந்து வயசாகிறது, அவளுக்குத் தக்க மணாளனைத் தேடி மணம் செய்யக் கையாலாகாதவனாகப் போனேனே என்று கண்ணீர் விடுகிறார்... நீ உன் மனசுக்குப் படுவதைச் சொல்லி அப்பாவைத் தேற்றுவாய் என்றுதான் நினைத்தேன். உனக்கு துரையைப் பிடிக்கவில்லை என்றால் அம்மையிடம் சொல்லிவிடு..."

யமுனா சில நிமிடங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டு கிடந்தாள். துரை அவளுக்கு எந்த வேற்றுமை உணர்வையும் தோற்றுவிக்காத இனிய இயல்புடைய இளைஞன். ஆனால் சுதீரை நினைக்கும் போது ஓர் ஆவல்; அர்த்தமற்ற அச்சம்; படபடப்பு. அவன் வந்திருக்கிறான் என்றாலே உள்ளம் துடிக்கும். சுதீர் உருவத்தில், குடும்பப் பின்னணியில், கல்வி கேள்வி போன்ற வளர்ச்சியில், முற்றிலும் மாறானவன். ஒவ்வொரு சமயம் "சுதீர், நான் உங்களைக் காதலிக்கிறேன்!" என்று அவன் காலடியில் சரணடைவது போலும் கற்பனை செய்து கொண்டு பார்க்கிறாள். ஆனால் மேலான நிலையிலேயே நிற்கும் அவளை ஏதோ ஒன்று அந்தச் சிந்தனையைக் குருட்டு வெட்டாகத் தடுத்து விடுகிறது.

"அம்மா!... அக்கரையில் உள்ள ஏழைகளுக்கு மாவும் அரிசியும் கொடுத்து உதவுகிறீர்களே, அந்த அக்கரையிலேயே உப்பிட்ட கையையே வெட்டத் தயங்காத துரோகத்துக்கு அந்த பாவப்பட்ட மக்களைத் தூண்டி விடுபவர்கள் இருக்கிறார்கள். அதை நீங்கள் அனுமதிக்கிறீர்களா?"

"அதன் போக்கில் விடும்போது தீமை வளரும் என்று நான் நம்பவில்லை. அநுமதிக்காமல் எதிர்த்தால் நிச்சயமாக வளரும் என்று நம்புகிறேன்..."

"அம்மா நீங்கள்... அப்பாவைக் கல்யாணம் செய்து கொண்ட போது, எல்லோரும் எதிர்த்திருப்பார்களே. அந்த எதிர்ப்புகளில் குழம்பாமல் ஒரே நிலையில் நிற்கத் தோன்றுவதைத்தான் 'காதல்' என்று சொல்கிறார்களா?"

ருக்மிணி அம்மைச் சிரித்துக் கொள்கிறாள்.

"அப்போது இந்த வார்த்தையே தெரியாது. இருவரும் ஆசிரமத்திலிருந்தோம். அவருக்கு அச்சன், அம்மை என்ற பந்தங்களெல்லாம் இந்த ய்க்ஞத்தில் குதித்ததால் நஷ்டப்பட்ட காலம் அது. நான் ஏழை. சொல்லப் போனால் அவர் வீட்டில் ஏறித் தண்ணீர் தொடும் சாதியுமில்லை. அம்மாவன் எனக்கு அனியனுமில்லை. அப்பா அவரை அனியன் என்பார். நானும் அதையே உறவு முறையாகக் கொண்டேன். உறவுகள் இல்லாத என்னை அவரும், உறவுகள் நஷ்டப்பட்ட அவரை நானும் ஒருவருக்கொருவராக்கிக் கொண்டோம்..."

"அதில்லை அம்மா... காதல் என்பது... ஒருவரை விட மற்றவர் உயர்ந்தவராக இருப்பதனால் வரும் உணர்வா? அல்லது, அநுதாபமும் பரிவும் இரக்கமுந்தான் அதைத் தோற்றுவிக்கிறதா என்று கேட்கிறேன்..."

"எனக்கு இந்த விளக்கங்களெல்லாம் தெரியாது. காதலோ எதுவோ, எந்த நேரத்திலும் அவரைக் கல்யாணம் கழித்ததனால் நான் கஷ்டப்பட்டதாகவோ நஷ்டப்பட்டதாகவோ தோன்றியதில்லை. வெறும் உடல் பந்தங்களுக்காக, சொகுசான வாழ்வுக்காக நான்கு பேர் பார்த்துப் பொறாமைப்படும் நிலையில் ஏற்படும் கர்வத்துக்காக என்றெல்லாம் நினைப்பு இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கையும் கசந்திருக்குமாக இருக்கும்... யமு? உன் மனதிலிருப்பதைச் சொல்லம்மா!"

"அம்மா, சுதீர் இங்கே வந்திருக்கிறாரென்றாலே எனக்கு முன்பெல்லாம் சந்தோஷமாக இருக்கும். ஒரு சொல் பேசினாலும் பரவசமடைவேன். பிறகு... எனக்கு வேதனையும் பயமும்... அன்றைக்கு அவர்களுடைய வீட்டில் கமலம்மாவுக்கும் தெரிய, வாக்குவாதம் செய்தேன். ஆனால் தோற்றுப் போகும்போது நெஞ்சு துவண்டு விழுகிறது. பெரியப்பாவுக்குத் தெரியாமல் ஒரு கூட்டத்தில் பேச ஒப்புக் கொண்டேன். அங்கே சுதீர் வந்து மரியாதைக் குறைவான அதாவது கீழ்த்தர அரசியல்வாதியைப் போல் கேள்வி கேட்டார். அன்றிரவு நான் அழுதேன்..."

நெஞ்சு வெடிக்கும் அந்த துயரத்தில் ருக்மிணி மகளை அணைத்துப் பங்கு கொள்கிறாள். ஊமைக்காயமான அந்த மௌன வேதனை தாயின் இதயத்தில் கரைகிறது.

துரையைக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பவில்லையா என்று அவள் எப்படிக் கேட்பாள்?

ஆனால், யமுனா நிச்சயம் செய்து கொள்கிறாள்.

"துரையை மணந்து கொள்கிறேன், ஏனென்றால் வெளி உலகில் தன்னந்தனியே தலைநீட்டும்போது, தற்காப்பு ஒரு பிரச்னையாகி விடுகிறது. நீங்கள் சொல்லும் ஆசைகள், தேவைகள் போன்ற நோக்கங்கள் இல்லாத வாழ்விலே தான் உண்மையைக் காண முடியும். துரை அந்த வகையில் ஒத்தவர் தானே..."

அத்தியாயம் - 14

மஞ்சட் கதிரோன் குறுகி நகரின் நெடுஞ்சாலைகளையும் மாடமாளிகைகளையும் குந்த இடமில்லாத குடியிருப்புகளையும், ஊர்ந்து செல்லவும் இடம் கிடைத்தால் போதும் என்று சாலைகளை அடைத்துக் கொண்டு ஊர்ந்து நகரும் ஊர்திகளையும், அவற்றுள் அடைந்தும் தொங்கி நின்றும் விழி பிதுங்கும் மக்களையும் பார்த்து போதும் என்று இருட்குகையில் மறைந்து செல்லும் நேரம் பார்த்துப் பனிமகள் வஞ்சகமாகத் தன் போர்வையை விரிக்கிறாள்.

நடைபாதை ஓரமொன்றில் வெற்றுடம்பையும் கந்தலையும் எலும்பெடுத்த கைகளால் குளிருக்குப் பாதுகாப்பாய்க் கட்டிக் கொண்டிருக்கும் ஐந்தாறு செல்வங்களையுடைய தாயொருத்தி, காய்ந்த ரொட்டித் துண்டுகளைப் பங்கிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு யமுனா தெருமுனையில் நிற்கிறாள். கிடைத்த இடங்களிலெல்லாம் பற்றிப் பரவும் சொறி சிரங்கைப் போல் மரத்தடிகளிலும் சாலையோரப் பகுதிகளிலும் இப்போது நெருங்கிக் கிடக்கும் நகரத்துச் சேரிகளெல்லாம் அவளுக்கு இப்போது பரிச்சயமானவையே; முரட்டுக் கதர்ச் சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டு அவள் திரும்பும்போது முகம் நசுங்கிய ஒரு மாடி பஸ் செல்கிறது. முனையிலிருந்து பத்தடி தொலைவில்தான் பஸ் நிற்க வேண்டும். ஆனால் நிறுத்தப்படாத பஸ்ஸிலிருந்தே உள்ளே ஈ புழுக்கள் போல் அடைந்து கிடக்கும் வெள்ளை சள்ளைகளில் சில விடுதலையாகின்றன. பஸ் நிற்குமிடத்தில் காத்துக் கிடக்கும் கும்பலில் சில துளிகள் தொத்திக் கொள்கின்றன. சாம்பல் வண்ண நிஜாரும் கையில்லா ஸ்வெட்டருமாகச் சோர்ந்து வரும் ஒரு மெல்லிய ஐந்தரையடி உருவத்தை எதிர்நோக்கிக் கண்கள் ஆராய்கின்றன. சாலையில் இயக்கம் நிச்சயமில்லாத மனித வாழ்வை நினைப்பூட்டிக் கொண்டே இருப்பது போல் ஓர் பிரமையைத் தோற்றுவிக்கிறது. மாடிகளில், கடைகளில் விளக்குகள் எரிகின்றன. நடைபாதைகளில் ஆண்கள் பெண்கள், முதியோர் சிறுமியர், வறியர் எளியர்... என்று முடிவில்லா இயக்கம்.

போக்குவரத்தைக் கண்காணித்து ஆணையிடும் போலீஸ்காரன் வெள்ளையுடுப்புடன் கையை உயர்த்தி, அசைத்துச் சமிக்ஞைகள் செய்து முச்சந்தியைச் சமாளித்துக் கொண்டிருக்கின்றான். நடுவில் செல்லும் டிராம் பாதை வெறிச் சென்றிருக்கிறது. அதற்கு என்ன ஆபத்தோ? பார்த்துக் கொண்டே இருக்கையில் டிராமுக்கும் பஸ்ஸுக்கும் காத்திருக்கும் கும்பலுங்கூட இருளில் கரைகிறது.

அவள் முனையில் வந்து நிற்பதை அவன் பார்த்தால் கடிந்து கொள்வான். "ஏன் இங்கே வந்து நிற்கிறே? சொன்னால் கேட்கிறதில்லேன்னு விரதம் வச்சிருக்கே?"

இதற்குமேல் சாலையில் துரை பேசமாட்டான். அவர்கள் இருவரும் சேர்ந்து சாலையில் நடக்கும் போது அவன் பேசுவதில்லை.

அதோ ஒரு பஸ் வருகிறது. யாரோ இரண்டு பெண்கள் இறங்குகிறார்கள். பெண்கள் இறங்குவதனால் போலும், பஸ் நிற்கிறது.

செவிகளில் வளையங்களும் மூக்குக் கண்ணாடிகளுமாகப் பெண்கள்; வகிட்டில் சிந்தூரங்கள் விளக்கடியில் வரும்போதுதான் தெரிகின்றன.

யார் யாரோ நடைபாதையில் நிழலுருவங்களாய்த் தெரிகின்றன.

அவன் இல்லை. அவள் தன்னை மறந்து நிலைபுரியாக் கனவுலகில் நிற்கும் உணர்வோடு நிற்கிறாள். வங்க மண்ணின் தலைநகரில், உயிரும் உடலுமாகக் கரைந்து போய்க் கொண்டிருப்பது போல தன்னை மறந்து நிற்கிறாள். நூறுநூறாய் தோன்றிய இடங்களிலெல்லாம் எளியவரின் குடியிருப்புக்கள். போதும் போதாத கந்தல், வற்றிய பைகளாய் மார்பகங்கள், வாழ்க்கைச் சுமையைச் சுமந்து சுமந்து காய்த்துப் போன தடங்களாய் ஒளியிழந்த மக்களைச் சுமந்து கொண்டு சாலைகளில் திணறும் ஊர்திகள் -

'ஹா...' என்று வானம் சீறுவது போல் என்ன ஓசை? சாலையில் தாறுமாறாய் ஓடும் சிதறல்கள், தெருவிளக்குகள் ஏனோ எரியவில்லை? வெள்ளைச் சடலம் நடைபாதைக்கு இழுத்துவரப் படுகிறதா?

கூட்டம்... யாரோ ஊதுகுழலை ஊதுகிறான்.

உடலும் உணர்வும் சில்லிட்டுப் போகின்றன. கனவா? நினைவா? என்ன?... "க்யா...க்யா பாய்ஜி?"

பனிப் போர்வையோடு திகில் போர்வையும் சுருள விழ, முச்சந்தியை வெறிச்சிட வைத்துவிட்டு விரையும் மனிதத் துளிகள்...

"ஏ, யமு? உனக்கு எத்தனை நாள் சொன்னாலும் தெரியாது? இங்கே வந்து வேடிக்கை பார்க்கச் சிறு பெண்ணா நீ...?"

"ஆ...அந்த டிராஃபிக் கான்ஸ்டபிள்..."

"உஷ், வாயை மூடிக் கொண்டு வா..."

அவள் கையை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு அவன் சந்துக்குள் நுழைகிறான். நகரின் மையப் பகுதி அது.

சந்துக்குள் முடுக்காய்ச் செல்லும் பழைய நாளையக் கட்டிடம். அம்மாவின் மூலமாகக் கிடைத்த ஒரு நண்பனின் இருப்பிடம். அவன் மனைவி பிரசவத்துக்குச் சென்றிருப்பதால் அதில் ஒரு பகுதியை இந்தப் புதுத் தம்பதிக்கு விட்டுக் கொடுத்திருக்கிறான். மரத்தட்டுப் போட்ட ஏணிப் படிகள் தம்தம்மென்று அதிர மேலே வருகின்றனர். அவள் பரபரப்பாகக் கதவைத் திறந்துவிட்டு உள்ளே செல்கிறாள்.

"உனக்கு ஏன் நான் சொன்னால் லட்சியமில்லை; உனக்கு எத்தனை நாட்கள் நான் இம்மாதிரி நேரத்தில் வாசலில் நிற்காதே என்று சொல்லியிருக்கிறேன்?"

காலணியை ஒரு மூலையில் அவிழ்த்தெறிகிறான். உடுப்பை மாற்றிக் கொள்ளும் போது அந்தச் சினம் வெளியாகிறது.

"மன்னித்துக் கொள்ளுங்க. எனக்கு அந்த நேரத்தில் உள்ளே நிலை கொள்ளலே..."

கண்ணீர் குபுக்கென்று உடைகிறது.

உண்மையில் நாள் முழுதுமே நிலை கொள்ளவில்லை என்று எப்படிச் சொல்வாள்?

அவன் அவளை அருகே இழுத்து அணைத்துக் கொள்கிறான்.

அவனுக்காக ஒரு பெண்... ஒரு பெண்ணா?... யமுனா?

அணையை உடைத்துக் கொண்டு பேச்சு அலையலையாக எழும்புகிறது.

"நான் இவ்வளவு பயங்காளியாக எப்படியானேன்? எனக்கே என்னைப் புரியலே? பகலெல்லாம் பஸ்திகளில் சுற்றிச் சுற்றி நடக்கிறேன். ஐயோ, மக்கள் எவ்வளவு... எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்! நேரமானதும், நீங்க எஸ்பிளனேட் கும்பலில் பஸ் கிடைக்காமல் நிற்கிறீர்களோ? இல்லே, பஸ் நகரமுடியாமல் நிற்கிறதோ? குண்டு வெடித்ததோ? அப்படியோ இப்படியோன்னெல்லாம்..."

"உஷ். அசட்டுத்தனம். இந்த நகரத்தில் நீ ஒருத்திதானா அதிசயமாய் இப்படிப் புருஷனை வேலைக்கனுப்பிவிட்டு நிற்கிறாய்? ஐயே... அட எம்.ஏ. படிச்ச லட்சணமே!..."

"இன்றைக்கு, அதோ நாலாவது வரிசையில் தெரியவில்லை அந்த மாடி. முக்கர்ஜி வீட்டுக்குப் போலீஸ் வந்தது. சோதனை போட்டதில் வெடிகுண்டுகள் செய்யும் சாமானெல்லாம் இருந்ததாம். ஒரு பையன் வெடவெடவென்று இருப்பானே, கன்னங்களில் பருவோடு? அசுடோஷ், அவனைக் கூட்டிப் போயிற்று. ஒரே களேபரம். ஐயோ...! காந்திஜி கண்ட பாரத நாடா இது?"

"இத பார் யமுனா. இதெல்லாம் மறந்து விட்டு இப்ப டீ கொண்டு வருவாயாம்! நான் உனக்கு ஒரு சந்தோஷ சமாசாரம் சொல்லப் போகிறேன்!"

"எனக்கு மனசே சரியாக இல்லை. அந்த... அந்தப் போலீசுக்காரன்; அவன் வீட்டில் மனைவி, அவன் வேலை முடிஞ்சி வரப்போறான்னு எப்படிக் காத்திருப்பாள்! ஆமாம், ஒருவேளை அசுடோஷைப் பிடித்துப் போனதன் எதிரொலியா அது? யார் என்ன பண்ணினார்களென்றே புரியவில்லை! ஹான்னு சத்தம் கேட்டது, சரசரன்னு வெள்ளையா, இழுத்திட்டு வந்தார்கள்... கத்தி வீசியா கொன்றது?"

"நீ இப்போது டீ கொடுக்கப் போறியா, நானே போடணுமா?"

அவள் உள்ளே வந்து ஸ்டவ்வை மூட்டித் தேநீருக்குப் பாத்திரத்தை வைக்கிறாள்.

கிண்ணங்களில் தேநீரை வார்த்து எடுத்துக் கொண்டு வரும்போது அவன் மோடாவில் உட்கார்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கண்ணீர் கோத்த விழிகள்; சுருங்கிய இதழ்கள்; அவள் மணவாழ்வின் தலைவாயிலில் நிற்கும் புதிய மனைவியாகவே தோன்றவில்லை. சில நாட்களில் பேயறைந்தாற் போல் காண்கிறாள்! சில நாட்களில் கனவில் நடப்பது போல... ஒன்றரை மாச காலமாகவில்லை. அவர்கள் அங்கு வந்து ஞாயிற்றுக்கிழமைகளில் அவனும் அவளுமாக அந்தப் பெரிய நகரத்தின் சிறப்பிடங்களைக் காணச் சென்றார்கள். அவள் எங்கு சென்றாலும் சோக நிழலைச் சிரமப்பட்டுச் சுமந்து கொண்டுதான் வருகிறாள்.

அவன் தேநீர்க் கிண்ணத்தை வாங்கிக் கொண்டு அவள் கையை ஆதரவோடு பற்றி அழுத்துகிறான்.

"யமு, நாம் இந்தச் சனியன் பிடித்த ஊரைவிட்டுப் போகிறோம். உனக்குச் சந்தோஷமாக இருக்கும். நாம் பாட்னா கிளைக்குப் போகிறோம்..."

"ஓ... ஆமாம், போலீசுக்காரனை நின்ற நிலையில் இப்படிக் கொலை செய்தது யாராக இருக்கும்? என் கண் முன் இன்றைக்கு நான் ஒரு கொலை நடந்ததைப் பார்த்தேன். உயிர்க் கொலை... பாருங்க. எனக்கு உடம்பு சிலிர்க்கிறது."

அவன் அந்தக் கையை ஆத்திரத்துடன் உலுக்குகிறான்.

"போலீசுக்காரன் நாசமாகப் போகட்டும். எல்லாம் லஞ்சக் கழுதைகள். நான் சந்தோஷச் செய்தி சொன்னேனே யமு..."

அவன் முகம் மிக அருகில் வருகிறது.

"என்னோடு மூன்று பேருக்கு செலக்ஷன் ஆச்சே? அதில் நான் ஒருத்தன் தான் வெளியூர் போறேன். அங்கே இந்த மாதிரித் தொந்தரவெல்லாம் கிடையாதாம். நான் இங்கேயே போட்டிருவாங்களோ என்னமோ, வீடு வேறு தேடணுமேன்னிருந்தேன், உனக்குச் சந்தோஷமாயில்லே?"

"எனக்குச் சந்தோஷமாக இருக்கவே மறந்து போனாப் போல இருக்கு. எனக்கு என்னை... நான் அமைதியாக இருக்கவே முயற்சி செய்கிறேன்... நேற்றுக் காலையில் நீங்கள் ஆஃபீசுக்குப் போனதும், பத்துப் பையன்கள் கும்பலாய் வந்தார்கள். பக்கத்துப் பஸ்திப் பையன்கள் தான். "சரஸ்வதி பூஜை பண்ணுகிறோம் பஹன்ஜி கலெக்ஷனுக்கு வந்தோம்" என்றார்கள். நான் ஒரு அஞ்சு ரூபாய் கொடுத்தேன் போய்விட்டார்கள். அவர்கள் கீழே, இதோ பெரிய வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவ, அதான் காஷ்மீர்க்காரியில்லே அவ; என்ன சொன்னாளோ தெரியலே, ரூபாய் ஐம்பதுக்குக் குறைஞ்சு எடுக்க மாட்டோம்னு ரகளை பண்ணினார்கள். அவளோ கதவைச் சாத்திக் கொள்ள 'நாளைக்குப் பார்த்துக் கொள்கிறோம்'னு கருவிக் கொண்டு போனார்கள். வீட்டுக்காரனானால், குண்டு வீசுவார்களேன்னு இவளை வங்காளியில் திட்டித் தீர்த்தான். இன்றைக்குப் பாருங்கள், பயந்து கொண்டு வாசலில் ஒரு குண்டனைக் காவல் போட்டிருக்கிறாள்."

"ஒழியட்டும் யமு. நாம் இந்த ஊரைவிட்டுப் போவது உனக்குச் சந்தோஷமாக இல்லையா?"

"நாம் இந்த ஊரைவிட்டுப் போகிறோம். ஆனால் பெரிய நகரத்தில் நான் பார்த்து, பயந்து போன துயரத்தின் நினைவுகளும் போய்விடுமோ? போர்க்களத்தில் மயங்கி, புறமுதுகு காட்டும் கோழை போல என்னை நினைத்துக் கொள்கிறேன்..."

'இந்த பொண்ணுக்குப் புத்தி சரியாகத்தான் இருக்கிறதா' என்று துரை ஐயுறுகிறான். "போர்க்களமாவது, பரங்கிக் காயாவது? பெரிய பெரிய அரசியல்வாதிகளும் சமுதாய வீரர்களும் புகமுடியாத பிரச்னை இந்த ஊர்ப் பிரச்னை. நீயும் நானும் இங்கிருந்து என்ன செய்ய முடியும் யமு?..."

"காந்திஜியைக் கடைசியாக சந்தித்தாளே மார்கரெட்டு வொயிட் என்ற பத்திரிகைக்காரி, அவள், "அணுகுண்டுக்கு முன் உங்கள் அஹிம்சை என்ன செய்ய முடியும்! அதை அதே வகையில் தானே எதிர்க்க வேணும்" என்று கேட்டாளாம். அப்போது "அஹிம்சைத் தத்துவத்தில் என் நம்பிக்கை அளவு கடந்தது. அந்த நம்பிக்கை என்ற மகாசக்தியே, உயர அணுகுண்டை போடவந்த எதிரிக்கு என் இதயத்தை எட்ட வைக்கும்" என்றாராம் காந்தி மகாத்மா. அந்த மகா சக்தியை நான் நினைத்துப் பார்க்கிறேன்; தெருமுனையில் வந்து நிற்கிறேன். பஸ்திகளில் உள்ள ஏழைகளுக்கு நான் ஒரு சகோதரியாக உதவப் போகிறேன். நான் இதுவரை இப்படிக் கண்முன்..."

அவன் ஆத்திரத்துடன் அவள் வாயை இறுகப் பொத்துவது போல் முத்தமிடுகிறான். குத்தப்பட்ட புலிபோல் கிளர்ந்து வரும் வேட்கை...

உடலினால் துய்க்கும் இன்பங்களனைத்தும் நியாயமற்றவை என்ற மாதிரியானதொரு கருத்துகளிடையே அவள் ஒதுங்கி வளர்ந்திருக்கிறாள். அந்த வகையில் தன்னை மிக உயர்வாகக் கருதிக் கொண்டிருக்கிறாள். இந்துநாத்தின் விரசமான கண்சிமிட்டலும் சிரிப்பும் அதனாலேயே அவளுக்கு வெறுப்பூட்டின. ஆனால், இந்த மணவாளன் தன்னிடம் நியாயமான உரிமைகளைத்தான் எடுத்துக் கொள்கிறான் என்றாலும், ஒரு குற்ற உணர்வு. உதடுகளை அழுந்தத் துடைத்துக் கொள்ளச் செய்கிறது.

"அப்படியானால், நீ என்னோடு வரப் போறதில்லையா யமு?"

கிணற்றுக்குள்ளிருந்து மேலே வெளிச்சத்தைப் பார்ப்பதுபோல் பார்க்கிறாள். தான் மனைவி... எதிரே நிற்கும் துரை வெறும் துரையல்ல... அவளிடம் முழு உரிமைகளும் கொண்ட கணவன். இந்த நிலையில் அவளுக்கும் சில கடமைகள் உண்டு என்றெல்லாம் நினைவுகள் முட்டி மோதுகின்றன.

"என்னை எதிர்நோக்கி, முச்சந்தியில், அபாயமான நிலையிலும் நீ துடிப்புடன் காத்திருக்கிறாய் என்றறியும் போது உன்னை அங்கேயே நெஞ்சோடு நெஞ்சம் கூழாக அழுத்திக் கொள்ள வேணுமென்று துடிதுடிக்கிறது. ஆனால் உன்னருகில் வந்ததும், அதெல்லாம் உண்மையில்லாத பிரமையோன்னு தோன்றுகிறது யமு! உனக்கு... உனக்கு என்னைப் பிடிக்கலையா?"

இதயத்திலிருந்து வெறும் துடிப்புகளாய் மட்டும் இக்கேள்வி அவள் செவியில் மோதுகிறது.

அவளுடைய விழிகளில் மடை திறக்கின்றன.

"நீ... வருத்தப்படக்கூடாது, யமு... உனக்கு என்னைப் பிடிக்காமல்..."

"அப்படியெல்லாம் நினைக்காதீர்கள்..." அவன் கைகளை எடுத்துக் கண்களில் வைத்துக் கொண்டு கண்ணீரை அடக்கிக் கொள்கிறாள்.

"நீ தேவையில்லாமல் பூப்போன்ற மனசை வருத்திக் கொள்ளாதே யமுனா. நாம் பிறருக்குத் தீமை நினையாமல் நம்மளவுக்கு நேர்மையாக வாழ்வதே இக்காலத்துக்கு ஏற்ற சேவை. பெரிய பெரிய தலைவர்கள் எல்லோரும் செய்ய முடியாததையா நம்மால் செய்ய முடியும்? யமுனா நீ...நீ... குருடனுக்குக் கிடைத்த ஒளி. எனக்கு... என் வாழ்விலே கிடைத்த புதையல். உனக்கு ஏதேனும் நேர்ந்தால் என் உலகமே அழிஞ்சு போகும். யமு... நீ அதற்கா ஆசைப்படுறே!"

"திருமணம் சுதந்திரங்களுக்குக் காவலா? தடையா? காவலுக்கும் தடைக்கும் வித்தியாசம் உண்டு இல்லையா?"

"நமக்கு ஒரு துன்பமும் வராது. நாம் இருவரும் மேலானவர்களாக இருக்கப் போகிறோம். நீ கண்ணீர் விடக் கூடாது..."

அவள் கண்ணீரை அழுந்தத் துடைத்துக் கொள்கிறாள்.

சமையலும் சாப்பாடும் எதிரொலிகள் இன்றியே முடிகின்றன.

ஒரு பெரிய அறையும் சமையல் அறையும் தான், மொத்தமாக இல்லத்தின் அளவு. சமையல் அறை மிகவும் சிறியது. மண்ணெண்ணெய் அடுப்பும், சில தட்டுமுட்டுகளும் தான் சாமான்கள். பெரிய அறையில் இரண்டு பெட்டிகளுக்கு மேல் சுருட்டி வைக்கப் பெற்ற படுக்கைகள். ஒரு பெட்டி சர்க்கா. கள்ளிப்பெட்டித் தட்டுகளில் சில புத்தகங்களைக் கொண்ட அலமாரி. சுவரில் ஒரு காந்தி படமும் ராமர் பட்டாபிஷேகக் கோலப் படமும் தொங்குகின்றன. ஒரு சிறு தட்டில் ஊதுபத்தி செருகும் பீங்கான் யானையும் சிறு சட்டங்களில் இணைந்த இராமகிருஷ்ணர், சாரதாமணி படங்களும் இருக்கின்றன.

துரை ஊதுபத்திகளைக் கொளுத்தி வைக்கிறான். படுக்கைகளை விரித்துக் கொசுவலை கட்டுகிறான். இந்த ஒரு மாச காலப் புதிய இல்லறத்தில் அவன் பங்கெடுத்துக் கொள்ளும் பணி அது. இருவரும் கொசு வலைக்கு வெளியே நாட்டு நடப்பைப் பற்றியோ, பத்திரிகை, புத்தகங்களைப் பற்றியோ பேசுவார்கள். பேச்சு எங்கு தொடங்கினாலும் கல்கத்தா நகரக் குடிமக்களின் சங்கடங்களில் வந்துதான் முடிவது வழக்கம். அன்று துரை அவள் உட்கார்ந்து பேசும் மனநிலையில் இல்லை என்று உணர்ந்தவனாய், கொசுவலைக்குள் சாய்ந்தே, அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த பொறிகள் சம்பந்தமான விளம்பரப் புத்தகம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். வெகு நேரமான பின்னரே அவனுக்கு யமுனா அருகிலில்லை என்பதே புரிகிறது. புத்தகத்தை டப்பென்று மூடிவிட்டு விலுக்கென்று எழுந்திருக்கிறான்.

சமையலறையில் குறுகிய பரப்பில், கால்களையும் நீட்ட முடியாமல், கண்மூடி -

"யமு..."

"..."

"யமு...!" தோளைப் பற்றி அவன் உலுக்கினான். "இது என்ன அசட்டுத்தனம் யமு? நீ... நீ... ஏன் இப்படி இருக்கிறாய்?"

"எனக்கு மனசு சரியில்லே. நான் இன்னிக்கு இங்கேயே, இப்படியே படுக்கிறேன்!"

துரை அயர்ந்து போகிறான்.

"நான் என்ன, அவ்வளவு மோசமானவனா?"

அவள் தலையே நிமிரவில்லை.

"யமுனா, நான் இன்னிக்கு எவ்வளவோ சந்தோஷமாக வீடு திரும்பி வந்தேன்... போகட்டும், ஆனாலும் நீ நினைக்குமளவுக்கு நான் கடையனாக நடந்து கொள்ள மாட்டேன். வசதியாகப் படுக்கையில் வந்து படுத்துக் கொள்!"

தாம்பத்தியப் பிணைப்பின் மெல்லிய இழைகளைப் பற்றிய பிரக்ஞையே அவளுக்கு வரவில்லை. அவை கண்ணுக்குத் தெரியாமல் சிக்கலாகி ஊடறுபட்டுப் போகக்கூடும் என்ற உணர்வு எப்படி வரும்! தான் செய்யக் கூடாததொன்றைச் செய்துவிட்ட குற்ற உணர்வில் தான் இப்போதும் குறுகுகிறாள்.

"எனக்கு வசதியெல்லாம் வேண்டாங்க. இந்த மூணு நாலு மாசத்தில் நான் வேண்டாத வசதிகளெல்லாம் பழகிட்டேன். முன்போல பிரார்த்தனை செய்யக்கூட மனசு பொருந்தல்லே..."

"யமுனா, லட்சியம் என்பது தொலைவில் தெரியும் அம்புலி, அது வழி காட்டிக் கொண்டிருக்கும். ஆனால் எல்லாருமே அதைப் பிடிக்கணும்னு நினைச்சுச் செயல்படணும்னா அது பயித்தியக்காரத்தனம் தெரியுமா?"

"அப்படியில்லே. என் பிரார்த்தனை இந்நாட்களில் வலிவுள்ளதாக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இன்னிக்கு முச்சந்தியில் என் கண்முன் இப்படி ஒரு கொலை விழுந்திருக்காது!"

அவன் வாயடைத்துப் போய் நிற்கையிலே அவள் மனம் தொடர்ந்து தன் கொடிகளில் செல்கிறது.

உண்மையில் அவள் துரையை எதிர்பார்த்து ஒருவகை சுயநலத்துடனே தெருவில் நின்றாள். தெருவில் நிற்கையில் அவள் அச்சத்தை வெல்லவில்லை; தனியே நிற்பதாகவே தோன்றியது. அவன் வருகிறானோ என்ற தாபத்தில் அந்த அச்சத்தைத் துடைத்துக் கொண்டாள். அவன் வீடு திரும்பியதும் அவள் எல்லாவற்றையும் மறந்து அந்தச் சின்னஞ்சிறு இன்ப உலகக் களியாட்டத்தில் சுற்றுப்புறத்தை மறந்து போகிறாள். பிறகு மீண்டும் அவன் பிரிந்து சென்ற பிறகு தனிமை சூழ்கிறது...

"உள்ளே வந்து வசதியாகப் படுத்துக்கோ யமுனா. உன்னால் என்னை நம்ப முடியலேன்னா, நான் வேணா வெளியே வராந்தாக்குப் போயிடட்டுமா?"

"...வேண்டாம், வேண்டாங்க. நீங்க அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. நான் என் மனசை இன்னும் தூய்மையாக்கிக் கொள்ளணும்னுதான் நினைக்கிறேன்."

அத்தியாயம் - 15

அன்றிரவு அவர்கள் இருவரும் தனித்தனியே சிந்தைகளோடு உழம்பியவர்களாய் நெடுநேரம் உறங்காமல் புரண்டு கழிக்கிறார்கள்.

விடியும் பொழுது சனிக்கிழமை.

சனிக்கிழமை பிற்பகலுடன் அலுவலகம் முடிந்துவிடும். சனி பிற்பகலையும் ஞாயிற்றுக்கிழமையையும் துரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்பான். உல்லாசமாக எங்கேனும் திரிந்து சின்னஞ்சிறு கதை பேசி மகிழ்ந்து இனிய பண்டங்களை வாங்கி உண்டு, அந்த இனிய நினைவுகளுடனே இரவைக் கழிக்கக் கூட்டினுள் புக வருவதை எதிர்பார்ப்பான்.

இந்த நியதி கண்ணுக்குத் தெரியாத உறுத்தலுடனே இந்நாள் வரை தொடர்ந்திருக்கிறது. இன்று உறுத்தல் ரணமாகிக் கண்ணையே கெடுத்திருக்கிறது. தாயைப் போல் திருமண வாழ்வில் புகுந்தாளே ஒழிய, தந்தையைப் போல் அவர் இருப்பாரோ என்று ஐயங்கூடக் கொள்ளவில்லையே?

துரை லட்சியங்களுக்காகத் தன்னை வளர்த்துக் கொண்ட நாயகன் அல்லவே? லட்சியங்கள் உலக வாழ்வுக்காக அவனை உருவாக்கின என்று வேண்டுமானால் சொல்லலாம்.

பொழுது விடிந்த பின்னர் பேச நேரமில்லை. அவனுக்குக் காலை உணவு தயாரித்துக் கொடுத்த பிறகு அவள் வீட்டைப் பூட்டிக் கொண்டு அருகிலுள்ள பஸ்திக்குச் செல்ல வேண்டும். அங்கு ஒரு கிழவி, காசநோயுடன் தன் மூன்று பேரக் குழந்தைகளையும் வைத்துக் கொண்டு போராடிக் கொண்டிருப்பாள். உடையவன் இல்லாத குடும்பம் அது.

அக்கம்பக்கங்களில் யமுனா பேசிப் பழகாததற்கு வங்காளி தெரியாதது மட்டும் காரணமில்லை. அவர்களில் எவருடைய கவனத்தையும் கவரும்படியாக அவள் ஆடை அணிகள் பூண்டிருக்கவில்லை என்பதும் காரணமாக இருக்கலாம்.

முச்சந்தி வெறிச்சிட்டாற்போல் காட்சி அளிக்கிறது. பனி மங்கலில், இருள் போர்வையை விரிக்கும் நேரத்தில் முதல்நாள் அங்கு நிகழ்ந்த காட்சி மனக்கண்ணில் விரிகையில் ரோமம் குத்திட்டு நிற்கிறது. அங்கே இன்று போலீஸையே காணவில்லை. வழக்கம்போல் மிட்டாய்க்காரன், பாத்திரவண்டி எல்லாம் போகின்றன. அழுக்கும் நசுங்கலுமாக ஒரு பஸ் வந்து நிற்கிறது. கல்லூரிக் கன்னியர் சிலர் இறங்கிச் செல்கின்றனர். பான்வாலா, துணிக்கடைக்காரன், மருந்துக் கடைக்காரன், வரிசையாக எத்தனையோ கடைகள்... எதுவுமே உலகில் நடக்காதது போலும், என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று இருப்பவளைப் போலும் குஞ்சு குழந்தைகள் சூழ, பனிவெயிலில் ஈரமில்லாத ரொட்டிகளைக் காயவைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் ஏழைத்தாய்... குடிசை வரிசைகளில் வெயில் நேரச் சுறுசுறுப்புப் பளிச்சிடுகிறது. 'ஸத்து'மா பச்சை மிளகாயுடன் அந்தக் கிழவி எலும்புக் கூடாய்க் கட்டிலில் உட்கார்ந்திருக்கிறாள். பிஹாரிகளுக்குரிய எளிய உணவு அது. உலகக் கவலையற்றுப் புழுதியில் புரண்டு கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. யாருடைய எருமையோ தேய்த்துக் குளிப்பாட்டுகிறான் பொடியன். சாணி உருண்டைகளைக் கவனமாக உருட்டி உருட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் ஆறு வயசுப் பெண். அதுதான் வாழ்க்கை; உட்சூட்டை மாயாமல் காக்க, வெளிச் சூட்டைப் பாதுகாத்து வைக்கும் கருவூலம் சாணியை அந்தக் குழந்தை தான் சேர்த்து வந்திருக்கிறாள். யமுனா அந்தக் குழந்தைக்கு உதவியாக அதை உருட்டி உருட்டி வைக்கிறாள். அதைக் கொண்டு விற்றால் இரண்டோ மூன்றோ கிடைக்கும். இம்மாதிரி ஆயிரம் பதினாயிரம் குடும்பங்கள்; இந்தக் குடில்களில் வறுமையும் பிணியுமே கொலுவீற்றிருக்கின்றன. வங்கத் தலைநகரின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இத்தகைய சேரிகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

மக்கள் இந்தப் பெருநகர் வீதிகளில் நெருங்க எங்கிருந்து வருகின்றனர்? டிராம்களும் பஸ்களும் புறநகர வண்டிகளும் இந்த நகர வீதிகளை அப்படியே அப்பிக் கொள்ள, மக்கள் எங்கிருந்து நெருங்குகின்றனர்? எள் போட்டால் எண்ணெய் வழியக் கசக்கிப் பிதுங்கும் நகர வண்டிகளில் நரகவாசமாக அன்றாடம் நின்று பொறுமை இழக்காமல் மீண்டு வரும் இடைநிலைக் கும்பலில் நெற்றிகளும் கண்களும் என்றோ ஒளியிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டதாய்க் காட்சி தருகின்றனவே?

மாமேதைகளையும், ஞானிகளையும் ஈன்றெடுத்த இந்தக் கங்கை முகத்துவார மண், அவள் மனசின் அன்றைய வண்ண ஓவியங்களை அழித்துவிட்டன. ஒரு சகாப்தத்தை அழித்துக் கொண்டு இன்னொன்றைத் துவக்க இருக்கிறது வங்கம். இப்போது அந்த அழிவு காலச் சந்தியில் அவள் நின்று கொண்டிருக்கிறாள்.

அடுத்த நாள் அந்தக் குழந்தையின் பாட்டிக்கு ஒரு கம்பளிப் போர்வையும், கம்பளிச் சட்டையும் கொண்டு வருவதாகச் சொல்லிவிட்டு அவள் திரும்புகிறாள். பெரிய வீடுகளில் சென்று படி ஏறி இறங்கி, வன்சொல் பொறுத்து இந்த ஏழைகளுக்கு இட்டு நிரப்ப வேண்டும்.

அவள் பூங்காச் சதுக்கத்தின் பக்கம் வரும்போது இரு போலீசுக்காரர்கள் இரண்டு இளைஞர்களை இழுத்தாற் போல் நடத்திக் கொண்டு வருகின்றனர்.

"இன்குலாப் ஸிந்தாபாத்"

அடித்தொண்டைக் குரலும் கட்டிப் போயிருக்கிறது!

செல்வம் படைத்தவர்கள் வீடுகளிலேறி சர்வோதயப் பண்பை உரைப்பதைப் பற்றியும், வேண்டாத துணி கம்பளிகள் திரட்டுவதைப் பற்றியும் இரவின் தனிமையில் திட்டங்கள் போட்டவளுக்கு, இப்போது ஒரு படி ஏறக்கூடத் துணிவு வராது போலிருக்கிறது. பரீட்சைக் கூட்டத்தில் கேள்வித்தாளைப் பற்றிய சிந்தனையே மரத்து உட்கார்ந்து விட்டாற் போல் குழப்பம் தோன்றுகிறது. சமாளித்துக் கொண்டு நடக்கிறாள். காய்கறி மார்க்கெட்டின் பக்கம் அழுகல் குப்பை மலைபோல் குவிந்து கிடக்கிறது. அது துப்புரவாளர் வேலை நிறுத்தத்தின் விளைவு. ஆனால், பாரம் சுமக்கும் மக்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடக்கின்றனர். பாரம் சுமந்து முதுகொடிந்த மக்கள் அந்த அழுகலையே மூச்சுக்கு மூச்சு உட்கொள்கின்றனர். அதையே உணவாகவும் கொள்வார்கள். வங்கப் பஞ்சம் என்று அவளுடைய தந்தை ஒரு பஞ்சத்தை விவரித்ததுண்டு. வீதிகளில் சடலங்கள் கேட்பாரற்றுக் கிடந்ததாம். அப்போது பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் குறை கூற முடிந்தது. இப்போது...?

கடை வரிசைகள் எந்த நேரத்திலும் இங்குக் கலவரம் நிகழக்கூடும் என்று எதிர்பார்ப்பது போல் தோன்றுகின்றன.

திடீரென்று யமுனாவுக்கு முதல்நாள் பஸ்தியிலிருந்து சரஸ்வதி பூஜைக் காசு பிரிக்க வந்த இளைஞர்கள் நினைவு வருகிறது.

ஒருகால் திருமதி லுச்சியை அவர்கள் இம்சை செய்யும் நோக்கில் வருவார்களோ? ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்தில் பெரிய பதவி வகிப்பவன் லுச்சி. படகு போன்ற காரில் அவன் அலுவலகம் செல்கிறான். வீட்டில் சமையலுக்கு ஒரு கிழவியும், எடுபிடி வேலை செய்ய ஒரு பிஹாரி பையாவும் இருக்கின்றனர். காற்றுப் பதம் காக்கும் வசதியுடைய அறை; விதவிதமான உடுப்புக்கள், சிங்கார அலங்கார சாதனங்கள், அரசகுமாரியைப் போல் எழிலுடையவள் அவள்.

உண்மையில் அவள் கிலி பிடித்துப் போயிருக்கிறாளோ என்னவோ. இரண்டொரு முறைகள் அவளை நோக்கி யமுனா புன்னகை செய்ததுண்டு. ஆனால் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டிருக்கிறாள். விரைந்து தெருவில் நுழைந்து திரும்பி படியேறிக் கதவைத் திறக்கிறாள். முன் வராந்தாவிலிருந்து பார்க்கும் போது, கீழே வெயிலுக்கு இதமாக முன்புறத்துப் புல் தரையில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் அமர்ந்து கையிலுள்ள கிண்ணத்திலிருந்து ஸ்பூனால் ஏதோ அருந்திக் கொண்டிருக்கிறாள். முன்புறம் ஏதோ ஒரு சினிமாப் பத்திரிகை. இவளே அந்த முகப்பு அட்டைத் தாரகையைப் போன்றுதான் உடை அணிந்திருக்கிறாள். மினுமினுப்பான ஒட்டப் பிடிக்கும் கால் சட்டையும், மேலே மிகவும் மிருதுவான கம்பளிச் சட்டையும் அணிந்திருக்கிறாள். முரடர்களைப் போல் இருவர் - அந்தச் சுற்றுக்கு வெளியே முறுக்கிய மீசைகளுடன் பீடி குடித்துக் கொண்டிருக்கின்றனர். இவளுடைய பாதுகாப்புக்காக அந்த முரடர்கள் கூலிக்கு வந்திருப்பார்களோ? 'பஸ்தி'ப் பையன்கள் கேட்ட தொகையையே கொடுத்திருக்கலாமே? இந்த முரடர்களைக் காவலுக்கு வைப்பதை விட அது மேலல்லவோ? ஒரு வகையான பரபரப்பும் திகிலும் அவளை கவ்விக் கொள்கின்றன.

விடுவிடென்று மேலே ஏறியவள் கீழே இறங்குகிறாள்.

முரடர்கள் கார்ஷெட்டைக் கடந்து புல்வெளிக்குச் செல்லும் வாயிலில் நிற்கின்றனர். கிருஷ்ண... கம்சன் நாடகத்தில் வரும் சானுர மல்லர்களின் நினைவு வருகிறது. "நான் மாடி ஓரப் பகுதியில் இருக்கிறேன். பங்களாவில் அம்மாளைப் பார்க்க வந்தேன்" என்று கூறிவிட்டு அவளாக உள்ளே நுழைகிறாள்.

"நமஸ்தே பஹன்ஜி!"

அவள் சினிமாப் பத்திரிகையிலிருந்து திரும்பிப் பார்க்கிறாள். ஆனால் முகமலர்ந்து 'வாருங்கள்' என்று வரவேற்கவில்லை.

"என்ன வேண்டும்?"

யமுனா பதிலுக்கு உள்ளக் கசிவுகளை எல்லாம் வெளியாக்கும் புன்னகை செய்கிறாள்.

"ஒன்றுமில்லை சோதரி. நான் அதோ அந்த மாடியில் இருக்கிறேன். உங்களிடம் சிறிது பேசிப் போக வந்தேன்?"

"ஓ...?" என்றவள் உள்ளே நோக்கி, "நந்து!" என்று குரல் கொடுக்கிறாள். "ஒரு நாற்காலி கொண்டுவா!"

நந்து நாற்காலி கொண்டு வருகிறான்.

யமுனாவுக்குச் சமையலறை ஜன்னலிலிருந்து அந்தக் கீழ்ப் பகுதியின் பின்புறச் சந்து தெரியும்.

காலையில் உழக்கு 'ஸத்து' மாவும், இரண்டு பச்சை மிளகாய், வெங்காயமும் மாலையில் உலர்ந்த ரொட்டி நான்கும், ஒரு வியஞ்சனமும் நந்துவுக்கு உணவு. குழாயடியில் வைத்துக் கொண்டு அவன் உண்பதை அவள் பார்த்திருக்கிறாள். எத்தனை தூண்டி விட்டாலும் எழுச்சியே காண முடியாமல் அழுந்திப் போன முகம்; மேலுக்குக் கோடு போட்ட துவைத்த துணிச்சட்டை; அரையில் வெண்மை மங்கிய வேட்டி. அவனைப் பார்த்துக் கொண்டே யமுனா உட்காருகிறாள்.

"உங்கள் கணவர் இப்போது சாப்பாட்டுக்கு வரும் நேரமோ?"

"இல்லை... அவர் ஊரில் இல்லை. டில்லிக்குப் போயிருக்கிறார். ஒரு சிநேகிதியை சாப்பிடக் கூப்பிட்டிருக்கிறேன்."

"நீங்கள் இந்த ஊருக்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது போல் இருக்கிறது!"

"...ஆறுமாசம் தானாகிறது. தரித்திரம் பிடித்த ஊர்! இதற்கு முன் நாங்கள் பாட்னாவில் இருந்தோம். அங்கு எவ்வளவு வசதிகள் தெரியுமா? சொன்னால் நீ நம்ப மாட்டாய். அருமையான பங்களா. ஐந்து வேலைக்காரர்கள். இங்கே பார், அவர் ஊரில் இல்லை என்றால் எனக்கு வெளியே செல்ல வசதியாகக் கார் டிரைவர் கிடையாது. இந்தக் கிழவிக்குச் சமைக்கத் தெரியவில்லை. அங்கேதான் நாங்கள் எத்தனை பார்ட்டிகள் கொடுப்போம்? வாரந் தவறினாலும் பார்ட்டி தவறாது. இங்கே எடுபிடிக்கு ஆள் கிடைக்கவில்லை. வந்தாலும் புடவை தோய்க்க மாட்டானாம். சம்பளமோ கேட்க வேண்டாம். பிறகுதான் இவனை அங்கிருந்து தருவித்தோம்..." என்று சொல்லிக் கொண்டே வருபவள், அப்போதுதான் நந்து அங்கேயே நிற்பதைப் பார்க்கிறாள் போலும்.

"ஏ, இங்கே ஏன் நிற்கிறாய்? உள்ளே போய்த் துணி எல்லாம் பெட்டி போடு" என்று விரட்டுகிறாள்.

"இங்கே இவனையும் மற்றவர்கள் கெடுத்து விடுவார்கள் போலிருக்கு. நேற்று பஸ்திப் பையன்கள் வந்து என்ன அட்டகாசம் செய்தார்கள் தெரியுமா? இவனைக் கடை கண்ணிக்குப் போகச் சொன்னால் கூட உடனே திரும்பி வருகிறானா என்று பார்க்க வேண்டியிருக்கிறது" என்று சங்கடங்களை எல்லாம் கொட்டுகிறாள்.

"ஆமாம் முக்கியமாக அதை விசாரிக்கவே வந்தேன். சரஸ்வதி பூஜை என்று வந்தார்களே. நான் ஐந்து ரூபாய் போட்டேன். ஏன், இங்கே கதவை உடைத்துச் சத்தம் போட்டார்கள்?"

"இங்கே நான் ஒரு ரூபாய்தான் போட்டேன். பின் என்ன? இவர்களுக்குப் பூஜையாவது புரஸ்காரமாவது? வயிற்றுப் பூஜை... கட்சிப் பூஜை! ஐம்பது ரூபாய் வேணுமாம். நான் கதவைச் சாத்திவிட்டுப் போலீசுக்குப் போன் பண்ணினேன்; பிறகு எங்கள் ஆபீஸுக்குப் போன் பண்ணினேன். போலீஸ் ஒண்ணும் பண்ணலே; ஆபீஸ்லேருந்துதான் இரண்டு பேரைக் காவலுக்கு அனுப்பியிருக்கிறார்கள்! எனக்குப் பயமாக இருக்கிறது..."

"சோதரி, நான் உங்களிடம் ஒன்று சொல்லவே வந்தேன். இந்த முரடர்களைப் போகச் சொல்லிவிடுங்கள். அவர்களால் உங்களுக்கு ஆபத்து அதிகம்..."

அவள், கண்கள் அகலப் பார்க்கிறாள். "போகச் சொல்லிவிட்டு?"

"ஆமாம், தீமையைத் தீமையால் எதிர்ப்பதனால் தீமை வளருமே ஒழிய, அது குறையாது. அந்த வீட்டில் பையனைக் கைது செய்யப் போலீஸ் வந்தது. போலீஸ்காரனை நேற்று சவுக்கில் குத்தி விட்டார்கள். இனி போலீஸ் பழி தீர்க்க வரும். யோசித்துப் பாருங்கள்..."

அவள் கண்களை உருட்டி விழிக்கிறாள். ஏளனக் குரலில், "அப்படியானால் இங்கே மறுபடியும் காலிக்கும்பல் வரட்டும் என்கிறாயா?" என்று கேட்கிறாள்.

"ஆமாம். வருவார்கள் என்று தான் சொல்கிறேன்..."

யமுனா சற்றும் எதிர்பாராத விதமாக அவள் கீச்சுக் குரலில் கத்துகிறாள்.

"ஹா? வருவார்கள்னு நீ சொல்றியா? அப்ப, நீயும் ஒரு நக்ஸலைட்டா?... ஹே பகவான்!" பகவானைக் கூப்பிட்ட கையோடு "தர்வான், தர்வான்!" என்று கூச்சலிடுகிறாள்.

வெளியே நின்ற முரடர்கள் உள்ளே வரும்போது யமுனாவுக்கு ஒருபுறம் சிரிப்பும், மறுபுறம் அழுகையுமாக வருகிறது.

"க்யா மேம் ஸாப்?" என்று அவர்கள் கேட்கையில் அவள் யமுனாவின் பக்கம் கைகாட்டிவிட்டு உள்ளே ஓடிச் சென்று கதவைத் தாளிட்டுக் கொள்கிறாள்.

அந்த முரடர்கள் அவள் அருகில் வரத் துணியாமல் மீசைகளை முறுக்கிக் கொண்டு வசை பாடுவதில் இறங்குகிறார்கள். அவள் அவர்களிடம் "சோதரர்களே! நான் மேலே குடியிருக்கிறேன். ஹிம்சை செய்யும் நக்ஸலைட்டுகளுக்கும் எனக்கும் எந்த வகைத் தொடர்பும் கிடையாது. உங்கள் எஜமானி அம்மா மிகவும் பயந்து போயிருக்கிறார்... சொல்லுங்கள்..."

தோல்வியை விழுங்கிக் கொண்டு விடுவிடென்று அவள் மாடி ஏறி வருகிறாள்.

முதல் அநுபவம், இப்படித்தானிருக்கும் என்றாலும் தோல்வி அடையக் கூடாது. துரையிடம் இதைச் சொன்னால் எப்படிச் சிரிப்பார்? அந்த முரடர்கள் கைத் தடிகளால் அவள் மீது போட்டிருந்தால்? ஆண்டவனே! என்ன அவநம்பிக்கை! சகோதரனைச் சகோதரன் நம்பாத கொடுமை!

'இவ்வளவு சுகபோகங்களுடன், தேவைக்கு மீறியதெல்லாம் அநுபவிக்கும் போது, கண்முன் பல உயிர்கள் அடிப்படைத் தேவைகளுக்கே இல்லாத நிலையில் போராடுகிறார்கள் என்ற கசிவு தாய்க்குலத்தில் உதித்தவளுக்கு ஏன் ஏற்படவில்லை?'

யமுனாவுக்கு உள்ளே வந்தாலும் மனம், குத்துப்பட்டாற் போன்ற வேதனையில் மாய்கிறது. பிற்பகல் மணி ஒன்றடித்தாயிற்று. துரை இன்று பகலுணவு கொள்ள வந்துவிடுவான்.

கோதுமை மாவைப் பிசைந்து வைத்துவிட்டு பூகோசை அரிந்து கொண்டிருக்கிறாள்.

அப்போது படால் என்று பேரோசை கேட்கிறது. கட்டிடமே அதிர்ந்து தூக்கிவாரிப் போடுகிறது.

"விடாதே, பிடி...பிடி...பிடி...அடியுங்கள் கொல்லுங்கள்!" என்றெல்லாம் கூடக் குரல்கள். மாடிப்படிகள் அதிரும் காலோசைகள்; பெட்ரோல் எரியும் நாற்றம்; கலவரம்.

கைக்கத்தியைப் போட்டுவிட்டு அவள் வெளிக் கதவைத் திறப்பதுதான் தாமதம். சட்டென்று ஒரு பொடியன் உள்ளே நுழைகிறான். கதவை அறைந்து சாத்துகிறாள்.

பதின்மூன்று வயசு இருக்காது. தொளதொளத்த கந்தலாய் ஒரு பைஜாமா சட்டை. எண்ணெய் கண்டு பல நாட்களான முடி. புறங்கைகளும் கன்னங்களும் பனிக்கு வெளுத்திருக்கின்றன. புகல் தேடும் கண்கள்.

யமுனா மின்னல் வேகத்தில் புரிந்து கொள்கிறாள். பையனை உள்ளே வைத்துக் கதவைச் சாத்திக் கொண்டு வெளியே வருகிறாள்.

"என்ன? என்ன?..."

"பொடியன், பொடிப்பயல் தேங்காய் எண்ணெய் டப்பா மாதிரி இருந்தது. தூக்கிக் கொண்டு வந்ததை நான் பார்த்தேன்?" என்று பின் கட்டுக்காரன் மாடி வராந்தாவில் ஓடித் தேடுகிறான்.

"பெட்ரோல் பாம் போடுகிறான்னு தெரியவில்லை. உங்க வீட்டுக்கு எண்ணெய் வாங்கிவரான்னு நினைச்சேன். இல்லாட்டி அங்கேயே நொறுக்கியிருப்பேன்... எங்கே ஓடியிருப்பான்? படி இறங்கவில்லை?..."

நான்கு பேர்களாக அவள் சாத்திய கதவை உடைக்கிறார்கள்.

"உள்ளே யாருமில்லை. கதவை உடைக்காதீர்கள். நான் திறக்கிறேன். உடைக்காதீர்கள்."

அவளுடைய கத்தல் எடுபடவில்லை. காரையும் மண்ணும் பொல பொலவென்று உதிர கதவு திறந்து கொள்கிறது.

அடுத்த கணம் பத்து ஓநாய்கள் நடுவே அகப்பட்ட திருட்டு ஆட்டுக்குட்டியைப் போல் பையன் வதைப்படுகிறான்.

"ஆண்டவனே! ஐயோ! குழந்தையை அடிக்காதீர்கள். அடிப்பதனால் தீமை ஒழியாது; கருணை காட்டுங்கள்! ஐயோ! இந்தப் பாரத பூமியில்..."

நெஞ்சு அடைக்கிறது. குரல் வெளியே வராமல் அவள் விம்முகிறாள். பையனின் மூக்காலும் வாயாலும் இரத்தம் ஒழுகுகிறது. தரதரவென்று அவனை இழுத்துச் செல்கின்றனர்.

கீழே பெட்ரோல் சிதறிய இடங்களிலெல்லாம் இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. புல்தரை பொசுங்க மேஜை மீது இளம் வெயிலில் எஜமானியும் தோழியும் உணவு கொள்ள நந்து சுத்தம் செய்த மேஜை, பிளாஸ்டிக் விரிப்பு, உணவுப் பண்டங்கள் எரிகின்றன.

திருமதி லுச்சி கரிந்த மேற்சட்டையுடன் ஓரமாக நின்று "மாடிக்காரி பிசாசு. அவள் நக்ஸலைட் உடந்தை. அவளைக் காலி பண்ணச் சொல்லுங்கள். அவள் தான் குண்டு போட்டாள்!" என்று வீட்டுக்காரனிடம் கத்துகிறாள்.

"க்யா பாத்ஹை?" என்று வீட்டுக்காரன் அவளைப் பார்த்து மிரட்டிக் கேட்கப் படியேறி வருகிறான்.

"நான் ஹிம்சையை வெறுப்பவள் ஐயா. அந்தச் சகோதரி என்னைத் தவறாக எண்ணுகிறாள். பையன் வந்ததையே நான் பார்க்கவில்லை. பார்த்தால் நான் தவிர்த்திருக்க மாட்டேனா?..."

யமுனா அனுப்பிவிட்டு உள்ளே வந்து அலங்கோலங்களைப் பார்க்கிறாள். காந்தியடிகளின் படம் கீழே விழுந்திருக்கிறது. ஆனால் உடையவில்லை.

கருணை? அது மனித மனங்களில் செத்துவிட்டது. ஐயனே!

தரையில் பையனின் இரத்தம் சிந்தியிருக்கிறது.

"நேற்று அந்தக் கொலை... இன்று இதுவா?"

அந்த முரடர்கள் சிறுவனை அடிக்கும்போது முதலில் அவள் ஏன் பாய்ந்து உள்ளே செல்லவில்லை? என்னை முதலில் கொன்று விட்டு என்னிடம் அடைக்கலம் புகுந்த பையனைக் கொல்லுங்கள் என்று ஏன் சொல்லவில்லை?

'அவள் அச்சத்தை இந்த அளவுக்குக் கூட வெல்லவில்லையே?...'

துண்டுதுண்டாகத் தன்னைக் குதறிக் கொள்கிறாள்.

கண்முன் அடைக்கலமாக ஓடிவந்த ஓர் உயிரை, இளங்கன்று பயமறியாது என்று விளைவறியாமல் விளையாடிவிட்ட ஒரு சிறுவனின் உயிரை, ஒரு கூட்டம் வதைத்து எடுக்கையில் அவள் பார்த்துக் கொண்டு நின்றாள்! இவள் அஹிம்சை வழி, அன்பு வழி என்று தன்னைப் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தவள்! அறியாமையினால் அஞ்சி ஒளிந்த பெண்களைக் காட்டிலும் தான் மேலானவள் என்று குன்றேறி நின்றவள்! எல்லோரையும் போன்றவளல்ல நான் என்று இறும்பூது கொண்டவள், இடறி விழுந்துவிட்டாள். "அம்மையே என்னைக் காட்டிக் கொடுத்து விடுவாயோ?" என்று கெஞ்சி வந்த அந்தக் கண்களை அவள் எப்படி மறப்பாள்?

அவனை இங்கே வராதே என்று தடுத்திருந்தாலேனும் வேறு எங்கேனும் ஓடி ஒளிந்து தப்பியிருப்பானே? அவனைக் கொலைக்காரர்கள் கையில் பிடித்தல்லவோ கொடுத்து விட்டாள்? கையுமெய்யுமாகக் கூட அல்ல. 'உனக்கு அடைக்கலம் கொடுக்கிறேன்' என்று வஞ்சகமாக! பெண் அஹிம்சையின் வடிவானவள் என்று அண்ணலின் மொழியை உருகி உருகிப் படித்தாளே? ஒரு தாய் தன் மகவுக்கு ஊறு செய்யும் என்று கொடிய அறுவை வாதனையையும் மயக்க மருந்தின்றிப் பொறுத்துக் கொண்ட செய்தியை அவள் நினைந்து நினைந்து வியந்திருக்கிறாள். இன்று எந்தப் பெண்ணும் அத்தகைய உயர்வில் நிற்கவில்லை. அஹிம்சையின் வடிவங்கள் சுயநல மொத்தைகளாகி விட்டார்கள். அவளும் இதற்கு விதிவிலக்கல்ல.

துரை வீட்டினுள் அடிவைக்கும் போது, இளம் மனைவி வெளியிலிருந்து வரும் சோர்வுக்கு மாற்றாகக் காட்சியளிக்கவில்லை. சோகமே உருவாக இருந்தவள் எழுந்து அடுப்பைப் பற்றவிடப் போகிறாள். கதவு அதிர்ந்து உதிர்ந்து காரை மண் சிதறிக் கிடக்கிறது இரத்தக் கறைகள்... கீழே மயான அமைதி...

"யமுனா? என்ன இது? ஏது இரத்தம்?..."

அவளுடைய கண்ணிதழ்கள் ஈரம் படிந்து கூம்பியிருக்கின்றன.

"என்ன யமு?..."

"நான்... ஒரு பெரிய தப்புச் செய்து விட்டேன். ஒரு பிஞ்சுப் பையனைக் கொலை செய்ய உடந்தையாகி விட்டேன்."

"உஷ்... என்ன நடந்தது; கலாட்டாவா? நான் நேற்றே உன்னை அந்தக் காந்தி படத்தைக் கழற்றி வைத்துவிடு என்று சொல்ல நினைத்தேன். என்ன நடந்தது?"

அவள் நடந்ததை விவரிக்கையில் துரையின் முகத்தில் சூடேறுகிறது.

"யமு, உனக்கு எத்தனை தரம் நான் சொல்லிவிட்டேன், நாம் இங்கே அந்நியர்கள். நீ ஏன் இவர்கள் விஷயங்களில் தலையிடுகிறாய்? நாம் பிழைக்க வந்தவர்கள். அதிலும் நான் புதியவனாக இங்கு வேலைக்கு வந்திருக்கிறேன். நாம் ஊரை விட்டு நல்லபடியாகக் கிளம்ப வேண்டாமா? நீ என்ன பச்சைக் குழந்தையா பொறுப்பில்லாமல் விளையாட...?"

"நீங்க ஏன் கோபிக்கிறீங்க? நான் அவளிடம் சொன்னது தப்பா? முரடர்களை அழைத்தால் கலகந்தானே..."

அவனுடைய குரல் உச்சத்தில் வெடிக்கிறது! "உன் லட்சியமும் நீயும்! நீ அதிகப் பிரசங்கி! நானும் போனால் போகிறதென்று பொறுத்துப் பார்க்கிறேன்; நீ என்ன நினைச்சிட்டிருக்கே?"

இதுதான் அவளுக்கு அவனுடைய சினத்தைப் பார்க்கும் முதல் சந்தர்ப்பம்.

"இந்தக் கல்கத்தா நகரம் நாசமாகப் போகட்டும். நீ ஏன் தலையிட்டுக்கறே? கதவை ஏன் திறக்கணும்? வெளியே உனக்கென்ன வேலை? சரி. முதலில் இந்த ரத்தத்தை துடை! இந்தக் காந்திப் படத்தைக் கழற்றி வை. இல்லாட்டி நானே உடைச்சிடுவேன்!"

யமுனா மறுமொழியின்றிக் கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள். காந்தி படம் பெட்டிக்கடியில் மறைகிறது. தரை சுத்தமாகிறது.

"முகத்தைக் கழுவிவிட்டு வா முதலில். ஏன் எப்பப் பார்த்தாலும் அழுது சாவுறே? எனக்கு இந்த அழுமுகம் கண்டாலே வீட்டில் இருக்கப் பிடிக்கலே..."

முகத்தைச் சோப்பைப் போட்டுக் கழுவிக் கொள்கிறாள்.

எண்ணெய் பளபளப்புடன் பொட்டு வைத்துக் கொள்ளச் சிமிழை எடுக்கையில் "ஏன் பவுடர் இல்லையா?" என்று குரல் கேட்கிறது. முகத்தில் பூச்சேறுகிறது. உள்ளத்துத் துயரங்களுக்கு அது பூச்சாமோ?

"இப்படி வா; சிரிக்கவேணும் யமு..."

முயன்றாலும் அவளுக்குச் சிரிப்பு மலரவில்லை. மாறாகக் கண்களே நிரம்புகின்றன. அவன் சட்டென்று அவளை இழுத்துக் கொண்டு கன்னங்களில் முத்தமிடுகிறான். அவள் தன்னை விடுவித்துக் கொள்ளத் திமிறுகிறாள்.

"யமு... யமுனா ஏன்? நீ ஏன் இப்படி இருக்கறே? என்னை உனக்கும் பிடிக்கலியா? நான் கறுப்பாக இருக்கிறேன்னு என்னைப் பிடிக்கலியா? நான் மட்டமான சாதின்னு என்னை வெறுக்கிறியா? யமு! நான் உன்னை உயிராக நினைச்சிருக்கிறேன் யமு. உன்னை நான் ஒருபோதும் உள்ளத்தோடு கோபிக்க மாட்டேன் யமுனா...?"

அவளுக்கு இதயம் விம்மித் துடிக்கிறது. சொற்கள் வெளி வராமல் கண்ணீரில் கரைகின்றன. அவன் அந்தக் கண்ணீரைத் துடைக்கிறான்.

"நீ... உனக்கு... இன்னிக்கு நான் சுதீரைப் பார்த்தேன். ஸ்ட்ரான்ட் ரோடில் பெரிய ஊர்வலத்தின் முன்னே செங்கொடியைப் பிடிச்சிட்டுப் போறான். நான் டிராமில் உட்கார்ந்திருந்தேன். ஆர்ப்பாட்டக்காரர்கள் வரவே எல்லாம் நின்னு போச்சு..."

அவள் விழிகளைக் கொட்ட மறந்து நிற்கிறாள்.

"நீ... நீ... அவனைக் காதலிச்சே இல்லே?"

"அப்படியெல்லாம் பேசாதீங்க-"

மேலே, 'நான் யாரையும் எப்பவும் அப்படியெல்லம் நினைச்சதில்லே' என்று சொல்ல வந்தவளுக்கு ஏதோ நின்று தடையாகிறது; நாவைக் கடித்துக் கொள்கிறாள். மீண்டும் விழிகள் நிரம்புகின்றன.

"பார்த்தாயா, பார்த்தாயா? நீ அவனையே நினைச்சிட்டுத்தான் இப்படி..."

அவள் அவன் வாயைக் கரமலரால் மூடுகிறாள்.

"நீங்க அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. நான் சத்தியத்தின் வழி நடக்கணும்னு நினைக்கிறவள். அதற்கு மாறான எண்ணங்களை அநுமதிக்கவே மாட்டேன். துரை, நீங்க அப்படி எல்லாம் நினைக்கவே கூடாது..."

"நான் அப்படித்தான் நம்பிட்டிருக்கிறேன் யமு. ஆனாலும்..."

"ஆனாலும் எல்லாம் கிடையாது. நீங்க என்னிக்கும் அப்படியே நம்பணும். நான் சத்தியத்தையே தெய்வமாக உயிருக்கும் மேலாக நினைக்கிறேன்..."

"சரி, அந்தப் பேச்சுக் கிடக்கட்டும்; எனக்குப் பசிக்கிறது சாப்பிடுவோம் வா..."

யமுனா அவன் பிடியிலிருந்து விடுபட்டு, அடுப்பிலிருந்த பருப்பையும் காயையும் இறக்கித் தாளித்த பின் ரொட்டிக் கல்லைப் போடுகிறாள்.

"ஓ மறந்தே போய் விட்டேனே! யமு... ஒரு சேதி. அம்மா ஒரு கடிதாசியை திருப்பி அனுப்பி இருக்கிறார்..." அவள் மா உருண்டையை நசுக்கியவாறு அவனை நிமிர்ந்து பார்க்கிறாள். அவன் தமிழ்நாடு அரசு முத்திரை குத்திய கடிதம் ஒன்றை நீட்டுகிறான்.

கலப்பு மணம் செய்து கொண்ட அவர்களுக்கு வரும் பொங்கல் நாளன்று முதலமைச்சர், தங்கப் பதக்கப் பரிசு வழங்குவார்!

அவள் புறங்கையால் கடிதத்தைத் தள்ளும் பாவனையில் முகத்தைத் திருப்பிக் கொண்டு ரொட்டியை வாட்டுகிறாள்.

அத்தியாயம் - 16

லால் பஜார், வணிகப் பெருவீதியில் அவர்கள் ஏறியிருக்கும் வாடகைக்கார் ஊர்ந்து செல்லவும் வழியின்றி நிற்கிறது. அவர்களுக்கு இரவு ஒன்பதரை மணிக்குத்தான் வண்டி, என்றாலும் மாலை ஐந்து மணிக்கே அவர்கள் வீட்டை விட்டுக் கிளம்பி விட்டார்கள். அவர்களுடைய இரண்டு பெட்டி படுக்கைகளும் அற்பமான தட்டுமுட்டுக்களும் பின்புற டிக்கியில் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன. ஐந்து நிமிடங்களுக்கொரு முறை அவள் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம் பின்னே நெடுக வண்டிகள் நிற்பது தெரிகிறது. முன்னே மலையாய் ஒரு 'டிரக்' நிற்கிறது. ஒரு அங்குலம் அந்த டிரக் நகர்ந்தால் இந்த வாடகைக் காரும் நகருகிறது. பின்னே சாரியாக நிற்கும் வண்டிகளும் முன்னேறுகின்றன.

வரிசையாகக் கடைகளுக்கப்பால் சரக்குச் சேமிக்கும் கிடங்குகள். கிடங்குகளுக்குப் பின் கங்கைத் துறைகளோ? பீஹாரிக் கூலிகள் பெரிய பெரிய சுமைகளை லாரிகளிலிருந்து இறக்குகின்றனர்; ஏற்றுகின்றனர். பாரவண்டி மனிதர்கள் மாடுகளைப் போல் இழுக்கின்றனர். எத்தனை பெரிய வணிகத் துறைமுகம்! தேயிலை, சணல் போன்ற அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பொருள்கள் இந்தப் பெருநகரின் துறையிலல்லவா குவிகின்றன! எத்தனை எத்தனை காலமாக இந்தக் கிட்டங்கிகளில் மனித ஆற்றலின் வெம்மைத் துளிகள் வீழ்ந்து உப்பேறிக் கிடக்குமாக இருக்கும்! உழைப்பின் வெம்மையிலும் நெருக்கும் நெரிசலிலும் பொரிந்து பொரிந்து மக்கள் பெருக்கம் இன்னமும் பல மடங்குகளாகும் சுமையைத் தாங்க முடியாமல் இந்நகர், ஆங்காங்கு இரத்தம் கக்கும் வறுமையுடன்... நோவுடன் தள்ளாடுகிறதா?

நெருக்கமாகக் கடைகள், முஸ்லீம் மக்கள் வாழும் பகுதி போலும்; ஒரு பொறி தெறித்தால், ஊரையே சூறையாடித் தீர்க்கும் காற்று சேரும் பகுதி இதுதானோ?

அம்பாரம் அம்பாரமாய்ச் சேமியாவும் இனிப்பு மிட்டாய்களும் செய்து குவித்திருக்கும் கடைகள் தொடருகின்றன. ஒரு கடையில் அழுக்குப் பனியனுடன் ஒரு சிறுவன் மஞ்சள், ஊதா, ரோஜா நிறங்களில் தட்டுக்களில் சேமியாவை வைத்துப் பூக்களைப் போல் அழகு செய்கிறான். அவன் உடலில் கருகருவென்று புகை எண்ணெய் வடிவது போல் அழுக்கும் வியர்வையும் தெரிகின்றன. பையனின் கலா ரசனையை அந்த மூச்சு முட்டும் நெரிசலில் கண்டு யமுனா உளம் கசிகிறாள்.

"இதெல்லாம் சேமியாவா? இவ்வளவு தினுசு?"

"ஆமாம் ரம்சான் தவசு மாசம். இதான் சாப்பிடுவாங்க போலிருக்கு!" என்று கூறுகிறான் துரை.

"ஓ! அதுதான் இவ்வளவு வண்ணத்துணிகள் நடைபாதையெங்கும் கடை விரித்திருக்கின்றனவா? கண்களைக் கவரும் வண்ணப் பட்டுக்களில் கால்மூடும் உடுப்புக்கள், அங்கிகள், தொப்பிகள், சப்பாத்துகள், பெண்களின் முகமலர் மறைக்கும் மெல்லிய நைலான் துப்பட்டாக்கள்... குழந்தைகளுக்குத் தாம் எத்தனை வகை உடைகள்; சின்னஞ் சிறு பெண் குழந்தைகளுக்கும் துப்பட்டாக்கள். ஜிகினா வேலை செய்த போலிப்பட்டு உடுப்புக்கள். நடைபாதையில் குவிந்திருக்கும் இந்த நேர்த்திகளெல்லாம் சமுதாயத்தின் கீழ்ப்படிகளில் உடலுழைத்துப் பிழைப்பவர்களின் பணப் பைகளுக்கு எட்டக் கூடியவை என்று தான் அவள் நினைக்கிறாள். வண்டிகளில் வரும் சீமான்கள் குளிர்பதனம் செய்த பெரிய பெரிய கடைகளை நாடுவார்கள். வண்டி, நிற்கும் இடத்துக்கருகில் ஒரு முதியவர் வெகுநேரமாக ஒரு சிறுமிக்குரிய சட்டை, துப்பட்டாவைத் தொட்டுத் தொட்டுப் பார்க்கிறார். விலை கேட்கிறார். கடைக்காரன் முதலில் ஆர்வத்துடன் பல நிறங்களை விரித்துப் போட்டு விலை கூறுகிறான். பிறகு அவனுக்கே அலுத்துவிட்டது போலும்! வேறு ஆட்களுக்காகப் பார்க்கிறான். முதியவரோ, அந்தச் சட்டையையும் தடவி, தன் பணப்பையையும் பார்த்து நாலரை ரூபாயை எண்ணி மலைத்தாற் போல் நிற்கிறார்.

இத்தனை வண்ணங்களும் நேர்த்திகளும் அத்தனை ஏழைகளுக்கும் போதா. ஆனால் விலையாகாமலேயே குவிந்திருக்கின்றன. சாணியையும் மண்ணையும் பிசைந்து உருட்டிக் காய வைத்து குடும்பத்துக்கே உயிர்ச்சூட்டைப் பெற விழையும் அத்தனை ஏழைகளும், வறட்டு ரொட்டியையோ, ஸத்துமாவையோ குடலில் இட்டு நீரை நிரப்பி உயிரின் ஈரம் காயாமல் வைத்துக் கொள்ளும் அத்தனை ஏழைகளும், அழுக்குக் கந்தல்களால் மானத்தையும் குளிரையும் ஒருங்கே போர்த்துப் பாதுகாத்துக் கொள்ள முயலும் அத்தனை ஏழைகளும், இந்தக் குவியல்களை வாங்கக் கூடுமானால்...? இரண்டு முனைகளும் ஏன் கூடவில்லை?

தொழிற்பெருக்கம், பணப்பெருக்கம், மக்கள் பெருக்கம் மூன்றும் சீரில்லா வீக்கங்களாய்ப் புழுங்கி மூச்சுத் திணற முடியாமல் தன்னை அணுஅணுவாய் இழந்து கொண்டிருக்கும் ஒரு பெருநகரத்தை அந்தப் பெரிய ரவீந்திர சாரணியில் வண்டி ஊர்ந்து சென்று விளக்கிக் காட்டுகிறது.

"நாம் வீட்டைவிட்டுக் கிளம்பி இரண்டு மணி நேரமாச்சு யமு. இன்னும் ஹௌரா பாலம் ரொம்ப தூரம் இருக்கு!" என்று அலுத்துக் கொள்கிறான் துரை!

பனிப்படலமா, ஆலைப் புகைப்படலமா, மக்களின் பெருமூச்சுக்கள் எழுப்பிய படலமா என்று புரியவில்லை. ஹௌரா பாலத்தின் கம்பீரமான மேல் தூண்கள் உருப்புரியாத கனவுத் தோற்றமாகத் தெரிகின்றன. ஒரு காலத்தில் எழில்மிகு சுந்தரியாய் இந்நகரின் பெருமையை விளக்கிய பாலம் இன்று கழிந்த காலத்தின் சில எச்சங்களை நினைப்பூட்டும் அழகுகளில் பிதுங்கி நிற்கும் துயரச் சுமையாய் மனிதச் சுமைகளைச் சுமந்த வண்டிகளுடன் தோற்றமளிக்கிறது. கீழே ஓடும் சாசுவதமான உண்மையாகிய சத்திய கங்கையின் எழில், இந்த வீக்க நோய்களின் புழுதிப் படலங்களில் புலப்படாமல் மறைந்திருக்கிறது.

இந்தப் புழுக்களில் வெய்துயிர்த்த வானும் மறைகிறது. ஒளியும் குழம்புகிறது. முன்னே பின்னே, அண்டையில் மயிரிழை அசைந்தால் மோதல்; உடனே நெருப்புப் பொறிகள்.

வண்டிகளில் காட்சியளிக்கும் மக்களெல்லாம் அன்றாட நகர வாழ்க்கையாம் பொதியைச் சுமந்து மந்தைமாடாய் ஒளியிழந்தனரோ? வண்டியோட்டிகள் கவனம் இம்மி பிசகினால் காலனுக்கு வரவேற்பளித்து விடுவார்கள்.

ரெயில் நிலையத்தை அடையும் போது, தாயின் கருப்பையை விட்டு வெளிவந்தாற் போலிருக்கிறது.

சாமான்களுடன் ரயிலடி மேடையிலேயே வந்து உட்காருகின்றனர். ரெயில் நிலையமா அது?

உலகச் சந்தையின் ஒரு பகுதி பெயர்ந்து கொண்டாற் போலிருக்கிறது.

என்ன கும்பலம்மா!

பனி வாடையில் குறுகிக் குறுகி உட்கார்ந்திருப்பவர், படுத்திருப்பவர், அபின், கஞ்சா, மயக்கத்திலிருப்பவரோ என்று ஐயுறும் வண்ணம் நீட்டிக் கிடக்கும் வெள்ளைத் தோல் யுவர்கள், பழம் விற்பவர்கள், தேநீர் விற்பவர்கள், இனிப்பு விற்பவர்கள், பொம்மை விற்பவர்கள், புத்தகம் விற்பவர்கள், காலணி மெருகு போட வருபவர்கள், உடல் மெருகேற்ற வருபவர்கள், பெட்டிகள், படுக்கைகள், மூட்டைகள், தட்டுமுட்டுக்கள், பல்வேறு மொழிகள், உடைகள், கூச்சல்கள் பலநூறு குதிரை ஆற்றல்களுடன் ஓங்கரித்துக் கொண்டு பூதம் பூதமாக வரும் போகும் வண்டிகள்...!

"இவ்வளவு கூட்டம் ஏன் இன்னிக்கு?"

"இன்னிக்கா? இது நித்தியக் கூட்டம். நீ ஸியால்தா ஸ்டேஷன் பார்க்கலியே? அங்கே இருபத்து மூன்று வருஷக் கூட்டம். இப்ப சாமான்களைப் பத்திரமாகப் பார்த்துக்கோ; குப்தா வருவார். நான் போய்ச் சாப்பிட ஏதேனும் வாங்கி வரேன்..."

துரை போகிறான்.

குளிர் விர்ரென்று அடிக்கிறது. கதர்ப் போர்வை அந்தக் குளிருக்குப் போதுமானதாக இல்லை. இழுத்துப் போர்த்துக் கொள்கிறாள்.

வண்ணக் கலவையாய்ப் போய்க் கொண்டிருக்கிறது கூட்டம். போகிறவர்கள், வருகிறவர்கள் எல்லாரும் பிரயாணிகள்தாமா இல்லையா என்று புரியவில்லை. இருகைத் துடைப்பங்களால் குப்பையைக் கூட்டிக் கொண்டு துப்புரவாளர் போய்க் கொண்டிருக்கின்றனர். அந்தப் பேரியக்கத்தினிடையே, பறக்கும் தும்பியின் கால்களைக் கட்டி வைத்தால் சிறகுகளை மட்டும் அடித்துக் கொண்டு பறக்க முடியாமல் துடிப்பதைப் போன்ற உணர்வில் சிக்கிப் பிரமை பிடித்தாற் போல் உட்கார்ந்திருக்கிறாள் அவள். ஆங்காங்கு நிராசை படிந்து தொங்கும் முகத்துடன் சில இளைஞர்கள் கண்களில் படுகின்றனர். ஓர் இளைஞன் அவளருகிலும் வருகிறான். மெழுகு காகிதத்தாலான குறிப்பேடு - அதில் எழுதிக் காட்டிவிட்டு, அதன் அட்டையில் தொங்கும் குஞ்சக் கயிற்றை விசைபோல் இழுக்கிறான். முடியுள்ள துடைப்பான் எழுத்தை அழித்து விடுகிறது.

அதை அவளிடம் அவன் வேண்டுமா என்று கேட்பது போல் காட்டிக் கொண்டு நிற்கிறான். விலையை மட்டும் வாய் திறந்து ரூபாய் ஒன்றரை என்று சொல்கிறான்.

அவள் வேண்டாம் என்று சொல்ல மனமின்றியும் வேண்டுமென்று வாங்க மனமின்றியும் தயங்குகையில் அவன் அவளைக் கடந்து செல்கிறான். பலரும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சிலர் அவனை மீண்டும் எழுதச் சொல்லி அழித்துப் பார்க்கின்றனர். ஆனால் வாங்க முன் வரவில்லை. வாங்காததற்காக அவன் முகம் சுளிக்கவில்லை. எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் அவன் கூட்டத்தில் மறைந்து போகிறான்.

அடுத்து ஒரு பேனா விற்கும் இளைஞன் வருகிறான்.

பால்பாயின்ட் பேனா.

அவளிடம் நிற்கிறான்.

"என்ன விலை?"

"நாற்பது பைசா..."

யமுனா உடனே நாற்பது பைசாவைக் கொடுத்து ஒன்று வாங்குகிறாள்; நன்றாக எழுதுகிறது.

அப்போது துரை சுடச்சுடப் பூரி கிழங்கும், தண்ணீருமாக வருகிறான்.

"இத பாருங்க, பேனா வாங்கினேன்; நாற்பது பைசா; நல்லா எழுதுகிறது! இவங்கல்லாம்தான் வேலையில்லாப் பட்டதாரிகளோ?" என்று கேட்கிறாள் மெதுவாக.

"இருக்கும். ஆறிப்போகிறது சாப்பிடு இதை. நான் அங்கேயே சாப்பிட்டு விட்டேன்..."

பகலெல்லாம் வீட்டைச் சுத்தமாக்கி, சாமான் கட்டும் வேலையில் சாப்பிடப் பொருந்தவில்லை. இப்போது உணவைக் கண்டதும் பசி தீவிரமாகக் கிளர்ச்சியுறுகிறது.

அவள் இரண்டு வாய் கூடப் போட்டுக் கொள்ளவில்லை. ஒரு பசித்த குழந்தை அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பது கண்களில் படுகிறது. அவசரமாக, முடித்துக் கொண்டதாகப் பாவனை செய்துவிட்டு, தொன்னையோடு கொடுத்து விடுகிறாள்.

நல்ல வேளையாக, துரை கவனிக்கவில்லை. குப்தா வந்திருக்கிறார் ஒரு இனிப்புப் பொட்டலத்துடன், வழியனுப்ப.

அவளைப் பார்த்துப் புன்னகை செய்கிறார்.

"நமஸ்தே!"

"நமஸ்தே!"

"இங்கு விருந்து கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். பாட்னாவில் வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று சிரிக்கிறார். அவர் தாம் ஒரு நண்பரின் முகவரி கொடுத்திருக்கிறார். அங்கே முதலில் தங்கிக் கொண்டு வீடு பார்க்க வேண்டும்.

வண்டி குறித்த நேரத்திற்கு மேடைக்கு வந்துவிடுகிறது. பெட்டி தேடி, இடம் தேடி சாமான்களை அவர்கள் ஏற்றுகின்றனர். முதல் வகுப்பு என்பதையே அப்போதுதான் அவள் உணர்ந்தாற்போல் நிற்கிறாள்.

"ஃபர்ஸ்ட் கிளாஸா!"

"பின்னே, கம்பெனியின் உயிர் நாடியான விற்பனை இன்ஜினீயர்! மூணாங்கிளாஸா? தகராறு பண்ணாமல் ஏறு" என்று துரை அவள் செவிகளில் கிசுகிசுக்கிறான்.

இந்தப் பிரயாண சுகம் இதுவரை அவள் நுகராத ஒன்று. அவள் வாயடைத்துப் போகிறாள்.

பிறகு அவளுக்கு எதுவுமே நினைவில் நடப்பதாகத் தோன்றவில்லை. தன்னுடைய உள்மனதால் ஏற்க முடியாத வாழ்க்கையைத்தான் அவள் வாழ வேண்டுமா?

அந்தக் கூட்டம், வண்டிகள், இன்னும் வழியனுப்ப வரும் அலுவலக நண்பர்களுடன் பேசும் துரையின் உற்சாகமான குரல் - எல்லாம் ஆழமாகவே பதியவில்லை.

தூக்கக் கலக்கத்துடன் திரைப்படம் பார்ப்பது போல் நோக்கிக் கொண்டிருக்கையில் அவளுடைய செவிகள் சிலிர்க்க, அவன் குரல் கேட்கிறது.

"வணக்கம், வீட்டுக்குப் போனேன். எனக்கு ஜோசஃப் சொல்லித்தான் சமாசாரமே தெரியும்! வீட்டில் விசாரித்ததில் நீங்கள் ஸ்டேஷனில்தானிருப்பீர்கள் என்று தகவல் சொன்னார்கள். யமு, எங்கே யமு?..."

வண்டிக்குள்ளிருந்து மழை காலத்து வானம் போன்ற முகத்துடன் அவனை அவள் பார்க்கிறாள்.

அவன் - சுதீர், எப்போதும் போல் கேலியும் சிரிப்புமாக விளங்குகிறான். கோடு போட்டதொரு சட்டை! மடிப்பு அலுங்காத கால்சட்டை; கனவு காணும் கண்கள்; வாராத சுருண்ட கேசம்.

"ஸோ... யூ ஆர் எ கிருஹராணி! விஷ் யூ போத் ஆல் த ஹாப்பினெஸ்..."

துரை சிரிக்கிறான். "எங்கே இங்கேதான் இப்ப இருக்காப்போலயா?"

"ஆமாம் ஆமாம்..." என்றபடியே அவன் யமுனாவைப் பார்க்கிறான்.

"பாட்னாவில் எங்கே? அட்ரஸ் சொல்றீங்களா?"

"வீடெல்லாம் இனிமேல்தான் பார்க்கணும். நீங்க ஆபீஸில் விசாரிச்சால் தெரிஞ்சிடும்..." என்று அலுவலக முகவரியைச் சொல்கிறான் துரை.

"அங்கே நான் வருவேன்..." என்று யமுனாவைப் பார்த்துப் புன்னகை செய்கிறான்.

"அம்மாவன் வந்திருந்தாரா?"

"ஆமாம், 'மட்ரா' ஸ்டேஷனில் பார்த்தேன். எங்கோ யூனிவர்ஸிடி ஸெமினார்னு வந்தாராம். யமுனாவைப் பார்த்துப் போகணும்னு நினைச்சேன். அங்கே வரதுக்கில்லே; சொல்லுன்னார் சொல்லிட்டேன்."

"அப்புறம், இதோ ஒரு பரிசு மிஸ்டர் துரை, என் வாழ்த்துக்களுடன்!"

கையிலிருக்கும் சிறு புத்தகப் பாக்கெட்டையும், ஒரு இனிப்புப் பொட்டலத்தையும் கொடுக்கிறான். துரை நன்றி கூறுகிறான். பிறகு திடீரென்று வந்தாற்போல் கூட்டத்தில் கலந்து மறைகிறான். வண்டி கிளம்பும் வரையிலும் இருக்கும் அலுவலக நண்பர்களிடம் துரை என்ன பேசுகிறானென்று அவளுக்குப் புரியவில்லை. அந்தப் பெரிய இரயிலடி மேடையின் வண்ண விசித்திரக் கலவைக் குரல்களிலிருந்து விடுபட்டு வண்டி அவர்களை வேறு திசைக்குக் கொண்டோடுகிறது.

"ஏனிப்படி மருண்டு போயிருக்கிறே யமு?..."

"ஒண்ணுமில்லியே! அது என்ன புத்தகம்? மாவின் பொன்மொழிகளா?" என்று கேட்கிறாள் வெப்பமான குரலில்.

துரை அப்போதுதான் நினைவு வந்தாற்போல் பழுப்புக் காகிதத்தை அகற்றுகிறான். அட்டையில் காந்தி படம்!

'காந்தி என்ற ஒருவர், நாட்டுக்கு எந்த அளவில் கேடு செய்திருக்கிறார்!' என்பது தலைப்பு.

'அதை ஆக்கியோன் சுதீர்...'

அட்டையை நீக்கினால், உட்பக்கம், காந்தியம் என்ற பிற்போக்கு முட்டாள்தனத்தோடு தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கும் அறியாமை மிகுந்த இந்நாட்டின் குழந்தைகளுக்கு அதைச் சமர்ப்பணமாக்கி இருக்கிறான்.

அதைப் பார்க்கையில் ஆத்திரம் கிளர்ந்து வருகிறது. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள்.

"கிழிச்சுப் போடுங்கள். இதென்னத்துக்கு நமக்கு?"

"ஆத்திரப்படாதே யமு! என்னதான் சொல்றார்னு படிச்சுப் பார்ப்போமே யமுனா. நீ அந்தச் சீனத்துப் பேனாவைக் கொடுத்து அவரிடம் இதில் ஒரு கையெழுத்து வாங்கியிருக்கலாம். பரிசுன்னு சொல்லிட்டுக் கைப்பட ஒண்ணும் எழுதாம கொடுத்திருக்கிறார்."

தூக்கிவாரிப் போடுகிறது அவளுக்கு.

"ஏது சீனத்துப் பேனா?"

"நீ யாரோ ஒரு வேலையில்லாப் பட்டதாரியிடம் இரக்கம் கொண்டு வாங்கினாயே, அந்தப் பேனா..."

"ஐயோ?..."

பேனாவைப் பார்க்கிறாள், 'மேட் இன் சைனா' என்ற எழுத்துக்கள் அவளைப் பார்த்துச் சிரிக்கின்றன.

அத்தியாயம் - 17

நினைவு தெரிந்த நாட்களாய்க் காலையில் எழுந்து பிரார்த்தனைப் பாடல்களைப் பாடிப் பழகிய யமுனாவுக்கு, உடலைக் குறுக்கும் குளிருக்கு இதமாக, தடிமனான பஞ்சு மெத்தைப் போர்வைக்குள், மனிதச் சூட்டின் அணைப்புச் சுகத்தில் ஒடுங்கிக் கிடக்கும் போதும், அதிகாலையில் விழிப்பு வந்து, முள்ளாய் உறுத்துகிறது. அவள் கல்கத்தாவில் இருந்த நாட்களில் கூடப் பிரார்த்தனை நியமத்தை விட்டதில்லை. காலையில் ஐந்தரைக்கேனும் எழுந்து சமையலறையில் சென்று பிரார்த்தனையை முடித்துக் கொள்வாள்.

'என் விருப்பத்தை மீறி அவள் போகக்கூடாது' என்ற அவனுடைய கடுமை இரு தரப்புக்குமுள்ள சமமான விட்டுக் கொடுக்கும் தன்மையில் இருந்து அவனை வெகு தொலைவுக்குக் கொண்டு சென்று விட்டது. அந்த விலங்கை அசைத்து அசைத்து அவள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள்.

அதுல் கதவடியில் நின்று "மாஜி" என்று குரல் கொடுக்கும் வரையிலும் சித்திரவதையாக இருக்கிறது.

"பால்... பால் வந்து விட்டது!"

கையைத் தள்ளி அணைப்பை உடைத்துக் கொண்டு துள்ளிக் குதித்து வருகிறாள்.

கூனிக் குறுகிக் கொண்டு ஒரு ஏழெட்டு வயசுச் சிறுவன் கையில் பால் புட்டிகளுடன் நிற்கிறான்.

தொளதொளக்கும் அரை நிஜாரை இடுப்பில் இழுத்துச் செருகிக் கொண்டு, (அதற்குக் கொக்கி, பித்தான் எதுவும் கிடையாது). மேலேயும் பித்தான் இல்லாத ஒற்றைச் சட்டையுடன் ஒடுங்கி நின்றான். முடி செம்பட்டையிலும் செம்பட்டைப் பஞ்சுப் பிசிறுபோல் மண்டையைக் காட்டிக் கொண்டு பரந்திருக்கிறது. முகம் கை கழுத்தெல்லாம் கங்கை வண்டல் குழிகளிலும் குட்டைகளிலும் செழித்து வளரும் கொசுக்களின் முத்திரைகள்.

இரண்டு புட்டிகளுடன் உள்ளே வருகிறான் பையன்.

யமுனா இனிய குரலில் பிரார்த்தனை கீதங்களை இசைக்கும் போது சிறுவன் வாயிற்படியிலேயே நிற்கிறான்.

முகம் கழுவிப் பல் துலக்கிச் சுத்தம் செய்து கொள்ளும் போது அந்தச் சிறுவனும் அப்படித் தூய்மையாகிறான்.

அடுப்பை மூட்டித் தேநீருக்கு வைத்துவிட்டு அவள் அவனை எழுப்ப வருகிறாள்.

"எழுந்திருங்க... டீ போட்டாச்சு."

"ப்ளீஸ், ரொம்பக் குளிர் யமுனா..."

"உஹும். நீங்கள் பல் விளக்காமல் நான் டீ கொடுக்க மாட்டேன்."

"ப்ளீஸ் யமு, குளிருக்கு விதிவிலக்களியேன்..."

"இது என்னங்க கெட்ட வழக்கம்? நீங்க இந்த ஊருக்கு வந்த பிறகு ரொம்ப மோசமாயிட்டீங்க. நான் கண்டிப்பாக இடம் கொடுக்க மாட்டேன்..."

"தரமாட்டியா?"

"ஊஹும்!"

யமுனா பிடிவாதமாக உள்ளே வந்து பாலைக் காய்ச்சுகிறாள். அதுல் இதற்குள் வாயிற்புற அறையைத் தட்டிப் பெருக்கி மிதியடிகளைச் சுத்தம் செய்து விட்டு "தொட்டியில் பெரிய ரோஜா பூத்திருக்கு மாஜி!" என்று கூவிக் கொண்டு வருகிறான்.

"இத பாருங்க; ரோஜா எவ்வளவு அழகாயிருக்கு, எழுந்து வாங்களேன்."

துரை அசையவில்லை. அதுல் ஓடிப்போய் நிதாவையும் கூட்டி வருகிறான். அந்தச் செடியை அவர்களே நட்டுத் தண்ணீர் வார்த்திருக்கின்றனர். எத்தனை பெரிய ரோஜா!

நிதாவுக்கு நான்கு வயசிருக்கும்! அதே அச்சு; அதே செம்பரட்டை; அதே கொசுக்கடி உடல். பழைய கவுனும் யாரோ கொடுத்த பழைய பைஜாமாவும். அவளுக்குப் பல் விளக்கி முகம் கழுவி விடுகிறான். சதைப் பற்றில்லாத அந்த முகத்திலும் காலை மலர்ச்சியின் புதுமையோடு குறுகுறுக்கும் விழிகள் அரிசிப் பற்களைக் காட்டிச் சிரிக்கும் கவடற்ற குருத்து.

"பைட்டோ!" என்று கூறுகிறாள்.

காலைச் சம்மணம் கட்டிக் கொண்டு சில்லென்ற சிமிட்டித் தரையில் உட்காருகிறாள் நிதா.

அவள் வேலைக்கென்று ஒரு ஆளும் வைத்துக் கொள்ளவில்லை என்பதை துரை அறிவான். ஆனால், இந்தப் பஞ்சப் பனாதைகள் எதற்கு அடிக்கடி வருகின்றன?

"இதுகளை எல்லாம் எதுக்கு உள்ளே விடுகிறே யமு. பிறகு நாளைக்கு ஏதேனும் காணாமப் போனா வீணா இதுங்க பேரில் சந்தேகப்பட வேண்டிவரும்..."

யமுனா கணவனை உறுத்துப் பார்க்கிறாள்.

"அப்படி உங்களிடம் நான் புகார் செய்ய மாட்டேன். ஏழைக் குழந்தைகள். ஏனிப்படி பேசறீங்க?"

"நான் இருக்கும் வரை இவங்க உள்ளே வர வேண்டாம். நான் ஆபீஸுக்குப் போன பிறகு நீதானே ராஜ்யம் நடத்தறே?"

"நீங்க இப்படி வேற்றுமை பாராட்டுவது எனக்கு மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது."

"அதையே நானும் திருப்பிப் படிக்கிறேன். நீ என்னிடம் வேற்றுமை பாராட்டுகிறாய்?"

"அர்த்தமில்லாமல் திருப்பிப் பேசாதீங்க..."

"நான் சொன்னால் அர்த்தமில்லை, நீ பேசினால் அப்படியே பொருள் சொரிகிறது!"

யமுனா மறுமொழியின்றி தேநீரை வைத்துவிட்டு உள்ளே செல்கிறாள். அவன் தேநீரைக் குடித்துவிட்டு ஏதோ யோசனையுடன் அமர்ந்திருக்கையில் இதழ்களில் படிந்த பாலின் செழுமையைத் துடைத்துக் கொண்டே குழந்தைகள் வருகின்றன.

அவனுக்கு அமைதி குலைகிறது. அவள் தனக்கென்று செலவேதும் செய்து கொள்வதில்லை. கதர்ச்சேலையைத் தவிர உடுப்பதில்லை. அவளே சோப்புப் போட்டுத் துவைத்துக் கொள்கிறாள். வேலைக்கு ஆளில்லை. சுறுசுறுப்பாக வீடு சுத்தமாக்குகிறாள். குளியலறை கக்கூஸெல்லாம் கழுவிவிடுகிறாள். கடை கண்ணிக்குத் தானாகவே போய்ச் சாமான்களை வாங்கி வருகிறாள். நடைதான். ஆனால், இந்த மாதிரிக் கண்ட குழந்தைகளுக்கும் பால் வாங்கிக் கொடுப்பதும், வீட்டில் கூட்டம் போடுவதும் அந்தச் சிக்கனத்துக்கு ஈடாக இருக்கிறது.

"யமு..."

"எஸ்..."

ஈரக் கூந்தலைத் துவட்டிக் கொண்டு முன் வந்து நிற்கிறாள்.

"இன்னிக்குச் சாயங்காலம் மிச்ரா வீட்டில் ஒரு பார்ட்டி. நீ வரணும்."

"நேத்தே சொன்னதுதானே, வந்தால் போச்சு!"

"நான் வந்து நீ ரெடியாகும் வரையிலும் காத்திருக்க முடியாமல் இருக்கலாம். அவசரமாக வருவேன்..."

"நானொண்ணும் உங்களைப் போல் சோம்பேறி இல்லை..."

"கழுதை! அதற்காகச் சொல்லல்லே. இந்த ஆசாமி எங்களுக்கு மிகவும் உபயோகப் படக்கூடிய புள்ளி. செல்வாக்குக்காரன்..."

"இருக்கட்டுமே? அதனால் நான் பயப்படுவேன்னு பார்க்கிறீங்களா!"

"நம் முன்னேற்றம் இம்மாதிரியான சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வதில் தான் இருக்கிறது."

"ரொம்பச் சரி."

"அதனால் நீ கொஞ்சம் 'ஸ்மார்ட்'டாக வரணும்னு சொல்றேன்."

"இந்தத் தரக்குறைவான பேச்சுக்கு உங்களை நான் சும்மா விடப் போவதில்லை. நான் இப்ப ஸ்மார்ட்டாக இல்லையா?"

"ஸ்மார்ட்டுன்னா..."

"எனக்குப் பொருள் தெரியும். கவலையில்லாமல் போங்க!"

உண்மையில் துரை மனசுக்குள் சங்கடப்படுகிறான் என்பதை அவள் இத்தனை நாட்களில் தெரிந்து கொண்டிருக்கிறாள். இந்தச் சூழல் கல்கத்தா நகர வாழ்வைப் போலில்லை. மேலும் அங்கு அவன் பயிற்சியில்தானே இருந்ததாகப் பெயர்? இங்கே அலுவலகத்தைச் சார்ந்து வெளி வட்டாரங்களில் இவனைப் போன்ற இளம் அதிகாரிகள், தொழில் துறையாளர் பலர் நண்பர்களாகியிருக்கின்றனர். சிலர் மனைவியருடன் இவர்கள் வீட்டிற்கும் வந்திருக்கின்றனர். இந்த அந்தஸ்தை உத்தேசித்து வாயில் அறையில் சோபா செட்டுகள், பிரம்பு நாற்காலிகள் வாங்கிப் போட்டிருக்கிறான் வாடகைக்கு. அவனுடைய தோற்றத்திலும் மாறுதல்கள் இசைந்திருக்கின்றன. காலையில் அன்றாடம் முகத்தை மழுமழுப்பாக்கிக் கொள்ள உயர்ரக சாதனங்கள், வாசனை லோஷன், பவுடர் வகையறாக்கள்; தேவைக்கு இரண்டு ஜோடிக் காலணிகள்; மடிப்பலுங்கா ஸுட், டை போன்ற உடைகள் என்றெல்லாம் உயர்ந்திருக்கின்றன.

ஆனால் யமுனாவின் தேவைகளில் மாறுதலே இல்லை.

அந்த வசதியுள்ள நடுத்தரக் குடும்பத்துக்கு இசைந்த வீட்டைச் சுற்றி, அவளுடைய கண்களில் பட்டவை வறுமையும், பிணியும், புழுதியும், அறியாமையுமே.

தன் தேவைகளைக் குறைத்து அந்தப் பிணிகளைத் துடைப்பதே வாழ்வின் இலட்சியம் என்று பழகியவளல்லவா!

அதுல், நிதா, கீது - இவர்கள் அருகிலுள்ள வண்ணாத்தியின் குழந்தைகள். சுனில், ராம், சுஷ்மா - இவர்கள் அக்கம் பக்கம் சீமான் வீடுகளில் எடுபிடி வேலை செய்ய வந்த குடிசைக் குழந்தைகள். இந்தக் குழந்தைகள் பகல் நேரங்களில் புழுதியில் விளையாடிக் கொண்டும், பாதி நேரத்தில் எஜமான், எஜமானியர் குரல் கொடுக்கும் போது ஓடிப் போவதுமாக இருந்ததைப் பார்த்தாள்.

"நீங்களெல்லாம் ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?" என்று அங்கு வந்த மறுநாள் அவர்களிடம் அவள் கேட்டாள்.

"பள்ளிக்கூடமா?"

"ஆமா, ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?"

வண்ணாத்தி கூறினாள்; "இந்தக் கழுதையைப் பள்ளிக்கு அனுப்பினால் நான் துறைக்குப் போகும்போது யார் குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டு வேலை செய்வார்கள்? இஸ்திரி போட யார் உதவி செய்வார்கள்?"

சுனிலின் தாய் சம்பா கூறினாள்: "பெரிய பையனை படிக்க வைத்தேன். ஒரு மாசம் பன்னிரண்டு ரூபாய் சம்பளம், நோட்டுப் புத்தகம், ட்யூஷன், பங்கா... முப்பது ரூபாய் செலவாயிற்று. இவர்களுடைய அப்பன் கல்கத்தாவில் வேலை செய்து இரண்டு மாசத்துக்கோ மூணு மாசத்துக்கோ ஒருமுறை பதினைஞ்சோ இருபதோ அனுப்புகிறான். எப்படிப் படிக்க வைப்பது? இப்போதுதான் கார் வாலியிடம் சொல்லி அவனுக்கு ரிக்ஷா இழுக்கும் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்."

உண்மையில் சம்பாவைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. இருபது வருஷ மண வாழ்வில் கணவனுடன் இருபது நாட்கள் அவள் கூடி இருந்ததில்லை. இந்த அழகில் அவள் இரண்டாவது மனைவி.

"மாஜி, துணியெல்லாம் நீங்களே துவைக்கிறீர்களே? இதற்கு முன் மதறாஸி மாஜிகளுக்கு நான் வேலை செய்திருக்கிறேன். சாம்பார் மசாலா அரைப்பேன்; சட்டினி அரைப்பேன்..." என்றெல்லாம் அடுக்கியபோது, யமுனா தேவையில்லை என்று மறுத்தாள். ஆனால் நிராசை படிந்த முகமும் கையில் குழந்தையுமாக அவள் படியிறங்கிச் சென்றபோதுதான் அவளுடைய தேவையைப் பற்றிய உணர்வு யமுனாவுக்கு உறைத்தது.

"சம்பா, இங்கே வா. நான் உனக்கு ஒரு வழி சொல்லித் தருகிறேன்" என்று தன் சர்க்காவைக் காட்டினாள். "இதைக் கற்றுக் கொள். உன் பசி தீர்க்கும் காமதேனுவாக இது இருக்கும்!" என்றாள்.

"இது எனக்கு வராது மாஜி!" என்றாள் சம்பா.

"ஏன் முயற்சி செய். நீ தன்மானத்தோடு பிழைக்க முடியும்...!"

ஆனால் அவளுக்கு முயற்சி செய்யப் பொறுமை இல்லை. அடுத்த நாள் அவள் வரவில்லை. குழந்தைகளை மட்டும் இழுத்து அவள் படிப்புச் சொல்லிக் கொடுத்தாள்.

அதுல், இத்தனை நாட்களுக்கு - இரண்டு மாசங்களுக்கு - அ, ஆ வரிசையைக் கூடக் கற்கவில்லை. சுனில் இங்கு வருவதே ஏதேனும் திண்டி கிடைக்குமோ என்ற நோக்கத்தில்தான். நிதாவை அடித்து அழவிடுவது அவன் பொழுதுபோக்கு. அ, ஆ கற்பிக்க அவள் மரக்கட்டை எழுத்துக்கள் வாங்கி வந்தாள். அவற்றைத் தரையில் அடித்து ஆடியே அவன் உடைத்திருக்கிறான்.

"மாஜி, இவனுக்குப் படிப்பு வேண்டாம்!" என்று அதுல் கூறுவான்.

"படிப்பான். படித்தால் தான் சாஹப் போல் ஆகலாம். பசியாமல் சாப்பிட, குளிர் நடுங்காமல் போர்த்துக் கொண்டு நல்ல உடை உடுத்து வாழ முடியும்..."

சுனிலுக்கு அதிலெல்லாம் கவர்ச்சியே உண்டாவதில்லை.

அவன் இவ்வகையில் பொழுதைக் கழிக்கையில் பங்களா கேட்டிலிருந்து எஜமானின் குரல் அதட்டிக் கொண்டு வரும்.

"மாஜி! சுனில் கெட்ட பேச்சுப் பேசுகிறான்!" என்று அதுல் தெரிவித்தான் ஒருநாள்.

"சரி, நீ அதைக் கேட்க வேண்டாம்" என்று எங்கோ பார்வையை மிதக்கவிட்டாள் யமுனா. அந்த ஆதிவாசிக் குழந்தைகளுக்கும் இவர்களுக்கும் இடையேயுள்ள வேற்றுமைகளை எண்ணியது அவள் மனம்.

"இல்லே மாஜி, பங்களாவிலுள்ள மேம்சாப் சொல்றாங்களாம், இந்த வீட்டு சாஹபுக்கும் உங்களுக்கும் கல்யாணமே ஆகலியாம்; வகிட்டில், குங்குமம் ஏன் வைக்கலியாம்னு கேட்கிறான். அப்புறம், நீங்க மேம்சாப் இல்லையாம். மேம்சாப்பா இருந்தா அவங்களே துணி தோய்ப்பாங்களா, கடைக்குப் போவாங்களா நடந்துன்னு கேட்கிறான்..."

யமுனா சிரித்துக் கொண்டே, "மேம்சாப்னா, பசியெடுத்தா அவங்களே சாப்பிட மாட்டாங்களா? யாரானும் தான் அவங்களுக்காகச் சாப்பிடுவாங்களா?" என்று கேட்டுப் பேச்சை மாற்றுகிறாள்.

ஏற்றத் தாழ்வுகள் இரத்தத்தோடு ஊற, பிஞ்சுப் பருவத்திலேயே வேற்றுமைகள் விதைக்கப்படும் கொடுமையை அவள் தவிர்க்க முயலுகிறாள். பலன், அவள் தன்னைப் போன்ற பொருளாதாரப் படியில் உள்ளவர்களை விட்டு விலகி விலகிப் போகிறாள். யமுனாவை, அக்கம் பக்கங்களில் யாருக்கும் பிடிக்கவில்லை.

மாலையில் துரை வீடு திரும்பும்போது, அவள் கச்சிதமாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். குழலை நீண்ட பின்னலாகப் போட்டுக் கொண்டு ஒரு பொன்னிற ரோஜாவைச் செருகியிருக்கிறாள். கஞ்சி போட்டு மடித்த பூப்போட்ட இளநீலக் கதர்ச்சேலை, அதே வகைச் சோளி. செவிகளில் இரண்டு பொய் முத்துக் குண்டலங்கள். நெற்றியில் சிந்தூரப் பொட்டு. அவன் முகத்தில் நெஞ்சு தளும்பும் புன்னகை மலருகிறது! கையிலிருக்கும் பழுப்புக் காகிதப் பையை அவளிடம் கொடுக்கிறான்.

அதை அவள் மெல்லத் திறக்கிறாள். நட்சத்திரப் புள்ளிகள் வேலைப்பாடு செய்த மிக மென்மையான இளநீல நைலான் ஜார்ஜஸ் நழுவுகிறது.

"இது...இது..."

அவளுக்கு நெஞ்சில் சொற்கள் முட்டிக் கொள்கின்றன.

அவன் குனிந்து, நேருக்கு நேராக இறைஞ்சுவது போல் பார்க்கிறான். பிறகு அந்தச் சேலையை விரித்து அவள் மீது போர்த்துவிட்டு அருகே இழுத்துக் கொள்கிறான்.

அத்தியாயம் - 18

யமுனா அந்தப் புடவையைத்தான் உடுத்து, ரிக்ஷாவில் அவனோடு நெருங்க அமர்ந்து அந்த விருந்துக்குச் செல்கிறாள். இந்தப் பாரத நாட்டில் காந்தி என்ற ஒருவர் தோன்றி, அஹிம்சை அன்பினால் சமத்துவ நெறி என்ற ஒன்றைப் புதுமையிலும் புதுமைபோல் விளக்க, வாழ்ந்து மறைந்து இருபதாண்டுகளுக்கு மேலாகின்றன. அன்னாருக்கு பிறந்த நாளும் மறைந்த நாளும் கொண்டாடிப் போற்ற அரசு முன் நிற்கிறது. அந்த நெறியை விளக்க நூற்றுக்கணக்கான அறிஞர்கள் புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள்; மேடையில் முழங்குகிறார்கள்.

ஆனால் இங்கே மனிதனை மனிதன் சுரண்டி உயிர் வாழ்வது மட்டுமில்லை. அதற்கெல்லாம் மேலான சுகபோகங்களை, தேவைகளை அநுபவிக்கிறான்; வளர்த்துக் கொள்கிறான். பீகார் மாநிலத் தலைநகரில் போக்குவரத்துக்கு, நடுநிலை மக்களுக்குச் சாதகமான பஸ் வசதி கிடையாது. கார், இல்லையேல் மனிதன் இழுக்கும் ஊர்திதான். பனிப்படலம் ஊரைப் போர்த்துக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் கனமான கம்பளிகளுக்குள் முடங்கிக் கொண்டு உழைப்பறியாமல் உடற்சதை வளர்த்த ஆடவர் பெண்டிர், பட்டும் கம்பளியுமாக ரிக்ஷாக்களில் வீற்றிருக்கின்றனர். கன்னத்தெலும்பு முட்ட, ஒரு அழுக்கு வேட்டியும் ஒற்றைப் பருத்திச் சட்டையும் குளிரை வரவேற்கும் வாயில்களாக வதைக்க, அடிநிலை மனிதர்கள் மிதிகளை இயக்கிச் செல்கின்றனர். போரிங் கால்வாயின் குறுகிய பாலத்தை அவர்கள் கடக்கையில், தெருவை அடைத்துக் கொண்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு மனிதன் இழுக்கும் பாரவண்டிகள்...

படார் என்று ஏதோ வெடிக்கும் ஓசை கேட்கிறது.

கல்கத்தா நகர அநுபவ நினைவில் அவள் திரும்பிப் பார்க்கிறாள். சக்கரங்கள் தேய, அவன் இறங்கி முன் நின்று இழுக்கிறான்.

"பாலமானதால் இறங்கி இழுக்கிறானா? நாம் வேணா இறங்கிடுவமே, பாவம்?" என்று துரையின் செவிகளில் அவள் கிசுகிசுப்பது பயனில்லை. பாலத்தின் மறுபுறம் அவன் நிறுத்தி எதிரே காலியாக வரும் ரிக்ஷாக்காரனிடம் பேசுகிறான்.

பிறகு தான் அவளுக்கு உண்மை உறைக்கிறது சக்கரத்தில் டயர் வெடித்திருக்கிறது!

"இத்துடன் அவன் கூலியைக் கொடுத்து நிறுத்துங்களேன். இனிமே நாம் நடந்து போயிடலாம்!"

"உளறாதே? பாடலிபுத்ரா இன்னும் ரொம்பத் தொலைவிருக்கு! தகராறு பண்ணாம அந்த ரிக்ஷாவிலே ஏறு!"

இந்தப் பகுதிக்கு யமுனா இதுகாறும் வந்ததில்லை. அழகிய சாலைகளுடன், விசாலமான தோட்டங்களுடன், பெரிய பெரிய மாளிகைகள். ஒரு மாளிகை வாயிலில் கார்களாகத் தெரிகின்றன. வண்ண விளக்குத் தோரணங்கள் 'ஸுஸ்வாகதம்' கூறுகின்றன.

இதுவும் பஞ்சம்பீடித்த விஹார மாநிலத்தைச் சேர்ந்த இடந்தானோ? ஒவ்வோர் ஆண்டிலும் குளிரிலும் வெப்ப அலையிலும் நூற்றுக்கணக்கான மக்கள் சாகும் விஹார மாநிலப் பகுதிதானா? காச்மீரக் கம்பளங்கள் மெத்தென்று அடிகளை வருடிவிடும் தரையில் ஆண்களும் பெண்களும் குழுமுகின்றனர். வாட்ட சாட்டமான கனத்த சாயமும் பெரிய அளவுக் கொண்டையுமாக ஒரு பெண்மணி முறுவலித்துக் கைகூப்பி வரவேற்கிறாள். முன்னறையில் மிக நேர்த்தியான இருக்கைகளில் பத்துப் பதினைந்து சுந்தரிகள் ஆண்களோடு கலகலப்பாகச் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். துரையின் சாத்விகமான தோற்றத்தோடு யாரையுமே இணை கூற முடியாது. ஐந்தணி நெறிகளோடு கூடிய சீக்கியர்களே பெரும்பான்மையோர்; கங்கை வளநாட்டின் செழுமைக்கு எடுத்துக் காட்டாக மற்றவர்.

இறுகப் பிடித்த கால் சட்டையும் தொளதொளத்த காச்மீர குர்த்தாவும், அலை தவிழ விழும் குட்டைக் கூந்தலுமாக மிச்ராவின் புதல்வி "ஆயியே, ஆயியே" என்று வருகிறாள். துரை யமுனாவை அறிமுகம் செய்து வைக்கிறான்.

"இந்தக் கும்பலில் நான் உன்னைக் கதர் சேலையுடன் வரவேண்டாம் என்று சொன்னது ஏனென்று புரிகிறதா?" என்று துரை அவள் செவிகளில் கிசுகிசுத்தான்.

யமுனாவுக்கு அது செவிகளில் விழவில்லை.

சம்பாவைப் போன்று பல பெண்கள் அவள் மனக்கண்களில் தோன்றுகின்றனர். அதுல், சுனிலைப் போன்று பல்லாயிரக்கணக்கான குழந்தைகள், கையது கொண்டு மெய்யது பொத்தி, எருமை வாசம் செய்யும் இடங்களுக்கருகில் சோர்ந்து உறங்கும் காட்சி தோன்றுகிறது. இந்தப் பாடலிபுத்திரத் தலைநகரில் கங்கைத் தாய் வற்றாத செல்வங்களைத் திரட்டிக் கொண்டு தருகிறாள். இம்மக்களுக்காக ஒவ்வோர் ஆண்டிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைத் தன் பொற்கரங்களால் அணைத்து, பொன் விளையும் வண்டலை நிரப்பிச் செல்கிறாள். காயும் கனியும் பொன்மணித் தானியங்களும் அவள் அருளில் கொழிக்கின்றன. நாள்தோறும் லட்சம் லட்சமாகச் செங்கற்களை அறுத்துக் குவிக்கக் களியைப் பதமாகக் கொண்டு குவிக்கிறாள். ஆனால் அந்த அன்னையின் லட்சோபலட்சம் மக்கள் மாந்தோப்புக்களிலும் குட்டையோரங்களிலும், எளிய ஸத்துமாவும், அதுவும் கிடைக்காத போது பசி மறக்க 'கய்னி'யும், இரவு கொசுத் தொல்லையும், உடல் நோவும், மறக்கக் கள்ளுடன் உறவு கொண்டும் நாட்களைக் கழிக்கின்றனர். அண்டிப் பிழைக்கும் தொழிலன்றி வேறு தொழில் முன்னேற்றம் கண்டு நிமிர்ந்து நிற்கத் தெரியாதவர்களாய்த் தவிக்கின்றனர். எங்கோ கண்காண இயலாத தொலைவில் கல்கத்தா நகரில் எத்தனை எத்தனை ஏழை பெண்களின் மணவாளர்கள் கூலிக்குப் பிழைக்கச் சென்றிருக்கின்றனர்.

கண்முன் விரிந்திருக்கும் சித்திரப் பூங்கனவின் காட்சிகளூடே அழிக்க இயலா உண்மையாய்ப் பதிந்திருக்கும் பரிதாபங்களிடையே சிக்கியிருக்கும் அவளை ஒரு மென்கரம் தொட்டசைக்கிறது. கார் மேகக்குழல் கவிந்த பிறை நுதலாள் ஒருத்தி தேனினுமினிய குரலில், "மாடிக்குப் போகலாமே!" என்றழைக்கிறாள்.

படிகளெல்லாம் கம்பள மென்மை.

மாடியில் பெரிய கூடத்தில் உயரே படிக விளக்குகள் ஒளியில் மின்னி, வண்ண ஜாலங்களை வாரி இறைக்கின்றன. அந்த வண்ணக் கதிர்களில் உயிர்த்தெழுந்த மோகினிகளாய்ப் பெண்கள், இன்னொரு புறம் இணைகளாய் ஆண்கள். துரையும் அங்கு இருக்கிறான்.

அவர்கள் எல்லோருடைய கைகளிலும் பட்டைக் கண்ணாடிகளில் பொன்னிறத் திரவம் மின்னுகிறது. கிலுங்கிலுங்கென்று கண்ணாடிகள் இதமாக மோதும் ஒலியும் பெண்களின் மெல்லொலியும் இணைந்து ஒரு இனிய கலவையொலியைச் செவிக்கு அளிக்கின்றன.

ஒரு நங்கை அவளிடம் கோகாகோலா ஒன்றைக் கொணர்ந்து கொடுக்கிறாள்.

அதைக் கையில் வைத்துக் கொண்டு அவள் துரையையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

பிதுங்கும் கன்னமும், தாடி தலைப்பாவுமாக மீதூண் உண்பவன் என்று தோன்றக்கூடிய தோற்றத்துடன் ஒரு 'கனவான்' கையில் புட்டியும் தம்ளருமாக 'ஹா ஹா ஹா' என்று ஏதோ நகை வெடியை உதிர்த்துச் சிரிக்கிறான். சிரித்துக் கொண்டே துரையின் கைத் தம்ளரில் புட்டியைச் சாய்க்கிறான்.

துரை இதற்குமுன் சில நாட்கள் பார்ட்டி என்று சொல்லிப் போகாமல் இல்லை. ஒருமுறை ஒரு மணிக்குத் தான் திரும்பினான். அவளுக்கு இந்த உணர்வே இல்லை. துரை மதுவருந்தக் கூடும் என்று கற்பனை செய்து கூடப் பார்த்ததில்லை அவள்.

எல்லோரையும் போல் அவனும் புகை குடிக்கிறான்.

சில பெண்கள் இங்கிருந்து எழுந்து அந்தச் சிரிப்பிலும் பேச்சிலும் கலந்து கொள்ளச் செல்கின்றனர்.

பெரிய தலைப்பாகையை வைத்தாற் போல் கொண்டை போட்டுக் கொண்டு முதலில் அவர்களை வரவேற்ற பெண்மணியைச் சுற்றி, ஆண்கள் நாலைந்து பேர் அவளுடைய கிண்ணத்தில் செந்திரவத்தை வார்க்கப் போட்டியிடுகின்றனர். அவளுடைய கன்னங்களும் கண்களும் சிவந்து, அடக்கங்கள் மடலவிழ்ந்து, பெண்மையின் நளினங்களை நேர்கோடுகளாக்கி வாரி இரைக்கின்றன.

இந்த நாடகங்களைக் கவனியாதவர்கள் போல் நாலைந்து பெண்கள் ஒரு மூலையில் கோகாகோலாவை வைத்துக் கொண்டு வேலைக்காரி தொல்லை, பனிக் கொடுமை, நோவுகள், குழந்தை வளர்ப்பின் சிக்கல்கள் ஆகியப் பிரச்னைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாட்டிலும் கையுமாக ஒருவன் வருகிறான். "குளிருகிறதா ரொம்ப?" என்று சிரிக்கிறான்.

"குளிரே இல்லை, போங்கள்!" என்று எல்லோரும் தங்கள் பானங்களை மூடிக் கொள்கின்றனர் கைகளால்.

"இதோ இந்தக் கோலாவைக் குடியுங்கள் புதிய பிராண்ட், எக்ஸெலண்ட்... வெறும் கோலா!"

"மிஸஸ் ஷர்மா! கொஞ்சம்...?"

"வேண்டாம், வேண்டாம்! இந்த பிராண்டே போதும்!" என்று எல்லோரும் ஒரே குரலாகச் சேருகின்றனர்.

அவன் அகன்ற பிறகு யமுனா ஒருத்தியிடம் கேட்கிறாள், "அந்த புட்டியில்...?"

"ஹாஞ்ஜி... கலந்து இம்சை செய்வார்கள், இந்தப் பார்ட்டிகளின் விசேஷமே இதுதான்."

"மிக வருத்தமாக இருக்கிறது."

"ஹாஞ்ஜி... ஆண்கள் இப்படித்தான். நிலை மறந்து விடுகிறார்கள்."

"இங்கு நடக்கும் எல்லா விருந்துகளிலும் இது உண்டா?"

"ஹாஞ்சி...!"

இது அப்பட்ட மேல் நாகரிகமுமல்ல; கீழ்த்தனமுமல்ல. புதிய பணத்தால் மேலே ஏறி வான் கோழித்தனம் காட்டும் நாகரிகம். கையில் புட்டியுடன் தொப்பையும் பிதுங்கும் கன்னங்களுமாக ஒரு 'கனவான்' உடலை ஆட்டி நடனமாடுகிறான். விகாரமாக வேதனையாக இருக்கிறது, மற்றவர்களோ சிரிக்கிறார்கள். துரையும் கையில் தம்ளருடன் அவளைத் திரும்பிப் பார்க்காமலே சிரித்துக் கொண்டிருக்கிறான். அவள் தன்னந்தனியே ஒரு மூலையில் அமர்ந்திருக்கிறாள்.

ஒரு கால் அவள் வாழ்வு சுதீருடன் பிணைக்கப்பட்டிருக்குமானால்... அவன் நிச்சயமாக இத்தகைய கேலிக்கூத்து விருந்துகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மாட்டான் என்று தோன்றுகிறது. வன்முறைகளில் நம்பிக்கை வைப்பவர்களுக்குப் புலால், மது, உடலின்பங்கள் எல்லாவற்றிலும் லட்சிய விரோதங்கள் இருக்காது. ஆனால், பாசாங்கு செய்ய மாட்டார்கள். சுதீரின் தோற்றம், குடும்பச்சூழல், கல்வி - எல்லாமே துரையின் இளம் பருவச் சூழலிலிருந்து மாறுபட்டவை. ஆனாலும் துரைக்குக் காலையில் அது பால் குடிக்க வருவது கூடப் பிடிக்கவில்லை...

"ஓ! ஹௌ நைஸ்... இந்த ஸாரி நேபாலிலிருந்து வாங்கி வந்ததா பஹன்ஜி? ஜரிவேலை எவ்வளவு ஆயிற்று? நல்ல ஜப்பான் ஜரி போலிருக்கிறதே?"

கேள்வி கேட்பவளை யமுனா நிமிர்ந்து பார்க்கிறாள்.

"எனக்குத் தெரியாது. என் கணவர் வாங்கி வந்தார். அவருக்குத் தான் தெரியும்..."

"என்ன அழகான கலர்! நம்ம ஊர் நைலக்ஸுக்கும் இதற்கும் பார்த்த உடனே வித்தியாசம் தெரிகிறதில்லை?"

அந்தக் கணத்திலேயே முள் ஆடையைச் சுற்றிக் கொண்டிருப்பது போல் அவதிப் படுகிறாள். வழுக்குக் கிணற்றுக்குள் துரை, தான் மட்டும் இறங்கவில்லை, அவளையும் ஒரு கையில் பிடித்துக் கொண்டல்லவோ இறங்குகிறான்?

கொல்லென்று கூட்டத்தில் ஓர் அமைதி.

"ஆயியே, ஆயியே!" என்ற குரல்கள்.

பெண்கள் அனைவரும் எழுந்து நிற்கின்றனர். கையிலிருக்கும் கண்ணாடிகளை அப்பால் வைத்துவிட்டுக் கைகுவிக்கின்றனர் பல ஆண்கள். யமுனா வந்திருக்கும் மதிப்புக்குரிய பெண்மணி யாரோ என்று பார்க்கிறாள்.

'மாதாஜி!...' சுமதி தாயுடன் வந்திருந்த அம்மையார்!

ஒரு காலத்தில் சோஷியலிஸ்ட் கட்சியின் தூண்போல விளங்கியவரின் மனைவி.

பளபளவென்று மின்னும் வெண்பட்டுச் சேலை, இடது மூக்கில் நட்சத்திரமாகக் கதிர்களை வாரி வீசும் வைரம். வகிட்டில் சிந்தூரமில்லாத நரைத்த முடியின் பின்புறமே தெரிகிறது. முதுமையிலும் செழிப்பின் மினுமினுப்புக் குறையவில்லை.

ஒவ்வொருவராக மிச்ரா அவரை எல்லோருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறான்.

"நமஸ்தே, மாதாஜி. நமஸ்தே... நமஸ்தே...!"

தலையை மூடிக் கொண்டிருக்கும் சேலை வரம்பு அசையாமல், கைகுவித்து, தங்க பிரேம் மூக்குக் கண்ணாடிக்குள் கரிய குஞ்சங்கள் இல்லாத விழிகளுடன் புன்னகை பூக்கும் மாதாஜி...

"துரைராஜ் ஸேல்ஸ் இன்ஜினியர். மிஸஸ் துரைராஜ்."

மாதாஜி, அவளைப் புன்னகையுடன் நோக்குகிறார்.

"நமஸ்தே மாதாஜி, யமுனா! என்னை நினைவிருக்கிறதா?... ஊட்டியில் பார்த்தீர்களே?"

மூக்குக் கண்ணாடியை உயர்த்துவது போல் சரிசெய்து கொண்டு மாதாஜி, பார்க்கிறார்.

"ஊட்டியிலா?... பெங்களூர் காங்கிரஸுக்குப் போய் வந்த போது... நீ காங்கிரஸுக்கு வந்திருந்தாயாம்மா?"

"இல்லே மாதாஜி, சுமதி தாயுடன்... ராம்ஜி மகள்."

"ஓகோ?" என்று உடனே ஆவேசமாக யமுனாவைத் தழுவிக் கொள்கிறாள்.

"ராம்ஜி... ருக்மணிபாயின் மகளா? அந்த நாட்கள் பாபுஜியுடன் ஆசிரமத்திலிருந்த அந்த நாட்கள்..."

உண்மையிலேயே அந்த நாட்களின் நினைவில் மாதாஜியாகிவிட்ட பிரதிபாதேவி பெருமூச்சு விடுகிறாளா?

வைர மூக்குத்தி ஏழுவண்ணக் கதிர்களை வாரி வீசுகிறது. கழுத்தில் தங்கக் கொப்பி போட்ட துளசி மணிமாலை!

"இங்கே எங்கே இருக்கிறாயம்மா?"

"ஸ்ரீகிருஷ்ண நகரில்..."

"பக்கத்தில்தான். ஒரு நாள் வீட்டுக்கு வாம்மா."

"உங்கள் வீடும் அந்தப் பக்கத்தில்தானா மாதாஜி?"

'ஒரு பெரிய கட்சித் தலைவரின் வீடு, முன்னாள் மந்திரியாரின் இல்லம், எங்கே இருக்கிறது என்று தெரியாமல்தான் கேட்கிறாளோ!' என்ற எண்ணம் முகத்தில் மின்னி மறைய "ஆம், கட்டாய்ம் வா!" என்று கூறுகிறார் மாதாஜி.

யமுனா சுற்றுப்புறத்தை மறந்து ஏதோ கனவுலகில் மிதந்தவளாய் திட்டங்களிட்டுக் கொண்டு விருந்து நேரத்தைக் கழிக்கிறாள்.

அத்தியாயம் - 19

பொழுது புலரும் நேரத்தில் அவளுடைய உள்ளத்தில் அந்த எண்ணம் உறுதியாகிறது. அன்று மாதாஜியின் இல்லத்துக்குச் செல்ல வேண்டும். துரையிடம் சொல்ல வேண்டுமா, வேண்டாமா? லட்சியங்களோடு முரண்பட்ட வாழ்க்கையின் முட்போர்வையிலே அவள் உறக்கம் கொள்ளாமலிருந்தாளே ஒழிய, அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறான். ஆழ்ந்த உறக்கம். புதிய வாழ்க்கையின் வண்ண கோலாகலங்கள் அவனைத் தழுவிக் கொள்கையில், அவள் லட்சியங்கள் என்று நம்பியிருந்த தோற்றங்களெல்லாம் கலங்கிய நீரில் கரையும் நிழல்களாய் மறைந்து போய் விட்டன. அந்தச் சிதைவுகளுக்காக அவன் துயரப்படவில்லை!

அவள் இன்னும் அவன் கையைக் கோத்துக் கொண்டு ஒரே திசையை நோக்கி நிற்பதில் பயனில்லை. சோதனைக் களமாகத்தான் வேண்டும். வாழ்க்கைப் போர்வையை உதறிக் கொண்டு எழுந்திருக்கிறாள் யமுனா.

அதுல் முதல் நாளே பால் குப்பிகளைக் கொண்டு போயிருக்கிறான். என்றாலும் அதிகாலையில் தானே வெளியேறி நடக்கிறாள். கையில் வேறொரு பால் செம்புடன், பனிப்படலத்தில், வெதுவெதுப்புச் சுகங்களில் ஒரு சாரார் சுவர்க்காநுபவத்தில் மூழ்கிக் கிடக்க, வயிற்றுப்பாட்டுக்கு அல்லலுறும் எளியவர்கள் எழுந்து பொழுதைத் துவங்கும் காட்சிகள் வரிசையின் வீடுகளுக்கப்பால் கங்கையின் செழிப்பைப் புகழ்ந்துரைக்கும் மாந்தோப்புக்கள் விரிந்திருக்கின்றன. அவை கிராமங்களில் காலூன்றிப் பிழைக்க வழியின்றி நகரத்து மக்களிடம் அண்டி வயிறு பிழைக்க வந்த எளியவருக்கெல்லாம் ஆயிரங்கால் மாளிகையைப் போல் நிழலளிக்கின்றன. அந்த நிழலிலேயே முட்டு முட்டாய் மழைக்கொதுங்கக் குடிசைகள் போட்டுக் கொண்டிருக்கின்றனர். மூலைத் தேநீர்க் கடைக்காரன் போர்த்து முடங்கிக் கொண்டு, அடுப்பில் கல்கரியை நிரப்பிக் கொண்டிருக்கிறான். முதல் தெருவில் கம்பீரமான முகப்புக்களுடன் நிமிர்ந்தெழும்பி இருக்கும் பல அழகிய வீடுகள்; வாயிலில் காணும் அலுவலகப் பலகைகளும் ஜீப் வண்டிகளும் அந்த வீடுகளில் விளக்கேற்றி வாழும் குடும்பங்களில்லை என்று அறிவிக்கின்றன.

'கங்கைப் பாலப் பிரிவின் அலுவலகம்' என்று அறிவிக்கும் ஒரு பெரிய மாளிகையின் முன், விளக்குக் கம்பத்தில் பகாதூர் பசுவைக் கட்டி இருக்கிறான்.

பகாதூரின் குடும்பமும் மாந்தோப்பில் தான் வசிக்கிறது, என்றாலும் பகாதூர் நகரச் சந்தைகளில் பிழைக்கக்கூடிய கபடமும் தந்திரமும் கைகூடியவன். அவனுடைய மூன்று மனைவியரும் குடிசைப்பக்கம் எப்போதுமே கலகலப்பாக வைக்கும் குரல்வளம் உடையவர்கள். மாளிகையை அடுத்து சேற்றுக் குட்டையாக இருக்கும் கொசுப்பண்ணைகளெல்லாம் மழைக்காலத்தில் நீர் வழியும் குளங்களாகி விடும். இப்போது சுற்றுவட்டம் பங்களாக்களின் கழிவுகளெல்லாம் நாணமற்ற இரகசியங்களை எல்லாம் அம்பலமாக்கிக் கொண்டு அங்கே சங்கமமாகின்றன. பகாதூரின் மனைவியர் அந்தக் கரைகளில் எரிமுட்டைகள் காயவைத்திருக்கின்றனர். பகாதூர் பசுவின்மேல் ஒரு சாக்கைப் போட்டுவிட்டு மடியைக் கழுவிக் கொண்டிருக்கிறான்.

பின்பங்களாவில் சமையல் வேலை செய்யும் வங்காளிக் கிழவி லோட்டாவுடன் குந்தி உட்கார்ந்திருக்கிறாள்.

அதுல் பால்குப்பியுடன் குளிரில் விரைத்துக் கொண்டு வருகிறான். யமுனாவைக் கண்டதும் ஓட்டமாக வருகிறான்.

"மாஜி? நீங்க வீட்டுக்குப் போங்க மாஜி. சாப் ஸ்டீமருக்குப் போகிறாரா மாஜி?..."

"இல்லை, அதுல். என்னிடம் பாட்டிலைக் கொடுத்துவிட்டு நீ போ; ஆமாம், நான் வரக்கூடாதா?... நீ வீட்டுக்குப் போ!"

அதுலுக்கு முகம் தொங்கிப் போகிறது. ஏதேனும் ஒரு வேலையைச் செய்துவிட்டுத்தான் இவர்களிடம் பயன் பெற வேண்டும் என்று இயல்பாகவே நினைக்கும் சிறுவன்! அவனைச் சமாதானப்படுத்துவதுபோல் புன்னகை செய்கிறாள்.

பாலை வாங்கிக் கொண்டு இருவருமாக நடந்து வருகின்றனர்.

"மாஜி! அங்கே ஒரு குளத்தில் அழகான தாமரைப் பூக்கள் இருக்கு மாஜி! உங்களுக்கு கொண்டு வரட்டுமா?"

"இப்போதா?"

"ஆமாம்; ஒரு நொடியில் கொண்டு வரேன்."

"அந்தக் குளத்தை நானும் பார்க்க வருவேன்!"

"அது... பங்களாவுக்குள் இருக்கு மாஜி. அங்கே ஸோனாவின் மாமாதான் தோட்டக்காரர். பெரிய பெரிய ரோஜா இருக்கு. நான் கொண்டுவரேன் மாஜி. நம் வீட்டில் நட்டு வைக்கலாம்!"

"அது யார் பங்களா?"

"தேவேந்தர் பாபு தெரியாது மாஜி? இங்கே இருக்கும் எல்லா பங்களாவையும் விடப் பெரியது அதுதான். அதுக்குள்ளே பெரிய நாய் ரெண்டு இருக்கு. ஒண்ணு ஷேரு, ஒண்ணு ஷாபா."

"ஓ...!"

"அங்கே ஒரு 'அம்ருத்' மரம் இருக்கு. ஒரு 'அம்ருத்' தேங்காய் போல இருக்கும் மாஜி. ஒரு நாளைக்கு ஷோபனாவின் மாமா ரகசியமாய்க் கொண்டு வந்தார்." (அம்ருத் : கொய்யா)

"ஓ...?"

"தீபக் இல்லே? அவன் ஒரு நாளைக்கு உள்ளே கல்லால் அடிச்சான். கல் மாடியில் குளிர்காஞ்சிட்டிருந்த மாதாஜி மேலே விழுந்தது. காதைப் பிடிச்சு தர்வான் உள்ளே கூட்டிட்டுப் போய் அடி கொடுத்தான். நான் அப்படியெல்லாம் செய்யமாட்டேன்பா!..."

பாலில் ஏடு படிவது போல் சிறுவனின் பேச்சிடையே அவள் மனசுக்குள் அந்த வீட்டைப் பற்றிய விவரங்கள் படிகின்றன.

ஆம், அது அந்த மாதாஜியின் வீடுதான்.

கண்ணாடித் துண்டுகள் பதித்த மதில் சுவர்...

மதிலின் வாயிலில் கதவுகளின் இருபுறத் தூண்களிலும் சீனத்துச் சிங்கார மணிக்கூண்டு அமைப்புக்கள். ஆயுதமேந்திய காவலாளி வாயிலில் நிற்கிறான்.

வாயிலுக்குள் பச்சைக் கம்பளப் பரப்பாய் விரிந்த புல்வெளி கண்களையும் கருத்தையும் கவருகிறது. தொலைவில் மாளிகை முகப்பில் தாயும் கன்றும் போல் பெரிய படகுக் கார் ஒன்றும் முகப்புக்கு வெளியே தெரிய கன்று போன்ற சிறிய விதேசிய வண்டி ஒன்றும் நிற்கின்றன.

அண்ணாந்து நோக்கினால் சித்திர வேலைப்பட்டுச் சாளரங்கள்! வண்ணப் பூத்திரைகள்; அறைகளின் குளிர் சாதன அமைப்புப் பொருந்திய கூண்டுகள்...

மேலே... மேலே... மாளிகை இன்னமும் கட்டி முடியவில்லை என்று அறிவுறுத்தும் செங்கல் அடுக்குகள்...

இந்தச் செங்கல் அடுக்குகள் இல்லாத பெரிய வீடுகளே இல்லை. ஒருகால் இம்மாநிலத்தில் இப்படிக் கண்ணேறு படாமலிருக்கப் பரிகாரம் செய்கின்றனரோ என்று அவள் நினைத்தாள்.

பிறகுதான் துரை ஒருநாள் அவை வரிவிதிப்பைத் தடுத்து நிறுத்தும் அரைகுறைச் சுவர்கள் என்று விளக்கினான். அவளுடைய தந்தை லட்சியவாதியாகப் புகழ்ந்து பேசிய பெரிய சோஷியலிஸ்டுத் தலைவர் வீடுதானா இது?

அவள் உள்ளே செல்வதா வேண்டாமா என்று தயங்கியவளாக நிற்கையில் கதர் ஜிப்பாவுக்கு மேல் கோட்டும் தொப்பியுமாகக் கொத்தாக ஒரு கூட்டம் வருகிறது.

பிற்பகல் மூன்று மணிப்பொழுது கூட்டம் முன் பகுதியில் சென்று உள்ளே மறையும்போது அவள் தோட்டத்தில் ஒரு புறம் நிற்கிறாள்.

அதுல் மொழிந்தாற் போல் எத்தனை வண்ண ரோஜாக்கள்! எழில் கொஞ்சும் வண்ணங்கள். கறுஞ்சிவப்பிலிருது சாக்லேட் வண்ணம் முக்கிய கறுப்பு வரை எத்தனை வண்ணச் சாயைகள்; கொய்யா மரத்தடியில் நாய் ஆளுயரம் எழும்பிக் குலைக்கிறது. ரப்பர் குழாயுடன் வெளிப்படும் தோட்டக்காரன் அவளருகில் வருகிறான்.

"பாபுஜி மேலே இருக்கிறார்."

"மாதாஜி?"

அவன் பேசாமல் பக்கத்திலுள்ள இன்னொரு முகப்பு வழியாகக் கூட்டிச் செல்கிறான்.

அங்கும் இதே புற்றரை. சூரியகாந்திப் பூக்கள் பூச்சரக் குடைகளாய் நிமிர்ந்திருக்கின்றன. பந்தாடும் பூங்காவில் பிற்பகல் வெயிலில் ஒரு யுவதியும் செவிகளோரக் கிருதாக்களுடன் கூடிய இளைஞன் ஒருவனும் பந்தாடிக் கொண்டிருக்கின்றனர். கம்பளமிட்ட மெத்தென்ற படிகளில் அவள் ஏறிச் செல்கிறாள். மேலே வெயில் விழும் முகப்பில் சாய்வு நாற்காலியில் மாதாஜி சாய்ந்திருக்கிறாள். பணிப்பெண் ஒருத்தி கால்களைப் பிடித்து விட்டுக் கொண்டிருக்கிறாள்.

"நமஸ்தே மாதாஜி...!"

முதியவள் நிமிர்ந்து பார்க்கிறாள்.

"...வாம்மா, வா மகளே வா! கோமதி, ஒரு நாற்காலி கொண்டு வா!"

மெத்தை தைத்த தாழ்வானதொரு ஆசனத்தை பணிப்பெண் கோமதி கொண்டு வருகிறாள்.

"நான்... இந்த நேரத்தில் வந்து உங்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறேனோ என்னவோ?"

"...தூக்கம் வருவதில்லை மகளே, இரவில் தூங்கவே கஷ்டமாக இருக்கிறது... நீ மட்டும் தான் வந்தாயா?"

"ஆமாம் அவர் இந்நேரத்தில் எப்படி வருவார்? ஆபீசுக்குப் போய்விட்டார்."

"பகலுக்குச் சாப்பிட வந்து போவானில்லையா?"

"இல்லை... பகலில் வருவதில்லை."

"அப்ப, பகல் நேரம் ஓட்டலிலா சாப்பிடுகிறான்?"

"இங்கே வர நேரம் இருப்பதில்லை. அதோடு பலநாள் வெளியூர் போய்விடுகிறார்."

"வண்டி இருக்கிறதில்லையா?"

"இல்லை..."

"ஒண்ணு வாங்கிக்கலாமே? ரிஜிஸ்டர் பண்ணியிருக்கில்லே?"

"இல்லை மாதாஜி... அதையெல்லாம் நினைக்கவே இல்லை..."

"அட அசடு? வேண்டியவங்க இருக்கையில் இப்படிக் கஷ்டப்படுவானேன்? வண்டிக்கு ஆபீசிலேயே பணம் கொடுப்பாங்களே?"

"ரொம்ப நன்றி மாதாஜி. நீங்க இவ்வளவு அன்பாக இருப்பதே தெம்பாக இருக்கு..."

"அன்பா? அந்தக் காலத்தில் ராம்ஜி ருக்மணி பாயின்னா உசிரு! எப்படி இருந்தோம்?..."

மாதாஜியின் கண்களிலிருந்து சொட்டு விழவில்லை; மூக்குத்திதான் டாலடிக்கிறது.

"பிதாஜி படுத்த படுக்கையாக இருப்பதாகச் சொன்னாளே சுமதி? எங்கே யார் வைத்தியம் பார்த்தார்கள்? யார் யாரெல்லாமோ வயிறும் குடலும் கெட்டு அமெரிக்காவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் வைத்தியம் செய்து கொள்ளப் போகிறார்களே? பிதாஜிக்கு அப்படி முயற்சி செய்யலியா?"

"அவர் தாம் இயற்கை முறை மீறிய வைத்தியத்துக்கே உடன்படவில்லையே மாதாஜி..."

மாதாஜி பெருமூச்செறிகிறாள்.

பிறகு சில நிமிடங்கள் மௌனமாகப் போகிறது. யமுனாவுக்கும் எப்படித் தொடங்குவதென்று புரியவில்லை.

கொய்யா மரக்கிளைகள் அசையும் ஓசை கேட்கிறது.

"புதுல்! அரே, புதுல்..."

சட்டையும் நிஜாரும் கிழிந்து தொங்க, ஒரு சிறுவன் அதுலைப் போன்றவன் தான், ஓடி வருகிறான்.

"அம்ருத் பறிக்கிறாயா? என்ன சத்தம்?"

"இல்லையே மாதாஜி? பந்து அங்கே விழுந்தது..."

"நான் பார்த்தேன்னா காதைப் பிச்சிடுவேன் போங்க!"

"கோமதி! கீதாவை டீ கொண்டு வரச் சொல்லு."

"எனக்கு இப்போது ஒன்றும் வேண்டாம் மாதாஜி!"

"அழகுதான்; உனக்காகவா டீ போடுகிறார்கள்? ரஜனி ராஜ்கிர் போயிருக்கிறான். பையனுக்கு ரசித்துச் சாப்பிட நேரமேது? நாலு நாள் ராஜ்கீரில் சுகமாக ஸ்நானம் பண்ணலாமென்றால், அங்குதான் என்ன கூட்டம்? பகலில் சொல்ல முடியாத கூட்டம். ராத்திரி போகிறார்கள். குண்டத்தில் ஸ்நானம் செய்ய அங்கே போனால் அங்கேயும் இவனைத் தேடி வருகிறார்கள்.

"அண்ணனுக்குப் பணம் கொடுத்து தம்பியைக் கவிழ்க்கச் சொல்வதும், தம்பிக்குப் பணம் கொடுத்து அண்ணனுக்கு மாற்றாக ஆக்குவதும், இப்ப மேலிடத்துக் கட்சிக் காரியமாப் போச்சு. இவன் புத்தி சொல்லப் போக, எல்லோரையும் பகைச்சுக்க வேண்டியதாச்சு. பதவியே வேண்டாம்ன்னான். ஆனால் கிராமத்தில் ஏழை எளிச்செல்லாம் இங்கே வராமல் எங்கே போவார்கள்?"

சரடு கிடைத்து விட்டது.

"மாதாஜி, நான் பார்த்தமட்டில் இங்கே ஏழை எளியவர்கள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். கல்வியும் இல்லை, பெண் மக்கள் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள்..."

இப்படி யமுனா துவங்கியவுடன் மாதாஜியின் முகம் சிவந்து விட்டது.

"இங்கா? இந்த பீஹாரிலா? போன வருஷம் ஐ.ஏ.எஸ். முதல் மூணு பேரில் ஒருத்தி இந்த ஊர்ப் பெண்தான். இங்கே என்ன முன்னேற்றம் இல்லை? முன்பெல்லாம் கிராமவாசிக்கு என்ன தெரியும்? இப்போ எத்தனை டிராக்டர் செலவாணியாகிறது? ரஜனி இருந்தால் உனக்குக் கணக்குச் சொல்வான். அந்தக் காலத்தை விட இப்ப எப்படி முன்னேறி இருக்கு? கிராமமேதான் திரண்டு பட்டணத்துக்கு வந்திருக்கே! முன்னே ஒரு ஆண் அஞ்சு கல்யாணம் பண்ணிக் கொண்டாலும் யாரும் கேட்டதில்லை. இப்போதோ, இரண்டாவது கட்டினால் கூட அரசியல் மேடையில் வந்து கன்னா பின்னான்னு பேசுகிறானுங்க..."

மாதாஜிக்கு மூச்சுவிட அவகாசம் கொடுக்கும் வண்ணம் யமுனா புன்னகையுடன், "இருந்தாலும் வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு எளிய மக்கள் இன்னும் முன்னேற்றம் காணலாமல்லவா?" என்று நிறுத்தினாள்.

"நீ எதிர்க்கட்சிக்காரன் பேசுவது போலல்லவோ பேசுகிறாய்?"

இதற்குள் கோமதி, பலகாரத்தட்டையும் தேநீரையும் எடுத்துக் கொண்டு வருகிறாள். தாழ்வான டீபாயைப் போட்டு அதில் பலகாரத் தட்டை வைக்கிறாள்.

குறுணை பொரித்தாற் போன்ற மேனியுடன் முறமுறப்பான சமோசா போன்ற ஒன்று; ஒரு லாடு; இரண்டு பிஸ்கோத்துகள், புள்ளிகளுடன் விளங்கும் வாழைப்பழம்...

"இதெல்லாம் எதற்கு மாதாஜி? நான் இவ்வளவெல்லாம் சாப்பிடுவதில்லை!"

"அழகுதான்! ரஜனி போல்தான் போலிருக்கிறது நீயும். இந்தக் காலத்துப் பெண்கள் ஃபிகரைக் காப்பாற்றிக் கொள்ள வேணும் என்று சரியாகச் சாப்பிடுவதில்லை. தெம்பும் இல்லை. அதுதானா?..."

வறுத்த முந்திரிப் பருப்பு வேறு ஒரு தட்டு நிறைய வருகிறது.

மாதாஜி அதை எடுத்து வைத்துக் கொள்கிறாள்.

யமுனாவுக்கு அந்த உண்டிகளைப் பார்க்கும் போது, சற்று முன் வந்த புதுலின் நினைவு வருகிறது.

"நல்ல நெய்யில் பொரித்த பண்டம்தான் மகளே, சாப்பிடு. நீ இங்கே அடிக்கடி வந்து கொண்டிரு. உன் உடம்பை எப்படி ஆக்குகிறேன் பார்..."

அவளுக்கு ஆத்திரமாக வருகிறது. கஷ்டப்பட்டு ஆரம்பித்த செய்தி, சரட்டோடு குட்டையில் விழுந்து முழுகிப் போய்விட்டது.

வேண்டா வெறுப்பாகத் தேநீரைக் குடித்துவிட்டுப் படிகளில் இறங்கி வருகிறாள். புற்றரையில் வேகமாக அடிவைத்து வருகையில், வளைந்த பாதையில் ஓரம்வரும் போது திக்கென்று நெஞ்சு குலுங்கினாற் போல் இருக்கிறது.

இந்துநாத்!

ஆம், அவனேதான். சிரித்துக் கொண்டு எதிர் வெயிலுக்கு முகத்தைச் சரித்துக் கொண்டு வருகிறான்.

"ஹலோ சௌக்கியமா?"

"...."

"என்ன, தெரியலியா யமுனா?"

"ஓ, தெரியாம என்ன? நீங்க எங்கே இப்படின்னு யோசிச்சேன்..."

"அதை நான்னா கேட்கணும்? நீ என்னமோ ஒன்றே குலம்னு பாடிண்டு ஏதோ கல்யாணம் பண்ணின்டேன்னு கேள்விப்பட்டேன். இங்கே எப்படி வந்தேன்னு ஆச்சரியப்பட்டு நிக்கறேன் இப்ப..."

"...இப்ப, இந்த ஊரில்தான் இருக்கிறோம். ஊரில் பெரியப்பா சுகமா?"

"அவருக்கு ரொம்ப மனத்தாங்கல்; ஏமாற்றம். உனக்கு என்னைப் பிடிக்கலேன்னாலும் இப்படி காடிப்பானையில் போய் விழுந்திருக்க வேண்டாம். உன்னைப் போல் இருப்பவர்கள் இப்படிச் சரியப் போகச் சமுதாயமே கெட்டுவிட்டது. அதனால்தான் கீழ்சாதி எல்லாம் துள்ளுகிறார்கள். இது கடைசியில் பெரியப்பாவுக்கு மனசு ஆறவேயில்ல..."

"இதெல்லாம் தனி மனிதனின் அபிப்பிராயங்களைப் பொறுத்து..."

"அது சரி... தனி மனித அபிப்பிராயம்னு அவரவர் தலைக்குத் தலை பேசுவதனால்தான் இன்றைக்கு இப்படி இருக்கு. உன்னைப்போல் ஒரு நல்ல குடும்பத்தில் குலத்தில் புத்திசாலியாக உதித்த பெண்ணுக்கு, கீழ்க்குலத்தில் இருந்தாலும் பரவாயில்லைன்னு, அவன் காலில் விழத்தோணறது. அதை மற்றவர்கள் மதிக்கணும்னா முடியுமா? உங்கப்பா அந்த நாளில் செய்த தப்பினால் உங்க பெரியப்பாவின் குடும்பத்தில் சம்பந்தம் கொள்ளவே தடை சொன்னார்களாம். பெரியப்பா சொல்லி வருத்தப்பட்டார். இதுங்க வயசுக் கோளாறில் இப்படிச் செய்யறது சந்ததிக்குன்னா கேடாறதுன்னார்..."

யமுனா அமைதியாக, "நீங்கள் வீட்டில் வந்து பேசலாமே? மாலை ஆறு மணிக்கு அவரும் வீடு வந்து விடுவார்..." என்று முகவரியைக் கொடுக்கிறாள்.

அப்போதைக்கு சங்கடத்திலிருந்து தப்ப இதைச் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தபின், நிம்மதி அடியோடு குலைந்திருப்பதை உணர்ந்து தவிக்கிறாள்.

அத்தியாயம் - 20

துரை சாதாரணமாக மாலை ஆறு மணிக்கு வீடு திரும்பி விடுவான். சில நாட்களில் ஏழு ஏழரை மணியாவதும் உண்டு.

இன்று ஏனோ விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் தத்தம் குடிலுக்குச் சென்றதும் யமுனாவுக்கு அச்சம் கடுமையாகப் பரவுகிறது.

வாயிற் கண்ணாடிக் கதவினூடே வெளியே பனியும் புழுதியும் பரவிய பாதையைப் பார்க்கிறாள்.

வாயிலில் ரிக்ஷா ஒன்று வருகிறது.

குளிர்ந்த வயிற்றில் சொரேலென்ற உணர்வு குழி பறிக்கிறது. மங்கியவொளியில் தட்டுச்சுற்று வேட்டியின் நுனி புழுதியில் புரள, இந்துநாத்...

நா மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது.

அவன் கதவடியில் வந்து தட்டுமுன் அவள் வாயில் விளக்கைப் போட்டுவிட்டுக் கதவைத் திறக்கிறாள். தன் அச்சங்களை விலக்கிக் கொண்டு புன்னகையுடன் வரவேற்கிறாள்.

"வாங்க! நேரமாயிட்டது, நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சேன்."

"அப்படியா? அப்ப என்னை எதிர்நோக்கிட்டிருகேன்னு அர்த்தம்."

"இல்லே, இன்னும் அவங்க ஆஃபீஸிலேந்து வரலே..."

அவன் விஷமமாக அவளை நோக்கிக் கண்களைச் சிமிட்டுகிறான்.

அவள் நாக்கைக் கடித்துக் கொள்கிறாள்.

"இதோ, இப்ப வர நேரந்தான். நீங்க எங்கே இத்தனை தொலைவு?"

"நம்ம தலைவர் ஒரு ஸ்கீமில் இங்கே அனுப்பிச்சார். இவனுக்கு இங்கே ஆள் பலம், பணபலம் இருக்கு. நம்ம பக்கம் இழுத்துப் போடணும்னு முயற்சி. என்னிடம் லெட்டர் கொடுத்தனுப்பிச்சார். இவன் வாய் கூசாம 'டர்ம்ஸ்' கேக்கறான். கல்லிலே நார் உரிக்கும் ஆசாமி. நீ எங்கே அந்தப் பக்கம் போயிருந்தே? என்னமோ பாலிடிக்ஸெல்லாம் விட்டுட்டேன்னு நினைச்சேன். 'பாக்டோர்' வழியா வரே?"

"நான் பாலிடிக்ஸில் எப்போதுமே சேரவில்லையே. இங்கே இந்தக் குழந்தைகளைச் சேர்த்து ஸ்கூல் மாதிரி நடத்துகிறேன். அங்கே ஏதாவது உதவி கிடைக்குமோன்னு போனேன்..."

"கிடைச்சுதா?"

"ஹூம், பேசவே முடியவில்லை."

"பேசாமல் நான் சொல்வதைக் கேட்டிருந்தாயானால் இன்னிக்கு நீ விரலசைத்தால் ஒரு கூட்டமே பின்னால் வரும்படியா முன்னுக்கு வந்திருப்பே. அதான் சொன்னதைக் கேட்க மாட்டேனுட்டியே?"

"டீ போட்டுட்டு வரேன், கொஞ்சம் இருங்கள்."

அவன் முன் நாள்தாளையும், பத்திரிகைகளையும் வைத்து விட்டு அவள் உள்ளே செல்கிறாள்.

மனசு எதையோ பற்றுக்கோலாய்த் தேடுகிறது. அவள் தேநீரைக் கலந்து கிண்ணத்தில் வார்க்கும் போது வாயிற் கதவுத் தாழ் ஓசைப்படுகிறது. விரைந்து வருகிறாள்.

வாயிற் கதவை இந்துநாத் தாழிட்டு விட்டு ஒரு கபடச் சிரிப்புடன் அவள் முன் வருகிறான்.

"கதவை ஏன் தாழிட்டீர்கள்?"

அடுத்த கணம் தேநீர்க் கோப்பை அவன் முகத்தில் பட எகிறுகிறது.

இந்த எதிர்பாராத தாக்குதலை அவன் சமாளிக்கு முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடுகிறாள்.

"சம்பா! சம்பா! அதுல்..."

உடல் நடுங்குகிறது. குரல் பதறுகிறது.

"மாஜி... க்யா மாஜி?"

கீதுதான் ஓடி வருகிறது.

"சாப் இன்னமும் வீடு வரவில்லை. தினுவைக் கூப்பிட்டேன்?"

"தினு இஸ்திரி போடுகிறான். நான் வரட்டுமா?"

ஏழு வயசுச் சிறுமி, கள்ளங்கபடமற்ற மான் போல் குதித்துக் கொண்டு வருகிறாள்.

இருளில் பீடித்துண்டு கனல், வீச்சும் விரைப்புமாய் ஓர் உருவம் எதிரே வருவது தெரிகிறது.

"ராம் ராம் பேட்டி!"

"யார்? பாபாவா?"

பாபா கிழவனா இல்லையா என்பதைக் கண்டுபிடிக்க முடியாது. அவன் முஸ்லீமா இந்துவா என்றும் தெரியாது. இருபத்து மூன்று வருஷங்களுக்கு முன் அவன் கிழக்கு வங்காளத்திலிருந்து வகுப்புக் கலவரத்தில் பெண்டு பிள்ளைகளை எல்லாம் இழந்து சித்தம் கலங்கிய நிலையில் வந்தவன் என்று சொல்கிறார்கள். அவன் பல நாட்கள் ஹுக்கா குடித்துக் கொண்டு தனக்குள் பேசிக் கொண்டிருப்பான். அவை, கடந்து சென்ற வண்ணமயமான நாட்களைப் பற்றிய நினைவுச் சிதிலங்கள் என்று தோன்றும். பல நாட்களுக்கு ஒன்றுமே பேச மாட்டான். அவன் அங்கிருந்த பெரிய வீட்டுத் தோட்டத்தை விட்டு அப்பால் மட்டும் போக மாட்டான். பனிக்கொடுமை கரைய ஆதவன் மெல்ல நகைக்கும் போது முகமலர்ந்து வரவேற்கும் ரோஜாக்களெல்லாம் அவன் குழந்தைகள். அவற்றை யாரேனும் கிள்ளச் சம்மதியான். அவற்றைப் பார்த்துப் பார்த்துத் தனக்குள் மகிழ்ந்திருப்பான்; கைகொட்டிச் சிரிப்பான்.

பெரிய வீட்டில் ஒரு நேரம் சத்து மாவும், ஒரு நேரம் ரொட்டியும் பருப்பும் கொடுப்பார்கள். அவனுக்குச் சம்பளமென்று ஏதும் கிடையாது. கோழிக் கூண்டுக்கு அருகில் இன்னொரு கோழிக்கூண்டு போல் இருக்கும் அறைதான் அவனுடைய அறை. அவன் மேனி அழுக்கை துணி அழுக்கை கங்கையிலும் கரைக்க இயலாது.

"இருட்டில் ஏன் வரே பேட்டீ? பொல்லாத மிருகங்கள் உலவும்... நீ பத்திரமாகப் போ!" என்று அவளுடனே திரும்பும் பாபா அன்று சற்று இளகி இருக்கிறான் போலிருக்கிறது.

"டீக் ஹை பாபா. மிருகங்கள் இருக்கின்றன" என்று அவள் உடனே சொல்லியிருக்க வேண்டாம்.

பீடித் துண்டை விட்டெறிந்து விட்டு "எங்கே பேட்டீ?" என்று ஓடி வருகிறான்.

வாயிற்படியில் நிற்கும் துரை மீது அவன் பாய்ந்து விட்டான்.

"என் மகளை... காலிப்பயலே? உன்னை விட்டேனா பார்? குத்தி இந்தக் கையை இரத்தக் கரையாக்கிக் கொண்டு சாவேன்..."

துரை அலறிக் கொண்டு உள்ளே ஓட, யமுனா கத்த பெரிய வீட்டிலிருந்து எஜமானி வந்து கூச்சலிட, தினு பாபாவை விலக்கி அழைத்துப் போகிறான்.

"என்னங்க? நெஞ்சைப் பிடித்து அமுக்கி விட்டானா...?"

துரை சந்தேகம் கரையாமல் பார்க்கிறான். தேனீர்க் கோப்பை உடைந்து சிதறி இருக்கிறது.

"அதுசரி, என்ன கலாட்டா? இங்கே யார் வந்தது?"

அவள் தயங்கித் தயங்கி இந்துநாத்தைப் பற்றி விவரிக்கிறாள். துரை இவளை நம்பலாமா என்று பார்ப்பதைப் போல் பார்க்கிறான்.

"நீ... எக்ஸ் மினிஸ்டர் வீட்டுக்கா போயிருந்தே?"

"ஆமா..."

"நீ என்னிடம் போறதாகச் சொல்லலையே?"

"சும்மாதான், கல்கத்தாவில் பண்ணனும்னு நினைச்சேன். இங்கே தேவை அதிகமாயிருக்கு. உதவி கேட்கலாம்னு போனேன்."

"என்னிடம் சொன்னால் நானும் வந்திடுவேன்னு பயமா யமுனா?" அவனுடைய கண்கள் அவளை ஊடுறுவுகின்றன.

"இல்லே. நீங்க கூட வருவீங்கன்னு நினைக்கலே..."

"அப்படியில்ல யமுனா, அவங்க சிநேகம் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்."

மாதாஜி கார் வாங்கிக் கொள்வதைப் பற்றிக் கூறுயது நினைவில் முட்டுகிறது.

"நீ இன்னொரு நாள் செல்லும்போது சொல். மாதாஜீக்கு ஒரு நல்ல் பிரசன்ட் வாங்கி வருகிறேன்..."

யமுனா இதற்கு மறுமொழி கூறாமல் அவனை உறுத்துப் பார்க்கிறாள்.

"என்ன யமு?"

"ஒண்ணுமில்லே, நான் இன்னொரு தடவை போவேனான்னு நினைச்சேன். அறியாமைச் சேற்றில் அழுந்திய ஏழைகளை அமுக்கிக் கொண்டு மிஞ்சும் வண்மையை கேவலமான இன்பங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சுரண்டலை நாமும் செய்ய நான் விரும்பவில்லை."

"ஓ..." என்று இழுக்கும் துரை விஷமமாக, "சற்று முன் இங்கே வந்தது சுதீர்குமாரோ?..." என்று கேட்கிறான்.

அவள் நெஞ்சு சில்லிட்டுப் போகிறது.

அத்தியாயம் - 21

கொட்டும் பனிக்குளிர் கரைந்து வசந்தத்தின் எழில் வண்ணங்கள் தெரியாமலே, வேனில் நகரத்தை வறுத்தெடுக்கும் நெருப்பில் வாட்ட வருகிறது. நிறைத்து பெருகிய கங்கைத் தாயும் நகரின் வெம்மையைத் தணிக்க இயலாமல் வெய்துயிர்க்கிறாள். பச்சைகள் சருகாக உலர பசுவினங்கள் மெருகொழிந்து மடி வற்ற அயருகின்றன. செல்வத்தில் புரளுபவரைத் தாங்கி ஊர்திகள் சிம்லா, சிலிகுரி, டார்ஜிலிங், காட்மண்டு என்று பறக்கின்றன.

பனிக் கொடியோனின் கொடுமைக்கு மீண்ட ஏழைகள், ஆண்டுக்கு அடுத்த கண்டமாக வெய்யோனின் கடுமையில் வெந்து கருகுகின்றனர். மூடிய கதவுகளுக்குள் பகற் சிறையும் வெட்ட வெளியில் இரவுமாக இடைக் குடும்பங்கள் வாடாது வாடிப் பொழுதைத் தள்ளும் கோடை. புளிப்புக் காயையும் சர்க்கரையையும் கலந்து வெயிலில் வைத்தால் பாகு கனியாகிவிடும் அனல் வெயில். உப்பிட்டு உலர்த்தும் பண்டம் சுக்காகிவிடும் வறட்சி. இந்த வெயிலில் சுருண்டு விழும் சோர்வைத் தாங்கி ரிக்ஷாக்காரன் பொதி சுமக்கிறான். ஏழைகளுக்கு வெப்பமேது? தட்பமேது? சம்பவின் குழந்தைகள் வழக்கம் போல் சாணம் பொறுக்குகின்றனர்; வரட்டி தட்டுகின்றனர்.

கங்கைத் துறைகளின் அங்காடிகளில் கரும்புச் சாறும் பனிக்கட்டியும் வழிந்தோடுகின்றன. கங்கையின் பரப்பில் சின்னஞ்சிறு படகுகள் பாய் விரித்துக் கொண்டு மிதக்கின்றன.

குளிர் நிலவின் இனிய வெள்ளத்தில், குளிர்பனியின் துண்டங்களைப் போதை பானங்களில் மிதக்க விட்டு அருந்திக் களியாட்டம் அநுபவிக்கும் மாந்தர்களைத் தாங்கும் படகுகள். கங்கை அன்னையல்லவா? தன்னுள் அசுத்தம் செய்பவரையும் பரிந்து காத்து அமுதளிக்கிறாள். அந்தப் படகுகளையும் தன் மேனியில் சுமக்கிறாள்.

ஒட்டி ஒட்டி மணற்கரையில் அகன்று விலகிய கங்கையைப் போல் யமுனாவுக்கு இந்த வாழ்க்கை பழகிப் போகிறது. உலகில் கண் விழிக்கையில் அன்பும் அருளும் வழிந்தோடும் இன்ப விடுதலையாக அவள் இளம் பருவம் புலர்ந்தது. அச்சமும் வன்மையும் அறியாத கபடற்ற பனி மலர்போல் அவளுடைய அறிவு மலர்ந்தது. பின்னர் உலகத்துக் கபடுகளின் வெம்மையில் பதம் பெறும் வாழ்வின் மையத்தில் அவள் இப்போது நிற்கிறாள். இந்தப் பதம் பெறும் காலந்தான் எப்படி நீள்கிறது? இங்கே அருளும் அன்பும் பரிவும் வாழ்வை மணற்கரையாக்கி விட்டு ஒதுங்கி ஒதுங்கிச் செல்கிறது. மணலில் பொரி பொரியும் சூடு! அந்த வெப்பத்தில் அவள் தன்னந்தனியாக முன்னேறுகிறாள். இந்தக் கங்கையையே இடையாக்கி விட்டுப் பிரியும் மறு கரையைத் தொடுவது போல் துரை தனி உலகுக்குப் போய்விட்டான்.

இந்த வேனிலில் மாசத்தில் ஆறு நாட்கள் கூட அவன் வீட்டில் தங்கவில்லை. இமயத்தின் மடியில் அலுவல் என்று சென்று விடுகிறான்.

அங்கே புதிய அணைத்திட்டத்தில் வேலை ஒப்பந்தமாம். இயந்திரத் தளவாடங்கள், இன்னோரன்ன பிற சாமான்களைச் சுமந்து செல்லும் வண்டிகளோடு செல்வதாகச் சொல்கிறான்.

இப்போது அவனுடைய வாழ்க்கையில் எத்தனை மாறுதல்கள்.

புதிய இரும்பு அலமாரியைத் திறந்தால், வகைவகையான விசேசத் துணிகளில் கால் சட்டை, கோட்டுகள், மடிப்புக் கலையாத சீனத்துப் பருத்திச் சட்டைகள். அவை நேபாளத்தில் மலிவாம். அவன் பல் துலக்கும் புருஷிலிருந்து முகப்பொடி, பசை, காலுறை ஈறாக அந்நியப் பொருள்களைத் தவிர வேறு உபயோகிப்பதில்லை. அந்தச் சிறிய இல்லத்தில் அழகு ஆடம்பர சாதனங்கள் மாறி மாறி வருகின்றன; போகின்றன. இரண்டு அன்னங்களின் உருவில் டிரான்சிஸ்டர்; பெரிய சாவி போன்ற சிகரெட் லைட்டர்; மணிமண்டபம் அமைப்பில் இயங்கும் கடிகாரம் - இப்படி எத்தனையோ? அவளை அவன் விருந்துகளுக்கு அழைப்பதில்லை. ஆனால் விருந்தென்று சொல்லி உடை அணிந்து சென்றால் இரவு சிறிது மதிமழுங்கித் தள்ளாடும் நிலையில்தான் வருகிறான். அவளோ அவனை எதிர்க்க முயன்று இயலாமல் போராடுகிறாள். சமையல் அறையை ஒட்டிய அறையில் குழந்தைகளுக்குக் கல்வி பயிற்றுகிறாள். தன் செலவில் மீதி கண்டு பால் வாங்கிக் கொடுக்கிறாள். ஏழைக் குடில்களில் சென்று அறிவுரை நல்குகிறாள்.

வானில் சந்திரன் பவனி வரும் நாட்களில் நிலா முற்றத்தில் இருந்து ஏழைக் குழந்தைகளுக்கு அவள் கதைகள் சொல்லும்போது, அந்தக் கானகச் சூழலில் அம்மாவனின் மேல் உராய்ந்து கொண்டு கதைகள் கேட்ட காலம் நினைவில் முட்டுகிறது. அந்த அம்மாவனுக்கு அவள் ஒரு கடிதம் கூட எழுதவில்லை! எழுதத் தோன்றவில்லை; ஏன்?

வாழ்க்கையைப் பற்றிப் பல வேறு சமயங்களில் அவர் அவளுக்கு இப்படித்தான் வாழவேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறார். 'ஒரு சிகரெட்டைச் சிறுகிட்டியெங்கிலும் தேச்சு மினுக்கிக் கலாவஸ்து வாங்குவதுபோல்...' என்று சொல்லியிருக்கிறார். ஆனாலும்...

நினைவுகள் மோனத் திரையில் சித்திரம் வரையாமலில்லையே? வசந்தம் வரும்போது அந்தக் கானகங்களில் தாம் என்னென்ன வாசனைகள் காற்றிலேறிப் பவனி வரும்! காட்டெலுமிச்சை மலர்ந்து கம்மென்று சுவாசமெல்லாம் நிரம்பும். இருளப் பெண்கள் நிலவில் வட்டமாகக் கூடிக் கும்மி அடிப்பார்கள்.

அந்தக் கானக மூலைக்கு ஓடோடிச் சென்றுவிட வேண்டும் போலிருக்கிறது. தன் வாழ்க்கையின் சிக்கல்களையும் சங்கடங்களையும் தாயிடம் சொல்லிக் கரைய வேண்டும் என்ற மனவெழுச்சி உந்தித் தள்ளுகிறது. 'உயிரே போனாலும் அன்பு வழியே, அருள்வழி. சோதனைகளை மலர் முகத்துடன் ஏற்றுக் கொள்' என்ற அறிவுரைகளைத் தவிர அந்தத் தாய் வேறென்ன சொல்வாள்? எனவே மறு நிமிடமே தேறுகிறாள்.

ஆனால், நிலவில்லாத இரவொன்றில் துரை அருகில் இருக்கும்போது, தன்னந்தனியாய் கானகத்தீவில் இருப்பது போல் அச்சம் உண்டாகிறது. இரவின் அடங்கிய அமைதியில் எங்கோ கேட்கும் ஒலிகள் கூட வலுப்பெற்று அவளுடைய தெளிவில்லாத சிந்தைக்குள் வன்மைக்குரிய ஒலிகளாகத் தோன்றுகின்றது. படிகள் வழியே இறங்கிச் செல்பவள் திடீரென்று இடறிவிட்டாற் போன்றதொரு குலுக்கலுடன் அதிர்ந்து விழித்துக் கொள்கிறாள்.

எந்த முன்னுணர்வின் அறிகுறி இந்த அச்சம், படி இடறல்? கவலைகளிலும் துன்பங்களிலும் மனம் சோரும் போது பற்றுக் கோடு இறைவன் நாமம்தான் என்று சின்னஞ்சிறு பிராயத்தில் எத்தனை முறை கேட்டு நம்பியிருக்கிறாள்? ஆனால் இன்று அருகிலிருக்கும் துணையைச் சென்று பற்றிக் கொள்ளும் வேட்கையே மிகுகிறது.

அப்போது இந்துநாத் ஏளனம் செய்வது போல் ஒரு தோற்றம். "நீ உயர் குடும்பப் பெண் என்று உன்னைக் கருதிக் கொள்கிறாயே வெட்கமில்லை?"

இந்துநாத்தை விட, துரை எந்த வகையில் முன்னேற்றமடைந்தவன். அவளுடைய் லட்சியங்களைக் கொண்டு அரசியல் களத்தின் ஒரு சிறு பகுதியையேனும் தூய்மையாக்கப் போராட வாய்ப்பிருந்திருக்கும். பெரியப்பா பெரியவர், அவரை அப்படி உதறி எறிந்தாற்போல் பேசியிருக்க வேண்டாமோ? லட்சியங்களுக்கும் நடைமுறைகளுக்கும் இடையே எத்தனை வித்தியாசங்கள்.

கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து வானைப் பார்க்கிறாள்.

வானகக் கருமையெல்லாம் உள்ளத்துள் புகுந்து கொண்டாற் போல் சோகம் அழுத்துகிறது.

வாழ்க்கையில் அவள் அறிந்து யாருக்கும் தீங்கு செய்யவில்லையே? பூங்காவாக மலர்ந்தது, ஒரு வருஷக் கோடையில் கருகினாற்போல் எப்படித் தடம் தெரியாமல் போயிற்று?

சுதீர் மேல்நாட்டுக்குப் படிக்கச் செல்லு முன்பு எதிர்காலம் பற்றிய நினைப்பே நாணம் கவிழும் மலர்க் குவியலாக இருந்ததே?

அவள் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது கமலம்மா ஆசிரமத்துக்கு வந்தார். ஒரு கதர்ச் சால்வையைப் போர்த்துக் கொண்டு நெடுநெடுவென்று உயரமாக, பெரிய வைரத்தோடுகள் சுடரிட, குங்குமப் பொட்டுத் துலங்க, கண்முன் நிற்பது போலிருக்கிறது. ஆசிரமத்துக்கு, காரின் டிக்கியிலிருந்து அரிசி மூட்டைகள் இறங்கின. அவளுடைய தாய் விரைந்து வந்து வரவேற்கிறாள்.

அந்தத் தடவை கடுகடுவென்ற முகத்துடன் சுதீர்தான் வண்டியை ஓட்டிக் கொண்டு வந்திருந்தான்.

"அப்ப, என்னிக்கு வரட்டும்?" என்றான் அவளைத் திரும்பிப் பாராமல்.

"இதென்ன இப்படிப் பறக்கிறான்? சுதீருக்கு யார் மேல் கோபம்?" ருக்மிணியின் கேள்வி காதில் விழாதவன் போல அவன் யமுனாவை முறைத்துப் பார்த்துவிட்டு வண்டியில் உட்கார்ந்து திருப்பிக் கொண்டு போனான்.

கமலம்மா சிரித்துக் கொண்டு அவளைப் பார்த்தார்.

"யமுனாவிடம் கோபம் போலிருக்கு; நான் உள்ளே வரமாட்டேன்னான்..." என்றார்.

கமலம்மா தன் மென்மையான கரங்களினால் அவளுக்குப் பின்னல் போடுவார். யமுனா அவருடைய சேலையைத் துவைத்து உலர்த்துவாள். கவிதை படிக்கச் சொல்லிக் கேட்பார். தாகூரின் கனிசேகரித்தலைப் படிக்கச் சொல்லாமலிருக்க மாட்டார். பிரார்த்தனை நேரத்தில் சுருதியோடு சேராத பெருங்குரலில் பாடுவார்.

அந்த முறை அவரை அழைத்துப் போக டிரைவர் தான் வண்டி கொண்டு வந்தான். தந்தையிடம் விடைபெற்றுக் கொள்ள கமலம்மா நின்றார்.

"எனக்கு அவனை அனுப்பவே இஷ்டமில்லே. இங்கே இல்லாத படிப்பா?..." என்றார்.

"அதில்லை கமலம்மா, இந்த வயசில் பலவகையான கருத்துக்களோடு சுதந்திரமாகப் பரிசயப்படுவது நல்லதுதான். போய்விட்டு வரட்டும்" என்றார் அப்பா.

"எனக்கு அவனுக்குக் கல்யாணத்தைப் பண்ணி வைத்து அனுப்பணும்கிறதுதான் ஒரே எண்ணம். அங்கே போய் எப்படியேனும் ஆனால் என்ன செய்வது?... வயசு ஆகலை என்கிறார் அவன் அப்பா. அவனோ கல்யாணம்னாலே சண்டைக்கு வருகிறான்..."

"வயசு என்ன ஆகிறது?"

"இருபத்தொண்ணு; யமுனாவுக்கும் பதினைஞ்சு முடிஞ்சிருக்கா?"

கமலம்மா அரைகுறையாக நிறுத்திக் கொண்டவராக அவளைப் பார்க்கையில் அவள் எங்கோ வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள்.

அதற்குப் பிறகு, அதற்குப் பிறகு...

சுதீர், வேறு சுதீராக அம்மாவுடன் வந்து பேசினான். அவளைப் பார்த்து நெஞ்சைச் சுண்டி இழுக்கும்படி சிரித்தான்; கேலி செய்தான்.

கமலம்மா பிறகு திருமணம் பற்றிப் பேசவேயில்லை.

இப்போது ஏன் இந்த நினைவுகளெல்லாம் வருகின்றன?

கட்டில் விளிம்பில் உட்கார்ந்திருக்கும் அவளுக்குள் உணர்வு மரத்துப் போயிருக்க வேண்டும்.

அவள் உறக்கம் கலைந்து துள்ளினாற் போல் எழுந்து உட்காருகிறாள்.

"யமுனா? என்ன இது?"

"...ஒண்ணுமில்லீங்க...?"

"பின்ன ஏன் அழுதுகிட்டிருக்கே?"

அவள் திருட்டுக் குற்றம் செய்தவளைப் போல் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். தன் மீதே அவளுக்குக் கோபம் வருகிறது.

இருளில் அவளை அவன் உற்றுப் பார்க்கிறான்.

அவளுடைய விழிகளில் ஈரம் பளபளக்காமலில்லை.

"யமுனா? என்ன இது? நான்சென்ஸ், என்னை எதற்காக இப்படி உயிரோடு கொல்றே?"

பக்கத்திலிருக்கும் சிகரெட் பெட்டியைத் தேடுகிறது கை.

அவன் பற்றவைக்க முயலும்போது அவள் ஆத்திரத்துடன் அதைப் பிடுங்கிப் போடுகிறாள்.

"நீங்க ஏன் இப்படி என்னைவிட்டு ஒதுங்கி ஒதுங்கிப் போறீங்க?"

அவன் கை அவளுடைய கைகளுக்குள் இருக்கிறது.

"அது நானா, நீயான்னு நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக்க!"

"நான் என்ன தப்பு செஞ்சேன்னு சொல்லுங்க. நான் அதற்குச் சரியா மாறுகிறேன்..."

"உன்னை, தப்பு செய்ததாகச் சொல்ல நான் யார்? நீ உயர்ந்த இடம்... நான் தாழ்ந்தவன்..."

"இப்படி நீங்கள் பேசினால் எனக்குச் சந்தோஷமா இருக்கும்னு பேசறீங்களா?"

"இத பார் யமுனா, நான் சாதாரண மனுஷன். ஆபீளிலிருந்து வீட்டுக்கு வரும்போது மனைவி சந்தோஷமாகச் சிரிச்சுப் பேசணும்னு நினைப்பேன். உலகத்தில் சாதாரண மனுஷனுக்குப் போல் சந்தோஷம் கிடைச்சாப் போதும்னு நினைக்கிறவன் நான். நீயோ, உனக்கும் எனக்கும் ரொம்பத் தொலைவுன்னு நிதமும் சொல்லாம சொல்லிட்டிருக்கே. அது என் துரதிர்ஷ்டம்."

"நீங்க என்னைப் புரிஞ்சுக்காம பேசறீங்க. சில சமயம் படி இடறிப் போறாப்போல குழப்பமாயிருக்கு..."

அவன் அவளுடைய சொற்களின் ஆழத்தைப் புரிந்து கொள்பவனாகத் தெரியவில்லை. எட்டி விழுந்த சிகரெட் பெட்டியை எடுத்து ஒன்றைப் பற்ற வைத்துக் கொள்கிறான்.

"இதெல்லாம் நீங்கள் புதிசாக ஏன் பழக்கம் பண்ணிக் கொள்ளணும்? நீங்க அடியோடு மாறிப் போயிருக்கிறீங்க..."

"ஒரு மனிதன் என்னிக்கோ கூழ் குடிச்சான்... இப்ப இன்னிக்கு அப்படியே இருக்கணும்னு நீ சொல்றே. நீ எனக்குப் பிடிக்காமே எத்தனையோ செய்யறே. நான் தடுக்கிறேனா? இந்த அற்ப சுதந்திரங்களில் நீயும் தலையிட வேண்டாம்."

"உங்கள் உடல்நலம், மனநலத்தை நினைச்சு சொல்றேன். நாம் எளிமையாக, தூய்மையாக வாழ்ந்து எவ்வளவோ நல்ல பலன்களைக் காணப் போவதாகக் கோட்டை கட்டினேன்..."

"என்ன எளிமை? தூய்மை? என் தொழில் முன்னேற்றத்துக்குத் தகுந்தபடி நடக்க வேண்டியிருக்கு. உன்னை ஒத்துழைன்னு வற்புறுத்தினேனா? என்னைப் போலிருப்பவன் வீட்டிலேயே மாசம் ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யறான். நான் என் உறுத்தலை வெளிக்காட்டிப் பயனில்லைன்னு ஒதுங்கிடறேன்..."

"நீங்கள் நண்பர்களை வீட்டுக்கழைத்து விருந்து கொடுப்பதை நான் வேண்டாம் என்று சொல்வேனா? அதற்காக ஒரு அநியாயம் நடக்க நாமே ஒத்துழைப்பதா? ஒரு போதைச் சரக்கு இல்லாமல் எதுவும் ஆகாதுன்னு ஒரு நிலையையே நாமே ஒப்புக் கொள்வதா? பலவீனத்துக்கு, தெரிஞ்சு நாமே நியாயம் சொல்லிக் கொள்வதை விட, டிரிங்க்ஸ் இல்லாம விருந்து கொடுப்போம்னு சொல்ல உங்களுக்கு ஏன் மனசு வரலே?..."

"அப்படிப் போனால் பார்ட்டி எதற்குக் கொடுக்கணும்? அதுவே ஃபிராடுதான்..."

"நானொண்ணும் அப்படிச் சொல்லலியே?"

"உன் காந்தித்தனம் குறுக்கே வரப்ப, அதெல்லாம் விரோதந்தான். மனுஷன் வாய்க்கு ருசியாய்ச் சாப்பிடக் கூடாது! கண்ணுக்குக் குளிர்ச்சியாக உடுத்தக் கூடாது! எல்லாரும் பஞ்சம் பனாதைகளாகக் கப்பறை ஏந்தவேணும். மகாத்மா, மகாத்மாவாக அப்பத்தான் இருக்க முடியும்னு உன் காந்தி சொல்லியிருக்காரு..."

"நீங்களா இப்படிப் பேசறீங்க? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க. அந்தமாதிரி ஒருத்தர் இல்லேன்னா... நீங்க நீங்க..." நச்சுச்சொல் தெறித்துவிடாமல் அவள் சட்டென்று விழுங்கிக் கொள்கிறாள். ஆனால் துரைக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது.

"ஏன் முழுங்கறே? நீங்க உசந்த சாதி மனப்பான்மையைப் போக்காதவரை ஒண்ணையும் பெரட்டிடலே; ஆமாம், தெரிஞ்சுக்க!"

அவள் விக்கித்து நிற்கிறாள்.

படி இடறிவிட்டது மெய்தான்.

அத்தியாயம் - 22

விடியற்காலையின் குளிர்ந்த அணைப்பில் அயர்ந்து உறங்குபவர்களை எல்லாம் தெருவில் ஒலிக்கும் அந்தக் குரல் தட்டி எழுப்பி விடுகிறது. மாடி முகப்புகளிலும், வாயில்களிலும், இரவெல்லாம் வாட்டி எடுக்கும் வெம்மையில் தூங்காது தவித்தவர்கள், "சித்தேஷ்வர் நிவாஸ் - துரைராஜ்" என்ற குரலுக்கு விழித்து எரிந்து விழுகின்றனர்.

"இங்கில்லே - கிழக்கே தள்ளி விசாரி, சரியாக விலாசம் தெரியாமல் லொட் லொட்டுன்னு இடிச்சுப் பிராணனை வாங்கறான்?"

நடுத்தெருவில் முரட்டுச் செருப்பொலி முழுத்தெருவையும் எழுப்பிவிடப் போதுமானதாக இருக்கிறது. மொட்டை மாடியில் படுத்திருக்கும் யமுனாவின் செவிகளை அந்தக் குரல் எட்டுமுன் அக்கம்பக்கம் முழுவதும் எழுந்தாயிற்று.

பாபாதான் கீழே கதவைத் தடதடவென்று தட்டுகிறான்.

"யமு...!"

"அம்மாவன்..."

பூட்டு விடுபட்டாற்போல் மகிழ்ச்சி ஆவேசமாகப் பெருகுகிறது. இரண்டு படிகளை ஒரெட்டாய்க் கடக்கும் அவசரம். கதவைத் திறக்குமுன் குரல் உற்சாகமாய்க் கரை புரளுகிறது.

"கடிதாசி போடாமல் திடும்னு வந்துட்டீங்களே, அம்மாவா?"

"உன்னைத் தேடிக் கண்டுபிடிக்கு முன்னே இந்த இரண்டு தெருவைத்தான் எழுப்பிச் சண்டைக்கிழுக்க முடிந்தது..."

"அட்ரஸ் சரியாகத் தெரியலியா? ஸ்ரீகிருஷ்ண நகரில் நம் வீட்டுக்காரர் பழைய போலீஸ்துரை ஸின்னா வீடுன்னு பேர் சொன்னாப் போதுமே? ஸ்டேஷனிலிருந்தா நடந்து வரீங்க?"

"ஆமாம். விடியற்காலையில் டாடா நகர்லேருந்து ஒரு வண்டியில் வந்து, ஈயாள் நடந்து கூட்டிப்போறேன்னு சொல்லி, சரின்னேன். இந்தப் பேட்டையையே சுத்தி ரெண்டு தெருவை எழுப்பி நான் மோளைத் தேடி வந்ததைத் தம்பட்டம் அடிச்சாச்சு..."

பெட்டியுடன் கூட்டி வந்த ஆளுக்குக் கூலியைக் கொடுத்து அவர் அனுப்புகிறார்.

"நேத்துத்தான் நான் நினைச்சேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது..."

பதினைந்து வயசு பின்னுக்குப் போய்விட்டாற்போல் அவள் குதித்துக் கொண்டு மாடிக்குப் போகிறாள்.

"யார் வந்திருக்காங்கன்னு பாருங்க...!"

"அதுக்குள்ள அவரை ஏன் எழுப்புறே? சும்மா இரு மோளே!"

துரை எழுந்திருக்குமுன் சிகரெட் பெட்டியை எடுத்து எங்கோ ஒளித்துக் கொண்டு ஓடுகிறாள்.

துரை கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்குமுன் ஜோசஃப் மாடியேறி வந்துவிடுகிறார்.

"எந்தா! திருவள்ளுவர் ஸாரே! வாழ்க்கை எப்படி இருக்கு?"

துரை தூக்கக் கலக்கம் மாறாமல் புன்னகை செய்கிறான்.

"யமுனா நீங்க வர்றதாச் சொல்லலியே? நாங்க கல்கத்தாவை விட்டு வர அன்னிக்கு ஸ்டேஷனில் திடீர்னு சுதீர் வந்தார். உங்களைப் பார்த்ததாகச் சொன்னார்..."

"ஆமாம் என்னை எங்கோ ஸ்டேஷனில் பார்த்தான். யமுனா எப்படி இருக்கிறாள்னு விசாரிச்சான். சொன்னேன்... ஹும், எப்படி இருக்கு தொழிலெல்லாம்?"

"தொழிலா? அதை ஏன் கேட்கிறீங்க? ஊரைக் கொளுத்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிட்டு இருக்கிறாங்களே? நேத்து எங்க ஆபீஸ் மானேஜரை கேரோ செய்திட்டாங்க. இன்னிக்கு விடிஞ்சு நான் ஆபீசுக்குப் போகணும். சாயங்காலம் எப்படி வருவேன்னு எனக்கே தெரியாது... இங்கே பிஹாரிகளுக்குச் சூதுவாதுன்னா என்னென்னே தெரியாது. இந்த அரசியல்வாதிகள் பண்ற அக்கிரமத்தைச் சொல்லுங்க! அது கிடக்கட்டும், நம்ம பக்கம் எப்படி இருக்கு? அம்மா சுகமா? ஐயா இப்ப எப்படி இருக்காரு?"

"இருக்கு. நம்ம ஸ்கூலில் ட்ரெயினிங் எடுக்க, அடுத்த வருஷம் ரிடையராகப் போகும் இந்திப் பண்டிதர்களெல்லாம் வந்தார்கள்."

"அம்மாவா, நீங்க இப்ப நல்ல தமிழ் பேசுறீங்க?"

"...ஓ... அப்படியா? நாவுக்கரசுன்னு ஒரு ஆள் வந்திருந்தார். அவர் நான் பேசும் போதெல்லாம் தப்பு தப்புன்னு குட்டிட்டே இருப்பார். பிரேமா கல்யாணம் கழிச்சு ஆசிரமத்தை விட்டுப் போயி. முருகி டிரெயினிங் எடுக்கிறாள்."

"முருகியா...?"

"அதே, மரியண்ணனில்லை? ஒயர்மென் பரிட்சை பாஸாயி ஊட்டியில் வேலைக்குப் போயிருக்கிறான்?"

"கீழக்காட்டு மரியண்ணனா அம்மாவா?"

"ஆமாம். அப்புறம் ஒத்தக்கொம்பு ஆனயில்ல? அதைப் போலீஸ் வந்து வெடிவச்சுக் கொன்னு."

"நம் ஆசிரமத்தின் பக்கமா?"

"முள்ளியாற்றின் பிறகே அஞ்சு திவசம் போலீஸ் கூடாரமடிச்சிருந்தது...!" என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்து ஒரு பெரிய பாலிதீன் பையை எடுக்கிறார்.

நேந்திரங்காய் வறுவல்...

"இது கடையில் வாங்கினதல்ல மகளே! நம் மரம் போட்ட தாரில் விளைஞ்சு அம்மை வறுத்து தந்தது."

"ஓ, உங்கள் குடிசையின் பக்கம் வச்ச வாழைக்கன்றா அம்மாவா?"

"ஆமாம் மகளே... நிறையக் கன்னுண்டாயி; போன வருஷம் நல்ல மழையல்ல?..."

அதுல் பாலை வாங்கி வந்ததும் யமுனா தேநீர் போட்டுக் கொண்டு வருகிறாள்.

"இன்னிக்குச் சாயங்காலம் நேரமாகுமா வீடு வர?"

"என் கையில் இல்லை அது. நான் வரணும்னு எதிர் பார்த்திருக்காம இங்க வேலையைப் பாருங்க. வெளியில போவதானால் சாவியைக் கொடுத்துவிட்டுப் போங்க."

ஜோசஃப் கங்கைக்குப் போய் நீராடித் திரும்பி வருமுன் துரை அலுவலகம் போய்விட்டான்.

"பிப்ரவரி மார்ச்சில் வந்திருக்கக் கூடாதா அம்மாவா? இந்த வெய்யிலில் வந்தீர்களே?"

"இப்போது லீவு யமுனா! நான் நாளயே முஸபூர்பர் போகிறேன். சர்வோதய காம்ப்..."

"ஓ! அதற்குத்தான் வந்தீங்களா?"

யமுனா அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். விழிகளில் ஏக்கம் நிழலாடுகிறது.

"எனக்கும் சர்வோதயக் காம்புக்கு வரணும்னு ஆசையா இருக்கு அம்மாவா?"

"மோளே, நீ இளைச்சு மெலிஞ்சு போயி. அம்மைக்கு என்ன சமாசாரம் சொல்லணும்?"

யமுனா வெற்றிடத்தைப் பார்த்தாற்போல் நிலைக்கிறாள். மெல்லிய நெடுமூச்சு இழைக்கிறது.

"அம்மாவா? காட்டுக்குள் இன்னமும் பாசறை இருக்கிறதோ? கேறனும் மாரனும் வருகிறார்களோ, நோட்டீசு வீசிப் போக?"

"கேறனை யாரோ குத்திக் கொன்னு... அவ்விடமெல்லாம் போலீசு கண்காணிப்புண்டு..."

இதைச் சாதாரணமாகச் சொல்வது போல் சொல்கிறார்.

யமுனா வேதனையுடன் "இனி போலீசைக் குத்திக் கொல்ல வருவார்கள்" என்று முணமுணக்கிறாள்.

"மோளே, கல்கத்தாவில் சுதீரைப் பார்த்தாயோ?"

"இல்லை, நான் எதற்குப் பார்க்கணும் அம்மாவா? ஒரு துரோகியின் முகத்தில் விழிக்கக்கூட எனக்கு இஷ்டமில்லை."

"அது தப்பு மகளே, வெறுப்பில் அன்பும் அஹிம்சையும் வளராது. நீ ஒரு போதும் யார் மீதும் வெறுப்புக்கோ பகைக்கோ இடம் கொடுக்காமலிருக்கப் பழகிக் கொள்ள வேணும். துரை பகலுணவுக்கு வருவதில்லையா?"

"ஊஹும். மாசம் இருபது நாள் ஊரில் இருப்பதுமில்லை."

"பகலெல்லாம் உனக்கு ஜோலி?"

"ஒண்ணும் சுகமில்லே. சர்க்கா சங்கத்தில் யாரும், வருவதில்லை. மாந்தோப்புக் குடிசைப் பக்கம் போய் குடிக்கக் கூடாதென்று சொல்வேன். குளிர் தாங்க முடியாமலிருக்கும் போது பங்களாவெல்லாம் ஏறி இறங்கிக் கம்பளி துணிமணி சேர்த்துத் தச்சு ஒட்டி இல்லாதவர்களுக்குக் கொடுத்தேன். இதற்காக நான் இந்த ஊர்ப் பெரிய மனிதர்களிடம் உதவி கேட்கப் போனதைப் பற்றிப் பிறகு சொல்கிறேன். அக்கம் பக்கம் அலையும் குழந்தைகளுக்கு நல்ல வழக்கங்களும் படிப்பறிவும் சொல்லிக் கொடுக்கிறேன். அதற்குள் இங்கிருப்பவர்கள், தோஸாதும் குர்மியும் பக்கத்தில் தொட்டுக் கொள்கிறாள்னு, வம்பு பேசுகிறார்கள். ஒரு ஒழுங்காக எதுவும் செய்ய முடியவில்லை, அம்மாவா..."

ஜோசஃபின் நோக்கு முன்னறை அலங்காரங்களைச் சுற்றி அலைகிறது. அன்னப்பட்சிகள் போன்ற அலங்கார பொம்மையை எடுத்துப் பார்க்கிறார். இடையில் சிறு கடிகாரம்.

ஜப்பானில் செய்தது.

நடுமேஜையில் ஒரு பளிங்கு போன்ற சாம்பல் கிண்ணம்.

உட்கார்ந்து படிக்கும் வகையில் பெரிய அலங்கார விளக்கு. அவர் அதை எல்லாம் பார்க்கும் போது யமுனா உள்ளே வேலையாக இருப்பதைப் போல் பரபரக்கிறாள்.

"மாஜி!..." என்று அழைத்துக் கொண்டு வண்ணாத்தி வருகிறாள். இஸ்திரி போட்ட துரையின் உடுப்புகளை அடுக்காக வைக்கிறாள். சைனா என்று முத்திரை தெரியும்படி மடித்து வைத்திருக்கிறாள்.

"யமுனா..."

அவள் சட்டென்று வந்து துணி அடுக்கை உள்ளே கொண்டுபோய் அலமாரியைத் திறந்து வைக்கிறாள். அலமாரியைத் திறக்கையில் குபீரென்று மணங்கள் கமழ்கின்றன. மடிப்பு மடிப்பாகக் கழுத்தில் கட்டிக் கொள்ளும் 'டை'கள் தொங்குகின்றன.

ஏறும் வெயிலின் கடுமையைச் சமாளிப்பது போல் விசிறியைப் போட்டுவிட்டுப் புன்னகை பூக்கிறாள்.

"என்ன சமையல் பண்ணலாம் அம்மாவா?"

"துரை வருவாரா, சாப்பிட? ஓட்டலா?"

"வேறு என்ன செய்யலாம் சொல்லுங்க?"

"நீ... நீ சந்தோஷமாக இருக்கிறாயா மகளே?"

"ஏன், என்னைப் பார்த்தால் எப்படி இருக்கு?"

அவள் சிரிக்க முயன்றாலும் தொலைவில் கார்மேகம் குமுறுவது போலிருக்கிறது.

கிழங்கை நறுக்கி வேக வைத்து விட்டு மாவைப் பிசையத் தொடங்குகிறாள். சமையலறையில் இரண்டொரு பீங்கான் பாண்டங்கள் இருக்கின்றன. மேடையில் வெண்ணெய்க் கல் பாவி துப்புரவாக இருக்கின்றன. கை துடைத்துக் கொள்ள ஒரு பழைய கந்தலை வெண்மையாக மாட்டிக் கொண்டிருக்கிறாள்.

"இரண்டு பேருக்கு இவ்வளவு மா பிசைகிறாயே?"

"சாயங்காலம் நாலைந்து குழந்தைகள் வருவார்கள். பூரி எல்லாம் அவர்களுக்கு யார் செய்து கொடுப்பார்கள்? அம்மாவா, இங்கே 'ராம்தானா' என்று ஒரு தானியம் இருக்கிறது. நம்மூர் கீரை விதையைப் போல் அளவில் பெரிதாக இருக்கிறது. அதை லட்டு செய்கிறார்கள். நாம் கீரைப் பொரி உருண்டை செய்வது போல் சம்பா எனக்குச் செய்து கொண்டு வந்தாள்..."

"யார் சம்பா?"

"இங்கே இருக்கிறாள். புருஷன் எங்கோ கல்கத்தா சணல் ஆலையில் பதினைந்து வருஷமாக வேலை செய்து ரூபாய் அனுப்புகிறான். இவள் இரண்டாவது பெண் சாதி. ஏழு குழந்தைகள்..."

"அந்தக் குழந்தைகள் தாம் இங்கு வருவார்களா?"

"அதில் மூன்று பேர் வருவார்கள்..."

"துரை இதற்கெல்லாம்..."

அவர் நீட்டுமுன் உண்மை பட்டென்று வெடித்து விடக் கூடாதென்று அவள் பேச்சை மாற்றிச் சிலம்பம் ஆடுகிறாள்.

"சுதீரை நீங்கள் பார்த்தீங்களா அம்மாவா?"

"இப்பவா? இந்தப் பக்கம் இருக்கிறான்னு கேள்வி. எனக்குக் கூட அவனைப் பார்க்கவேணும். ஊட்டியிலிருக்கும் அவர்கள் பங்களா பூட்டிக் கிடக்கிறது. அதை ஒருவர் விலைக்குக் கேட்டார்."

"நான் முன்னெல்லாம் வாழ்க்கைக்கு வசதியில்லாதவர்கள் தான் நாசத்தை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கட்சியில் சேர்வார்கள்னு நினைச்சிட்டிருந்தேன், அது தவறு. வசதியுள்ள எதற்கும் சுதந்திரம் உள்ள குடும்பங்களில் இளமை கட்டவிழ்ந்து நாசத்தில் ஒன்றிக் கொள்ள, ஒரு நியாயம் தேடிக் கொள்ள இந்தக் கட்சி வாய்ப்பு அளிக்கிறது. ஒன்றுக்குமே வசதி இல்லாத சூதுவாதறியாத மலைவாசிகளிடமும், இயற்கையின் குழந்தைகளிடமும் நாசவன்மையைத் தூண்டி விட்டு இவர்கள் கட்சித் தலைவியாக ஆடுகிறார்கள்..."

அம்மாவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறார்.

"ஒரு தரம் எங்க காலேஜில் சுதீர் பேச வந்தார்... அப்ப கொஞ்சம் பெண்களெல்லாம் அவர் வந்து காலேஜில் பேசணும்னு தலைவியிடம் சொல்லித்தான் ஏற்பாடு செய்தார்கள். நமக்கு மாறுபட்ட கருத்துக்களோடு மோதும் சுதந்திரம் வேண்டும் என்பதுதான் அவர் நோக்கமும். அன்றைக்கு சுதீர் பேசிய விஷயம் எனக்கு நல்லா நினைவிருக்கு. சமுதாய அமைப்பில் பெண்கள் பங்கு... என்ற விஷயம்.

"பேசி முடிச்ச பிறகு ஒரு கூட்டம் ஆட்டோகிராப் வாங்கப் போச்சு. அப்ப, சுதான்னு ஒருத்தி கேட்டாள்.

"'நம் இந்திய ஆணின் மனப்பான்மை தன் மனைவி தனக்கு அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதுதான். இதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்!' என்றாள்.

"அவர் அப்போது என்னையே பார்த்துக் கொண்டு 'நான் நீங்கள் கட்டாயப்படுத்துவதற்காக ஒப்புக் கொள்ள முடியாது' என்று சிரித்தார். எனக்கு ஒரே ஆத்திரம். 'அப்ப கட்டாயப்படுத்தாமலிருந்தால் ஒத்துக் கொள்வீர்களாக்கும்!' என்றேன்.

"'அப்படியும் இல்லை. நான் இப்படிச் சொல்லட்டுமா? நம் சராசரி பெண்ணின் மனப்பான்மை ஒரு ஆணின் ஆணையில் அடங்கிக் கிடப்பதையே மோட்சம் என்று கருதிக் கொண்டு ஆணின் மனப்பான்மை என்று குற்றத்தைப் போடுகிறது?' என்று சொன்னார்.

"அப்போது எனக்கு அவர் கூற்றை யோசிக்கவோ ஆராயவோ நிதானமில்லை. அவரை மறுத்துப் பேசும் ஆத்திரந்தான் இருந்தது. 'அப்படி ஒன்றும் கிடையாது! ஒரு பெண்ணுக்கு வாழ்க்கையில் எக்காலத்தும் நீங்கள் சமத்துவம் கொடுக்கவில்லை. பெண்ணுக்குச் சுதந்திரம் கிடையாது என்ற கோட்பாட்டை வகுத்தது உங்கவர்க்கந்தான்!' என்று கத்தினேன்.

"அவர் சிரித்துக் கொண்டே, 'ஒப்புக் கொள்கிறேன் அம்மணி! எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முன்வந்தால் இல்லை என்று நிரூபித்துக் காட்டுகிறேன்' என்றார். அன்று மற்றவர்களெல்லாம் சிரிச்சுக் கைகொட்டி உண்டு இல்லைன்னு தீர்த்தார்கள்... இப்ப..."

சடக்கென்று நாவைக் கடித்துக் கொண்டாற்போல் தலைகுனிய நிறுத்திக் கொள்கிறாள். புழுக்கமான அறையில் ஏதோ ஒரு சிறிய துவாரம் வழியாகப் பூங்காற்று வந்து, பட்டென்று அது மூடிக் கொண்டாற்போல் இருக்கிறது.

"யமு.. அப்படிச் சந்தர்ப்பம் கொடுக்காமல் இருந்ததற்காக, இப்ப... கிலேசப்படுகிறாயாம்மா? இதை முன்பே நீ ஏனம்மா என்னிடம் சொல்லியிருக்கவில்லை."

"இல்லை அம்மாவா. ஒரு ஆணோ பெண்ணோ சமுதாயக் கட்டுக்கோப்பைத் தனியாயிருந்து காப்பாற்ற முடியாது என்று தன் பலவீனத்தைப் புரிந்து கொண்டு திருமணம் என்ற புனிதமான ஒப்பந்தத்துள் ஒன்றுபடுகிறார்கள் என்று தான் நான் எண்ணியிருந்தேன். அப்படி ஒரு வாழ்க்கை அமைப்பில் நான் பங்கு கொள்ளப் போகும் ஒருவர், நாசத்தையும் சந்தேகத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கட்சியில் தன் பலவீனங்களுக்கு வடிகாலாக அங்கம் வகிப்பவராக இருக்கையில் அப்படிப்பட்ட ஒருவருடன் என்னைப் பிணைத்துக் கொள்ளத் துணியவில்லை. நான் அவரிடம் மனைவி என்ற ஸ்தானத்தின் மதிப்பை என்னால் பெற முடியும் என்றும் நான் கருதவில்லை. ஆனால்... இப்போது... நான் அப்படிக் கருதியது கூடச் சுயநலம் என்று நினைக்கிறேன். எனக்கு உள்ளூற அமைதியான வாழ்க்கை; அவரிடம் கிடைக்காது, என்ற அச்சம் இருந்திருக்கிறது. அம்மா, ஒவ்வொரு வருஷமும் பெண்கள் விடைபெற்றுப் பள்ளியை விட்டுப் போகும்போது சொல்வாள், 'என்னிடம் இந்தப் பள்ளியிலிருந்து விடைபெற்றுப் போகும் நீங்கள் எல்லோரும் இதயங்களில் அன்பும் அஹிம்சையுமாகிய நம்பிக்கைப் பொறியை ஏந்திச் செல்கிறீர்கள்; இதை நீங்கள் செல்லுமிடங்களெல்லாம் பாதுகாத்து, இதனின்று கிடைக்கும் ஒளியால் உலகை இருள்படராமல் வைக்க வேண்டும்' என்பாள். இந்தச் சொற்களை எத்தனை முறைகளோ கேட்டிருந்தும் எனக்கு நம்பிக்கை விழவில்லையே!..."

"அதற்குக் காரணம் நீ கண்விழித்த பிறகு உலகம் நம்பிக்கையை இழக்கத் தொடங்கி விட்டதுதான். ஒரு மனிதனை அவருடைய உயர்ந்த ஒழுக்கம் கொண்டு, தன்னலமற்ற தியாகம் ஆகியவற்றுக்காக மகாத்மா என்று அந்தக் காலத்து மக்களால் மதித்துப் போற்ற முடிந்தது. இப்போதோ, விளம்பரங்களினாலேயே ஒரு மனிதன் மகாத்மாவாக முடிகிறது. மறைவு நாள் அஞ்சலி என்று அரசியல் தலைவர்களுக்கு இன்றைய கவிஞர்கள் என்று சொல்லப்படுபவர்கள் போலிக் குரலில் அழுகிறார்களே எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது அது! இப்போது தலைவனாகச் சொல்பவனிடம் மக்களால் நம்பிக்கை வைக்க முடியவில்லை; அதே சமயத்தில் தலைவன் வேண்டியும் இருக்கிறது! எல்லாம் போலியாக இருக்கிறது. தலைவன் காந்திவிழாக் கொண்டாடிவிட்டு, காக்டெய்ல் பார்ட்டியில் போய் மூழ்கிக் களிக்கிறான். காந்திவிழா கொண்டாட, முன்பே விளம்பரம் வேண்டி பத்திரிகைக்காரர்களுக்கு அழைப்பு! விருந்து! இவ்வளவு மோசமான பதர்களாக இந்நாட்டில் அவர் விளைவித்த நன்னெறிகள் விளைந்துவிடும் என்று நான் நம்பியிருக்கவில்லை யமு!"

"மதுசாரம் எப்படிக் கரை புரண்டு ஓடுகிறதென்கிறீர்கள் அம்மாவா! ஊட்டமில்லாமல் உழைத்துச் சோரும் ஏழை குடிப்பது, கொஞ்சம். வியாபார நிறுவனங்கள் லஞ்சம், சோரம், நாணயக் குறைவு இவற்றையே முதலாக வைத்துக் கொண்டு இயங்குகின்றன. தீமைகளை எதிர்ப்பதாகச் சொல்லிக் கொள்ளும் சாதாரண மனிதனும் இந்த வெள்ளத்தில் முழுகித்தான் போகிறான். ஒரு இடைநிலைக் குடும்பக்காரன் அடிப்படைத் தேவைக்கு மேல் கொஞ்சம் அதிக வருமானம் இருந்தால் உடனே மேல்வட்டத்துக்குத் தாவி விடுகிறான். புலால், மது, அந்நியத்துணி, ஆடம்பர விருந்துபசாரங்கள், பெண்டிர் பொது வாழ்வில் பண்பிழத்தல் - எல்லாம் உயர்வட்டத்து விலங்கு வாழ்க்கையை மூடியிருக்கும் ஆடம்பரப் போர்வைகள்! இதனாலெல்லாம் வாய்ப்புக் கிடைக்காமல் கொதிப்புற்ற இளைஞர் சமுதாயம் எதிர்காலத்தில் நம்பிக்கையற்று நிகழ்காலத்தை அழிக்கிறார்கள். நான் ஒரு தூசு போன்றும், என்னையே வெள்ளம் முழுங்கிவிடும் என்றுங்கூட அச்சம் மேலிடுகிறது..."

"நான் புரிந்து கொண்டேன், யமு, புரிந்து கொண்டேன். நாசப் புரட்சியில் நம்பிக்கை வைத்த கட்சியும் ஜனநாயக முறையில் ஆட்சிப் பொறுப்பைப் பற்றலாம் என்று சொன்ன நமக்கு, அவர்கள் சவால் விடுத்திருக்கிறார்கள். இப்போது இதற்குள்ளிருந்தே இதைத் தகர்ப்பதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். உள்ளத்தில் சோரம் போவதையே எண்ணிக் கொண்டு திருமணப் போர்வைக்குள் புகுவதுபோல - மனசுக்குள் சுகபோகங்களையே கருதிக் கொண்டு துறவாடை மேற்கொள்வது போல் - மக்களுக்குத் தொண்டன் என்று சொல்லிக் கொண்டு பதவியைக் கைப்பற்றிக் கொள்வது போல..."

அவர்கள் பேசிக் கொண்டிருக்கையிலேயே அதுல், நிதா மற்றும் எல்லோரும் வந்து விடுகின்றனர்.

அவர்கள் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கும் போதே, ஜோசஃப் பயணத்துக்குச் சித்தமாகி விடுகிறார்.

மாலை நேர ஸ்டீமரில் கங்கையைக் கடப்பதாகச் சொல்லிப் பையை எடுத்துக் கொண்டு செல்கிறார்.

அவரை வழியனுப்பிவிட்டு யமுனா திரும்புகையில், துரையை அடிக்கடி பார்க்க வரும் ஒரு பருமனான சீக்கியன் வருகிறான்.

"மிஸ்டர் துரை...?"

"ஆபீஸிலிருந்து இன்னும் வரவில்லையே!..."

"இதைப் பத்திரமாக வைத்து விடுங்கள்..."

கனமான பெட்டி ஒன்றை ரிக்ஷாக்காரன் கொண்டு வந்து உள்ளே வைக்கிறான்.

அவர்கள் சென்ற பின், மெல்லிய ஓட்டுப் பலகையினால் ஆணி அடிக்கப் பெற்ற அந்தப் பெட்டியை அவள் பார்க்கிறாள். கண்ணாடிச் சாமான்கள் போல் ஏதேனும் இருக்குமோ? ஏனோ அவளுக்கு அதைத் திறந்து பார்க்க வேண்டுமென்ற குறுகுறுப்பு மேலிடுகிறது.

வாயிற்கதவைத் தாளிட்டு விட்டு அந்த ஆணிகளை மூடியை விட்டு நெம்பி எழுப்புகிறாள். மூடியைத் திறந்ததும் தேள் கொட்டிய மாதிரி இருக்கிறது. விலையுயர்ந்த ஆபரணங்களின் வைப்பிடம் போல் பஞ்சு மெத்தை அறைகளுக்குள் பட்டை கண்ணாடிக் குப்பிகள் திராட்சைக் குலை போன்றதொரு குப்பியில் அதன் ரசம் கண்களைப் பறிக்க மின்னுகிறது.

அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மனக் கண்ணில் ஒரு தீக்குழி தோன்றுகிறது - மாபெரும் வேள்விக்கான தீ!

அதில் வளைக்கரங்களும், மென்கரங்களும், பட்டுப் பட்டாடைகளையும் மின்னும் அங்கிகளையும் பளபளத்து நழுவும் மேலாடைகளையும், மஸ்லீன் துணிகளையும் விசி எரிகின்றனர். தீ எல்லாவற்றையும் உண்டு தன் செந்நிற நாக்குகளைக் கொழுந்தாகச் சுழற்றிக் கொண்டு எரிகிறது. அந்தப் பெரு வேள்வியில் சுற்றி நின்ற மக்களின் சுயநல ஆசைகள் எல்லாம் கரைந்து நீராகின்றன. வற்றி மெலிந்து நெஞ்செழும்பு தெரிய அரை வேட்டிக் கச்சையுடன் ஒரு வடிவம் தலைமையாய் நடந்து செல்கிறது. பின்னே ஆணும் பெண்ணும், குஞ்சும் குழந்தையுமாய் பெருங்கூட்டம் அடிச்சுவடுகளைப் பதித்துக் கொண்டு, 'வந்தே மாதரம்' என்று கோஷித்துக் கொண்டு செல்கிறது.

கற்பனைக் காட்சியிலே நெஞ்சு கரைகிறது.

இங்கே குண்டு குண்டாய்ச் சுமைகள். திராட்சைக் குலையின் தோற்றத்தில் அறிவை மயக்கும் நஞ்சு. கண்ணுக்கு நஞ்சைக் கக்கும் கருநாகமும் அழகாகவே இருக்கிறது.

இந்த நஞ்சு யாருடைய அறிவையும் குழப்பாதபடி நாசமாக வேண்டும். உடைத்துப் பாதாளச் சாக்கடையில் ஊற்றி விடலாம். கண்ணாடிச் சிதிலங்களைக் குப்பைத் தொட்டியில் போட்டு விடலாம். கள்ளிப்பெட்டி அட்டை பஞ்சுகளை ஏழைச் சம்பாவிடம் உணவுக்குத் தீ மூட்டக் கொடுத்து விடலாம்.

நல்ல வேளையாக அம்மாவன் ஸ்டீமருக்குப் போய்விட்டார்.

துரை ஆறேமுக்கால் மணிக்குக் கதவைத் தட்டும்போது அவள் நெடி தெரியாமலிருக்கத் தண்ணீரை ஊற்றிக் கழுவிக் கொண்டிருக்கிறாள். குளியலறையில், கூந்தலைச் சுற்றிக் கட்டிக் கொண்டு தூக்கிச் செருகிய சேலையில் ஈரம் படியக் கதவைத் திறக்கிறாள். முகத்தில் அசாதாரணமான் ஒரு பளபளப்பு மின்னுகிறது.

"என்ன சமாசாரம்; என்னமோ வாடை வருகிறதே?" என்று கேட்டுக் கொண்டே அவன் உள்ளே நுழைகிறான்.

"பாத்ரூமில் கொஞ்சம் ஃபினைல் ஊற்றிக் கழுவினேன்."

"நெடி அடிக்கும்படி எதற்கு இவ்வளவு ஊற்றினாய்?"

அவள் அதற்கு மறுமொழி கூறாமல், "இதோ குளிச்சிட்டு வரேன்" என்று உள்ளே செல்கிறாள். மடமடவென்று குழாய் கொட்டத் திறந்து வைத்துக் கொண்டு ஊற்றிக் கொள்கிறாள். சொல்லொணாத விடுதலை உணர்வு.

அவளுடைய ஆனந்தத்தைப் பளாரென்று அறைவது போல் அலமாரிக் கதவு பளாரென்று அறைபடுகிறது.

"யமுனா! ஏ, யமுனா..."

அவன் தட்டும் வேகத்தில் குளியலறைக் கதவும், அந்த வெறிக்குரலில் அவள் உடலும் அதிர்கின்றன.

"குளிச்சிட்டு வரேனே? ஏனிப்படிக் கூப்பாடு போடணும்?"

"நீ குளிச்சிட்டு வரவேணாம்! இப்ப என்ன குளியல் சாவு நடந்தாப் போல? கதவைத் திறக்கிறியா உடைக்கட்டுமா?"

கதவை ஒருக்களித்துத் திறந்து நீர் சொட்டும் முகத்தை மட்டும் நீட்டிக் கொண்டு அவள் அமைதியான குரலில் கேட்கிறாள்.

"ஏனிப்படிக் கோபிக்கிறீங்க? என்ன குடி முழுகிப் போயிட்டுது?"

"சிங்ஜி பெட்டி கொண்டுவந்து கொடுத்துப் பத்திரமாக வைக்கச் சொல்லியிருப்பானே, அது எங்கே?"

"அது... அதை உடைச்சுக் குப்பையிலே ஊத்திட்டேன்" சாவதானமாக விழிகள் தாழ அவள் மொழிகையில் ஈரம் கொட்டும் அவள் கன்னப் பொட்டுக்களில் பளார் பளாரென்று அறைகள் விழுகின்றன! அவனுடைய கண்கள் சினத்தை உமிழ்கின்றன.

"என்ன நினைச்சுக்கிட்டே? விளையாடுறியா நீ? மரியாதையா உள்ளதைச் சொல்லிடு."

அவள் மறுமொழி கூறாமலே குளியலறைக் கதவைப் பின்புறமிருந்து அழுத்தப் பார்க்கிறாள். ஆனால் அவன் கதவை மல்லாத்திக் கொண்டு அவள் கையைப் பற்றி மூர்க்கத்தனமாக இழுக்கிறான். ஈரம் சொட்டும் உள்ளாடையுடன் நிற்கும் அவள் கன்னங்களில் மாறிமாறி அடிகள் விழுகின்றன. மேலே மூடியிருந்த பண்புப் போர்வை கிழித்து அரக்கத்தனம் வெளியாகிறது.

"என்ன அழுத்தம் உனக்கு? கொட்டிட்டேன்னு சொல்றியா? என்ன திமிருடி உனக்கு? என்னடி நினைச்சிருக்கே நீ."

விண்விண்ணென்று பொட்டுக்கள் தெறிக்க மூளை குழம்பிவிடும் போல் இருக்கிறது. கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள்.

அவன் வாயிலிருந்து தொடர்ந்து இறைபடும் சொற்களை அவள் தரக்குறைவான மக்களிடமே கேட்டிருக்கிறாள். மனிதனுடைய விலங்குத் தன்மை இவ்வளவு கோரமாகவும் வெளியாகக்கூடும் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

கன்னங்கள் தொடர்ந்து எரியத் தொடங்கின.

"ஏண்டி வாயைத் திறக்காம கல்லுப் போல் நிக்கறே? வாயைத் திறந்தா என்ன?"

"நீங்க அநியாயமா வீணாகப் போறதை நான் விரும்பலே. அது வேண்டாம். மனிதன் அறிவையே கெடுத்து விடும்..."

"அதுக்குன்னு நீ ஏண்டி அறிவு கெட்டுப் போய்க் கீழே ஊத்தினே? ஆயிரம் ரூபாய்க்குக் கிட்டத்தட்ட ஆகிறது... என்னிடம் ஒரு பேச்சுக் கேட்க வேணாம்? நான் போனவன் புல்லு முளைச்சுப் போயிடுவேனா? திரும்பி வரமாட்டான்னு எண்ணினியா?"

"என்னை மன்னிச்சுடுங்க. நான் அழிவுப் பொருள் யாருக்குமே வேண்டான்னுதான் நினைச்சேன்."

"பெரிய இவ... தர்ம பரிபாலனம் பண்ணும் பத்தினி; கட்டிய புருஷனை மதிக்கத் தெரியாதவள், ஊரைப் பரிபாலனம் பண்ணக் கிளம்பி விட்டாள்."

"என்னைத் தயவு செய்து மன்னிச்சுடுங்க. இனிமேல் நான் உங்களைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டேன். நீங்கள் நல்ல வழியில் இருக்க வேணும்னுதான் நான் இப்படிச் செய்ய வேண்டியதாச்சு..."

"இது வீடா எனக்கு? சுடுகாடு!"

தலையில் அறைந்து கொண்டு மூலையில் உட்காருகிறான்.

அவள் உலர்ந்த சேலையை உடுத்து, மனதை அமைதியாக்கிக் கொள்கிறாள். உள்ளே சென்று, குளிரும் கனிரசத்தைத் தம்ளரில் ஊற்றி எடுத்துக் கொண்டு வருகிறாள்.

"நீங்க களைச்சுப் போய் வந்திருப்பீங்க. இதை முதலில் குடிச்சிட்டு அப்புறம்..."

அவன் அதை வாங்குகிறானே என்று புன்னகை செய்கிறாள். அடுத்த கணம் அந்தக் கண்ணாடித் தம்ளர் சுவரில் மோதி, சில்லாய்த் தெறிக்கின்றன.

சில விநாடிகள் அவள் ஊமையாய் அதிர்ந்து நிற்கிறாள். காலமே செத்து விட்டாற் போலிருக்கிறது.

"ஆண்டவனே. ஆண்டவனே..." என்று மனசு கூவி அழைக்கிறது. கண்களில் நீர் பொங்குகிறது.

சிறிது நேரத்துக்கு அவன் கோபம் அடங்கும் வரையிலும் எதிரில் நிற்பதில் பயனில்லை என்று எண்ணுகிறாள். வெளியே எங்கேனும் கங்கைக் கரையில் காலார நடந்து செல்லலாம். மனசு அமைதி அடைய வேண்டும். சாந்தி... சாந்தி... சாந்தி... இரண்டு கிளிகள்... பீஸ் அமைதி...

அவள் அறை வாயிற்கதவைக் கடந்து அப்பால் கால் வைக்கிறாள். அங்கேயே அடுத்த அடி எழும்பாமல் திகைத்து நிற்கிறாள்.

கைப்பையும் கையுமாக அம்மாவன்...

மூக்குக் கண்ணாடிக்குள்ளிருந்து பரிவும் பாசமுமாய் இரு விழிகள் ஊடுருவுகின்றன.

"வாயிற்கதவைச் சாத்தியிருக்கவில்லையே?"

அந்தப் பரிவில் கண்ணீர் உருகி வழிகிறது.

"வேண்ட... வேண்ட மகளே வேண்ட..."

"அம்... அம்மாவா...!"

விம்மலை விழுங்கப் பார்க்கிறாள். பயனில்லை.

"அழக்கூடாது. ஷ்...யமு, என்ன இது!"

"உம் நீங்க ஸ்டீமருக்குப் போகலியா அம்மாவா?"

"நான் துறைக்குப் போகு முன் அது கடன்னு போயி. நாளைக்குக் காலையிலே திரிச்சி வந்து."

"நீங்க வந்து ரொம்ப நேரமாயிட்டதா அம்மாவா?"

"மோள் அடி கொண்டதைக் கண்டு பரமசாந்தனான துரையான்னு சம்சயமாயி போயி! என் கண்ணே எனக்கு நம்பத் தரமாயில்லே."

"அவர் மேல் குற்றமில்லை. பெருவெள்ளத்தின் இழுப்பை எதிர்த்து எதிர் நீச்சுப் போடுங்கன்னு நான் கரையிலேருந்து தான் கத்தறேன்; அவர் வெள்ளத்தைச் சமாளிக்க நட்டாற்றில் நிற்கிறார். எனக்குக் கொஞ்சம் பணம் தந்து உதவ முடியுமா அம்மாவா?"

"ஏ, அதிகப் பிரசங்கி!..." என்று உள்ளிருந்து குரல் வருகிறது.

"நீ ஒண்ணும் அவரிடம் போய்க் கேட்க வேண்டாம்! என் புத்தி நஷ்டத்துக்கு என் தலையில் போட்டுக்கிடறேன்? பூனை காவலிருக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டு அதுங்கிட்ட காவல் பொறுப்பை ஒப்பிச்சேன் பாரு!"

அவள் சட்டென்று உள்ளே சென்று கண்ணாடித் துண்டுகளை வாரிக் குப்பைத் தொட்டியில் போட்டுத் தரையைத் துடைக்கிறாள்; இரண்டு தம்ளர்களில் மோரைக் கரைத்து வந்து பெரியவரிடம் கொடுக்கிறாள்.

"அவருக்கு ஒண்ணு கொடுத்து நீங்களும் ஒண்ணு சாப்பிடுங்கள் அம்மாவா. அவருக்கு வயிறு காலி. ஒரு பத்து நிமிஷத்தில் சாப்பாடு தயாராகும்..."

அவள் சென்ற பின் ஜோசஃப் அவன் கைகளைப் பற்றிக் கொள்கிறார்.

"தம்பி, நீ ரொம்பக் குழம்பிப் போயிருக்கிறாய்னு தெரிகிறது. இந்தா முதலில் இதைச் சாப்பிடு அமைதியா..."

"என்னால் சமாளிக்க முடியலே சார். அவ என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறா..."

"நான் சொல்றேன். நீ இதைக் குடி. யமுனா, இன்னொரு தம்ளர் வேணும் எனக்கு...!"

"உனக்கு அவள்; அவளுக்கு நீதான் - ஒருவருக்கொருவர் துணை - ஆதரவு, நிழல், ஒளி - எல்லாம். தணலும் சூடும் மாறி மாறி இருக்கும். ஆனால் ஆதாரத்தை விட்டு விலகக் கூடாது..."

எரிந்து கிளர்ந்து வரும் குடலில் மழையாக விழுகிறது குளிர்ந்த மோர்.

கூடத்தில் விளக்கேற்றி வைக்கிறாள் யமுனா.

இனிய பிரார்த்தனைக் குரல் அமுதமயமாக நிறைகிறது.

அத்தியாயம் - 23

அம்மாவன் மறுநாட் காலை புறப்படும் வரையிலும் பேச்சுக்கள் மேலெழுந்த வாரியாக அமுங்கி விடுகின்றன. துரைக்குக் காலையில் பேச நேரமில்லை. இருவரும் சென்ற பிறகு, வழக்கம் போல் யமுனாவினால் அமைதியாகத் தன் அலுவல்களில் ஈடுபட முடியவில்லை.

அவர்களிடையே தோன்றி அகன்று வரும் பெரிய பிளவை எப்படிச் சமாளிக்கப் போகிறாள்?

ஓர் அலைபோல் நாட்டில் சுதந்திரப் போராட்டத்தின் போது மட்டும் ஏற்பட்ட நற்பண்புகள் குறுகியகாலப் பண்புகளாய், கால வெள்ளத்தின் வேகச் சுழலில் சிக்கிய துரும்பு தூசிகளைப் போல் மக்களிடையே ஒட்டாமல், பயன்படாமல் மறைந்துவிட்டன. அவள் அப்படிச் சுழலும் துரும்பாய்த் தனித்த நெறியை இழந்து விடாமல் எதிர் நீச்சுப் போடப் போகிறாளா? இந்த இல்லற வாழ்க்கை என்னும் சுழலுக்குள்ளிருந்து மீள வழியின்றிப் பயன்படாமலே மாயப் போகிறாளா?

அவளுக்கே அது புரியவில்லை.

ஏதோ ஒரு பரபரப்பான கட்டத்துக்கு வருவதைப் போல் அர்த்தமற்ற ஆவலுடன் மாலை நெருங்குகிறது.

வழக்கத்துக்குச் சற்று முன்னரே அவன் வீடு திரும்பி விடுகிறான்.

யமுனா சிரித்த முகத்துடன் எதிர்கொண்டு நிற்கிறாள்.

"சீக்கிரமா வந்துட்டீங்களே!..." என்று கேட்டுக் கொண்டே பிஸ்கோத்தும் தேநீரும் கொண்டு வருகிறாள். மாம்பழத் துண்டங்களைத் தட்டில் வைக்கிறாள்.

அவனோ ஆழ்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறான்.

"ஏன் சாப்பிடாம உட்கார்ந்திருக்கீங்க? உடம்பு சுகமில்லையா?"

"வொர்க்கர்ஸ் ஸ்டிரைக்கின்னீங்களே? எப்படி இருக்கு?"

இந்தப் பரிவு விசாரணைகள் உண்மையிலேயே ஆழத்திலிருந்து வருபவைதாமா என்று கேட்பதைப் போல் பார்க்கிறான் துரை.

"இப்படி உட்கார் யமுனா, உன்னிடம் நான் கொஞ்சம் ஸீரியஸாகப் பேச வேணும்..."

"பீடிகை பலமா இருக்கே, சொல்லுங்க...?"

"விளையாட்டில்லே யமுனா. நான் யோசித்து யோசித்துப் பார்த்தேன் ராவெல்லாம். நான் செய்தது பெரிய தப்பு."

"அடேயப்பாடீ! என்ன அவ்வளவு பெரிய தப்பு? தொழிலாளருக்கு வாக்குறுதி கொடுத்து கேரோவை முடிச்சதாக அன்னிக்குச் சொன்னீங்களே அதுவா?"

"அதெல்லாம் உனக்குத் தொடர்பில்லாத சமாசாரங்கள். நான் பேசப்போவது உன் சம்பந்தப்பட்ட விஷயம்."

"சொல்லுங்கள்..."

பரபரப்பைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்கிறாள்.

"நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னது பெரிய தப்பு..."

அவள் சிரிப்பு கலகலவென்று பூக்களைச் சிதறினாற் போல் ஒலிக்கிறது. 'இவள் என்ன பெண்!' என்று அவன் விழிகள் அகல நோக்குகிறான்.

"எப்படிக் கண்டுபிடிச்சீங்க! ராத்திரி முழுதும் எப்போதோ நடந்துபோன விஷயத்தைக் குறித்து ஆராய்ச்சி பண்ணினீர்களாக்கும்! எனக்கென்னவோ ஆராய்ச்சி முடிவு ஒப்புக் கொள்கிறாப் போல இல்லை."

"விளையாட்டில்லே யமு, உனக்கும் எனக்கும் அக்கோடிக்கு இக்கோடி. இந்த வாழ்க்கையை நீட்டுவதனால் நாம் இரண்டு பேரும் சந்தோஷப்படப் போவதில்லை."

"ஹம், அப்புறம்?"

"மேலு மேலும் கசப்பாவதற்கு முன் நாமே..."

"ஹம், சொல்லுங்களேன்?"

அவன் தரையைப் பார்க்கிறான்; "ஒரு முடிவு செய்து கொள்ளலாம்."

"கோர்ட்டுக்குப் போகணும்னு சொல்றீங்களா?"

"நீ அது அவசியம்னு கருதினால், சட்டப்படி விடுதலை பெறலாம்."

அவள் குனிந்து அவன் காதோடு, "வேறே... பார்த்து நிச்சயம் செய்து விட்டீர்களா?"

அவன் அவளை உறுத்துப் பார்க்கிறான்.

"ஏன், நான் கேட்கக் கூடாதா?"

"நீயோ பிரிந்து போகிறாய். உனக்கு அதைப்பற்றி என்ன கவலை?"

"நீங்கள் முடிவு கட்டினால் நான் பிரிந்து போவதாக அர்த்தமா?"

"அப்படியானால் நீ இப்படியே நிதம் நிதம் கருவிக்கிட்டு இருக்கிறேங்கறியா?"

"பின்ன இல்லாம எப்படிப் போறது? உங்களுக்கு என்னை விலக்க ஒரு அதிகாரமும் கிடையாது; சட்டப்படி போனா கூட நான் பட்டுபட்டுனு உள்ளதை உள்ளப்படி சொல்வேன். எந்த வக்கீல் வேணும்னாலும் பாருங்க; என்னை விலக்க ஒரு காரணமும் இல்லைன்னு சொல்லுவாங்க."

"இதோ பார் யமுனா; நாம் இருவரும் ஒருவருக்கொருவர் புரிஞ்சிட்டுப் போகணும். இரண்டு தலைப் பாம்பு போல் ஒண்ணை ஒண்ணு விழுங்கறாப் போல நிக்கறதிலே என்ன லாபம்?"

"இரண்டுதலைப் பாம்பில்லை. நீங்கள் மிகவும் உயர்ந்தவராக இருக்க வேணும் என்பது என் இலட்சியம். நான் பலவீனத்துக்கு ஆளாகும் போது நீங்கள் எனக்கு உறுதி கொடுப்பவராக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ, பார்ட்டியில் அரை உடம்பைக் காட்டிக் கொண்டு வழிய வழிய நிரப்பிக் கொடுப்பதுதான் இப்போதைக்குத் தகுந்த சதிதர்மம்னு நினைக்கிறீங்க. உலகம் பிறந்த நாளிலிருந்து பிறந்திருக்கும் மகான்கள், தீர்க்கதரிசிகள் எல்லோரும் அறிவைக் குழப்பும் இன்பங்கள் விலக்கத் தகுந்ததென்றுதான் சொல்லியிருக்கிறார்கள். நம் வாழ்க்கை ஆதர்ச வாழ்க்கையாக இருக்கவேணும்னு நான் நினைக்கிறேன். அதற்காகவே என் மூச்சுள்ளவரை போராடுவேன்..."

"நீ, உன் வரைக்கும் இருந்து கொள். என்னைக் கட்டுப்படுத்துவதனால் எனக்கு எவ்வளவு சங்கடங்கள் என்பதைக் கொஞ்சமேனும் நினைக்க வேணும்... இதோ பார் எங்கள் சரக்கு வியாபாரப் போட்டியில் எடுபட வேண்டும். அதற்கு நாங்களும் அதிகாரமுள்ளவர்களைக் கவர, வசப்படுத்த ஏதேதோ செய்ய வேண்டியிருக்கு. வாய் கூசாம அதைக் கொண்டா, இதைக் கொண்டான்னு கேட்கிறாங்க. பில் பாஸாகாமல் நிற்கிறது. அந்த நபருக்குத்தான் அந்தப் பாட்டிலெல்லாம் வரவழைத்தேன்; நீ நாசம் செஞ்சிட்டே."

"'என்ன ஸார், ஜப்பான் டெரிகாட்டா இது? மாசா மாசம் நேபால் போயிட்டு வரீங்க; நம்ம வீட்டிலே டெர்லின், நைலக்ஸ்னு பிச்சுப் பிடுங்கறாங்க! நானும் சொல்றேன், நீங்க காதிலேயே போட்டுக்கலே. பில்லு பாஸாகணும்னா மட்டும் கரெக்டா வந்துடறீங்க...'ன்னு ஒரு மூணாம் படி ஆசாமி முதல் விரட்டுகிறான். கேட்பதில் அடியிலிருந்து முடிவரை நாணமே இருப்பதில்லை. இதற்கெல்லாம் கம்பெனி ஈடு கொடுக்கணும்னா, கோல்மால்தான் பண்ண வேண்டியிருக்கு. உருப்படியில்லாத மெஷினரியெல்லாம் தலையில் கட்டணும். அதற்குச் சமத்காரமாகப் பேசணும். தப்பித் தவறிப் பார்லிமெண்டில் எவனேனும், கேள்வி கேட்டு இழுத்து விடாம அதையும் சமாளிக்கணும். ஒவ்வொருத்தன் இலேசில் மசியமாட்டான். வேலையை விட்டுடலாம், விட்டுடலாம் என்ற யோசனையைத் தவிர நீதான் வேற ஏதானும் யோசனை சொல்லேன்?"

யமுனா புன்னகை இலங்க, "நீங்க கோபிக்கா இருந்தா நான் சொல்றேன். நீங்களே ஜப்பான் நைலானும் சீனா காட்டனும் போட வேண்டாமே. இது 'இந்திய சரக்கு' அதனால் மோசமானது என்று நீங்களே எத்தனையோ தடவை பேசிக் கேட்டிருக்கிறேன். அந்த அளவில் உங்களால் நேர்மையாக இருக்க முடியாது?" என்று கேட்கிறாள்.

"உன் நேர்மையெல்லாம் 'பிராக்டிக்கலா' வரப்ப, பயனில்லாம போறது யமுனா. இந்த நேர்மை உபதேசத்தை நான் செய்யப்போனால் எங்க கம்பெனிக்கு அடுத்த ஆர்டர் வராது. அது போதாமல் அது சொத்தை, இது சொள்ளைன்னு போது விடிஞ்சால் தலை வேதனைதான் கொடுப்பான்!"

"அதைச் சமாளிப்பதுதான் நம் வாழ்க்கையின் லட்சியம்னு நான் நினைக்கிறேன். ஒரு பொய்யிலேயே உலகம் இயங்குவதை நாமும் ஒப்புவது சரியில்லை. அதை எதிர்த்துத்தான் போராடணும்..."

"நாம் அப்படி எல்லாம் கஷ்டப்படுவதால் உலகம் திருந்திடப் போறதா யமுனா? மனித மதிப்பீடுகள் உயர்வாக இருந்த நாளிலேயே காந்தியைப் பின்பற்றியவர்கள் எத்தனை பேர்? என்னைக் கேட்டால் என் அபிப்பிராயம் இதுதான். பிரிட்டிஷாரிடம் இந்தச் சமுதாயம் அடக்கப்பட்டிருந்தது. காந்தி, அடங்குவது அடிமைத்தனம்; எதிர்த்து நில்லுங்களென்று தூண்டிவிட்டார். அதாவது, எந்தத் தெம்பும் இல்லாதவனும் கூட, ஒழுங்கீனமாக நடக்கலாம் என்ற மாதிரி அன்றைக்கு எதிர்த்து நின்றவர்களெல்லாரும் தேசபக்தர்கள்; சிறைக்குப் போனவர்களெல்லாரும் தியாகிகள். அவர் இந்த அஹிம்சையைக் காட்டிலும் கையில் கத்தியைக் கொடுத்து நேருக்கு நேராகச் சண்டை செய்யுங்களென்று சொல்லியிருந்தாலே சரியாக இருந்திருக்கும். இது எப்படி இருக்கிறதென்றால், காய்ச்சலில் கிடந்து, அரைவயிறும் கால்வயிறும் சாப்பிட்டுப் பலவீனமானவனுக்கு இதுதாண்டா விமோசனம்னு ஒரேயடியாகப் பாதாம்கீரும் பால்கோவாவும் முழு உணவாகக் கொடுத்தாப் போல, தராதரம் பார்க்காமல் லட்சியத்தை மாட்டி விட்டார். இப்ப காலிப் பயல்களும் ரவுடிகளும் மிருகத்தன்மாக கேரோ பண்றாங்களே, அது காந்தி காட்டின ஒத்துழையாமை இயக்கத்தில் பிறந்ததுதான். சத்தியத்தை வேட்கிறோம்னு அவர் சொன்னதைத்தான் இவங்களும் சொல்றாங்க. எங்க சத்தியம் அசத்தியமாக இருப்பதுதாங்கிறாங்க. இதை நியாயமாக்கி, பெரிய ஜோடனை செய்து, லட்சியம்னு சொல்றாங்க. அவர் ஒருத்தரைப் பொறுத்தமட்டில் அவர் லட்சியம் சரியாக இருக்கலாம். கையில் கொடியைப் பிடிச்சிட்டு கூட்டத்தோடு கூட்டமாக கோஷம் போட்ட அநாமதேயங்களெல்லாம் உள்ளத்தோடு துறவு பூண்ட சத்யாக்கிரகிகள் தாமா? நீ நினைச்சுப்பார். இன்னிக்கு மனுஷன் சாகறது அன்றை விடப் பல நூறு மடங்கு எளிசாப் போச்சி. மனித உயிருக்கு, இன்னிக்கு அன்றைய மதிப்பு கிடையாது. நீ அன்றைய நிலையில் ஏற்பட்ட கோட்டில், இன்னிக்கு நாம் போகணும்னு நினைப்பதே ஒரு வகையில் மூடத்தனம் தான்..."

"ஏங்க உண்மையைப் பலரும் கைவிட்டு விட்டதால் உண்மை பொய்யாயிடுமா? பொய்யை எல்லோரும் வாழ்வாக நினைப்பதால் பொய் உண்மையாயிடுமா? நாமும் அப்படி வேஷம் போடாத போனால் மூடத்தனம்னு நீங்க சொல்றதை என்னால் ஒப்ப முடியல..."

"சும்மா ஒரு வாதத்துக்காகப் பேசாதே யமுனா. இங்கே எது உண்மை? இந்த விண்வெளியுகத்தில் உன் கைராட்டையும் கட்டைவண்டியும் லட்சியம்னா நல்லாவா இருக்கு?"

"கைராட்டையை உங்களிடம் வற்புறுத்தவில்லை. ஆனால், மது, லஞ்சம், பொய், ஏமாற்று, மோசடி, இவைகளை நாம் எதிர்த்துப் போராடவில்லையானால், நம்மையே அந்த ஓட்டம் அடிச்சிட்டுப் போயிடும்!"

"நம் வாழ்க்கை நிலையை இன்று நாம் கஷ்டப்பட்டு உயர்த்திக் கொள்கிறோம். நாம் ஆசிரமத்தில் குடிசையில் இருந்தோம். தோளில் மண்வெட்டியைப் போட்டுக் கொண்டு காலையில் பரம்பை நாடிப் போனோம். கேழ்வரகுக் களி சாப்பிட்டோம். அதெல்லாம் அப்போது அந்த இடத்துக்குச் சரியாக இருந்தது. இப்போது அப்படியே இருக்க முடிகிறதா? இங்கே இந்த வசதிகளுக்கேற்ப நம் வாழ்க்கை மாறவில்லையா? அதுபோல்தான் எல்லாம். என் தொழிலுக்கு ஆடம்பரமான தோற்றம் வேணும். அது வாழ்வின் ஓர் அம்சமான பிறகு அவ்வளவு தடைகளை முன்போல் விதித்துக் கொள்ள முடியுமா? எங்கெங்கோ போகிறோம்! இந்த உணவைத்தான் சாப்பிடுவோம் என்ற வரையறை கொள்ள முடியவில்லை. மாமிசக் குழம்பும் சோறுந்தான் ஓரிடத்தில் கிடைக்கிறது. இன்னோரிடத்தில் பாலோ மோரோ கிடைப்பதில்லை. இன்னொன்றுங்கூட நீ நினைவில் வைக்க வேண்டும். காந்தி உணவுப் பரிசோதனை செய்த காலத்தில் இன்று மனித சமுதாயத்தைப் பரவலாக வாட்டும் அளவு பசிப்பிணி இருக்கவில்லை என்பது என் கருத்து. அப்போதெல்லாம் மீதூண் சகஜமாயிருந்தது. அதனால் எளிமை எளிமை என்று உபதேசம் செய்தார். இன்று பெரும்பாலோர் பற்றாக்குறையில் அவதிப்படுகின்றனர். எளிமைக்கு இடமேயில்லை. என்றாலும் நாம் மதிக்கும் அளவு என்று ஒன்றிருக்கிறது. அதற்குமேல் கட்டுப்பாடுகள் இயலாததொன்று..."

யமுனா எதுவும் பேசாமலே நிற்கிறாள்.

"நான் ஒரு சாதாரண மனிதன். ஒரு சராசரி மனிதனுக்கு என்னென்ன ஆசைகள் உண்டோ அதெல்லாம் எனக்கும் உண்டு. என் மனைவியைப் பற்றி எல்லோரும் பெருமையாக நினைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. அவள் ஒரு மாதிரி; 'அன்சோஷபிள்' என்று மற்றவர் கருதுவது எனக்குத் தலைகுனிவாக இருக்கிறது. நீ என்னுடன் ஒத்துப் போக மாட்டாய் என்று என்னுடன் பழகும் பலருக்குத் தெரியும். யோசனை செய்து பார். ஜோசஃப் ஸார் திரும்பி வருமுன் நீயும் ஒரு முடிவு செய்து விட்டால் நல்லது."

யமுனாவின் முகம் சிறுக்கிறது.

"உங்களுடன் ஒத்துப் போக முடியாமல் பிரிந்தேனென்று எப்படிச் சொல்வது? உங்களுடன் ஒத்துப் போகாமல், உலகத்துக்கு என்ன நன்மையைச் செய்கிறேனென்று நான் போக முடியும்? அங்கே போய் என்ன செய்வது? என் பெற்றோரிடம் என்ன சொல்வது?..."

"அது உன் தீர்மானத்தைப் பொறுத்திருக்கிறது."

அவள் என்ன தீர்மானத்தைக் கூறுவாள்?

அவளை யோசனை செய்யச் சொல்லிவிட்டு அவன் நீராடிப் புதுமை பெறுகிறான். மணங்கள் கமழ வேற்றுடை அணிந்து வருகிறான்.

"ராத்திரி வரக் கொஞ்சம் நேரமானாலும் ஆகும். ஒரு பார்ட்டி. பத்திரமாயிருந்து கொள்" என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறான்.

அத்தியாயம் - 24

யமுனா முகத்தில் கையை வைத்துக் கொண்டு நெடு நேரமாக உட்கார்ந்து இருக்கிறாள். நிழல்கள் நீண்டு கண்களுக்குத் தெரியாமல் இருளோடு ஒன்றும்போது விளக்கைக் கூடப் போட மறந்த நிலையில் உள்ளக் குழப்பத்தில் கல்ங்குகிறாள்.

ஒரு வழியும் தட்டுப்படவில்லை. ஒரு தோல்வியை மறைக்க இன்னொரு தோல்விக்குள் புகுந்து கொண்டாள். அதுவும் தோல் காய்ந்து கழன்றபின் இன்னொன்று... இன்னொன்று...

வெளிமுற்றத்தில் சம்பா நிறைய நீரைத் தெளித்திருக்கிறாள். வெம்மை அடங்கும் அந்த நேரத்தில் சில்லென்று குளிர் இழையாய்க் காற்று மெல்ல வந்து மேனியில் படுகிறது. நீர் மண்ணிலே படிவதனால் ஆவியடங்கிக் குளிரும் மணம்.

பரிசுத்தம் என்பதற்கு ஒரு மணமுண்டானால் இது தானோ அது!

"சம்பா! குழந்தைகள் எங்கே?"

"மாந்தோப்பில் பஜனை, சத்சங்க சாதுக்கள் உற்சவம் நடத்துகிறார்கள். சுவாமிஜி வந்திருக்கிறார். நீங்களும் வருகிறீங்களா, மாஜி?"

"யார் சுவாமிஜி!"

"ஆனந்தானந்த சுவாமிஜி! மாந்தோப்பில் வருஷா வருஷம் நடத்துவார்கள். தேவேந்திர பாபுஜி, மாதாஜி எல்லோரும் வருவார்கள். நீங்களும் போயிருப்பீர்களோன்னு நினைச்சேன் மாஜி!"

"அப்படியா! தெரியாதே எனக்கு? அதுல் என்னிடம் சொல்லவில்லையே..."

"விடிய விடிய அகண்ட பஜனை..."

யமுனாவுக்குக் கதவைப் பூட்டிக் கொண்டு போகலாம் என்று தோன்றுகிறது. துரை வீடு திரும்ப நேரமாகும். மனதும் அமைதியில் அடங்கக் கூடும்.

நிலவு வெள்ளத் தண்கதிர்களால் உலகைத் தழுவ வருகிறது.

சம்பாவுடன் அவள் புழுதியும் குப்பையும் பரவும் தெருக்களையும், சந்துக்களையும் தாண்டி நடக்கிறாள். ஏழை வாழக் குடைபிடித்துக் கொண்டு நிற்கும் மாந்தோப்பில் நிலவு புகுந்து வந்து நிலத்தில் கோலமிடுகிறது! குட்டை குட்டையாக, குலுங்கக் குலுங்க அணிபணிகள் பூண்டு கைகளை ஒருவருக்கொருவராய்ப் பற்றிக் கொண்டு ஆடிப்பாட மகிழ்ந்து நிற்கும் மங்கையரைப் போல் ஒன்றுக்கொன்று தொடர்பாக நிற்கும் மாமரங்கள்.

"மாந்தோப்புகள் இந்த ஊருக்கே அழகு; இல்லையா சம்பா?"

"மாஜி இன்றுதான் இங்கே இத்தனை பங்களாக்கள். இதெல்லாம் இல்லாத போது முழுசுமே மாந்தோப்புக்கள் தான். நான் முன்னே இந்த ஊருக்குப் பிழைக்க வந்த போது இங்கெல்லாம் வீடே கிடையாது" என்று கூறுகிறாள் சம்பா.

மாந்தோப்புக் குடிசைகளின் முன் நிலவில் ஓடிப் பிடித்து விளையாடும் குழந்தைகள் எல்லோரும் பஜனைக்குப் போய் விட்டார்கள் போலும்! நீண்டு விரிந்த மாந்தோப்பின் இடையிடையே கங்கைக் கரையை நோக்கி நீண்டுள்ள தெருக்களில் பெரிய பெரிய பங்களாக்கள் குறுக்கிடுகின்றன. அவற்றில் பெரும்பாலும் அரசின் அலுவலகக் கட்டிடங்கள். பெரிய பெரிய பலகைகளை முகப்பில் மாட்டிக் கொண்டு 'சௌக்கிதார்'கள் மட்டுமே காவல் காத்து நிற்க, களையிழந்து நிற்கின்றன. ஆங்காங்கு நிற்கும் ஜீப் வண்டிகள் வேறு, வட்டார வளர்ச்சி, விவசாயம் என்றெல்லாம் வளர்ச்சியைப் பற்றிச் சொல்கின்றன.

ஒரு தெருவைக் கடந்ததும், பஜனையின் பெரிய தாள ஒலிகளும், கீத ஒலிகளும் செவிகளில் விழுகின்றன.

தோப்பில் விளக்கு வெளிச்சமும் கூடாரங்களும் தெரிகின்றன. காவி உடையணிந்த சாதுக்கள், ஆடவர் பெண்டிர், குழந்தைகள்...

ஒருபுறம் அடுப்பில் கோதுமை மா நைந்த ஈரத்துடன் தீயில் பதமாக முறுகும் வாசனை பசித்தீயைக் கிளறுவதாக இருக்கிறது. பெரிய அலுமினிய வட்டைகளில் கிழங்கு கொதிக்கிறது.

அவர்கள் தாழ்ந்த மரக்கிளைகளுக்குத் தலை குனிந்து, பஜனைத் தலத்தை நெருங்குகையில், அவள் தலைக்கு மேல் ஓர் கிளை சலசலக்கிறது. யமுனா சட்டென்று நெஞ்சுத் துணுக்குற நிமிர்ந்து திரும்பிப் பார்க்கிறாள். இடையனைப் போன்று தலைக்கட்டுடன் ஒரு முகம் - நிலவொளியில் சிரிக்கும் முகம்.

சொப்பனமோ? அரைத் தூக்க மயக்கக் காட்சியோ?

மின்னல் போன்ற அதிர்ச்சி யமுனாவின் உள்ளத்தில் பாய்கிறது.

"சம்பா!..." தன் குரல் அவளுக்கே புதுமையாக இருக்கிறது.

"கொஞ்சம் நில்; முன்னால் ஓடறியே?"

மீண்டும் மீண்டும் மரத்தைத் திரும்பி நிமிர்ந்து பார்க்கையில் முகத்தில் விவரிக்க இயலாத பீதி படருகிறது.

இல்லை... வெறும் பொய்த் தோற்றம், சுதீர் இங்கு எதற்கு வருகிறான்; சுதீரின் முகமாகவே தோன்றுவது வெறும் பிரமை...

"என்ன மாஜி, அங்கே?"

"மாமரக் கிளையில் யாரோ உட்கார்ந்திருந்தாப் போல் இருந்தது சம்பா..."

"ராவேளை. காவல்காரனில்லைன்னு போக்கிரிப் பயல்கள் பழம் திருட வந்திருக்கும்..."

"ராம், ராம், சீதாராம்... ஜேஜே சீதாராம்..." என்ற ஒலிகள் செவிகளை நிறைக்கின்றன.

காவி அங்கியும் காவித் தலைக்கட்டும் அணிந்த சாதுக்கள், 'ஓம்' என்ற ஒளிப் பிரபை.

ஆர்மோனியம், தபேலா, ஜால்ராக்கள் -

நிலவொளியில் துயரம் என்பதையே அறியாத சின்னஞ்சிறு குழந்தைகள் துள்ளிக் குதித்துத் தாளமிடுகின்றனர்.

பிரசாதம் கிடைக்கப் போகிறதே!

சம்பா முன் நடந்து தலைத் துணியை இழுத்துவிட்டுக் கொண்டு நிலத்தில் நெற்றி தோய சாதுக்களுக்கு முன் பணிந்தெழுகின்றாள்.

அங்கே கூடியிருக்கும் பெண்களில் பெரும்பான்மையினரும் அவளைப் போன்றவர்களே.

கள்ளமற்ற அறியாமையில் அழுந்திய தாய்மார்கள் மூட நம்பிக்கைகளுக்கும் தூய நெறிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் பற்றிக் கொள்ளும் பேதையர். ஆண் எங்கிருந்தோ மாசாமாசம் பத்தோ பதினைந்தோ அனுப்புவதை வைத்துக் கொண்டு வாழ்க்கையோடும் குடும்ப பந்தங்களோடும் போராடி மீளத் தெம்பில்லாமல் அழுந்திப் போகிறவர்கள். கங்கைக்கரைச் செங்கற் சூளைகளில் நாளெல்லாம் மண்ணறுக்கும் கூலிக்காரர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், மூட்டை தூக்குபவர்கள் எல்லோரும் அங்கே குழுமியிருக்கின்றனர். அலுவலகங்களில் புழுதி படியாமல் இடை நிலைகளில் வேலை செய்பவர்களும் இருக்கின்றனர். சிலர் கண்களை மூடிக் கைகூப்புகின்றனர். சிலர் உரத்துத் தாளம் போட்டுக் கோஷமிடுகின்றனர்.

பாரத சமுதாயத்தை மாய்த்து விடாமல் வைத்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத ஊற்றுக் கண்கள், இந்த அறியாமையிலும் இறை நம்பிக்கையிலும் தெளிவாகின்றன. இங்கே மாந்தோப்பு வடக்கே கங்கைக் கரைச் சாலை வரையிலும் பரந்திருக்கிறது. கிழக்கே ஒரு தெரு; பெரிய பெரிய மாளிகைகள் அமைந்த தெரு.

தூரத்தில் தெரியும் மாளிகை ஒன்றின் மேல் மாடி முகப்பில், தீபாலங்காரம் தெரிகிறது.

திருமண வைபவமோ? விருந்துக் களியாட்டமோ? பிறந்த நாளோ? பெயரிடு விழாவோ?

தெருவை அடைத்துக் கொண்டு கார்கள் நிறைந்திருக்கின்றன.

இங்கே தோப்பிலும் கொண்டாட்டந்தான்; அங்கே மாளிகையிலும் கொண்டாட்டந்தான்.

இங்கு ஆன்மிகத்தைக் குறியாகக் கொண்ட பக்தியும், கவடற்ற வறுமையும் இரக்கமும் பரிவும் அங்கம் வகிக்கின்றன.

அங்கே ஆடம்பரமும் உடலின்ப நோக்கமுமே அங்கம் வகிக்கின்றன.

அந்த மாடி, இங்கே 'தோப்புக்கு வந்து விட்டால்...'

பஜனை முடிந்த பின் கிடைக்க இருக்கும் பிரசாதம் மட்டுமே நோக்கமானாலும், குற்றமற்ற இளம் உள்ளங்களில் சிறுமை உணர்வு அழுந்தாத ஒரு மகிழ்ச்சி குலவும் சூழல்.

தோப்புகளையே அழித்து மாடி வீடுகளை எழுப்பியதாகச் சம்பா சொன்னாள். தோப்புகள் அழிய அழிய, தோப்புகளில் முடங்கியிருந்த குடிசைகள் அழிய வேண்டும்.

குடிசைகள்!... குடிசைகள்!... குடிசைகள்!...

பர்ண சாலைகளைப் போல் துப்புரவும் எளிமையும் அழகும் காற்றோட்டமும் வாய்ந்த ஆசிரமக் குடில்களா நினைவுக்கு வருகின்றன?

கோயமுத்தூர் சந்திப்பு நெருக்கடியிலிருந்து வங்கப் பெருநகரில் பஸ்திகள் வரை எத்தனை அல்ங்கோலமான காட்சிகள், துருப்பிடித்த தகரங்கள், சரக்கு ஒட்டுக்கள்; பெரிய மண்டிகளில் கிடங்குகளில் வேண்டாம் என்று குப்பையில் எறியப் பெற்ற பிளாஸ்டிக் துண்டுகள் - இவைகளின் பொருந்தாக் கூட்டுகள். இந்தக் கலவைக் குடிசைகளைப் போலவே மக்களும். இங்கும் சாதி மதம் குலம் எல்லாம் எடுபட்டுப் போகின்றன. உதவாதவை என்று ஒதுக்கப் பெற்று துண்டுகளைப் போல் - பொருளாதார வசதிகள் பெற்ற மாளிகைகளுள் நுழையவும் இல்லாமல் ஒதுங்கியவர்கள். உயிரும் துடிப்பும் ஒழுங்கின்றி ஏறியும் இறங்கியும் நகரின் அழகுகளைப் புற்றுநோய் வளர்ச்சிக்கு ஆளாக்கி விட்டிருக்கும் குடிசைகள். இந்த நலிந்த சமுதாயப் பகுதியை இன்றைய அரசியல் மன்னர்கள், அங்கே மாளிகையில் விழாக் கொண்டாடக் கூடிய மன்னர்கள், தங்கள் மாடிகளில் கேளிக்கைகள் நடத்திக் கொண்டே இருக்க வேண்டுமானால், இங்கே குடிசைகள் உயிர்த்து நெளிய வேண்டும். ஏனெனில் ஜனநாயக அரசியல் மன்னர்களுக்கு வேண்டிய வாக்குரிமைச் சுரங்கங்கள் அவை. அவை அழியவிடக் கூடாது.

"சம்பா! அதோ, அந்தப் பங்களாவில் என்ன விசேஷம்னு தெரியுமா உனக்கு?"

"ஹா...ஞ்ஜி, பெரிய எம்.எல்.ஏ. பாபு புது வீடு கட்டி கிரகப் பிரவேசம் செய்கிறார் மாஜி. ராஜேந்திர நகரில் பெரிய பங்களா இருக்கு. பெரிய தாதா மாஜி. முன்ன மழை வெள்ளம் வந்து எங்க கிராமத்தில் குடிசையெல்லாம் அடிச்சிட்டுப் போன போது, இவர் யானை மேல் வந்து எங்களுக்கெல்லாம் துணி, ரொட்டி எல்லாம் கொடுத்தார். நாங்க எப்பவும் அவருக்குத்தான் ஓட்டுப் போடுவது..."

"ஓ...? இங்கு வெள்ளம் வருமா?"

"ஹா...ஞ்ஜி, இங்கும் கங்காஜி பெருகி ரோட்டோரம் வந்து கால்வாய் நிரம்பி வழிவாள். குளம் குட்டை, இந்தத் தோப்பெல்லாம் நிரம்பிப் போகும். போன மூணாம் வருஷம் கூட இந்தக் கருணை மகான் தான் யானை மேல் வந்து வீடிழந்து போன எங்களுக்கெல்லாம் ஆறுதல் சொன்னார்."

"யானை மேல் வருவானேன்?"

"ஹா மாஜி, கிராமத்திலெல்லாம் போக வண்டி மோட்டார் பாதை ஏது? தடங்களெல்லாம் முழுகிய பின் யானை தான் போகும். யானை எல்லாம் யாராலே வைத்துக் கொள்ள முடியும்? ராஜாதிராஜ குடும்பத்தில் பிறந்த இவர்களைப் போன்ற பணக்காரர்களாலேதான் முடியும். அப்படி யானை மேல் வந்து அவர் எங்களைப் பார்த்த போது, ஆரத்திக்குக் கூட வழியில்லாம புடவை, மாவு, பால் பொடி எல்லாம் கொடுத்தார்..." என்றெல்லாம் சம்பா விவரிக்கிறாள்.

யானை மேல் வந்து பார்ப்பதை விட, சாலைகளைப் போட்டிருக்கலாம்! வெள்ளம் பாதிக்காத இருப்பிடங்களைக் கட்டியிருக்கலாம் என்று சொல்லும் எழுச்சி இந்த மக்களிடம் இல்லையே!

பெரிய பெரிய வீடுகளைக் கட்டி அரசினர் அலுவலகங்களுக்கு வாடகைக்கு விடுவதை விட, இவ்வளவு கார்களில் வந்திறங்கும் செல்வமும் செல்வாக்கும் உடையவர்களுக்கு ஆடம்பர விருந்துகள் கொடுப்பதை விட, துப்புரவாகச் சிறு இல்லங்கள் அமைத்துத் தந்தால் இன்னொரு முறை வெள்ளம் வரும்போது யானைமீது வந்து மக்களிடம் பேரன்பைப் பொழிந்து நன்றியுணர்வைப் பெற வாய்ப்பில்லாமல் போகுமே?

மீண்டும் மீண்டும் அரசு மாற, தேர்தல் நடைபெற, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் பட்டினி கிடக்கும் மக்களுக்கு அளிக்க அப்பத்துண்டாய் 'சோஷலிசம்' என்ற வாய்ப்பு இருக்க வேண்டுமே? உணவு, உறையுள் என்ற தேவைகள் அழிந்து விட்டால் பிறகு இந்த வாய்ப்பு ஏது?

செவிகளில் விழும் பஜனையை மறந்து அவள் சாலைக்கப்பாலுள்ள தீபாலங்கார மாடியில் கண்களைப் பதித்துக் கொண்டிருக்கிறாள்.

டமார்...!

செவிகள் அடைய ஓர் ஓசை, நிலமே அதிர்ந்தாற் போல் ஒரு குலுக்கல். தீபாலங்கார மாடியே புகைப்படத் தேனீக்கூடாய்த் தீ சூழல் கலங்கிப் போகிறது.

"என்ன...? என்ன...?"

பஜனை ஒலி நிற்கிறது. கூட்டம் குழம்பி யாரோ அடிக்க வந்தாற்போல் ஓடத் தலைப்படுகிறது. சிலர் சாலைப்பக்கம் மருண்டு ஓடுகின்றனர். சிலர் தோப்பின் மறுபுறம் ஓடி வருகின்றனர். போலீஸ்காரனின் ஊதுகுழல் ஒலிக்கிறது. தொடர்ந்து சாதுகளின் குழலோசைகள்.

"என்ன... என்ன... மாஜி?..."

"ஓடுங்கள்; குண்டு... குண்டு... வீசிட்டாங்க..."

"யாரு...?"

சாது ஒருவர் "அமைதியாயிருங்கள்... அமைதி... அமைதி...!" என்று கத்துகிறார். "மக்களே! ஓடாதீர்கள்! பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள்...!" என்று குழந்தைகளைத் தடுத்து நிறுத்துகிறார். "மாதாஜி வாருங்கள், ஓடாதீர்கள்..." என்று பெரிய வட்டைகளில் ரவையும் சர்க்கரையும் கொட்டிச் செய்த பிரசாதத்தை உருட்டி உருட்டிக் கைகளில் மற்றொரு சாது வைக்கிறார். இன்னொரு காவி உடைக்காரர் தர்பூஸ் துண்டுகளை அவசர அவசரமாக வழங்குகிறார்.

தாய்மார் குழந்தைகளுக்காக கூவிக் கொண்டு விரைகின்றனர். சம்பாவும் தன் மக்களைத் தேடி இழுத்துக் கொண்டு திரும்புகிறாள்.

"மாஜி வாங்க," யமுனா கனவில் நடப்பவலை போல் சம்பாவின் பின்னேயே நடக்கிறாள்.

மாமரத்தின் மீதிருந்து நிலவொளியில் தென்பட்ட முகம் உணர்வுகளைக் கக்கலும் கரைசலுமாகக் கலக்கிக் கொண்டு வருகிறது. "ஆண்டவனே! ஆண்டவனே!..." என்று உள்ளம் பற்றிக் கொள்கிறது.

எப்படியோ அவள் வீடு வந்து சேருகிறாள். சம்பாவும் அவளுடன் வருகிறாள்.

யமுனாவுக்குக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்லவே உடல் நடுங்குகிறது.

"மாஜி, சாப் வீடு திரும்பும் வரையில் நான் துணையிருக்கிறேன்..." என்று குழந்தைகளுடன் நிற்கிறாள்.

முன்னறையில் சோபா, நாற்காலி அலங்காரங்கள், கடியாரம், சாம்பல் கிண்ணம்...

அந்த முகம் தோன்றிச் சிரிப்பது போலிருக்கிறது; தலையில் முண்டாசு, முகத்தில் சிரிப்பு.

உல்லாசமான இடைப்பையன் வேடம் பூண்டாற் போலிருந்தது.

இடைப்பையன் கையில் குழல் வைத்திருப்பான். மாந்தோப்பு நிழலில் ஊனை உருக்கும் இசை வடிப்பான். எறிகுண்டு... எறிகுண்டு வீசப் பதுங்கி இருப்பானோ?

இன்னதென்று விள்ள இயலாத ஒரு சங்கடம் மனதில்.

முகத்தில் கையை வைத்துக் கொண்டு சூனியத்தைப் பார்க்கிறாள். அம்மாவன் சென்றிருக்கலாமோ?

"சாப் ஊரிலில்லையா மாஜி?"

"ஊரில்தானிருக்கிறார். வெளியே போயிருக்கிறார். எனக்கு என்னமோ கவலையாக இருக்கிறது. இங்கும் குண்டு வெடிக்கிறதே?"

"அதான்... முன்ன ஒரு நாள் புன்புன் பாலத்தில் ஒரு குண்டு வெடிச்சு பையன் ஒருவன் செத்துப் போனான். முஸல்மான்கள் தான் இப்படிப் பண்ணுகிறார்களா மாஜி?"

"முஸல்மான்களா!"

யமுனா திகைக்கிறாள். "சே சே, அவங்கல்லாம் இல்ல. இது யாரோ?"

"மாஜி, கல்கத்தாவில் இப்படித்தான் நடக்கிறதாம். புரட்சி வர, எனக்கு ரெண்டு மாசமாப் பணம் வரலே. இந்தக் குழந்தைகளின் தகப்பன் அப்படியெல்லாம் தாறுமாறாகப் போகிறவர் அல்ல. நான் தினமும் காலையில் கங்கையில் ஸ்நானம் செய்து பிரார்த்தனை செய்கிறேன்..." என்றுரைக்கிறாள் சம்பா.

ஓடும் கங்கையன்னையிடம் தம் ஊமைத் துயரத்தைத் தூதுவிடும் அவளைப் பார்க்கையிலேயே கண்கள் கசிகின்றன.

அழுக்கு வெள்ளைச் சேலை. சேலை முக்காட்டின் ஒரு புறம் எண்ணெய்ப் பளபளப்பில்லாத கருங்கூந்தல் அவிழ்ந்து தொங்குகிறது. வகிற்றில் நேர்க்கோடாய்க் குங்குமம்.

யமுனாவுக்கு அவளைப் பார்த்தால் சாரதாமணி அன்னையை நினைக்கத் தோன்றுகிறது.

அவள், சின்னஞ்சிறு இருள் மண்டிய தனி உலகில் ஏழு மக்களுடன் சுழலுகிறாள்.

யமுனாவின் உலகோ எல்லைகளற்ற பெருவெளி, ஆனால் அது சூனியம் போலிருக்கிறது; பாலையாக இருக்கிறது; குரல் கொடுத்தால் எதிரொலி வராத வறட்சி லட்சிய உலகம்!

அவள் நடந்து நடந்து சோர்ந்து போகிறாள்.

"மாஜி!"

"என்ன சம்பா?"

"என் பெரிய பிள்ளையைப் பற்றி உங்களிடம் சொல்லியிருக்கிறேனில்லையா?"

"ஆமாம், கல்யாணம் கட்டி, பெண்சாதி ரெண்டு வருஷத்தில் செத்துப் போச்சு? வேற கட்டணும்னே."

"இப்பத்தான் ரிக்ஷா இழுக்கப் போகிறான்; சில நாளைக்குக் குடிச்சிடறான். பொறுப்பு வராத பையனுக்கு மறு கல்யாணம் எதுக்குன்னேன்... அவன் இப்ப பாதி நாளும் வீட்டுக்கே வரதில்ல மாஜி!"

"குடித்து விடுகிறானா?"

"முன்னெல்லாம் மாஜி, வீட்டுக்குக் காசு ஏண்டா குடுக்கலேன்னா சண்டை போடுவான். இப்ப பொறுத்திரு, நமக்கெல்லாம் நல்ல காலம் பிறக்கப் புரட்சி வரப்போகிறதுன்னு என்னென்னவோ பேசறான். எங்க சந்துச் சுவரில் 'இன்குலாப்! ஸிந்தாபாத். ஏ முதலாளி நாயே, உன் தோலை உரித்து நாங்கள் செருப்பணிவோம்'ன்னெல்லாம் எழுதியிருக்கிறானாம். அதுல், நான் கூடப் படிக்கிறேங்கறான். எனக்குப் பயமாயிருக்கு மாஜி. அவன் தகப்பனிடம் சொல்லிக் கண்டிக்கச் சொல்லலாம்னா - தகப்பனிடமிருந்து கடிதாசி கூட இல்லை - பணமும் வரலே..."

"கவலைப்படாதே சம்பா, உன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதிப் போடலாம். உன் பையன் எங்கே ரிக்ஷா வச்சிட்டிருக்கிறான்; கோர்ட்டுப் பக்கமா, பங்கிபூர் பக்கமா?"

"ஸ்டேஷன் பக்கம் மாஜி..."

"அவன் வீட்டுக்கு வரும் நேரத்தில் சுனிலிடம் சொல்லி அனுப்பு. அவனிடம் நான் வந்து பார்த்துப் பேசுறேன்."

"மாஜி கங்காராம்ஜி என்னென்னவோ சொல்லுகிறார்..."

"யார் கங்காராம்ஜி?"

"கரிக்கடைக்காரர்..."

"நீ அதெல்லாம் கேட்டுக் கவலைப்படாதே. உன் போன்ற தாயாருக்கு இனியும் கஷ்டங்கள் வருவதற்கில்லை. தெய்வம் துணை... ஆம், தெய்வம் துணையிருக்கிறது."

வெறி வந்தாற்போல் அந்தச் சொற்களே திரும்பத் திரும்ப வருகின்றன! சந்தில் வண்டிச் சத்தம் கேட்கிறது.

தொழிற்சாலை லாரி முக்கி முனகி மலை ஏறுவது நினைவுக்கு வர ஒலிச் சிதறல்கள்; பிளிறல்கள்...

சரக் சரக்கென்ற ஜோட்டொலிகள்.

துரையின் காலணிகள் இவ்வளவு வன்மையாக ஒலிப்பது வழக்கமில்லையே?

பதற்றத்துடன் அவள் வாயிலுக்கு வருகிறாள். வானில் மேகங்கள் குவிந்திருக்கின்றன; நிலவு தெரியவில்லை. அவள் வீட்டை நாடித்தான் வண்டி வந்து நிற்கிறது. ஸ்டேஷன் வாகனம் போல் தோன்றுகிறது.

இறங்கி வருபவர்கள் போலீஸோ?

இல்லை. சாதா உடை அணிந்தவர்கள்தாம்.

"...துரைராஜ் வீடு..."

"இதுதான்... நான் தான் அவருடைய மனைவி. என்ன சமாசாரம்...?

"துரைராஜுக்கு... விபத்தில் கொஞ்சம் காயம்பட்டிருக்கிறது... நீங்கள் ஆஸ்பத்திரிக்கு வருகிறீர்களா...?"

"விபத்தா? என்ன... என்ன விபத்து?"

"ஓ... ஸாரி. இங்கே விருந்து கூட்டத்தில் குண்டு விழுந்தது. விஷமம் யாருடையதென்று தெரியவில்லை. மூன்று பேருக்குக் காயம். உயிருக்கு ஆபத்தில்லை. நீங்கள் கவலைப்பட வேண்டாம்..."

பளாரென்று கன்னத்தில் அறை விழுந்ததும் புலன்கள் மழுங்கி கொய்யென்ற ரீங்காரம் செவிகள் கேட்கும் திறனின் கழுத்தைப் பிடித்து இறக்கி விட்டாற் போலிருக்கிறது. சொற்கள் உருவாகாமலே கரைந்து போகின்றன.

கதவைப் பூட்டுமுன் சம்பா கைகளைப் பிசைந்து கொண்டு உடல் நடுங்க மனம் பதற வெளியே நிற்கிறாள்.

"மாஜி!" என்ற குரல் பிசிறு தட்டினாற் போல ஒலிக்கிறது.

யமுனா தன் நெஞ்சைத் தொட்டுக் கொண்டு கண்ணீரை விழுங்கிக் கொள்கிறாள்.

"ஒண்ணும்மில்லே, போ. குழந்தைகள் தனியாக இருப்பார்கள். வீட்டுக்குப் போ!"

பாலைவனப் பொட்டலில் மூடுவண்டி இருட்டுக்குள் வைத்து அவளை எங்கோ கொண்டு செல்கிறது.

அத்தியாயம் - 25

பட்டை உரிக்கும் வெய்யில் புழுக்கி எடுக்கும் வெய்யிலாக மாறுகிறது. கங்கையம்மை அப்படியே வற்றி மெலிந்தால் எப்படி? வானவன் கண்ணாமூச்சியாடிக் களிக்கிறான். புழுக்கம் தாளாமல் வெட்ட வெளியை நாடி ஏழை மக்கள் உறங்கக் கண்ணயரும் நேரம் பார்த்து மேகங்களைப் பொழியச் செய்து சீரழிக்கிறான்.

குடிசைக்குள் முடங்கலாமென்றாலோ, மாதக் கணக்காய் பகலெல்லாம் கொண்ட சூட்டுக்கு இது போதுமோ என்று பூமித்தாய் வெய்துயிர்க்கும் ஆவிப் புழுக்கம்.

கதவுகளை அடைத்துக் கொண்டு கம்மென்று உட்கார இயலவில்லை. கதவுகளைத் திறந்தால் வெய்யோனின் கொடுங்கிரணங்கள். இந்த வெம்மையும் புழுக்கமுந்தான் இப்படி உடல் நிலையில் மாறுபட்ட சுகக்குறைவைத் தோற்றுவிக்கிறதோ? யமுனா, இப்படித் தன்னுணர்வே பாரமாகும் ஒரு சுகக் குறைவை அநுபவித்ததில்லை. எத்தனை மனக்கிலேசம் இருந்த போதிலும் சிட்டுக்குருவி போல் இயங்க உடல்நலம் இருந்திருக்கிறது.

இப்போது காலையில் எழுந்திருக்கும் போதே ஓர் அயர்வு. படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் வரவில்லை. உணவு செல்லவில்லை. உள்ளத்தின் உள்ளே இனம் புரியாத கிளர்ச்சியின் சுவடு தெரிகிறது. எனினும், காலையில் எழுந்து பம்பரம் போல் இயங்குகிறாள். உணவு தயாரித்துக் கொண்டு வெய்யில் உறைக்குமுன் ரிக்ஷாவைப் பிடித்து மருத்துவமனைக்கு விரைகிறாள்.

மேலே பெரிய விசிறி சுழன்றாலும் மூச்சிரைக்கும் அயர்வுக்கு ஆறுதலாக இல்லை.

துரை ஒருக்களித்துப் படுத்திருக்கிறான். போர்வையில் படிந்த அவனுடைய வடிவம் இடுப்புக்குக் கீழாகச் சீராக வந்து முடியும் இடத்தில் வலப்பக்கப் பாதம் குறையாக இருப்பது தெரியாமல் இல்லை. சாப்பாட்டுக் கூடையை அருகில் வைத்துவிட்டுக் கட்டிலில் அருகே அமர்ந்து கொள்கிறாள். முகம் தாழக் கவிழ்த்து கிடக்கும் நெற்றியில் அன்போடு கை வைத்து உலகத்து இனிமை எல்லாம் தேங்கப் புன்னகை புரிகிறாள்.

அந்தப் புன்னகையில் அவனுடைய முகத்தில் ஒளி பரவவில்லையே? வெற்றிடத்தை நோக்குகின்றன விழிகள்.

"ராத்திரி தூங்கினீர்களா?"

புருவங்கள் நெரியும் முகம்; மலர்ச்சி பறிபோன முகம்.

"உம்..."

"காலையில் ரொட்டி பால் சாப்பிட்டீர்களா?"

"இதெல்லாம் என்ன கேள்வி. சும்மா தொண தொணன்னு! நீ இப்ப புருஷனை நல்லாக் கவனிக்கிறேன்னு எல்லாருக்கும் தெரியணும். இல்லே?"

"அப்படியெல்லாம் ஒண்ணும் நினைக்க வேணாம். நீங்கள் வீட்டுக்கு வந்தப்புறம் தான் தெரியப் போகுது யாரை யார் கவனிக்க வேணும்னு..."

குரலில் கபடத்தைத் தேக்கி வைத்து அவள் மாயப் புன்னகை செய்கிறாள்.

ஆனால் அந்தக் கபடத்தைப் புரிந்து கொள்ளவோ ரசிக்கவோ அவன் ஆர்வம் காட்டவில்லை.

"இத பாருங்க. நான் உங்களுக்கு ஒரு சமாசாரம் சொல்லணும்..."

சொல்ல வேண்டும் என்று விரும்புபவள், அவனை நேருக்கு நேர் பார்க்கத் துணிவின்றித் தலையைக் குனிந்து கொள்வானேன்? முகத்தில் செவ்வொளி பரவ நிலத்தை நோக்குவானேன்?

"இதை எல்லாம் நான் ரசிக்கவில்லை, ரசிக்கவில்லை... தெரிந்ததா?" என்று பொங்கி விழுபவனாக அவன் மௌனமாக எங்கோ பார்வையைப் பதித்திருக்கிறான்.

"நீங்க ஏன் மனசைச் சும்மா கஷ்டப்படுத்திக்கிறீங்க? நான் இருக்கும் போது நீங்க ஏன் வேதனைப்படணும்?"

"....."

"சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?"

இந்தப் பரிவுக்கும் அன்புக்கும் எதிரொலியாக வெறுப்பை உமிழ்கிறான்.

"இனிமேல் உன்னை எதிர்பார்த்துத்தான் கிடக்கணும். உனக்கு இப்ப திருப்திதானே? இனிமேல் நீ கொடுக்கும் கஞ்சியைக் குடிச்சிட்டு முரட்டுத் துணிக்கும் உன் கையை எதிர்பார்த்துகிட்டுக் கிடப்பேன்..."

"அடடா நீங்க தானே என் கையை எதற்கு எதிர்பார்க்கணும்? டாக்டர் தான் சொல்லிட்டாரே, வித்தியாசமே தெரியாதுன்னு? டக்டக்குன்னு நடந்து வரப்போறீங்க. சும்மா ஏன் மனசை அலட்டிக் கொள்ளணும்?"

அவள் பேசி வாய்மூடு முன் அறைக்கு வெளியே காலணி ஒலிகள் கேட்கின்றன. டாக்டர் வருகிறாரோ?

அவள் எழுந்து நிற்கிறாள்.

வருவது டாக்டரல்ல.

"ஓ... இதோ இருக்கிறாளே? யமுனாதான்!"

யமுனாவின் தோள்களை ஓடி வந்து தழுவுபவள் நீருதான்!

'நீரு! இவளைப் பார்த்து எத்தனை நாட்கள் ஆயின? கொடியுடலும் மின்னும் சருமப் பொலிவும் கொண்ட நீருவா?'

'எப்படிப் பருத்துப் போயிருக்கிறாள்! கன்னங்களில் சொறிசொறியாய்ப் பருக்கள்... கனத்த பூச்சுக்கள். இதழ்கள் சோகையான வாடாமல்லிச் சாயத்தில் தோய்ந்திருக்கின்றன. தலைக்கொண்டை சட்டியைக் கவிழ்த்தாற் போல் இருக்கிறது. துணி உறையில்லாத தோள்களைப் பருமனாகக் காட்டிக் கொண்டு, முன் வயிற்றையும் பின் முதுகுச் சதையையும் விலக்கிக் கொண்டு இழியும் பூச்சோலையுடன் நீரு!... பின்னே அவள் கணவன் தான்.

அவள் அமர்ந்திருந்த ஆசனத்தில் அவரை உட்காரச் சொல்லி, துரை பணிவுடன் படுக்கையிலமர்ந்து புன்னகை செய்கிறான்.

"நான் சொல்லல்லே? எனக்கு அன்னிக்கே இருட்டிலேயே யமுனான்னு தெரிஞ்சுப் போச்சு..."

"இவர் தான் யமு, டைரக்டர் சியாம்சுந்தர்னு சொல்வேனே..." துரை குறுகிக் கூசினாற் போல் முடிக்காமல் நிறுத்துகிறான்.

"இவள் யமுனா; நீங்கள் பார்த்திருக்கிறீங்களா?..." என்று நீரு கையை இன்னும் அழுத்தமாகப் பிணைத்துக் கொள்கிறாள்.

"நீங்கள் இந்த ஊரிலா இருக்கிறீர்கள்? இத்தனை நாட்களாகத் தெரியாமல் போச்சே, நீரு?" இது யமுனா.

"நாங்கள் இங்கெங்கே இருக்கிறோம்? இவர் இத்தனை நாளும் சொல்லவேயில்லை. முன்பு கூட ஒரு பார்ட்டியில் பார்த்திருக்கிறேன். அன்றைய பார்ட்டிக்குக் கூட நீ வராதது நல்லதாய்ப் போச்சு, எனக்கு ரொம்பப் பயமாக இருந்தது, ஏண்டி? ஒரு நடை டில்லிக்கு வாயேன்? ஒரு மாசம் தங்கறாப்போல?"

"அப்ப டில்லியில் இருக்கிறீர்களா? ஊரில் பெரியப்பா எல்லாம் சுகமா நீரு?"

"நல்ல சுகம். அது சரி எத்தனை மாசம் இது...?" என்று வினவுகிறாள் நீரு வெளிப்படையாக.

யமுனாவுக்கு முகம் சிவக்கிறது.

"இங்கே எங்கே தங்கியிருக்கிறீர்கள்?"

"பேச்சை மாற்றாதே. நான் கேட்டதற்குப் பதில் சொல்லு, எத்தனை மாசம்?"

"எனக்குத் தெரியாது."

"திருடி... இப்ப நினைச்சாக் கூட நம்ப முடியலே. எனக்கும் அவருக்கும் ஒரு மாசமா சண்டை, நீ கலியாணம் பண்ணின்டிருப்பேன்னு என்னாலே நம்ப முடியலே. அவரோ அன்னிக்கு ஆஸ்பத்திரியில் பார்த்த போதே நீதான்னுட்டார்."

யமுனா மௌனப் புன்னகையுடன் நிற்கிறாள்.

"தாத்தாவுக்குத்தான் ரொம்ப வருத்தம். எங்க கல்யாணத்துக்குக் கூட நிற்காம ஓடிப் போனியே? ஏய், அந்த இந்துநாத் தெரியுமோ? காங்(ஓ)வில் லீடர். அது இப்ப எதுவோ வேணும்னு கூச்சல் போட்டு ஜெயிலுக்குப் போயிட்டு வந்துட்டது..."

'இந்த நீரு முன்பெல்லாம் இப்படிப் பேச மாட்டாளே?'

"அது சரி; நீ இப்ப எப்படி இருக்கே?" என்று யமுனா பேசத் தெரியாமல் சங்கடப்படுகிறாள்.

"எப்படி இருக்கேன்னா? இன்னும் மூணு நாலு வருஷம் ஹும் - பேசக் கூடாது. இவர் கூட ஊர் ஊராகப் போயிட்டிருக்கேன். பார்ட்டிக்கு வரலேன்னா மூக்குக்கு மேல் கோபம் வந்துடும். அடி, நீ வாடி டில்லிக்கு! உங்கிட்ட ரொம்பப் பேசணும்!"

"சரி..."

துரையிடம் அவர் என்ன சொன்னாரென்று தெரியவில்லை. முதுகைத் தட்டித் தெம்பு சொன்னார்.

"ரொம்ப தாங்க்ஸ் ஸார். இப்படியெல்லாம் ஆகும்னு கனவிலும் நினைக்கல்லே..."

"அதுதான், யாரோ சாதுவை அரஸ்ட் செய்திருக்காங்களாம்; இன்னும் யாரையோ தேடறாங்களாம். என்னமோ நடக்கிறது. ஓ.கே. நீ கவலைப்படாதே. நீரு இனிமே குடைந்து தள்ளிடுவாள். அவளுக்கு வேண்டியவராகப் போனபிறகு..."

துரை சிரிக்க முயல்கிறான். ஆனாலும் ஒளியில்லை.

நீரு கையைப் பிரித்து, அமுக்கிவிட்டு 'பை பை' என்று விடை பெறுகிறாள். சியாம்சுந்தர் கை கூப்புகிறார்.

அவர்கள் வெளிச் சென்ற பிறகு அவளுக்குச் சில கணங்கள் தலை சுற்றுவது போலிருக்கிறது. கட்டிலைப் பற்றிக் கொண்டு நின்றவாறே வாயிலைப் பார்க்கிறாள்.

பணிப்பெண் ஒருத்தி புன்னகையுடன் உள்ளே வருகிறாள். துரைக்கு ஆரஞ்சு ரசம் கொண்டு வருகிறாள்.

அவன் அதைப் பருகுகையில் அவள் போர்வையை விலக்கி, கட்டுப் போட்டிருக்கும் குறைக்காலை மெள்ளத் தொட்டுப் பார்த்துவிட்டு மூடுகிறாள்.

"புண் காய்ந்து போய்விட்டதல்லவா?"

"ஆறிப் போய்விட்டது. செயற்கைப் பாதத்துக்கு அளவு கொடுக்கலாம் என்று கூட டாக்டர் நேற்று சொன்னார். தொடக்கத்தில் நடக்கப் பயிற்சி வேணும். பிறகு சரியாகப் போகும்."

பிறகு எதையோ நினைத்துக் கொண்டாற்போல் சிரித்துக் கொண்டு, "வாழ்க்கை எப்போதும் இனிமையானது; வாழத் தகுந்தது, போராடத் தகுந்தது" என்று சொல்லிவிட்டுப் போகிறாள்.

யமுனா என்ன பேசுவதென்று தெரியாமல் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். கறுவலான சிறிய முகம்! அடர்ந்த முடி - அவனுடைய தனி அழகு. அதைக் காலையில் பணிப்பெண் வாரியிருப்பாளாக இருக்கும். அவனாக முடியைச் சீவிக் கொண்டிருக்க மாட்டான். முகத்தில் ஏன் இத்தனை வெறுப்பும் நிராசையும்?

"நீங்கள் இந்த வேலை போய்விடுமோன்னு கவலைப் படறாப்போல இருக்கு. அதற்காகவெல்லாம் கவலைப்பட வேண்டாம். இதற்காகவா மனசு ஒடிஞ்சு போறது? இப்போ என்ன வந்துவிட்டதாம்?"

"உனக்கு நான் தனித்து நிற்க முடியாமல் முடங்கியதில் திருப்திதானே? நீ எல்லாம் பேசுவாய். என் நஷ்டம். இழப்பு வாழ்க்கையில் நான் நொண்டி..."

அவள் சட்டென்று அவன் வாயைப் பொத்துகிறாள்; "நீங்கள் இப்படிப் பேசுவதைக் கேட்கவா நான் இன்று வந்து உட்கார்ந்திருக்கிறேன்?"

"எப்போதுமே நான் உனக்குச் சமமில்லை என்று என்னைப் பொருட்டாக்க மாட்டாய். இனி நான் ஊனம் வேறு..."

"ஆண்டவனே!"

"வாழ்க்கையைப் பற்றி நீ மகோன்னத கனவு கண்டிருப்பாய். உன் இலட்சியங்களுக்குக் கைகொடுத்து உதவச் சாதாரண ஆசாமியாக வேணும் இருந்தேன். இனி அதுவும் இல்லே. சாதாரணத்துக்கும் கீழே."

அவன் மனம் எப்படி வளைந்து போயிற்று? ஏற்கனவே வளைந்திருந்ததுதான்? இப்போது சட்டக் கண்ணாடி உடைந்த பின் தெரியும் உண்மை ஓவியமாய்த் தெரிகிறதோ?

"இப்போதே டைரக்டரின் மிஸஸ் கேட்டாங்களே, போயும் போயும் இவரையா கல்யாணம் பண்ணிண்டே என்ற மாதிரி? இனிமேல் உன் உறவுச் செல்வாக்கினால் அவர்கள் தயவு அதிகமாகும். எனக்கு மேசையடியில் உட்கார்ந்திருக்கும் வேலை தருவார்கள்..."

"நீங்கள், அப்படி யார் தயவுக்கும் காத்திருக்க வேண்டாம்."

"பின் வேறு வழி...?"

"வழியொண்ணும் இல்லாமப் போயிடலே. நீங்கள் இருட்டுக்குள் இப்படி எல்லாம் குருட்டு யோசனை செய்ய வேண்டாம்! நீங்கள் மோசடியும் பொய்யும் புளுகுமாக இந்தக் கம்பெனியில் வேலை செய்ய போகாதது நல்லதே, முதலில் வீட்டுக்கு வந்து உடம்பைத் தேற்றிக் கொண்டு பிறகு யோசனை செய்யலாம்..."

"என்ன யோசனை? நீ சம்பாதித்துக் கொண்டு வருவாய் நான் வீட்டில்..."

"நானொன்றும் இப்போது வேலை தேடிப் போவதற்கில்லை!... என்னங்க..."

குரல் தாழ்கிறது; முகம் சிவக்கிறது. "நீரு கூடக் கேட்டாளே! நீங்க கேட்கலே!... எனக்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் சங்கடமாக இருக்கு..."

மூக்கு நுனி சிவக்க, கண்கள் கோடியில் ஈரத்தை கக்குகின்றன. அவன் சற்றே திடுக்கிட்டாற்போல் பார்க்கிறான். முகம் சிறுக்கக் கருமை தீவிரமாகிறது.

"என்ன சொல்றே நீ?"

"வேலைக்குப் போக முடியாது, நாலஞ்சு மாசத்துக்காக யார் வேலை கொடுப்பாங்க இப்ப?..."

"ஓகோ!... நான் நினைச்சேன்..."

கனத்த படுதாவைத் தொங்கவிட்டாற் போல் முகம் நிச்சலனமாகிறது. இந்த உதாசீனம் அவளால் தாங்கக் கூடியதாகத்தானில்லை.

என்றாலும்... இது தெய்வசித்தம் என்று அவள் நம்புகிறாள். குழந்தையைத் தாய் கோபித்தால் தந்தையிடம் ஆதரவை நாடிப் போகும்.

அவளுக்கு இப்போது தாயின் மடியில் விழுந்து தன் குறைகளைச் சொல்லிக் கதறவேண்டும் போலிருக்கிறது.

அந்த பசிய மலைகள், கொடிகள், செடிகள், மாலை நேரப் பஜனை, எண்ணெய் வழியும் முடியை இழைய இழைய வாரிப் பின்னிக் கொண்டு இருண்ட மேனிகளாயினும் கண்களில் புத்தொளியைத் துலக்கிக் கொண்டு அணி அணியாய்ப் பள்ளியை அலங்கரிக்கும் இருளக் குழந்தைகள் - பருவமழை பொழியுமுன் வசந்தத்தில் கானகத்திலிருந்து வரும் வண்ண மணங்கள் - எல்லாம் ஆற்றாமையையும் ஆவலையும் கிளர்த்தும் ஆற்றல் வாய்ந்த புயலாய் நினைவில் சுழலுகின்றன.

பவானியில் வரும் வெள்ளந்தான் எத்தனை கம்பீரமாக இருக்கும்! இந்தக் கரும்புழுதி அங்கு இல்லை. இந்த வளமை அங்கு இல்லை. ஆனால் அது அவள் சின்னஞ் சிறுமியாய் நடை பழகிய நாளிலிருந்து உண்டு உறங்கி ஒட்டிய சாரம்; காற்று; ஊட்டம்.

இப்போது அவளுக்கு அந்த மண்ணில், அந்தக் கானக மூலையில் அம்மையின் மடியில் புரளவேண்டும் என்ற வேட்கை மிகுகிறது. அவளுடைய லட்சியப் போராட்ட வேட்கை - கங்கைக் கரையின் வறுமையைக் கண்டு கசிந்த ஈரம் ரத்த வெறியின் சிறுமைகளைத் துடைக்க வேண்டும் என்ற பேராவல் எல்லாம் ஒட்டாத பழுப்புக்களைப் போல் உதிருகின்றன.

'அம்மா!... அம்மா!... அம்மா!...'

அப்பாவின் அறைக்குள் நுழைகையில் இலேசாக மூச்சில் இழையும் நச்சுக் கொல்லி மணமும் கூட இனிமையாக இருக்குமே!

"என்ன, எங்கேயோ பார்க்கிறே?" என்று துரை மௌனத் திரையைக் கிழிக்கிறான்.

நினைவுலகில் விழ நெடுமூச்சுப் பிரிகிறது. "ஒண்ணுமில்லீங்க..."

"இப்ப நான் ஒண்ணு சொல்வேன். நீ கேட்பியா?"

"சொல்லுங்கள், கேட்கிறேன்..."

"நமக்கு இப்ப... இது வேணாம் இப்பென்ன? எப்பவுமே வேணாம். புருஷன் நொண்டிங்ற பேர் போதும். தகப்பன் கால் ஊனங்கற பட்டம் எனக்கு வேணாம். எனக்கும் சிறுமை; அதற்கும் சிறுமை... என்ன?"

இடி விழுந்த அதிர்ச்சியுடன் அவள் அவனையே பார்க்கிறாள்.

"நான் சொல்றதைக் கேட்பியா?"

கண்களில் வெம்பனி நிறைகிறது. இதற்கு மறுமொழி கூற அவளுக்குத் தெம்பில்லை.

"என்ன, பதிலையே காணோம்?"

"நான் பதில் சொல்ல முடியாதபடி நீங்க பேசறீங்க. சற்று முன் அந்த நர்ஸ் என்ன சொன்னாள்? உயிர் இனிமையானது; அருமையானது. வாழ்க்கை எப்பாடு பட்டும் போராடியும் வாழத் தகுந்தது என்றாள். நீங்க இப்போது மனது பலவீனப்பட்டிருக்கிறீங்க. இதைப் பற்றி இப்போது பேச வேண்டாம். சாப்பாடு எடுத்து வைக்கிறேன் முதலில்."

"நீ நான் சொல்வதை முன்பே கேட்கமாட்டாய். இனி உனக்கு நான் பொருட்டா?"

ஆண்டவனே! தன் வயிற்றிலிருக்கும் மகவுக்குத் தீங்கு வரலாகாதென்று கொடிய ரண சிகிச்சையையும் மயக்க மருந்தின்றிப் பொறுத்துக் கொள்ளும் தாயாரைப் பற்றிப் பெருமைப்பட்ட பாரதம் இன்று மடிந்து விடத்தான் வேண்டுமா? வெறும் களியாட்டங்களுக்காகத் தம் உயிர்த்துவத்தையே அழித்துக் கொள்ளும் பெண்களா உன் மண்னுக்கு உப்பைத் தருவார்கள்...?

"ஏனிப்ப அழறே? இதற்குத்தான் நீ இங்கே வரியா?"

அவள் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள்.

இது முள் நிறைந்த பாதை; திரும்ப முடியாத குறுகிய சந்து. இருளும் கூட வருகிறது.

"நான் அழமாட்டேன்; ஆண்டவனே. எனக்கு நம்பிக்கையைக் கொடு! தைரியத்தை தா!"

மாலை வெயில் இறங்கும் வரையிலும் அவள் அங்குதானிருக்கிறாள். பிறகு அவனுடைய அழுக்குத் துணிகள், சாப்பாட்டு அடுக்கு முதலிய சாமான்களைச் சுமந்து கொண்டு வெளியே வருகிறாள்.

ரிக்ஷா ஓட்டும் இளைஞனைக் கண்டதும் யமுனாவுக்குச் சம்பாவின் புதல்வனுடைய நினைவு வருகிறது. அவனைப் பற்றி விசாரிக்கவே இல்லையே?

குடுக் குடுக்கென்று வண்டி செல்கிறது.

வண்ணமழிந்த பஸ்கள், புழுதி, வெய்துயிர்த்துக் கொண்டு ஓடும் கங்கையை மறைக்கும் கடைகள், சாக்கடையின்மேல் பலகைகளில் ஈ மொய்க்கப் பண்டங்களின் அடுக்கு வரிசைகள், அழுக்கு உடையும் முண்டாசுமாக ராம்தானா லட்டுவைக் கண்ணாடிப் பெட்டிக்குள் காட்டிச் செல்லும் எளிய வியாபாரி - சாணிக்கூடை ஏந்தி நடுத்தெருவில் செல்லும் ஏழைச் சிறுமியர் - ஒளியடங்கிப் போன முகங்கள். கார்கள் - பிதுங்கும் சதைகள் சாபங்கள் - சினிமா சுவரொட்டிகள்...

முதலாளித்துவம் மனிதனை அடிமையாக்கும்;
பொதுவுடைமை மனிதனை மிருகமாக்கும்.
இரண்டிலும் சேராதீர் மக்களே!

இப்படி ஓர் எச்சரிக்கை கறுப்பு மையால் சுவர்களில்.

கம்யூனிஸ்ட் நாயே, நாட்டைக் கெடுக்காமல் ஓடிப்போ!
முதலாளித்துவ மாமாவின் கைப் பொம்மையாகாதே!
மக்களுக்காக மக்கள் நடத்தும் அரசுக்குப் புரட்சி!

இதெல்லாம் இந்த ரிக்ஷா இளைஞனுக்குப் படிக்கத் தெரியுமோ? காந்தி மைதானத்தைச் சுற்றி என்ன புழுதி!

மைதானத்தைச் சுற்றினாற்போல் அவன் ரிக்ஷாவைக் கொண்டு வருகிறான்.

அண்ணல், நாற்பத்தேழில் இந்தக் கங்கையில் மனித ரத்தம் தெறிக்கக் கலங்கியபோது இந்த மைதானத்தில் தான் வந்து பிரார்த்தனை செய்தாராம்.

"ஈசுவர அல்லா தேரா நாம்! ஸப்கோ ஸன்மதி தே பகவான்!" என்று அவர் உருகிக் கரைந்ததை இந்தக் கங்கையும் இந்த மண்ணும் செவியுற்றிருக்கும்.

"இப்போது நீங்கள் இருந்தால் எப்படி வழி காட்டுவீர், அண்ணலே!"

ரிக்ஷாக்காரனை நிறுத்தச் சொல்லி அந்த மண்ணைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொண்டு வரவேண்டும் போலிருக்கிறது.

"ரூகோ, ருகியே பாய்சாப்!"

இந்த மரியாதைக்குத் திடுக்கிட்டாற்போல் அவன் நிறுத்துகிறான்.

ராஜஸ்தான் லாட்டரி முடிவு வெளியாயிருக்கிறது. "பத்து லட்சம், லட்சம்!" என்று சிறுவன் பத்திரிகை விற்கிறான். ஆவலுடன் ஒரு ரிக்ஷாக்காரன் சில்லறையைக் கொடுத்து அந்தப் பத்திரிகையை வாங்குகிறான். மைதானத்துள் மஞ்சட் கொடிகளைப் பிடித்துக் கொண்டு அரை நிஜாரும் முண்டா பனியன்களுமாக ஒரு இளைஞர் அணிவகுப்பு நடக்கிறது.

இது ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த படை; இன்னொரு அரசியல் கட்சியைப் பயமுறுத்த. இங்கே படைப் பயிற்சி நடக்கிறது.

உள்ளே அடி வைத்தவள் நடுவில் சென்று அந்த மண்ணைத் தொட்டுக் கண்களில் ஒத்திக் கொள்கிறாள்.

தனக்குப் புத்தி சுவாதீனத்தில் இருக்கிறதோ என்று தன்னையே கேட்டுக் கொண்டவளாக ரிக்ஷாவில் வந்து ஏறுகிறாள்.

வீட்டுவழி செல்லும்போதே சம்பா கண்களில் படுகிறாள்.

"மாஜி... சாப் எப்படி இருக்கிறார்?"

"நன்றாக இருக்கிறார். சம்பா, உன் பையன்... வரவேயில்லையா அவன்?"

"மாஜி... அவன்... அவனைப் போலீஸ் பிடிச்சுப் போயிட்டுது."

கதவைத் திறக்கச் சாவி எடுப்பவள் திடுக்கிட்டாற் போல் திரும்பிப் பார்க்கிறாள்.

"எப்போது சம்பா? நீ என்னிடம் சொல்லவே இல்லையே."

"பத்து நாளாகிறது. ரிக்ஷாவில் சோதனை பண்ணினார்களாம். வீட்டுப் பக்கங்கூட வந்தாங்க. ஸ்டேஷன் பக்கமே வச்சுப் புடிச்சிட்டுப் போயிட்டாங்க..."

"அடடா... எனக்குத் தெரியாதே?"

"உங்ககிட்டச் சொல்லி என்ன செய்யட்டும் மாஜி? என் தலைவிதி..."

பதிலளிக்க யமுனாவுக்குச் சொற்களே அகப்படவில்லை. ஊமையாகச் செயலற்று நிற்கிறாள். பிறகு கதவைத் திறக்கிறாள்.

சந்து வழியாக நாள்தாளைப் போட்டுவிட்டுப் போயிருக்கிறான். சம்பா அதை எடுத்து மேசை மீது வைக்கிறாள்.

முகப்பில் அச்சாகியிருக்கும் பெரிய படம் அவள் கண்களைக் கவருகிறது. யமுனா சட்டென்று எடுத்துப் பார்க்கிறாள்.

'அமைதி அணிவகுப்பு...'

அமைதி குலைந்து ரத்தவெறி மிகுந்து வரும் வங்கத் தலைநகரின் தெருக்களில் அமைதித் தொண்டர்களின் ஊர்வலம்...

முன்னதாக அம்மாவனின் முகம் தெரிகிறது.

எண்ணங்களில் ஆயிரமாய் அலைகள் புரள்கின்றன.

"மாஜி...!" என்று சம்பா குரல் கொடுக்கிறாள்.

"என் குழந்தைகளின் தகப்பன் வந்திருக்கிறார் மாஜி... கதவடைப்பினால் இரண்டு மாச சம்பளமில்லாமலிருந்து அப்புறம் பணம் கிடைச்சு வந்திருக்கிறார் மாஜி..."

கவலை கரைந்த கண்ணொளியும் இன்பக் கண்ணீருமாகச் சம்பா பத்திரமாகச் சேலை மடிப்பில் செருகிக் கொண்டிருக்கும் இலைப் பொதியை எடுத்து அவளிடம் கொடுக்கிறாள்.

"குழந்தைகளுக்கு வாங்கி வந்தார் மாஜி; ஏழை, நான் உங்களுக்குக் கொஞ்சம் கொண்டு வந்தேன் மாஜி... இந்தச் சமயத்தில் நாவுக்கு..." இசைக்கருகில் தேன் வண்ணக் கண்ணாடி பத்தைப் போல், இறுகிய மாங்கனிச் சாறு...

கிள்ளி அவள் வாயில் போட்டுக் கொள்கிறாள்.

புளிப்பும்... இனிப்பும்.

ஊனோடு, உயிரோடு கலப்பது போல் அவளுடைய அன்பே உமிழ்நீரில் கரைகிறது.

"நாவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறதா மாஜி? கதவடைப்பினால் இரண்டுமாசம் சம்பளமில்லாமலிருந்து அப்புறம் பணம் கிடைச்சி வந்திருக்கிறார் மாஜி..."

அந்தச் சமயத்தில்...

பரிவும் பாசமும் கனிவும் மிஞ்சுகின்றன.

சரேலென்று யமுனா அவளுடைய கைகளைப் பற்றிக் கொள்கிறாள். எனினும் உணர்ச்சியை அடக்க முடியவில்லை.

"சம்பா, இனி என்னை 'மாஜி' என்று அழைக்காதே! 'பேடி'* என்று அழை..."

(* பேடி - மகள்)