verunrivittadu chipko

வேரூன்றிவிட்டது சிப்கோ

மலைகளில் நடக்கும் இந்த கதை, வீரமும், விவேகமும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதைச் சொல்லுகிறது. போட்டியா இனத்தைச் சேர்ந்த டிச்சி என்னும் சிறுமி அவள் நேசிக்கும் மரங்களைக் காப்பாற்ற சிப்கோ இயக்கத்தில் பங்கேற்கிறாள். மரங்கள்தான் எல்லா வளங்களையும் தருகிறது என்பதை உணர்ந்தவர்கள் அந்த கிராம மனிதர்கள். அலக்நந்தா பாயும் இமயமலைப் பகுதியில் மிக விரைவாக காடுகள் அழிக்கப் பட்டதால் 1970 ல் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மரங்களை அணைத்துக் கொண்டு அவைகளைக் காக்கும் ஒரு இயக்கம் இதனால் பிறந்தது. டிச்சியின் பார்வையில் சொல்லப்படும் இதயத்தைத் தொடும் இந்தக் கதையைப் படித்து எல்லோரும் இணைந்தால் எல்லாம் முடியும் என்பதை உணருங்கள்.

- S. Jayaraman

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தூம் தடக்கா! தூம் தடக்கா!

தூம்தடக்கா! தூம்!

மரத்தின் உச்சாணி கிளையில் உட்கார்ந்துகொண்டு டிச்சி அவளுடைய டோலக்கை வாசித்துக்கொண்டிருந்தாள். அவளுடைய மூன்று சகோதரர்களும் அவள் பக்கத்திலேயே அந்த வலுவான மரத்தின் கிளைகளில் தொற்றிக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆடுகள் மரத்தின் கீழே பசும்புல்வெளியில் முட்டிமோதிக்கொண்டு குரல் எழுப்பிக்கொண்டிருந்தன.

“டிச்சி” என்று அப்பா அழைப்பது சிர், பைன், தேவதாரு சாம்பல் மரங்களின் ஊடே எதிரொலித்தது. “கிளம்பு! நாம் அக்கரையிலுள்ள பாட்டியைப் பார்க்க செல்லவேண்டும்.”

“பசங்களா! ஆடுகளை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்.”

“நாங்களும் வருகிறோம்” கெஞ்சினான் சியாம்.

“அடுத்த தடவை போகலாம். பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை. டிச்சி அங்கேயே தங்கி அவரைப் பார்த்துக் கொள்ளப் போகிறாள்,” என்று உறுதியாகச் சொன்னார் அப்பா.

முழங்காலளவு இருந்த ஆற்றுத்தண்ணீரில் அப்பா அவர்களது கழுதையை நடத்திச் சென்றார். மலைஆடு போல் லாவகமாக செயல்படும் டிச்சி பாவாடையை கையால் சற்று தூக்கிப் பிடித்துக்கொண்டு பாறைக்கு பாறை தாவிக்கொண்டு சென்றாள். கால்விரல்களை குளிர்ந்த நீர் கூச வைத்தது. நீருக்குள் சத்தத்துடன் வழுக்கி விழுந்தாள்.

“கவனம் வேணும்” அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மாமா எச்சரித்தார்.

அடித்துகொண்டு வந்த ஒரு பாறைத் துண்டில் அவளது இடதுகால் சிக்கிக் கொண்டுவிட்டது. அப்பாவின் உருவம் மங்கலாகத் தெரிகிறது. சீறிப்பாயும் நீரின் இரைச்சலில் அவர் குரல் மிக மெலிதாகக் கேட்கிறது. வெள்ளத்தின் வேகத்தில் சிக்கிய கழுதை தட்டுதடுமாறி நீந்தி கரையின் அடுத்த பக்கம் சென்று விட்டது. அதன் மேலேயிருந்த சுமையை வெள்ளம் அடித்துச் சென்று விட்டது.

மாமா வெள்ளப் பெருக்கில் ஒருமாதிரி சமாளித்து நின்றுகொண்டு பாறைத்துணுக்கில் சிக்கிக் கொண்ட டிச்சியின் காலை விடுவிக்க முயன்றார். சேறு கலந்த நீரில் நனைந்தவாறே தன்னுடைய முழு பலத்தையும் செலுத்தி டிச்சியை விடுவிக்க முயற்சி செய்தார். பிறகு தன்னுடைய வலுவான தோள்களின் மீது சுமந்து கொண்டு அவளது அம்மாவின் அருகே கொண்டு சென்றார். அம்மா அலங்கோலமாய்க் கிடந்த டிச்சியின் அருகே உட்கார்ந்து அவளைப் பார்த்து அழுதாள். இடது காலில் டிச்சிக்கு ஊசி குத்துவது போல் வலி. திடிரென்று உடலில் நடுக்கம் வர மயக்கமடைந்தாள்.

டிச்சியையும் அவளது அதிர்ச்சியடைந்த தாயையும் விட்டுவிட்டு மாமா அப்பாவை தேடிப் போனார். ஆனால் அப்பாவைக் காணவில்லை. பிறகு அவரது உடலை ஆற்றிலிருந்து எடுத்து வந்த போது டிச்சியின் இதயத்தை பயத்தின் சில்லென்ற விரல்கள் பிடித்துக் கொண்டது.

ஒரு நிறுவனம் கிரிக்கெட் மட்டை மற்றும் வேறு விளையாட்டு பாருள்கள் தயாரிக்க சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்களை வெட்டியதாக டிச்சி கேள்விப்பட்டாள். ஏன் எங்கள் காடுகளை அவர்கள் வெட்டவேண்டும்? மலைகளின் பக்கம் மண்சரிவு நடப்பது தெரியவில்லையா? மனிதர்களை திடீர் வெள்ளம் அடித்து செல்வது புரியவில்லையா? டிச்சியின் அப்பா இதற்கு பலியாகிவிட்டார். டிச்சியின் இடது காலுக்கு இப்போது சக்தியில்லை. முழங்காலுக்குக் கீழே உணர்வே இல்லை.

பனிக்குளிருடன் பாய்ந்த வெள்ளத்தை மறக்க முடியுமா? காதுகளை அடைத்த, மூக்கினுள் நுழைந்த, கண்களை மங்கலாக்கிய, தலைமேலே பாய்ந்த வெள்ளத்தை அவளால் மறக்க முடியவில்லை.

“நல்ல விசயங்களையே நினைக்க வேண்டும். நேர்மறையாக சிந்திக்க வேண்டும்” என்று மாமா சொல்கிறார். டிச்சிக்கு உள்ளே தைரியம் உண்டானது. அது கொடுத்த இளம்சூடு அவளது பயங்களை உருக்கிவிட்டது. அம்மாவும் சகோதரர்களும் கூடத்தானே இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஆதரவாக மாமாவும், மாமியும் இருக்கிறார்களே! அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. டிச்சி அப்பாவை போலவே மாமாவையும் மிகவும் நேசிக்கிறாள். ஆனால் மாமி அம்மாவிடம் “உன்னுடைய சகோதரன் நல்லவர்தான். ஆனால் அவருடைய சூதாடும் பழக்கம் நம்மை வாழவும் வைக்கலாம், வீழவும் வைக்கலாம். நிலைமையோ இப்போது ரொம்ப மோசமாக உள்ளது” என்று சொல்லும் போது டிச்சிக்கு மன வருத்தம் உண்டாகும்.

மாமா சூதாடுபவரா? இல்லை. நிச்சயம் இருக்காது.

நாட்கள் ஓடின. டிச்சியும் அவளது குடும்பத்தினரும் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

சாம்பல் மரத்தின் கீழே உட்கார்ந்து கொண்டு, புல்தரையில் கிடத்தப்பட்டிருக்கும் ஊன்று கோல்களைப் பார்த்தாள். மாமா அவளுக்காக பிரம்மாண்டமான சாம்பல் மரத்திலிருந்து செய்து தந்தது அது.

“என்னுடைய கிளைகள் ஒல்லியாக அல்லது பருமனாக, நீளமாக அல்லது குட்டையாக இருக்கலாம். ஆனால் நான் உறுதியானவன்” என்று ரகசியம் பேசியது சாம்பல் மரம்.

டிச்சி பறவைகூட்டைப் பார்க்க மரத்தின் உச்சிக்கு ஏறுவாள். ஊர்ந்து செல்லும் எறும்புகளின் பாதையை விரல்களால் பின்பற்றுவாள். சாம்பல் மர இலைகளின் குளுமையான நறுமணத்தை ரசிப்பாள்.

‘நீ என்னுடைய சாம்பல் மரம். உன்னைப் போலவே நானும் உறுதியானவள் என்று மாமா சொல்கிறார். இந்த ஊன்றுகோல்களுடன் நான் இமாயலய மனித குரங்கு ஏட்டியைப் போல, உறுதியானவள் மற்றும் பலமானவள்.’

“ஏ டிச்சி, எல்லோரும் கூட்டத்திற்கு வந்து விட்டார்கள்” என்று கூவினான் சியாம்.

மின்னலைப் போல டிச்சி மரத்திலிருந்து வழுக்கி வந்து, ஊன்றுகோல்களை எடுத்துக் கொண்டு, சியாமை பின் தொடர்ந்து, கிராமத்துப் பெரியவர் கௌரியைச் சுற்றி கிராமத்தார் அமர்ந்திருந்த பெரிய மரத்தை நோக்கி சென்றாள்.

“நாங்கள் படிக்காதவர்கள். ஆனால் விவேகமுள்ளவர்கள். எங்களுடைய விலைமதிப்பில்லா மரங்களை எந்த நிறுவனத்திற்கும் ஏலம் விட அனுமதிக்க மாட்டோம். ஒப்பந்ததாரர் சாந்த் தன்னுடைய வேலையாட்களுடன் மரத்தை வெட்ட வரும்போது, நாம் காட்டுக்குள்ளே சென்று, சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்களை அணைத்துக் கொள்வோம். வன்முறை எதுவும் நடக்கக்கூடாது” என்றார் கௌரி.

கிராமத்தினர் சிப்கோ கோஷங்களை உரக்கக் கூறியவாறு காட்டை நோக்கி சென்றனர். டிச்சி தன் டோலக்கை எடுத்துக் கொண்டு, ரப்பர் பந்துகள் போல குதித்து குதித்து வரும் குழந்தைகளின் உற்சாகக் குரலுக்கு இணையாக,

தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம்தடக்கா! தூம்!

“இந்த காடு என்னவெல்லாம் கொடுக்குது?” கூவினாள் டிச்சி.

“நிலம், நீர் மற்றும் தூய காற்று” என்று குழந்தைகள் ஒரே குரலில் கத்தியவாறு, துள்ளித்துள்ளி அவளை பின் தொடர்ந்தனர்.

ஆனால் அவர்களுக்கு முன்னேயே காட்டினுள் சீருடை அணிந்த வேலையாட்கள் காத்திருந்தனர். ஒப்பந்தக்காரர் சாந்தின் பெரிய உருவம் அங்கே நின்று கொண்டு இருந்த்து. ஏலம் எடுத்த ஒவ்வொரு சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்களின் மேல் வெள்ளை நிறத்தில் ‘X’ குறியிடச் சொல்லி உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருந்தார். கிராமத்தினர் அவரை கோபத்துடன் சுற்றி வளைத்துக் கொண்டனர். கும்பலாக வேலையாட்களை சுற்றி நின்றனர். தங்கள் டோலக்கில் சத்தம் எழுப்பி

சிப்கோ பாடல்களின் ஒலி காட்டை நிரப்பும்படி உரக்கப் பாடினார்கள்.

“செடிகளும் மரங்களும் எங்கள் சொந்தம்

வெட்டாமல் தடுக்க வாருங்கள் எல்லோரும்!”

தூம் தடக்கா! தூம் தடக்கா!

தூம்தடக்கா! தூம்!

ஒப்பந்தக்காரர் சாந்த், ஒரு விஷமப் புன்னகையுடன் எல்லோரையும் பார்த்து விட்டு, தன்னுடைய வேலையாட்களுடன் ஒரு பேருந்தில் ஏறி சென்றுவிட்டார்.

அடுத்தநாள் மலைப்பகுதியில் பரபரப்பு. வாகனங்களில் ஏறிச் செல்ல அந்த கிராமத்து ஆண்கள் தயாராகிக் கொண்டிருந்தனர். கிராமத்தினர் அனைவருக்கும் இலவசமாய் திரைப்படம் காட்டுவதாகச் சொல்லி அரசாங்கம், டிரக்குகளை அனுப்பியிருந்தது. திரைப்படமே பார்க்க வாய்ப்பில்லாத அந்த மக்களுக்கு இது ஒரு திடீர் வாய்ப்பு.

பெண்கள் பின்னல் வேலையில் ஆழ்ந்திருந்தார்கள். பள்ளிக்கூடம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. குழந்தைகள் புதிய சிப்கோ கோஷங்களைக் கற்றுக்கொண்டு தங்கள் ஸ்லேட்களில் சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்களை வரைந்து கொண்டிருந்தனர். தங்கள் டோலக்கில் சத்தம் எழுப்பி பாடினார்கள்.

“நிலமும் சொந்தம் நீரும் சொந்தம்

காடுகளும் கூட எங்கள் சொந்தம்

முன்னோர் உழைப்பில் வளர்ந்த காடு

என்னாளும் காப்போம் இதற்கில்லை ஈடு!”

தூம் தடக்கா! தூம் தடக்கா!

தூம்தடக்கா! தூம்!

பள்ளி முடிந்ததும் டிச்சியும் அவளின் சகோதரர்களும், ஆடுகளை மேய்ப்பதற்காக காட்டினுள் அழைத்து செல்வார்கள். மற்ற கிராமத்து குழந்தைகளுடன் சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்களை அணைத்துக் கொள்வார்கள். மாலையில் சூரியன் மறைய மறைய அவர்களின் உற்சாகக் குரல்களும் மங்கத்தொடங்கும். பிறகு சேகரித்த சுள்ளிகளை தலையில் தூக்கிக் கொண்டு கிராமம் திரும்புவார்கள்.

டிச்சி அவளுக்குப் பிடித்தமான மரத்தின் மீது கண்களை மூடியபடி நீண்ட நேரம் சாய்ந்து நிற்பாள். அதன் புசுபுசுவென்ற இலைகள் அவளை அமைதிப்படுத்தும். அதன் வழுவழுப்பான பட்டை அவளது கன்னங்களை குளுமையாக்கி, ஏதோ ரகசியம் சொல்வது போல இருக்கும்.

‘என் சாம்பல் மரத்தை யாரும் வெட்டக்கூடாது!’ டிச்சி உறுதியாக நினைப்பாள்.

காலம் மெல்ல சுழன்றது. உலகத்தில் எல்லாமே சரியாக இருந்தது.

இந்த அமைதியான மரங்கள் அவைகளின் மடிகளிலிருந்து பச்சைநிற

சிறகுகளுடன், ஒலி எழுப்பியவாறு கிளிகள் பறந்து செல்லும்பொழுது உற்சாகமாக சலசலக்கும். அணில்கள் அடியில் வளரும் புதர்களிலிருந்து ஒரு வேகத்துடன் வெளிக்கிளம்பும். பேருந்து ஒன்று குன்றின் கீழுள்ள நிறுத்தத்தில் கிரீச்சிட்டு நிற்கிறது. சேறு தெறித்திருந்த அந்த பேருந்தை ஒரு தூசி மேகம் சூழ்ந்திருந்தது. டிச்சி இலைகளின் திரையை விலக்கி வெளியே பார்த்தாள்.

வேலையாட்கள் ஒரே வரிசையில் அணிவகுத்து வந்தனர். அவர்களின் காக்கிநிற சீருடை சீரற்று இருந்தது. ஆனால் அவர்களின் கையிலிருந்த கோடாலிகள் பளபளத்தன. அவர்கள் சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்கள் நிறைந்த காட்டை நோக்கி, பருத்த உருவ சாந்த் பின் தொடர நடந்தனர். அவர்களது காலடி ஓசை மலைப் பகுதியிலிருந்து கீழே எதிரொலித்தது.

‘உதவி! உதவி! என் சாம்பல் மரங்கள்! அதை யாரும் வெட்டக்கூடாது!’ டிச்சி கிளைகளிருந்து வழுக்கியபடி கீழே வந்து செங்குத்தான மலைப்பகுதிக்கு கீழே சறுக்கி வந்து, தன் ஊன்றுகோல்களை கீழே எறிந்துவிட்டு, அதன் பின்னே உருண்டு வந்தாள்.

நடந்தாள்... விழுந்தாள்... எழுந்தாள்... விழுந்தாள்... டிச்சியின் இதயம் அவளது டோலக்கைப் போலவே ‘தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம்தடக்கா! தூம்!’ என்று அடித்துக் கொண்டது.

‘எனக்கு உதவி தேவை’ டிச்சி தவித்துக் கொண்டே, ஊன்றுகோல்களை தேடிப்பிடித்து, தடுமாறியபடி வீட்டை நோக்கி சென்றாள்.

“அம்மா” என்று கூவினாள். நெருப்பில் விழுந்த சுள்ளிபோல அவள் கீழே விழ, அம்மா ஓடி வந்து அவளை பாதுகாப்பாக அணைத்துக் கொண்டாள்.

“அம்மா, என் சாம்பல் மரம்! அவர்... அவர்கள்... வெட்டுகிறார்கள்!”

“யாரம்மா? பதற்றப்படாமல் மெதுவாக சொல்லு! முதலில் இந்த தண்ணீரைக் குடி.”

“மா... அம்மா பெரிய வண்டியில் கோடாலிகளுடன் அவர்கள் வந்திருக்கிறார்கள்... நிறைய ஆட்கள்! பெரிய ஆட்கள், கூர்மையான கோடாலிகள்...”

“அப்படியா? நம் மரங்களை வெட்ட வந்த ஒப்பந்தக்காரரின் ஆட்கள்

அவர்கள். நாம் உடனே ஏதாவது செய்ய வேண்டுமே!”

“அம்மா, நீ இங்கேயே இரு. நான் எல்லோரையும் கூட்டி வருகிறேன்,”

மூச்சை இழுத்து விட்டபடி, தோளை நிமிர்த்தி டிச்சி சொன்னாள்.

பெண்களும், குழந்தைகளும் டோலக்குகளுடன் குழுமினார்கள். “நாம் ஏதேனும் செய்தாக வேண்டும். ஒப்பந்தக்காரர் சாந்த் ஆண்களை ஏமாற்றி வெளியே கூட்டி சென்று விட்டார். அவர்கள் இல்லாமல் எப்படி இவர்களை சமாளிப்பது?” அம்மா தன் தலையைச் சுற்றி கட்டியிருந்த துணியின் (பண்ட்டு) ஓரத்தை கைவிரல்களில் சுழற்றியபடி கேட்டாள். அம்மாவின் நெருங்கிய நண்பரான மற்றும் கிராமத்துப் பெரியவரான கௌரி, “எல்லோரிடமும் நாம் யார் என்று அவர்களுக்கு புரிய வைப்போம். நினைவிருக்கட்டும், வன்முறைக்கு இங்கு இடமேயில்லை!” என்றார். டிச்சியின் இதயம் அவளது டோலக்கோடு சேர்ந்து

“தூம் தடக்கா! தூம் தடக்கா!

தூம் தடக்கா! தூம்!” என்று பாடியது.

“தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம்!”

“சிப்கோ” என்று அவள் கூவினாள்.

“மரங்களை அணைத்துக் கொள்ளுங்கள்” தொண்டை சூடான வெண்ணைத் தேநீருக்கு ஏங்கும்வரை பெண்களும், குழந்தைகளும் உரக்க கூவினார்கள்.

சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்களால்தான் காடு உயிரோட்டத்துடன் இருக்கிறது.

“காடுகள் என்ன தருகிறது?” என்று கைகளை உயர்த்தி கூவுகிறாள் டிச்சி.

“நிலம், நீர் மற்றும் தூய காற்று” பெண்களும் குழந்தைகளும் ஒரே குரலில் கூவினர்.

மரத்தின் மீது போட்டிருந்த ‘X’ அடையாளக்குறி ஒவ்வொன்றும் எந்த நாளுமே ஆறாத ஒரு வடுவாக தெரிந்தது.

“என்னுடைய சாம்பல் மரம், நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன்?”

டிச்சி நடுங்கும் விரல்களால் மரத்தின் பட்டையை சுரண்டி, ‘X’ அடையாளக்குறியை அழிக்க முயன்றாள். மரத்தை இரு கைகளாலும் அணைத்துக் கொண்டு, “என்னுடைய சாம்பல் மரத்தை வெட்ட முடியாது” என்று ஆவேசமாக கூறினாள்.

“நகரு இங்கிருந்து” என்று கரகரத்த குரலில் கூறியபடி, ஒப்பந்தக்காரர் சாந்த் அவளை பலவந்தமாக இழுத்து தள்ளினார். டிச்சி சுழன்று விழாமல் நின்று கால்களை நிலத்தில் பதிக்கிறாள். அவளது கழுகு கண்கள் சுற்றியுள்ள கூலியாட்களை தீர்க்கமாக பார்க்கிறது. அவர்கள் சோர்வாக, ஆனால் எச்சரிக்கையுடன் தெரிகிறார்கள். அவளது கண்கள் மரத்தின் பின்னே ஒளிந்திருந்த உருவம் ஒன்றை பார்த்தது. உடனே அந்த உருவம் தலையை குனிந்து கொண்டது... டிச்சியின் கண்கள் விரிந்தது... “மாமா, நீங்களா?”

அங்கு நிசப்தம் நிலவுகிறது. மாமா கோடாலியை கீழே போட்டு விட்டு, நிலைகுலைந்து விழுகிறார்.

“மாமா, உங்கள் கடனை அடைக்க நாங்கள் வேலை செய்கிறோம். நான் போர்வைகள் நெய்து அதனை விற்பேன்” என்றாள் டிச்சி.

“நான் சோப் கம்பெனியில் வேலை செய்வேன்” என்றான் ராம்.

“நான் நீர் இறைக்கும் வேலை செய்வேன்” என்றான் சியாம்.

மாமா தலை குனிந்தார். கண்களில் கண்ணீர். தன்னுடைய சீருடையை கழற்றி எறிந்துவிட்டு, டிச்சியின் டோலக்கை எடுத்துக் கொண்டு “தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம்!” என்று பாடினார் மாமா.

“காடுகள் என்ன தருகின்றன?” என்று கைகளை உயர்த்திக் கூவுகிறார்கள் மாமாவும், டிச்சியும்.

“நிலம், நீர் மற்றும் தூய காற்று” பெண்களும் குழந்தைகளும் ஒரே குரலில் கூவினர்.

“ஏய் முட்டாள் பெண்ணே! மரம் மட்டுமல்ல, காடு பசை மற்றும்

அன்னிய செலவாணியையும் தருகிறது” என்று குறிப்பிட்டு சொன்னார்.

“ஏய் எல்லாரும் மரங்களை உடனே வெட்டுங்கள். சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரம் என்று ஒன்றையும் விடாமல் எல்லாம் வெட்டுங்கள்,” ஆணையிட்டார் ஒப்பந்தக்காரர் சாந்த்.

“வேண்டாம்... வேண்டாம். தயவுசெய்து வேண்டாம்! இந்த மரங்கள்

எங்களை பாதுகாப்பவர்கள்...” டிச்சி மரத்தை அணைத்தபடி சொன்னாள்.

தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம் தடக்கா! தூம்!

“சிப்கோ! அணைத்துக் கொள்ளுங்கள் மரங்களை” கூவினாள் டிச்சி. இன்னும் பல குரல்கள் காற்றில் கலந்து, சிர், பைன், தேவதாரு மற்றும் சாம்பல் மரங்களின் ஊடே எதிரொலித்தது.

“இந்த காட்டை வெட்டினால் எங்கள் கிராமமே அழிந்து போகும்” என்றாள் அம்மா.

ஒரு பெருத்த உருவம் கண் முன்னே தெரிந்தது. ஒப்பந்தக்காரர் சாந்த் அவர்கள் முன்னே இடியைப்போல முழங்கிக்கொண்டு வந்து நின்றார். கோபத்துடன் கைகளை உயர்த்தி, கால்களால் தரையை வேகமாக மிதித்துவிட்டு திரும்பி செல்ல ஆரம்பித்தார்.

டிச்சி இரு கைகளையும் பிசைந்தபடி ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள். எல்லோரும் திரும்பி போய்விட்டார்கள் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

“சாதித்து விட்டோம். இனி இந்த இயக்கத்தை இந்தியா முழுவதும்

எடுத்துச் செல்வோம்,” அம்மா சொன்னாள்.

“சிப்கோ! அணைத்துக் கொள்ளுங்கள் மரங்களை” என்று பெண்களும் குழந்தைகளும் கூவினார்கள். அனைவரும் கால்கள் தாளமிட, கைகளை கோர்த்தபடி, ஆனந்தமாக வெற்றி நடனம் ஆடினார்கள். சாம்பல் மரம் காற்றில் தலையாட்டுகிறது. அதன் குளுமையான மரப்பட்டையில் டிச்சி தன் கன்னத்தைப் பதிக்கிறாள். மாலைக்காற்றில் சலசலக்கும் புசுபுசுவென்ற இலைகளை தடவிப் பார்க்கிறாள். ‘நானும் உங்களைப் போலத்தான்! இமாயலய மனித குரங்கு ஏட்டியைப் போல உறுதியானவள், கடுமையானவள், யாக் காட்டெருமை போல வலுவானவள்,’ டிச்சி சாம்பல் மரத்திடம் கிசுகிசுத்தாள்.

அருஞ்சொற்பொருள்

சிப்கோ: ஒட்டிக்கொள்ளுதல், தழுவிக்கொள்ளுதல்

பன்ட்டு: போட்டியா பழங்குடி பெண்கள் இந்த சால்வையை தலையில் அணிவார்கள்

யாக்: நீண்ட சடையுடைய வீட்டு கால்நடை.

ஏடி: நேபாள் மற்றும் திபெத்தின் இமாலய மலைப்பகுதியில் வசிப்பதாக நம்பப்படும் ஒரு கற்பனையான மனிதக்குரங்கு அல்லது ஒரு அருவருப்பான பனி மனிதன்.

நூற்பட்டியல் (பிபிலியோகிராஃபி) என்பது ஒரு கதையை எழுத, கதாசிரியரால் பயன்படுத்தப்பட்ட குறிப்புப் பொருள்களின் பட்டியல். இந்த புத்தகத்திற்கான ஒரு குறுகிய விவரத் தொகுப்பு.

1. ராமசந்திர குஹா எழுதிய ‘தி அன்குயட் வுட்ஸ்’

2. மார்க் ஷெபர்ட் எழுதிய ‘சான்தி பிரசாத் பட், கௌரா தேவி அன்ட்

தி சிப்கோ மூவ்மென்ட்’

3. இ ஸி எம் பிரவுன் எழுதிய ‘அமங் தி போடியாஸ் அன்ட் தேர் நெய்பர்ஸ்’

4. http://www.youtube.com/watch?v=tcwY04s_mlM&feature=related

சி என் என் ஐ பி என் - சான்தி பிரசாத் பட்

5 . http://www.youtube.com/watch?v=GXnAcTS8Ais&feature=related

நந்தாதேவி கேம்பைன்: பாலி தேவி ஸ்பீக்ஸ்

காடுகள் என்பது மரங்களைப் பற்றியதல்ல.

* இந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட டிச்சியைப் போல ஒரு சிறிய போட்டியா இனச் சிறுமி, மரம் வெட்ட வந்தவர்களை அடையாளம் கண்டு கிராமப் பெண்களை எச்சரிக்க, அவர்கள் சிப்கோ என்று குரலெழுப்பியவறு காட்டினுள் சென்றனர். வன்முறை எதுவும் இன்றி மரம் வெட்டுவதைத் தடுத்தனர்.

* 1980 ல் அரசாங்கம் இந்த காடுகளைப் பாதுகாக்கும் சட்டம் ஒன்றை நிறைவேற்றியது. சுற்றுசூழல் தொடர்பான இயக்கங்களில் இது முதன்மையானது.