vetri kottai

வெற்றிக் கோட்டை

குழந்தைகள் தோல்வியை எதிர்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற பழக்க வேண்டும். பெற்றோரின் செல்வாக்கை பயன்படுத்தி தேர்வு எழுதாமலேயே மதிப்பெண் பெற வைக்க கூடாது.

- Thiruvarur Saravanan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் மிக அதிகமாக மழை பொழிந்தது. நிறைய மழை பெய்ததால் அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலும் ஆறுகளில் நிறைய தண்ணீர் ஓடியது. ஆறுகளில் நிறைய தண்ணீர் ஓடியதால் தமிழ்நாட்டில் உள்ள கல்லணையிலும் நிறைய தண்ணீர் இருந்தது.

பள்ளி முடிந்து கோடை விடுமுறை என்பதால் தினமும் ஏராளமான சிறுவர்கள் சிறுமிகள் அவரவர் பெற்றோருடன் கல்லணைக்கு வந்தார்கள். அங்கு பாய்ந்து சென்ற தண்ணீரைப் பார்த்து வியந்தார்கள். கல்லணை ஓரமாக இருந்த பூங்காவில் விளையாடி மகிழ்ந்தார்கள்.

ஒரு நாள் மாலையில் சிறுவர்கள் சிறுமிகளுக்கு இசை நாற்காலி (மியூசிக் சேர்) போட்டி நடந்தது. ஒரு சிறுவன்தான் முதலிடம் பெற்றான்.

முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்கள். இசை நாற்காலி போட்டியில் இருந்து முதலில் வெளியேறிய குழந்தைகள் பலரும் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்று கவலைப்படாமல் சிரித்த முகத்துடன் இருக்க, இரண்டாம் வகுப்பு படிக்கும் பிரியா எனக்கும் பரிசு வேண்டும் என்று சொல்லி அழ ஆரம்பித்தாள்.

இந்த விளையாட்டுப் போட்டிகளை நடத்தியவர்கள் பிரியா தந்தையின் நண்பர்கள். அதனால் பிரியாவின் அம்மா, போட்டியை நடத்தியவர்களிடம் பிரியாவுக்கும் பரிசுகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

போட்டியை நடத்தியவர்களும் சிறப்பு பரிசு என்ற பெயரில் பிரியாவுக்கு பரிசு வழங்க முன்வந்தார்கள்.

அப்போது அங்கு வந்த பிரியாவின் அப்பா, இந்த பரிசை வேண்டாம் என்று தடுத்து விட்டார். இதனால் மீண்டும் ஏமாற்றமடைந்த பிரியா அழ ஆரம்பித்தாள்.

பிரியாவை சமாதானப்படுத்திய அவளுடைய அப்பா, அவள் அருகில் அமர்ந்து பேச ஆரம்பித்தார்.

‘பிரியா... நீ போன வாரம் எழுதுன கணக்கு பரிட்சையில எவ்வளவு மதிப்பெண் வாங்கின?’

‘நூற்றுக்கு தொண்ணூற்றெட்டு மார்க் வாங்கினேன்.’

‘நீ தினமும் கணக்கு போட்டு பிராக்டிஸ் பண்ணித்தானே இந்த மார்க் வாங்கின?’

‘ஆமாம்.’

‘இன்னொரு பாப்பா அழுது அடம்பிடிக்கிறான்னு பரிட்சையில எதுவும் எழுதாம இருந்தபோதும் உன் டீச்சர் 100 மார்க் போட்டுக்கொடுத்தா உனக்கு எப்படி இருக்கும்?’

‘அப்படி செய்யக்கூடாது. தப்புப்பா...’

‘இன்னைக்கு நீ மியூசிக் சேர் போட்டியில ஜெயிக்காத போதும் பரிசு வாங்கினா அது சரியா தப்பா?’

‘தப்புதாம்பா...’

‘அப்போ பரிசு வாங்கணும்னா என்ன செய்யணும்?’

‘நல்லா விளையாடி ஜெயிச்சு வாங்கணும்.’

‘ஜெயிக்க முடியலைன்னா?’

என்ன சொல்வதென்று புரியாமல் நின்றாள் பிரியா.

‘ஜெயிச்சவங்களுக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லணும்.’ என்ற பிரியாவின் தந்தை பிரியாவை அழைத்துச் சென்று முதல் மூன்று இடங்களை பிடித்த குழந்தைகளிடம் கை குலுக்கி வாழ்த்து தெரிவிக்க செய்தார்.

பிறகு பிரியாவிடம், ‘அடுத்து என்ன செய்யணும்னா, ஜெயிக்கிற வரை தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி அடைஞ்சுதான் பரிசு வாங்கணும். அடுத்தவங்க ஜெயிச்சுட்டாங்களேன்னு எந்த காலத்துலயும் பொறாமைப் படக்கூடாது. மாறாக, நாமும் வெற்றியடைய என்ன செய்யணும்னுதான் யோசிக்கணும்.’ என்றார்.

‘சரிப்பா...’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னாள் பிரியா.

பிரியாவின் தந்தை, போட்டிகளை நடத்தியவர்களிடம், இனிமேல் போட்டியில் கலந்து கொள்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சாதாரண பரிசும், வெற்றி பெறுபவர்களுக்கு அதை சிறப்பிக்கும் விதமாக பெரிய பரிசும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கலந்து கொள்ளும் குழந்தைகளும் ஏமாற்றமடைய மாட்டார்கள். அதே நேரம் வெற்றி பெறுபவர்களுக்கும் தனித்தன்மையாக சிறப்பு பரிசு கிடைக்கும்போது அந்த வெற்றியை அங்கீகரித்ததாக இருக்குமே.